ஆயுத போராட்டத்தை மறுப்பதன் பெயரில் புரட்சியைவிட ஆளும் வர்க்கதிடம் மண்டியிடுவதே

 இந்திய கம்யூனிச இயக்கம் ஆரம்பித்த பொழுதிலிருந்து அதன் தத்துவார்த்த நடைமுறையில் உள்ள பிரச்சினையின் காரணமாகவே மார்க்சிய லெனினியம் எனும் புரட்சிகர தத்துவத்தை புரிந்துக் கொள்வதிலும் அதனை நடைமுறை படுத்துவதிலுமே கட்சி கட்டி 28 ஆண்டுகளுக்கு பின்னர்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனக்கான திட்டத்தை வகுக்கிறது என்றால் ரசிய படிப்பினைகளை ஏற்கவில்லை தத்துவ நடைமுறையில் புரிதல் இன்மைதானே? ஆகையால் அதற்கு முன் அந்த கட்சி நடத்திய பல்வேறு வீரம் செறிந்த போராட்டங்கள் எல்லாம் தன்னியல்பு வகைப்பட்டதே. இந்தியாவில் ஆங்காங்கே பண்ணை கொடுமைக்கு எதிராகவும் அன்றைய ஆங்கிலே ஏகாதிபத்தியதிற்கு எதிராகவும் நடந்த போராட்டங்கள் நல்வுள்ளம் கொண்ட போராட்டங்கள் என்றாலும் உழைக்கும் மக்கள் ஆட்சி அதிகாரத்தை பெறுவதற்காக இன்றி குறைந்த பட்ச பகுதி நலன் கொண்ட போராட்டம்தான். இதனை அரசியல் போராட்டமாக வளர்த்தெடுப்பதில் அன்றைய கட்சி தவறியது அவைதான் தெலுங்கான போராட்டதின் இறுதி நமக்கு கொடுக்கும் படிப்பினைகள். ஆளும் வர்க்கத்தை எதிர்ப்பதை விட இரண்டாம் நிலையை எதிர்த்து நடந்த போராட்டங்களே. தெலுங்கான போராட்டத்தின் நீட்சியாகவே நக்சல்பாரி போராட்டத்தை காண வேண்டும். அங்கே திட்டமின்றி எதிரியான பண்ணையார்களிடமிருந்து நிலம் பறிக்கப்பட்டு நிலம் அற்ற விவசாய கூலிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது இங்கோ (நக்சல்பாரி இயக்கம்) திட்டம் இருந்தது நடைமுறையில் முதன்மையான எதிரியைவிட பகுதிவாரி எதிரியை எதிர்த்ததோடு தத்துவ போதாமையால் மார்க்சிய லெனினிய போதனை கட்சிக்கு இன்மையால் இடதுசாரிகளின் பெயரில் இருந்த திருத்தல்வாதிகளை அம்பலப்படுத்தி பொது அரங்கிலிருந்து அப்புறப்படுத்தாமையால் போலிகள் ஆளும் வர்க்கத்துடன் சேர்ந்து மக்களை ஏய்க்க ஏதுவாகி போனது. அதேநேரத்தில் புரட்சி பணியில் இறங்கியவர்கள் எதிரிக்கு எதிராக உழைக்கும் மக்களை ஒன்றிணைபதற்கு பதில் தாங்களே ஆங்காங்கே பகுதி பிரச்சினைக்கு காரணமான பண்ணையார்கள் மற்றும் உழைக்கும் மக்கள் விரோதிகளை கொல்வதை முதன்மை பணியாக கொண்டு எதிருக்கு எதிரான போராட்டத்தில் வெகுசன மக்களை புறகணித்தன் விளைவு இன்றும் ஆங்காங்கே குறுங்குழுக்களாக மாறி விட்டனர். மா-லெ சித்தாந்தத்தை கிரகிக்காமையே ஆம் ரசிய சீன புரட்சிக்கு முன் அங்கு என்ன செய்தனர் என்பதனை முழுமையாக புரிந்துக் கொள்ளாமையும் அரசியல் தத்துவ ரீதியாக வளர்ச்சி பெறாமையும் என்பேன். 


தோழர் துரை.சண்முகம் அவர்களின் முகநூல் பகுதியின் சில பார்ப்போம்.

இந்தியாவில் பல மார்க்சிய லெனினிய குழுக்கள் இருக்கும்போது, மாவோயிஸ்ட் அமைப்பை மட்டும் இந்திய ஆளும் வர்க்கம் குறிவைத்து தாக்குவது ஏன்?
அவர்கள் ஒரு ஆயுதம் தாங்கிய அமைப்பாக செயல்படுவது மட்டும் என்பதாலா?
குறிப்பிட்ட உள்ளூர் பகுதிகளில் ஆளும்வர்கத்தின் அரசியல் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் அமைப்புகள் ஆயுதங்களே இல்லாவிட்டாலும் துடைத்தெறியப்படும் என்பதுதான் அரசியல் தெரிந்தவர்கள் பார்க்க வேண்டிய உண்மை.
தமிழகத்தின் தொடக்க கால வடாற்காடு பகுதிகளில் இப்படிப்பட்ட சவால்களை மக்களை பொதுவில் ஒடுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எதிரான சக்தியாக, அது சிறியதாக இருந்தாலும் உழைக்கும் மக்களோடு ஐக்கியப்பட்டு அவர்களின் தேவைக்கான இயக்கமாக இருந்ததால் கடுமையான அடக்குமுறைகளை சந்தித்தது.
ஆயுதப் போராட்டம் எனும் ஒற்றை இலக்கில்தான் அவர்கள் செயல்பட்டார்கள் என்பதும் அரை உண்மை. வேறு பெயரில் வெகுமக்கள் இயக்கங்களை கட்டியவர்கள் ஆகவும் அவர்கள் தொடர்ந்தார் கள். எந்தப் பெயரில் இயங்கினாலும் மாவோயிஸ்டு என்றால் தடை செய்! என்பதே ஆளும் வர்க்கத்தின் துல்லிய இலக்காக இருக்கிறது.
பிரச்சனை முதலில் செய்யவேண்டியதை இரண்டாவதாக செய்தார்கள்.
அரசியல் போராட்டத்தின் தொடர்ச்சியாக செய்ய வேண்டியதை முதன்மைப் பகுதியாகக் கொண்டதுதான். சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் இன்று வெகுமக்கள் இயக்கமாக செயல்பட்டாலும், ஆளும் வர்க்கத்துடன் சமரசம் காணாத அவர்களின் கருத்தியல் யுத்தம்தான்! அரசு அவர்களை அழித்தொழிப்பதை முதன்மை இலக்காக கொண்டு இருக்கிறது. அரசு வற்புறுத்தும் 'மைய நீரோட்ட பாதைக்கு' அவர்கள் இன்னும் இணங்க மறுப்பது அடிப்படையான அரசியல் காரணமாக அமைகிறது.
மாவோயிஸ்டுகள் மீதான விமர்சனம் அரசியல் ரீதியாக எஞ்சி இருக்கிறதே ஒழிய, ஆளும் வர்க்கத்திடம் சரணடையாத அரசியலையும் உள்ளடக்கி இருக்கிறது.
ஏனென்றால், இந்தியாவின் பல மார்க்சிய லெனினிய குழுக்கள் கருத்தியல் மற்றும் அரசியல் ரீதியாக ஆளும் வர்க்கத்திடம் சரணடைந்து விட்டன. ஆயுதங்களுடன் சரணடைபவர்களை விட ஆபத்தானவர்கள் அரசியல் சித்தாந்த ரீதியாக ஆளும் வர்க்கத்திடம் சரணடைந்து கிடப்பவர்கள்.
ஆயுதங்களுடன் சரணடைந்தவர்கள் சொந்த வாழ்க்கை மற்றும் பிழைப்பு நலன் சார்ந்து ஒதுங்குவது அல்லது எதிர்நிலை சக்தியாக போவது என்றாகி விடுகிறார்கள். இவர்களிடம் தோன்றிய அதே சலிப்பும் விரக்தியும் கொண்ட மனநிலை, மார்க்சியத்திலிருந்து மற்ற சீர்திருத்தவாத தத்துவங்களில் சரணடையும் நபர்களிடமும் விளைந்து கிடக்கிறது.
புறச் சூழலில் இந்த தாக்கத்தையும் தேக்கத்தையும் பார்த்து மாவோயிஸ்டுகள் மட்டும் திருந்த வேண்டும் என்பது போல இவர்கள் தப்பித்துக் கொள்ள பார்க்கிறார்கள்.
உண்மையில் இவர்கள் வரையறுக்கும் சாகசவாதம் என்பதும் இவர்களின் ஆளும்வர்க்க சரணடைவு வாதம் என்பதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.
ஆயுதம் தாங்கிய அமைப்பு என்று மாவோயிஸ்ட்களை ஒடுக்கியது போலவே, அரசியல் சித்தாந்தம் தாங்கிய அமைப்புகளை ஒழிப்பதற்கான அரசியல் யுத்தத்தையும் அது நடத்திக் கொண்டுதான் இருக்கிறது.
இதற்கு பலியானவர்களும் பலர்.
மொத்தத்தில் ஆயுதப் போராட்டத்தால்தான் கெட்டுப் போய்விட்டது என்பது தட்டையான விமர்சனம்.அரசியல் சித்தாந்த போராட்ட யுத்தத்தை தொடர்ந்து நடத்தாத கட்சிகள் தனக்குத்தானே சவக்குழி வெட்டிக் கொள்கின்றன.
பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் பாசிச சமரச சக்திகளுடன் கூட ஒரு ஐக்கிய முன்னணியை கட்டுவதற்கு முனைப்பு காட்டும் போது, மார்க்சிய லெனினிய குழுக்கள் தங்களுக்குள் ஒரு பொது ஐக்கிய முன்னணியை கட்டுவதற்கான அரசியல் சித்தாந்த கருத்து ஒற்றுமையை காண்பதுதான் காலத்தின் தேவையாக இருக்கிறது.
- துரை. சண்முகம்

++++++++++++++++++++++++++++++++++++++++++

நமக்கான படிப்பினை ரசிய சீனப்புரட்சியில் அவர்களின் உத்தியை புரிந்துக் கொள்வதோடு மார்க்சிய லெனினிய தத்துவ அரசியலை புரிந்து செயல்படல் அவசியம் உள்ளது

பி.பி.சி செய்தி அப்படியே கீழே

தெலங்கானாவின் கிராமங்களில், சுத்தியலும் அரிவாளும் பொறிக்கப்பட்ட பழைய நினைவுச் சின்னங்கள் இன்னும் சாலையோரங்களில் இருக்கின்றன.தலித் குடியிருப்புகளில், அம்பேத்கர் சிலைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அருகில், புதிதான சிவாஜி மற்றும் விவேகானந்தர் சிலைகள் பளபளப்பாக மிளிர்ந்து, சித்தாந்த இடத்திற்கு போட்டியிடுகின்றன.

1990களில் இருந்து, அம்பேத்கரின் நீல நிறம் கம்யூனிசத்தின் சிவப்பு நிறத்தை படிப்படியாக மாற்றி வருகிறது. தெலங்கானாவில் சிவாஜி, விவேகானந்தர் சிலைகளின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்துள்ளது, இவை பெரும்பாலும் மீண்டும் எழுச்சி பெற்ற இந்துத்துவ அமைப்புகளால் நிறுவப்பட்டவை.

1990களின் இறுதியில், தெலங்கானாவில் நடந்த ஆயுத மோதல்கள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டன. ஆனால், தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் பகுதியில் இருக்கும் மாவோயிஸ்ட் தலைவர்கள் பெரும்பாலும் தெலுங்கு பேசும் மக்கள் தான்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2026 மார்ச் 31-ஆம் தேதிக்குள் நக்சலிசத்தை ஒழிக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார். இதை அடைய மத்திய ஆயுதப் படைகள் தீவிரமாக செயல்படுகின்றன.

சத்தீஸ்கர் காடுகளில் நடந்த என்கவுன்ட்டர் பற்றிய செய்திகள், மாவோயிஸ்ட் இயக்கம் இறுதிக்கட்டத்தில் இருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.

மாவோயிஸ்டுகளும் இதை உணர்ந்திருக்கலாம். செய்தித் தொடர்பாளர் அபய், “ஆயுதங்களை கைவிட தயாராக இருக்கிறோம்” என்று கடிதம் எழுதியுள்ளார். தலைவரான ரூபேஷும், இயக்கத்தின் எதிர்காலம் குறித்து தெளிவில்லாத நிலையை ஒப்புக்கொண்டுள்ளார்.இதனால், ஆயுதப் போராட்டம் முடிவடைந்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.

தொடக்கம்: நக்சல்பாரி முதல் ஸ்ரீகாகுளம் வரை

1967-ல் மேற்கு வங்க மாநிலத்தின் நக்சல்பாரி என்ற இடத்தில் மாவோயிஸ்ட் கிளர்ச்சி தொடங்கியது. சிலிகுரி பகுதியில், சிபிஐ(எம்)ன் தீவிரப் பிரிவுகள், கடனில் சிக்கிய ஆதிவாசிகள் மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு ஜோதேடர்கள் அல்லது நிலப்பிரபுக்களுக்கு எதிராக ஆதரவு அளித்தது. மே 25 அன்று, ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அம்பு எய்து கொல்லப்பட்டார். அதற்குப் பதிலாக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்த, அதில் எட்டு பெண்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஆயுதப் போராட்டமாக பரவியது. சீன ஊடகங்கள் இதை “இந்தியாவில் ஏற்பட்ட வசந்தத்தின் இடிமுழக்கம்” என்று புகழ்ந்தன.

இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சாரு மஜும்தார் என்ற சிபிஐ(எம்) தலைவர், இந்திய அரசை கவிழ்க்க கெரில்லா போராட்ட வழியை விளக்கும் “எட்டு ஆவணங்கள்” என்ற திட்டத்தை உருவாக்கினார். கனு சன்யால் மற்றும் ஜங்கல் சந்தால் ஆகியோருடன் சேர்ந்து, அவர் நக்சல்பாரி இயக்கத்தை தொடங்கினார். பின்னர் இந்த இயக்கம் ஸ்ரீகாகுளம், தெலங்கானா, பிகார் மற்றும் தண்டகாரண்யம் காடுகள் வரை பரவியது.

அறுபதுகளின் வறட்சி

உள்ளூர் மக்களின் குறைகளை மையமாகக் கொண்டிருந்தாலும், சீனாவின் முன்மாதிரியைப் பின்பற்றி ஆயுதப் புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது எனும் ஒரு பெரிய அரசியல் நோக்கம் அந்த இயக்கத்தின் பின்னால் இருந்தது. சிபிஐ(எம்) கட்சியின் தீவிர ஆதரவாளர்கள், பழங்குடியினரின் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி தங்கள் ஆதரவாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயன்றனர்.

1969-ஆம் ஆண்டில் மத்திய அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையில், “அமைதியின்மையின் முக்கிய காரணம், பழங்குடியினரின் நலன்களை பாதுகாக்க இயற்றப்பட்ட சட்டங்கள் சரியாக அமல்படுத்தப்படாததே. இதை சரிசெய்யாமல் விட்டால், கடும்போக்கு கொண்டவர்களின்
தலைமையில் சென்றுவிட்ட பழங்குடியினரின் நம்பிக்கையைப் பெற முடியாது,” என்று குறிப்பிடப்பட்டது.

வரலாற்றாசிரியர் சுமந்தா பானர்ஜி, 1960களை “பசியால் வாடிய அறுபதுகள்” எனக் குறிப்பிட்டார். அந்தக் காலத்தில் வறட்சி, பொருளாதார நெருக்கடி, பணமதிப்பு குறைப்பு மற்றும் மந்தநிலை ஆகியவை தீவிர சிந்தனைகளுக்கான வளமான நிலத்தை உருவாக்கின. உலகளவில் 1960கள் பல்வேறு சமூக மற்றும் அரசியல் இயக்கங்களின் காலமாக இருந்தது.

ஆயுதம் மற்றும் நாடாளுமன்ற பாதை

நக்சல்பாரி கிளர்ச்சிக்கு முன்னரே ஆயுதப் போராட்டம் குறித்து விவாதம் நடந்தது. ‘தெலங்கானா விவசாயிகள் போராட்ட’ காலத்தில் உருவான “ஆந்திர ஆய்வறிக்கை” 1960களிலும் தொடர்ந்தது. 1951-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) வடிவமைத்த உத்தி சார் செயல் திட்டத்தில், கிராமப்புற கொரில்லா போரையும் நகரங்களில் வேலைநிறுத்தங்களையும் சேர்த்து நடத்த வேண்டும் என்று கூறப்பட்டது.

சிபிஐ(எம்) கட்சியின் இணை நிறுவனர் புச்சலப்பள்ளி சுந்தரய்யா, அவசரநிலையின் போது ஆர்எஸ்எஸுடன் ஒத்துழைத்ததற்கும், 1951ம் ஆண்டின் உத்தி சார் செயல் திட்டத்தில் கூறப்பட்ட ‘ஆயுதப் போராட்டம் மற்றும் ரகசிய பிரிவை உருவாக்குவதில் முன்னேற்றம் இல்லாததற்கும்’ எதிர்ப்பு தெரிவித்து கட்சி பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்தார். சுந்தரய்யா, மகினேனி பசவபுன்னையா, பி.டி. ரணதிவே ஆகியோர் ரகசிய நடவடிக்கைகள் மற்றும் வன்முறை வழியைப் பற்றி ஒரே கருத்தைக் கொண்டிருக்கவில்லை. பின்னர், பசவபுன்னையாவின் தலைமையில் சிபிஐ(எம்) அமைதியான வழியைத் தேர்ந்தெடுத்தது.

1964-ல் சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) இடையே பிளவு ஏற்பட்டது. காரணம், சோவியத் யூனியனை பின்பற்ற வேண்டுமா, சீனாவைப் பின்பற்ற வேண்டுமா என்ற கருத்து வேறுபாடு. ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தவர்கள் ‘கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவை’ (AICCCR) உருவாக்கினர். இது 1969-ல் சிபிஐ(எம்.எல்) என்று மாறியது.

சோவியத் யூனியனில் இருந்து சீனா வரை

1960களின் இறுதியில் சோவியத் யூனியனின் செல்வாக்கு குறைந்தது. அதற்கு முன்னர், 1951-ல் ஸ்டாலினைச் சந்தித்த பிறகு, தெலங்கானா ஆயுதப் போராட்டம் நிறுத்தப்பட்டது என்பது முக்கிய திருப்புமுனையாக இருந்தது. இதே நேரத்தில், 1949-ல் சீனாவில் நடந்த புரட்சி இந்தியாவின் புரட்சி குழுக்களை ஊக்குவித்தது. மாவோ இந்திய புரட்சியாளர்களுக்கான வழிகாட்டியாக மாறினார். சாரு மஜும்தார் கூட, “சீனாவின் தலைவர் எங்கள் தலைவர்” என்று கூறினார்.

கொல்கத்தாவின் பிரசிடென்சி கல்லூரி, நடுத்தர வர்க்க இளைஞர்களால் நிரம்பிய நக்சலைட் இயக்கத்தின் முக்கிய மையமாக இருந்தது. டெல்லியின் செயின்ட் ஸ்டீபன்ஸ் போன்ற உயர்தரக் கல்லூரிகளின் மாணவர்களும் கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளை இயக்கத்தில் சேர்த்தனர். மேற்கு வங்கத்தில் சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) இணைந்திருந்த ஐக்கிய முன்னணி அரசு அமைந்தது. அதேபோல், பின்னர் காங்கிரஸ் அரசு வந்ததும் நிலச் சீர்திருத்தங்கள், கடுமையான காவல்துறை நடவடிக்கைகளின் மூலம் பதிலளித்தது.

1972-க்குள் மாவோயிஸ்ட் இயக்கம் பலவீனமடைந்தது. ஆனால் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில், படித்த இளைஞர்களால் இயக்கம் 1975-ல் அவசரநிலை வரையிலும் தொடர்ந்தது. பின்னர், “இந்த எழுச்சிகளுக்கு சரியான அமைப்பும், மக்கள் ஆதரவும், ராணுவ அறிவும் இல்லை” என்று கானு சன்யால் கூறினார்.

மக்கள் போரின் பிறப்பு மற்றும் எம்.சி.சி

1977 அக்டோபரில், கொண்டப்பள்ளி சீதாராமையா தலைமையில் ‘தீவிர மாணவர் சங்கம்’ மற்றும் ‘தீவிர இளைஞர் கழகம்’ தொடங்கப்பட்டது. 1980 ஏப்ரல் 22 அன்று, லெனினின் பிறந்த நாளன்று, அவரும் அவரது கூட்டாளிகளும் ஆந்திரப் பிரதேசத்தில் CPI(ML) மக்கள் போர் என்ற அமைப்பை உருவாக்கினர். அதே நேரத்தில், பிகாரில் கனாய் சாட்டர்ஜியின் குழு பின்னர் ‘மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம்’ (MCC) என்ற பெயரில் உருவானது.

இரண்டும் நாடாளுமன்ற அரசியலை நிராகரித்து, உடனடியாக ஆயுதப் போராட்டம் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தின. மேலும், ரகசிய அமைப்புகளை கட்டியமைப்பது அவசியம் என்றும் கூறின.

அவர்கள் தலித் மற்றும் ஆதிவாசி சமூகங்களில் வலுவான ஆதரவுத் தளத்தை உருவாக்கினர். கோபட் காந்தி போன்ற படித்த நடுத்தர வர்க்கச் செயற்பாட்டாளர்களும் இதில் ஈர்க்கப்பட்டனர்.

நில மறுபங்கீடு, கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு, வனப் பொருட்களுக்கு நியாயமான விலை, மற்றும் ‘சுரண்டல் வரிகளை’ முடிவுக்குக் கொண்டு வருவது போன்ற கோரிக்கைகளுக்காக, இயக்கம் போராடியது.

தெலங்கானா முதல் தண்டகாரண்யம் வரை

CG Khabar

சீதாராமையா தண்டகாரண்யம் பகுதியில் தளங்களை அமைக்க தனது இயக்கத்தினரை அனுப்பினார். அங்கு மாவோயிஸ்டுகள் நவீன விவசாய முறைகளை கற்றுக்கொடுத்தனர், சுரண்டலுக்கு எதிராகப் போராடினர், ஆதிவாசிகளின் நம்பிக்கையைப் பெற்றனர்.பினாகா பானியின் 'ஜனதனராஜ்யம் தண்டகாரண்யம்' என்ற நூலில், 1980களில் பஸ்தார் பகுதியில் கூலி வேலை, நவீன நெல் சாகுபடி, இரண்டாம் பயிர்கள், மற்றும் சத்தான காய்கறிகள் பற்றிய அறிவு இல்லை என்று குறிப்பிடப்படுகிறது. மாவோயிஸ்டுகள் அப்போது புதிய விவசாய நுட்பங்களை அறிமுகப்படுத்தி, கூட்டுறவுக் குழுக்கள், பள்ளிகள், கிணறுகள், குளங்கள் போன்ற அடிப்படை வசதிகளை உருவாக்கினர்.

தெலங்கானாவின் வாரங்கல் பிராந்திய பொறியியல் கல்லூரி (இப்போது என்ஐடி- NIT) “ரேடிகல் இன்ஜினியரிங் கல்லூரி” என அழைக்கப்பட்டது. இது மாவோயிஸ்ட் இயக்கத்துக்கான ஆட்சேர்ப்பு மையமாக இருந்தது. சிபிஐ(மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் நம்பலா கேசவ ராவ் உள்ளிட்ட பலர் இங்கிருந்து இயக்கத்தில் சேர்ந்தனர்.

1980களில், நிலமற்ற விவசாயிகள் நக்சலைட்களின் தலைமையில் நிலப்பிரபுக்களின் நிலங்களை கைப்பற்றினர். இதனால் அரசாங்கம் பல பகுதிகளை “தொந்தரவு” பகுதிகளாக அறிவித்தது.

நிஜாமின் ஆட்சிக்கு பிறகும் தெலங்கானாவில் நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் நீடித்தது. கொத்தடிமை, பெத்தம்தாரி முறை, வன்முறை, வேலைவாய்ப்பு பற்றாக்குறை ஆகியவை மக்களிடையே விரக்தியை ஏற்படுத்தின. இதுவே “ஆங்கிரி யங் மேன்” (கோபமுள்ள இளைஞன்) என்ற உருவகத்தை கற்பனையிலும் நிஜத்திலும் உருவாக்கியது.ஒரு கொடூரமான நிலப்பிரபுவின் கீழ் சுரண்டப்பட்ட மக்களால் நிரம்பிய கிராமங்கள், ஆயுதம் தாங்கிய புரட்சிக்கான வளமான நிலமாக அமைந்தன.

நிலப்பிரபுக்களின் தோட்டங்களை ஆக்கிரமித்து, நிலமற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நிலப் போராட்டங்கள் மூலம் நக்சலைட்டுகளின் செல்வாக்கு பரவியது. ஆனால் அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் பெரும்பாலும் தரிசாகவே இருந்தன. காரணம், அவை சட்டவிரோதமானவை எனக் கருதி, நிலமற்றவர்கள் அவற்றில் விவசாயம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை.

நக்சலைட்டுகள் ஒரு அழுத்தக் குழுவாகச் செயல்பட்டதன் மூலம், ஆதிவாசிகள் மற்றும் தலித்துகளுக்குப் பயனளிக்கும் முற்போக்கான சட்டங்களை முன்வைக்க முடிந்தது என்று சமூக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞரும், முன்னாள் நக்சல் ஆதரவாளருமான கே. பாலகோபால், “‘பீகர்’ (கொத்தடிமை) ஒழிப்பு மற்றும் குறைந்தபட்ச ஊதியத்திற்கு நெருக்கமான சம்பளம் வழங்கப்படுதல் ஆகிய இரண்டு மாற்றங்கள் மாவோயிஸ்ட்களின் அழுத்தத்தால் நிகழ்ந்தவை,” என்று குறிப்பிட்டார்.

படிப்படியான மாற்றம்

சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நடந்த அரசியல் மாற்றங்களால், மார்க்சியம் தனது கவர்ச்சியை இழந்தது. ஒரு சித்தாந்தமாக அது கேள்விக்குறியாக மாறியது. 1990களில் உலகமயமாக்கல் இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார அமைப்பை மாற்றியது. ஆந்திரப் பிரதேசத்தில், ஐடி வளர்ச்சி, ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் கட்டணத்தைத் திருப்பிச் செலுத்தும் திட்டம், விரிவடைந்த நலத்திட்டங்கள் ஆகியவை கிராமப்புற இளைஞர்களுக்கு புதிய கனவுகளை உருவாக்கின. ஒருகாலத்தில் நக்சலைட் ஆட்சேர்ப்புக்கான முக்கிய இடமாக இருந்த சமூக நல விடுதிகள், கல்வி பெரும்பாலும் தனியார்மயமாக மாறியதால், தங்களது தாக்கத்தை இழந்தன. தேசிய அளவில் வறுமை 1977-இல் 59.07% இருந்தது. 2022-இல் அது 5.25% ஆகக் குறைந்தது (உலக வங்கி).

1960களின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட பசுமைப் புரட்சி, 1980களின் இறுதியில் இந்தியாவை உணவுப் பற்றாக்குறையிலிருந்து மீட்டது (FAO).

இயக்கத்திற்கு இருந்த அறிவுசார் ஆதரவும் காலப்போக்கில் குறைந்தது. “நக்சலைட் இயக்கத்தின் நாற்பது ஆண்டுகளைப் பார்த்தால், அவர்கள் தடுத்து நிறுத்திய முக்கியமான கொள்கை முடிவுகள் மிகக் குறைவாகவே உள்ளன”என 2009 இல் மனித உரிமை ஆர்வலர் கே. பாலகோபால் எழுதினார். ஜனநாயகத்தில் ஆயுதப் போராட்டம் தேவையற்றது என நடுத்தர வர்க்கம் விலகியது.

மாவோயிஸ்டுகள் மீதான என்கவுன்ட்டர்கள், அவை போலியானவையா அல்லது உண்மையானவையா என்ற விவாதம் மங்கிவிட்டது. சமூகத்தின் பார்வையில், அவர்களின் மரணம் பெரிய பொருட்டல்லாத ஒன்றாகவே மாறிவிட்டது.

அடையாள இயக்கங்களும் அம்பேத்கரும்

1990களில், தலித், பெண்ணியம் மற்றும் இலக்கிய இயக்கங்கள் மாவோயிஸ்ட் இயக்கத்திலிருந்து தனியாக வளரத் தொடங்கின. 1990-இல் பி.ஆர். அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதன் பின்னர், ஒருகாலத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதரவுத் தளமாக இருந்த தலித் பகுதிகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றத் தொடங்கின. மண்டல் கமிஷன் அறிக்கை வெளியானதும், இந்த மாற்றம் வேகமாக நடந்தது. நகர்ப்புற நடுத்தர வர்க்கம், ஜனநாயகத்தில் ஆயுதப் போராட்டம் தேவையற்றது எனக் கருதி, மாவோயிஸ்ட் இயக்கத்திலிருந்து விலகியது.

பிபிசியுடனான தனது சமீபத்திய பேட்டியில், கோபட் காந்தி நக்சலைட் இயக்கத்தின் தோற்றம் மற்றும் தோல்வி குறித்து வெளிப்படையாகப் பேசினார்.

நக்சலைட் இயக்கம் தனது இலக்குகளை அடைய முடியாமல் போனதற்கு, இயக்கத்துக்குள் இருந்த பலவீனங்கள் மட்டுமல்ல, அரசின் மிகப்பெரிய வலிமையும் காரணம் என்று அவர் தெரிவித்தார்.

இந்திய அரசின் ஆற்றலுடன் சேர்த்து, சாதி அடுக்குகள், சமூகப் பிளவுகள், ஆதிவாசிகளின் தனித்துவமான சவால்கள் ஆகியவை நக்சலைட் இயக்கத்துக்கு பெரும் தடைகளாக இருந்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.

நக்சலைட் இயக்கத்தால் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளின் உண்மைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளவோ அல்லது தீர்க்கவோ முடியவில்லை. ஆனால், மற்ற அரசியல் இயக்கங்களை விட இந்த இயக்கம் அவற்றை அதிகமாக எதிர்கொண்டது என்று அவர் கருதுகிறார்.

அதேபோல், சாதியைப் புறக்கணித்தது இயக்கத்தின் பார்வையில் மிகப்பெரிய குறையாக இருந்தது. இது விளிம்பு நிலை மக்களை ஒருங்கிணைத்து அர்த்தமுள்ள போராட்டத்தை உருவாக்கும் திறனை பலவீனப்படுத்தியது என்ற கருத்தையும் கோபட் காந்தி வெளிப்படுத்துகிறார்.

2004 அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் சிபிஐ (மாவோயிஸ்ட்)

2004-இல், மக்கள் போர் (People's War) மற்றும் MCC (மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம்) இணைந்து சிபிஐ(மாவோயிஸ்ட்) என்ற அமைப்பை உருவாக்கினர். அதே ஆண்டு அக்டோபரில், ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். மாவோயிஸ்ட் தலைவர்கள் அரசு விருந்தினர்களாக தங்க வைக்கப்பட்டனர். ஆனால், இருபுறமும் இந்த பேச்சுவார்த்தைகளை தங்கள் நலனுக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததால், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

மாவோயிஸ்டுகள் பொதுமக்களின் ஆதரவை இழந்ததால், அவர்கள் முன்வைத்த சமூக மற்றும் பொருளாதார கோரிக்கைகள் பொதுமக்கள் உரையாடலில் முக்கியத்துவத்தை இழந்தன.

அரசு, மாவோயிஸ்டுகளை சட்ட ஒழுங்கு பிரச்னையாகவே பார்க்கத் தொடங்கியது. “நகர்ப்புற நக்சல்கள்” (Urban Naxals) என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. நகரங்களில் இருந்த அவர்களின் தொடர்புகள் சிதைக்கப்பட்டன. மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு அனுதாபம் காட்டிய பல அறிவுசார் நபர்கள் தற்போது சிறையில் உள்ளனர். சிலர் கடுமையான குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கின்றனர்.


ராணுவமயமாக்கல் மற்றும் சரிவு

2000-க்கு பிறகு, மாநில அரசு ட்ரோன்கள், நவீன ஆயுதங்கள் மற்றும் ஆந்திராவின் கிரேஹவுண்ட்ஸ் போன்ற சிறப்பு படைகளால் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டதாக மாறியது. சத்தீஸ்கரில், ஆதிவாசிகள் தலைமையிலான மாவட்ட ரிசர்வ் காவலர் (DRG) முக்கியப்படையாக உருவானது.

2005–2011 காலத்தில், மாவோயிஸ்டுகளை வெளியேற்ற ‘சல்வா ஜூடும்’ என்ற இயக்கம் நடத்தப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் அதை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவித்தது. அதன் பல உறுப்பினர்கள் பின்னர் DRG-யில் சேர்ந்தனர். நலத்திட்டங்கள், சாலைகள், மற்றும் பழங்குடியின மக்களிடையே ஏற்பட்ட அரசியல் பிளவுகள் மாவோயிஸ்டுகளின் ஆதரவுத் தளங்களை சிதைத்தன.

2000 முதல் 2025 வரை, மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடைய வன்முறையில் மொத்தம் 12,041, பேர் உயிரிழந்தனர். இதில் 4,944 மாவோயிஸ்டுகள், 2,717 பாதுகாப்புப் பணியாளர்கள், 4,128 பொதுமக்கள் அடங்குவர். இதில் அடையாளம் தெரியாத நபர்கள் 252. (SATP).

ரொட்டி, கபடா அவுர் மகான்' முதல் 'ஜிந்தகி நா மிலேகி டோபரா' வரை

இந்த இயக்கம் பந்தினி (1963) போன்ற வறுமையை பிரதிபலித்த சினிமாக்களில் தோன்றியது. ஆனால் ஜிந்தகி நா மிலேகி டோபரா (2011) போன்ற நடுத்தர வர்க்கத்தின் கனவுகளை பிரதிபலித்த படங்கள் வந்தபோது, மாவோயிஸ்டுகள் மக்கள் மனதில் இடம் பிடிக்க போராடினர்.

மிகவும் பின்தங்கிய பகுதிகளில் தங்களை மட்டுப்படுத்திக் கொண்டதால், நக்சலைட்டுகள் தங்களைத் தாங்களே ஒதுக்கிக்கொண்டனர். வெளி உலகத்துடனான அவர்களின் உறவு இப்போது கிட்டத்தட்ட அழிந்து விட்டது. இந்தியா நகரமயமாகி வரும் நிலையில், அவர்கள் அடர்த்தியான காடுகளுக்குள் மட்டுமே இருக்கின்றனர்.

“இன்று… இது பெரும்பாலும் மிகவும் பின்தங்கிய வனப்பகுதிகளில் மட்டுமே உள்ளது. கிராமப்புறங்களில் கூட குறைவாகவே உள்ளது. நகரங்கள் பற்றி பேசவே வேண்டாம்” என்று கோபட் காந்தி ஏற்கெனவே கூறியிருந்தார்.

லெனின், மாவோ, நேபாளத்தின் பிரசண்டா ஆகியோரின் புரட்சிகள் தேசியவாத உணர்வுகளை கொண்டிருந்தன. ஆனால் இந்திய மாவோயிஸ்டுகளுக்கு அந்த ஒன்றிணைக்கும் பிம்பம் இல்லை. ஜனநாயகத்தில் சட்ட வழிகள் உள்ள நிலையில், ஆயுதப் புரட்சி பலருக்கு காலத்துக்கு ஏற்பில்லாத ஒன்றாகவே தெரிந்தது.

முடிவுரை

மாவோயிசத்தின் கடைசி போராளிகள் இப்போது தங்கள் இருப்புக்காகப் போராடி வருகின்றனர். அவர்கள் மீண்டும் சமூகத்தில் கலந்து வாழ அரசாங்கம் அனுமதிக்குமா, அல்லது முழுமையாக அழிக்க முயற்சிக்குமா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. 'வசந்தத்தின் இடிமுழக்கம் முதல்' இன்று மங்கும் ஒரு எதிரொலியாக மாறியுள்ள நக்சலைட்கள் பற்றிய கதை, இந்தியாவின் மாறிவரும் அரசியல்–பொருளாதார சூழலைப் பற்றியது மட்டுமல்ல; அதை மாற்ற ஆயுதம் எடுத்தவர்களின் பயணத்தையும் பிரதிபலிக்கிறது.

Credits:

கட்டுரை: ஜி.எஸ்.ராமமோகன்
விளக்கம் மற்றும் வடிவமைப்பு: புனித் பர்னாலா, சேத்தன் சிங், வாசிஃப் கான்
தயாரிப்பு: வாசிஃப் கான்
புகைப்படம்: கெட்டி, சிஜி கபார்








No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்