சாதி அன்றும் இன்றும்-பிரிட்டிஷாரின் சாதி கோட்பாடுகளும் (03-05-2026 விவாதம்)

சாதி பற்றிய முக்கிய சில கோட்பாடுகள்-சாதியத்தின் தோற்றத்தை விளக்கும் சில கோட்பாடுகள் உள்ளன அவற்றில் குறிக்கதக்கன இன்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சாதியை எப்படி கையாண்டனர் என்பதனை தேடுவோம்...

...

சாதி அன்றும் இன்றும்-பிரிட்டிஷாரின் சாதி கோட்பாடுகளும்


மனிதசமூகம் உயிர்வாழ மற்றும் வளர்ச்சியடைய வேண்டுமானால், அதற்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்கு மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடவேண்டும். ஆகவே மனித சமூகத்தின் வரலாற்றை புரிந்து கொண்டு சமூகத்தை மாற்றியமைப்பதற்கு நமது ஆய்வானது உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று நமக்கு மார்க்சிய சமூகவிஞ்ஞானம் போதிக்கிறது. இவ்வளவு விரிவாக விளக்குவதன் நோக்கம் நம் சமூகத்தில் உள்ள ஏற்றதாழ்வான வர்க்க அமைப்பே சாதியின் இருபிற்கு காரணமாக உள்லது. அதனை புரிந்து, மாற்ற மார்க்சிய அறிவை பெற வேண்டும். மார்க்சிய போதனையை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடும்போது உற்பத்திச் சாதனங்களின் துணைகொண்டே உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். ஆரம்பகாலங்களில் இந்த உற்பத்திச்சாதனங்கள் சமூகத்தின் பொதுச் சொத்தாக இருந்தது. அதனால் மக்களிடையே வர்க்கப் பிரிவுகளோ ஏற்றத்தாழ்வுகளோ இல்லை. உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கில் பல்வேறு வேலைப் பிரிவினைகள்தோன்றியது. அதன் தொடர்ச்சியாக மனிதர்களிடையே உடமையுள்ளவர்கள் மற்றும் உடமையற்றவர்கள் உருவாகிறார்கள் மேலும் சமூகத்தின் தேவைக்கு அதிகமான உற்பத்தி நடந்தது. இந்த உபரியையும் உற்பத்திச் சாதனங்களையும் திறமையானவர்கள் டமையை கைப்பற்றிக் கொண்டு பலரை உடமையற்றவர்களாக மாற்றி அவர்களை சுரண்டி வாழ ஆரம்பித்தனர். இப்படித்தான் வர்க்கங்கள் தோன்றின. இதன் பின்பு சமூக உற்பத்தியானது மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட இந்த வர்க்கங்களுக்கு இடையிலான உறவின் அடிப்படையிலேயே நடக்கிறது. இதனைத்தான் உற்பத்திஉறவு என்கிறோம். இந்த உற்பத்திஉறவுதான் சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது. இதனை ஆய்வு செய்து மாற்றியமைப்பதன் மூலமே சமூகத்தை மாற்றியமைக்க முடியும்.வர்க்க சமூகத்தில் பல்வேறு உடமை வர்க்கப்பிரிவுகள் இருந்தாலும் எந்த வர்க்கங்களின் கைகளில் அரசியல் அதிகாரம் இருக்கிறதோ அந்த வர்க்கங்கள்தான் அந்த சமூகத்தின் ஆளும்வர்க்கமாகும். இந்த அதிகாரத்தை பயன்படுத்தியே சமூகத்திலுள்ள பிற அனைத்து வர்க்கங்களையும் கட்டுப்படுத்தி சுரண்டி உற்பத்தியை நடத்துகிறது. இந்த வகையில் தனது சுரண்டலை நியாயப்படுத்தவும் தொடர்ந்து சுரண்டலை நடத்துவதற்கான கருத்துக்களை உருவாக்கி அதனை மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கான அரசியல் கட்சிகள் மற்றும் சாதி மத நிறுவனங்களையும் கலை இலக்கியங்களையும் மற்றும் வன்முறை கருவியான அரசையும் உருவாக்குகிறார்கள். இவ்வாறு அடித்தளத்திலுள்ள தனது உற்பத்தி உறவை பாதுகாக்கவும் பலப்படுத்துவுமான இந்த அமைப்புகளையும் சித்தாந்த நிறுவனங்களையும் மேல்தளம் (மேல்கட்டுமானம்) என்கிறோம்.

தமிழக வரலாற்றிலும் 7ஆம் நூற்றாண்டுகளில் சோழர் ஆட்சிக் காலத்தில் பரவலாக புகுத்தப்பட்ட நிலமானிய முறை இங்கு முதன்முதலாக சாதி அமைப்பை உருவாக்கி திடப்படுத்தியது. மேற்கண்ட பொருளியல் அடித்தளத்தின் மாற்றமும், வளர்ச்சியும் அதற்கான மேற்கட்டுமானத்தை உருவாக்கியது என்பதை பார்க்க முடியும். இந்த வரலாற்று ஆய்வுகள் சமூக வடிவத்தை, சாதியைப் பற்றிய சரியான ஆய்வுகளை வைக்க உதவியது. அதாவது “பரம்பரைத் தொழில் பிரிவினை அடிப்படையில் சாதிமுறை தன் நிலைப்பிற்கு ஆதாரம் கொண்டிருக்கிறது. சாதி மற்றும் தீண்டாமையின் சமூக வேர்கள் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறது. சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்தரவாதம் செய்யும் பிறஅம்சங்களான அகமணமுறை, பரம்பரை சடங்குகள் ஆகியவற்றிற்கு நிலப்பிரபுத்துவ பண்பாடே காரணம். நிலப்பிரபுத்துவ அமைப்பில் ஆன்மீக வகைப்படாத நிலப்பிரபுக்களுக்கு இணையாக ஆன்மீக நிலப்பிரபுக்களையும் சேர்த்தே பார்க்க வேண்டும். ஆன்மீக நிலப்பிரபுக்களின் (கோயில்கள், மடங்கள்) ஆதிக்கம் தென்னிந்தியாவில் மிக வலுவானதாகும். அதிலும் நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையை நிலை நிறுத்தியதில் முக்கிய பங்காற்றியது பார்ப்பன மடங்கள், கோயில்கள் மட்டுமல்ல அதைவிட வலுவான பார்ப்பனர் அல்லாத கோயில்களும் மடங்களும்தான். சோழர் காலத்தில் வழங்கப்பட்ட பிரம்மதேயம், பள்ளிச்சந்தம், தேவதானம் ஆகியவை நிலப்பிரபுத்துவ உருவாக்கத்தில் முக்கியபங்காற்றியதை அறியமுடியும். தமிழகத்தில் மட்டும் 36,355 கோயில்கள் மற்றும் மடங்கள் 4,79,021 ஏக்கர் நிலத்தினை வைத்துள்ளதாக 2002-03ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை கூறுகிறது.
 
நிலவுடமைக்கும் மதநிறுவனங்களுக்கும் உள்ள உறவைப் புரிந்து கொள்ள எங்கெல்ஸ் கூற்றினை புரிந்துகொள்ளவேண்டும். “மத்திய காலத்தின் உலகக் கண்ணோட்டம் பெரும்பான்மையாக இறையியல் கண்ணோட்டம்தான். ஒரு பொதுஎதிரியான சராசன்களுக்கு (முஸ்லீம்) மாற்றாக ஐரோப்பிய நாடுகளை கிருஸ்துவம் ஒருமைப்படுத்தியது. கத்தோலிக்கம் இதைச் செய்தது. கருத்தளவில் மட்டும் இந்த இணைப்பு நின்றுவிடவில்லை. உண்மையிலேயே இந்த இணைப்பு இருந்தது. போப்பாண்டவரை மையமாகக் கொண்டு நிலப்பிரபுத்துவ ரீதியில் அமைக்கப்பட்டிருந்த தேவாலய அமைப்பில் அது காணப்பட்டது. நிலஉடமையாளர் என்ற முறையில் உள்ள தேவாலயம் பல்வேறு நாடுகளுக்கிடையிலான இணைப்பாக விளங்கியது. தேவாலயத்தின் நிலப்பிரபுத்துவ அமைப்பு, பிரபுத்துவ அரசாங்க முறைக்கு ஒரு மதஅங்கீகாரத்தை அளித்தது. மேலும் குருமார்கள் மட்டுமே படித்த வர்க்கத்தினர். எல்லா சிந்தனைகளுக்கும் தேவாலயம் ஆரம்பமாகவும், அடிப்படையாகவும் விளங்கியது” என்று எங்கெல்ஸ் கூறுவது இந்தியாவுக்கும் பொருந்துவதைக் காணமுடியும்.
 
பண்டைய இந்திய சமூக அமைப்புமுறை உருவாக்கத்தில் இந்து மதமும், வர்ணமும் ஆற்றிய பங்கையும், மத்திய கால இந்தியாவில் இந்துமதமும், சாதியும் ஆற்றிய பங்கையும் அதாவது மேற்கட்டுமானம் ஆற்றிய பங்கை தெளிவாக பார்க்க முடியும். உற்பத்திமுறையிலும், உற்பத்திஉறவுகளிலும் ஏற்படும் மாற்றம்தான் அதன் மேற்கட்டுமானத்தில் மாற்றத்தை கொண்டுவருகிறது. அதாவது “நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையும், பண்பாடும் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டால் சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கான சமூகவேர்கள் தகர்ந்துவிடும்” என்கிறோம். இதை வரலாற்று ஆதாரங்களுடன் ஆர்.எஸ்.சர்மாவும் நிரூபித்துள்ளார். இந்து மதம் நிலப்பிரபுத்துவ முறை ஒழிக்கப்பட்ட பிறகும் தன்னை புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொண்டு தொடர்ந்து உயிர் வாழ்வது சாத்தியமானதேயாகும். இவ்வாறு மதம் ஒரு சமூக நிகழ்வு என்ற முறையில் நிலைத்திருப்பதற்கான வேர்களும், சாதிமுறை ஒரு சமூக நிகழ்வு என்ற முறையில் நிலைத்து நிற்பதற்கான வேர்களும் வெவ்வேறானவை” என்பதைக் காணலாம். 
 
சாதி பற்றிய முக்கிய சில கோட்பாடுகள்-சாதியத்தின் தோற்றத்தை விளக்கும் சில கோட்பாடுகள் உள்ளன அவற்றில் குறிக்கதக்கன.
 
·        மதக் கோட்பாடு (Religious theory)
·        தொழிற் கோட்பாடு (Occupational theory)
·        இனக் கோட்பாடு (Racial theory)
·        அம்பேத்காரின் கூற்று
·        பிரிட்டிஷ் சூழ்ச்சி

 பிரிட்டிஷ்காலனிய ஆட்சியும்சாதி கோட்பாடுகளும்

 
காலனிய ஆதிக்கவாதிகள் இந்தியா எனும் கருத்து உருவாவதற்கு எவ்வாறு தூண்டப்பட்டனர் என்று அறிவோம். இந்தியா எனும் கருத்து உருவாக்கத்தில் ஒரு முக்கியகூறு உண்டு இந்திய மரபு என்பதாகும். காலனி ஆட்சியாளர்கள் இந்திய நாகரீகம் பற்றியும் இந்தியாவைப் பற்றியும் காலணி நிர்வாக அறிக்கைகளும் தேசிய கற்பிதங்களும் பிரிட்டிஷ் ஆட்சியை கட்டியமைக்க பயன்படுத்தினர். 
 
ஆங்கிலேயர்கள் சாதிகளின் இருப்பை தீவிரமாக பரிசீலித்தனர். அடுத்தடுத்து குடிமதிப்புகளில் இந்திய மக்கள் அனைவரையும் சாதியாகவே பாகுபடுத்த முயன்றனர். எல்லோரும் ஏதோ ஒரு சாதியை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்றும் சாதி அடையாளமே உண்மையான அடையாளம் என்றும் கருதினர். இத்தகைய முன்னெடுப்பால் சாதி உண்மையானதாகவும் மேலும் வலுப்பெற்றதாகவும் மாறியது. (சாதி தோற்றம் வளர்ச்சியும் ஓர் அறிமுகம் சுரிந்தர் எஸ் ஜோத்கா தமிழில் பக்தவத்சல பாரதி நூல் பக்கம் 22 - 23 காலச்சுவடு பதிப்பகம்).
 
இவ்வகையாக மிஷனரிகளும் காலனி அதிகாரிகளும் வெவ்வேறு வகையில் சாதி உருவாக்கத்தில் கருத்துகளில் பங்களித்துள்ளனர். இந்திய சமூகத்தைப் புரிந்து கொள்வதற்காக இந்து மதநூல்களையும் அந்நூலை விளங்கிக் கொள்ள அன்றைய பண்டிட்டுகளையும் சாஸ்திரிகளையும் பயன்படுத்திக் கொண்டார்கள். 'இப்பனூல்களின் கருத்து ஏற்பது என்பது இந்திய சமூகம் சமூகம் அசைவற்றது காலங்களை கடக்காதது காலத்தால் மாற்றமுறாதது. இந்திய சமூகம் பற்றிய பல்வேறு பிரதேசங்களை இடையிலான வேறுபாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை' (மேல் அதே நூல் பக்கம் 23).
 

சாதிப்பற்றிய தூய்மோனின் கோட்பாடு இந்தியா பற்றிய அவர்களின் மேற்கத்தியர் கோட்பாட்டை வலுப்படுத்துகிறது. இந்தியாவின் ஒட்டு மொத்தத்தையும் ஒன்றிணைக்கும் வகையில் அதன் தனித்துவமான சிந்தனைமுறை அல்லது நடைமுறையை விளக்குகிறது. இன்னொரு வகையில் சொல்வதனால் இந்திய சமூக பண்பாட்டு வாழ்வின் பகுதியாக அமைகிறது என்பதனை சாதி எனசுருக்கலாம். இந்தியாவின் இந்த பல பனுவல்கள் தருவது சாதி அமைப்பை கொண்ட இந்தியசமூகம் காலம்காலமாகவேஅதன் அகமுரண்பாடுகளோடு மாறாமல் வந்துள்ளதாக இப்பனுவல்கள் சொல்கின்றன. இந்த தேசத்தின் பூர்வீக மக்கள் மாற்றத்திற்கான எந்த முகாமையும் கொண்டிருக்கவில்லை எனும் தோற்றம் ஏற்படுகிறது. இத்தகைய வாதங்கள் மேற்குலகம் இந்தியாவே காலனியாக மாற்றியதற்கான நியாயப்படுத்துவதற்கு வழங்கப்பட்டன (அதே மேல் நூல் பக்கம்
33 -34 ).
 
மேலும் காலனி ஆதிக்காலத்தில் சாதி உருவாக்கம் எப்படி இருந்தது என்பதை பற்றி ஒரு சிறிய புரிதலுக்கு.பொதுவாக இன்று காலனி ஆதிக்க காலத்தில் சாதி அமைப்பில் ஒரு நெகிழ்ச்சியையும் சனாதன சிந்தனையின் செல்வாக்கில் இருந்து வீழ்ச்சி ஏற்படுத்தியதாக நம்பப்படுகின்றது. ஆனால் நாம் அனுமானிப்பதை விட மிகத் தீவிரமான வித்தியாசமான முறையில் சாதி அமைப்புடன் காலனியம் வினையாற்றி உள்ளது என்கிறார் நிக்ட்ரக்ஸ் (ஆங்கில ஆவண எழுத்தர்). காலனி அரசு புதிய வடிவிலான சிவில் சமூகம் ஒன்றை அறிமுகம் செய்தது என்றாலும் இந்த முந்தைய ஆட்சி எச்சங்கள் வடிவங்களை நவீன சிவில் சமூகத்தில் இருந்து விலக்கி வைத்து, அவற்றில் இடையீடு செய்வதில்லை என்ற பாவனையில் அவற்றில் காலத்தால் நிகழ்த்திருக்கக் கூடியதான மாற்றங்களைத் தடுத்து அவற்றின் முந்தைய வடிவம் என்ற பெயரில் சாதி பற்றிய அசைவியக்கமான நோக்கங்களை தவிர்த்து சனாதன(பார்ப்பனிய) நோக்கிலான உறைநிலை நோக்கத்தை அதிகாரப்பூர்வமாக்கியது. (சாதியை ஒரு மாறா நிலை கண்ணோட்டத்தில் நிறுத்திய பெருமை இவர்களை சாரும்) 
 
சாதி பற்றிய அசைவியக்கமான நோக்கங்களை தவிர்த்து சனாதன (பார்ப்பனிய) நோக்கிலான உறைநிலை நோக்கத்தை அதிகாரப் பூர்வமாக்கியது. (சாதியை ஒரு மாறாநிலை கண்ணோட்டத்தில் நிறுத்திய பெருமை இவர்களைசாரும்). இவர்கள் செய்த இந்தப் பார்வை கோளாறு பாரதூரமான விளைவுகளை உருவாக்கியுள்ளன. அதனை பற்றி தொடர்ந்து பார்ப்போம். இதனை பேச மறுப்பவர்களே இங்குள்ள சீர்திருத்தவாதிகளும் ஆட்சியாளர்களும்.
 

1857-ல் எழுச்சிக்குப் பிறகு ஆங்கிலேயே அதிகாரிகள் சாதி ரீதியாக மக்களை பிரித்தாளும் கொள்கையை நடைமுறைப்படுத்தி ராணுவத்திலும் சாதியாக, பிரதேசமாக தனித்தனியாக பிரித்து பணியில் அமர்த்துவது. நாட்டில் ஆங்கில ஆட்சி தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமெராணுவ தளபதி எச்.டி.டக்கர் வலியுறுத்தினர் (இந்தியாவில் சாதியும் இனமும் ஜி எஸ் குர்யே பக்கம் 296).
 
இந்தியாவில் ஆங்கிலே ஆதிக்கத்தை தக்கவைப்பதற்கு இந்திய மக்களை சாதிரீதியில் பிளவுபடுத்துவது அவசியமாக இருந்தது. அரசியல் எழுச்சியை தடுத்திட சாதி பயனுள்ளதாக இருப்பதாக சர்.லேபிள் கிரிபின் போன்ற அதிகாரிகள் கருதினர். ஒட்டு மொத்தத்தில் சாதியின் இருப்பு நமது ஆட்சி நீடித்திருப்பதற்கு சாதகம் இல்லாததாக தோன்றலாம். மதிநுட்பத்துடன் நிதானமாகும் அதனை கையாண்டால் அதை நமக்கு சாதகமாக மாற்ற முடியும். அதன் உள்ளடக்கம் தேசிய ஒற்றுமைக்கு எதிரானது என 1865-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஜேம்ஸ் கேர் எழுதினார். இதுபோன்ற வரலாற்று ஆசிரியர்களும் பத்திரிக்கையாளர்களும் அதிகாரிகளும் பிரித்தாலும் கருத்தையே போதித்து வந்தனர். பிரித்தாளும் கொள்கை பொதுக் கோட்பாடாக திருச்சபைகளும் கிறிஸ்தவ தேவாலயங்களும் பயன்படுத்தியன (அதே நூல் பக்கம் 297).
 
பல்வேறு முரண்பாடுகளால் பிரிந்து கிடக்கும் மக்கள் தங்கள் நாட்டின் ஆட்சி அதிகார தேவையொட்டி ஒன்றுபட்டு போராடும் நிலையை தகர்க்க அவர்களுக்கு இடையிலே பல்வேறு விதமான முரண்பாடுகளை கையாண்டு சாதிரீதியான இடஒதுக்கீடு சட்டமன்றங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் கொணர்ந்தவை. ஒரே மொழிபேசும் பல்வேறு சாதிகள் தங்களுக்கு இடையிலான சாதிசங்கங்களை அமைத்துக் கொண்டது. இதனால் 
 
1. அதன் சமூகத் தகுதியை காப்பதற்கு. 
 
2.பள்ளி கல்லூரியில் பயிலும் தமது சாதி ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க நிதி அமைப்பைஉருவாக்குவது. 
 
3.சாதி உறுப்பினர்களின் பழக்கவழக்கங்களை முறைப்படுத்துவது (மேல் காணும் அதே நூல் பக்கம் 311).

 
ஆங்கில ஆட்சி இறுதியில் மதத்தின் ஆட்சியின் அடிப்படையில் மக்களை சாதி சமூகமாக ஒன்றுக்கொன்று எதிராக சுயநலக் குழுக்களாக உருவாக்கி வைத்திருந்தது. இவைதான் ஆங்கிலேயர்கள் இந்தியாவை உருவாக்கி வைத்தவை என்பதனை ஆங்கிலேயர்களே எழுதியுள்ள ஆவணங்களில் தேடிக்கிடப்பவை. மேலும் மக்களை சாதிகளா இன்றுள்ள அடைப்புக்குள் ப்படி ஆங்கிலேயர் கொணர்ந்தனர் பாருங்கள். 
 

1.பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் 1870-களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினர். அவர்களின் நோக்கம் அனைத்து சாதிகளிலும் உள்ள ஏழை எளிய மக்களை ஒன்றுபடுத்தி அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல. தங்களின் ஆட்சிகுகந்த வகையில் இந்த சாதிய முறையை பயன்படுத்திக் கொள்ள விளைந்தனர் எனலாம். தங்கள் காலனிய ஆட்சி நீடிக்க பிரித்தாள, மக்களை சாதிய ரீதியாக மட்டுமல்ல, மத ரீதியாகவும் மோதவிட்டு தங்களின் ஆட்சியினை தக்க வைத்துக் கொள்ள இவை பயன்பட்டது எனலாம்.
 
2. 1920-களில் இடஒதுக்கீடு கொள்கை அளவில் ஏற்கப்பட்டது. 1927-ல் வேலைவாய்ப்பில் பதிவு துறையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. மொத்த மக்கள்தொகையில் மிக அற்பமாக அந்த இடஒதுக்கீடு வழங்கியது. மக்கள் மத்தியில் சாதியாக ஒன்றிணைய தேவையை ஏற்படுத்தியது பல்வேறு பிரிவுகளாக இருந்த மக்கள் சாதி அடிபடையில் குறிபிட்ட அட்டவணைக்குள் அடக்கப்பட்டனர். இன்று காணும் சாதிசங்கங்கள் அன்றைய பல சாதியின் கலவை தொகுப்பே என்பேன். அதனை ஒருங்கிணைத்து ஒற்றை முத்திரை குத்தும் பணி அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் செய்தனர்.


சென்னை மாகாணத்தில் காலனி ஆதிக்கவாதிகள் சாதியை நிர்ணயிக்க கேட்ட கேள்விகள் கீழ் வருவன. 
 
மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரியாக மக்களை பிரித்த முதல் பணியினை எப்படி ஆங்கிலேய ஆட்சியர் செய்தனர் என்பதே இந்த குறிப்பு
1).சாதியின் பெயரைப் பற்றிய தொன்மையானதும் தோராயமான வரலாறு.
2).சாதியின் மூலம்.
3).குறிப்பிட்ட சாதியின் பரம்பரை தொழில் மற்றும் தற்போதைய தொழில் முறைகள்.4). மற்ற வகுப்பினரோடு ஒப்பிட்ட நிலைமை.
5).மதம்.6). பூணூல் அணிவது உண்டா இல்லையா?
7).புரோகிதர்கள் அல்லது குருக்கள்.
8).பிறப்பு சம்பந்தமான சடங்குகள்.
9).திருமண சடங்குகள்.
10).மரணம் மற்றும் ஈமக்கிரிகைச் சடங்குகள்.
11).திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை வயது.
12).விவாகரத்து.
13).விதவை மறுமணம் (அறுத்துக் கட்டுதல்)
14).சாதிகளின் பொதுப் பெயர்கள்.
15).ஆடை அணிகலன்கள்
16).உணவு
17).மது அருந்தும் வழக்கம்
18).சாதியில் உட்பிரிவு பெயர்கள்
19).மேலே கூறாத சிறந்த வழக்கங்கள்.
 
இவை ஆரம்ப கால சென்சஸ் சபையாரின் கேள்விகளாக வர்ண சட்டத்தின் அடிப்படையில் பட்டியல் இடபட்டதை காணமுடிகிறது.
 

மேலும் பிராமணர்களோடும் பிராமணத்துவத்தோடும் புழங்கும் அணுக்கம் விலக்கம் அடிப்படையில் சாதிகள் மேல் கீழாக ஒழுங்கமைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக 1901 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 14 பிரிவாக ஒழுங்கு அமைக்கப்பட்ட பட்டியல் (Subsidiary table I to XIV) கீழ் வருமாறு இருந்தது :

 

1). பிராமணர்களும் அதன் பிரிவினரும்
2). சத்திரியர்களும் அதன் பிரிவினரும் 
3). வைசியர்களும் பிரிவினரும்
4). சத்சூத்திரர்கள்
5). தங்களது சடங்குகளுக்கு பிராமணரை அமர்த்தும் சூத்திரர்கள்.
6).  எப்போதாவது பிராமணர்களை அமர்த்தும் சூத்திரர்கள்.
7).  பிராமணர்களை ஒருபோதும் அமர்த்தாத சூத்திரர்கள்.
8). தீண்டாமலே தீட்டுப்படும் சாதிகள் ஆனால் மாட்டு இறைச்சி உண்ணாதவர்கள்.
9). மாட்டு இறைச்சி உண்டாலும் தீண்டுவதால் மட்டும் மாசுப்படும் சாதிகள்.
10). மாட்டிறைச்சி உண்பவர்களும் தீண்டாமலே மாசுப்படுத்தும் சாதியினரும் 
11). பிராமணர்களின் மத ரீதியான மற்றும் சடங்கு ரீதியான மேலாண்மை ஏற்க மறுக்கும் சாதியினர் 
12). தெளிவற்ற அடையாளம் கொண்ட சாதியினர்.
13). இந்த ராஜதானிக்கு அன்னியமான சாதியினர்.
14). சாதியை குறிப்பிடாதவர்கள்.
 
இந்தப் பட்டியலை உருவாக்கியவர் சனாதனத்தை தூக்கிப்பிடித்த ஆங்கிலேயர்களின் தேவையறிந்த ஆளும் வர்க்கத்தின் சேவகர்தான். இந்தப் பட்டியலில் 30% பேர் சத்சூத்திரர்களாகவும் பதினாறு சதவீதம் பேர் சூத்திரர்களாகவும் பட்டியலிட பட்டிருந்தனர். அதாவது சடங்கார்ந்த பிராமணத் தலைமை ஏற்றவர்கள் இவர்கள்.
 
சத்திரிய உரிமையை கோரிய பள்ளிகள், வன்னியர்கள் சூத்திரப்பட்டியலில் மட்டுமே இடம்பெற்றனர்.கள்ளர்,மறவர் சூத்திரப்பட்டியலில் கடைசி தொகுதியில் இடம் பெற்றனர். சாணார்களும்/நாடார்களும் பரையர், பள்ளர், புலையர் வள்ளுவராகியரோடு தீண்டாமலே மாசுபடுத்தும் மாட்டு இறைச்சி உண்ணாதோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். சத்ரிய அந்தஸ்து கோரிய இந்த சாதிகளின் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் முன்னெடுப்புகள் முறியடிக்க பட்டன.
 
வன்னியர்களில் பள்ளி என்ற பிரிவு இருந்ததினால் பள்ளர்களுடன்   இணைத்து பார்க்கப்பட்டனர். அதேபோல நாடார்களும் அவர்கள் சாணார் அடையாளம் பஞ்சமர் பட்டியல் சேர்க்கப்பட்டது. இந்த இருசாதி பிரிவினரும் வெகுகாலம் சத்ரிய அடையாளத்தை கோரியபடி இருந்ததை காணமுடியும். இந்த சாதி அடையாள மீட்புப் போராட்ட வரலாறு தமிழக வரலாற்றின் மிக முக்கிய சாதிப் போராட்டத்தின் வரலாறாக உள்ளது. சாதிப் போராட்ட வரலாற்றில் முக்குலத்தோரும் கொங்குவெள்ளாரும் காலத்தால் வெகுப்பின்னரே வந்தனர்
 
அதாவது 1920களில் தங்கள் சாதி அடையாளங்களை மீட்க முன்னெடுத்த இவர்களுக்கு முன்னோடிகளே வன்னியரும், நாடாரும் அதற்கு ஒரு நூற்றாண்டு முன்னரே அதை செய்ய தொடங்கி விட்டிருந்தனர்.
 
வன்னியருக்கு அதிகாரமயமான மெட்ராஸ் பகுதிகளில் அணுக்கத்திலும் வாழ்ந்ததும் கல்வி வாய்ப்பும் இதற்கு உந்துதலாக இருந்திருக்கும். சாணார் நாடார்களைப் பொறுத்தவரை அவர்களது போராட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உருவானபோதும் அதன் நிலை பெற்றதும் தொடர்ந்ததும் கிறிஸ்துவ ஆதரவில் என்றால் மிகையில்லை.19ஆம் நூற்றாண்டு முழுவதுமான சாதிகளின் நூல்கள் பார்ப்பன மேலாண்மை எதிர்ப்பதிலும் அவர்களின் ஆதரவை நாடுவதிலும் அங்கீகரிப்பதிலும் கொண்டு சென்றுள்ளது. பார்ப்பன ஆதரவும் சாதி மேலாதிக்கதிற்கு பார்ப்பனர்கள் பரிந்துரையும் சேர்க்கப்பட்டுள்ளது.
 
ஒவ்வொருமக்கள் தொகை கணக்கெடுப்பிலும் காலணி அதிகாரிகள் அவர்கள் நோக்கத்தை ஒட்டியே எதிர்த்தும் சேர்த்தும் வைத்துள்ளனர் அவைத்தொடர்ந்து வர்ணக் கோட்பட்டை நோக்கியே நகர்ந்தபடியே இருந்தன.
 
காலனி ஆதிக்கத்தின் ஆரம்ப காலம் தொடங்கிய சாதி வரலாற்று நூல்கள் இருபதாம் நூற்றாண்டில் மத்திய காலம் வரை தொடர்ந்தபடி இருந்தன. சாதிய வரலாற்று நூல்கள் எண்ணிறந்தவை அவை கண்ணில் படுபவை சில தான். (மூலம் நமக்கு ஏன் இந்த இழிநிலை சாதி மாநாடுகளில் சாதி ஒழிப்பு மாநாடுகளிலும் பெரியார் தொகுப்பும் பதிப்பும் வீ எம் எஸ் சுப குண ராஜன் கயல் கவின் புக்ஸ்).
 
முந்தைய சமூக அமைப்புகளில் சமூகக் குழுக்களின் மோதல்களை தீர்க்க அரசன் இருந்தான் அவனுக்கு ஓரளவிலான வமையும் தொடர்பும் தீர்ப்பளிப்பதற்கான அனுபவ ஆதாரங்களும் இருந்தன. காலனிய ஆட்சியில் அதிகாரம் முன் தொடர்ச்சியற்றதாகவும் இங்குள்ள முரண்களை புரிந்துகொள்ளும் வல்லமை அற்றதாக இருந்தது. அதன் காரணமாக நூல் ஆதாரங்களை சார்ந்து நிற்க வேண்டிய தேவை இருந்தது. அந்த நூல்கள் முழுமையாக சனாதன சமஸ்கிருத அடிப்படையிலானவை யாகவும் ஒரு சமூக ஒழுங்கின் முதிர்ச்சியை புரிந்து கொள்ளாத காலத்தால் பழமை வாய்ந்த அந்தக் காலகட்டத்தின் சமூக அடையாளமாக சமூக உறவுகளாக சாதி அடையாளமாக அதன் அடிநாதமாக மதரீதியான தர்மநூல்களாக இவை காலனிஆட்சியின் தூண்களாகளாயின.
 
விசித்திரமான சாதி நிறுவனம் இந்தியாவில் இருந்த ஆங்கிலேயே அதிகாரிகள் தங்கள் ஆய்வுகளை முன் வைத்தனர். எலியாட், டால்டன் ஷெர்ரிங், நெஸ்பீல்டுபோன்ற சில அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டி தரவுகளை சேகரித்து தமது விமர்சனங்களுடன் அவற்றையும் வெளியிட்டனர். சர் ஹெர்பெர்ட் ரைஸ்லின் வழிகாட்டுதலின் கீழ் 1901 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமை அடைந்தது.1891 ஆம் ஆண்டின் வகைப்பாட்டை, "தற்காலத்தில் சமூக முன்னுரிமை உள்ளூர் பொதுக் கருத்தாக அங்கீகரிக்கப் பெற்றிருப்பது சில குறிப்பிட்ட சாதிகளை இந்து அமைப்பு முறையில் உள்ள பிற சாதிகளின் நவீன பிரதிநிதிகளாக மாற்றுவதில் வெளிப்படுத்தியுள்ளார்". என்கிறார் ஜி.எஸ்.குரியே (இந்தியாவில் சாதியும் இனமும் என்ற நூலில்).இனவாதம் பற்றி ரிஸ்லேயின் நூலுடன் இவரையும் காண்க.
 
சாதிய சமூகத்தில் ஒரு நபரிடம் அவர் சாதியை பற்றி வினவும் பொழுது அவர் தனது சாதி, உபசாதி, புறமணமுறை, அனலோமாகுழு ஆகியவற்றை கூறலாம். தமது சாதிப் பெயரை காட்டிலும் சிறந்த பட்ட பெயர்களை குறிப்பிடலாம். தனது தொழில் அல்லது தான் வாழும் பகுதி பெயரை குறிப்பிடலாம். இவ்வாறு குழப்பமான பதில் கிடைத்த போதிலும் ரைஸ்லி வழிமுறையை தேர்வு செய்துள்ளார்.
 
பல்வேறு சாதிகளை சேர்ந்தவர்களும் தமது தகுதியை உயர்த்திக் கொள்ள இவ்வாய்ப்பை பயன்படுத்த முடியும் என்றனர். தமது உறுப்பினர்களை திரட்டி மாநாடு நடத்தி அவர்களுக்கு கௌரவம் தரத்தக்க வகையில் தகுதியை உயர்த்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான குழுக்களை அமைத்தனர். எதிர்குற்றச்சாட்டுகளும் முழு வீச்சில் எழுந்தன. உயர்சாதியினை தவிர பிற சாதித் தலைவர்கள் மக்கள் தொகை கணக்கு எடுப்பை வாய்ப்பாக கருதி உயர்சாதியினரால் மறுக்கப்பட்டு வந்த சமூக அங்கீகாரத்தை பெறுவதற்கான ஒன்றாக அதை பயன்படுத்தினர்.
 
சென்னை மாகாண மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி 1911ஆம் ஆண்டு பின்னர் எழுதினார்,"கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சில அம்சங்களில் சாதியை உணர்வுகள் பெரும்பளவு மேலோங்கி வருவதை காண முடிகிறது. சாதிய சபைகள் உருவாகியுள்ளன ஒவ்வொன்றும் தமது சமூகக் குழுவில் ஏராளமான மரியாதை உயர்த்தி பிடிப்பதில் கவனம் செலுத்துகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
1872 ஆம் ஆண்டு முதல் அடுத்தடுத்து நடைபெற்று வந்த மக்கள் தொகை கணக்கெடுப்புகளில் சாதிய உணர்வு மேலோங்கியதை இதன் ஒட்டுமொத்த விளைவுகளை காணலாம். பொதுசட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் சில நிர்வாக நடவடிக்கைகளின் மூலமும் சாதிகளுக்கு இடையில் நிலவிய அசமத்துவம் குறிப்பாக கீழ்சாதியினர் மீது காட்டப்பட்ட பாரபட்சமாக அகற்றப்பட்டன. இருந்தும் கோயில்களில் இந்து என்று பேசிக் கொண்டாலும் சமத்துவம் கொண்டு வரமுடியவில்லை அரசு நிதி அளிக்கும் கோயில்களிலும் விதிவிலக்கு அல்ல.
 
சமத்துவ சட்டம் இயற்றப்பட்ட அரசாலே கடைநிலை சாதிகளின் உரிமைநிலைநாட்ட முற்படுகையில் அரசின் பாராமுகமாக உள்ளது. தனிநபர்கள் தாங்கள் இந்த சாதியை சேர்ந்தவர்கள் என்று பழைய உணர்வை குறைத்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நடைமுறைக்கு வரவில்லை. சாதிய பழக்கவழக்கங்களை மாற்ற அரசாங்கத்தால் இயலவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு போன்றவை சாதியக் குழுக்களின் ஒருங்கிணைப்புக்கு ஊக்கமளித்தது. தொழில்\ரீதியாக சாதிகளை வகைப்படுத்துவதற்கு எதிராக பரந்தபட்டு கிளர்ச்சி ஏற்பட்டது! இச் சாதிகள் ஆங்கிலேய அரசாங்கத்தால் பெருமளவில் கட்டமைக்கப்பட்ட தனித்த சாதிகளாக போற்றிப் பாதுகாக்கப்பட்டன. நிலபத்திரங்கள் அரசு ஆவணங்கள் பழைய சாதி இறுக்கம் மேலும் கெட்டிபடுத்தும் விதத்தில் அமைந்திருந்தன.
 
முன்னர் ஒருவரது உண்மையான சாதியை கண்டறிய இயலாத நிலையில் மரபுவழி தொழிலுடன் அவரை அடையாளப்படுத்தி சாதியை கண்டறிந்தோம். சாதிய முறையையும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளின் மீதான அதன் தாக்கத்தையும் நாம் கண்டிருக்கிறோம். அதே சமயம் நாம் கண்டிருக்கும் அமைப்பு முறைக்கு நாமே பெரும் அளவு பொறுப்பாவோம். நாம் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் சோனார் லோகார் போன்ற சாதியினர் காணாமல் போயிருப்பார்கள். அடையாளப்படுத்து வதிலும் வகைப்படுத்துவதிலும் அரசு காட்டிய ஆர்வம் சாதி முறையை உறுதிப்படுத்துவதற்கு இட்டுச் சென்றது என்கிறார் ஆங்கிலேய கணக்கெடுப்பாளர்.(மேல் நூல் ஜி.எஸ்.குரியே) 
 
ஆங்கிலேயருக்கு முன் அவற்றில் பிரபத்துவ சாதிகளை தவிர மற்ற உறுதிப்படுத்தப்படாத நெகிழ்வுத் தன்மையில்தான் சாதிகள் இருந்தன. அரசாங்கம் சாதியை புறக்கணித்திருந்தால் கீழ்சாதியினரிடையே முற்றிலும் மாறுபட்ட வேறொன்று அவை படிப்படியாக மாற்றி இருக்கலாம் என்கிறார் மிடில்டன் என்ற மக்கள் தொகை கணக்காளர் 1921ஆம் ஆண்டு.
 
இன்னும் சில போக்குகள்-ஆங்கில ஆட்சியில் அரசு அலுவலர்களும் சட்டமன்ற பதவிகளும் பார்ப்பனர்களுக்கு பார்ப்பனர் அல்லாதோர் என்ற சண்டைசச்சரவுகளுக்கு இடையில் இவையெல்லாம் காலனிய அரசுஅதிகார கட்டமைப்பில் தத்தமக்குரிய பங்கேற்புகோருவதற்கான என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். இது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரிக்கையின் இன்னொரு பரிணாமம். இதில் முதல்பயனை உய்தவர்கள் பிராமணர்களாக இருந்ததில் வியப்பில்லை.
 
1860 முதல் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட நவீன கல்வி நவீன பொருளாதாரம் நவீன அரசியல் நிறுவனங்கள் ஆகியவற்றின் முதற்பயனை பிராமணர்களே நுகர்ந்தனர். இங்கு அதற்குமுன் பிராமண சிந்தனைபோக்கும், நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் இருந்தது. இங்கே பிராமணக் குடும்பங்கள், வேளாளர் நிலப்பிரபுத்துவதுடன் முரண்பாடு கொண்டிருந்தனர். நவீன கல்வி பிராமணர்களுக்கு அடுத்தநிலையில் இருந்த வேளாளர்கள் விரைவாக நலன் பெற்றனர். இப்போது காலனிய அரசு அதிகாரத்தின் இளையபங்குதாரர்களாக வேளாளர்கள் ஆவதில் பிராமணர்களுடன் முரண்பட்டனர். 
 
பணப்பயிர் பொருளாதாரத்தின் விளைவாக கவுண்டர், நாயுடு, நாடார், வன்னியர், செட்டியார் ஆகிய சாதிகளில் இருந்த பணக்காரவிவசாயிகள்,வட்டிமுதலாளியாக, ஆலைமுதலாளி -யாக வளர்ந்தனர். இத்தோற்றமாறனதுஅதுவரை பிராமணர்கள் மட்டுமே செய்துவந்த வட்டிமுதலாளி, தரகுவணிகர், ஆலைமுதலாளி ஆகிய வர்க்கங்கள் இந்த சாதிக்குள்ளும் தோன்றின. அந்த சாதிக்குள் இருந்த சிறுபான்மை இவ்வாறு புதிய வர்க்கமாக உருவெடுத்தனர். எனினும் இந்த புதிய வர்க்கம் தத்தம் பழைய சாதி அடையாளத்தை இழந்து விடவில்லை. அதற்கு மாறாக சாதியில் உள்ள பெரும்பான்மையான மக்களின் பலத்துடன் புதிய சாதிய கோரிக்கைகளை முன் வைத்தனர்.
 
புதிய பொருளாதார தகுதியுடன் புதியகலாச்சார தகுதியும் இந்தப் புதியவர்க்கங்கள் தோன்றின, எனவே இது காலனிய அரசு அதிகார கட்டமைப்பில் அரசியல் பொருளாதார நிலைகளில் பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் கீழ்உள்ள பிராமண, நிலப்பிரபுத்துவ, தரகுவணிக, வட்டிமுதலாளிகளின் ஆலை முதலாளிகளின் நலன்களை முன்னிறுத்தும் வேலையாகும். இருந்தும் பிராமணர்-பிராமணர் அல்லாதோர் என்ற தொடர் எதிர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
 
இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது பல்வேறு சாதிகளில் இருந்து தோன்றிய பணக்கார விவசாயிகளும் முதலாளிகளும் படைப்பாளிகளும் பிராமண ஆதிக்கத்தை எதிர்க்க முனைந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே இத்தகைய எதிர்ப்பை காலனி ஆதிக்க ஆதரவு என்ற பரந்துபட்ட அடைப்புக்குள் காண வேண்டும்.
தமிழகத்தில் பெரியாரின் நிலைபாட்டை அறிந்துக் கொள்ள இவை பயனளிக்கும். முதல் காலகட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தின் லட்சியமாக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பிராமணர் கலாச்சார எதிர்ப்பு அரசுஆதரவு பார்ப்பனர் அல்லாதவர்கள் இடையேயுள்ள சாதி வேறுபாடுகளை களைதல், சமயச்சீர்திருத்தங்கள் வருணசிரம ஒழிப்பு என்பனவாக இருந்தன. 
 
இன்றும் சாதி ஒடுக்குமுறை இருந்தாலும் இந்த சாதியில் தோன்றிய புதிய வர்க்கங்களான அதிகாரிகளும் முதலாளிகளும் வணிகர்களும் தத்தம் நலன்களை அடைந்து கொள்வதில் தன்சாதியின் எல்லா மக்களையும் பயன்படுத்திக் கொள்ளும் போக்கு பிரதானமாக உள்ளது.
 
புதிய மேல்நிலை வர்க்கங்கள் சாதிகளை கடந்து தமக்குள் ஒருங்கிணைவு ஏற்படுத்திக்கொண்டனர் இதுவே பிராமணரல்லாதோர் என்றபெயரில் ஒளிந்து கொண்டது. அதுமட்டுமின்றி பிராமணர் இடத்தில் உள்ள மேல்நிலை வர்க்கத்தில் இவர்களும் உறவு கொண்டுள்ளனர்.
 
ஆனால் உழைக்கும் ஏழை எளிய மக்கள் எல்லா சாதி பிரிவினருக்கிடையே உள்ளனர், அவர்கள் இன்று ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் இந்த பல்வேறு நிலைகளில் இருந்து ஒன்றுபடுத்த வர்க்கங்களாக அணி திரட்டுவது பெரும்பாடாக உள்ளது.
 
ஒரே சாதிக்குள் இருக்கும் முதலாளியை அதிகாரியை முதலாளியாகவும் அதிகாரியாகவும் பார்க்காமல் தன் சாதி காரணமாக மட்டுமே பார்க்கும்படி பாமரமக்கள் பழக்கப் படும்வரை சாதியானது வர்க்க அணி சேர்க்கைக்கும் தடையாக இருக்கும் என்பதில் சந்தேகப் பட தேவையில்லை... 
 
இந்திய வரலாற்றெழுதிகளோ இதனை கண்டுக் கொள்ளவே இல்லை. இங்கு எழுதப்பட்டுள்ள எல்லா வரலாற்று நூல்களும் வேதகாலத்தை மையமாக வைத்தே ஆய்வு செய்துள்ளனர். உண்மையில் வேதகாலம் என்பதை வேத இலக்கியங்களை நடுநிலையுடன் ஆய்வு செய்தால் பலவீனம் நிறைகுறைகள் அறிவுக்கு ஒவ்வாத மனம்போன போக்கில் ஆன புனைவுகள் அவர்களின் அறிவு தேடல்கள் தெரிந்து கொள்ள முடியும். மௌரியர்காலத்திலும் முகலாயர் காலத்திலும் அரசியல் அடிப்படையில் இந்திய துணைக்கண்டம் ஓரளவு ஒன்றிணைந்த நாடாக உருவாகும் நிலையில் இருந்தது. இருந்தாலும் 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ்தான் ஒன்றுபட்ட வலிமையான மத்திய ஆட்சி ஒன்றிணைப்பு முழுமையாக நிறைவேறியது. அப்படி இருக்கும் பொழுது இந்தியாவைப் பற்றிய காலனியாட்சியாளர்களின் பொய்யான புரட்டுகளையே இந்திய வரலாறாக திணிப்பது ஏற்புடைவை அல்ல. இல்லாத ஒன்றை இங்கே பேசிக் கொண்டிருப்பது தவறானதாகும். (ஆதாரம் இந்திய வரலாற்றில் பகவத் கீதை பிரேம் நாத் பாசஸ், விடியல் பதிபகம் வெளியீடு).
 
ஐரோப்பிய குடியேற்றத்துக்கு முன்னால் அடையாளம் என்பது சாதி, தொழில், மொழி சமயபிரிவு, நிலப்பகுதி மற்றும் இடம் போன்ற பல்வேறு அம்சங்களை சார்ந்து இருந்தது. சாதியும் சமயப்பிரிவும் ஒன்றின் மேல் ஒன்று ஏறி இருந்தாலும் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சமயத்திற்கு மேலாக சாதிக்கு முதன்மை கொடுக்கப்பட்டது. ஆனால் இந்திய சமூகத்தை காலனிய காலகட்டத்தில் மறு கட்டுமானம் செய்த போது மதத்திற்கு முதன்மை இடம் கொடுக்கப்பட்டது. (ரோமிலா தாப்பர் முற்கால இந்தியா)…… எப்படி ஆயினும் வகுப்புவாத வரலாறு அல்லது மததேசியத்தின் அடிப்படையில் மத தேசியவாதம் முன்னிறுத்தப்பட்டது அன்று, அவை இன்று அறுவடை ஆகி கொண்டிருக்கிறது. இவைதான் ஆங்கிலேயர்கள் கொடுத்தகொடை. இந்தியா பாகிஸ்தான் பிரிவினை மட்டுமல்ல! மக்களை இனமாக, சாதியாக, பகுதியாக பிரிதாளும் எல்லா சூழ்ச்சியையும் அன்றே செய்தனர். ஜொன்ஸ் முல்லர், காடுவெல் இப்படி பலரின் முயற்சி ஆங்கிலேயர்களின் காலனிய ஆட்சி தொடர இந்திய மக்கள் மத்தியில் விரித்த வஞ்சக வலை சாதரணமானவை அல்ல. (ரொமிலா தாப்பர் அறிமுக உரையிலிருந்து முற்கால இந்தியா பக்கம் 2-3.)
 
ஐரோப்பிய வெகுஜன கற்பனையில் இந்தியா ஒரு அளவிட முடியாத செல்வத்துடன் கூடிய சொர்க்க பூமியாகவும்மந்திர நிகழ்வுகளையும் இம்மைக்கு அப்பால் உள்ள வாழ்க்கை அடைப்பு கருத்துக்களுடன் தொடர்பு கொண்ட மண்ணாகவும் கருதினார்கள். இந்தியா பற்றி அவர்கள் வரைந்த சித்திரமானது உலக மக்கள் மட்டுமல்ல இன்றும் இந்திய மக்கள் மனதிலும் ஊன்றி நின்றது. உலகத் தொன்மை நாகரீகம் போலவே இந்திய நாகரிகம் இருந்தது என்பதை இவர்கள் மறுத்து/ மறந்து எழுதி எழுத்துக்கள் இந்திய காலணி ஆரம்பகால பார்வையுடனும் இன்றும் முரண்பாடுடன் மக்கள் மனதில் பதிந்துள்ளன. இந்திய வரலாறு எவ்வாறு எழுதத் தொடங்கப்பட்டது அந்த வரலாற்று ஆசிரியர்கள் யார் ஏன் அவர்கள் எழுதினார்கள் அவர்கள் எழுதிய வரலாறு எவ்வித அறிவுசார் கருத்துநிலைசார் செல்வாக்குகள் என்ன என கேள்வி எழுப்பப்பட வேண்டும் (அதே நூல் பக்கம் 3).கடந்த அரை நூற்றாண்டு காலமாக அகழ்வாய்வு செய்யப்பட்ட கி.மு இரண்டாம் முதலாம் ஆயிரம் ஆண்டு சேர்ந்த காலங்களில் இருந்த அளவிலும் பண்பிலும் ஆர்வமூட்டக்கூடிய சான்றுகள் கிடைத்துள்ளது.
தொல்லியல் தரவுகள் பல பல்வேறு அண்மைக்கால ஆய்வுகள் வரலாற்று உருவாக்கத்தில் ஒரு காரணியாக விளங்குகின்றன தொல்லியல் சான்று வரலாற்று புவியியலின் முக்கியத்துவம் பற்றி அடிக்கோடிட்டு காட்டியுள்ளது அதுவும் குறிப்பாக குடியிருப்புகளின் இடம் அமைவு பற்றியும் மக்களுடைய அசைவியக்கங்கள் செல்வ நிலைகள் படைத்துக் கொள்ளுதல் பற்றியும் புரிந்து கொள்வதற்கு புவியியல் அவசியமானது.
 
இயற்கை நிலப்பரப்பு தோற்றம் மட்டும் மாறவில்லை சமூகமும் மாறியது அதுவும் நன்கு குறிப்பிடத் தகுந்த வகையில் சமூகம் மாற்றம் அடைந்துள்ளது ஆனால் இந்திய வரலாறு சமூகம் ஆகியவற்றின் மறா பண்பை வலியுறுத்திய காலனி நோக்கங்கள் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்