இந்த வரலாற்று உண்மையை மறுக்கும் போக்கு அடிப்படையில் மார்க்சியத்தையே மறுக்கும் போக்காகும்...
ம.தி.முத்துல்குமாரின் "உற்பத்தியும் புரட்சியும்" என்ற நூலின் மைய விவாதம் இந்தக் கேள்வியை மையமாக வைத்து, லெனினும் மாவோவும் மார்க்சியத்தில் செய்த திருத்தமே இன்றைய பொதுவுடைமை இயக்கத்தின் தோல்விக்குக் காரணம் என வாதிடுகிறது.
இந்த நூலாசிரியரின் வாதம் என்ன?
மார்க்சின் வரையறைப்படி, உற்பத்தி அடித்தளம்; அதன் மேல் அரசியல் மற்றும் பண்பாட்டு மேல்கட்டுமானம் எழுகிறது. புரட்சி என்பது முதலில் உற்பத்தியில் மாற்றம், பின்னர் அரசியல் மாற்றம்.
லெனின் புரட்சியை "அதிகார மாற்றம்" என வரையறுத்தார்; மாவோ, முதலாளித்துவ உறவுகள் நிலப்பிரபுத்துவத்திலேயே முளைக்கும், ஆனால் சோசலிச உறவுகள் முதலாளித்துவத்தில் முளைப்பதில்லை என்றார்.
இந்தத் திருத்தமே "அதிகாரம் முதலில், உற்பத்தி பின்னர்" என்ற விதியாக மாறி, உலகப் பொதுவுடைமை இயக்கங்களை அரசியல் அதிகாரப் போராட்டத்தை நோக்கித் திருப்பியது.
ரஷ்யப் புரட்சி உண்மையில் முதலாளித்துவப் புரட்சி; லெனினே அதை ஒப்புக்கொண்டார்.
சமகாலத்தில் எந்த நாட்டிலும் சோசலிசப் புரட்சி வெற்றி பெறவில்லை; சீனாவிலும் நிதி மூலதனமே ஆதிக்கம் செலுத்துகிறது என்கிறார்!
இந்த நூலாசிரியரின் கண்டுபிடிப்பு, என்னே கண்டுபிடிப்பு பாருங்கள்?
இந்த நூலின் பக்கம் 19 உள்ளதே, ...
மார்க்ஸ் மனித சமுதாய வளர்ச்சி பற்றி ஆய்வு செய்து, தத்துவத்தை (மார்ச்சியத்தை) வகுத்தளித்தார். அந்தத் தத்துவத்தை ஏந்தி ரஷ்யா, சீனா மற்றும் சில நாடுகளில் சமூக மாற்றம் நிகழ்த்தப்பட்டது. எனினும் தற்போது சீனாவைத் தவிர வேறு எந்த நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இல்லை. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், அங்கு சோசலிசம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. நிதி மூலதன ஆதிக்கமே கோலோச்சுகிறது. உலகம் முழுவதும் இந்தியாவில் இருப்பது போலவே சொற்பமான அளவிலேயே பொதுவுடைமை அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இப்படி மார்க்சிய கோட்பாடு இருக்கிறது. அந்தக் கோட்பாடுதான் அறிவியல் எனும் போது, அதைப் செயல்படுத்தும்போது நாம் எங்கேயோ ஒரு பிழை செய்து விட்டோம். அதைக் கண்டுபிடிக்க முடியாமல் பொதுவுடைமை இயக்கம் பல இயங்கங்களான உடைந்து சிதறிக்கிடக்கின்றன. இதற்கு ஒரே வழி கணக்கில் வழிமுறைகளையெல்லாம் அழித்துவிட்டு, கேள்வியிலிருந்து தொடங்கியது போல், நாம் நடைமுறைப்படுத்திய ரஷ்ய, சீனக் கோட்பாடுகளை அழித்துவிட்டு மார்க்சியத்திலிருந்து, மார்க்சியத்திடமிருந்து நாம் ஆய்வைத் தொடங்க வேண்டும். அதன் பிறகு மார்க்சியத்தில் பிழை இருக்கிறதா? அல்லது அதை நடைமுறைப்படுத்திய லெனினியம் மற்றும் மாவோவியத்தில் பிழை இருக்கிறதா என்று ஆராய்வோம். (இவை இந்த நூலின் பக்கம் 19 இருந்தே).
அதாவது ஒரு புரட்சிக்கான கட்சி ஒரு புரட்சிகர தத்துவ நடைமுறை என்றமுறையில் மக்களை வர்க்க ரீதியாக அணி திரட்டி நடத்திய புரட்சி பொய்யாம் என்ன வாத திறமை பாருங்கள்?
ரஷ்யா: "சோசலிசப் புரட்சி" என்பது பெயரா, உண்மையா? வரலாற்று உண்மையை மறுக்கும் இந்த நூல் ஆசிரியரின் நோக்கம் என்னே?
லெனின் 1921-இல், நியூ எகானாமிக் பாலிசி (NEP) பின்னணியில், ரஷ்யப் பொருளாதாரத்தின் பெருப்பகுதி எப்படி நிகழ்ந்தது என்ற ஆய்வுரை கூறுவதே இந்தப்பகுதி, அதாவது பாட்டாளி வர்க்க அரசின் செயல்பாட்டின் மூலம்தான் சமூக பொருளாதார நிலைப்பாட்டை கட்டி அமைக்க போராடியதை அன்றைய ஆவணம் சுட்டிக்காட்டுகிற்சது.
சோஷலிச நிர்மாணத்திற்கு ஏற்பட்டிருந்த மிகப் பெரிய கஷ்டங்களானவை, ரஷ்யாதான் ஏகாதிபத்தியச் சங்கிலியை உடைத்ததில் முதல் நாடாக இருந்ததிலும், ஒரு புதிய சமுதாயத்தை அமைக்கத் தொடங்கிய முதல் நாடாக இருந்ததிலும் அடங்கியிருந்தன. சோஷலிசத்திற்கு இட்டுச் செல்லும் பாதையின் பொதுவான திசை வழியைக் கம்யூனிசப்புக் கட்சி அறிந்திருந்தது. ஆனால் அந்த பாதையில் ஒவ்வொரு அரங்கிலும் ஏற்படவிருந்த எல்லாப் பிரச்சினைகளையும் அது அறிந்திருக்கவில்லை, அதனால் அறிந்திருக்க முடியாது; எனவே இந்தப் பிரச்சினைகளுக்கான தயார் நிலைப் பரிகாரங்கள் எதையும் பற்றிக் கூட அது அறிந்திருக்கவில்லை.
சோஷலிச நிர்மாணத்தின் முன்னுதாரணம் இல்லாத்தும் அதில் எத்தகைய அனுபவமும் இல்லாததும் கஷ்டங்களையும், சில தவறுகளையும் விளைவித்தன என்பதில் ஐயமில்லை; ஆனால், அதே சமயத்தில் அது சோஷலிசத்தின் பொதுவான தத்துவார்த்தக் கோட்பாடுகளுக்கு ஒரு சோதனை களத்தை, அவை மேலும் படைப்பு ரீதியில் வளர்ச்சிபெறுவதற்கான ஓர் அடிப்படையை வழங்கியது.
ஆரம்ப சோஷலிசப் பொருளாதார சீர்திருத்தங்கள் மூர்க்கமான வர்க்கப் போராட்டத்தினூடே நடைபெற்றன. நாட்டின் பொருளாதார வாழ்க்கையை சீர்குலைப்பதற்கும், ஒரு பொருளாதார விபத்தைத் தோற்றுவிப்பதற்கும் பூர்ஷ்வா வர்க்கம் தன்னாலான யாவற்றையும் செய்தது. எனவே, பூர்ஷ்வா வர்க்கத்தின் உடைமைகளைப் பறிமுதல் செய்ய வேண்டியதாயிற்று. ஆனால் பொருளாதார நிர்வாக அமைப்புகளும், பயிற்சி பெற்ற தனித் தேர்ச்சியாளர்களும், நிர்வாக வழிவகை அறிவும் இல்லாமையின் விளைவாக சகல முதலாளித்துவத் தொழில்களையும் சோவியத் சர்க்காரால் உடனே தேசவுடைமையாக்க முடியவில்லை; எனவே அது, உற்பத்தியின் மீது தொழிலாளரின் கட்டுப்பாட்டை அமைக்குவது, பங்குகளை தேசவுடைமையாக்குவது, அயல்துறை வர்த்தகத்தில் ஏகபோகத்தைப் பெறுவது போன்ற பல இடைக்கால தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
தொழிலாளர்களின் கட்டுப்பாட்டை நிறுவுவதானது சோஷலிசத்தை நோக்கிய ஆரம்ப நடவடிக்கைகளில் ஒன்றாகும், தொழிலாக் கொள்ளுவதில் ஆரம்ப கட்டமாக அது அமைந்தது, அவற்றை தேசவுடைமையாக்குவதற்கு அது கட்டியங் கூறியது. தொழிலாளர் கட்டுப்பாட்டுக் கமிட்டிகள் முதலாளிகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தின. தொழிற்சாலைகளையும், சகல பொருளாயத ஆஸ்திகளையும் பூர்ஷ்வாக்களும் அவர்களது ஏஜெண்டுகளும் அழிப்பதின்றியும் கொள்ளையடிப்பினின்றும் பாதுகாக்கும் பொறுப்பு அவற்றிடம் ஒப்படைக்கப்பட்டது. முதலாளிகளின் செயல்பாடுகள் வெகுஜனங்களின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. இதோடுகூட, தொழிலாளர் கட்டுப்பாடானது தொழிற்சாலைகளின் நிர்வாகத்திற்கான ஒரு வெகுஜனப் பள்ளியாகச் சேவை புரிந்தது. அதனுடைய உதவியுடன் சோவியத் சர்க்கார் தொழிலாளர்களைப் பொருளாதார நிர்வாகத்தில் ஈடுபடுத்தியது; முதலாளிகளின் நாசவேலை முயற்சிகளைக் குலைத்தது, சகல தொழில்களையும், போக்குவரத்தையும் சோவியத் அரசுக்கு மாற்றுவதற்கான ஆதாரத்தைத் தயார் செய்தது. இவை வரலாற்று உண்மை...
இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாத'உற்பத்தியும் புரட்சியும்' நூலாசிரியர், அரசு வர்க்கம் என்பதனை பொதுவானதாக பார்க்கும் பொழுதே பாட்டாளி வர்க்க அரசை மறுப்பதையும், உற்பத்தி கோட்பாட்டின் மூலம் புரட்சி அவசியம் இல்லை சமூகம் தானாகவே மாறும் எனும் கோட்பாட்டை இங்கே சமூக சுரண்டலை மாற்றி அமைக்க வேண்டிய கடமையை கைவிட்டு ஏகாதிபத்தியம் வளர்ந்தால் சமூகம் வளரும் சோசலிசமும் வந்து விடும் என்று கூறாமல் கூறுகிறார். இவை உழைக்கும் மக்கள் படும் அவலங்களுக்கு விடுதலைக்கு வழி தேடுவதை விட நடந்து முடிந்த உண்மைகளையே மறுக்கும் பொழுது இவரின் பணி யாருக்கானது? தொடர்ந்து விவாதிப்போம் தோழர்களே!!!
உற்பத்தியும் புரட்சியும் – ம.தி. முத்துகுமார் எழுதியுள்ள கருத்துகளின் மார்க்சிய–லெனினிய விமர்சனம்
மையமான விமர்சனக் கேள்வி: சோசலிசப் புரட்சியில் முதலில் மாறுவது உற்பத்தி உறவுகளா? அரசியல் அதிகாரமா? அல்லது இவை இரண்டும் ஒன்றோடொன்று இயங்கும் இயக்கவியல் நிகழ்வுகளா?
ம.தி. முத்துகுமார் எழுதியுள்ள இந்தப் பகுதி மார்க்சியத்தின் அடிப்படையான சில கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக, மார்க்ஸ் முன்வைத்த பொருளாதார அடித்தளம் – அரசியல் மேல்கட்டுமானம் என்ற உறவு, லெனின் முன்வைத்த பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரத்தின் முக்கியத்துவம், மாவோவின் புதிய ஜனநாயகப் புரட்சி மற்றும் சோசலிச மாற்றம் குறித்த அணுகுமுறை ஆகியவற்றை ஒப்பிட்டு ஆராய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது.
ஆனால் இந்தப் பகுதியின் அடிப்படையான பலவீனம் என்னவென்றால், மார்க்சியத்தின் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தையும், லெனினியத்தின் புரட்சிகர அரசியல் நடைமுறையையும் ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு கோட்பாடுகளாக நிறுத்துகிறது.
மார்க்ஸ் உற்பத்தி உறவுகளுக்கு முதன்மை அளித்தார் என்பதிலிருந்து, அரசியல் அதிகார மாற்றம் புரட்சியின் முதன்மையான அடையாளமாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வருவது தவறான தர்க்கமாகும்.
அதேபோல், லெனின் அரசியல் அதிகார மாற்றத்தைப் புரட்சியின் அடிப்படையான அடையாளமாகக் குறிப்பிட்டார் என்பதிலிருந்து, அவர் பொருளாதார அடித்தளத்தின் முக்கியத்துவத்தை நிராகரித்துவிட்டார் என்று முடிவு செய்வதும் தவறாகும்.
இந்த இரண்டையும் சரியாகப் புரிந்துகொள்ளாமல், ரஷ்யப் புரட்சியும் சீனப் புரட்சியும் முதலாளித்துவப் புரட்சிகளே என்று ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது வரலாற்றுப் பொருள்முதல்வாத ஆய்வுமுறைக்கு எதிரானதாகும்.
இதைப் பின்வரும் தலைப்புகளின் அடிப்படையில் விரிவாக விமர்சிப்போம்.
1. மார்க்சியத்தை மீண்டும் மார்க்ஸிடமிருந்து தொடங்க வேண்டுமா?
முத்து குமார் முன்வைக்கும் முதல் கருத்து:
நடைமுறைப்படுத்திய ரஷ்ய, சீனக் கோட்பாடுகளை அழித்துவிட்டு மார்க்சியத்திலிருந்து ஆய்வைத் தொடங்க வேண்டும்.
இந்தக் கருத்தில் ஒரு பகுதி சரியானதாக தோன்றலாம் ஆனால் அடிப்படை விதிகளை விஞ்ஞான கோட்பாடுகளை மறுத்து விட்டு, அதாவது, மார்க்சியம் வழிகாட்டும் விமர்சன கோட்பாட்டைகளை ஏற்றுக் கொண்டே அடிப்படைகளை மறுத்துவிட்டு பின் ஆய்வு எப்படி?
மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் எழுத்துகளையும் நடைமுறைகளையும் வரலாற்றுச் சூழலோடு ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு வழிகாட்டும் தத்துவக்கண்ணோட்டம் மார்க்சிய லெனினியமே ஆக அதனை மறுத்துவிட்டு பின்னர் என்ன விவாதம்?
ஆனால் இங்கே ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.
லெனினியத்தையும் மாவோவியத்தையும் ஒதுக்கிவிட்டு மார்க்ஸை மட்டும் வைத்துக்கொண்டு மார்க்சியத்தைப் புரிந்துகொள்ள முடியுமா?
முடியாது.
ஏனெனில் மார்க்சியம் என்பது சில தத்துவக் கூற்றுகளின் தொகுப்பு மட்டுமல்ல. அது சமூக வளர்ச்சியின் விதிகளை ஆராய்வதற்கான அறிவியல் வழிமுறையும், அந்தச் சமூகத்தை மாற்றுவதற்கான புரட்சிகர நடைமுறையும் ஆகும்.
மார்க்ஸ் முதலாளித்துவத்தின் பொருளாதார இயக்கத்தை ஆராய்ந்தார். ஆனால் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் முதலாளித்துவம் ஏகாதிபத்தியக் கட்டத்தை அடைந்தபோது, அதன் அரசியல், பொருளாதார முரண்பாடுகளும் மாறின.
இந்தப் புதிய நிலைமைகளை லெனின் ஆராய்ந்தார். ஏகாதிபத்தியம், நிதி மூலதனம், ஏகபோக முதலாளித்துவம், தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் அமைப்பு, புரட்சிகரக் கட்சியின் பங்கு ஆகியவற்றை அவர் விளக்கினார்.
அதேபோல், சீனாவின் அரைக்காலனிய, அரைநிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பையும், விவசாயிகளின் பெரும்பான்மையையும், தேசிய விடுதலைப் போராட்டத்தின் தன்மையையும் மாவோ ஆய்வு செய்தார்.
எனவே, லெனினையும் மாவோவையும் ஒதுக்குவது
மார்க்சியத்தைத் தூய்மைப்படுத்துவது அல்ல. மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியில்
உருவான புதிய அனுபவங்களையும் அறிவியல் பங்களிப்புகளையும் நிராகரிப்பதாகும்.
அதே நேரத்தில், அவர்களின் ஒவ்வொரு முடிவையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகவும் கருதக்கூடாது.
சரியான அணுகுமுறை: மார்க்ஸைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு, லெனின், ஸ்டாலின்,
மாவோ ஆகியோரின் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில் விமர்சனபூர்வமாக ஆராய்வதாகும்.அதற்கு வரலாற்றில் அவர்களின் நடைமுறை சாட்சிகள் வரலாற்று பக்கங்களில் உள்ள உண்மையில் தேட வேண்டும். அதை மறுத்து விட்டு அல்ல!
2. மார்க்ஸ் கூறிய அடித்தளம் – மேல்கட்டுமானம் என்ற கோட்பாட்டின் உண்மையான
பொருள் என்ன?
முத்து குமார் முன்வைக்கும் முக்கியமான வாதம்:
முதலில் உற்பத்தியில் மாற்றம் ஏற்படுகிறது. அதன் தொடர்ச்சியாக அரசியலில் மாற்றம் ஏற்படுகிறது.
இது மார்க்சின் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருத்தின் ஒரு பகுதியைச் சரியாகப் பிரதிபலிக்கிறது. ஆனால் அதை எல்லாச் சமூக மாற்றங்களுக்கும் பொருந்தக்கூடிய காலவரிசை விதியாக மாற்றுவது தவறு.
மார்க்ஸ் 1859ஆம் ஆண்டு எழுதிய அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு என்ற நூலின் முன்னுரையில், மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் சமூக உற்பத்தியில் குறிப்பிட்ட உற்பத்தி உறவுகளுக்குள் நுழைகிறார்கள் என்றும், அந்த உற்பத்தி உறவுகள் சமூகத்தின் பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குகின்றன என்றும் விளக்குகிறார்.
அந்த அடித்தளத்தின் மீது சட்டம், அரசியல், கருத்தியல் போன்ற மேல்கட்டுமானங்கள் உருவாகின்றன.
ஆனால் இதன் பொருள் என்ன?
- பொருளாதார அடித்தளம் சமூகத்தின் அடிப்படையான இயக்கத்தை நிர்ணயிக்கிறது.
- அரசியல், சட்டம், மதம், பண்பாடு ஆகியவை அந்த அடித்தளத்துடன் தொடர்புடையவை.
- மேல்கட்டுமானம் அடித்தளத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
- சமூக மாற்றம் என்பது அடித்தளத்திற்கும் மேல்கட்டுமானத்திற்கும் இடையிலான முரண்பாடுகளின் வளர்ச்சியோடு தொடர்புடையது.
இங்கே ஒரு முக்கியமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு சமூகத்தின் வரலாற்று வளர்ச்சியில் உற்பத்தி உறவுகளுக்கு முதன்மை உண்டு என்பதும், ஒரு புரட்சிகர மாற்றத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பொருளாதார மாற்றமே அரசியல் மாற்றத்திற்கு முன்பாக நிகழ வேண்டும் என்பதும் ஒன்றல்ல.
உதாரணமாக, நிலப்பிரபுத்துவச் சமூகத்தில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் வளர்ந்திருந்தாலும், அவை அரசியல் அதிகாரத்தை உடனடியாகக் கைப்பற்றிவிடுவதில்லை. முதலாளித்துவ வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது.
அதேபோல, முதலாளித்துவச் சமூகத்தில் பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னர் சோசலிச உற்பத்தி உறவுகள் முழுமையாக வளர்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
இதுவே முதலாளித்துவப் புரட்சிக்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கும் இடையிலான முக்கியமான வரலாற்று வேறுபாடுகளில் ஒன்று.
3. லெனின் புரட்சியின் வரையறையை மாற்றினாரா?
முத்து குமார் தனது வாதத்திற்கு ஆதாரமாக லெனினின் ஏப்ரல் ஆய்வுரைகளைக் குறிப்பிடுகிறார்.
லெனின் கூறுகிறார்:
அரசு அதிகாரம் ஒரு வர்க்கத்திடமிருந்து இன்னொரு வர்க்கத்திடம் செல்வதே புரட்சியின் முதலாவதும், முதன்மையானதும், அடிப்படையானதுமான அடையாளம்.
இந்த மேற்கோளை எடுத்துக்கொள்வதில் தவறில்லை. ஆனால் அதன் வரலாற்றுச் சூழலைப் புரிந்துகொள்ளாமல் விளக்குவதில்தான் தவறு இருக்கிறது.
லெனின் இந்தக் கருத்தை 1917ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியின் குறிப்பிட்ட அரசியல் சூழலில் முன்வைத்தார்.
1917 பிப்ரவரி புரட்சியில் ஜார் மன்னராட்சி வீழ்த்தப்பட்டது. அரசியல் அதிகாரம் முதலாளித்துவ வர்க்கத்தின் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்திடம் சென்றது. அதே நேரத்தில் தொழிலாளர்கள், படைவீரர்கள், விவசாயிகளின் சோவியத்துகளும் அதிகார மையங்களாக உருவாகின.
இது இரட்டை அதிகார நிலைமையாகும்.
இந்தச் சூழலில் லெனின் எழுப்பிய கேள்வி:
பிப்ரவரி புரட்சியுடன் புரட்சி முடிந்துவிட்டதா? அல்லது தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி சோசலிச மாற்றத்தை நோக்கி முன்னேற வேண்டுமா?
லெனின் இரண்டாவது பாதையை முன்வைத்தார்.
அதாவது, முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்த அரசியல் அதிகாரத்தைப் பாட்டாளி வர்க்கமும் ஏழை விவசாயிகளும் கைப்பற்ற வேண்டும் என்றார்.
இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டியது:
லெனின் பொருளாதார அடித்தளத்தை நிராகரிக்கவில்லை. மாறாக, பொருளாதார அடித்தளத்தில் நிலவும் வர்க்க உறவுகளை மாற்றுவதற்கு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது அவசியம் என்றார்.
இதற்கு லெனினின் அரசும் புரட்சியும் நூலிலேயே தெளிவான விளக்கம் இருக்கிறது.
அதில் எங்கெல்ஸின் கருத்தை மேற்கோள் காட்டி, பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு உற்பத்திச் சாதனங்களை அரசின் உடைமையாக மாற்றுவதன் மூலம் பழைய வர்க்க உறவுகளை ஒழிக்கும் மாற்றத்தைத் தொடங்குகிறது என்று விளக்குகிறார்.
இதிலிருந்து கிடைக்கும் முடிவு:
அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது புரட்சியின் இறுதி இலக்கு அல்ல; பொருளாதார அடித்தளத்தையும் உற்பத்தி உறவுகளையும் மாற்றுவதற்கான வரலாற்று அவசியமான அரசியல் நிலைமையாகும்.
முத்து குமார் லெனினின் மேற்கோளை எடுத்துக்கொண்டு, அதிகார மாற்றத்திற்கும் உற்பத்தி
மாற்றத்திற்கும் இடையே முரண்பாட்டை உருவாக்குகிறார்.
ஆனால் லெனினின் முழுமையான கோட்பாட்டில் இவை ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல.
ஒன்றோடொன்று இணைந்தவை.
4. முதலாளித்துவப் புரட்சிக்கும் சோசலிசப் புரட்சிக்கும் இடையிலான வேறுபாடு
இந்தப் பகுதியின் மிக முக்கியமான கருத்தியல் சிக்கல் இதுதான். முத்து குமார் ஒரு சரியான வேறுபாட்டை அடையாளம் காண்கிறார். ஆனால் அதன் அடிப்படையில் தவறான முடிவுக்கு வருகிறார்.
அவர் கூறுவது:
- நிலப்பிரபுத்துவச் சமூகத்தில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் ஏற்கெனவே வளர்ந்திருந்தன.
- முதலாளித்துவச் சமூகத்தில் சோசலிச உற்பத்தி உறவுகள் ஏற்கெனவே வளர்ந்திருக்கவில்லை
- எனவே முதலாளித்துவப் புரட்சிக்கும் சோசலிசப் புரட்சிக்கும் இடையிலான மாற்றத்தின்
அடிப்படை ஒரே மாதிரியானதல்ல.
முதல் இரண்டு கருத்துகளிலும் வரலாற்று உண்மை இருக்கிறது. ஆனால் மூன்றாவது கருத்தை அவர் பயன்படுத்தும் விதத்தில்தான் பிரச்சினை உள்ளது.
முதலாளித்துவச் சமூகத்தில் சோசலிச உற்பத்தி உறவுகள் முழுமையாக வளர்ந்திருக்கவில்லை என்பது உண்மை. ஆனால் முதலாளித்துவம் சோசலிசத்திற்கான பொருளாதார முன்நிபந்தனைகளை உருவாக்கவில்லையா?
உருவாக்கியிருக்கிறது.
அவற்றில் சில:
- உற்பத்தியின் சமூகமயமாக்கல்.
- மிகப்பெரிய தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இணைந்து உழைக்கும் நிலை.
- உற்பத்திச் சாதனங்களின் குவிப்பு மற்றும் மையப்படுத்தல்.
- வங்கிகள், நிதி நிறுவனங்கள், தொழில்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு.
- உலகளாவிய உற்பத்தி மற்றும் பரிமாற்ற உறவுகள்.
- முதலாளித்துவ உற்பத்தியில் உருவாகும் பாட்டாளி வர்க்கம் மற்றும் அதன் வர்க்கப் போராட்டம்.
இவை சோசலிச உற்பத்தி உறவுகள் அல்ல. ஆனால் சோசலிச உற்பத்தி முறையை உருவாக்குவதற்கான பொருளாதார மற்றும் சமூக அடிப்படைகளாகும்.
இங்கே ஒரு முக்கியமான வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும்:
சோசலிசத்திற்கான பொருளாதார முன்நிபந்தனைகள் முதலாளித்துவத்திற்குள் உருவாகின்றன. ஆனால் முதலாளித்துவத் தனியுடைமை உறவுகளை ஒழித்து, சமூக உடைமை மற்றும் திட்டமிட்ட உற்பத்தி உறவுகளை நிறுவுவதற்கு அரசியல் அதிகார மாற்றம் அவசியமாகிறது.
எனவே, முதலாளித்துவச் சமூகத்தில் சோசலிச உற்பத்தி உறவுகள் முழுமையாக வளரவில்லை என்பதிலிருந்து சோசலிசப் புரட்சி சாத்தியமற்றது என்ற முடிவு வராது.
அப்படி முடிவு செய்வது மார்க்சின் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை இயந்திரத்தனமாகப் புரிந்துகொள்வதாகும்.
5. மாவோ மார்க்சியத்தில் திருத்தம் செய்தாரா?
முத்து குமார் மாவோவின் சோவியத் அரசியல் பொருளாதாரப் பாடநூல் பற்றிய விமர்சனக் குறிப்புகள் என்ற நூலை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்.
அதில் முதலாளித்துவப் புரட்சிக்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கும் இடையிலான வேறுபாடு விவாதிக்கப்படுகிறது.
இந்த விவாதத்தின் அடிப்படைப் பொருள் என்ன?
நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்திற்கு மாறும்போது, முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் பழைய சமூகத்திற்குள்ளேயே வளர்ச்சியடைய முடிந்தது.
ஆனால் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறும்போது, முதலாளித்துவத் தனியுடைமை அமைப்புக்குள்ளேயே சோசலிச உற்பத்தி உறவுகள் முழுமையாக வளர்ச்சியடைய முடியாது.
ஏனெனில் உற்பத்திச் சாதனங்களின் உடைமை முதலாளித்துவ வர்க்கத்திடம் இருக்கிறது. எனவே, இந்த உடைமை உறவுகளை மாற்றுவதற்கு அரசியல் அதிகார மாற்றம் தேவைப்படுகிறது.
இதை மாவோ மார்க்சியத்திற்கு எதிரான திருத்தமாக முன்வைக்கவில்லை. மாறாக, சோசலிச மாற்றத்தின் தனித்துவமான வரலாற்று நிலைமையை விளக்குகிறார்.
இதில் இன்னொரு முக்கியமான அம்சம் உள்ளது.
முதலாளித்துவச் சமூகத்தில் சோசலிசத்தின் பொருளாதார முன்நிபந்தனைகள் உருவாகின்றன. ஆனால் அவற்றைச் சோசலிச உற்பத்தி உறவுகளாக மாற்றுவது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர்தான் சாத்தியமாகிறது.
இது மார்க்சின் அடித்தளம் – மேல்கட்டுமானம் கோட்பாட்டிற்கு முரணானதல்ல.
மாறாக, அந்தக் கோட்பாட்டைச் சோசலிசப் புரட்சியின் குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலுக்குப் பொருத்திப் புரிந்துகொள்வதாகும்.
மாவோவின் பங்களிப்பை மதிப்பிட வேண்டிய அளவுகோல் அவர் மார்க்ஸைத் திருத்தினாரா என்பதல்ல; அவர் முன்வைத்த விளக்கம் வரலாற்று உண்மைகளுக்கும் வர்க்கப் போராட்டத்தின் நடைமுறைக்கும் பொருந்துகிறதா என்பதேயாகும்.
6. ரஷ்யப் புரட்சி முதலாளித்துவப் புரட்சிதானா?
முத்துகுமாரின் வாதத்தில் மிகவும் கவனமாக ஆராயப்பட வேண்டிய பகுதி இது.
அவர் லெனின் ரஷ்யாவில் சோசலிசத்தை உருவாக்கவில்லை, முதலாளித்துவத்தையே உருவாக்கினார் என்று ஒப்புக்கொண்டதாகக் கூறுகிறார்.
இங்கே மூன்று வெவ்வேறு விஷயங்கள் ஒன்றாகக் கலக்கப்படுகின்றன.
- ரஷ்யப் புரட்சியின் வர்க்கத் தன்மை.
- புரட்சிக்குப் பிந்தைய ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சி நிலை.
- சோசலிசத்தை நோக்கிய மாற்றத்தின் நடைமுறைச் சிக்கல்கள்.
இவை ஒன்றல்ல.
1917 பிப்ரவரி புரட்சி முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியாக இருந்தது. அக்டோபர் புரட்சி பாட்டாளி வர்க்கத் தலைமையிலான சோசலிசப் புரட்சியாக இருந்தது. ஆனால் அக்டோபர் புரட்சிக்குப் பிறகு உடனடியாக சோசலிச உற்பத்தி முறை முழுமையாக உருவாகிவிட்டது என்று கூற முடியாது.
ரஷ்யா அப்போது பெரும்பான்மையான விவசாய மக்களைக் கொண்ட, தொழில்துறை வளர்ச்சி குறைவாக இருந்த நாடாகும். உள்நாட்டுப் போர், வெளிநாட்டுத் தலையீடு, பொருளாதார அழிவு, தொழில்துறை வீழ்ச்சி போன்ற கடுமையான பிரச்சினைகளையும் எதிர்கொண்டது.
இந்தச் சூழலில் லெனின் புதிய பொருளாதாரக் கொள்கையை (NEP) அறிமுகப்படுத்தினார்.
1921ஆம் ஆண்டு எழுதிய The Tax in Kind என்ற ஆக்கத்தில், ரஷ்யாவில் அப்போது குட்டி முதலாளித்துவ உற்பத்தி ஆதிக்கம் செலுத்துவதாகவும், அங்கிருந்து அரசு முதலாளித்துவத்தின்
வழியாக சோசலிசத்தை நோக்கிச் செல்ல வேண்டியிருப்பதாகவும் அவர் விளக்குகிறார்.
இதன் பொருள் அக்டோபர் புரட்சி முதலாளித்துவப் புரட்சியாக இருந்தது என்பதல்ல. மாறாக, சோசலிசப் புரட்சிக்குப் பிறகு ஒரு நாட்டின் பொருளாதார அடித்தளத்தை மாற்றுவதற்கு நீண்டகாலப் போராட்டமும் இடைக்காலப் பொருளாதார நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றன என்பதாகும்.
இங்கே முக்கியமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.
- அரசியல் அதிகாரத்தைப் பாட்டாளி வர்க்கம் கைப்பற்றுவது ஒரு புரட்சிகர நிகழ்வு.
- உற்பத்திச் சாதனங்களின் உடைமை உறவுகளை மாற்றுவது பொருளாதார மாற்றத்தின் ஒரு முக்கிய கட்டம்.
- கம்யூனிசச் சமூகத்தை நோக்கி முன்னேறுவது இன்னும் விரிவான வரலாற்று மாற்றம்.
இந்த நான்கையும் ஒன்றாகக் கருதக்கூடாது.
எனவே, ரஷ்யாவில் சோசலிசம் முழுமையாக நிறுவப்படவில்லை என்ற உண்மையை வைத்துக்கொண்டு, அக்டோபர் புரட்சியே முதலாளித்துவப் புரட்சி என்று கூறுவது வரலாற்று வகைப்பாட்டையும், புரட்சிக்குப் பிந்தைய பொருளாதார நிலைமையையும் குழப்புவதாகும்.
7. சீனப் புரட்சி சோசலிசப் புரட்சியே இல்லையா?
முத்து குமார் எழுப்பும் அடுத்த கேள்வி: மாவோ நடத்தியது புதிய ஜனநாயகப் புரட்சி. எனவே சீனாவில் சோசலிசப் புரட்சியே நடைபெறவில்லை என்பதுதான் அவரது வாதம்.
இதில் ஒரு வரலாற்று உண்மை இருக்கிறது. 1949ஆம் ஆண்டு நடைபெற்ற சீனப் புரட்சி புதிய ஜனநாயகப் புரட்சி என்ற கட்டத்தைக்
கொண்டிருந்தது.
சீனா அப்போது அரைக்காலனிய, அரைநிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பைக் கொண்டிருந்தது. ஏகாதிபத்திய ஆதிக்கம், நிலப்பிரபுத்துவச் சுரண்டல், விவசாயிகளின் நிலமின்மை ஆகியவை அதன் அடிப்படை முரண்பாடுகளாக இருந்தன.
அதனால் மாவோ புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் ஏகாதிபத்தியத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்தார்.
ஆனால் சீனப் புரட்சியின் வரலாறு 1949ஆம் ஆண்டுடன் முடிவடையவில்லை.
புதிய ஜனநாயகப் புரட்சிக்குப் பிறகு சோசலிச மாற்றத்திற்கான கட்டம் தொடங்கியது. 1953ஆம் ஆண்டு முதல் சோசலிச மாற்றத்திற்கான முதல் ஐந்தாண்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1950களின் நடுப்பகுதியில் விவசாயக் கூட்டுறவு அமைப்புகள் விரிவுபடுத்தப்பட்டன; தொழில் மற்றும் வணிகத் துறைகளிலும் உடைமை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
எனவே, சீனாவில் 1949இல் நடந்த புரட்சியை மட்டும் வைத்துக்கொண்டு அங்கு சோசலிச மாற்றமே நடைபெறவில்லை என்று முடிவு செய்வது தவறு.
அதே நேரத்தில், சீனாவில் சோசலிசம் எந்த அளவுக்கு வளர்ந்தது, பின்னர் எந்த வகையான பொருளாதார மாற்றங்கள் நிகழ்ந்தன, இன்றைய சீனாவில் முதலாளித்துவ உறவுகள் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதெல்லாம் தனித்த ஆய்வுக்குரியவை.
இன்றைய சீனாவில் நிதி மூலதனம், தனியார் மூலதனம், கூலி உழைப்பு, சந்தைப் போட்டி போன்றவை செயல்படுகின்றன என்பதைக் கொண்டு சீனாவின் முழு வரலாற்றையும் ஒரே தீர்ப்பில் முடித்துவிட முடியாது.
அதேபோல், கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதற்காக மட்டுமே ஒரு நாடு சோசலிச நாடாகிவிடாது.
ஒரு நாட்டின் வர்க்கத் தன்மையைத் தீர்மானிப்பது ஆட்சியில் இருக்கும் கட்சியின் பெயர் அல்ல; உற்பத்திச் சாதனங்களின் உண்மையான உடைமை, உற்பத்தி உறவுகள், உபரி உற்பத்தியின் கட்டுப்பாடு, அரசின் வர்க்கத் தன்மை ஆகியவையாகும்.
இந்த அளவுகோலை ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்த வேண்டும்.
8. அரசியல் அதிகாரத்தை முதன்மைப்படுத்தியதால் உலகப் பொதுவுடைமை இயக்கம்
தோல்வியடைந்ததா?
முத்து குமார் தனது வாதத்தில் ஒரு முக்கியமான முடிவை முன்வைக்கிறார்.
அதிகாரமே முதன்மை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உலகின் பெரும்பாலான நாடுகளில் பொதுவுடைமை இயக்கங்கள் உற்பத்தியைக் கைவிட்டு அரசியலை மையப்படுத்தி வேலை செய்கின்றன.
இது ஆராயப்பட வேண்டிய கருத்து. ஆனால் இதற்கான காரணத்தை லெனினியத்திலும் மாவோவியத்திலும் தேடுவது அறிவியல் ரீதியாகப் போதுமானதல்ல.
உலகப் பொதுவுடைமை இயக்கத்தின் பின்னடைவுக்குப் பல வரலாற்றுக் காரணங்கள் உள்ளன.
அ) உற்பத்தியிலிருந்து விலகிய அரசியல் நடைமுறை
சில கம்யூனிஸ்ட் கட்சிகள் தொழிலாளர் வர்க்கத்தின் அன்றாடப் பொருளாதாரப் போராட்டங்களிலிருந்து விலகி, தேர்தல் அரசியல், நாடாளுமன்றப் பதவிகள், கூட்டணி
அரசியல் ஆகியவற்றை மையப்படுத்தியுள்ளன.
தொழிலாளர்களின் கூலி, வேலை நேரம், வேலைப் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமைகள், விவசாயிகளின் நிலப்பிரச்சினைகள் போன்றவற்றில் தொடர்ந்து தலையிட்டு, அந்தப் போராட்டங்களை முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுக்கு எதிரான வர்க்க உணர்வாக உயர்த்துவதில் பல அமைப்புகள் தோல்வியடைந்துள்ளன.
ஆனால் இது லெனினியத்தின் தவறா?
இல்லை. லெனின் தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டத்தை அரசியல் போராட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவருடைய என்ன செய்ய வேண்டும்? என்ற நூலின் மையமான விவாதங்களில் ஒன்று, பொருளாதாரப் போராட்டத்தின் எல்லைகளைக் கடந்து தொழிலாளர் வர்க்கத்திற்கு அரசியல் வர்க்க உணர்வை வளர்ப்பதாகும்.
எனவே, பொருளாதாரப் போராட்டத்தைக் கைவிட்டு தேர்தல் அரசியலில் மூழ்குவது லெனினிய நடைமுறை அல்ல. அது லெனினியத்தின் புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்து விலகிச் செல்லும் நடைமுறையாகும்.
ஆ) தொழிலாளர் வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையிலான உறவு பலவீனமடைதல்
இந்தியாவைப் போன்ற நாடுகளில் தொழிலாளர் வர்க்கம் மட்டுமல்லாமல் விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், சிறு விவசாயிகள், அமைப்புசாராத் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகள் ஆகியோரின் போராட்டங்களையும் ஒன்றிணைக்க வேண்டியிருக்கிறது.
இந்தப் பணியில் தோல்வியடையும் கம்யூனிஸ்ட் இயக்கம் சமூகத்தின் பெரும்பான்மை உழைக்கும் மக்களிடமிருந்து தனிமைப்படும்.
இ) வர்க்கப் போராட்டத்திற்குப் பதிலாகத் தேர்தல் வெற்றியை இலக்காக்குதல்
தேர்தலில் வெற்றி பெறுவது புரட்சிகர இயக்கத்தின் இறுதி இலக்காக மாறும்போது, வர்க்க அரசியலின் அடிப்படையான நோக்கம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.
முதலாளித்துவ அரசின் நிர்வாகத்தில் பங்கேற்பதையும், அந்த அரசின் வர்க்கத் தன்மையை மாற்றுவதையும் ஒன்றாகக் கருதும் தவறான போக்கு உருவாகிறது.
ஈ) கோட்பாடு – நடைமுறை இடைவெளி
மார்க்சியத்தைப் படிப்பது மட்டுமே மார்க்சிய நடைமுறை அல்ல. அதேபோல் தொழிலாளர் போராட்டங்களில் பங்கேற்பது மட்டுமே புரட்சிகர அரசியலும் அல்ல.
உற்பத்தி உறவுகளை ஆய்வு செய்து, வர்க்க முரண்பாடுகளைக் கண்டறிந்து, மக்களின் அன்றாடப் போராட்டங்களிலிருந்து புரட்சிகர அரசியல் உணர்வை வளர்த்து, அதற்கேற்ப அமைப்பையும் இயக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டும்.
இவ்விடத்தில் கோட்பாட்டையும் நடைமுறையையும் பிரிப்பதுதான் அடிப்படையான தவறு.
எனவே, உலகப் பொதுவுடைமை இயக்கத்தின் பின்னடைவை ஆராயும்போது, அதன் வர்க்க அடித்தளம், கட்சிகளின் அமைப்பு, அரசியல் வழிமுறை, சர்வதேசச் சூழல், சித்தாந்தப் போராட்டங்கள், திருத்தல்வாதம், நடைமுறைவாதம் ஆகியவற்றை வரலாற்று அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும்.
லெனினியத்தை அதிகாரவாதம் என்று பொதுமைப்படுத்துவது இந்தப் பிரச்சினைகளுக்குத்
தீர்வாகாது.
9. உற்பத்தி முதன்மையா? அரசியல் முதன்மையா? – உண்மையான மார்க்சிய இயக்கவியல்
இந்தக் கட்டுரையின் மிக முக்கியமான கருத்தியல் குழப்பம் இங்கேதான் இருக்கிறது.
உற்பத்தி முதன்மையா அல்லது அரசியல் முதன்மையா என்ற கேள்விக்கு ஒரே பதிலை எல்லாச் சூழல்களிலும் பயன்படுத்த முடியாது.
இதனை இரண்டு நிலைகளாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.
முதலாவது: சமூகத்தின் வரலாற்று வளர்ச்சியை நிர்ணயிக்கும் அடிப்படை எது?
மார்க்சியப் பதில்: பொருளாதார அடித்தளம், அதாவது உற்பத்திச் சக்திகளும் உற்பத்தி உறவுகளும்.
இரண்டாவது: முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறுவதற்கான புரட்சிகர நடவடிக்கையில் முதன்மையான அரசியல் பணி எது?
மார்க்சிய–லெனினியப் பதில்: பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, பழைய அரசின் வர்க்க இயந்திரத்தை உடைத்து, தனது அரசியல் அதிகாரத்தின் மூலம் உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்க வேண்டும்.
இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.
இதை ஓர் எளிய இயக்கவியல் வரிசையில் புரிந்துகொள்ளலாம்:
சோசலிச மாற்றத்தின் இயக்கவியல்
1. முதலாளித்துவ உற்பத்தி முறை உற்பத்தியின் சமூகமயமாக்கல், மூலதனக் குவிப்பு, வர்க்க முரண்பாடுகள்
2. பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வும் அமைப்பும் பொருளாதாரப் போராட்டம், அரசியல் போராட்டம், புரட்சிகரக் கட்சி
3. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதல் பழைய அரசின் வர்க்க ஆதிக்கத்தைத் தூக்கியெறிதல்; பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரத்தை நிறுவுதல்
4. உற்பத்தி உறவுகளை மாற்றியமைத்தல் தனியுடைமை உறவுகளை மாற்றுதல், சமூக உடைமை, திட்டமிட்ட உற்பத்தி
5. சோசலிசச் சமூக மாற்றம் பொருளாதாரம், அரசியல், பண்பாடு ஆகியவற்றில் தொடர்ச்சியான மாற்றம்; வர்க்க வேறுபாடுகளை ஒழிக்கும் நீண்டகாலப் போராட்டம்
இது ஒரு விளக்க மாதிரி. நடைமுறையில் இந்தக் கட்டங்கள் ஒன்றோடொன்று தொடர்புகொண்டு முரண்பாடுகளின் வழியாக முன்னேறுகின்றன.
இந்த வரிசையில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்பட்டவுடன் உற்பத்தி உறவுகள் தானாக மாறிவிடுவதில்லை. அவற்றை மாற்றுவதற்கான போராட்டம் தொடங்குகிறது.
அதேபோல் உற்பத்தி உறவுகளை மாற்றுவதற்கான முயற்சிகள் அரசியல் அதிகாரத்திலிருந்து பிரித்துப் பார்க்கப்பட முடியாது.
எனவே, உற்பத்தி உறவுகள்தான் சமூகத்தின் அடிப்படை என்பதை ஏற்றுக்கொள்வதும், அந்த உற்பத்தி உறவுகளைப் புரட்சிகரமாக மாற்றுவதற்கு அரசியல் அதிகாரம் அவசியம் என்பதை ஏற்றுக்கொள்வதும் ஒரே மார்க்சியக் கண்ணோட்டத்தின் இரண்டு அம்சங்களாகும்.
10. இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் பின்னடைவை எவ்வாறு ஆராய வேண்டும்?
இந்த விவாதத்தை இந்தியாவிற்குப் பொருத்திப் பார்ப்பது மிகவும் அவசியம்.
இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் பல அமைப்புகளாகப் பிளவுபட்டிருப்பதற்குக் காரணம் லெனினியமா, மாவோவியமா என்று கேட்பது மட்டும் போதாது.
பின்வரும் கேள்விகளை எழுப்ப வேண்டும்.
- இந்திய முதலாளித்துவத்தின் உண்மையான வர்க்கத் தன்மையை நமது கட்சிகள் எவ்வளவு தூரம் சரியாக ஆய்வு செய்துள்ளன?
- ஏகாதிபத்திய மூலதனத்திற்கும் இந்தியப் பெருமுதலாளித்துவத்திற்கும் இடையிலான உறவை எவ்வாறு புரிந்துகொள்கின்றன?
- நிலப்பிரச்சினை, விவசாயச் சுரண்டல், விவசாயத் தொழிலாளர் பிரச்சினை ஆகியவற்றில் புரட்சிகரமான வேலைத்திட்டம் உள்ளதா?
- சாதிய ஒடுக்குமுறையையும் வர்க்கச் சுரண்டலையும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி
அணுகுகின்றனவா?
- தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டங்களை அரசியல் அதிகாரத்திற்கான வர்க்கப் போராட்டமாக உயர்த்துகின்றனவா?
- நாடாளுமன்றப் போராட்டத்தையும் புரட்சிகர மக்கள் இயக்கத்தையும் சரியான உறவில் கையாளுகின்றனவா?
- தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை இணைக்கும் வர்க்கக் கூட்டணியை உருவாக்கியுள்ளனவா?
- புரட்சிகரக் கட்சியின் உள்கட்சி ஜனநாயகம், விமர்சனம், சுயவிமர்சனம், கூட்டுத் தலைமை ஆகியவை நடைமுறையில் எவ்வாறு உள்ளன?
இந்தக் கேள்விகளுக்கு விடை காணாமல், எல்லாப் பின்னடைவுகளுக்கும் லெனினியமே காரணம் என்று முடிவு செய்வது அறிவியல் ஆய்வாகாது.
குறிப்பாக இந்தியாவில், சாதி ஒடுக்குமுறை, நிலவுடைமை எச்சங்கள், முதலாளித்துவ வளர்ச்சி, ஏகாதிபத்தியச் சார்பு, விவசாயப் பொருளாதாரத்தின் மாற்றம் ஆகியவற்றை ஒன்றிணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும்.
உற்பத்தி உறவுகளை ஆய்வு செய்வது என்றால் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையையோ தொழிலாளர்களின் எண்ணிக்கையையோ கணக்கிடுவது மட்டும் அல்ல. யார் உற்பத்திச் சாதனங்களை உடைமையாக வைத்திருக்கிறார்கள், யார் உழைக்கிறார்கள், யார் உபரி உற்பத்தியைக் கைப்பற்றுகிறார்கள், அந்தச் சுரண்டலை எந்த அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் பாதுகாக்கின்றன என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
இதுதான் இந்தியச் சமூகத்தைப் பற்றிய மார்க்சிய ஆய்வின் அடிப்படை.
11. முத்து குமாரின் வாதங்களில் உள்ள முக்கியமான கருத்தியல் தவறுகள் –தொகுப்பு
|
முத்துல்குமாரின் வாதம் |
மார்க்சிய–லெனினிய விமர்சனம் |
|
மார்க்ஸை மட்டும் வைத்து மீண்டும் தொடங்க வேண்டும் |
மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியையும் நடைமுறை அனுபவங்களையும் நிராகரிக்க
முடியாது |
|
லெனின் புரட்சியின் வரையறையை மாற்றினார் |
அவர் புரட்சியின் அரசியல் அதிகாரப் பரிமாணத்தைத் தெளிவுபடுத்தினார் |
|
அதிகார மாற்றம் உற்பத்தி மாற்றத்திற்கு எதிரானது |
அதிகார மாற்றம் உற்பத்தி உறவுகளை மாற்றுவதற்கான அரசியல் முன்நிபந்தனை |
|
சோசலிச உற்பத்தி உறவுகள் முன்கூட்டியே வளர்ந்திருக்க வேண்டும் |
சோசலிசத்திற்கான பொருளாதார முன்நிபந்தனைகள் வளர வேண்டும்; ஆனால் சோசலிச உடைமை உறவுகள் அரசியல்
மாற்றத்திற்குப் பின்னர் நிறுவப்படுகின்றன |
|
ரஷ்யப் புரட்சி முதலாளித்துவப் புரட்சி |
பிப்ரவரி, அக்டோபர்
புரட்சிகளின் வர்க்கத் தன்மைகளை வேறுபடுத்த வேண்டும் |
|
சீனாவில் சோசலிசப் புரட்சி நடக்கவில்லை |
புதிய ஜனநாயகப் புரட்சியையும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற சோசலிச
மாற்றத்தையும் தனித்தனியாக ஆராய வேண்டும் |
|
பொதுவுடைமை இயக்கத்தின் பின்னடைவுக்கு லெனினியமே காரணம் |
கட்சிகளின் வர்க்க அடித்தளம், அரசியல் வழிமுறை, திருத்தல்வாதம், நடைமுறைத் தோல்விகள், வரலாற்றுச் சூழல் ஆகியவற்றை
ஆய்வு செய்ய வேண்டும் |
12. இறுதி முடிவு: மார்க்சியத்தைப் பாதுகாப்பது என்பது மார்க்ஸை மட்டும் மேற்கோள் காட்டுவதல்ல!
.
அதாவது, பொதுவுடைமை இயக்கம் உற்பத்தி உறவுகள், உழைக்கும் மக்களின் வாழ்க்கை, வர்க்கப் போராட்டம் ஆகியவற்றிலிருந்து விலகி வெறும் அரசியல் அதிகாரப் போட்டியில் ஈடுபடுமானால், அது தனது புரட்சிகரத் தன்மையை இழக்கும். இந்த எச்சரிக்கை சரியானது. ஆனால் அதற்கான தீர்வு லெனினியத்தையும் மாவோ சிந்தனையையும் ஒதுக்கிவிட்டு மார்க்ஸிடம் மட்டும் திரும்புவதல்ல.
மாறாக, மார்க்ஸ் – எங்கெல்ஸ் – லெனின் – ஸ்டாலின் – மாவோ ஆகியோரின் கோட்பாடுகளையும் வரலாற்று நடைமுறைகளையும் ஒன்றிணைத்துப் படிக்க வேண்டும். அவர்களுடைய கருத்துகளையும் நடைமுறைகளையும் குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் விமர்சனபூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும்.
மார்க்சியம் என்பது பொருளாதாரத்தை மட்டும் ஆய்வு செய்யும் கோட்பாடு அல்ல. பொருளாதார அடித்தளத்திலிருந்து அரசியல், அரசு, வர்க்கப் போராட்டம், கருத்தியல், புரட்சிகர அமைப்பு ஆகியவற்றின் உறவுகளை முழுமையாக ஆராயும் அறிவியல் உலகக் கண்ணோட்டமாகும்.
லெனின் அரசியல் அதிகாரத்தை முதன்மைப்படுத்தியதன் நோக்கம் உற்பத்தியைப் புறக்கணிப்பதல்ல; உற்பத்தி உறவுகளை மாற்றுவதற்கான அரசியல் அதிகாரத்தைப் பாட்டாளி வர்க்கம் கைப்பற்ற வேண்டும் என்பதே.
மாவோவின் புதிய ஜனநாயகப் புரட்சி, சீனாவின் குறிப்பிட்ட பொருளாதார, அரசியல், சமூக நிலைமைகளுக்கு ஏற்ப புரட்சியின் கட்டங்களை வரையறுத்தது. எனவே, இம்மூவரையும் ஒன்றுக்கொன்று எதிரானவர்களாக நிறுத்துவது மார்க்சியத்தின் இயக்கவியல் அணுகுமுறையைச் சிதைக்கும்.
இறுதியாக நாம் எழுப்ப வேண்டிய கேள்வி இதுதான்:
ஒரு கம்யூனிஸ்ட் இயக்கம் உற்பத்தியைப் பற்றி பேசுகிறது என்பதற்காக மட்டும் அது புரட்சிகர இயக்கமாகிவிடுமா?
அல்லது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று பேசுவதால் மட்டும் அது புரட்சிகர இயக்கமாகிவிடுமா?
இரண்டுமே இல்லை.
உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் சமூகத்தின் வர்க்க முரண்பாடுகளை ஆய்வு செய்து, அந்த முரண்பாடுகளிலிருந்து உருவாகும் மக்களின் போராட்டங்களை ஒருங்கிணைத்து, அவர்களின் வர்க்க உணர்வை வளர்த்து, புரட்சிகரக் கட்சியின் தலைமையில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, பழைய உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கும் நடைமுறையே மார்க்சிய–லெனினியப் புரட்சிகரப் பாதையாகும்.
உற்பத்திப் போராட்டத்தையும் அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தையும் பிரிப்பது பொருளாதாரவாதம் அல்லது அரசியல்வாதம் என்ற ஒற்றைப் பக்கச் சாய்வுகளுக்கு வழிவகுக்கும். இவ்விரண்டையும் இயக்கவியல் ரீதியில் இணைப்பதே புரட்சிகர மார்க்சியத்தின் அடிப்படை.
மார்க்சியத்தை மீட்டெடுப்பது என்பது லெனினியத்தை நிராகரிப்பதல்ல; லெனினியத்தை அதன் புரட்சிகர வர்க்க உள்ளடக்கத்திலிருந்து பிரித்துப் பயன்படுத்தும் நடைமுறைகளையும், மார்க்சியத்தை வெறும் பொருளாதார விளக்கமாகச் சுருக்கும் போக்குகளையும் எதிர்த்துப் போராடுவதாகும்.
விவாதத்திற்கான முதன்மை நூல்கள்
இந்த விவாதத்தை மேலும் ஆழமாக ஆய்வு செய்வதற்கு பின்வரும் மூல நூல்களை ஒப்பிட்டுப் படிப்பது அவசியம்.
A Contribution to the Critique of Political Economy
1. கார்ல் மார்க்ஸ் – அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு (1859)
பொருளாதார அடித்தளம், மேல்கட்டுமானம், சமூகப் புரட்சியின் பொருள்முதல்வாத அடிப்படை.
2. லெனின் – அரசும் புரட்சியும்
அரசு அதிகாரம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், சோசலிச மாற்றத்தின் பொருளாதார அடிப்படை.
The April Theses by Vladimir Lenin | Goodreads
3. லெனின் – ஏப்ரல் ஆய்வுரைகள்
பிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபர் புரட்சிக்கான அரசியல் மாற்றம்.
4. லெனின் – The Tax in Kind (1921)
புரட்சிக்குப் பிந்தைய பொருளாதார நிலை, இடைக்கால மாற்றங்கள், அரசு முதலாளித்துவம்.
On New Democracy: Mao Tse-Tung | metabook.gr
5. மாவோ – புதிய ஜனநாயகம்
சீனாவின் சமூக அமைப்பு, புரட்சியின் கட்டங்கள், பாட்டாளி வர்க்கத் தலைமை.
தொடர்புடைய கட்டுரைகள்:
இதற்கு பிந்தைய விவாதத்தை வாசிக்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக