ஆசான் லெனின் - 8

நாம் இன்று கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பலபோக்குகளை புரிந்துக் கொள்ள நமது ஆசான் லெனின் செய்த பணியை கற்றறிந்தாலே இங்குள்ளவர்கள் யாருக்காக இந்தப்பணியை செய்கின்றனர்! இவர்கள் என்ன செய்ய வேண்டும்? ஆனால் என்ன செய்துக் கொண்டுள்ளனர் என்பதனை தெளிவாக புரிந்துக் கொள்ள முடியும்.

லெனின் புரட்சி நடத்துவதற்கு முன், புரட்சி நடத்த புரட்சிக்கான ஒரு கட்சியையும், அந்த கட்சி செயல்படுவதற்கான வழிமுறையையும், அங்கிருந்த பல்வேறு வர்க்க பிரிவுகளை அறிந்து; ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்டுகிடக்கும் மக்களை ஒருங்கிணைக்கும் பணியை செய்தார். அதற்கு சட்ட ரீதியாக பாராளுமன்ற வழிபட்ட எல்லாவற்றையும் சாதகமான சூழலில் எவ்வாறு பயன்படுத்துவது! எவ்வாறு  அம்பலப்படுத்தி மக்களை ஒருங்கிணைப்பது என்று ஆசான் லெனின் அறிந்திருந்தார். ஆனால் நம் மத்தியில் உள்ளவர்கள் என்ன செய்துக் கொண்டுள்ளனர்? முதலாளித்துவ நிறுவனங்களில் தஞ்சம் புகுந்து அதற்கு அடிமையாகி அவையே கதியென்று மார்க்சிய லெனினிய கோட்பாடுகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு தங்களை புரட்சியாளர்கள் என்றும் சோசலிசத்தை படைக்க உள்ளவர்கள் போல் உழைக்கும் மக்களை எய்துக் கொண்டுள்ளனர் இவை ஆசான் காட்டிய வழி இல்லை. இங்கு புரட்சிக்கான கட்சி வேண்டும் என்பதை குறுங்குழுவாத நோயில் வீழ்ந்துள்ளோர்களை என்ன சொல்ல? ஆசான் லெனின் வழிகாட்டியதை பார்ப்போம் இனி.  


லெனின் ரசிய புரட்சிக்கு முன்னர் செய்தவற்றை நமது கம்யூனிஸ்டுகள் மறந்தேவிட்டனர். அவருக்கு முன் இருந்த பலபோக்குகள் அன்றைய ஜெர்மனியின் நேரடி வரவுகளாகளாகவும், நரோதினிக் போன்றவை ரசிய நிலையில் தோன்றியவையாவும். அதன் சரியான அம்சங்களை ஏற்றுக் கொண்டதோடு தவறான அம்சங்களை விமர்சனப்படுத்தி அம்பலப்படுத்தி அதனை ஒழித்துக் கட்டுவதில் முக்கியபணியாற்றியதோடு ஒரு புரட்சிக்கான கட்சியை கட்டினார். அவை இன்று நம்முன் இங்கே மலிந்துகிடக்கும் எல்லா குப்பைகளையும் ஒழித்துக்கட்டிய பின்னரே நமது நாட்டில் ஒழித்துக்கட்டுவதன் அடிப்படையிலேயே புரட்சிகரமான கட்சியை கட்ட வேண்டும்.

லெனினின் சொந்த வாழ்க்கையில் சொந்த நோக்கங்கள் அவருக்கு இருந்ததாக எதிரிகள்கூட எழுதவில்லை. பாட்டாளி வர்க்க விடுதலை, உலகப் பாட்டாளி வர்க்க புரட்சிதான் அவரது மூச்சு.

1917-பிப்ரவரியில் புரட்சி நடந்து, முதலாளித்துவ அரசு பதவியேற்ற, அந்த நொடியிலிருந்து, அடுத்து சோசலிசப் புரட்சியை நோக்கி முன்னேற வேண்டும் என்று செயல்பட்டார். அப்போது வெளிநாட்டில் இருந்த அவர், ரஷ்யாவுக்கு திரும்புகிற போதும்கூட, பெண் போராளி கொலந்தாயிற்கு அனுப்பிய குறிப்பில் “அதிகமான புரட்சிகர திட்டங்கள், வியூகங்கள் தேவை!! அதிகமான புரட்சிப் பிரச்சாரம் தேவை!! சர்வதேச பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான கிளர்ச்சியும் போராட்டமும் தேவை!! அதற்கும் மேலாக, சோவியத்துகள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்!!” என்று குறிப்பிட்டிருந்தார்.

கேள்வியை இடையறாது எழுப்புவதும் அதற்கான விடையை காண்பதும் லெனின் தன் வாழ்நாள் பணியாக கொண்டிருந்தார்.

  • லெனினது எழுத்துக்களை வாசித்து, சமகால பிரச்சனைகளோடு பொருத்தி பார்க்கும் நடைமுறையே ஒரு புரட்சிகரமான பணியாகும். லெனினுடைய வாழ்க்கையை வெறும் சம்பவங்களின் தொகுப்பாக வாசிப்பது பலன் தராது. கார்ல் மார்க்சின் பெயரால் அழைக்கப்படும் ஒரு தத்துவத்தை, ஒரு நாட்டில் புரட்சியை நிகழ்த்தும் நடைமுறையோடு இணைத்த மகத்தான வாழ்க்கை லெனினது வாழ்க்கை. ஒரு நாட்டில் நிகழ்ந்த புரட்சி அனுபவத்தில் உலகப் புரட்சிக்கான பொதுக் கோட்பாடுகளை உருவாக்கிய படைப்பாற்றலின் சிகரம் லெனினது வாழ்க்கை. இந்த வகையில் லெனின் வாசிப்பு நிகழ வேண்டும்.

