தோழர் ஞானம் அவர்களின் பதிவே. இவை சில தினங்களாக வாட்சாப் விவாத பொருளாக உள்ளது ஆகையால் இங்கே பகிர்கிறேன் தோழர்களே,
மனோகரன் அணியின் பதில் கீழே
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அமைக்க முடியாமல் போனதன் காரணம் என்ன?
(அணிகளுக்கும் மக்களுக்கும் ஒரு உண்மை அறிக்கை)
தோழர் பாலன் தலைமையில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி ஒன்றை கட்ட வேண்டும் என்ற ஒரு (நியாயமான உந்துதலின் காரணமாக) முயற்சி எடுக்கப்பட்டது. அதில் மார்க்சியர்கள் என்போர் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள், இந்திய புதியஜனநாயக புரட்சி பேசுவோர், தலித்திய விடுதலை பேசுவோர் என பல அரசியல் நீரோட்டங் களும் பங்கேற்றன. அந்த அமைப்பு மக்கள் நலனுக்கான ஒரு சில நடவடிக் கைகளையும் மேற்கொண்டது. ஆனால் அதனை ஒரு முன்னணியாக நிலை நிறுத்த முடியவில்லை. ஏன்? அதற்கு முன்பு அத்தகைய முன்னணியின் அவசியம் என்ன என்பதைக் காண்போம்.
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் அவசியம்
இந்துத்துவப் பாசிச மோடி அரசு அமெரிக்காவின் மேலாதிக்கத்துக்கு பணிந்து தோற்றுப்போன உலகமய தனியார்மயத்தை திணித்து நாட்டை பொருளாதார நெருக்கடியில் மென்மேலும் தள்ளுகிறது. நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது திணிக்கவும், ஆளும் வர்க்கங்களை மீட்கவும் இந்துத்துவ பாசிச பயங்கரவாத ஆட்சியை கட்டியமைக்கிறது.
அரசியல் சட்டத்தை மீறி, நாடாளுமன்ற ஆட்சிமுறையை காலில் போட்டு மிதித்து, மக்களின் வாழ் வாதாரத்தை அழித்து அவர்களின் ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் பறித்து ஒரு பயங்கரவாத ஆட்சியை நடத்தி வருகிறது. அது ஆளும்வர்க்கத்தின் மற்றப் பிரிவினர் மீதும் தாக்குதல் நடத்துகிறது.
ஊழல் ஒழிப்பு என்ற பேரில் ஈ.டி.யை வைத்து எதிர்க்கட்சிகளை பழிவாங்கி ஒரு கட்சி சர்வாதி காரத்தை திணிக்கிறது. தேர்தல் ஆணை யத்தை பயன்படுத்தி தேர்தல் தில்லுமுல்லு மூலம் நிரந்தரமான பாஜக பாசிச ஆட்சிக்கு முயற்சிக்கிறது. மக்களின் தீர்ப்பையும் மதிக்காமல் தேர்தல் தில்லுமுல்லு மூலம் அமைந்த ஆட்சி, அது சிறுபான்மை ஆட்சியாக இருந் தாலும் மோடி தலைமையில் பாசிசம் தடையின்றி முன்னேறி செல்கிறது.
ஆனால் பாசிசத்தை எதிர்த்தப் போராட்டம் பின்னுக்கு செல்கிறது. இந்திய அரசு இன்னமும் பாசிசம் ஆகவில்லை அதன் கூறுகள்தான் உள்ளன என்று இன்றளவும் மார்க்சிஸட் கட்சி பேசி பாசிச எதிர்ப்பு இடதுசாரி அணியை கட்டுவதறகு தடையாக மாறியுள்ளது. புரட்சிகர ஜனநாயக சக்திகளோ குறுங்குழு வாதத்தில் மூழ்கி தனிமைப்படுகின்றன. இத்தகைய ஒரு சூழலில் சிறு அமைப்புகளே ஆனாலும் பெரும் முயற்சியில் ஈடுபட்டதை எண்ணி பலராலும் பாராட்டப்பட்டது. பாசிச எதிர்ப்பு முன்னணியிடம் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால் அது கைகூடவில்லை.
கை கூடாமல் போனது ஏன் என்பதை அக்கறையுடன் பரிசீலனை செய்வது மிகவும் முக்கியம். இன்னமும் தவறிழைப்பவர்கள் தங்கள் தவறுகளை மாற்றிக் கொண்டு பாசிச எதிர்ப்பில் ஒன்றுபட்டு போராட காலமும் சூழலும் உள்ளது! பாசிச எதிர்ப்பு முன்னணியை ஏன் கட்டமுடியவில்லை?
முன்னணி கட்ட முடியாமைக்கு காரணம்
நான்கு காரணங்களால் இந்தியாவில் (தமிழகத்தில்) இடதுசாரிகள் தலைமையில் பாசிச எதிர்ப்பு முன்னணி கட்டியமைக்க முடியாமல் உள்ளது.
1. இன்றைய நவீன பாசிசத்தின் எழுச்சியின் பொருளியல் அடிப்படை என்ன என்பதை தீர்மானிப்பது பற்றிய பிரச்சினை.
2. பாசிசத்தின் வர்க்க அடிப்படைகள் என்ன என்பது பற்றிய பிரச்சினை.
3. மூன்று பாசிசத்துக்கு மாற்றாக எத்தகைய மாற்றுத் திட்டம், குறிப்பானத் திட்டம் வைப்பது குறித்த பிரச்சினை.
4. பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி என்பது ஆளும் வர்க்கத்தின் மற்றொரு பிரிவுடன் சேர்ந்து அமைப்பதா இல்லையா என்பது குறித்த பிரச்சினை.
பாசிச ஒழிப்பு ஜனநயாகத்துக்கான போராட்டம் பற்றிய மார்க்சிய அணுகுமுறை
பாசிசம் என்பது முதலாளித்துவப் பொது நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாதபோது, மூலதன குவிப்பு மென்மேலும் ஒருசிலர் கையில் குவிக்கும் பொருட்டு நிதிமூலதன கும்பலின் பிற்போக்கு பிரிவானது முதலாளித்துவ நாடாளுமன்ற ஆட்சி முறையை ஒழித்து ஒரு பயங்கரவாத ஆட்சியை கட்டியமைக்கிறது என்று டிமிட்ரோ கூறுகிறார்.
அத்தகைய சூழலில் மக்களின் வாழ்வாதார மீட்பு, ஜனநாயக உரிமை களை மீட்பது என்ற திட்டத்தின் அடிப்படையில் நிதி மூலதன கும்பலின் மற்றொரு பிரிவினருடன் இணைந்து நிலவுகின்ற நாடாளுமன்ற ஆட்சியை பாதுகாப்பது என்ற அடிப்படையில் ஐக்கிய முன்னணி அமைப்பது என்பது டிமிட்ரோ முன்வைத்த ஐக்கிய முன்னணி சர்காருக்கான திட்டமாகும்.
மேலும் முதலாளித்துவநாடுகளில் நிலவுகின்ற நாடாளுமன்ற முறை மூலம் பாசிசத்தை முறியடிப்பது என்று கூறும் அதே வேளையில் அங்கு மக்கள் இயக்கமும் அதனை நோக்கியே அமைய வேண்டும் என்கிறார். ஆனால் காலனிய அரைக்காலனிய மற்றும் சார்பு நாடுகளில் பாசிச எதிர்ப்புப் போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்புடன் இணைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். குறிப்பாக சீனாவில் பாசிஸ்ட் சாங்கே சேக்குடன் கூட்டணி அமைத்து ஜப்பான் எதிர்ப்பு முன்னணி கட்டியதை உதாரணமாகக் காட்டுகிறார்.
இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால் பாசிச எதிர்ப்பு போரில் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் சோஷலிச புரட்சி என்றோ, பின் தங்கிய நாடுகளில் புதிய ஜனநாயக புரட்சி என்ற திட்டத் தையோ மாற்றாக முன்வைக்கவில்லை. மாறாக முதலாளித்துவ நாடுகளில் முதலாளித்துவ ஆட்சி முறையை பாதுகாப்பது என்ற குறைந்தபட்சத் திட்டத்தின் அடிப்படையிலும், ஒடுக்கப்பட்ட சார்பு நாடுகளில் பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக திட்டத்தின் அடிப்படையிலும் ஐக்கிய முன்னணி அல்லது கட்டப்பட்டது என்பது வரலாறு. அவ்வாறு இல்லையேல் ஆளும் வர்க்கங்களை உள்ளடக்கிய பாசிச எதிர்ப்பு முன்னணி கட்ட முடியாது. பாசிசத்தை வீழ்த்த முடியாது என்பதும் வரலாறு.
மேற்கண்ட மார்க்சிய முறையை பாசிச எதிர்ப்பு முன்னணியில் பங்கேற் றுள்ள எந்த ஒரு அமைப்பும் ஏற்கத் தயாரில்லை. காரணம் இரண்டு விலகல் போக்குகள் அதற்கு தடையாக இருக்கின்றன.
இரண்டு விலகல் போக்குகள்
1. இடது விலகல் போக்குகள்
பாசிச எதிர்ப்பை ஏகாதிபத்திய எதிர்ப்புடன் இணைத்து இந்திய புதிய ஜனநாயக புரட்சி பேசும் அமைப்புகள் மார்க்சிய விரோத குறுங்குழுவாத நிலைபாட்டை எடுக்கின்றன.
ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று பொதுவாக பேசுகின்றனர். இன்றைய பொருளாதார நெருக்கடி அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய வாதிகள் அமல்படுத்தும் உலகமய தனியார்மய கொள்கைகளே காரணம் என்று பேசினாலும் அந்தக் கொள்கைகளுக்கு மாற்றாக ஒரு குறைந்தபட்ச திட்டத்தை முன்வைக்க தயாரில்லை. புதிய ஜனநாயக புரட்சியே மாற்று என்பதன் மூலம் பாசிச எதிர்ப்பு போராட்டத்தை சீர்குலைக்கின்றனர். குறுங்குழு வாதத்தில் பிளவுவாதத்தை தழுவுகின்றனர். பாசிசத்தை எதிர்த்து பல்வேறு அரசியல் சக்திகளை ஒன்றிணைக்க மாபெரும் தடையாகும் இது.
அடுத்து, பாசிசம் நிதி மூலதனத்தின் பிற்போக்கு பிரிவின் பயங்கரவாத அட்சியே பாசிசத்துக்கு காரணம் என்று ஏற்க மறுக்கிறார்கள். நிதிமூலதனம் முழுவதுமே பாசிசம் என்கிறார்கள். அதனால் சர்வதேச ரீதியிலும், தேசிய ரீதியிலும் ஆளும் வர்க்கத்துக்குள் இருக்கும் பிளைவை பார்க்காமல், அதனை பயன்படுத்துவது பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக அவர்கள் அனைவரும் ஒன்று என்று கூறி ஒன்றிணைக்கும் வேலையை பார்க்கின்றனர். அதானால் பாசிச ஒழிப்பு போராட்டத்துக்கு குந்தகம் விளைவிக்கின்றனர்.
அடுத்து காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லது அனைத்து நாடாளுமன்றவாத கட்சிகளும் உலகமயத்தையும் தனியார்மயத்தையும் அமல்படுத்துகின்றன என்பது உண்மையே. அக்கொள்கைகள் ஒழியாமல் பாசிசம் ஒழியாது என்பதும் உண்மையே. ஆனாலும் அக்கொள்கைகளை ஆதரித்தாலும் அனைத்து கட்சிகளும் பாசிச கட்சியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே இன்று காங்கிரஸ் கட்சி கூட நாடாளுமன்ற முறைகளை முற்றாக ஒழிக்கவோ, மக்களை மத ரீதியாக இனவெறி தாக்குதலில் மோத விடும் பாசிச முறைகளை ஆதரிக்கும் கட்சி அல்ல. அது ஜனநாயகத்தின்பக்கம் நிற்காது என்றாலும் அது பாசிச கட்சி அல்ல. எதேச்சதிகாரம் என்று சொல்ல லாம். ஆனால் புதிய ஜனநாயக புரட்சி பேசி பாஜகவும் காங்கிரசும் பாசிசத்தின் இருமுகங்கள் என பேசி இந்தியா கூட்டணியை பகைமையாக கையாண்டு பாஜக வலுப்பெரும் வேலையை இவர்கள் செய்கின்றனர்.
இறுதியாக பாசிசத்தை பாராளுமன்றத்தின் மூலம் தோற்கடிக்க முடியாது என்று கூறுகின்றனர். பாசிசத்தை நாடாளுமன்ற முறையில் ஒழிக்கும் வாய்ப்பை கம்யூனிஸ்டுகள் மறுத்ததால்தான் ஜெர்மனியில் இட்லர் ஆட்சிக்கு வந்து கம்யூனிஸ்டுகளை ஒழித்தான். கம்யூனிஸ்டுகளை மட்டுமல்ல சமூக ஜனநாயக கட்சியையும் அழித்தான். எனவே இந்தியா போன்ற புதியகாலனிய நாடுகளில் பாசிசத்தை பாராளுமன்றம் மூலம் ஒழிக்க முடியாமல் போகலாம். ஆனால் பாசிசத்தை அதிகாரத்துக்கு வராமல் பாராளுமன்றத்தால் தடுக்க முடியும். அதனை மறுப்பது பாசிசத்துக்கு கொம்பு சீவி விடுவதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. மேலும் பாசிசம் நிலவும் போது மாவோ நீண்ட மக்கள் யுத்தத்தை கைவிட்டு தேசிய போரை நடத்தினார். நாடாளுமன்றத்துக்கும் நியமனம் செய்யப் பட்டார். ஆனால் மாவோ பேரை உச்சரித்துக் கொண்டு பாசிசம் நிலவும் போது நீண்டமக்கள் யுத்தப்பாதை பேசினால் சத்தீஸ்கர் ஆப்பரேஷன் ககர் கதிதான் அனைவருக்கும் ஏற்படும். புதிய ஜனநாயக புரட்சி நீண்டமக்கள் யுத்தம் என்பதை எல்லாம் ஒத்திவைத்து குறைந்தபட்ச திட்டத்தை அமல் படுத்த நாடாளுமன்ற முறையையும் கையாள மறுத்தால் மக்களுக்கு பேரழிவுதான் என்பதை உணர வேண்டும்!
அடுத்து தமிழ்த் தேச இறையாண்மை போன்ற அமைப்புகள் பாசிசம் நிலவும் போதும் கூட தனிநாடு என்று பேசுவதும், ஆரியத்தை விட தமிழ் தேசியத்தின் விடுதலைக்கு திராவிடமே முதல் எதிரி என்று அராஜகவாத நிலை எடுப்பது ஒரு முக்கிய தடையாகும். குறைந்தபட்ச திட்டம், ஐக்கிய முன்னணி விவகாரத்தில் இவர்கள் மார்க்சிய விரோத நிலை எடுப்பதால் ஒரு பாசிச எதிர்ப்பு முன்னணியை கட்ட முடியவில்லை.
எனவே பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அமைப்பதற்கு மேற்கண்ட மார்க்சிய விரோத, குறுங்குழுவாத நிலைபாட்டை முன்வைத்து மாற்றுக் கருத்துக்களை பரிசீலிக்க மறுத்து அணிகளையும் மக்களையும் ஏமாற்றும் ஞானம், சேல்முருகன் மற்றும் பாரி போன்றவர்களின் செயல்பாடுகள் தபால் கார வேலை பார்ப்பதால் அவர்களது அமைப்பையும் மக்களையும் தவறாக வழி நடத்துவதில் முடிகிறது. பாசிசத்துக்கு பலம் சேர்க்கிறது.
2. வலது விலகல் போக்கு
தமிழ்த் தேசியம் சோஷலிச புரட்சி அல்லது புதியஜனநாயகப் புரட்சி பேசுபவர்கள் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி சர்க்கார் என்று டிமிட்ரோ வின் ஒரு பகுதி கூற்றை ஏற்றாலும், ஏகாதிபத்திய எதிர்ப்பு உலமய தனியார்மய எதிர்ப்பு இல்லாமல் பார்ப்பனிய வடவர் எதிர்ப்பாக பாசிச எதிர்ப்பு போராட்டத்தை குறுக்குவதால் பாசிச எதிர்ப்பில் புரட்சிகர ஜன நாயக சக்திகளை ஒன்றிணைக்க முடியாமல் போகிறது.
பாசித்தின் பொருளியல் அடிப்படை முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி என்பதை காண மறுக்கின்றனர். முக்கியமாக பார்ப்பனிய பாசிசம் என்பதும் அதனை 2000 ஆம் ஆண்டு பாசிசமாக பார்ப்பது. அதாவது ஏகாதிபத்திய எதிர்ப்பை மறுப்பது. அல்லது இந்தியாவையே ஒரு ஏகாதிபத்தி யமாக வரையறுப்பது என்பது ஏகாதிபத்தியம் பற்றிய லெனினிய கோட் பாட்டை மறுப்பது மட்டுமல்ல பாசிச எதிர்ப்பில் புதியகாலனிய நாடுகளில் உலகமயமும் தனியார்மயமும் பார்ப்பனியத்தைவிட மேலானது என்று கருதி பார்ப்பனிய எதிர்ப்பின் அடிப்படையில் பார்த்து இந்தியா கூட்டணியை விமர்சனம் இல்லாமல் ஆதரிப்பது என்ற நிலையை எடுக்கின்றனர்.
இவர்களின் இத்தகைய நிலைபாடுதான் இந்தியா கூட்டணியின் வாலாக பாசிச எதிர்ப்பு சக்திகளை நிறுத்தும் என்ற அச்சத்தை உருவாக்குகிறது. உலகமய தனியார்மய ஒழிப்பு, இந்தியநாட்டின் இறையாண்மை மீட்புடன் தமிழ்த் தேசியம் இணைக்கப்பட்டு குறைந்தபட்ச திட்டத்தை வைத்தால் அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைக்க முடியும் என்பதை இவர்கள் உணர வேண்டும் அது ஒன்றுதான் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று வாய்ச்சவடால் அடித்து பாசிச பாஜகவுக்கு வலு சேர்க்கும் இடது குறுங்குழுவாதத்தை ஒழிக்க வழியாகும். இந்தியா கூட்டணிக்கு வாலாக மாறாமல் இருப்பதற்கும் வழியாகும்.
இந்துத்துவப் பாசிசத்துக்கு மாற்றாக இடதுசாரிகளின் தலை மையில், ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரையும் இணைத்துக் கொண்டு ஒரு ஐக்கிய முன்னணி சர்க்கார் அமைப்பது ஒன்றுதான் உறுதியான இறுதியான தீர்வாக இருக்கும். அதனை நிறைவேற்றுவது மிகவும் கடினமாகவும், நீண்ட நிகழ்வுப் போக்காகவும் இருப்பதற்கு மேற்கண்ட இருவகை விலகல்களே காரண மாகும். இவ்விரு விலகல் போக்கை எதிர்த்து அணிகளும் மக்களும் போராட வேண்டும்.
பாஜகவை விரட்ட பரந்த முன்னணி
அதுவரை குறைந்தபட்சம் இந்துத்துவப் பாசிசத்தை ஆட்சியிலிருந்து விரட்டியடிக்க இந்தியா கூட்டணியை ஆதரிப்பது என்ற அடிப்படையில் நான்கு அமைப்புகள் முடிவு செய்துள்ளன. தமிழ்த்தேச மக்கள் முன்னணி, பொதுமையர் பரப்புரை மன்றம், இ.க.க.மா.லெ ரெட்ஸ்டார் மற்றும் பாவச அணி சேர்ந்து செயல்படுவது என்று முடிவு செய்துள்ளன. அது போன்ற கருத்துடையவர்கள் சேர்ந்து பாசிச எதிர்ப்பு பரந்த முன்னணி அமைத்து செயல்பட வேண்டும் என பாட்டாளி வர்க்க சமரன் அணி கோருகிறது. பரந்த முன்னணி பாசிசத்தை முற்றாக ஒழிக்காது. பாஜகவை தோற்கடிக்க உதவும் அவ்வளவுதான். அது கூட பாசிச ஒழிப்பில் ஒரு படிதான். இடதுசாரி முன்னணியே தீர்வு.
எனவே, மேற்கண்ட அமைப்புகள் தங்களது தவறுகளை திருத்திக் கொண்டால் இந்திய அரசியல் வானில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இடது சாரிகளால் உருவாக முடியும். இல்லையேல் பாஜகவையாவது தோற்கடிக்க முடியும். இதில் எதையும் ஏற்கமாட்டோம் என்றால் எல்லோருக்கும் அழிவு நிச்சயம். அழிவை தடுக்க அனைவரும் அக்கறையுடன் கவனம் வேண்டும் எனவும் கோருகிறோம்.
இப்படிக்கு,
புரட்சிகர வாழ்த்துக்களுடன், கோ.மணி, மாநில அமைப்பாளர், பாட்டாளி வர்க்க சமரன் அணி. கைபேசி:90031 64280
24.07.2025
=============================
No comments:
Post a Comment