கம்யூனிச சமூகமும் பகுத்தறிவுப் பொருளாதாரமும்- தத்துவ விவாதம் ஒலி வடிவில்

தோழர்களே முழுக்கட்டுரை இவைதான் மேல்கண்ட நூலில் பக்கம் 11-23 வரை உள்ளது நூலில் உள்ளது உள்ளபடி அப்படியே இங்கே உங்கள் கருத்துகளை நான் எதிர்பார்க்கிறேன் தோழர்களே

...இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழேகளே

எல்பெர்பெல்ட் சொற்பொழிவுகளிலிருந்து- எங்கெல்ஸ் 1845 பிப்ரவரி 8ந் தேதியன்று நிகழ்த்திய சொற்பொழிவு

கம்யூனிஸ்ட் சமூகத்தில் தனிநபர்களுடைய நலன்கள் ஒன்றுக்கொன்று எதிராக இருப்பதில்லை; அதற்கு மாறாக அவை இணைந்திருக்கும். அப்படிப்பட்ட சமூகத்தில் போட்டி என்பது அகற்றப்பட்டு விடுகிறது. அங்கே சில குறிப்பிட்ட வர்க்கங்களை ஒழிப்பது என்ற பிரச்சினை இனிமேல் ஏற்படாது; அது போலவே இன்றுள்ள பணக்காரர்கள், ஏழைகள் என்ற வர்க்கங்கள் நீடிப்பதும் அங்கே இருக்காது என்பது தானாகவே புலப்படும். தனிநபர் தன்னுடைய முயற்சியினால் பணம் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்ட தனிப்பட்ட லாபம் என்பது வாழ்க்கைக்கு அவசியமான பொருள்களின் உற்பத்தி, விநியோகத்திலிருந்து மறைந்துவிட்ட உடனே, வர்த்தக நெருக்கடிகளும் தாமாகவே மறைந்துவிடும். கம்யூனிஸ்ட் சமூகத்தில் உற்பத்தி, நுகர்வு ஆகிய இரண்டையும் பற்றித் தெரிந்து கொள்வது சுலபமாக இருக்கும். ஒரு நபருடைய சராசரித் தேவைகள் என்ன என்பது நமக்குத் தெரியுமாதலால், ஒரு குறிப்பிட்ட அளவிலிருக்கும் தனி நபர்களுக்கு எவ்வளவு தேவைப்படும் என்று கணக்கிடுவது சுலபமாகும். மேலும் உற்பத்தி தனிப்பட்ட உற்பத்தியாளர்களின் கைகளில் இனியும் இல்லாமல், சமூகத்திலும் அதனுடைய நிர்வாக அமைப்புகளிலுமே இருக்குமாதலால், தேவைகளுக்குத் தகுந்தாற்போல உற்பத்தியை ஒழுங்குபடுத்துவது மிகச் சாதாரண விஷயமாகும்.

இன்றைய சமூக நிலைமையின் பிரதான தீமைகள் கம்யூனிஸ்ட் அமைப்பின் கீழ் எவ்வாறு மறைந்துவிடும் என்பதை நாம் காண முடியும்; எனினும் இந்த லாபமும் நஷ்டமுமாக அரசாங்கத்தால் அப்படிப்பட்ட சமூக அமைப்பினால் ஏற்படக் கூடிய சாதகம்—இது மட்டுமல்லாமல்—ஏராளமான பல தீமைகளை அகற்றுவதையும் கொண்டிருக்கிறது; இத்தகைய பொருளாதாரத் தீமைகளில் சிலவற்றைப் பற்றி மட்டுமே தான் இன்று பேச விரும்புகிறேன். பொருளாதாரக் கோணத்திலிருந்து பார்க்கும் பொழுது, பகுத்தறிவுக்குப் புறம்பானதும் நடைமுறைக்கு எதிரானதுமான பலனில்லாததுமான ஒன்றை நம்மால் உற்பத்தி செய்ய முடியுமானால் அதுவே இன்றைய சமூக அமைப்பு என்பது உறுதியாகும். நலன்கள் ஒன்றுக்கொன்று எதிராகப் போட்டியிடுவதால் ஏராளமான அளவு உழைப்புச் சக்தி—அதனைச் சமூகம் எவ்விதத்திலும் பயனடையாத வகையில்—செலவிடப்படுகிறது; கணிசமான அளவு மூலதனம் தங்கம் பண உற்பத்தி செய்து கொள்ளுவது; அவை அவசியமில்லாமலே நாம் இழக்க நேரிடுகிறது. நாம் இதை வர்த்தக நெருக்கடிகளில் முன்பே பார்க்கிறோம்; மனிதர்கள் தம்முடைய அதிகமான உழைப்பினால் உற்பத்தி செய்த ஏராளமான பொருள்கள் வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்படக் கூடிய வகையில் குறைந்த விலைக்கு விற்கப்படுவதைப் பார்க்கிறோம்; அதிகமான முயற்சியின் விளைவாகத் திரட்டப்பட்ட அதிக அளவிலுள்ள மூலதனம், வர்த்தக முறிவுகளின் விளைவாக அந்த உடைமையாளர்களின் கண்களுக்கு முன்பாகவே மறைந்துவிடுவதையும் பார்க்கிறோம். எனினும் நாம் இன்றைய வர்த்தகத்தை மேலும் நுணுக்கமாக விவாதிப்போம். ஒவ்வொரு பொருளும் அதை உண்மையாகப் பயன்படுத்துகிற நுகர்வோரை அடைவதற்குள் எத்தனை கைகள் மாற வேண்டியிருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள், நண்பர்களே! உற்பத்தி செய்பவருக்கும் நுகர்வோருக்கும் இடையே இன்று எத்தனை இடைத்தரகர்கள்—சூதாடுகிற, மோசடி செய்கிற, அவசியமில்லாத இடைத்தரகர்கள்—தங்களைப் பலவந்தமாக நுழைத்துக் கொள்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். வட அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு பஞ்சுப் பொதியை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.

அந்தப் பஞ்சுப் பொதி உற்பத்தியாளரின் கைகளிலிருந்து மிலிஸிபி நதியோரத்திலுள்ள ஏதாவதொரு நகரத்துத் தரகரின் கைக்கு மாறி நடுவழியே சில ஆர்லியானுக்குக் கொண்டுபோகப்படுகிறது. அங்கே அது ஒரு வர்த்தகச் சூதாடியிடம் இரண்டாம் முறையாக விற்பனை செய்யப்படுகிறது; ஏனென்றால் அதை உற்பத்தியாளரிடமிருந்து முதலில் விலைக்கு வாங்கியவர் தரகர். அந்த வர்த்தகச் சூதாடி அதை ஒரு ஏற்றுமதியாளரிடம் மறுபடியும் விற்பனை செய்கிறார். பஞ்சுப் பொதி இப்பொழுது லிவர்பூல் நகரத்துக்கு அனுப்பப்படுகிறது; அங்கே மறுபடியும் பேராசை மிக்க வர்த்தகச் சூதாடி ஒருவர் தம்முடைய கைகளை நீட்டி அதைக் கைப்பற்றுகிறார். இவர் அதை மற்றொரு பஞ்சுத் தரகரிடம் விற்பனை செய்கிறார். இந்தத் தரகர் அதை ஒரு ஜெர்மானிய நிறுவனத்துக்காக விலைக்கு வாங்குவதாக வைத்துக் கொள்வோம்; எனவே அந்தப் பொதி இப்பொழுது ரோட்டர்டாமுக்கு வந்து சேருகிறது; பிறகு ரைன் நதி வழியாக இன்னும் ஒரு டஜன் தரகர்கள் மூலமாக—ஒவ்வொரு இடத்தினும் அது ஒரு டஜன் தடவைகள் இறக்கி வைக்கப்பட்டு ஏற்றியனுப்பப்படுகிறது—அதன் பிறகு மட்டுமே உற்பத்தியாளரிடம் வந்து சேருகிறது; அங்கும் அது நுகர்வோரிடம் வந்து சேரவில்லை; உற்பத்தியாளர் முதலில் இதை நுகர்வுப் பொருளாக, நூலாக மாற்றுகிறார், அவர் நூலை ஒரு நெசவாளியிடம் விற்பனை செய்கிறார்; அவர்தான் நெசவு செய்த துணியை துணியில் வர்ணமும் வரை படமும் அச்சிடுபவரிடம் விற்பனை செய்கிறார்; அவர் தன்னுடைய வேலை முடிந்தபிறகு மொத்த வியாபாரியிடம் விற்பனை செய்ய, அவர் சில்லறை வியாபாரிக்குக் கொடுக்கிறார், கடைசியில் அவர் அந்தப் பண்டத்தை நுகர்வோரிடம் விற்பனை செய்கிறார். உற்பத்தி செய்பவருக்கும் நுகர்வோருக்கும் இடையில் இலட்சக்கணக்கான மோசடிக்காரர்கள், வர்த்தகச் சூதாடிகள், தரகர்கள், ஏற்றுமதியாளர்கள், பங்குத் தரகர்கள், வாங்கியனுப்புகிற தரகர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் என்ற இடைத்தரகர்கள் இருக்கிறார்கள்; இவர்கள் உண்மையில் பண்டத்துக்குத் தருவது ஒன்றுமில்லை; ஆனால் அவர்கள் வாழ்வதற்கும் லாபம் அடைவதற்கும் ஆசைப்படுகிறார்கள்—சராசரியாகப் பார்த்தால் அவர்கள் அதை அடைந்துவிடுகிறார்கள்; இல்லையென்றால் அவர்கள் வாழ்க்கை நடத்த முடியாது. நண்பர்களே! ஒரு பஞ்சுப் பொதியை அமெரிக்காவிலிருந்து ஜெர்மனிக்குக் கொண்டுவந்து சேர்ப்பதற்கும் அதைக் கொண்டு உற்பத்தி செய்த பொருளை உண்மையான நுகர்வோனின் கைகளில் சேர்ப்பதற்கும், அதைப் பத்துத் தடவைகள் விற்பனை செய்து, நூறு தடவைகள் ஒரு கிடங்கிலிருந்து மற்றொரு கிடங்குக்கு ஏற்றுவதும் இறக்குவதும் வண்டியில் அனுப்புவதுமான சிக்கலான காரியத்தைத் தவிர வேறு சுலபமான, சிக்கனமான வழி கிடையாதா? பல்வேறு நலன்கள் வேறுபட்டிருப்பதால் உழைப்புச் சக்தி பன்மடங்கு வீணாகிப் போவதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம் அல்லவா? பகுத்தறிவுக்குப் பொருந்துகிற முறையில் அமைக்கப்பட்ட சமூகத்தில் இந்த அளவுக்குச் சிக்கலான போக்குவரத்து என்ற பேச்சுக்கு இடமிருக்காது. நமது உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு தனிப்பட்ட குடியமைப்புக்குப் பஞ்சு அல்லது பஞ்சினால் நெய்யப்பட்ட துணிகள் எவ்வளவு தேவைப்படும் என்பதைத் தெரிந்து கொள்வது எவ்வளவு சுலபமானதோ, அது போலவே நாட்டில் இருக்கிற எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் எவ்வளவு தேவைப்படும் என்பதை நிர்ணயிப்பது மத்திய அதிகாரத்துக்குச் சுலபமானதாகும். இந்தப் புள்ளிவிவரங்களை ஒரு தடவை கணக்கிட்டுவிட்டால்—அதை ஒரு வருடத்தில் அல்லது இரண்டு வருடங்களில் சுலபமாகக் கணக்கிட்டுவிடலாம்—அதிகரிக்கும் மக்கள் தொகையின் விகிதாச்சார அளவில் சராசரி வருடாந்தர நுகர்வு மட்டுமே மாற்றத்துக்குள்ளாகும். எனவே ஒவ்வொரு குறிப்பிட்ட பொருளும் மக்களுக்கு எவ்வளவு தேவைப்படும் என்பதை உரிய நேரத்தில் நிர்ணயிப்பது சுலபமாகிவிடும்; அந்தப் பொருள் உற்பத்தியாகும் தோற்றுவாயிலிருந்தே தேவைப்படுகிற பொருளின் மொத்த அளவுக்கும் நேரடியாகவே அனுப்ப ஆணை கொடுக்க முடியும். இடைத்தரகர்கள் இல்லாமலேயே சரக்கு வருகிற பாதையின் தன்மையினால் உண்மையில் தேவைப்படுவதற்கும் அதிகமான இறக்கிவைப்பதும் காலதாமதமும் இல்லாமல், அதாவது உழைப்புச் சக்தியை மிகப் பெரும் அளவுக்குச் சேமித்து, அதைக் கொள்முதல் செய்ய முடியும்; வர்த்தகச் சூதாடிகளுக்கும், பெரிதும் சிறிதுமான வணிகர்களுக்கும் அவர்களுடைய ஆதாயப் பங்கைக் தர வேண்டிய அவசியமில்லை. ஆனால் இதோடு முடிந்துவிடவில்லை. இந்த முறையின் மூலமாக இடைத்தரகர்களால் சமூகத்துக்குத் தீங்கு ஏற்படாமல் செய்வது மட்டுமல்லாது, அவர்கள் உண்மையிலேயே சமூகத்துக்கு உபயோகமுள்ளவர்களாகச் செய்யப்படுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் பாதகமான வகையில் இப்பொழுது செய்து கொண்டிருக்கிற வேலையை எவ்வளவு மேன்மையானதாகச் சொல்லிக் கொண்ட போதிலும் அது மிகையானதுதான். எனினும் அதுதான் அவர்களுக்கு ஜீவனோபாயமாக இருக்கிறது, பலருக்கு அது அதிகமான செல்வத்தையும் திரட்டிக் கொடுத்திருக்கிறது. அவர்கள் இப்பொழுது பொது நன்மைக்கு நேரடியாகத் குந்தகம் விளைவித்த போதிலும், அவர்கள் பயனுள்ள உழைப்பில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் அப்பொழுது அவர்களுக்குக் கிடைக்கும். மனித சமூகத்தில் பெயரள வில் மட்டும் உறுப்பினர்களாக, போலியான உறுப்பினர்களாக இல்லாமல் உண்மையான உறுப்பினர்கள், சமூகத்தின் மொத்த நடவடிக்கையிலும் பங்குகொள்பவர்கள் என்பதை நிரூபிக்கக் கூடிய வகையில் ஒரு வேலையை மேற்கொள்வதற்கான சுதந்திரம் அப்பொழுது அவர்களுக்குக் கிடைக்கும்.

இன்றைய சமூகம் தனிப்பட்ட மனிதருக்கும் மற்ற ஒவ்வொருவருக்கும் இடையே பகைமையை ஏற்படுத்துவதால் எல்லோருக்கும் எதிராக எல்லோரும் என்ற சமூக யுத்தத்தை உற்பத்தி செய்கிறது. இது சில தனிப்பட்ட உதாரணங்களில்—குறிப்பாகக் கல்வியறிவில்லாத மக்களிடம்—ஒரு மூர்க்கமான, காட்டுமிராண்டித்தனமான பலாத்கார வடிவத்தை, அதாவது குற்றம் என்ற வடிவத்தைத் தவிர்க்க முடியாத வகையில் அடைகிறது. குற்றங்கள், நேரடியான பலாத்கார நடவடிக்கைகள் ஆகியவற்றிலிருந்து சமூகம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மிக விரிவான, மிகவும் சிக்கலான நிர்வாக அமைப்பும் நீதி இயல் அமைப்பும் தேவைப்படுகின்றன; இந்த அமைப்புகளுக்கு அதிகமான எண்ணிக்கையுள்ள உழைக்கும் அணி தேவைப்படுகிறது. கம்யூனிஸ்ட் சமூகமோ இந்த நிர்வாக அமைப்பு சமூகத்தின் தனிப்பட்ட அம்சங்களை ஒழுங்குபடுத்துவதோடு மட்டும் நின்றுவிடாமல், அதன் எல்லா நடவடிக்கைகளையும் அதன் எல்லா அம்சங்களினும் நிர்வகிப்பதால் இந்தக் காரணத்துக்காகவே—இந்தக் காரணம் வினோதமாகத் தோன்றினாலும்—இந்த நிர்வாக அமைப்பு மிகவும் எளிமையாக்கப்பட்டுவிடும். தனிப்பட்ட மனிதனுக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஏற்படும் முரண்பாடுகளை நாம் அகற்றிவிடுகிறோம்; சமூக யுத்தத்துக்குப் பதிலாக சமூக அமைதியை நாம் ஏற்படுத்துகிறோம்; குற்றத்தின் மூலவேரை நாம் வெட்டிவிடுகிறோம். இவற்றின் மூலமாக நிர்வாக, நீதி இயல் அமைப்புகளின் நடவடிக்கையில் பெரும்பகுதியை, இன்றைய நடவடிக்கைகளில் மிகப் பெரும் பகுதியை மிகையானதாகச் செய்துவிடுகிறோம். இப்பொழுது கூட திட்டமிட்டுச் செய்யப்படுகிற குற்றங்களோடு, நலவுரிமைகளை அடிப்படையாகக் கொண்ட குற்றங்களோடு ஒப்பிடுகிறபொழுது உணர்ச்சி வேகத்தில் செய்யப்படும் குற்றங்கள் எண்ணிக்கையில் மென்மேலும் குறைந்து வருகின்றன; மனிதர்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருகின்றன; சொத்துக்களை அடைவதற்காக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. யுத்த தோரணையில் இன்றைய சமூகம் இருந்தாலும் கூட நாகரிக முன்னேற்றம் பலாத்கார உணர்ச்சிகள் வெடிக்காதபடி நிதானத்தை ஏற்படுத்துகிறது. எனவே சமாதான பூர்வமான சமூகத்தில், கம்யூனிஸ்ட் சமூகத்தில் இது மேலும் எவ்வளவு அதிகமாக இருக்கும்! ஒருவருடைய இயற்கையான தேவைகளையும் ஆத்மீக உந்துதல்களையும் பூர்த்தி செய்யத் தேவையானது ஒருவருக்கு எங்கே கிடைக்குமோ, எங்கே சமூக வேறுபாடுகளும் அந்தஸ்து வரிசைகளும் மறைந்துவிடுகின்றனவோ, அங்கே சொத்துக்களுக்காகப் பெறும் குற்றங்கள் தாமாகவே மறைந்து விடுகின்றன.

கிரிமினல் குற்றங்களை விசாரணை செய்கிற நீதி தானாகவே முடிந்து விடுகிறது. சொத்து உறவுகளில் அல்லது குறைந்த பட்சம் சமூக யுத்தம் என்ற நிலைமையிலிருந்து உருவாகின்ற அப்படிப்பட்ட உறவுகளில் வேரூன்றியிருக்கும் சிவில் குற்றங்களை விசாரணை செய்கிற நீதியும் அது போலவே மறைந்து விடுகிறது. இப்பொழுது பொதுவாகவே இருக்கின்ற பகைமையுணர்ச்சியின் இயற்கையான விளைவாக இருக்கின்ற மோதல்கள் அப்பொழுது அபூர்வமாக, விதிவிலக்காக மட்டுமே இருக்க முடியும். இத்தகைய மோதல்களை மத்தியஸ்தர்கள் சுலபமாகத் தீர்த்து விடுவார்கள். இதைப் போலவே இன்றுள்ள நிர்வாக அமைப்புகளின் நடவடிக்கைகளும் இந்தத் தொடர்ச்சியான சமூக யுத்தத்திலிருந்து தோன்றுகின்றன—இந்த யுத்தம் நேரடியாக இல்லாதபடி மறைவாகவும் இருக்க வேண்டும்; வெளிப்படையான பலாத்காரமாக, குற்றங்களைச் செய்வதாக வெடித்து விடக் கூடாது என்று பார்த்துக் கொள்வதைத் தவிர போலீசும் நிர்வாக அமைப்பும் வேறு ஒரு வேலையையும் செய்வதில்லை. யுத்தத்தை சில எல்லைகளுக்குள் கட்டுப்படுத்த முயற்சிப்பதைக் காட்டிலும் சமாதானத்தை ஏற்படுத்துவது மிகவும் சுலபமானது என்பதைப் போலவே போட்டியை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை நிர்வகிப்பதைக் காட்டிலும் கம்யூனிஸ்ட் சமூகத்தை நிர்வகிப்பது மிகவும் சுலபமாகும். மனிதர்கள் தங்களுடைய நலன்களைப் பொது அமைதியில், பொதுப் பாதுகாப்பில், பொது நன்மையில் தேடிப்பெற வேண்டும்; அதன் மூலமாக, போலீஸ், நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவற்றை முடிந்தவரையிலும் அவசியம் இல்லாததாகச் செய்ய வேண்டும் என்று நாகரிகம் நமக்கு முன்பே கற்றுக் கொடுத்திருக்கிறதென்றால், ஒன்றுபட்ட நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தில், பொது நன்மை என்பது ஒவ்வொரு தனி நபருடைய நன்மையிலிருந்தும் இனியும் வேறுபட்டிராத ஒரு சமூகத்தில், இவை இன்னும் எவ்வளவு அதிகமாக அவசியமில்லாததாகிவிடும்! சமூக அமைப்பை மீறிக் கொண்டு இன்றைய நிலையிலும் இவ்வாறிருக்கும் பொழுது, அது சமூக அமைப்புகளால் இனியும் கை செய்யப்படாமல், உதவி செய்யப்படுகிற பொழுது எவ்வளவு அதிகமாக இருக்கும்! இதைப் பொதுமக்களே, இன்றைய சமூக நிலைமையின் காரணமாக சமூகம் இழந்திருக்கிற உழைப்பாளர் அணியின் இரு பகுதியின் மூலமாக உழைப்பாளர் அணி கணிசமாக அதிகரிப்பதை நாம் எதிர்பார்க்கலாம்.

இன்றைய சமூகத்துக்கு மிகவும் அதிகமான செலவை ஏற்படுத்தும் அமைப்புகளில் நிரந்தரமான இராணுவம்—அதை இன்றைய சமூகத்தால் ஒழிக்க முடியாது—ஒன்றாகும்; இந்த இராணுவத்தினால் நாடு தன்னுடைய மக்கள் தொகையில் மிகச் சுறுசுறுப்பான, வலிமையான, மிகவும் பயனுள்ள பகுதியை இழந்துவிடுகிறது; அந்தப் பகுதி ஆக்கவளமில்லாது போய்விடுவதால் அதற்கு உணவளித்துப் பாதுகாக்குமாறு நாடு நிர்பந்திக்கப்படுகிறது. நிரந்தரமான இராணுவத்தை வைத்திருப்பதால் ஏற்படும் செலவு எவ்வளவு என்பது நமது அரசு வரவு-செலவு கணக்கின் மூலம் தெரியவரும்: வருடத்துக்கு இருபத்து நான்கு மில்லியன் செலவழிக்கப்படுகிறது; நாட்டிலேயே அதிகமான வலுவுள்ள இரண்டு லட்சம் உருண்டு திரண்ட கரங்கள் உற்பத்தி நிகழ்விலிருந்து எடுக்கப்படுகின்றன. கம்யூனிஸ்ட் சமூகத்தில் ஒரு நிரந்தரமான இராணுவம் தேவையென்று ஒருவரும் சொல்ல மாட்டார்கள். எதற்காக வேண்டும்? நாட்டிலே சமாதானம் ஏற்படுத்துவதற்காகவா? நாம் முன்னர் பார்த்தது போல, உள்நாட்டு அமைதியைக் குலைக்க வேண்டும் என்று ஒருவருக்கும் தோன்றாது. நலவுரிமைகள் ஒன்றுக்கொன்று எதிர்ப்பாக இருப்பதன் விளைவாகத்தான் புரட்சிகளைப் பற்றிய பயம் ஏற்படுகிறது; எல்லோருடைய நலவுரிமைகளும் ஒன்று சேர்ந்திருக்கும் பொழுது அத்தகைய அச்சங்களுக்கே இடமில்லை.—ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்காகவா? ஆனால் ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஆரம்பிப்பதென்ற எண்ணம் ஒரு கம்யூனிஸ்ட் சமூகத்துக்கு எப்படி ஏற்படும்? யுத்தத்தின் மூலம் மனிதர்களையும் மூலதனத்தையும் இழக்க வேண்டியிருக்கும். அதிகபட்சமாக ஏதேனும் கிடைக்குமானால், கீழ்ப்படியாத இரண்டொரு மாநிலங்களைக் கைப்பற்றலாம். அதன் விளைவாகச் சமூக ஒழுங்கு மேலும் சீர்குலைக்கப்படும். — தற்காப்பு யுத்தத்துக்காகவா? அதற்கு ஒரு நிரந்தரமான இராணுவம் அவசியமில்லை. ஏனென்றால் சமூகத்தின் ஆரோக்கிய மிக்க ஒவ்வொரு உறுப்பினருக்கும், அவருடைய மற்ற வேலைகளோடு சேர்த்தே, நாட்டின் பாதுகாப்புக்குத் தேவைப்படும் அளவுக்கு உண்மையான பயிற்சி—பாசறையில் ஆயுதப் பயிற்சி தருவது போன்றதல்ல—கொடுப்பது சுலபமாக இருக்கும். அன்பர்களே! இதை எண்ணிப் பாருங்கள். ஒரு யுத்தம் ஏற்படுமானால்—அது கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நாடுகளுக்கு எதிராக மட்டுமே நடத்தப்படுகிற யுத்தமாக இருக்கும்—அந்த சமூகத்தின் உறுப்பினர் பாதுகாப்பதற்கு என்று உண்மையான தந்தைநாடு, உண்மையான வீடு, வாசல் இருக்கும்; அவர் துன்பங்களைத் தாங்கிக் கொண்டு உற்சாகத்தோடும் வீரத்தோடும் போரிடும் பொழுது, நவீன இராணுவத்தின் இயந்திர ரீதியாகப் பயிற்சி கொடுக்கப்பட்ட படைவீரர்கள் பதரைப் போல சிதறிப் போய்விடுவார்கள். 1792 முதல் 1799 முடிய உள்ள ஆண்டுகளின் போது, புரட்சிகரமான இராணுவங்கள் தங்களுடைய உற்சாகத்தால் எத்தகைய அற்புதங்களைச் சாதித்தன என்பதை நினைத்துப் பாருங்கள்.² இவைகூட ஒரு கற்பனைக் கருத்துக்காக, தந்தையர் நாடு என்ற போலித் தோற்றத்துக்காகவே போரிட்டன என்பதை மனதில் கொண்டால், கற்பனைக்காக அன்றி உறுதியான யதார்த்தத்துக்காகப் போரிடுகிற இராணுவம் எவ்வளவு வலிமைமிக்கதாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். எனவே நாகரிகமடைந்த நாடுகள் இராணுவத்தின் காரணமாக இப்போது இழந்து விடுகிற ஏராளமான உழைப்புச் சக்தி கம்யூனிஸ்ட் சமூகத்தில் உழைக்கும் அணிக்குத் திரும்பக் கிடைக்கும்; அவர்கள் தாங்கள் நுகர்கிற அளவுக்கு உற்பத்தி செய்வதோடு மட்டுமல்லாமல் தங்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களைத் தவிர ஏராளமான பல பொருள்களை உற்பத்தி செய்து பொதுப் பண்டகசாலைகளுக்குக் கொடுப்பதற்கு அவர்களால் இயலும்.

நமது சமூகத்தில் பணக்காரர்கள் தங்களுடைய சமூக அந்தஸ்தைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வதில் உழைப்புச் சக்தி இன்னும் மோசமான அளவில் வீணாக்கப்படுவதை நாம் காண முடியும். பகட்டாக அலங்கரித்துக் காட்சியளிக்க வேண்டும் என்ற ஆசையிலிருந்து மட்டுமே ஏற்படுகிற அதிகமான உழைப்புச் சக்தியைக் கொண்டுள்ள பயனற்ற, நகைப்புக்குரிய எல்லா வசதிப் பொருள்களையும் பற்றி நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. அன்பர்களே! ஒரு பணக்காரரின் மாளிகைக்குள், அதனுள்ளே இருக்கிற தனியான புனிதமான அறைக்குள் நுழையுங்கள். அங்கே ஒரு தனி நபருக்குப் பணிவிடை செய்வதற்காகப் பலர் வேலையில்லாமல் நின்று கொண்டு—அல்லது எவ்வாறு சிறப்பானதாகக் கருதிய போதிலும் அது தன்னுடைய நான்கு சுவர்களுக்குள்ளாகத் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிற ஒரு தனிமனிதனுக்குச் சேவை செய்வதில்—நேரத்தைப் போக்கிக் கொண்டிருப்பதையும் நினைத்துப் பாருங்கள்! இது உழைப்புச் சக்தியை மிகவும் அறிவில்லாத முறையில் வீணாக்குவதா இல்லையா என்று சொல்லுங்கள். பணிப்பெண்கள், சமையற்காரர்கள், பணியாட்கள், வண்டிப் பெண்கள், சமையற்காரர்கள், தோட்ட வேலைக்காரர்கள்—இன்னும் எந்தப் பெயரை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்—அவர்கள் உண்மையாக என்ன செய்கிறார்கள்? அவர்கள் தங்களுடைய எஜமானர்களின் வாழ்க்கைகளை உண்மையிலேயே மகிழ்ச்சியுண்டாக்குவது, அவர்களுடைய உள்ளார்ந்த திறமைகளையும், இயல்பான ஆற்றலையும் சுதந்திரமான முறையில் வளர்த்துக் கொள்ள உதவுவது ஆகியவற்றிற்குச் செலவிடும் நேரம் ஒரு நாளில் எத்தனை விநாடிகள் கணங்கள்? வண்டிக்குப் பின்னால் நின்று கொண்டிருப்பது, எஜமானர்களின் திடீர் ஆசைகள் ஒவ்வொன்றையும் திருப்தி செய்வது, அவர்களுடைய நாய்க்குட்டிகளைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பது, இன்னும் இவை போன்ற பொருளற்ற காரியங்களை—நம் சமூக உறவுகள் மோசமான முறையில் அமைக்கப்பட்டிருப்பதனால் மட்டுமே இவை ஏற்படுகின்றன—நிறைவேற்றுவதில் ஒரு நாளில் எத்தனை மணி நேரம் செலவிடுகிறார்கள்? பகுத்தறிவுக்குப் பொருத்தமான வகையில் அமைக்கப்பட்ட சமூகத்தில் பணக்காரர்களின் உழைப்புச் சக்தி இன்னும் மோசமான அளவில் வீணாக்கப்படுவதை நாம் காண முடியும். பகட்டாக அலங்கரித்துக் காட்சியளிக்க வேண்டும் என்ற ஆசையிலிருந்து மட்டுமே ஏற்படுகிற அதிகமான உழைப்புச் சக்தியைக் கொண்டுள்ள பயனற்ற, நகைப்புக்குரிய எல்லா வசதிப் பொருள்களையும் பற்றி நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. அன்பர்களே! ஒரு பணக்காரரின் மாளிகைக்குள், அதனுள்ளே இருக்கிற தனியான புனிதமான அறைக்குள் நுழையுங்கள். அங்கே ஒரு தனி நபருக்குப் பணிவிடை செய்வதற்காகப் பலர் வேலையில்லாமல் நின்று கொண்டு—அல்லது எவ்வாறு சிறப்பானதாகக் கருதிய போதிலும் அது தன்னுடைய நான்கு சுவர்களுக்குள்ளாகத் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிற ஒரு தனிமனிதனுக்குச் சேவை செய்வதில்—நேரத்தைப் போக்கிக் கொண்டிருப்பதையும் நினைத்துப் பாருங்கள்! இது உழைப்புச் சக்தியை மிகவும் அறிவில்லாத முறையில் வீணாக்குவதா இல்லையா என்று சொல்லுங்கள். பணிப்பெண்கள், சமையற்காரர்கள், பணியாட்கள், வண்டிப் பெண்கள், சமையற்காரர்கள், தோட்ட வேலைக்காரர்கள்—இன்னும் எந்தப் பெயரை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்—அவர்கள் உண்மையாக என்ன செய்கிறார்கள்? அவர்கள் தங்களுடைய எஜமானர்களின் வாழ்க்கைகளை உண்மையிலேயே மகிழ்ச்சியுண்டாக்குவது, அவர்களுடைய உள்ளார்ந்த திறமைகளையும், இயல்பான ஆற்றலையும் சுதந்திரமான முறையில் வளர்த்துக் கொள்ள உதவுவது ஆகியவற்றிற்குச் செலவிடும் நேரம் ஒரு நாளில் எத்தனை விநாடிகள் கணங்கள்? வண்டிக்குப் பின்னால் நின்று கொண்டிருப்பது, எஜமானர்களின் திடீர் ஆசைகள் ஒவ்வொன்றையும் திருப்தி செய்வது, அவர்களுடைய நாய்க்குட்டிகளைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பது, இன்னும் இவை போன்ற பொருளற்ற காரியங்களை—நம் சமூக உறவுகள் மோசமான முறையில் அமைக்கப்பட்டிருப்பதனால் மட்டுமே இவை ஏற்படுகின்றன—நிறைவேற்றுவதில் ஒரு நாளில் எத்தனை மணி நேரம் செலவிடுகிறார்கள்? பகுத்தறிவுக்குப் பொருத்தமான வகையில் அமைக்கப்பட்ட சமூகத்தில் பணக்காரர்களின் திடீர் ஆசைகளைத் திருப்தி செய்ய வேண்டிய அவசிய மில்லாமலும் தாங்களும் அத்தகைய ஆசைகளைப் பெறு வதிலும் ஒவ்வொருவரும் வாழக் கூடிய வழி ஏற்படும். இன்று வசதிப் பொருள்களைத் தயாரிப்பதில் வீணாக்கப்படும் இதே உழைப்புச் சக்தியானது அத்தகைய சமூகத்தில் இயல் பாகவே ஒவ்வொருடைய நன்மைக்காகவும் அந்த சமூகத்தின் மொத்த நன்மைக்காகவும் செலவிடப்படும்.

நமது இன்றைய சமூகத்தில் நிலவுகின்ற போட்டி முறையினால் ஏற்படுகிற நேரடியான விளைவு உழைப்புச் சக்தி மேலும் வீணாவதே. ஏனென்றால் இந்தப் போட்டி வேலை செய்யத் தயாராகவுள்ள, ஆனால் ஒரு வேலையும் கிடைக்காத வகையற்ற தொழிலாளர்களை ஏராளமான எண்ணிக்கையில் ஏற்படுத்துகிறது. சமூகம் உழைக்கும் அணியை உண்மையான வகையில் பயன்படுத்திக் கொள் வது பற்றி கவனிக்கக் கூடிய வகையில் எவ்விடத்திலும் அமைக்கப்படாததால், ஒவ்வொரு தனிநபரும் தனக்கு லாபம் கிடைக்கக் கூடிய வழியைத் தேடிக்கொள்ளுமாறு விடப்படுவதால், உண்மையாக அல்லது பார்வைக்கு மட் டும் பயனுள்ள வேலை பகிர்ந்துகொடுத்துத் தரப்படுகிற பொழுது அதிகமான எண்ணிக்கையிலுள்ள தொழிலாளர்களுக்கு ஒரு வேலையும் கிடைக்காது போவது மிகவும் இயற்கையானதே. மேலும் இந்த மூர்க்கத்தனமான போட்டி ஒவ்வொருவரையும் தன்னுடைய முழு சக்தியையும் தீவிரமாகப் பயன் படுத்துமாறு, சாதகமான எல்லா வழிகளையும் கையாளு மாறு அதிக விலையுள்ள உழைப்புக்குப் பதிலாகக் குறைந்த விலையுள்ள உழைப்பைப் பயன்படுத்துமாறு — நாகரிக முன்னேற்றம் இதற்கு மேலும் மேலும் அதிகமான வாய்ப் புக்களை ஏற்படுத்திக் கொடுக்கிறது — நிர்ப்பந்திப்பதால், வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஒவ்வொருவரும் மற்றவர்களை வகையற்றவராகச் செய்வதற்கு, மற்ற வர்களின் உழைப்பை ஏதாவதொரு வழியில் அகற்று வதற்குப் பாடுபட வேண்டியிருப்பதால், இது மேலும் நிச்சயமாக நடக்கும். ஒவ்வொரு நாகரிக சமூகத்திலும் வேலை செய்வதற்குத் தயாராகவுள்ள ஆனால் வேலை கிடைக்காதவர்கள் ஏராளமான எண்ணிக்கையில் இருக் கிறார்கள்; அவர்களுடைய எண்ணிக்கை சாதாரணமாகச் சொல்லப்படுவதைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும். எனவே இவர்கள் ஏதாவதொரு வழியில் தங்களைத் தவறாகப் பயன்படுத்துவதை, பிச்சையெடுப்பதை, தெருக் களைக் கூட்டுவதை, தெருமுனைகளில் நின்று கொண்டிருப் பதை, ஏதாவது சில்லறை வேலைகளைச் செய்து தங்கள் உடலில் உயிரை மட்டுமே ஒட்டிவைத்துக் கொண்டிருப் பதை, பலவிதமான சாதாரணப் பொருள்களை விலை கூவி விற்பனை செய்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அல்லது இன்று மாலையில் நாம் பார்த்த ஏழைப் பெண் களைப் போல கையில் ஒரு வாத்தியத்தை வைத்துக் கொண்டு ஒவ்வொரு இடமாகச் சென்று, பணத்துக்காக ஆடிப் பாடி ஏதோ சில சில்லறைக் காசுகளுக்காக எல்லா வகையான வெட்கமற்ற பேச்சுக்களையும் கேட்டுக் கொள் வதும், அவமானமுண்டாக்கும் தூண்டுதல்கள் ஒவ் வொன்றையும் சகித்துக் கொள்வதுமாக இருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர்கள் கடைசியாக விபசாரப் படுகுழியிலே விழுந்து அழிந்து போகிறார்கள்! அன்பர்களே! ஏதாவதொரு வழியில் விபசாரத்திலே ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லாத இந்த வகையற்றவர்களின் எண் ணிக்கை ஏராளமாகும். நமது ஏழைகள் நிவாரண இலா காவின் அதிகாரிகள் இதைப் பற்றி உங்களிடம் இன்னும் அதிகமாகச் சொல்ல முடியும். எனினும் இவர்களால் எந்தப் பயனும் இல்லை என்றாலும் கூட, சமூகம் ஏதாவது ஒரு வழியில் இவர்களுக்கு உணவு கொடுக்கிறது என் பதை மறந்து விடாதீர்கள். இவர்கள் வாழ்வதற்கான செலவைச் சமூகம் ஏற்றுக்கொள்ளுமானால், வேலையி லாதவர்கள் தங்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருளைக் கௌரவமாகச் சம்பாதிப்பதற்குரிய வழியைச் சமூகம் காட்ட வேண்டும். ஆனால் இன்றுள்ள போட்டி முறைச் சமூகத்தால் இதைச் செய்ய முடியாது.

அன்பர்களே! நீங்கள் இவற்றைப் பற்றிச் சிந்தித் தால் — நமது இன்றைய சமூகம் அதனுடைய உழைப்பு அணியை எப்படி வீணாக்குகிறது என்பதற்கு மேலும் பல உதாரணங்களை நான் கொடுக்க முடியும் — இதைப் பற்றி நீங்கள் சிந்தித்தால் மனித சமூகம் அபரிமிதமான உற் பத்திச் சக்திகளைத் தன் கையில் வைத்திருக்கிறது; அவற்றைப் பகுத்தறிவுக்கேற்ற வகையில் நிறுத்திய மைத்து, விநியோகத்தை ஒழுங்குபடுத்திவிட்டால், எல் லோருக்குமே மிகவும் அதிகமான நன்மை கிடைக்கக் கூடிய வகையில் அது பயன்பட முடியும் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். சமூக நடவடிக்கைகளை நியாயமான முறையில் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்கும் பொழுது, தனிநபர்கள் வேறு எந்த விதமான நடவடிக்கையிலும் ஈடுபட முடியாத அளவுக்கு அதிகமான உழைப்புச் சுமையைத் தாங்க வேண்டியிருக்கும் என்ற அச்சம் எந்த அளவுக்கு ஆதாரமற்றது என்பதைப் பற்றி நீங்களே இதிலிருந்து முடிவு செய்யலாம். இதற்கு மாறாக, இப் படியொரு அமைப்பு ஏற்பட்டால் ஒரு தனிநபரின் இப்போதைய உழைப்பு நேரம், இதுவரை உபயோகப் படுத்தப்படாதிருக்கும் அல்லது பயனில்லாத வகையில் உபயோகப்படுத்தப்படுகின்ற உழைப்பைப் பயன்படுத்திப் பாதியாகக் குறைத்து விடலாம் என்று கூற முடியும்.

இப்பொழுது வீணாகின்ற உழைப்புச் சக்தியைப் பயன் படுத்திக் கொள்வதன் மூலமாகப் பல நன்மைகள் விளையும் என்று கம்யூனிஸ்டு அமைப்பு சொல்கிறது. எனினும் இதுவே மிக முக்கியமானதல்ல. தனிப்பட்ட உழைப்புச் சக்திகளை சமூக சக்தியாக, கூட்டுச் சக்தியாக இணைப்பதிலும், இதுவரை ஒன்றையொன்று எதிர்த்து நின்ற சக்திகளை ஒன்று சேர்ப்பதும், அதை அடிப்படையாகக் கொண்ட அமைப்பை ஏற்படுத்துவதிலேதான் உழைப்புச் சக்தியின் மிக அதிகமான சேமிப்பு அடங்கியிருக்கிறது.

*1845 பிப்ரவரி 8ந் தேதியன்று நிகழ்த்திய சொற்பொழிவு*

***************************************

முதலாளித்துவத்தின் கோரமுகமும் கம்யூனிச சமூக உண்மையான முகமும்

மனித நாகரிகத்தின் வளர்ச்சி பல கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. நவீன யுகத்தில் நாம் வாழும் சமூகம் பெருமளவில் ஒரு போட்டிச் சந்தை முறையை (Competitive System) அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது. இத்தகைய போட்டிமுறை சமூகத்தில், உழைப்புச் சக்தியானது எவ்வாறு வீணடிக்கப்படுகிறது என்பதையும், அதற்கு மாற்றாக முன்வைக்கப்படும் கம்யூனிச அல்லது கூட்டுறவு உழைப்பு அமைப்பு எவ்வாறு மனித குலத்திற்கு விடிவாக அமையும் என்பதையும் 1845-ல் நிகழ்த்தப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவின் பகுதிகள் நமக்குத் தெளிவாக விளக்குகின்றன.

1. போட்டிமுறை சமூகத்தில் வீணாக்கப்படும் உழைப்புச் சக்தி

இன்றைய முதலாளித்துவ அல்லது போட்டிமுறை சமூகத்தின் மிக முக்கியக் குறைபாடு என்னவெனில், அங்கு உழைப்புச் சக்தி திட்டமிடப்படாத வகையில் வீணடிக்கப்படுகிறது. ஒவ்வொரு தனிநபரும் சமூகத்தின் ஒட்டுமொத்த நன்மையைக் கருதாமல், தனக்குக் கிடைக்கக்கூடிய லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார்கள்.

வேலையின்மை உருவாக்கம்:- இத்தகைய மூர்க்கத்தனமான போட்டி நிலவும் சூழலில், வேலை செய்யத் தயாராக இருக்கும் பலருக்கு முறையான வேலை கிடைப்பதில்லை. சமூகம் ஒட்டுமொத்த உழைக்கும் அணியையும் திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொள்ளாததால், ஏராளமான தொழிலாளர்கள் வகையற்றவர்களாகவும், வேலை இல்லாதவர்களாகவும் மாற்றப்படுகிறார்கள்.

மலிவான உழைப்புச் சுரண்டல்:- தொழில்நுட்ப மற்றும் நாகரிக முன்னேற்றத்தைப் பயன்படுத்தி, அதிக விலையுள்ள உழைப்புக்கு மாற்றாகக் குறைந்த விலையுள்ள (மலிவான) உழைப்பைப் பயன்படுத்த இச்சமூகம் நிர்ப்பந்திக்கிறது. இதனால் ஒருவர் மற்றவரின் வேலைவாய்ப்பைப் பறிப்பதும், மற்றவர்களை விடத் தங்களைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடுவதும் அன்றாட நிகழ்வாகிவிடுகிறது.

2. சமூகச் சீரழிவும் ஏழ்மையின் அவலமும்

முறையான வேலைவாய்ப்புகளும், கௌரவமான உழைப்புக்கான வழிகளும் மறுக்கப்படும் போது, அது சமுதாயத்தில் மிகப்பெரிய சமூகச் சீரழிவை ஏற்படுத்துகிறது. வேலை கிடைக்காத மனிதர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காகப் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது:

வறுமையின் பிடியில் மனிதர்கள்:- பலர் வீதிகளில் பிச்சையெடுப்பது, தெருக்களைக் கூட்டுவது, சில்லறைப் பொருள்களைக் கூவி விற்பது போன்ற தற்காலிக வேலைகள் மூலம் தங்கள் உடலில் உயிரை மட்டுமே ஒட்டிவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்களுக்கு ஏற்படும் அவல நிலை:- முறையான வருமானம் இல்லாத ஏழைப் பெண்கள், தெருக்களிலும் பொது இடங்களிலும் ஆடிப் பாடி சில்லறைக் காசுகளைப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இத்தகைய சூழலில் அவர்கள் பல வெட்கமற்ற பேச்சுக்களையும், அவமானங்களையும் சகித்துக் கொள்ள வேண்டியுள்ளது.

படுகுழியில் வீழும் அவலம்:- வறுமையின் உச்சகட்டமாக, வேறு வழியற்ற இவர்களில் ஒரு பெருந்தொகையினர் விபசாரப் படுகுழியிலே விழுந்து தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார்கள். ஏழைகள் நிவாரண அமைப்புகளின் தரவுகள் இதனைத் தெளிவாக நிரூபிக்கின்றன.

இருப்பினும், இவர்களால் உற்பத்தி ரீதியாகச் சமூகத்திற்கு எந்தப் பயனும் இல்லை என்றாலும், சமூகம் ஏதோ ஒரு வழியில் (நிவாரணங்கள் அல்லது பிச்சை மூலம்) இவர்களுக்கு உணவளிக்கவே செய்கிறது. அவ்வாறு செலவழிப்பதற்குப் பதிலாக, அவர்கள் கௌரவமாகச் சம்பாதிப்பதற்கான உழைப்பு வழியைச் சமூகமே ஏற்படுத்தித் தர வேண்டும். ஆனால், போட்டிமுறை சமூகத்தால் இதனை ஒருபோதும் செய்ய முடியாது.

3. கம்யூனிச அமைப்பின் தீர்வும் கூட்டு உழைப்பின் நன்மைகளும்

மனித சமூகம் தன்னிடம் அபரிமிதமான உற்பத்திச் சக்திகளைக் கொண்டுள்ளது. அவற்றைச் சரியாகப் பகுத்தறிவுக்கேற்ற முறையில் திட்டமிட்டு, விநியோகத்தை ஒழுங்குபடுத்திவிட்டால், சமூகத்தில் உள்ள அனைவருக்கும் மிக அதிகமான நன்மை கிடைக்கும். இதனைத் தான் கம்யூனிச அமைப்பு முன்மொழிகிறது.

வேலை நேரக் குறைப்பு:- சமூக உழைப்பை நியாயமான முறையில் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்கும் போது, யாருக்கும் உழைப்புச் சுமை அதிகமாகாது. மாறாக, தற்போது வீணடிக்கப்படும் அல்லது பயனின்றி இருக்கும் உழைப்புச் சக்தியை முறையாகப் பயன்படுத்தினால், ஒரு தனிநபரின் இப்போதைய உழைப்பு நேரம் பாதியாகக் குறைந்துவிடும்.

கூட்டுச் சக்தியின் வலிமை:- கம்யூனிச அமைப்பின் மிக முக்கியமான அம்சம் உழைப்புச் சக்தியின் சேமிப்பு ஆகும். தனிப்பட்ட மனிதர்களின் உழைப்புச் சக்திகளை ஒன்றிணைத்து, அதை ஒரு சமூகச் சக்தியாகவும், கூட்டுச் சக்தியாகவும் மாற்றுவதே இதன் நோக்கம். இதுவரை போட்டி என்ற பெயரில் ஒன்றையொன்று எதிர்த்து நின்ற சக்திகளை ஒன்றிணைப்பதன் மூலம் உழைப்பு வீணாவது முற்றிலும் தடுக்கப்படும்.

முடிவாக:-

சுருக்கமாகக் கூறின், போட்டிமுறை சமூகம் என்பது மனித உழைப்பைச் சுரண்டி, பலரை வறுமையிலும் சமூகச் சீரழிவிலும் தள்ளும் ஒரு அமைப்பாகும். இதற்கு மாற்றாக, மனிதர்களின் திடீர் ஆசைகளைத் திருப்தி செய்ய வேண்டிய அவசியமில்லாமல், ஒவ்வொருவரும் நிம்மதியாக வாழக் கூடிய ஒரு கூட்டுறவுச் சமூகமே தேவை. உழைப்பைச் சமூகச் சக்தியாக மாற்றி, உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் மட்டுமே ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் உண்மையான நன்மையையும் கௌரவமான வாழ்க்கையையும் வழங்க முடியும் என்பதை இந்தப் பகுதிகள் நமக்கு உணர்த்துகின்றன..


தொடர்புடைய கட்டுரைகள்:


***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்