இலக்கு 35 இதழ் PDF வடிவில்

இதழில் பேசப்பட்டுள்ள கட்டுரைகள்

1). மனிதர்களின் சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றனமாவோ

2). இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு லெனின். - பகுதி – 5

3). ரசிய புரட்சியும் லெனினும்


இலக்கு 35 இணைய இதழ் PDF வடிவில் இந்த லிங்கினை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே

பாலஸ்தீன மக்கள் மீதான ஏகாதிபத்திய போரினை அறிய

2022 டிசம்பர் மாதம் நெதன்யாகு கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு மேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைப்பது; காசாவை முற்றாக அழிப்பது; பாலஸ்தீனத்தை அழித்து யூத நாடு உருவாக்குவது என்று அறிவித்து பாலஸ்தீன இனப்படுகொலைக்கு அறைகூவல் விடுத்தது. அரேபியர்களின் புனிதத் தலமான அல்-அக்ஷா மசூதியை இடிக்க திட்டமிட்டது. அதிதீவிர வலதுசாரி ஜியோனிச தீவிரவாத குழுக்கள் மூலம் ஜனவரி 2023 முதல் பாலஸ்தீன மக்களை நூற்றுக்கணக்கில் கொன்று குவித்து வந்தது. இதற்கு எதிர்வினையாக ஹமாஸ் இயக்கம் அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஏவுகனை தாக்குதல் நடத்தியது. அதில் 1400 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இஸ்ரேல் இராணுவம் காசா மீது ஏவுகனை மூலம் இதுவரை 6500க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களை (இதில் பாதி பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்) கொன்று குவித்துள்ளது. மேற்குக் கரையிலுள்ள ஜியோனிச குழுக்களுக்கும் தனி நபர்களுக்கும் இஸ்ரேல் பாலஸ்தீனர்களை கொல்வதற்கு துப்பாக்கிகளை வழங்கியுள்ளதுபாலஸ்தீன பகுதிகள் மீது முழு யுத்தத்தைஅமெரிக்க-நேட்டோ ஆசியுடன் இஸ்ரேல் அறிவித்துள்ளது. அமெரிக்கா போர்கப்பல்களை அனுப்பியுள்ளது. மத்திய கிழக்கின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை கொள்ளையடிக்க பாலஸ்தீன மக்களை ஒட்டுமொத்தமாக இனப்படுகொலை செய்யும் பொருட்டு யுத்தவெறியுடன் அமெரிக்க- இஸ்ரேல் பாசிச கும்பல் அலைகின்றது.

பாலஸ்தீனியர்களுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்தி வாஷிங்டனில் உள்ள P.A அலுவலகத்தை மூடும் அமெரிக்க முடிவுக்கு பிறகு பாலஸ்தீனத்தின் தலைமை தூதரான சயீத் எரேகாட், அமெரிக்காவின் மற்றொரு சமாதான உடன்படிக்கையை மேற்கொள்வதற்காக இனி எமது மக்கள் கொடுமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்று கூறினார். மேலும் பாலஸ்தீன மக்களின் உரிமைகள் விற்பனைக்கு இல்லை; நாங்கள் அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் மற்றும் கொடுமைப்படுத்துதலுக்கு அடிபணிய மாட்டோம்; நீதி மற்றும் சுதந்திரத்திற்கான எங்கள் நியாயமான போராட்டத்தை நாங்கள் தொடர்வோம்; சாத்தியமான அனைத்து சட்ட மற்றும் அரசியல் வழிமுறைகளை கையாள்வோம் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்" என்றார்.இந்தபோரானது உண்மையில்-எண்ணெய் - எரிவாயு உள்ளிட்ட பாலஸ்தீனிய இயற்கை வளங்களை இஸ்ரேல் சுரண்டுவதற்காக, இது எண்ணெய் - எரிவாயுவின் தனித்தன்மையை புதுப்பிக்க முடியாத வளங்களாக எடுத்துக்காட்டுகிறது, தற்போதைய தலைமுறையில் நாடு கடந்து அனைத்து வளங்களையும் ஒருவரே உரிமை கொண்டாட முடியாது, இதனால் பல அரசுகள் மற்றும் புதிய நிறுவனங்கள் கூட்டாக பங்கிட முடியும் என்று வாதிடுகிறது UN உள்ளிட்ட அமெரிக்க இஸ்ரேல் கூட்டு கொள்ளைக்கு பாலஸ்தீன் மீதான போர்.



மனிதர்களின் சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? மாவோ

 மனிதனின் சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? அவை வானத்திலிருந்துவிழுகின்றனவா? இல்லை. மூளையில் இயல்பாக உள்ளனவா? இல்லை. அவை சமுதாய நடைமுறை அனுபவத்திலிருந்து மட்டும்தான் தோன்றுகின்றன;உற்பத்திப் போராட்டம்,வர்க்கப் போராட்டம்,விஞ்ஞானப் பரிசோதனை என்ற மூன்று வகையான சமுதாயநடைமுறைஅனுபவங்களிலிருந்து வருகின்றன.

மனிதனின் சமுதாய வாழ்வே அவனுடையசிந்தனையை நிர்ணயிக்கிறது.முன்னேறிய வர்க்கத்தின் குணாம்சமாக விளங்கும் சரியானகருத்துக்கள் ஒருகால் பொது மக்களால்கிரகித்துக்கொள்ளப்பட்டதும்,இக்கருத்துக்கள் சமுதாயத்தை மாற்றுகின்ற,உலகை மாற்றுகின்ற ஒரு பொருளாதாய சக்தியாக வடிவெடுக்கின்றன. மக்கள்,தமது சமுதாய நடவடிக்கையில்,பல்வேறு வகையான போராட்டங்களிலும் ஈடுபட்டு, தமது வெற்றிகள்,தோல்விகள் இரண்டிலும் இருந்து செழுமையான அனுபவத்தைப் பெறுகின்றனர். புறநிலை உலகத்தின் எண்ணத் தோற்றப்பாடுகள் மனிதனின் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பஞ்சப் புலன்களுக்கும் ஊடாக,அவனுடையமூளையில்பிரதிபலிக்கின்றன.ஆரம்பத்தில் அறிவு புலக்காட்சியாக இருக்கின்றது. போதிய அளவு புலக்காட்சி அறிவு தொகுக்கப்பட்டதும், அதில் ஒரு பாய்ச்சல் நிகழ்ந்து அது பகுத்தறிவாக மாறுகின்றது.அதுவே கருத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இது அறிகையின் (அறிவதின்) ஒரு வளர்ச்சிப்போக்கு. இது அறிகையின் (அறிவதின்) முழு வளர்ச்சிப் போக்கில் முதலாவது கட்டம்.அதாவது புறநிலைச் சடப் பொருளிலிருந்து அகநிலை உணர்வுக்குச் செல்லுகின்ற,வாழ்நிலையிலிருந்துகருத்துக்களுக்குச் செல்லுகின்ற கட்டம் ஆகும். (தத்துவங்கள், கொள்கைகள், திட்டங்கள், அல்லது வழிமுறைகள் உட்பட) ஒருவரின் உணர்வு அல்லது கருத்துக்கள் எல்லாம் புறநிலை யதார்த்த உலகைச் சரிவரப் பிரதிபலிக்கின்றனவா, இல்லையா என்பது இந்தக் கட்டத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இக்கட்டத்தில் அவை சரியானவையா, இல்லையா என்று நிச்சயிப்பதும் சாத்தியமாகாது. பின்னர் அறிகை அதாவது அறிவது வளர்ச்சிப் போக்கின் இரண்டாவது கட்டம், அதாவது உணர்விலிருந்து மீண்டும் சடப்பொருளுக்கு, கருத்துக்களிலிருந்து மீண்டும் வாழ்வுக்குச் செல்லும் கட்டம் வருகின்றது. இந்தக் கட்டத்தில், தத்துவங்கள்;கொள்கைகள்,திட்டங்கள்,அல்லது வழிமுறைகள் எல்லாம் எதிர்பார்த்த வெற்றியைத் தருகின்றனவா என்பதை நிச்சயிக்க,முதல் கட்டத்தில் சம்பாதிக்கப்பட்ட அறிவு சமுதாய நடைமுறையில் பிரயோகிக்கப்படுகின்றது, பொதுவாகச் சொன்னால், எவை வெற்றி பெறுகின்றனவோ அவை சரியானவை;எவை தோல்வியடைகின்றனவோ அவை தவறானவை; விசேசமாக இயற்கையுடன் மனிதன் நடத்தும் போராட்டத்தில் இது உண்மையாகும். சமுதாயப் போராட்டத்தில் முன்னேறிய வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சக்திகள் சில சமயங்களில் தோல்வியடைகின்றன;காரணம் அவர்களுடைய கருத்துக்கள் தவறானவை என்பதல்ல;பதிலுக்கு,போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சக்திகளின் சமநிலையில் தற்காலிகமாக முற்போக்கு சக்திகள் பிற்போக்கு சக்திகளைப் போல் அவ்வளவு பலம் பெற்றிருக்கவில்லை; எனவே அவை தற்காலிகமாகத் தோல்வியடைகின்றன; ஆனால் இன்றோ, நாளையோ அவை வாகைசூடுவது நிச்சயம். அடுத்து, நடைமுறைப் பரீட்சை மூலம் மனிதனுடைய அறிவில் இன்னொரு பாய்ச்சல் நிகழ்கின்றது. இந்தப் பாய்ச்சல் முன்னைய பாய்ச்சலிலும் பார்க்க முக்கியமானது, காரணம், முதலாவது பாய்ச்சலில்,அதாவது,புறநிலை யதார்த்த உலகைப் பிரதிபலிக்கும் போக்கில் வகுக்கப்பட்ட கருத்துக்கள்,தத்துவங்கள்,கொள்கைகள்,திட்டங்கள் அல்லது வழிமுறைகள் ஆகியவற்றின் சரி மற்றும் பிழையை இந்தப் பாய்ச்சலால் மட்டும் நிரூபிக்க முடியும். இவை தவிர உண்மையைப் பரிசீலிக்கும் வழி வேறு கிடையாது. பாட்டாளி வர்க்கம் உலகத்தை அறிந்துகொள்வதற்கான ஒரே நோக்கம், அதை மாற்றுவதே ஆகும்.சடப்பொருளிலிருந்து உணர்வுக்கும்,பின்னர் உணர்விலிருந்து சடப்பொருளுக்கும், அதாவது, நடைமுறை அனுபவத்திலிருந்து அறிவுக்கும், பின்னர் அறிவிலிருந்து நடைமுறைக்கும் செல்லும் போக்கு திரும்பத் திரும்ப பல தடவை நிகழ்ந்த பின்னர் மாத்திரமே ஒரு சரியான அறிவுக்கு வரக்கூடிய நிலை ஏற்படுவது வழக்கம். இத்தகையதுதான் அறிவு பற்றிய மார்க்சிய தத்துவம், அறிவு பற்றிய இயங்கியல் பொருள்முதல்வாதத் தத்துவம். இப்பொழுது நமது தோழர்களில் பலர்இந்த அறிவு பற்றிய தத்துவத்தை இன்னும் புரிந்துகொள்ளவில்லை. அவர்களுடைய சிந்தனை, அபிப்பிராயம், கொள்கை, வழிமுறை, திட்டம், முடிவுரை, நாவன்மை மிக்க சொற்பொழிவு,நீளமான கட்டுரை ஆகியவை எங்கிருந்து வருகின்றன என்பதைக் கேட்டால் அவர்கள் இந்தக்கேள்வியை விசித்திரமானதாகக் கருதுவதோடு, பதிலளிக்க முடியாமலும் இருக்கிறார்கள்.

சடப்பொருள் உணர்வு நிலைக்கும் உணர்வு நிலை சடப்பொருளுக்கும் மாற்றப்பட முடியும் என்ற நாளாந்த வாழ்வு நிகழ்ச்சிகளாகிய பாய்ச்சல் நிலைமையுங்கூட அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறார்கள். ஆகையால் தமது சிந்தனையைச் சரியாக்கி, பரிசீலனை செய்து படிப்பதிலும் அனுபவங்களைத் தொகுப்பதிலும் தேர்ச்சி பெற்று, கஷ்டங்களைக் கடந்து, தவறுகளைக் குறைத்து, வேலையை நன்கு செய்து, இயன்றளவு போராடி, ஒரு மகத்தானபலம்வாய்ந்த சோசலிச நாட்டைக் கட்டியமைக்கவும் உலகிலுள்ள பரந்துபட்ட அடக்கி ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களுக்கு உதவி செய்து, நாம் தோள் கொடுக்க வேண்டிய மாபெரும் சர்வதேசக் கடமையை நிறைவேற்றவும், நமது தோழர்களுக்கு அறிவு பற்றிய இயங்கியல் பொருள்முதல்வாதத் தத்துவப் போதனை அளிக்க வேண்டும்.

நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை

1.மனிதர்கள் அவர்கள் காணும் பொருள்கள் மற்றும் பிரச்சனைகளைப் பற்றி அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதையே மனிதனின் அறிவு வளர்ச்சியாகும்.

2.இத்தகைய மனித அறிவு வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் மனிதன் உருவாக்கும் கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன என்ற கேள்விக்கு, அது வானத்திலிருந்தும் வருவதில்லை, மூளைக்குள்ளும் இருப்பதில்லை என்றும் அதற்கு மாறாக மனிதர்களுடைய சமூக நடைமுறைஅனுபவங்களிலிருந்துதான் மனிதர்கள் கருத்துக்களை உருவாக்கி அவர்களது அறிவை வளர்த்துக் கொள்கிறார்கள் என்றார் மாவோ.

3. சமூகத்தைப் பற்றி மனிதர்கள் அறிந்துகொள்ள அவர்கள் உற்பத்திப் போராட்டத்திலும், அதாவது மனிதர்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதற்கான உழைப்பில் ஈடுபட வேண்டும்.இத்தகைய உற்பத்திப் போராட்டத்தில் ஈடுபடும் மனிதர்களில் பெருவாரியானவர்கள் உழைப்பின் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தின் மூலம் வாழும் உழைக்கும் வர்க்கங்களாக இருக்கிறார்கள்.அதேவேளையில் ஒரு சிலர் எவ்விதமான உழைப்பிலும் ஈடுபடாமல் பிறரது உழைப்பைச் சுரண்டி வாழ்பவராக அதாவது சுரண்டல் வர்க்கமாக இருக்கிறார்கள். இவ்விரு வர்க்கங்களுக்கு இடையே பகைமை உள்ளது. இந்தப் பகைமையின் காரணமாக இவ்விரு வர்க்கங்களும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.இந்தப்போராட்டத்தையே வர்க்கப் போராட்டம் என்கிறார்கள்.இத்தகைய வர்க்கப் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலமாகவும் மனிதர்கள் சமூகத்தைப்பற்றிஅறிந்துகொள்கிறார்கள். மேலும் மனிதர்கள் ஒவ்வொரு பிரச்சனைகளையும் அறிந்துகொள்ள விஞ்ஞானப் பரிசோதனைகளில் ஈடுபட வேண்டியது அவசியமாகிறது. ஆகவேதான் உற்பத்திப் போராட்டம், வர்க்கப் போராட்டம்,விஞ்ஞானப் பரிசோதனை ஆகிய மூன்று நடைமுறையிலும் மனிதர்கள் ஈடுபடுவதன் மூலமே சமூகத்தை மனிதர்களால் புரிந்துகொள்ள முடியும் என்கிறார் மாவோ.

ஆதலால்தான் ஒரு கம்யூனிஸ்டுக் கட்சியானது நிலவுகின்ற சமூக அமைப்பைப் புரிந்துகொண்டு அதனை மாற்றியமைக்க வேண்டுமானால் மேலே கூறப்பட்ட மூன்றுவிதமான நடைமுறையிலும்ஈடுபட வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.இதுதான் சமூகத்தை அறிந்துகொள்வதற்கானகம்யூனிஸ்டுக் கட்சியின் நடைமுறையாக இருக்க முடியும். இதற்கு மாறாக சிலர் பொதுக்கூட்டம் நடத்துவது,ஆர்ப்பாட்டம் செய்வதையே கம்யூனிஸ்டுகளின் நடைமுறையாகக் கருதுகிறார்கள்.ஆகவேதான் இவர்களால் இந்திய சமூகத்தை இதுவரை சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

4.மனிதர்களின் சமுதாய வாழ்நிலையே அவர்களின் சிந்தனையை தீர்மானிக்கிறது என்கிறது மார்க்சியம்.ஆகவே மனிதர்களின் சிந்தனை மற்றும் உணர்வுகளைப் புரிந்துகொள்ளஅவர்களின் வாழ்நிலையை ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.அதன் மூலம் மட்டுமே மனிதர்களின் சிந்தனையையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும்.ஆகவே மனிதர்களின் சிந்தனை முறையை மாற்ற வேண்டுமானால் அவர்களின் வாழ்நிலையை மாற்ற வேண்டும் என்று மார்க்சியம் வழிகாட்டுகிறது. இதற்கு மாறாக மார்க்சியத்தை ஏற்காதவர்களும்அதனை எதிர்ப்பவர்களும் மனிதர்களின் சிந்தனையை மாற்றினால்அவர்களின்வாழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுவிடும் என்று கருதுகிறார்கள் இது தவறான கருத்தாகும்.

5. சமூகத்தில் முன்னேறிய வர்க்கம் பாட்டாளி வர்க்கம் என்று மார்க்சியம் வரையறுக்கிறது.

இதற்கு காரணம் என்னமனிதகுல வரலாற்றில்மனிதர்கள் பொருள் உற்பத்தியில் ஈடுபட்ட பிறகுதான் மனிதர்கள் விலங்குகளிடமிருந்து மனிதன் பிரிந்து வந்தான்.அது முதல் மனிதர்களின் உழைப்புத் திறனை தொடர்ந்து வளர்த்துக்கொள்வதன் மூலமே சமூகத்தில் வளர்ச்சி ஏற்பட்டது. இந்த சமூக வளர்ச்சிக்கு அடிப்படையாக உழைக்கும் மனிதர்கள்

கல்லையும் மரக்குச்சிகளையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தி ஆரம்ப காலங்களில் உழைப்பில்ஈடுபட்டார்கள்.ஆனால்,நவீன காலத்தில் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தியில் ஈடுபடும் பாட்டாளிகளாக உழைக்கும்மனிதர்கள்வளர்ந்துவிட்டார்கள்.இத்தகைய ஆலைப் பாட்டாளிகள்தான் மேலும் மேலும் நவீன இயந்திரங்களை இயக்கி உற்பத்தியில் வளர்ச்சியை ஏற்படுத்தி சமூகத்தின்வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கக்கூடிய முன்னேறிய வர்க்கமாக இருக்கிறார்கள். இந்த வர்க்கத்தின் கொள்கைகளும் இலட்சியங்களும் தான் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பயன்படும் முன்னேறிய கொள்கைகளாக இருக்கிறது.

6.சமூகத்தில் முன்னேறிய வர்க்கமான பாட்டாளி வர்க்கம் அதன் நடைமுறைவாழ்நிலையிலிருந்து உருவாக்கும் கருத்துக்கள் மிகவும் சரியான கருத்துக்களாக அதாவது சமூக முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துக்களாக வரலாற்றில் இருந்துள்ளது. பாட்டாளிகளின் நடைமுறை அனுபவத்திலிருந்து அதாவது உற்பத்திப் போராட்டம், வர்க்கப் போராட்டம்,விஞ்ஞானப் பரிசோதனை போன்ற நடைமுறை யிலிருந்து உருவாக்கப்பட்ட சரியான கருத்தை பொது மக்கள் கிரகித்துக் கொண்டால், அதனை ஏற்றுக்கொண்டு அதன்அடிப்படையில் செயல்படும் போது இந்தக் கருத்துக்களே பொருள்வகை சக்தியாக மாறி சமுதாயத்தை மாற்றுகின்றன என்கிறது மார்க்சியம். இதன் மூலம் கருத்துக்களுக்கும்நடைமுறைகளுக்கும் உள்ள இயங்கியல் உறவை நமக்கு மார்க்சியம் உணர்த்துகிறது.

7.மக்கள் தங்களது சமூக நடவடிக்கைகளில் பல்வேறுவிதமான போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.அதன் காரணமாக அவர்கள் போராட்டத்தில் சில வேளைகளில் தோல்வியை சந்திக்கிறார்கள், சில வேளைகளில் வெற்றி அடைகிறார்கள்.இவ்வகையான தோல்வியிலிருந்தும் வெற்றியிலிருந்தும் அனுபவத்தை வளர்த்துக்கொண்டு செழுமை அடைகிறார்கள்.இந்தஅனுபவங்களிலிருந்து புதிய வகையான போராட்ட முறைகளை கண்டுபிடிக்கிறார்கள்.இத்தகைய நிகழ்ச்சிப் போக்குகளின் மூலம் மனிதர்கள் தங்களின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். உதாரணமாக ஒவ்வொரு மனிதனும் தனக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்து தொடர்ந்து தோல்வி கண்டஅனுபவத்திலிருந்து தன்னைப் போல் பாதிக்கப்படும் மனிதர்கள் எல்லாம் ஒன்றாகக்கூடி சங்கம் அமைத்து கூட்டாகப் போராடினால் வெற்றி கிடைக்கும் என்று முயற்சி செய்து அதில் வெற்றி கண்ட அனுபவத்திலிருந்து பாதிக்கப்படும் மனிதர்கள் சங்கமாக ஒன்றிணைந்துபோராடுவதை நாம் காணலாம்.

8.ஒரு பொருளைப் பற்றியோ அல்லது ஒரு பிரச்சனையைப் பற்றியோ மனிதர்கள் அறிந்துகொண்டு தமது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டுமானால்,அவர்கள் மூன்று கட்டங்களைக் கடக்க வேண்டும். முதலாவது புலனறிவுக் கட்டம், இரண்டாவது பகுத்தறிவுக் கட்டம், மூன்றாவது சோதனைக் கட்டம் ஆகும்.ஆகவே கம்யூனிஸ்டுகள் ஒரு சமூகத்தைப் புரிந்துகொண்டு அதனை மாற்றியமைப்பதற்கான திட்டத்தை உருவாக்கி செயல்பட வேண்டுமானால் இந்த மூன்று கட்டத்தையும் அவர்கள் கடக்க வேண்டும்.இத்தகைய மூன்று கட்டங்களையும் கடக்காமல் கம்யூனிஸ்டுகள் சமூகத்தை மாற்றியமைப்பதற்கான திட்டத்தை அவர்கள் உருவாக்கிவிட்டதாகச் சொல்லிசெயல்படுவதால் அவர்களால் சமூகத்தை மாற்றியமைக்க நடைமுறையில்இயலாது. ஏனென்றால் அவர்களால் உருவாக்கப்பட்டத் திட்டமானது புறநிலைக்கு பொருத்தமில்லாத அகநிலைவாதத் திட்டமாகவே இருக்கும்.

இந்தியப் பொதுவுடமையாளர்கள் இத்தகைய மூன்று கட்டங்களைக் கடக்காமலேயே அகநிலையாகவே அவர்கள் திட்டத்தை வகுத்து செயல்படுவதால் அவர்களால் இன்றுவரை சமூகத்தை மாற்ற முடியவில்லை.இந்த உண்மையை மாவோவின் வழிகாட்டுதலில் இருந்துபுரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.அப்போதுதான் அவர்களால் புறநிலைக்குப் பொருத்தமான விஞ்ஞானப்பூர்வமான திட்டத்தை உருவாக்கி செயல்பட்டு இந்த கேடுகெட்ட சமூகத்தை உயர்ந்த முற்போக்கான சமூகமாக மாற்ற முடியும்.

9.மனிதர்கள் தமக்கு வேளியே யதார்த்தமாகவுள்ள பொருளையோ, பிரச்சனையோ கண்டு உணர்வதற்கு மனிதர்களிடத்தே உள்ள ஐந்து புலன் அறிவுச் சாதனங்கள் இருக்கிறது.அதாவது முதலாவது கண், இரண்டாவது மூக்கு, மூன்றாவது செவி, நான்காவது வாய், ஐந்தாவது மனிதர்களின் உடல் என்று சொல்லப்படும் மெய். இந்த ஐம்புலன்களைக் கொண்டே மனிதன் இயற்கையையும், சமூகத்தையும் காண்கிறான். இவ்வாறு மனிதன் புறநிலைகளைப் பார்ப்பதன் மூலம் இவற்றை அவனது மூளையில் பிரதிபலிக்கின்றன. இந்த பிரதிபலிப்புதான் மனிதனின் ஆரம்ப அறிதல் கட்டமாகும். இதனையே புலனறிவுக் கட்டம் எனப்படும்.

10.இவ்வாறு புலன்கள் மூலம் அறியப்பட்ட விவரங்கள் தொகுக்கப்பட்டவுடன் மனிதர்களின் சிந்தனையில் ஒரு பாய்ச்சல் ஏற்பட்டு அது பகுத்தறிவு கட்டத்திற்கு முன்னேறுகிறது. இந்தப் பகுத்தறிவு கட்டத்தில்தான் புறநிலைமைகள் பற்றிய கருத்துக்களை மனிதர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள்.இவ்வாறு ஒரு பொருளையோ ஒரு சமூகத்தையோ அல்லது ஒரு பிரச்சனையையோஅறிந்துகொள்வதற்கான நிகழ்ச்சிப் போக்கில் அந்த பொருளைப் பற்றியோ அல்லது சமூகத்தைப் பற்றியோ கருத்துக்களையும் கொள்கைகளையும் மனிதர்கள் வகுத்துக் கொள்வது இந்த இரண்டாவது கட்டமான பகுத்தறிவுக் கட்டத்தில்தான்.

11.முதலாவது கட்டமான புலனறிவுக் கட்டத்தில் மனிதர்களுக்கு வெளியிலுள்ள புற நிலையிலுள்ள சடப் பொருளிலிருந்து அகநிலையான உணர்வுக்கு மாறுகிறது.அதாவது புற நிலைக்களைப் பற்றி மனிதர்கள் தனது புலன்களின் மூலம் உணர்ந்து கொள்கிறான். அதாவது முதல் கட்டத்தில் மனிதன் புற நிலைமைகளை உணர்ந்து கொள்கிறான். ஆனால் இன்னும் புறநிலைகளைப் பற்றிய கருத்தை அவன் வந்தடையவில்லை. எனினும் புறநிலை பற்றிய கருத்தை வந்தடைவதற்கு முதல் கட்டமான புலனறிவுக் கட்டத்தை அவன் கட்டாயம் கடந்துதான் செல்ல வேண்டும்.

12.மனிதர்கள் புலனறிவுக் கட்டத்திற்குப் பிறகு தான் உணர்ந்தவற்றை தொகுக்கிறான் அதன் மூலம் புற நிலையைப் பற்றிய கருத்துக்களைப் படைக்கிறான்.இவ்வாறு இரண்டாவதுகட்டத்தில்மனிதனால் உருவாக்கப்பட்ட கருத்துக்கள்,கொள்கைகள்,வழிமுறைகள் புறநிலைக்குப் பொருத்தமாக உள்ளனவா இல்லையா என்பது கருத்துக்களை உருவாக்கும்கட்டத்தில் மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாது.அதாவது மனிதர்களால் உருவாக்கப்பட்டஇந்த கருத்துக்கள் உண்மையா அல்லது பொய்யா என்பது தெரியாது, தெரிந்துகொள்ளவும் முடியாது.

13.இரண்டாவதுகட்டத்தில்உருவாக்கப்பட்ட கருத்துக்கள் உண்மையா பொய்யா என்பதை அறிந்துகொள்ள இந்த கருத்துக்களை புற நிலையோடு இணைத்துநடைமுறையில் சோதித்துப்பார்க்க வேண்டும். அதாவது விஞ்ஞானப் பரிசோதனை செய்தாக வேண்டும். பொருளைப் பற்றிய உண்மையை அறிய மனிதர்கள் சோதனைச் சாலையில் விஞ்ஞானப் பரிசோதனை செய்கிறார்கள்.ஆனால் சமூகப் பிரச்சனையின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ளமக்களைத் திரட்டி நடைமுறைப் போராட்டங்களில் ஈடுபட்டு அதன் விளைவுகளின் மூலம்சோதனை செய்ய வேண்டும்.

14.இத்தகைய சோதனையின் மூலம் ஒரு கருத்து வெற்றி பெற்றால் அந்தக் கருத்து சரியான கருத்தாக இருக்கும்.சோதனையில் தோல்வியடைந்தால் இந்தக் கருத்து தவறானது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். இதன் அடிப்படையில் பார்த்தால் இந்தியப்  பொதுவுடமையாளர்கள் நூறு வருடங்களாக சமூக மாற்றத்திற்காகப் பாடுபடுகிறார்கள்.

ஆனால் இவ்வளவு காலம் ஆகியும் அவர்கள் வெற்றிபெறவே இல்லை. அப்படியானால் சமூகத்தைப் பற்றிய அவர்களது புரிதல் மற்றும் அவற்றிலிருந்துஅவர்கள் வகுத்துக் கொண்ட கொள்கை,போர்த்தந்திரம்,செயல்தந்திரம் போன்றவை இந்த சமூகமாற்றத்திற்குபொருத்தமில்லாமல் இருக்கிறது என்பதுதானே உண்மை.இந்த உண்மையைப் புரிந்துகொண்டு சமூகத்தை அறிந்துகொள்ள நடைமுறை ஆய்வில் மேலும் ஆழமாகஈடுபடவேண்டும்என்பதுதானே அவசியமாகிறது. இந்த உண்மையை இந்தியப் பொதுவுடமையாளர்கள் உணர்ந்துகொள்ளவே இல்லை. இந்த சமூகத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால்முதலில்கம்யூனிஸ்டுகள் மக்களிடம் ஒன்றுகலக்க வேண்டும் என்றார்லெனின்.ஆனால் இந்தியப் பொதுவுடமையாளர்கள் மக்களிடம் செல்லவே இல்லை, அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளவே இல்லை, பிறகு எப்படி அவர்களால் இந்திய சமூகத்தை புரிந்துகொள்ள முடியும்? இவர்கள் இந்திய சமூகத்தைப் வர்க்க ஆய்வு செய்து புரிந்துகொள்ளாமலேயே சமூகத்தை மாற்ற தங்களிடம் திட்டம் உள்ளது என்ற இறுமாப்போடு செயல்படுவதால்இவர்கள் வெற்றிபெற முடியவில்லை என்ற உண்மையை இவர்கள் அறிந்துகொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகும். ஆகவே இந்தியப் பொதுவுடமையாளர்கள் முதலில் மக்களிடம் சென்று அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மக்களைப் பற்றிய அவர்களது அனுபவங்களிலிருந்து சமூக மாற்றத்திற்கான கொள்கைத் திட்டங்களை வகுத்து,பின்பு மக்களைத் திரட்டி போராட்டங்களின் மூலம் அவர்களது கொள்கைத் திட்டங்களை சோதித்துப்பார்த்து மிகச் சரியான விஞ்ஞானப்பூர்வமான கொள்கைத் திட்டங்களை வகுத்து தேவையான அமைப்புகளை உருவாக்கி மக்களைத் திரட்டிப் போராடினால் மட்டுமே கம்யூனிஸ்டுகளால் வெற்றி வாகை சூடமுடியும்.

15.சமூதாயத்தின் முன்னேறிய வர்க்கமான பாட்டாளிவர்க்கத் தலைமையில்அமைந்த கம்யூனிஸ்டுக் கட்சியால் சில சமயங்களில் சரியான கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில்மக்களைத் திரட்டிப் போராடினாலும் தோல்வியை சந்திக்க நேரலாம்.இதற்கு காரணம்மக்களின் பலத்தைக் காட்டிலும் எதிரிகளின் பலம் அதிகமாக இருந்தால் மக்கள் தோல்வியடைகிறார்கள். இருந்த போதிலும் இந்த நடைமுறை அனுபவத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு கம்யூனிஸ்டுகள் எவ்வாறு மக்களின் பலத்தை அதிகரிப்பது எப்படிஎதிரியின் பலத்தை குறைப்பது என்பது பற்றி சிந்தித்து புதிய வகையான செயல்தந்திரம் வகுத்து செயல்படுவதன் மூலம் வெற்றிபெற முடியும்.

16.கம்யூனிஸ்டுகள் மக்களிடம் ஒன்றுகலந்து மக்களைப் புரிந்துகொண்டு சமூகத்தையும் சமூகமாற்றத்திற்கான கொள்கைத் திட்டங்களை வகுத்து அதன் அடிப்படையில் செயல்தந்திரம் வகுத்து மக்களைத் திரட்டி முதலில் போராட வேண்டும்.பிறகு அந்தப் போராட்டத்தின் விளைவுகளிலிருந்து அவர்கள் வகுத்த கொள்கைத் திட்டம் சரியானதா இல்லை தவறானதா என்பதை ஆய்வு செய்து புரிந்துகொள்ள வேண்டும்.விளைவுகள் சாதகமாக இருந்தால் வகுக்கப்பட்ட கொள்கை சரியானது என்று முடிவு செய்து அந்தக் கொள்கையின் அடிப்படையில் தொடர்ந்து செயல்பட வேண்டும். இதற்கு மாறாக போராட்டத்தின் விளைவு பாதகமாக இருந்தால் வகுக்கப்பட்ட கொள்கைத் திட்டம் தவறானது என்பதைப் புரிந்துகொண்டு அந்தக் கொள்கையை கைவிட்டுவிட வேண்டும்.இந்த அனுபவங்களிலிருந்துபுதிய கொள்கைத் திட்டத்தை உருவாக்கி, அதனை செயல்படுத்த வேண்டும்.மீண்டும் மீண்டும் இந்த சுற்றைஅதாவது நடைமுறையிலிருந்து அதாவது மக்களிடம் ஒன்றுகலந்து செயல்படுவதன்மூலம் கொள்கைகளை வகுப்பதும், அவ்வாறு வகுக்கப்பட்ட கொள்கைகளைமீண்டும் மக்கள் மூலம் நடைமுறையில் செயல்படுத்துவதும் ஆகிய முறைகளில் தொடர்ந்து செயல்படுவதன் மூலம் கம்யூனிஸ்டுகளால் மிகச் சரியான கொள்கைகளை வகுக்க முடியும் அதேபோல் மிகச் சரியான நடைமுறையில் ஈடுபட்டு வெற்றி பெற முடியும்.இந்த முறைகளைக் கையாண்டுதான்ரஷ்யக்கம்யூனிஸ்டுகளும் சீனக் கம்யூனிஸ்டுகளும் வரலாற்றில் வெற்றிபெற்றார்கள்.இந்த முறையையேதத்துவமும்நடைமுறையும் இணைக்கப்பட வேண்டும் என்ற கோட்பாடாக மார்க்சிய ஆசான்கள் நமக்கு வகுத்துக் கொடுத்துள்ளார்கள்

17.ஒரு பொருளைப் பற்றியோ அல்லது ஒரு பிரச்சனையைப் பற்றியோ மனிதர்கள் அவர்களது கருத்து,கொள்கை,வழிமுறை போன்றவற்றை முடிவு செய்துவிட்ட பின்பு எந்த நடைமுறை அனுபவத்திலிருந்து இந்த முடிவுகளுக்கு வந்தார்களோ அதே நடைமுறையின் மூலம் மனிதர்கள் வந்தடைந்த கருத்து அல்லது கொள்கை சரியா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும். உதாரணமாக ஒரு தொழிற்சாலையின் முதலாளியை எதிர்த்து ஒரு கூலித் தொழிலாளி தனியாகப் போராடுவதன் மூலம் அந்தத் தொழிலாளியினால் கூலி உயர்வைப் பெற முடியவில்லை. ஆகவே உயர்ந்த கூலியைப் பெறுவதற்கு பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் கூட்டாக ஒன்று சேர்ந்து போராடினால் அந்த குறிப்பிட்ட தொழிலாளிக்கு மட்டுமல்லாது அனைத்து தொழிலாளர்களுக்கும் கூலி உயர்வு கிடைக்கும் என்ற கருத்தை அல்லது கொள்கையை நடைமுறை அனுபவத்திலிருந்து வந்தடைந்த தொழிலாளர்கள்,இந்தக் கொள்கையை நடைமுறையில் சோதித்துப் பார்க்க தொழிலாளர்கள் ஒன்றுசேர்ந்து போராட்டம் நடத்தும் போது தொழிலாளர்களின் போராட்டத்தின் காரணமாக உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது,அதனால் முதலாளிக்கு இலாபம் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் முதலாளி பணிந்து வந்து தொழிலாளார்களின் கூலியை உயர்த்துகிறார். இந்த முயற்சியின் மூலம் தொழிலாளர்கள் வெற்றி பெற்ற அனுபவத்தின்காரணமாகதொழிலாளர்கள் சங்கமாக ஒன்றுபட வேண்டும் என்ற கொள்கையை வகுத்து செயல்படுகிறார்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பொது உண்மையை அல்லது கொள்கைக்கு வந்தடைகிறார்கள். இவ்வாறுதான் வகுக்கப்பட்ட கொள்கையை நடைமுறையில் சோதித்து அறிவதன் மூலம் ஒரு பாய்ச்சல் ஏற்பட்டு எது உண்மையான கொள்கை எது தவறான கொள்கை என்பதை மனிதர்கள் புரிந்துகொள்கிறார்கள். ஆகவே எந்தப் பிரச்சனையிலும் உண்மையை அறிவதற்கு நடைமுறை சோதனைதான் இறுதியான சரியான வழிமுறையாகும்.ஆகவேதான் உண்மையை அறிவதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்பதை நாம் உணர வேண்டும்.

18.பாட்டாளி வர்க்கம் சமூகத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டே சமூகத்தை அறிந்துகொள்ள முயற்சிக்கிறது.இதற்கு மாறாக புரட்சியை நோக்கமாக இல்லாத பிற்போக்குப் பேர்வழிகள் சமூகத்தைப் பற்றி பல்வேறுவிதமான விளக்கங்களைக் கொடுப்பார்கள் உதாரணமாக இந்திய சமூகமே சாதியை அடிப்படையாகக் கொண்டது என்று பல்வேறு விதமாக கதையடிப்பார்கள், ஆனால் இந்திய சமூகத்தில் நிலவும் சாதி மற்றும் தீண்டாமைப் பிரச்சனைக்கு தேவையான தீர்வுகளை முன்வைக்க மாட்டார்கள்.மேலும் இந்தப் பிரச்சனையை எவ்வளவு காலம் ஆனாலும் தீர்க்க மாட்டார்கள். இவர்களுக்கு மாறாக உண்மையிலேயே உதாரணமாக ரஷ்யாவில் லெனின், சீனாவில் மாவோ போன்ற தலைவர்கள்தான் அவர்களின் நாட்டின் சமூகத்தின் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு அந்தப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டுபிடித்து அந்த வழிமுறைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி மக்களை ஏற்க செய்து மக்களைத் திரட்டிப் போராடி அந்தப் பிரச்சனைகளை தீர்த்து சமூகத்தை நடைமுறையில் மாற்றிக் காட்டினார்கள். இந்த அடிப்படைகளை புரிந்து செயல்படுபவர்கள்தான் பாட்டாளி வர்க்கத் தலைவர்களாகவும்பாட்டாளி வர்க்க அமைப்புகளாகவும் இருக்க முடியும்.சமூக மாற்றத்தை நோக்கமாகக் கொண்டிராத எவராலும் சமூகத்தை மாற்ற முடியாதது மட்டுமல்ல,சமூகத்தைமாற்றுவதற்கான கொள்கையையோ வழிமுறைகளையோ கண்டுபிடிக்கவும் முடியாது.மாறாகசமூக மாற்றத்திற்கு தொடர்பில்லாத அற்ப பிரச்சனைகளை முன்வைத்து சமூகமாற்றத்திற்கான போராட்டங்களிலிருந்து மக்களை இத்தகையவர்கள்திசைதிருப்பிக்கொண்டுஇருப்பதை நாம் பார்க்கலாம்.

19.மனிதர்களின் அறிவு வளர்ச்சிப் போக்கில்முதலில்சடப்பொருள்களிலிருந்து அதாவதுசமூகத்திலிருந்து அல்லது பிரச்சனைகளிலிருந்து அந்தப் பிரச்சனை பற்றிய உணர்வுக்கும், பின்னர் அந்த உணர்வுகளிலிருந்து சட்ப்பொருளுக்கும்,அதாவது மனிதர்களின்நடைமுறைஅனுபவத்திலிருந்து அந்தப் பொருள் அல்லது சமூகத்தைப் பற்றிய அறிவுக்கும் பின்னர் அந்த அறிவிலிருந்து நடைமுறைக்கும்,இவ்வாறு நடைமுறையிலிருந்து கொள்கை முடிவுக்கும் பின்னர் கொள்கை முடிவிலிருந்து நடைமுறைக்கும் திரும்பத் திரும்ப பல தடவைகள் நிகழ்ந்த பின்னர் மாத்திரமே ஒரு சமூகம் அல்லது பிரச்சனை பற்றியும் அதனை மாற்றியமைப்பதற்கான சரியான கொள்கை முடிவுகளையும் அல்லது அறிவையும் மனிதர்களால் புரிந்துகொள்ளவும் அல்லது முடிவிற்கு வந்து இறுதியாக நடைமுறை செயல்பாட்டின் மூலம் மனிதர்கள் விரும்பியதை சாதிக்க முடியும். இத்தகைய சாதனைகளுக்கு அளவே இல்லை.

20. நமது நடைமுறை வாழ்வின் அனுபவத்திலிருந்து நமது வாழ்க்கை நிலைமை பற்றியும், நாம் படும் துண்பங்கள் பற்றியும் நமக்கு துண்பங்கள் கொடுப்பவர்கள் பற்றியும், நமக்கு துண்பம் கொடுப்பவர்களின் பலம் பலவீனம் பற்றியும் நமது வாழ்க்கை அனுபவத்திலிருந்து புரிந்துகொள்கிறோம்

இந்தத் துண்பங்களிலிருந்து நாம் மீண்டு வருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிந்தித்து நாம் சில முடிவுகளுக்கு வருகிறோம்.அந்த முடிவுகளை நாம் நமது வாழ்க்கை நடைமுறையில் செயல்படுத்திப் பார்க்கிறோம்.அதில் வெற்றி கிடைக்கவில்லை என்றால் நாம் சோர்ந்து போகவேண்டிய அவசியமில்லை.நமது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வேறு வழியைத் தேடுகிறோம், மீண்டும் புதிய வழிகளை கண்டுபிடித்து,புதிய வழிகளை முயற்சி செய்து பார்க்கிறோம். இவ்வாறு மனிதர்கள் தங்களது வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பல வழிகளில் முயற்சி செய்தும்,நடைமுறைப்படுத்தியும் தொடர்ந்து தோல்வியடைவதால் மனிதர்களில் சிலர் தோல்வி மனப்பான்மையின் காரணமாகஅவர்களின் போராட்டத்தை கைவிடலாம். ஆனால் எல்லா மனிதர்களும் இந்தப் போராட்டத்தை கைவிட மாட்டார்கள். மனித சமூக வரலாற்றில் சில மனிதர்கள் எப்போதும் இந்த துண்பங்களிலிருந்து மீண்டு வருவதற்கு தொடர்ந்து சிந்தித்துக்கொண்டே,போராடிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் புதிய புதியவழிமுறைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பார்கள். நிச்சயமாகஒரு சமயத்தில் மிகச் சரியான விஞ்ஞான வழியை சிலர் கண்டபிடிப்பார்கள். அந்த வழியை மக்களிடம் லெனின் மாவோ செய்ததைப் போல எடுத்துச் செல்வார்கள், மக்களை அணிதிரட்டி ஒரு புரட்சியின் மூலம் சமூகப் பிரச்சனைகளைத் தீர்ப்பார்கள். ஆகவே உழைக்கும் மக்கள் ஒவ்வொருவரும் உழைக்கும் மக்களின் துண்பங்களைத் தீர்ப்பதற்கான அல்லது சமூக மாற்றத்திற்கான வழிமுறைகளைப் பற்றி சிந்தித்து புதிய கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும்.எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளை செயல்படுத்தி அதில் எந்த கொள்கை முடிவு சரியானது என்பதை நடைமுறை அனுபவத்திலிருந்து நாம் கண்டுபிடிக்க வேண்டும். இந்த மார்க்சிய வகைப்பட்ட இயங்கியல் பொருள்முதல்வாத அனுகுமுறையைப் பின்பற்றக்கூடியபாட்டாளி வர்க்க அமைப்பின் தேவையை உணர்ந்து அத்தகைய அமைப்பையும் நாம் உருவாக்கிட வேண்டும்.அந்த அமைப்பின் மூலம் நடைமுறை அனுபவத்தின் மூலம் அல்லது வர்க்க ஆய்வுகளை நடத்துவதன் மூலம் நிலவுகின்ற சமூகத்தை நாம் அறிந்துகொண்டுசமூகமாற்றத்திற்கான வழிமுறைகளை அல்லது திட்டத்தை உருவாக்க வேண்டும்.மேலும் இதுவரை நடந்த வர்க்கப் போராட்டங்களின்அனுபவங்களிலிருந்து வந்தடைந்த முடிவுகளை நமது மார்க்சியஆசான்கள்முன்வைத்துள்ளார்கள். அந்த அனுபவங்களையும் மார்க்சியஆசான்களதுபோதனைகளையும் நாம் கற்றுக்கொண்டு நமது நடைமுறைக்கான வழிமுறைகளை குறிப்பாக கண்டுபிடிப்பதற்கு மார்க்சிய ஆசான்களது பொதுக்கோட்பாட்டை நமது குறிப்பான ஆய்வுக்குப் பயன்படுத்த வேண்டும். இந்த முறைகளின் மூலம் நமது செயல்பாட்டிற்கான வழிமுறைகளை அல்லது திட்டத்தை உருவாக்கிய அமைப்பின் வழிகாட்டுதலில் நாம் அந்த திட்டத்தை நடைமுறையில் செயல்படுத்தி சோதித்துப் பார்க்கவேண்டும்.அந்த சோதனையின் விளைவு சாதகமாக இருக்கும் வரை நமது திட்டப் பணி தீராது. அதாவது நடைமுறை, அதிலிருந்து கொள்கை முடிவு, பின்னர் மீண்டும் இந்த கொள்கை முடிவை நடைமுறையில் சோதித்தல் ஆகிய இந்த முறையை மீண்டும் மீண்டும் தடைமுறையில் செயல்படுத்தி சரியான கொள்கைத் திட்டத்தையும் செயல்தந்திரத்தையும் வகுத்து செயல்பட்டால் உழைக்கும் மக்களும், அந்த மக்களுக்காகப் பாடுபடும் பாட்டாளி வர்க்க அமைப்பும் வெற்றிவாகை சூடும். இதுதான் மார்க்சிய ஆசான்களால் வகுத்துக் கொடுக்கப்பட்ட இயக்கவில் பொருள்முதல்வாத வழிமுறையாகும்.

தேன்மொழி

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்