தொடர் கட்டுரையின் தொடர்ச்சியே...
சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? லியோஷோசி பாகம் 14
கட்சியில் நிலவும் பிழையான சித்தாந்தங்களுக்கான எடுத்துக்காட்டுகள்.
இதுவரை எடுத்துரைத்துள்ளவற்றின் ஒளியில் நாம் பார்க்கும் போது, கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களை மதிப்பிடுவதற்கான படித்தரமாக கம்யூனிசம் பற்றிய புரிதலும் தனிநபர் மற்றும் கட்சியின் நலன்களுக்கு இடையிலான உறவும் இடைத் தொடர்பாக இருக்க வேண்டும் என்பது தெளிவு. இதை வைத்தே எல்லோரையும் அளவிடுவதும் முன்மாதிரிகளாக முன்னிறுத்துவதும் முடியும். ஆனால் சிலர் இத்தகைய படித்தரத்தை வைத்து அளவிடும் போது அதை நிறைவு செய்யும்படியாக இல்லாமல் பல்வேறு அளவுகளில் தவறான கருத்துக்களைக் கொண்டவர்களாக உள்ளனர். நமது தோழர்களின் கவனத்திற்கு இந்தப் பிழையான கருத்துக்களின் உருவரையை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன்.
நமது கட்சித் தோழர்கள் மத்தியில் காணப்படும் அடிப்படையிலேயே பிழையான கருத்துக்கள் யாவை? (சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி, லியோஷோசி, பக்கம் - 72)
விளக்கம்:- கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருக்கவேண்டும் என்றால் அவருக்கு கம்யூனிசம் பற்றிய போதியளவு புரிதல் இருக்கவேண்டும் என்பது முதன்மையானதாகும். இரண்டாவதாக அவர் தனது சொந்த நலனை உழைக்கும் மக்கள் மற்றும் கட்சியின் நலனுக்கு கீழ்ப்பட்டதாகவே கருதவேண்டும். இந்த அளவுகோலை வைத்தே கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் மதிப்பீடு செய்து இத்தகைய தகுதி உள்ளவர்களையே கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும் என்று கட்சியான தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இவ்வாறு கட்சி உறுப்பினர்களின் தகுதியை அளவிடும்போது அதற்கான தகுதியில்லாதவர்கள் அவர்களிடமுள்ள தவறான கருத்துக்களை நியாயப்படுத்தி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் தகுதியை பிழையாகச் சுட்டிக்காட்டி கம்யூனிசத்துக்கு எதிரானவர்களையே கம்யூனிஸ்ட் என்று சொல்லி, இத்தகைய கம்யூனிசத்துக்கு எதிரானவர்களைக் கொண்ட கட்சியாக மாற்றி கம்யூனிஸ்ட் கட்சியையே கம்யூனிசத்துக்கு எதிரான கட்சியாக மாற்றிவிடுவார்கள் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் நிலவிய தீங்கான பிரச்சனையைப் பற்றி லியோஷோசி குறிப்பிடுகிறார். புரட்சியை சாதித்த கட்சியான சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே இத்தகைய தீங்கான போக்குள்ளவர்கள் இருந்தார்கள் என்றால் இங்குள்ள இடதுசாரி கட்சிக்குள் எவ்வளவு தீங்கான நபர்கள் இருப்பார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். கட்சிக்குள் அந்த கட்சி எவ்வளவு சிறப்பான கட்சியாக இருந்தாலும் அந்தக் கட்சிக்குள் தவறான நபர்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள். ஆகவே கட்சியானது கட்சிக்குள் வரும் பிழையான கருத்துக்களை எதிர்த்து தொடர்ந்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு கட்சியானது தொடர்ந்து போராடத் தவறினால் கட்சியானது பெயரில்தான் கம்யூனிஸ்ட் கட்சியாக இருக்கும், உண்மையில் கம்யூனிசத்துக்கு எதிரான கட்சியாக மாறிவிடும். இவ்வாறுதான் இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சியானது கம்யூனிசத்துக்கு எதிரான கட்சியாக மாறி மக்களின் செல்வாக்கை இழந்து இப்போது சீட்டுக்கட்சியாக அதாவது சீட்டுக்காக பிற்போக்கு முதலாளித்துவ கட்சிகளிடம் கையேந்தி நிற்கும் இழிவான நிலையை வந்தடைந்துள்ளது.
