ஒலி நூலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒலி நூலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மார்க்சியம்: வர்க்கப் போராட்டமும் மதத்தின் வீழ்ச்சியும்-ஒலி வடிவில்

இந்த ஆவணம் மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில்


சமூகம், மதம் மற்றும் சாதி குறித்த ஆழமான விவாதத்தை முன்வைக்கிறது. மனித குலத்தின் வரலாறு என்பது அடிமைமுறை முதல் முதலாளித்துவம் வரை தொடரும் வர்க்கப் போராட்டமே என்பதை விளக்கும் இக்கட்டுரை, மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் துயரத்தை மறக்கச் செய்யும் ஒரு போதைப்பொருள் என்று வாதிடுகிறது. வெறும் நாத்திகப் பிரச்சாரத்தால் மட்டும் கடவுளையோ சாதியையோ ஒழிக்க முடியாது என்றும், அதற்குப் பின்னால் உள்ள தனியுடைமை மற்றும் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைகள் தகர்க்கப்பட வேண்டும் என்றும் இது வலியுறுத்துகிறது. பெரியாரிய கொள்கைகள் வர்க்கப் போராட்டத்தைப் புறக்கணித்து வர்க்க சமரசத்தைப் பேசுவதாகச் சாடும் இப்பாடம், உழைக்கும் மக்களின் விடுதலையே சமூக மாற்றத்திற்கான ஒரே வழி என்கிறது. இறுதியில், முதலாளித்துவ அராஜக உற்பத்திமுறை ஒழியும்போது மட்டுமே மதம் மற்றும் சாதியின் பிடியிலிருந்து மனிதன் முழுமையாக விடுதலை பெற முடியும் என்பதை இத்தொகுப்பு தெளிவுபடுத்துகிறது....

இந்தப் பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

மார்க்சியம்: வர்க்கப் போராட்டமும் மதத்தின் வீழ்ச்சியும்

தோழர்களே இவை நீண்ட பதிவு இருந்தும் கேட்க வேண்டிய தேவை இருப்பதால் தொகுத்துள்ளேன் அவருக்கு மட்டுமல்ல கடவுள் மதம் பற்றிய புரிதலுக்காக தொகுப்பாய் உங்கள் முன்.
இவரிடம் நான் கேட்கும் கேள்வியே."மனிதன் நாத்திகனாக மாறுவதற்குமுன் வாழ வேண்டிய தேவையுள்ளது அதை அறிவீரா? நீங்கள் பேசும் நாத்திகம் மக்களின் விடுதலைக்கு அல்ல பணம் கொழுத்த கூட்டம் பேசும் அரட்டை அரங்கம். ஆனால் மார்க்சியம் உண்மையில் கடவுள் மதம் பற்றி விளக்குவதோடு அதன் தோற்றம் அதன் இருப்பு அதன் அழிப்பு பற்றி பேசியுள்ளது" ஆனால் அவை எதனையும் புரிந்துக் கொள்ளாத உங்கள் அரட்டை மடம் கடவுளை ஒழிப்பது என்று உழைக்கும் மக்களை ஏமாற்றுகின்றீர் பிரச்சினை கடவுளை விட அந்த மக்கள் உயிர் வாழ வேண்டும் அதற்கு வழி சொல்லுங்கள் போலி நாத்திகவாதியே....
இனி எனது தேடல்...
மார்க்சியம் வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையில் சமூகத்தை ஆய்வு செய்கிறது அவையாவது...
மனித சமுதாயம் வர்க்கங்களாகப் பிளவுபட்டதிலிருந்து பகை வர்க்கங்களைக் கொண்டதாகவே இருந்து வருகிறது. புராதன பொதுவுடைமைச் சமுதாயத்திற்குப் பின் சமுதாயம் எல்லோரும் அறிந்தபடி ஆண்டான்-அடிமை சமுதாயம் என்றும், நிலப்பிரபுத்துவ சமுதாயம் என்றும், முதலாளித்துவ சமுதாயம் என்றும், சோசலிச சமுதாயம் என்றும் மாறி வந்துள்ளது. இச்சமூக அமைப்புகளில் முதல் மூன்று வகையிலும் சிறுபான்மையான சுரண்டும் வர்க்கங்களே ஆதிக்கத்திலிருந்தன. சோசலிச சமுதாயத்தில் பாட்டாளிவர்க்கம் ஆதிக்கத்திற்கு வந்தது.
ஆண்டான் - அடிமை சமுதாயத்தில் ஆண்டான்களும் அடிமைகளும் பிரதான பகை வர்க்கங்கள். இதில் ஆண்டான் வர்க்கம் உழைக்கும் மக்களை அடிமைகளாக அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதிலேயே தன் நலனைக் காப்பாற்றிக் கொண்டது. இதற்கு மாறாக அடிமை வர்க்கம் ஆண்டான்களுக்கு எதிரான போராட்டத்திலேயே தன் நலனைப் பாதுகாத்துக் கொண்டதுடன், ஆண்டான்களை ஒழிக்கும் போராட்டத்திலேயே தனது விடுதலையைக் காணவேண்டியிருந்தது.
நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் நிலப்பிரபுக்களும்,பண்ணை அடிமைகளும் பிரதான பகை வர்க்கங்கள். இதில் நிலப்பிரபுக்கள் உழைக்கும் மக்களை பண்ணையடிமைகளாக அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதன் மூலம் தமது வர்க்க நலனைப் பேணிக்கொண்டனர். இதற்கு மாறாக பண்ணை அடிமைகளான உழைக்கும் மக்கள்நிலப்பிரபுக்களுக்கு எதிரான போராட்டத்திலேயே தம்முடைய நலனைக் காப்பாற்றிக் கொண்டதுடன் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தைத் தூக்கி எறிவதிலேயே தமது விடுதலையைக் காண முடிந்தது.
முதலாளித்துவ சமுதாயத்தில் முதலாளிகளும், தொழிலாளிகளும் பிரதான பகை வர்க்கங்கள். இதில் முதலாளிகள் தொடர்ந்து தொழிலாளர்களை கூலியடிமைகளாக வைத்திருப்பதிலேயே தமது நலன் அடங்கியிருப்பதை அறிந்திருந்தனர். இதற்கு மாறாக தொழிலாளி வர்க்கம் முதலாளிகளுக்கு எதிரான போராட்டத்திலேயே தமது நலனைக் காத்துக் கொள்வதுடன் முதலாளி வர்க்கத்தை முற்றாகத் தூக்கி எறிந்து ஒழித்துக் கட்டும் போராட்டத்திலேயே தமது விடுதலை அடங்கி இருக்கிறது என்பதையும் அறிந்து கொண்டுள்ளது.
சோசலிச சமுதாயத்தில் முதலாளி வர்க்கம் வீழ்த்தப்பட்டு அதிகாரம் பாட்டாளி வர்க்கத்தின் கரங்களுக்கு மாறிவிட்டது என்றாலும் முதலாளி வர்க்கத்தை பூண்டோடு ஒழித்துக் கட்டுவதிலேயே தனது பாதுகாப்பும், வளர்ச்சியும் இருக்கிறது என்பதை தொழிலாளி வர்க்கம் உணர்ந்துள்ளது. அதே நேரத்தில் வீழ்ந்த முதலாளி வர்க்கம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றி சமுதாயத்தைத் தனது ஆதிக்கத்தில் கொண்டு வருவதிலேயே தனது நலன் பாதுகாக்கப்பட்ட முடியும் என்பதை உணர்ந்துள்ளது.
எனவே சமுதாய வரலாறு முழுவதும் - சமுதாயம் வர்க்கங்களாகப் பிளவுண்டதிலிருந்து - பகை வர்க்கங்கள் தத்தம் நலனுக்காக மோதிக் கொண்டிருக்கும் வரலாறாகவே - வர்க்கப் போராட்ட வரலாறாகவே - இருந்து வருகிறது. இந்த மோதலால் ஒரு வர்க்கத்தின் நலன் மற்ற வர்க்கத்தின் நலனுக்கு எதிரானதாகவும், கேடும், தொல்லையும் விளைவிப்பதாகவுமே இருந்து வந்துள்ளது..
கடவுளும் மதமும் ஏன் இருக்கிறது?
சுரண்டும் வர்க்கங்களின் ஆதிக்கத்தில் இருக்கும் சமுதாயத்தில் தமது எதிர்கால வாழ்க்கை பற்றிய நம்பிக்கையை இழந்துவிட்ட மக்களுக்குத் தமது கட்டுத்தளைகளை மறைக்கும் கற்பனை மலர்களாக மறு உலக பற்றிய மனோ கற்பிதங்களையும், மாயையான ஆனந்தத்தையும் தரும் அபினியாக விளங்கியது மதமும் கடவுளையும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
கட்டுத்தளைகளை மறைக்கும் கற்பனை மலர்கள் பிடுங்கி எறியப்பட வேண்டும்; மாயையான ஆனந்தம் ஒழிக்கப்படவேண்டும். அந்த தளைகளை உதறித்தள்ளி ஜீவனுள்ள மலர்களைப்பறித்தெடுக்கவேண்டும். எதார்த்தமான ஆனந்தத்தைப் பெறவேண்டும் என்பதற்காக.

"மதம் என்பது 'ஒடுக்கப்பட்ட ஜீவனின் பெருமூச்சு""மக்களுக்கு வாய்த்த அபினி""மக்களின் மாயையான ஆனந்தம்" என்றார் மார்க்ஸ்.(ஹெகலின் தத்துவ விமர்சனத்தில்)

வாழ்க்கை பற்றிய நம்பிக்கையை இழந்துவிட்ட மக்களுக்குத் தமது கட்டுத்தளைகளை மறைக்கும் கற்பனை மலர்களாக மறு உலக பற்றிய மனோ கற்பிதங்களையும், மாயையான ஆனந்தத்தையும் தரும் அபினியாக விளங்கியது மதம். கட்டுத்தளைகளை மறைக்கும் கற்பனை மலர்கள் பிடுங்கி எறியப்பட வேண்டும்; மாயையான ஆனந்தம் ஒழிக்கப்படவேண்டும். எதற்காக? எவ்விதமான மன ஆறுதலும், மனோ கற்பிதமும் இல்லாமல் மனிதன் அந்தக் கட்டுத்தளைகளை மாட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. அவன் அந்த தளைகளை உதறித்தள்ளி ஜீவனுள்ள மலர்களைப் பறித்தெடுக்கவேண்டும். எதார்த்தமான ஆனந்தத்தைப் பெறவேண்டும் என்பதற்காக.

மனித சரித்திரத்தின் தொடக்கத்தில் இயற்கை சக்திகளே மனிதர்களின் அன்றாட வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும் புற சக்திகளாகத் திகழ்ந்தன. திடீரென வெடித்துக் குமுறும் எரிமலையும், சீறிப்பாயும் காட்டாற்று வெள்ளமும், பற்றிப்படரும் காட்டுத் தீயும், புயலும், கடற்கொந்தளிப்பும், கொடிய விலங்குகளின், நச்சரவங்களின் திடீர்த்தாக்குதல்களும் இவை போன்ற யாவும் மனிதனின் அன்றாட வாழ்க்கையை நிலைகுலையச் செய்யும் புற சக்திகளாக இருந்தன. இவைபற்றிய அச்சம், அறியாமையின் காரணமாக இந்த மண்ணுலக சக்திகள் இயற்கை கடந்த சக்திகளின் வடிவமேற்று மதமாக, கடவுளாகப் பிரதிபலித்தன.

"எல்லா மதங்களும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும் புறசக்திகளைப்பற்றி அவர்களின் மனதில் ஏற்படும் வினோதமான பிரதிபிம்பமே; மண்ணுலக சக்திகள் இயற்கை கடந்த சக்திகளின் வடிவத்தை ஏற்கும் ஒரு பிரதிபிம்பமே" என்று ஏங்கெல்ஸ் கூறினார்.

மனிதர்களின் அன்றாட வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகின்றவையாக இருக்கும் புற சக்திகளே கடவுளும், மதமும் நிலவுவதற்கான அடிப்படைக் காரணமாகும். இச்சக்திகள் மனிதனின் ஆதிக்கத்தின் கீழ் வரும்வரை, மனிதனின் அன்றாட வாழ்க்கை முழுவதும் அவனாலேயே கட்டுப்படுத்தப்படும் நிலை தோன்றும் வரை கடவுளும் மதமும் நீடிப்பதற்கான அடிப்படை தொடர்ந்து நிலவும்.

ஆனால் வெகு சீக்கிரத்திலேயே இந்த இயற்கை சக்திகளுடன் சமுதாய சக்திகளும் மனிதனின் அன்றாட வாழ்க்கையினைக் கட்டுப்படுத்தும் புறசக்தியாக செயல்படத் தொடங்கின. சமுதாய சக்திகள் என்பது வர்க்க சமுதாயத்தில் மனிதர்களுக்கு இடையே நிலவும் உறவுகளாகும். இந்த உறவுகள், பொருளுற்பத்தி நிலைமைகளால், உற்பத்தி சாதன உடைமை முறைகளால் உருவானதாகும். இயற்கை சக்திகள் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக ஓரளவு (முற்றிலும் அல்ல) மனிதனின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கின்றன. சமுதாய சக்திகள் கூட நவீன முதலாளித்துவ சமுதாயத்தில் மனிதனின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் அது உண்மையும் முழுமையும் அல்ல ஏனெனில் கடவுளின் பிரதிபிம்பமாக மூலதன ஆதிக்கம் உயர்தோங்கி நிற்கிறது.

முதலாளித்துவப் பொருளாதாரத்தில் அடிக்கடி தோன்றும் பொதுநெருக்கடியைத் தடுத்து நிறுத்த முடியாது; தொழிலாளர்களை வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருந்தும், அநாதரவான நிலையிலிருந்தும் பாதுகாக்க முடியாது; நஷ்டத்திலிருந்தும், பெரும் கடன் சுமையிலிருந்தும் திவாலாகும் நிலையிலிருந்தும் முதலாளிகளைக் கூட அது காப்பாற்றமுடியாது. மனிதன் ஒன்று நினைக்க கடவுள் (அதாவது முதலாளித்துவ உற்பத்தி முறையின் அந்நியமான ஆதிக்கம்) வேறொன்றை முடிக்கிறது என்பது முதலாளித்துவ சமுதாயத்தில் எதார்த்தமான நிலையாகும்.

எனவே கடவுள், மத நம்பிக்கைகளை ஒழிக்கவேண்டுமானால் மனிதனாலேயே உருவாக்கப்பட்டது என்றாலும் மனிதனுக்கு அந்நியமாக நின்று மனிதன் மீது ஆதிக்கம் செலுத்திவரும் முதலாளித்துவ உற்பத்திமுறை ஒழிக்கப்பட வேண்டும். உற்பத்தி சாதனங்களில் தனியுடைமையை ஒழித்து எல்லா உற்பத்தி சாதனங்களையும் சமுதாயமே தன்னுடையமையாக்கி அவற்றைத் திட்டமிட்ட அடிப்படையில் உபயோகிப்பதன் மூலம் சமுதாயம் தன்னைத்தானே விடுவித்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் தன்னைத்தானே உற்பத்தி செய்து கொண்ட, எனினும் தமக்கே தடுத்து தமக்குத்தாமே உற்பத்தி செய்து கொண்ட, எனினும் தமக்கே தடுத்து நிறுத்த முடியாத அந்நிய சக்தியாக நின்று தம்மமையே கட்டுப்படுத்துகின்ற உற்பத்தி சாதனங்களால் விளைந்த கட்டுத்தளைகளிலிருந்து சமுதாயத்தின் அங்கத்தினர்களும் சமுதாயத்தோடு விடுதலை பெற முடியும். அப்போதுதான் மனிதன் வெறும்மனே நினைப்பதோடு மட்டுமல்லாமல், நினைப்பதை அவரே முடிப்பவனாக முடியும். அந்தக் காலத்தில்தான் மதத்தில் இன்னும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிற அந்நியமான அந்த கடைசி சக்தியும் மறைந்து ஒழியும். அத்துடன் மதத்தின் பிரதிபிம்பமும் தானே மறைந்து விடும். ஏனெனில் அதற்குப் பின் பிரதிபலிப்பதற்கு எதுவும் இருக்காது.

ஆனால் இதைச் சாதிப்பதற்கு, அதாவது "சமுதாய சக்திகளை சமுதாயத்தின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு வெறும் அறிவு மட்டும் போதாது. இதற்கு எல்லாவற்றையும் விட மிகவும் அவசியமானது ஒரு சமுதாய செயன்முறைதான்" என்று ஏங்கெல்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.

அதாவது உற்பத்திச் சாதனங்களில் தனியுடைமையை ஒழித்து சமுதாய உடைமையாக்கி திட்டமிட்ட பொருள் உற்பத்தியின் கீழ் விடுதலை பெற்ற சமுதாயத்தையும், சமுதாயத்தின் அங்கத்தினர்களையும் வழிநடத்துவதற்கு வெறும் அறிவு மட்டும் போதாது. மாறாக தனியுடைமை சக்திகளுக்கு எதிரான போராட்டம் - வர்க்கப் போராட்டம் என்ற சமுதாய செயல்முறை அவசியமாகும். முதலாளி வர்க்கத்தை எதிர்த்து அதை தூக்கியெறிந்து முற்றாக ஒழித்துக்கட்டும் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தின் மூலமாக மட்டுமே இதைச் சாதிக்க முடியும். இதுதான் அந்த சமுதாயச் செயல்முறையாகும்.

எனவே உண்மையிலேயே கடவுளையும், மதத்தையும் ஒழிக்க விரும்பும் ஒருவர் தனியுடைமையை ஒழித்து பொதுவுடைமை சமுதாயத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்டு முதலாளி வர்க்கத்துக்கு எதிரான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தைக் கட்டமைப்பவராக இருக்க வேண்டும்.

இந்தப் போராட்டம் தனியுடைமை சமுதாயத்தை ஒழித்து பொதுவுடைமை சமுதாயத்தை நிறுவுவதால் முதலாவதாக கடவுளும், மதமும் நிலவுவதற்குக் காரணமான சமுதாய நிலைமைகளை ஒழித்து விடுகிறது. இதன் மூலம் கடவுள், மத நம்பிக்கைகளுக்கு முடிவுகட்டி விடுகிறது. இரண்டாவதாக மறுஉலகைப் பற்றி கற்பனை மலர்களாக இருக்கும் எதிர்கால நம்பிக்கைகளை நிகழ்காலத்தின் ஜீவனுள்ள மலர்களால் நிரப்பி விடுகிறது. மாயையான ஆனந்தத்தை எதார்த்தமான ஆனந்தத்தால் மாற்றி விடுகிறது.

இவ்வாறு கடவுள், மத ஒழிப்பு என்பது புதிய சமுதாயத்திற்கான வர்க்கப் போராட்டத்திற்கு முன் நிபந்தனையாக இல்லை. மாறாக புதிய சமுதாயத்திற்கான வர்க்கப் போராட்டம்தான் கடவுள், மத ஒழிப்புக்கு முன்னிபந்தனையாக இருக்கிறது. எனவேதான் வேறு எவரையும் விட கடவுளுக்கும், மதத்துக்கும் தீவிரமான எதிரிகளான மார்க்சியவாதிகள் (மார்க்சிய வரலாற்று பொருள்முதல்வாதிகள் பாட்டாளி வர்க்க விடுதலையை விருமுகிறவர்கள்) சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் லட்சியமாகக் கொண்டு வர்க்கப் போராட்டத்தைக் கட்டமைத்து வழி நடத்துவதையே தமது பணியாகக் கொண்டு உலகெங்கும் செயல்படுகிறார்கள்.

ஆனால் இங்கு நாத்திகவாதம் பேசும் பெரியார் வழிவந்தவர்களை பொறுத்தவரையில் அவருடைய நிலை இதற்குத் தலைகீழானதாகும்.

அவர்கள் பல சமயங்களில் தனியுடைமை ஒழிப்பிலும், சமதர்மத்திலும் நம்பிக்கையும், ஆர்வமும் தெரிவித்திருக்கிறார் என்பது உண்மையே. என்றாலும் புதிய சமுதாயத்திற்கான வர்க்கப் போராட்டத்தை கடவுள், மத ஒழிப்புக்கான முன் நிபந்தனையாக அவர்கள் ஏற்றுக் கொள்வதும் இல்லை கருதுவதுமில்லை. மாறாக கடவுள், மத ஒழிப்பை வர்க்கப் போராட்டத்தின் முன்னிபந்தனையாகக் கொள்வதன் மூலம் உண்மையில் வர்க்கப் போராட்டத்தையே புறக்கணித்து விடுகிறார்கள் மார்க்சிய அடிப்படைலிருந்து விலகிப்போய்விடுகின்றனர்.

காரணம் அவர்கள் கடவுள், மத நம்பிக்கைகள் நிலவுவதற்கான அடிப்படையாக விளங்கும் சமுதாயக் காரணிகளை அறிந்திருக்கவில்லை. இதனால் கடவுள், மத எதிர்ப்புப் பற்றிய அவர்களுடைய தத்துவக் கண்ணோட்டம் வெறும் மாறாநிலை கருத்துமுதல்வாதக் கண்ணோட்டமாகவும் அதாவது மதவாதிகள் காலதிற்கும் களத்திற்கும் பொருந்தா கடவுளின் இருப்பை பேசுவது போலவே இவர்களும் அந்த கடவுள் எதிர்ப்பு என்ற பெயரில் அந்த புராண கட்டுகதைகளை பேசியே அதனை எதிர்கின்றனர். அவர்களுடைய கடவுள், மத எதிர்ப்புக் கொள்கை வர்க்க சமரசக் கொள்கையாகவும் அமைவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

நாத்திகவாதிகளுடைய கருத்தோட்டத்தில் மனிதனை நேர்பாதையில் செலுத்துவது என்பது புதிய சமதர்ம சமுதாயத்தைக் காண்பதற்காக வர்க்கப் போராட்டப் பாதையில் செலுத்துவது என்பதாக அல்லாமல், வர்க்க சமரச பாதையில் செலுத்துவது என்பதாக அமைந்துள்ளதே நிகழ்வுகள் சுட்டிக்கட்டுகின்றன. கடவுள்,மதவாதிகளின் வர்க்க சமரசப்பணி சமுதாய நலனுக்கான பணியாக,மனிதனை நேர்வழியில் செலுத்துவதற்கான நடவடிக்கையாக கடவுள் மத நடவடிக்கையை காணும் பெரியாரின் வழி வந்தவர்களுக்குத் தெரிவதற்கும் இதுவே காரணமாகும்.

வர்க்கப் போராட்டமே மனிதகுல சரித்திரத்தின் உந்துசக்தி என்றும், முதலாளி வர்க்கத்தை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தின் மூலமே சோசலிச சமுதாயத்தை அடையமுடியும் என்றும் மார்க்சியம் போதிக்கிறது. இந்த உண்மை நமது நாட்டுக்குப் பொருந்தாது என்று பெரியாரும் அவருடைய சீடர்களும் கருதுகிறார்கள். இதற்கு அவர்கள் கூறும் காரணம் என்ன?

பிற நாடுகளில் பொருளாதார ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் மட்டுமே இருந்தன. எனவே அங்கே வர்க்கப் போராட்டத்தின் மூலம் பொருளாதார சமதர்ம சமுதாயத்தை அடைய முடியும். ஆனால் நமது நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுடன் பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் சாதியுறைகளும் உள்ளன. இந்த சாதிமுறையை ஒழிக்காமல் பொருளாதார ஏற்றத்தாழ்வை ஒழிக்கமுடியாது. சாதிமுறையை ஒழிக்க வேண்டுமானால் அதற்கு ஆதாரமாக இருக்கும் மதத்தையும், கடவுளையும் ஒழிக்க வேண்டும். சாதி முறைக்கு ஆணி வேராக இருக்கும் பார்ப்பானை ஒழிக்கவேண்டும். இவற்றை ஒழிக்காமல் பொருளாதார ஏற்றத்தாழ்வை ஒழித்தால் பிறவியில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் சாதியைப் பயன்படுத்தி மீண்டும் பணக்காரர்கள் உருவாகி விடுவார்கள். எனவே எல்லாவற்றுக்கும் முன்னதாக சாதி, மதம், கடவுள் ஆகியவற்றையும் பார்ப்பானையும் ஒழிப்பதையே முதன்மையான பணியாக மேற்கொள்ள வேண்டும். இதற்கு வர்க்கப் போராட்டம் பயன்படாது என்று பெரியார் கருதினார்.

அவர் கூறுகிறார்: "மேல் நாட்டில் சாதி இல்லாததால் அங்கு பொதுவுடைமைக்கு முதலில் வகுப்பு (வர்க்க) சண்டை துவக்க வேண்டியிருந்தது. இங்கு சாதி இருப்பதால் பொதுவுடைமைக்கு முதலில் சாதிச் சண்டை துவக்க வேண்டியதாகும்."அவர் மேலும் கூறுகிறார்: "பணக்காரத் தன்மைக்கு பார்ப்பனியமும் மேல்சாதி -கீழ்சாதி தன்மையும் கடவுள் தன்மை யும்தான் காரணம். இவற்றை ஒழிக்காமல் பணக்காரர்களை ஒழித்தால் மறுபடியும் மறுபடியும் பணக்காரர்கள் முளைத்துக் கொண்டே இருப்பார்கள். சாக்கடையையும், கொசுக்களையும் ஒழித்தால்தான் அழுக்குத் தண்ணீரையும்,மலேரியா காய்ச்சலையும் ஒழிக்க முடியும். ஆகையால்தான் திராவிடர் கழகம் பணக்காரத் தன்மையை ஒழிக்க அஸ்திவார வேலை எனக்கருதி இதைச் செய்கிறது." மேலும் கூறுகிறார் : "சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம்- சாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற நாம்- பொருளாதார சமதர்மத்துக்காகவே பிறவி சாதிகளை ஒழிக்க வேண்டும் என்றும், பிறவி சாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதாரமான மதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் சொல்கிறோம்." "நான் மனித பேதம் ஒழிய வேண்டுமானால் மதம் ஒழிய வேண்டும் என்கிறேன். அன்றியும் மதம் ஒழிந்த இடத்தில்தான் மனிதனின் பிறப்பு பேதம் புதைக்கப்படுகிறது. அது போலத்தான் பொருளாதார பேதம், செல்வ பேதம் ஒழிய வேண்டும் என்றால் அவைகளின் உற்பத்தி ஸ்தானம், அதாவது தோன்றும் இடம், காப்பு மூலம் ஒழிக்கப்பட வேண்டும். ஏழ்மைக்கும், செல்வத்துக்கும் கர்த்தாவும் காவலுமாக கடவுள் விளங்குகிறது... மனித சமுதாய சமதர்மத்துக்கு மதம் ஒழிக்கப்பட வேண்டியது எப்படி அவசியமோ அது போல பொருளாதார சமத்துவத்துக்கும் அதாவது பொருளாதார சமத்துவம் வேண்டுமானால் பொருளாதாரத்துக்கும் பேதத்தன்மை காப்புக்கும் ஆதாரமாய் இருக்கிற கடவுள் தன்மை ஒழிக்கப்பட வேண்டியது அவசியமாகும்." "சாதியை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, சாதி முறையின் ஆணிவேராக இருக்கும் பார்ப்பானை ஒழிக்கும் முயற்சியே சமதர்மவாதிகளுக்கு முதற்கடமை என்பது நமது அபிப்பிராய மாகும்." ஆக பெரியார் கருத்துப்படி பொருளாதார சமத்துவம் சாதிக்கப்பட வேண்டுமானால் அதற்கு அஸ்திவாரமாக சாதி, மதம், கடவுள் ஆகியவையும் பார்ப்பானும் ஒழிக்கப்பட வேண்டும்.

இதனால் சாதியின் பெயரால் இருக்கும் தனியுரிமை ஒழிந்து 'அரைபாகம் பொதுவுடைமை' ஏற்பட்டுவிடும். 'தனியுடைமையை மாற்ற அதிக பாடுபடாமலேயே இந்த நாட்டில் பொதுவுடைமை ஏற்பட வசதி உண்டாகும்.' இந்த நாட்டில் பொதுவுடைமையை உண்டாக்கும் வழி சாதி, மதம், கடவுள், பார்ப்பான் ஒழிப்பை முன்வைத்து அதற்கான இயக்கங்கள் நடத்துவதே என பெரியார் கருதுகிறார். அவ்வாறாயின் சாதி, மதம், கடவுள் இவற்றையெல்லாம் ஒழிக்கும் வரை முதலாளி - தொழிலாளி போன்ற வர்க்கப் பிரச்சினைகளை என்ன செய்வது? இதில் பணி என்ன வகையாக இருக்கவேண்டும்?

முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர்களை அணி திரட்டிப் போராடச் செய்ய வேண்டுமா? அல்லது சமரசப்படுத்தி வைக்க வேண்டுமா? இதில் என்ன அணுகுமுறையை மேற்கொள்வது? பெரியாரைப் பொறுத்த வரை இந்த விசயத்தில் முதலாளிகள் - தொழிலாளிகளிடையே அவர்கள் இருதரப்பாரும் பங்காளிகள், கூட்டாளிகள் என்ற உறவை சுமூகமான உறவை ஏற்படச் செய்ய வேண்டும்; கணவன் மனைவி குடும்ப உறவைப் போல் இணக்கமான உறவை ஏற்படச் செய்ய வேண்டும் என்பதேயாகும்.

அவர் கூறுகிறார்: "எந்தக் காரணம் கொண்டும் முதலாளிக்கும், தொழிலாளிக்கும் இன்றைக்கு இருக்கிற மாதிரி 'ஏழாம் பொருத்தம்' இருக்கக்கூடாது. இருவருக்குள்ளும் பரஸ்பர நல்லெண்ணமும், சுமூகமான உறவும், கூட்டுப்பொறுப்பும் ஏற்பட வேண்டும். இத்தன்மை ஏற்பட அடிப்படையில் மாறுதல் ஏற்பட வேண்டும். முதலாளியும், தொழிலாளியும் பங்காளிகள், கூட்டாளிகள் என்ற நினைப்பு ஏற்பட வேண்டும்." மேலும் கூறுகிறார்: "முதலாளி - தொழிலாளி இருவரும் ஒன்று சேர்ந்தால்தான் உற்பத்தி செய்யமுடியும். உற்பத்தி நடக்க வேண்டும் என்றால் பணம், தொழில் இரண்டும் தேவை. உற்பத்தி மக்கள் நலனுக்கு உலக நலனுக்கு மிக மிக அவசியம் ஆகும் என்றாலும் முதல் (பணம்) இருந்தால்தான் உற்பத்தி தலைகாட்ட முடியும்."

"முதலாளி- தொழிலாளி இருவரும் கணவன் - மனைவி போன்றவர்கள் ஆவார்கள். கணவனும் -மனவியும் குடும்பம் நடத்தி பிள்ளை பெறுவது போல்தான் முதலாளியும் - தொழிலாளியும் சேர்ந்து தொழில் நடத்தி பண்டங்கள் உற்பத்தி செய்வதாகும். கணவன் - மனைவி ஒற்றுமையாக இருக்க வேண்டும்." இந்த நாட்டில் சாதி அமைப்பு இருப்பதால் மேலை நாடுகளைப் போல வர்க்கப் போராட்டத்தின் மூலம் சோசலிசத்தைக் கொண்டு வருவது என்ற கொள்கை பொருந்தாது என்று கூறும் பெரியார் இப்படி முதலாளி- தொழிலாளர்களுக்கு இடையே கூட்டாளி- பங்காளி உறவையும், கணவன்- மனைவி உறவையும் ஏற்படுத்துவதன் மூலம் எப்படி சோசலிசத்தைக் கொண்டு வரப்போகிறார்? ஒரு வேளை 'செல்வந்தர்கள் ஏழைகளின் பாதுகாப்பாளர்களாக இருக்க வேண்டும்' என்று காந்தி கனவு காண்பது போல முதலாளி-தொழிலாளி உறவு கணவன்-மனைவி உறவாக அமைவது மூலம் சோசலிசம் அமைய வேண்டும் என்பது பெரியாரின் கனவா?

