தமிழர் சமுதாயமும் இலக்கியமும்-கைலாசபதி சமுகவியலும்

நேற்று உறையாடிய பொழுது ஒரு இலக்கியவாதி கொடுத்த ஆவணமே இந்த எழுத்தின் சாரம்.நம் சமூகத்தை புரிந்துக் கொள்வதும் சரியான முறையில் நமக்கான கண்ணோட்டத்தை பெறவும் நமக்கான வழிகாட்டிகளே நமது முன்னோடிகளின் எழுத்துகள் அவற்றை வாசித்து அறிந்தால் நமது சிந்தனைமுறை சிறக்கும் என்பேன்... 

கைலாசபதி சமுகவியலும் இலக்கியமும்

 தமிழர் சமுதாயமும் இலக்கியமும்

தமிழிலக்கியப் பரப்பின் பெரும் பகுதியை - ஏறத்தாழ எல்லாக் காலகட்ட இலக்கிய ஆக்கங்களையுமே - கருத்திற் கொண்டு ஆய்வில் ஈடுபட்டவர் கைலாசபதி, குறிப்பிடத்தக்க வரலாற்று முக்கியத்துவமுடைய இலக்கிய ஆக்கங்கள் மற்றும் இலக்கிய வகைகள் என்பவற்றின் இயல்பு அவற்றின் தோற்றத்துக்குக் களமாகத் திகழ்ந்திருக்கக் கூடிய சமுதாயச் சூழல்கள் என்பன தொடர்பாக அவர் நுனித்து நோக்கியுள்ளார். இவ்வகையில் அவர் புலப்படுத்தி நின்ற பார்வைகள், முன் வைத்துள்ள முக்கிய முடிவுகள் என்பன இவ்வியலில் நோக்கப்படுகின்றன.

தமிழிலக்கியங்களையும் அவற்றுக்குத் தளங்களாகத் திகழ்ந்திருக்கக்கூடிய சமுதாய வரலாற்றுச் சூழல்களையும் காலகட்டங்களாக வகைப்படுத்துவதில் கைலாசபதி தமது காலத்துக்கு முற்பட்ட மற்றும் சமகால ஆய்வாளர் பலரிலிருந்தும் வேறுபட்டார். பொதுவாக இலக்கிய கர்த்தாக்களையும் இலக்கிய வகைகளையும் மையப்படுத்தியும், நூற்றாண்டுகளின் அடிப்படையிலும், ஆதிக்கம் பெற்றிருந்த அரசமரபு மற்றும் பண்பாட்டுக் கருத்தியல்கள் என்பவற்றைக் கருத்திற் கொண்டும் காலகட்டங்களை வகுப்பதே கைலாசபதி காலம் வரை நிலவிவந்துள்ளஅணுகுமுறைகளாகும். சங்க காலம், சங்கமருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம், இருபதாம் நூற்றாண்டு என்பனவாக வி. செல்வநாயகம் மேற்கொண்ட இலக்கிய வரலாற்றுக் காலப் பகுப்பே கைலாசபதி காலத்தில் ஆய்வாளர் பலராலும் பொதுவாக ஏற்கப்பட்டிருந்தது. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தமிழறிஞருள் ஒருவரான கே.என். சிவராஜபிள்ளை தமிழிலக்கியப் பரப்பை இயற்கைநெறிக் காலம், அறநெறிக்காலம், சமயநெறிக் காலம் எனப்பண்பாட்டுக் கருத்தியல் களினடிப்படையில் வகைப்படுத்தலாம் என்ற எண்ணத்தை முன் வைத்திருந்தார்

இதனை, கைலாசபதியின் சமகாலத்தவரும் உடன் பணியாற்றியவருமான ஆ. வேலுப்பிள்ளை தமது தமிழ் இலக்கியத்திற் காலமும் கருத்தும் என்ற நூலில் செயற்படுத்தினார். இவ்வாறான சூழலில் கைலாசபதி மேற்படி பார்வைகளிலிருந்து வேறுபட்டு, தாம் சார்ந்திருந்த மார்க்சியப் பார்வையினடிப்படையில் புதிய பகுப்புமுறையை மேற்கொண்டார். தொன்மையான இனக்குழு, பழம் பொதுமைச் சமூகம், அடிமைச் சமூகம், நிலவுடைமைச் சமூகம், முதலாளியச் சமூகம் என்பனவாகத் தமிழர் சமூக வரலாற்றுக் கட்டங்களை நோக்கும் முறைமையை அவரது ஆய்வுகளில் கண்டுணரலாம்.

இவ்வாறான பார்வையின் ஊடாக அவர் தமிழரின் சங்க இலக்கியக் காலப்பகுதியை, பழம்பொதுமை நிலையிலிருந்து உடமை நிலைக்கு மாறிக் கொண்டிருக்கும் காலகட்டமாகவும் அவ்வகையில் அதனை ஒரு வீரயுகம் ஆகவும் (Heroic Age) கண்டார். திருக்குறள், சிலப்பதிகாரம் என்பன எழுந்த வரலாற்றுச்சூழலை வணிகவர்க்கத்தின் எழுச்சிக்காலமாகத் தரிசித்தார் பக்தி இலக்கியச் சூழலையும் சோழப் பெருமன்னர் ஆட்சிக் காலத்தையும் நிலவுடைமைசார் வேளாள வார்க்கத்தினரின் எழுச்சிக்காலமாக இனங்காட்டினார், ஐரோப்பியர் காலத்தை நிலவுடைமைவர்க்கம் தளர்வடைந்து முதலாளியம் உருப்பெறத் தொடங்கிய காலப் பகுதியாக விளக்கினார்.

இவ்வாறு நோக்கப்பட்ட காலப்பகுதிகளின் சமூக வர்க்கச் சூழ்நிலைகளுக்கும் அவ்வக்கால இலக்கிய வகைகள் என்பவற்றுக்குமான உறவு நிலைகளைத் தர்க்கரீதியாக விளக்கும் முயற்சியில் அவர் கூடிய கவனம் செலுத்தியுள்ளார்.சங்கப் பாடல்களும் வீரயுகமும்சங்கப் பாடல்கள் பற்றியும் அது எழுந்த சமுதாயச்சூழல் பற்றியும் கைலாசபதி புலப்படுத்தியுள்ள பார்வைக்கு முக்கிய சான்றாக அமைவது அவரின் கலாநிதிப் பட்ட ஆய்வானTamil Heroic Poetry. இத்தொடர்பில் சில கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். இவற்றில் அவர் சங்கப் பாடல்களைப் பண்டைய கிரேக்க இலக்கியங்களுடன் ஒப்பு நோக்கியுள்ளார். இந்த ஒப்பு நோக்கின் ஊடாக சங்கப் பாடல்கள் எழுந்த காலப் பகுதியைத் தமிழரின் வீரயுகம் என்றும் அப்பாடல்கள் வாய்மொழிப் பாடல்களாக உருவானவை என்றும் முடிவு செய்துள்ளார்.

சங்க இலக்கியங்கள் பண்டைய கிரேக்க மற்றும் மேலைத் தேய இலக்கியங்களுடன் ஒப்புநோக்கத்தக்கன என்ற எண்ணக்கருவண. ஜி.யு போப், என். கே. சித்தாந்தா, எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார், எஸ். வையாபுரிப் பிள்ளை முதலியோரால் முன்னரே உருவான ஒன்றாகும். இந்த எண்ணக்கருவுக்கு ஆய்வுநிலையில் வடிவம் தந்த வகையில் கைலாசபதியின் மேற்குறித்த ஆய்வேடு வரலாற்றுமுக்கியத்துவமுடையது. சி.எம். பெளரா, சாட்விக் தம்பதியர் மற்றும் மில்மன்பரி ஆகிய மேனாட்டு ஆய்வாளர்களின் கோட்பாடுகள் கைலாசபதியின் இந்த ஒப்பியல் ஆய்வுக்குப் பெரிதும் துணை புரிந்துள்ளன.

'வீரயுகம்' என்பது சமுதாய வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைக் குறிப்பது. சமுதாய நிலையிலும் இலக்கியப் பாடுபொருள் நிலையிலும் உடல் வீரம் தனிக் கணிப்பைப் பெறும் காலகட்டம் இது. பண்டைய பழம் பொதுமை நிலையிலிருந்து உடைமையுணர்வை நோக்கிய வரலாற்றுச் செல்நெறியில் தனி மனிதக் கொள்கை, அரசு நிறுவனம் என்பன உருவாகும் சூழலில் இவ்வாறு உடல்வீரம் தனிக் கணிப்பைப் பெறும். இவ்வீரத்தைப் போற்றும் கலை இலக்கியச் செயற்பாடுகளும் உருப்பெறும். இவ்வாறான ஒரு 'சமூக-கலை இலக்கிய வரலாற்றுச் செல்நெறியை மேற்சுட்டிய மேற்றிசை ஆய்வாளர்கள் மேலைத் தேய வரலாற்றில் கண்டுகாட்டினர். இவற்றைக் கவனத்திற் கொண்ட கைலாசபதி தமிழின் பண்டைய இலக்கியப் பரப்பை இத்தகு பார்வைக்கு உட்படுத்தினார். 'வீரயுகம் தொடர்பான கைலாசபதியின் மனப் பதிவு வருமாறு:

  • "அநாகரிக நிலையிலிருந்து நாகரிக நிலைக்குச் சமுதாயம் மாறும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் குழுக்களாகவும் குலங்களாகவும் இருந்த வாழ்க்கை அமைப்பைத் தனி மனிதக் கொள்கை உடைத்தெறிந்து வலுக்கொள்கையின் அடிப்படையில் அரசுகளை நிறுவும் சண்டைகள் நிறைந்த வரலாற்று நிலையை வீரயுகம் என்றழைப்பர்?"

தமிழரின்சங்கப்பாடல்கள்காலசமுதாயத்தைஇத்தகுஒருவரலாற்றுக்கட்டமாகவே கைலாசபதி காண்கிறார்.

"புராதன வாழ்க்கையிலே முதலில் தோன்றிய குலங்கள், அவற்றின் விரிவாக அமைந்த குடிகள், அத்தகைய குடிகள் சில சேர்ந்த இணைப்புக் குலங்கள் ஆகியன முட்டி மோதிப் பொருந்திய நிலையிலே, அளவு மாறுபாடு குணமாறுபாடாக மாறியதே சங்ககால அரசியல் நிறுவனமாகும்."

எனச் சங்கப் பாடற்கால சமூக - அரசியற் பகைப்புலத்தை அவர் இனங்காட்டுகிறார்.

இவ்வாறு சங்ககால வரலாற்றுப் போக்கை இனங்காட்டிய அவர் சங்கப் பாடல்களிற் பெரும்பான்மையானவை மேற்படி வரலாற்றுச் சூழலில் வாய்மொழிப் பாடல்களாக உருவானவை என்ற கருத்தை முன் வைத்தார்

வாய்மொழி இலக்கியம் என்பது குறித்த ஒரு காலகட்டத்தில் குறித்த ஒரு புலவராற் படைக்கப்படாதது; மக்களின் அநுபவங்களினடியாக உருவாகிச் செவிவழியாகப் பேணப்படுவது. குறித்த சிலவகை (Themes),(Situational Aspects), வாக்கியத் தொடர்கள், தொடர்களின் பகுதிகள் என்பன மீட்டும் மீட்டும் பயில்வது வாய்மொழி இலக்கியப் பொதுப்பண்பாகும். சங்கப் பாடல்களில் இவ்வாறான பொதுப்பண்புகள் பயின்றுள்ளமை கைலாசபதியின் மேற்படி கருதுகோளுக்கு - சங்கப் பாடல்கள் பல வாய்மொழிப் பாடல்களாக உருவானவை என்ற கணிப்பிற்கு - அடிப்படையாயிற்று.

சங்கப் பாடல்களைப் பண்டைய கிரேக்க இலக்கியங்களோடு ஒப்பிடும் கைலாசபதியின் பார்வை, அணுகுமுறை என்பன தமிழ் ஆய்வுலகில் பலராலும் மதித்து வரவேற்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து சிலர் இவ்வகையில் ஆராய முற்பட்டனர். கதிர். மகாதேவனின் ஒப்பிலக்கிய நோக்கில் சங்க காலம் என்ற ஆய்வு இவ்வகையிற் குறிப்பிடத்தக்கது

இவ்வாறு கைலாசபதியின் ஒப்பியல் நோக்கு, அணுகுமுறை என்பன மதிக்கப்பட்டாலும் சங்கப் பாடல்களை வாய்மொழிப் பாடல்களாகக் காணும் அவரது கருதுகோள் அறிஞர்கள் முழுநிலையில் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்பதை இங்கு சுட்டுவது அவசியம். சங்கப் பாடல்களில் வாய்மொழி இலக்கியப் பண்புகள் பயின்றுள்ளன. எனினும் அவை எழுத்திலக்கியங்களாக உருவானவை என்பதே அறிஞர் பலராலும் ஒப்ப முடிந்த கருத்தாகும். சங்கப் பாடல்களின் தோற்றத்துக்கு முன் வாய்மொழிப் பாடல் மரபு நிலவி வந்துள்ளது. அம்மரபினடியாக உருவாகி எழுத்திலக்கியமாக வரி வடிவம் பெற்றவையே இன்று எமக்குக் கிடைக்கும் சங்கப் பாடல்கள். இதுவே ஆய்வாளர்களின் பொதுவான கருத்துநிலைசங்கப் பாடல்களின் உருவாக்கம் தொடர்பாக நிலவி வருகின்ற மேற்படி கருத்து நிலைகள் தொடர்பாக ஒரு குறிப்பை இங்கு முன் வைப்பது அவசியமாகிறது.

கைலாசபதியவர்களும் அவரை அடியொற்றிய பிற ஆய்வாளர்களும் எடுத்துக் காட்டியுள்ளவாறு சங்கப் பாடல்களில் வாய்மொழி இலக்கியப் பண்புகள் பயின்றுள்ளமை தெளிவு. மேலும் வீரயுகத்தின் பொதுப் பண்பு என்றவரையில் பாணர், கூத்தர், பொருநர், விறலி முதலியவர்கள் தலைவன் புகழை வாய்மொழியாகப் புகழ்ந்தோதும் இயல்பிலான பாடல்கள் சங்கப் பாடற்பரப்பில் உள்ளன என்பதையும் அறிவோம். சங்கப் பாடல்கள் வாய்மொழிப் பாடல்களாக உருவானவை என்ற கருதுகோளுக்கு இவையே அடிப்படை,வாய்மொழிப் பாடல்கள் எனப்படுபவை பொதுவாக ஆசிரியர் பெயர் அறியப்படாதவை. ஆனால் சங்கப் பாடல்கள் ஆசிரியர் பெயர் அறியப்பட்டவை. 473 புலவர்களால் பாடப்பட்ட 2381 பாடல்கள் கொண்ட இலக்கியப் பரப்பு அது. புலவர்கள் எனப்படுபவர்கள் மேற்சுட்டிய பாணர், கூத்தர் முதலியவர்களிலிருந்து வேறுபட்டவர்கள். பாணர் முதலி யவர்களுக்கு அரசர்கள், வீரர்கள் என்போரின் செயல்வீரமே முக்கிய பாடுபொருள். போர்க்களத்திலும், அரசவைகளிலும் இசைப் பண்புடன் பாடுவது இவர்களது பாணி. ஆனால் புலவர்கள் அறம்-ஒழுக்கம், சமய உணர்வு என்பவற்றினடிப்படையில் சிந்தித்து இலக்கியம் படைப்பவர்கள். இவர்களின் படைப்பில் இசைப் பண்பை விடச் சொற்களின் பொருட் செறிவும் திட்டப்பாங்கும் முதன்மை வகிக்கும். வரலாற்று நிலையில் நோக்கினால் பாணர் முதலியோர் வீரயுகத்திற்கும் புலவர்கள் வீரயுகத்தின் பிற்பகுதிக்கும் உரியவர்களாகக் கருதப்படுகின்றனர். சங்கப் பாடல்களாக அறியப்படுபவை மேற்சுட்டியவாறு புலவர் பாடல்களாகவே எமக்குக் கிட்டியுள்ளன. எனவே இவை எழுத்திலக்கியங்களாக வரி வடிவம் எய்தியவை என்பது உய்த்துணரத்தக்கது.

இவ்வாறு இலக்கியம் படைத்த புலவர்கள் தமக்கு முற்பட்ட பாணர், கூத்தர் முதலியவர்களின் மரபை அடியொற்றிக் கற்பித நிலையில் நின்றும் பாடல் புனைந்துள்ளனர். குறிப்பாக, புறநானூறு 60ம் பாடல் விறலியைக் குறிப்பதால் பாணன் பாடுவதாகக் கொள்ளலாம். ஆனால் இந்தப் பாடல் உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியதாகப் பிற்குறிப்பு கூறுகிறது. எனவே பாணர் மரபை ஒட்டிப் புலவர் பாடியதாக இது கருதப்பட வேண்டும் என்பர் ஜார்ஜ் எல். ஹார்ட் மேலும் ஒளவையார் கோவூர்க்கிழார் பாடல்கள் சிலவும் இசைக் கலைஞர்கள் பாடுவது போலப் பாடப்பட்டுள்ளமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே சங்கப் பாடல்களில் பாணர், கூத்தர் முதலிய கலைஞர்களின் பாடல்களாக உள்ளன அவ்வக் கலைஞர்களின் மரபை அடியொற்றிய புலவர்களின் ஆக்கங்கள் என்பது உய்த்துணரத் தககது.

இவ்வாறு புலவர்கள் தமக்கு முற்பட்ட பாணர், கூத்தர் முதலியோரின் மரபைப் பின்பற்றி நின்ற படைப்பாக்க நெறியினைக் கைலாசபதியவர்களும் உணர்ந்திருந்தார் என டாக்டர் செ.வை. சண்முகம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்.

புலவர்கள் பின் வீரயுக காலத்தில் சமய உணர்வோடு சிந்தனை மேம்பாட்டை தத்துவ விசாரணை) சிறப்பாகக் கருதினார்கள். இந்தக் காலத்தில் தான் வடமொழிக் கலப்பு ஏற்பட்டது. பிறகு பிராமணர்களும், புலவர்களுமாக இடம் பெற்றார்கள். இவர்கள் பொருநர், கூத்தர் போன்ற கலைஞர்களின் சில மரபினைப் பின்பற்றினார்கள் என்பது அவருடைய (கைலாசபதியவர்களுடைய கருத்தின் சாரம். அதாவது, புலவர்கள் பாணர்களாக, கூத்தர்களாகச் செய்யுள்களைப்பாடி மகிழ்வித்திருக்க வேண்டும். எனவே கைலாசபதியும் இலக்கியச் செய்யுள்கள் புலவர்களால் இயற்றப்பட்டவை என்ற கருத்து உடையவர் என்று கூறலாம். . .

சங்க இலக்கியச் செய்யுட்கள் வாய்மொழிப்பாடல்கள் அல்ல என்பதைக் கைலாசபதிஉணர்ந்திருந்தார் என்பதே முக்கியம்.என்பது அவர் தரும் விளக்கம். இவ்விளக்கம் ஏற்புடையதாகவே தெரிகிறது. எவ்வாறாயினும் சங்கப் பாடல்களைச் சமுதாய வரலாற்றடிப் படையில் அணுகி, வாய்மொழி மரபுடன் தொடர்புபடுத்திச் சிந்திக்கும் முயற்சிகளுக்கு முதல் வடிவம் தந்து முன்னோடியாகத் திகழ்ந்தவர் என்ற சிறப்பு கைலாசபதி அவர்களுக்கு உரியதென்பது குறிப்பிடத்தக்கது.

3.2. முதற் காப்பியங்கள் தொடர்பாக . . .

சங்கப் பாடல்கள் எழுந்த காலப் பகுதியை - ஏறத்தாழ கி.பி. 250 வரையான காலப்பகுதியை - அடுத்து மூன்று நூற்றாண்டுக்காலம் பொதுவாக சங்கமருவிய காலம் எனவும் அறிநெறிக் காலம் எனவும் சுட்டப்படும். சமணம், பெளத்தம் ஆகிய மதங்கள் செல்வாக்கும் பெற்றிருந்ததாகக் கருதப்படும். இக்காலப் பகுதியிலேயே திருக்குறள், நாலடியார் முதலிய அறநூல்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய முதற் காப்பியங்களும் எழுந்தன. சமுதாய வரலாற்று நோக்கில் இக்காலப் பகுதியை - குறிப்பாக முதற் காப்பியங்களின் காலப் பகுதியை - வணிக வர்க்க எழுச்சிக்காலமாக கைலாசபதி காண்கிறார். அரச அதிகாரத்தைக்கூடக் கண்டிக்குமளவு வலுப்பெற்றிருந்த வணிகவர்க்கத்தின் வர்த்தகக் களத்தின் விரிநிலையைப் புலப்படுத்துவனவாகவே சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் அவர் கணிப்பிடுகிறார். இதனை,"வணிக வர்க்கத்தினர் தமது வியாபாரத் தொழிலுக்குப் பரந்த சந்தையை விரும்புவர். உள் நாட்டு வணிகமும் பிற நாட்டு வணிகமும் அக்காலத்தில் சிறந்திருந்தன எனக் கண்டோம். அதனுடைய பிரதிபலிப்பே மூவேந்தரையும் இணைக்கும்காப்பிய முயற்சிகளாம்"

எனவும்

"மன்னனை முதலாகக் கொண்டு அதன் மூலமாகத் தமது வர்த்தகச் செயற்பாட்டை நடத்துவரேனும் மன்னனைக் கட்டுப்படுத்தவும் கண்டிக்கவும் தயங்கமாட்டார் என்பதை இரு நூல்களும் காட்டும். சுருங்கக் கூறுவதாயின் அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும்' என்னும் கோஷத்திற்குப் பின்னால் வணிகரின் வலிய கரங்களைக் காணலாம்"

எனவும் அவர் தரும் விளக்கங்கள் தெளிவுறுத்துவன. இவ்விளக்கங்கள் சமுதாய இயங்கியல் சார்பானவை.

