லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள். - ஸ்டாலின்.

 ஒரு அரசியல் கருத்துக் கண்ணோட்டம் என்ற முறையில் டிராட்ஸ்கிய வாதம் தோல்வியுற்றதற்கும், லெனினியம் பாதுகாக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்ட தற்கும் தோழர் ஸ்டாலின் எழுதிய "லெனினிசத்தின் அடிப்படைகள்" என்ற நூல் பேருதவி செய்தது.

இது 1924 ல் வெளியிடப்பட்டது. லெனினியத்திற்கு மிகவும் திறமையான முறையில் விரிவுரை செய்து லெனினியத்திற்கு ஆதரவாக வலுவான ஆதாரங்களை இந்த நூல் திரட்டிக்கொடுத்தது.

உலகெங்கும் போல்ஷ்விக்குகள் கையில் சக்தி மிகுந்த மார்க்சிய லெனினிய ஆயுதமாக இருந்தது, இன்றைக்கும் இருக்கிறது. இந்த நூல் 1977ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தமிழில் சென்னை புக் ஹவுஸ் (பி) லின் வெளியீட்டாளரால் வெளியிடப்பட்டது.

லெனினியத்தின் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் தற்காலத்தில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வரும் சூழலில் இந்த நூலில் ஸ்டாலினால் கூறப்பட்டவை வரும்கால இளைய சமூகத்தினருக்கு லெனினை மீண்டும் அறிமுகம் செய்து வைக்கும் முயற்சியாக இந்த கட்டுரைகளை தொடர் கட்டுரையாக இலக்கு கொண்டுவருகிறது. இன்றைய இளைஞர்கள் ஒவ்வொரு வரும் ஸ்டாலினையும் லெனினையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

இந்த மாபெரும் தலைவர்களையும் அவர்களது கொள்கைகளையும் நாம் புரிந்து கொள்வதன் மூலமே தற்காலத்தில் நம்மை ஏய்த்து அரசியல் நடத்தும் பிற்போக்கு அரசியல்வாதிகளை இனம் கண்டு அவர்களைப் புறக்கணித்து நாம் லெனினிய வழியில் உழைக்கும் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் வெற்றிகரமாக நாம் பயணிக்க முடியும்.

தோழர் ஸ்டாலின் எழுதிய சிறப்புப் பெற்ற நூல்களில் லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள் என்ற நூலும் ஒன்றாகும். 1924 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் சுவர்தலோவ் பல்கலைகழகத்தில் ஆற்றிய சொற்பொழிவு, பின்னர் ஏப்ரல் மே மாதங்களில் பிராவ்தாவில் வெளியிடப்பட்டது. லெனினிசத்தைப் பற்றி ஸ்டாலின் நிகழ்த்திய சொற்பொழிவுகளும் எழுத்தோவியங்களும் லெனினிசத்தின் பிரச்சனைகள் என்ற நூல் வடிவில் வெளியிடப்பட்டது.

லெனினிசத்தின் பிரச்சனைகள் என்ற நூலின் எல்லாப் பதிப்புகளிலும் லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள் என்ற இச்சொற்பொழிவும் இணைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு 1947 ல் மாஸ்கோ பதிப்பாக வெளிவந்த, லெனினிசத்தின் பிரச்சனைகள் என்ற நூலின் முதல்பதிப்பிலிருந்தே இந்த கட்டுரைகள் உருவாக்கப்பட்டு தொடராக வெளிவருகிறது.

சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு கூறுவது போல,"சித்தாந்தரீதியில் டிராட்ஸ்கிய வாதத்தை தோற்கடித்து லெனினியத்தை பாதுகாப்பதில் தோழர் ஸ்டாலின் வரைந்த லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள் என்ற நூல் பெரும்பணியாற்றியது.அபாரமான திறமையுடன் லெனினியத்தை விளக்கி உரை செய்கிறது இந்த நூல். லெனினிசத்தை தத்துவத் துறையில் பலமாக உறுதிப்படுத்துவதாக இந்த நூல் விளங்குகிறது" "பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் விடுதலைக்காகப் போராடிவரும் மார்க்சிய-லெனினியவாதிகளுக்கும், வர்க்கப் போராட்டங்களில் உறுதியாகப் போராடிவரும் தொழிலாளிவர்க்க உணர்வு கொண்ட தோழர்களுக்கும் இந்தக் கட்டுரைகள் பெரிதும் பயனளிக்கும் என்று பார்வை நிலையிலிருந்து லெனினது உண்மையான மாணவரான தோழர் ஸ்டாலினது எழுத்துக்களை இலக்கு தொடராக கொண்டுவருகிறது".

சுவர்தலோவ் பல்கலை கழகத்தில் ஆற்றிய உரைகள்.

லெனினிசத்தின் அடிப்படையான அம்சங்களைப் பற்றிய விஷயங்கள் மிகப் பெரியது. அது முழுவதையும் விளக்க ஒரு முழு நூல் தேவைப்படும். உண்மையில் , பல நூல்கள் தேவைப்படும். எனவே இயல்பாக, லெனினியத்தை முழுமையாக வெளிக்கொணர்வதாக எனது உரை இருக்காது. இந்த சொற்பொழிவுகள் மூலம் எதையாவது சிறப்பாகச் சாதிக்க முடியும் என்றால், அது லெனினியத்தின் அடிப்படை அம்சங்களை சுருக்கமாகப் பொழிப்புரை செய்வது தவிர வேறொன்றுமில்லை. இருந்தபோதிலும் இந்தப் பொழிப்புரை பயன்தரும் என்றே நான் கருதுகிறேன். லெனினியத்தை வெற்றிகரமாகப் பயிலுவதற்குத் தேவைப்படுகிற முறையில் எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதைச் சுட்டிக்காட்டும் குறிப்புகளை நிர்ணயிப்பதற்கு இந்தப் பொழிப்புரை பயன்படும்.

லெனினியத்தின் அடிப்படை அம்சங்களை விரிவுரை செய்வது என்றால், லெனினுடைய உலக கண்ணோட்டத்திற்கு ஆதாரமாக இருந்த தத்துவத்தை விளக்குவது என்று அர்த்தமாகாது.

ஏனெனில், லெனினுடைய உலக கண்ணோட்டமும் லெனினியத்தின் அடிப்படைகளும் ஒரே எல்லைக்குள் இருப்பவை அல்ல. லெனின் ஒரு மார்க்சியர் எனவே அவரது உலக கண்ணோட்டத்திற்கு ஆதாரம் மார்க்சியம் ஆகும். அதனால் லெனினியத்தை விளக்குவதற்காக மார்க்சியத்தை விளக்குவதிலிருந்து ஆரம்பித்து வைக்க வேண்டும் என்று ஆகிவிடாது.

லெனினியத்தை விளக்குவது என்றால் மார்க்சியம் என்ற பொதுவான தத்துவ கருவூலத்திற்கு லெனினால் அளிக்கப்பட்ட புதிய, விசேஷமான தத்துவ செல்வத்தை விளக்குவது என்றாகும்.

லெனின் பெயரைத் தாங்கி நின்று விளங்கும் புதிய விசேஷமான அம்சங்களை விளக்குவது என்றாகும். இந்த பொருளில் மட்டுமே, என் உரைகளில் நான் லெனினியத்தின் அடிப்படையான அம்சங்களைப் பற்றி பேசப் போகிறேன். (ஸ்டாலின்)

ஆக, லெனினியம் என்றால் என்ன?

சிலர் சொல்கிறார்கள்: ரஷ்யாவில் நிலவிய குறிப்பிட்ட நிலைமைகளை யொட்டி நடைமுறைப்படுத்தப்பட்ட மார்க்சியமே லெனினியம் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த நிர்ணயிப்பில் பகுதியளவு உண்மை இருக்கிறது. எனினும் இது முழு உண்மையையும் சொல்லிவிடவில்லை. ரஷ்ய நிலைமைகளுக்குத் தகுந்தவாறு மார்க்சியத்தை லெனின்பயன்படுத்தினார் என்பது உண்மையே: அதுவும் மிகமிகச் சிறப்பாகப் பயன்படுத்தினார்.

ஆனால் ரஷ்ய நிலைமைகளில் கடைபிடிக்கப்பட்ட மார்க்சியமாக மட்டும் லெனினியம் இருந்திருந்தால், அது வெறும் தேசிய அம்சம் மட்டும் பொருந்தியதாக இருக்க வேண்டும்; ரஷ்ய தத்துவமாக மட்டும் இருக்க வேண்டும்; ஆனால் அது அப்படியில்லை என்பது நமக்குத் தெரியும். அது வெறும் ரஷ்யத் தத்துவம் மட்டுமல்ல. அது சர்வதேசங்களிலும் நிலவக்கூடிய நிலைமைகளுக்கு பொருந்துவதாக இருக்கிறது. அது சர்வதேசிய வளர்ச்சி முழுமையிலும் வேரூன்றியதாகும் என்பதை நாம் அறிவோம். அதனால்தான் அதை மேற்கண்டவாறு நிர்ணயிப்பு செய்வது பகுதிப் பார்வை என்று நான் கருதுகிறேன். (ஸ்டாலின்).

“லெனினிச கோட்பாடுகள் ரஷ்யப் புரட்சிக்காக உருவாக்கப்பட்ட கோட்பாடுகளாக சொல்வது தவறாகும் என்று இங்கே ஸ்டாலின் குறிப்பிடுகிறார். இடதுசாரிக் கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு என்ற நூலில் லெனின் ரஷ்யப் புரட்சியைப் பற்றிக் குறிப்பிடும்போது, ரஷ்யப் புரட்சியின் அனுபவமானது உலகம் முழுவதிலுமுள்ள நாடுகளுக்கும் பொருந்தும் என்பதை விளக்குவார். லெனின் மூன்றாவது அகிலத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட முன்னால் காலனி நாடுகளின் விடுதலைக்கான வழிகாட்டுதலை வழங்கியிருப்பார். அந்த வழிகாட்டுதலைப் பின்பற்றியே மாவோவின் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியானது சீனாவில் புரட்சி நடத்தி வெற்றிபெற்றது. ஆகவே லெனினியத் தத்துவமும், அதன் நடைமுறைக்கான வழிகாட்டுதலும் அனைத்து நாடுகளில் செயல்படும் கம்யூனிஸ்டுகள் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். யாராவது லெனினியத்தை ஏற்க மறுத்து புறக்கணிக்கிறார்கள் என்றால் அவர்கள் நிச்சயமாக மார்க்சியத்தையே புறக்கணிக்கிறார்கள் என்றே பொருளாகும். மார்க்சை சிலர் ஐரோப்பிய தத்துவவாதி என்கின்றனர். ஆனால் மார்க்ஸ் உழைப்பின் விடுதலையைப் பற்றி தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார். உழைப்பு என்பது ஐரோப்பாவிற்கு மட்டும் உரித்தானது அல்ல. உலகம் முழுவதற்கும் உரித்தானதுதான் உழைப்பு ஆகும். இந்த உழைப்புதான் மனிதகுலம் வாழ்வதற்கும் வளர்வதற்கும் அடிப்படையாகும். இத்தகைய உழைப்பு அடிமைப்பட்டிருக்கிறது என்றும் இது முதலாளிகளால் அடிமைப்படுத்தப் பட்டுள்ளது என்றும் இந்த உழைப்பை முதலாளிகளிடமிருந்து விடுதலை செய்வதன் மூலமே உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்ற தத்துவத்தைப் போதித்தவர் மார்க்ஸ். ஆகவே அவரது தத்துவம் உலக மக்களுக்கானதாகும். இதேபோலவே லெனினும் உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவே மார்க்சின் தத்துவத்தை வளர்த்தார். குறிப்பாக உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செய்யும் நிதிமூலதன ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டுவதற்கான தத்துவ அரசியல் வழிகாட்டியவர்தான் லெனின். 

லெனினை ரஷ்யாவோடு குறுக்கிக்கொண்டு இந்தியப் புரட்சிக்கு லெனின் தேவையில்லை என்ற கருத்தைப் பிரச்சாரம் செய்பவர்கள் சந்தேகமில்லாமல் முதலாளித்து சீர்திருத்தவாத சந்தர்ப்பவாதிகளே ஆவார்கள்.

ஏகாதிபத்தியங்களை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை மறுப்பவர்கள் லெனினை மறுக்கிறார்கள். ஆகவேதான் இவர்களை ஏகாதிபத்திய சார்பு சந்தர்ப்பவாதிகள் என்கிறோம்”.

1840 லிருந்து 1850 வரையில் மார்க்சியத்தின் பால் காணப்பட்ட புரட்சிகரமான அம்சங்களை திரும்ப உயிர்ப்பித்து இருப்பதே லெனினியம் என்று வேறு சிலர் குறிப்பிடுகிறார்கள். 1850 க்குப் பிறகு மார்க்சியம் தன் புரட்சிக் கொள்கைகளைக் கைவிட்டு விட்டு, மிதமானதாகவும் புரட்சிகரமான தன்மை அற்றதாகவும் ஆகிவிட்டதற்கு மாற்றாக, லெனினியம் மார்க்சியத்தின் புரட்சிகரக் கூறுகளை உயிர்ப்பித்ததாகக் குறிப்பிடுகிறார்கள். மார்க்சின் போதனைகளை இவ்விதம் மதிகெட்ட ரீதியில் கொச்சையான முறையில் இரண்டு பகுதிகளாக அதாவது, புரட்சிகரமான பகுதி என்றும், மிதமான பகுதி என்றும் பாகுபடுத்துவதை நாம் புறக்கணிக்கிறோம். இருந்த போதிலும் இந்த முற்றிலும் தகாத அதிருப்திகர மான நிர்ணயிப்பு கூட ஒரு துளி உண்மையை வெளியிடுகிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். என்ன அந்தத் துளி உண்மை? இரண்டாம் அகிலத்தைச் சேர்ந்த சந்தர்ப்பவாதிகளால் மறைக்கப்பட்ட மார்க்சியத்தின் புரட்சிகர சாராம்சத்தை லெனின் மீட்டெடுத்தார் என்பதே அந்தத் துளி உண்மையாகும். இது உண்மையில் துளி அளவிலானதே. முழு உண்மை என்னவெனில்,மார்க்சியத்தை மீட்டெடுத்ததோடு மட்டுமின்றி முதலாளியத்தின் புதிய நிலைமைகளுக்கும்பாட்டாளி வர்க்கப் போராட்ட நிலைமைகளுக்கும் ஏற்ற விதத்தில் மார்க்சியத்தை மேலும்வளர்த்து அது ஒரு படி முன்னோக்கிக் கொண்டு சென்றது. (ஸ்டாலின்)

"தற்போதும் மார்க்சியத்தை வளர்ப்பது என்ற பெயரில் பிராங்பாட்வாதிகள், அவர்களை சிலர் பிராங்பார்ட் மார்க்சியர்கள் என்று குறிப்பிடுவார்கள், உண்மையில் பிராங்கார்ட்வாதிகளுக்கும் மார்க்சியத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. அவர்கள் சாராம்சத்தில் மார்க்சியத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்பவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் மார்க்சியத்தில் பல விசயங்கள் விடு பட்டுப்போய் உள்ளது என்றும் அதற்குப் புரட்சிகரத் தன்மை இல்லை என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள். இத்தகைய நபர்களையே அப்போதே தோழர் ஸ்டாலின் விமர்சிக்கிறார். அதன் மூலம் லெனினியம் என்பது மார்க்சியத்தை இரண்டாம் அகிலத்தைச் சேர்ந்த சந்தர்ப்பவாதிகளிட மிருந்து பாதுகாத்தது மட்டுமல்ல புதிய முதலாளித்துவ சூழலுக்கு அதாவது, ஏகாதிபத்திய சூழலுக்கு ஏற்றவகையில் மார்க்சியத்தை லெனினியமாக லெனின் வளர்த்தார் என்று ஸ்டாலின் குறிப்பிடுகிறார். அன்று லெனின் செய்த வேலையை இன்றைய மார்க்சிய லெனினியவாதிகள் செய்ய வேண்டியது அவர்களது கடமையாகும். மார்க்சிய லெனினியத்திற்கு எதிரான டிராட்ஸ்கியவாதம், பின்நவீனத்துவம், அடையாள அரசியல், பிராங்பார்ட்வாதம் போன்ற பிற்போக்கு தத்துவ அரசியலை முறியடித்து மார்க்சியத்தை பாதுகாத்து, இன்றைய நவீன ஏகாதிபத்திய காலக்கட்டத்திற்கு பொறுத்தமாக லெனினியத்தை வளர்க்க வேண்டும்".

அப்படியானால், கடைசியாக அலசிப் பார்க்கிறபோது லெனினியம் என்றால் என்ன?

ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்கப் புரட்சியும் நிலவும் காலகட்டத்தின் மார்க்சியமே,லெனினியம். இதைவிட இன்னும் திட்டமாகச் சொல்வதென்றால், பொதுவாக தொழிலாளி வர்க்கப் புரட்சியின் தத்துவமும் போர்த் தந்திரங்களும் லெனினியம்; குறிப்பாக, தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தின் தத்துவமும் போர்த்தந்திரங்களும் லெனினியம் ஆகும். மார்க்சும், எங்கெல்சும் தங்களுடைய நடைமுறைகளை வகுத்துக் கொண்ட காலம், புரட்சிக்கு முற்பட்ட (பாட்டாளி வர்க்கப் புரட்சியைத்தான் மனதில் வைத்து நான் பேசுகிறேன்) காலமாகும். அந்தக் காலத்தில் நன்கு வளர்ந்து முதிர்ந்த ஏகாதிபத்தியம் இன்னும் ஏற்பட்டிருக்கவில்லை. அந்தக் காலத்தில் தொழிலாளிகள் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு தயாரிப்புகளைத்தான் செய்துகொண்டிருந்த காலம். பாட்டாளி வர்க்கப் புரட்சி தவிர்க்க முடியாதவாறு உடனடியாக ஏற்பட்டே தீரும் என்ற நிலைமை இருந்த காலம் அல்ல. ஆனால், மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் வழித்தோன்றலான லெனின் தன் நடைமுறைகளை வகுத்துக்கொண்ட காலம்,

ஏகாதிபத்தியம் வளர்ந்து முதிர்ந்த காலமாகும். தொழிலாளி வர்க்கப் புரட்சி தோன்றிக்கொண்டிருந்த காலமாகும். தொழிலாளி வர்க்கப் புரட்சி ஒரு நாட்டில் வெற்றிக் கொடியை நாட்டிவிட்ட காலம் முதலாளி வர்க்க ஜனநாயகத்தை ஒழித்துவிட்டு தொழிலாளி வர்க்க ஜனநாயகத்தின் காலகட்டம். சோவியத்துகளின் காலகட்டம் தோன்றிய காலமேலெனினிய காலமாகும். (ஸ்டாலின்).

"இங்கே மார்க்ஸ், எங்கெல்சின் காலத்தையும் லெனின் வாழ்ந்த காலத்தையும் ஸ்டாலின் வேறுபடுத்திக் காட்டுகிறார். மார்க்சின் காலத்தில் மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் தோன்றி வளர்ந்துகொண்டிருந்தது. அதனால் தொழிலாளி வர்க்கமும் உருவாகி வளர்ந்துகொண்டிருந்த காலம். தொழிலாளர்களை புரட்சிக்குத் தயாரிக்கின்ற காலமாக இருந்தது. அந்தப் பணியை நன்கு உணர்ந்து மார்க்சும் எங்கெல்சும் தொழிலாளி வர்க்கத்திற்கான தத்துவ அரசியல் நிலைபாடுகள், கொள்கை கோட்பாடுகளை உருவாக்கி தொழிலாளர்களிடம் பிரச்சாரம் செய்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை மார்க்சும் எங்கெல்சும் ஊட்டினார்கள். ஆனால் லெனின் காலத்தில் முதலாளித்துவம் வளர்ந்து ஏகாதிபத்தியமாக மாறிவிட்டது. அதன் விளைவாக ஏகாதிபத்தியங்களிடம் போட்டி அதிகரித்து அவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்மையடைந்து உலகப் போர் நடத்தப்பட்டது. மேலும் இதனால் சமூக முரண்பாடுகள் கூர்மையடைந்து தொழிலாளி வர்க்கமானது ஏகாதிபத்திய முதலாளிகளை எதிர்த்துப் போராடும் நிலைக்கு வந்துசேர்ந்தனர். இந்தச் சூழலை சரியாக மதிப்பிட்ட லெனின் தொழிலாளி வர்க்கம் போரிடுவதற்கான போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரங்களை வகுத்துக்கொடுத்து தொழிலாளி வர்க்கப் புரட்சிக்கு தலைமை கொடுத்து வழிகாட்டினார். அதன் அடிப்படையில் ரஷ்யாவில் தொழிலாளி வர்க்கம் வெற்றிபெற்றது. இவ்விரண்டு சூழல்களை ஒப்பிடும்போது தற்காலச் சூழல் என்ன? வெற்றிபெற்ற சோசலிச அரசுகள் வீழ்த்தப்பட்டுவிட்டது. ஏகாதிபத்தியம் மேலும் மேலும் வளர்ந்து மிகமிக உயர்ந்த நிலையை அடைந்துள்ளது. அவர்களுக்கு இடையில் முரண்பாடுகளும் கூர்மையடைந்துள்ளது. உழைக்கும் மக்கள் தங்களது வாங்கும் சக்தியை இழந்துவருகின்றனர். பசி மட்டும் பட்டினிச்சாவு அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. மொத்தத்தில் உழைக்கும் வர்க்கம் தனது விடுதலைக்காகப் போராடியே தீரவேண்டும் என்ற புறச் சூழல் நிலவுகிறது. ஆனால் இந்த உழைக்கும் மக்களுக்கு தலைமைதாங்கி வழிகாட்டுவதற்கு ரஷ்யாவில் லெனின் தலைமையில் இருந்த போல்ஷ்விக் கட்சி போன்று ஒரு கட்சி இங்கு இல்லை. மற்றொரு பக்கம் மார்க்சிய லெனினியத்திற் எதிரான பல்வேறுவகையான தத்துவ அரசியலை முன்வைத்து செயல்படும் அரசியல் அமைப்புகள் மக்களை பிளவுபடுத்தியும் குழப்பிக்கொண்டு இருக்கின்றன. இந்தச் சூழலில் உடனடியாக தொழிலாளர் புரட்சியை நடத்துவதற்கான புறச் சூழல் இருந்தபோதும் அதற்குத் தேவையான அகச் சூழல் மிகவும் பலவீனமாக உள்ளது. ஆகவே தற்போது தொழிலாளி வர்க்கத்திற்கு தலைமைதாங்கி வழிகாட்டத் தேவையான அகச் சூழலை அதாவது ஒரு போல்ஷ்விக் பாணியிலான புரட்சிகரமான கட்சியை கட்டியமைப்பதுதான் இன்றைய சூழலில் மார்க்சிய லெனினியவாதிகளின் பணியாக இருக்க முடியும். அதற்கு லெனினியத்தை இன்றைய காலத்திற்குப் பொறுத்தமாக வளர்த்திட வேண்டும், லெனினியத்திற்கு எதிரான தத்துவ அரசியல் கருத்துக்களை முறியடிக்க வேண்டும். மேலும் தொழிலாளி வர்க்கப் புரட்சிக்கு உழைக்கும் மக்களை தயாரிக்கும் காலமாகவே இந்த காலம் இருக்கிறது. இந்த எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் தங்களால் மக்களை அணிதிரட்டி புரட்சி செய்திட முடியும் என்ற கற்பனையில் மிதந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தங்களை புரட்சிக்கு தலைமைகொடுத்து வழிகாட்டும் சக்தியாக வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணராமல் புறக்கணிக்கிறார்கள். இத்தகைய குழுக்களின் தலைவர்கள் நிலவுகின்ற சூழலைப் புரிந்துகொண்டு தங்களை வளர்த்துக்கொண்டு உழைக்கும் மக்களை புரட்சிக்குத் தயாரிக்கும் பணியில் ஈடுபடாமல் புரட்சி பற்றி பேசுவது வெறும் கனவே ஆகும்".

இதனால்தான் லெனினியத்தை மார்க்சியத்தின் வளர்நிலை என்கிறோம். லெனினியம் விஷேசமான, போர்க்குணமும் அலாதியான புரட்சிகரமான தன்மையும் கொண்டு இருப்பதாக சாதாரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இது முற்றிலும் சரியே. இந்த குணாதிசயம் அதனிடத்தில் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவதாக, தொழிலாளி வர்க்கப் புரட்சியில் உருவம் பெற்று எழுந்தது லெனினியம். இதனால் அப்புரட்சியின் முத்திரை இதன்மேல் பதியாமலிருக்க முடியாது. இரண்டாவதாக, இரண்டாவது அகிலத்தின் சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து நடத்திய பல மோதல்களிலேயே லெனினியம் வளர்ந்து, வலுவடைந்தது. அந்த மோதல்கள், முதலாளித்துவத்தை வெற்றிகரமாக எதிர்ப்பதற்கு பூர்வாங்கமாக, கண்டிப்பாக நடத்தப்பட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்கின. அவற்றில் முதலில் வெற்றியடைந்தாலே, முதலாளித்துவத்தை வெற்றிகரமாக எதிர்க்க முடியும். அன்றுமட்டுமல்ல; இன்றைக்கும் இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே அந்தப் போராட்டங்கள் இருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில் இதை மறக்கலாகாது. ஒரு பக்கம் மார்க்சு எங்கெல்சுக்கும், மறுபக்கம் லெனினுக்கும் மத்தியில் இருந்த இடைக்காலம் இரண்டாவது அகிலத்தின் சந்தர்ப்பவாதம் முழு ஆதிக்கம் செலுத்திய காலமாக இருந்தது. இந்த சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து ஈவிரக்கமில்லாத போராட்டத்தை நடத்துவது லெனினியத்தின் பிரதான கடமைகளில் ஒன்றாக விளங்கியது.-(ஸ்டாலின்).

"இங்கே லெனினியம் உருவாகி வளர்ந்த விதத்தை ஸ்டாலின் வெளிப்படுத்துகிறார். லெனினது காலத்தில் தொழிலாளி வர்க்கம் ஒன்றுதிரண்டு போராடியதன் விளைவாகவே போர்க்குணமிக்க லெனினியம் உருவானது என்றும் அதன் பாதிப்புகள் லெனினியத்தில் அடங்கியுள்ளன என்கிறார் ஸ்டாலின். தற்போதும் உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் வர்க்க மக்கள் ஏகாதிபத்தியங்களை எதிர்த்துப் போராடிக்கொண்டு இருக்கின்றனர்.

உதாரணமாக இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம். இத்தகைய போராட்ங்களின் விளைவாக மார்க்சிய லெனினியக் கருத்துக்களின் பால் உழைக்கும் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். லெனினிய அடிப்படையில் போர்க்குணமிக்க போராட்டங்கள் இந்த ஏகாதிபத்திய வாதிகளை எதிர்த்து நடத்தப்பட வேண்டும் என்ற உணர்வு உழைக்கும் மக்களிடையே வளர்ந்து வருகிறது. (இந்த சூழலில் உழைக்கும் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மார்க்சிய லெனினியத்தின் பக்கம் சென்றுவிடாமல் தடுப்பதற்கு கம்யூனிச கொள்கைகளுக்கு எதிராகவும் அதற்கு மாற்று என்று சொல்லிக்கொண்டு பல்வேறுவிதமான அமைப்புகளை ஏகாதிபத்தியவாதிகள் தூண்டுதலின் பெயரில் உருவாகி உழைக்கும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றனர்.) ஆனால் இத்தகைய போராட்டங்களுக்கு லெனினிய முறையில் தலைமை கொடுத்து வழிகாட்டுவதற்கான ஒரு பலம்வாய்ந்த கம்யூனிஸ்டு கட்சிஇல்லை. கம்யூனிச அமைப்புகள் பலவாறு பிரிந்து இருக்கின்றன. ஒவ்வொரு குழுவும் வெவ்வேறான கொள்கை கோட்பாடுகளுடன் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. இவர்கள் கொண்டுள்ள கொள்கையானது மார்க்சிய லெனினிய வகைப்பட்டதுதானா? என்ற கேள்விக்கு விடை தெரியாத குழப்பமான சூழலே நிலவுகிறது. மார்க்சிய லெனினியக் கொள்கையிலிருந்து விலகிய போக்கே ஆதிக்கத்தில் உள்ளது. அன்றைய லெனினது காலத்தில் இருந்த இரண்டாம் அகிலத்தைச் சேர்ந்த சந்தர்ப்பவாதிகளின் கருத்துக்கள் ஆதிக்கத்தில் இருந்தது போல தற்போது ஒவ்வொரு கம்யூனிச குழுக்களுக்குள்ளும் மார்க்சிய லெனினிய தத்துவ அரசியலிருந்து விலகிய கருத்துக்களே ஆதிக்கத்தில் உள்ளது. இத்தகைய மார்க்சிய  லெனினியத்திற்கு எதிரான கருத்துக்களை சரியாகப் புரிந்துகொண்டு அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டிய பணியை அன்று லெனின் செய்தது போல இப்போதும் யாரும் இங்கு செய்யவில்லை. மார்க்சிய லெனினியத்துக்கு எதிரான சந்தர்ப்பவாதிகளும், சந்தர்ப்பவாத கருத்துக்களும் அன்று நிலவியது போலவே இன்றும் நிலவுகின்றது என்பதை கம்யூனிசத்தின் மீது நம்பிக்கையும் பற்றும் கொண்டவர்கள் உணர வேண்டும். இத்தகைய சந்தர்ப்பவாதத்தை எதிர்த்துப் போராடி வீழ்த்துவதன் மூலமே நம்மால் லெனினியத்தை பாதுகாக்கவும், லெனினியத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களைத் திரட்டி புரட்சிகரமான முறையில் சமூகத்தை மாற்ற முடியும். அதற்கு நாம் லெனினியக் கொள்கைகளை கற்றுத்தேற வேண்டும்.

லெனினிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் நமது நடைமுறைகளை வகுத்துச் செயல்பட வேண்டும். லெனினியத்திற்கு எதிரான சந்தர்ப்பவாதக் கருத்துக்களை எதிர்த்துப் போராடி வீழ்த்துவதன் மூலமே இங்கே லெனினியம் வளர்ந்து பலப்படும். அதன் அடிப்படையிலேயே இங்கு உழைக்கும் மக்களின் விடுதலை சாத்தியமாகும். ஆனால் இங்கே லெனினியத்தின் அடிப்படையில் சந்தர்ப்பவாதிகளை எதிர்த்துப் போராடத்தை நடத்த தவறிவிட்டவர்கள், லெனினியக் கொள்கைகளின் மீதே நம்பிக்கை இழந்து இங்குள்ள முதலாளித்துவ சீர்திருத்தவாதத் தலைவர்களின் தத்துவ அரசியலை பின்பற்றி செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். இந்த முறையானது அன்றைய இரண்டாம் அகிலத் தலைவர்கள் பின்பற்றிய சந்தர்ப்பவாத முறையாகும். இத்தகைய சந்தர்ப்பவாத முறைகளை பின்பற்றி உழைக்கும் மக்களை ஒருபோதும் விடுவிக்க முடியாது. ஆகவே நாம் மார்க்சிய லெனினியத்தை உயர்த்திப் பிடிப்போம். முதலாளித்துவ சீர்திருத்தவாத சந்தர்ப்பாத கொள்கைகளை அம்பலப்படுத்தி முறியடிப்போம். ஒரு ஒன்றுபட்ட புரட்சிகரமான கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டுவதை நோக்கி முன்னேறுவோம்"……………..

தொடரும்..... தேன்மொழி

மார்க்சிய (இயக்கவியல் பொருள்முதல்வாத) தத்துவம் பயிலுவோம். பகுதி 3.-தேன்மொழி

 ஆன்மீகவாதம் அல்லது கருத்துமுதல்வாதம்.

1. தார்மீக லட்சியவாதமும், தத்துவரீதியான ஆன்மீகவாதமும். பொருள்முதல்வாதத்தைப் பற்றி வழக்கமாக உள்ள பேச்சில் நாம் காணும் குழப்பத்தை ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளோம். (இலக்கு இணையதள இதழ் !5 மற்றும் 17ஐப் பார்க்கவும்) அதேபோல் ஆன்மீகவாதம் அல்லது கருத்துமுதல்வாதம் என்ற தொடர்மொழியைப் பற்றியும் குழப்பம் இருந்துகொண்டு இருக்கிறது. உண்மையிலேயே தார்மீக லட்சியவாதத்தையும் (moral idealism) தத்துவரீதியான ஆன்மீகவாதத்தையும் (Philosophical idealism) ஒன்றோடு ஒன்றைப்போட்டுக் குழப்பக்கூடாது.

தார்மீக லட்சியவாதம் என்பது ஒரு லட்சியத்தின்பால் செலுத்தும் பற்றை, பக்தியைக் குறிப்பதாகும்.தர்மம் நிறைந்த ஒரு லட்சியத்திற்காக எண்ணற்ற புரட்சிக்காரர்கள், மார்க்சியவாதிகள், தமது வாழ்வை அர்ப்பணித்து இன்னுயிரையும் தியாகம் செய்திருக்கிறார்கள் என்பதை உலகத் தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு காட்டுகிறது. என்றபோதிலும், அப்படிப்பட்டவர்கள்தான் தத்துவரீதியான ஆன்மீகவாதத்துக்கு எதிரிகளாக இருந்தனர்.

உலகம் முழுவதிலும் கம்யூனிஸ்டுகள் உழைக்கும் மக்களின் நல்வாழ்விற்காக உழைக்கும் மக்களுக்கு எதிராக செயல்படும் ஆட்சியாளர்களை எதிர்த்தும், ஆட்சியாளர்களின் கொலைகாரப் படையை எதிர்த்தும் உணர்வுப் பூர்வமாகப் போராடி தங்களது இன்னுயிரை விட்டு தியாகம் செய்தனர். அத்தகைய ஆன்மீக, லட்சிய உணர்வுள்ளவர்கள்தான் கம்யூனிஸ்டுகள். அத்தகைய உணர்வுப் பூர்வமான போராட்டங்களின் மூலமே மக்களின் எதிரிகளை வீழ்த்தி மக்களுக்கு நல்லனவற்றை செய்ய முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள்தான் கம்யூனிஸ்டுகள். இதற்கு மாறாக கம்யூனிஸ்டுகள் வெறுமனே பொருளாதாரத்திற்காக மட்டுமே சுயநலத்துக்காக மட்டுமே போராடுவார்கள் என்றும் அவர்களுக்கு லட்சியம் ஒன்றும் கிடையாது என்றும் கம்யூனிசத்தை வெறுப்பவர்கள் கம்யூனிஸ்டுகளைப் பற்றி பரப்பும் பிரச்சாரங்கள் அனைத்தும் உண்மை அல்ல.

கம்யூனிஸ்டுகள் ஒரு லட்சியத்தின்பால் நம்பிக்கைகொண்டு செயல்படுகிறார்கள். மக்களின்விடுதலை மற்றும் மக்களின் நல்வாழ்வு என்பதுதான் கம்யூனிஸ்டுகளின் லட்சியமாகும்.

இத்தகைய கம்யூனிஸ்டுகள்தான் தத்துவார்த்த ஆன்மீகவாதம் அல்லது கருத்துமுதல்வாதத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

1.1. தத்துவரீதியான ஆன்மீக வாதம்.

தத்துவரீதியான ஆன்மீகவாதம் என்பது ஒரு தத்துவமானது ஆன்மாவைக் கொண்டு பொருளை விளக்குவதுதான் அதன் அடிப்படையாகும். அதாவது ஒரு பொருளைப் பற்றிவிளக்கும் போது அதற்கு ஆன்மாதான் அடிப்படைக் காரணம், அதாவது கருத்துதான் பொருளுக்கு அடிப்படை என்று விளக்கும் ஒரு தத்துவமே ஆன்மீகவாதம் என்ற தத்துவம்ஆகும்.


"சிந்தனைதான் மூல அம்சம், அதுதான் மற்ற எல்லாவற்றையும்விட முக்கியமான அம்சம். அதுதான் முதன்மையான அம்சம்"என்று தத்துவ மெய்ஞானத்தின் மூலப்பிரச்சனைக்கு விடையளிக்கும் தத்துவ விசாரணையே ஆன்மீகவாதமாகும், சிந்தனைதான் மூல அம்சம் என்று இப்படி அடித்துப் பேசும் ஆன்மீகவாதத்தைத்தான் வாழ்நிலையை சிருஷ்டிப்பது அதாவது உருவாக்குவது சிந்தனையே என்று அதாவது வேறுவிதமாகச் சொல்வதானால் "ஆன்மாதான் பொருளை சிருஷ்டிக்கிறது அதாவது உருவாக்குகிறது"என்று உறுதிப்படுத்துகின்றது அந்தஆன்மீகவாத தத்துவம்..

இதுதான் ஆன்மீகவாதம் பெற்ற முதல் வடிவம். அந்த முதல் வடிவம் மதங்களிலே பூரண வளர்ச்சி பெற்றது. அதன் அடிப்படையிலேயே கடவுள்தான் அதாவது "சுத்த சுயம்பிரகாசமான ஆன்மா" தான், பிரபஞ்சத்தை (பொருளை) சிருஷ்டிதது அல்லது உருவாக்கியது என்று மதங்கள் அடித்துச் சொல்லிக்கொண்டு இருக்கின்றன.


தத்துவஞான மெய்ஞான விசாரணைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது மதம் என்று முன்பும் இந்த மதவாதிகள் சொன்னார்கள் இப்பொழுதும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். என்றாலும், உண்மை என்னவோ நேர் எதிரானதுதான். ஆன்மீகவாதத்தை அல்லது கருத்துமுதல்வாதத்தை நேரடியாக, தர்க்கரீதியாக பிரதிநிதித்துவப் படுத்துகிறது மதம்,என்பதே பிரத்யட்சமான உண்மையாகும். அதாவது மதவாதங்கெல்லாம் அடிப்படை ஆன்மீகவாதம் என்னும் கருத்துமுதல்வாதத் தத்துமே அடிப்படையாகும். பிறகு பல நூற்றாண்டுகளினூடே விஞ்ஞானம் இந்தத் தத்துவத் துறைகளில் தலையிடலாயிற்று. விஞ்ஞானம் குறுக்கிட்டவுடன் பொருளையும், பிரபஞ்சத்தையும், விஷயங்களையும், பிரச்சனைகளையும் கடவுள் செயல் என்று ஒரேயடியாக அடித்துச் சொல்லி விள்குவதற்குப் பதிலாக மாறான முறையில் விளக்க வேண்டிய நிர்பந்தம் ஆன்மீகவாதிகள் அல்லது கருத்துமுதல்வாதிகளுக்கு ஏற்பட்டது. ஏனெனில் 16ஆவது நூற்றாண்டு முதல் இயற்கையின் தோற்றங்களைப் பற்றி விஞ்ஞானம் விளக்கம் தரத் தொடங்கியது. அப்படி விளக்கும்போது அது கடவுளைப் பொருட்படுத்தவில்லை, கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. சிருஷ்டி என்ற (அதாவது முன்னால் இல்லத ஒன்றை பின்னால் உண்டாக்கப்பட்டது. எனவே யாரோ ஒருவர், ஏதோ ஒரு சக்தி, அதை உண்டாக்கித்தானே இருக்க வேண்டும் என்ற) கற்பனையை விஞ்ஞானம் உபயோகிக்காமல் அதாவது பயன்படுத்தாமல் விட்டுவிட்டது.

சரி நிலைமை இவ்வளவுக்கு வந்துவிட்டதா? இந்த விஞ்ஞானரீதியான, பொருள்முதல்வாதப் பூர்வமான, நாத்தீக விளக்கங்களை எதிர்த்து இன்னும் திறமையாகப் போராடியாக வேண்டும் - என்ற நிலைமை ஆன்மீகவாத கருத்துமுதல் வாதிகளுக்கு ஏற்பட்டது. எனவே ஆன்மீக கருத்துமுதல் வாதத்தின் கதி என்னவாயிற்று தெரியுமா? அல்லது இன்னும் கொஞ்ச தூரம் தள்ள வேண்டியதாயிற்று. பொருளாவது இருப்பதாவது! பொருள் (பிரபஞ்சம்) என்பதே கிடையாதே, அது வெறும் மாயைதானே! என்று ஒரேயடியாக மறுக்க வேண்டிய நிர்பந்தம் ஆன்மீகவாத கருத்துமுதல்வாதிகளுக்கு ஏற்பட்டது.


இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு பொருட்களைப் பற்றியும், சூரியன், சந்திரன் உட்பட்ட கோளங்களைப் பற்றியும் விஞ்ஞானிகள் விஞ்ஞானத்தைக் கொண்டு ஆய்வு செய்து அரியவிஞ்ஞான உண்மைகளை இன்றும் வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றனர். அவர்களில் யார் ஒருவரும் அவர்களது ஆய்வு முடிவுகளுக்கு கடவுளை காரணம் காட்டவில்லை. அந்த விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகளையே மனித சமூகம் இன்றும் பயன்படுத்தி பல பலன்களை அனுபவித்துக்கொண்டு இருக்கிறது. இந்தச் சூழலில்தான் கருத்துமுதல்வாத ஆன்மீகவாதிகள் பொருளே உலகத்திலோ பிரபஞ்சத்திலோ இல்லை என்றும், நாம் காணும் பொருள்கள் யாவும் நமது கற்பனையே என்றும் அது மாயை என்றும் "உலகே மாயம், வாழ்வே மாயம்"என்றுபுலம்ப (பாட) ஆரம்பித்துவிட்டனர். அது மட்டுமல்லாமல் அப்பாவி பொது மக்களையும் இந்த மாயாவாதத் தத்துவத்தில் நம்பிக்கை வைக்கச் செய்துவிட்டார்கள். இந்த கருத்துமுதல்வாத ஆன்மீகவாத தத்துவவாத மெய்ஞானிகள் எல்லாவிதமான ஆடம்பரமான வாழ்க்கையும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அனுபவிக்கும் ஆடம்பர வாழ்க்கை கிடைக்காத மிகமிக ஏழ்மையில் வாழும் மனிதர்கள், அவர்களும் இந்த ஆன்மீகவாதிகளைப் போல் ஆடம்பரமான வாழ்க்கைக்குப் போராடக் கூடாது என்று வறியவர்களைத் தடுக்கவே இந்த உலகமும் வாழ்வும் மாயை என்று நம்ப வைத்து ஏமாற்றுவதற்காகவே பொருள்களே உலகத்தில் இல்லை என்றும் எல்லாம் மாயையே என்ற கருத்தியலான தத்துவத்தைஇப்போதும் போதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

19ஆவது நூற்றாண்டின் தொடக்கத்தில் பிஷப் பெர்க்லி என்றொரு ஆங்கிலேயப் பாதிரியார் இருந்தார். அவர்தான் கருத்துமுதல்வாத ஆன்மீகவாதத்தை இப்படி முன்தள்ளிச் செல்லும் வேலையை மேற்கொண்டார். ஆகவேதான் அவர் ஆன்மீகவாதத்தின் தந்தை என்றுஅழைக்கப்படுகிறார்.

2. பெர்க்கிலியின் கருத்துமுதல்வாத ஆன்மீகவாதத்தை நாம் ஏன் கற்ற வேண்டும்.

பொருள்முதல்வாதத்தை நிர்மூலமாக்குவதே பெர்க்லியின் கருத்துமுதல்வாத ஆன்மீகவாத தத்துவ மெய்ஞானத்தின் குறிக்கோளாகும்; புலன்களுக்கு எட்டுகிற பௌதீகப் பொருள் என்று ஒன்றும் கிடையாது என்று விளக்கிக் காட்டுவதே அவருடைய குறிக்கோள் என்பது தெளிவான விஷயமாகும். "ஹைலாஸ் பிலோனஸ் உரையாடல்" என்ற தம்முடைய நூலில் அவர் முன்னுரையாக பின்வருமாறு எழுதுகிறார்"இந்த கோட்பாடுகளைச் சரி என்று ஏற்றுக்கொள்வீர்களானால் நாத்தீகவாதமும் சந்தேகவாதமும் ஒரேயடியில் அடிபட்டுப் போய்விட்டன என்றும் விளங்காமலேயே இருந்த பிரச்சனைகள் தெளிவாகிவிட்டன என்றும் விடைகாணாத கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்டது என்றும் புதிர் போடுவதில் ஆர்வங்கொள்ளும் ஆசாமிகளுக்கும் புத்தி புகட்டியாகிவிட்டது என்றும் கொள்ளலாம்" என்றுஎழுதினார்.

மனிதர்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் கடவுளிடம் சென்று முறையிட்டால் தீர்ந்துவிடும் என்று ஒரே கருத்தை வெவ்வேறு வடிவங்களில் மக்களிடம் பிரச்சாரம் செய்பவர்கள்தான் இந்த கருத்துமுதல்வாத ஆன்மீகவாதிகள். ஆகவே இவர்கள் முன்வைக்கும் எந்தவிதமான கருத்திற்கும் நடைமுறை ஆதாரத்தை முன்வைக்க மாட்டார்கள். கடவுள் ஆன்மா போன்றவற்றை ஆதாரத்துடன் நிருபிக்காமல் அதன் மீது மக்களை நம்பிக்கை வைக்கச் சொல்வார்கள். அந்த வகையிலேயே இந்த பெர்க்லிப் பாதிரியார் அனைத்துப் பிரச்சனைகளையும் ஒரேயடியாகத் தீர்த்துவிட்டதாக ஜம்பமடிக்கிறார்.

ஆகவே பொருள் என்று ஒன்றும் கிடையாது என்பதையே பெர்க்லி உண்மையாகக்கருதுகிறார். பொருள் உண்டு என்று சாதிப்பதைக் கண்டால் அவருக்கு அது ஒரு விநோதமானபுதிராகத்தான் படுகிறது. தமது கருத்தை நிருபித்துக்காட்ட அவர் என்ன செய்கிறார் என்பதைநாம் பார்க்கப் போகிறோம். அதே சமயத்தில் தத்துவ மெய்ஞானத்தைக் கற்க விரும்புபவர்கள்பெர்க்லியின் தத்துவ முறையை ஆழ்ந்து கவனிக்க வேண்டியது மிகமிக அவசியம் என்றுவலியுறுத்துவதில் நமக்கு நன்மைகள் உண்டு நாம் என்றே நாம் கருதுகிறோம்.

மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஒரு பொருள்வகைப்பட்டவர்களாகவே இருக்கிறோம். பெர்க்லி பாதிரியார் கருதுவது போல உலகில் பொருள் என்பதே இல்லை என்று கருதினால் நாமெல்லாம் உண்மையில் இல்லை என்றே பொருள்படுகிறது. ஏன் பெர்க்லி பாதிரியார் கூட உண்மையில் இல்லை என்றே பொருள்படும். இது எவ்வளவு அபத்தமான கருத்து என்பது சாதாரணமான மனிதனும் உணர்வான். எனினும் பெர்க்லி பாதிரியார் இந்த அபத்தமானஉண்மைக்கு மாறான கருத்தை எவ்வாறெல்லாம் விளக்குகிறார் என்பதை நாம் புரிந்துகொள்வதன் மூலம் தத்துவ மெய்ஞானத் துறையில் இந்த கருத்து முதல்வாத ஆன்மீகமெய்ஞானிகள் நம்மை எப்படியெல்லாம் ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். மேலும் இந்த வகையான கண்ணோட்டத்திலிருந்து சமூகப் பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சனைகளில் நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.

 பெர்க்லியின் தத்துவ விரிவுரைகளை கேட்டாலே சிலருக்கு நகைப்புத்தான் வரும் என்பதை நாம் அறிவோம். ஆனால் ஒன்று அவர் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். நாம் 20ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். (தற்போது 21ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம்) நமக்கு முந்திய காலத்திய ஆய்வு ஆராய்ச்சிகளினால் நாம் பயனடைந்திருக்கிறோம் என்ற விசயத்தை நம்மில் யாரும் மறக்கக் கூடாது புரிகிறதா?

அதுமட்டுமல்ல, பொருள்முதல்வாதத்தையும் அதன் வரலாற்றையும் நாம் கற்க முற்படும்போது,

பழைய காலத்திய பொருள்முதல்வாத தத்துவ மெய்ஞானிகள் கூட நகைப்புக்கிடமான பலவிஷயங்களைச் சொல்லியிருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்கத்தான் போகிறோம்.

இவ்வாறு பழங்காலத்தில் பொருள்முதல்வாதிகளும், கருத்துமுதல்வாதிகளும் நகைப்பிற்கு இடமான வகையில் பேசி இருக்கிறார்கள் என்பதை தத்துவ மெய்ஞான வரலாற்றில் நாம் பார்க்கலாம். எனினும் பொருள்முதல்வாதமானது ஒவ்வொரு கட்டத்திலும் தன்னுடைய குறைகளை களைந்து செழுமைப் படுத்தி இயக்கவியல் தத்துவ மெய்ஞானமாக வளர்ந்துள்ளதை நாம் பார்க்க முடியும். இவ்வாறு இந்த தத்துவக் கண்ணோட்டமானது வளர்ந்துகொண்டே செல்வதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தீதரோவை நீங்கள் அறிவீர்கள், மார்க்சும், எங்கெல்சும் வருவதற்குமுன் அவர்தான் மிகப்பெரிய பொருள்முதல்வாத சிந்தனையாளராகத் திகழ்ந்தார். அப்பேர்ப்பட்ட தீதரோ, பெர்க்லியின் தத்துவ முறைக்குக் கொஞ்சம் முக்கியத்துவம் தந்திருக்கிறார். "பெர்க்லியின் தத்துவ முறைதான் மற்றெல்லாவற்றையும் காட்டிலும் மிகவும் ஆபத்தானது. என்றாலும் மற்றெல்லாவற்றையும் காட்டிலும் அதை வெல்வதுதான் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. மனிதன் அறிவுக்கும் தத்துவ மெய்ஞானத்துக்கும் இது ஒரு மானக்கேடான விஷயம்தான்" என்று பெர்க்லியின் தத்துவ முறையைத் தீதரோ வர்ணித்துள்ளார்.

பொருள்முதல்வாதமும் அனுபவ ஞான விமர்சனமும் என்ற நூலை எழுதிய லெனின்,பெர்க்லியின் தத்துவத்தைப் பற்றி பல பக்கங்கள் எழுதினார். "ஆன்மீகவாதத்தின் கடைசிக்கொழுந்துகள் என்று சொல்லப்படுகிற தத்துவ மெய்ஞானிகள் பொருள்முதல்வாதத்தைஎதிர்த்து எவ்வளவோ சொல்லியிருக் கிறார்கள் என்றாலும் பெர்க்லிப் பாதிரியார் கிளப்பியவாதங்களுக்கு மேல் அவர்கள் புதிதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை"என்று லெனின் எழுதினார்.

கடைசியாக ஒன்று நமது கல்லூரிகளில் இன்று பிரபலமாகி வரும் தத்துவ மெய்ஞானவரலாற்றின் தொகுப்பு என்ற நூல் பெர்க்லியின் தத்துவ முறையைப் பற்றித் தரும் ஒருபாராட்டுரையைப் பாருங்கள் "பெர்க்லியின் தத்துவத்தில் குற்றங்குறைகள் சில இருக்கின்றனஎன்றாலும் அதை மெச்சித்தான் ஆகவேண்டும். புலனுக்கு எட்டக்கூடிய பொருள் ஒன்றுஇருக்கிறது என்ற நம்பிக்கை மீண்டும் தலைகாட்டாதபடி தத்துவ மெய்ஞானிகள்மனத்திலிருந்து நிரந்தரமாக நிர்மூலமாக்கும் தத்துவம் அது" என்று அந்த நூல் வர்ணிக்கிறது.

பெர்க்லியின் தத்துவ விசாரணை இப்போது தெரிகிறது அல்லவா?

தற்போதும் தத்துவம், பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக மாற்றம் பற்றிய பிரச்சனைகளில் மார்க்சியம் போதாது என்பவர்களும், மார்க்சியத்தை வெறுப்பவர்களுக்கும்இந்த பெர்க்லிப் பாதிரியார் போன்ற கருத்துமுதல்வாத ஆன்மீகவாதிகளின் சிந்தனைமுறைதான் அடிப்படையாக உள்ளது. ஆகவேதான் பெர்க்லிப் பாதிரியாரின் ஆன்மீகவாதகண்ணோட்டங்களை நாம் புரிந்துகொண்டு, இத்தகைய கண்ணோட்டம் கொண்டவர்களைநாம் எதிர்த்துப் போராடி மார்க்சியத்தைப் பாதுகாத்து வளர்க்க வேண்டிய நிலையில்உள்ளோம்.

3. பெர்க்லியின் ஆன்மீகவாதம்.

ஆகவே புலனுக்கெட்டும் பொருள் (பிரபஞ்சம்) என்று ஒன்றும் கிடையாது என்று நிருபித்துக்காட்டுவதுதான் பெர்க்லி தத்துவ முறையின் நோக்கமாகும்.


"நமது மனத்துக்கு அப்பால், மனத்துக்கு வெளியே ஒன்று இருப்பதாக நினைத்துக்கொண்டு எதை நம்புகிறோமோ அது பொருள் அல்ல. பொருட்கள் உண்டு என்று நாம் நினைப்பதற்கு காரணம் நாம் அவற்றைக் கண்ணால் பார்க்கிறோம், கையால் தொடுகிறோம், என்பதுதான். இப்படிப்பட்ட உணர்ச்சிகளை நமது புலன்களுக்கு அவை கொடுப்பதால்தான் பொருட்கள்உண்டு என்று நாம் நம்புகிறோம்."

"ஆனால் புலன் உணர்ச்சிகள் என்பவை மட்டும் என்ன? அவையும் நம் மனதில் எழும்எண்ணங்கள்தானே! ஆகவே, நாம் புலன்களின் வாயிலாகக் கண்டறியும் பொருட்களெல்லாம்நம்முடைய எண்ணங்கள்தானே தவிர வேறொன்றுமில்லை. மேலும் இந்த எண்ணங்கள் நமதுமனத்துக்கு வெளியே நிலைபெற்று இருக்க முடியாது" என்று பெர்க்லி சொல்கிறார்.

பொருட்கள் உண்டு என்கிறார் பெர்க்லி; அவற்றின் தன்மையையும், அவை இருப்பதையும்அவர் மறுக்கவில்லை. ஆனால் அவையெல்லாம் நமது புலனுணர்ச்சிகளின் வடிவத்தில்மட்டுமே உள்ளன. இந்தப் புலனுணர்ச்சி கள்தான் அவற்றை நாம் அறியும்படி செய்கின்றனஎன்று அடித்துப் பேசுகிறார். பிறகு அதிலிருந்து ஒரு முடிவிற்கு வருகிறார் அது என்ன? அந்தப்பொருட்களும் அவற்றைப் பற்றிய நமது புலனுணர்ச்சிகளும் ஒன்றேதான். வேறுவேறானவையல்ல என்று தீர்மானிக்கிறார்.

ஆரம்பத்தில் ஆன்மீக கருத்துமுதல்வாதிகள் பொருளே இல்லை என்று வாதிட்டார்கள். ஆத்மா மட்டுமே உள்ளது என்று வாதிட்டார்கள். இந்த பெர்க்லிப் பாதிரியார் பொருளும் ஆன்மாவும் ஒன்றே என்று சொல்லி பொருள் என்பது இல்லை என்ற கருத்துமுதல்வாதிகளின் முந்தைய கொள்கைக்கு வலு சேர்க்கிறார். இவரும் பொருள்கள் என்பது இல்லவே இல்லை என்றே வாதிடுகிறார்.

பொருட்கள் உண்டு என்பது நிச்சயம் தான் ஆனால் அவை நம் உள்ளே, நமது மனத்தின் உள்ளே தான் இருக்கின்றன என்கிறார் பெருக்கிலி. நமது மனத்துக்கு வெளியே அந்த பொருட்களுக்கு ஒரு பூத உடல் கிடையாது என்கிறார் அவர்  கண் வாயிலாக நாம் பொருட்களின் தோற்றத்தை உணர்கிறோம், ஸ்பரிசத்தத்தின் வாயிலாக அல்லது தொடு உணர்ச்சியின் வாயிலாக அவற்றின் திடநிலையை அறிகிறோம், மூக்கின் வாயிலாக அவற்றின் வாசனையை அறிகிறோம், நாக்கின் வாயிலாக அவற்றின் சுவையை அறிகிறோம், காது வாயிலாக அவற்றின் சத்தங்களை அறிகிறோம், இந்த வெவ்வேறான புலன்உணர்ச்சிகள் நமக்கு பல எண்ணங்களை உண்டாக்கி தருகின்றன, இந்த எண்ணங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவற்றிற்கு ஒரு பொதுப் பெயர் கொடுத்து அவற்றைப் பொருட்களாக கருதம்படி நம்மைச் செய்கின்றன. "உதாரணமாக ஒரு குறிப்பிட்ட நிறமும் சுவையும் மணமும் வடிவமும் திரட்ச்சியும் ஒன்றாய் கூடியிருப்பதை கண்ட பிறகு அவற்றை எல்லாம் கொண்டு நான் ஒரு குறிப்பிட்ட பொருளை குறிப்பதாக கொள்கிறோம். அதை ஆப்பிள் பழம் என்ற பெயரால் குறிக்கிறோம் இப்படியே ஒவ்வொரு எண்ணம் குவியல்கள் சேர்ந்து ஒரு கல்லாகவும் ஒரு மரமாகவும் ஒரு புத்தகமாகவும் பிற நல்ல பொருட்களாகும் ஆகின்றன" என்கிறார் பெர்க்லி.

ஆகவே பிரபஞ்சமும் பொதுவாகவே எல்லா பொருட்களும், புறத்தே நிலைபெற்று இருக்கின்றன என்று நாம் அறிந்து கொண்டுள்ளதாக நினைப்போமாயானால் நாம் பல மயக்கங்களுக்கு, மாயத்தோற்றங்களுக்கு இரையாகிறோம் என்று தான் அர்த்தம். ஏனென்றால் இவை எல்லாம் நம் மனதின் உள்ளேதான் இருக்கின்றன என்கிறார் பெர்க்லிப் பாதிரியார்.

ஹைலாஸ் பி லோனஸ் உரையாடல் என்ற தமது நூலில் பெர்க்லி இந்த விரிவுரையைப் பின்வருமாறு நிருபித்துக் காட்டுகிறார்.

"ஒரே நேரத்தில் ஒரே பொருள் வேறு விதமாக இருக்க முடியும் என நம்புவது சுத்த அபத்தமல்லவா, உதாரணமாக ஒரே பொருள் ஒரே நேரத்தில் சூடாகவும் குளிர்ச்சியாகவும் இருக்க முடியும் என நம்புவது சுத்த அபத்தம் அல்லவா. உங்களுடைய வலது கை சூடாகவும் இடது கை குளிர்ச்சியாகவும் இருக்கிறதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். பிறகு இளஞ் சூடான நீரில் இரண்டு கைகளையும் விடுங்கள் அப்போது அந்த நீர் வலது கைக்கு குளிர்ச்சியாகவும் இடது கைக்கு சூடாகவும் இருக்கிறதாகத் தோன்றுகிறதா" என்கிறார் பெர்க்லி.

இங்கே பெர்க்லிப் பாதிரியார் கற்பனை செய்துகொள்வது பற்றிப் பேசுகிறார். அத்தகைய கற்பனை என்பது நமது மனதிற்குள் நாமாக உருவாக்கிக் கொள்வதுதானே. அத்தகைய கற்பனை என்பது உண்மையில் இருக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா? ஆகவே நமது மனமானது கருதுவதைத்தான் பொருள் என்று வாதாடும் பெர்குகிலிப் பாதிரியார் இல்லாத பொருளைப் பற்றியும் நமது மனம் கருதுவது எப்படி என்பதற்குப் பதில் கொடுக்க வேண்டும் அல்லவா?

ஆகவே ஒரே நேரத்தில் ஒரு பொருள் தானே வேறு வேறாக இருக்க முடியும் என்று நம்புவது முட்டாள் தனமாகும். ஆதலால் அது நம் மனதில் இருக்கிறது என்று நாம் முடிவு செய்ய வேண்டும்.

தனது ஆய்வு முறையையும் தர்க்க முறையையும் கொண்டு பெர்கலி என்ன செய்கிறார்?

பொருட்களிடமிருந்து அவற்றின் குணாம்சங்களை வேறு வேறாக களைந்து எரிகிறார். அவரது வாதங்களை கேளுங்கள்.ஒவ்வொன்றுக்கும் இன்ன நிறம், இன்ன சுவை, இன்ன மனம், இன்ன பருமன், இன்ன எடை, என்று இருப்பதால் தானே பொருட்கள் இருக்கின்றன என்று சொல்கிறீர்கள். அந்த குணம்சங்கள் அந்தப் பொருட்கள் இடத்தில் கிடையாது. அது நம் மனதில் தான் உள்ளன என்று நான் நிரூபிக்கிறேன்.

இதோ, ஒரு துணி, இது சிவப்பு என்று நீ சொல்கிறாய். உண்மையில் அது சிவப்புத்தானா?

அந்தச் சிவப்பு அந்தத் துணியில் அடங்கியிருப்பதாக நினைக்கிறாய். நிச்சயமாய், அப்படித்தானா? மனிதனின் கண்கள் போலில்லாமல் வேறு மாதிரிக் கண்கள் படைத்த மிருகங்கள் இருப்பதை நீ அறிவாய் அவை அந்தத் துணியைச் சிவப்பு நிறத்தில் பார்க்காது.

அதுபோல், மஞ்சள்காமாலை பிடித்தவனுக்கு அந்தத் துணி மஞ்சளாகத் தெரியுமே? அதற்கென்ன சொல்கிறாய்? நிஜமான நிறந்தான் எது? நிலைமைகளைப் பொருத்திருக்கிறது.என்று சொல்கிறாயா? அப்படியானால், சிவப்பு என்பது அந்தத் துணியில் இல்லை; நம் கண்ணில், நம் மனத்தில்தான் இருக்கிறது என்கிறார் பெர்க்லிப் பாதிரியார்.

இதோ, இந்தத் துணி, இது லேசாக இருக்கிறது என்கிறாயா? சரி இந்தத் துணி ஒரு எறும்பின்மேல் விழுந்தால், நிச்சயமாக எறும்புக்கு அது கனமாகப்படுமே! இதில் யார் சொல்வது சரி? அந்தத் துணி சுடுகிறதாக நீ நினைக்கிறாயா? நீ காய்ச்சலில் படுத்திருந்தால் அப்போது அது உனக்கு சில்லென்று இருப்பதாகத் தோன்றுமே! இதில் எது சரி என்று வினா எழுப்புகிறார் பெர்க்லி சுருங்கச் சொன்னால், அதே பொருட்கள் சிலருக்கு சிவப்பாகவும், பளுவாகவும், சூடாகவும் வேறு சிலருக்கு அவற்றிற்கு நேர்மாறாகவும் இருப்பதாக ஒரே சமயத்தில் தெரிகிறது என்றால் நாம் பல மாயைகளுக்கு ஆளாகிறோம் என்பதுதான் விஷயம். பொருட்கள் என்பவை நம் மனத்தில்தான் உள்ளன என்பதுதான் விஷயம் என்கிறார் பெர்க்லி.

பொருட்களிடமிருந்து அவற்றின் எல்லாக் குணாம்சங்களையும் களைந்தெறிவதன் மூலமாகப் பொருட்களெல்லாம் நம் மனதில்தான் உள்ளன. அதாவது பொருள் என்பதே ஒரு கருத்துத்தான்என்று சொல்லும் நிலைமைக்கு வந்து சேருகிறோம்.

சுவை, சப்தம், போன்ற சில குணாம்சங்கள் பொருட்களிடத்தில் இல்லை. நம்மிடம்தான் இருக்கின்றன. என்று பெர்க்லிக்கு முன்பே பண்டைக்கால கிரேக்க தத்துவ மெய்ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னதும் சரிதான். என்றாலும்கூட பெர்க்லி தத்துவம் புதிதாகச் சொல்வது என்ன என்று கேட்டால், இந்தக் கூற்று பொருட்களின் எல்லாக் குணாம்சங்களுக்குமே பொருந்தும் என்கிறார் பெர்க்லி.

கிரேக்க தத்துவ மெய்ஞானிகள் பொருட்களின் குணாம்சங்களை இரண்டு வகையாக இனம் கண்டுகொண்டார்கள். ஒரு பக்கத்தில் முதல்தர குணாம்சங்கள்; அதாவது பொருட்களுக்கு உள்ளேயே தங்கியுள்ள எடை, பருமன், எதிர்சக்தி முதலியன. இன்னொரு பக்கத்தில் இரண்டாம்தர குணாம்சங்கள்; அதாவது நம் உள்ளே இருக்கும்படியான மணம், சுவை, வெப்பதட்பம் முதலியன.

முதல்தர குணாம்சங்களுக்குக் கிரேக்கர்கள் சொன்ன வாதங்களைப் பெர்க்லி இரண்டாந்தர குணாம்சங்களுக்கும் பிரயோகிக்கிறார். அதாவது எல்லாக் குணாம்சங்களும் நம் உள்ளேதான் இருக்கின்றனவே தவிர பொருட்களிடத்தில் இல்லை என்கிறார்.

சூரியனைப் பார்க்கும்போது அது வட்டமாகவும், சமனாகவும் சிவப்பாகவும் இருக்கக் காண்கிறோம். ஆனால் அது தவறு என்று விஞ்ஞானம் சொல்கிறது. சூரியன் சமனமாகவும் இல்லை, சிவப்பாகவும் இல்லை. ஆகவே நாம் விஞ்ஞானத்தைத் துணைகொண்டு சூரியனைப் பற்றிய நாம் கற்பித்த சில பொய்யான குணாம்சங்களைக் கணக்கிலிருந்து கழித்துவிடுகிறோம்; அதற்காகச் சூரியன் என்பதே கிடையாது என்று முடிவு செய்வதில்லை! ஆனால் இப்படிப்பட்ட முடிவுக்கு வருவதுதான் பெர்க்லிப் பாதிரியார் சாதித்த முடிவான சாதனை ஆகும்.

பண்டைக்காலத்திய கிரேக்க தத்துவ மெய்ஞானிகள் முதல்தர குணாம்சங்க ளென்றும் இரண்டாந்த குணாம்சகளென்றும் இனம்பிரித்தார்களே. அது விஞ்ஞான ஆய்வுக்கு முன்னே நிற்க முடியவில்லை என்று பெர்க்லி சுட்டிக் காட்டினார். ஆவர் சுட்டிக் காட்டியதில் தவறொன்றும் இல்லை. ஆனால் இந்த ஆய்வுக் கூற்றுகளிலிருந்து நியாயமற்ற முடிவுகளுக்கு அவர் வருகிறார். தர்க்கம் செய்யும் முறையில் ஒரு தவறு செய்கிறார். அதாவது எடுத்துக்கொண்ட பிரமாணங்களுக்கும், வந்தடைந்த முடிவுக்கும் சம்பந்தமோ நியாயமோ இல்லை என்ற குற்றத்தைச் செய்கிறார். அதன் விளைவாக, பொருட்களின் குணாம்சங்கள் என்பவை நமது புலனுணர்ச்சிகள் தெரிவிக்கின்ற மாதிரி இல்லை என்று காட்டுகிறார்.

அதாவது நமது புலன்கள் நம்மை ஏமாற்றுஇன்றன. புற உலகை பொருளின் யதார்த்த நிலையை, நமது புலன்கள் திரித்துக் கூறுகின்றன என்கிறார். ஆகவே புறத்தேயுள்ள பொருட்களின் யதார்த்த நிலை என்பது, பிரபஞ்சம் என்பது, கிடையாது என்று உடனே முடிவு கட்டுகிறார்.!

குறிப்பு:- பெர்க்லிப் பாதிரியாரின் இந்த ஆய்வுரையின் மூலம் வெளியிடப்பட்ட கருத்தையும் இதற்கு அடிப்படையாக உள்ள வாதங்களையும் பெர்க்லி வெளியிடுவதற்கு முன்பே, ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவில் ஆதி சங்கரர் வெளியிட்டிருக்கிறார் என்பது கவனிக்க தக்கது. பெர்க்லி 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஆதி சங்கரர் 8-ஆவது நூற்றாண்டில்வாழ்ந்தவர்.

மனிதர்கள் வாழும் இடம் அதாவது வீடு, அவர்கள் உண்ணும் உணவு போன்றவை பொருட்களாகும். இந்தப் பொருட்கள் எல்லாம் மனிதர்களுக்கு அப்பாற்பட்டு புறத்தில் இல்லை என்றும் அவை எல்லாம் மனிதர்களின் மனத்தில்தான் உள்ளது என்பதுவே பெர்க்லிப் பாதிரியார் மற்றும் ஆதி சங்கரின் வாதமாகும். இவர்களையும் இவர்களது கருத்துக்களையும் பரப்புபவர்களையும் புறநிலையிலுள்ள உணவை இவர்களுக்கு வழங்காமலும் மழையிலும் வெயிலிலும் வாடும்படி குடியிறுப்புகளிலிருந்து பொட்ட வெளியில் இருத்திவிட்டால் இவர்களது நிலைமை என்னவாகும்? இவர்களைப் பொறுத்த மட்டில் உணவு, வீடு போன்ற பொருட்கள் இவர்களது மனத்தில்தானே உள்ளது. இவர்களது மனதில் உள்ள பொருட்களான வீட்டில் குடியிருந்துகொண்டே இவர்களது மனதிலுள்ள உணவை உண்டு உயிர் வாழ்ந்துவிடுவார்களா? புறநிலையிலுள்ள உணவு இவர்களுக்கு கிடைக்கவில்லை என்றால் இவர்கள் செத்து மடிந்துவிடுவார்கள் என்ற உண்மையை மூடிமறைத்துவிட்டு மக்களை ஏமாற்றுவதற்கான தத்துவத்தையே இவர்கள் சொல்கிறார்கள். மேலும் பொருட்களும் எண்ணமும் ஒன்று என்றால் அவை எல்லாம் மனிதனது மனத்துக்குள்ளேயே உள்ளது என்றால் மனிதன் என்ற பொருளும் இல்லை என்றாகிறது. மனிதன் என்ற பொருளே இல்லை என்றால் மனம் மற்றும் சிந்தனையானது எங்கிருக்கும். ஆகவே இந்த தத்துவமானது எங்கும் எதுவும் இல்லை என்ற மாயாவாதத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

4. ஆன்மீகவாத தர்க்கத்தின் விளைவுகள்

"எல்லாம் நம் மனத்தின் உள்ளேதான் இருக்கின்றன" என்பதுவே கருத்துரையானால், புற உலகு என்பது கிடையாது என்ற முடிவுக்கு வந்தாக வேண்டும்.

இந்தத் தர்க்கத்தை அதன் முடிவு வரைக்கும் கொண்டுபோய்ப் பார்த்தால் என்ன ஆகும்? " நான் ஒருவன்தான் இருக்கிறேன் மற்றவர்கள் எல்லோரும் இல்லை, ஏனென்றால் என்னுடைய எண்ணங்களைக் கொண்டுதானே நான் மற்ற மனிதர்களை அறிகிறேன். பிற பொருட்களைப் போலவே, மற்ற மனிதர்களும் எனக்கு எண்ணக் குவியல்களே" என்று கூற வேண்டிய நிலைமைக்கு வந்துவிடுகிறோம். இதைத்தான் தத்துவ மெய்ஞானத்தில் "நான் ஒருவனே இருக்கிறேன்" என்று கூறுகிற தத்துவமாகக் குறிப்பிடுகிறார்கள். இதை ஆங்கிலத்தில் சோலிப்பிசம் ( Solipsism) என்பார்கள்.

இப்படிப்பட்ட தத்துவத்தை ஆதரிக்கிறீர்களே என்று யாராவது குற்றம் சாட்டுவார்களோ என்று பயந்து உள்ளுணர்வோடு பெர்க்லி தன்னை தற்காத்துக்கொள்கிறார் என்று லெனின் தம் நூலில் சொல்கிறார். இந்தத் தத்துவம் ஆன்மீக வாதத்தின் அதிதீவிரமான வடிவம் ஆகும். இந்தத் தத்துவத்தை தத்துவ மெய்ஞானிகள் யாரும் ஆதரித்தது கிடையாது. அதனால்தான் பொருள் ஒன்றில்லை என்று மறுக்கிற வாதம் தர்க்க ரீதியாகவும் முரண்பாடில்லாமலும் இருக்க வேண்டுமானால் இந்த அதிதீவிரமான முட்டாள்தனமான முடிவுக்கு, அதாவது "நான் ஒருவனே இருக்கிறேன்" என்ற தத்துவ ஞானத்துக்கு வந்து தீரவேண்டும். நாம் ஆன்மீகவாதிகளுடன் விவாதத்தில் இறங்கும் காலத்தில் இந்த விஷயத்தை மீண்டும் எடுத்துக்காட்ட முயற்சி செய்வோம்.

5. ஆன்மீகவாதத்தின் வாதங்கள்.

தத்துவ மெய்ஞான ரீதியான ஆன்மீகவாதம் என்றால் என்ன என்கிற விஷயத்தை பெர்க்லிதான் ஒளிவு மறைவில்லாமல் பட்டவர்த்தனமாக விளக்கி வைத்தார். அதனால்தான் அவருடைய தத்துவத்தை முடிந்தளவுக்கு எளிய முறையில் சுருக்கிச் சொன்னோம். இந்த வாதங்கள் எல்லாம் நமக்குப் புதியவை. ஆகவே அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அவற்றை நாம் மிகவும் அக்கறையுடன் படித்துத் தீரவேண்டும். மூளைக்கு வேலை கொடுத்தாக வேண்டும்.

ஆன்மீகவாதத்தை இன்னும் மறைபொருளாகச் சொல்லும் பாணியிலேயே சிலர் இறங்கக்கூடும். புதிய புதிய சொற்களையும் சொற்றொடர்களையும் அடுக்கித் திரையிட்டுப் பேசக்கூடும். அப்படி எல்லாம் செய்து பார்த்த போதிலும்"அந்தப் பழைய மனிதர் பெர்க்லி்ப் பாதிரியார்"தொகுத்த வாதங்களைத்தான் எல்லா ஆன்மீகவாத தத்துவ மெய்ஞானிகளும் திரும்பிச் சொல்கிறார்களே தவிர அவற்றிற்கு மேல் போகிறது இல்லை என்கிறார் லெனின்.

இதனை பின்னால் பார்ப்போம்.

இந்தியாவிலும் ஆதி சங்கரரின் ஆன்மீகவாதத்தையே மெச்சிப் புகழ்ந்து இந்தியாவின் தலைசிறந்த தத்துவ மெய்ஞானிகள் வாழ்ந்த நாடாக பழம் பெருமை பேசி மக்களை ஏய்த்துவரும் கூட்டமாக RSS பாஜக கும்பலும் தமிழ்நாட்டு ஆளுநர் ரவியின் பிரச்சாரத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்தியாவில் வாழ்ந்த ஆன்மீகவாதிகளோடு ஒப்பிடும் போது இங்கே வாழ்ந்த பொருள்முதல்வாத தத்துவ மெய்ஞானிகளைப் பற்றி இவர்கள் பேசமாட்டார்கள். இந்த ஆன்மீகவாதத்தின் அடிப்படையில் சனாதன தருமங்களைப் புகழ்ந்து பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை தாழ்ந்தவன் என்றும் உயர்ந்தவன் என்ற வருண,சாதிய கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதை நாம் காணலாம். இத்தகைய பிற்போக்கு கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கான கண்ணோட்டமே ஆன்மீகவாத தத்துவ மெய்ஞான கண்ணோட்டமாகும். ஆகவே இத்தகைய பிற்போக்கு சாதி, வருணக் கொள்கைகளை நாம் முறியடித்து புரட்சிகரமான கொள்கைகளை மக்கள் முன்வைக்க வேண்டுமானால் இந்தக் கண்ணோட்டத்திற்கு நேர்எதிரான இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை பெற வேண்டும். இந்த ஆன்மீகவாதத்தின் பித்தலாட்டத்தையும் சனாதனக் கொள்கையின்கொடூரத் தன்மையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆளும்வர்க்கங்கள் தயாரிக்கிற தத்துவ மெய்ஞான வரலாற்றில் ஆன்மீகவாதம்தான் ஆதிக்கம் வகித்து வந்தது. இன்றைக்கும் ஆதிக்கம் வகித்து வருகிறது. அதற்கு ஒரு சிந்தனை முறை, ஒரு கண்ணோட்டம் உண்டு. ஆன்மீகவாதம் ஆதிக்கம் வகிப்பதனால் நாம் மதச்சார்பற்ற கல்வியை முழுக்க முழுக்கப் பெற்றிருந்த போதிலும், அந்த ஆன்மீகவாதச் சிந்தனை முறை, அந்த ஆன்மீகவாதக் கண்ணோட்டம், நம் உள்ளே ஊடுருவி ஆழமாக வேரூண்றி இருக்கிறது..

இதையும் நாம் பின்னால் பார்ப்போம். (இந்தியாவில் மதச்சார்பற்ற அரசு என்றும் கல்வியில் மதச்சார்பற்ற முறையே கடைபிடிப்பதாகச் சொன்னாலும் இது பெயரளவுக்கே கடைபிடிக்கப்படுகிறது. தற்போது பாஜக கும்பல் பெயரளவிலான கொள்கையையும் தூக்கி எறிந்துவிட்டு வெளிப்படையாக இந்துத்துவ கொள்கைகளை கடைபிடிக்கிறது. அது கல்வித் துறையிலும் எதிரொலிக்கிறது. முட்டாள்தனமான ஆன்மீகக் கருத்துக்களைப் போதித்து மாணவர்களின் அறிவியல் வளர்ச்சியைத் தடுத்து முட்டாள் களாகவே வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறது.)

எல்லா ஆன்மீகவாதிகளின் வாதங்களுக்கும் அடிப்படையாக விளங்குவது பெருக்லியின் ஆய்வுரைகளே ஆகும். எனவே அவற்றில் பிரதானமான வாதங்களையும் அவை நிருபித்துக்காட்ட முயற்சிக்கும் விஷயங்களையும் சாறு பிழிந்தெடுத்து தர முயற்சிப்போம்.

RSS, பாஜக கும்பல் கிருஸ்துவ மதத்தின் மீது வெறுப்பை கக்கினாலும் அவர்களது ஆன்மீகக் கொள்கைகளை வலியுறுத்தும்போது இந்த பெர்க்லிப் பாதிரியாரின் ஆன்மீகக் கொள்கைகளையும் ஆதரிப்பதை நாம் பார்க்கலாம். இந்த ஆன்மீகக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்து மக்களை ஏய்ப்பதில் இந்த இந்துத்துவ கும்பல் கிருஸ்துவப்பாதிரியார்களோடு ஒன்றுபடுவதை நாம் காணலாம்.

5.1. ஆன்மாதான் பொருளை சிருஷ்டிக்கிறது (உருவாக்குகிறது)

தத்துவ மெய்ஞானத்தின் மூலப்பிரச்சனைக்கு ஆன்மீகவாதம் தரும் விடை இது. ஆன்மீகவாத கருத்துமுதல்வாதத்தின் ஆரம்ப வடிவம் இது. இது எல்லா மதங்களிலும் பிரதிபலிக்கக் காண்கிறோம்.ஆன்மாதான் உலகை சிருஷ்டிதது என்று எல்லா மதங்களும் அடித்துப் பேசுகின்றன.

இப்படி அடித்துப் பேசும் பேச்சுக்கு இரண்டு அர்த்தங்கள் இருக்க முடியும்.

ஒன்று:- கடவுள்தான் உலகைப் படைத்தார். அது, அதாவது கடவுள் நமக்கு வெளியே அப்பால் உண்மையிலேயே இருக்கிறது. இதுதான் எல்லாத் தெய்வத் தத்துவங்களிலும் காண்கிற சாதாரண ஆன்மீகவாதம். (தெய்வத் தத்துவம் என்றால் கடவுளைப் பற்றியும், தெய்வீக விஷயங்களைப் பற்றியும் கூறுகிற அஞ்ஞானம் இது Theology) அல்லது:- ஒன்றுக்கொன்று பொருத்தமற்ற எண்ணங்களைக் கடவுள் நமக்கு அளித்த உலகம் என்ற மாயையைச் சிருஷ்டித்தார். இதுதான் பெர்க்லிப் பாதிரியாரின் "பொருள் கலப்பற்ற ஆன்மீகவாதம்" எனப்படும். ஆன்மா ஒன்றுதான் யதார்த்தத்தில் இருப்பது. ஆன்மா சிருஷ்டித்ததின் விளைபொருள்தான் பிரபஞ்சம் (பொருள்) என்று அவர் நிருபிக்க விரும்புகிறார். அதனால்தான் நமது மனத்துக்கு வெளியே புறநிலையில், உலகம் என்ற ஒன்று இல்லை என்று ஆன்மீகவாதிகள் அடித்துப் பேசுகிறார்கள்.

5.2. நமது மனத்துக்கு வெளியே உலகம் என்று ஒன்றில்லை. இதைத்தான் பெர்க்லி நமக்கு நிருபித்துக்காட்ட விரும்பினார். அதற்காகத்தான் அந்தந்த குணாம்சங்கள் அந்தந்தப் பொருட்களுக்குச் சொந்தமானவை என்று நாம் சொல்வது தவறு என்றும், அந்த குணாம்சங்கள் எல்லாம் நமது மனத்துக்குள்ளேதான் இருக்கின்றன என்றும் அவர் உறுதி நிலையாகப் பேசினார். மேஜை நாற்காலி என்பவை எல்லாம் நம் மனத்திற்குள்ளேதான் இருக்கின்றன, புறநிலையில் அவை இருக்கவில்லை. ஏனெனில் பொருட்களைச் சிருஷ்டிப்பது நமது எண்ணங்களே, என்று ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள்.

5.3. நமது எண்ணங்கள்தான் பொருட்களைச் சிருஷ்டிக்கின்றன.அதாவது சிந்தனையின் பிரதிபலிப்புத்தான் பொருட்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்?

பொருள் என்ற மாயையை மனதுதான் சிருஷ்டிக்கிறது. பொருள் என்ற எண்ணம் நமது சிந்தனையில் உதிக்கும்படி மனதுதான் செய்கிறது. பொருட்களிலிருந்து புலன்களின் மூலமாக நாம் பெறும் புலனுணர்ச்சிகள் நமது மனத்திலிருந்து பிறக்கின்றனவே தவிர அந்தப் பொருட்களிலிருந்து பிறப்பதில்லை. ஆகவே இந்தக் காரணங்களை உத்தேசித்து இந்த உலகம் என்ற யதார்த்தமும், பொருட்களும் இருக்க காரணம் மனதுதான். எனவே நம்மைச்சூழ்ந்திருக்கும் புறப்பொருட்கள் எல்லாம் நமது மனதுக்குள்ளேதான் நிலை கொண்டிருக்கின்றனவே யொழிய மனதுக்கு வெளியே அவை இருக்கவில்லை; அவை நமது சிந்தனையின் பிரதிபலிப்பாகத்தான் இருக்க முடியும். வேறுவிதமாக இருக்க முடியாது.

ஆனால் ஒரு விஷயம், நமது மனது இந்த எண்ணங்களைச் சுயமாக சிருஷ்டிக்கச் சக்திபெற்றிருக்க முடியாது. சுயமாகவே மனது அவற்றை சிருஷ்டிக்க முடிந்திருந்தால் தான் விரும்பியதை எல்லாம் மனது சிருஷ்டித்திருக்கும் அல்லவா? அப்படி விரும்பியதை எல்லாம் மனது சிருஷ்டிக்கவில்லை. ஆதலால், மனது முதலியவற்றையெல்லாம்விட அதிக வல்லமை படைத்த ஆன்மாதான் அவற்றை சிருஷ்டித்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு தீரவேண்டும் என்கிறார் பெர்க்லி. எனவே கடவுள்தான் நமது மனதைச் சிருஷ்டிக்கிறார். அந்த மனதுக்குள்ளே நாம் சந்திக்கும் உலகத்தைப் பற்றிய எண்ணெங்களை எல்லாம் நம்மீது சுமத்தி வைக்கிறார்.

இந்தப் பிரதானக் கருத்துரைகள்தான் ஆன்மீகவாதத் தத்துவங்களுக்கு அடிப்படைகளாகும்.தத்துவ மெய்ஞானத்தின் மூலப்பிரச்சனைக்கு அவை கொடுக்கும் விடைகளும் இவையே.

இந்தப் பிரச்சனைக்கு பொருள்முதல்வாதம் தரும் விடை என்ன? மேற்சொன்ன ஆன்மீகவாதக்கருத்துரைகள் கிளப்புகின்ற பிரச்சனைகளுக்கு பொருள்முதல்வாதம் கொடுக்கும் பதில் என்ன?என்பதை அடுத்துவரும் இதழில் பார்க்கலாம்.

ஆன்மீகவாதம் முன்வைக்கும் கருத்துக்கள் வருமாறு.

1. கடவுள்தான் அனைத்தையும் சிருஷ்டித்தார்.

2. நமது எண்ணங்கள்தான் பொருட்களை உருவாக்குகின்றது.

3. பொருட்கள் எதுவும் புறநிலையில் இல்லை.

4. பொருட்கள் அனைத்தும் நமது எண்ணங்களுக்கு உள்ளேயே இருக்கின்றன.

5. சிந்தனையின் பிரதிபலிப்புத்தான் பொருட்கள்

6. உலகே மாயம், நாம் காணும் சுகமே மாயம்.

7. பொருள் என்ற எண்ணம் நமது சிந்தனையில் உதிக்கும்படி மனதுதான் செய்கிறது.

8. நமது புலனுணர்ச்சிகள் எல்லாம் நமது மனதிலிருந்துதான் பிறக்கின்றது. அந்தப்பொருட்களிலிருந்து தோன்றுவதில்லை.

9. இந்த உலகம் மற்றும் பொருட்க்கள் இருப்பதற்கு நமது மனம்தான் காரணம்.

10. நமது மனது எதையும் சுயமாக உருவாக்குவதில்லை. அதற்குரிய சக்தி அதற்கு இல்லை.

11. மனதைக்காட்டிலும் வலிமை படைத்த ஆன்மாவால் மட்டுமே எதையும் உருவாக்க முடியும்.

12. கடவுள்தான் நமது மனதை உருவாக்குகிறார்.

13. பொருள் கருத்து எல்லாம் ஒன்றே வெவ்வேறு அல்ல.

இவ்வாறு பொருளையும் கருத்தையும் அதாவது எண்ணங்களையும் குறித்து குழப்பமான

மற்றும் அபத்தமான கருத்துக்களைக் கொண்டதுதான் ஆன்மீகவாத கருத்துமுதல்வாத

மெய்ஞானம் ஆகும்.இது அபத்தமானது என்பதை நம்மில் பலர் அறிவார்கள். எனினும் இந்தக்

கண்ணோட்டமானது பல காலமாக நாம் ஏற்றுச் செயல்படுத்திப் பழக்கப்பட்டுவிட்டதால்

நம்மில் பலர் இந்தக் கண்ணோட்டத்திலிருந்து மீண்டுவர இயலாமல் இருக்கிறோம். நமது

அரசியல் சமூக வாழ்க்கைப் பிரச்சனைகளை புரிந்துகொண்டு தீர்ப்பதற்கு நம்மிடமுள்ள

இத்தகைய கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம் தடையாக இருக்கிறது. ஆகவே நம்மிடம்

மிச்சசொச்சமாக உள்ள இந்தக் கண்ணோட்டத்தை களைந்து இயக்கவியல்

பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியது மிகமிக

அவசியமாகும்........தேன்மொழி.

இலக்கு இதழின் பணி-ஆசிரியர் குழு

 மனிதகுல வரலாற்றில் மனித சமூகம் வளர்வதற்கான அதன் வளர்ச்சி விதிகளை கண்டுபிடித்து உழைக்கும் மக்களுக்கு வழங்கியவர்கள் காரல்மார்க்சும், எங்கெல்சும் ஆவார்கள். அவர்களால் உருவாக்கப்பட்ட தத்துவத்தின் மூலம் சமூக வளர்ச்சிக்கு முரணின்றி பாடுபடக்கூடிய வர்க்கம் பாட்டாளி வர்க்கம் என்றும் அந்த வர்க்கத்தின் தலைமையில் நடைபெறும் புரட்சிகரப் போராட்டங்களின் மூலமே சமூகம் வளர்ச்சியடையும் என்று தெளிவாக விஞ்ஞானப் பூர்வமாக ஒரு சித்தாந்தத்தை முன்வைத்தார்கள்.

இந்த பொதுவான தத்துவத்தை உள்வாங்கி ரஷ்ய சமூகத்தை இந்த கண்ணோட்டத் திலிருந்து ஆய்வு செய்து ரஷ்யப் புரட்சிக்கான சித்தாந்தத்தை லெனின் தலைமையிலான தொழிலாளர் கட்சி உருவாக்கி அந்த சித்தாந்தத்தை அதாவது கட்சியின் வேலைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியை கட்டி, ரஷ்ய தொழிலாளர்களையும் விவசாயி களையும் அணிதிரட்டி புரட்சிகரமான போராட்டங்களை நடத்தியதன் மூலம் அங்கே தொழிலாளி வர்க்கத்தின் ஜனநாயக ஆட்சி நிறுவப்பட்டது.

இந்தப் புரட்சியால் ஈர்க்கப்பட்டு உலகில் பல நாடுகளிலும் கம்யூனிஸ்டு கட்சிகள் கட்டப்பட்டது. இந்தியாவிலும் கம்யூனிஸ்டு கட்சி கட்டப்பட்டது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாளர்களும் விவசாயிகளும் திரட்டப்பட்டு பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. பிரிட்டீஷ் ஆட்சியின் பயங்கரவாதத்தால் தொழிலாளர் களும் விவசாயிகளும் கம்யூனிஸ்டுகளும் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு பல தியாகங்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சி செய்தபோதும் அதனால் ரஷ்ய, சீனக் கம்யூனிஸ்டுகள் போல் வெற்றியடைய முடியவில்லை.

அதற்கு முதன்மையான காரணம் மார்க்சிய லெனினிய தத்துவ வெளிச்சத்தில் இந்திய சமூகத்தை பருண்மையாக ஆய்வு செய்து இந்திய சுதந்திரத்திற்கான ஒரு விஞ்ஞானப்பூர்வமான சித்தாந்தத்தை உருவாக்க (வேலைத்திட்டத்தை) இந்திய பொதுவுடமை இயக்கம் தவறியதுதான். அத்தகைய திட்டத்தை உருவாக்க வேண்டுமானால் பொதுவுடமையின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் ஒரு பொது தளத்தில் விவாதித்து ரஷ்ய கம்யூனிஸ்டுகள் செய்தது போன்ற முயற்சியில் ஈடுபடுவதன் மூலமே அதனை சாதிக்க முடியும்.

அதற்கு நாம் அனைவரும் விவாதிப்பதற்கு ஒரு பத்திரிக்கை தேவை. இந்த தேவையை இலக்கு இணையதள பத்திரிக்கை மூலம் துவங்கி தொடர்ந்துக் கொண்டுள்ளோம் .

இன்று நாட்டு நடப்பை இயக்கங்களின் நிலைகளை புரிந்துக் கொள்ள சில முக்கிய கட்டுரைகளை கொணர்ந்தோம்.

ஆக தோழர்களே, இலக்கு என்ற இந்த இணைய இதழின் நமது நோக்கம்:- இன்றைய சமுதாயத்தில் நிலவும் அரசியல் பொருளாதார, கலாச்சார முரண்பாடுகளை விஞ்ஞான பூர்வ கண்ணேட்டத்தில் அணுகி மார்க்சிய லெனினிய புரட்சிகர அரசியல் அதிகாரத்திற்கான தத்துவப்பயிரை நடுவதும், நடை முறை நீரை ஊற்றுவதும், வளர்ப்பதும், மார்க்சிய லெனினிய அறிவியலை எளிமைப்படுத்தி புரட்சிகர அறிவு ஜீவிகளை வளர்ப்பதும், “சுரண்டலற்ற சமுதாயத்திற்கான புரட்சித் திசைவழியைக் காட்டுவதே யாகும்.”.

இதில் முதற்கண் புரட்சிகர அறிவு ஜீவிகளோடு விவாதிப்பதும்,சரியான மார்க்சிய அறிவியலை எல்லோரும் ஏற்க்கும் வகையில் புரிய வைப்பதுமே யாகும்.

"இலக்கு” இதழில் தங்களது விமர்சனங்களை விவாதங்களை மார்க்சிய லெனினிய முறையில் வைக்கும் படி அழைக்கும் அதே நேரத்தில் தங்களின் நிலையை சரிப்படுத்துவதோடு மற்ற தோழர்களின் அறிவு மேலும் செழுமைப்படுத்தப்படுவதுடன் புரட்சிகர சக்திகளின் மீதான விமர்சனத்தின் அவசியம் தவறுகளில் இருந்து விடுபட்டு மீண்டும் தவறுகள் வராத முறையில் இருப்பதற்காகவே ஆகும். அதாவது “மருத்துவர் ஒருவர் நோய்க்கு சிகிச்சை அளித்தல் என்பது; நோயாளியைக் காப்பாற்றுவதே அன்றி அவர் இறப்பதற்கு சிகிச்சை அளிப்பதல்ல”.

பாட்டாளி வர்க்கத்தின் அரசியல், பொருளாதாரம், தத்துவம் ஆகிய துறைகளில் மார்க்சிய லெனினிய வாதிகளை வளர்க்க முயற்சிப்போம், சமூக நிகழ்வுகளையும் மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் விவாதித்து சரியான வழிமுறையை முன்வைத்து பேசுவோம்.

இதழில் வரும் கருத்துகளை விமர்சிப்பதன் மூலம், கட்டுரைகளைத் தந்துதவுவதன் மூலம், இதழ்களைப் பரப்புவதன் மூலம், பிற சகல முயற்சிகளின் மூலம் இவ்விதழ் வேட்கையை வளரச் செய்யுங்கள்! வாழச் செய்யுங்கள்! நன்றி தோழர்களே.



இடதுசாரி இயக்க ஒற்றுமையின் அவசியமும் ஒற்றுமைக்கு தடை கற்களை அகற்ற ஓர் ஆரோக்கியமான விவாதம்

தோழர்களே வணக்கம்.

நேற்றய விவாதம் ஒலி வடிவில் கேட்க்க இங்கே அழுத்தவும்

இன்று மார்க்சியம் மார்க்சியமல்லாத போக்கு என்ற இரு போக்கு உள்ளது

நாம் மார்க்சியம் பேசுவோரை மட்டும் கணக்கில் கொண்டால் மார்க்சியத்தை நடைமுறை படுத்த வாழுவோரும் மார்க்சியத்தை கொச்சை படுத்தி வாழ்வோரும் என்று இருபோக்கு உள்ளது.

மார்க்சியத்தை நடைமுறை படுத்துவோரும் இருவகையில் உள்ளனர் ஒருபுறம் நடைமுறையற்ற கோட்பாட்டுவாதம் இன்னொறுபுறம் கோட்பாடே இல்லாத நடைமுறை - ஆக மார்க்சியவாதிகளாக நாம் பல சந்தர்பங்களில் இந்த இரு போக்குகளை புரிந்துக் கொண்டு நமது மார்க்சிய ஆசான்களின் வழி நின்று நாட்டில் உள்ள சூழலுகேற்ப மக்களை அரசியல்படுத்துவதும் சமூக மாற்றத்திற்கான முன்னெடுத்து செல்ல நமது பணிகளை புரிந்து செயல்படவும் ஒரு சிறிய முயற்சியே இவை.  

தொண்ணூறுகளில் சோஷலிச நாடுகளில் ஏற்பட்ட சரிவுகளுக்குப் பின் இதுகாறும் கூடுதலாகக் கவனம் அளிப்பதற்குத் தவறிய பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தப்பட வெண்டியதன் அவசியங்கள் பற்றிய பேச்சு இன்று உருவாகியுள்ளது. 

சோவியத், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோஷலிசக் கட்டுமான முயற்சிகள் சென்ற நுற்றாண்டின் இறுதியில் கடும் பின்னடைவுக்கு உள்ளாயின. முதலாளிய நாடுகளில் இருந்த அளவிற்குப் பெரிய ஏற்றத் தாழ்வுகள் இல்லாமலும் ஓரளவு அடிப்படை வசதிகள் அனைவருக்கும் பூர்த்தி செய்யப்பட்ட சமூகங்களாகவும் அவை அமைந்தபோதும் சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய ‘சோஷலிச’ அரசுகள் பொலபொலவென உதிர்ந்தன. இப்படியானதில் உலக ஏகாதிபத்தியங்களுக்குப் பெரும் பங்கு உண்டறன்றோ???

மார்க்சியமல்லாத பல போக்குகளை இன்று இடதுசாரிகள் மேற்கொள்கின்றனர், அவையாவன:- பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்கிற கருத்தைக் கைவிடல். பல்வேறு சீர்திருத்தவாத பிற்போக்கு ஆளும் வர்க்க சித்தாந்தங்களை கைகொள்ளல். பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படையான வர்க்க ரீதியான அணிசேர்க்கையை கைவிட்டு தனித்தனியான பிரச்சினைகளின் அடிப்படையில் அடையாள அரசியலை கையிலெடுத்தல்...

மா-லெ குழுக்கள் தேர்தல் பாதை - அழித்தொழிப்பு பாதை தவிர்த்து மூன்றாவது ஒன்றையே மக்கள் திரள் பாதை என்று சொல்லி வருகின்றனர்.தேர்தலில் பங்கெடுத்த வலது, இடது கம்யூனிஸ்டுகள், லிபரேசன், நியூ டெமாக்ரசி போன்ற குழுக்கள் தந்த அனுபவத்தின் ஆய்வுக்குள் சென்று அவர்கள் செய்த தவறுகள் என்ன, அதற்கு இவரது மாற்று என்ன? 

ஆக பல்வேறு போக்குகளில் சிதறுண்டுகிடக்கும் புரட்சியாளர்கள் ஒன்றிணைய வேண்டியது இன்றைய சமூக சூழல் வலியுறுத்துகிறது அதனை ஏற்று செயல்பட வேண்டியது இடதுசாரிகளின் கடமை என்பதனை தவிர வேறில்லை... உங்கள் கருத்தை பகிருங்கள் தோழர்களே...

தென்னமெரிக்க நாடான பெருவில் ஆட்சி கவிழ்ப்பு- சிபி

 புரட்சியின் மூலம் இந்த முதலாளித்துவப் பாராளுமன்ற ஆட்சியை அகற்றிவிட்டு சோவியத்து வடிவத்திலான பாட்டாளிகளின் ஆட்சியை நிறுவ வேண்டும் என்றே கம்யூனிஸ்டுகளுக்கு மார்க்சிய ஆசான்கள் வழிகாட்டினார்கள். இந்த அடிப்படையிலேயே ரஷ்யாவில் ஒரு புரட்சியின் மூலம் முதலாளித்துவ ஆட்சி அகற்றப்பட்டு சோசலிச சோவியத்து ஆட்சி உருவாக்கப்பட்டது இரண்டாம் உலகப்போருக்கு பின் உலகில் பல நாடுகளில் புரட்சியின் மூலமே சோசலிசம் மலர்ந்தது. குருசேவின் நவீன திருத்தல்வாதம் உலக கம்யூனிச கட்சிகளை திருத்தல்வாத கட்சியாக பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை துறந்தோடியதன் மூலம் முதலாளித்துவ "சமாதான முறையில்" பாராளுமன்ற வழியில் பல நாடுகளில் அரங்கேறி தோல்வியை தழுவிக் கொண்டுள்ளது. அதில் ஒரு அண்மை நிகழ்வு தென்னமெரிக்க நாடான பெருவில், கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிப் பெற்று ‘சுதந்திர பெரு’ என்ற ‘இடதுசாரி கட்சி’யைச் சேர்ந்த பெட்ரோ கேஸ்டிலோ அதிபரானார். இவரது வெற்றியை உலகம் முழுவதும் உள்ள கம்யூனிசத் திரிபுவாதிகள் பெரிதும் போற்றி வரவேற்றனர். தற்போது பெரு அதிபர் பெட்ரோவின் துரோக ஆட்சியும் அவருக்கு எதிரான ஆட்சிக் கவிழ்ப்பும்... நிரூபித்துள்ளது நமது ஆசான்களின் கோட்பாடுகளை ஏற்காமையே எனலாம்.

பெட்ரோ கேஸ்டிலோ அதிபரான 18 மாதங்களில் அவர் மீதும் அவரது அரசாங்க அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டின்கீழ் பெட்ரோவை பதவிநீக்கம் செய்ய காங்கிரஸ் இரண்டு முறை முயற்சித்தது. ஆனால், பெரும்பான்மை வாக்கு கிடைக்காததால் அவரது பதவி நீக்கம் சற்று தள்ளிப்போனது.

இம்முறை ஆட்சியைத் தக்கவைத்து கொள்ள காங்கிரஸ் கூடுவதற்கு முன்னரே தொலைக் காட்சி ஊடகத்தில் காட்சியளித்த பெட்ரோ, “அவசரகால சட்டத்தைக் கொண்டு காங்கிரசைக் கலைத்துவிட்டு, புதிய தேர்தலை நடத்தப் போவதாக” அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ், “அரசாங்கத்திற்கு எதிராக பெட்ரோ கேஸ்டிலோ சதி செய்ததாக” குற்றஞ்சாட்டி அதிபர் பதவியில் இருந்து நீக்கியதோடு, கைது செய்து சிறையிலும் அடைக்க உத்தரவிட்டது. மேலும், ‘நிரந்தர தார்மீக திறமையற்றவர்’ என்ற அடிப்படையில் காங்கிரஸில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 130-க்கு 101 என்று பெட்ரோவுக்கு எதிராக வாக்குப் பதிவானது.

அண்டை நாடுகளின் தூதரகத்தை அடைய முயன்றபோது அவரது பாதுகாப்புஅதிகாரிகளாலேயே கைது செய்யப்பட்டார். பெரு இராணுவம், போலீசுதுறை மட்டுமல்ல துணை அதிபர் உள்ளிட்ட பெட்ரோவின் சொந்த அமைச்சரவை உறுப்பினர்களே பெட்ரோவுக்கு எதிரணியில் நின்றனர்.

மக்கள் படும் துன்ப துயரங்களையும் மக்களிடையே நிலவிய ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வையும் கவர்ச்சிகரமான முழக்கங்களை முன்வைத்து வாக்குகளாக மாற்றி வெற்றிப் பெற்று அதிபரான பெட்ரோ, தனியார்மயக் கொள்கைகளை அமல்படுத் தியதோடு அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமே சரணாகதி அடைத்திருப்பது அப்பட்டமான பிழைப்புவாதம், பச்சை துரோகமாகும்.

தங்களை ஆண்ட வலதுசாரிகளின் ஆட்சியில் அனுபவித்த துன்பதுயரங்கள் பெட்ரோ ஆட்சியிலாவது மாறாதா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். பெட்ரோ மக்களின் அந்த எதிர்பார்ப்புக்கு துரோகமிழைத்தாலும், ஏகாதிபத்திய அடிவருடி வலதுசாரிகளுக்கு பெட்ரோவை கைது செய்ய அருகதை இல்லை என்பதே மக்கள் போராட்டங்களின் வெளிப்பாடாகும். மக்களின் இந்த நம்பிக்கைக்கு சிறிதும் அருகதையில்லா தவர்தான் இந்த பெட்ரோ.

ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்ட மக்களை இப்போலி இளஞ்சிவப்பு பாதைக்கு வெளியே புரட்சிப்பாதையில் அணிதிரட்ட, மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிக்கரக் கட்சியைக் கட்டியமைப்பதுதான் பெரு மக்களுக்கு மட்டுமல்ல ‘இளஞ்சிவப்பு அலை’ மாயையில் கட்டுண்டு கிடக்கும் தென்னமெரிக்க நாடுகளின் மக்களுக்கு அவசர அவசிய தேவையாக உள்ளது. செய்தி ஆதாரம் வினவு தளத்திலிருந்து.

மீண்டும் ஒருமுறை பாராளுமன்றம் என்ற மாயையில் சிக்கி தவிக்கும் திருத்தல்வாதிகளுக்கு உரிய பாடமே பெருவில் நடந்த நிகழ்வு. இதை புரிந்துக் கொள்ள நமது ஆசான் லெனினிடமே செல்வோம்.

முதலாளித்துவ அரசு இயந்திரத்தின் முதன்மையான உறுப்பு ராணுவமே ஒழிய பாராளுமன்றம் அல்ல என்பதனை இரண்டாம் உலகப் போருக்கு பின் நடைபெற்ற நிகழ்வுகள் நமக்கு மீண்டும் மீண்டும் நிரூபித்து உள்ளது. பாராளுமன்றம் என்பது முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு அலங்கார சின்னமாக ஒரு மூடுதிரையாக இருந்து வருகிறது பாராளுமன்றத்தை ஏற்றுக் கொள்வதும் அல்லது கைவிடுவதும் அல்லது பாராளுமன்றத்துக்கு அதிகமாகவோ குறைவாகவோ அதிகாரம் அளிப்பதும் வெவ்வேறு விதமான தேர்தல் முறையைக்கைகொள்வது ஆகிய இவற்றில் எதை தேர்ந்தெடுப்பது என்பது முதலாளித்துவ ஆட்சியின் தேவைக்கும் நலன்களுக்கும் ஏற்றார்போல் தான் எப்போதும் தீர்மானிக்கப் படுகிறது முதலாளிகள் ராணுவ அதிகார வர்க்க நிறுவனங்களை கட்டுப்படுத்தும் வரை தேர்தல் மூலம் பாட்டாளிகள் பாராளுமன்றத்தில் நிலையான பெரும் பான்மை பெறுவது என்பது சாத்தியமற்றது அல்லது அத்தகைய நிலையான பெரும்பான்மை நம்பப்பட முடியாது பாராளுமன்ற பாதை வழியாக சோசலிசத்தை அடைவது என்பது அறவே சாத்தியம் இல்லாததும் வெறும் ஏமாற்றுப் பேச்சும் ஆகும் லெனின் கூறினார் , "புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி மக்களை விழிப்படையச் செய்யும் பொருட்டு முதலாளித்துவ பாராளு மன்றத்தில் பங்கெடுக்க வேண்டும் தேர்த லின் போதும் பாராளுமன்றத்தில் கட்சி களுக்கு இடையில் நடக்கும் போராட்டங் களின் போதும் அவ்வாறு செய்ய முடியும் ஆனால் வர்க்கப் போராட்டத்தை பாராளு மன்ற போராட்டமாக குறுக்கி விடுவது பாராளுமன்ற போராட்டத்தை உயர்ந்த பட்ச தீர்மானகரமான வடிவமாக்கி அனைத்துப் போராட்ட வடிவங்களையும் இதற்கு உட்பட்டதாகவே ஆக்குவது உண்மையில் பாட்டாளி வர்க்கத்துக்கும் எதிராக முதலாளி வர்க்கதினத்தின் பக்கம் ஓடி விடுவதாகும்" (லெனின் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பக்கம் 36 ஆங்கில பதிப்பு மாஸ்கோ).

லெனின் மேலும் சொல்லுகிறார் "ஒவ்வொரு ஜனநாயக கோரிக்கையும் வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளர்களை பொறுத்த வரையில் சோசலிசத்தின் மிக உயர்ந்த நலன்களுக்கு கீழ்ப்பட்டதே" மேலும் அரசும் புரட்சி என்ற நூலில் ஏங்கெல்சை மேற்கோள் காட்டி எழுதுகிறார்,"அன்றாட தற்காலிக நலன்களுக்கான மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிலைப்பாட்டை மறந்து விடுவதும் பின் விளைவுகளைப் பற்றி ஆராய்ந்து பார்க்காமல் அப்போதைய வெற்றிக்காக முயற்சிப்பதும் போராடுவதும் நிகழ்காலத் திற்காக இயக்கத்தின் எதிர்காலத்தை தியாகம் செய்வதும் சந்தர்ப்பவாதம் ஆகும் அதுவும் அபயகரமான சந்தர்ப்பவாதமாகும்". "குறிப்பாக இந்த அடிப்படையில் தான் சீர்திருத்தத்தை புகழ்வது ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு அடிபணிவது புரட்சியை பலிகொடுப்பது , கைவிடுவது ஆகியவற்றிர் காக காவுட்ஸ்கியை விமர்சனம் செய்தார் லெனின்". (லெனின் பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடு காலி காவுட்ஸ்கியும் தேர்வு நூல் தொகுதி 2 பக்கம் 95 ).

பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்க நிலைக்கு உயர்த்துவதும், ஜனநாயகத்துக்கான போரில் வெற்றி ஈட்டுவதும், தொழிலாளி வர்க்கம் நடத்தும் புரட்சியில் முதல் படியாகும்- கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை

 கம்யூனிஸ்டுகளின் தத்துவ முடிவுகள், யாரோ ஒரு வருங்கால உலகளாவிய சீர்திருத்தவாதி தோற்றுவித்த அல்லது கண்டுபிடித்த கருத்துகளையோ கோட்பாடுகளையோ எந்த வகையிலும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை.

நடந்துவரும் வர்க்கப் போராட்டத்திலிருந்தும், நம் கண்ணெதிரிலேயே நிகழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்று இயக்கத்திலிருந்தும், கிளர்ந்தெழும் மெய்யான உறவுகளையே இந்தத் தத்துவ முடிவுகள் பொதுப்படையான வாசகங்களில் எடுத்துரைக்கின்றன. நிலவிவரும் சொத்துடைமை உறவுகளை ஒழிப்பதென்பது கம்யூனிசத்தின் தனித்துநிற்கும் ஒரு கூறே அல்ல.

வரலாற்று நிலைமைகளில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாக, கடந்த காலத்தில் சொத்துடைமை உறவுகள் யாவும், தொடர்ந்தாற்போல் வரலாற்று ரீதியான மாற்றத்துக்கு உட்பட்டே வந்துள்ளன. எடுத்துக்காட்டாக, ஃபிரெஞ்சுப் புரட்சி நிலப்பிரபுத்துவச் சொத்துடைமையை ஒழித்துக் கட்டி, முதலாளித்துவச் சொத்துடைமைக்கு வழிவகுத்தது.

கம்யூனிசத்தின் தனித்து விளங்கும் சிறப்புக்கூறு, பொதுப்படையாகச் சொத்துடைமையை ஒழிப்பதன்று, முதலாளித்துவச் சொத்துடைமையை ஒழிப்பதே ஆகும். ஆனால், நவீன முதலாளித்துவத் தனியார் சொத்துடைமை என்பது, வர்க்கப் பகைமைகளையும், சிலர் பலரைச் சுரண்டுவதையும் அடிப்படையாகக் கொண்டு, பொருள்களை உற்பத்தி செய்து, கையகப்படுத்திக் கொள்ளும் அமைப்புமுறையின் முடிவான, மிகவும் முழுமையான வெளிப்பாடாகும்.

இந்தப் பொருளில், கம்யூனிஸ்டுகளின் கொள்கையைத் ’தனியார் சொத்துடைமை ஒழிப்பு’ என்னும் ஒரே வாக்கியத்தில் சுருக்கிக் கூறிவிடலாம்.

ஒரு மனிதன் தன் சொந்த உழைப்பின் பலனை அவனுடைய தனிப்பட்ட சொத்தாக்கிக் கொள்ளும் உரிமையைக் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் ஒழிக்க விரும்புவதாகப் பழித்துரைக்கப்படுகிறோம். இந்தத் தனிப்பட்ட சொத்துதான் தனிநபர் சுதந்திரம், செயல்பாடு, தற்சார்பு ஆகியவை அனைத்துக்கும் அடிப்படை என்றும் சொல்லப்படுகிறது.

பாடுபட்டுப் பெற்ற, சுயமாகச் சேர்த்த, சுயமாகச் சம்பாதித்த சொத்து! முதலாளித்துவச் சொத்து வடிவத்துக்கு முன்பிருந்த சொத்து வடிவமான சிறு கைவினைஞர், சிறு விவசாயி ஆகியோரின் சொத்தினையா குறிப்பிடுகிறீர்கள்? அதை ஒழிக்க வேண்டிய தேவை இல்லை. தொழில்துறை வளர்ச்சியானது அதைப் பெருமளவுக்கு ஏற்கெனவே அழித்து விட்டது, இன்றுவரை நாள்தோறும் தொடர்ந்து அழித்துக் கொண்டிருக்கிறது.

அல்லது, நவீன கால முதலாளித்துவத் தனியார் சொத்தினைக் குறிப்பிடுகிறீர்களா?

ஆனால், கூலியுழைப்பு தொழிலாளிக்கு ஏதேனும் சொத்தினை உருவாக்கியுள்ளதா? துளியும் கிடையாது. கூலியுழைப்பு மூலதனத்தைப் படைக்கிறது. மூலதனம் என்பது ஒருவகையான சொத்துடைமை ஆகும். அதாவது, இந்தவகைச் சொத்துடைமை கூலியுழைப்பைச் சுரண்டுகிறது. மேலும், அதற்கு, மறுபடியும் சுரண்டப் புதிதாகக் கூலியுழைப்பு கிடைக்கின்ற நிலைமை நிலவ வேண்டும், இல்லையேல் அது தன்னைப் பெருக்கிக் கொள்ள முடியாது. சொத்துடைமை அதன் இன்றைய வடிவில், மூலதனத்துக்கும் கூலியுழைப்புக்கும் இடையேயான பகைமையை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்தப் பகைமையின் இரண்டு பக்கங்களையும் பரிசீலிப்போம்.

முதலாளியாக இருப்பதற்கு உற்பத்தியில் தனக்கே உரிய சொந்த அந்தஸ்தை மட்டுமின்றி, ஒரு சமூக அந்தஸ்தையும் பெற்றிருக்க வேண்டும். மூலதனம் என்பது கூட்டுச் செயல்பாட்டின் விளைவுப் பொருள். சமுதாயத்தின் பல உறுப்பினர்களது ஒன்றுபட்ட செயலால் மட்டுமே, இன்னும் சொல்லப் போனால், சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களது ஒன்றுபட்ட செயலால் மட்டுமே மூலதனத்தை இயங்க வைக்க முடியும்.

ஆக, மூலதனம் என்பது ஒருவரின் தனிப்பட்ட சக்தியல்ல; அது ஒரு சமூக சக்தியாகும்.

எனவே, மூலதனம் பொதுச் சொத்தாக, சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களின் சொத்தாக மாற்றப்படும்போது, அதன்மூலம் தனிநபர் சொத்து சமூகச் சொத்தாக மாற்றப்படவில்லை. சொத்துடைமையின் சமூகத் தன்மை மட்டுமே மாற்றப்படுகிறது. அது தன் வர்க்கத் தன்மையை இழந்து விடுகிறது.

சோஷலிசம் பற்றி கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்

 கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை-

கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்

அத்தியாயம்-3

சோஷலிச இலக்கியமும் கம்யூனிச இலக்கியமும் 

() நிலப்பிரபுத்துவ சோஷலிசம்

ஃபிரான்சையும் இங்கிலாந்தையும் சேர்ந்த பிரபுக் குலத்தோருக்கு, அவர்களின் வரலாற்று நிலை காரணமாக, நவீன முதலாளித்துவ சமுதாயத்தை எதிர்த்துப் பிரசுரங்கள் எழுதுவது அவர்களுடைய வாழ்க்கைத் தொழில் ஆனது. 1830 ஜூலையில் நடைபெற்ற ஃபிரெஞ்சுப் புரட்சியிலும், இங்கிலாந்து சீர்திருத்தக் கிளர்ச்சியிலும் இந்தப் பிரபுக் குலத்தோர், வெறுக்கத்தக்க திடீர்ப் பணக்காரர்களிடம் மீண்டும் தோற்றுப் போயினர். அதன்பிறகு, தீவிர அரசியல் போராட்டத்துக்குக் கொஞ்சமும் வழியில்லாமல் போய்விட்டது. இனி இலக்கியப் போர் ஒன்றுதான் சாத்தியமானதாக இருந்தது. ஆனால், இலக்கியத் துறையிலுங்கூட மீட்சிக் காலத்தின் பழைய கூப்பாடுகள் சாத்தியமற்றுப் போயின.அனுதாபத்தைப் பெறும்பொருட்டுப் பிரபுக் குலத்தோர், வெளிப்பார்வைக்காவது தம் சொந்த நலன்களை மறந்துவிட்டு, சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கத்தின் நலனை மட்டுமே கருத்திற்கொண்டு, முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் தம் குற்றச்சாட்டை வகுத்துக் கொள்ளக் கடமைப்பட்டிருந்தனர். இவ்வாறாகப் பிரபுக் குலத்தோர் தங்களின் புது எஜமானர் மீது வசைமாரி பொழிந்தும், வரப்போகும் பேரழிவு குறித்து அச்சமூட்டும் தீர்க்க தரிசனங்களை அவர் காதுகளில் முணுமுணுத்தும் வஞ்சம் தீர்த்துக் கொண்டனர்.

இவ்வாறுதான் நிலப்பிரபுத்துவ சோஷலிசம் உதயமானது: பாதி புலம்பல், பாதி வசைப்பாட்டு; பாதி கடந்த காலத்தின் எதிரொலி, பாதி எதிர்காலம் பற்றிய அச்சுறுத்தல்; சில நேரங்களில் அதன் கசப்பான, கிண்டலான, சுருக்கெனத் தைக்கும் விமர்சனத்தின் மூலம் முதலாளித்துவ வர்க்கத்தின் நெஞ்சக்குலை மீதே தாக்குவதாக இருந்தது. ஆனாலும், நவீன வரலாற்றின் முன்னேற்றத்தைப் புரிந்து கொள்ளும் திறன் கொஞ்சமும் இல்லாத காரணத்தால், எப்போதுமே அதன் விளைவு பரிகசிக்கத் தக்கதாகவே இருந்தது.

பிரபுக் குலத்தோர், மக்களைத் தம் பக்கம் திரட்டும்பொருட்டு, பாட்டாளியின் பிச்சைப் பாத்திரத்தைப் பதாகைபோல் தமக்கு முன்னால் உயர்த்திப் பிடித்தனர். ஆனால் மக்களோ அவர்களோடு சேர்ந்தபோதெல்லாம், அவர்களின் முதுகுப் புறத்தில் பழைய நிலப்பிரபுத்துவப் பட்டயங்கள் இருக்கக் கண்டனர். உரத்த, மரியாதையற்ற சிரிப்புடன் மக்கள் அவர்களைவிட்டு விலகிச் சென்றனர். ஃபிரெஞ்சு மரபுவழி முடியாட்சிவாதிகள் (French Legitimists) 'இளம் இங்கிலாந்து' அமைப்பினர் ஆகியோரில் ஒரு பிரிவினர் இந்தக் கேலிக்கூத்தை அரங்கேற்றினர்.

தங்களின் சுரண்டல் முறை, முதலாளித்துவ வர்க்கச் சுரண்டல் முறையிலிருந்து வேறுபட்டது என்பதைச் சுட்டிக்காட்டும் நிலப்பிரபுத்துவவாதிகள், முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலைமைகளிலும் உறவு நிலைமைகளிலும் அவர்கள் சுரண்டினர் என்பதையும், அந்த நிலைமைகள் தற்போது காலாவதியாகிவிட்டன என்பதையும் மறந்துவிடுகின்றனர். தங்களுடைய ஆட்சியின்கீழ் நவீனப் பாட்டாளி வர்க்கம் ஒருபோதும் இருந்ததில்லை என்பதை எடுத்துரைக்கும் அவர்கள், அவர்தம் சமுதாய அமைப்புமுறையிலிருந்து தவிர்க்க முடியாதபடி கிளைத்தெழுந்ததே நவீன முதலாளித்துவ வர்க்கம் என்பதை மறந்து விடுகின்றனர்.

மற்றபடி, அவர்கள் தங்கள் விமர்சனத்தின் பிற்போக்குத் தன்மையை மூடிமறைக்க முயலவில்லை. முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான அவர்களின் பிரதான குற்றச்சாட்டே இதுதான்: அதாவது, பழைய சமுதாய அமைப்புமுறையை வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டி வீழ்த்துவதற்கென்றே விதிக்கப்பட்ட ஒரு வர்க்கம் முதலாளித்துவ ஆட்சியின்கீழ் வளர்க்கப்பட்டு வருகிறது என்பதுதான். பாட்டாளி வர்க்கத்தை உருவாக்குகிறது என்பதற்காகக்கூட அல்ல, புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத்தை உருவாக்குகிறது என்பதற்காகவே அவர்கள் முதலாளித்துவ வர்க்கத்தைக் குற்றம் சாட்டுகிறார்கள்.

எனவே, அரசியல் நடைமுறையில், தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகள் அனைத்திலும் அவர்கள் கைகோத்துக் கொள்கின்றனர்; அவர்களுடைய பகட்டான வாய்ப்பேச்சுகள் ஒருபுறமிருக்க, அன்றாட நடைமுறை வாழ்க்கையில் அவர்கள் தரம் தாழ்ந்துபோய், தொழில்துறை மரத்திலிருந்து விழுகின்ற பொற்கனிகளைப் பொறுக்கித் தின்னவும், கம்பளி, பீட்ரூட்-சர்க்கரை, உருளைக்கிழக்கு சாராயம் ஆகியவற்றின் சட்டவிரோத வணிகத்தில் பண்டமாற்றாக வாய்மை, அன்பு, கவுரவம் ஆகியவற்றை விலைபேசவும் தயாராக உள்ளனர்.

() குட்டி முதலாளித்துவ சோஷலிசம்

முதலாளித்துவ வர்க்கத்தால் நாசமடைந்தது நிலப்பிரபுத்துவச் சீமான்களின் வர்க்கம் மட்டுமே அல்ல; நவீன முதலாளித்துவ சமுதாயத்தின் சூழலில் வாழ்வாதார நிலைமைகள் வாடிச் சிதைந்தது இந்தவொரு [நிலப்பிரபுத்துவ] வர்க்கத்துக்கு மட்டுமே அல்ல. மத்திய கால நகரத்தாரும் சிறு விவசாய நிலவுடைமையாளர்களுமே நவீன முதலாளித்துவ வர்க்கத்தின் முன்னோடிகளாக இருந்தனர். தொழில் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் சொற்ப வளர்ச்சியே பெற்றுள்ள நாடுகளில் உதித்தெழுந்துவரும் முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கத்திலேயே, இவ்விரு வர்க்கங்களும் [மத்திய கால நகரத்தார் வர்க்கமும், சிறு விவசாய நிலவுடைமை வர்க்கமும்] செயலிழந்த நிலையில் இன்னமும் காலந் தள்ளுகின்றன.

நவீன நாகரிகம் முழுமையாக வளர்ந்துநிற்கும் நாடுகளில் குட்டி முதலாளிகளின் புதிய வர்க்கமொன்று உருப்பெற்றுள்ளது. அது பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது; முதலாளித்துவ சமுதாயத்தின் வால்பகுதியாக எப்போதும் தன்னைப் புதுப்பித்து வருகிறது. என்ற போதிலும், இந்த வர்க்கத்தின் தனிப்பட்ட உறுப்பினர்கள், வணிகப் போட்டியின் செயல்பாட்டால், பாட்டாளி வர்க்கத்தினுள் தொடர்ந்து தூக்கி எறியப்பட்டு வருகின்றனர். நவீனத் தொழில்துறை வளர்வதைத் தொடர்ந்து, நவீன சமுதாயத்தின் ஒரு சுயேச்சையான பிரிவாக நீடிக்க முடியாமல் முற்றிலும் மறைந்துபோகும் காலம் நெருங்கி வருவதையும், பட்டறைத் தொழிலிலும், விவசாயத்திலும், வணிகத்திலும் அவர்களுக்குப் பதிலாக மேற்பார்வையாளர்களும், சம்பள அலுவலர்களும், கடை ஊழியர்களும் நியமிக்கப்படப் போவதையும் அவர்கள் [குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர்] கண்கூடாகக் காண்கின்றனர்.

மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் விவசாயிகளாக இருக்கும் ஃபிரான்சு போன்ற நாடுகளில், முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் நின்ற எழுத்தாளர்கள், முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான அவர்களின் விமர்சனத்தை விவசாயிகள், குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினர் ஆகியோரின் தரத்தில் முன்வைப்பதும், இந்த இடைத்தட்டு வர்க்கங்களின் நோக்கு நிலையிலிருந்து தொழிலாளி வர்க்கத்துக்காகப் பரிந்து பேசுவதும் இயல்பே ஆகும். இவ்வாறுதான் குட்டி முதலாளித்துவ சோஷலிசம் உதயமானது. ஃபிரான்சில் மட்டுமன்றி இங்கிலாந்திலும் இத்தகைய கருத்தோட்டத்துக்கு சிஸ்மோண்டி (Sismondi) தலைமை தாங்கினார்.

இந்த வகைப்பட்ட சோஷலிசம் நவீன உற்பத்தி உறவுகளிலுள்ள முரண்பாடுகளை மிகத் துல்லியமாகப் பாகுபடுத்திக் காட்டியது. குட்டி முதலாளித்துவ சோஷலிசம், பொருளாதார வல்லுனர்களின் கபடமான நியாயவாதங்களைத் தோலுரித்துக் காட்டியது. எந்திர சாதனங்கள், உழைப்புப் பிரிவினை ஆகியவற்றின் நாசகர விளைவுகளையும், மூலதனமும் நிலமும் ஒருசிலரின் கைகளில் குவிவதையும், தேவைக்கு அதிகமான உற்பத்தியையும், [வணிக] நெருக்கடிகளையும் அது மறுக்க முடியாத வகையில் மெய்ப்பித்துக் காட்டியது. குட்டி முதலாளித்துவப் பிரிவினர், விவசாயிகள் ஆகியோரின் தவிர்க்க முடியாத அழிவையும், பாட்டாளி வர்க்கத்தின் கடுந்துயரையும், உற்பத்தியில் நிலவும் அராஜகத்தையும், செல்வ வளத்தின் வினியோகத்தில் காணப்படும் படுமோசமான ஏற்றத் தாழ்வுகளையும், தேசங்களுக்கு இடையிலான சர்வநாசத் தொழில்துறைப் போரையும் குட்டி முதலாளித்துவ சோஷலிசம் சுட்டிக் காட்டியது. பழைய ஒழுக்கநெறிப் பிணைப்புகளும், பழைய குடும்ப உறவுகளும், பழைய தேசிய இனங்களும் குலைந்து போவதையும் அது சுட்டிக் காட்டியது.

எனினும், இந்த வகைப்பட்ட சோஷலிசம் அதன் உறுதியான குறிக்கோள்களைப் பொறுத்தவரை, பழைய உற்பத்தி சாதனங்களையும், பரிவர்த்தனை சாதனங்களையும், அவற்றுடன் கூடவே பழைய சொத்துடைமை உறவுகளையும், பழைய சமுதாயத்தையும் மீட்டமைக்க விரும்புகிறது. அல்லது, நவீன உற்பத்தி சாதனங்களையும் பரிவர்த்தனை சாதனங்களையும், அவற்றால் தகர்த்தெறியப்பட்ட, தகர்த்தெறியப்பட்டே ஆகவேண்டிய, பழைய சொத்துடைமை உறவுகளின் கட்டுக்கோப்புக்குள் அடக்கி வைக்கவே விரும்புகிறது. இவ்விரண்டில் அதன் குறிக்கோள் எதுவாயினும், இந்த வகைப்பட்ட சோஷலிசம் பிற்போக்கானதும் கற்பனாவாத தன்மை கொண்டதுமே ஆகும்.

() ஜெர்மானிய சோஷலிசம் அல்லது மெய்யான'” சோஷலிசம்

ஃபிரான்சு நாட்டு சோஷலிச, கம்யூனிச இலக்கியம் என்பது ஆட்சியதிகாரத்திலிருந்த முதலாளித்துவ வர்க்கத்தின் ஒடுக்குமுறையில் தோன்றியதோர் இலக்கியமாகும். இந்த ஆட்சியதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தின் வெளிப்பாடாக அது விளங்கியது. ஜெர்மனியில் முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தோடு தன் போராட்டத்தை அப்போதுதான் தொடங்கியிருந்த நேரத்தில் அந்த நாட்டில் இந்த இலக்கியம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜெர்மானியத் தத்துவவாதிகளும், கற்றுக்குட்டித் தத்துவவாதிகளும், வாய்ச்சவடால் பேச்சாளர்களும் (beaux esprits) இந்த இலக்கியத்தை ஆவலுடன் தம் வசப்படுத்திக் கொண்டனர். ஆனால் இந்த எழுத்துகள் ஃபிரான்சிலிருந்து ஜெர்மனிக்குள் குடியேறியபோது, அவற்றோடு கூடவே ஃபிரெஞ்சு சமூக நிலைமைகளும் ஜெர்மனிக்குள் குடியேறவில்லை என்பதை மட்டும் அவர்கள் மறந்துவிட்டனர். ஜெர்மன் சமூக நிலைமைகளில் வைத்துப் பார்க்கையில் இந்த ஃபிரெஞ்சு இலக்கியம் அதன் உடனடி நடைமுறை முக்கியத்துவம் அனைத்தையும் இழந்துவிட்டது; முழுக்கவும் இலக்கியத் தன்மை கொண்ட ஒரு போக்காகவே நிலைபெற்றது. இவ்வாறாக, பதினெட்டாம் நூற்றாண்டின் ஜெர்மானியத் தத்துவவாதிகளுக்கு, முதலாவது ஃபிரெஞ்சுப் புரட்சியின் கோரிக்கைகள், பொதுநோக்கில் வெறும் நடைமுறைப் பகுத்தறிவின்கோரிக்கைகளே; அதற்கு மேலான முக்கியத்துவம் எதுவுமில்லை. புரட்சிகர ஃபிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தினுடைய எண்ணத்தின் வெளிப்பாடு, தூய எண்ணத்தின் விதிகளாக, இயல்பாக இருக்க வேண்டிய எண்ணத்தின் விதிகளாக, பொதுவாக உண்மையான மனித எண்ணத்தின் விதிகளாக அவர்களின் கண்களுக்குப் பட்டது.

ஜெர்மானிய இலக்கிய வல்லுனர்களின் (literati) பணி, புதிய ஃபிரெஞ்சுக் கருத்துகளைத் தங்களின் பண்டைத் தத்துவ மனச்சாட்சிக்கு இசைவானதாக வளர்த்தெடுப்பதில் மட்டுமே அடங்கியிருந்தது. அல்லது இன்னும் சரியாகச் சொல்வதாயின், தம் சொந்தத் தத்துவக் கண்ணோட்டத்தைக் கைவிடாமல், ஃபிரெஞ்சுக் கருத்துகளைத் தமதாக்கிக் கொள்வதில் மட்டுமே அடங்கியிருந்தது.

இவ்வாறு தமதாக்கிக்கொள்ளல், ஓர் அயல் மொழியைத் கையகப்படுத்திக் கொள்ளும் அதே வழியில், அதாவது மொழிபெயர்ப்பு மூலமாக, நடந்தேறியது.

பண்டைக்காலப் பலகடவுள் மதத்தாரின் மூலச் சிறப்புள்ள இலக்கியங்கள் தீட்டப் பெற்றிருந்த கையெழுத்துப் பிரதிகளின் மேல், கத்தோலிக்க மதகுருக்களின் அற்பமான வாழ்க்கைக் குறிப்புகளை மடாலயத் துறவிகள் எழுதிவைத்ததை நாம் நன்கறிவோம். தெய்வ நிந்தனை கொண்ட ஃபிரெஞ்சு இலக்கியத்தைப் பொறுத்தமட்டில், ஜெர்மானிய இலக்கிய வல்லுனர்கள் (literati)இதே செயல்முறையைத் தலைகீழாகச் செய்து முடித்தார்கள். ஃபிரெஞ்சு மூலத்துக்குக் கீழே தங்களின் தத்துவ அபத்தத்தை எழுதிவைத்தனர். எடுத்துக்காட்டாக, பணத்தின் பொருளாதாரச் செயல்பாடுகளைப் பற்றிய ஃபிரெஞ்சு விமர்சனத்துக்கு அடியில் அவர்கள், ”மானுடத்தின் அந்நியமாதல்” (Alienation of Humanity) என்று எழுதினர். முதலாளித்துவ அரசு பற்றிய ஃபிரெஞ்சு விமர்சனத்துக்கு அடியில், ”பொதுமை என்னும் வகையினத்தின் ஆட்சி இறக்கம்” (Dethronement of the Category of General) என்று எழுதினர். இன்னும் இதுபோல.

ஃபிரெஞ்சின் வரலாற்று ரீதியான விமர்சனங்களுக்குப் பின்னால் இத்தகைய தத்துவவியல் சொல்தொடர்களைப் புகுத்தும் பணிக்கு அவர்கள், ”செயல்பாடு பற்றிய தத்துவம்” (Philosophy of Action), ”மெய்யான சோஷலிசம்” (True Socialism), ”ஜெர்மானிய சோஷலிச விஞ்ஞானம்” (German Science of Socialism), ”சோஷலிசத்தின் தத்துவ அடிப்படை” (Philosophical Fountation of Socialism), இன்னும் இதுபோலப் பலவாறாகப் பெயர்சூட்டிக் கொண்டனர்.

இவ்வாறாக, ஃபிரெஞ்சு சோஷலிச, கம்யூனிச இலக்கியத்தை முழுமையாக ஆண்மையிழக்கச் செய்தனர். அந்த இலக்கியம் ஜெர்மானியன் கைக்கு வந்தபின், ஒரு வர்க்கத்துக்கு எதிராக இன்னொரு வர்க்கம் நடத்தும் போராட்டத்தை வெளிப்படுத்தும் தன்மையை இழந்துவிட்டது. அதனாலேயே அவன் [ஜெர்மானியன்] ”ஃபிரெஞ்சுக்காரரின் ஒருதலைப்பட்சப் பார்வையிலிருந்துதான் மீண்டுவிட்டதாகக் கருதிக் கொண்டான். உண்மையான தேவைகளை அல்ல, உண்மையின் தேவைகளை எடுத்துரைப்பதாகவும், பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை அல்ல, மனித இயல்பின் நலன்களை, பொதுவாக மனிதனின் நலன்களை எடுத்துரைப்பதாகவும் கருதிக் கொண்டான். அவன் கருதும் மனிதனோ எந்த வர்க்கத்தையும் சேராதவன், எதார்த்த இயல்பு இல்லாதவன், தத்துவார்த்தக் கற்பனையின் பனிமூடிய சாம்ராஜ்யத்தில் மட்டுமே நிலவக் கூடியவன்.

இந்த ஜெர்மானிய சோஷலிசம், ஒரு பள்ளிக்கூட மாணவன் செய்யக்கூடிய வேலையை அவ்வளவு தீவிரத்துடனும் பயபக்தியுடனும் எடுத்துக்கொண்டது. பிறரை நம்பவைத்து ஏமாற்றும் பாணியில், தன்னுடைய அற்பமான கருத்துகளை வானளாவப் புகழ்ந்துகொண்டது. இதற்கிடையே அதன் பகட்டுப் புலமை வாய்ந்த அப்பாவித்தனத்தைப் படிப்படியாக இழந்துவிட்டது.

ஊக வணிகச் சிலந்தி வலையால் ஆன மேலங்கி, அலங்காரச் சொற்களெனும் சித்திர வேலைப்பாடு செய்யப்பட்டு, குமட்டுகின்ற பசப்பு உணர்ச்சியெனும் பனித் திவலைகளில் தோய்த்தெடுக்கப்பட்டது. அறிவுக்கு அகப்படாத (transcendental) இந்த மேலங்கியால்தான் ஜெர்மானிய சோஷலிஸ்டுகள், எலும்பும் தோலுமாக இருந்த, பரிதாபத்துக்குரிய தங்களின் நிரந்தர உண்மைகளைமூடிப் போர்த்தியிருந்தனர். இந்த மேலங்கி, அவர்களுடைய சரக்குகளின் விற்பனையை இத்தகைய மக்களிடையே [குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரிடையே] வியப்பூட்டும் அளவுக்கு அதிகரிக்க உதவியது. மேலும், ஜெர்மானிய சோஷலிசம் தன்னைப் பொறுத்தமட்டில், குட்டி முதலாளித்துவப் போலிப் பண்புவாதிகளின் படாடோபமான பிரதிநிதியாக விளங்குவதே தனக்குரிய பணி என்பதை மென்மேலும் உணர்ந்தது.

2. பழமைவாத சோஷலிசம் அல்லது முதலாளித்துவ சோஷலிசம்

முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பகுதி, முதலாளித்துவ சமுதாயம் தொடர்ந்து நிலவுவதை உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு, சமூகக் குறைபாடுகளை அகற்ற விழைகிறது.

[முதலாளித்துவ வர்க்கத்தின்] இந்தப் பிரிவில், பொருளாதார வல்லுனர்கள், கொடை வள்ளல்கள், மனிதாபிமானிகள், தொழிலாளி வர்க்கத்தின் நிலையை மேம்படுத்துவோர், கருணை இல்லம் நடத்துவோர், விலங்குகளுக்குக் கொடுமை விளைவிப்பதைத் தடுக்க விழையும் சங்கங்களின் உறுப்பினர்கள், குடிவெறிக்கு எதிரான கொள்கை வீரர்கள், கற்பனைக்கு எட்டும் அனைத்து வகையான மூலை முடுக்கச் சீர்திருத்தப் பேர்வழிகள் ஆகியோர் அனைவரும் அடங்குவர். மேலும், இந்த வகைப்பட்ட சோஷலிசம் முழுமையான [தத்துவ] அமைப்புகளாக முறைப்படுத்தப்பட்டுள்ளது.

புரூதோன் எழுதிய வறுமையின் தத்துவம் (Philosophie de la Misere) என்னும் நூலை இந்த வகைப்பட்ட சோஷலிசத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.

சோஷலிசவாத முதலாளித்துவப் பிரிவினர், நவீன சமூக நிலைமைகளின் அனுகூலங்கள் அனைத்தும் வேண்டும், ஆனால் அந்த நிலைமைகளின் தவிர்க்கவியலா விளைவுகளாகிய போராட்டங்களும் அபாயங்களும் இருக்கக் கூடாது என விரும்புகின்றனர். தற்போது நிலவும் சமூக அமைப்பு, அதன் புரட்சிகரக் கூறுகளும் சிதைவுபடுத்தும் கூறுகளும் இன்றி, அப்படியே நீடிப்பதையே இவர்கள் விரும்புகின்றனர். பாட்டாளி வர்க்கம் இல்லாமல் முதலாளித்துவ வர்க்கம் மட்டும் இருக்க ஆசைப்படுகின்றனர். முதலாளித்துவ வர்க்கம், தான் மேலாதிக்கம் வகிக்கும் உலகே தலைசிறந்ததென இயல்பாகவே கருதுகின்றது. இந்த வசதியான கருத்தோட்டத்தை முதலாளித்துவ சோஷலிசம், ஏறக்குறைய முழுமைபெற்ற பல்வேறு [தத்துவ] அமைப்புகளாக வளர்த்தெடுக்கிறது. பாட்டாளி வர்க்கம் இத்தகையதோர் அமைப்பைச் செயல்படுத்த வேண்டும், அதன்வழியே நேரே ஒரு புதிய சமூக ஜெரூசலத்தை நோக்கி நடைபோட வேண்டுமெனக் கோருகிறது. அவ்வாறு கோருவதன்மூலம் நடைமுறையில் அது கேட்பது என்னவெனில், பாட்டாளி வர்க்கம், தற்போது நிலவும் சமுதாயத்தின் வரம்புகளுக்கு உட்பட்டதாக நீடிக்க வேண்டும்; அதே வேளையில், முதலாளித்துவ வர்க்கம் பற்றி அதற்குள்ள வெறுக்கத்தக்க கருத்துகள் அனைத்தையும் விட்டொழிக்க வேண்டும் என்பதுதான்.

இந்த சோஷலிசத்தின் இரண்டாவது வடிவம் அதிக நடைமுறை சாத்தியமானது, ஆனால் [தத்துவ ரீதியில்] குறைவாக முறைப்படுத்தப்பட்டது. தொழிலாளி வர்க்கத்துக்கு வெறும் அரசியல் சீர்திருத்தத்தால் எவ்வித அனுகூலமுமில்லை; பொருளாயத வாழ்க்கை நிலைமைகளில், பொருளாதார உறவுகளில் ஏற்படும் மாறுதல் மட்டுமே அனுகூலமாக இருக்கும் என்று அது எடுத்துக் கூறியது. அவ்வாறு கூறுவதன் மூலம், தொழிலாளி வர்க்கத்தின் பார்வையில் ஒவ்வொரு புரட்சிகர இயக்கத்தையும் மதிப்பிழக்கச் செய்ய முயன்றது. என்றபோதிலும், இந்த வகைப்பட்ட சோஷலிசம், பொருளாயத வாழ்க்கை நிலைமைகளில் மாற்றங்கள் என்று கூறியதன் மூலம், ஒரு புரட்சியால் மட்டுமே சாதிக்கப்படக் கூடிய முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் ஒழிப்பை ஒருபோதும் குறிக்கவில்லை; முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் தொடர்ந்து நீடிப்பதை அடிப்படையாகக் கொண்ட நிர்வாகச் சீர்திருத்தங்களையே குறிக்கிறது. எனவே, இவ்வகை சீர்திருத்தங்கள் மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையிலான உறவுகளை எந்த விதத்திலும் பாதிக்காதவை. ஆனால், அதிகப்பட்சமாக முதலாளித்துவ அரசாங்கத்தின் செலவுகளைக் குறைக்கும், நிர்வாகப் பணியை எளிமையாக்கும், அவ்வளவே.

முதலாளித்துவ சோஷலிசம் வெறும் சொல் அலங்காரமாக ஆகும்போது அவ்வாறு ஆகும்போது மட்டுமே அது தன்னைச் சரியானபடி வெளிப்படுத்திக் கொள்கிறது.

சுதந்திரமான வணிகம்: தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காக. காப்புச் சுங்க வரிகள்: தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காக. சிறைச்சாலைச் சீர்திருத்தம்: தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காக. இதுதான் முதலாளித்துவ சோஷலிசத்தின் முத்தாய்ப்பான சொல், கருத்தார்ந்த பொருளுணர்த்தும் ஒரே சொல்.

முதலாளித்துவ சோஷலிசத்தைக் கீழ்க்காணும் வாக்கியத்தில் சுருக்கமாகச் சொல்லிவிடலாம்: முதலாளி முதலாளியாக இருப்பது தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காகவே.

3. விமர்சன-கற்பனாவாத சோஷலிசமும், விமர்சன-கற்பனாவாத கம்யூனிசமும்

நிலப்பிரபுத்துவ சமுதாயம் வீழ்த்தப்படுகையில் உலகெங்கும் பரபரப்பு நிலவிய அந்தக் காலங்களில் பாட்டாளி வர்க்கம் தன் சொந்த லட்சியங்களை எட்டுவதற்காக மேற்கொண்ட முதல் நேரடி முயற்சிகள் தவிர்க்க முடியாதவாறு தோல்வியடைந்தன. காரணம், பாட்டாளி வர்க்கத்தின் அப்போதைய வளர்ச்சியுறாத நிலை. அத்துடன், அது விடுதலை பெறுவதற்கான பொருளாதார நிலைமைகள் அப்போது நிலவவில்லை. அத்தகைய நிலைமைகள் இனிமேல்தான் தோற்றுவிக்கப்படவிருந்தன. வரவிருந்த முதலாளித்துவ சகாப்தம் மட்டுமே அந்த நிலைமைகளைத் தோற்றுவிக்க முடியும். பாட்டாளி வர்க்கத்தின் இந்தத் தொடக்க கால இயக்கங்களுடன் கூடவே தோன்றிய புரட்சிகர இலக்கியம், தவிர்க்க முடியாதவாறு ஒருவித பிற்போக்குத் தன்மையைக் கொண்டிருந்தது. உலகளாவிய துறவுவாதத்தையும், மிகவும் முரட்டு வடிவிலான சமூகச் சமமாக்கத்தையும் அது போதித்தது.

சரியான சோஷலிச, கம்யூனிசக் கருத்தமைப்புகள் என்று சொல்லப்பட்ட, சான் சிமோன், ,பூரியே, ஓவன் மற்றும் பிறரின் கருத்துகள், மேலே விவரிக்கப்பட்ட, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டத்தின் வளர்ச்சியுறாத தொடக்கக் காலகட்டத்தில் தோன்றி நிலவியவையே. (அத்தியாயம்-1, 'முதலாளிகளும் பாட்டாளிகளும்' என்பதைப் பார்க்கவும்). இந்தக் கருத்தமைப்புகளைத் தோற்றுவித்தவர்கள், நடப்பிலிருந்த சமுதாய அமைப்புமுறையில் நிலவிய வர்க்கப் பகைமைகளையும், அதோடுகூட, சிதைந்து கொண்டிருந்த கூறுகளின் செயல்பாட்டையும் கண்டனர் என்பது உண்மையே. ஆனால் இன்னமும் மழலைப் பருவத்தில் இருந்த பாட்டாளி வர்க்கம், எந்தவொரு வரலாறு படைக்கும் முன்முயற்சியோ, எந்தவொரு சுயேச்சையான அரசியல் இயக்கமோ இல்லாத ஒரு வர்க்கமாகவே அவர்களுக்குக் காட்சி தந்தது.

வர்க்கப் பகைமையின் வளர்ச்சி, தொழில்துறை வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடைபோடுவதால், அவர்கள் [சான் சிமோன் முதலியோர்] காணும் பொருளாதாரச் சூழ்நிலை பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்குகந்த பொருளாயத நிலைமைகளை இன்னும் அவர்களுக்குப் புலப்படுத்தவில்லை. எனவே, அவர்கள் அத்தகைய நிலைமைகளைத் தோற்றுவிப்பதற்கான ஒரு புதிய சமூக விஞ்ஞானத்தை, புதிய சமூக விதிகளைத் தேடிச் செல்கின்றனர்.

வரலாற்று ரீதியான செயல்பாடு, அவர்களுடைய சொந்தமுறையிலான கண்டுபிடிப்புச் செயலுக்கு உட்பட வேண்டும்; வரலாற்று ரீதியாக உருவாக்கப்பட்ட விடுதலைக்கான நிலைமைகள், [அவர்களின்] கற்பனையில் உருவான நிலைமைகளுக்கு உட்பட வேண்டும்; பாட்டாளி வர்க்கத்தின் படிப்படியான, தன்னியல்பான வர்க்க ஒழுங்கமைப்பு, இந்தக் கண்டுபிடிப்பாளர்கள் இதற்கெனப் பிரத்தியேகமாகப் புனைந்தளிக்கும் சமூக ஒழுங்கமைப்புக்கு உட்பட வேண்டும் [என்றாகியது]. அவர்தம் சமூகத் திட்டங்களுக்கான பிரசாரத்தையும், அத்திட்டங்களை நடைமுறையில் செயல்படுத்துவதையும் சுற்றியே வருங்கால வரலாறு அமையும் என அவர்களின் பார்வைக்குத் தோன்றுகிறது.

அவர்கள் தம் திட்டங்களை வகுத்தமைக்கும்போது, மிக அதிகமாகத் துன்புறும் வர்க்கம் என்ற வகையில் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களில்தான் முதன்மையாக அக்கறை செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்தே உள்ளனர். அவர்களைப் பொறுத்தவரையில் பாட்டாளி வர்க்கம் என ஒன்று இருக்கிறதெனில், மிக அதிகமாகத் துன்புறும் வர்க்கம் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே.

இந்த வகைப்பட்ட சோஷலிஸ்டுகள், வர்க்கப் பகைமைகள் அனைத்துக்கும் மிகமிக மேலானோராகத் தம்மைத்தாமே கருதிக்கொள்வதற்கு, வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி பெறாத நிலையும், அதோடுகூட அவர்களின் சொந்தச் சுற்றுச்சார்புகளும் காரணமாயின. சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினரின் நிலையையும், மிகவும் சலுகை படைத்தவரின் நிலையையுங்கூட, மேம்படுத்த அவர்கள் விரும்புகின்றனர். எனவே, வர்க்க வேறுபாடு கருதாமல் சமுதாயம் முழுமைக்கும் வேண்டுகோள் விடுப்பதை, சரியாகச் சொல்வதெனில், முன்னுரிமை தந்து ஆளும் வர்க்கத்துக்கு வேண்டுகோள் விடுப்பதை அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏனெனில், அவர்கள் எடுத்துரைக்கும் அமைப்பினை ஒருவர் புரிந்துகொண்டபின், சமுதாயத்தின் சாத்தியமான நிலைகளுள் மிகச்சிறந்த நிலையை எய்துவதற்குரிய, சாத்தியமான திட்டங்களிலேயே மிகச்சிறந்த திட்டம் அது என்பதை அவர் காணத் தவற முடியுமோ?

எனவே, அவர்கள் அனைத்து அரசியல் செயல்பாடுகளையும், குறிப்பாக அனைத்து புரட்சிகரச் செயல்பாடுகளையும் நிராகரிக்கின்றனர்; சமாதான வழிகளில் தம் லட்சியங்களை அடைந்திட விரும்புகின்றனர்; நிச்சயமாகத் தவிர்க்க முடியாத தோல்வியில் முடிகிற சிறு பரிசோதனைகள் மூலமும், முன்மாதிரி [அமைப்புமுறை]யின் சக்தியைக் கொண்டும், புதிய சமூக வேதத்துக்குப் பாதை வகுத்திட அவர்கள் பெருமுயற்சி செய்கின்றனர்.

வருங்கால சமுதாயத்தைப் பற்றிய இத்தகைய கற்பனைச் சித்திரங்கள், பாட்டாளி வர்க்கம் இன்னமும் வளர்ச்சி பெறாத நிலையில், ஆனால் அதனுடைய சொந்த நிலைகுறித்துக் கற்பனையான கருத்தோட்டம் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் தீட்டப்பட்டவையாகும். சமுதாயத்தின் பொதுவான மறுசீரமைப்புகுறித்து, அந்த வர்க்கத்துக்கு உள்ளுணர்வு ரீதியாக எழும் ஆசைகளுக்கு ஏற்பவே அச்சித்திரங்கள் அமைந்துள்ளன.

ஆனால், இந்த சோஷலிச, கம்யூனிச வெளியீடுகளில் ஒரு விமர்சனக் கூறும் அடங்கியுள்ளது. தற்போது நிலவும் சமுதாயத்தின் ஒவ்வொரு கோட்பாட்டையும் அவை தாக்குகின்றன. எனவே, தொழிலாளி வர்க்கம் அறிவொளி பெறுவதற்கான மிகவும் மதிப்புவாய்ந்த விவரக் குறிப்புகள் அவற்றில் நிறைந்துள்ளன. நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையிலான பாகுபாட்டை ஒழித்தல், குடும்ப அமைப்புமுறையை ஒழித்தல், தனிப்பட்ட நபர்களின் நலனுக்காகத் தொழில்கள் நடத்துவதை ஒழித்தல், கூலிமுறையை ஒழித்தல், சமுதாயத்தின் ஒருங்கிசைவைப் பிரகடனம் செய்தல், அரசின் பணிகளை வெறுமனே உற்பத்தியை மேற்பார்வை செய்யும் பணியாக மாற்றிவிடல் - இவைபோன்ற நடைமுறை நடவடிக்கைகள் அந்த வெளியீடுகளில் முன்மொழியப்படுகின்றன. இத்தகைய முன்மொழிவுகள் அனைத்தும், வர்க்கப் பகைமைகள் மறைந்துபோவது ஒன்றை மட்டுமே சுட்டுவதாக உள்ளன. இந்த வர்க்கப் பகைமைகள் அந்தக் காலகட்டத்தில் அப்போதுதான் முளைவிடத் தொடங்கியிருந்தன. வர்க்கப் பகைமைகள் அவற்றின் தொடக்க காலத்தே நிலவிய தெளிவற்ற, வரையறுக்கப்படாத வடிவங்களில் மட்டுமே இந்த வெளியீடுகளில் அடையாளம் காணப்படுகின்றன. எனவே, இந்த முன்மொழிவுகள் கலப்பற்ற கற்பனாவாதத் தன்மை கொண்டவையாகவே உள்ளன.

விமர்சன-கற்பனாவாத சோஷலிசம், விமர்சன-கற்பனாவாத கம்யூனிசம் ஆகியவற்றின் முக்கியத்துவம் வரலாற்று வளர்ச்சியுடன் எதிர்விகித உறவைக் கொண்டுள்ளது. நவீன வர்க்கப் போராட்டம் எந்த அளவுக்கு வளர்ச்சிபெற்று திட்டவட்டமான வடிவம் பெறுகிறதோ, அந்த அளவுக்குப் போராட்டத்திலிருந்து இவ்வாறு கற்பனையாக விலகி நிற்றலும், அதன்மீது தொடுக்கப்படும் கற்பனையான தாக்குதல்களும் நடைமுறை மதிப்பனைத்தையும், தத்துவ நியாயம் அனைத்தையும் இழந்து விடுகின்றன. எனவே, இந்த [தத்துவ] அமைப்புகளின் மூலவர்கள், பலவிதத்தில் புரட்சிகரமாக விளங்கியபோதும், இவர்களின் சீடர்கள் ஒவ்வொரு சூழலிலும் வெறும் பிற்போக்குக் குறுங்குழுக்களாகவே அமையப் பெற்றுள்ளனர். பாட்டாளி வர்க்கத்தின் முற்போக்கான வரலாற்றுபூர்வ வளர்ச்சிக்கு எதிராகத் தங்கள் குருநாதர்களின் மூலக் கருத்துகளை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டுள்ளனர். எனவே, வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிக்கவும், வர்க்கப் பகைமைகளைச் சமரசப்படுத்தவும் விடாமல் தொடர்ந்து முயலுகின்றனர். தங்களின் கற்பனாவாத சமூகத் திட்டங்களைச் சோதனை பூர்வமாக நடைமுறைப்படுத்தி விடலாமென இன்னமும் கனவு காண்கின்றனர். ஆங்காங்கே தனித்தனியான சில வேலைக் கூட்டமைவுகளைத்” (Phalansteries) தோற்றுவித்தல், ”உள்நாட்டுக் குடியிருப்புகளை” (Home Colonies) நிறுவுதல், ஒரு குட்டி ஐகேரியாவை” (Little Icaria) அதாவது புது ஜெரூசலத்தின் குட்டி மாதிரிகளை அமைத்தல் ஆகியவை இவர்களின் கற்பனாவாத சமூகத் திட்டங்கள். இந்த ஆகாயக் கோட்டைகளையெல்லாம் கட்டிமுடிக்க, இவர்கள் முதலாளிமார்களின் பரிவுணர்வுக்கும் பணத்துக்கும் வேண்டுகோள் விடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர். படிப்படியாக இவர்கள் மேலே விவரிக்கப்பட்ட பிற்போக்குப் பழமைவாத சோஷலிஸ்டு வகையினராகத் தாழ்ந்துவிடுகின்றனர். அவர்களிடமிருந்து இவர்கள் வேறுபடுவது, மிகவும் முறைப்படுத்தப்பட்ட பகட்டுப் புலமையிலும், இவர்தம் சமூக விஞ்ஞானத்தின் அதிசயப் பலன்களின்பால் இவர்கள் கொண்டுள்ள வெறித்தனமான மூட நம்பிக்கையிலும் மட்டுமே.

படிப்படியாக இவர்கள் மேலே விவரிக்கப்பட்ட பிற்போக்குப் பழமைவாத சோஷலிஸ்டு வகையினராகத் தாழ்ந்துவிடுகின்றனர். அவர்களிடமிருந்து இவர்கள் வேறுபடுவது, மிகவும் முறைப்படுத்தப்பட்ட பகட்டுப் புலமையிலும், இவர்தம் சமூக விஞ்ஞானத்தின் அதிசயப் பலன்களின்பால் இவர்கள் கொண்டுள்ள வெறித்தனமான மூட நம்பிக்கையிலும் மட்டுமே.

எனவே, இவர்கள் தொழிலாளி வர்க்கம் சார்பிலான அரசியல் நடவடிக்கைகள் அனைத்தையும் வன்மையாக எதிர்க்கின்றனர். இவர்களைப் பொறுத்தவரை, புதிய வேதாகமத்தில் (New Gospel) கொண்டுள்ள குருட்டுத்தனமான அவநம்பிக்கையின் விளைவாக மட்டுமே அத்தகைய நடவடிக்கை இருக்க முடியும் எனக் கருதுகின்றனர்.

 

 

 

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்