இது ஒருபுறம் இருக்க பெரியார் சாதி, மதம், கடவுள் ஒழிப்பு பற்றிப் பேசுவது உழைக்கும் மக்களை வர்க்கப் போராட்டத்திற்கு தயாரிப்படுத்துவதே, அதற்குத் தடையாக இருக்கும் மூடநம்பிக்கைகளை ஒழித்து அறிவூட்டவே என பெரியாரின் சீடர்களில் சிலர் வாதிடுவது நமக்குத் தெரியும். பெரியாரின் சாதி, மத, கடவுள் எதிர்ப்பு வர்க்கப் போராட்டத்திற்கு தயாரிப்படுத்துவதற்கே என்றால் முதலாளி-தொழிலாளிகளிடையே பங்காளி - கூட்டாளி உறவும், கணவன் - மனைவி உறவும் உருவாகப் பாடுபடவேண்டும் என்பது எதற்காக? உண்மையில் பெரியாரின் சாதி, மத, கடவுள் ஒழிப்பு இயக்கம் வர்க்கப் போராட்டத்திற்கு தயாரிப்படுத்துவதற்கானதல்ல; மாறாக அது வர்க்க சமரசத்திற்கானதே என்பதையும், அதில் சாதி, மத, கடவுள் ஒழிப்புக்கான விருப்பப் பிரகடனத்தைத் தவிர அதற்கான எந்த வகையான விஞ்ஞானப்பூர்வமான கொள்கையும் இல்லை என்பதையும் அதைச் சற்று பரிசீலித்தால் புரிந்துகொள்ள முடியும்.

அவருடைய சாதி ஒழிப்புக் கொள்கையை எடுத்துக் கொள்ளுங்கள். சாதியை ஒழிக்கவேண்டுமானால் அதற்கு ஆதாரமாய் இருக்கும் மதம், கடவுளை ஒழிக்க வேண்டும் என்கிறார் பெரியார். மதமும், கடவுளும் சாதியக்கருத்துக்களை ஆதரிக்கின்றன, வலியுறுத்துகின்றன, வாழ்க்கை முறையாகப் போதிக்கின்றன என்பதிலும், எனவே இவற்றுக்கு எதிராக பிரச்சாரங்கள், இயக்கங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதிலும் விவாதத்துக்கு இடமில்லை. ஆனால் இவை மட்டுமே சாதியை ஒழிக்கப் போதுமானதா? இல்லை பெரியார் வேறொரு இடத்தில் கூறுவது போல சாதிப்பெயர்களைப் பயன்படுத்துவதை தடை செய்வது, கலப்பு மணம் செய்வது, ஒரு சாதி மணத்தைக் கட்டுப்படுத்துவது, சாதிக்குறிகளைப் பயன்படுத்துவதை தடை செய்வது ஆகியவற்றைச் செய்வதன்மூலம் சாதியை ஒழித்துவிட முடியுமா? இவை அனைத்தும் மேலோட்டமானவை ஆகும். புண்ணை வைத்துக்கொண்டு சீழை அகற்றும் முயற்சியாகும். உண்மையில் சாதியை ஒழிக்க வேண்டுமானால் சாதி முறையினால் ஆதிக்கம் பெறுகின்றவர்களும் அதற்கான உற்பத்தி முறையும் ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் சாதிமுறை முற்றாக வழக்கொழிந்துபோகும். இது அடிப்படையானது ஆகும்.

இதைப்பற்றி பெரியார் என்ன கூறுகிறார்? சாதி முறையினால் பார்ப்பான்தான் பயன் பெறுகிறான். சாதியை ஒழிப்பதனால் அவனுக்குத்தான் நஷ்டம். எனவே அவனை ஒழிக்க வேண்டும் என்கிறார். ஆனால் உண்மை என்ன? சாதிமுறையின் காரணமாக பிறவியிலேயே உயர்ந்தவன் என்று பார்ப்பான் உச்சாணிக் கொம்பிலே வைக்கப்பட்டிருக்கிறான் என்பது உண்மையே. அதே வேளையில் ஒவ்வொரு மட்டத்திலும் சமுதாயம் முழுவதும் வெவ்வேறு 'உயர்தாதி'க்காரர்கள் பிறவியிலேயே தாம் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று உரிமை கொண்டாடி வருகிறார்கள் என்பதும் உண்மையல்லவா? இன்னும் சொன்னால் நமது நாட்டில் 70 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள். இங்கிருக்கும் 'மேல்சாதி'க்கார நிலப்பிரபுக்கள் எல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களின் உழைப்பைக் கொள்ளையடிக்க, கூலியின்றி பறித்துக்கொள்ள தமது பிறவி சாதி மேன்மையைப் பயன்படுத்தி வருகிறார்கள். சாதியை ஒழிப்பதால் இந்த 'மேல்சாதி' நிலப்பிரபுக்களுக்கு நஷ்டம் இல்லையா? உண்மையில் கிராமப்புறங்களில் சாதியமைப்பைக் கட்டிக்காக்கும் அரணாக விளங்குபவர்கள் இந்த 'மேல்சாதி' (இவர்களில் பார்ப்பனர்கள் சிறு சதவீதமும் 'திராவிட' நிலப்பிரபுக்கள் பெரும்பகுதியினரும் உண்டு) நிலப்பிரபுக்களே. இவர்கள் கிராமப் புறங்களில் தாழ்த்தப்பட்ட மக்களை சாதியின் பேரால் இழிவுபடுத்தி நடத்துவதுடன் கூலியின்றி உழைப்பைச் சுரண்டுகிறார்கள். அடிப்பது, கொலை செய்வது உட்பட அவர்கள் மீது எல்லாவித அடக்கு முறைகளையும் பலாத்காரங்களையும் பிரயோகித்து வருகிறார்கள். இந்த சுரண்டலுக்கும்,ஆதிக்கத்துக்கும் ஆபத்து வந்து விடக் கூடாது என்று கருதி,வெவ்வேறு சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் ஒன்றாகச்சேர்ந்து விடாதபடிக்கு சாதிவெறியை மூட்டி விடுகிறார்கள்;சாதிக்கலவரங்களைத் திட்டமிட்டு தூண்டிவிட்டு சாதிமுறையைக்காப்பதில் கவனமாக செயல்படுகிறார்கள்.

நிலப்பிரபுக்கள் எல்லாம் கிராமப் புறங்களிலே இருப்பதினால் கிராமப் புறங்கள்அளவுக்கு நகர்ப்புறங்களிலே சாதிய வேறுபாடுகளோ, ஒடுக்குமுறைகளோ இல்லை என்றாலும் அங்கு கூட ஓட்டுவாங்குவதற்கும், பதவிபெறுவதற்கும், செல்வாக்கைக்காட்டுவதற்கும், சுயநலமிகள் நகர்ப்புற தொழிற்சாலைகள், அலுவலகங்களில் சாதி வேறுபாடுகளை உண்டு பண்ணி சண்டை மூட்டிவிடுகிறார்கள் என்பதும், முதலாளிகளும், அதிகாரிகளும் கூட தமக்கு எதிரான போராட்டங்களை உடைக்கசாதியைப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் உண்மையே. இதற்குக் காரணம் நமது நாட்டின் நகரங்கள் எல்லாம் நாட்டின் முக்கால்வாசிக்கும் மேலே இருக்கும் கிராமங்களால் சூழப்பட்டிருக்கின்றன. அங்கிருந்து தான் நகரங்களில் இருக்கும் தொழிலாளர்களும், அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும், அதிகாரிகளும் வருகிறார்கள். பெரும்பாலும் அதிகாரிகளும் தொழில் அதிபர்களும் பெரும் நிலவுடைமைக் குடும்பப் பின்னணி கொண்டவர்களாகவும், தொழிலாளர்களும், வேறு வேலையாட்களும் சாதாரணக் குடும்பப் பின்னணி கொண்டவர்களாகவும் இயல்பாகவே அவர்களுடைய வசதியின் காரணமாக அமைகிறார்கள். எனவே கிராமப்புற ஆதிக்க உறவுகளே நகர்ப்புறங்களிலும் பிரதிபலிக்கின்றன என்றாலும் இங்கு நிலவுடைமை உறவுகள் நேரடியாக இல்லாததனால் கிராமப்புறங்கள் அளவுக்கு சாதிய வேறுபாடுகள், ஒடுக்குமுறைகள் நகர்ப்புறங்களில் இருப்பதில்லை.

எனவே சாதியை ஒழிக்கவேண்டுமானால் கடவுள், மதம், சாதியை எதிர்த்தும், பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தும் பிரச்சாரமும், இயக்கமும் நடத்தினால் மட்டும் போதாது. அது இருப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் நிலப்பிரபுத்துவ உடைமையை ஒழிக்கவேண்டும். இதற்கு நிலப்பிரபுத்துவ சொத்துடமைக்கு எதிரான போராட்டம் அவனை வர்க்க ரீதியாக பார்க்க வேண்டும்; அவனை பார்ப்பானா,திராவிடனா இன்னின்ன சாதிக்காரனா என்று பார்க்காமல் அவனுடைய சாதித்திமிருக்கும், நிலவுடைமை மற்றும் தனிவுடமையை பேணிகாக்கும் ஆதிக்கத்துக்கும் எதிராக தொடுக்கப்பட வேண்டும். இது வர்க்கப் போராட்டமாகும். இதனால் நிலப்பிரபுத்துவத்தின் கலாச்சாரங்களை காக்கும் இன்றைய ஏகாதிபத்திய தனியுடமையை ஒழிவதுடன் அவைகள் தாங்கி நிற்கும் சாதியமும் அதற்கான சமூக அடிப்படைகளும் ஒழியும். ஆனால் பெரியார் இதற்கு மாறாக சாதி நிலவுவதற்குக் காரணம் மதமும், கடவுளும், பார்ப்பானுமே எனக்கூறி அதற்கு எதிரான பிரச்சாரத்துடன் இயக்கத்துடன் நின்று கொள்கிறார். சாதி இருப்பதால் பார்ப்பானுக்குத்தான் லாபம் என்று கூறி அவனை மட்டுமே எதிரியாகக் காட்டுகிறார். சாதிக்கு காப்பரணாக இருக்கும் மற்ற அடிப்படைகளை மறுத்து விடுகிறார்,அதாவது பார்பனர்களை எதிர்பதன் பெயரில் மற்ற சாதியினுடன் சமரசமாகி திராவிடன் என்றும் நம்மவன் என்றும் கூறி பாதுகாக்கிறார். உழைக்கும் மக்களை பிறவியிலேயே தாழ்ந்தவர்கள் என இழிவுபடுத்துகிறது என்றும் பார்ப்பனர்களைக் குறைகூறும் பெரியார் மற்ற சாதிக்காரர்கள் கூட தம்மை தாழ்த்தப்பட்ட மக்களை விட பிறவியிலேயே உயர்ந்தவர்கள் என்று கூறுவதையோ, அதைப்பயன்படுத்தி அச்சாதியை சேர்ந்த பிறசாதியினர் ஒடுக்கும்முறையில் மேல்நிலையில் இருந்தால் தாழ்த்தப்பட்ட மக்களின் உழைப்பைக் கூலிதராமல் சுரண்டிக் கொள்ளையடிப்பதையோ, அவர்களை இழிவுபடுத்தி அடக்கி ஒடுக்குவதையோ சொல்லாமல் மறைக்கிறார். சாதிக்கு எதிரான போராட்டம் என்பது உண்மையில் தனியுடமையை பாதுகாக்கும் சமூக அமைப்புக்கு எதிரான; அவர்களுடைய சாதிய ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டமே என்பதை மறைத்து பார்ப்பானுக்கு எதிரான போராட்டம், கடவுள், மதத்துக்கு எதிரான போராட்டம் என்பதாகச் சுருக்கிவிடுகிறார் பெரியார்.

இதனால் பெரியாரின் சாதி ஒழிப்புக் குரல் பார்ப்பானுக்கு எதிராக சம அந்தஸ்து கோரி மேல்சாதி பணக்காரர்கள் எழுப்பும் குரலாக இருக்கிறதே தவிர முழுமையான சாதி ஒழிப்புக்கான குரலாக இல்லை.

சாதியை ஒழிக்க வேண்டும் எனில் கடவுளையும் மதத்தையும் ஒழிக்கவேண்டும் என்கிறார். கடவுளையும் மதத்தையும் எப்போது ஒழிக்க முடியும்? அதாவது எந்த நிலைமைகளில் கடவுள், மதம் இருக்க முடியாத நிலை உருவாகும்? மனிதனின் அன்றாட வாழ்க்கையை மனிதனே கட்டுப்படுத்தும் நிலை தோன்றும் வரையிலும் கடவுளையும், மதத்தையும் யாரும் எவ்வளவு பெரிய தீவிர பிரச்சாரங்களாலும் ஒழித்துவிட முடியாது. இதற்கு முதலாளித்துவ அராஜக உற்பத்தி ஒழிவதும், தனியுடைமைப் பொருளாதாரம் ஒழிவதும் அவசியமாகும். இதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும் சோசலிச சமுதாயமும் அமைவது அவசியமாகும். இது முதலாளிகளை எதிர்த்த தொடர்ந்த விட்டுக்கொடுக்காத போராட்டடம் இன்றி சாத்தியம் இல்லை. ஆனால் பெரியார் என்ன செய்கிறார்? முதலாளிகளும், தொழிலாளிகளும் கூட்டாளிகளாகவும், பங்காளிகளாகவும் இருப்பது பற்றி பேசுகிறார்; கணவன் மனைவி போல் குடும்பமாக வாழ்வது பற்றிப் பேசுகிறார்; வர்க்க சமரசம் பேசுகிறார். இந்நிலைமையில் முதலாளித்துவம் ஒழிய முடியுமா? முதலாளித்துவம் ஒழியாமல் கடவுளும், மதமும் ஒழிய முடியுமா? இவ்வாறு கடவுளும், மதமும் ஒழிவதற்கு எதிரான வர்க்க சமரசக் கொள்கையைக் கடைப்பிடித்துக் கொண்டே கடவுளையும் மதத்தையும் ஒழிக்கப் போவதாகக் கூறுவது விஞ்ஞானப்பூர்வமானது என்றோ பகுத்தறிவுப்பூர்வமானது என்றோ சொல்ல முடியுமா? ஆனால் பெரியார் அதற்கு மேலும் போய் இந்த விஞ்ஞானப்பூர்வமற்ற பகுத்தறிவுப்பூர்வமற்ற வழியில் மதத்தையும், கடவுளையும் ஒழிப்பது பற்றியும் அதன்மூலம் சாதியை ஒழிப்பது பற்றியும் பேசுகிறார்.

நிலப்பிரபுக்களை எதிர்க்காமலேயே சாதியை ஒழிக்கப் போவதாகக் கூறுவதும், முதலாளிகளுடன் சமரசம் செய்துகொண்டே கடவுளையும், மதத்தையும் ஒழிக்கப் போவதாகக் கூறுவதும்தான் பெரியாரின் சாதி, மதம், கடவுள் எதிர்ப்புக் கொள்கை. எல்லாக் கவனத்தையும் கடவுள், மதம், பார்ப்பானுக்கு எதிராக மட்டுமே திருப்பிவிட்டு நிலப்பிரபுக்களையும் முதலாளிகளையும் பாதுகாக்கும் கொள்கைதான் பெரியாரின் சாதி, மதம், கடவுள் எதிர்ப்புக் கொள்கை.

பின்னர் விரிவாக..


தொடர்புடைய கட்டுரைகள்:

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

எங்கல்சின் அறிவியல் சோசலிசம்: ஒரு சமகால ஆய்வு(ஒலி வடிவில்)

இன்று நம் மத்தியில் முற்போக்கு பேசுபவர்கள் ஏன் முதலாளித்துவ அறிஞர்கள் கூட தங்களின் முதலாளித்துவ முகங்களை மறைத்துக் கொள்ள மார்க்சியம் பேசும் கொடுமை நடைப்பெறுகிறது. அதேவேளையில் பல வேடதாரிகள் மார்க்சிய போர்வையில் மக்களை ஏய்க்க என்னென்ன வேடம் போடுகின்றனர் என்பதனை புரிந்துக் கொள்ள மார்க்சிய ஆசான் எங்கெல்சின் நூலிலிருந்து சுருக்கமான பகுதி இவை.

ஃபிரெட்ரிக் எங்கல்ஸ் எழுதிய "கற்பனாவாத சோசலிசமும் அறிவியல்
சோசலிசமும்" என்ற புகழ்பெற்ற நூலின் மையக்கருத்தை இக்கட்டுரை விரிவாக விளக்குகிறது. வெறும் நல்லெண்ணம் மற்றும் அறநெறிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்ட சோசலிசக் கருத்துகளிலிருந்து, வரலாற்றுப் பொருள்முதல்வாதம் மற்றும் உபரி மதிப்பு ஆகிய அறிவியல் பூர்வமான கண்டுபிடிப்புகள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதை இப்பாடம் தெளிவுபடுத்துகிறது. சமூக மாற்றத்திற்குத் தனிமனிதர்களின் ஒழுக்கம் மட்டுமே போதாது என்றும், உற்பத்தி முறை மற்றும் வர்க்கப் போராட்டத்தின் இயக்க விதிகளைப் புரிந்துகொள்வது அவசியம் என்றும் எங்கல்ஸ் வாதிடுகிறார். இன்றையச் சூழலில் நிலவும் அடையாள அரசியல், தேர்தல் பாதை மற்றும் நிறுவனங்களின் மனிதநேய முகமூடி போன்ற நவீனப் போக்குகளை மார்க்சியக் கண்ணோட்டத்தில் விமர்சிக்க இந்த நூல் ஒரு முக்கியக் கருவியாக அமைகிறது. பொருளாதார அடித்தளத்தில் மாற்றம் ஏற்படாமல் சமூகத்தில் உண்மையான விடுதலை சாத்தியமில்லை என்பதை வலியுறுத்தி, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகச் சமூக அறிவியல் ஆய்வுகளுக்கு இது வழிகாட்டியாகத் திகழ்கிறது. இக்கட்டுரை எங்கல்சின் கோட்பாடுகளை இன்றைய காலத்திற்குப் பொருத்தமான முறையில் மறுஆய்வு செய்கிறது....

இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

எங்கல்சின் அறிவியல் சோசலிசம்: ஒரு சமகால ஆய்வு

மார்க்ஸ்–எங்கல்ஸ் மரபில் எங்கல்சின் "Socialism: Utopian and Scientific" – இன்றைய தவறான அரசியல் போக்குகளின் வெளிச்சத்தில் ஒரு ஆய்வு

1880 ஆம் ஆண்டு ஃபிரெட்ரிக் எங்கல்ஸ் எழுதிய Socialism: Utopian and Scientific (கற்பனாவாத சோசலிசமும் அறிவியல் சோசலிசமும்) என்பது மார்க்சியத்தின் மிக முக்கியமான அறிமுக நூல்களில் ஒன்றாகும். இது தனி மனிதர்களின் நல்லெண்ணத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிசக் கற்பனைகளுக்கும், சமூகத்தின் வரலாற்று இயக்க விதிகளை ஆராய்ந்து உருவான அறிவியல் சோசலிசத்திற்கும் இடையிலான அடிப்படை வேறுபாட்டை விளக்குகிறது. இந்த நூல் முதலில் எங்கல்சின் Anti-Dühring நூலில் இருந்த மூன்று அத்தியாயங்களை தனிநூலாக வெளியிட்ட வடிவமாகும்.

இன்றும் உலகெங்கும் "சோசலிசம்", "முற்போக்குவாதம்", "சமூக நீதி", "நலஅரசு", "மனிதநேயம்", "அடையாள அரசியல்" போன்ற பல பெயர்களில் பல்வேறு அரசியல் போக்குகள் செயல்படுகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை எங்கல்ஸ் விமர்சித்த அதே கற்பனாவாத வரம்புகளிலேயே உள்ளன.


1. கற்பனாவாத சோசலிசம் என்றால் என்ன?

எங்கல்ஸ் முதலில் 18–19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மூன்று முக்கிய சிந்தனையாளர்களைப் பற்றி விவரிக்கிறார்.

  • Saint-Simon

  • Charles Fourier

  • Robert Owen

இவர்கள் அனைவரும் முதலாளித்துவத்தின் கொடுமைகளை கண்டனர்.

ஆனால் அவர்கள் நினைத்தது:

"நல்ல மனிதர்கள் ஆட்சிக்கு வந்தால் சமூகம் மாறிவிடும்."

அல்லது

"முதலாளிகள் நல்ல மனசாட்சி கொண்டவர்களாக மாறினால் சுரண்டல் ஒழியும்."

அல்லது

"அன்பு, ஒற்றுமை, சகோதரத்துவம் மூலம் சமூகம் மாறும்."

இவர்கள் சுரண்டலை கண்டார்கள்.

ஆனால் அதன் பொருளாதார காரணத்தை விளக்கவில்லை.

வர்க்கப் போராட்டத்தை புரிந்து கொள்ளவில்லை.

வரலாற்றின் இயக்க விதிகளை ஆராயவில்லை.


2. மார்க்ஸ்–எங்கல்ஸ் கொண்டுவந்த புரட்சி

எங்கல்ஸ் கூறுகிறார்,

மார்க்ஸ் இரண்டு மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்தார்.

(1) வரலாற்றுப் பொருள்முதல்வாதம்

மனித சமுதாயத்தை இயக்குவது

  • மதம் அல்ல

  • நீதியல்ல

  • நல்லொழுக்கமல்ல

  • அரசர்களல்ல

மாறாக

உற்பத்தி முறை.

அதாவது

உற்பத்தி சக்திகள்

உற்பத்தி உறவுகள்

வர்க்க உறவுகள்

அரசியல்

சட்டம்

மதம்

கலாச்சாரம்


(2) உபரி மதிப்பு

முதலாளித்துவத்தின் இதயத்தையே மார்க்ஸ் கண்டுபிடித்தார்.

முதலாளி இலாபம் பெறுவது

வாங்கி விற்பதால் அல்ல.

தொழிலாளியின் உழைப்பிலிருந்து.

அதுவே

உபரி மதிப்பு (Surplus Value).

இதுவே முதலாளித்துவத்தின் அறிவியல் விளக்கம்.


3. இயக்கவியல் (Dialectics)

எங்கல்ஸ் முழு நூலிலும் வலியுறுத்துவது

உலகம் நிலையானதல்ல.

எல்லாமே மாற்றத்தில் உள்ளது.

இயற்கை

சமூகம்

சிந்தனை

அனைத்தும் முரண்பாடுகளால் நகர்கின்றன.

எனவே

முதலாளித்துவமும் நிரந்தரமல்ல.


4. முதலாளித்துவத்தின் முரண்பாடுகள்

எங்கல்ஸ் கூறுகிறார்,

முதலாளித்துவத்தில்

உற்பத்தி

சமூகமானது.

ஆனால்

உடைமை

தனிப்பட்டது.

இதுவே

அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணம்.

இன்று

AI

Data

Platform Economy

Gig Economy

Digital Labour

எதுவாக இருந்தாலும்

இந்த முரண்பாடு இன்னும் தீவிரமாகியுள்ளது.


5. அரசு என்ன?

எங்கல்ஸ் கூறுகிறார்,

அரசு

"அனைவருக்கும் சமமான அமைப்பு"

அல்ல.

அது

ஒரு வர்க்கம்

மற்றொரு வர்க்கத்தை

அடக்குவதற்கான கருவி.

இதனை இன்று பலர் மறுக்கின்றனர்.


6. புரட்சி ஏன் அவசியம்?

எங்கல்ஸ் கூறுகிறார்,

வரலாற்றில் எந்த ஆளும் வர்க்கமும்

தானாக அதிகாரத்தை விட்டுக்கொடுத்ததில்லை.

எனவே

சமூக மாற்றம்

வெறும் தேர்தலால் மட்டும் நிகழாது.

வர்க்கப் போராட்டத்தின் உச்சகட்டமாக

புரட்சி உருவாகிறது.


இன்றுள்ள தவறான நிலைப்பாடுகள் – எங்கல்சின் நூலின் வெளிச்சத்தில்

1. "நல்ல அரசு வந்தால் போதும்"

இன்று பலர் கூறுவது

ஊழலற்ற அரசு

நல்ல நிர்வாகம்

நேர்மையான தலைவர்கள்

இவை போதும்.

ஆனால்

உற்பத்தி உறவுகள் மாறாமல்

சமூகம் மாறாது.

இது எங்கல்ஸ் விமர்சித்த கற்பனாவாதத்தின் புதிய வடிவமே.


2. "அரசியல் மாற்றம் போதும்"

இன்று

கட்சி மாறினால்

சமூகம் மாறிவிடும் என்கிறார்கள்.

ஆனால்

முதலாளித்துவ உற்பத்தி முறை தொடர்கிறது.

அப்படியிருக்க

சுரண்டலும் தொடர்கிறது.


3. NGO அரசியல்

பல சமூக இயக்கங்கள்

  • விழிப்புணர்வு

  • கருத்தரங்கம்

  • மனு

  • வழக்கு

இதிலேயே முடிகின்றன.

ஆனால்

வர்க்க உறவுகள்

மாறுவதில்லை.

இதனை எங்கல்ஸ்

கற்பனாவாதத்தின் மற்றொரு வடிவமாகவே கருதுவார்.


4. அடையாள அரசியல் மட்டும்

சாதி

மதம்

மொழி

பாலினம்

இவை அனைத்தும் முக்கியமான சமூகச் சிக்கல்கள்.

ஆனால்

இவற்றை

உற்பத்தி உறவுகளிலிருந்து

வர்க்க அமைப்பிலிருந்து

பிரித்து விளக்கினால்

அது முழுமையான சமூக அறிவியல் அல்ல.

எங்கல்சின் பார்வையில், பொருளாதார அடித்தளத்துடனான உறவை ஆராய்வதே அவசியம்.


5. தேர்தலே மாற்றத்தின் பாதை

இன்று

பாராளுமன்றம்

மட்டுமே மாற்றம் தரும் என்று கூறப்படுகிறது.

ஆனால்

மார்க்ஸ்–எங்கல்ஸ்

பாராளுமன்றத்தை

வர்க்கப் போராட்டத்தின் ஒரு களமாகவே பார்த்தனர்.

அதை சமூக மாற்றத்தின் ஒரே கருவியாக அல்ல.


6. நிறுவனங்களின் "மனிதநேய" முகம்

இன்று பெரிய நிறுவனங்கள்

CSR

Green Economy

Inclusive Growth

ESG

போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகின்றன.

ஆனால்

சுரண்டலின் பொருளாதார அடித்தளம் தொடர்கிறது.

எங்கல்ஸ் இதனை

முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை மறைக்கும் புதிய அலங்காரமாகவே காண்பார்.


7. "AI எல்லோரையும் சமமாக்கும்"

செயற்கை நுண்ணறிவு

அறிவை

உற்பத்தியை

செல்வத்தை

அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் என்று சிலர் கருதுகின்றனர்.

ஆனால்

AI-யின் உடைமை

சில பெரிய நிறுவனங்களிடமே இருந்தால்

அதன் பலன்களும்

அவர்களிடமே குவியும்.

எனவே

தொழில்நுட்பம் மட்டும்

சமூக விடுதலையை உறுதி செய்யாது.


8. "வர்க்கம் முடிந்துவிட்டது"

சில சமகால கோட்பாடுகள்

"வர்க்க அரசியல் பழையது" என்று கூறுகின்றன.

ஆனால்

உலகளவில் செல்வக் குவிப்பு, தொழிலாளர் அமைப்புகள், தளத் தொழிலாளர்கள் (platform workers), ஒப்பந்த வேலை, இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியவை வர்க்க உறவுகள் தொடர்ந்து மாறுபட்ட வடிவங்களில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்ள வர்க்கப் பகுப்பாய்வு இன்னும் பல சமூக அறிவியலாளர்களால் பயன்படுத்தப்படுகிறது; அதே நேரத்தில், சாதி, பாலினம், இனம் போன்ற பிற அதிகார உறவுகளையும் இணைத்து ஆய்வு செய்யும் அணுகுமுறைகளும் இன்று பரவலாக உள்ளன.


இந்த நூலின் மையப் பாடங்கள்

எங்கல்ஸ் வலியுறுத்தும் முக்கிய கருத்துகள்:

  • சமூக மாற்றத்தை நல்லெண்ணம் மட்டுமே உருவாக்காது; பொருளாதார மற்றும் வரலாற்று இயக்கங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

  • உற்பத்தி முறை மற்றும் வர்க்க உறவுகள் அரசியல், சட்டம், சிந்தனை ஆகியவற்றுடன் ஆழமாக தொடர்புடையவை.

  • முதலாளித்துவத்தின் உள் முரண்பாடுகளை ஆய்வு செய்வது அதன் வளர்ச்சியையும் நெருக்கடிகளையும் புரிந்துகொள்ள உதவுகிறது.

  • சோசலிசம் ஒரு ஒழுக்கக் கோரிக்கையாக மட்டும் அல்ல; அது வரலாறு, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியை அறிவியல் முறையில் விளக்க முயலும் கோட்பாடாக மார்க்ஸ்–எங்கல்ஸ் அதை வடிவமைத்தனர்.

முடிவுரை

Socialism: Utopian and Scientific என்பது ஒரு வரலாற்று நூல் மட்டுமல்ல; சோசலிச சிந்தனையின் அடிப்படைகளை விளக்கும் கோட்பாட்டு அறிமுகமாகவும் விளங்குகிறது. எங்கல்ஸ், சமூக மாற்றம் தனிநபர் நல்லெண்ணத்தின் விளைவு அல்ல; சமூகத்தின் பொருளாதார அமைப்பு, வரலாற்று வளர்ச்சி, வர்க்க உறவுகள் மற்றும் அவற்றின் முரண்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் சமூகத்தை மாற்ற முடியாது என்று வாதிடுகிறார்.

இன்றைய உலகில் நலஅரசு, நிறுவனப் பொறுப்பு, அடையாள அரசியல், தொழில்நுட்ப வளர்ச்சி, தேர்தல் அரசியல் போன்ற பல அணுகுமுறைகள் சமூகப் பிரச்சினைகளுக்கு வெவ்வேறு தீர்வுகளை முன்வைக்கின்றன. எங்கல்சின் நூல், இத்தகைய அணுகுமுறைகளை அவை சமூகத்தின் அடிப்படை பொருளாதார உறவுகளுடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன என்ற கோணத்தில் விமர்சன ரீதியாக ஆராய்வதற்கான ஒரு கோட்பாட்டு கருவியை வழங்குகிறது. அதனாலேயே, இந்த நூல் வெளியானதிலிருந்து ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்ட போதிலும், சமூக அறிவியல், அரசியல் பொருளாதாரம் மற்றும் மார்க்சிய சிந்தனையைப் புரிந்துகொள்ள விரும்புவோருக்கு தொடர்ந்து முக்கியமான வாசிப்பாக இருந்து வருகிறது..


தொடர்புடைய கட்டுரைகள்:



***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்