இலக்கு இணைய இதழ் -5

இலக்கு 5 இணைய இதழ் இங்கே அழுத்தி பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள் 



கம்யூனிஸ்ட் என்கிற அறிவாளிகள் ஏற்கெனவே நாங்கள் தெரிந்து வைத்திருப்பதைப் பற்றிப் பேசுவதைக் குறைத்துக் கொண்டு, எங்களுக்கு இன்னமும் தெரியாமல் இருக்கும், எங்கள் தொழிற்சாலை அனுபவத்தில் இருந்தும், பொருளாதாரப் போராட்டத்தில் இருந்தும் என்றைக்கும் கற்றுக் கொள்ள முடியாத, கம்யூனிச அரசியலை அதிகமாகப் பேச வேண்டும்.

கம்யூனிஸ்ட்டான, நீங்கள் இவ்வறிவை பெற முடியும், இதுவரை செய்ததைக் காட்டிலும், நூறு மடங்காக, ஆயிரம் மடங்காகக் கம்யூனிச அறிவை எங்களிடம் கொண்டுவர வேண்டியது உங்களது கடமை. -மிகவும் காட்டமாகத்தான் லெனின் தொழிலாளர் பார்வையில் கூறினார்.

“புரட்சி இயக்கத்தையும் தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் ஒன்றிணைப்பதற்கு - சக்தியோ, வாய்ப்போ, திறமையோ இல்லாத அறிவுஜீவிகளின் ஆவேசமான வெஞ்சினத்தின் “தன்னியல்பை” பயங்கரவாதிகள் வழிபடுகின்றனர். புரட்சிகர இயக்கத்தையும் - தொழிலாளர் வர்க்க இயக்கத்தையும் இணைத்திட முடியும் என்கிற நம்பிக்கை இழந்துவிட்டவர்களுக்கு அல்லது நம்பிக்கை இல்லாதவர்களுக்குப் பயங்கரவாதத்தைத் தவிர வேறு பாதை தேடிக் கொள்வதில் கஷ்டமாக இருக்கிறது.” -லெனின் என்ன செய்ய வேண்டும் நூலிலிருந்து.

ஐ.நா மன்றம் உருவாக்கத்தில் ஸ்டாலினுடைய செயல்தந்திரம், வரலாற்றுப்பொருள்முதல்வாத கண்ணோட்ட வகைப்பட்டதே.-தேன்மொழி

 இயற்கை மற்றும் சமூகமானது நமது சிந்தனைக்கும் உணர்வுகளுக்கும் அப்பால் நின்று ஒருகுறிப்பிட்ட விதிகளுக்குட்பட்டு சுதந்திரமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது என்று மார்க்சியதத்துவம் சொல்கிறது. மேலும் இந்த புறநிலை விதிகளை யாரும் மாற்ற முடியாது என்றும், அந்தவிதிகளைப் புரிந்துகொண்டு அதனை நமக்கு சாதகமாக அந்த விதிகளின்அடிப்படையிலேயே புறச் சூழலை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும்என்றும் மார்க்சியம் போதிக்கிறது.

சமூகத்தில் உருவான சாதிகள், பாராளுமன்றம், நீதிமன்றம் போன்ற நிறுவனங்கள்உருவானதெல்லாம் புறநிலை எதார்த்தத்திலிருந்து உருவாகிறது. சமூகம் அடிமைச் சமூகமாகஇருந்தபோது இந்த பாராளுமன்றம் உருவாகவில்லை, உருவாகியிருக்கவும் முடியாது. ஒருபாராளுமன்றம் தேவை என்று மனிதர்கள் உணர்வதற்கான புறநிலை சூழல் உருவாகியிருந்தால்மட்டுமே மனிதர்கள் அதனை உணர்ந்து பாராளுமன்றம் போன்றநிறுவனங்களை உருவாக்கமுடியும். இந்த அடிப்படையிலேயே சர்வதேச ஐ.நா மன்றமும் புறச் சூழலிலிருந்தே உருவானது.

இந்த உண்மையை ஒரு இயக்கவியல் பொருள்முதல்வாத, மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதகண்ணோட்டம் கொண்டவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

எப்படி ஒரு பாராளுமன்றம் உருவாவதற்கு தேவையான புறச் சூழல் இல்லாமல் பாராளுமன்றம்உருவாக முடியாதோ, அதே போலவே பாராளுமன்றம் உருவாவதற்கான புறச் சூழல்நிலவினாலும் அதனை சரியாக உணர்ந்துகொண்ட மனிதர்களோ அல்லது அரசியல்தலைவர்களோ அதற்கான நடவடிக்கையில் ஈடுபடாமல் அத்தகைய பாராளுமன்றம் உருவாகமுடியாது. ஆகவேதான் மக்களின் நலனில் அக்கரை கொண்ட மார்க்சியவாதிகளும் புறநிலையில்மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமலும், மக்களின் தயார்நிலையை அறிந்து கொள்ளாமலும் மக்களுக்கு எது நல்லது என்பதை மார்க்சியவாதிகளின் உணர்விலிருந்து தீர்மானித்து செயல்படுவதில்லை, மாறாக புறநிலை மக்களின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டேசெயல்படுகிறார்கள்.

இதேபோலவே மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளும்வர்க்க ஆட்சியாளர்களும் மக்களின் உணர்வுநிலைகளை, புறநிலையிலுள்ள சூழல்களை புரிந்து கொள்ளாமல் தன் விருப்பம் போல்முடிவெடுத்து செயல்படுவதில்லை. உதாரணமாக மோடி அரசானது மக்களுக்கு எதிராக பலநடவடிக்கையில் ஈடுபடுவதை நாம் காணலாம். இந்த நடவடிக்கைக்கு மக்களிடமிருந்து எதிர்ப்புவரும் என்று தெரிந்தே மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் இவர்கள் ஈடுபடுவதற்கு என்னகாரணம்? ஆங்காங்கே எதிர்ப்பு வரலாம் அந்த எதிர்ப்பு என்பது சில காலம்தான் நடக்கும். அதற்குப் பின்பு மக்கள் அதற்கு அடங்கிப் போய்விடுவார்கள் என்ற எதார்த்த உண்மையைபுரிந்து கொண்டே இந்த மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். இதற்கு மாறாகமக்கள் ஒரு புரட்சிகர கட்சியின் தலைமையில் திரட்டப்பட்டிருந்தால், ஆட்சியாளர்களின்அடக்குமுறையை எதிர்த்து ஒன்றுபட்டு மக்கள் போராடுவதற்கு தயாராக இருந்தால், இத்தகையசூழலில் மோடி அரசால் இத்தகைய மக்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்திருக்கமுடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறுதான் ஒரு பிரச்சனையைப் பற்றி ஆய்வுசெய்யவும் அதற்கான தீர்வுகளை காணவும் இயக்கவியல் பொருள் முதல்வாத கண்ணோட்டத்தைப் பயன்படுத்த வேண்டும்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்பு, அந்தப் போரினால் பாதிக்கப்பட்ட ஐரோப்பியமக்களிடம் ஏற்பட்ட உணர்வு, போரின் மீது கடுமையான வெறுப்பு. அந்த மக்கள் இரண்டு உலகப்போரை சந்தித்து அதனால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் போரின் மீது அந்த மக்களுக்குகடுமையான வெறுப்பு ஏற்பட்டிருந்தது. இதுபோன்ற போர் இனிமேல் எங்கும் நடக்கக்கூடாதுஎன்று அவர்கள் விரும்பினார்கள். அதற்காக நாம் என்ன செய்யவேண்டும் என்று பலவாறுசிந்தித்தார்கள். ஐரோப்பா முழுவதும் இதே பேச்சாகவே இருந்தது. இந்தப் பிரச்சனைக்கு ஒருவர்தீர்வு கண்டால் அவரை போற்றிப் புகழ்வதற்கு தயாராக இருந்தார்கள்.

இத்தகைய உணர்வுள்ள ஐரோப்பிய மக்கள் பிற ஆசிய, ஆப்பிர்க்கா கண்டத்தவர்களைக் காட்டிலும் சமூகப் பொருளாதாரத்திலும் அறிவுத்துறையிலும் வளர்ச்சி பெற்ற மக்களாகஇருந்ததால், போரின் மீது வெறுப்பும், போரே கூடாது, உலகில் சமாதானம் நிலவ வேண்டும்

என்ற கொள்கை கொண்ட சோவியத்து அரசு மற்றும் சோவியத்து கம்யூனிஸ்டு கட்சியின்கொள்கையின்பால் ஈர்ப்பு கொண்டு கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்து புரட்சி செய்வதற்குவாய்ப்புகள் ஏற்பட்டுக்கொண்டு இருந்தது.

இந்த சூழல்களை மதிப்பிட்ட ஏகாதிபத்தியவாதிகள் ஐரோப்பிய மக்கள் கம்யூனிஸ்டுகளாகமாறிவிடக்கூடாது, அதனை உடனடியாகத் தடுத்திட வேண்டும் என்ற அவசியத்தைஉணர்ந்திருந்தார்கள். ஆகவே ஐரோப்பிய மக்கள் கம்யூனிஸ்டுகளாக மாறுவதைதடுப்பதற்குதாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்தார்கள். அந்த சிந்தனையிலிருந்து இனிமேல்

அவர்கள் போர் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தும் முயற்சியில்ஈடுபட்டார்கள். அந்த முயற்சியின் விளைவுதான் சர்வதேச ஐ.நா. மன்றம் ஆகும்.

ஐ.நா. மன்றத்தின் மூலம் நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைகளை நாங்கள் பேசித்தீர்த்துக்கொள்வோம், அதன் மூலம் போர் தவிர்க்கப்படும் என்று மக்களுக்கு உத்தரவாதம்தந்தார்கள். ஒவ்வொரு நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்படும், ஒரு நாட்டின்உள்விவகாரங்களில் பிறர் தலையிடக்கூடாது போன்ற கொள்கைகளை முன்வைத்துத்தான் ஐ.நா.

மன்றத்தை ஏகாதிபத்தியவாதிகள் உருவாக்கினார்கள்.இந்தக் கொள்கைகளின் மீதும் ஐ.நா.மன்றத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்தார்கள். இவ்வாறு மக்களின் நம்பிக்கையை பெறமுடியவில்லை என்றால் இவர்களால் ஐ.நா.வை அன்றைய காலத்தில் உருவாக்கி யிருக்கவேமுடியாது. ஏகாதிபத்தியவாதிகளுக்கு சமாதானம் நோக்கமில்லை என்றாலும் அவர்கள் வெளிப்படையாக உலகில் போர்கள் அற்ற சமாதானத்திற்காகவே ஐ.நா. மன்றத்தை உருவாக்குகிறோம் என்றுதான் அறிவித்தார்கள், அதனையே மக்கள் நம்பினார்கள்.இதுதான் ஐ.நா. உருவாக்கத்தின் போது இருந்த சூழல். இந்த சூழலையையும், மக்களின் உணர்வுகளையும் பயன்படுத்தித்தான் ஏகாதிபத்தியவாதிகளால் ஐ.நா. உருவாக்கப்பட்டது என்பதுதான் வரலாறு ஆகும். இங்கே ஐ.நா.வை உருவாக்கிய தனிநபர்கள் மற்றும் நாடுகளின் பங்கு இரண்டாம் பட்சமானதாகும். ஐ.நா. உருவானதற்கு முதன்மையான காரணம் அந்த வரலாற்றுச்சூழல்தான் என்பதே வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம்கொண்டவர்களின்புரிதல்ஆகும் இந்த சூழலில் சோசலிச சோவியத்து குடியரசின் தலைவரான ஸ்டாலின், இந்த ஐ.நா. மன்றத்தைஅமைத்திடும் ஏகாதிபத்தியவாதிகளின் நோக்கம் போர்களற்ற சமாதானம் இல்லை. இந்தக்கொள்ளைக்காரர்களுக்கு எப்போதும் போரின் மீதுதான் நம்பிக்கை. இவர்கள் செல்வாக்கு மண்டலங்களுக்காக போர் நடத்துவார்கள். ஐரோப்பிய மக்கள் கம்யூனிஸ்டுகளாகமாறிவிடக்கூடாது, அதனை உடனடியாக தடுக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள்போர்களை நடத்த மாட்டோம் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று ஸ்டாலினால்

சொல்ல முடியுமா? சொல்ல வேண்டுமா? அப்படிச் சொன்னால் என்ன விளைவு ஏற்பட்டிருக்கும்?

இந்த கேள்விகளுக்கு நாம் விடை தேட வேண்டும்.இந்தியாவில் பாராளுமன்றம் இருக்கிறது. இந்த பாராளுமன்றத்தின் மூலம் மக்களுக்கு எந்தநன்மையும் கிடைக்காது, மக்கள் மேலும் மேலும் ஒடுக்கப்படுவார்கள் என்ற உண்மைமார்க்சியவாதிகளுக்குத் தெரியும், ஆனால் மக்களுக்குத் தெரியுமா? மக்களுக்குத் தெரியாது.

கம்யூனிஸ்டுகள் அதனை பிரச்சாரத்தின் மூலம் மக்களுக்கு புரியவைக்க முடிந்ததா? இன்றுவரைபுரியவைக்க முடியவில்லை என்பது எதார்த்தம். இந்த சூழலை புரிந்துகொண்ட லெனின்இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு என்ற நூலில், பாராளுமன்றத்தின் மீதுநம்பிக்கையுள்ள மக்களிடத்தில் அதன் போலித் தனத்தை புரியவைக்க கம்யூனிஸ்டுகள் அந்தப்பாராளு மன்றத்திற்குள்ளே சென்று அதனை அம்பலப்படுத்தி நடைமுறையில் இந்தப்பாராளுமன்றத்தின் போலித்தனத்தை மக்கள் புரிந்துகொள்ளும்படி செய்ய வேண்டும் என்றுலெனின் வழிகாட்டினார். இவ்வாறு லெனினது வழிகாட்டுதலையே ஸ்டாலின் ஐ.நா. மன்றப்பிரச்சனையில் பின்பற்றினார். புறநிலை விதிகளை நாம்நாம் மாற்ற முடியாது, மாறாக புறநிலைவிதிகளை புரிந்துகொண்டு அதனை நமது தேவைக்கு பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் என்னசெய்ய வேண்டும் என்பதின் அடிப்படையில் செயல்பட்டு அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள

வேண்டும் என்ற பொருள்முதல்வாத கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே தோழர் ஸ்டாலின்செயல்பட்டார்.

ஏகாதிபத்தியவாதிகள் மக்களை ஏமாற்றும் தீய நோக்கத்திலிருந்தே ஐ.நா. மன்றத்தைஉருவாக்குகிறார்கள் என்று ஸ்டாலின் சொல்லியிருந்தால் ஐரோப்பிய மக்கள், ஸ்டாலினைநம்பியிருப்பார்களா? நிச்சயமாக ஸ்டாலினை நம்பியிருக்க மாட்டார்கள். மக்கள் நம்பவில்லை

என்றாலும் பரவாயில்லை என்று ஸ்டாலின் சொல்லியிருந்தால், ஏகாதிபத்தியவாதிகள் அதனைபயன்படுத்தி ஸ்டாலினையும், சோவியத்து அரசையும், கம்யூனிஸ்டு கட்சியையும் உலகமக்களிடமிருந்தே எளிதில் தனிமைப்படுத்தி இருப்பார்கள். வாய்ப்பு கிடைத்தால் சோவியத்தை தனிமைப்படுத்தி தாக்கி வீழ்த்தியிருப்பார்கள். மக்களின் உணர்வுகளையும் சூழ்நிலைகளையும் புரியாமல் தன்மனப் போக்கில் முடிவெடுக்கும் அகநிலைவாதியல்ல ஸ்டாலின். அவர் ஒருஇயக்கவியல் பொருள்முதல்வாதி. ஆகவேதான் அவர் இயக்கவியல் பொருள்முதல்வாத, லெனினிய கண்ணோட்டத்திலிருந்து அந்தப் பிரச்சனையை அனுகினார்.

ஐ.நா.மன்றத்தில் சேரக்கூடாது என்ற செயல்தந்திர முடிவெடுத்து செயல்படுவதால் எவ்விதமானபயனும் இல்லை, மாறாக மக்களின் நம்பிக்கையை இழப்பது, ஏகாதிபத்தியவாதிகளின்தனிமைப்படுத்தும் சூழ்ச்சிக்கு இறையாவது, போன்ற பாதிப்புகளைத்தான் இந்த செயல்தந்திரம்

கொண்டுவரும் என்பதை ஸ்டாலின் உணர்ந்திருந்தார். ஆகவே ஐ.நா.வை புறக்கணிப்பது என்றசெயல்தந்திரத்தை ஸ்டாலின் எடுக்கவில்லை.இதற்கு மாறாகக் ஐ.நாவில் கலந்துகொள்வது என்ற செயல்தந்திரத்தால், ஏகாதிபத்தியவாதிகளின்தனிமைப்படுத்தப்படும் சதியை முறியடிக்க முடியும், மக்களின் நம்பிக்கையை இழக்க வேண்டியதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும். ஐ.நா.வில் வீட்டோ அதிகாரம் கிடைப்பதன்மூலம் ஏகாதிபத்தியவாதிகளை கட்டுப்படுத்த முடியும், சர்வதேச பிரச்சனைகளில் சோசலிசகருத்துக்களை பிரச்சாரம் செய்ய முடியும். இதுபோன்ற நன்மைகள் கிடைக்கும் என்று அந்தசூழலை மதிப்பிட்டுத்தான் ஸ்டாலின் ஐ.நா. மன்றத்தில் பங்கெடுப்பது என்ற செயல்தந்திரமுடிவெடுத்து செயல்பட்டார். இது சூழ்நிலையை மதிப்பிட்டு எடுக்கப்பட்ட சமரசம்தான். இதுஅகநிலைவாத கண்ணோட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட முடிவல்ல.சில வறட்டுவாதிகள் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் ஸ்டாலினது இந்த செயல்தந்திரத்தை துரோகம் என்கிறார்கள். இந்த ஸ்டாலினது முடிவின் மூலம் ஸ்டாலின் ஏகாதிபத்தியவாதிகளோடுகைகோர்த்துக் கொண்டார் என்கிறார்கள். அப்படியானால் ஸ்டாலின் ஏகாதிபத்தியவாதிகளோடுசேர்ந்து எந்த நாட்டு மக்களை சுரண்டினார், எந்த மக்களை ஒடுக்கினார், அதற்கு என்ன ஆதாரம்என்பதை முன்வைத்து இவர்கள் பேசுவதில்லை. ஏனென்றால் அதுபோன்ற மக்களுக்கு எதிரான

செயல்களிலும் ஸ்டாலின் ஈடுபடவில்லை. அப்படிப்பட்ட செயல்களில் ஸ்டாலின் ஈடுபட்டார்என்பதற்கு இவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை.


சூழ்நிலைகளை மதிப்பிட்டு செயல்தந்திரம் வகுக்க வேண்டும் என்ற மார்க்சிய லெனினியசித்தாந்தத்தின் அடிப்படையிலேயே ஐ.நா மன்ற விவகாரத்திலும் சரி, மூன்றாம் அகிலத்தைகலைப்பதிலும் சரி ஸ்டாலின் செயல்பட்டார்.சோசலிசத்திற்கான போராட்ட சூழலுக்கு மாறாக உலகை ஆதிக்கம் செய்ய முன்வரும்பாசிசத்திற்கு எதிரான போரட்ட சூழலில் பாசிசத்தை எதிர்ப்பதும் சோசலிச சோவியத்து அரசைகாப்பதுதான் முதன்மையான பணி என்ற சூழலிலேயே அகிலத்தை கலைப்பதற்கு ஸ்டாலின்

உடன்பட்டார். பாசிசத்தை ஒழித்துவிட்டு சோவியத்து அரசையும் சோவியத்து கம்யூனிஸ்டுகட்சியையும் காப்பாற்றிவிட்டால் நாம் எப்போது வேண்டுமானாலும் சர்வதேச கம்யூனிசஅமைப்பை தேவைக்கேற்ப உருவாக்கிக்கொள்ள முடியும் என்ற பார்வையிலிருந்தே அகிலத்தை கலைக்க ஸ்டாலின் முடிவு செய்தார். இவை அனைத்தும் புறச் சூழலின் அடிப்படையைபுரிந்துகொண்டுதான்,அதனை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள என்ன செய்ய வேண்டும்என்று முடிவெடுப்பதே இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டம் ஆகும். இந்தஅடிப்படை கண்ணோட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட விஞ்ஞான முடிவுகள்தான் ஸ்டாலினால்எடுக்கப்பட்ட செயல்தந்திர முடிவுகளாகும். ஆகவேதான் ஐ.நா. உருவாக்கத்தில் ஸ்டாலினது செயல்தந்திமானது வரலாற்றுப் பொருள்முதல்வாத கண்ணோட்ட வகைப்பட்டது என்கிறோம்.

இதுதான் வரலாற்று உண்மையாகும். இத்தகைய பொருள்முதல்வாத கண்ணோட்டத்தை உள்வாங்கி செயல்படுவதன் மூலமே நாம்வெற்றிபெற முடியும். மேலும் நடைமுறையில் தோல்வி கண்டாலும் அதனை உடனடியாக புரிந்துகொண்டு தவறுகளை களைந்து சரியான வழியில் முன்னேற முடியும். ஆகவேஇயக்கவியல், வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை கற்றுத் தேர்வோம் எதிரிகளின் ஏமாற்றுக் கருத்துக்களை புரிந்துகொண்டு அதனை எதிர்த்துப் போராடி வெற்றியை நோக்கி முன்னேறுவோம். அதற்கு மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோபோன்றவர்கள் நமக்கு வழிகாட்டுகிறார்கள்.

இந்தியத் தத்துவம் எளிய அறிமுகம் –சாங்கியம் (இறுதிப் பகுதி)--அ.கா.ஈஸ்வரன் 5

சாங்கியம் என்ற பெயரில் இன்று கிடைக்கின்ற நூல்களில் மூல சாங்கியக் கருத்துக்கள் திரிந்தே காணப்படுகிறது. அதில் குறிப்பிடத்தக்கவை கி.பி. 5ஆம் நூற்றாண்டில் தோன்றிய சாங்கிய காரிகை, இந்த நூல் ஈஸ்வர கிருஷ்ணரால் எழுதப்பட்டது. அடுத்து கி.பி. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சாங்கிய சூத்திரம். இந்த இரு நூல்களும் தொடக்க சாங்கியத்தின மரபு வழியில் வராது, விலகி செல்லும் நூல் என்றாலும் இது போன்ற நூல்களில் காணப்படும் முரண்பட்டக் கருத்துக்களைக் கொண்டே மேலே நாம் கண்ட தொடக்க கால சாங்கியக் கருத்துக்கள் திரட்டப்பட்டது. அதனால் இந்த இரண்டு நூல்களையும் முற்ற புறக்கணிக்க முடியாது.

சாங்கியத்தை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டுமானால் கிடைப்பதைக் கொண்டு தான் செய்திட முடியும்.

சாங்கியமானது முதல்நிலை பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தைக் கொண்டது என்பதனால்தான் பிரம்ம சூத்திரம் நூல் சாங்கியத்தை மறுக்க வேண்டிவந்தது என்பதை ஏற்கெனவே கூறப்பட்டது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் உலகாயதத் தத்துவத்தை குறிப்பிட்டு தனியே பிரம்ம சூத்திரம் நூலில் மறுக்கவில்லை. இதற்கு காரணம் பொருள்முதல்வாதத் தத்துவமான சாங்கியத்தை மறுப்பதே உலகாயதத்தை மறுப்பதாக பிரம்ம சூத்திர நூலாசிரியர் கருதியதாகக் கொள்ளலாம். ஆக சாங்கியத்தை முதனிலைப் பொருள்முதல்வாதம் என்று கூறுவது தவறாகாது.

இதற்கு அடுத்து சாங்கியம் என்ற பெயரில் ஆன்மீகக் கலப்பு ஏற்படுத்தியத்திற்குக் காரணத்தையும் அதன் விளக்கங்களையும் காண்போம்.தொடக்க சாங்கியத்தில் பிரகிருதி என்பது பெண்ணையும் புருடன் (புருஷ்) என்பது ஆணையும் குறிக்கும் என்று பார்த்தோம். இந்த புருடனை ஆணாக கருதாமல் ஆத்மாவாக மாற்றுவதின் மூலம் சாங்கியத்தை ஆன்மீக மயமாக்கும் பணி பல்வேறு நூல்களில் செய்யப்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானதா உள்ள சாங்கிய காரிகை என்கிற நூலில் இருந்தே தொடங்குகிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சாங்கியத்துடன் ஆன்மீகத்தை கலந்த நூல்களே இன்று கிடைக்கிறது.

இந்த ஆன்மீகக் கருத்து முதல்நிலை பொருள்முதல்வாதமான தொடக்க சங்கிய கருத்துடன் முரண்படுவதை கலப்பாளர்களால் மறைத்திட முடிவில்லை

இதுபற்றி தேவிபிரசாத் சட்டோபாத்யாயா கூறியதை பார்ப்போம்.

“புருடன் பற்றிக் காரிகையின் கருத்து சாங்கியத்தின் அடிப்படைகளுடன் முரண்படுகிறது. உண்மையில் இது சுயம் பற்றிய வேதாந்தக் கருத்தாகும். இது சாங்கியத்தின் அடிப்படைகளுக்கு நேர் எதிரானது. எனவே மிகத் தந்திரமாகச் சாங்கியத்தின் அடிப்படைகளை விட்டுக் கொடுப்பதன் மூலம் ஈஸ்வர கிருஷ்ணர் புருடன் பற்றிய அவரது கருத்திற்கு ஆதரவாக வாதிட முடிந்தது. அதாவது, புருடன் பற்றிய அவரது கருத்தினை வலுப்படுத்துவதற்காக அவர் சாங்கியத்தினை வேதாந்தமாக மாற்றினார். பரிணாம வாதத்தினை விவர்த்த வாதமாக மாற்றினார்.”  (உலகாயதம்- பக்-544-545)

சாங்கிய சூத்திரத்தில் சாங்கிய நிலையில் புருடன் பல என்று கூறுவதுடன் புருடனை ஆத்மாவாகக் கூறி “ஒன்று” என்று வேதாந்தக் கருத்துடன் சாங்கியத்தை இணைக்க முயற்சிக்கிறது. புருடன் என்ற சாங்கியக் கருத்தை வேதாந்தாந்த கருத்தான ஆத்மாவாக விளக்கம் கொடுத்தது. இந்த போக்கு மிகவும் பழங்காலத்தில் இருந்தே தொடர்கிறது. மகாபாரத நூலில் காணப்படும் சாங்கியமும் ஆன்மீகமாக கலக்கப்பட்ட நிலையில் தான் உள்ளது.

சிதைத்ததின் காரணமாக சாங்கியம் இரண்டு வகையாக பிரிந்து காணப்படுகிறது. தொடக்கால சாங்கியப் போக்குடையவைகளை நிரீஸ்வர சாங்கியம் என்றும், கலப்பான வைதீகச் சாங்கியத்தை ஈஸ்வர சாங்கியம் என்றும் அழைக்கப்படுகிறது. நிரீஸ்வர சாங்கியம் என்றால் கடவுளை ஏற்றுக்கொள்ளாத சாங்கியம். ஈஸ்வர சாங்கியம் என்றால் கடவுளை ஏற்றுக் கொண்ட சாங்கியம்.

மேலே பெரும்பாலும் தொடக்ககால சாங்கியமான நிரீஸ்வ சாங்கியம் பற்றி பார்த்தோம். அடுத்து ஈஸ்வர சாங்கியம் என்பதைப் பார்ப்போம். ஈஸ்வர சாங்கியம் என்பது வைதீகக் கலப்பு ஏற்பட்ட ஆன்மீக சாங்கியம் என்று எற்கெனவே கூறப்பட்டது. ஆன்மீகமாக ஆக்கப்பட்டாலும் ஈஸ்வர சாங்கியத்தில் வைதீகத்துடன் முரண்படும் நாத்திகக் கருத்துக்கள் வெளிப்படவே செய்கிறது. இதே போல பிற்கால சாங்கிய நூல்களில் முரண்பாடு காணப்படுகிறது.

ஆதி சாங்கியம் பிரகிருதி என்ற பெண் தன்மையும் புருடன் என்கிற ஆண் தன்மையும் இணைந்து உலகம் தோன்றியது என்று கூறுவதை ஏற்கெனவே பார்த்தோம். இந்த விளக்கம் தாந்தரீகத்தின் அடிப்படையிலானது என்பதையும் சேர்த்துப் பார்த்தோம். பிற்காலத்தில் புருடன் என்பதை பிரகிருதியின்பெருக்கமாக கூறப்படுகிறது.

 பிற்காலத்தில் ஆதி சாங்கிய தொடக்கநிலை பொருள்முதல்வாதத்தை மறுக்கும் விதமாக பிரகிருதிக்கும் புருடனுக்கும் எவ்வாறு விளக்கம் கொடுக்கப்படுகிறதுஎன்பதைப் பார்ப்போம்.

பிரகிருதியின் வெளிப்பாடே இந்தப் பரிணாமம்.பிரகிருதிஅறிவற்ற அசேதனம். அசேதனம் என்றால் உயிரற்ற சடப்பொருள்.

புருடன் (புருஷ்) என்பது அறிவுள்ள சேதனம். அதாவது அறிவுள்ள பொருள். புருடனை அழிக்கவோ ஆக்கவோ முடியாது. புருடன் அனுபவிக்கவே இந்த படைப்பு உருவானது என்று ஈஸ்வர சாங்கியம் கூறுகிறது. இந்தப் புருடனே ஆத்மா.

ஆதி சாங்கியத்தில் படைப்புக்கு பிரகிருதி-புருடன் ஆகிய இரண்டையும் சேர்ந்து கூறப்பட்டது, இங்கே புருடன் தனியே பிரித்து ஆத்மாவாக விளக்கப்படுகிறது. ஆத்மாவை நுழைத்துவிட்டால், ஆன்மீகமயமாக்கிவிடும் என்று அவ்வளவு எளிதாகக் கூறிட முடியாது. ஏன் என்றால் ஈஸ்வர சாங்கியத்தில் நாத்திகக் கருத்துக்கள் இருக்கவே செய்கிறது, ஈஸ்வர சாங்கியத்தில் உள்ள முரணை என்ன செய்தாலும் நீக்கிடமுடியாது.

புருடனை ஆத்மாவாக ஈஸ்வர சாங்கியம் கொள்வதால் முக்தியைப் பற்றி பேச வேண்டிவருகிறது. முக்தி என்றால் பிறப்பற்ற நிலை. மனிதப் பிறப்பை மனித வாழ்வை வெறுக்கும் நிலை.

“பொதுவாக, பாரதீய தத்துவங்களில் ஆன்மா என்று அழைப்பதைத்தான் சாங்கியம் புருஷன் என்கிறது. இந்தப் புருஷன் உடலோ, உடலின் சேர்க்கையால் உருவாவதோ, புத்தியோ, மனமோ அல்ல. இவையெல்லாம் இயற்கையாகிய பிரகிருதியின் வெளிப்பாடுகள். இவற்றில் இருந்து வேறுபட்ட ஒன்றே புருஷன். பிரகிருதி மூலமான அனுபவத்தைப் பெறுகின்றது எதுவோ அதுவே புருஷன்.”

(பத்மன், தத்துவ தரிசனங்கள், பக்-108)

புருடனை உடலுக்கு அப்பாற்பட்ட ஆத்மாவாக கருதுவதினால் அதன் ஒடுக்கத்தைப் பற்றி பேச வேண்டிவருகிறது. தாந்தரீகம், உலகாயதம், சாங்கியம் போன்ற கோட்பாடுகள் வாழ்வை கொண்டாடுகிறது. ஆனால் இந்த புருட கோட்பாடு அதாவது ஆத்மக் கோட்பாடு வாழ்வை வெறுக்கிறது. மாறுதலற்ற பிரம்மமே உண்மையானது என்கிறது. மாறுதலுக்கு உட்படுகிற இந்தப் பிரபஞ்சம், பிரம்ம உண்மைக்கு எதிரானது, அதனால் நிலையான உண்மையை முன்வைத்து மாறுதலுடன்கூடிய பிரபஞ்சத்தை வெறுக்கிறது-மறுக்கிறது. பிரபஞ்சத்தில் இருந்து விடுபடுவதை விடுதலையாக - முக்தியாக கருதுகிறது.

புருடன் பிரபஞ்சத்துடன் இணைவதே பந்தத்துக்குக் (சம்சாரத்துக்குக்) காரணம். அதாவது துக்கத்துக்குக் காரணம். ஆத்மத் தத்துவம் வாழ்க்கையை துக்கமயமாகப் பார்க்கிறது. துக்கத்தை ஏற்படுத்தும் பந்தமே முக்திக்குத் தடை என்பதை அறிந்து ஈஸ்வர சாங்கியம் முக்தியை முன்வைக்கிறது.

பிரகிருதி எனப்படும் மூலத்தில் இருந்து தோன்றிய ஐந்து புலன்கள், ஐந்து செயல்கருவிகள், ஐந்து தன்மாத்திரைகள், ஐந்து பூதங்கள் ஆகியவையே புருடனை மயக்கி துக்கப்படுத்துகிறது. பிரகிருதிக்கும் புருடனுக்கும் ஏற்படுகிற தொடர்பே துக்கத்துக்குக் காரணம். இந்த துக்கத்தில் இருந்து விடுபட்டு புருடன் தன்னை உணர்தலே முக்தி. வைதீகக் கலப்பால் ஈஸ்வர சாங்கியம் முரண்பாடுகளின் தொகுப்பாக காட்சி அளிக்கிறது.

பழங்குடிகளான தொடக்கக்கால விவசாயிகளின் தாந்தரீகம் உலகாயதம் சாங்கியம் ஆகியவைகளில், உலகில் சிறப்பாக வாழ்வது பற்றியே பேசுகிறது. இந்த காலகட்டத்துக்குப் பிறகு வாழ்க்கை என்பது துக்கமயமாக மாறியது என்பது உண்மையே, இதற்கு ஈஸ்வர சாங்கியம் கூறுவது போல் பிரகிருதிக்கும் புருடனுக்கும் ஏற்படுகிற (பந்தம்) தொடர்பு காரணம்.

தனித் சொத்துடமையும் சொத்துடமையால் ஏற்பட்ட வர்க்க வேறுபாடே காரணமாகும். இந்தக் காரணத்தை மறுப்பதற்கே ஆன்மீகம் ஆத்மா போதத்தை வளங்குகிறது. ஆத்ம விடுதலையே அனைத்துக்குமான விடுதலை என்று கூறுகிறது. இந்தக் கூற்று நிலவும் வர்க்க சமூகத்தை கட்டிக்காப்பதற்கே உதவுகிறது. இல்லாத ஆத்மாவுக்கு விடுதலைக் கிடைப்பது பற்றி பேசுவது, இருக்கும் வர்க்க வேறுபாட்டினால் ஏற்படும் துக்கத்தை மறைப்பதற்கே ஆகும்.

இந்த துக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு உலகில் வழியில்லை என்று கூறுவதன் மூலம் ஆன்மீகத் தத்துவம் வர்க்க சமூகத்தில் சுரண்டலாளர்களுக்கு சார்பாக குரல் கொடுக்கிறது. வர்க்க சமூகத்தில் கருத்துமுதல்வாதத் தத்துவம் வர்க்க சுரண்டலாளர்களுக்கு பயன்படுகிறது, உழைத்தும் துக்கத்துக்கு ஆளாகும் உழைப்பாளர்களுக்கு பொருள்முதல்வாதமே சமூக விடுதலையைக் காட்டுகிறது. உழைப்பாளர்களுக்கு சமூக விடுதலையில் தான் முழுமையான விடிவு இருக்கிறது.

வர்க்கமற்ற சமூகத்தில் தோன்றியது சாங்கிய முதல்நிலை பொருள்முதல்வாதம். மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதமானது நவீன விஞ்ஞானத்தின் அடிப்படையில் வளர்ச்சி பெற்ற பொருள்முதல்வாதமாகும்.

முதல்நிலை பொருள்முதல்வாதமான சாங்கியத்தின் வளர்ச்சியே மார்க்சிய பொருள்முதல்வாதமாகும். நம்நாட்டு பொருள்முதல்வாத வேரில் இருந்து நாம் கிளர்ந்து எழுவோம். மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதியாக மிளிர்வோம்.

மார்க்சியம் என்றால் என்ன? (கேள்வி – பதில் வடிவில்)-பகுதி -2 தத்துவம்- அ.கா. ஈஸ்வரன்

 


லெனின்:- “தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மார்க்ஸ் ஆழமாக்கி வளர்த்து நிறைவு பெறச் செய்தார். இயற்கை பற்றிய அறிதலை மனித சமூகம் பற்றிய அறிதலாகவும் விரிவாக்கினார். மார்க்சின் வரலாற்றுத் துறைப் பொருள்முதல்வாதம் விஞ்ஞானச் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும் அரசியலையும் பற்றிய கருத்துக்களில் குழப்பமும் தான்தோன்றித் தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவை போய், வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த முழுமையும் உள்ளிணக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் வந்துவிட்டது.”

1) தத்துவம் என்றால் என்ன?

இந்த உலகம் எங்கிருந்து வந்தது? மனித இனம் இவ்வுலகில் எவ்வாறு தோன்றியது? வாழ்க்கையின் சாரம் என்ன? இது போன்ற கேள்விகளைப் பற்றிச் சிந்திக்கும் போது தன்னை அறியாமலேயே தத்துவத்தின் அடிப்படைகளைப் பற்றிச் சிந்திக்கின்றனர். இந்தக் கேள்விகளுக்கு எந்த விடையளித்த போதிலும் அதற்கு ஒரு தத்துவத்தின் உட்பொருள் இருக்கும். இவை அவர் சார்ந்திருக்கும் வர்க்கத்திற்குத் தக்கப்படி அமைந்திருக்கும். இவ்வகையில் தத்துவம் சமூக வாழ்வின் பிரதிபிலிப்பாகவே திகழ்கிறது.

2) தத்துவத்தைச் சுருக்கமாக ஒற்றை வரியில் கூறமுடிமா?

முடியும். இயற்கை, சமூகம், சிந்தனை இவற்றுடைய வளர்ச்சியின் மிகப் பொதுவான விதிகளைத் தத்துவம் ஆராய்கிறது.

3) அப்படி என்றால் தத்துவம் என்பது அவ்வளவு எளிதானதா? இதில் எளிது கடினம் என்பதைவிட நமக்குத் தேவையானதா? தேவையற்றதா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தேவையானதை எளிதாகவோ கடினமாகவோ கற்றுத்தான் ஆக வேண்டும்.

கற்கும் வழி அறிந்தால் எளிதானது, வழி அறியாதவரை கடினமானது. சுருக்கம் எளிமையாகத்தான் இருக்கும். அதனை விரித்துப் புரிந்து கொள்வதற்கு முயற்சி எடுக்கத்தான் வேண்டும்.

4) இயற்கைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும் தத்துவம் என்ன சொல்கிறது?

தொடக்கக் காலத்தில், இயற்கை, சமூகம் என்று தத்துவம் பிரித்து விவரிக்கவில்லை இருந்தாலும் இரண்டையும் விளக்கியிருக்கிறது. இந்த விளக்கம் தத்துவத்தை இரண்டு பிரிவாகப் பிரிக்கிறது

5) இந்த இரண்டு பிரிவு எது?

ஒன்று கருத்துமுதல்வாதம் மற்றொன்று பொருள்முதல்வாதம்

6) இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

தத்துவம் எழுப்புகின்ற கேள்விக்கு அளித்திடும் பதிலைக் கொண்டு ஒன்றை கருத்துமுதல்வாதம் என்றும் மற்றொன்றை பொருள்முதல்வாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

7) அது என்ன கேள்வி-பதில்?

கடவுள் உலகத்தைப் படைத்தாரா அல்லது மனிதன் தோன்றுவதற்கு முன்பே இருந்து வருகிறதா? படைக்கப்பட்டது என்று பதிலளிப்பவர்கள் கருத்துமுதல்வாதத்தின் பல்வேறு பிரிவினைச் சேர்ந்தவர்கள். இவர்களது விளக்கம் உலகம் ஏதோ ஒரு விதத்தில் படைக்கப்பட்டது என்கிற அனுமானத்தில் இருந்து தொடங்குகிறது. இயற்கைதான் முதன்மையானது என்று கருதுபவர்கள் பொருள்முதல்வாதத்தின் பல்வேறு பிரிவினைச் சேர்ந்தவர்கள்.

8) இரு பிரிவுகளிலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றனவா?

ஆம். கருத்துமுதல்வாதத்திலும் பொருள்முதல்வாதத்திலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றன.

9) கருத்துமுதல்வாதத்தின் பிரிவுகள் எத்தனை?

ஒன்று அகநிலை கருத்துமுதல்வாதம் மற்றொன்று புறநிலை கருத்துமுதல்வாதம். அனைத்து கருத்துமுதல்வாதங்களும் இவ்விரு பிரிவுக்குள் அடங்கும்.

10) அகநிலை கருத்துமுதல்வாதம் என்றால் என்ன?

உலகில் காணப்படும் அனைத்துப் பொருட்களும் மனித உணர்வின் விளைபொருட்கள் என்று அகநிலைக் கருத்துமுதல்வாதம் கருதுகிறது. காணப்படும் பொருட்கள் அனைத்தும் மனதின் படைப்பே என்கிறது. அதாவது படைக்கப்பட்ட அனைத்தும் அகத்தினால் தோன்றியதாகக் கருதுகிறது. இத்தத்துவத்தில் புகழ் பெற்ற சிந்தனையாளர்கள் இங்கிலாந்தில் பெர்க்லி, ஆஸ்திரியாவில் மாஹி, இந்தியாவில் ஆதிசங்கரர், ரமணர், விவேகானந்தர் போன்றோர். அகநிலைக் கருத்துமுதல்வாதத்தின் நவீன வடிவமாக நேர்காட்சிவாதம், இருத்தலியல், பின்நவீனத்துவம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

11) புறநிலை கருத்துமுதல்வாதம் என்றால் என்ன?

காணப்படும் உலகம், மனித உணர்வு நிலைக்கு அப்பாற்பட்டதும், வெளியில் இருக்கக் கூடியதுமான முழுமுதற் கருத்தின் விளைபொருள் என்றுரைக்கிறது புறநிலைக் கருத்துமுதல்வாதம். பிரபஞ்சம் இவ்வுலகிற்கு அப்பால் உள்ள சக்தியால் தோற்றுவிக்கப்பட்டது. அதாவது படைப்புக்கான சக்தி இவ்வுலகிற்கு அப்பால் காணப்படுகிறது. அதனால் தான் தமிழில் இதற்கு அப்பாலைத் தத்துவம் என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. புறநிலை கருத்துமுதல்வாதத்தின் புகழ்பெற்ற சிந்தனையாளர்கள், கிரேக்கத்தில் பிளாட்டோ, ஜெர்மனியில் ஹெகல், இந்தியாவில் ராமானுசர், மத்துவர், சைவசித்தாந்தியான மெய்கண்டர் போன்றோர்கள்.

12) இதே போல் பொருள்முதல்வாதத்திலும் பிரிவுகள் இருக்கின்றனவா?

ஆம் இருக்கின்றன. அதில் முதன்மையானது ஒன்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றொன்று இயக்கமறுப்பியல் பொருள்முதல்வாதம்.

13)இயக்கமறுப்பியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?

இயந்திரகதிப் பொருள்முதல்வாதத்தையும், பகுத்தறிவுவாத நாத்திக பொருள்முதல்வாத்தையும் இயக்கமறுப்பியல் பொருள்முதல்வாதம் என்று கூறலாம். மார்க்சுக்கு முன்பான பொருள்முதல்வாதம் இயந்திரகதி தன்மையினைப் பெற்றதாக இருந்தது. இயற்கை, சமூகம் ஆகியவற்றை இயந்திரகதி வழியில் இயங்குவதாக விளக்கியது. இயற்கைப் பற்றிய விளக்கத்தில் இயலுலகிற்கு அப்பால் இருந்து தொடங்காமல், இயற்கையிடம் இருந்தே தொடங்கியது என்ற வகையில் இது முற்போக்கானதே. ஆனால் சமூகமும் இயற்கையும் மாறுதல் அற்றவையாகவும் மாற்ற முடியாதவையாகவும் விளக்கியது. பகுத்தறிவுவாதம் ஆன்மீகத்தை எதிர்க்கும் வகையில் அது பொருள்முதல்வாதமே. ஆனால் இந்த ஆன்மீகத்தின் தோற்றத்தை மனிதனது சிந்தனையில் கண்டது. அதற்கான புறநிலையை அறிந்து அதனடிப்படையில் போராடாமல், வெறும் அறிவுத்துறை போராட்டமாகச் சுருக்கியது. சிந்தனையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பகுத்தறிவில் கண்டது. பகுத்து அறியப்படுபவை எங்கிருந்து வந்தது என்பதைக் கவனத்தில் கொள்ளவில்லை. கடவுளை மறுத்தலே அறிவுக்கு வழியாகக் கண்டது. கருத்தின் சார்புக்கும், அதன் மாற்றத்திற்கும் காரணமான பொருளயாத புறநிலையைக் கணக்கில் கொள்ளவில்லை. சிந்தனையைத் தர்க்க வழிப்பட்டதாகச் சுருக்கி விளக்கியது.

14) மார்க்சியம் எத்தகைய பொருள்முதல்வாதம்?

மார்க்சியம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆகும். இயற்கையையும் சமூகத்தையும் அறிந்திட முடியும், இவை இரண்டும் நமக்குப் புறத்தே நம்மைச் சார்ந்திடாமல் புறநிலையில் இயங்குகின்றன என்கிறது இத் தத்துவம். பொருள்முதல்வாதம் உலகை உள்ளது உள்ளபடியே காணவேண்டும் என்பதையும், உலகின் பொருளாயத ஒற்றுமையின் அடிப்படையைப் பருப்பொருளின் இணைப்பில் காண வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. பொருள்முதல்வாத சிந்தனையில் புகழ்பெற்றவை கிரேக்கத்தில் டெமாக்கிரிட்டஸ், இந்தியாவில் சாங்கியம், ஆதிபுத்தர், உலகாயதர். சார்வாகர், அணுவாதம் பேசும் வைசேஷிகர் போன்றோரின் சிந்தனைகள். இயக்கவியல் பொருள்முதல்வாத சிந்தனையாளர்யாளர்களில் புகழ்பெற்றவர் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஜார்ஜ் தாம்சன், இந்தியாவில் தேவிபிரசாத் சாட்டோபாத்தியாயா, கோசாம்பி, ஆர்.கே.சர்மா, நா.வானமாமலை, கோ.கேசவன், இலங்கையில் கைலாசபதி போன்றோர்கள்.

மரபுவழிப்பட்ட பொருள்முதல்வாதத்தின் தொடர்ச்சியே நவீன மார்க்சிய பொருள்முதல்வாதம். பழைய பொருள்முதல்வாதத்தில் காணப்படும் குறைகளையும் அதன் இயக்கமறுப்பியல் தன்மையையும் நீக்கி முரணற்ற இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைத் தோற்றுவித்தது.

15) இந்த இரண்டு தத்துவப் போக்கிற்கும், அடுத்தப் போக்கு அல்லது நடுப் போக்கு என்று எதேனும் இருக்கிறதா?

தத்துவத்தில் இரண்டு போக்கிற்கு இடையே நடுப்போக்கு என்றும் மூன்றாம் போக்கு என்றும் ஏதும் கிடையாது. தத்துவம் எழுப்பும் கேள்விக்குப் பதில் அளிப்பதில் இருந்து விலகுவதின் மூலம் இந்த நடு மூன்றாம் போக்கினர் கருத்துமுதல்வாதப் பாதையிலேயே பயணிக்கின்றனர். கதம்பவாதப் போக்கு கருத்துமுதல்வாத முடிவுக்கே இறுதியில் இட்டுச் செல்லும்.

16) கருத்துமுதல்வாதம் சிறந்ததா? பொருள்முதல்வாதம் சிறந்ததா?

இதற்கு நேரடியாக அல்லாமல் வேறுவிதமாகப் பதிலளிக்கலாம். அதாவது கருத்துமுதல்வாதம் தமது வாதத்தை அனுமானத்தின் அடிப்படையில் அமைத்துக் கொள்கிறது. பொருள்முதல்வாதம் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி குறைந்த காலத்தில் கருத்துமுதல்வாதம் சிறப்பைப் பெற்றிருந்தது. ஏன் என்றால் பொருள்முதல்வாதத்திற்குத் தேவைப்படுகிற விஞ்ஞான வளர்ச்சி அப்போது பெறவில்லை.

17) அதனால் தான் அன்று கருத்துமுதல்வாதத்தின் கையோங்கியிருந்ததா?

ஆமாம். இதனை எங்கெல்ஸ் சிறப்பாக விளக்கி இருக்கிறார். சிந்தனைக்கும் பருப்பொருளுக்கும் இடையிலான உறவை தெளிவுபடுத்துவதற்குத் தேவைப்படுகிற விஞ்ஞான வளர்ச்சி ஏற்படாத அந்தக் காலத்திய பொருளமுதல்வாதம், இயற்கைப் பொருள்முதல்வாதமாகவே இருந்தது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை எட்டாத அன்றைய நிலையில், இந்தப் பிரச்சினைக்கு உடலில் இருந்து ஆன்மா பிரிக்கப்படத்தக்கது என்ற போதனைக்கும், பிறகு இந்த ஆன்மாவுக்கு இறவாத் தன்மையைத் துணிந்துரைப்பதற்கும், இறுதியில் ஒரு கடவுள் கோட்பாட்டிற்கும் கருத்துமுதல்வாதம் வந்தடைந்தது. எனவே பழைய பொருள்முதல்வாதம் அன்றைய கருத்துமுதல்வாதத்தால் நிலைமறுக்கப்பட்டது என்கிறார். விஞ்ஞான வளர்ச்சினால் இயக்கவியல் பொருள்முதல்வாதம் இன்றைய நிலையில் கருத்துமுதல்வாதத்தை நிலைமறுக்கிறது.

18) இன்றும் கருத்துமுதல்வாதம் மேலோங்கி தானே இருக்கிறது?

ஆம். உண்மை தான். இன்றைய கருத்துமுதல்வாதத்தின் வேர்கள் சமூகச் சூழநிலையில் அடங்கி இருக்கிறது. மனித அறிதலின் போதாமையை நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் நீக்கிவிட்டது உண்மையே, ஆனால் சமூகத்தின் வழியிலான அழுத்தம் முதலாளித்துவச் சமூகத்தில் கடுமையாகத் தொடர்கிறது. முதலாளித்துவ உற்பத்தியில் காணப்படும் முரண்களுடைய ஏற்ற இறக்கங்கள் ஏற்படுத்தும் அச்ச உணர்வும் பாதுகாப்பின்மையும் இன்றைய கருத்துமுதல்வாதத்தின் வேர்களாகிறது. அச்ச உணர்வே கருத்துமுதல்வாதத்தின் பிறப்பிடம். அதனால் தான் கம்யூனிஸ்டுகளின் நாத்திகப் போராட்டம் சித்தாந்தப் போராட்டமாகச் சுருக்கிவிடாமல், அதன் சமூக வேர்களை அகற்றும் போராட்டத்துடன் இணைத்துக் காணப்படுகிறது.

தொடரும்

மதம் குறித்து மார்க்சியம் ஒரு அறிமுகம் - பிரேமசந்திரன்

 


முந்தைய பகுதியின் தொடர்ச்சியே

பிரான்சில் பொருள்முதல்வாதமும் மதஎதிர்ப்பும் பிரெஞ்சு புரட்சியும்:

பிரட்டிஷ் பொருள்முதல்வாதமானது தனது அடுத்த கட்ட வளர்ச்சியை 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டில் பிரான்சில் கண்டது. ரெனேதெகார்த்தே, துவக்கிவைத்தார். பொருள்முதல்வாத நிலையிலிருந்து கத்தோலிக்கமதத்தை சாதூரியமாக தாக்கினார். இவரின் தத்துவ செல்வாக்கின் காரணமாக ஸ்பினாசோ (டச்சு) தோன்றி அனைத்து மதங்களையும் கடுமையாக தாக்கினார். அவர் கூறினார்: அன்பு, மகிழ்ச்சி, அமைதி, கட்டுப்பாடு உண்மை ஆகியவற்றை கூறுவதாக கருதப்படும் கிறித்தவமதத்தைச் சார்ந்தவர்கள் தினசரி வாழ்க்கையில் ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கொண்டவர்களாகவும் சண்டையிட்டுக் கொள்பவர்களாகவும் உள்ளனர். கிறித்தவரும், முஸ்லிமும், யூதரும் உடையாலும் வழிபடும் இடங்களாலும் வேறுபடுகிறார்களே தவிர மற்ற அம்சங்களில்ஒன்றாகவே விளங்குகின்றன. மதஆலயங்கள் பெருமைக்குரிய இடங்களாகவும், பணவரவு உள்ள இடங்களாகவும்,மாறிவிட்டன. ஒவ்வொருவரும் அவர் எவ்வளவு தகுதியற்றவராயினும் மதக்குருமராக வர விரும்புகின்றார். மதத்தை பரப்புவது என்பது ஒரு பிழைப்புவாதமாக மாறிவிட்டது.” என்றார்.

லாமெட்ரி (பிரான்சு) என்ற பொருள்முதல்வாத தத்துவஞானி கடவுள் என்ற கருத்தாக்கத்தை கடுமையாக எதிர்த்தார். உலகத்தீமைகளுக்கு முக்கிய காரணம் மதம் என்றார். மதமற்ற உலகமே மகிழ்ச்சியான உலகமாக இருக்க முடியும் என்றார். அப்போதுதான் மத யுத்தத்திலிருந்து உலகம் விடுபட முடியும் என்றார். 18ஆம்நூற்றாண்டில் பிரான்சானது 14ஆம் லூயி மன்னனின் கொடூரமான எதேச்சாதிகாரத்தில் இருந்தது. போராடியவர்கள் 1000 கணக்கில் கில்லட்டின் என்ற கருவியைக் கொண்டு தலை துண்டாடப்பட்டனர். இருப்பினும் டேனிஸ் தீதரோ, மாண்டஸ்கியூ,வால்டர், ஹெல்விசியஸ் ஹோல்பாக் (கலைகளஞ்சியத்தார்) போன்ற போர்குணமிக்க முதலாளித்துவ பொருள்முதல்வாதிகள் முரணற்ற வகையில் நிலபிரபுத்துவ ஒழிப்பை மற்றும் மத எதிர்ப்பையும் நாத்திகத்தையும் அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ சித்தாந்த்ததை அதாவது சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் என்ற முழக்கங்களை முன்வைத்து பிரெஞ்சு மக்களை திரட்டி 1789ல் பாஸ்டில் சிறைச்சாலையை தகர்த்து பிரெஞ்சு புரட்சியை துவக்கி விரைவில் நிறைவேற்றினர். 1000க்கணக்கான பாதிரியார்களும் மடாதிபதிகளும், மன்னரும் நிலபிரபுக்களும் அவர்கள் உருவாக்கிய கில்லட்டினாலேயே தலைதுண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

மடாலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மடங்களுக்கு நிலபிரபுக்களுக்கு சொந்தமான நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. . மதம் தனிநபரின் சொந்த விவகாரமாக பிரகடனம் செய்யப்பட்டது. புரட்சிக்கு தலைமைதாங்கிய ரோபெஸ்பியர் கத்தோலிக்க மதத்திற்கு மாற்றாக ”உன்னத புருஷன்” என்ற மதத்தை உருவாக்க முயற்சி எடுத்து தோற்றார். பின்னர் 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நெப்போலியனால் முதலாளித்துவ வர்க்க நலனையொட்டி கத்தோலிக்க மதத்தை மீண்டும் கொண்டு வந்தது மட்டுமல்லாமல் வரலாறே வெறுக்கும் படியாக பிரெஞ்சு குடியரசுக்கு மன்னராக முடிசூடிக்கொண்டார். புரட்சிகரமான பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கமே பிற்போக்காக மாறி பிரிட்டனை முன்மாதிரியாகக் கொண்டு போராடும் மக்களை ஒடுக்க அவர்களை மதஉணர்வில் வைத்திருக்க முதலாளித்து அரசியல் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு மன்னராட்சி முறையை கொண்டு வந்தது. இது 1870 வரை நீடித்தது.

1848ல் கம்யூனிஸ்டு அறிக்கையில் மதம் குறித்து மார்க்ஸ் எங்கெல்ஸ்: கம்யூனிசத்தின் எதிராளிகள் கம்யூனிசத்திற்கு எதிராக குற்றச்சாட்டை முன் வைக்கும்போது “ வரலாற்று வளர்ச்சியின் போது சமயம், ஒழுக்க நெறி, தத்துவவியல், சட்ட நெறி, இவை சம்பந்தமான கருத்துக்கள் உருத்திரிந்தது மெய்தான். ஆனால் சமயமும் ஒழுக்க நெறியும் தத்துவவியலும், அரசியல் விஞ்ஞானமு் சட்டமும் இந்த மாற்றங்களால் அழிந்துபடாது எப்போதுமே சமாளித்து வந்திருக்கின்றன” என்றும் “சுதந்திரம் நீதி என்பன போன்ற சாசுவத உண்மைகள் இருக்கின்றன. இவை சமுதாயத்தின் எல்லா கட்டங்களுக்கும் பொதுவானவை. கம்யூனிசமானது சாசுவத உண்மைகளை இல்லாதொழியச் செய்கிறது. மதம், ஒழுக்க நெறி ஆகிய அனைத்தையம் புதிய அடிப்படையில் அமைப்பதற்கு பதிலாக இவற்றை ஒழித்து கட்டிவிடுகிறது. ஆகவே கம்யூனிசம் கடந்த கால வரலாற்று அனுபவம் அனைத்திற்கும் முரணாய் செயல்படுகிறது.”என்றனர் . முதலாளித்துவ வாதிகள் முன்வைக்கும் இந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளித்து கூறுகையில் மார்க்சும் எங்கெல்சும் ”தற்போதுள்ள உங்களுடைய பொருளுற்பத்தி முறையிலிருந்தும் சொத்துடைமை வடிவிலிருந்தும் உதித்தெழும் சமூக வடிவங்களை பொருளுற்பத்தியின் முன்னேற்றத்தின்போது தோன்றி மறைந்து போகும் உறவுகளாகிய இவற்றை என்றும் சாசுவத இயற்கை விதிகளாகவும் பகுத்தறிவு விதிகளாகவும் மாற்றும்படி உங்களது தவறான தன்னல கருத்தோட்டம் உங்களை தூண்டுகிறது இந்த தவறான கருத்தோட்டம் உங்களுக்கு முன்பிருந்த ஆளும் வரக்கங்கள் யாவற்றுக்குமே இருந்ததுதான். பண்டைக்காலத்து சொத்துடைமையை பொறுத்தவரை நீங்கள் தெட்டத் தெளிவாக காண்பதை, பிரபுத்துவ சொத்துடமை சம்பந்தமாய் நீங்கள் ஒத்துக் கொள்வதை உங்களுடைய முதலாளித்துவ சொத்துடமை குறித்து உங்களால் ஒத்துக் கொள்ள முடிவதே இல்லை. நீங்கள் தடுக்கப் பட்டுவிடுகிறீர்கள். என்றும் . புராதான பொதுவுடமை சமூகம் தவிர கடந்தகால சமுதாயம் அனைத்தின் வரலாறும் வர்க்க பகைமைகளின் இயக்கமாய் இருந்திருக்கிறது. இந்த பகைமைகள் வெவ்வேறு சகாப்தங்களில் வெவ்வேறு வடிவங்களை ஏற்று வந்திருக்கிறது. ஆனால் இந்த வர்க்கப் பகைமைகள் ஏற்றவடிவம் எதுவானாலும் சமுதாயத்தின் ஒருபகுதி மற்றொரு பகுதியால் சுரண்டப்பட்டு வந்தது என்பதும் கடந்த சகாப்தங்கள் யாவற்றுக்கும் உண்மை. எனவே கடந்த சகாப்தங்களது சமூக உணர்வு எவ்வளவுதான் பல்வேறுபட்டதாகவும் பலவிதமானதாக இருந்திருப்பினும் வர்க்க பகைமைகள் அறவே அழிந்தாலொழிய முற்றிலும் கரைந்துவிட முடியாத குறிப்பிட்ட சில பொதுவடிவங்கள் அல்லது பொதுவான கருத்துக்களின் குறிப்பிட்ட சில பொதுவடிவங்கள் அல்லது பொதுவான கருத்துக்களின் வட்டத்தினுள்ளேதான் அந்த சமூக உணர்வு இயங்கி வந்திருக்கிறது. இதில் வியப்பு ஏதும் இல்லை. உதாரணமாக மதத்ததை பொறுத்தவரை, பண்டைய உலகு (அடிமைச்சமூகம்)அதன் அந்திமக் காலத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது பண்டைய சமயங்களை கிறித்தவ சமயம் வெற்றிக் கொண்டது. பிறகு 18ஆம் நூற்றாண்டில் கிறித்தவ சமயக் கருத்துக்கள் அறிவொளி இயக்க கருத்துக்களுக்கு அடிபணிந்து அரங்கை விட்டகன்ற போது அக்காலத்திய புரட்சி வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்துடன் பிரபுத்துவ சமுதாயம் தனது மரண போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது.எனவும் சமயத்துறை சுதந்திரம் மனசாட்சி சுதந்திரம் ஆகிய கருத்துக்கள் கட்டற்ற (முதலாளித்துவ )சுதந்திர போட்டியின் ஆதிக்கத்தினது அறிவுலக வெளிப்பாடுகளே என்றும் அதாவது முதலாளித்துவ அரசியல் சுதந்திரம் பெற்ற அமைப்பில் மதப்பிரச்சினை என்பது தனிநபர்சார்ந்தது அதாவது அரசு சாராதது, அது மனிதனது மனசாட்சி பிரச்சினை என்றும் அதே சமயத்தில் தனிச்சொத்தை பாதுகாக்கும் பாரம்பரிய கருத்தமைப்புகளிலிருந்து (மதம் உட்பட) மக்களே துண்டித்து கொள்ளும் நிலை ஏற்படும் அவைகள் படிப்படியாக அழிந்து போகும் என்பதை கீழ்க்கண்டவாறும் குறிப்பிடுகிறார். ” கம்யூனிச புரட்சி பாரம்பரிய சொத்துடமை (தனிச்சொத்து) உறவுகளிலிருந்து மிகவும் தீவிரமாய துண்டித்து கொண்டு விடும் புரட்சியாகும் . ஆகவே இந்த புரட்சியின் வளர்ச்சியின் போது (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் போது) பாரம்பரிய கருத்துக்களிடமிருந்து (தனிச்சொத்தை பாதுகாக்கும்) மக்கள் மிகவும் தீவிரமாய் துண்டித்து கொள்ளும் படி நேர்வதில் வியப்பிற்கு இடமில்லை.”

19ஆம் நூற்றாண்டுபிற்பாதியில் ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்டு இயக்கங்களின் நிலை:19ஆம் நூற்றாண்டின் முதல் பாதிவரை தொழிற்துறையிலும் அரசியல் துறையிலும் வளர்ச்சி பெற்ற பிரிட்டன் மற்றும் பிரான்சு போன்ற ஒருசில நாடுகள்தான் அரசியல் சுதந்திரம் அடையப்பெற்ற நாடுகளாய் இருந்தன. ஜெர்மனி உட்பட பல்வேறு நாடுகள் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நிறைவு பெறாத நாடுகளாகவே இருந்தன. 1848லிருந்து 1851 வரை ஐரோப்பாவில் ஜனநாயத்திற்காகவும் அரசியல் சுதந்திரத்திற்காகவும் செங்கொடி ஏந்தி தொழிலாளி வர்க்கம் நடத்திய ஜனநாயகத்திற்கான போராட்டங்கள்அனைத்தும் முதலாளித்துவ வர்க்கம் இழைத்த துரோகம் காரணமாக ஐரோப்பாவின் எதேச்சாதிகார பிற்போக்கு அரசாங்கங்களால் கடுமையாக ஒடுக்கப்பட்டன மற்றும் தோற்டிக்கப்பட்டன. கட்சி கட்டுவதற்கான அடிப்படை திட்டமும் அதைகட்டுவதற்கான 1871 பாரிஸ்கம்யூனுக்குப் பிறகு அடிப்படை வழிமுறைகளும் வகுத்து வைக்கப்பட்டிருந்தாலும் எந்த ஒரு நாட்டிலும் மார்கஸியத்திற்கு அந்நியமான குட்டி முதலாளிய அராஜக மற்றும் வலதுசாரி சித்தாந்தப் போக்குகளை் இவற்றை முற்றிலும் முறியடித்து மார்க்ஸியத்தின்அடிப்படையில் ஒரு விஞ்ஞான பூர்வமான கட்சி கட்டப்படவே இல்லை. மார்க்ஸியவாதிகளும் மார்க்ஸியத்திற்கு விரோதமானவர்களும் கலந்து கொண்ட கலவையாகவே கட்சி இருந்தது. அது அக்கட்சியின் திட்டம் மற்றும் போர்தந்திரத்திலும் பிரதிபலித்தது. விஞ்ஞான சோசலிசத்திற்குஅந்நியமான அனைத்து போக்குகளை முறியடிப்பது பற்றியும் அந்தந்த நாட்டு கம்யூனிஸ்டுகளுக்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவரும் தொடர்ந்து தமது வாழ்நாள் முழுவதும் வழிகாட்டினர். இருப்பினும் கட்டப்பட்ட கம்யூனிஸ்டு கட்சிகளில் எல்லாம் திட்டம் போர்தந்திரம், செயல்தந்திரம் இவற்றில் ஒரு கதம்பவாதப் போக்கே நீடித்து வந்தது. ஆதலால் ஒரு முரணற்ற முண்ணனியாக இருந்து கம்யூனிஸ்டு கட்சியானது மக்களை புரட்சிக்கு வழிநடத்த முடியவில்லை..

மேலும் 17ஆம் ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே இங்கிலாந்தின் அரசியலில் பழமைவாதப் போக்கை அதாவது நிலபிரபுத்துவ வர்க்கத்துடன் ஒத்துழைப்பதை மற்றும் மதவாதப்போக்கை உயர்த்தி பிடிப்பதை ஆங்கிலேய முதலாளித்துவ வர்க்கம் நிரந்தரமாக ஆதரித்தது அது மட்டுமல்லாமல் தனது காலனியான வடஅமெரிக்காவிலும் சமய புத்தெழுச்சியை (revivalism) என்ற இயக்கத்தை உருவாக்கி கிறித்தவ மதத்தை வேகமாக பரப்பியது. 18ஆம்நூற்றாண்டின் துவக்கத்திலேயே சொந்த நாட்டில் பெரும்பாலான உழைக்கும் மக்களை அவர்களது எஜமானர்களுக்கு கீழ்படிந்து நடக்கச் செய்ய இந்த மதபோதனை அவர்களுக்கு மிகுதியான வாய்ப்புகளை அளித்ததை அவர் விரைவிலேயே கண்டு கொண்டார் சமயத்தின் செல்வாக்கு இதற்குரிய சாதனங்களில் ஒன்றாக பயன்பட்டது. மதஉணர்ச்சிகள் மக்களுக்கு குறையுமாயின் அவர்களது போராடும் மனோநிலையிலிருந்து அவர்களை திசைதிருப்ப முடியாது என்பதை ஐரோப்பாவில் நடந்த போராட்டங்களிலும் பாரிஸ் கம்யூனில் தொழிலாளி வர்க்கம் இரண்டு மாதம் அதிகாரத்தை கைப்பற்றி வைத்திருந்தன் மூலமும் உணர்ந்து கொண்ட இங்கிலாந்து முதலாளி வர்க்கம் மக்களை மேலும் மத உணர்ச்சிகளில் இருத்தி வைப்பதற்காக புரோட்டஸ்டான்ட் மதத்தை சேர்ந்த பிரச்சாரகர்களான சாங்கி மற்றும் மூடி போன்றவர்களை அமெரிக்காவிலிருந்து வரவழைத்து இங்கிலாந்து மக்கள் மத்தியில் மதப்பிரச்சாரம் செய்தது. 1875ல் இரட்சண்ய சேணை என்ற மதப் பிரச்சார அமைப்பை உருவாக்கி ஐரோப்பா மற்றும் தனது காலனிய நாடுகளில் மதப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டது. உதாரணமாக காலனிய நாட்டில் கிறித்தவ மதத்தை மட்டுமல்ல அந்த காலனிய நாட்டில் உள்ள மதத்தை பிரச்சாரம் செய்யவும் தனது சொந்த நாட்டிலிருந்து பிரச்சாரகர்களை தயார் செய்துஅனுப்பியது.1875ல்அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட தியோசோபிக்கல் சொஸைட்டி (பிரம்ம ஞான சபையைச் சேர்ந்த கர்னல் வோல்காட் என்பவரையும் மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த அன்னி பெசன்ட் என்பவரையும் இந்துமதப் பிரச்சாரம் செய்யவும் அவர்களைக் கொண்டு இலங்கையில் புத்தமதவெறி அமைப்புகளை கட்டவுமான வேலையை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் செய்தது. மற்றும் அதே சமயத்தில் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கமானது பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கத்தை பின்பற்றி மதத்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவும் மதவிவகாரங்களை அரசோடு உறவுபடுத்தவும் தொடங்கியது. மத்திய காலத்தில் நிலபிரபுத்துவ வர்க்கமும் கத்தோலிக்கமதவாதிகளும் செய்த வேலையை இப்போது முதலாளித்துவ வர்க்கமும் புரோட்டஸ்டானட் மதவாதிகளும் செய்யத்துவங்கினர்.

எனவேதான் 1891ல் ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியானது தனது எர்பர்ட் திட்டத்தில் மதப்பிரச்சினையை ஒரு அம்சமாக முன்வைத்தது. அத்திட்டத்தில் உள்ள அடிப்படை குறைபாடுகளை எங்கெல்ஸ் சுட்டிகாட்டும் போது ஜனநாயக குடியரசுக்காக போராடுகின்ற பணியை முன்வைக்கவில்லை என்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு அறைகூவல் விடவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். மதப்பிரச்சினையை சுட்டி காட்டி விமர்சிக்கும் போது ”மதம் என்பது தனிநபர் விசயமாக கருதப்படவேண்டும் ” என்பதை அரசிடமிருந்து தேவாலயங்கள் முற்றிலும் பிரிக்கப்படவேண்டும், அரசைப் பொறுத்தவரை மதமானது தனிப்பட்ட பிரச்சினையே என்றும் கட்சியை பொறுத்தவரை மதம் தனிப்பட்ட விவகாரம் இல்லை என்றும் மதரீதியான நோக்கங்களுக்கு பொதுப்பணத்தை செலவு செய்யகூடாது”என்றுஇருந்ததை மதரீதியான நிறுவனங்களுக்கு எந்தவிதமான ஆதரவும் அரசிடமிருந்து கிடைக்கக் கூடாது என்றும் “மதரீதியான நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாக கருதப்படவேண்டும்” என்று இருந்ததை “மதரீதியான நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாக நடத்தப்படவேண்டும்” என்றும் விமர்சித்தார் மேலும் கோத்தா (1875) வேலைத்திட்டத்தை விட எர்பர்ட் திட்டம் மிகச்சிறப்பானது என்றும் மதிப்பீடு செய்தார். ஆனால் அவரது விமர்சனம் கட்சிக்கு தெரியப்படுத்தவே இல்லை. 1901ல் தான் அந்த விமர்சனம் வெளிவந்தது.

திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அம்சமாக மதம் மற்றும் மதம் பற்றிய கம்யூனிஸ்டு கட்சியின் அணுகுமுறை.ரஷ்யசமூகத்தை புரட்சிகரமாக மாற்றியமைப்பதற்கான ஒரு அறிவியல் பூர்வமான திட்டத்தை உருவாக்கி அதனடிப்படையில் அதை நிறைவேற்ற ஒரு உறுதியான கட்டுப்பாடுடைய போர்க்குணமுள்ள கம்யூனிஸ்டு கட்சியை முதன்முதலாக கட்டியவர் லெனின்தான்.அதனால் தான் வெற்றிகரமாக பாட்டாளிவரக்கப் பரட்சியை நடத்தி ஒருபாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவ முடிந்தது. ஒரு புரட்சிகரமான கொள்கைதிட்டம் (THEORY) இல்லையேல் ஒரு புரட்சிகரமான இயக்கம் இல்லை” எனக்கூறியும், புரட்சிகரமான இயக்கம் மட்டுமே எந்த பிரச்சினையானாலும் வெகுஜனங்களுக்கு தலைமை தாங்கமுடியும் எனக்கூறி திட்டத்தை பற்றி கூறுகையில் “திட்டமானது நமது அடிப்படை பார்வைநிலைகளை வரையறுக்கவேண்டும். நமது உடனடி அரசியல் பணியை தெளிவாக நிறுவவேண்டும். கிளர்ச்சி நடவடிக்கையின் செயல்பரப்பை காட்டக்கூடிய உடனடியான கோரிக்ககைகளை சுட்டிக்காட்டவேண்டும் ஒரு திட்டம் என்பது உத்தரவோ போதனையோ அல்ல. ஒரு திட்டமானது முழுஇயக்கத்தையும் தழுவி நிற்கவேண்டும். நடைமுறையில் இயக்கத்தின் முதலாவது அம்சம் பிறகு அடுத்த அம்சம் என முன்னுக்கு கொண்டு வரப்பட வேண்டும். லெனினுக்கு ரஷ்யசமூகத்திலுள்ள அனைத்துவிதமான அரசியல் பொருளாதார சமூக பிரச்சினைகளில் தெளிவான மார்க்ஸிய பார்வை இருந்துது போலவே மதத்தை பற்றிய தெளிவான மார்க்ஸிய பார்வை இருந்தது.ரஷ்யாவில் 1840லிருந்து ஜாரையும் நிலபிரபுக்களையும் எதிர்த்த விவசாயிகளின் போராட்டமும் .1880க்கு பிறகு ஜாரையும் முதலாளிகளையும் எதிர்த்த தொழிலார் வர்க்கத்தின் போராட்டமும் தொடர்ச்சியாக நடந்து வந்தது. தொடரும்......

அரசு குறித்து மார்க்சியமும், சந்தர்ப்பவாதமும்- தேன்மொழி


 தோழர்களுக்கு வணக்கம்.இலக்கு இணைய இதழ் 01 ஜீன் 2022 அன்று தொடங்கினோம். இதுவரை  நான்கு இணைய இதழ்களை வெளியிட்டுள்ளோம். இப்பொழுது இலக்கு 5 இணைய இதழ் வரவுள்ளது.அதன் மீதான விமர்சனங்கள் வரவேற்க்கிறோம்.

இன்று இலக்கை போராட்டமாகட்டும், ஸ்ரீமதி கொலைக்கு நியாயம் கேட்க்கும் போராட்டமாகட்டும் இந்த அரசின் செயலை கோட்பாட்டு ரீதியில் புரிந்து கொள்ள வேண்டியவை பல அதே போல....

தேர்தல் நேரத்திலும் தேர்தலுக்கு முன்னும் "Go back Modi" என்று குரல் கொடுத்தோர் குரல் கொடுக்க சொன்னவர் இன்று ஆட்சியில் உள்ளவர் அப்படி பேசினால் தண்டிக்கப் படுவீர் என்பதும்.

இதே கட்சி ஆட்சிக்கு வெளி இருந்த பொழுது விமர்சித்த இந்த போலீஸ் அராஜகம் மற்றும் பல செயல்களை இன்று தன் அதிகாரத்தில் அதை மூடி மறைக்க நீலிக் கண்ணீர் வடிப்பதை நீங்களும் புரிந்துக் கொள்ளாமல் அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதும் ஏன் என்பதனை விளக்க வந்தவையே இந்தக் கட்டுரை இலக்கு இதழ் -5 ந் முதல் கட்டுரை.

அரசு குறித்து மார்க்சியமும், சந்தர்ப்பவாதமும்- தேன்மொழி அவர்களின்...

ஒடுக்கும் முதலாளித்துவ வர்க்கங்கள், மாபெரும் புரட்சியாளர்களை அதாவது அவர்களுடைய வாழ்நாளில் ஓயாமல் வேட்டையாடின. அவர்களுடைய கருத்துக்களின் மீது வெறுப்பு கொண்டு கயமைத்தனமான அவதூறு பிரச்சாரங்கள் செய்தார்கள். ஆனால் அவர்கள் மறைந்தபின்பு அவர்களை அபாயமற்ற பூஜையறை படங்களாக்கி அவர்களை வழிபாட்டுக் குரியவர்களாக மாற்றினர். அதன் மூலம் ஒடுக்கப்பட்டமக்களை ஆன்ம திருப்தி செய்து ஏமாற்றினர். அதே நேரத்தில் மார்க்சின்போதனைகளிலுள்ள புரட்சிகர சாரத்தை மூடி மறைத்துவிட்டு, அதனைதிருத்தி முதலாளி வர்க்கத்தாருக்கு சாதகமான முறையில் மாற்றி மக்களிடம் பிரச்சாரம்செய்து மக்களை முதலாளி வர்க்கங்களிடம் அடிமைப் படுத்துவதில் முதலாளிகளும் தொழிலாளி வர்க்க இயக்கத்திலுள்ள சந்தர்ப்பவாதிகளும் ஒன்றுபடுகிறார்கள்.

இவ்வாறு முதலாளித்துவ அறிவாளிகளும் தொழிலாளி வர்க்க இயக்கங்களிலுள்ள சந்தர்ப்பவாதிகளாலும் மிகவும் அதிகமாக மார்க்சியத்தை திருத்தி மக்களை குழப்பத்திற்குள் ஆழ்த்தியமார்க்சிய போதனைகளில் மிகவும் முதன்மையானது அரசு பற்றிய மார்க்சியபோதனையையே ஆகும்.

ஏனெனில் மார்க்சின் போதனைகளிலேயே மிகவும் முதன்மையான, மற்றும் உழைக்கும் மக்களாலும், அதன் முன்னணிகளாலும் உணர்ந்து, புரிந்து கொண்டு செயல்படுத்த வேண்டிய கொள்கை என்பதுஅரசு பற்றிய

மார்க்சியக் கொள்கையாகும். அரசு பற்றிய மார்க்சியகொள்கையில் உழைக்கும் மக்களுக்கும் அதன் முன்னணிகளுக்கும் குழப்பம்இருந்தால் ஆளும் முதலாளி வர்க்கமும், தொழிலாளிவர்க்க இயக்கத்திலுள்ள சந்தர்ப்பவாதிகளும்,மக்களும் அதன் முன்னணிகளும் மார்க்சியத்தின் அடிப்படைகளையே புரியவிடாமல் செய்துவிட முடியும், மேலும் மார்க்சிய சித்தாந்தத்தின் மீதே நம்பிக்கை இழக்கச்செய்ய முடியும். உலக வரலாற்றிலும், இந்திய வரலாற்றிலும் முதலாளித்துவ (ஏகாதிபத்திய) வர்க்கமும், சந்தர்ப்பவாதிகளும் அரசு பற்றிய மார்க்சிய போதனைகளை திருத்தி மக்களிடம் பிரச்சாரம் செய்து மக்களை நம்ப வைத்தார்கள். அதன் மூலம் முதலாளிகள், அவர்களை பாதுகாத்துக்கொண்டு தற்போதுகொடூரமான முறையில் அதாவது பாசிச முறையில்உழைக்கும் மக்களை சுரண்டிக் கொண்டும் ஒடுக்கிக் கொண்டும் இருக்கிறார்கள். இந்த சூழலில் அரசு பற்றிய மார்க்சிய போதனைகளை உழைக்கும் மக்களும் அதன் முன்னணியினரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

‘’அரசுகுறித்த சந்தர்ப்பவாதத் தப்பெண்ணங்களை எதிர்த்துப் போராடாமல்,  பொதுவில் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்தும், குறிப்பாய் ஏகாதிபத்திய முதலாளி வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்தும் உழைப்பாளி மக்களை விடுவிக்கப் போராடுவது சாத்தியமன்று.’’ என்றார் லெனின்.

ஆகவே அரசு குறித்த சந்தர்ப்பவாதிகள் அதாவது மார்க்சிய போதனையை திருத்தி விளக்கம் கொடுத்து மக்களை ஏமாற்றும் திருத்தல்வாதிகளின் கொள்கைகளை எதிர்த்துப் போராடாமல் மக்களை விடுவிக்க நாம்போராட முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

‘’அரசின்பால்சோசலிசப் பாட்டாளிவர்க்கப் புரட்சிக்குள்ள போக்கு குறித்த பிரச்சனை நடைமுறை அரசியல் முக்கியத்துவம் மட்டுமின்றி, இன்றைய மிக அவசர அவசியப் பிரச்சனையாகவும் (முதலாளித்துவக்கொடுங் கோன்மையிலிருந்து தம்மைவிடுவித்துக்கொள்ள வெகுஜனங்கள்கூடிய சீக்கிரத்தில் என்ன செய்ய வேண்டியிருக்கும்என்பதை அவர்களுக்குவிளக்கிச் சொல்லும் பிரச்சனையாகவும்) முக்கியத்துவம் பெற்று வருகிறது’’என்றார் லெனின்.

அரசுக்கும் பாட்டாளி வர்க்கம் தன்னை விடுவித்துக் கொள்வதற்கான போராட்டங்களுக்கும் இடையிலான உறவை உழைக்கும் வர்க்கம் மற்றும் அதன் முன்னணிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்பது நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் முதலாளித்துவ கொடுங்கோன்மை  குறிப்பாக இன்றைய பாசிஸ்டுகளின் கொடுங்கோன்மை நிலவுகின்ற சூழலில்உழைக்கும் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்என்பதை வழிகாட்டுவதற்கு அரசு பற்றிய மார்க்சிய கொள்கைகளை புரிந்துகொள்ள வேண்டியது மிகமிகஅவசியமாகும்.

‘’மார்க்சியத்தைதிரித்துப் புரட்டுவது என்றுமில்லாத அளவுக்கு மலிந்திருக்கும் ஒரு சூழலில், மெய்யாகவே மார்க்ஸ் அரசு எனும் பொருள்குறித்து என்ன போதித்தார் என்பதைத் திரும்பவும் நிலைநாட்டுவது நமது கடமையாகும்.

இதற்கு மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களிலிருந்து நீண்ட மேற்கோள்களை தருவது இன்றியமையாதது’’என்றார் லெனின்.

லெனின் காலத்திலேயே மார்க்சியத்தை திருத்தி மக்களை ஏமாற்றும் திருத்தல்வாதக் கூட்டத்தை எதிர்த்துப் போராட வேண்டிய சூழலில் தற்போது மார்க்சியத்தை திருத்துவதோடு மட்டுமல்லாமல் மார்க்சியத்தோடு ஏகாதிபத்திய சீர்திருத்தவாத கொள்கைகளையும் கலந்துகொள்ள வேண்டும்என்ற கலைப்புவாதம், அடையாள அரசியல் போன்ற மார்க்சியத்திற்கு எதிரான கொள்கைகளும் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில், லெனின் சொன்னது போல மெய்யாகவே அரசு பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின்போன்றவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை உழைக்கும் வர்க்கமுன்னணிகள் கற்றுத் தேர்வது எவ்வளவு அவசியம் என்பதைநாம் புரிந்துகொள்ள வேண்டும்,

மேலும் அது நமது கடமையாகும்.

லெனின் காலத்தில் திருத்தல்வாதியான காவுத்ஸ்கியின் மார்க்சியத்தை திருத்திய வாதங்களை முறியடிப்பதன் மூலம் லெனின் அரசு பற்றிய மார்க்சின் போதனைகளை மட்டுமல்லாது மார்க்சியத்தை பாதுகாத்தார்.

எனினும் இன்றைய காலத்திலும் காவுத்ஸ்கி போன்ற திருத்தல்வாதிகள் மட்டுமல்ல ஏராளமான திருத்தல்வாதிகள் அரசுபற்றிய மார்க்சிய கோட்பாடுகளை திருத்தியும் மார்க்சியத்திற்கு நேர் எதிரான கொள்கைகளையும் மக்களிடம் பரப்பி வருகிறார்கள். அவர்களைமுறியடிக்க அரசு பற்றிய மார்க்சிய கோட்பாடுகளை படித்து உள்வாங்கி முன்னணிகளை வளர்த்திடுவோம்.

அரசின் தோற்றத்தைப் பற்றி குடும்பம், தனிச்சொத்து, அரசின் தோற்றம் என்ற நூலில் எங்கெல்ஸ் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார். அதாவது ‘’அரசானது எவ்வகையிலும் வெளியிலிருந்து சமுதாயத்தின் மீது வலுக்கட்டாயமாய் இருத்தப்பட்ட சக்தியல்ல; இதேபோல அது எவ்வகையிலும் ஹெகல் வலியுறுத்தும் ‘அறநெறி கருத்தின் எதார்த்தஉருவோ’, ‘அறிவின் பிம்பமும் எதார்த்தமோ அல்ல’. மாறாக சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தின் விளைவே அரசு. இந்தசமுதாதாயம் தன்னுடனான தீராத முரண்பாட்டில் சிக்கிக்கொண்டு விட்டது, இணக்கம் காணமுடியாத பகை சக்திகளாய்ப் பிளவுண்டுவிட்டது, இந்த பகைமை நிலையை அகற்றத் திறனற்றதாகி விட்டதை ஒப்புக்கொள்வதன் விளைவே அரசு. ஆனால் இந்தப் பகை சக்திகள் முரண்பட்டு மோதிக்கொள்ளும் பொருளாதார நலன்களைக்கொண்ட இந்த வர்க்கங்கள், தம்மையும் சமுதாயத்தையும் பயனற்ற போராட்டத்தில் அழித்துக் கொண்டு விடாமல் தடுக்கும் பொருட்டு, மோதலை தணித்து ‘ஒழுங்கின்’ வரம்பிற்குள் இருத்தக் கூடிய ஒரு சக்தியை வெளிப்பார்வைக்கு சமுதாயத்திற்கு மேலானதாய்த் தோன்றும் ஒரு சக்தியைநிறுவுவது அவசியமாயிற்று. சமுதாயத்திலிருந்து உதித்ததனாலும்சமுதாயத்திற்கு மேலானதாய்த் தன்னை அமர்த்திக்கொண்டு மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும்இந்தச் சக்தியே அரசு எனப்படுவதாகும்’’என்றார் எங்கெல்ஸ்.

இதன் மூலம் அரசானது சமுதாயத்திற்கு அப்பால் வெளியிலிருந்து உருவானது அல்ல. அதாவது கடவுளால்உருவாக்கப்பட்டதோ, அல்லதுபுனிதமானதோ அல்ல என்பது மார்க்சியம். ஆனால் முதலாளிகளும் சீர்திருத்தவாதிகளும் திருத்தல்வாதிகளும் அரசை புனிதமானது என்றே சித்தரிக்கின்றனர். சமுதாயத்தின் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில், வர்க்கங்கள் தோன்றி முரண்பாடுகள் தோன்றி பகைத்தன்மை வளர்ந்து,இந்தப் பகையை தீர்க்க முடியாதநிலை ஏற்பட்டபோதுதான் அரசு தோன்றியது. இந்த வர்க்க பகைமையானது பயனற்ற போராட்டங்களில் ஈடுபட்டு சமுதாயமே அழிந்துவிடாமல் பாதுகாப்பிற்கான ஒழுங்கைஏற்படுத்துவதற்காகவேஅரசு அவசியம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி அரசானது சமூகத்திற்கு மேலானது என்றும் அதற்குகட்டுப்பட வேண்டியது அவசியம் என்ற கருத்தை விதைத்துஉருவாக்கப்பட்டதுதான் இந்த அரசாகும்.

மேலும் சமூகத்திற்கு மேலானதாக நிறுவிக்கொண்ட அரசானது மேலும் மேலும் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு மக்களுக்கு எதிரான பகை சக்தியாகவே அரசு மாறிவிட்டது. இந்தஉண்மையை மூடிமறைத்துவிட்டு அரசை மக்களின் நண்பனாகவும், மக்களுக்காக பாடுபடும் நிறுவனமாகவும் அதிலுள்ள சிலர் தவறு செய்வதால்அரசே தவறானது என்று கருதக்கூடாது என்று முதலாளித்துவவாதிகளும் சீர்திருத்த திருத்தல்வாதிகளும் கருதுகிறார்கள்.

‘’வர்க்கப்பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவும் வெளியீடுமே அரசு’’இதுதான் அரசு பற்றிய மிகத்தெளிவான மார்க்சிய கோட்பாடாகும். எங்கே, எப்பொழுது எந்தளவுக்குவர்க்கப் பகைமைகள் புறநிலைக் காரணங்களால் இணக்கம்காண முடியாதவை ஆகின்றனவோ, அங்கே அப்பொழுது, அந்தளவுக்கு அரசு உதித்தெழுகிறது. எதிர்மறையில் கூறுமிடத்து, அரசு ஒன்று இருப்பதானதுவர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதனவாய் இருத்தலை நிருபிக்கிறது என்பது மார்க்சியம் ஆகும்.

இதிலிருந்து நாம் வந்தடையும் முடிவுஎன்ன? அரசு ஒன்று இருந்தால்அங்கே வர்க்கங்கள் இருக்கிறது மேலும் அங்கே வர்க்கப்பகைமைகள் நிலவுகின்றது என்பது பொருளாகும். அதே போலவே வர்க்கங்களும் வர்க்கப் பகைமைகளும் நிலவும் சமூகத்தில் அரசுஎன்ற ஒரு நிறுவனம் கட்டாயம் இருக்கும். இந்த கோட்பாட்டிலிருந்துதான் சோசலிச சமூகமாக இருந்தாலும் அங்கே தொழிலாளர்களின் அரசு இருக்கும் அதேநிலையில் சோசலிசசமூகத்திலும் வர்க்கங்களும் வர்க்க பகைமைகளும் இருக்கும் என்று மார்க்சியம் வரையறுத்தது. அவ்வாறு சோசலிச சமூகத்தில் முதலாளி வர்க்கங்களின் அதிகாரம் ஒழிக்கப்பட்டிருந்தாலும், முதலாளித்துவ வர்க்கங்கள் முழுவதுமாக ஒழிக்கப்பட்டிருக்காத நிலையில், வர்க்கங்களும் வர்க்கப் போராட்டங்களும் நீடிக்கும் நிலையில் முதலாளித்துவ வர்க்கங்களை முற்றிலும் ஒழிக்கும் வரை பாட்டாளி வர்க்கத்திற்குஅரசியல் அதிகாரம்வேண்டும் என்கிறது மார்க்சியம்.

மார்க்சியம்கூறும்இந்தஉண்மையைதிருத்தி,  புரட்டிடும் முதலாளித்துவவாதிகளும், சீர்திருத்த  திருத்தல்வாதிகளும் இரண்டுவகையாக மார்க்சியத்தை திருத்துகிறார்கள்.

எங்கே வர்க்கப் பகைமைகளும் வர்க்கப் போராட்டங்களும் உள்ளனவோஅங்கே மட்டும் அரசு இருக்கிறதுஎன்ற புறநிலை உண்மையை மறுக்கமுடியாமல் ஏற்றுக்கொள்கிறார்கள். எனினும் இந்த வர்க்கப்பகைமைகளுக்குஇணக்கம் காண்பதற்காகவே அரசு உருவாகிறது என்றும்அரசானது பகைவர்க்கங்களுக்கு இடையே இணக்கம் காண்பதற்கானநிறுவனம்தான் அரசு என்று வாதிடுகிறார்கள். ஆனால் பகை வர்க்கங்களுக்கு இடையே இணக்கம்காண முடிந்திருந்தால் அரசு என்பதே தோன்றுவதற்குஅவசியமில்லை என்பதுதான் மார்க்சின் கருத்தாகும்.

அதாவது வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாததன்விளைவே அரசு என்பதுதான் மார்க்சின் கருத்தாகும். இந்த கருத்தைத்தான் திருத்தல்வாதிகள் இணக்கம்காணமுடியாத வர்க்கப் பகையையை இணக்கம்காணச் செய்ய முடியும் என்று திருத்துகிறார்கள். இதன் மூலம் வர்க்கப்பகைமைகள் இணக்காணமுடியாதவை என்ற உண்மையை மூடிமறைத்து இந்த அரசானது வர்க்கப்பகைமையை ஒழித்துவிடும் என்று பொய்ப் பிரச்சாரம்செய்கிறார்கள்.

மார்க்சின் கருத்துப்படி ‘’வர்க்க ஆதிக்கத்திற்கான ஓர்உறுப்பே, ஒரு வர்க்கம்பிற வர்க்கங்களை ஒடுக்குவதற்கான உறுப்பே அரசு’’ என்ற புகழ்பெற்றமார்க்சிய கோட்பாட்டை இவர்கள் மறுக்கிறார்கள்.

வர்க்கங்களுக்கு இடையிலான மோதலை மட்டுப்படுத்தி அதன்வாயிலாக இந்த ஒடுக்குமுறையைச் சட்டமாக்கி, நிரந்தரமாக்கிடும் ‘ஒழுங்கை’ நிறுவதுவே அரசாகும் என்கிறது மார்க்சியம். இதற்கு மாறாக குட்டிமுதலாளித்துவவாதிகள் இந்த ‘ஒழுங்கை’வர்க்கங்களை ஒடுக்குவதற்கான ஒழுங்கு என்று பார்ப்பதற்கு எதிராக வர்கங்களுக்கு இடையில் இணக்கம் உண்டாவதற்கான ஒழுங்கு என்று பார்க்கிறார்கள்.மோதலை மட்டுப்படுத்துவது என்றால் ஒடுக்கும் முதலாளிகளின்ஆட்சியைக்கவிழ்ப்பதற்கான குறிப்பிட்ட மக்களின் போராட்ட சாதனங்களையும் முறைகளையும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களிடமிருந்து பறிப்பதல்ல, மாறாகவர்க்கங்களுக்கு இடையே இணக்காண்பதற்காக மோதலை மட்டுப் படுத்துவதுதான் என்று குட்டி முதலாளித்துவ வாதிகள் வாதிடுகிறார்கள். இதன் மூலம் முதலாளித்துவ அரசானது, உழைக்கும் மக்கள் முதலாளித்துவ அரசை எதிர்த்துப் போராடும்போது அந்த போராட்டங்களை ஒடுக்குவதற்காக தனது வன்முறை கருவிகளான போலீசையும்இராணுவத்தையும்ஏவிவிடுகின்ற எதார்த்த உண்மையை மூடி மறைக்கிறார்கள்.

முதலாளி வர்க்கத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையில் இணக்கம்காணமுடியாதபகைத்தன்மைஉருவாகிவிட்டதால், முதலாளிவர்க்கத்தின்அரசானது தொழிலாளி வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் அரசாக இருக்கிறது என்ற உண்மையை குட்டி முதலாளித்துவவாதிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை.‘’மறுபுறத்தில், மார்க்சியத்தைப் பற்றிய காவுத்ஸ்கிவாதப் புரட்டு இன்னும்நுண்ணியம் வாய்ந்தது. அரசானது வர்க்க ஆதிக்கத்திற்கானஓர் உறுப்பு என்பதையோ, வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை என்பதையோ ‘தத்துவார்த்தத்தில் ’இப்புரட்டு மறுப்பதில்லை. ஆனால் அதுபாராமுகமாய் அது விட்டொழிப்பது அல்லது பூசிமெழுகிச் செல்வது இதுதான்: வர்க்கப் பகைமைகள் இணக்கம் காணமுடியாதவை ஆகியதன்விளைவேஅரசு என்றால், அது சமுதாயத்துக்கு மேலானதாய்நின்று ‘மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும்சக்தி ஆகும்’என்றால்,ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலை பலாத்காரப் புரட்சியின்றி சாத்தியம் இல்லை என்பதோடு, ஆளும் வர்க்கத்தால் தோற்றுவிக்கப்பட்டதும்‘அயலானாய்இருக்கும்’இந்தநிலையின் உருவகமானதுமான அரசு அதிகார இயந்திரத்தை அழித்திடாமலும் இந்த விடுதலை சாத்தியமில்லை என்பது தெளிவு.’’ (லெனின்- அரசும் புரட்சியும்)

இங்கே மார்க்சியம் அரசு பற்றிய சொன்னகருத்துக்களை எல்லாம் காவுத்ஸ்கி ஏற்றுக்கொள்கிறார். அதிலிருந்து இந்த அரசை பலாத்கார முறையில் ஒரேயடியாக ஒழித்துவிட வேண்டும் என்ற மார்க்சியத்திற்கு எதிரான தவறான இடதுசாரி முடிவிற்குவருகிறார். இந்த கருத்திற்கு மாறாக அரசை ஒரேயடியாக ஒழிக்க முடியாது என்றும், தற்போது நிலவும்முதலாளித்துவ அரசிற்கு முடிவுகட்டிவிட்டு, பாட்டாளிவர்கத்திற்கான இடைக்கால அரசை உருவாக்கி சமூகத்தைவர்க்கமற்ற சமூகமாகமாற்றியமைக்கும் போக்கில் அரசானது உலர்ந்து உதிரும்என்ற கருத்தை மார்க்சியம் முன்வைக்கிறது. அதுபற்றி தொடர்ந்து விரிவாகப் பார்ப்போம்.

இறுதியாக நாம் மனதில் பதிவுசெய்துகொள்ள வேண்டிய அரசு பற்றிய

குறிப்புகள்.

1. அரசு என்பதை சமூகத்திற்கு வெளியிலுள்ள சக்தி (கடவுள்) உருவாக்கவில்லை.

2. அரசு என்பது புனிதமானதும் அல்ல.

3.சமூகத்திலிருந்து உருவாகி சமூகத்திற்கு மேலானதாக அரசு தன்னை காட்டிக்கொள்கிறது.

4. அரசு பற்றிய மார்க்சிய போதனைகளை மறைத்துவிட்டு அதன் புரட்சிகரத் தன்மையை நீக்கிவிட்டு முதலாளித்துவ்வாதிகளும் சீர்திருத்தவாத திருத்தல்வாதிகளும் நம்மை ஏமாற்றுகிறார்கள்.

5. சந்தர்ப்பவாதிகளால் குழப்பப்பட்ட மார்க்சிய போதனைகளில் முதன்மையானது அரசு பற்றிய மார்க்சியபோதனையே ஆகும்.

6. அரசு பற்றிய மார்க்சிய போதனைகளைநாம் புரிந்துகொள்ளவில்லைஎன்றால் நம்மால் மார்க்சியத்தின் அடிப்படைகளையேநம்மால்புரிந்துகொள்ள முடியாது. அதாவது மார்க்சின் போதனைகளிலேயேமுதன்மையானது அரசு பற்றிய அவரதுபோதனைகளே ஆகும்.

7. தற்போது இந்திய பெருமுதலாளிகளும் அந்நியகார்ப்பரேட்டு முதலாளிகளும் உழைக்கும் மக்களை சுரண்டிக்கொண்டும் கொடூரமாகபாசிச முறையில் ஒடுக்கிக் கொண்டிருப்பதற்கும் அடிப்படை இந்த அரசுதான் என்பதை நடைமுறையிலிருந்து புரிந்துகொள்ளவேண்டும்.

8. அரசு பற்றிய சந்தர்ப்பவாத தப்பெண்ணங்களை எதிர்த்துப் போராடாமல் உழைக்கும் வர்க்கத்திற்கு விடுதலை இல்லை.

9. உழைக்கும் மக்கள் தங்களுக்கான வளமானவாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமானால், அதற்கு மக்கள் என்னசெய்யவேண்டும் என்று தீர்மானிப்பதற்கு அரசுபற்றிய மார்க்சின் போதனைகளை எவ்விதமான திருத்தமுமின்றி தெளிவாகப்புரிந்து கொள்ள வேண்டும்.

10. அரசு பற்றிய மார்க்சிய கோட்பாட்டை என்றுமில்லாத அளவு திருத்திக் கொண்டிருக்கும் சூழலில் அரசு பற்றி மார்க்ஸ்உண்மையிலேயே என்ன போதித்தார் என்பதைநாம் தெரிந்துகொள்ளவேண்டியது நமது கடமையாகும்.

11. மார்க்ஸ், லெனின் காலத்திலேயே காவுத்ஸ்கிபோன்றவர்களின் திருத்தல்வாதக் கருத்துக்கள் முறியடிக்கப்பட்டது. எனினும்தற்காலத்திலும் காவுத்ஸ்கி போன்றவர்களின் திருத்தல்வாதக் கருத்துக்களை புதிய வடிவத்தில் சிலர்கொண்டுவந்து உழைக்கும்வர்க்க முன்னணிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்த முயலுகிறார்கள். அந்ததிருத்தல்வாதிகளை முறியடிக்க நாம் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றவர்களின் கருத்துக்களை ஆழ்ந்து படிக்க வேண்டும்.

12. வர்க்கப் பகைமைகள் இணக்கம்காண முடியாததன் விளைவே அரசு ஆகும்.

13. வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாததால்ஆளும் வர்க்கமானது உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்குவதை தவிர வேறுவழியில்லாத்தால் உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்காக அரசைஉருவாக்கியது.

14. வர்க்கங்களுக்குஇடையில் மோதலைமட்டுப்படுத்துவதற்காகவே அரசுபாடுபடுகிறது என்ற பொய்யைச் சொல்லி, உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான சட்டங்களைப் போட்டு ஒடுக்குவதுதான் அரசின் வேலையாகும்.

15. வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாததால்உருவான அரசால்ஒருபோதும் வர்க்கங்களுக்கு இடையிலான பகையை ஒழித்து வர்க்கங்களுக்கு இடையில் சமாதானத்தை கொண்டுவரமுடியாது.

16. வர்க்கங்களுக்குஇடையில் பகையை ஒழித்து சமாதானத்தைகொண்டுவர முடியும் என்ற கருத்தானது அரசுபற்றிய மார்க்சியபோதனையை திருத்திய சந்தர்ப்பவாத திருத்தல்வாதிகளின்கருத்தாகும் ..

தேன்மொழி..........

தொடரும்

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்