புதிய இடது போக்குகள், மற்றும் தன்னார்வக் குழுக்கள் பற்றி தோழர் கோ.கேசவன் (இலக்கு 82 கட்டுரை)

 

புதிய இடது போக்குகள், மற்றும் தன்னார்வக் குழுக்கள் பற்றி தோழர் கோ.கேசவன்

தோழர் கோ கேசவன் அவர்கள் மிகச்சிறந்த மார்க்சிய ஆய்வாளர் மார்க்சியத்தை பிறருக்கு கற்றுக் கொடுக்கும் சிறந்த ஆசிரியர் ஆவார். அவர் குறைவான காலங்களே வாழ்ந்தார் ஆனால் மிக நிறைவான மார்க்சிய அடிப்படையிலான ஆய்வுகளை அவர் செய்து அதை ஆவணமாக்கி வெளியிட்டுள்ளார். அவரது ஆய்வுகளை அவரது கருத்துக்களை அவர் சார்ந்து இருந்த ஒரு மார்க்சிய லெனினிய அமைப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை, அவரது கருத்துக்கள் அமைப்புக்குள் சென்றால் அமைப்பில் உள்ள தோழர்கள் தோழர் கேசவன் மீது மிகுந்த மரியாதை கொள்வார்கள், அதன் காரணமாக அந்த அமைப்பின் தலைவருக்கு சூட்டப்பட்டுள்ள கிரீடம் தகுதியற்று போய்விடும், தலைவருக்கு விரும்புகின்ற மரியாதை கிடைக்காது என்பதற்காகவே தோழர் கேசவன் அவர்களது எழுத்துக்கள் ஆய்வுகள் புறக்கணிக்கப்பட்டது. அவரது ஆய்வுகளில் புதிய இடது போக்குகள், தன்னார்வ குழுக்கள் அதாவது தொண்டு நிறுவனங்கள் பற்றி அவர் சிறப்பாக ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார். அந்தக் கட்டுரைகள் தற்போதும், நாம் படித்து புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இதனை உணர்ந்த இலக்கு பத்திரிக்கை ஆசிரியர் குழு அவரது கட்டுரையை மக்களுக்கு சமர்ப்பிக்கிறது.

புதிய இடது போக்குகள், நவீன மார்க்சியம், புதிய இடது என்ற பெயரில், மார்க்சியத்தை ஏகாதிபத்திய கலாச்சாரம் சிதைக்க முயல்கிறது.

இன்றைய சமூகம் மாறுதலுக்கு தயாராகி கொண்டு இருக்கிறது. பல்வேறு அமைப்புகளில் இருந்து ஏமாற்றப்பட்டு சலிப்புற்ற மக்கள் இன்றைக்கு புரட்சிகர அமைப்புகளின் தேவையை உணர்ந்து, அவற்றை நாடுகின்றனர். சமூக மாற்றத்தை நேசிக்கிறவர்கள் கலாச்சாரத் தளத்தில் ஏகாதிபத்திய கலாச்சாரத்தையும் நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தையும் எதிர்க்க வேண்டும். கலாச்சாரத் தளத்தில் ஏகாதிபத்திய, நிலப்பரத்துவ எதிர்ப்புப் போராட்டத்திற்கு தலைமை தாங்க, ஏகாதிபத்தியத்தோடும் நிலப்பிரப்புத்துவத்தோடும் ஏதேனும் ஒரு விதத்தில் தொடர்பு கொண்ட தத்துவங்களால் இயலாது. அது எதிர் விளைவுகளையே உண்டுபண்ணும். இப்போராட்டத்தில் பல்வேறு ஜனநாயக சக்திகள் பெரும் பங்கு கொண்டாலும் கூட புரட்சிகர தத்துவம் தலைமை தாங்கினாலன்றி இப்போராட்டம் முழுமை பெறாது.. இத்தகைய புரட்சிகரத் தத்துவமாக மார்க்சிய லெனினியம் உள்ளது. மார்க்சிய லெனினிய தத்துவ வழிகாட்டலின்றி ஏகாதிபத்திய நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தை எதிர்க்க இயலாது. காலம் உணர்த்தும் இந்த உண்மையை ஒருவாறு புரிந்து கொண்டு இன்றைய நிலையை எதிர்கொள்ள இளைஞர்கள் மார்க்சியத்தை கற்றுக் கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் தயாராக உள்ளனர். இது இறுதியில் ஏகாதிபத்திய நிலப்பிரப்புத்துவ கலாச்சாரத்தை வெற்றி கொள்வதில் முடியும். (நமது இலக்கு, கோ.கேசவன், பக்கம் - 10.)

விளக்கம்:- ஒரு காலத்தில் தமிழகத்தில் செயல்பட்டுக்கொண்டு இருந்த இடதுசாரி அமைப்பின் மற்றும் முதலாளித்துவ அமைப்பின்  தலைவர்களால் ஏமாற்றப்பட்டுக்கொண்டு இருந்த மக்கள் அந்த அமைப்புகளிலிருந்து வெளியேறி புரட்சிகரமான அமைப்புகள் மார்க்சிய லெனினிய அமைப்புகள்தான் என்று கருதி அந்த அமைப்புகளில் இணைந்து செயல்பட முன்வந்தனர். கலாச்சாரத் தளத்திலும் சித்தாந்தத் தளத்திலும் ஒவ்வொரு கம்யூனிஸ்டும் ஏகாதிபத்திய மற்றும் நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தை எதிர்க்க வேண்டும். அதேபோலவே ஏகாதிபத்திய மற்றும் நிலப்பிரபுத்துவ சித்தாந்தம் மற்றும் சிந்தனைமுறையை எதிர்த்துப் போராட வேண்டும். இந்த நிலையில் ஏகாதிபத்தியத்தியத்தோடும் இங்குள்ள பெருமுதலாளிகளோடும், நிலப்பிரபுத்துவ பண்ணையார்களாகிய கிராமப்புற ஆதிக்க சக்திகளோடும் தொடர்பு வைத்திருக்கும் அவர்களுக்காகவே பாடுபடும் அரசியல் சக்திகளோடு உறவுகொண்டும் அவர்களின் கொள்கை மற்றும் அரசியலை ஏற்றுக்கொண்டு செயல்படுவதன் மூலம் ஏகாதிபத்திய மற்றும் நிலப்பிரபுத்துவ கருத்துக்களையும் அதன் ஆதிக்கத்தையும் நாம் எதிர்த்துப் போராட முடியாது. அப்படி போராடுவது நமக்கு எதிர்விளைவையே தரும். ஆகவே ஏகாதிபத்தியத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்த நமது போராட்டத்துக்கு மார்க்சிய லெனினியம் மட்டுமே ஒரே தத்துவ வழிகாட்டுதலாக இருக்க முடியும். இந்த உண்மையை உணர்ந்துகொண்ட இளைஞர்கள் மார்க்சியத்தை கற்றுக்கொள்ளவும், அதனை ஏற்றுக்கொண்டு செயல்படவும் முன்வந்தனர். ஆனால் பல குழுக்களாகப் பிளவுபட்டிருந்த மார்க்சிய லெனினியக் குழுக்களிலுள்ள தலைவர்கள் அமைப்பில் இணைந்த இளைஞர்களுக்கு மார்க்சியத்தின் அடிப்படைகளை கற்றுக்கொடுக்க பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள். இதன் காரணமாக திருத்தல்வாத அமைப்பிலும் மார்க்சிய லெனினியக் குழுக்களிலும் உள்ள தோழர்கள் மார்க்சியத்தின் அடிப்படைகளை புரிந்துகொள்ளவில்லை. இந்த அமைப்புகளிலெல்லாம் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு கடைபிடிப்பதே இல்லை. அதிகார மையம் என்ன உத்தரவிடுகிறதோ அதனை செயல்படுத்த வேண்டியதுதான் ஊழியர்களின் கடமையாகும். தலைவர்களை யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என்ற நிலையே உள்ளது. இதன் காரணமாக மார்க்சிய லெனினியக் குழுக்களின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். இந்தச் சூழலில் மார்க்சிய லெனினியக் குழுக்கள் மேலும் மேலும் பிளவுண்டு சிறு குழுக்களாக மாறிக்கொண்டு இருக்கும் போது சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகளின் தலைவர்கள் தம்முடைய கட்சிதான் பிளவுபடாமல் பெரிய கட்சியாக நீடிக்கிறது என்றும் இந்தக் கட்சியை எதிர்த்து குறைசொல்பவர்கள் எல்லோரும் துரோகிகள் என்ற கருத்தை அணிகளிடம் பரப்பி அவர்களது அமைப்பை பாதுகாத்துக்கொள்ள முயல்கிறார்கள். எனினும் இந்தத் தலைவர்கள் செய்யும் தவறுகளை எதிர்த்துப் போராட முடியாதவர்கள் இந்தக் கட்சியிலிருந்து வெளியேறி திமுக, அதிமுக போன்ற பிற்போக்கு முதலாளித்துவ கட்சியில் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நிலையை மாற்றுவதற்கு ஒரே வழி கட்சியிலுள்ளவர்களுக்கு மார்க்சியத்தின் அடிப்படைகளை போதித்து சித்தாந்த பலமுள்ளவர்களாக மாற்றுவதே முதன்மையான பணியாகும். இன்றைய சூழல் தொடர்ந்து நீடித்தால் பாசிச கட்சியின் வளர்ச்சியை கம்யூனிஸ்டுகளால் தடுத்து நிறுத்த முடியாது. பாசிசக் கொள்கைகளை முறியடிக்கும் வலிமை மார்க்சிய லெனினியத்துக்கு மட்டுமே உள்ளது. வரலாற்றில் பாசிசத்தை வீழ்த்தியது மார்க்சிய லெனினியமே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே கம்யூனிசத்தை நேசிப்பவர்கள் கட்சித் தலைவர்களின் மீது நம்பிக்கை கொள்வதைக் காட்டிலும் மார்க்சிய ஆசான்களது போதனைகளின் மீது நம்பிக்கை வைத்து அதனை கற்று பின்பற்ற வேண்டும்.

உலக வரலாற்றை காணும்போது ஏகாதிபத்தியம் மார்க்சியத்தை இரண்டு விதங்களில் எதிர்கொண்டது. ஒன்று வெளிப்படையாகவே எதிர்ப்பது, இரண்டாவது மார்க்சியத்தைத் திரித்து, குழப்பி, அதன் சாரத்தை உறிஞ்சி எடுத்து அதைப் புரட்டுவது. இந்த இரண்டாம் வகையின் வடிவங்களாகவே நவீன மார்க்சியம் (New Marxism), புதிய இடது (New Left) என்பவை உள்ளன. மார்க்சியத்தை தத்துவத் துறையில் குழப்பும் நோக்கம் கொண்டுள்ள இவை மார்க்சியத்தை நோக்கி வரும் இளைஞர்களைச் சலிப்படையச் செய்வதிலும் தவறாக வழிகாட்டுதலிலும் கை சுடாத புரட்சி நடைமுறையில் ஈடுபடுதலிலும் முடிகின்றது.  (நமது இலக்கு, கோ.கேசவன், பக்கம் - 10, 11.)

விளக்கம்:- உலக வரலாற்றை நாம் பார்க்கும் பொழுது, தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராக செயல்படும் முதலாளிகள் மற்றும்  ஏகாதிபத்தியவாதிகள், தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் மார்க்சியத்தை இரண்டு வழிமுறையில் எதிர்ப்பதை நாம் பார்க்கிறோம். ஒன்று வெளிப்படையாகவே மார்க்சியம் மக்களுக்கு எதிரானது என்று அப்பட்டமாகவும் வெளிப்படையாகவும் சொல்லி எதிர்ப்பார்கள், அதற்கு மாற்று முதலாளித்துவ கொள்கைகள்தான் என்று பிடிவாதமாக பிரச்சாரம் செய்வார்கள். அவ்வாறு ஆரம்ப காலத்தில் செயல்பட்ட பொழுது, முதலாளி வர்க்கத்தால் மார்க்சிய தத்துவ அரசியலை முறியடிக்க முடியவில்லை. அதன் பின்பு அவர்கள் தந்திரமாக சதித்தனமாக மார்க்சியத்தை ஆதரிப்பதாக சொல்லிக்கொண்டு மார்க்சியத்தை திருத்தி, மற்றும்  குழப்பி மார்க்சியத்துக்கு எதிரான கருத்துகளையே மார்க்சிய கருத்தாக அவர்கள் பிரச்சாரம் செய்து உழைக்கும் மக்கள் மார்க்சியத்தை புரியவிடாமல் திசை திருப்பி குழப்பும் வேலைகளை முதலாளித்துவாதிகள் செய்தார்கள். இவ்வாறு செய்த அந்த முதலாளிகள் இன்றைய ஏகாதிபத்திய காலகட்டத்தில் மார்க்சியத்துக்கு எதிரான குழப்பமான கருத்துக்களையும் கொள்கைகளையும் மார்க்சியமைப்புக்குள்ளே ஊடுருவி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த வகையில் வரலாற்றில் தற்காலத்தில் மார்க்சியத்தை நேரடியாக எதிர்த்து பேசும் முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு  சாதகமான முறையில் மார்க்சியத்தை திருத்தியும் குழப்பியும் பிரச்சாரம் செய்பவர்கள்  மார்க்சியத்துக்கு எதிரான முதலாளித்துவவாதிகளுக்கு துணைபோய்க் கொண்டு  இருக்கின்றனர். இந்த இரண்டு வகையான மார்சியத்துக்கு எதிரான கருத்துக்களையும் கொள்கைகளையும் உழைக்கும் மக்கள் புரிந்துகொண்டு அதனை எதிர்க்க வேண்டும். மார்க்சிய அமைப்புக்குள் சேர்ந்து புரட்சிப் பணிகளில் ஈடுபட விரும்பும் இளைஞர்களை, மார்க்சிய போர்வையில் மார்க்சிய இயக்கத்துக்குள் இருந்து செயல்படும் மார்க்சியத்துக்கு எதிரான குட்டிமுதலாளித்துவ சித்தாந்த தலைவர்கள்தான் இளைஞர்களுக்கு மார்க்சியத்துக்கு எதிரான கருத்துக்களைப் போதித்தார்கள். இதனை புரிந்துகொண்ட இளைஞர்கள் இந்தத் தலைவர்களின் மீது நம்பிக்கை இழந்து இந்த அமைப்புகளிலிருந்து வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள், அல்லது தலைவர்களின் தவறான வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு கைசுடாத புரட்சியில் (சீர்திருத்தவாதப் போராட்டங்களில்) ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றனர்.   இத்தகைய மார்க்சியத்துக்கு எதிரான கருத்துக்களை மார்க்சியத்தின் பெயரிலேயே  பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றுபவர்களை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும். இதற்கு உழைக்கும் மக்கள் மார்க்சிய லெனினிய தத்துவ அரசியல் அறிவை கற்றுத் தேறவேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் பணிகள் பலவகையானது, இந்தப் பணிகளின் ஊடே மார்க்சியத்தை கற்றுக் கொள்ளும் மற்றும் அதனை நடைமுறையில் செயல்படுத்துவதற்கான பயிற்சியையும் தொழிலாளி வர்க்கம் பெறவேண்டும். மார்க்சிய அறிவும் பயிற்சியும் தொழிலாளர்கள் பெற்றால்தான் கம்யூனிசத்தின் பெயரிலேயே கம்யூனிசத்தை தந்திரமாகவும் சதித்தனமாகவும் எதிர்ப்பவர்களை அடையாளம்காண முடியும்.

இத்தத்துவம் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு, மூன்றாம் உலக நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. 1960 இல் ஏற்பட்ட சர்வதேச நெருக்கடியினால் மார்க்சியத்தின் தாக்கம் அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அதிகமாயிற்று. இதிலிருந்து தப்புவிக்க, மார்க்சியத்தை தத்துவ ரீதியில் குழப்பும் பணி அமெரிக்காவில் முதலில் தொடங்கியது.ஹெர்பர்ட், மார்க்யூஸ், ரைட்மில்ஸ், எரிபிக்ரம் போன்றோர் இதைத் தொடங்கினர். சார்த்தர், ஆல்பெர்ட் காம்யூ, லூசியன், கோல்டுமென், ஹைடன் போன்ற ஐரோப்பிய அறிஞர்களும் மார்க்சியத்தை "விமர்சன ரீதியில்" அணுகுவதாகக் கூறி, அதை குழப்பமாக்கினர். இவர்கள் அனைவரது கருத்துக்களின் தொகுப்பான புதிய இடது சர்வதேச அளவில் புரட்சித்திசையை நோக்கிய மக்களை திசை திருப்புவதாக அமைந்தது. இதன் சாரமான கருத்துக்கள் பின்வருமாறு:-

விளக்கம்:- மார்க்சியத்தை மறுக்கும் இந்தப் புதிய தத்துவமானது அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் உருவாக்கப்பட்டு அங்குள்ள மார்க்சியவாதிகளிடம் குழப்பங்களை ஏற்படுத்த வெறிறிகரமாகப் பயன்படுத்தப்பட்டது. சமீப காலங்களில் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளிலும் இறக்குமதி செய்யப்பட்டு பரப்பப்பட்டது. 1960 ஆம் ஆண்டுகளில் சர்வதேச அளவில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதுபோன்ற நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு முதலாளித்துவம் ஒழிக்கப்பட்டு சோசலிசம் தேவைப்படுகிறது. ஆகவே அமெரிக்கா மற்றும் மேற்கு ஏகாதிபத்திய நாடுகளிலுள்ள மக்கள் கம்யூனிச அமைப்பை நோக்கிச் செல்ல முயன்றனர். மக்களை சோசலிசத்தின் பக்கம் போகவிடாமலும் முதலாளித்துவத்தை எதிர்த்து மக்கள் போராடும்போது முதலாளிகளை பாதுகாத்துக்கொள்வதற்காகவும் மார்க்சிய தத்துவத்தை குழப்புவதற்கு அமெரிக்காவிலுள்ள முதலாளித்துவ தத்துவ அரசியல்வாதிகள் முயற்சி செய்தார்கள். அத்தகைய குழப்பத்தை தொடங்கியவர்கள்,  ஹெர்பர்ட், மார்க்யூஸ், ரைட்மில்ஸ், எரிபிக்ரம் போன்றோர் இதைத் தொடங்கினர். இவர்களைத் தொடர்ந்து ஐரோப்பாவிலுள்ள சார்த்தர், ஆல்பெர்ட் காம்யூ, லூசியன், கோல்டுமென், ஹைடன் போன்ற ஐரோப்பிய அறிஞர்களும் மார்க்சியத்தை "விமர்சன ரீதியில்" அணுகுவதாகக் கூறி, மார்க்சியத்தை குழப்பும் பணியைத் தொடர்ந்தனர். மார்க்சியத்தில் குறை இருப்பதாகக் கூறி அந்தக் குறையை நீக்கி மார்க்சியத்தை செழுமைப்படுத்துகிறோம் என்று சொல்லி இத்தகைய சதிச்செயலை நியாயப்படுத்தினர். இவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் எல்லாம் புரட்சியின் பக்கம் மக்கள் அணிதிரண்டுவிடக்கூடாது  என்பதை நோக்கமாகக் கொண்டே எழுதி பரப்பப்படுகிறது. இவர்களது கருத்துக்களையே சர்வதேச அளவில் புதிய இடதுகளின் கருத்தாக அடையாளப்படுத்தப்படுகிறது. இவர்களின் மக்கள் விரோத கருத்துக்களையே தற்போது இடதுசாரி இயக்கங்களில் ஊடுருவிவிட்டவர்கள் இடதுசாரிகளின் கருத்தாகப் பரப்பிக்கொண்டு இருக்கின்றனர். இடதுசாரி கட்சித் தலைவர்களே திருத்தல்வாதிகளாக மாறியவர்கள் தற்போது இந்த புதிய இடதுகளின் கருத்தை அவர்களது வெளியீடுகளாகக் கொண்டுவருகிறார்கள். உதாரணமாக இவர்களால் கொண்டுவரப்பட்ட திறந்தநிலை மார்க்சியம் என்ற நூலைச் சொல்லலாம்.இந்த கருத்துக்கள் அனைத்தும் மக்களை புரட்சியிலிருந்து திசைதிருப்பவே என்று உண்மையான மார்க்சிய ஆய்வாளர்கள் நம்மை எச்சரிக்கிறார்கள்.

1. மார்சிய தத்துவத்தின் அடித்தளமான இயங்கியல் பொருள் முதல் வாதத்தை இரண்டு கூறுகளாகச் சிதைத்து பொருள் முதல் வாதத்தை புறக்கணித்து கருத்து முதல்வாத வகைப்பட்ட இயங்கிலை முன் நிறுத்துதல்; இதன் மூலம் ஹெகலின் கருத்தை மார்க்சியமாக்க முனைதல்.

2. மார்க்சிய 'அந்நியமாதல்' குறித்த கருத்தாக்கத்திற்கு மிகையான முக்கியத்துவம் கொடுத்து, அதையே மார்க்சியத்தின் சாரமாக கூறுதல்.

3. எக்சிஸ்டென்சியலிசத்தை, (இருத்தலியம்) மார்க்சியத்தின் எல்லையில் இருந்து தொடங்குவதாக கானல்

4. பிராய்டிசம் (பிராய்டு என்ற உளவியல் அறிஞரால் உருவாக்கப்பட் கோட்பாடுகள்)  எக்சிஸ்டென்சியலிசம் போன்ற கருத்து முதல்வாதக் கருத்தாக்கங்கள் கொண்டு மார்க்சியத்தை விளக்குதல்.

5. மார்க்சின் மனிதாபிமானம் குறித்த கண்ணோட்டமே, அவரது சிந்தனையின் மையம் எனல்.

6. மார்க்சின் சமூக மனிதன் என்ற கருத்தைப் புறக்கணித்தல்.

7. சுதந்திரம் மனிதனுக்கு உள்ளேயே இருக்கிறது என்றும் அது வெளியே இல்லை என்றும் கூறி வரலாற்று நிர்ணயவாதத்தை மறுத்தல்.

8. பாட்டாளிகளுக்குப் புரட்சிகரத் தன்மையை மறுத்து அரைப்பாட்டாளிகளும் அறிவாளிகளும் புரட்சிகரத் தன்மையில் உள்ளனர் எனல்.

உலக மக்களின் விடுதலைக்குரிய தத்துவமான மார்க்சியத்தின் கருத்துக்கள் மற்றும் மார்க்சிய பதப்பிரயோகங்களைக் (மார்க்சிய சொற்களை) கொண்டே குழப்பப்பட்டன. இது மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வெற்றி அளித்தது. இந்த முன்அனுபவத்தை மூன்றாம் உலக நாடுகளிலும் தேவைப்படும் பொழுதெல்லாம் மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள் செயல்படுத்துகின்றன. அங்கும், அதாவது மூன்றாம் உலக நாடுகளிலும்  இத்தகைய ஏகாதிபத்தியக் கலாச்சாரத் தன்மை கொண்ட "புதிய இடதுக்" கருத்துக்கள் மார்க்சியப் போர்வையில் பரப்பப்படுகின்றன. இதற்கு தமிழகமும் விதிவிலக்கு இல்லை.

விளக்கம்:- மார்க்சியத்தை மறுக்கும் முதலாளித்துவ சித்தாந்தவாதிகள் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள். மார்க்சியத்துக்கு அடிப்படையான இயக்கவியல் பொருள்முதல்வாதத் தத்துவத்தை திருத்தி கருத்துமுதல்வாத இயங்கியலை முன்வைத்தார்கள். மார்க்சுக்கே ஆசான் ஹெகல் என்று சொல்லி ஹெகலியப் பார்வைதான் விஞ்ஞனப் பார்வை என்று சொல்லி, மார்க்சியத்தை கற்றுக்கொள்ள விரும்புவர்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். இருத்தலியம் என்ற  எக்சிஸ்டென்சியலிச கருத்துமுதல்வாத தத்துவமானது மார்க்சியத்தின் தொடர்ச்சி என்று சொல்லி இயக்கவியல் பொருள்முதல்வாத தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மார்க்சியத்தையே கருத்துமுதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டது என்று பொய்யாகத் திருத்தி குழப்பினார்கள். பிராய்டு போன்ற உளவியல் மருத்துவர்களின் கொள்கையை முன்வைத்து மனிதனது வாழ்க்கையை மனிதனது உளவியலே தீர்மானிக்கிறது என்றும் ஒரு மனிதன் வாழும் சமூகத்தின் பங்கை மறுத்தார்கள். மார்க்ஸ் மனிதாபிமானத்தின் அவசியத்தை ஏற்றுக்கொண்ட போதும் மனித சமூகமானது வர்க்கங்களாகப் பிளவுபட்டுள்ளது என்றும் இங்கு நடைபெறும் போராட்டங்கள் வர்க்கப் போராட்டங்களே என்றும் வர்க்க சார்பற்ற எதுவும் இங்கு கிடையாது என்றும், மனிதாபிமானமும் வர்க்க சார்புள்ளதுதான் என்றே மார்க்ஸ் போதித்தார். இந்த மார்க்சின் போதனையை மூடிமறைத்துவிட்டு மார்க்ஸ் மனிதாபிமானத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தார் என்று மார்க்சையே கொச்சைப்படுத்துகிறார்கள். உதாரணமாக மனிதநேய மார்க்சியம் என்று சிலர் பேசி மார்க்சியத்தின் பெயரில் மார்க்சியத்தை மறுப்பதை நாம் காணலாம். மார்க்ஸ் மனிதனை தனி மனிதனாகப் பார்க்கவில்லை, சமூக உறுப்பினர்களில் ஒருவனாகவே மனிதனைப் பார்த்தார். ஆனால் புதிய இடதுவாதிகள் மனிதனை சமூகத்திலிருந்து பிரித்து தனித்துப் பார்க்கிறார்கள். இந்த வகையில் இவர்கள் மார்க்சியத்தை மறுத்தார்கள். ஒரு மனிதனது சுதந்திரத்தை அந்த மனிதனுக்கு வெளியில் உள்ளவர்கள்தான் பறிக்கிறார்கள் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதை நாம் அறிவோம் இந்த உண்மையை மறுத்துவிட்டு சுதந்திரம் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்ற கருத்துமுதல்வாதக் கருத்துக்களை புதிய இடதுகள் பரப்பினார்கள். மனிதகுல வரலாற்று நிகழ்ச்சிப் போக்குகள் மனிதனின் சிந்தனைக்குள் இல்லை. அது மனிதனது சிந்தனைக்கு அப்பாற்பட்டு புறநிலையில் நிகழ்கிறது. அதனைப் புரிந்துகொண்டு அதனை மனிதர்கள் தங்களுக்கு விருப்பமான முறையில் மாற்றுவதற்கு திட்டமிட்டு செயல்பட்டு தங்களது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்கிறார்கள் என்று மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதம் சொல்கிறது. இந்த உண்மையை புதிய இடதுகள் மறுக்கிறார்கள். சமூகத்தில் இதுவரை உருவான வர்க்கங்களிலேயே இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளி வர்க்கம்தான் மிகவும் புரட்சிகரமான வர்க்கம் என்று மார்க்சியம் போதிக்கிறது. இந்த உண்மையை மறுத்துவிட்டு அரைப்பாட்டாளிகளான உதிரித் தொழிலாளர்களையும் நடுத்தர வர்க்க அறிவாளிகளையும் புரட்சிகர சக்தியாக புதிய இடதுகள் காட்டி பாட்டாளி வர்க்கத் தலைமையை இவர்கள் மறுக்கிறார்கள்.

உலக மக்களின் விடுதலைக்கான தத்துவமான மார்க்சியத்தின் கருத்துக்களையும் மார்க்சியத்தால் பயன்படுத்தப்படும் சொற்களையும் கொண்டே புதிய இடதுகள் மார்க்சியத்தை திருத்தி குழப்பும் வேலைகளை செய்கிறார்கள். ஆகவேதான் இவர்கள் பிராங்பார்ட் மார்க்சியம் என்றும் திறந்தநிலை மார்க்சியம் என்றும் தங்களுக்கு பெயர்களை வைத்துக்கொண்டு அவர்களை மார்க்சியவாதிகள் போல் காட்டிக்கொண்டு இந்த எட்டப்பன் வேலையைச் செய்கிறார்கள். மக்களுக்கும், கம்யூனிச அமைப்புகளிலுள்ள ஊழியர்களுக்கும் மார்க்சியத்தின் அடிப்படைகள் தெரியாது என்ற பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு இந்த துரோகத்தை செய்கிறார்கள். இத்தகைய துரோகச் செயலைச் செய்து அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள உழைக்கும் மக்களை குழப்புவதில் வெற்றிகண்ட இவர்கள் இந்தியாவிலும் தமிழகத்திலும் இதே துரோகத்தைச் செய்துகொண்டு இருக்கிறார்கள். இவர்களை அடையாளம் கண்டு இவர்களையும்    இவர்களது தத்துவ அரசியல் எப்படி மக்களுக்கு எதிரானது என்பதையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி அம்பலப்படுத்த வேண்டியதும் கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.

தமிழகத்தில் "புதிய இடது" கருத்துக்களைக் குறிப்பிட்ட சிலர் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்.இவர்கள் மார்க்சியத்தை நோக்கி வருகின்ற இளைஞர்களை மையமாகக் கொண்டு இயங்குகின்றனர். இவர்களின் எழுத்துத் தளங்களாக படிகள், பரிமானம், இலக்கியவெளி வட்டம், நவயுகக் கலாச்சாரம், மார்க்சியம் இன்று, போன்ற பத்திரிக்கைகள் உள்ளன. இவைகள் புதிய இடதுக் கருத்துக்களையும் அவற்றின் மூலவர்களையும் தமிழகத்திற்கு இறக்குமதி செய்ததோடு, தமிழகச் சூழலுக்கேற்ற வகையில் புதிய இடது கருத்துக்களுக்கு மறுவிளக்கம் கொடுக்கின்றனர். இத்தகைய கருத்துக்களைப் பரப்புநர்களாக கோவை ஞானி, சத்தியமங்களம் நடராசன், எஸ்.வி.ராஜதுரை, தமிழவன் போன்றோர் உள்ளனர். இவர்கள் எழுதிய இந்திய வாழ்க்கையும், மார்க்சியமும், ஓர் அழகிய மணல் வீடு, கம்யூனிசம், விடுதலையின் இலக்கணம், ஸ்ட்ரக்கலிசம், அந்நியமாதல், எக்சிஸ்டென்சியலிசம் என்ற இருத்தலியம் என்ற நூல்களும் மேற்சொன்ன இதழ்களில் இவர்கள் எழுதிய கட்டுரைகளும் புதிய இடது கருத்துக்களைப் பரப்பி மார்க்சியத்தைக் குழப்புகின்றன. ஆயின், இவர்கள் மார்க்சியத்தைச் செழுமைப் படுத்துகிறோம் எனச் சொல்லியும் உண்மையைத் தேடுகிறோம் எனச் சொல்லியும் மக்களைக் குழப்பிக்கொண்டு இருக்கின்றனர். இவர்கள் ஒரு காலத்தில் மார்க்சியர்களாகவும், மார்க்சிய இயக்கங்களில் ஈடுபட்டவர்களாகவும் இருந்ததைப் பயன்படுத்திக் கொண்டு மார்க்சிய விரோதக் கருத்துக்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்களது கட்டுரைகளிலும் நூல்களிலும் உள்ள கருத்துக்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

தமிழகத்தில் "புதிய இடது" கருத்துக்களைக் குறிப்பிட்ட சிலர் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்.இவர்கள் மார்க்சியத்தை நோக்கி வருகின்ற இளைஞர்களை மையமாகக் கொண்டு இயங்குகின்றனர். இவர்களின் எழுத்துத் தளங்களாக படிகள், பரிமானம், இலக்கியவெளி வட்டம், நவயுகக் கலாச்சாரம், மார்க்சியம் இன்று, போன்ற பத்திரிக்கைகள் உள்ளன. இவைகள் புதிய இடதுக் கருத்துக்களையும் அவற்றின் மூலவர்களையும் தமிழகத்திற்கு இறக்குமதி செய்ததோடு, தமிழகச் சூழலுக்கேற்ற வகையில் புதிய இடது கருத்துக்களுக்கு மறுவிளக்கம் கொடுக்கின்றனர். இத்தகைய கருத்துக்களைப் பரப்புநர்களாக கோவை ஞானி, சத்தியமங்களம் நடராசன், எஸ்.வி.ராஜதுரை, தமிழவன் போன்றோர் உள்ளனர். இவர்கள் எழுதிய இந்திய வாழ்க்கையும், மார்க்சியமும், ஓர் அழகிய மணல் வீடு, கம்யூனிசம், விடுதலையின் இலக்கணம், ஸ்ட்ரக்கலிசம், அந்நியமாதல், எக்சிஸ்டென்சியலிசம் என்ற இருத்தலியம் என்ற நூல்களும் மேற்சொன்ன இதழ்களில் இவர்கள் எழுதிய கட்டுரைகளும் புதிய இடது கருத்துக்களைப் பரப்பி மார்க்சியத்தைக் குழப்புகின்றன. ஆயின், இவர்கள் மார்க்சியத்தைச் செழுமைப் படுத்துகிறோம் எனச் சொல்லியும் உண்மையைத் தேடுகிறோம் எனச் சொல்லியும் மக்களைக் குழப்பிக்கொண்டு இருக்கின்றனர். இவர்கள் ஒரு காலத்தில் மார்க்சியர்களாகவும், மார்க்சிய இயக்கங்களில் ஈடுபட்டவர்களாகவும் இருந்ததைப் பயன்படுத்திக் கொண்டு மார்க்சிய விரோதக் கருத்துக்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்களது கட்டுரைகளிலும் நூல்களிலும் உள்ள கருத்துக்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம். (நமது இலக்கு, கோ.கேசவன். பக்கம் - 12)

விளக்கம்:- மார்க்சியத்தை மறுக்கும், எதிர்க்கும், திருத்தும், குழப்பும் கருத்துக்களான "புதிய இடது" கருத்துக்களை சிலர் திட்டமிட்டு பரப்பிவருகிறார்கள். இந்தக் கருத்துக்களை எதிர்த்து அதன் தீய நோக்கங்களை அம்பலப்படுத்தி முறியடிப்பதற்கோ அல்லது இதுபோன்ற தீய கருத்துக்களைப் பரப்பும் துரோகிகளை அம்பலப்படுத்த இங்கே உள்ள இடதுசாரிகள் என்று சொல்பவர்களும், புரட்சியாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களும் முயற்சி செய்து முறியடிக்கவில்லை. இந்த தீய கருத்துக்களை மேலும் மேலும் செழுமைப்படுத்தி மக்களைக் குழப்புபவர்கள் தீவிரமாக செயல்படுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த தீய நபர்களை முறியடக்கத் திறனில்லாதவர்கள் அவர்களது அமைப்பிலுள்ள தோழர்களை அவர்களைப் பிடிக்கவில்லை என்ற காரணத்தால் அமைப்பிலிருந்து அவர்களை வெளியேற்ற அவர்கள் மீது அவதூறாக குற்றம் சுமத்துவதற்காக புதிய இடது, கலைப்புவாதம், NGO போன்று முத்திரை குத்தி அவதூறு செய்வதற்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். புதிய இடதுகள் பற்றி அம்பலப்படுத்தி கருத்து வெளியிட்ட தோழர் கோ.கேசவன் போன்ற மார்க்சிய ஆய்வாளர்களின் கருத்துக்களை இவரது அமைப்பு  அணிகளிடம் பரப்பி வகுப்பெடுத்து அணிகளின் அறிவை வளர்க்கவில்லை. ஆனால் தோழர் கோ.கேசவன் மீது அவதூறாக முத்திரை குத்தி தோழரை அமைப்பிலிருந்து வெளியேறச் செய்தனர். இவர்கள்தான் அவர்களை புரட்சியாளராக காட்டிக்கொண்டு பிறர் மீது அவதூறாக தொண்டுநிறுவனம் என்று முத்திரை குத்துகிறார்கள். ஆனால் தற்போது இவர்களது அமைப்பில் தலைவராகச் செயல்பட்டவரை இவர்கள் வெளியேற்றிவிட்டனர்*. வெளியேறி அவர் இவர்கள் மீது தற்போது இவர்கள்தான் தொண்டுநிறுவனம் என்று குற்றம் சுமத்தி  தாக்குகிறார். இவர்கள் தொண்டுநிறுவனமா? என்ற கேள்விக்கு இவர்கள் பதில் சொல்ல வேண்டும். எனினும் இவர்கள் மார்க்சியத்துக்கு எதிராக வந்த கருத்துக்களை எதிர்த்து சித்தாந்தத் துறையில் இன்றுவரை போராடவில்லை. ஆனால் இவர்களால் கலைப்புவாதி என்றும் தொண்டுநிறுவனம் என்று குற்றம் சாட்டியவர்களோடு தற்போது கூடிக்குலாவுகிறார்கள். ஆகவே இவர்கள் தொண்டுநிறுவனங்களோடு தொடர்புகொள்ள முயற்சிக்கிறார்களோ என்ற சநதேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. மார்க்சியத்துக்கு எதிரான புதிய இடது  கருத்துக்களைப் பரப்புநர்களாக கோவை ஞானி, சத்தியமங்களம் நடராசன், எஸ்.வி.ராஜதுரை, தமிழவன் போன்றோர் உள்ளனர் என்றார் கோ.கேசவன். தற்போது இன்னும் பலர் இதுபோன்று மக்களின் துரோகிகள் உருவாகியுள்ளார்கள். இவர்களின் தவறான கருத்துக்களை முறியடிக்க வேண்டியது நமது கடமையாகும். இந்த துரோகிகள் மார்க்சியத்தை வளர்க்கிறோம் என்று பொய் செல்லியே இவர்கள் செய்யும் துரோகத்தை நியாயப் படுத்துகிறார்கள். இதைப் போன்றே தொண்டு நிறுவனத்தை எதிர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டே தொண்டு நிறுவனங்களுக்கு சிலர் சேவைசெய்கிறார்கள். அவர்களின் சொல் மற்றும் செயல்களிலிருந்தே அவர்களை நாம் அடையாளம் காண வேண்டும். அதற்கான திறன் படைத்தவராக கோ.கேசவன் அவர்கள் இருந்தார். அதற்கு காரணம் அவர் மார்க்சிய ஆசான்களது போதனைகளை கற்று தேர்ச்சி பெற்றிருந்தார். அந்தக் கொள்கையில் உறுதியாகவும் பற்றுக்கொண்டும் இருந்தார். ஒருவர் சிறந்த கம்யூனிஸ்டாவது மிகவும் கடினமாகும். எனினும் அவர் வாழ்நாள் முழவதும் தொடர்ந்து உறுதியாக கம்யூனிஸ்டாக இருப்பது அதைவிடக் கடினமானதாகும். தோழர் கோ.கேசவன் அவர்கள் அவரது வாழ்நாள் முழுவதும் உறுதியான மாரக்சியவாதியாகவே வாழ்ந்தார். இவரைப் போன்ற சிறந்த மார்க்சியவாதி போல் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் புதிய இடது கருத்துக்களை பரப்பியவர்கள் பெரும்பாலும் கம்யூனிச அமைப்புகளில் செயல்பட்டவர்கள்தான். அவர்கள்தான் துரோகிகளாக மாறி புதிய இடது கருத்துக்களை பரப்பினார்கள். அவர்கள் புதிய இடது கருத்துக்களை பரப்பியதால்தான் அவர்களை நாம் துரோகி என்கிறோம். ஆனால் இங்குள்ள குறுங்குழுவாதிகள் இதுபோன்ற துரோகிகளின் கருத்தை எதிர்த்துப் போராடி முறியடிக்கவும் இல்லை. ஆனால் அமைப்புக்குள் செயல்பட்ட தோழர் கோ.கேசவன் போன்றவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை வைத்து அவதூறு செய்தார்கள். இவர்களைப் போன்ற குறுங்குழுவாதிகளைப் போன்று நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளக் கூடாது. ஆகவே தோழர்களே யாரையும் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. அதே போலவே சிறந்த கம்யூனிஸ்டுகளை மார்க்சிய அறிவைக்கொண்டு அடையாளம் கண்டு அவர்களோடு நாம் இணைந்து செயல்பட வேண்டும்.

மார்க்சியத்துக்கு மாற்றாக கருத்துக்களை முன்வைப்பவர்கள் அவர்களின் பெயரும் அவர்களின் கருத்துக்களும் கீழ்க்கண்டவாறு.

1. மார்க்சியத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் தொடர்பு இல்லை. (எஸ் என் நாகராஜன், கம்யூனிசம் விடுதலையின் இலக்கணம் என்ற நூல் பக்கம் 30)

2.மார்க்சின் ஆய்வின் மையம், மானுடத்தின் அடிப்படை இலக்கணமும், அதன் வாழ்வின் பொருளும் ஆகும். சமுதாய அமைப்பு துணைப் பிரச்சனை. இந்த ஆய்வு மையத்தை மார்க்ஸ் ஹெகலிடமிருந்து எடுத்துக் கொண்டார். (எஸ் என் நாகராஜன் மேற்படி நூல் பக்கம் 186, 187)

3. அந்நியமாதலை முதன்மைப் பிரச்சனையாகக் கொண்டதே நவீன மார்க்சியம். (எஸ்என் நாகராஜன் மேற்படி நூல் பக்கம் 112 - 120) மார்க்சின் அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்று அந்நியமாதல் (ஞானி, முன்னூல், அறிமுகம்.) 4. சமயத்தின் சிறந்த அம்சத்தின் தொடர்ச்சியே மார்க்சியம் (எஸ் எம் நாகராஜன், கம்யூனிசம் விடுதலையின் இலக்கணம் நூல் பக்கம் 20)

சமயமும் மார்க்சியமும் இணையாமல் இருப்பதுகூட இன்றைய ஆளும் வர்க்கங்களின் நோக்கமாக இருந்தால் அதில் வியப்பில்லை. இதற்கு மார்க்சியவாதிகள் பலியாகக்கூடாது (ஞானி, இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் நூல் பக்கம் 88)

5. சமயமும் மார்க்சியமும் இணைய வேண்டும் என்ற கருத்தை "ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் உரையாடல்" (ஞானி) என்ற  கட்டுரை தெளிவாக்குகிறது.

6. எஸ்வி ராஜதுரையின் "அந்நியமாதல்" நூல் சார்த்தரின் கண்ணோட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது; ஆனால் மார்க்சிய பதப்பிரயோகங்களுடன் இது எர்னஸ்ட்பிஷர் என்பவரின் தத்துவமயமற்ற போக்கை (De-ideologization) அணுகுமுறையாகக் கொல்லப்பட்டுள்ளது. மார்க்சியம் அந்நியமாதலில் இருந்து தொடங்குகிறது என விளக்கப்படுகிறது.

7. எஸ் வி ஆரின் எக்சிஸ்டென்சியலிசம் (இருத்தலியம்) சார்த்தரின் அணுகுமுறைப் பட்டதே. எக்சிஸ்டென்சியலிசம், மார்க்சியத்தின் எல்லையிலிருந்து தொடங்குகிறது என்ற சார்த்தரின் கூற்றை விளக்குகிறது. இது வாழ்க்கையை வாழ்க்கையாக மாற்றும் சீரிய முயற்சியாக சித்தரிக்கப்படுகிறது. இந்நூலில் புதிய இடது ஆசான்கள் போற்றப்படுகின்றனர்.

இவர்களே ஏகாதிபத்திய கலாச்சாரத்தின் பாதிப்புக்கு உள்ளான புதிய இடது கருத்துக்களை தமிழகத்தில் பரப்பி மார்க்சியத்தை நோக்கி வரும் இளைஞர்களை குழப்பும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். நகர்ப்புறத்து படித்த இளைஞர்களே இவர்களது தளமாக அமைகின்றனர். ஏகாதிபத்திய - நிலப்பிரபுத்து கலாச்சாரத்தை முரனற்ற விதத்தில் எதிர்க்கும் வல்லமை படைத்த மார்க்சியத்தைக் குழப்பும் பணியில் ஈடுபட்டுள்ள இப்போக்கு ஏகாதிபத்திய கலாச்சாரப் போக்காகும். இதைத் தத்துவத்துறையின் மூலம் எதிர்ப்பது நமது பணியாகும். இத்தகைய புதிய இடதுப் போக்கான ஏகாதிபத்திய கலாச்சாரப் போக்கை இங்குள்ள மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்திய சார்பு நிறுவனங்கள் பலவாறு ஊக்கம் அளிக்கின்றன. அவற்றுள் ஒன்றான கிறிஸ்துவ தன்னார்வக் குழுக்கள், ஏகாதிபத்தியக் கலாச்சாரத்தை பரப்பும் நிறுவனங்களாக, அதாவது எதிர்ப்புரட்சித் தளங்களாக எப்படி இயங்குகின்றன என இனி காண்போம்.

விளக்கம்:- மார்க்சியத்துக்கு மாற்று என்று சொல்லி, மார்க்சியத்தையும் மக்களையும் குழப்பிய துரோகிகள்தான் எஸ் என் நாகராஜன், ஞானி, எஸ் வி ராஜதுரை போன்றவர்கள் ஆவார்கள். இவர்களை பின்பற்றி .மார்க்ஸ் போன்றவர்களும், மார்க்சியத்துக்கு மாற்றாக உண்மையில் மார்க்சியத்துக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து மார்க்சியத்தை நோக்கிவரும் இளைஞர்களை குழப்பினார்கள். இவர்கள் மக்களை நேசிப்பதில்லை, தங்களுக்கு புகழ் வேண்டும், தங்களைச் சுற்றி தங்களை துதிபாடுவதற்கு ஒரு கூட்டம் வேண்டும். இவர்களைப் போன்றவர்களின் தவறான கருத்துக்களை அம்பலப்படுத்தி முறியடிப்பதற்கு திறனற்றவர்தான் .எம்.கே. இந்த .எம்.கே யும் புகழ் விரும்பிதான். ஆகவேதான் இவரது அமைப்பில் செயல்பட்ட தோழர் கோ.கேசவன் போன்றவர்கள் மீது அவதூறாக பொய்யான குற்றம் சாட்டி தன்னை புனிதமானவராக காட்டிக்கொண்டே வாழ்ந்து மடிந்தார். இந்த .எம்.கே யின் கொள்கையைத்தான் .எம்.கே யின் இன்றைய பக்தர்கள் மார்க்சியத்துக்கு எதிரான சித்தாந்தங்களை எதிர்த்துப் போராடி அம்பலப்படுத்தாமல் இவர்களை விமர்சிப்பவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி தங்களை புனிதமானவர்களாக காட்டிக்கொள்ளும் நடைமுறையிலேயே மூழ்கியுள்ளனர். இவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் தவறுகளை களைவதற்கு முன்வருவதே இல்லை. இந்தச் சூழலில் உண்மையான கம்யூனிஸ்டுகள் இதுபோன்ற துரோகிகளையும் அவர்களது கருத்துக்கள் மற்றும் நடைமுறையையும் புரிந்துகொண்டு இவர்களை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும். அதற்கு நாம் தோழர் கோ.கேசவன் போன்றவர்களை முன்னுதாரணமாக கொள்ளவேண்டும்.

இந்த பிற்போக்கு புதிய இடதுவாதிகள் மார்க்சியத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் தொடர்பில்லை என்கிறார்கள். அதாவது விஞ்ஞனத்தை அடிப்படையாகக் கொண்டே சமூக விஞ்ஞானமான மார்க்சியம் தோன்றி வளர்ந்தது என்ற உண்மையை இவர்கள் மூடிமறைக்கிறார்கள். மார்க்சியமானது சமுதாயத்தை விளக்குவதோடு நின்றுவிடவில்லை அது சமூகத்தை மாற்றியமைப்பதற்கும் வழிகாட்டுகிறது என்ற உண்மையையும் இவர்கள் மூடிமறைக்கிறார்கள். அந்நியமாதல் என்ற கொள்கையையே மார்க்சியம் அடிப்படையாகக் கொண்டது என்று மார்க்சியத்தை கொச்சைப்படுத்துகிறார்கள். மதத்துக்கும் மார்க்சியத்துக்கும் முடிச்சுப் போடுகிறார்கள். மதம் பற்றிய மார்க்சின் போதனைகளை மூடிமறைக்கிறார்கள். மதமும் மார்க்சியமும் இணையவேண்டும் என்கிறார்கள். இவர்களது கருத்துக்களை நியாயப்படுத்துவதற்கு மார்க்சியத்தால் பயன்படுத்தப்படும் சொற்களை பயன்படுத்தி வார்த்தை விளையாடுகிறார்கள். இவர்கள் புதிய இடது கருத்துக்கள் என்ற பெயரில் ஏகாதிபத்தியவாதிகளின் கருத்துக்களையும் ஏகாதிபத்திய கலாச்சாரத்தையும் தமிழகத்தில் பரப்பினார்கள். ஆகவே இவர்களது கருத்துக்களை எதிர்த்து மார்க்சிய கருத்துக்களை நிலைநிறுத்துவதற்கான போராட்டமானது சாராம்சத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமாகும். இத்தகைய ஏகாதிபத்தியம் மற்றும் அவர்களின் அடிவருடிகளை எதிர்த்துப் போராட நாம் மார்க்சிய ஆசான்களது போதனைகளை கற்றிடுவோம். அதனை அடிப்படையாகக் கொண்டு நாம் சிந்தித்து செயல்பட வேண்டும். தொடரும்.....     தேன்மொழி.

* இந்தப்பகுதியில் தெரிவித்த நிகழ்வு ம.ஜ.இ.க வின் ஏ.எம்.கே தலைமையிலான அமைப்பில் நடந்தவைகளே அந்த நிகழ்வுகளிலிருந்து படிப்பினை பெறதக்கவையே. அதாவது அன்று கோ.கேசவன் போன்ற சிறந்த ஆய்வாளர்களின் எழுத்துகளை கண்டஞ்சிய தலைமை இவரை போன்றோரை புறகணித்ததோடு அல்லாமல் ஏ.எம்.கே தன்னை புனிதராக்கிக் கொள்ள தன் அமைப்பில் செயல்பட்ட தோழர்களை பல்வேறு வகையில் அவதூறு படுத்தி முத்திரை குத்தினார். அதேபாணியில் ஏ.எம்.கே பின்னர் தலைமை பொறுப்புக்கு வந்தவர்கள் முத்திரை குத்துவதும் அதையையே முன்னால் தலைமை (மனோகரன்) இன்னால் அமைப்பை (சோலை பிரிவை) NGO அமைப்பு என்கிறார். என்ன ஆதாரம் உள்ளது என்று இவர்கள்தான் சொல்ல வேண்டும். யாரையும் எந்த ஆதாரமும் இல்லாமல் முத்திரை குத்தும் இவர்கள்தான் இதற்கான உண்மையான ஆய்வுகளை முன் வைக்க வேண்டும். இல்லையேல் கேள்விகேட்போரையெல்லாம் ஏதாவது முத்திரை குத்தி ஒதுவக்குவது மார்க்சிய வகைபட்டவை அல்ல. விமர்சனம் சுயவிமர்சன ரீதியில் வளர்வதற்கான அடிப்படியும் இல்லை.

இதழை வாசிக்க கீழ்காணும் இணைப்பில் செல்க

இலக்கு இணைய இதழ் 82 பி.டி.எப் வடிவில் உங்கள் முன் இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்