கைலாசபதி இவ்வாறான கருத்துக்களை முன்வைத்த காலப் பகுதியில் சிலப்பதிகாரத்தைப் பல கோணங்களிலும் நயந்து விதந்து பேசும் அணுகுமுறையே முனைப்பாக நிலவியது. முத்தமிழ்க்காப்பியம், தமிழர் வடவரை வென்ற வரலாற்றுக் காப்பியம், குடிமக்கள் காப்பியம், புரட்சிக்காப்பியம், பெண்மையின் பெருமை பேசும் காப்பியம் என்றெல்லாம் ஆய்வாளர்களும் இலக்கியவாதிகளும் எழுதியும் பேசியும் வந்தனர். இவ்வாறான பார்வைகள் சமகால அரசியல் சார்புடைய தற்குறிப்பேற்றத் தன்மை வாய்ந்தன என்பது கைலாசபதியின் விமர்சனம்"

3.3. பக்தி இயக்கம், சித்தாந்தம், சித்தர் சிந்தனைகள்.

பல்லவர் காலப் பக்தி இயக்க சூழல் தொடர்பாக, கைலாசபதி காலம் வரை இரு முக்கிய கருத்து நிலைகளே நிலவிவந்தன. ஒன்று, தொல் தமிழரின் தூய - தனித்தன்மை வாய்ந்த - பண்பாட்டுக் கூறுகளில் ஆரியச் செல்வாக்கு வலுவாகப் படியத் தொடங்கி விட்ட காலச் சூழலாக அதனைக் கொள்வது. இது திராவிட - தமிழ் இன - உணர்வெழுச்சிக் கூடான தரிசனம் ஆகும். இன்னொன்று, சமணர், பெளத்தர் ஆகியோரின் செல்வாக்கைச் வைதிக - பெளராணிக மரபுசார் தரிசனம் ஆகும். மேற்படி இரு நிலைப் பார்வைகளும் பக்தி இயக்கத்தின் புறநிலைத் தோற்றத்தைக் கருத்திற் கொண்டவையாகும். கைலாசபதி அவர்கள் மேற்படி இயக்கத்தின் அகநிலையை நுனித்து நோக்கியவர். அவ்வகையில் அவரது பார்வை பக்தி இயக்கத்தை - வணிக வர்க்கத்தின் உயர் நிலைக்கு எதிரான நிலவுடைமை வர்க்கத்தின் எழுச்சியாகக் கண்டது. பெரிதும் சமணச் சார்புடையதாகத் திகழ்ந்த வணிக வர்க்கத்தினருக்கு எதிராக, சிவ வழிபாட்டை முன்னிறுத்தி வேளாளர்களும் பிராமணர்களும் மற்றும் பல்வேறு சாதிப்பிரிவுகளைச் சார்ந்தோரும் மேற்கொண்ட செயற்பாடுகளையே நாயன்மார் பற்றிய வரலாற்றுக் கதைகள் குறித்து நிற்பதாக அவர் கருதினார். அவரது "நாடும் நாயன்மாரும்" என்ற கட்டுரை நூல் : பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்) இதனைத் தெளிவுபடுத்தும்.

மேலும் மேற்படி பக்தி இயக்கத்தை வழிநடத்துவதில் தத்துவ நிலை, மொழியுணர்வு என்பன வகித்த பங்கையும் அவர் தெளிவாக இனங்காட்டியுள்ளார். குறிப்பாக வினைப் பயன் தொடர்பாகச் சமணம் பேணி நின்ற சிந்தனைக்கும் 'சைவ-வைணவ பக்தி மரபில் நிலவிய சிந்தனைக்குமிடையிலான வேறுபாட்டை எடுத்துக் காட்டி, பின்னைய சிந்தனை பக்தி இயக்க எழுச்சிக்குத் துணை நின்றவற்றைத் தெளிவுறுத்தியுள்ளார். சமணத்திலே வினைப் பயன் அனுபவித்துக் கழிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மேலும் ஒருவர் செய்யும் வினையில் அவரது மனம் ஈடுபடாதிருப்பினும் அவ்வினைப் பயன் அவரை வந்தடையும் என்பது சமணரின் நிலைப்பாடு. சைவம், வைணவம் என்பன முன் வைத்த பக்தி மரபுகளில் இக்கருத்துநிலைகள் மறுக்கப்படுகின்றன. வினைப் பயனுக்கு மேம்பட்டதாக இறையருளை இவை முன் வைக்கின்றன. எத்தகு கொடுஞ்செயல் புரிந்தாலும் இறைவனிடம் "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குவதன் மூலம் உயர்நிலை எய்தலாம் என இவை பேசுகின்றன. மேலும் ஒருவன் செய்யும் வினையில் அவனது மனம் ஈடுபட்டிராவிட்டால் அதன்பயன் அவனைப் பாதிக்காது என்ற கருத்தையும் இவை முன் வைத்துள்ளன. பக்தியுணர்வு மக்களியக்கமாக வடிவம் கொள்வதற்கு உந்து சக்தியாயமைந்த முக்கிய கூறுகளாக இக்கருத்து நிலைகள் அமைந்தன". கைலாசபதி இவற்றை தெளிவாக எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார்

மேற்படி பக்தி இயக்கச் செயற்பாட்டிலே தமிழோடிசை பாடல்' என்ற வகையில் தமிழுணர்வும் முக்கிய பங்கு வகித்துள்ளது. இது தொடர்பாக்க் கைலாசபதியவர்கள் தரும் விளக்கம் வருமாறு :

"புறச் சமயத்தவருக்கு எதிராகக் கலகக் கொடியை உயர்த்திப் பிரச்சார முழக்கஞ்செய்த அரனடியாரும், ஆழ்வாரும் தமிழகமெங்கும். தமிழுணர்ச்சியையும் தமிழ் நிலப்பற்றையும் பெருக்கினர். தமிழரல்லரான பல்லவர் ஆட்சி புரிந்ததுவும் வடமொழி, பிராகிருதம் முதலிய பிறமொழிகள் அம்மன்னரால் உயர்த்தப்பட்டதுவும் பல்லவர் காலத்திலே தமிழ் நாட்டிலே ஒருவிதமான தேசிய உணர்வு தோன்றக்காரணமாக இருந்தன எனக் கொள்ளலாம்"

இவ்வாறு பல்லவர் காலப் பக்தி இயக்கச் சூழலை விளக்கிச் செல்லும் கைலாசபதியவர்கள், அடுத்து அமைந்த சோழப் பெரு மன்னர் காலத்தை வேளாள வர்க்கம் உயர்நிலை எய்தியிருந்த காலமாகக் காண்கிறார். அக்காலப் பகுதியில் தமிழிலே நிறைவடிவம் எய்தியிருந்த சைவ சித்தாந்தத் தத்துவத்தைச் சோழப் பேரரசின் சமூக-அரசியல் கட்டமைப்புடன் தொடர்பு படுத்தி நோக்கி இரண்டின் பொதுமைகளை இனங்காட்ட முற்படுகிறார். இதனூடாக சமூக-அரசியல் கட்டமைப்புக்கும் கருத்தியலுக்கும் உள்ள உறவைத் தெளிவுறுத்துகிறார். அவரது "பேரரசும் பெருந்தத்துவமும்" என்ற கட்டுரையில் நூல் : பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்) இவற்றை நோக்கலாம்.

"சோழர் காலத்திலே காணப்பட்ட சமுதாய அமைப்பும் அரசியல் முறையும் வாழ்க்கை ஒழுங்கும் சிந்தாந்தம் காட்டும் இறைவனில் -சிவனில் - பதியில் - தமது சாயலைப் பொறித்துள்ளன என்று நாம் நிரூபிக்க முடியுமாயின் பேரரசுக்கும் பெருந்தத்துவத்திற்குமுள்ள தொடர்பு மேலும் தெளிவாகும்" " எனக் கூறும் அவர் அவ்வாறான நிரூபணத்திற்காக சான்றாதாரங்களை முன் வைக்கிறார், குறிப்பாக மக்கள் தலைவனாக அன்றைய பேரரசன் திகழ்ந்த நிலைக்கும் ஆன்மாக்களின் தலைவனாக - பதியாக - சிவன் சிந்தாந்தத்தில் பேசப்படும் நிலைக்குமான பொதுமையைச் சுட்டி, பேரரசனுக்கு அத்தத்துவம் துணை நின்றவற்றை உணர்த்துகிறார்.

"தலைவனுடைய இயல்பே உடைமையும்ஆற்றலும் அறிவும் இன்பமும் உடையவனாயிருத்தல் என்று சித்தாந்த சாத்திரங்கள் விதிக்கும் பொழுது தலைமைப் பதவியிலிருந்து சமயச் சார்புடன் ஆட்சி புரிந்தவர்களுக்கு அச்சாத்திரத் தத்துவங்கள் தோன்றாத் துணையாக இருந்தன" என்பது அவர் தரும் விளக்கம்.

இவ்வாறாக பக்தி இயக்கம் பற்றியும் சைவ சிந்தாந்தத்திற்கும் சோழப் பேரரசுக்கும் இருந்த உறவுநிலை பற்றியும் அவர் முன்வைத்த சிந்தனைகள் மேற்படி கட்டுரைகள் எழுதப்பட்ட காலத்தில் - 1960களில் - முற்றிலும் புரட்சிகரமானவையாக அமைந்தன. குறிப்பாகச்  உணர்வுடையவர்களால் இலகுவில் ஏற்றுக் கொள்ள முடியாதனவாகவும் இருந்தன. ஆனால் கடந்த சிலபத்தாண்டுக் காலப் பகுதியில் இவ்வாறான பார்வை ஆய்வுலகில் வலுப்பெற்று நிலை பெற்று விட்டது. சைவ சித்தாந்தத்தைச் சோழப் பேரரசின் 'சமூக-அரசியல் கட்டமைப்புடன் தொடர்புறுத்தி நோக்கும் அவரது அணுகுமுறையானது அத்தத்துவம் சோழர் காலத்தில் நிறை நிலை எய்தியது என்ற வகையில் நிலவிவந்த பொதுக் கருத்தின் அடிப்படையில் அமைந்ததாகும். ஆனால் இன்றைய ஆய்வியல் வளர்ச்சியில் மேற்படி தத்துவம் அக்காலப் பகுதிக்கு முன்பே, கி.பி. 8-9-ம் நூற்றாண்டுகளில் தனக்குரிய அமைப்பை எய்திவிட்டது. என்பது தெரிய வருகிறது. கி.பி. 8-9-ம் நூற்றாண்டினரான சத்திய ஜோதி சிவாசாரியாரின் வடமொழி நூலாக்கங்களில் சைவ சிந்தாந்தத்தின் அமைப்பு புலப்பட்டு நிற்பதை சோ. கிருஷ்ணராஜா அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார். “ எனவே அத்தத்துவத்தைச் சோழப் பேரரசுக் கால சமூக - அரசியல் கட்டமைப்புடன் மட்டும் பொருத்தி நோக்கும் தேவை இன்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும்,

"சைவ சித்தாந்தம் ஓர் அரசு தத்துவம் ஒரு வர்க்கத்தின் மேலாதிக்கக் கருவி என்பன மட்டுமல்ல, அது ஓர் உயராதிக்க சாதியின் தத்துவமும் ஆகும்என கோ. கேசவன் தந்துள்ள கணிப்பு சைவ சித்தாந்தம் பற்றிய பார்வை இன்னும் விரிவான தளத்தில் அமைய வேண்டிய ஒன்று என்பதை உணர்த்தும்.

தமிழிலக்கியப் பரப்பிலே ஒரு குறிப்பிட்ட பகுதி சித்தர் பாடல்கள். சிவவாக்கியர், பட்டிணத்தார் முதலிய பலரின் பாடல்களின் தொகுப்பு நிலை இது. சித்தர்களைப் பொதுவாக ஆன்மீகவாதிகளாகவும் சடங்காசாரங்களை எதிர்க்கும் சீர்திருத்த சிந்தனையாளர்களாகவுமே பார்க்கும் மனப்பாங்கே கைலாசபதி காலம்வரை நிலவி வந்தது. கைலாசபதி தமது சமூகவியல் மற்றும் ஒப்பியல் அணுகுமுறைகளினூடாக சித்தர்களின் சிந்தனைகளுக்குப் புதிய விளக்கம் தந்தார். தமிழில் மரபாகப் பேணப்பட்டு வரும் எண்ணப்பாங்குகளுக்கு எதிர்நிலையில் சிந்திப்பவர்களாக - எதிர் மரபுச் சிந்தனையாளர்களாக -அவர்களை இனங்கண்டார். பண்டைய தமிழரின் - இந்தியரின் - அறிவியல் சார் பார்வைகள் மற்றும் பொருள் முதல்வாத உணர்வோட்டங்கள் அவர்களிடம் பயின்றுள்ளன என்பதைக் கண்டுகாட்டினார். மேலும் இச் சித்தர் சிந்தனைகளைச் சீனாவின் தாவோயிசத்துடன் ஒப்பிட்டார்.


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்