பிழையான முதல் பண்பு:-
நமது கட்சியில் சேருபவர்கள் வெவ்வேறு வர்க்கத்திலிருந்து வந்தவர்களாக இருப்பதுடன் தமது வர்க்க நிலையிலும் மாறுபட்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் தம்முடன் வெவ்வேறு வகையிலான நோக்கங்களையும் தப்பெண்ணெங்களையும் கட்சிக்குள் கொண்டு வருகின்றனர். கம்யூனிசத்தை கொண்டு வருவதற்காகவும் பாட்டாளி வர்க்கத்தையும் முழு மனித குலத்தையும் விடுவிக்கும் மகத்தான லட்சியத்திற்காகவும் பலரும் கட்சியில் சேர்கின்றனர் என்பது உண்மைதான்; ஆனால், சிலர் வேறு காரணங்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் சேருகின்றனர் என்பதும் உண்மைதான். எடுத்துக்காட்டாக விவசாயி பின்னணி கொண்ட சில தோழர்கள் உள்ளூர் கொடுங்கோலர்களின் உடமைகளை பறிமுதல் செய்வதும் நிலங்களை விநியோகிப்பதும்தான் கம்யூனிசம் என்று நினைக்கின்றனர். முதலில் அவர்கள் நம்மோடு சேரும்போது கம்யூனிசத்தின் உண்மையான பொருள் என்னவென்று அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை. கட்சி ஜப்பானிய எதிர்ப்பில் முன்னணியில் இருப்பதாலும் ஜப்பானிய எதிர்ப்பு தேசிய ஐக்கிய முன்னணிக்காக உறுதியாக வாதிடுவதாலும் இப்போது பெரிய எண்ணிக்கையில் ஆனவர்கள் கட்சியில் சேருகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சி நல்ல பெயர் எடுத்திருப்பதாலும், கம்யூனிஸ்ட் கட்சி சீனாவை காப்பாற்றும் என்று மேலோட்டமாக புரிந்து கொண்டு உள்ளதன் அடிப்படையிலும் சிலர் கட்சியில் சேருகிறார்கள். (சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி?, லியோஷோசி, பக்கம் - 72, 73)
விளக்கம்:- கம்யூனிஸ்ட் கட்சியில் சேருபவர்கள் வெவ்வேறு வர்க்கங்களிலிருந்து வந்தவர்களாகவும் வெவ்வேறு வர்க்க சிந்தனை, கருத்து மற்றும் பழக்கவழக்கங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது இயல்பானதே ஆகும். ஆகவே அவர்களை வெவ்வேறு சிந்தனைமுறையிலேயே விட்டுவிடலாமா? என்ற கேள்வி எழுகிறது. அதற்கு மார்க்சியம் கூறும் பதில் அவர்களை அப்படியே விட்டுவிடக்கூடாது என்பதுதான். ஒரு மனிதனது பண்பானது பிறப்பிலிருந்து உருவானதல்ல, மாறாக சமூக வாழ்க்கையிலிருந்து அவன் கற்றுக்கொள்வதன் மூலமே ஒருவரது பண்பில் மாற்றங்கள் ஏற்படும் என்பது அறிவியல் ஆகும். உதாரணமாக ஒருவர் இராணுவ வீரராக பணியில் சேர்ந்துவிட்டால் அங்கு அவருக்கு இராணுவப் பயிற்சி கொடுக்கப்படும். அந்தப் பயிற்சியின் மூலமே ஒரு இராணுவ வீரர் உருவாகிறார். அதைப்போலவே கம்யூனிஸ்ட் கட்சியும் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்பதால் அந்த கட்சியிலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் பாட்டாளி வர்க்கப் படைவீரராக பயிற்சி பெறவேண்டும். அத்தகைய பயிற்சியை கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அதாவது கம்யூனிஸ்ட் கட்சிப் படைவீரர்கள் ஒவ்வொருவரும் மார்க்சியம் என்ற ஆயுதத்தை ஏந்தி போராடுவதற்கான பயிற்சியைப் பெற வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் சிலர் மார்க்சியத்துக்கு எதிரான கருத்துக்களை கட்சிக்குள் கொண்டுவருகிறார்கள். இவர்களை எதிர்த்துப் போராட பாட்டாளி வர்க்க உணர்வுள்ள கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மார்க்சியம் என்ற ஆயுதத்தை எடுத்து போராடி முறியடிக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியில் சேருபவர்கள் பல்வேறு காரணங்களுக்காக கட்சியில் சேருகிறார்கள். கம்யூனிச லட்சியத்தை அடிப்படையில் புரிந்துகொண்ட சிலரும் கட்சியில் சேருகிறார்கள். விவசாயிகள் பண்ணையார்களிடமிருந்து கம்யூனிஸ்டுகள் நிலத்தை பறித்துக்கொடுப்பார்கள் என்று கட்சியில் சேருகிறார்கள், தொழிலாளர்கள் தங்களுக்கு கூலி போனஸ் போன்றவற்றை வாங்கிக் கொடுப்பார்கள் என்று கட்சியில் சேருகிறார்கள், இவ்வாறு பல்வேறுவிதமான சுயநல காரணங்களுக்காக கட்சியில் சேருகிறார்கள். இவர்கள் ஆரம்பத்தில் கட்சியின் கம்யூனிச இலட்சியத்தை புரிந்துகொள்வதில்லை. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியானது ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகள் சீனாவை ஆக்கிரமித்த பொழுது ஜப்பானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஓர் ஐக்கிய முன்னணியை கட்டி உறுதியாக போராடியபோது சீனக் கம்யூனிஸ்ட் கட்சிதான் சீன மக்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தது வரலாறு. ஆகவே ஒரு கட்சியானது தற்போது மக்களின் செல்வாக்கில்லாமல் இருந்தாலும் அந்தக் கட்சியானது மார்க்சிய வழியில் உறுதியாக நின்று பெரும்பாலான மக்களின் நலனுக்காகப் போராடும்போது அந்தக் கட்சியை மக்கள் கட்டாயம் ஆதரிப்பார்கள் அதே போலவே ஒரு கட்சியானது பெரும்பாண்மையான மக்களுக்கு எதிராக செயல்பட்டால் அந்தக் கட்சியை மக்கள் கட்டாயமாகப் புறக்கணிப்பார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே ஒருவரை கட்சி உறுப்பினராக ஆக்கும் போதே அவருக்கு கம்யூனிசத்தை போதிக்கவேண்டும். இல்லையென்றால் அவர் சோதனைக்குரியவராக இருக்கும் போது போதிக்க வேண்டும். கட்சிக்குள் செயல்படும் உறுப்பினர்களை கண்காணித்து அவர்களை அவ்வப்போது செழுமைப்படுத்த வேண்டும். அதற்கு தொடர்ந்து மார்க்சிய கல்வி இயக்கத்தை கட்சி நடத்தவேண்டும். இதன் மூலம் மட்டுமே ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை பாதுகாத்து வளர்க்க முடியும்.
இன்னும் சிலர் தமக்கென ஒரு எதிர்காலத்தை பெற விரும்பி கட்சியில்
சேருகின்றனர். ஏனென்றால், அவர்களுக்கு எந்த வழியும் இல்லை; நிரந்தரமான தொழில் ஏதும் அவர்களுக்கு இல்லை, வேலையிழந்து தவிக்கின்றனர், கல்வி கற்க வழியில்லை; அல்லது குடும்பத் தளையிலிருந்து வெளியேற அல்லது கட்டாயத் திருமணத்திலிருந்து விடுபட அவர்கள் கட்சியில் இணைகின்றனர். தம்மீதான வரிகள் கட்சியில் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்த்து அல்லது எதிர்காலத்தில் என்றைக்காவது தாம் "பிரபலமடைந்து" விடலாம் என்று கருதி அல்லது தமது நண்பர்கள், உறவினர்கள் சேர்ந்து விட்டதால் கட்சியில் இணைகின்றனர். இத்தகைய தோழர்கள் தெள்ளத் தெளிவானதும் உறுதியானதுமான கம்யூனிஸ்ட் உலகக் கண்ணோட்டம் இல்லாமல் இருக்கின்றனர்; கம்யூனிச லட்சியத்தின் வல்லமையை, அதை அடைவதில் உள்ள அளவிட முடியாத இடையூறுகளை புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்; உறுதியான பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை எடுப்பதில் குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர் என்பதெல்லாம் இயல்புதான். இவர்களில் சிலர் ஊசலாடுபவர்களாக இருப்பார்கள், குறிப்பிட்ட சூழ்நிலையிலும் குறிப்பிட்ட சில நெருக்கடியான சந்தர்ப்பங்களில் தமது நிலையை மாற்றிக் கொள்வார்கள் என்பதும் நடக்கக் கூடியதுதான். எல்லா வகையான கருத்துக்களையும் கட்சிக்குள் அவர்கள் கொண்டு வருவதால் அவர்களுக்கு கற்பிப்பதும் பயிற்றுவிப்பதும் மிக மிக அவசியம்; அவர்களும் தம் பங்கிற்கு தம்மை புடமிட்டுக் கொள்வதும் அவசியம். அப்படியில்லாவிட்டால், அவர்கள் பாட்டாளி வர்க்க புரட்சிப் போராளிகளாக முடியாது. (சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி?, லியோஷோசி, பக்கம் - 73)
விளக்கம்:- கம்யூனிஸ்ட் கட்சியில் சேருபவர்களில் இன்னும் சில வகையினர் உள்ளார்கள் என்றார் லியோஷோசி. தமக்கென்று ஒரு எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், வாழ்வதற்கு வேறு எவ்விதமான வழியும் இல்லாதவர்கள் கட்சியில் சேர்ந்தால் தனது வாழ்க்கைக்கு ஏதாவது வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும், வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் கல்வி இல்லாதவர்களுக்கு கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் குடுப்பத்திலுள்ள பிரச்சனைகளிலிருந்து விடுபடவும், இவ்வாறு பல்வேறுவிதமான சுயநல காரணங்களுக்காக கம்யூனிஸ்ட் கட்சியில் சேருகிறார்கள். இவ்வாறுதான் இந்தியாவிலுள்ள இடதுசாரி கட்சிகளில் மக்கள் சேர்ந்தார்கள். இந்த மக்களுக்கு தெள்ளத்தெளிவான உறுதியான கம்யூனிச உலகக் கண்ணோட்டத்தையும், கம்யூனிச லட்சியத்தின் வல்லமையையும் கம்யூனிச லட்சியத்தை அடைவதற்கு பல இன்னல்களை நாம் சந்திக்க வேண்டும் என்பதையும் ஒவ்வொரு கம்யூனிஸ்டும் உறுதியான பாட்டாளி வர்க்க நிலைபாட்டை எடுத்து செயல்படுவதன் மூலமே பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்ற்றி உழைக்கும் மக்களுக்கு உன்னதமான வாழ்க்கையை கொடுக்க முடியும் என்று போதித்து அவர்களிடம் சோசலிச கம்யூனிச உணர்வை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வளர்க்கத் தவறினார்கள். அதன் காரணமாகவே கட்சி உறுப்பினர்களும், தொழிற்சங்க உறுப்பினர்களும் ஊசலாடி தங்களது சுயநலத்தை முதலாளித்துவ கட்சிகள்தான் சிறப்பாக பாதுகாப்பார்கள் என்று முதலாளித்துவ கட்சிகளின் மீது நம்பிக்கை கொண்டு முதலாளித்துவ கட்சிக்கு பலரும் மாறிவிட்டதை நாம் காண்கிறோம். இதற்கு காரணம் கட்சி உறுப்பினர்களிடம் காணப்படும் குறைகள் மட்டும் காரணம் இல்லை, கட்சித் தலைவர்கள் கட்சி உறுப்பினர்களுக்கு போதித்து அவர்களுக்கு சோசலிச உணர்வு ஊட்டாததும், சோசலிசப் புரட்சிக்காக அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி தயாரிக்காததும்தான் காரணமாகும். ஆகவே கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அடிக்கடி எல்லாவகையான பிற்போக்கு கருத்துக்களையும் கட்சி உறுப்பினர்களே கொண்டுவருவார்கள் என்ற உண்மையை நாம் உணரவேண்டும். அத்தகைய தவறான கருத்துக்களை எதிர்த்து கட்சிக்குள் தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டியது அவசியமாகும். அதற்காக கட்சி உறுப்பினர்களுக்கு தொடர்ந்து சித்தாந்தப் பயிற்சி அளிப்பது அவசியமாகும். அத்தகைய சித்தாந்தப் பயிற்சியை கட்சி உறுப்பினர்களுக்கு ரஷ்ய சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி வழங்கியதால் கட்சியின் தூய்மையை தொடர்ந்து பாதுகாத்து மக்களை திரட்டி புரட்சியை நடத்த முடிந்தது என்ற நடைமுறை உண்மையை நாம் உணரவேண்டும்.
எப்படியும், இது ஒன்றும் அச்சப்படக் கூடிய பிரச்சினை அல்ல. மக்கள் கம்யூனிஸ்டு கட்சியின் பக்கம் ஈர்க்கப்படுவதோ, கட்சியில் சேருவதோ, அதன் கொள்கையை ஏற்றுக் கொள்வதோ, இவற்றின் மூலம் தமது இடர்ப்பாடுகளுக்கு விடிவு தேடுவதோ மோசமான விஷயமல்ல. நம்மை நாடி வந்ததன் மூலம் அவர்கள் தவறேதும் செய்துவிடவில்லை. எதிர் ஏஜெண்டுகளாகவோ, துரோகிகளாகவோ, பிழைப்புவாதிகளாகவோ, தான் மட்டும் முன்னேற வேண்டும் என்பதற்காக எதையும் செய்யக் கூடியவர்களாகவோ இல்லாத வரையில் நாம் அவர்களை வரவேற்கவே செய்வோம். கட்சித் திட்டத்தையும் கட்சியின் அமைப்பிற்கு விதிகளையும் ஏற்றுக் கொண்டு, கட்சியின் ஏதாவதொரு அமைப்பில் வேலை செய்து கொண்டு ஒரு உறுப்பினர் செலுத்த வேண்டிய கட்டணத்தை முறையாக செலுத்திக் கொண்டு ஒருவர் இருப்பாரானால் அவர் கட்சியில் சேர்ந்து செயல்பட முடியும். நமது கற்றலை ஆழப்படுத்திக் கொள்வது, கம்யூனிசம், கட்சித் திட்டம், அமைப்பு விதிகள் ஆகியவை பற்றி புரிந்து கொள்வது என்பவற்றை கட்சியில் சேர்ந்த பின்னர் மேற்கொள்ளலாம்; அவர்கள் தாம் கற்றதன் அடிப்படையில் புரட்சிப் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலம் தம்மை பயிற்றுவித்துக் கொள்ளவும் புடமிட்டுக் கொள்ளவும் முடியும். இவை அனைத்தையும் செய்வதன் மூலம் அவர்கள் சிறந்த கம்யூனிஸ்டுகளாக வளர்ச்சியுற எல்லா சாத்தியங்களும் உள்ளன. கட்சியில் சேர்வதற்கு முன்னரே, கம்யூனிசம், கட்சித் திட்டம், கட்சி அமைப்பு விதிகள் ஆகியவற்றை புரிந்து கொள்வது ஆக மிகப் பெரும்பான்மையினருக்கு சாத்தியமில்லை என்பது உண்மையே. கட்சித் திட்டத்தையும் அமைப்பு விதிகளையும் ஒப்புக் கொண்டாலே போதும், அவற்றைப் புரிந்து கொண்டாக வேண்டும் என்பதை கட்சியில் சேர்வதற்கான நிபந்தனையாக நாம் முன்வைக்காதது இந்தப் புரிதலின் அடிப்படையில்தான். (சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி?, லியோஷோசி, பக்கம் - 74)
விளக்கம்:- கம்யூனிஸ்ட் கட்சியில் ஒருவர் சேருவதோ அதன் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதோ அவற்றின் மூலம் தனது சொந்த பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முயற்சி செய்வதோ தவறான விஷயம் அல்ல. கம்யூனிஸ்ட் கட்சியை நாடி வந்ததன் மூலம் அவர்கள் தவறு செய்ததாக கருத முடியாது. இதற்கு மாறாக போராடும் மக்களின் எதிரிகளின் ஏஜென்ட்களாகவோ, துரோகிகளாகவோ, பிழைப்புவாதிகளாவோ இருந்தால் மட்டுமே தவறாகும்; அது கட்சிக்கு செய்யும் மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். இத்தகைய துரோகச் செயலை ஒருவர் செய்யாதவரை நாம் அவரை அங்கீகரிக்கலாம், ஆனாலும் ஒருவர் கட்சித் திட்டத்தை ஏற்றுக் கொண்டு கட்சியின் அமைப்பு விதிகளை ஏற்றுக்கொண்டு கட்சியின் ஏதாவது ஒரு அமைப்பில் வேலை செய்து கொண்டு உறுப்பினர் செலுத்த வேண்டிய கட்டணத்தை முறையாக செலுத்திக்கொண்டு மார்க்சியத்தை கற்றுக் கொள்வதில் ஆர்வமுடன் ஈடுபட்டுக் கொண்டு கம்யூனிச அமைப்பின் விதிகளை ஆழமாகப் புரிந்து கொண்டு அதற்குக் கட்டுப்பட்டு செயல்படுவது என்பதை அவர் கட்சியில் சேர்ந்து சோதனை காலத்தில் கற்று தெரிந்து கொள்ளலாம். அதன்பின்பு கட்சி நடத்தும் புரட்சிகரப் போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலமும் ஒருவர் தன்னை கம்யூனிஸ்ட் ஆக வளர்த்துக் கொள்ள முடியும். மிகப் பெரும்பான்மையினர்க்கு கட்சியில் சேர்வதற்கு முன்பு கட்சியின் திட்டத்தையும் அமைப்பு விதிகளையும் புரிந்து கொள்வதில் சிரமங்கள் இருக்கலாம், அவர்களிடம் மேலோட்டமாக கட்சியின் திட்டத்தையும் அமைப்பு விதிகளையும் விளக்கி அதனை புரிந்து கொண்டால் அதை ஏற்றுக் கொண்டால் அதற்கு விசுவாசமாக இருப்பதற்கு அவர் ஒப்புக்கொண்டால் அவரை கட்சியில் சோதனை உறுப்பினராக சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை. . ஆனாலும் அவன் நிரந்தர உறுப்பினராக ஆவதற்கு முன்பு அவர் கம்யூனிசத்தை பற்றியும் ஒரு கம்யூனிஸ்ட்டினுடைய ஒழுக்கத்தைப் பற்றியும் கம்யூனிஸ்ட் கட்சியின் விதிகளுக்கு அமைப்பு விதிகளுக்கு கட்டுப்பட்டு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம் என்பதை நாம் எப்பொழுதும் மறந்து விடக்கூடாது.
கட்சியில் சேர்வதற்கு முன்னர் கம்யூனிசத்தை பலரும் தெள்ளத் தெளிவாக புரிந்துகொள்ள இயலாத நிலை இருந்த போதிலும், நடந்து கொண்டுள்ள கம்யூனிஸ்டு மற்றும் புரட்சிப் போராட்டங்களில் அவர்கள் ஈடுபடுத்திக் கொள்வது சாத்தியப்படக் கூடிய விஷயம்தான். கட்சியில் சேர்ந்த பின்னர் சிரமப்பட்டு கற்பார்களானால், அவர்கள் அரசியல் உணர்வுமிக்க கம்யூனிஸ்டுகளாக முடியும். மேலும் எந்த ஒரு உறுப்பினரும் கட்சியிலிருந்து விலகி கொள்வதற்கு முழு சுதந்திரம் உண்டு (விருப்பப்பட்டால் மட்டும் ஒருவர் கட்சியில் சேர்ந்து கொள்ள முடியாது) என்று நமது கட்சியின் அமைப்பு விதிகளில் தெளிவாக வரையறுக்கப்பட்டு உள்ளது. கம்யூனிசத்தில் ஆழ்ந்த நம்பிக்கை போதுமான அளவு இல்லை
என்றோ, சுயமாக கட்சி வாழ்வை தன்னால் வாழ முடியவில்லை என்றோ, அல்லது வேறு காரணங்களைக் கூறியோ கட்சியிலிருந்து விலகிக்கொள்ள ஒரு உறுப்பினர் விரும்புவாரானால் கட்சி அவருக்கு அனுமதி வழங்குகிறது. கட்சியிலிருந்து வெளியேறிய பின்னர், கட்சியின் குழுக்கத் (இரகசியத்) தகவல்களை வெளியிடுவது கட்சிக்கு எதிராக சதிவேலைகளில் ஈடுபடுவது ஆகிய கட்சிக்கு எதிரான வேலைகளில் ஈடுபடாதவரையில் கட்சி அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாது. கட்சிக்குள் சதித்தனமாக ஊடுருவியுள்ள பிழைப்புவாதிகளையும் உளவாளிகளையும் பொருத்தவரையில் அவர்களை வெளியேற்றுவதைத் தவிர கட்சிக்கு வேறு வழி இல்லை. இந்த முறைகளைக் கடைபிடித்தே நமது கட்சியின் தூய்மையைப் பேணிக் காக்க முடியும். (சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி?, லியோஷோசி, பக்கம் - 74, 75)
விளக்கம்:- கம்யூனிஸ்டு கட்சியில் சேர்வதற்கு முன் கம்யூனிசத்தை பற்றி பலரும் புரிந்து கொள்ள இயலாது. எனினும் ஒருவர் கட்சியில் சோதனை உறுப்பினராக சேர்ந்த பின்பு கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் புரட்சிகரப் போராட்டங்களில் அவர்கள் ஈடுபடுவதற்கு எந்த தடையும் இல்லை. மேலும் அவ்வாறு புரட்சிகரப் போராட்டங்களில் கலந்து கொண்டு கட்சி நடத்தும் மார்க்சியப் பள்ளிகளில் சேர்ந்து மார்க்சியத்தை சிரமப்பட்டு கற்றுக் கொள்ளவேண்டும். அதன் மூலமே அவர்கள் அரசியல் உணர்வுள்ள புரட்சிகரமான கம்யூனிஸ்டாக மாற முடியும். அதற்கான முயற்சியில் ஒவ்வொரு உறுப்பினரும் தொடர்ந்து ஈடுபட வேண்டும். அந்த உறுப்பினர்களுக்கு கட்சியின் தலைமையானது தொடர்ந்து வழி காட்ட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியில் ஒருவர் சேர வேண்டும் என்றால் அவர் விருப்பம்போல் தானாக கம்யூனிஸ்ட் கட்சியில் சேர முடியாது. கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வதற்கு முன்பு அவரை சோதனை உறுப்பினராக வைத்து அவருக்கு போதனை கொடுப்பதும் அவர்களை சோதிப்பதும் அதில் அவர் தேர்ச்சி பெற்ற பின்பே அவரை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக கட்சியானது ஏற்றுக்கொள்ள முடியும்; இதுதான் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய அமைப்பு விதியாகும். கம்யூனிசத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தாலும், கட்சியில் தொடர்ந்து தன்னால் பணியாற்ற முடியாது என்ற காரணத்தினாலும், அல்லது வேறு காரணத்தினாலும் ஒரு உறுப்பினர் கட்சியில் இருந்து விலகிக் கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு. . ஆனால் அவ்வாறு கட்சியை விட்டு வெளியேறிய பின்பு அவர் கட்சிக்கு எதிராக கட்சியின் ரகசியத்தை வெளியிடுவது, கட்சிக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபடுவது ஆகிய கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர் மீது கட்சிக்கு நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு. . அதே போல கட்சிக்குள் இருக்கும் சிலர் அதாவது கட்சிக்குள் சதித்தனமாக ஊடுருவியுள்ள பிழைப்பு வாதிகளையும் உளவாளிகளையும் அவர்கள் கட்சிக்கு எதிரான சதிகாரர்கள் என்பதை கட்சியானது ஆதாரத்தோடு நிறுவி கட்சியினுடைய உறுப்பினர்களின் ஒப்புதலோடு அவர்களை கட்சியை விட்டு வெளியேற்ற கட்சிக்கு உரிமை உண்டு, . அதிகாரமும் உண்டு. இந்த வகையான விதிமுறைகளை கடைபிடித்தே கட்சித் தன்னை பாதுகாத்துக் கொள்ளவும், கட்சி தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ளவும் முடியும். இத்தகைய விதிமுறைகளை பின்பற்றும் பொழுது கட்சியின் தலைமையானது மிக மிக கவனமாகவும் விஞ்ஞான பூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றியும் செயல்பட வேண்டியது மிக மிக அவசியம் ஆகும்.
பிழையான இரண்டாவது பண்பு:
சில கட்சி உறுப்பினர்கள் மத்தியில் இன்னமும் தனிநபர்வாதமும் சுயநலமும் பலமாக வேரூன்றி உள்ளது.
தனிநபர்வாதம் பின்வருமாறு தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. நடைமுறைப் பிரச்சினைகள் எழும்போது சிலர் தமது தனிப்பட்ட நலன்களை கட்சியின் நலன்களுக்கு மேலாக முன்வைப்பதை வழக்கமாக்கிக் கொண்டு உள்ளனர்; தனிப்பட்ட இலாப நட்டத்தை மனதில் முதன்மையாகக் கொள்ளும் சிலர் எப்போதும் தமது சொந்த நலன்களையே கணக்கிட்டுச் செயல்படுகின்றனர்; கட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் கேடாகப் பயன்படுத்தி தமக்கு சாதகமாக கட்சியின் வேலைகளை மாற்றி கொண்டு செலுத்த முயற்சிக்கின்றனர்; கட்சியின் கோட்பாடுகள் அல்லது கட்சியின் பலன்கள் என்று பெரிதாக கூச்சலிட்டு தாம் விரும்பாத தோழர்கள் மீது தனிப்பட்ட வஞ்சத்தைத் கொட்டித் தீர்க்கின்றனர். சமூக தகுதி நிலை, பொருளாதார அனுகூலங்கள், அன்றாட வாழ்வைப் பாதிக்கும் பிற பிரச்சினைகள் என்று வந்துவிட்டால், மற்றவர்களைவிட தாம் அதிகமாகப் பெறுவதற்கு தவறாமல் முயற்சிக்கின்றனர்; இந்த விஷயங்களில் அவர்கள் உயர்மட்டத்தில் உள்ளவர்களுடன் தமது நிலையை ஒப்பிட்டுப் பார்க்கின்றனர்; தனிப்பட்ட நலன்களைப் பெறுவதற்காக உளப்பூர்வமாக பெருமுயற்சிகளை மேற்கொள்ளும் அவர்கள் அவற்றை அடையும் போது அது பற்றி பீற்றிக் கொள்கின்றனர். ஆனால், வேலைகளை நிறைவேற்றுவது என்ற பிரச்சினை வந்துவிட்டால் தம்மைவிட தகுதி குறைவானவர்களுடன் தமது வேலைகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர். கடினமான நிலைமைகளை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டிய தருணங்களில் அவர்கள் பயபீதி கொள்கின்றனர். அபாயகரமான நிலைமைகள் ஏற்படும்போது அவற்றை எதிர்கொள்ள தயங்கி தலைதெறிக்க ஓடிவிடவே விரும்புகின்றனர். உதவியாளர்களை வைத்துக் கொள்ளும் பிரச்சினையில் தமக்கு கீழே அதிகமானவர்களை வைத்துக் கொள்ளவே அலைகின்றனர். தமது குடியிருப்புகள் மிகச் சிறந்தவையாக இருக்க வேண்டுமென விரும்புகின்றனர்; பெரிய ஆள் என்று தம்மைக் காட்டிக் கொள்ளவும் கட்சியின் புகழில் குளிர்காயவும் அலைகின்றனர். வாழ்க்கையில் உள்ள எல்லா மகிழ்வானவற்றையும் கைப்பற்றிக் கொள்ள அவர்கள் விரும்புகின்றனர்; "மகிழ்வூட்டாத விஷயங்கள்" என்று வந்துவிட்டால், அவை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியவை என்று அவர்கள் நினைக்கின்றனர். இத்தகையப் பேர்வழிகளின் தலைகளில் சுரண்டல் வர்க்கங்களின் சித்தாந்தம்தான் நிரம்பி வழிகிறது. "ஒவ்வொரு வரும் தமக்காகத்தான் வாழ்வார்கள்", "அப்படி இல்லையெனில் வானமே இடிந்து விழுந்து விடும்", "சுயநலம் கொண்ட விலங்கே மனிதன்", "உலகில் உண்மையிலேயே சுயநலமற்றவர்கள் என்று யாருமில்லை", "அப்படியிருந்தால் அவர்கள் அறிவிலிகளாகவும் முட்டாள்களாகவுமே இருப்பார்கள்" என்று இவர்கள் நம்புகின்றனர். தமது சொந்த சுயநலத்தையும் தனிநபர்வாதத்தையும் நியாயப் படுத்துவதற்காக இத்தகைய சுரண்டல் வர்க்கத்தின் மட்டமான கருத்துக்களை பிதற்றித் திரிகின்றனர். இத்தகைய பேர்வழிகள் நமது கட்சியிலும் இருக்கவே செய்கின்றனர். (சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? லியோஷோசி, பக்கம் - 75, 76)
விளக்கம்:- தனிநபர்வாதம் மற்றும் சுயநலம் என்ற தவறான பண்பு கம்யூனிஸ்டுகளிடம் இருக்கக்கூடாது.
1. நடைமுறையில் ஒரு பிரச்சனை எழும்போது கம்யூனிஸ்ட் உறுப்பினர் தனது பிரச்சனையை முதன்மையாக எழுப்பக்கூடாது.
2. தனிப்பட்ட லாப நட்டக் கணக்குப் பார்த்து தனது செயலை வகுத்துக்கொள்ளக்கூடாது.
3. கட்சியின் மீது மக்களும் கட்சி உறுப்பினர்களும் வைத்துள்ள நம்பிக்கையை தனது சுயநல நோக்கத்துக்காக கேடாகப் பயன்படுத்தக்கூடாது.
4. கட்சியின் கொள்கை கட்சியின் நலனை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி கட்சிக்குள் தனக்குப் பிடிக்காத தோழர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி தாக்குதல் செய்யக்கூடாது.
5. தமது தகுதி செல்வாக்கையும் தமது பொருளாதார வாழ்க்கையையும் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும்போது அதனை அடைவதற்கு முன்வரிசையில் போய்நிற்கக்கூடாது.
6. கட்சியின் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் கட்சிப் பணியில் ஆர்வமாக ஈடுபட்டுள்ள தோழர்களுக்கு கட்சி உறுப்பினர்களிடம் இருக்கும் செல்வாக்கு போல் தனக்கும் கிடைக்கவேண்டும் என்று ஏங்கக்கூடாது. செல்வாக்கும் புகழும் தன்னைத் தேடிவருவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு கிடைக்கும் செல்வாக்குக்கு மயங்கிவிடக்கூடாது.
7. தாம் செய்த வேலைகளை மதிப்பிடும்போது தம்மைக்காட்டிலும் குறைவாக செயல்பட்டவர்களோடு தன்னை ஒப்பிடக்கூடாது. தன்னைக்காட்டிலும் சிறப்பாக பணியாற்றுபவர்களோடுதான் ஒப்பிடவேண்டும்.
8. பிரச்சனைகளை கடினமான முறையில் எதிர்கொள்ளும்போது அச்சப்படக் கூடாது.
9. தமக்கு கீழே பலரை வைத்துக்கொண்டு வேலைவாங்குவது கூடாது.
10. சிறப்பான குடியிருப்புகளிலேயே வாழவேண்டும் என்று விரும்பக் கூடாது.
11. தம்மை பெரிய ஆளாகவும் காட்டிக்கொண்டு புகழுக்கு அலையக்கூடாது.
12. மகிழ்வூட்டக்கூடிய விசயங்களில் மட்டும் ஈடுபட்டுக்கொண்டு மகிழ்வூட்டாத விசயங்களை மற்றவர்களிடம் தள்ளிவிடக்கூடாது.
13. "ஒவ்வொரு வரும் தமக்காகத்தான் வாழ்வார்கள்", "அப்படி இல்லையெனில் வானமே இடிந்து விழுந்து விடும்", "சுயநலம் கொண்ட விலங்கே மனிதன்", "உலகில் உண்மையிலேயே சுயநலமற்றவர்கள் என்று யாருமில்லை", "அப்படியிருந்தால் அவர்கள் அறிவிலிகளாகவும் முட்டாள்களாகவுமே இருப்பார்கள். என்ற சுரண்டல் வர்க்கங்களின் பிற்போக்கான கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
14. தனது சொந்த நலனையும் தனிநபர் வாதத்தையும் ஏற்றுக்கொண்டு ஆதரிப்பவர் ஒரு முதலாளித்துவ சுயநலவாதியாக மட்டுமே இருக்க முடியும் அவர் ஒருபோதும் கம்யூனிஸ்டாக வளரமுடியாது.
கோட்பாடற்ற பூசல்கள், குழுப் போராட்டங்கள், குறுங்குழு வாதம், குறுகிய துறைவாதம் ஆகிய வடிவங்களில் தன்னை முன்னிறுத்தும் தனிநபர்வாதம் கட்சிக்குள் அவ்வப்போது தலைதூக்குகிறது; கட்சி கட்டுப்பாட்டுக்கு அவமரியாதை செய்வது அதை வேண்டுமென்றே மீறுவது என்ற வடிவங்களில் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. தனிநபர் நலன்களிலிருந்துதான் ஆக மோசமான கோட்பாடற்ற போராட்டங்கள் உருவாகின்றன. குழுப் போராட்டங்களில் ஈடுபடுவோரும் குழுவாதத்தை முன்னிறுத்துவோரும் தமது சொந்த நலன்களை அல்லது ஒரு சிறுபான்மையின் நலன்களை கட்சியினுடைய நலன்களுக்கு மேலாக முன்னிறுத்துகின்றனர். தமது கோட்பாடற்ற போராட்டங்களின்போது அவர்கள் வேண்டுமென்றே கட்சி அமைப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் குழிபறிக்கின்றனர்; குறிப்பிட்ட சிலர் மீது கோட்பாடற்ற போராட்டங்களைத் தொடுக்கின்றனர், வேண்டுமென்றே தாக்குதல்களை நடத்துகின்றனர்; சிலருடன் கோட்பாடற்ற நட்பு பாராட்டுகின்றனர். ஒருவரது தவறை மற்றவர்கள் மூடி மறைக்கின்றனர். ஒருவரை ஒருவர் போற்றிப் புகழப்படுகின்றனர். (சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? லியோஷோசி, பக்கம் - 76, 77)
விளக்கம்:- குட்டிமுதலாளித்துவ தனிவுடமை சிந்தனைமுறையிலிருந்து வருவதுதான் தனிநபர்வாதமாகும். பாட்டாளி வர்க்க சிந்தனைமுறைக்கு நேர்எதிரான சிந்தனைமுறையாகும். தனிநபர்வாதத்தை உயர்த்திப்பிடிப்பவர்கள் கோட்பாடற்று சண்டையிடுவார்கள், கோஷ்டிகட்டி குழுவாகவே செயல்படுவார்கள், குறுங்குழுவாதம், குறுகிய துறைவாதங்களை முன்னிறுத்தி தன்னை முதன்மைப்படுத்திக்கொள்வார்கள். இவர்கள் பொதுவாகவே கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவார்கள். குழுவாதப் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் தன்னுடைய சொந்த நலன்களையும் தனது கோஷ்டியின் நலன்களையும் கருத்தில் கொண்டு கட்சியின் நலனை புறக்கணித்து கட்சியை பிளவுபடுத்தவும் தயங்கமாட்டார்கள். இங்குள்ள சிறிய குழுக்கள் பல குழுக்களாகப் பிளவுபட்டதற்கு தனிநபர் வாதத்தை அடிப்படையாகக் கொண்ட குறுங்குழுவாதிகளே காரணமாகும். இத்தகைய குறுங்குழுவாதிகள் கோட்பாடற்ற முறையில் தோழர்கள் மீது தாக்குதல்கள் நடத்துவார்கள், அதேபோலவே கோட்பாடற்ற முறையில் பாட்டாளிவர்க்கத்துக்கு எதிரான துரோகிகளிடமும் கோட்பாடற்று கூட்டணி அமைக்கின்றனர். இந்த குறுங்குழுவாதிகள் ஒருவரது தவறை மற்றவர்கள் மூடிமறைக்கின்றனர். பாட்டாளி வர்க்க கட்சியின் வளர்ச்சிக்கு திருத்தல்வாதம், கலைப்புவாதம் போன்றவை எப்படி தடையாக உள்ளதோ அதைக்காட்டிலும் மிகவும் மோசமான முறையில் இந்த குறுங்குழுவாதம் தடையாக உள்ளது. ஆகவே ஒவ்வொரு கம்யூனிஸ்டும் குறுங்குழுவாதத்தை எதிர்த்துப் போராடவேண்டும். இப்படிச் சொல்வதால் கம்யூனிசக் குழுக்களே உருவாகக்கூடாது என்பதல்ல. குழுவானது குழுவாகவே நீடிக்கக்கூடாது என்றே நாங்கள் சொல்கிறோம். அதாவது குழுக்கள் ஒன்றிணைந்து ஒன்றுபட்ட கட்சியாக மாறவேண்டும் என்கிறோம். அதற்காகப் பாடுபடுபவர்களே குறுங்குழுவாதத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள் என்று நாம் கருதமுடியும். அத்தகைய குழுக்கள் ஏதாவது இங்கு இருக்கிறதா? அதாவது ஒன்றுபட்ட கட்சியைக் கட்டுவதற்காக திட்டமிட்டு செயல்படக்கூடிய குழு இங்குள்ளதா?
கட்சிக்குள் துறைவாதம் பின்வருமாறு தன்னை முதன்மையாக வெளிப்படுத்திக் கொள்கிறது: முழுமையின் நலன்களை காணத் தவறும் இவர்கள் தமது துறை அல்லது உள்ளூர் நலன்களையே முன்னிறுத்துகின்றனர்; முழு கட்சியின், பிற துறைகளின், பிற பகுதிகளின் நலன்களை இவர்கள் பின்னுக்குத் தள்ளுகின்றனர். அரசியல் ரீதியிலும் சித்தாந்த ரீதியிலும் இது சிறு குழுவாத கண்ணோட்டத்தை ஒத்ததாக காணப்படுகிறது. துறைவாத தவறுகளை இழைக்கின்ற தோழர்கள் அனைவரும் தனிநபர் வாதத்தால் தூண்டப்படுபவர்களாக இருந்தாக வேண்டும் என்ற அவசியமில்லை; தனிநபர்வாத சித்தாந்தத்தைக் கொண்டுள்ளவர்கள் துறைவாத தவறுகளைச் செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். (சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? லியோஷோசி, பக்கம் - 77)
விளக்கம்:- கட்சியிலுள்ள சில தோழர்கள் அவர்கள் செயல்படும் பகுதிகளிலுள்ள பிரச்சனையை முதன்மைப்படுத்தி நாட்டின் பிரச்சனையினை புறக்கணிக்கிறார்கள். அதாவது கோட்பாடாகச் சொல்லவேண்டும் என்றால் பகுதி நலனை முன்னிறுத்தி முழுமையின் நலனை காணத்தவறுகிறார்கள். இவர்கள் அவர்களது உள்ளூர் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சியின் நலனை பின்னுக்குத் தள்ளுகின்றனர். கட்சியின் நலன் அல்லது முழுமையின் நலன்கள் பாதுகாக்கப்படும் போது பகுதி நலன்களும் பாதுகாக்கப்படும் என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இத்தகைய பகுதி நலனை முன்னிறுத்தும் சிந்தனைமுறைதான் தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சனையை முன்னிறுத்தி அனைத்து சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் பிரச்சனையை பின்னுக்குத் தள்ளுவதற்கு காரணமாக இருக்கிறது. இவர்கள் அனைத்து சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும்போது பகுதி தாழ்த்தப்பட்டவர்களின் நலனும் பாதுகாக்கப்படும் என்பதை உணர மறுக்கிறார்கள். இத்தகையவர்கள் அரசியல்ரீதியில் சித்தாந்தரீதியில் குறுங்குழுவாதக் கண்ணோட்டம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இதற்கான வர்க்க அடிப்படை குட்டிமுதலாளித்துவமே ஆகும். தாழ்த்தப்பட்டவர்களின் நலனை முதன்மைப்படுத்துபவர்கள் அனைவரும் குட்டிமுதலாளித்துவ சிந்தனையாளர்கள் என்று சொல்லமுடியாது. அவர்களிலும் நேர்மையானவர்களும் உழைக்கும் வர்க்கப் பாசம் கொண்டவர்களும் உள்ளனர். அவர்களிடத்திலுள்ள உழைக்கும் வர்க்கப் பாசத்தின் காரணமாகவே தாழ்த்தப்பட்டவர்களின் நலன்களைப் பற்றி பேசுகிறார்கள். எனினும் அவர்களிடத்திலுள்ள உழைக்கும் வர்க்கப் பாசத்தை தூண்டி அனைத்து உழைக்கும் மக்களின் நலனுக்காக நாம் பாடுபடவேண்டிய அவசியத்தை உணர்த்தவேண்டும். ஆனால் உழைக்கும் வர்க்கப் பாசமில்லாத குட்டிமுதலாளித்துவ சுயநலவாத சிந்தனையாளர்கள் குறுங்குழுவாதிகளாகவும் சாதிவாத கண்ணோட்டம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இவ்விரு வகையினருக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை நாம் இனம்பிரித்து காணவேண்டும்........ தேன்மொழி
.
முக்கியத் தலைப்பு 2
விவரங்களை இங்கே இடவும்.
தொடர்புடைய கட்டுரைகள்:
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக