இலக்கு 27 இணைய இதழ்

இலக்கு 27 இணைய இதழ் இந்த லிங்கை அழுத்தி PDF வடிவில் பெற்றுக் கொள்ளலாம் 

இந்த இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள்

இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு = லெனின். பகுதி - 3

சரக்கு உற்பத்தி பாகம் 3.

ஸ்தூலமான உழைப்பும் அருவமான உழைப்பும்

ஜனநாயகப் புரட்சியில் சமூக - ஜனநாயகவாதத்தின் இரண்டுபோர்த்தந்திரங்கள். லெனின்.பாகம் – 3.

மார்க்சிய இயக்கவியல் பொருள் முதல்வாதம் பயிலுவோம்.பகுதி – 5.பொருள்முதல்வாதம்

மார்க்சியவாதிகளுகிடையே உள்ள பணி-3





ஜனநாயகப் புரட்சியில் சமூக - ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள். லெனின்.

 ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள். லெனின்.பாகம் – 3.

2....தொ.கட்சியின் மூன்றாவது காங்கிரஸ் தற்காலிகப் புரட்சி அரசாங்கம் குறித்துநிறைவேற்றிய தீர்மானத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்?

அதன் தலைப்பே தெரிவிப்பது போல்,ரஷ்யாவின் சமூக ஜனநாயத் தொழிலாளர் கட்சியின்மூன்றாவது காங்கிரஸ் தீர்மானம் தற்காலிகப் புரட்சி அரசாங்கம் எனும் பிரச்சனையை மட்டும்முற்றாக எடுத்து கவனிக்கிறது.எனவே தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் சமூகஜனநாயகவாதிகள் கலந்துகொள்வது அந்தப் பிரச்சனையின் பகுதியாக அமைகிறது.

மறுபுறத்தில், தீர்மானம் தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தைப் பற்றி மட்டுமே கவனிக்கிறது, வேறெதைப்பற்றியும் இல்லை.எனவே,பொதுப்படையான அதிகாரத்தைக் கைப்பற்றும்பிரச்சனை முதலியவற்றிற்கு அதில் இடம் கிடையாது.இதையும் இதுபோன்றபிரச்சனைகளையும் காங்கிரஸ் விலக்கி வைத்தது சரியா? சரிதான் என்பதில் ஐயமே இல்லை;ஏனெனில், ரஷ்யாவிலுள்ள அரசியல் நிலைமை இப்படிப்பட்ட பிரச்சனைகளை நிகழ்ச்சி நிரலில் போடவில்லை.மாறாக,எதேச்சிகார முறையைத் தூக்கியெறிந்துவிட்டு ஓர் அரசியல் நிர்ணய சபையைக் கூட்டும் பிரச்சனையை இன்று மக்கள் அனைவரும் எழுப்பியுள்ளனர்.

யாராவது ஒரு எழுத்தாளர் சந்தர்ப்பப் பொருத்தத்துடனோ பொருத்தம் இல்லாமலோ சொல்ல நேரிட்ட விவகாரங்களைக் கட்சிக் காங்கிஸ்கள் எடுத்துக்கொண்டு முடிவு செய்யக் கூடாது.

நிலவர நிலைமைகளின் காரணத்தாலும் புறநிலை வகைப்பட்ட சமுதாய வளர்ச்சிப் போக்கின் காரணத்தினாலும் உயிர் நிலையான அரசியல் முக்கியத்துவமுள்ள பிரச்சனைகளைத் தான் எடுத்துக்கொண்டு முடிவு செய்ய வேண்டும்.

இன்றையப் புரட்சியிலும் பாட்டாளி வர்க்கத்தின் பொது போராட்டத்திலும் ஒரு தற்காலிகப்புரட்சி அரசாங்கம் பெறும் குறிபொருள் என்ன? ஒருங்கே பாட்டாளி வர்க்கத்தின் உடனடி நலன்கள், “சோசலிசத்தின் இறுதியான குறிக்கோள்கள்என்கிற நிலைகளிலிருந்தும்முடிந்தவரை முழுவளவான அரசியல் சுதந்திரம்தேவைப்படுகிறது என்று காங்கிரஸ் தீர்மானம் தொடக்கத்திலேயே சுட்டிக்காட்டி இதை விளக்குகிறது.மேலும்,முழுமையானஅரசியல் சுதந்திரத்துக்கு ஜார் எதேச்சிகார முறையை விலக்கி ஜனநாயகக் குடியரசை வைப்பது அவசியம்;இதை நமது கட்சியின் வேலைத்திட்டம் ஏற்கனவே அங்கீகரித்திருக்கிறது.காங்கிரஸ் தீர்மானம் ஜனநாயகக் குடியரசு எனும் முழக்கத்துக்குஅழுத்தம் கொடுப்பது தர்க்கரீதியிலும் சரி, கோட்ப்பாடுரீதியிலும் சரி அவசியமாகும்; ஏனெனில்,பாட்டாளி வர்க்கம் ஜனநாயகத்தின் முன்னணி வீரன் என்கிற முறையில் முழுமையான சுதந்திரத்தைத் தான் சாதிக்க முயன்று வருகிறது.தவிரவும் தற்சமயம் இதை வலியுறுத்திக் காட்டுவது அறிவுக்குகந்ததே;ஏனெனில் முடியரசு வாதிகள்அதாவது அரசியல் சட்ட ஜனநாயகஅல்லது ஒஸ்வபஷ்தேனியே கட்சியினர் எனப்பட்டவர்கள் நம்நாட்டில்இச்சமயத்தில் ஜனநாயகம்எனும் கொடியைப் பறக்க விட்டிருக்கிறார்கள்.குடியரசை நிலைநாட்டு வதற்கு மக்களின் பிரதிநிதி களைக் கொண்ட ஒரு சபை இன்றியமையாத தாகும்,அது அனைத்து மக்களுடையதாயும் (அதாவது,எல்லோருக்கும் சம வாக்குரிமை,நேரடித் தேர்தல்கள்,இரகசிய வாக்குப்பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக் கப்பட்டதாயும்)அரசியலை நிர்ணயிக்கிற தாயும் உள்ள சபையாகவும் இருக்க வேண்டும். இதைத்தான் சற்று மேலே தள்ளிக் காங்கிரஸ் தீர்மானம் அங்கீகரிக்கிறது. என்றாலும் இத்துடன் தீர்மானம் நின்றுவிடவில்லை.”மக்களின் சித்தத்தை உண்மையாகவே வெளியிடக் கூடியஒரு புதிய அமைப்பை நிலைநாட்டுவதற்கு ஒரு பிரதிநிதி சபையைஅரசியல் நிர்ணய சபை என்று சொல்லிவிட்டால் போதாது. அப்படிப்பட்ட சபைக்குநிர்ணயிப்பதற்குரியஅதிகாரமும் பலமும் இருந்து தீரவேண்டும்.இதை உணர்வில் கொண்டுதான் காங்கிரஸ் தீர்மானம் அரசியல் நிர்ணய சபைஎனும் சம்பிரதாய முழக்கத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் அப்படிப்பட்ட சபை தன்னுடைய பணியை நடைமுறையில் நிறைவேற்ற முடிவதற்கு இன்றியமை யாததான பொருளாயத நிபந்தனைகளையும் சேர்த்துச் சொல்கிறது.சொல்லளவிலான அரசியல் நிர்ணய சபையை நடைமுறையில் அரசியலை நிர்ணயிக்கும் சபையாக ஆக்குவதற்கான நிபந்தனைகளைஇவ்வாறு குறிப்பிட்டுச் சொல்வது இன்றியமையாத் தேவையாகும். ஏனெனில், ஏற்கனவே நாம் ஒரு தடவைக்கு மேலாகவே சுட்டிக்காட்டியிருக்கிறவாறு, அரசியல் சட்ட- முடியரசுவாதக் கட்சி பிரதிநிதித்துப்படுத்தும் மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தினர் அனைத்து மக்களுடைய அரசியல் நிர்ணய சபை எனும் முழக்கத்தை வேண்டுமென்றே திரித்துப் புரட்டி வருகிறார்கள், பொருளற்ற சொற்றொடராகத் தாழ்த்தி வருகிறார்கள்.

தற்காலிகப் புரட்சி அரசாங்கம் ஒன்றுதான் வெற்றிவாகை சூடிய மக்களின் ஆயுதம் ஏந்திய புரட்சியெழுச்சியின் உறுப்பாக இருக்கக்கூடிய அது ஒன்றுதான் தேர்தல் இயக்கத்தைநடத்துவதற்கானமுழுச் சுதந்திரத்தை உத்தரவாதம் செய்ய முடியும் என்றும்,மக்கள் சித்தத்தை உண்மையாகவே வெளியிடக் கூடிய ஒரு சபையைக் கூட்ட முடியும் என்றும் காங்கிரஸ் தீர்மானம் கூறுகிறது. இந்த ஆய்வுரை சரியாஇதை மறுக்க நினைப்பவர் ஜார் அரசாங்கம் பிற்போக்கின் பக்கம் சேராமல் இருப்பது சாத்தியமே என்றும், தேர்தல்களின் போது அது நடுநிலை வகிக்க முடியும் என்றும், மக்களின் சித்தம் உண்மையாகவே வெளியிடப்படும்படி அது கவனித்துக் கொள்ளும் என்றும் அடித்துப் பேசியாக வேண்டும். இப்படிப்பட்ட வன்கூற்றுகள் முற்றிலும் அபத்தமானவை, எனவே அவற்றை யாரும் பகிரங்கமாகத் தாங்கிப் பேசத் துணிய மாட்டார்கள். ஆனால் நம் ஒஸ்வபஷ்தேனியே கனவான்கள் அவற்றிற்கு மிதவாதச் சாயம் பூசிக் கள்ளத்தனமாக நுழைத்து வருகிறார்கள். அரசியல் நிர்ணய சபையை யாராவது கூட்டித் தீரவேண்டும்; தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடப்பதையாராவது உத்தரவாதம் செய்து தீரவேண்டும்; அப்படிப்பட்ட சபைக்கு யாராவது முழு பலமும் அதிகாரமும் அளித்துத் தீரவேண்டும். புரட்சி எழுச்சியின் உறுப்பாகிய புரட்சி அரசாங்கம்தான் இதை முழு நேர்மையுடன் விரும்ப முடியும். இதை சாதிப்பதற்கு வேண்டியு அனைத்தையும் அது ஒன்றுதான் செய்ய முடியும். ஜார் அரசாங்கம் தவிர்க்க முடியாதவாறு இதை எதிர்க்கும்.

ஜாருடன் பேரம் செய்துகொண்ட ஒரு மிதவாத அரசாங்கம், மக்களின் புரட்சி எழுச்சியை முற்றிலும் நம்பி நிற்காத ஒரு மிதவாத அரசாங்கம்,இதை நேர்மையாகவும் விரும்பவும் முடியாது. மிகமிக நேர்மையுடன் விரும்பினாலும் சாதிக்க முடியாது. எனவே,சரியானதும் முரணற்ற ஜனநாயகவாதமுமான ஒரே முழக்கத்தை காங்கிரஸ் தீர்மானம் கொடுக்கிறது. எனினும் ஜனநாயகப் புரட்சியின் வர்க்கத் தன்மையைப் பார்க்காமல்விட்டால் தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தைப் பற்றிய மதிப்பீடு முழுமையற்று இருக்கும், தவறாகவும் இருக்கும் ஆகவே, புரட்சி முதலாளி வர்க்கத்தின் ஆட்சியைப் பலப்படுத்தும் என்று தீர்மானம் சேர்த்துச் சொல்கிறது. இன்றைய முதலாளித்துவ சமுதாய,பொருளாதார அமைப்பு முறையில் இது தவிர்க்க முடியாதது. ஓரளவுக்கு அரசியல் சுதந்திரம் பெற்றிருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் மீது முதலாளி வர்க்கத்தின் ஆட்சி பலப்படுவது அதிகாரத்திற்காக அவற்றிடையே கடுமையான போராட்டம் தவிர்க்க முடியாதவாறு நிகழ்வதிலும் பாட்டாளி வர்க்கத்திடமிருந்து புரட்சிக் காலப்பகுதியில் கிடைத்த ஆதாயங்களைப் பறித்துவிடுவதற்குமுதலாளி வர்க்கம் கடுமையான முயற்சிகள் செய்வதிலும் கொண்டுபோய்விடும்.எனவே,ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் முன்னணியில் நின்று தலைமை தாங்கிச் செல்கிற பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ ஜனநாயகத்தில் உள்ளார்ந்து இருக்கிற புதிய பகைமைகளையோ புதியபோராட்டத்தையோ ஒரு கணமேனும் மறக்கலாகாது.

ஆகவே ஒருங்கே சுதந்திரத்திற்காகவும் குடியரசிற்காகவும் நடக்கும் போராட்டத்து டனும், அரசியல் நிர்ணய சபையுடனும்,ஒரு புதிய வர்க்கப் போராட்டத்துக்கு வழி திறக்கும் ஜனநாயகப் புரட்சியுடனும் சம்பந்தப்பட்டுள்ள நிலையில் ஒரு தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தின் குறிபொருளை நாம் இங்கே ஆய்ந்து பார்த்த தீர்மானத்தின் பகுதி முழுமையாக மதிப்பீடு செய்கிறது.

அடுத்த பிரச்சனை ஒரு தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தின் பால் பொதுப்படையாகவே பாட்டாளி வர்க்கத்தின் உறவு நிலை என்ன எனும் பிரச்சனையாகும்.தற்காலிகப் புரட்சி அரசாங்கம் அவசியம் எனும் துணிபைத் தொழிலாளி வர்க்கத்திடையே பரப்ப வேண்டும் என்று கட்சிக்கு நேரடியாக அறிவுருத்துவதன்வழியாக இப்பிரச்சனைக்கு காங்கிரஸ் தீர்மானம் முதன்முதலில் விடையளிக்கிறது. இந்த அவசியத்தை தொழிலாளி வர்க்கம்உணர்ந்து தீரவேண்டும்.ஜார் அரசாங்கத்தைத் தூக்கியெறியும் பிரச்சனையை ஜனநாயகப் போக்குள்ளமுதலாளி வர்க்கத்தினர் பின்னணியில் வைக்கின்றனர்,ஆனால் நாம் இதை முன்னணிக்கு கொண்டுவந்து தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தின் தேவையை வலியுறுத்தி தீரவேண்டும்.மேலும் இன்றைய காலப் பகுதியின் புற நிலைமை களோடும் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின் குறிக்கோள்களோடும் பொருந்தும்படியான செயலுக்குரிய வேலைத்திட்டத்தை இப்படிப்பட்ட அரசாங்கத்துக்கு நாம் வரையறுத்துத் தரவேண்டும். இவ்வேலைத் திட்டம் நம் கட்சியின் மொத்தமான குறைந்தபட்ச வேலைத்திட்டமாகும்.இது உடனடியான அரசியல், பொருளாதார மாற்றங்களைப் பற்றிய வேலைத்திட்டம்; ஒருபுறத்தில் இவற்றை இன்றுள்ள சமுதாய,பொருளாதார உறவு முறைகளின் அடிப்படையிலேயே முற்றாக நடைமுறையில் சாதிக்க முடியும்;மறுபுறத்தில்,அடுத்து முன்னோக்கி அடி எடுத்து வைப்பதற்கு, சோசலிசத்தை சாதிப்பதற்கு இவை தேவைப்படுகின்றன.

ஆக,தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தின் தன்மையையும் நோக்கத்தையும் தீர்மானம் தெளிவுடன் வரையறுக்கிறது. இப்படிப்பட்ட அரசாங்கம் தோற்றத்திலும் சரி, அடிப்படை தன்மையிலும் சரி, மக்களின் புரட்சி எழுச்சியின் உறுப்பாகத்தான் இருந்து தீரவேண்டும்.

அதன் சம்பிரதாய நோக்கம் அனைத்து மக்களதும் அரசியல் நிர்ணய சபையைக் கூட்டுவதற்குரியகருவியாக பயன்படுவதா கத்தான் இருந்து தீரவேண்டும்.அதன் நடவடிக்கைகளின் உள்ளடக்கம் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின் குறைந்தபட்ச வேலைத்திட்டத்தை, எதேச்சிகார முறையை எதிர்த்து எழுச்சி செய்துவரும் மக்களின் நலன்களைப் பாதுகாக்கவல்ல ஒரே வேலைத்திட்டத்தை, செயல்படுத்துவ தாகத்தான் இருந்து தீரவேண்டும்.

தற்காலிக அரசாங்கம் என்பது தற்காலிகமானதே ஆதலால் மக்கள் முழுமையின் ஒப்புதலை இன்னுமும் பெறாத ஓர் ஆக்கப்பூர்வமான வேலைத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று வாதிடக்கூடும், அப்படிப்பட்ட வாதம் பிற்போக்காளர்களின்,”வரம்பற்ற முடியாட்சி வாதிகளின்குதர்க்கவாதமாகத்தான் இருக்குமே தவிர வேறில்லை.ஓர் ஆக்கப்பூர்வமான வேலைத்திட்டத்தைநிறைவேற்றாமல் இருந்துவிடுவது ஓர் ஊழல் மலிந்த எதேச்சிகார முறையின் நிலபிரபுத்துவ ஆட்சி இருந்துவருவதை சகித்துக் கொள்வதாகத்தான் அர்த்தம்.புரட்சி லட்சியத்துக்குத் துரோகம் செய்பவர்களைக் கொண்ட அரசாங்கம் ஒன்றுதான் இப்படிப்பட்ட ஆட்சியைச் சகித்துக்கொள்ள முடியும்.மக்களின் புரட்சி எழுச்சியின் உறுப்பாக இருக்கும் அரசாங்கம் அதை சகித்துக்கொள்ள முடியாது. அரசியல் நிர்ணய சபை கூட்டம்கூடும் உரிமையை உறுதிப்படுத்தாமல் போகக்கூடும், எனவே அரசியல்நிர்ணய சபை அப்படிப்பட்ட சுதந்திரத்தை உறுதிப்படுத்தும்வரை நாம் கூட்டம்கூடும் உரிமையைக்கையாளாமல் இருந்துவர வேண்டும் என்று யாரேனும் சொன்னால் அது கேலிக்கூத்தாகத்தான் இருக்கும்.தற்காலிகப் புரட்சி அரசாங்கம் குறைந்தபட்ச வேலைத்திட்டத்தை உடனடி யாக நிறைவேற்றுவதை ஆட்சேபிப்பதும் அவ்வாறே கேலிக்கூத்தாகத்தான் இருக்கும்.

கடைசியாக குறைந்தபட்ச வேலைத் திட்டத்தை நிறைவேற்றுவது தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தின் பணி என்று செய்திருப்பதன் வழியாக,அதிகபட்ச வேலைத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்றுவது பற்றிய, சோசலிசப் புரட்சிக்கு அதிகாரத்தை கைப்பற்றுவது பற்றிய அபத்தமான அரை-அராஜகவாத கருத்துக்களை இத்தீர்மானம் விலக்கி விடுகிறதையும் நாம் குறித்துக்கொள்வோம். ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சியின் அளவும் (இது ஒரு புறநிலைமை) பாட்டாளி வர்க்கத் திரள்களின் வர்க்க உணர்வுகளின் அளவும் (இது புற நிலைமைகளோடு பிரிக்கமுடியாதபடி பிணைக்கப்பட்டுள்ள அகநிலைமை)தொழிலாளி வர்க்கத்தின் உடனடியான முழுமையான விடுதலையை அசாத்தியமாக்குகின்றன.சிறிதும் விசயமறியாத பேர்வழிகள்தாம் இன்று நிகழ்ந்துவரும் ஜனநாயகப் புரட்சியின் முதலாளித்துவத் தன்மையைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொள்ள முடியும்;திரள் திரளான தொழிலாளிகள்சோசலிசத்தின் குறிக்கோள்களைப் பற்றியும் அதைச் சாதிப்பதற்கான வழிமுறைகளைப்பற்றியும் இன்னமும் எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறார்கள் எனும் உண்மையை மிகவும் வெகுளித்தனமான நம்பிக்கை ஆர்வலர்கள்தாம் மறக்க முடியும். தொழிலாளர்களின் விடுதலையை தொழிலாளர்கள்தான் வென்றுகொள்ள வேண்டும் என்று நாம்அனைவரும் திடமாக நம்புகிறோம்.முதலாளி வர்க்கம் முழுவதையும் எதிர்த்து நடக்கும் ஒரு பகிரங்கமான வர்க்கப் போராட்டத்தில் அவர்கள் வர்க்க உணர்வும் ஒழுங்கமைப்பும் பயிற்சியும் போதனையும் பெறாவிட்டால் சோசலிசப் புரட்சி எனும் பேச்சுக்கே இடமில்லை. நாம் சோசலிசப் புரட்சியை தள்ளிப்போடுகிறோம் என்ற அராஜகவாதி களின் அட்சேபனைகளுக்குநாம் சொல்வதாவது நாங்கள் சோசலிசப் புரட்சியைத் தள்ளிப்போடவில்லை,ஜனநாயகக் குடியரசிற்கான பாதை என்கிற ஒரே சாத்தியமான வழியில்,ஒரே பாதையில் அதை நோக்கி முதல் அடி எடுத்து வைக்கிறோம் அரசியல் ஜனநாயகம் எனும் பாதையைவிட்டு வேறெந்த வழியிலாயினும் சோசலிசத்தை அடைய விரும்புவர்கள் பொருளாதார அர்த்தத்திலும் அரசியல் அர்த்தத்திலும் ஒருங்கே அபத்தமான,பிற்போக்கான முடிவுகளுக்குத்தான் தவிர்க்க முடியாதவாறு வந்துசேர்வார்கள். நாம் மேலேபோய் ஏன் நம் அதிகபட்சவேலைத்திட்டத்தை (சோசலிச வேலைத்திட்டத்தை) நிறைவேற்றக் கூடாது என்று உரியதருணத்தில் தொழிலாளி யாராவது நம்மைக் கேட்டால், ஜனநாயக மனப்பான்மையுள்ளமக்கள் திரள் இன்னமும் சோசலிசத்திலிருந்து வெகுதூரத்தில் இருந்துவருவதையும் இன்னமும்வர்க்கப் பகைமைகள் வளர்ச்சியுறாமலேயே இருந்துவருவதையும் இன்னமும் பாட்டாளி வர்க்கம் ஒழுங்கமைப்பு பெறாமலேயே இருந்துவருவதையும் சுட்டிக்காட்டி பதில் அளிப்போம்.ரஷ்யாவெங்கும் லட்சக்கணக்கிலே தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி ஒழுங்கமையுங்கள், நம் வேலைத்திட்டத்துக்கு கோடிக்கனக்கான மக்களின் அனுதாபத்தைப் பெறுங்கள்!படாடோபமான ஆனால் அர்த்தமற்ற அராஜக சொற்றொடர்களோடு நின்றுகொள்ளாமல் இதைச் செய்ய முயலுங்கள் முடிந்தவரை முழுமையான ஜனநாயக மாற்றங்களைப் பொறுத்துத்தான் இந்த ஒழுங்கமைப்பை சாதிப்பதும் இந்த சோசலிச அறிவொளியைப்பரப்புவதும் இருக்கிறது என்பதை நீங்கள் உடனடியாக பார்ப்பீர்கள்.

மேலேபோவோம்,தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தின் குறிபொருளும் அவ்வரசாங்கத்தின்பால் பாட்டாளி வர்க்கத்தின் உறவு நிலையும் தெளிவாக்கப் பட்டவுடன் பின்வரும் கேள்வி எழுகிறது: அப்படிப்பட்ட அரசாங்கத்தில் நாம் கலந்து கொள்வது (மேலிருந்து செயல் புரிவது) அனுமதிக்கத் தக்கதாஅனுமதிக்கத்தக்கதே என்றால் எந்த நிபந்தனையின் கீழ் அனுமதிக்கத்தக்கது? நாம் கீழிருந்து புரியும் செயல் என்னவாக இருக்க வேண்டும்? இவ்விரு கேள்விகளுக்கும் சரிநுட்பமான விடைகளை தீர்மானம் கொடுக்கிறது. ஒரு தற்காலிகப் புரட்சிஅரசாங்கத்தில் (ஜனநாயகப் புரட்சியின் காலப்பகுதியில், குடியரசிற்காகப் போராடி வரும் காலப் பகுதியில்)சமூக ஜனநாயகவாதிகள் கலந்து கொள்வது கோட்பாட்டுரீதியில் அனுமதிக்கத் தக்கதே என்று தீர்மானம் அழுத்தம் திருத்தமாக அறிவிக்கிறது. கோட்பாடு ரீதியில் அனுமதிக்கதக்கதல்ல என்று இக்கேள்விக்கு விடையளிக்கும் அராஜகவாதிகளிடமிருந்தும் இப்படிப்பட்ட அரசாங்கத்தில் நாம் கலந்துகொள்வதை அவசியமாக்கும் ஒரு நிலைமை வாய்க்கக் கூடியதைக் காட்டி நமக்கு பயங்காட்ட முயற்சிக்கும் சமூக ஜனநாயகவாதத்தின் வாலைப்பிடிக்கும் (மார்த்தீனவ், புதிய இஸ்கரா ஆதரவாளர்கள் போன்ற) நபர்களிடமிருந்தும் ஒருங்கே இப்பிரகடனத் தின் வழியாக இறுதியாகவும் திண்ணமாகவும் நம்மை விலக்கிக் கொள்கிறோம். புதிய இஸ்கரா கருத்தை, அதாவது தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் சமூக ஜனநாயகவாதிகள் கலந்துகொள்வது ஒருவகையான மில்லிரன்வாதமாக இருக்கும் என்றும் முதலாளித்துவ ஆட்சிமுறையைப் புனிதப்படுத்துவது முதலிய வகையில் அது கோட்பாடுரீதியிலே அனுமதிக்கத்தக்கதல்ல என்று கூறும் கருத்தை,ரஷ்யாவின் சமூகஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் மூன்றாவது காங்கிரஸ் இந்தப் பிரகடனத்தின் வழியாக மாற்றவொண்ணா வகையில் நிராகரித்தது.

என்றபோதிலும்,கோட்பாடுரீதியிலே அனுமதிக்கத்தக்கது எனும் பிரச்சனை நடைமுறைப்பொருத்தமுடமை எனும் பிரச்சனையைத் தீர்க்கவில்லை என்பதே தெளிவு.எந்தநிலைமைகளின் கீழ் இந்தப் புதிய போராட்ட வடிவம் - கட்சிக் காங்கிரஸ் அங்கீகரித்திருக்கும்மேலிருந்துநடத்தும் போராட்டம் பொருத்தமுடையதுசக்திகளின் பரஸ்பர ஒப்புநிலை முதலியவை போன்ற ஸ்தூலமான நிலைமைகளைப் பற்றித் தற்சமயம் பேசுவதுசாத்தியமில்லை என்று சொல்லாமலேயே விளங்கும்.இயல்பாகவே,தீர்மானம் இந்நிலைமைகளை முன்கூட்டி வரையறுக்காமல் நின்றுகொள்கிறது.அறிவுள்ளவன் எவனும் இவ்விஷயத்தைப் பற்றி எதையும் தற்சமயம் முன்கூட்டிச் சொல்லத் துணியமாட்டான். நாம் செய்யக் கூடியதும் செய்ய வேண்டியதும் இதுதான்: நாம் கலந்துகொள்வதின் தன்மையையும் குறிக்கோளையும் நிர்ணயிப்பது. தீர்மானத்தில் இதுதான் செய்யப்பட்டுள்ளது.நாம் கலந்துகொள்வதிலுள்ள இரண்டு நோக்கங்களைத் தீர்மானம் சுட்டிக் காட்டுகிறது:

1. எதிர்ப்புரட்சி முயற்சிகளை எதிர்த்து விட்டுக்கொடுக்காமல் போராடுவது.

2.தொழிலாளி வர்க்கத்தின் சுதந்திரமான நலன்களைப் பாதுகாப்பது, என்று புரட்சிகரமான மக்களுக்குப்பயங்காட்டி எதேச்சிகார முறையிடம் இணங்கிப் போகுமாறு செய்ய முயன்று பிற்போக்கின் மனநிலை பற்றி எவ்வளவோ ஆர்வத்துடன் மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தினர் பேசத்துவங்கியிருக்கும் நேரத்தில் (ஒஸ்வபஷ்தேனியே, இதழ் 71-ல் திரு.ஸ்துருவேயின் மிகவும் அறிவூட்டத்தக்க பகிரங்க கடிதத்தைப்பார்க்க) இப்படிப்பட்ட நேரத்தில் எதிர்ப்புரட்சிக்கு எதிராக உண்மையான போர் நடத்தும் பணியைப் பற்றி கவனம் செலுத்துமாறு பாட்டாளி வர்க்கத்தின் கட்சி அறைகூவி அழைப்பது பொருத்தமுடையதாகும்.

கடைசிப் பகுப்பாய்வில் பார்க்கும்போது, அரசியல் சுதந்திரம், வர்க்கப் போராட்டம் பற்றிய மாபெரும் பிரச்சனைகளைப் பலம் ஒன்றுதான் தீர்த்துவைக்கிறது; பாதுகாப்புக் காக மட்டுமின்றித் தாக்குதல்களுக்காவும் இந்தப் பலத்தை தயாரித்து ஒழுங்கமைப் பதும் தீவிரமாகப் பயன்படுத்து வதும் நம் வேலையாகும். ஐரோப்பாவில் அரசியல் பிற்போக்கு நீண்டகாலமாக நடத்திவரும் ஆட்சி - இது பாரீஸ் கம்யூன் நடந்த நாட்களிலிருந்து இடையறாது நீடித்து வருகிறது. - செய்கை என்பது கீழிருந்துமட்டுமே நடந்தேறமுடியும் எனும் கருத்துக்கு நம்மை மிதமிஞ்சிப் பழக்கப்படுத்தியுள்ளது,தற்காப்புப் போராட்டங்களை மட்டுமே பார்ப்பதற்கு நம்மை மிதமிஞ்சிப் பழக்கப்படுத்தியுள்ளது. ஐயமின்றி ஒரு புதிய சகாப்தத்தில் நாம் நூழைந்திருக்கிறோம் - அரசியல் எழுச்சிகளும் புரட்சிகளும் நடக்கும் காலப்பகுதி தொடங்கிவிட்டது. இன்று ரஷ்யா கடந்துவரும் இப்படிப்பட்ட காலப்பகுதியில் நாம் பழைய, மாறுதலற்ற சூத்திரங்களோடு நிறுத்திக்கொள்வது அனுமதிக்கத்தக்கதல்ல. மேலிருந்து செயல்புரிவது எனும் கருத்தை நாம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.; மிகவும் வலுவான, தாக்குச்செயலுக்கு தயாரிப்பு செய்யவேண்டும்; அப்படி செயலுக்குரிய நிலைமைகளையும் வடிவங்களையும் பயில வேண்டும். இந்நிலைமைகள் இரண்டையும் காங்கிரஸ் தீர்மானம் முன்னணியில் கொண்டுவந்து நிறுத்துகிறது:ஒன்று,தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் சமூக ஜனநாயகவாதிகள் கலந்துகொள்வதைப் பற்றிய சம்பிரதாய அம்சத்தைக் குறிப்பிடுகிறது.

(கட்சி தன்னுடைய பிரதிநிதிகளைக் கண்டிப்புடன் கண்காணிப்பது); இரண்டாவது, இப்படி கலந்துகொள்வதன் தன்மையை (முழுமையான சோசலிசப் புரட்சியை செய்து முடிக்கும் குறிக்கோளை கணமேனும் மறந்துவிடாமல் இருப்பது) குறிப்பிடப் படுகிறது.

மேலிருந்துசெயல்புரிவது - இந்தப் புதிய, இதுவரை அநேகமாக முன்னுதாரணமற்ற போராட்ட வழிமுறை - சம்பந்தமாகக் கட்சிக் கொள்கையின் எல்லா அம்சங்களையும் இவ்வாறு விளக்கிய பின்பு நாம் மேலிருந்து செயல் புரிய முடியாமற்போகிற நிலைமைக்கும் தீர்மானம் ஏற்பாடு செய்கிறது. எப்படி இருந்தபோதிலும் தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தின் மீது நாம் கீழிருந்து நிர்பந்தம் கொண்டுவர வேண்டும்.கீழிருந்து இந்த நிர்பந்தத்தைச் செயல்படுத்த முடிவதற்குப் பாட்டாளி வர்க்கம்ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டும்ஏனெனில்,புரட்சிகரமான நிலைமையில் விவகாரங்கள் அசாதாரணமான வேகத்துடன் பகிரங்கமானஉள்நாட்டுப் போர்க்கட்டத்திற்கு வளர்கின்றன -, மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி பாட்டாளி வர்க்கத்துக்குத் தலைமை வகித்திருக்கவும் வேண்டும்அது ஆயுதம் ஏந்திச் செலுத்தும் நிர்பந்தத்தின் நோக்கம் புரட்சியின் ஆதாயங்களைப் பாதுகாப்பது,கெட்டிப்படுத்துவது,விரிவுபடுத்துவதுஅதாவது,பாட்டாளி வர்க்க நலன்களின் நிலையிலிருந்து பார்க்கும் போது அந்த ஆதாயங்கள் நம் குறைந்தபட்ச வேலைத்திட்டம் முழுவதையும் நிறைவேற்றுவதாக அமைந்திருக்க வேண்டும்.இத்துடன் தற்காலிகப் புரட்சி அரசாங்கம் பற்றிய மூன்றாவது காங்கிரஸ் தீர்மானத்தைப் பற்றிய நம்முடைய சுருக்கமான பகுப்பாய்வை முடிக்கிறோம். வாசகர் பார்க்கலாம்:இந்தத் தீர்மானம் இந்தப் புதிய பிரச்சனையின் முக்கியத்துவத்தை விளக்குகிறது, அதன் பாலுள்ளபாட்டாளி வர்க்கக் கட்சியின் உறவு நிலையையும் விளக்குகிறது, தற்காலிகப் புரட்சி அரசாங்கத்திற்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் ஒருங்கே கட்சி பின்பற்ற வேண்டியகொள்கையையும் விளக்குகிறது.

இனி இதேப் பிரச்சனையைப் பற்றி மாநாடுநிறைவேற்றிய தீர்மானத்தைக் கவனிப்போம்.

நாம் புரிந்துகொள்ள வேண்டியவை

நாட்டில்,சமூகத்தில் பல பிரச்சனைகள் இருக்கும்.எனினும் கம்யூனிஸ்டுகள் சமூகத்தில் நிலவும் மிகவும் முக்கியமான பிரச்சனைகளில் முதன்மையாக எடுத்துக் கொண்டும்,புறநிலைவகைப்பட்டசமூக வளர்ச்சிக்குத் மிகவும் மோசமான முறையில் தடையாக இருக்கக்கூடிய பிரச்சனைகளை முதன்மையாக எடுத்துக் கொண்டும்,பல்வேறுவிதமான அரசியல் பிரச்சனைகளில் நமக்கு உயிர் ஆதாரமாக உள்ள அரசியல் பிரச்சனைகளை முக்கியமாக எடுத்துக்கொண்டு கம்யூனிஸ் டுகள் ஆழமாக விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்கிறார் லெனின்.

ஆனால் இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டு அமைப்புகளின் தலைவர்கள் இவ்வாறு மிகவும் முக்கியமான முதன்மையான பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்தப் பிரச்சனைகளை விரிவாக விவாதித்து முடிவெடுக்கத் தவறினார்கள்.அதன் விளைவாகவே கம்யூனிஸ்டுகள் நூற்றுக்கணக்கான சிறு அமைப்புகளாக சிதறிப் போய்விட்டார்கள்.இந்தியாவில் கம்யூனிஸ்டுக் கட்சி கட்டப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகப்போகிறது,ஆனாலும் இந்திய மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்களாக கம்யூனிஸ்டுகள் ஆகவில்லை.மாறாக சமீபகாலங்களில் உருவான கட்சிகள்கூட கம்யூனிஸ்டுகளைக் காட்டிலும் மக்களிடம் அதிக செல்வாக்கு உள்ளவர்களாக வளர்ந்து வருகிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் கம்யுனிஸ்டுகள் மார்க்சிய லெனினிய ஆசான்களின் போதனைகளை சரியாக கற்றுக்கொள்ளவில்லை என்பதே ஆகும்.குறிப்பாக லெனினது போதனைகளை கம்யூனிஸ்டுகள் படித்து கற்றுக்கொள்ளவே இல்லை.லெனினது நூல்களை ரஷ்ய கம்யூனிஸ்டுகள் தமிழில் மொழிபெயர்த்து இங்கு வெளியிட்டார்கள்.ஆனால் இங்குள்ளகம்யூனிஸ்டுகள் யாரும் லெனினது நூல்களை மறுபடியும் பதிப்பித்து வெளியிடவில்லை.

இதிலிருந்தே இங்குள்ள கம்யூனிச அமைப்புகளின் தலைவர்கள் லெனினது போதனைகளை இங்கு அணிகளிடமும் உழைக்கும் மக்களிடம் பரப்ப வேண்டும் என்ற ஆர்வம் சிறிதும் இல்லாமல் இருப்பதை இந்த நடைமுறியிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.இதற்கு மாறாக இங்குள்ள கம்யூனிஸ்டுகளில் பலர் பெரியார் மற்றும் அம்பேத்கார் போன்ற முதலாளித்துவ சீர்திருத்தவாதிகளின் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்வதிலும் கிராம்கி போன்ற மார்க்சியத்திலிருந்து விலகி முதலாளிகளின் பக்கம் சென்று விட்டவர்களின் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்வதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள்.அதன் விளைவாகவே இவர்கள் அரசியலில் பல தோல்விகளை தொடர்ந்து சந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள்.மேலும் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு மக்களின் செல்வாக்கை இழந்துகொண்டு வருகிறார்கள்.பெரியார் அம்பேத்கார்,கிராம்ஸ்கி போன்றவர்களின் கருத்துக்களில் மிகவும் ஆர்வமாக செயல்படுபவர்கள்தான் தற்போது மக்களிடம் செல்வாக்கு பெற்று வருகிறார்கள் ஏனெனில் இதே கருத்துக்களைப் பிரச்சாரம் செய்யும் கம்யூனிஸ்டுகளைக் காட்டிலும் அதே கருத்துக்களை மிகவும் விரிவாக பிரச்சாரம் செய்யும் பெரியாரியவாதிகளையும் அம்பேத்காரியவாதிகளையும் ஏற்றுக் கொள்வது இயல்பானதே ஆகும்.ஆகவே மார்க்சிய லெனினியவாதிகள் மார்க்சிய லெனினியத்தை ஆழ்ந்து படித்து ஆசான்களின் போதனைகளை தெளிவாகப் புரிந்துகொண்டு அதன்மீது முழுமையாக நம்பிக்கை வைத்து செயல்பட்டால் மட்டுமே மக்கள் இங்குள்ள கம்யூனிஸ்டுகளை நம்பி அவர்கள் பின்னால் வருவார்கள்.அதற்கு மாறாக மக்கள் பெரியாரிஸ்டுகளையும் அம்பேத்காரிஸ்டுகளையும்தான் என்று கருதி மார்க்சிய லெனினியத்தை கைவிட்டுவிட்டு பெரியாரிய கொள்கைகளையும் அம்பேத்காரிய கொள்கைகளையும் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து பின்பற்றினால் இவர்கள் ஒருபோதும் கம்யூனிஸ்டுகளாக இருக்க முடியாது.பெரியாரியவாதிகளும் அம்பேத்காரியவாதிகளும் தொடர்ந்து சந்தித்துவரும் தோல்விகளைத்தான் பெரியாரிய அம்பேத்காரியகம்யூனிஸ்டு களும் சந்திக்க வேண்டிவரும்.இதுவரை கம்யூனிஸ்டுகள் சந்தித்துவரும் தோல்விகளுக்கு கம்யூனிச அரசியல் தத்துவக் கொள்கைகள் காரணம் இல்லை. கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து மார்க்சிய லெனினிய ஆசான்களின் தத்துவ அரசியலை கற்றுத் தேராமல் அதனை புறக்கணித்து செயல்பட்டதுதான் அவர்களின் தோல்விகளுக்கு காரணம் ஆகும். இன்றைய சூழலில் ஒரு ஒன்றுபட்ட புரட்சிகரமான கம்யூனிஸ்டுக் கட்சி இல்லாத்துதான் கம்யூனிஸ்டுகளின் தோல்விகளுக்கு முக்கியமான காரணம் ஆகும். இந்த முக்கியமான பிரச்சனையை முதன்மையாக கையிலெடுத்து விரிவாக விவாதித்து முடிவெடுக்க முணைவதுதான் கம்யூனிஸ்டு களின் முதன்மையான பணியாக இருக்க வேண்டும். அதற்கு கம்யூனிஸ்டுக் கட்சி பற்றி லெனினால் வகுக்கப்பட்ட இலக்கணத்தை ஆதாரமாக்க் கொண்டு இங்கு கம்யூனிஸ்டுகள் அனைவரும் ஜனநாயகமான முறையில் விவாதித்து முடிவெடுத்து அதன் அடிப்படையில் ஒரு ஒன்றுபட்ட புரட்சிகரமான கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டவேண்டும். இதற்கு மாறாக பல்வேறு குழுக்களாக கம்யூனிஸ்டுகள் பிளவுபட்டுக் கொண்டே நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் ஒருபோதும் கம்யூனிஸ்டு களாக வளர முடியாது.

முழுமையான அரசியல் சுதந்திரம் தேவை என்றால் அன்றைய ரஷ்யாவில் ஜாரினுடைய எதேச்சிகாரத்தை வீழ்த்த வேண்டியது அவசியமாக இருந்தது போலவே இந்தியாவில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தை விரட்டியடிக்க வேண்டிய அவசியம் இருந்தது.

அன்றைய ரஷ்யாவில் ஜாரின் எதேச்சிகாரத்தை வீழ்த்தி முழுமையான அரசியல் சுதந்திரத்திற்காகப் பாடுபட வேண்டும் என்ற வேலைத்திட்டம் ரஷ்ய போல்ஷ்விக்குகளிடம் இருந்தது. ஆனால் இங்கு பிரட்டீஷ் ஏகாதிபத்தியத்தை வீழ்த்திவிட்டு முழுமையான அரசியல் சுதந்திரத்திற்காகப் பாடுபட வேண்டும் என்ற திட்டம் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியிடம் இல்லை.

அன்றைய ரஷ்யாவில் முடியரசுவாதிகளான சட்ட ஜனநாயக்க் கட்சியினர் ஜனநாயகம் வேண்டும்என்று சொல்லி நாடகமாடி மக்களை ஏய்த்து வந்ததை லெனினது கட்சி மக்களிடம் அம்பலப்படுத்தியது.ஆனால் இந்தியாவில் ரஷ்ய முடியரசுவாதக் கட்சியைப் போன்ற கட்சியான காந்தியின் காங்கிஸ் கட்சியின் சுதந்திரம் என்ற பெயரில் மக்களை ஏய்க்கும் நாடகத்தை அம்பலப்படுத்த இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியினர் தவறியதோடு மட்டுமல்லாமல் அந்த காங்கிரஸ் கட்சியின் வாலாகவே செயல்பட்டார்கள். அந்த நிலை இன்றுவரை தொடர்கிறது.

மக்களின் விருப்பங்களை உண்மையில் நிறைவேற்றக்கூடிய சபையாகத்தான் நாடாளுமன்றம் இருக்க வேண்டும் என்றார் லெனின்.ஆனால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட நேருவின்தலைமையிலான நாடாளுமன்றம் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றியதாதெலுங்கானா விவசாயிகள் பண்ணையார்களிடமிருந்து நிலங்களை பறிமுதல் செய்து அவர்களுக்கு இடையே பங்கிட்டுக்கொண்டார்கள். அது தவறானது என்று இந்திய மக்கள் யாராவது சொன்னார்களா? இல்லையே. மக்களின் விருப்பங்களுக்கு எதிராக தெலுங்கான விவசாயிகளின் மீது போர் தொடுத்ததே நேரு அரசாங்கம். இத்தகைய அரசாங்கத் துக்காகவா கம்யூனிஸ்டுகள் பாடுபட வேண்டும்? ஆனால் இந்தியாவில் நிலவும் மக்கள் விரோத அரசாங்கங்களை உருவாக்கிய காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவே கம்யூனிஸ்டுகள் செயல்பட்டது தான் வரலாறு. இவர்கள் லெனின் எழுதிய இந்த நூலைப் படித்து புரிந்திருந்தால் அன்றை காந்தியின் காங்கிரசுக்கு வாலாகப்போய் இருக்க மாட்டார்கள்.

திமுக,காங்கிரஸ் போன்ற கட்சிகள் இந்த பாராளுமன்ற ஆட்சி முறையை மக்களாட்சி முறை என்று திரித்துப் புரட்டி பொய்யாக மக்களிடம் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த முதலாளித்துவ்வாதிகளைப் போலவே இங்குள்ள சில கம்யூனிஸ்டுத் தலைவர்கள் இந்தபாராளுமன்ற ஆட்சி முறையை மக்களுக்கானது என்றும் இந்தப் பாராளுமன்ற புனிதத்தைக் காக்க வேண்டும் என்று கூறிவருகிறார்கள். இது லெனினியத்திற்கு எதிரானதாகும்.

அன்றைய ரஷ்யாவில் ஜாரின் விருப்பத்துக்கு எதிராக செயல்படக் கூடாது என்று சில அரசியல் கட்சிகள் முடிவெடுத்து செயல்பட்டன.அந்த கட்சிகளை ரஷ்ய போல்ஷ்விக்குகள் ரஷ்ய மக்களிடம் அம்பலப்படுத்தினர்.அதே போலவே இந்தியாவிலும் அந்நியஏகாதிபத்தியங்களின் விருப்பங்களுக்கு எதிராக செயல்படக் கூடாது என்ற கொள்கையுடன் செயல்படக் கூடிய காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் உள்ளன.அதாவது அந்திய மூலதனத்தை இங்கு இறக்குமதி செய்வதன் மூலமே நாம் இங்கு தொழிற்துறையை வளர்க்கமுடியும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த முதலாளித்துவ கட்சிகளைப் போலவே இங்குள்ள கம்யூனிஸ்டுகளில் சில தலைவர்கள் அந்நியர்கள் இங்கு தொழில் துவங்க வேண்டும் என்றும் ஊகவணிகம் கூடாது என்று பிரச்சாரம் செய்கிறார்கள். சுதந்திரமான இந்திய வளர்ச்சி சாத்தியம் என்ற கொள்கையை இவர்கள் யாரும் பிரச்சாரம் செய்வதில்லை.இந்திய மக்களைஅந்நியர்களுக்கு அடிமை ஆக்குவதே இவர்களது கொள்கையாக இருக்கிறது. இது லெனினது வழிகாட்டுதலுக்கு எதிரானதே ஆகும்.

தற்காலிய புரட்சி அரசாங்கத்தின் வர்க்கத் தன்மையைப் பார்க்க வேண்டும் என்றார் லெனின்.ஆனால் பிரிட்டீஷ் ஆட்சிக்குப் பின் வந்த காங்கிரஸ் அரசாங்கத்தின் வர்க்கத் தன்மையை தவறாக இந்திய கம்யூனிஸ்டுகள் மதிப்பிட்டார்கள்.அதாவது காங்கிரஸ் அரசாங்கம் அந்நிய ஏகாதிபத்தியங்களை எதிர்க்கும் அரசாங்கம் என்றார்கள்.ஆனால் நடைமுறையில் காங்கிரஸ் அரசாங்கம் அந்நிய ஏகாதிபத்தியங்களை தொடர்ந்து சார்ந்து செயல்பட்டதை புரிந்துகொண்டு காங்கிரஸ் கட்சி மக்களுக்கு துரோகம் செய்யும் கட்சி என்பதை மக்களிடம் அம்பலப்படுத்துவதற்கு மாறாக காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்தே செயல்பட்டார்கள்.இப்போதும் அவ்வாறே செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு தற்கால புரட்சிகர அரசாங்கமாக இருந்தாலும் அதில் பங்குபெறும் முதலாளித்துவ்வாதிகள் முதலாளித்துவ வர்க்க ஆட்சியைப் பலப்படுத்துவதற்கு முயற்சி செய்வார்கள் என்றும் புரட்சியின் மூலம் உழைக்கும் மக்கள் பெற்ற ஆதாயங்களை பறித்துவிடுவார்கள் என்றும் லெனின் சொன்னார். ஆகவே கம்யூனிஸ்டுகள் எச்சரிக்கையாக இருந்து உழைக்கும் மக்களைச் சார்ந்து இருந்து இந்த முதலாளித்துவ்வாதிகளின் சதிகளை முறியடிக்க வேண்டும் என்றார் லெனின். ஆனால் இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள் முதலாளித்துவ்வாதிகளான காங்கிரஸ் அரசாங்கம் முதலாளித்துவத்தைப் பலப்படுத்தி உழைக்கும் மக்கள் பெற்ற ஆதாயங்களைப் பறிக்கும் என்று மக்களை எச்சரிக்கத் தவறியது.அதன் விளைவாக தற்போது பதவியிலுள்ள பாஜக அரசாங்கமானது இந்த பாராளுமன்ற ஆட்சிமுறையைப் பயன்படுத்தி உழைக்கும் மக்களுக்கு இதுவரை கிடைத்துவந்த ஆதாயங்களை பறித்துக்கொண்டுஇருக்கிறது.இதனை காங்கிரஸ் அரசாங்கமே செய்யத் துவங்கியபோதும் பாஜக அரசாங்கம்மிகவும் தீவிரமாக செய்து வருகிறது. லெனினிய வழியில் இதனை மக்களிடம் கொண்டு சென்று கம்யூனிஸ்டுகள் எச்சரித்து மக்களை அணிதிரட்டிப் போராடியிருந்தால் இத்தகைய இழிநிலை ஏற்பட்டிருக்காது. எனினும் இப்போதாவது லெனினிய முறைகளை கையாண்டு மக்களை விடுவிக்க வேண்டும்.

அன்றைய ரஷ்யாவில் ஜார் அரசை தூக்கியெறிய வேண்டிய அவசியம் இருந்தது. அதற்கு மாற்றாக எத்தகைய அரசாங்கம் வேண்டும் என்றும் அந்த அரசாங்கம் பின்பற்ற வேண்டிய அரசியல் பொருளாதாரக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்ற வேலைத்திட்டம் அன்றைய ரஷ்ய போல்ஷ்விக்களிடம் இருந்தது.ஆனால் இந்திய கம்யூனிஸ்டுகளிடம் பிரிட்டீசை எதிர்த்தப் போராட்டத்தில் இத்தகைய வேலைத்திட்டம் இல்லை.

அன்றைய ரஷ்யாவில் தற்காலிக அரசாங்கம் என்பது தற்காலியமானதே எனவே அதற்கென்று ஒரு வேலைத் திட்டத்தை உருவாக்க முடியாது என்று சிலர் அங்கே வாதிட்டனர். அதனை மறுத்த லெனின் அத்தகைய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ரஷ்ய கம்யூனிஸ்டுகள் செயல்படத் தவறினால் ஊழல் மிகுந்த எதேச்சிகார ஆட்சியை நீடிக்கவிட்டதாகும் என்றுஎச்சரித்தார். அதாவது ஜனநாயகப் புரட்சி காலத்தில் ஒரு இடைக்கால புரட்சி அரசாங்கம்வேண்டும் என்றும் அது தற்காலிகமான அரசாகவே இருக்க வேண்டும் என்றும் அந்தஇடைக்கால அரசையும் தூக்கியெறிந்துவிட்டு ஒரு புரட்சிகரமான சோசலிச அரசை கம்யூனிஸ்டுகளின் தலைமையில் தொழிலாளர்கள் உருவாக்க வேண்டும் என்றும் லெனின் போதித்தார்.ஆனால் இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் பிரிட்டீஷ் ஆட்சியைத் தூக்கியெறிந்து ஒரு புரட்சிகர அரசாங்கத்தை உருவாக்குவதற்காக திட்டமிட்டு செயல்படவும் இல்லை. மாறாக காங்கிரஸ் கட்சியின் பின்னாலேயே செயல்பட்டனர். எனினும் காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்ட அரசானது தற்காலிகமானது என்றும் பிரச்சாரம் செய்து இந்த தற்காலிகமான அரசை தூக்கியெறிந்துவிட்டு ஒரு புரட்சிகரமான சோசலிச அரசை இந்தியாவில் உருவாக்கிட வேண்டும் என்பதற்கான திட்டம் தயாரித்து மக்களைத் திரட்டவும் இல்லை. மாறாக இந்தப் பிற்போக்கு ஏகாதிபத்தியங்களின் சார்பு அரசாங்கத்தை நிரந்தரமாக இருப்பதற்கு ஆளும் வர்க்கங்களோடு துணை போபவர்களாகவே மாறிவிட்டனர்.ரஷ்யப் புரட்சியின் அனுபவத்தையோ, லெனினிய வழிமுறைகளையோ இவர்கள் கற்றுக்கொள்ளவும்தயாரில்லை, அதனை பின்பற்றவும் தயாரில்லை.உண்மையில் மார்க்சிய லெனினியத்தை கைவிட்டுவிட்டு பிற்போக்கு முதலாளித்துவ்வாதிகளாகவே சீரழிந்து போய்விட்டனர்.

தற்காலிகமான அரசாங்கமானது ஒரு கம்யூனிஸ்டுக் கட்சியின் குறைந்தபட்ச வேலைத்திட்டத்தை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.அது கம்யூனிஸ்டுகளின் குறைந்தபட்ச வேலைத்திட்டத்தை நிறைவேற்றினாலும் அந்த அரசாங்கம் தற்காலிகமான அரசாங்கமே என்பதை கம்யூனிஸ்டுகள் எப்போதும் மறக்கக் கூடாது.அதாவது நமது குறைந்தபட்ச திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய அரசாங்கத்தை அமைத்துவிட்டு அதிலேயே திருப்தி அடைந்துவிடக்கூடாது. தற்காலிக அரசை உருவாக்கிவிட்ட பின்பும் நமது அதிகபட்சதிட்டமான சோசலிசத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகப் பாடுபட வேண்டும் என்றே லெனின் வலியுறுத்தினார். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது சூழ்நிலைகளை மதிப்பீடு செய்து குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுக்க வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். அந்த திட்டமானது உழைக்கும் மக்களின் நலன்களை பிரதிபலிப்பதோடு நமது அதிகபட்ச திட்டத்தை செயல்படுத்து வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும். இங்கே சிலர் குறைந்தபட்ச திட்டம் என்ற பெயரில் முதலாளிகள் தங்களை பாதுகாப்பதற்காக உருவாக்கி செயல்படுத்திய திட்டத்தையே குறைந்தட்ச திட்டம் என்ற பெயரில் செயல்படுத்த வேண்டும் என்று சொல்லி கம்யூனிஸ்டுகள் தங்களது சொந்த மூளையைப் பயன்படுத்தி தனது சுதந்திரத்தையும் தனித்தன்மையையும் முதலாளிகளின் காலடியில் போடவேண்டும் என்கிறார்கள். ஆகவே குறைந்தபட்ச திட்டத்தை உருவாக்குவதற்கான லெனினிய வழிகாட்டுதலை திருத்தமில்லாமல் படித்து உள்வாங்கி செயல்பட வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.

சோசலிச சமூகத்தை உருவாக்குவதற்கான அரசியல் போராட்டப் பாதையில் முதலில் தொழிலாளி வர்க்கமானது ஜனநாயகத்திற் கானப் போராட்டத்தில் வெற்றிபெற்றாக வேண்டும். அதாவது உழைக்கும் வர்க்கம் போராடும்போது அதனை ஜனநாயகமற்ற வகையில் ஒடுக்கும் அரசமைப்பு நிலவுமானால் அந்த அரசமைப்பை எதிர்த்துப் போராடி ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட முடியாதபடியாக அந்த அரசை கட்டுப்படுத்தும் சக்தி மிக்கவர்களாக உழைக்கும் வர்க்கத்தை நாம் அணிதிரட்டி வளர்க்க வேண்டும்.அத்தகையநிலையில் இந்திய உழைக்கும் வர்க்கத்தை கம்யூனிஸ்டுகள் வளர்த்துள்ளார்களா? இல்லைஎன்பதே எதார்த்தமான உண்மை. இந்த அரசைக்கண்டு அஞ்சி வாழ்பவர்களாகவே இந்திய உழைக்கும் வர்க்கம் இருக்கிறது. அவர்கள் மத்தியில் கம்யூனிஸ்டுகள் செயல்படவே இல்லை.

உழைக்கும் மக்களிடம் ஓட்டு வாங்குவதற்கு மட்டுமே கம்யூனிஸ்டுகள் செயல்படு கிறார்கள். விதிவிலக்காக இந்திய விவசாயிகளில் ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒருவருட காலம் ஒற்றுமையாகப் போராடினார்கள். இந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு எதுவும் இல்லை. கம்யூனிஸ்டுகள் அல்லாத விவசாயிகளால் சாதிக்க முடிந்ததை கம்யூனிஸ்டுகளால்சாதிக்க முடியாதா? சாதிக்க முடியும் ஆனால் அவர்கள் மார்க்சியத்தை கற்று அதன் அடிப்படையில் செயல்படுவார்கள் என்றால் கம்யூனிஸ்டு களால் சாதிக்க முடியும்.அவ்வாறு மார்க்சியத்தை கற்றுத் தேராமல் அதனை பின்பற்றாமல் மார்க்சியத்தை கைவிட்டவர் களால் ஒருபோதும் சாதனை படைக்க முடியாது. கம்யூனிஸ்டுகளிடம் காணப்படும் இந்தக் குறைபாடுகளைப் பயன்படுத்திக் கொண்டு மக்களிடம் செல்வாக்கு பெற்று வளர்ந்துவரும் பிற தத்துவ அரசியல்வாதி களாலும் மக்களை விடுவிக்க முடியாது. அவர்களால் சில காலத்துக்கு மக்களை ஏமாற்ற முடியும். அது தற்காலிகமானதே.

ரஷ்யா முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி ஒழுங்கமைத்து நமது சோசலிச திட்டத்தை மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும் என்றும் முடிந்தவரை சமூகத்தில் ஜனநாயக மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று வழிகாட்டினார்லெனின். அந்த முறையில் இந்தியாவிலுள்ள உழைக்கும் மக்களை விடுவிப்பதற்கான விஞ்ஞானப் பூர்வமான திட்டத்தை உருவாக்கி அதனை பிரச்சாரம் செய்து மக்கள் அந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டு செயல்பட முன்வருவதற்கு கம்யூனிஸ்டுகள் பாடுபட வேண்டும். அதற்கு சிதறிக்கிடக்கும் கம்யூனிஸ்டுகள் ஒன்று பட்டு ஒரு ஒன்றுபட்ட திட்டத்தை உருவாக்கி ஒரு ஒன்றுபட்ட புரட்சிகர கம்யூனிஸ்டுக் கட்சியைக் கட்ட வேண்டும். மார்க்சியத்திற்கு அந்நியமான மற்றும் எதிரான தத்துவ அரசியல் கொள்கைகளை மார்க்சிய வழியில் புரிந்துகொண்டு அதனை மக்களிடம் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும்.ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள் என்ற லெனினது நூலில் ஏராளமான சமூகப் பிரச்சனைகளை லெனின் ஆய்வு செய்து கம்யூனிஸ்டுகளுக்கு வழிகாட்டுகிறார். ஆகவே ஒவ்வொரு கம்யூனிஸ்டும் இந்த நூலைப் படித்து லெனினையும் லெனிய முறைகளையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று இலக்கு கருதுகிறது

தேன்மொழி.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்