இலக்கு இதழ் PDF வடிவில்

 இலக்கு இணைய இதழ்

_________________________________________________________________________________

அனைத்து தரவுகள் மீதும் விமர்சனப்பூர்வமான அணுகுமுறையோடு, கடினமான, பெரிய, முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை செய்யாமல், கம்யூனிசம் பற்றிய ஆயத்த பதில்களை ஒரு கம்யூனிஸ்ட் எதிர்பார்பாரேயானால் அவர் மோசமான கம்யூனிஸ்ட்டாகத்தான் இருப்பார்

கம்யூனிசம் என்பது மனனம் செய்து அப்படியே ஏற்றுக்கொள்வதல்ல. மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சி மற்றும் நவீன கல்வி மூலம் உங்களுக்குள்ளாகவே எழுந்து உருவாகும் தவிர்க்க இயலாத முடிவாகும்என்று ரஷ்ய இளைஞர்களின் மூன்றாவது மாநாட்டில் (1920) லெனின் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய உலகமய தாராளமய கொள்கையை தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது இதற்கு எந்த சிறு தடங்கலுமின்றி நாடுமுழுவதும் அந்நிய மூலதனம் வெள்ளம் போல் பாய்ந்து வருகிறது. இவற்றை முறியடிக்க ஒரு தலைமை தாங்கிட புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது எதிர்கொள்ளும் திறன் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியோ இங்கே இல்லை என்பது உண்மை அல்லவா?

இங்குள்ள ஒவ்வொரு கம்யூனிஸ்ட் குழுக்களும் பாட்டாளி வர்க்கத்தின் உழைக்கும் மக்களின் வெவ்வேறு கொள்கை முழக்கத்தை முன்வைத்து வழிநடத்தி வருகின்றன இது பாட்டாளி வர்க்கத்தின் பலவீனத்தையும் இதன் எதிர்மறையாக பிற்போக்காளர்களுக்கு பலத்தையும் அளிக்கக்கூடியது அன்றோ?

எந்த ஒரு புரட்சிகர குழுவும் தனித்தனியாக செயல்பட்டு இந்திய பாசிச எதேச்சிகார அரசை வீழ்த்தமுடியாது என்பதை மார்க்சிய லெனினிய கோட்பாடுகளிலிருந்தும் அவர்களது சொந்த அனுபவங்களிலிருந்தும் புரிந்திருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு இடையில் ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து செயல்படவேண்டும் அல்லவா

தொடர்புக்கு மற்றும் விமர்சனங்களை அனுப்ப

cpalani.cpalani@gmail.com

அல்லது

இணையத்தில் தொடர அல்லது விவாதிக்க https://namaduillakku.blogspot.com/


சோசலிசப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கும் இடையிலான வேறுபாட்டை மறுக்கும் மார்க்சியலெனினியத்திற்கு எதிரான கருத்திற்கு எதிராகப் போராடுவோம்!.

"இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், சோவியத் யூனியனும் அணுக் குண்டு கண்டு தயாரித்த பின்னர், அன்றைய உலக ஏகாதிபத்தியங்கள் முதல் உள்ளூர் முதலாளிகள், நிலப்பிரபு வர்க்கங்கள், அதிகார வர்க்கங்கள் விரைவாக அழியாமல் இருப்பதை தடுக்க வேண்டுமானால், மார்க்சீய சோசலிச பொருளாதாரத்தை உள்வாங்கி மாறியாக வேண்டிய கட்டாயம் உலகப்பழைய ஏகாதிபத்தியங்களுக்கு ஏற்பட்டது..

அதனால், வேறு வழியின்றி மார்க்சீயப் பொருளாதாரத்தை உள்வாங்கி, முதலாளிகளின் தன்மைக் கேற்பமாற்றியமைத்து, புதிய வகைகலப்பு உற்பத்திமுறைக்கு மாறிவிட்டனர் பழையஏகாதிபத்தியங்கள்.

இவ்வாறு மாறுவதற்கு, அறிவியல் தொழில் நுட்பத்தின் வேகமான வளர்ச்சியும், அதனால் தற்செயலாக ஏற்பட்ட, அதிபயங்கர அணுவாயுத கண்டுபிடிப்பும் பேருதவி செய்தது.

இந்த சோசலிசமும் முதலாளித்துவமும் கலந்த, புதியகலப்பு வகை உற்பத்திமுறை, சோசலிச பொருளாதாரத்தின் போட்டியற்ற, திட்டமிட்ட உற்பத்திமுறையை விட முன்னேறியது".

மேலே காணப்படும் கருத்தை முன்வைத்து அதுதான் இன்றைய மார்க்சியம் என்ற கருத்தை பரப்பி வருகிறார்கள். இந்த கருத்து தவறானது என்ற எமது பதிலை முன்வைத்து விவாதிப்பது எமது கடமை என்று கருதிஇலக்குஇங்கே எமது கருத்தை விவாதத்திற்காக முன்வைக்கிறது.

ஏகாதிபத்தியங்களுக்கு இடையே காலனிகளை கைப்பற்று வதற்காகவும், செல்வாக்கு மண்டலங்களை அடைவதற்காகவும் முதல் உலக யுத்தம் நடத்தப்பட்டது. அந்த யுத்தத்தைப் பயன்படுத்தி ரஷ்யாவில் புரட்சியை நடத்தி பாட்டாளி வர்க்கம் தனது முதல் சோவியத்துபாட்டாளிவர்க்க அரசை உருவாக்கியது.

அதற்குப்பின்பு சோசலிச சோவியத்து அரசை ஒழித்துக்கட்டவும் உலக ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் உலகை மறுபங்கீடு செய்வதற்காகவும் இரண்டாவது உலகயுத்தத்தை ஏகாதிபத்தியவாதிகள் நடத்தினார்கள். அந்த யுத்தத்திற்குப் பிறகு சீனாவிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிஸ்டுகளின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

இவ்வாறு உலகில் மூன்றில் ஒரு பகுதியில் கம்யூனிஸ்டுகளின் ஆட்சி ஏற்படுத்தப் பட்டு அங்கு மக்களின் வாழ்க்கையை மக்களே தீர்மானிக்கும் ஆட்சி முறைகள் ஏற்பட்டு அங்கு தனியுடமை ஒழிக்கப்பட்டு அதாவது பெருமுதலாளிகளின் மூலதன உடமைகள் பறிக்கப்பட்டு அவற்றை உழைக்கும் மக்களின் உடமையாக மாற்றப்பட்டு மேலும் அங்கு முதலாளித்துவ சுரண்டல் ஒழிக்கப்பட்டு அங்கு மக்கள் நலமுடன் வாழ்வதை அறிந்த உலகின் பலபகுதிகளில் வாழும் மக்கள் கம்யூனிஸ்டு கட்சிகளின் பின்னால் அணி திரண்டு கம்யூனிஸ்டுகளின் ஆட்சி ஏற்பட்டு விடுமோ என்று ஏகாதிபத்தியவாதிகள் அஞ்சினார்கள். ஆக வேகம் கம்யூனிஸ்டுகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பிரிட்டீஷ் முதலாளித்துவ பொருளியலாலரான கீன்ஸ் என்பவரால் முன்வைக்கப்பட்ட கீன்சியப் பொருளாதாரக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று ஏகாதிபத்தியவாதிகள் முடிவு செய்து அதனை இரண்டாம் உலகப்போர் நடைபெறுவதற்கு முன்பாகவே அவர்களது நாட்டில் செயல்படுத்தினார்கள். இரண்டாம் உலகப்போருக்குப்பின்பு அதே கீன்சியக் கொள்கையை அவர்களது நாட்டில் மட்டுமல்ல, அவர்களது செல்வாக்கிலுள்ள அவர்களைச் சார்ந்து செயல்படும் புதியகாலனி மற்றும் சார்புநாடுகளிலும் செயல்படுத்தினர். இவ்வாறு ஏகாதிபத்தியவாதிகளால் செயல்படுத்திய கொள்கையையே " மார்க்சீயப் பொருளாதாரத்தை உள்வாங்கி, முதலாளிகளின் தன்மைக் கேற்ப மாற்றியமைத்து, புதியவகை கலப்பு உற்பத்திமுறைக்கு மாறிவிட்டனர் பழைய ஏகாதிபத்தியங்கள்." என்று ஏகாதிபத்தியத்தை இரண்டாம் உலகப்போருக்கு முன்பு பழையஏகாதிபத்தியம் என்றும் போருக்குப்பிறகு இந்த பழைய ஏகாதிபத்தியங்கள் புதிய ஏகாதிபத்தியமாக மாறிவிட்டது என்ற கருத்தைப் பரப்பும் புதிய வகையான மார்க்சியர்கள் முன்வைக்கிறார்கள்.