மார்க்சியம் ஐரோப்பிய தத்துவமா? என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம் சர்வதேச கம்யூனிச இயக்கமானது மார்க்சிய லெனினிய தத்துவத்தை ஒவ்வொரு நாட்டின் நடைமுறையோடு பொருத்திப்பார்த்து ஒவ்வொருநாட்டின் பிரச்சனையையும் தீர்த்து வெற்றி கொள்ள முடியுமா? என்ற சவாலை எதிர்கொள்கிறது. இந்த சவாலை ரஷ்ய மற்றும் சீனக் கம்யூனிஸ்டுகள் எதிர்கொண்டு மார்க்சிய தத்துவத்தை அவர்களது நாட்டின் நடைமுறையோடு இணைத்து வெற்றி கண்டார்கள். அவர்களைப் பின்பற்றி ஒவ்வொரு நாட்டு கம்யூனிஸ்டுகளும் இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு லெனினியம் வழிகாட்டுகிறது. அதற்கு லெனினது எழுத்துக்களை வாசித்து சமகால பிரச்சனைகளோடு பொருத்திப் பார்த்து விடை காணுவதற்கான பயிற்சியைப் பெறுவதும் ஒரு வகையான புரட்சிப் பணியாகும்.

தத்துவத்தின் பணி சமூகத்தை விளக்குவது மட்டும் அல்ல. அதை மாற்றியமைக்க வழிகாட்டுவதாக இருக்க வேண்டும் என்னும் மார்க்சின் கூற்றுப்படி மானுட விடுதலைக்கு வழிகாட்டும் தத்துவமாக விளங்குவது மார்க்சியத் தத்துவமே. மக்கள் அத்தத்துவத்தை இறுகப் பற்றிக் கொள்ளும்போது அது மாபெரும் பொருண்மைச் சக்தியாக மாறும், அதைத்தான் வரலாறு திரும்பத் திரும்ப மெய்ப்பித்து வருகிறது. மக்களை மாபெரும் சக்தியாக மாற்றுவதற்குப் புரட்சிகரமான மார்க்சியத்தைப் பரந்துபட்ட உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

மார்க்சியம் ஒவ்வொருவரின் தேவையைக் கொண்டு தனித்தனியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். அதாவது மார்க்சியத்தில் ரஷ்யா மார்க்சியம் சீன மார்க்சியம் தமிழக மார்க்சியம் என்று நிறுவ நினைக்கின்றனர். மார்க்சியம் குறிப்பான சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டுமேயன்றி அதாவது சூழ்நிலை ஏற்ப ஒவ்வொரு நாட்டின் விடுதலைக்கான பாதைகள் மாறுமே தவிர ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியா மார்க்சியம் என்பதில்லை. ரஷ்யாவின் குறிப்பான சூழலுக்கு ஏற்ப அங்கு ஆயுத ரீதியிலான குறுகிய கால பாதை மேற்கொள்ளப்பட்டது குடியேற்ற அரை குடியேற்ற நிலவுடமை தன்மை கொண்ட சீனாவில் நீண்ட மக்கள் பாதை மேற்கொள்ளப்பட்டது.

ஆகவே மார்க்சிய கண்ணோட்டத்தையும் குறிப்பிட்ட நாட்டின் சமூக இயக்கத்தையும் இணைத்து ஆய்வு செய்வதன் மூலம் மட்டுமே சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை நாம் விஞ்ஞானப்பூர்வமாக எடுக்க முடியும். ஒரு நாட்டில் சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை ஆய்வுசெய்து எடுக்க விரும்புபவர்கள், அந்தநாட்டின் மாவீரர்களையோ, அரசியல் தலைவர்களையோ அடிப்படையாகக் கொள்ளக் கூடாது, மேலும் அங்குள்ள மதங்களையோ, மதத்தலைவர்களையோ அடிப்படையாகக் கொள்ளக்கூடாது மாறாக அந்த நாட்டில் வாழும் மக்களையேதான் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் நமக்கு வழிகாட்டுகிறது. ஏனென்றால் இயற்கை மாற்றங்கள் சூழ்நிலை சாதகமாக இருந்தால் தானாகவே மாற்றம் ஏற்பட்டுவிடும், அதுபோல சமூக மாற்றங்கள் நடக்காது,மாறாக சமூகத்தை மக்களின் முயற்சி மற்றும் செயல்பாடுகளின் மூலம்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதாவது சமூக மாற்றத்தில் மனிதர்களுக்கு முக்கியமான பங்கிருக்கிறது. ஆகவேதான் சமூகமாற்றத்திற்கான கொள்கை திட்டம் வகுப்பதற்கு மனிதர்களின் வாழ்நிலை உணர்வுநிலை, அவர்களின் தயார்நிலை போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்று மார்க்சியம் வழிகாட்டுகிறது.

மார்க்சியம் வரலாற்று வழியில் முதலாளியத்துக்குச் சவக்குழி தோண்டி, வர்க்கங்களும் மனிதனை மனிதன் சுரண்டும் நிலையும் இல்லாத கம்யூனிச சமுதாயத்தைக் கட்டுவது தான் சர்வதேசத் தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையென வரையறுத்துக் கூறிய மார்க்சும், ஏங்கெல்சும் பாட்டாளி வர்க்கம் தன்னை விடுதலை செய்வதற்குகந்த மிகச் சிறந்த வழியையும் சுட்டிக் காட்டினர். அதாவது, தொழிலாளி வர்க்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை ஏற்று, விவசாய வர்க்கத்துடன் நெருக்கமான கூட்டேற்படுத்திக் கொண்டு, முதலாளி வர்க்கத்தின் அரசியந்திரத்தை உடைத்து நொறுக்கப் புரட்சிகர வன்முறையைப் பயன்படுத்த வேண்டும்; பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவ வேண்டும்; பாட்டாளி வர்க்க ஆட்சி அதிகாரத்தைப் பாதுகாக்கவும் கம்யூனிச நெறிகளின் அடிப்படையில் சமுதாயத்தை மாற்றியமைக்கவும் இவ்வரசை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும்.

அதே போன்று, லெனின், ரஷிய நாட்டின் சமூகப் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து பல முடிவுகளுக்கு வந்தது உண்மைதான்.

இதனை லெனின் தன் நாட்டில் புரட்சிக்கு முன் என்னவெல்லாம் செய்தார் என்பதனை தொடர்ந்து காண்போம்.

  • வரலாறு உருவாக்கியுள்ள இன்றைய காலம், முதலாளித்துவத்தின் இறுதி கட்டம் என்ற அழுத்தமான இடத்திலிருந்துதான் லெனின் தனது அனைத்துச் செயல்பாடுகளையும் அமைத்துக் கொண்டார். புரட்சியை கனவு என்கிற நிலையிலிருந்து, புரட்சியை சாத்தியமான ஒன்றாக அணுகுகிற தனிச்சிறப்பு கொண்டது லெனினியம். புரட்சி என்ற விரிந்த பார்வையிலிருந்து அன்றாடப் பிரச்னைகளை அணுகும் கலையை லெனினியம் கற்றுத் தருகிறது.முதலாளித்துவத்தை அழிக்கும் வல்லமையும் ஆற்றலும் கொண்டது பாட்டாளி வர்க்கமே என்ற முடிவுக்கு ஏற்கனவே மார்க்ஸ் வந்தடைந்தார். அதனை முதலாளித்துவம், போர்வெறி கொண்டு, நாடுகளை பங்குபோட்டுக்கொள்ளும் மூர்க்கத்தனத்தோடு, ஏகாதிபத்தியமாக வடிவெடுத்த சூழலில், பாட்டாளி வர்க்கப் புரட்சி என்ற கருத்தாக்கத்தை லெனின் வளமை கொண்டதாக மாற்றினார்.

  • புரட்சி எனும் சமூக சித்திரம் முதலாளித்துவத்தின் அழிவும், புரட்சியின் பிறப்பும் தவிர்க்க இயலாதது என்ற முடிவினை மார்க்சிய வழியில் வந்தடைந்த லெனின், அடுத்து சில கேள்விகளை எழுப்பினார். புரட்சி எனும் சமுக சித்திரத்தை தீட்டிடும் பணியினை யார் வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள்? எந்த வர்க்கம் புரட்சிக்கு. பாட்டாளி வர்க்கத்தின் இராணுவ அமைப்பானது, முக்கியமாக, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத் தின் இந்த மாபெரும் இலட்சியத்திற்காகத் தான் உருவாக் கப்படுகிறது. அடிைமைத்தளை களை உடைத்தெறியவும் பழைய உலகைத் தூக்கியெறியவும் கிளர்ந்தெழுகின்ற பாட்டாளி வர்க்கமும், புரட்சிகர மக்களும், புரட்சி இயக்கத்தினூடே, தமது சொந்த இராணுவ அமைப்பைக் கட்டாயம் கட்டியாக வேண்டும். ஏனெனில் ஒரு பெளதீகச் சக்தியை மற்றொரு. பெளதீகச் சக்தியினால்தான் வெல்ல முடியும்; முதலாளிகளின் ஆட்சியைத் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்க ஆட்சியை நிறுவுதல் என்ற வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற முடியும். ஆளும் வர்க்கமும் வரலாற்று அரங்கத்திலிருந்து தானாக வெளியேறச் சம்மதிக்காது. நிலைமை இப்படி இருக்க இந்த அமைப்பு முறையை கேள்வி கேட்காது இதற்குள்ளே சிக்குண்டு கிடக்க சொல்லும் நம்மிடையேய் உள்ளவர்கள் மார்க்சியவாதிகளா என்பதே என் கேள்வி.
  • லெனின் வாரிசுகள் மார்க்சிய லெனினியத்தை கற்று தேற வேண்டும் இவை காலத்தின் கட்டாயம்.

    லெனினும் தீவிரமாக இதனை எதிர் கொண்டார். பிற்போக்கு நிலப் பிரபுத்துவ, முதலாளித்துவ சித்தந்தங்களிலிருந்து பாட்டாளி வர்க்கம் தானாக மாறி புரட்சிகர வர்க்க உணர்வு பெற்றிடும் என்ற கருத்தை எதிர்த்துப் போராடியதோடு, இப்பிரச்னைக்கு ஒரு தீர்வினையும் லெனினியம் கண்டது. அதுதான் ”ஸ்தாபனம்” எனப்படும் கட்சி அமைப்பு முறை. முதலாளித்துவ அரசு ஒரு மைனாரிட்டி அரசு. ஏனெனில் அது சமூகத்தில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் முதலாளித்துவ வர்க்கங்களைப் பாதுகாத்து வளர்த்தெடுக்கிறது. அந்த அரசு உழைக்கும் மக்களை கடுமையாக சுரண்டுவதற்கும் தன்னை பலப்படுத்தி கொள்வதற்கும் இடையறாமல் முயற்சிக்கிறது. அது மட்டுமல்லாது, பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமை வராமல் தடுத்து, அது புரட்சிகர சக்தியாக வளர்ந்திடாமல் தடுக்க, இடைவிடாமல் முயன்று வருகிறது. எனவே அரசு பற்றிய பிரச்னைகளும், அதனை பாட்டாளி வர்க்கம் கைப்பற்றும் பிரச்னைகளும் முக்கியமானதாக லெனினியம் கருதுகிறது.

    மானுடம் அடிமைத்தனத்திலிருந்தும், சுரண்டலிலிருந்தும் விடுதலை பெற மார்க்ஸ் ஏங்கெல்ஸ் வடிவமைத்த தத்துவம் வழிகாட்டுகிறது. புரட்சி எனும் வரலாற்று கடமையை பாட்டாளி வர்க்கம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்படும் பிரச்சனைகளை தீர்த்திட லெனினியம் வழிகாட்டுகிறது.

    முதலாளித்துவம் வரலாற்றில் அந்திம சகாப்தமாக உள்ளது என்று மார்க்சியம் அறிவியல் பூர்வமாக எடுத்துரைக்கிறது. இயக்கவியல் வரலாற்று பொருள் முதல்வாதம் இந்த முடிவுக்கே இட்டுச் செல்கிறது. இதனை சொல்லுகிறபோது ஒரு தவறான புரிதல் இயல்பாக ஏற்படுகிறது.

    முதலாளித்துவம் பொருளாதார ரீதியில் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு, தானாக சோசலிசத்தை வந்தடையும் என்ற கருத்து புரட்சி இயக்கத்தில் தோன்றுகிறது. இதனை எதிர்த்த கருத்துப் போராட்டத்தை ரோசா லக்சம்பர்க் போன்ற போராளிகள் நிகழ்த்தியுள்ளனர்.


லெனினது எழுத்துக்கள் விரிவான வாசிப்பிற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். இது இன்றைய சூழலில் தேவைப் படுகிற உன்னதமான பெரும் பணி.

லெனின் புரட்சி பற்றித்தான் 24 மணி நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார் என்றால் அது மிகையாகாது. மார்க்சிய நிலைபாட்டில் நின்று, கள அனுபவங்களின் அடிப்படையில், சமகால அரசியல், சமூக, பண்பாட்டு, பொருளாதார தளங்களில் மார்க்ஸீய புரிதலை மேம்படுத்திக்கொண்டே இருந்தவர் லெனின். அந்த அடிப்படையில், அவர் வாழ்ந்த காலத்தில் ரஷ்யாவில் சோசலிச புரட்சி வெற்றிபெற தொழிலாளி-விவசாயி கூட்டு என்பது இன்றியமையாதது என்ற நிலைப்பாட்டிற்கு ஆழமான கள அனுபவமும் (குறிப்பாக, 1905 ரஷ்ய விவசாயிகளின் எழுச்சி) மார்க்சீய புரிதலும் லெனினை இட்டுச்சென்றது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜனநாயக புரட்சியில் விவசாயிகளின் பங்கு பற்றி லெனின் முன்வைத்த புரிதல் மார்க்சீயத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல் எனலாம்.

வெளி நாடுகளில் இருந்தாலும் லெனினின் செயல் சிந்தனை என அனைத்தும் `சோவியத் ரஷ்யா' கனவாகவே இருந்தது. வெகு தூரத்தில் இருந்தாலும் மக்களுக்கு தன் கருத்துகள் சென்று சேர வேண்டும் என எண்ணினார் லெனின். அதற்காக தொடங்கப்பட்டதே `புதுவாழ்வு, தீப்பொறி, உண்மை, சமூக ஜனநாயகவாதி' ஆகிய பத்திரிகைகள். இதில் பல புரட்சிகரக் கருத்துகளை கட்டுரைகளாக வடித்தார். படிப்போர் நெஞ்சங்களில் போராடத் தூண்டும் வகையில் அவரின் எழுத்துகள் இருந்தன. ஜார் ஆட்சியை வீழ்த்துவதைக் குறைந்தபட்ச செயல்திட்டமாகவும், அதே இடத்தில் சோசலிச அமைப்பை உருவாக்குவதை அதிகபட்ச செயல் திட்டமாகவும் கொண்ட ரஷ்ய சமூக ஜனநாயக் கட்சியை உருவாக்கினார். மக்களை ஒருமுகப்படுத்தி அணி திரட்டினார்.

ஒவ்வொன்றாக பார்ப்போம்

நரோத்னிக்குகளின் நிலையை விமர்சித்து ஒரு சரியான கட்சியை கட்டி புரட்சி நடத்த- 1870களின் நரோத்னிக்குகளின் தவறான புரட்சிகான அனுபவத்தை லெனின் தவிர்த்து, அவர்களின் துணிச்சல், வீரம் மற்றும் புரட்சிகர மனப்பான்மைக்காக அவர்களை மிகவும் மதித்தார், அதே நேரத்தில் லெனின் தாராளவாத நரோத்னிக்குகளை அம்பலப்படுத்தினார், மேலும் அவர்களின் சித்தாந்தத்தின் வர்க்க தோற்றம் மற்றும் வர்க்க சாரத்தை வெளிப்படுத்தினார். தாராளவாத நரோத்னிக்குகள் மார்க்சியத்தின் அரசியல் எதிரிகள், குட்டி முதலாளித்துவத்தின் சித்தாந்தவாதிகள் மற்றும் விவசாயிகளின் செல்வந்தர்கள், குலக் பிரிவினரின் நலன்களின் ஊதுகுழல்கள் என்பதை சுட்டிக் காட்டினார். தாராளவாத நரோத்னிக்குகளின் (குட்டி-முதலாளித்துவக் கோட்பாடுகளின்) பிற்போக்குத்தனமான தன்மையை விமர்சித்த லெனின், ரஷ்யாவில் சமூக-பொருளாதார உறவுகளில் நிலவும் முரண்பாடுகளை மறைக்க முயன்றதாகவும், நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களின் விடுதலைக்கான பாதுகாவலராக ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றுப் பங்கை அவர்கள் மறுத்ததாகவும், விவசாயிகளின் துயரமான நிலை, கிராமப்புறங்களில் வர்க்கப் போராட்டம் மற்றும் குலாக்குகளால் ஏழைகள் சுரண்டப்படுவதைக் குறைத்து மதிப்பிட்டதாகவும் விமர்சித்தார்.

