தீட்டு என்ற பண்பாட்டு வரவே தீண்டாமையின் மையப்புள்ளியாக அமைந்துள்ளது.
யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டிலே தீட்டும் துடக்கும் மிகவும் முக்கியமான நடைமுறைகளாக விளங்குகின்றன.இவை பற்றி ஆய்வுகள் தற்போது வெளிநாட்டறிஞர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தீட்டும் துடக்கும் சமய நடைமுறைகளோடு பெரிதும் தொடர்புபட்டுள்ளது.அதனால் இந்து சமய நடைமுறைகளின் தோற்றம் அடிப்படையிலேயே தீட்டுத்துடக்கு சம்பந்தமான ஆய்வை அறிஞர் மேற்கொள்ளுகின்றனர். ஆனால் பண்டைய தமிழர்நடைமுறைகளை நுணுகி ஆராயும்போது சமய நடைமுறைகள் இடைக் காலத்திலே தமிழர் பண்பாட்டிலே வந்து கலந்ததை உணரலாம்.(என்கிறார் நூலாசிரியர்)
தொல்காப்பியச் சூத்திரம் இதனைத் தெளிவாக விளக்குகின்றது.ஆண் பெண்ணின் இணைப்பு கற்பு நிலையிலே ஏற்பட்ட பண்பட்ட காலத்திலே இந்நடைமுறை தோன்றியது.தொடா மகளிர் எனச் சங்க இலக்கியம் குறித்த சொற்றொடர் தற்போதும் தொடமாட்டாள்? என யாழ்ப்பாணத் தமிழர் மொழியிலும் பண்பாட்டிலும் நிலைத் துள்ளது.
பெண்ணின் உடலில் தோன்றும் மாதவிடாய் ஒரு ஒழுங்கு நிலையிலே தோன்றி மறைவதுஅதனால் அவ்வொழுங்கு நிலைமையை உணர்த்தவும் சில தமிழ்ச் சொற்கள் தோன்றின. மாதத் தீட்டு,மாதவிலக்கு,மாதவிடை,மாதத்தூரம்,மாதச் சுகவீனம்,மாதவிடாய் என்னும் சொற்கள் இன்றும் அவ்வாறு வழக்கிலுள்ளன.மாதவிடை என்னுஞ் சொல்லே மாதவிடாய் என மருவிற்று.
பெண்ணை மையமாகக் கொண்டு தமிழர் பண்பாடு வளம் பெற்றதை இந்நடைமுறைகள் மூலம் தெளிவாக உணரலாம்.பெண்ணுடன் தொடர்புடைய பூப்பும்,பிறப்பும் பல நடைமுறைகளைக் கொண்டுள்ளன.
1.தீட்டு நாள் நடைமுறைகள் 2. அழுக்கு நிலை பேணல் 3. உணவும் உடையும் 4. புனிதப்படுத்தல் தீட்டுக்கழிவு 5. வீடு மையமாதல் 6. குடும்ப நிலையில்தீட்டும் கழிவும் 7. சமூக நிலையில் தீட்டும் கழிவும் 8. நம்பிக்கை சம்பந்தமானவை 9. வழிபாட்டு நிலையில் 10. கால அடிப்படையில் 11. கருவிக்கையாட்சி நிலையில் 12. தொழில் நிலையில் 13. பிறபண்பாட்டுக் கலப்பு நிலையில் 14. நோய் நிலையும் மாற்றும் முறையும்.
இவ்வாறு பிறப்பிலிருந்து இறப்புவரை தொடரும் இந்த சுழறச்ர்சியில் தீட்டு தீண்டாமை புனிதம் என்ற சமுக வழிமுறைகள் சமய வழிமுறையோடு பின்னிப்பிணைந்துள்ளதை காணலாம்.பூப்பின் போதும் பிறப்பின் போதும் ஏற்படும் அழுக்கு நிலையைப் பேணச் சில நடைமுறைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.தீட்டுடன் இருக்கும் பெண்களின் தேவைகளை வயதில் முதிர்ந்த பெண்கள் கவனித்தனர். இக்காலங்களிலே அணியும் சேலை தீட்டுச்சீலை என அழைக்கப்பட்டது. இச்சீலையை வண்ணார் அழுக்ககற்றிக் கொடுப்பர்.இதனால் வண்ணாத்தியே சீலைகளைக் கொண்டு வந்து கொடுப்பவளாகவும் எடுத்துச் செல்பவளாகவுமிருந்தாள்.
புனிதப்படுத்தல் தீட்டுக்கழிவு- தீட்டுள்ள பெண் தலைமுழுகுவதன் மூலம் புனிதப்பட்ட வளாகக் கருதப்பட்டாள்.இதனைத் தீட்டு முழுக்கு என அழைத்தனர்.சங்க இலக்கியங்களிலும் மகப்பெற்ற மகளிர் நீராடுதல், நெய்யாடுதல் என்பன பற்றிய குறிப்புகள் உண்டு.தீட்டு, வீட்டை மையமாகக் கொண்ட நடைமுறைகளோடும் இணைந்துள்ளது.
தீட்டு நிலையால் முக்கியத்துவப் படுத்தப் பட்ட போது அதற்கான நடைமுறைகளும் ஏற்படுத்தப் பட்டன.
இயற்கைநிலையாக அன்றிச் செயற்கைநிலையிலே துடக்க நடைமுறைகள் தமிழர் வாழ்வில் இணைய வீட்டின் அமைப்பிலே ஏற்பட்ட மாற்றங்களும் வழி செய்தன. இந்நிலை பிறபண்பாட்டுக் கலப்புகளிலே வேகமும் முன்னேற்றமும் பெற்று இன்று வரையும் நிலைத்து நின்று வருகிறது.
தனிமனித வாழ்வு குடும்ப நிலையில் உறுதி பெற்றுச் சமூக நிலையிலே வளர்ச்சி பெற்ற போதும் நடைமுறைகள் விரிவடைந்தன. தீட்டும் அதனால் சமூக நிலையிலே பரவலாக்கப்பட்டது. முக்கியமாகத் தொழில் நிலையால் இணைந்திருந்த சமூக உறவுகள் தீட்டின் மூலம் மேலும் பலப்படுத்தப்பட்டன. வழிபாட்டு நடைமுறைகளில் பல சமூகத்தவரும் பங்கு பற்றுவது தீட்டினால் கட்டுப்பாடு செய்யப்பட்டது. புனிதமானவர்கள் மட்டுமே வழிபாட்டு நடைமுறைகளில் பங்கு கொள்ளலாம் என்ற நியதி ஏற்பட்டது. பெண்ணின் தீட்டோடு தொடர்பு கொண்ட பிற சமூகத்தவரும் தீட்டுப்பட்டவராயினர். வழிபாட்டு நடை முறைகளைப் பண்டு தொட்டுச் செய்து வந்த வண்ணாத்தியும் இதனால் கட்டுப்பாட்டுக்குள்ளானாள்.பண்டைய இலக்கியங்களில் ஆடைகளைச் சுத்தம் செய்யும் வண்ணாத்தி புலைத்தியென்றழைக்கப்பட்டாள்,அவள் தெய்வ நடைமுறைகளோடு தொடர்பு கொண்டிருந்ததைப் புறநானூறு கூறுகிறது.முருகு மெய்ப்பட்ட புலைத்தி என்னும் சொற்றொடர் இதனை நன்கு விளக்கும்.தீட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வண்ணாத்தி வழிபாட்டு நடைமுறைகளைச் செய்பவளாகவும் இருந்தாள்.இன்றும் யாழ்ப்பாணத்திலே வண்ணார் கோவிலுக்குள் சென்று சில நடைமுறைகளைச் செய்கின்றனர்.
தொழில் நிலையிலே தொடர்பு கொண்ட ஏனைய சமூகத்தவரும் தீட்டுடன் தொடர்பு படுத்தப்பட்டனர். மீன் பிடித் தொழில் செய்வோர், மரமேறுபவர், பறையடிப்போர், மயிர்வினைஞர், கொல்லர், தச்சர், தட்டார், கூலி வேலை செய்யும் பள்ளர், எண்ணையூற்றுவோர்,ஆடை நெய்பவர்,எடுபிடி வேலை செய்வோர் எனப் பல்வேறு தொழில் செய்வோரும் பிறப்புடன் பல நிலைகளால் தொடர்புற்றிருந்தனர்.
தீட்டு நடைமுறைகள் சில நம்பிக்கைகளின் அடிப் படையிலும் தோன்றியுள்ளன.
வழிபாட்டு நடைமுறைகளில் பெண் முக்கிய பங்கு கொண்டவளாக இருந்துள்ளாள்.யாழ்ப்பாணத் தமிழரது வழிபாட்டு நடைமுறையிலே 'விளக்கேற்று வைத்தல்’என்பது முக்கியமான நடைமுறையாக உள்ளது. மாதவிடாய்தீட்டுக் காலத்திலே பெண்கள் இந்நடைமுறையைத் தவிர்த்தனர்.ஆண்களும் அக்காலகட்டத்தில் அப்பொறுப்பை ஏற்காததால் முற்றாக தவிர்க்கும் நிலையும் தோன்ற வாய்ப்பாயிருந்தது.பிற்காலங்களிலே கோயில் அமைப்புத் தோன்றிய போது தீட்டுள்ள பெண்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. தீட்டு நிலையினைக் காட்டி கோயில் வழிபாட்டு நடைமுறைகளைப் பெண்கள் செய்வதும் தடுக்கப்பட்டது.இதனால் தீட்டு நிலையிலே தொடர்பு கொண்ட அனைவரையுமே தடுத்து வைப்பதும் இலகுவாயிற்று. புனிதப்படுத்தும் சடங்குகள் பரவலாக்கப்பட்டன. தீட்டுக் கழிவு நாள் புனிதப்படுத்தும் நாளாக வழிபாட்டு நடைமுறைகளுடன் இணைந்தது.தீட்டுள்ள பெண் மட்டுமன்றி அவளைச் சார்ந்த ஆண்களும் இதனால் தீட்டுடன் தொடர்பு படுத்தப்பட்டனர்.
தீட்டு குடும்ப நிலையிலும் சமூக நிலையிலும் பரவ உதவிய தொழிலாகவும் வண்ணாத் தொழில் விளங்கியது.பிற்காலங்களிலே இத்தொழிலாளர்களுக்கு மாதாந்தம் வருமானமாக ஒவ்வொரு வீட்டவருமே அரிசியோ பணமோ கொடுக்கும் நடைமுறையும் ஏற்பட்டது.
யாழ்ப்பாணத்திலே வழிபாட்டு நடைமுறைகள் பெண்களால் நடத்தப் பெறாமைக்கு ஆரியப் பண்பாட்டின் கலப்பே முக்கிய காரணமாய் அமைந்ததெனலாம்.பிறப்புத் தீட்டினைப் புனிதப்படுத்தப் பிராமணர் வந்து புனிதமாக்கும் நடைமுறை ஏற்பட்டது. இந்நடைமுறை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட போது வேளாளரால் மட்டுமே செயற் படுத்தப்பட்டது. ஏனைய தொழில் நிலையாளரிடமும் காலகதியிலே பரவியது.
தீட்டுக்கழிவு புனிதப் படுத்தும் சடங்கு இந்நடைமுறை இடையிலே தேவை கருதி இணைக்கப்பட்டதென்பதும் தெளிவாகின்றது.
பிராமணர் வழிபாட்டு நடை முறைகளைச் செய்யும் தகுதியுடையோராக அமைந்தனர். புலால்,கள் என்பனவற்றுடனும் அசுத்தங்களுடனும் தொழில் நிலையிலே தொடர்புற்றவர் தாழ்த்தப்பட்ட மக்களாயினர்.உயர் சாதி,கீழ் சாதி,இடைச்சாதி என சமூக நிலையிலே மக்களிடையே பாகுபாடு தோன்றியது. சிறப்பாக இலங்கைத் தமிழரிடையே அமைந்துள்ள சாதிப்பாகுபாடு இதனைத் தெளிவாக விளக்குவதாயுள்ளது. பெரிய புராணம் போன்ற நூல்களிலே கோயிலினுள்ளே செல்ல முடியாத நாயன்மார் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.தீண்டத்தகாத சாதியினர்’என்ற பாகுபாடும்தோன்றியிருந்தது.
சாதித்தீட்டு மனப்பான்மை ஆழமானதாகவும் காணப்பட்டது.பிராமணர்,சைவர்,குருக்கள் போன்றோர் ஏனையோரைத் தீண்டாது வாழ்ந்தனர். தென்னகத் தமிழர்களில் பிராமணர் நிலச் சொந்தக்காரர்களாகவும் இருந்தமையால் பொருளாதார ரீதியாக ஏனைய தொழில் செய்வோரைக் கட்டுப்பாடு செய்யவும் சாதித்தீட்டு என்றசெயற்கையான அழுக்குநிலை கற்பிக்கப்பட்டது. தீட்டுள்ள பெண்ணை அசுத்தமானவளென்று எண்ணித் தொடாமலிருந்ததைப் போலவே அசுத்தமான தொழில் செய்வோரையும் தொடமுடியாதவர்களாக எண்ணினர். வீடு என்ற நிலையில் மட்டுமின்றிக் கோவில் என்ற பொதுநிலையிலும் இந்நிலை பேணப்பட்டது. அசுத்தமான தொழில் செய்வோர் கோவிலினுட் செல்ல அநுமதிக்கப்படவில்லை. மாமிசம், கள் அருந்துவோரும் அவ்வாறே அநுமதிக்கப்பட வில்லை. யாழ்ப்பாணத் தமிழரின் சாதிப்பாகுபாடு பற்றி ஆய்வு செய்வோர் இந்நிலையைப் பற்றி முக்கியமாகச் சிந்திப்பதில்லை.வர்க்க நிலையிலே முரண்பாடுகள் தோன்று முன்பே தொழில் நிலை வேறுபாட்டால் அசுத்த உணர்வு சமூகத்திலே ஆழமாக வேரூன்றிவிட்டது. பெண்ணின் பூப்புநிலை மையமான தீட்டும் துடக்கும் சமூகநிலை வேறுபாடுகளிலும் இணைக்கப்பட இதுவே உதவியது.
மனிதனின் இறப்புநிலையிலே உரிமையை நிலைநாட்ட துடக்கு இணைந்தது போலப் பிற்காலத்திலே தலைமைத்துவத்தை நிலைநாட்டச் சாதித்துடக்கு உதவலாயிற்று. பிரதேச ரீதியாக வேறுபட்ட தொழில் செய்யும் மக்கள் உறவு கொள்வதையும் இதன் மூலம் தடுக்க முடிந்தது.சாதித்துடக்கு வழிவழியாகப் பேணப்பட்டது.கலப்புச் சாதி உறவுகள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டன.கோவில் நிலையிலே கீழ்சாதியான் ஒருவன் மேல் சாதியினருக்குரிய இடத்துக்குச் செல்ல முடியாது. யாழ்ப்பாணத்துக் கோவில்களின் வரலாற்றிலே பல நிகழ்வுகள் இதனைச் சுட்டி நடைபெற்றுள்ளன.
கே. டானியல் தனது நாவல்களிலே இதனை அழகாகப் பதிவு செய்துள்ளார். தாழ்ந்த சாதியினர் கோயினுல் சென்று விட்டால் கோயில் பல சடங்குகளால் புனிதப்படுத்தப்பட்டது.ஆனால் தாழ்ந்த சாதியினரைப் புனிதப்படுத்த எந்த நடைமுறைகளுமே ஏற்படுத்தப்படவில்லை.தீட்டுநிலை நீரால் புனிதப்பட்டது.ஆனால் சாதித் தீட்டே நிரந்தரமானதாகக்கருதப்பட்டது.செயற்கை நிலையிலே நடைமுறையான துடக்கு ஆரம்பத்தில் குடும்ப உறவுகளைப் பிணைக்கவே ஏற்படுத்தப் பட்டது.ஆனால் ஆரியப் பண்பாட்டின் தாக்கத்தினால் சமூக உறவுகளைப் பிரித்துவைக்கவும் பயன்படுத்தப்பட்டது.
இலங்கையில் ஆங்கிலேயர் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் சாதிப்பாகுபாட்டை மேலும் கூர்மையாக்க சில உத்தியோகபூர்வமான நடைமுறைகளை ஏற்படுத்தினர். *உடையார்? என்ற பிரதேசத் தலைமைத்துவப் பொறுப்பை உயர் சாதியினருக்கே கொடுத்தனர். அதனால் மக்களை ஒன்று சேர்ப்பதும் இலகு என்பதை உணர்ந்தனர். ஆங்கிலக் கல்வியும், கிறிஸ்தவ சமய செல்வாக்கையும் உயர் சாதியினரே பெரிதும் பெற்றனர். அவர்களும் தமது சாதியாசாரங்களையே பெரிதும் பேணினர்.இன்று பலர் கிறிஸ்தவ மதமாற்றமே யாழ்ப்பாணத் தமிழரது சாதி யுணர்வை அழிக்கும் சாதனமாக இருந்தது என்று கருது கின்றனர்.ஆனால் ஆரம்பநிலையிலே மதம் மாறிய உயர் சாதியினர் தமது சாதியைப் பேணுவதிலே கண்ணுங் கருத்துமாக இருந்ததை அறியலாம். உயர்சாதிக் கிறிஸ்தவர் களுடைய தேவாலயங்களுக்குள் தாழ்ந்த சாதிக் கிறிஸ்த வர்கள் போக அனுமதி வழங்கப்படவில்லை.அதனால் தாழ்ந்த சாதியினர் தமக்கெனத் தனியான தேவாலயங்களை கட்டவும் முற்பட்டனர்.கே.டானியல் இப்பண்பை தெளிவாகத் தனது கானல் என்ற நாவலிலே எடுத்துக் காட்டிள்ளார்.
சமூக நிலையிலே தமர்,பிறர் என்ற பாகுபாட்டை நடைமுறைப்படுத்தவும் சரதித்துடக்கு பெரிதும் உதவியது. ஒரே தொழில் செய்பவர்கள் மத்தியிலே துடக்கு இயற்கை நிலையாகத் தீட்டுடன் பெரிதும் இணைந்ததாயிருந்தது. ஆனால் தொழில் வேறுபட்ட நிலையிலே அழுக்கு உணர்வின் அடிப்படையிலே செயற்கையாக இணைந்ததைக் காணலாம். மீனோடு பழகும் மீன்பிடித் தொழில் செய்வோரும், அசுத்தமான ஆடைகளைச் சுத்திகரிக்கின்ற ஆடையைச் சுத்தம் செய்யும் வண்ணாரும், சேற்று நிலங்களிலே வேலை செய்கின்ற பள்ளரும், அழுக்குகளை அகற்றும் பறையரும், கள் தயாரிக்கும் தொழில் செய்யும் நளவரும்,மயிர்வெட்டும் தொழில் செய்யும் அம்பட்டரும் தத்தமக்குள்ளும் சாதித் துடக்கைப் பேணினர். அவர் களிடையே தொழில் நிலைத்தொடர்பு மட்டுமேயிருந்தது.மணவுறவுத் தொடர்புகளில்லை. சமபந்தி போசனமும் வெகு குறைவாகவே நடைமுறையிலிருந்ததெனலாம். குடிமைகள் என்ற நிலையிலே வேளாளர் வீட்டு நடப்புகளிலே பிறப்பு, இறப்பு, திருமணம் போன்றவற்றில் இவர்கள் ஒன்றாகச் சேவை செய்தபோதும் தத்தமக்குரிய நடைமுறைகளோடும் வாழ்ந்தனர். இயற்கை நிலையான தீட்டுத் தொடக்கு நடைமுறைகளை அநுசரித்தும் வாழ்ந்தனர்.
செயற்கை நிலையில் இணைந்த சாதித்துடக்கு தீண்டாமையென்னும் நிலையில் தமிழரிடையே நடை முறைப்படுத்தப்பட்டது. தீண்டாச்சாதி, தீண்டாச்சேரி,தீண்டாதவள், தீண்டாமை என்னும் சொற்றொடர்களின் வழக்கினால் இதனை விளங்கிக் கொள்ளலாம். தீட்டுப் படுதல்’என்ற சொல் தீண்டத்தகாதவரைத் தீண்டுதலால் அசுத்தியடைதல் எனப் பொருள் தருகிறது.இது செயற்கையான நிலையையே காட்டுவதாயினும் அடிப் படையிலேபெண்ணின் தீட்டு நிலையைக் கொண்டு அமைந்ததெனலாம்.தீட்டுப்படுதல்’என்னும் சொல் யாழ்ப்பாணத் தமிழர் வழக்கிலே பெண்ணின் இயற்கை நிலையான தீட்டைக் குறித்து நிற்கிறது. அவள் எதையும் தொடாமல் இருப்பதும் நடைமுறையாக உள்ளது. ஆனால் சாதித்தீட்டு நிலையிலே ஆண்களும் எவரையும் தொட முடியாதவராயிருந்தனர். தீட்டுக்காரன்”என்ற சொல் துடக்குடையவன் என்ற பொருளிலே வழங்கப்பட்டு வருகின்றதுசாதித் தீட்டுடையவன் இந்தப் பிறவியிலே புனிதமடைய வாய்ப்பற்றவனாகவே வாழ்கிறான்ஆனால் தற்செயலாக அவனால் தீண்டப் பெற்றவர் புனிதச் சடங்குகளால் மீண்டும் புனிதமடையச் சந்தர்ப்பம் கொடுக்கப் பட்டிருந்தது. எனவே சாதித் தீட்டுடையவன் பெண்ணையும் விட நிரந்தர அசுத்தமானவனாகக் செயற்கைநிலையிலே கட்டுப்படுத்தப்பட்டான். செயற்கையான சாதித்துடக்கைப் பேணுவதால் சமூக உறவுகளைக் கட்டுப்படுத்தத் தமிழன் முயன்றான்.
சோழராதிக்கப் போது கட்டப் பட்ட ஆலயங்கள் தூய்மை நிலையை நடைமுறைப்படுத்த உதவின. கிறிஸ்தவ மதத்தின் பரம்பல் அந்நிலை பற்றிய கருத்தினை மக்களிடையே வலுப்பட வைத்தது. யாழ்ப் பாணத்தின் வரலாற்றிலே சாதியமைப்பு ஆழமாக வேரூன்ற லாயிற்று. புத்த சமயப் போதனைகளைவிட கிறிஸ்தவ சமயப் போதனைகள் தமிழர் மனதிலே விரைவாக இடம் பெற சாதி வேறுபாடே முக்கிய காரணமாக இருந்தது. நிலம் அற்றவர் ஆங்கிலக் கல்வியைக் கற்று அரசாங்க உத்தியோக வாய்ப்புக்களைப் பெற்றனர். எனினும் சாதி நிலையிலே தீவிரமடைந்திருந்த ஏற்ற தாழ்வுகள் சம நிலையடைய வில்லை. கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கூட உயர்வு தாழ்வு பாராட்டப்பட்டது. இந்து சமயத்தவரிடையே மட்டும் நிலைத்து விடாமல் சாதி பிற மதத்தினரையும் வலுவாக ஆட்கொண்டது. தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ சமய மக்கள் தமக்கெனத் தனியான வழிபாட்டிடங்களை அமைக் கவும் தொடங்கினர். மத போதகர்களால் கூட இத்தகைய ஏற்றத் தாழ்வுகளை முற்றாக நீக்க முடியவில்லை. நவீன கல்வி மரபினாலும் உடனடியாக ஏதும் பயன் ஏற்பட வில்லை.
No comments:
Post a Comment