இந்த ஆதாரங்கள் மார்க்ஸ் மற்றும் லெனின் ஆகியோரின் அரசு மற்றும் புரட்சி குறித்த அடிப்படைத் தத்துவங்களை விளக்குகின்றன. பாரிஸ் கம்யூன் அளித்த பாடங்களின் அடிப்படையில், பழைய அரசு இயந்திரத்தை அப்படியே
கைப்பற்றுவதற்குப் பதிலாக அதை முற்றிலுமாக நொறுக்க வேண்டியதன் அவசியத்தை இக்கட்டுரை வலியுறுத்துகிறது. தொழிலாளர் வர்க்கமும் விவசாயிகளும் இணைந்த ஒரு மக்கள் புரட்சியின் மூலமே உண்மையான ஜனநாயகம் மலர முடியும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. அரசு அதிகாரிகளின் ஊதியத்தைக் குறைத்தல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை எந்நேரமும் திரும்பப் பெறும் அதிகாரம் போன்ற அடிப்படை மாற்றங்களை இது முன்மொழிகிறது. மேலும், தற்காலத் தமிழக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தேர்தல் அரசியலில் மூழ்கி இந்த புரட்சிகரக் கொள்கைகளிலிருந்து விலகிச் செல்வதையும் இந்த ஆவணம் கடுமையாக விமர்சிக்கிறது. இறுதியில், வெறும் பாராளுமன்ற மோகத்தைக் கைவிட்டு அரசு எந்திரத்தை மாற்றியமைப்பதே மெய்யான சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று இது எச்சரிக்கிறது.இந்தப்பகுதியை வாசிக்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே
...***************
பாரிஸ் கம்யூன் படிபினைகளும் நம்மிடையே உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒரு ஒப்பீட்டு தேடல்
கம்யூனிஸ்டு அறிக்கையின் புதிய ஜெர்மன் பதிப்புக்கு அதன் இரு ஆசிரியர்களும் கையொப்பமிட்டு எழுதிய கடைசி முன்னுரை 1872 ஜூன் 24ஆம் தேதியிடப்பட்டதாகும்.
இந்த முன்னுரையில் அதன் ஆசிரியர்களான கார்ல் மார்க்கம் பிரெடெரிக் எங்கெல்சும் கம்யூனிஸ்டு அறிக்கையின் வேலைத் திட்டம் "சில விவரங்களில் காலங் கடந்ததாக விட்டது”என்று குறிப்பிட்டுவிட்டு, மேலும் கூறுவதாவது:
“கம்யூனானது முக்கியமாய் ஒரு விவரத்தை, அதாவது “ஏற்கனவே உள்ள அரசுப் பொறியமைவைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றித் தனது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டுவிட முடியாது” என்பதை, நிரூபித்துக் காட்டிற்று...”
(மேலே உள்ளவை லெனின் நூல் திரட்டு-2 அரசும் புரட்சியும் பக்கம் 257 )
“ஏற்கனவே உள்ள அரசுப் பொறியமைவை”” தொழிலாளி வர்க்கம் கைப்பற்றுவதோடு மட்டும் நிற்காமல், அதை அழித்தொழித்திடவும் நொறுக்கவும் வேண்டுமென்பதே மார்க்ஸ் கூறும் கருத்து. 1871 ஏப்ரல் 12ல், அதாவது கம்யூன் நடைபெற்ற அதேகாலத்தில், குகல்மனுக்கு மார்க்ஸ் எழுதினார்.
“,, எனது புரூமேர் பதினெட்டின் கடைசி அத்தியாயத்தைப் பார்த்தால், பிரெஞ்சுப் புரட்சியின் அடுத்த முயற்சி இனி முன்பு போல அதிகாரவர்க்க-இராணுவப் பொறியமைவை ஒருவர் கையிலிருந்து இன்னொருவர்கைக்கு மாற்றுவதாய் இருக்காது, அதை நொறுக்கிடுவதாகவே இருக்குமென நான் கூறுவதைக் காண்பீர்கள்? (அழுத்தம் மார்க்சினுடையது-- மூலத்தில் இருப்பது zerbrechen). மேலே உள்ளவை லெனின் நூல் திரட்டு அரசும் புரட்சியும் பக்கம் 258-259
இன்று, 1917ல், முதலாவது ஏகாதிபத்திய யுத்தம் நடைபெறும் காலத்தில், மார்க்ஸ் முன்பு வரம்பிட்டது பொருந்தாததாகிவிட்டது. பிரிட்டன், அமெரிக்கா ஆகிய இரு நாடு களும், இராணுவவாதக் கும்பலும் அதிகாரவர்க்கமும் இல்லாதவை என்கிற பொருளில் அனைத்து உலகிலும் ஆங்கிலோ- சாக்சன் 'சுதந்திரத்துக்கு” மிகப் பெரிய கடைசிப் பிரதிநிதிகளாய் விளங்கிய இவ்விரு நாடுகளும், யாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்தி யாவற்றையும் நசுக்கும் அதிகாரவர்க்க- இராணுவ அமைப்புகளாலான இரத்தக் கரை படிந்த படு மோசமான அனைத்து ஐரோப்பியச் சகதியில் முழுகிவிட்டன.
இன்று பிரிட்டனிலும் அமெரிக்காவிலும்கூட, “ஏற்கனவே உள்ள அரசுப் பொறியமைவை” (1914-17ஆம் ஆண்டுகளில் இது இந்நாடுகளில் “ஐரோப்பிய” பொதுவான ஏகாதிபத்தியப் பூரண நிலையை எய்திவிட்டது) நொறுக்குவதும், அழித் கதொழிப்பதும் “மெய்யான மக்கள் புரட்சி ஒவ்வொன்றுக்கும் முன்னிபந்தனையாகும்”.
இரண்டாவதாக, அதிகாரவர்க்க-இராணுவஅரசுப் பொறியமைவை அழித்தொழிப்பது “மெய்யான மக்கள் புரட்சி ஒவ்வொன்றுக்கும் முன்னிபந்தனையாகும்”' என்று மார்க்ஸ் கூறும் ஆழ்ந்த கருத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். “மக்கள்” புரட்சி என்னும் கருத்து மார்க்சிடமிருந்து வருவது விந்தையாய்த் தோன்றுகிறது. ஆகவே தாம் மார்க் சியவாதிகளாய்க் கருதப்பட. வேண்டுமென விரும்பும் ஸ்துரூவேயைப் பின்பற்றுவோராகிய ரஷ்யப் பிளெஹானவ்வாதிகளும் மென்ஷிவிக்குகளும் இந்தத் தொடர் மார்க்ஸ் “கை தவறி” எழுதியதெனக் கூறுமளவுக்குச் சென்றாலும் செல்லலாம். இவர்கள், முதலாளித்துவப் புரட்சி, பாட்டாளி வர்க்கப் புரட்சி ஆகிய இரண்டு மட்டுந்தான் ஒன்றுக்கொன்று எதிராய் இருக்க முடியும் என்னும் அளவுக்கு மார்க்சியத்தைக் கேவலமான மிதவாத முறையில் திரித்துவிடுகிறார்கள்; மேலும் இந்த எதிர்நிலையையும்கூட கிஞ்சித்தும் உயிரில்லாத முறையில்தான் புரிந்து கொள்கிறார்கள்.
ஐரோப்பாவில் 1871ல் கண்டத்து நாடு எதிலும் பாட்டாளி வர்க்கம் மக்களில் பெரும்பான்மையாய் இருக்கவில்லை. “மக்கள்” புரட்சியானது, பெரும்பான்மையோரை மெய்யாகவே தன் போக்கிலே இழுத்துச் செல்லும் புரட்சியானது பாட்டாளி வர்க்கம், விவசாயிகள் ஆகிய இரு பகுதியோரையும் தன்னுள் கொண்டதாய் இருந்தால்தான் இவ்வாறு “மக்கள்” புரட்சியாய் இருந்திருக்க முடியும். இவ்விரு வர்க்கங்களும்தான் அன்று “மக்கள்” என்போர். ''அதிகார வர்க்க- இராணுவ அரசுப் பொறியமைவு” இவ்விரு வர்க்கங்களையும் ஒடுக்கியும் நசுக்கியும் சுரண்டியும் வருகிறது என்பதால் இரண்டும் ஒன்றிணைக்கப்படுகின்றன. இந்தப் பொறியமைவை நொறுக்குவது, இதை அழித்தொழிப்பது மெய்யாகவே “மக்களுக்கு” அவர்களில் பெரும்பான்மையோருக்கு, தொழிலாளர்களுக்கும் பெரும் பகுதி விவசாயிகளுக்கும் நலம் பயக்கிறது என்பதுதான், ஏழை விவசாயிகள், பாட்டாளிகளின் சுதந்திரமான கூட்டணிக்கு “முன்னிபந்தனை யாகும்”. இது போன்ற கூட்டணி இல்லாதவரை ஜனநாயகம் நிலையற்றதாகவே இருக்கும்; சோஷலிச மாற்றம் ஏற்படுவது சாத்தியமல்ல.
பாரிஸ் கம்யூன் இத்தகைய கூட்டணியை நோக்கி மெய்யாகவே நடைபோட்டது என்பது பிரசித்தமானது. ஆனால் பல உள்நாட்டு, வெளிநாட்டுக் காரணங்களால் அது தனது குறிக்கோளை வந்தடைய முடியாமற் போய்விட்டது. (மேலே உள்ளவை லெனின் நூல்-2 திரட்டு அரசும் புரட்சியும் பக்கம் 261-262)
கம்யூனுடைய அனுபவம் சொற்பமாகவே இருந்ததென்றாலும், மார்க்ஸ் இந்த அனுபவத்தை பிரான்சில் உள்நாட்டுப் போர் என்ற நூலில் மிகவும் உன்னிப்பாய்ப் பகுத்தாய்ந்தார்.. இந்நூலின் மிக முக்கிய வாசகங்களை மேற்கோளாய்த் தருகிறோம்.
“நிரந்தரச் சேனை, போலீஸ், அதிகாரவர்க்கம், சமயக் குருமார் அமைப்பு, நீதி மன்றம் ஆகிய சர்வவியாபகச் செயலுறுப்புக்களைக் கொண்ட மத்தியத்துவ அரசு அதிகாரம்” மத்திய காலத்தில் உதித்து, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஓங்கி வளர்ந்தது. மூலதனத்துக்கும் உழைப்புக்குமிடையே வர்க்கப் பகைமைகள் வளர்ச்சியுற்றதைத் தொடர்ந்து ‘மேலும் மேலும் அரசு அதிகாரமானது உழைப்பை அடக்குவதற்கான பொது சக்தியின் தன்மையை, வர்க்க ஆதிக்கத்திற்குரிய பொறியமைவின் தன்மையைப் பெற்றது. வர்க்கப்போராட்டத்தின் முன்னேற்றத்தைக் குறிக்கும் ஓவ்வொரு புரட்சியையும் அடுத்து, அரசு அதிகாரத்தின் அப்பட்டமான பலவந்தத் தன்மை மேலும் மேலும் கண்கூடாய்ப் புலப்படுகிறது”. 1848-49ஆம் ஆண்டுகளின் புரட்சிக்குப் பிற்பாடு அரசு அதிகாரம் "... உழைப்புக்கு எதிரான மூலதனத்தின் தேசியப் போர்க் கருவி” ஆகிவிட்டது. இரண்டாவது சாம்ராஜ்யம் இதை உறுதியாக்கிற்று.
“சாம்ராஜ்யத்துக்கு நேர்மாறான எதிர்நிலையே கம்யூன்.” “வார்க்க ஆதிக்கத்தின் முடியாட்சி வடிவத்தை மட்டுமின்றி, வர்க்க ஆதிக்கத்தையே அகற்றிடுவதற்கான ஒரு குடியரசுக்கு உரிய குறிப்பிட்ட ஒரு வடிவமே கம்யூன்...”
பாட்டாளி வர்க்க, சோஷலிசக் குடியரசுக்கு “உரிய” இந்த வடிவம் என்ன? அது தோற்றுவிக்கத் தொடங்கிய அரசு எது?
“...நிரந்தரச் சேனையை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாய் ஆயுதமேந்திய மக்களைத் கதோற்றுவித்தகதே கம்யூனுடைய முதலாவது அரசாணையாகும்...””
“... அனைத்து மக்களது வாக்குரிமையின் அடிப்படையில் பாரிஸ் நகரின் பல்வேறு தொகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டு, கம்யூன் நிறுவப்பட்டது. இந்த உறுப்பினர்கள் பொறுப்புள்ளவர்களாகவும் எந்நேரகத்திலும் நீக்கப்படக் கூடியவர்களுமாய் இருந்தனர். இயற்கையாகவே அதன் உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் தொழிலாளர்களாகவோ, தொழிலாளி வர்க் கத்தின் முழு ஆதரவுக்குரிய பிரதிநிதிகளாகவோ தான் இருந்தனர்... (மேலே உள்ளவை லெனின் நூல்-2 திரட்டு அரசும் புரட்சியும் பக்கம் 264)
“இதுகாறும் அரசாங்கத்தின் கைக்கருவியாய் இருந்து வந்த போலீஸ் இப்பொழுது திடுதிப்பென அதன் அரசியல் செயற்பாடுகள் யாவும் பறிக்கப்பட்டு பொறுப்புள்ள, எக்காலத்திலும் நீக்கப்படக்கூடிய கம்யூன் கைக்கருவியாய் மாற்றப்பட்டது... நிர்வாகத்தின் ஏனைய எல்லாத் துறைகளையும் சேர்ந்த அதிகாரிகளும் இதே போல மாற்றப்பட்டனர்... கம்யூன் உறுப்பினர்கள் முதலாய் எல்லோரும் தொழிலாளருக்குரிய சம்பளங்கள் பெற்றுப் பொதுச் சேவை புரிய வேண்டியதாயிற்று. அரசின் உயர் பதவியாளர்கள் மறைந்ததோடு உயர் பதவியாளர்களது தனியுரிமைகளும் சலுகைகளும் பிரதிநிதித்துவ மான்யத் தொகைகளும் மறைந்துவிட்டன... பழைய அரசாங்கத்தின் பெளதிகப் பலாத்காரக் கருவிகளான நிரந்தரச் சேனையையும் போலீசையும் ஒழித்துக் கட்டியதும் கம்யூனனது உடனே ஆன்மிக அடக்குமுறைக் கருவியையும், அதாவது குருமார்களுடைய அதிகாரத்தையும் தகர்க்க முற்பட்டது. நீதி மன்றத்தினர் போலியான சார்பற்ற நிலையை இழந்து விட்டனர்... இனி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியோரும், பொறுப்புடையோரும், நீக்கப்படக் கூடியோரும் ஆயினர்...”
ஆக, கம்யூனானது நொறுக்கப்பட்ட அரசுப் பொறியமைவுக்குப் பதிலாய் நிறைவான ஜனநாயகத்தை நிறுவியதாய் “மட்டும்தான்” தோன்றும். அதாவது, நிரந்தரச் சேனையை ஒழித்தது; எல்லா அதிகாரிகளையும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்களாக்கி, திருப்பியழைக்கப்படக் கூடியவர்களாக்கியது. ஆனால் உண்மையில் இந்த “மட்டும்தான்” என்பது ஒருவகை நிறுவனங்களை அகற்றி அவற்றினிடத்தில் அடிப்படையிலேயே வேறொரு தன்மையதான பிற நிறுவனங்களைத் தோற்றுவிக்கும் பிரம்மாண்ட மாறுதலைக் குறிப்பதாகும்.”அளவு பண்பாய் மாறுவதன்” எடுத்துக்காட்டு இது. அதாவது முடியுமான அளவுக்கு முழுமையாகவும் முரணின்றியும் செயல்படுத்தப்பட்ட ஜனநாயகமானது முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாட்டாளி வர்க்க ஜனநாயகமாய் மாற்றமடைந்து விடுகிறது; அதாவது அரசு (குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தை அடக்குவதற்கான தனிவகை சக்தி) இனி மெய்யான அரசு அல்லாத ஒன்றாய் மாற்றமடைந்துவிடுகிறது.
முதலாளித்துவ வர்க்கத்தாரை அடக்குவதும் அவர்களுடைய எதிர்ப்பை நசுக்குவதும் இனியும் அவசியமாகவே இருக்கிறது. கம்யூனுக்கு இது மிக மிக அவசியமாயிருந்தது. கம்யூன் இப்பணியைப் போதிய உறுதியோடு செய்யாதது அதன் தோல்விக்குரிய காரணங்களில் ஒன்றாகும். ஆனால் அடக்குவதற்கான செயலுறுப்பு இங்கு மக்களின் பெரும்பான்மைப் பகுதியே அன்றி, அடிமையுடைமைச் சமுதாயம், பண்ணையடிமைச் சமுதாயம், கூலியடிமைச் சமுதாயம் ஆகிய இவை யாவற்றிலும் இருந்தது போலச் சிறுபான்மைப் பகுதியல்ல. பெரும்பான்மை மக்கள், தாமே தமது ஒடுக்குமுறை யாளர்களை அடக்குவதால், அடக்குவதற்கான “தனிவகை சக்தி” ஒன்று இனி தேவையில்லை! இந்த அர்த்தத்தில் அரசு உலர்ந்து உதிரத் தொடங்குகிறது. தனிச் சலுகை படைத்த சிறுபான்மையோரது தனி வகை நிறுவனங்களுக்குப் பதிலாய் (தனிச் சலுகை பெற்ற அதிகாரவர்க்கம், நிரந்தரச் சேனையின் தலைவர்கள்), பெரும்பான்மை மக்கள் நேரில் தாமே இந்தப் பணிகளை நிறைவேற்ற முடிகிறது. அரசு அதிகாரத்தின் பணிகள் மேலும் மேலும் கூடுதலாய்ப் பெருந்திரளான மக்களுக்குரியதாகும்போது, இந்த அதிகாரத்திற்கான அவசியம் மேலும் மேலும் குறைந்துவிடுகிறது.
இச்சந்தர்ப்பத்தில், மார்க்ஸ் வலியுறுத்திக் கூறிய கம்யூனின் பின்வரும் நடவடிக்கைகள் மிகவும் குறிப்பிடத்தக்கனவாகும்: அதிகாரிகளுக்கான எல்லாப் பிரதிநிதித்துவ மான்யங்களையும் பண வகையிலான எல்லாத் தனிச் சலுகைகளையும் ஒழித்தல், அரசின் எல்லா ஊழியர்களது ஊதியங்களையும் “தொழிலாளர்களுக்குரிய சம்பளங்களின்” நிலைக்குச் சமமாக்குதல். முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கு, ஒடுக்குவோரின் ஜனநாயகத்திலிருந்து ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடைய ஜனநாயகத்துக்கு, குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தை அடக்குவதற்கான “தனிவகை சக்தியாய்” அமைந்த அரசிலிருந்து ஒடுக்குவோரை அடக்குவதற்கான பெரும்பான்மை மக்களது-அதாவது தொழிலாளர்கள், விவசாயிகளது பொது சக்திக்கு ஏற்பட்ட மாற்றத்தை ஏனைய எவற்றையும் விட இந்த நடவடிக்கைகள் மிகத் தெளிவாய்ப் புலப்படுத்துகின்றன. மிகவும் எடுப்பான இந்த விவகாரத்தில்தான், அரசு சம்பந்தமான பிரச்சனையைப் பொறுத்தமட்டில் மிகவும் முக்கியமானதெனக் கொள்ளத்தக்க இந்த விவகாரத்தில்தான், மார்க்சின் கருத்துக்கள் அறவே புறக்கணிக்கப்பட்டிருக்கன்றன!.(லெனின் நூல்-2 திரட்டு அரசும் புரட்சியும் பக்கம் 265-267)
விதிவிலக்கின்றி எல்லா அதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்படுதல், எந்நேரத்திலும் பதவியிலிருந்து திருப்பியழைக்கப் படக் கூடியவர்களாய் இருத்தல், அவர்களுடைய சம்பளங்களைச் சாதாரணத் “தொழிலாளர்களுக்குரிய சம்பளங்களின்” நிலைக்குச் சமமாக்குதல்--- “கூறாமலே விளங்கும்” இந்த சர்வசாதாரண ஜனநாயக நடவடிக்கைகள், தொழிலாளர்களுடைய நலன்களையும் விவசாயிகளில் மிகப் பெருவாரியானோரின் நலன்களையும் முழுஅளவுக்கு ஒன்றுபடச் செய்வதோடு, அதேபோது முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்துக்கு இட்டுச் செல்லும் பாலமாகவும் அமைகின்றன. அரசின் புனரமைப்பு சம்பந்தமான, முற்றிலும் அரசியல் வழியிலான சமுதாயப் புனரமைப்பு சம்பந்தமான நடவடிக்கைகளே இவை. “உடைமை பறிப்போர் உடைமை பறிக்கப்படுதல்” நடைபெறுவதுடனோ, அதற்கான தயாரிப்புகளுடனோ இணைக்கப்படும்போது மட்டும்தான், அதாவது உற்பத்திச் சாதனங்களில் முதலாளித்துவக் தனியுடைமை சமுதாய உடைமையாய் மாற்றப்படுவதுடன் இணைக்கப்படும்போது மட்டுமே, இந்த நடவடிக்கைகள் அவற்றின் முழுப் பொருளையும் முக்கியத்துவத்தையும் பெறுகின்றன என்பதைக் கூறத் தேவையில்லை.
“எல்லா முதலாளித்துவப் புரட்சிகளும் எழுப்பிய அந்தக் கவர்ச்சிக் கோஷமாகிய மலிவான அரசாங்கத்தை, கம்யூனானது செலவினங்களுக்கு இரு பெரும் ஆதாரங்களாய் அமைந்த சேனையையும் அதிகாரவர்க்கத்தையும் ஒழித்ததன் மூலம் நடைமுறை உண்மையாக் கிற்று” என்று மார்க்ஸ் எழுதினார்.(லெனின் நூல்-2 திரட்டு அரசும் புரட்சியும் பக்கம் 268-269)
“கம்யூனனது நாடாளுமன்ற உறுப்பாயில்லாமல் செயலாற்றும் உறுப்பாய், ஒருங்கே சட்டமன்றமாகவும் நிர்வாகக் குழுவாகவும் செயல்படும் உறுப்பாய்த் திட்டமிடப்பட்டது” என்று மார்க்ஸ் எழுதினார். (பக்கம் 269)
ஆளும் வர்க்கத்தின் எந்த உறுப்பினர் நாடாளுமன்றத்தின் மூலம் மக்களை அடக்கி ஓடுக்க வேண்டுமெனச் சில ஆண்டுகளுக்கு ஒரு தரம் தீர்மானிப்பகே முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் மெய்யான சாரப் பொருள்---நாடாளுமன்ற- அரசியல்சட்டத்துக்கு உட்பட்ட முடியரசுகளில் மட்டுமின்றி, மிகவும் ஜனநாயகமான குடியரசுகளிலுங்கூட இதுவேதான் நிலைமை. (பக்கம் 271)
முதலாளித்துவ சமுதாயத்தின் ஊழல் மலிந்த நாற்றம் பிடித்த நாடாளுமன்ற முறைக்குப் பதிலாய், கம்யூனனது கருத்துச் சுதந்திரமும் விவாதச் சுதந்திரமும் ஏமாற்று வித்தையாய்ச் சீரழிந்துவிடாத உறுப்புக்களைத் தோற்றுவிக்கிறது, எப்படியெனில் நாடாளுமன்றத்தினர் தாமே வேலை செய்யவும், தாம் இயற்றும் சட்டங்களைத் தாமே செயல்படுத்தவும், உண்மையில் சாதிக்கப் பெற்ற பலன்களைத் தாமே சோதித்துப் பார்க்கவும், தம்மைத் தேர்ந்தெடுத்த தொகுதியோருக்கு நேரடியாகத் தாமே பொறுப்புக் கூறவும் வேண்டியதாகிறது.பிரதிநிதித்துவ உறுப்புக்கள் தொடர்ந்து நிலவுகின்றன; ஆனால் நாடாளுமன்ற முறை ஓரு தனி வகைஅமைப்பாய், சட்டமியற்றுவதற்கும் செயல்படுத்துவதற்கும் இடையிலான உழைப்புப் பிரிவினையாய், பிரதிநிதிகளது தனிச்சலுகை நிலையாய் நிலவவில்லை. பிரதிநிதித்துவ உறுப்புக்கள் இல்லாமல் ஜனநாயகத்தை, பாட்டாளி வர்க்க ஜனநாயகத் தையும்கூட கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆனால் நாடாளுமன்ற முறை இல்லாமல் ஜனநாயகத்தைக் கற்பனை செய்து பார்க்க முடியும், கட்டாயம் பார்க்கவும் வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தை நாம் விமர்சித்துக் கண்டிப்பது வெறும் சொல் அளவிலான விமர்சனமாய் நின்றுவிடக் கூடாதெனில், முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்தை வீழ்த்த வேண்டுமென்ற விருப்பம், மென்ஷிவிக்குகள், சோஷலிஸ்டு-புரட்சியாளர்கள் விவகாரத்திலும், மற்றும் ஷெய் டெமன்கள், லெகின்களின் விவகாரத்திலும், செம்பாக்கள், வண்டர்வேல்டேகளின் விவகாரத்திலும் இருப்பது போல தொழிலாளர்களுடைய வாக்குகளைக் கவருவதற்கான வெறும் “தேர்தல்” முழக்கமாயிராது நமது இடமான உள்ளப் பூர்வமான விருப்பமாய் இருந்தால் கட்டாயம் நாம் இவ்வாறே செய்ய வேண்டும். (மேல் உள்ள பகுதி அரசும் புரட்சியும் நூலிலிருந்து)
இந்தப்பகுதியை வீடியோவில் காண கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழரே
******************
அரசு எந்திரத்தை நொறுக்குவதா? அல்லது அதற்குள் நசுங்குவதா? - தமிழக கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு தத்துவார்த்த எச்சரிக்கை
மார்க்சியத்தின் மிக அடிப்படையான, ஆனால் இன்று பலரால் வசதியாக மறக்கப்பட்ட ஒரு கோட்பாடு உண்டு: "ஏற்கனவே உள்ள அரசுப் பொறியமைவைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றித் தனது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டுவிட முடியாது." 1872-ல் மார்க்ஸும் எங்கெல்ஸும் கம்யூனிஸ்டு அறிக்கைக்கு எழுதிய முன்னுரையிலும், பின்னர் லெனின் தனது 'அரசும் புரட்சியும்' நூலிலும் ஆணித்தரமாகப் பதிவு செய்த இந்த வரிகள், இன்று தமிழக கம்யூனிஸ்ட் இயக்கங்களின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது ஏளனத்திற்குள்ளாக் கப்படுவதாகவே தோன்றுகிறது.
1. பாராளுமன்ற மோகமும் அதிகாரவர்க்க அடிபணிதலும்
பாரிஸ் கம்யூன் நமக்குக் கற்றுக்கொடுத்த பாடம் என்ன? பழைய இராணுவ-அதிகாரவர்க்க இயந்திரத்தை ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு மாற்றுவது புரட்சியல்ல; அதை 'நொறுக்குவதே' (zerbrechen) புரட்சி என்றார் மார்க்ஸ். ஆனால், தமிழகத்தில் தங்களை மார்க்சியவாதிகள் என்று அழைத்துக்கொள்ளும் பல அமைப்புகள், அதே 'அழுகிப்போன' அரசு இயந்திரத்தின் ஒரு அங்கமாக மாறுவதையே தங்கள் வாழ்நாள் சாதனையாகக் கருதுகின்றன.
தேர்தல் அரசியலில் ஒரு சில இடங்களைப் பெறுவதற்காக, முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதும், அந்த அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு "ஜனநாயகம்" பேசுவதும் லெனின் விமர்சித்த 'மென்ஷிவிக்குகளின்' பாதையையே நினைவூட்டுகிறது.
2. 'மக்கள் புரட்சி' என்பதா? 'வாக்கு வங்கி' என்பதா?
மார்க்ஸ் குறிப்பிட்ட 'மக்கள் புரட்சி' என்பது பாட்டாளி வர்க்கமும் விவசாயிகளும் இணைந்த ஒரு மாபெரும் சக்தியால் அரசு இயந்திரத்தை முடக்குவதாகும். ஆனால், இன்று தமிழகத்தில் வர்க்கப் போராட்டத்திற்குப் பதிலாக, அடையாள அரசியலும் தேர்தல் கணக்குகளுமே முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
அதிகார வர்க்கத்தின் சலுகைகளையும், போலீஸ் மற்றும் இராணுவத்தின் அடக்குமுறை அதிகாரத்தையும் தகர்க்க முற்பட வேண்டிய இயக்கங்கள், இன்று அதே அதிகாரவர்க்கத்திடம் மனு கொடுப்பதிலும், அவர்களுக்குத் துணை போவதிலும் காலத்தைக் கழிக்கின்றன. "மலிவான அரசாங்கம்" மற்றும் "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, எந்நேரத்திலும் நீக்கப்படக்கூடிய பிரதிநிதிகள்" என்ற பாரிஸ் கம்யூனின் கனவு, இவர்களது தேர்தல் அறிக்கைகளில் கூட இடம்பெறுவதில்லை.
3. சம்பள சமத்துவமும் பிரதிநிதித்துவமும்
அரசு ஊழியர்களின் ஊதியத்தைத் தொழிலாளர்களின் சராசரி சம்பளத்திற்குச் சமமாக்க வேண்டும் என்பது மார்க்சின் அழுத்தம் திருத்தமான கருத்து. இதன் மூலம் அரசுப் பதவிகளைத் தனிச்சலுகை மிக்க இடங்களாக இல்லாமல், பொதுச்சேவை புரியும் இடங்களாக மாற்ற முடியும். ஆனால், தமிழகத்தில் உள்ள இடதுசாரி தொழிற்சங்கங்கள் கூட, அரசு இயந்திரத்தின் உயர் பதவிகளில் இருப்பவர்களின் சலுகைகளைக் கேள்வி கேட்காமல், தங்களை அதே படிநிலை அமைப்பிற்குள் தகவமைத்துக் கொள்கின்றன.
4. முடிவற்ற காத்திருப்பு
"பாராளுமன்ற முறை இல்லாமல் ஜனநாயகத்தைக் கற்பனை செய்ய முடியும்" என்றார் லெனின். ஆனால் இவர்களோ, பாராளுமன்றமே ஜனநாயகம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற உண்மையான விருப்பம் இல்லாமல், வெறும் 'தேர்தல் முழக்கங்களாக' மார்க்சியத்தைப் பயன்படுத்துவது மார்க்சியத்திற்குச் செய்யும் துரோகமாகும்.
முடிவாக:
அரசு இயந்திரத்தை நொறுக்கி, பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை நிறுவ வேண்டிய அவசியத்தை லெனின் வலியுறுத்தினார். ஆனால், இன்றைய தமிழகச் சூழலில் கம்யூனிஸ்டுகள் அரசு இயந்திரத்தைச் சீரமைக்கப் போவதாகக் கூறிக்கொண்டு, அதனுள்ளேயே கரைந்து போகிறார்கள். லெனினின் 'அரசும் புரட்சியும்' வெறும் வாசிப்பதற்கான நூல் அல்ல; அது செயல்படுத்துவதற்கான வரைபடம். அதை உணராத வரை, இவர்களது 'புரட்சி' என்பது காகிதத்தோடு மட்டுமே நின்றுவிடும்.
தொடர்புடைய கட்டுரைகள்:
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக