முந்தையப்பகுதியின் தொடர்ச்சி....
3. மூலதனம்: "சாதி என்பது சமூக உழைப்புப் பிரிவினை"
3.1 மார்க்ஸ் என்ன சொன்னார்
மூலதனம் முதல்
தொகுதியில் உழைப்புப் பிரிவினையும் உற்பத்தித் தொழிற்கூடமும் (Manufacture)
பற்றிய அத்தியாயத்தில், மார்க்ஸ் சமூகத்தின் உழைப்புப் பிரிவினைக்கும் ஒரு
தொழிற்கூடத்துக்குள் நடக்கும் உழைப்புப் பிரிவினைக்கும் இடையிலான வேறுபாட்டை
விளக்குகிறார். அங்கே இந்தியக் கிராமச் சமூகத்தை எடுத்துக்காட்டாகக் கொள்கிறார்.
அவர் முன்வைக்கும் கருத்துகள்:
- இந்தியக் கிராம சமூகத்தில் உழைப்புப் பிரிவினை இயற்கை
விதி போன்ற தடுக்க முடியாத அதிகாரத்துடன் செயல்படுகிறது. அதே வேளையில்
ஒவ்வொரு கைவினைஞரும் தன் பட்டறையில் மரபு வழியிலேயே வேலை செய்கிறார்.
- சாதியும் தொழிற்கழகங்களும் (guilds)
இயற்கையில் உயிரினங்கள்
இனங்களாகப் பிரிவதற்கு ஒத்த வளர்ச்சி விதியிலிருந்தே எழுகின்றன. ஆனால்
வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைந்தபின் சாதியின் பரம்பரைத் தன்மையும்
கழகங்களின் தனிப்பட்ட உரிமையும் சமூகச் சட்டமாக நிலைநிறுத்தப்படுகின்றன.
- சரக்கு உற்பத்தியில் உழைப்புப் பிரிவினை சந்தையில்
சரக்குப் பரிவர்த்தனை மூலம் நடக்கிறது. இந்த உழைப்புப் பிரிவினை
நிலையாக்கப்பட்டு, ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவுடன் சுழலும்போது,
உற்பத்தி மாற்றமின்றி
நீடிக்கிறது. இதுவே ஆசியச் சமூகங்களின் மாறாத்தன்மைக்கான இரகசியம் என்று
மார்க்ஸ் கூறுகிறார்.
3.2 இது அறிக்கைக்கு எதிரான முதன்மைச் சான்று
மார்க்சைப் பொறுத்தவரை
சாதியின் சாரம் உழைப்புப் பிரிவினையின் சட்டபூர்வ, பரம்பரை, நிலையாக்கப்பட்ட வடிவம். இது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி நிலையுடன் தொடர்புடையது.
ஆனால் அது ஒரு "இடைக்கட்ட வர்க்கப் பிரிவினை",
அதாவது தந்தைவழிச் சமூகத்துக்கும்
நிலப்பிரபுத்துவத்துக்கும் இடையிலான தற்காலிக நிலை என்று மார்க்ஸ் எங்கும்
கூறவில்லை. மாறாக, அவர் பார்வையில் சாதி தேக்கமடைந்த, சுயசார்புக் கிராமப் பொருளாதாரத்தின்
கட்டமைப்பு. அதன் மாறாத்தன்மையே அதன் சிறப்பியல்பு.
அறிக்கையின் கூற்று இதனுடன் மோதுகிறது. வர்க்கப் பிரிவினை வளர்ந்ததும் சாதி
மறைந்துவிடும் என்பது ஓர் இயல்பான விதி என்றால், மார்க்ஸ் இந்தியாவை ஏன் இத்தகைய "மாறாத"
சமூகமாகக் கண்டார் என்பதற்கு அறிக்கையில் விளக்கமில்லை.
3.3 "சாதி = உழைப்புப் பிரிவினை" என்பதற்கும் வரம்பு உண்டு
இங்கே ஒரு
எச்சரிக்கையும் தேவை. "மார்க்ஸ் சாதியை உழைப்புப் பிரிவினை என்றார்"
என்பது மூலதனத்தின் ஒரு பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட சுருக்கம். மூலதனத்தின்
நோக்கம் இந்திய சமூக ஆய்வு அல்ல. அது முதலாளித்துவ உற்பத்தி முறையை ஆராயும் நூல்.
இந்தியக் கிராமம் அங்கு ஒப்பீட்டு எடுத்துக்காட்டாக வருகிறது. மார்க்ஸின் இந்தியா
பற்றிய பிற எழுத்துகளில் (1853 ஆம் ஆண்டின் "இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி"
கட்டுரைகள், எங்கெல்சுடனான
கடிதங்கள்) தகவல் ஆதாரங்கள் பெரும்பாலும் அன்றைய பிரிட்டிஷ் அதிகாரிகளின்
அறிக்கைகளே. இவை பின்னாளைய ஆய்வுகளால் பல இடங்களில் திருத்தப்பட்டுள்ளன. ஆகவே
மார்க்சின் ஒரு கூற்றை இறுதி உண்மையாக ஏற்பது மார்க்சிய முறையாகாது. ஆனால் அதே
அளவுகோல் அறிக்கைக்கும் பொருந்தும். அது மார்க்சின் ஆசியப் பாணி உற்பத்திக்
கருத்தை ஏற்று, அதே
சமயம் அவரது சாதி பற்றிய கூற்றை நேரடியாக எதிர்கொள்ளாமல் விடுகிறது.
3.4 மார்க்சின் நுண்ணிய வேறுபாடு
மார்க்ஸ் சாதியை
இயற்கை விதி போல் காட்டுவது கவனிக்கத்தக்கது. ஒரு சமூக அமைப்பு பரம்பரைச் சட்டமாக
இறுகும்போது, அதன்
வர்க்க உள்ளடக்கம் (யார் உபரியை உற்பத்தி செய்கிறார்,
யார் அபகரிக்கிறார்) மறைக்கப்பட்டு "இயற்கை
ஒழுங்கு" போலத் தோன்றுகிறது. இது மார்க்சின் சரக்கு மாயை (fetishism)
பகுப்பாய்வுக்கு நெருக்கமான சிந்தனை. இதிலிருந்து,
சாதி என்பது வர்க்க உறவை மறைத்துச் சட்டமாக்கும் சமூக
வடிவம் என்ற விளக்கத்தை உருவாக்கலாம். இது அறிக்கையின் "இடைக்கட்ட
வர்க்கம்" என்பதைவிடத் துல்லியமானது. ஏனெனில் சாதியை வர்க்கத்தின்
இடத்தில் வைக்காமல் வர்க்க உறவின் வடிவமாக வைக்கிறது.
4. எங்கெல்ஸ்: குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்
4.1 அறிக்கையின் எங்கெல்ஸ் சார்பு
அறிக்கையின்
தந்தைவழிச் சமூகம் பற்றிய பகுதி எங்கெல்சின் திட்டத்தை நினைவூட்டுகிறது. தாய்வழிச்
சமூகம் தந்தைவழிச் சமூகமாக மாறியது, கால்நடை வளர்ப்பு, விவசாயம், உபரி, அடிமை உழைப்பு ஆகியவை எங்கெல்சின் மையக் கருத்துகள். பெண்
வர்க்கத்தை ஆண் வர்க்கம் அடிமைப்படுத்தியது எனும் கூற்றும் எங்கெல்சின்
"பெண்பாலின் உலக வரலாற்றுத் தோல்வி" என்ற சொற்றொடரை ஒத்தது.
4.2 எங்கெல்சின் திட்டத்துடன் முரண்பாடுகள்
(அ) "இடைக்கட்டம்" எங்கெல்சின் திட்டத்தில் இல்லை. எங்கெல்ஸ் கிரேக்க, ரோமச் சமூகங்களை ஆராய்ந்து, குலச் சமூகம் (gens) சொத்து வேறுபாடு, உழைப்புப் பிரிவினை, அடிமை முறை ஆகியவற்றால் சிதைந்து, பிரதேசம் சார்ந்த அமைப்பாகவும் அரசாகவும் மாறியதைக் காட்டுகிறார். அவர் விவரிக்கும் மூன்று பெரும் உழைப்புப் பிரிவினைகள் (மேய்ச்சல் கூட்டங்கள் பிரிதல்; கைவினைத் தொழில் விவசாயத்திலிருந்து பிரிதல்; வணிகர் வர்க்கம் தோன்றல்) சாதிப் படிநிலை என்ற தனி வரலாற்றுக் கட்டத்துக்கு இட்டுச் செல்லவில்லை. அவை சொத்துடைமை வர்க்கங்களுக்கும் அரசுக்கும் இட்டுச் சென்றன. அறிக்கை எங்கெல்சின் சொற்களைக் கடன் வாங்கினாலும் அவர் திட்டத்தில் இல்லாத ஒரு புதிய "கட்டத்தை" இடையில் செருகுகிறது. புதிய கருத்து அறிவியலுக்கு எதிரானதல்ல. ஆனால் அதற்கு எங்கெல்சின் திட்டத்தை மறுத்து நிரூபிக்கும் பொறுப்பு உண்டு. அறிக்கை அந்தப் பொறுப்பை ஏற்கவில்லை.(எழுதியவர் பதில் சொல்ல வேண்டும்)
(ஆ) கிரேக்க, சீன, ஜப்பானிய "சாதிகள்" பற்றிய வரலாற்றுத் துல்லியம்.
எங்கெல்ஸ் ஆராய்ந்த ஏதென்சில் குலங்கள் கிளீஸ்தனீஸின்
பிரதேச அடிப்படையிலான சீர்திருத்தத்தால் தகர்க்கப்பட்டன. சொலோனின் சீர்திருத்தம்
சொத்து மதிப்பின் அடிப்படையிலான வகுப்புகளை உருவாக்கியது. இவை அகமண,
பரம்பரைப் பிறப்பு அடிப்படையிலான சாதிகள் அல்ல. சீனாவின்
"சி-நோங்-கோங்-ஷாங்" (அறிஞர்-உழவர்-கைவினைஞர்-வணிகர்) பிரிவு தொழில்சார்
சமூகத் தரவரிசையே. அது கடுமையான அகமணக் கட்டுப்பாட்டுடன் பரம்பரைச் சாதிகளாக
இறுகியதற்குச் சான்று இல்லை. ஜப்பானின் டோகுகாவா காலத்து நான்கு படிநிலைகள்
சட்டபூர்வமாக இருந்தன. ஆனால் அங்கே "புராகுமின்" போன்ற ஒதுக்கப்பட்ட
பிரிவினர் பிறப்பு அடிப்படையிலான பாகுபாட்டுக்கு நவீன காலம் வரை ஆளாகினர். ஆகவே
அங்கு சாதிப் பாகுபாடு முழுவதுமாக "மறைந்துவிட்டது" என்ற கூற்று மிகைப்படுத்தல்.
அறிக்கை இந்த உலகளாவிய ஒப்பீட்டைச் சான்றுகள், மேற்கோள்கள் இல்லாமல் ஒரே வரியில் கடந்து செல்கிறது. ஆனால்
அதன் முழு "இடைக்கட்டக்" கருதுகோளும் இந்த ஒப்பீட்டின் மேலேயே
நிற்கிறது.
(இ) பெண்ணடிமைத்தனமும் சாதியும். எங்கெல்சின் நூலின் மையம் குடும்ப வடிவம்,
சொத்துப் பரம்பரை, பெண்ணின் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கான தொடர்பு. சொத்தும்
பிறப்பும் தூய்மையாகப் பரம்பரையாகச் செல்ல வேண்டுமெனில் பெண்ணின் பாலியல்
கட்டுப்படுத்தப்பட வேண்டும். சாதியின் சாரமாகிய அகமணமுறை நிலைக்க இது அவசியம்.
அறிக்கை அகமணமுறையை ஏற்கும் போதும், அதன் அடிப்படையான பெண்ணின் மீதான கட்டுப்பாட்டைப் பற்றி ஒரு
சொல்கூடப் பேசவில்லை. எங்கெல்சின் நூலிலிருந்து கடன் வாங்கிய கருத்தை அவரது மையக்
கருத்துடன் இணைக்காமல் விட்டுவிடுவது ஒரு பெரிய குறை.
(ஈ) அரசைப் பற்றி மௌனம். எங்கெல்சுக்கு அரசு என்பது வர்க்க முரண்பாடுகளை
"ஒழுங்கின்" வரம்புக்குள் வைத்திருக்கும் ஆளும் வர்க்கக் கருவி. சாதி
ஒரு வர்க்க ஆட்சி வடிவம் என்றால், அதனுடன் வரும் அரசு வடிவம் (தர்மசாஸ்திர அரசுகள்,
சாதி பஞ்சாயத்துகள், மன்னராட்சிகள்) என்ன என்ற கேள்வி எழுகிறது. அறிக்கை அதைத்
தொடவில்லை.
5. மார்க்ஸ்: லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்
இந்த நூல் வர்க்கங்களை
அரூபமாகப் பேசாமல், ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழலில் வர்க்கங்களும் அவற்றின் பிரிவுகளும் எவ்வாறு
செயல்படுகின்றன என்பதற்கான முன்மாதிரி ஆய்வு. இதிலிருந்து நான்கு பாடங்களை
அறிக்கைக்குப் பொருத்திப் பார்க்கலாம்.
5.1 "மனிதர்கள் வரலாற்றைத் தாமே படைக்கிறார்கள்;
ஆனால் தம்
விருப்பப்படி அல்ல"
வரலாறு நேர்கோட்டு விதியாக இல்லாமல், மரபின் சுமையுடனும் குறிப்பிட்ட சூழலுடனும் நடக்கிறது என்பது மார்க்சின் முறை. அறிக்கையின் "இடையீடுகள்" (ஆரியர், கிரேக்கம், இசுலாமியர், ஆங்கிலேயர்) இந்த வழியில் செல்வது போலத் தோன்றலாம். ஆனால் அவை சான்றுகளின்றி வரிசைப்படுத்தப்பட்ட பட்டியலாக உள்ளன. புரூமேரில் மார்க்ஸ் ஒவ்வொரு நிகழ்வையும் வர்க்கங்களின் நிலை, கட்சிகளின் நலன், நிகழ்வுகளின் கால வரிசை ஆகியவற்றுடன் நுணுக்கமாக விவரிக்கிறார். அறிக்கையில் அத்தகைய கூர்ந்த ஆய்வு இல்லை. அவைபற்றிய எந்தப் புரிதலும் இல்லை.
5.2 வர்க்கமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும்
மார்க்ஸ் புரூமேரில்
ஒரு கட்சியின் சுய அடையாளத்துக்கும் அதன் வர்க்க அடிப்படைக்கும் உள்ள வேறுபாட்டை
வலியுறுத்துகிறார். கடைக்காரர்களின் பிரதிநிதி ஒரு கடைக்காரராக இருக்க
வேண்டியதில்லை. அவரது சிந்தனை கடைக்காரர் தாண்டாத எல்லைகளை அவரும் தாண்டாததே
அவரைப் பிரதிநிதியாக்குகிறது. அதேபோல, "பார்ப்பனியம்" என்ற சித்தாந்தத்தையும்
"பார்ப்பனர்" என்ற சாதியையும் "வணிக வர்க்கம்" என்ற
வர்க்கத்தையும் ஒன்றாகக் குழப்புவதை இந்த அணுகுமுறை ஏற்காது. அறிக்கை
"பார்ப்பனிய வணிக வர்க்கம்" என்ற ஒரே சொல்லில் இவற்றை இணைக்கிறது. ஆனால்
உண்மையான தரவுகள் வேறுவிதமாக உள்ளன:
- இந்தியாவின் பெருமுதலாளித்துவப் பிரிவுகள் வரலாற்று
ரீதியாக பனியா, மார்வாரி, குஜராத்தி வணிகர், பார்சி போன்ற வணிகச் சாதிகளிலிருந்து எழுந்தவை. இவை
பார்ப்பனச் சாதியல்ல.
- பார்ப்பனச் சாதிக்குள்ளேயே ஏழை அர்ச்சகர்,
சமையல்காரர்,
சிறு எழுத்தர் உள்ளிட்டோர்
பெருமளவில் உள்ளனர்.
"பார்ப்பனியம்" என்பது சாதிப் படிநிலையை நியாயப்படுத்தும் ஆதிக்கச் சித்தாந்தம் என்ற பொருளில் அறிக்கை பயன்படுத்தினால், அது மேல்கட்டுமானத்தின் கருத்து. அதை ஒரு வர்க்கத்தின் பெயராக அடிப்படைக் கட்டுமானத்தில் வைக்க முடியாது. அறிக்கை சாதியை மேல்கட்டுமானம் என்பதை மறுக்கிறது. ஆனால் "பார்ப்பனியம்" என்று சொல்லும்போது அதே மேல்கட்டுமான வகையையே பொருளாதார வர்க்கத்துக்குப் பயன்படுத்துகிறது. தன்னைதானே மறுக்கும் அளவிற்கு செல்கிறது இந்த அறிக்கை.
5.3 விவசாயிகளும் "உருளைக்கிழங்குச் சாக்கும்"
புரூமேரில் மார்க்ஸ்
சிறு விவசாயிகளை, ஒரே சாக்கில் போடப்பட்ட உருளைக்கிழங்குகளைப் போன்றவர்கள் என்கிறார்.
அவர்களுக்கிடையே ஒத்த வாழ்நிலை இருந்தாலும் நெருக்கமான பரிவர்த்தனையும் தேசிய
அளவிலான அமைப்பும் இல்லாததால் அவர்களால் தம்மைத் தாமே பிரதிநிதித்துவப்படுத்த
முடியாது. இந்தப் பாடம் அறிக்கையின் புரட்சிகர வேலைத்திட்டத்துக்கு மிக
முக்கியமானது. அறிக்கை விவசாயிகள், விவசாயக் கூலிகள், சிறு வணிகர்கள், ஆலைத் தொழிலாளர்கள் எனப் பலரையும் "உழைக்கும்
வர்க்கத்தின் தலைமையில்" அணிதிரட்டும் என்று ஒரே வாக்கியத்தில் சொல்கிறது.
ஆனால் இந்தியாவில் இந்த வர்க்கங்கள் சாதி வழியாகவும் பிளவுபட்டுள்ளன. நில உடைமை விவசாய சாதிகளும் நிலமற்ற தலித் கூலி
உழைப்பாளரும் ஒரே "விவசாய வர்க்க"த்துக்குள் அடங்குபவர்கள் அல்ல.
அவர்களை எவ்வாறு ஒன்றுசேர்ப்பது, எத்தகைய கோரிக்கைகள் மூலம் என்பதே புரூமேர் தரும் பாடத்தின்
நடைமுறை வடிவம். அறிக்கை அதையே "அடுத்த கட்டம்" என்று ஒத்திவைக்கிறது.
5.4 அரசின் தன்னாட்சி நிலையும் போனபார்ட்டியமும்
புரூமேர் ஒரு
முக்கியமான கருத்தை முன்வைக்கிறது: வர்க்கங்கள் ஒன்றையொன்று சமநிலையில்
நிறுத்தும்போது, அரசு
அதிகாரம் சிறிது காலம் ஒப்பீட்டுத் தன்னாட்சியுடன் இயங்கக்கூடும். இந்தக்
கண்ணோட்டம் இந்திய அரசின் தன்மையை ஆராயும் மார்க்சிய ஆய்வுகளுக்கு (உதாரணமாக,
பெருமுதலாளித்துவம், நிலவுடைமை, அதிகார வர்க்கம் ஆகியவற்றுக்கிடையிலான உறவு பற்றிய
விவாதங்கள்) வழிகாட்டும். ஆனால் அறிக்கை அரசை "பார்ப்பனியச் சமூக
ஏகாதிபத்தியம்" என்ற ஒற்றை வர்க்கக் கருவியாகச் சுருக்குகிறது. அவ்வாறு
செய்வது புரூமேர் காட்டும் நுட்பமான வர்க்கப் பிரிவுகளின் ஆய்வு முறையைக்
கைவிடுவதாகும்.
5.5 "இந்துத்துவம் = பாசிசம்" எனும் அரசியல் வகைப்பாடு
புரூமேர்,
ஒரு அரசியல் சக்தியை (போனபார்ட்டியம்) அதன் வர்க்கச் சமநிலை,
சமூக அடித்தளம், அது சார்ந்திருக்கும் அணிகள் ஆகியவற்றின் அடிப்படையில்
வகைப்படுத்துவதன் முன்மாதிரி. இந்துத்துவ அரசியல் பற்றிய பாசிசம் என்ற வரையறையும்
இவ்வாறே நுணுக்கமாக நிறுவப்பட வேண்டும். அறிக்கை அதை "இந்துத்துவநெறி,
இசுலாமிய வெறுப்பு அரசியல், மின்னணு ஊடகக் கட்டமைப்பு" என்ற ஒரு வரியில்
நிறுவிவிட்டதாகக் கொள்கிறது. அது பாசிசம் என்பதை நிறுவ,
அதன் சமூக அணிகள் (குட்டி முதலாளிகள்,
நடுத்தர வர்க்கம்), நிதிமூலதனத்துடனான உறவு, அரசு எந்திரத்தின் மாற்றங்கள் ஆகியவற்றின் ஆய்வு தேவை.
6. லெனின்: மக்களின் நண்பர்கள் யார்?
அவர்கள் சமூக
ஜனநாயகத்தை எதிர்த்து ஏன் போரிடுகிறார்கள்?
1894ல்
எழுதப்பட்ட இந்த நூலில் லெனின் ரஷ்யாவின் நரோத்னிக்குகளை (மிகைலோவ்ஸ்கி முதலியோர்)
மார்க்சிய முறையிலிருந்து விமர்சிக்கிறார். அதிலிருந்து அறிக்கைக்குப் பொருந்தும்
மூன்று அடிப்படைப் பாடங்கள் உள்ளன.
6.1 வாய்பாட்டு இயங்கியல் அல்ல;
சான்றுகளின் அறிவியல்
நரோத்னிக்
சிந்தனையாளர் மார்க்சின் இயங்கியலை "ஹெகலியன் முத்தொகுப்புகள்" (வாதம்,
எதிர்வாதம், தொகுப்பு) என்று கேலி செய்தார். லெனின் இதற்குப்
பதிலளிக்கும் போது, மார்க்ஸ் தன் முடிவுகளை முத்தொகுப்பால் நிறுவவில்லை என்றும்,
உண்மையான பொருளாதார, சமூக உண்மைகளின் ஆய்விலிருந்தே நிறுவினார் என்றும்,
இயங்கியல் அந்த ஆய்வு முறையின் வழிகாட்டி மட்டுமே என்றும்
வலியுறுத்துகிறார்.
அறிக்கை "அகநிலை,
புறநிலை, முரண்பாடு" என்ற இயங்கியல் சொல்லாடல்களை
முன்னிறுத்தித் தொடங்குகிறது. ஆனால் அதன் தீர்மானங்கள் தரவுகளிலிருந்து வரவில்லை.
எடுத்துக்காட்டாக, "இடைக்கட்டம்" என்பது கிரேக்க,
சீன, ஜப்பானியச் சமூகங்களின் வரலாற்றிலிருந்து நிரூபிக்கப்படுவதற்குப் பதிலாக,
முன்கூட்டியே கருதப்பட்டு வரலாற்றின் மேல்
பொருத்தப்படுகிறது. லெனின் "மக்கள் நண்பர்கள்" நூலிலேயே இத்தகைய
வாய்பாட்டு முறையைக் கண்டிக்கிறார்.
6.2 சமூக-பொருளாதார அமைப்பு (formation)
என்ற கருத்து
லெனின் மார்க்சின்
பெரும் சாதனையாகக் காண்பது, சமூகத்தைச் சமூக-பொருளாதார அமைப்புகளாக (formations) வகைப்படுத்தி, ஒவ்வொன்றும் இயற்கை வரலாற்றுச் செயல்முறையாக வளர்வதைக்
காட்டியது. சமூக அமைப்பின் கட்டங்களை ("தந்தைவழி → இடைக்கட்ட சாதி → நிலப்பிரபுத்துவம்")
வரையறுக்கும்போது, ஒவ்வொரு கட்டத்துக்கும் தனிப்பட்ட உற்பத்தி முறை,
அதற்கேற்ற உபரி அபகரிப்பு வடிவம் இருக்க வேண்டும்.
அறிக்கையில் "இடைக்கட்ட சாதி" என்ற கட்டத்துக்குரிய தனிப்பட்ட உற்பத்தி
முறை என்ன? உபரியை
யார்,
எப்படி அபகரிக்கிறார்? அரசு வடிவம் என்ன? இக்கேள்விகளுக்கு அறிக்கை பதிலளிக்கவில்லை. அவற்றுக்குப்
பதில் இல்லாமல் ஒரு "கட்டத்தை" அறிவிக்க முடியாது.
6.3 வர்க்கம் பற்றிய லெனினிய வரையறை
லெனின் பிற்காலத்தில்
(மாபெரும் தொடக்கம், 1919) வர்க்கத்தை வரையறுத்தார்: வரலாற்று ரீதியாக
நிர்ணயிக்கப்பட்ட சமூக உற்பத்தி அமைப்பில் தமக்குரிய இடம்,
உற்பத்திச் சாதனங்களுடனான உறவு (பெரும்பாலும் சட்டபூர்வமாக
நிலைநிறுத்தப்பட்டது), சமூக உழைப்பமைப்பில் பங்கு, அதன் விளைவாகச் சமூகச் செல்வத்தில் பெறும் பங்கு ஆகியவற்றால் வேறுபடும்
பெருந்திரள் மக்கள் குழுக்களே வர்க்கங்கள்.
இந்த வரையறையில்
சாதியை வைத்துப் பார்த்தால், சாதி வர்க்கம் தோன்றும் வடிவம் ஆகலாம். பல சந்தர்ப்பங்களில் அது வர்க்கத்துடன்
ஒன்றிணைகிறது (கூலி அடிமை உழைப்பில் தலித்துகள், நிலவுடைமையில் பிற்படுத்தப்பட்ட மேல்நிலை விவசாயச் சாதிகள்
என). ஆனால் அது எப்போதும் அப்படி ஒன்றிணைவதில்லை. ஒரு சாதிக்குள் வர்க்க
அடுக்குகளும் உண்டு. இந்த வேறுபாடுகளை அறிக்கை புறக்கணிக்கிறது.
6.4 "மக்கள் நண்பர்கள்" எச்சரிக்கை: "தேசிய இனம்"
என்ற ஒருமையின் சிக்கல்
லெனினின் நரோத்னிக்
விமர்சனத்தின் மையம், "மக்கள்" என்ற ஒற்றைச் சொல்லுக்குள் வர்க்க
முரண்பாடுகளை மறைக்கும் போக்கை அம்பலப்படுத்துவது. கிராமச் சமூகத்தையும் சிறு
உடைமை உற்பத்தியாளரையும் இலட்சியப்படுத்தி, விவசாயிகளுக்குள்ளேயே நடக்கும் வர்க்கப் பிளவை (பணக்கார
விவசாயி,
ஏழை விவசாயி, கூலித் தொழிலாளி) மறைப்பது அவர்கள் வழக்கம். லெனின்
"ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி" நூலில் விரிவான
புள்ளிவிவரங்களுடன் இந்தப் பிளவை நிரூபித்தார்.
அறிக்கை "தேசிய
இன மக்கள்", "தேசிய இன முதலாளிகள்", "துணைக்கண்ட தேசியங்கள்" என்ற சொற்களைப்
பயன்படுத்துகிறது. அவை எந்த அளவுக்கு ஒரே நலனைக் குறிக்கின்றன?
தமிழ்த் தேசிய இனத்துக்குள்ளேயே நிலவுடைமை இடைநிலைச்
சாதிகளும் நிலமற்ற தலித் உழைப்பாளரும் இருக்கிறார்கள். தேசிய இன
முதலாளித்துவத்தின் நலன் அந்த உழைப்பாளரின் நலனுடன் எந்த அளவுக்கு ஒன்றுபடுகிறது
என்ற கேள்வியை அறிக்கை எழுப்பவில்லை. லெனினின் எச்சரிக்கை இங்கே நேரடியாகப்
பொருந்துகிறது.
6.5 பொருளாதாரப் புள்ளிவிவரம் இல்லாமை
லெனினின் ஆய்வுகளின்
தனிச்சிறப்பு விரிவான புள்ளிவிவரங்களும் சான்றுகளும். அறிக்கையில் ஒரே ஒரு எண்
மட்டும் வருகிறது ("நான்காயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகள்"),
அதற்கும் ஆதாரமில்லை. நில உடைமை,
பெருநிறுவன உரிமை, தொழிலாளர் அமைப்பு ஆகியவற்றின் சமகாலத் தரவுகள்
எதுவுமில்லை. அத்தகைய தரவுகளின்றி "பார்ப்பனிய வணிக வர்க்கம் நிதிமூலதன
ஏகபோகத்தை அடைந்துவிட்டது" என்று சொல்வது அரசியல் அறிவிப்பேயன்றி ஆய்வு
முடிவு ஆகாது.
7. லெனின்: ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சகட்டம்
7.1 லெனினின் வரையறை
லெனின் ஏகாதிபத்தியத்தின் ஐந்து அடிப்படைக் கூறுகளை வரையறுத்தார்:
- உற்பத்தியும்
மூலதனமும் ஏகபோகங்களைத் தோற்றுவிக்கும் அளவுக்குக் குவிதல்.
- வங்கி
மூலதனமும் தொழில்துறை மூலதனமும் இணைந்து நிதிமூலதனமும் நிதி ஆதிக்கக்
கும்பலும் உருவாதல்.
- சரக்கு
ஏற்றுமதியைவிட மூலதன ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கிடைத்தல்.
- உலகைப்
பங்கிடும் சர்வதேச ஏகபோகக் கூட்டுகள் உருவாதல்.
- உலகின்
நிலப்பரப்பு பெரும் முதலாளித்துவ வல்லரசுகளிடையே பங்கிடப்பட்டு முடிதல்.
7.2 "பார்ப்பனியச் சமூக ஏகாதிபத்தியம்" என்ற கருத்து
(அ) தொழில்துறை வளர்ச்சியைத் தாண்டிய நிதிமூலதனம்? அறிக்கை, துணைக்கண்டம் "தொழிற்துறைத் தற்சார்பை எட்டாமலேயே
நேரடியாக நிதிமூலதன ஏகபோகத்தை ஏற்படுத்திக்கொள்கிறது" என்கிறது. லெனினின்
வரையறையில் நிதிமூலதனம் என்பது வங்கி மூலதனமும் தொழில்துறை மூலதனமும் இணைந்த வடிவம். வளர்ந்த தொழில்துறை ஏகபோகங்கள் இல்லாத
இடத்தில் அது தானாக உருவாக முடியாது. இது லெனினுக்கு எதிரான கூற்றாக இருக்கலாம்.
அல்லது இந்தியப் பெருமுதலாளித்துவம் தொழில்துறையிலும் ஏகபோகம் அடைந்துள்ளது
என்றால் அந்த "தற்சார்பற்ற" என்ற சொல்லே கேள்விக்குரியது. இவ்விரண்டில்
எது என்பதை அறிக்கை தெளிவுபடுத்தவில்லை.
(ஆ) மூலதன ஏற்றுமதி. லெனினின் ஏகாதிபத்திய இலக்கணத்தில் மூலதன ஏற்றுமதி
முக்கியமானது. இந்தியப் பெருநிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு (டாடா,
இன்போசிஸ், அதானி, ரிலையன்ஸ் முதலிய நிறுவனங்களின் சர்வதேச விரிவாக்கம்)
கவனிக்கத்தக்க அளவில் உள்ளது. ஆனால் அது அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் மூலதன ஏற்றுமதி அளவில் உள்ளதா,
இந்தியா முதன்மையாக மூலதனத்தை இறக்குமதி செய்யும் நாடா என்ற
விவாதம் இந்திய மார்க்சிய, சமூகவியல் வட்டாரங்களில் தொடர்கிறது. இதற்கு "துணை ஏகாதிபத்தியம்" (sub-imperialism)
போன்ற மாற்றுக் கருத்துகளும் உண்டு. அறிக்கை இந்த விவாதத்தை
அறிந்ததாகவே தெரியவில்லை. புள்ளிவிவரமில்லாமல் தீர்ப்பையே முன்வைக்கிறது.
(இ) "சமூக ஏகாதிபத்தியம்" என்ற சொல்லின் வரலாறு.
லெனின் "சமூக-ஏகாதிபத்தியம்" என்ற சொல்லைப்
பயன்படுத்தினார். ஆனால் அவர் அதை வேறு பொருளில் (சொல்லில் சோசலிசம்,
செயலில் ஏகாதிபத்தியம் என்ற இரண்டாம் அகிலத்தின் சமூக-தேசிய
வெறிவாதிகளுக்கு) பயன்படுத்தினார். 1960களில் சீனக் கட்சி பின்வந்த சோவியத் யூனியனை "சமூக
ஏகாதிபத்தியம்" என்று வரையறுத்தது. அறிக்கை இந்தச் சொல்லை மூன்றாவது
அர்த்தத்தில் ("சோசலிச முலாம் பூசிய பாசிச அரசியல்" கொண்ட இந்திய ஆளும்
வர்க்கம்) பயன்படுத்துகிறது. இது லெனினுடையது அல்ல, அதற்கான வரலாற்று ஆதாரத்தை
அறிக்கை தரவில்லை.
(ஈ) "தரகு முதலாளித்துவம்".
இந்தச் சொல் லெனினின் ஏகாதிபத்தியம் நூலில் மையமாக இல்லை. இது சீனப் புரட்சியின்
பகுப்பாய்விலிருந்து பெறப்பட்ட கருத்து. இந்தியாவுக்குப் பொருத்தும்போது,
இந்தியப் பெருமுதலாளிகள் ஆரம்பத்திலிருந்தே தேசிய
இயக்கத்துடனும் தேசிய-முதலாளித்துவ நலன்களுடனும் இணைந்திருந்தனர் (ஆங்கிலப்
பொருளாதாரத்துடன் முரண்பட்ட பிரிவுகளும் இருந்தன) என்ற வரலாற்று உண்மையுடன் அது
முரண்படலாம். முழு ஆய்வுக்கு நுணுக்கமான ஆதாரங்கள் தேவை.
7.3 ஏகாதிபத்தியப் போட்டியில் பக்கம் சார்தல்
லெனினின் அரசியல் முடிவு தெளிவானது: ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போட்டி
உழைக்கும் வர்க்கத்துக்கு ஒரு ஏகாதிபத்தியத்தின் பக்கம் நிற்க எந்த நியாயத்தையும்
தராது. முதல் உலகப் போரில் தத்தம் நாட்டு முதலாளிகளை ஆதரித்த சமூக ஜனநாயகவாதிகளை
லெனின் "சமூக-தேசிய வெறிவாதிகள்" என்று கண்டித்தார். அறிக்கை
கச்சாப்பொருள் (எண்ணெய்) அடிப்படையிலான அமெரிக்கக் கட்டமைப்பையும்,
மாற்று எரிபொருள் சார்ந்த சீன அரச முதலாளித்துவத்தையும் இரு
போட்டிக் கட்டமைப்புகளாக வரையறுக்கிறது. அது சீனாவின் நிலையை எவ்வாறு
மதிப்பிடுகிறது என்பதை நேரடியாகக் கூறாவிட்டாலும், சீனத் தொழில்நுட்ப முன்னேற்றத்தை "தொழிற்புரட்சி"
என்று உயர்த்திப் பேசுகிறது. அதன் தொனி அமெரிக்க-எதிர்ப்பு வழியாகச் சீன அரச
முதலாளித்துவத்தை முற்போக்கானதாக அமர்த்தும் பொருளாதார வாதத்தை நோக்கிச்
செல்கிறது. அந்தப் போக்கு லெனினின் ஏகாதிபத்தியக் கோட்பாட்டுக்கு நெருக்கமானதல்ல.
லெனின் தொழிலாளி வர்க்கத்தின் சுதந்திரமான நிலைப்பாட்டையே வலியுறுத்தினார்.
7.4 தொழில்நுட்ப நிர்ணயவாதம்
"எண்ணெய்க்கு மாற்றான எரிபொருள் தொழில்நுட்பம் ஒரு
தொழிற்புரட்சியை ஏற்படுத்துகிறது" என்ற கருத்து,
உற்பத்தி உறவுகளின் இடத்தில் ஆற்றல் மூலத்தையே வரலாற்று
நகர்வின் மையமாக வைக்கிறது. மார்க்சிய முறையில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி
முக்கியமே. ஆனால் அது உற்பத்தி உறவுகள், வர்க்கப் போராட்டம் ஆகியவற்றுடன் இணைந்தே பொருள்படுகிறது.
ஒரு எரிபொருள் மாற்றம் தானாக முதலாளித்துவ உறவை மாற்றிவிடாது. அறிக்கையின் இந்தப்
பகுதி அத்தகைய தொழில்நுட்ப நிர்ணயவாதத்தை நோக்கிச் சாய்கிறது.
தொடரும் அடுத்தப்பகுதியில்....
தொடர்புடைய கட்டுரைகள்:
- இதன் முந்தையப்பகுதியை இந்த இணைப்பை அழுத்தி வாசிக்கவும்
- இதன் அடுத்தப்பகுதியை இந்த இணைப்பை அழுத்தி வாசிக்கவும்
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக