‘அடியும் முடியும்’- முனைவர் க.கைலாசபதி பற்றிய- ஓர் ஆய்வு

முனைவர் க.கைலாசபதி பற்றிய நான் பேசிய பொழுது அவரை பற்றி தெரியாத ஒரு இலக்கியவாதியை சந்திக்க நேர்ந்தது அதனால் எழுதப் பட்ட இந்த பகுதி நமது மார்க்சிய முன்னோடிகளை அடையாளம் காணும் விதமாக ஒரு முயற்ச்சிதான் இந்தப் பகுதி இதில் நிறைகுறைகள் இருக்கலாம் நீங்கள் சுட்டிகாட்டலாம் தோழர்களே

திரு. கனகசபாபதி கைலாசபதி (1933-1982) அவர்கள் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்று இளங்கலைப் பட்டமும் (B.A.Hons) முதுகலைப் பட்டமும் (M.A.) பெற்றவர். சிலகாலம் தினகரன் இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தபின் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியேற்றவர். அப்பணியிலிருந்தவாறே உயர்கல்வி விடுப்புப் பெற்று இங்கிலாந்து சென்று பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் மார்க்சியபேரறிஞர் ஜார்ஜ் தாம்ஸன் அவர்களின் வழிகட்டலில் Tamil Heroic Poetry  ஆய்வு செய்து முனைவர் (Ph.D) பட்டம் பெற்றவர்.

 

தமிழ் ஆய்வியல் - கைலாசபதி கால் பதிக்கும் வரை :கலை, இலக்கியம், மொழி ஆகியன சார்ந்த பண்பாட்டுத்துறைகளில் ஆய்வு என்பது தேடித் திரட்டித் தொகுத்தல், அவ்வாறு தொகுக்கப்பட்டவற்றின் உள்ளார்ந்த பண்புகளை இனங்காணல், மற்றும் சுவைத்தல்,மதிப்பிடுதல்,எதிர்காலத்தில்வாழக்கூடிய-அல்லது முன்னெடுக் கப்பட வேண்டிய - கூறுகளை இனங்கண்டுகாட்டல் முதலிய பல படிநிலைச்செயற்பாடுகளைஉள்ளடக்கியதாகும். இவற்றுள்முதலாவது செயற்பாடு பதிப்பித்தல், ஆவணப் படுத்துதல் என்பனவாக அமையும், இரண்டாவது செயற்பாடு பண்பாட்டு வரலாற்றாய்வாக வடிவம் பெறும், அடுத்து வரும் இரண்டும் திறனாய்வு தொடர்பானவை.இறுதிப்பணிஆய்வாளனின் சமூகப் பொறுப்புணர்வு சார்ந்தது. மேற்படி ஆய்வுச் செயற்பாடுகள் அனைத்திலும்அடிநாதமாகஅமைந்திருக்க வேண்டிய உணர்வுநிலை உண்மைகண்டடைதல்' என்ற ஆர்வமாகும். இதற்கு அடிப்படையாக அமைவது புறநிலை (Objective) அணுகுமுறையாகும். மாறாக, அகநிலை (Subjective) ஆக அணுக முற்படும் பொழுது அந்த ஆய்வானது உண்மைக்கு அருகில் இட்டுச் செல்வதை விடுத்து, விரும்பியதைக் கண்டறியும் ஆர்வச் செயற்பாடாக அமைந்துவிடும்.

 

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தொடங்கிய தமிழ் ஆய்வியலில் - குறிப்பாக பண்பாட்டு வரலாறு தொடர்பான ஆய்வுப் பார்வையில் - முனைப்பாகப் புலப்படத் தொடங்கிய உணர்வுநிலை தமிழின் தொன்மை, மேன்மை என்பவற்றை இனங்கண்டு காட்டும் ஆர்வமாகும். இந்தியத் தேசிய விடுதலையுணர்வு வளர்ச்சி பெற்று வந்த அக்காலச் சூழலில் தமிழறிஞர் பலரும் தமது மரபுசார் பெருமைகளை மீட்டெடுக்கும் ஆர்வத்துடன் செயற்பட்டனர். இவ்வாறான ஆர்வ முனைப்பு 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை பல்வேறு வகைகளில் தொடர்ந்தது. இவ்வாறு தமிழ் ஆய்வியலில் தமிழ் உணர்வு செல்வாக்குச் செலுத்தி நின்ற காலப்பகுதியில் அந்த உணர்வுக்கு அப்பால் நின்று உண்மைகளை நாடும் செயல்திறனும் சில ஆய்வறிஞரிடம் வெளிப்பட்டதுஇவ்வகையிற் குறிப்பிடத்தக்க முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள். தரவுகளைமுதன்மைப்படுத்தல்,அவற்றை ஒப்புநோக்குதல், அவற்றினூடாகச் சமுதாய வரலாற்றுப் போக்கை இனங்காணுதல், இவற்றினடிப்படையில் வரலாற்றுக் காலகட்டங்களை வகுத்தல் என்பனஎஸ்.வையாபுரிப் பிள்ளையவர் களிடம் தெ.பொ.மீ. அவர்களிடமும் சிறப்பாகப் புலப்பட்டு நின்ற அணுகுமுறைகளாகும். ஈழத்தமிழறிஞரான பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையவர்கள் சாசனவியல் ஆய்வினூடாக மொழி பண்பாட்டுக் கூறுகளை இனங்காண முயன்ற முன்னோடியாவர். சுருங்கக் கூறின் தமிழ் ஆய்வியலில் உணர்ச்சிக் கலப்பற்ற புறநிலைப் பார்வைக்குத் தளம் அமைத்தவர்களாக மேற்படி மூவரையும் சுட்டலாம்.

தமிழ் இலக்கியத்திறனாய்விலே 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையான வரலாற்றில் அதன் அழகியல்' என்ற அம்சமேதனிக்கவனத்தைப் பெற்றிருந்தது. தொனிப்பொருள், கற்பனை, உத்தி, நடை, இவற்றால் விளைகின்ற உணர்வுத் தாக்கம் என்பனபற்றி விரித்துரைப்பதும், இலக்கிய ஆக்கங்களில் அவை பயின்றுள்ள முறைமைகளை நயம்பட எடுத்துரைப்பதுமே இலக்கியக் கல்வி, இலக்கிய விமரிசனம்' என்பனவாக மேற்படி காலப் பகுதியிற் கருதப்பட்டன.

இதே காலப் பகுதியில் இவ்வாறான அணுகுமுறைகள்,போக்குகள்என்பவற்றுக்கும் புறம்பான புதியதொரு பார்வையும் அறிமுகமாகத் தொடங்கியிருந்தது. அதுதான் மார்க்சியப் பார்வை. இது சமூக வரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகத் தரிசிப்பது, பண்பாட்டுக் கோலங்களைச் சமூக இயங்கியல் ஊடாகத் தரிசித்து மதிப்பிடுவது, கலை இலக்கியம் என்பவற்றை அழகியல் ஆக்கங்கள் என்ற அளவில் மட்டும் நோக்காமல் அவற்றைச் சமூகப் பிரச்சினைகளின் பதிவுகளாகவும் அவ்வகையில் சமூக வர்க்கங்களின் குரலாகவும் நோக்குவது. இவ்வாறான பார்வை, அணுகுமுறைஎன்பன, 1920-30களில் இந்தியமண்ணில்மார்க்சியம்அறிமுகமானதைத் தொடர்ந்து, 1930-50 காலப்பகுதியில் தமிழகத்தில்அறிமுகமாயின. ஈழத்திலும் இவ்வாறான பார்வை, அணுகுமுறை என்பன1940-50களில் தமிழிலக்கியத் துறையில் பயிலத் தொடங்கின.

தமிழகத்திலே மா.சிங்காரவேலர், . ஜீவானந்தம், தொ. மு. சி. ரகுநாதன், ஆர். கே. கண்ணன், தி. . சிவசங்கரன், நா. வானமாமலை முதலியவர்களும் ஈழத்திலே மு. கார்த்திகேசன், கே. கணேஷ், கே. ராமநாதன், மகாகவி, .நா. கந்தசாமி, . முருகையன், இளங்கீரன், செ. கணேசலிங்கன், கே. டானியல், டொமினிக் ஜீவா முதலியவர்களும் இவ்வாறான மார்க்சியப் பார்வைகளுக்கு ஆய்வு நிலையிலும் படைப்பு நிலையிலும் வெவ்வேறு அளவில் தம்பங்களிபைச் செய்துள்ளனர். தமிழர்களின் சமூக-பண்பாட்டு வரலாற்றை மார்க்சிய அடிப்படையிலான மானுடவியல், சமூகவியல்,பண்பாட்டியல் அணுகுமுறைகளுடாகக் கட்டியெழுப்பும் நோக்கில் நா. வானமாமலை அவர்கள் ஆராய்ச்சி என்ற பெயரிலான ஒரு ஆய்வு வட்டத்தையும், அதன் பதிவேடாக ஆராய்ச்சி இதழையும் 1960களின் நடுப்பகுதியில் தோற்றுவிக்கிறார். இவ்வாறாக, ஆய்வு நிலையிலும் படைப்பு நிலையிலும் மார்க்சியப் பார்வை அறிமுகமாகத் தொடங்கியிருந்த சூழலில் அதனை முன்னெடுத்து, தமிழ் ஆய்வியலில் ஒரு கனதியானமாற்றத்தை விளைவிக்கவல்ல ஆளுமையுடன் அடிபதித்தவர் க. கைலாசபதி,1950களின் நடுப்பகுதியிலிருந்து 1982இல் தாம் இயற்கை எய்தும்வரை ஏறத்தாழ முப்பதாண்டுக் காலத் தமிழ் ஆய்வியலில் தமது ஆளுமையை அவர் மிக அழுத்தமாகப் பதித்துக் கொண்டார், தமிழ் ஆய்வியலின் திசையறி கருவியாகச் சிறப்புடன் செயற்பட்டார்.

 

கைலாசபதியவர்களின் சமகாலத்தவரும் அவருடன் ஒரே துறையில் பணியாற்றி நின்றவருமான பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் கருத்தியல் அடிப்படையில் இயற்கைநெறிக்காலம், அறநெறிக்காலம், பக்திநெறிக்காலம், தத்துவநெறிக்காலம், அறிவியல்நெறிக் காலம் என்பனவாக வகைப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டிருந்தார். கைலாசபதியவர்கள் மேற்படி பார்வை களினின்று வேறுபட்டு மார்க்சிய வரலாற்றுப் பார்வையின் அடிப்படையில் ஆதிபொதுமைச்சமூகம், அடிமைச் சமூகம், நிலைவுடைமைச் சமூகம், முதலாளியச்சமூகம், பொதுவுடைமைச் சமூகம் என்பனவாகக் காலப் பகுப்பாய்வை மேற்கொண்டார். இவ்வகையில் தமிழரின் சமுதாய - இலக்கிய வரலாறுகளுக்கு ஒரு புதிய பொருத்தமான பார்வையை முன்வைத்த சிறப்பு இவருக்கு உரியதாகிறது.

இவ்வாறான பார்வையின் ஊடாக அவர் சங்க இலக்கிய காலப் பகுதியைவீரயுக காலம் (Heroic Age)" அநாகரிகநிலையிலிருந்து நாகரிக நிலைக்குச் சமூகம் மாறும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்குழுக்களாகவும் குலங்களாகவும் இருந்த வாழ்க்கை அமைப்பைத் தனிமனிதக் கொள்கை உடைத்தெறிந்து, வலுக்கொள்கை யடிப்படையில் அரசுகளை நிறுவும் சண்டைகள் நிறைந்த வரலாற்று நிலையை வீரயுகம் என்றழைப்பர்",என 'வீரயுகம்' என்பதற்கு அவர் விளக்கம் தருகிறார். சங்கப் பாடல்கள் எனப்படும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டுத்  பாடல்கள் பலவும் சுட்டி நிற்கும் சமுதாயம் மேற்படி வரலாற்று நிலை சார்ந்ததே என்பது அவரது கணிப்பாகும்.

"புராதன வாழ்க்கையிலே முதலில் தோன்றிய குலங்கள், அவற்றின் விரிவாக அமைந்த குடிகள், அத்தகைய குடிகள் சில சேர்ந்த இணைப்புக் குலங்கள் ஆகியன முட்டி மோதிப் பொருந்திய நிலையிலே, அளவு மாறுபாடு குணமாறுபாடாக உருமாறியதே சங்ககால அரசியல் நிறுவனமாகும்" எனச் சங்ககாலத்தின் அரசு உருவாக்க சூழலின் வரலாற்றை அவர் சுட்டியுணர்த்துகிறார்.

தமிழர் சமுதாயம் தனது தொன்மையான இனக்குழு-பழம்பொதுமை நிலையி லிருந்து, நிலவுடைமையை நோக்கி மாற்றமடைந்து கொண்டிருந்த வரலாற்றுச் செல்நெறியின் ஒரு கட்டமாகவே, சங்க கால வரலாற்றுச் சூழலை அவர்தரிசிப்பது தெரிகிறது. இவ்வாறான தரிசனத்தளத்தில் நின்றே அவர் தமது Tamil Heroic Poetry (1966) என்ற முனைவர் பட்டஆய்வை மேற்கொண்டு நிறைவு செய்தார் என்பது இத்தொடர்பில் நமது கவனத்துக்குரியது.

அவர் இப்பார்வையை முன்வைத்த காலப்பகுதியில் - 1960கள் வரையான காலப்பகுதியில் - சங்ககாலம் என்பது தமிழர் பிறபண்பாட்டுக் கலப்புக்குட்படாது. தம் தனித்தன்மையைப் பேணி நின்ற காலப்பகுதி என்பதும், அக்காலப் பகுதியில் வீரம், கற்பு, அறம் ஆகிய பண்புகளில் தமிழர் மேலோங்கி நின்றனர் என்பதுமான கருத்து நிலைகளே பெருவழக்காகத்திகழ்ந்தன.இவ்வகையில் சங்ககாலம் தமிழர் வரலாற்றில் பொற்காலம்' என்ற எண்ணம் அன்று தமிழியலாரிடையே பரவலாக நிலவி வந்தது.இந்தப்பொற்காலமாயத்திரையைக் கைலாசபதியின் மேற்படி பார்வை கிழித்தெறிந்தது. உடைமையுணர்வு சார்ந்த போராட்டங்களால் தமிழரின் பழம் பொதுமைச் சமூகத்தில் பண்புநிலை மாற்றங்கள் நிகழ்ந்த காலமாக - ஒரு நிலைமாறு காலமாக - அப்பார்வை அக்காலப் பகுதியைக் காட்டி நின்றது. இப்பண்புநிலை மாற்றம் அவற்றின் இயங்குநிலை என்பன பற்றி கைலாசபதி அவர்களின் விளக்கம் வருமாறு :

"முன்னர் குழுவுக்கும் கணத்துக்கும் பொதுவாக இருந்த 'சகோதரத்துவ ஒழுகலாறு இப்பொழுது தலைநிலையெய்திய' பெருஞ்செய்யாடவர் ஒழுகலாறாக மாறியது. இரத்த உறவுகள் மாறி அல்லது வலுக்குறைந்து பொருளுறவுகள் தோன்றின. அக்கால கட்டத்திலே தவிர்க்க முடியாத நடைமுறை விதிகளாக அமைந்தனவே நாண், பழி, அறம் முதலியன.அக்காலத்திலே புலவராக மட்டுமன்றி அறிவராகவும் வரலாற்றாசிரியராகவும் போதனாசிரியராகவும் விளங்கிய கவிஞர்கள் இந்த நடைமுறை விதிகளைப் அறிமுகப்படுத்தினர். சமுதாயம் முழுவதற்கும் பொதுவானவையல்ல இவ்விதிகள்.தலைமக்களுக்கிடையேயுள்ள "கண்ணியமான" உடன்பாடே இவ்விதிகளின் அடிப்படை எனலாம்.

இவ்வாறு சங்ககாலச் சமுதாய பண்பாட்டு வரலாற்றைக் காட்டிய கைலாசபதியவர்கள் சங்க இலக்கியப் பரப்பில் பெரும்பாலான பாடல்கள் வாய் மொழிப் பாடல்களாக உருவானவை எனக் குறிப்பிடுவர். அவரது Tamil Heroic Poetry என்ற ஆய்வில் நிறுவப்பட்டுள்ள முக்கிய கருத்து நிலை இது.

'வாய்மொழி இலக்கியம்' என்பது, குறித்த ஒரு கால கட்டத்தில் குறித்த ஒரு புலவரால்திட்டப்பாங்குடன்எழுதப்படாமல், மக்களின்அனுபவங்களினூடாக உருவாகி, செவி வழியாகப் பேணப்பட்டு நிற்பவற்றைச் சுட்டி நிற்பது. குறித்த சிலவகை அடிக்கருத்துக்கள் (Themes), சூழ்நிலைசார் கூறுகள் (Situational Aspects), வாக்கியத் தொடர்கள், தொடர்களின் பகுதிகள் என்பன மீண்டும் மீண்டும் பயின்று வருவது வாய்மொழி மரபின் முக்கிய பொதுப்பண்பாகும். சங்க இலக்கியப் பாடல்களில்இவ்வாறான பொதுப்பண்புகள் பயின்றுள்ளமை கைலாசபதியவர்களின் மேற்படி கருதுகோளுக்குஅடிப்படையாயிற்று. அவர் இப்பாடல்களை, ஏறத்தாழ இவ்வகைப் பண்புகளைக் கொண்ட கிரேக்க கெல்டிக் பிரித்தெடுத்துவிட்டு அவர் படைப்பை ஆய்வது கைலாசபதி அவர்களுக்கு உடன்பாடில்லை. அவரது ஆய்வுப்பரப்பிலே மக்கள் சீனம் தொடர்பான நூல், மற்றும் சில கட்டுரைகள் தவிர, ஏனைய மிகப்பெரும் பகுதி தமிழ் ஆய்வியல் சார்ந்ததாகும். தமிழியல் ஆய்வுப் பரப்பில் அவர் பல்வேறு விசயங்களைப் பற்றியும் பேசியிருப்பினும் அவையனைத்தி னூடாகவும் அவர் கவனம் செலுத்தி நின்ற துறைகளை இருவகைப்படுத்தலாம். ஒன்று. தமிழர் சமுதாயத்துக்கும் அதன் கலை இலக்கியங்களுக்கும் உள்ள உறவுநிலை தொடர்பான ஆய்வியல். இன்னொன்று. திறனாய்வியல். அவரது தமிழ் ஆய்வியற் செயற்பாடுகள் அனைத்திலும் இந்த இரு துறைகள் சார்ந்த உணர்வோட்டங்களே உள் நின்று இயக்கின. இந்த உணர்வோட்டங்களை வழிநடத்தி நின்றது அவரது மார்க்சிய தத்துவ அடிப்படையிலான சமூகப் பார்வையாகும்.

நாம் வாழும் இந்த உலகைப் புறநிலை மெய்ம்மையாக ஏற்றுக்கொள்வது மார்க்சியத் தத்துவம், அது உலக இயக்கம், சமுதாயக் கட்டமைப்புக்கள் என்பவற்றுக்கான அடிப்படைக் கூறுகளை அறிவியலடிப்படையில் தெளிவாக விளக்கி நிற்பது. இத்தெளிவினூடாக, சமூக நலனுக்கு ஏற்றவகையில் உலகை - சமுதாயத்தை - மாற்றியமைப்பதற்கு மார்க்சியம் வழி காட்டுகிறது. சமுதாயக் கட்டமைப்பின் அடித்தளங்களாக உற்பத்தியுறவுநிலை, பொருளியல் அடிப்படைகள் என்பவற்றைச் சுட்டும் மார்க்சியத் தத்துவம், கலை இலக்கியம் முதலிய பண்பாட்டுக் கூறுகளை மேற்கட்டுமானங்களாகக் காண்பது. அடித்தளங்களில் நிகழும் மாற்றம் மேற்படி மேற்கட்டுமானங்களிலும் மாற்றத்தை விளைவிக்கும் என்பது மார்க்சியத்தின் பொது விதியாகும்.

இத்தத்துவ அடிப்படையிலான ஆய்வியல் அணுகுமுறை இயங்கியல் எனப்படும். எந்த ஒரு பொருளையும் தற்சார்பு இன்றிப் புறநிலையாக அணுகுதல், அதனைச் சமுதாய வரலாற்றுச் சூழலில் பொருத்தி நோக்குதல், அதன் உள்ளார்ந்த முரண்நிலைக் கூறுகளையும் அவற்றின் இயக்கத்தால் நிகழும் பண்புநிலை மாற்றங்களையும் தெளிந்து கொள்ளுதல் என்பன் இயங்கியல் அணுகுமுறையின் பொது விதிகளாகும்.

கைலாசபதியவர்கள் மார்க்சியம் பற்றியும் அதன் இயங்கியல் அணுகுமுறை பற்றியும் நன்கு தெரிந்து தெளிந்திருந்தார். அவற்றினூடாகத் தமிழர் சமுதாயத்தின் வரலாற்றியக்கத்தை இனங் காண்பதில் உணர்வு பூர்வமாக ஈடுபட்டார்; அவ்வாறான வரலாற்றியக்கத்தில் கலை இலக்கியம் என்பன முகிழ்ப்பதற்கு அடிநிலைகளாகத் திகழ்ந்திருக்கக்கூடிய உணர்வு நிலைகளின் வர்க்கச் சார்புகளைக் கண்டு காட்ட விழைந்தார். இவை தமிழர் சமுதாயத்துக்கும் அதன் கலை இலக்கியம் என்பவற்றுக்கு மிடையிலான உறவுநிலைகள் பற்றி விளக்கும் ஆய்வு முயற்சிகளாகக் செயல்வடிவம் எய்தின.

இலக்கியத் திறனாய்வு என்ற வகையிலே, அவர் தமது கால கட்டத்தில் முனைப்பாகப் புலப்பட்டு நின்ற அழகியல் அணுகுமுறைகளை மறுதலித்து 'சமூகப் பயன்பாடு என்ற அம்சத்தை முதன்மைப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டார்.அவ்வகையில்உருவத்தைவிட உள்ளடக்கமே முக்கியம் என்பதை வலியுறுத்தினார். இந்த அடிப்படையில் படைப்புக்களின் தரம், படைப்பாளிகளின் ஆற்றல், அணுகுமுறை என்பவற்றைச் செயல்முறைத் திறனாய்வுக்கு உட்படுத்தியதோடு மட்டுமன்றி, அனைத்துலக மட்டத்திலான திறனாய்வுச் சிந்தனைகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்து தமிழ்மரபுடன் பொருத்தி நோக்கும்செயற்பாட்டையும்மேற்கொண்டார். இவ்வகை முயற்சிகளினூடாக தமிழில் நவீன திறனாய்வியல் வளர்ச்சிக்குப் பாதை சமைத்த ஒருவராக அமைந்தார்.

கலாநிதி கைலாசபதி அவர்களின் வருகையின் மூலம் தமிழ் இலக்கிய ஆய்வில் மார்க்சீய நெறி உறுதிப்பட்டது. தொடக்கத்தில் தமிழாய்வுத் துறையில் மார்க்சீயம் மரியாதை பெறவில்லை. கைலாசபதி அவர்கள் இந்த மரியாதையைமார்க்சீயத்துக்குஏற்படுத்தினார். பேராசிரியர் சிவத்தம்பி, நா. வானமாமலை ஆகியவர்கள் மார்க்சீய நெறியை மேலும் வளப்படுத்தினர். இன்று தமிழாய்வுத் துறையில் மார்க்சீயமும் ஒரு ஆய்வு நெறி என்ற முறையில் கேள்விக்கு இடமற்றதாகத் திகழ்கிறது. தொடக்கத்தில் தமிழ் நெறிக்கும், மார்க்சீய நெறிக்கும் இருப்பதாக கருதப்பட்ட முரண்நிலை இன்று இல்லை.

1972-ல் வெளிவந்த கைலாசபதி அவர்களின் "அடியும் முடியும்" என்ற தமிழிலக்கிய ஆய்வு நூல் கைலாசபதி அவர்களின் ஆய்வு நூல்களில் குறிப்பிடத்தக்கதாகத் திகழ்கிறது. சிவபெருமானின்அடியையும் முடியையும் தேடிச்சென்ற திருமாலும், பிரம்மனும் இறுதியில் தோற்று களைத்துப் போயினர் என்பது புராணக்கதை. தமிழின் மேன்மை பற்றிப் பேசிய தமிழறிஞர்கள் தமிழின் தொன்மையை(Myth) அளந்தறிய முடியாதென்று பெருமிதம் கொண்டனர். "கல் தோன்றி மண் தோன்றாக்காலத்து வாளொடு முன்தோன்றி மூத்த குடி" என்று கவிதை செப்பினர். கைலாசபதி இந்தக் கூற்றை ஆய்வு செய்து "அடியும் முடியும்" என்ற தொகுப்பிலுள்ள கட்டுரையில் மறுக்கிறார்.

உயிர்களின் பரிணாம வளர்ச்சிபற்றிய அறிவியல் ஆய்வுகள் மனிதனின் தோற்றக்காலத்தை திட்பமாக வரையறை செய்துள்ளன. புவியியல் ஆய்வுகள் சூரியனில் இருந்து பிரிந்து உலகம் உருவான காலத்தையும் கணிக்கின்றன. இம்முறையில் தமிழின் தொன்மையும் ஒரு காலவரையறைக்கு உட்பட்டதுதான் என்கிறார் கைலாசபதி "அடியும் முடியும்" என்ற கட்டுரைத் தொகுப்பில் இரண்டாவது கட்டுரை தமிழ் இலக்கியங்களில் கடவுள் வாழ்த்து இடம் பெற்றதைப்பற்றிய ஆய்வுக்கட்டுரை. தொடக்கத்தில்கடவுள்வாழ்த்து இடம் பெறவில்லை.சங்கஇலக்கியத்தொகுப்பில் கடவுள் வாழ்த்து இடம்பெற்றது. அதன் பின்னர் காலந்தோறும் புதிய கடவுள்கள் தோன்றினர். சில கடவுள்கள் மறைந்தனர். இத்தகைய இந்தக் கடவுளர்கள் நூல் முகப்பில் வாழ்த்தாக இடம்பெற்றனர். விரிவான முறையில் இலக்கியங்களில் கடவுள் வாழ்த்து இடம்பெற்றதை கைலாசபதி அவர்கள் ஆய்வு செய்கிறார். 20-ம் நூற்றாண்டை நெருங்கும்பொழுது தமிழ் மொழி கடவுளாக மதிக்கப்பட்டு வாழ்த்துச் செய்யுளாக இடம்பெற்றது. தமிழின்மீது பக்தியுணர்வு பரவியது. இடைக்காலத்து கடவுள் வாழ்த்துப் பாடல்களில் தெய்வம்பற்றிய ஐயம் இடம்பெற்றதையும் கைலாசபதி குறிப்பிடுகிறார்.

வடமொழிக்கும், தென்மொழிக்கும் வரலாற்றுக் காலம் முழுவதும் இருந்து வரும் பகைமையை விரிவாக எடுத்துக்காட்டுகிறார். பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் தமிழ் வாழ்த்து பாடலில் ஆரியத்துக்கு கடுமையான எதிர்ப்பு இடம்பெற்றதை குறிப்பிடுகிறார். இந்தப்போக்கிற்கு மூலகாரணமாக டாக்டர் கால்டுவெல்லின் ஆய்வை குறிப்பிடுவதோடு அவர் நிற்கவில்லை. இதன் வரலாற்றை முற்காலத்திற்கும் கொண்டு செல்கிறார். பிரித்தானிய அரசின் இனக்கொள்கையைக் குறிப்பிடுகிறார். இந்தியர்களைப் பிளவுபடுத்தி தம் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு அவர்கள் இனக்கொள்கையைப் பயன்படுத்தியதைச் சுட்டிக்காட்டுகிறார்.

அடியும் முடியும் என்ற இந்தத் தொகுப்பு நூலில் கடவுள் ஆயினும் சரி, வேறு எத்தகைய மொழி அல்லது இலக்கியப் போக்காயினும் சரி - எல்லாமே வரலாற்றில் குறிப்பிட்ட சூழலில் தோன்றுகின்றன என்ற மார்க்சீயக் கருத்தை ஆய்வு நெறியாக முன்வைக்கிறார். அடியையும் முடியையும் வரலாற்றில்தான் தேடிக் கண்டறிய முடியும். வரலாற்றுக்கு வெளியில் வைத்து இலக்கியம் முதலிய ஆய்வைச் செய்யமுடியாது. கடவுளும், கடவுட்கருத்தும் வரலாற்றுக்குக் கட்டுப்பட்டதுதான் என்றமுறையில் இவரது ஆய்வு தொடர்கிறது. தமிழ் இலக்கிய ஆய்வில் வரலாற்றியல் நெறியை இம்முறையில் அழுத்தமாக இந்த நூல் மூலம் கைலாசபதி அவர்கள் பதிக்கிறார் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

இன்று இந்த நெறி இயல்பானதென்று தோன்றினாலும் 60-களின் இறுதியில் அல்லது 70-களின் தொடக்கத்தில் இந்த ஆய்வு நெறியின் புதுமையை அன்றிருந்தவர்கள் நன்றாக உணர்ந்திருக்க முடியும்.

"அகலிகை" கதையின் அடிமுடி ஆய்வு அடுத்த கட்டுரையில் தொடர்கிறது. வேதங்களிலேயே அகலிகை பற்றிய குறிப்பு இடம்பெற்றாலும், அகலிகை கதைக்கு ஒரு முழு வடிவம் தந்தவர் வால்மீகி தமிழ் இலக்கியத்தை பொறுத்தவரை அகலிகை கதையை கம்பர் புதுமைப்படுத்தினார். நம் காலத்தில் வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார், புதுமைப்பித்தன் முதலியவர்களும் அகலிகை கதைக்கு புதுப்பொருள் வழங்கினர். கடைசியாக முருகையன் கதையையும் கைலாசபதி குறிப்பிடுகிறார்.

கம்பர் முதலியவர்கள் அகலிகையின் உளவியலுக்கு அழுத்தந் தந்தனர் என்பதற்கு அழுத்தம் தருகிறார் கைலாசபதி, சமூகச் சூழலை கவனத்திற் கொள்ளாமல் உளவியல் போக்குக்கு அழுத்தம் தருவதிலுள்ள குறைபாட்டை சுட்டிக்காட்டுகிறார். இதன் காரணமாக பெண்ணின் கற்பு என்பதே படைப்பாளிகளின்பார்வையில் முதன்மை பெறுகிறது. வரலாற்றில் பெண் எவ்வாறு தன் தலைமை நிலையில் இருந்து தாழ்த்தப்பட்டாள் என்பதை எங்கெல்ஸின் மேற்கோள்கள் மூலம் எடுத்துரைக்கிறார் கைலாசபதி,

இதன் மூலம் தனியுடைமை, அரசு ஆகியவற்றின் இயக்கத்திற்கும் இதன் மூலம் ஆணாதிக்கம் முன்னுக்கு வந்ததையும் இத்தகையதொரு சூழலில்தான் பெண் அவளது கற்பு நெறிக்காக - கற்புநெறி தவறியவள் என்ற முறையில் கடுமையான விசாரணைக்கு உள்ளாக்கப்படுகிறாள். விந்தனின் 'பாலும் பாவையும் என்ற நாவலை இங்கு சிறப்பாக மேற்கோள் காட்டுகிறார் கைலாசபதி, கதைத் தலைவி கன்னிப் பருவத்தில் கற்பை இழந்தவள் என்பதற்காக அவளை காதலன் புறக்கணிக்கிறான். அகலிகை புராணக் கதையில் வருவதைப் போல இந்த நாவலிலும் ஒரு தசரத குமாரன் வருகிறான். புராணக் கதையில் அகலிகையின் சாபம் நீக்கியவன், இன்று யதார்த்த வாழ்வில் காதலனால் கைவிடப்பட்ட அகலிகையை மணந்து கொள்வானா, சாபம் நீக்கிய ராமனும் சரி, இன்றைய தசரத குமார்னும் சரி அகலிகையை மணந்து கொள்ளமாட்டான் என்று யதார்த்தக் கதை தருகிறார் விந்தன். புராணக் கதையை இவரும் புரட்டிப் போடுகிறார். முன்னைய படைப்பாளிகள் போல அகலிகை கதையை விந்தன் கையாளவில்லை. விந்தனின் படைப்பில் ஒரு புதிய கோணம் வெளிப்படுகிறது. விந்தனின் கதைத்தலைவி இறுதியில் சாவைத்தான் எதிர்கொள்கிறாள் என்றாலும் சமூகத்தின் முன்னிலையில் ஒரு அறைகூவல் போல அவள் தோற்றம் தருகிறாள். கட்டுரையை முடிக்கும்பொழுது நாம் வியப்பு அடையும் முறையில் ந. சி. கந்தையாபிள்ளையை மேற்கோள் காட்டுகிறார். பெண் போராடித்தான் சமூகத்தில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்ற முறையில் கந்தையாபிள்ளை எழுதியிருக்கிறார்.

சிலப்பதிகாரம்பற்றி ஆய்வது அடுத்த கட்டுரை. இளங்கோவடிகளின் சிலப்பதிகாரக் கதை பெரும்பகுதி கற்பனைக்கதை. தமிழகத்தில் திராவிட இயக்கத்தவர் கொண்டாடியது போல சிலம்பு வரலாற்று நிகழ்ச்சி இல்லை. நற்றிணையில்கூறப்படும் திருமாவுண்ணி, புறநானூற்றில் பேகன் மனைவி ஆகியவர்களோடு சிலம்பின் கண்ணகி கதையை பொருத்தமாகவே தொடர்பு படுத்துகிறார். வரலாற்றுச் சூழலில் மக்களின் உணர்வு அழுத்தங்களோடு வளர்ந்த கதை சிலம்பின் கதை. சேரன் செங்குட்டுவன் வரலாற்றுப் பாத்திரமல்ல.

சிலம்பின் அடியையும், முடியையும் இவ்வாறு பழங்காலச் சூழலுக்கும், நம் காலத்திற்கும் நகர்த்துகிறார் கைலாசபதி, நிகழ்காலத்தின் தேவைகள் முற்காலத்து வரலாற்றைக் கட்டமைக்கிறது என்ற உண்மையைகைலாசபதி மறுக்கவில்லை. எனினும் நம்காலத்திற்குத் தேவையான பொருளைசிலம்பிலிருந்துகண்டெடுப்பதை கைலாசபதி ஒப்புக்கொள்ளவில்லை. கண்ணகி செய்தபுரட்சி, மக்காளாட்சிக் காலத்தில் மட்டுமே கருத்தியல் வடிவம் கொள்ளத்தக்க புரட்சி. பழங்கால நிலைமையில் இத்தகைய புரட்சி சாத்தியமில்லை. டாக்டர் மு.. முதலி யவர்கள் இளங்கோவின் ஊழ் நம்பிக்கையை ஒதுக்கி வைத்து சிலம்பை ஆராய்கின்றனர். இளங்கோவின் படைப்பில் இன்றியமையாத அங்கம் அவரது ஊழ்கோட்பாடு. இளங்கோ விலிருந்து அவரது முக்கியக் கோட்பாடு வெளிப்பட்ட புரட்சி உணர்வையும், கைலாசபதி ஒப்புக்கொள்கிறார். அதே சமயம், இலக்கியம் என்பது பிரதிபலிப்பு என்ற மார்க்சிய கொள்கையைத்தான் வரித்துக்கொள்கிறார். இதனடிப்படையில் மக்களாட்சி யுகத்தில் வெளிப்படுவதாகிய புரட்சி உணர்வு நிலமான்ய சமூகத்தில் வெளிப்படமுடியாது என்று துணிகிறார். இலக்கியம் என்பது பிரதிபலிப்பு என்பதை நாம் மறுக்கவில்லை. பிரதிபலிப்பு என்பதினுள்ளும் இரு வேறு அம்சங்கள் உள்ளன. இவற்றை PASSIVE REFLECTION, ACTIVE REFLECTION கூறி இருக்கிறார். இம்முறையில் நிகழும் சூழலுக்கு எதிர்வினை என்ற முறையில் இலக்கியத்திற்கு பொருள் காணமுடியும். கண்ணகி செய்த புரட்சி என்பது அக்கால சூழலில் ஒருகற்பனை என்பதில் ஐயமில்லை. எனினும்மக்களின் உணர்வை ஆற்றலோடு வெளிப்படுத்தக் கூடிய கற்பனை, கழிந்து போன ஆதிபொதுமைச் சமூகத்தின் பொதுமை உணர்வை இளங்கோ முதலிய படைப்பாளிகள் இன்னும் தமக்கு உட்கிடையாக கொண்டிருக்கின்றனர் என்பதையும் இந்த கற்பனை வழியே நாம் புரிந்து கொள்ளமுடியும்.

ஆரிய திராவிட முரண் என்பது பழங்காலம் முதற்கொண்டு இன்றுவரை மறுக்க கூடியதாக இல்லை. இந்த சூழலில் செங்குட்டுவனின் வடநாட்டு வெற்றி முதலிய கற்பனைகளையும் நாம் புரிந்து கொள்ளமுடியும். இந்திய தேசீயம் என்ற ஆதிக்க கருத்தியல் தமிழ் தேசீயத்தை அடக்க அல்லது ஒதுக்க நிலையில் தமிழின் தொன்மை பற்றிய பேருணர்வுகள் எழத்தான் செய்யும். இயற்பியல் ஆய்வில் அறிவியலின் செயற்பாடும், சமூகவியல் ஆய்வில் நோக்கும் ஒன்றாக இருக்கமுடியாது. எத்தகைய கறாரான அறிவியலின் கருத்தியலைவெளியேற்றிவிட முடியாது. 'அகலிகைபற்றிய ஆய்விலும், 'நந்தன் பற்றிய ஆய்விலும் படைப்பாளிகளுக்குள் அழுத்தம் பெற்றிருந்த உளவியல் பார்வையை கைலாசபதி நுட்பமாக சுட்டிக்காட்டுகிறார்.

உளவியல் ஆய்வுபற்றி கைலாசபதி அவர்களிடம் நாம் காண்பது எதிர்மறைப் போக்குஅரசியலுக்கும்,சமூக நோக்கிலான விமர்சனத்திற்கும் மார்க்சியர் அழுத்தம் தந்த அந்த கால சூழலில் உளவியல் நோக்கின்ஆக்கப்பண்புபுறக்கணிக்கப்பட்டது என்பது உண்மை. மெளனியை மார்க்சியர்புறக்கணிப்பதுஇக்காரணத்தினால்தான். பொதுவாக இலக்கியத்தின் தனித் தன்மையை மறுத்த நிலையில் அரசியலுக்கு மார்க்சியர் முதன்மை தந்தனர். கலைபற்றியும் அழகியல் பற்றியும் மார்க்சியரிடம் வளமான பார்வை விரிவுபெறாமல் இருந்தது.

ஆண் ஆதிக்க சமூக சூழலிலும், கம்பர் முதலிய அனைத்து படைப்பாளிகளும் அகலிகையின்பால் சார்புநிலை எடுத்தே பேசினர். கெளதமனை குற்றவாளி ஆக்கியும் சிலர் சித்திரித்தனர். படைப்பாளிகளுக்குள் ஆண் ஆதிக்கம்என்ற கூற்றும் இங்கில்லை. நந்தனைப் பொறுத்த வரையும் படைப்பாளியின் அணுகுமுறைஎதிர்நிலைக்குச்செல்லவில்லை. அகலிகையோடும், நந்தனோடும் அவர்கள் ஒத்து பேசியபொழுது அவர்களின் உளவியல், துயரம் முதலியவற்றையே வெளிப்படுத்தினர். இலக்கியப் படைப்பென்பது வரலாற்றின் முரண்பட்ட பல்வேறு சூழல்களையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம்எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. இப்படி எதிர்பார்ப்பது ஓர் வகையில் இலட்சிய நோக்கு. இலக்கிய ஆக்கத்தினுள் படைப்பாளிக்கு இருக்கும் பங்கைப் போலவே திறனாளிக்கும் பங்குண்டு. எத்தகைய சூழலில் இந்தப் படைப்பு தோன்றியது என்றெல்லாம் வரலாற்றுச் சூழல் மற்றும் முரண்பாடுகளை திறனாளி விளக்குவதன் மூலம்படைப்பைசெழுமைப்படுத்தமுடியும்.

மேலும் ஒன்று, அகலிகை அல்லது நந்தனின் உளவியலை அகழ்ந்து ஆழ்ந்து செல்லும்முறையில் படைப்பாளியின் இயக்கம் நடைபெறுவதை நாம் புரிந்துகொள்ள முடியும். முருகையனின் நந்தன்,தனக்குள்தானேஎரிமூட்டிக்கொண்டு, அதிலே வெந்து, பொன்போல் ஒளி பெற்று வெளிப்பட்டாரென முருகையன் புனைந்துரைக்கிறார். உண்மையில் புறச்சூழல் கடுமையாக இருக்கும்போது அகத்தினுள் ஆழ்ந்து செல்வதைத் தவிர துன்புற்ற ஒரு மனிதனுக்கு வேறு நெறியில்லை. அதே சமயம் அகத்தினுள் தொடர்ந்து ஆழ்ந்து செல்பவர் இறுதியில் புறத்தினுள் வெளிப்படுவர். அகத்தினுள் ஆழ்ந்து சென்று அங்கே பிரம்மத்தைக் கண்ட சங்கரர் அதனோடு தங்க இயலாமல் வெளிவந்து சவுந்தரிய லாகிரி பாடினார். அத்வைதத்தினுள் மூழ்கி எழுந்த விவேகானந்தர் சோசலிசத்துள் வெளிப்பட்டார். அகத்தினுள் ஆழ்ந்து சென்று பிகாசோ முதலியவர்கள்நவீனஒவியத்தின்கர்த்தாக்கள் ஆயினர். ஆகவே அகத்தினுள் செலவை மார்க்சியர் எதிர்மறை நோக்கில் காணவேண்டியதில்லை.

வரலாறு என்பது வர்க்கப் போராட்டம் என்று மார்க்சியர் கண்டதை ஒரு வகையில் கட்டமைப்பு என்றே பொருள்படுத்துவது பொருந்தும். எனினும், கட்டமைப்பு என்பதன் கூறுகள் விரிந்து செல்கின்றன.

நிகழ்கால நோக்கிலிருந்துதான் தொன்மையான வரலாறு பார்க்கப்படுகிறது, அல்லது. கட்டமைக்கப்படுகிறது என்ற கருத்தை கைலாசபதி அவர்கள் புரிந்து கொண்டிருந்தார் எனினும், அதை முற்றாக ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் மொழிபற்றிய பெருமித உணர்வு தமிழின் தொன்மை, தமிழ் இலக்கியங்களின் மேன்மை பற்றிய உணர்வு முதலியவற்றை திராவிட இயக்கத்தினர் போற்றியதை மார்க்சியர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் காரணமாக தமிழின் தொன்மை, தமிழ் நூல்களின் காலம் முதலியவை பற்றி அறிவியல் முறையிலான வரலாற்றாய்வில் மார்க்சியர் கருத்துச் செலுத்தினர். ஆரியர் திராவிடர்இனப்போராட்டம்மார்க்சியருக்கு உடன்பாடில்லை. சிலப்பதிகாரத்தினுள் தமிழனின் வீரம் முதலியனவற்றை திராவிட இயக்கத்தினர் கண்டதை மார்க்சியர் மறுத்தனர். இவ்வாறெல்லாம் தம் கால அரசியல் தேவைகளை ஒட்டி முன்னைய வரலாற்றுக்கு திராவிட இயக்கத்தார் கண்ட பொருள் கைலாசபதி அவர்களுக்கு உடன்பாடில்லை. வரலாற்றாய்வை அறிவியல் முறையில் கறாராக செய்ய வேண்டும் என்பது கைலாசபதி அவர்களின் கருத்து.

இத்தகைய இருவேறு ஆய்வு முறைகளுக்கு அடியில் இருந்தது அரசியல்என்பதை நம்மால் புரிந்து கொள்ளமுடியும். தமிழகத்தின் திராவிட இயக்கத்தினர் வளர்ச்சியை மார்க்சியரால் செரித்துக்கொள்ள இயலவில்லை. இலங்கையில் தமிழரசுக் கட்சியை மார்க்சியர் ஏற்கவில்லை. திராவிட இயக்கத்தினர் இனம் என்று பேசியதை, ஐரோப்பியர் தம் அரசியல் தேவை கருதி முன்வைத்த மரபு இனம் (Race) என்று தமிழக சூழலில் மார்க்சியர் மதிப்பிட்டனர்.

ஒரு சிற்பத்தை படைக்கும் பொழுது, அந்த சிற்பம் சிற்பியை படைக்கிறது என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். தமிழ் மொழி என்பது கருவிதான் என்று அறிவியல் கூறும். இந்தக் கருவி, அதை நாம் உருவாக்கும் பொழுதே நம்மையும் படைக்கிறது என்று தமிழின் ஆக்கமறிந்தவர்கூறமுடியும்.

இலக்கிய வாசிப்பில் வாசகனின் பங்கு பற்றி, கைலாசபதி அவர்களுக்கு பெரும்பாலும் உடன்பாடில்லை. இன்றிலிருந்து வேறுபட்டதான முன்னைய வரலாறு என்று ஒன்று உறுதியாக உண்டு. அதைக் கண்டறிவதுதான் வரலாறு மற்றும் இலக்கிய ஆய்வு என்று கைலாசபதி அவர்கள் உறுதியாக நம்பினார். இளங்கோவின் தத்துவத்தை புறக்கணித்துவிட்டு சிலப்பதிகார ஆய்வு செய்ய முடியாதென்றார். ஒருவேளை வாசகனின் சுதந்திரம் என்பதை கைலாசபதி அவர்கள் ஏற்பார் என்றாலும், அந்தச் சுதந்திரம் முற்றானதா என்ற கேள்வியை அவர் நியாயமாகவே கேட்டிருப்பார். மொழி பற்றிய அமைப்பியலாளரின் பார்வையையும் இதே முறையில் அவர் கேள்விக்கு உட்படுத்தியிருப்பார். யதார்த்தம் என்பது முற்றிலும் புனைவுதானா என்றும் அவர் கேட்டிருப்பார். சமூக மாற்றம் என்ற அரசியல், மார்க்சியரின் பார்வையை அக்கால சூழலில், கைலாசபதி அவர்களைப் போன்ற பேரறிஞர்கள் எத்தகைய வரையறைகளுக்குள்ளிருந்து செயல்பட்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளும் பொழுது அவர்களை இன்றும் நாம் போற்றி மதிக்கத்தான் செய்வோம். தமிழ் இலக்கிய ஆய்வில் ஒரு பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியவர் கைலாசபதி என்ற முறையில் அவரை என்றும் நாம் நினைவில் கொள்வோம்.

குறிப்பு;-இந்தக்கட்டுரை க.கைலாசபதியின் திறனாய்வு நூலின் மூலத்தின் அடிபடையில் எனது தொகுப்பே. உள்ள குறைகளுக்கு நானே பொருப்பு-சிபி

+++++++++++++++++++++++++++++++++++++++++++

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்