சமூக வளர்ச்சியின் வரலாறு குறித்த நரோத்னிக்குகளின் கருத்துக்களை லெனின் அம்பலப்படுத்தினார். நரோத்னிக் கருத்துகளான “வரலாற்றை உருவாக்கியவர்கள் தனிப்பட்ட "ஹீரோக்கள்" ,மக்களைப் பொறுத்தவரை, அல்லது "கூட்டம்", அவர்களின் சொந்த வார்த்தையைப் பயன்படுத்தினால், அவர்கள் "ஹீரோக்களை" மட்டுமே கண்மூடித்தனமாகப் பின்பற்ற முடியும்” என்பதை லெனின் அறிவியல் பூர்வமாக விளக்கி இக் கருத்துக்களை அம்பலப்படுத்தினார். அகநிலைவாதத்தால் ஊடுருவிய தாராளவாத நரோத்னிக்களின் சித்தாந்தத்திற்கு, வரலாற்றைப் பற்றியபொருள்முதல்வாத புரிதல் இன்மையை வெளிப்படுத்தினார். வரலாற்றை உண்மையில் உருவாக்கியவர்கள் மக்கள்தான் என்பதை லெனின் சுட்டிக் காட்டினார். முன்னணி வர்க்கத்தின் அதே நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து, சமூக வளர்ச்சியின் வளர்ந்து வரும் தேவைகளைப் பற்றிய சரியான பார்வையை எடுத்தால் மட்டுமே சிறந்த நபர்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்க முடியும்.

"மக்களின் நண்பர்கள்" என்ற நூலில், லெனின் போலி சோசலிசக் கோட்பாடுகளை கொள்கை அடிப்படையில் விமர்சித்தார். மார்க்சியக் கோட்பாட்டின் சாரத்தை முன்வைத்து, அரசியல் மற்றும் சமூக விடுதலைக்கான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் சித்தாந்த ஆயுதமாக மார்க்சியத்தின் மகத்தான முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மார்க்சிய அறிவியலின் நோக்கம், முதலாளித்துவத்தின் கீழ் உள்ள அனைத்து வகையான சமூக முரண்பாடுகளையும் அம்பலப்படுத்துவதும், முதலாளித்துவ கூலி அடிமைத்தனத்திலிருந்து வெளியேறும் வழியைக் காட்டுவதும் ஆகும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தப் படைப்பில், தொழிலாளர்களிடையே மார்க்சியக் கருத்துக்களைப் பரப்பாமல் ஒருவர் பாட்டாளி வர்க்கத்தின் தலைவராக இருக்க முடியாது என்பதை லெனின் தெளிவுபடுத்தினார். அதேபோல் தொழிலாள வர்க்கத்தினரிடையே முறையாகப் பணியாற்றாமல் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை வழிநடத்த முடியாது. படிப்பு, பிரச்சாரம், அமைப்பு - ரஷ்ய மார்க்சிஸ்டுகளின் பணியை லெனின் இப்படித்தான் வரையறுத்தார். தத்துவார்த்த மற்றும் நடைமுறைச் செயல்பாடுகள் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட வேண்டும். கோட்பாடு நடைமுறைக்கு சேவை செய்ய வேண்டும், "மக்களின் நண்பர்கள்" யார் என்பதில் லெனின் விளக்கிய மிக முக்கியமான கருத்துக்களில் ஒன்று மார்க்சிய தொழிலாளர் கட்சியை நிறுவும் யோசனையாகும். லெனின் இந்த முக்கிய பணியை ரஷ்ய மார்க்சிஸ்டுகள் முன் வைத்தார், அதை அடைய பல ஆண்டுகளாக போராடினார். இந்தப் போராட்டத்திற்கு அவர் தனது அரசியல் மற்றும் ஒழுங்கமைக்கும் மேதைமை, ஒரு கம்யூனிஸ்ட்டின் அனைத்து ஆற்றலையும் ஆர்வத்தையும் வழங்கினார்.

"மக்கள் நண்பர்கள்" யார்" என்ற புத்தகத்தில், ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் தலைவராக, சமூகத்தின் முன்னணி புரட்சிகர சக்தியாக, வெற்றிகரமான சோசலிசப் புரட்சிக்காக, அனைத்து உழைக்கும் மற்றும் சுரண்டப்பட்ட மக்களின் விடுதலைக்காக ஜாரிசம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான நிலையான போராளியாக, அதன் வரலாற்றுப் பங்கை உறுதிப்படுத்திய ரஷ்யாவில் முதல் மார்க்சிய கோட்பாட்டாளர் லெனின் முன்னுக்கு வந்தார். "சமூக ஜனநாயகவாதிகளின் அரசியல் செயல்பாடு, ரஷ்யாவில் தொழிலாள வர்க்க இயக்கத்தின் வளர்ச்சியையும் அமைப்பையும் ஊக்குவிப்பதில் உள்ளது," என்று அவர் எழுதினார், "இந்த இயக்கத்தை, வழிகாட்டும் யோசனை இல்லாத, அவ்வப்போது எதிர்ப்பு, 'கலவரங்கள்' மற்றும் வேலைநிறுத்தங்கள் போன்ற முயற்சிகளின் தற்போதைய நிலையிலிருந்து, முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக இயக்கப்பட்ட, பறிமுதல் செய்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும், உழைக்கும் மக்களின் ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பை ஒழிப்பதற்கும் உழைக்கும் முழு ரஷ்ய தொழிலாளர் வர்க்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டமாக மாற்றுவதில் உள்ளது. இந்த நடவடிக்கைகளின் அடிப்படையானது, ரஷ்ய தொழிலாளி ரஷ்யாவின் முழு உழைக்கும் மற்றும் சுரண்டப்படும் மக்களின் ஒரே மற்றும் இயற்கையான பிரதிநிதி என்ற மார்க்சிஸ்டுகளின் பொதுவான நம்பிக்கையாகும்." என்று விரிவாக விளக்கினார் லெனின் ( V. I. Lenin, Collected Works, Vol. 1, pp. 298-99.)

மார்க்சியத்தை திருத்துவோருக்கு எதிராக

லெனின் மார்க்சியத்தின் வரலாற்று விதி குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார்

மேற்கு ஐரோப்பாவின் சமூக-ஜனநாயகக் கட்சிகளில் சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சியையும், மார்க்சியத்தின் புரட்சிகர சாரத்தை திருடி சந்தர்ப்பவாதிகள் மேற்கொண்ட முயற்சிகளையும், மார்க்சியத்தை தவறாகப் புரிந்துகொண்டதன் மூலம், சந்தர்ப்பவாதிகள் தொழிலாள வர்க்க இயக்கத்தில் கட்சியின் பங்கை மதிப்பிழக்கச் செய்தனர், தொழிற்சங்கவாதத்தை புகழ்ந்தனர், அரசியல் போராட்டத்தின் முக்கியத்துவத்தை வீணாக்கினர், மேலும் கோட்பாட்டின் பங்கையும் குறைத்து மதிப்பிட்டனர்.

1896-98 ஆம் ஆண்டில் ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதியான எட்வர்ட் பெர்ன்ஸ்டீன் சோசலிசத்தின் சிக்கல்கள் என்ற பொதுத் தலைப்பின் கீழ் தொடர் கட்டுரைகளை வெளியிட்டார், பின்னர் (1899 இல்) சோசலிசத்தின் முன்நிபந்தனைகள் மற்றும் சமூக-ஜனநாயகவாதிகளின் பணிகள் என்ற தலைப்பில் புத்தக வடிவில் வெளியிடப்பட்டார், அதில் அவர் மார்க்சியத்தின் அடிப்படைக் கொள்கைகளை வெளிப்படையாகத் திருத்தி, மார்க்சியத்திற்கு பதிலாக ஒரு தாராளவாத சீர்திருத்தக் கோட்பாட்டை மாற்ற முயன்றார். பெர்ன்ஸ்டீன் கூறினார் "இயக்கம்தான் எல்லாமே, இறுதி இலக்கு ஒன்றுமில்லை" என்ற சந்தர்ப்பவாத முழக்கத்தை அறிவித்தார், இதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டத்தை நிராகரித்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட வேண்டும் என்று வாதிட்டார். போலி சோசலிச சொற்றொடர்களின் மறைவின் கீழ், திருத்தல்வாதிகள் மார்க்சியத்திற்கு எதிராக, பாட்டாளி வர்க்க புரட்சியின் கோட்பாட்டிற்கு எதிராக, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு எதிராக மற்றும் சோசலிசத்தின் வெற்றிக்கு எதிராக போராடினர்.

பெர்ன்ஸ்டீனின் புத்தகமும் பத்திரிகைகளில் அவரது சக சிந்தனையாளர்களின் அறிக்கைகளும் லெனினை கோபப்படுத்தியது. திருத்தல்வாதிகளுக்கு எதிராக "ஒரு கடுமையான போர் நடத்தப்பட வேண்டும்" என்பதை அவர் புரிந்துகொண்டார். பிளெக்கானோவின் பொருள்முதல்வாத வரலாறு குறித்த எஸ்கிஸ் மற்றும் ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகளின் இதழான டைநியூ ஜீட்டில் வெளியிடப்பட்ட பெர்ன்ஸ்டீனின் திருத்தல்வாதத்திற்கு எதிரான அவரது கட்டுரைகளைப் படித்ததில் மிகுந்த திருப்தி அடைந்தார் லெனின். காண்டின் தத்துவத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான மற்றும் கருத்துமுதல்வாதக் கோட்பாடுகளை மீண்டும் உயிர்ப்பித்து வந்த நவ-காண்டியனிசத்தை கடுமையாக எதிர்த்தார். முதலாளித்துவ பேராசிரியர்களிடமிருந்து தனது குறிப்பைப் பெற்று, "காண்டிற்குத் திரும்பு" என்று அறிவித்த பெர்ன்ஸ்டீனால் நியோ-காண்டியக் கருத்துக்கள் நிலைநிறுத்தப்பட்டன. பெர்ன்ஸ்டீனுக்கு எதிரான காவுட்ஸ்கியின் புத்தகத்தைப் பெற்றவுடன், பெர்ன்ஸ்டீனும் சமூக-ஜனநாயகத் திட்டமும். விமர்சன எதிர்ப்பு, லெனினும் குருப்ஸ்காயாவும் பதினைந்து வாரங்களில் அதை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்தனர். இந்த மொழிபெயர்ப்பின் கையெழுத்துப் பிரதி ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு அனுப்பப்பட்டது. இது மினுசின்ஸ்க் மாவட்டத்திலும் பிற இடங்களிலும் நாடுகடத்தப்பட்ட சமூக-ஜனநாயகவாதிகளால் வாசிக்கப்பட்டது.

பெர்ன்ஸ்டீனைப் போலவே, அறிவியல் கம்யூனிசக் கோட்பாட்டின் புரட்சிகர உள்ளடக்கத்தைத் தாக்கிய ரஷ்ய மார்க்சியத்தை சிதைப்பவர்களையும் லெனின் கடுமையாக விமர்சித்தார். " (V. I. லெனின், தொகுப்பு படைப்புகள், தொகுதி. 4, பக். 277.) புரட்சிகர சமூக-ஜனநாயகவாதிகள் மார்க்சியத்தின் திருத்தத்திற்கு எதிராக இடைவிடாத போராட்டத்தை நடத்த வேண்டும் என்றும் புரட்சிகர கோட்பாட்டின் தூய்மையை உறுதியாக நிலைநிறுத்த வேண்டும் என்றும் அவர் கருதினார்.

பெர்ன்ஸ்டீனும் "சட்ட மார்க்சிஸ்டுகள்" மார்க்ஸின் போதனைகளைத் திருத்துவதற்கான முயற்சிகளை எதிர்த்தும் இவர்களுக்கு எதிராக தொடர்ந்து சித்தாந்த போர் லெனின் உறுதியாகத் நடத்தினார், மேலும் இந்தப் போராட்டத்தை ஒரு "சிறந்த சேவை" என்று கருதினார்.

பெர்ன்ஸ்டீனை ரஷ்யாவில் பின்பற்றுபவர்கள் (ஸ்ட்ரூவ், புல்ககோவ் மற்றும் பலர்) ஈடுபட்ட "விமர்சனத்தின்" முழுமையான ஆதாரமற்ற தன்மையை லெனின் வெளிப்படுத்தினார். அந்த நேரத்தில் மிக முக்கியமான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினையைப் பற்றி லெனின் கவலைப்பட்டார், அதாவது, இளம் ரஷ்ய தொழிலாள வர்க்க இயக்கம் எடுக்கும் பாதை. லெனின் தனது அனைத்து ஆற்றல்களையும் தொழிலாள வர்க்க இயக்கத்திற்குள் ஒரு சோசலிச உணர்வைப் புகுத்துவதிலும், அதன் வளர்ச்சியை ஒரு புரட்சிகரப் பாதையாக வழிநடத்துவதிலும் குவித்தார், அது மட்டுமே சரியானது என்பதனால்.

லெனின் “சமூக-ஜனநாயக சந்தர்ப்பவாதத்தின் சாராம்சத்தை", விரிவான விமர்சனத்திற்கு உட்படுத்தினார். அவர் "கிரெடோ"வுக்கு எதிராக "ரஷ்ய சமூக-ஜனநாயகவாதிகளின் ஒரு எதிர்ப்பு" என்ற கடுமையான கண்டனக் கட்டுரையை எழுதினார், மேலும் ரஷ்ய சமூக-ஜனநாயகவாதிகள் பொருளாதார வல்லுநர்களின் சந்தர்ப்பவாதக் கருத்துக்களுக்கு எதிராக சித்தாந்த போருக்கு அழைப்பு விடுத்தார், அவர்கள் மார்க்சியத்தின் அடிப்படைக் கொள்கைகளைத் திருத்தி, ரஷ்யாவில் ஒரு மார்க்சிய புரட்சிகர பாட்டாளி வர்க்கக் கட்சியை நிறுவ வேண்டிய அவசியத்தை மறுத்தனர். இதனை லெனின், "மார்க்சியக் கோட்பாட்டைச் சுருக்கவும், புரட்சிகர தொழிலாளர் கட்சியை சீர்திருத்தவாதக் கட்சியாக மாற்றவும்" ஒரு முயற்சி என்று சுட்டிக்காட்டினார், மேலும் இந்த சந்தர்ப்பவாதக் கருத்துக்களை ரஷ்யாவிற்கு நுழைவதை மக்கள் உறுதியாக எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் போராட்டங்கள் “எதிர்ப்பு", என்ற அடிப்படையில் “ரஷ்யாவின் தொழிலாள வர்க்கம் பொருளாதாரப் போராட்டத்திற்குள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்”, அதே நேரத்தில் "தாராளவாத எதிர்க்கட்சி கூறுகள்" மார்க்சிஸ்டுகளின் "பங்கேற்புடன்" "சட்ட வடிவங்களுக்காக" போராட வேண்டும் என்ற கருத்துக்குக் பதில் கூறிய லெனின். "அத்தகைய ஒரு திட்டத்தைப் பயன்படுத்துவது ரஷ்ய சமூக-ஜனநாயகத்தின்" “அரசியல் தற்கொலைக்கு சமம்” என்று லெனின் கோபமாக எழுதினார்.

லெனின் ஒரு புரட்சிகர மார்க்சியக் கட்சியின் அமைப்பாளராக ஆனார், இதன் மூலம் மற்ற எந்தக் கட்சியிலிருந்தும் வேறுபட்ட தொழிலாள வர்க்கக் கட்சி ஒரு புதிய வகைக் கட்சியாக இருக்க வேண்டும் என்ற கேள்வியை முன்வைத்த முதல் மார்க்சியர் இவர்தான். அவை இதற்கு முந்தைய படிப்பினைகளிலிருந்து பெறப்பட்டவையே.

நரோடிசம், "சட்ட மார்க்சியம்", திருத்தல்வாதம் (பெர்ன்ஸ்டீனிசம்) மற்றும் "பொருளாதாரம்" ஆகியவற்றை அதன் வகையாக லெனினின் முந்தைய போராட்டம் அனைத்தும் அவர் நிர்ணயித்த வரலாற்றுப் பணியைத் தீர்ப்பதற்கு அவசியமான நிபந்தனையாக இருந்தது - ரஷ்யாவில் ஒரு புரட்சிகர மார்க்சியக் கட்சியை உருவாக்குதல். லெனின் இந்தக் கட்சியை ஒரு புதிய வகைக் கட்சியாக மட்டுமே கருதினார், சந்தர்ப்பவாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகளை தங்கள் அணிகளில் பொறுத்துக்கொண்ட மேற்கு ஐரோப்பியக் கட்சிகளிலிருந்து அடிப்படையில் வேறுபட்டது. லெனின் போராடிய உருவாக்கத்திற்கான கட்சி சந்தர்ப்பவாதம், திருத்தல்வாதம் மற்றும் சமரசத்தின் எந்தவொரு வெளிப்பாட்டிற்கும் சமரசம் செய்ய முடியாததாக இருக்க வேண்டும். பழைய வகைக் கட்சிகள் - மேற்கு ஐரோப்பாவின் சோசலிசக் கட்சிகள் - சட்டபூர்வமான மற்றும் பாராளுமன்றப் போராட்டத்தின் நிலைமைகளில் உருவாகி வளர்ந்தன. முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான புரட்சிகரப்போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தைப் பயிற்றுவிக்க மறுத்து, அவர்கள் படிப்படியாக தங்கள் புரட்சிகரத் தன்மையை இழந்து கொண்டிருந்தனர். அவர்கள் சந்தர்ப்பவாதத்திற்கு, முதலாளித்துவத்துடன் சமரசப் பாதைக்கு சறுக்கிக் கொண்டிருந்தனர்.

லெனின் முடிவாக கண்டடைந்தது:-தொழிலாள வர்க்க இயக்கம் பாட்டாளி வர்க்கத்தின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முன்னணிப் படையான புரட்சிகர மார்க்சிய கட்சியால் வழிநடத்தப்பட்டால் ரஷ்யாவில் புரட்சியின் வெற்றிக்கான பெரும் வாய்ப்பை அவர் தெளிவாகக் கண்டார். தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர மார்க்சிய முன்னணிப் படையான போல்ஷிவிக் கட்சி, லெனினின் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டது.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அவரது நடவடிக்கைகள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொண்ணூறுகளில் குறிப்பிட்ட உத்வேகத்தைப் பெற்ற வெகுஜன தொழிலாள வர்க்க இயக்கத்தின் எழுச்சியின் தொடக்கத்துடன் ஒத்துப்போனது. ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன், தொழிலாள வர்க்கம் வேகமாக வளர்ந்தது. பெரிய தொழிற்சாலைகள், ரயில்வேக்கள் மற்றும் சுரங்கத் தொழிலில் ஏற்கனவே கிட்டத்தட்ட மூன்று மில்லியன் தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். அவர்களின் வாழ்க்கை கடினமானதாகவும், துயரமானதாகவும் இருந்தது. வேலை நாள் பன்னிரண்டு முதல் பதின்மூன்று மணி நேரம் வரையிலும், சில தொழில்களில் பதினைந்து முதல் பதினாறு மணி நேரம் வரையிலும் இருந்தது. வியர்வை சிந்தும் தொழிலாளிக்கு குறைந்த ஊதியம் கிடைத்தது, மேலும் தொழில்துறையில் பரவலாகப் பணியாற்றிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, வெறும் அற்பமான ஊதியம் மட்டுமே கிடைத்தது. முதுகெலும்பை உடைக்கும் உழைப்பு, அரை-பட்டினி மற்றும் மோசமான வாழ்க்கை நிலைமைகள் பாட்டாளி வர்க்க மக்களை எதிர்ப்பு தெரிவிக்கவும், எதிர்த்துப் போராடவும் தூண்டின. ஆனால், சுரண்டல், ஒடுக்குமுறை மற்றும் வறுமைக்கு எதிரான தொழிலாளர்களின் தன்னிச்சையான, அவ்வப்போது நடந்த போராட்டங்கள் பொதுவாக அவர்களின் தோல்வியில் முடிவடைந்தன. தற்போதுள்ள அமைப்பின் மீதான அதிருப்தியைக் கூறத் துணிந்தவர்கள் கடுமையாக துன்புறுத்தப்பட்டனர், சிறையில் அடைக்கப்பட்டனர், நாடுகடத்தப் பட்டனர் அல்லது தண்டனைக்குரிய அடிமைத்தனத்திற்குக் கண்டனம் செய்யப்பட்டனர். முதலாளிகளுக்கு எதிரான போராட்டம் பயனுள்ளதாக இருக்க வேண்டுமென்றால், அது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் நடத்தப்பட வேண்டும் மற்றும் அறிவியல் சோசலிசத்தின் புரட்சிகரக் கருத்துக்களால் நிரப்பப்பட வேண்டும். லெனினால் தெளிவாகக் காணப்பட்ட மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் மார்க்சிஸ்டுகள் முன் வைக்கப்பட்ட பணிகள், தொழிலாளர்களை அரசியல் ரீதியாகக் கல்வி கற்பித்தல், ஒழுங்கமைத்தல், அவர்களின் சோசலிச நனவை வளர்ப்பது மற்றும் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் பொதுவான நோக்கங்கள் மற்றும் பாதைகளை அவர்களுக்கு விளக்குதல். தொழிலாளர் வட்டங்களின் பயிற்றுவிப்பாளராக லெனின் விளங்கியது சிறப்பியல்பு, அவர் தொழிலாளர்களுக்குக் கற்பித்தது மட்டுமல்லாமல், அவர்களிடமிருந்து தொடர்ந்து கற்றுக்கொண்டார், அவர்களின் வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகளைப் படித்தார்.

இங்குள்ள நிலைமைகளை நாம் புரிந்துக் கொள்ள தொழிற்சங்க பிரச்சினை மற்றும் பல்வேறு பிரச்சினைக்கு போராடும் முறை இந்த அமைப்பிலிருந்து விடுதலைக்கான பாதையை முன்வைத்து நடக்கிறதா என்றால் ஆளும் வர்க்கத்தின் தேவையை ஒட்டியே நடந்தேறிக் கொண்டுள்ளது. ஆனால் சுரண்டலிலிருந்து விடுதலைக்கான உண்மையான பணி இவை அல்ல! நாம் கற்று தேர்வது எப்பொழுது?

ஆசான் லெனினை கற்றறிவோம். அடக்குமுறை ஒடுக்குமுறை மற்றும் எல்லா சுரண்டலிலிருந்து விடுதலைக்கான தத்துவம் மார்க்சிய லெனினியம் மட்டுமே... தொடரும் 

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்