முதலாளித்துவப் பொருளாதாரம் என்பது சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது தனியுடமையை பாதுகாப்பது. சோசலிசப் பொருளாதாரம் என்பது சுரண்டலை ஒழித்த தனியுடமையை ஒழித்த பொருளாதாரம் ஆகும்.

சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தில் உழைக்கும் மக்கள் சுரண்டப்படுவார்கள். அதனால் அவர்களுக்கு கூலி குறைவாக கிடைக்கும். அந்த குறைந்த வருமானத்தைக் கொண்டு அவர்களுக்கு தேவையான பொருள்களை அவர்களால் வாங்க முடியாது. அதாவது மக்களின் வாங்கும் சக்தி குறையும். ஆதனால் சந்தையில் பொருள்களை விற்க முடியாமல் பொருள்கள் தேங்கும். முதலாளிகளால் பொருள்களை தொடர்ந்து உற்பத்தி செய்யமுடியாத நிலை ஏற்படும். இந்த நெருக்கடியிலிருந்து மீண்டுவர ஏகாதிபத்தியவாதிகள் சந்தைக்காகவும் செல்வாக்கு மண்டலங்களுக்காகவும் போர் நடத்துகிறார்கள்.

இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக உழைக்கும் மக்கள் நடத்தும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக ஏகாதிபத்தியவாதிகள் பாசிச ஆட்சி முறையை கொண்டுவருகிறார்கள். இதற்கு மாறாக சோசலிசப் பொருளாதாரமானது சுரண்டலை ஒழித்த பொருளாதாரம்ஆகும். இதனால் உழைக்கும் மக்களுக்கு அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். அந்த வருமானத்தைக் கொண்டு உழைக்கும் மக்கள்அவர்களுக்கு தேவையான பொருள்களை சந்தையில் தாராளமாக வாங்கி பயன்படுத்துவார்கள். சந்தையில் பொருள்கள் தேங்காது. தொடர்ந்து பொருளுற்பத்தி நடைபெறும், அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும், அனைத்து மக்களுக்கும் வாங்கும் சக்தி வளர்க்கப்படும். இதனால் மக்கள் அனைவரும் சிறப்பாக வாழ்வார்கள்.

புதிய மார்க்சியர்களாக வலம் வருபவர்கள் சொல்லும் புதிய ஏகாதிபத்தியவாதிகளின் மார்க்சியப் பொருளாதாரம் மற்றும் முதலாளித்துவப் பொருளாதாரத்தை கலந்து உருவாக்கப்பட்ட கலப்புப் பொருளாதாரம் என்பது கீன்சியப்பொருளாதாரம்தான். இந்தப் பொருளாதாரத்தைத்தான் இவர்கள் மெச்சிப் புகழ்கிறார்கள். இந்தப் பொருளாதாரத்தை தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலம் சமூகம் மாறிவிடும் என்றும் உழைக்கும் மக்களுக்கான புதிய உலகத்தை உருவாக்கிவிட முடியும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்களது கருத்தை ஏற்காதவர்கள் எல்லாம் மனப்பாட மார்க்சியவாதிகள் என்கிறார்கள்.

சோசலிசப் பொருளாதாரம் என்பது மக்களுக்கு உயிரைக்கொடுக்கும் உணவுப் பொருள் போன்றது. முதலாளித்துவப் பொருளாதாரம் என்பது மக்களது உயிரைப் பறிக்கும் விஷம் போன்றதாகும். சோசலிசப் பொருளாதாரத்தையும் முதலாளித்துவப் பொருளாதாரத்தையும் கலப்பது என்பது உணவோடு விஷத்தை கலப்பதாகும். ஒருகுடம்பாலில் ஒருதுளிவிஷத்தைக் கலந்தாலும் அதுபாலாக இருக்காது அதுவிஷமாகமாறிவிடும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். ஆனால் சோசலிசப்பொருளாதாரத்தோடு முதலாளித்துவப் பொருளாதாரத்தைக் கலந்தாலும் சரி, முதலாளித்துவப் பொருளாதாரத்தோடு சோசலிசப்பொருளாதாரத்தைக் கலந்தாலும் சரி இவ்விரண்டும் சாராம்சத்தில் முதலாளித்துவப்பொருளாதாரமாகவே இருக்கும் என்ற உண்மையை பலரும் அறியாத காரணத்தால் இவர்கள் அறியாமையிலுள்ளோரை ஏமாற்றுவதற்காக இந்த கலப்புப்பொருளாதாரத்தைப் பற்றி பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் சோசலிசப் பொருளாதாரமும் முதலாளித்துவப்பொருளாதரமும் எதிர் எதிரானபகைமை கொண்டதுஎன்ற உண்மையை புரிந்துகொண்டால் இவர்களது ஏமாற்று கருத்துக்களை நாம் புரிந்து கொள்ள முடியும். நாம் இவர்களிடம் ஏமாறமாட்டோம்.

தொடரும் ………….தேன் மொழி

 

கலை இலக்கியம்


 உண்மையான கலைப்படைப்பு மக்களிடம் உள்ள கலைஞனைத் தட்டி எழுப்புகிறது; அவர்களது உலகக் கண்ணோட்டத்தை மட்டுமல்லாமல், அழகியல்கலையியல் ரசனைகளையும் அவர்கள் உருவாக்கிக் கொள்ள வழி செய்கிறது“.-லெனின்

மாவோ சொல்கிறார்: “எம்முடைய இலக்கியமும் கலையும் அடிப்படையாகத் தொழிலாளர்கள், விவசாயிகள், படைவீரர் களுக்கானவை. பரவலாக்குதல் என்பதன் பொருள் அவர்களிடம் பரவலாக்குதல்; தராதரங்களை உயர்த்துதல் என்பதன் பொருள் அவர்களுடைய தற்போதைய நிலையிலிருந்து, அந்த மட்டத்திலிருந்து முன்னேற்றுவது என்பதாகும். அவர்களுக்குச் சாதகமானதும், அவர்களால் உடனே ஏற்றுக் கொள்ளக் கூடியதும் எதுவோ அதையே நாம் பரவலாக்க வேண்டும். எனவே, அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு முன், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் பணி இருக்கிறது. தராதரங்களை உயர்த்துவதற்கு இது இன்னும் அதிகமாகப் பொருந்தும்அதாவது இலக்கியமும் கலையும் எந்த அடித்தளத்திலிருந்து உயர்த்தப்படுவது? பரந்துபட்ட தொழிலாளர், விவசாயிகள், படை வீரர்களின் அடித்தளத்திலிருந்தே

அப்படியானால், பிரச்சனையை மக்களின் தேவையிலிருந்து பார்க்கலாம். மக்களுக்கு எளிய, தெளிவான படைப்புகள் வேண்டும். எதிரியுடன் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு, எதிரிகளால் எழுத்தறிவற்ற கல்வியற்ற மூடர்களாக, அடிமைகளாக நசுக்கப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு போராட உற்சாகம் வேண்டும்; வெற்றி மீது நம்பிக்கை வளர வேண்டும்; எதிரிக்கு எதிராக ஒரே மனத்தோடு, ஒரே சிந்தனையோடு போராடுவதற்காக பரந்த பொது அறிவு அவர்களுக்கு வேண்டும்; பரந்த கலாச்சார அறிவு வேண்டும்; நிறையக் கலை இலக்கியப் படைப்புகள் வேண்டும்- மாவோ.

மார்க்சியத் திறனாய்வு, சமூகவியல் திறனாய்வோடும் வரலாற்றியல் திறனாய்வோடும் மிக நெருக்கமாக உறவு கொண்டது. இலக்கியம் என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகத்திலிருந்து தோன்றுகிறது. அந்தச் சமூகத்தை நோக்கியே அது அமைகிறது. அதுபோல, சமூகம் என்பது காலம், இடம் என்ற வெளிகளில் அவற்றை மையமாகக் கொண்டு இயங்குவது; எனவே வரலாற்றியல் தளத்தில் இயங்குவது. இலக்கியம் இத்தகைய சமூக- வரலாற்றுத்தளத்தில் தோன்றி, அதன் பண்புகளைக் கொண்டது ஆகலின், இலக்கிய ஆராய்ச்சிக்குச் சமூக - வரலாற்றுப் பின்புலங்களும் அவற்றின் செய்திகளும் மிகவும் முக்கியமானவையாக அமைகின்றன .

சமூகம் மாறக்கூடியது; வளர்ச்சி பெறக்கூடியது. அது போன்று இலக்கியமும் வளர்நிலைப் பண்புகளைக் கொண்டது. அத்தகைய பண்புகளைத் தற்சார்பு இல்லாத முறையில், காரணகாரியத் தொடர்புகளுடன் மார்க்சியத் திறனாய்வு விளக்குகிறது. இலக்கியம், மக்களுடைய வாழ்க்கை நிலைகளிலிருந்து தோன்றுகிற உணர்வுநிலைகளின் வெளிப்பாடு. அதேபோது அந்த உணர்வுநிலைகளை அது செழுமைப்படுத்துகிறது.

மக்களிடமிருந்து தோன்றுகிற இலக்கியம், மக்களின் வாழ்வோடு நெருக்கம் கொண்டு இயங்குகிறது. மார்க்சியத் திறனாய்வு, இலக்கியத்தை மக்களோடு நெருங்கியிருக்கச் செய்கிறது. மனிதகுல மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இலக்கியம் உந்துதலாக இருப்பதை அது இனங் காட்டுகிறது.

மார்க்சும் ஏங்கல்சும் திறனாய்வு நூல்கள் எழுதியவர்கள் அல்லர்; அதுபோல், இலக்கியக் கொள்கைகளைப் பரிமாறிக் கொண்டவர்கள் அல்லர். ஆனால், தம்முடைய அரசியல்- பொருளாதார நூல்களிடையே இலக்கியங்கள் பற்றியும் பேசுகின்றனர். இருவரும் ஜெர்மனியப் பேரறிஞர் கதே (Goethe) என்பவர் பற்றிப் பேசுகின்றனர். அதுபோல் மின்னா கவுட்ஸ்கி, மார்கரெட் ஹார்கன்ஸ், லாசல்லே ஆகியோரின் இலக்கியப் படைப்புகளைப் பற்றிப் பேசுகின்றனர். ஷேக்ஸ்பியர் மற்றும் பால்ஜாக் ஆகிய இலக்கிய மேதைகளை உதாரணங்களாக்கிப் பேசுகின்றனர்.

லியோ டால்ஸ்டாயின் நாவல்களைப் பற்றி லெனின் பாராட்டிப் பேசுகிறார். இலக்கியம் பற்றிய கருதுகோள்களை இதன் மூலம் இவர்கள் வெளிப்படுத்துகின்றனர். குறைகளைப் பெரிதுபடுத்தாமல், குறைகளைக் களைந்து மேலும் சிறந்த முறையில் எழுதுவதற்கு யோசனைகள் சொல்லும் முறை, மார்க்சிடமும் ஏங்கல்சிடமும் காணப்படுகிறது. அதுபோல், லெனினும். லியோ டால்ஸ்டாய், மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளாமல் கிறித்துவ இறையாண்மையே ஏற்றுக் கொண்டவரானாலும், அவருடைய நாவல்களில் அன்றைய சமூகமும், அதன் மாற்றங்களும் பாராட்சமில்லாமல் சித்திரிக்கப்படுகின்றன என்று சொல்லிப் பாராட்டுகின்றார். இவைதான் மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதல் இந்த உதாரணங்கள் உணர்த்துகின்றன.

மார்க்சியத் திறனாய்வின் அடிப்படை, மார்க்சியமே என்பதைச் சொல்லிக் காட்டவேண்டியதில்லை. மார்க்சியத்திற்கு அடிப்படையாகி இருப்பவை, இயங்கியல் பொருள்முதல் வாதம் (Dialectical Materialism) மற்றும் வரலாற்று பொருள்முதல் வாதம் (Historical Materialism) ஆகியவை.

மார்க்சியத் திறனாய்வைப் பொறுத்த அளவில் இலக்கியம் பற்றிய அதனுடைய கருதுகோள் அல்லது வரையறை; இலக்கியம் என்பது ஒரு கலைவடிவம்; சமுதாய அமைப்பில் அதன் மேல் கட்டுமானத்தில் (Super-Structure) உள்ள ஓர் உணர்வு நிலை. சமுதாய அடிக்கட்டுமானமாகிய (Basic Structure) பொருளாதார உற்பத்தியுறவுகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சார்ந்து இருப்பது, அது. இதுவே, இலக்கியத்தைப் பற்றிய அடிப்படையான வரையறை என மார்க்சியம் கருதுகிறது.

மேல்கட்டுமானத்தைச் சேர்ந்த கலை, இலக்கியம், அரசியல் தத்துவம், சாதி, சமயம் முதலியவை அடிக்கட்டுமானத்தோடு ஒன்றுக் கொன்று தொடர்பும் தாக்கமும் கொண்டவை. அதாவது இதனுடைய பொருண்மை என்னவென்றால்- இலக்கியம், மக்களிடமிருந்து தோன்றுகிறது; மக்களை நோக்கியே செல்கிறது; மக்களின் உணர்வுகளையும் வாழ்நிலைகளையும் ஏதேனும் ஒருவகையில் பாதிக்கிறது. எனவே இலக்கியத் திறனாய்வு, இலக்கியத்தின் இந்தப் பண்பினையும் பொருண்மையினையும் பாதுகாக்கிறது; வளர்க்கிறது. இதுவே மார்க்சியத் திறனாய்வின் நோக்கமும் ஆகும்.

இலக்கியம் சுயம்புவானது அல்ல; சுயாதிக்கம் உடையது அல்ல; தன்னளவில் முற்ற முழுமையுடையதும் அல்ல. சமுதாய அடிக்கட்டு மானத்தோடும், ஏனைய அமைப்புக் கூறுகளாகிய அரசியல், தத்துவம் முதலியவற்றோடும் சேர்ந்து இருப்பது; அவற்றின் அழகியல் வெளிப்பாடாக இருப்பது. எனவே திறனாய்வு, இலக்கியத்தை இத்தகையதொரு தளத்திலிருந்து காணவேண்டும் என்று மார்க்சியத் திறனாய்வு கூறுகிறது. எனவே, கலை, கலைக்காகவே என்பதையும், கலை, தனிமனிதன் சம்பந்தப்பட்டது என்பதையும், ஒரு சில உயர்ந்தோருக்கும் மேதைகளுக்கும் மட்டுமே உரியது என்பதையும் மறுத்து, கலையை மக்களுக்குரியதாகச் சொல்லுகிறது மார்க்சியம். எனவே மார்க்சியத் திறனாய்வாளனுக்குச் சமூகவுணர்வும், பொறுப்பும் உண்டு என்பது வற்புறுத்தப்படுகிறது.

மனிதன் ஒரு சமூகப்பிராணி, தன் தேவைகளுக்காக கூட்டாக, சமூகமாக வாழ வேண்டிய தேவைக்குள்ளகிறான். அவன், தான் கண்டு, கேட்ட அனுபவங்களை சமுதாயத்தோடு பகிர்ந்து கொள்ளுகிறான் கற்பனை, சிந்தனை, செயலாற்றல் திறமை உள்ளவனும் மனிதனே, விலங்குகளல்ல.

தன் அனுபவங்களை சமுதாயத்தோடு பகிர்ந்து கொள்வதன் மூலமே அறிவியல் வளர்ச்சியும் ஆராய்ச்சியும் நாம் இன்று வளர்ந்து நிற்பதற்க்கு சாட்சியங்கள்.

ஒவ்வொரு மனிதனிடமும் படைப்பாற்றல் உள்ளது. அது அவனது உழைப்போடு ஒன்றியது. தன் உள்ளுணர்வுகளுக்கு - அனுபவம் மூலம் ஏற்பட்ட உணர்வுகளுக்கு - வடிவம் தரும் ஆற்றல் அவனுக்கு உண்டு. அதே வேளை மற்றவர்களது படைப்புகளை புரிந்து சுவைக்கும் அழகுணர்வும் மனிதனிடம் மட்டுமே உள்ள குணமாகும்.

கலை வடிவங்களை நாம் பல்வேறு வகையாக பிரிக்கலாம்.

(1) கண்களால் கண்டு சுவைக்கும் கலை வடிவங்கள். ஓவியம், சிற்பம், சினிமா இன்னும் சில முதன்மை பெற்றவை.

(2) செவியினல் கேட்டு மகிழும் கலைவடிவங்களும் மனிதனேடு தோன்றி வளர்ந்தவையே. மேளம், புல்லாங்குழல், வீணை இன்னும் சில கருவிகள் செவியினால் கேட்டு சுவைப்பதாகும்.

(3) சைகையாலும் கண்களாலும் ஒலியாலும் சமூகத்தோடு தொடர்பு கொண்ட மனிதன் காலப்போக்கில் குகைகளில் கீறிய வடிவங்களை எழுத்தாக மாற்றிப் பிறருக்கு அறிவிக்கும் அளவிற்கு தொடர்பு கொள்ளத் தொடங்குகிறான், கவிதைகள். காவியங்கள், கட்டுரைகள் ஏடுகளில் எழுதப்பட்டன.

இது மனிதன் மிகவும் வளர்ச்சியடைந்த ஒரு கட்டமேயாகும். பிறரின் உணர்வுர்களை, அனுபவங்களை தானே படித்து அறிந்து பயன் பெறும் நிலையாகும். இதை எழுத்து வடிவக் கலை என்று பிரிக்கலாம். கவிதை, இலக்கியங்கள் யாவும் இவ்வகையைச் சார்ந்தவையே.

இயற்கையின் தோற்றத்தை, நிலையை பல்வேறு கலை வடிவங்களில் கலைஞர்கள் தருகிறர்கள்; கலைஞர்களது உள்ளுணர்வில் ஏற்பட்ட தாக்கத்தை அனுபவ உணர்வை கலைவடிவங்களில் படைத்து தருகிருர்கள் என்று கொள்வோம்.

கலைஞன் எத்தனை அதீதக் கற்பனையாகப் பாடைத்தாலும் சமுதாயத்திலிருந்து அவன் தனிபட்டவன் அல்ல. அவன் தனது படைப்பின் மூலம் தனது வர்க்க சார்பை அல்லது தான் சார்ந்திருக்கும் வர்க்கத்தை தெளிவாகக் கூறிவிடுகிறான். தன் கலைப்படைப்பின் மூலம் தன் அக உணர்வுகளை அப்பட்டமாகத் தெரிவித்து விடுகிறான்.

தொடரும்…

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்