NGOகள் யார் அறிவோம்!?

 மில்லியன் கணக்கில் பணத்தை வாரி இறைத்துக் கொண்டு தன்னார்வ உதவி நிறுவனங்கள் அல்லது அரசு சாரா அமைப்புக்கள் (NGO) மூன்றாம் உலக நாடுகளில் கோரத் தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றன. வறிய நாடுகளின் வளர்ச்சியைச் சிதைத்து அந்நாடுகளைத் தமது கட்டுபாட்டுக்கு உட்படுத்தும் ஒரே நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்ட NGO என்ற கருத்தமைப்பும் அதன் செயற்பாடுகளும் மொத்த மனித குலத்தையும் பயங்கர அழிவிற்குள் இழுத்துச் செல்கின்றன. சிறிய பொருளாதார (Micro Finance) உதவிகள், மனித உரிமைச் செயற்பாடுகள், ஜனநாயகம், பெண்ணியம், தலித்தியம் என்ற இன்னோரன்ன தலையங்கங்களின் கீழ் வறிய நாடுகளைத் தமது அடிமைகளாக மாற்ற விளையும் இவ்வமைப்புக்களின் செயற்பாடுகள் உலகின் சந்து பொந்துகளெல்லாம் வியாபித்திருக்கின்றன.

அரசு சாரா’ இவ்வமைப்புக்கள் சமூக, அரசியல், விஞ்ஞான, மத மற்றும் சுற்றுச் சூழல் விவகாரங்களில் சர்வதேச சக்திகளாகச் செயற்படுகின்றன. இவ்வாறான அரசு சாரா அமைப்புக்கள் (NGO) மக்கள் அபிப்பிராயங்களையும் எண்ணங்களையும் மாற்றியமைப்பதில் மிகப்பெரும் பாத்திரத்தை வகிக்கின்றன’. 

நிதி வழங்கலில் உலகமய ஆதரங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ள இத் தன்னார்வ நிறுவவங்கள் ஏகாதிபத்திய நட்பு அரசுகளை உள் நாடுகளில் எதிர்ப்பின்றி உருவாக்குவதில் பிரதான பாத்திரத்தை வகித்திருக்கின்றன. அடையாள அரசியல் என்று விச வித்திலிருந்து விருட்சமாக எழுந்து உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கு கோட்பாட்டு அடிப்படையை வழங்குவது பின் நவீனத்துவம் என்ற சமூகவிரோத தத்துவமாகும்.

சந்தை மூலதனச் சுரண்டலுக்கும் சர்வாதிகார ஆட்சி முறைமைக்கும் இடையே ஒரு மூன்றாவது பாதையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறுகின்ற இத் தன்னார்வ நிறுவனங்கள் அரச சாரா நிறுவனங்கள் என்று பெயர் சூட்டிக்கொண்டன. ஒரு போதும் அரசை எதிர்க்கும் நிறுவனங்களாகத் தம்மை அறிமுகப்படுத்தாத இத் தன்னார்வ நிறுவனங்களின் அடிப்படை நோக்கம் சந்தையையும் மூலதனச் சுரண்டலையும் எதிர்மறையில் வலுப்ப்படுத்தலே ஆகும்.

அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்றப் பிழைப்புவாதிகளே தங்களை கம்யூனிஸ்டுகள் என்றுக் கூறிக் கொள்ளுமளவுக்கு கம்யூனிஸ்டுகளின் போராட்டமும், அர்ப்பணிப்பும், தியாகமும் மறுக்க முடியாதது. இன்று சாதிவெறியை பிழைப்பாக கொண்டுள்ள இராமதாசு கூட அன்று கட்சி தொடங்கிய பொழுது நானும் நக்சலைட்டுதான் என்று கூறுமளவுக்கு கம்யூனிஸ்டுகள் புரட்சிகரப் பாத்திரமாற்றினார்கள். கம்யூனிஸ்டுகள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் கூட கம்யூனிசத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல்தான் இருந்தனர். பாசிசம் தோன்றிய காலம் ஆகட்டும் இன்றைய மதவாத ஆட்சியிலும் தங்களின் வரலாற்று பாத்திரம் முற்போக்கானதாக காட்டுவதற்கு பிற்போக்கான சில நிகழ்வுகளை தங்களுக்கானதாக காண்பிக்க முயல்வர். ஆளும்வர்க்கத்தின் உழைக்கும் மக்கள் விரோத செயல்களை மூடிமறைக்க கருத்தியல் தளத்தை உருவாக்கி தந்தவர்கள்தான் பின்நவீனத்துவவாதிகள் என்றால் நடைமுறையில் அவர்களுக்கு வழிகாட்டியவர்கள்தான் அரசு சாரா நிறுவனங்களும் அதன் செயல்பாடுகளும் எனலாம். அதனை விரிவாக ஆராய்வோம்.

இவர்களே ஏகாதிபத்திய கலாச்சாரத்தின் பாதிப்புக்கு உள்ளான புதிய இடது கருத்துக்களை தமிழகத்தில் பரப்பி மார்க்சியத்தை நோக்கி வரும் இளைஞர்களை குழப்பும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். நகர்ப்புறத்து படித்த இளைஞர்களே இவர்களது தளமாக அமைகின்றனர். ஏகாதிபத்திய - நிலப்பிரபுத்து கலாச்சாரத்தை முரனற்ற விதத்தில் எதிர்க்கும் வல்லமை படைத்த மார்க்சியத்தைக் குழப்பும் பணியில் ஈடுபட்டுள்ள இப்போக்கு ஏகாதிபத்திய கலாச்சாரப் போக்காகும். இதைத் தத்துவத்துறையின் மூலம் எதிர்ப்பது நமது பணியாகும். இத்தகைய புதிய இடதுப் போக்கான ஏகாதிபத்திய கலாச்சாரப் போக்கை இங்குள்ள மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்திய சார்பு நிறுவனங்கள் பலவாறு ஊக்கம் அளிக்கின்றன.

உலக மக்களின் விடுதலைக்குரிய தத்துவமான மார்க்சியத்தின் கருத்துக்கள் மற்றும் மார்க்சிய பதப்பிரயோகங்களைக் (மார்க்சிய சொற்களை) கொண்டே குழப்பப்பட்டன. இது மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வெற்றி அளித்தது. இந்த முன்அனுபவத்தை மூன்றாம் உலக நாடுகளிலும் தேவைப்படும் பொழுதெல்லாம் மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள் செயல்படுத்துகின்றன. அங்கும், அதாவது மூன்றாம் உலக நாடுகளிலும்  இத்தகைய ஏகாதிபத்தியக் கலாச்சாரத் தன்மை கொண்ட "புதிய இடதுக்" கருத்துக்கள் மார்க்சியப் போர்வையில் பரப்பப்படுகின்றன. இதற்கு தமிழகமும் விதிவிலக்கு இல்லை.

தற்போது பல ஏகாதிபத்தியங்கள் இந்தியாவில் தங்களது சுரண்டலை நடத்துவதைப் பார்க்கிறோம். இந்த ஏகாதிபத்தியங்கள் அவர்களது சுரண்டலை நடத்துவதற்கு தடையாக இங்கே மார்க்சிய லெனினிய தத்துவமானது உள்ளது. இந்த தத்துவம் உழைக்கும் மக்களிடம் சென்றால் இந்த ஏகாதிபத்தியவாதிகளின் சுரண்டலுக்கு நெருக்கடி ஏற்படும்.

ஆகவே இந்த ஏகாதிபத்தியவாதிகள் இங்குள்ள பெருமுதலாளிகளுடனும் இந்த அரசோடும் கூட்டு சேர்ந்துகொண்டு இங்குள்ள பாட்டாளி வர்க்க அமைப்புகளில் செயல்படும் பலவீனமானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆசைவார்த்தை காட்டி ஏகாதிபத்தியவாதிகளுக்கு அதாவது வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்பவர்களாக மாற்றி அவர்கள் மூலம் மார்க்சியத்தை திருத்தியும், மார்க்சியத்தை குழப்பியும் பிரச்சாரம் செய்து இங்கு லெனினது வழிகாட்டலில் உருவான போல்ஷ்விக் கட்சி போன்ற ஒரு கட்சி உருவாகிவிடாமல் சதிவேலைகளில் ஈடுபட்டு தடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த ஏகாதிபத்தியவாதிகள் அவர்களது முயற்சியில் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்த ஏகாதிபத்திய எடுபிடிகள் அனைத்து மார்க்சிய லெனினிய கம்யூனிச அமைப்புக்குள்ளும் ஊடுருவி செல்வாக்கு பெற்றுள்ளார்கள். அதன் காரணமாக இங்கு எந்தக் கட்சியும் லெனினியக் கட்சியாக இல்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எந்த அமைப்பின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எல்லாவிதமான அமைப்பும் பிளவுபட்டு ஒற்றுமை இல்லாமல் இருப்பதே இதற்கு சான்றாகும்.

மூன்றாம் உலக நாடுகளில் காணப்படும் இத்தகைய எதிர்ப்புரட்சிகரசக்திகளின் செயல்பாடுகளுக்கு தமிழகம் விதிவிலக்காக இல்லை.

அமெரிக்க ஏகாதிபத்திய சார்புத் தன்மையிலான அல்லது அதன் மறைமுக மேலாதிக்கத் தன்மையிலான தன்னார்வக் குழுக்கள் தமிழகத்தில் செயல்படும் விதம் குறித்து அவை மேற்கு ஏகாதிபத்தியகலாச்சாரத்தைப் பரப்பும் தளங்களாக உள்ள தன்மை குறித்தும் காணலாம்.

முழுமையும் விரைவில் நூல் வடிவில் இணையத்தில் பகிர்வோம் தோழர்களே...




No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்