மார்க்சிய தத்துவப்போராட்டத்தின் முக்கியத்துவம்

இந்த ஆதாரங்கள் மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தின் அடிப்படைகளையும், சமூக மாற்றத்தில் உற்பத்தி முறைகள் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் பங்கினையும் விரிவாக விளக்கு கின்றன. நிலப்பிரபுத்துவ அமைப்பி லிருந்து முதலாளித்துவத்திற்கு மாறிய வரலாற்று நிகழ்வை வெறும் மக்கள் தொகை மாற்றமாகவோ அல்லது
வர்த்தக வளர்ச்சியாகவோ பார்க்காமல், அது சொத்து உறவுகளில் ஏற்பட்ட மோதல் என்று இவை வாதிடுகின்றன. ராபர்ட் ப்ரென்னர் போன்ற அறிஞர்களின் ஆய்வுகள் மூலம், சமூகத்தின் பொருளாதார அடிக்கட்டுமானமே அரசியல் மற்றும் கலாச்சார மேல்கட்டுமானங்களைத் தீர்மானிக்கிறது என்பது வலியுறுத்தப்படுகிறது. மேலும், மார்க்சியத்தை பண்பாட்டு அல்லது அரசியல் என்று துண்டு துண்டாகப் பிரிக்கும் போக்குகளை நிராகரிக்கும் இக்கட்டுரைகள், அதை ஒரு ஒருங்கிணைந்த சமூகவியல் தத்துவமாக முன்வைக்கின்றன. பிராங்பர்ட் பள்ளியின் 'எதிர்மறை இயங்கியல்' போன்ற கருத்துக்கள் மார்க்சியத்தின் இயங்கியல் மாற்ற விதிகளுக்கு முரணானவை என்று விமர்சிக்கப்படுகின்றன. இறுதியில், உழைக்கும் வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தையும், சமூக விடுதலையில் மார்க்சிய மெய்யியலின் அவசியத்தையும் இந்த ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.


வரலாறு குறித்த மார்க்சிய உலகக் கண்ணோட்டம் சமூகவியலில் ஏற்பட்ட மகத்தான புரட்சியாகும். வரலாற்றில் பொருள் முதல் வாதம் ஏற்படுத்திய புரட்சியின் எல்லைக்கு மேலே இதுவரை மற்றுமொரு மாற்றுச் சமூகவியல் உருவாகிவிடவில்லை. தத்துவம் அரசியல் பொருளாதாரம் என்ற இரு பெரும் அடிப்படைகளின் மீது கட்டப்பட்ட வரலாற்றியல் பொருள் முதல்வாதம் சமூக இருப்பை மாற்றுவது பற்றியதாக இருப்பதால் என்றும் வளரும் இயல்புடையதாக உள்ளது.

************************


வரலாற்று பூர்வமான ஆய்வுக்கு அவசியமான கருவியாக இருப்பது உற்பத்தி முறை பற்றியக் கருத்தமைவே ஆகும். மார்க்சியம் இயக்கவியல் பொருள் முதல் வாதம் வாழ்நிலை முதன்மையானது - அடிப்படையானது என்ற பொருள் முதல்வாதத்தின் அடிப்படையைப் பற்றி நிற்பது மானுட வாழ்நிலை என்ற அடிப்படையை ஆதாரமாகக் கொண்டே சமூக அமைப்பு வடிவம் கொள்கிறது.

இயற்கை வளங்கள் தொழில்நுட்பம் உழைப்பு சக்தி என்ற உற்பத்தி சக்திகளுக்கிடையிலான உறவு அதாவது வாழ்வதற்கும் மறு உற்பத்தி செய்வதற்குமான போராட்டத்தில் மனித குலத்துக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவு என்ற அடிப்படையின் மீது உற்பத்திமுறை அமைந்துள்ளது. உற்பத்தி முறையின் மற்றுமொரு அடிப்படை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மட்டங்களுக்கு ஏற்ப உருவாகும் உற்பத்தி உறவுகளாகும். உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளருக்கும் பொருளுற்பத்தியில் நேரடியாக ஈடுபடும் உழைப்பாளிக்கும் இடையிலான உறவே உற்பத்தி உறவுகளாகிறது. இது உற்பத்தியில் வேரூன்றி இருந்தாலும் வினியோகம் பரிவர்த்தனை நுகர்வு ஆகியவற்றில் செயல்படுகிறது.

உற்பத்தி உறவுகள் திட்டவட்டமான சமூக வாழ்நிலைகளில் வேறுபட்ட சிக்கலான வடிவங்களைப் பெறுகிறது. உற்பத்தி சக்திக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான இயக்கவியலில் உற்பத்தி சக்தியே தீர்மான கரமான சக்தியாக விளங்குகிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி உற்பத்தி உறவுகளின் இயல்புகளைத் தீர்மானிக்கின்றது. குறிப்பிட்ட சமூகத்தில் பொருளியல் மற்றும் வாழ்நிலை விதிகளை உருவாக்குகிறது.

உற்பத்தி முறையில் இந்த அடிப்படையின் மீதே சட்டம் அரசியல் மதம் கலாச்சாரம் வாழ்க்கை முறை நெறிகள் ஆகிய சமூக மேல்கட்டுமானம் கட்டப்படுகிறது. மேல் கட்டுமானத்தின் தன்மைகள் யாவும் பொருளாதார ஏற்பாட்டின் காரணமாகவே அதனோடு ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொண்டே அமையப் பெறுகின்றன. அவற்றின் சுயேச்சைத் தன்மைகளுக்கு இந்த அடிப்படை உண்டு. இந்த அடிப்படை இல்லாத பூரண சுயேச்சை அவைகளுக்கு இல்லை.

சமூக உற்பத்தி முறை அத்தனை எளிதானதல்ல. ஒரு சமூக அமைப்பு ஒரு மேலான உற்பத்தி முறையினால் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும் அந்த சமூக அமைப்பில் இதர உற்பத்தி முறைகள் மற்றும் மேல் கட்டுமானக் கூறுகள் கொண்டதாகவே விளங்குகிறது.

இந்த சிக்கலான நிலை காரணமாக ஒரு சமூக அமைப்பின் அடிப்படை வர்க்கங்கள் தீர்மானகரமான உற்பத்தி முறையின் முதன்மை வர்க்கங்களாக உள்ளன. ஆதிபொதுமை சமூகத்துக்குப்பின் தோன்றிய வர்க்க சமூகங்களில் நில பிரபுத்துவமும் முதலாளித்துவமும் பற்றிய பிரச்சினை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த சமூகங்களின் வர்க்க உறவுகள் சமூக உறவுகளாகவே செயல்படுகின்றன.

வரலாற்றை இயக்குவது எது? இந்த கேள்விக்கு முதன்மையாகவும் அடிப்படையாகவும் வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமுமே வரலாற்றை இயக்குபவை என்பதே மார்க்சியம்.

உற்பத்தி சக்திகளுக்கிடையிலான கூறுகளாக உள்ள புதிய தொழில்நுட்பம் உழைப்பின் புதிய மட்டத்திலான நிர்வாக ஏற்பாடு புதிய சமூக வர்க்கங்களின் பொருளாதார வெற்றி ஆகியவைகளின் வளர்ச்சி நடப்பில் உள்ள உற்பத்தி உறவுகளோடு அதன் மேல் கட்டுமானத்தோடு மோதுவதையே வர்க்கப் போராட்டம் என்றழைக்கப்படுகிறது. ஒரு சமூக அமைப்பிலிருந்து மற்றொரு சமூக அமைப்புக்கு மாறுவதற்கான காலத்தில் இத்தகைய வர்க்கப்போராட்டத்தைத் தீர்மானிக்கும் காரணி எது? குறிப்பாக நிலப்பிரபுத்துவ அமைப்பிலிருந்து முதலாளித்துவ அமைப்புக்கு மாறிச் செல்லும் காலத்தின் வர்க்கப் போராட்டத்தைத் தீர்மானிப்பது எது?

இந்த கேள்விகள் வரலாற்றியல் பொருள் முதல் வாதத்தின் அடிப்படையான கேள்விகள். இது குறித்து மார்க்சிய அறிஞர்களிடையே பெரிய விவாதங்கள் நடைபெற்று வந்துள்ளன.

அத்தகைய விவாதங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று அறிவியலும் சமூகமும் என்ற ஆய்விதழில் மோரிஸ்தாப் துவக்கி வைத்து பால்ஸ்வீஸி போன்ற பல புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர்கள் பங்கேற்ற மாறுதல் காலம் பற்றிய விவாதம். அது நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்துக்கு மாறுவது என்ற தலைப்பில் 1950 களில் பல நாடுகளில் நூலாக வெளியிடப்பட்டது.   

Historian Robert Brenner published an article in 1976 in the journal Past and Present called "Agrarian Class Structure and Economic Development in Pre-Industrial Europe".

வரலாற்றை இயக்கும் சக்தியை எங்கு இருந்து தேடுவது? பொருளாதாரத்தில் சமூக உறவுகளில் எல்லாவற்றுக்கும் மேலாக அடிப்படையாக உயிரியல் காரணிகளில்தான் வரலாற்றை இயக்கும் சக்தி உள்ளது. வர்க்கப்போராட்டமல்ல 14 முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை வாழ்வுக்கும் மரணத்துக்குமான மகத்தான சக்தியின் சேவகனாகவே பொருளாதாரம் விளங்கியது என 1973 ஆம் ஆண்டு இடைக்கால ஐரோப்பிய வரலாற்று அறிஞர் இமானுவேல் ராய்பாதுரி எழுதினார். போஸ்டன் போன்றவர்களும் இந்த கருத்தைக் கொண்டிருந்தனர். இது ஒருவகை புதிய மால்தூசிய வரலாற்றியலை முன்வைத்தது. மத்திய காலப் பொருளாதாரத்திலும் வர்க்கச் சுரண்டலும் வர்க்கப்போராட்டமுமே அடிப்படையானது என்ற மார்க்சிய நிலைபாட்டை இவர்கள் நிராகரித்தனர். நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்திற்கு மாறிச் செல்லும் வரலாற்று நிகழ்வுப் போக்கை மக்கள் தொகை பெருக்கம் அல்லது வீழ்ச்சியோடு ஒப்பிட்டு ஆய்வுகளை நடத்தினர்.

வரலாற்றை எழுதுவதில் இத்தகைய மால்தூசிய மாடல் மார்க்சியத்தை மறுப்பதற்காக - வர்க்கப் போராட்டம் தான் வரலாற்றின் உந்து சக்தி என்பதை மறுப்பதற்காக முன்வைக்கப்பட்டது.

தொழில் புரட்சிக்கு முந்தைய ஐரோப்பிய சமூகம் பற்றிய ஆய்வு பெருமளவு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அதன் பொருளாதார வரலாறு குறித்த சிறந்த ஆய்வுகள் ஐரோப்பிய நாடுகளில் பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. அத்தகைய ஆய்வுகளில் பலவும் முதலாளித்துவக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டோ மக்கள் தொகை மாடலையும் வர்த்தக மாடலையும் விவரங்களாக விளக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு மாடல்களையும் நிராகரிப்பது மார்க்சிய வரலாற்றியலுக்கு ஏற்பட்ட ஒரு கடமையாகிறது.

வர்த்தகங்கள் என்பது என்ன? அவை உபரி உற்பத்தி ஏற்படும் வரலாற்று நிலைகளில் அத்தகைய உபரியை ஒரு மக்கள் பகுதி அதிகாரம் வன்முறை மூலம் அபகரித்துக் கொள்ளும் சூழலிலேயே வர்க்கங்கள் உள்ளன. இந்த இரண்டு சூழ்நிலைகளும் வர்த்தகங்கள் இருப்பதற்கான அவசியங்களாகும்.

வர்க்க அமைப்பு இரண்டு அம்சங்களைக் கொண்டதாக விளங்குகிறது. முதலாவது நேரடி உற்பத்தியாளர்களுக்கிடையேயான உறவுகள் உற்பத்திக் கருவிகள் மற்றும் நிலம் ஆகியவற்றோடு உடனடி உற்பத்தி நிகழ்வில் ஏற்படும் உறவுகள் (உற்பத்தியின் சமூக சக்தி). இரண்டாவது சொத்து பற்றிய உறவுகள். கடைசியாகப் பார்த்தால் இது வன்முறை மூலம் நேரடி உற்பத்தியாளரிடமிருந்து உபரியை அபகரித்துக்கொள்ளும் நேரடி உற்பத்தியில் ஈடுபடாத பகுதியினர் நேரடி உற்பத்தியாளனுடன் கொள்ளும் உறவு. இது சொத்துறவாக - உபரியை உறிஞ்சும் உறவாகவே உள்ளது. இதுவே ஒரு சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சியின் வாய்ப்புகளை உருவாக்குகிறது அல்லது கட்டுப்படுத்துகிறது.

இத்தகைய வர்க்க அமைப்பு மக்கள் தொகையிலோ வர்த்தக மாற்றங்களிலோ உருவாகி விடுவதில்லை. குறிப்பான வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி புறநிலைத் தன்மையுடையது பொருளாதாரம் குறித்து உபரியை அபகரிப்பதோடு நடக்கும் மோதல் பற்றியது பழைய சொத்துமுறை ஒழிக்கப்பட்டு புதிய வகைப்பட்ட சொத்து உறவுகள் உருவாக்கப்படும் நிகழ்ச்சிப் போக்கே சமூக அமைப்பு மாற்றம் ஆகும். நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்துக்கு மாறிச் செல்வதை இந்த அடிப்படையிலேயே புரிந்துகொள்ள வேண்டும்.

 இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளின் நிலப்பிரபுத்துவ அமைப்புகளில் 13-17 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களை ஆராய்ந்து மக்கள் தொகை அடிப்படையிலான ஆய்வை தவறானது என நிறுவுகிறார். ஒரே மாதிரியான மக்கள் தொகைச் சூழ்நிலை இங்கிலாந்தில் முதலாளித்துவ வகைப்பட்ட பெருவீத வேளாண்மை உருவாக்கியது பிரான்சில் பிளவுபட்ட சிறு உடைமைகளை ஆதாரமாகக் கொண்ட பின்தங்கிய வேளாண்மையை உருவாக்கியது. சந்தை தேவைகள் இந்த வேறுபாடுகளை தீவிரப்படுத்தவே செய்தன.

தொழில் புரட்சிக்கு முந்தைய உலகச் சந்தையில் தானியத்தின் தேவை அதிகரித்த போதும் கிழக்கு ஐரோப்பாவில் விவசாயிகள் முதலாளித்துவ வகையில் மாற்றப்பட்டு விடுதலை பெறவில்லை. அவர்கள் தமது அடிமைத் தனத்தால் மேலும் பிணைக்கப்பட்டார்கள். அதே சூழ்நிலை மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ வளர்ச்சிக்கு உதவியது. இந்த வேறுபாட்டை எவ்வாறு விளக்குவது?

நிலப்பிரபுத்துவத்தின் அடிப்படைத் தன்மை நிலவாடகையை நிலவுடைமையாளர் பெறுவதுதான். அது முதலாளித்துவ வகையில் பெறப்படுவதற்கு உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கு முதலாளித்துவ வகைப்பட்ட உற்பத்தி உறவுகள் உருவாகியிருக்க வேண்டும். நிலப்பிரபுத்துவம் பின்தங்கிய நிலையைப் பாதுகாத்து உற்பத்தித் திறனைப் பற்றி கவலைப்படாமல் விவசாயிகளை வன்முறை மூலம் சுரண்டுவதிலேயே தனது நில வாடகையைப் பெறுகிறது. உலகச் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் நிலப்பிரபுத்துவ உற்பத்தி நிலவும் சமூக அமைப்புகளில் தானாக சமூக மாற்றங்களை ஏற்படுத்திவிடுவதில்லை.

உற்பத்தித் திறன் பற்றிய நெருக்கடி புதிய செல்வ ஆக்கமும் செல்வக் குவியலும் ஏற்படாமல் தடுக்கிறது. இந்த நெருக்கடி முதலாளித்துவ வளர்ச்சிக்கு இடமளிக்க வேண்டும். ஆனால் அது தானாக நிகழ்வதில்லை. அதற்கான தொழில்நுட்ப வளர்ச்சியும் புதிய வர்க்கங்களின் ஆக்கமும் இவை இரண்டும் பழைய நிலப்பிரபுத்துவ சொத்துறவு முறையோடு முட்டிமோதிப் போரிடுவதும் இன்றி உற்பத்தித்திறன் பற்றிய நெருக்கடி தீர்வதில்லை. இங்கிலாந்து பிரான்ஸ் பொஹிமியா ஆகிய நாடுகளிலும் ஜெர்மனியிலும் ஏற்பட்ட நிலப்பிரபுத்துவ நெருக்கடிகள் இந்த நூலில் விரிவாக ஆராயப்படுகின்றன.

பொருளாதார வளர்ச்சியின் நீண்டகால போக்கை தீர்மானிப்பது சமூக - சொத்து ஏற்பாடுதான். நிலப்பிரபுத்துவத்தின்கீழ் உபரி அபகரிப்புக்கான ஏற்பாடு பொருளாதார நிர்பந்தம் அல்லாத வழிவகைகளில் - நிலப்பிரபுத்துவ வகையிலான கட்டுப்பாடு வன்முறைகளில் நிலை பெற்றுள்ளது. இது விவசாயிகளின் இடப்பெயர்ச்சியைக் கூட தடுத்துவிடுகிறது. உழைப்பு உற்பத்தி ஆதார சமூக நிர்பந்தங்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. மத நிறுவனங்கள் ஏதேச்சதிகார அரசு கிராம சமூக (Communal) வாழ்க்கை ஆகியவை மூலம் இந்த அபகரிப்பு நடைபெறுகிறது. இதனை எதிர்த்த முதலாளித்துவ வர்க்க உருவாக்கம் பழையதை உடைப்பதற்கு நிலப்பிரபுத்துவ ஏற்பாட்டைத் தகர்த்து உழைப்புச் சக்தியைச் சுதந்திரமான தாக்கவே போராடுகிறது.

மார்க்சியத்தைப் பொருளாதார மார்க்சியம் என்றும், அரசியல் மார்க்சியம் என்றும், பண்பாட்டு மார்க்சியம் என்றும் துண்டு துண்டாக உடைத்து மார்க்சிய ஆய்வுகள் நடத்துவது இன்றைய மார்க்சிய எதிர்ப்புப் போக்கின் தன்மைகளில் ஒன்றாகிவிட்டது. மார்க்சியம் ஒருங்கிணைந்த தத்துவமும் நடைமுறையும் ஆகும். தத்துவம் அரசியல் பொருளாதாரம் சோசலிசத்துக்கான அரசியல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த சமூகவியலே மார்க்சியம். இவை ஒன்றுடன் ஒன்று பிணைந்தும் சார்ந்தும் இயங்குகின்றன.

ஆனால் மார்க்சிய அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் சிலர் மார்க்சியத்தின் ஏதாவது ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு பிற பகுதியை ஏதோ பிற்போக்கின் கழிசடை அது என்பதுபோல தாக்குவதையே தொழிலாகக் கொண்டு மார்க்சிய வகையான கம்யூனிஸ்ட் எதிர்ப்பு கருத்தியலை உருவாக்கி வருகின்றனர்.

நிலப் பிரபுத்துவம் இயல்பிலேயே உபரியை அபகரிக்க பொருளாதாரம் சாராத கட்டுப்பாட்டு ஏற்பாடுகளையே (பாரம்பரிய உறவுகள், ஒழுக்கநெறிகள், அரசியல் முதலியன) சார்ந்திருக்கிறது. நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கங்களின் மறு உற்பத்திக்கும் வளைமைக்கும் தேவையான பொருளாதார நிபந்தனைகள் இதன் மூலமாக மட்டுமே நிறைவேற்றப்படுகின்றன. நில வாடகையைப் பெற விவசாயிகளின் மீது தமது சொந்தக் கட்டுப்பாட்டைக் கெட்டிப்படுத்தவே நிலவுடைமையாளர் முனைகிறார். அவர்தம் நேரடியான பலவந்தத்தை அங்கே பயன்படுத்துகிறார். அதற்கான நீதிகளும் சட்டங்களும் சமூக நிறுவனங்களும் அங்கே நிலைநாட்டப்படுகின்றன. இதன் மீதே மொத்த உற்பத்தி ஏற்பாடும் நிலப்பிரபுத்துவத்தில் அமைந்துள்ளது.

இதிலிருந்து நிலப்பிரபுத்துவ திருமணம் குடும்ப அளவுகூட பொதுவில் வரையறுக்கப்படுகிறது. இந்த பொது வரையறுப்பின் மீதே இது குறித்த பண்பாட்டு நெறிகள் உலகப்பார்வைகள் ஆக்கப்படுகின்றன. இதன் அடிப்படையிலேயே மத்தியகால ஐரோப்பாவில் நிலவிய சிறுவயது திருமணங்களை விளக்க முடியும். நிலப்பிரபுத்துவ அமைப்பின் பொருளாதார ஏற்பாடும் அதன் வர்க்கத் தன்மைகளும் அரசியலாக கட்டமைக்கப்பட்டதுதான். பொருளாதாரம் சாராத நிர்ப்பந்தங்கள் மூலமாக உபரியை அபகரிப்பது தான்.

பொருளாதாரத்துக்கு அப்பாற்பட்ட நிர்பந்தங்களின் அடிப்படையில் கட்டப்பட்ட நிலப்பிரபுத்துவ வர்க்க அமைப்பு உற்பத்தித்திறனை வீழ்த்தி கடைசியில் நிலப்பிரபுத்துவ நெருக்கடிக்கு இட்டுச் செல்கிறது.

இந்த நெருக்கடி தொழில்நுட்பம் வளராததால் விளைந்தது என பொதுவில் சொல்லி விடமுடியாது. புதிய உற்பத்தி பெருக்கத்தை உருவாக்கும் உற்பத்தி தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றலை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளே - சொத்துடைமை முறையே தடுத்துவிடுகிறது. முதலாவதாக உற்பத்தி சந்தைக்காக நடத்தப்படுவதில்லை. மாறாக வாழ்க்கைத் தேவைகளுக்காகவே நடத்தப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியான உற்பத்தி சக்தியை வளர்ப்பதற்கு பதிலாக குடும்ப உழைப்பு சக்தியை (குழந்தைகளை) பெருக்குவதையே நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு ஊக்குவிக்கிறது. இதன் மூலம் விவசாய அடிமைகளின் உழைப்பை மேலும் கூடுதலாகப் பெறவே நிலப்பிரபுத்துவம் முயல்கிறது.

பொருளாதாரம் சாராத வழிவகைகளில் உபரியைப் பெறுவதே நிலப்பிரபுக்களின் ஒரே தேர்வாக இருப்பதால் புதிய தொழில் நுட்ப வளர்ச்சியை அவர்கள் தடுத்துவிடுவதிலேயே குறியாக இருந்து விடுகின்றனர். பணமாகவோ தானியமாகவோ அவர்கள் பெறும் நிலவாடகை அபராதங்கள் வரி வசூல் போன்ற யாவும் விவசாயிகளின் முதலீட்டு ஆற்றலை இல்லாமல் ஆக்கிவிடுகிறது. ஆக நிலப்பிரபுத்துவ அமைப்பில் இந்த இரண்டு அடிப்படை வர்க்கங்களுமே உழைப்பின் உற்பத்தித்திறனை பெருக்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. நிலப்பிரபுத்துவம் உற்பத்தி தன்மையற்ற பொருளாதாரம் சாராத பொருளாதார முறைகளையே கொண்டுள்ளது. இது நெருக்கடியைத் தோற்றுவிக்கிறது.

இந்த நெருக்கடி சாகுபடிக்கு புதிய நிலங்களைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடவைக்கிறது. இந்த சமயங்களில் சிறு வளர்ச்சி ஏற்படுகிறது. நிலப்பிரபுத்துவ அரசு காடழித்து நாடாக்கும் முயற்சியை தொடர்ந்து நடத்த முடியாது. அதற்கு ஒரு எல்லை உண்டு. செல்வத்தை மறு வினியோகம் செய்வதில் அது கொண்டுபோய் விடுகிறது.

இது மறுபடியும் நெருக்கடியைத் தோற்றுவிக்கிறது. நிலப்பிரபுத்துவ சகாப்தத்தில் (கி.பி. 1000 தொடங்கி 1750 வரை) நிலப்பிரபுத்துவ அரசுகள் வலுவான ராணுவத்தை ஆக்கிக் கொள்ளவும் போர்கள் மூலம் புதிய பிரதேசங்களுக்கும் செல்லவுமான முயற்சிகளில் ஈடுபடுகின்றன. அதே சமயத்தில் ஏதேச்சதிகார - ராணுவ அரசு விவசாயிகள் மீதான பொருளாதாரம் சாராத நிர்பந்தங்களை வலுவாகத் திணிக்கிறது. நிலப்பந்தங்களை வலுவாகத் திணிக்கிறது. நிலப்பிரபுத்துவ சகாப்தம் முழுவதும் இத்தகைய அரசியல் அதிகாரக் குவிப்பை அடிப்படையாகக் கொண்டே வாழ்க்கையில் உறுதிப்பாடு அமைந்துள்ளது. நிலப்பிரபுக்களிடையே ஆன பூசல்களும் மோதல்களும் இத்தகைய அரசியல் அதிகாரக் குவிப்பை அவசியமாக்கி விடுகிறது. போர் என்பது நிலப்பிரபுத்துவ மையப்படுத்துதலுக்கான ஊக்கு சக்தியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வகையில் நிலப்பிரபுத்துவ அரசு உருவாக்கம் என்பது பொருளாதாரம் பற்றியதாகவே உள்ளது. விவசாயி உற்பத்தி செய்த செல்வத்தை அபகரிப்பது சுழற்சிக்கு விடுவது மறு வினியோகம் செய்வது நுகர்வது ஆகியவற்றை இத்தகைய அரசு நிலப்பிரபுத்துவ வழியில் சட்டப்பூர்வமாக்கி விடுகிறது.

நிலப்பிரபுத்துவ சகாப்தத்தில் வர்த்தகம் நிலப்பிரபுக்களின் அதிகாரக் குவியலின் தேவைக்கு உட்பட்டே அனுமதிக்கப்படுகிறது.

நிலப்பிரபுத்துவ ஆட்சியும் அரசும் மத்தியபடுத்தப்பட்ட உபரி அபகரிப்பை நோக்கமாகக் கொண்டே தனது நிலைத்த ஆட்சியை நடத்தத் துணிகிறது. ஆனால் இது அவ்வப்போது உடைக்கப்பட்டு விடுகிறது.

நிலப்பிரபுத்துவ வர்க்க சொத்து உறவுகள் உற்பத்தித்திறனை தொடர்ந்து வீழ்ச்சி நிலையிலேயே வைத்திருப்பதை உறுதி செய்கின்றனர். நிலப் பிரபுத்துவத்தின் கட்டமைப்பு எல்லை (Structural limitation) இதில் தான் உள்ளது. நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு இதிலிருந்து நெருக்கடி உருவாகிறது. ஐரோப்பாவில் 15 ஆம் நூற்றாண்டிலிருந்து இத்தகைய நெருக்கடி தோன்றிவிட்டது. இதுவும் கூட ஐரோப்பா முழுவதும் ஒரே மாதிரி நிகழ்ந்துவிடவில்லை. மேற்கு ஐரோப்பாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் வேறுவேறு தன்மைகளில் இந்த நெருக்கடி தோன்றியது. மேற்கு ஐரோப்பாவில் 14-15 ஆம் நூற்றாண்டுகளில் நிலப்பிரபுக்கள் பண்ணை அடிமை முறையைப் பலப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஜெர்மனியிலும் போலந்திலும் அது பலமடைந்தது. கிழக்கு ஐரோப்பாவில் புதிய அரசு ஆக்கம் மூலம் இது அழிக்கப்பட்டது. ஆக முதலாளித்துவம் உருவாவதற்கான முன்தேவை மேற்கு ஐரோப்பாவில் உருவானது.

இந்த வெளிச்சத்தில் ஐரோப்பிய விவசாய எழுச்சிகளை ஆராய வேண்டும். நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கங்களிடையேயும் தீவிரமான மோதல் போக்கு இருந்தது. இவையாவும் 17 ஆம் நூற்றாண்டில் ஒரு பொது நெருக்கடியை நிலப்பிரபுத்துவத்துக்கு ஏற்படுத்தியது.

இது முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் விவசாயத்தில் தோன்றி யதன் மூலம் தீர்வுகான பாதையை திறந்துவிட்டது. ஒரு புதிய முதலாளித்துவ வகைப்பட்ட வர்க்க - உற்பத்தி அமைப்பு இங்கிலாந்திலும் பிரான்சிலும் ஏற்பட்டது. இரண்டு நாடுகளிலும் இரண்டு வேறுபட்ட தனிஇயல்புகளில் இவை ஏற்பட்டன. இவை விவசாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி உற்பத்தித் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

15-16 ஆம் நூற்றாண்டுகளில் நிலப்பிரபுத்துவ அரசுகள் பாரம்பரிய மரபுகளை காக்க வேண்டும் என உத்தரவுகள் பிறப்பித்து வரி வசூலை தீவிரமாக்கின. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆண்டுக்கான வரித்தொகை ஏழுநாள் வருவாயாக 1547 ல் இருந்தது. 1675 இல் வரித்தொகை முப்பது நாள் வருவாயாக உயர்ந்தது. போர்கள் மூலம் இது அதிகரித்தது. நிலவாடகையும் வரிச்சுமையும் விவசாயிகளைப் பெருமளவு பஞ்சப்பட்டாளமாக்கியது.

16-17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் விவசாய உற்பத்தி உறவுகளிலும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. நகரங்களில் உருவான முதலாளித்துவ உற்பத்திமுறை இதற்கு ஆதாரமாக அமைந்தது. வாழ்வதற்கான விவசாய உற்பத்தி மாற்றப்பட்டு முதலாளித்துவ சந்தைக்கான உற்பத்தி முறையை நோக்கி விவசாயம் நகர்ந்தது. இங்கிலாந்தில் முதலாளித்துவ விவசாயிகள் என்ற புதிய வர்க்கம் இதற்கானப் பொறுப்பை ஏற்றது. பெருவீத விவசாயம் ஏற்படுவும் முதலீடு செய்யவும் இவர்கள் முனைந்து நின்றனர்.

ஏற்பட்ட புதிய முதலாளித்துவ உலகச் சந்தையின் தேவைகளை நிறைவேற்ற நிலப்பிரபுத்துவ அரசியல் அதிகாரக் குவிப்பு முறை பெரும் தடையாக அமைந்தது. முதலாளித்துவ வகைப்பட்ட புதிய வேலைப்பிரிவினை நெருக்கடியில் இருந்த நிலப்பிரபுத்துவத்தை நிலைகுலையச் செய்துவிட்டது.

முதலாளித்துவத்துக்கு தேவையான மூலப்பொருள் மனித ஆற்றல் சந்தையாக மாறிய முதலாளித்துவ விவசாயம் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தும் வரலாற்றுச் சக்தியாக பலம் பெற்றது. நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்துக்கு மாறிச் செல்லும் காலத்தின் அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள் வளர்ந்தெடுக்கப்பட்டன. அது பொருளாதாரம் சார்ந்த நேரடிச் சுரண்டலை ஆதாரமாகக் கொண்டது. சுதந்திரத் தொழிலாளியின் உழைப்பு சக்தி என்ற சரக்கின் மூலம் உபரி மதிப்பை பொருளாதார உறவுகள் மூலம் அபகரிப்பதை ஆதாரமாகக் கொண்டது. அதற்கான சந்தையை அது வளர்த்தது. அதற்கு இசைவான ஜனநாயக அரசுகள் உருவாயின. இறுதியில் முதலாளித்துவம் வென்றது.

III

விவசாயத்தில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி பற்றிய மார்க்சிய ஆய்வு மார்க்ஸ் ஏங்கல்ஸ் ஆய்வுகளில் தொடங்குகிறது. இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்டு முதலாளித்துவ விவசாயத்தின் வளர்ச்சியை மார்க்ஸ் ஆராய்ந்தார். ஆதி மூலதனக் குவியலின் ஓர் அங்கமாகவைத்து அது நடத்தப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் ருஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி என்ற நூலில் ருஷ்ய நிலைகளில் நிலப்பிரபுத்துவ ஏற்பாடு முதலாளித்துவமாக மாறுவது குறித்த ஆய்வை மேற் கொண்டார். இந்த பொருள் பற்றிய மார்க்சிய ஆய்வுக்கு அது ஒரு பெரும் பங்களிப்பாகும்.

நிலப்பிரபுத்துவத்தின் அடிப்படை இயக்க சக்தி (Prime Mover) நில வாடகையாக இருந்த நிலைமாறி முதலாளித்துவத்தின் அடிப்படை இயக்கு சக்தியாக உள்ள சரக்கு உற்பத்தி மூலம் உபரி மதிப்பை பெறுதல் என்ற நிலைக்கு விவசாயம் மாற்றப்படுவதே நிலப்பிரபுத்துவம் முதலாளித்துவமாக மாறிச் செல்வது குறித்த பிரச்சினையின் சாரம். நிலவாடகை முறையிலிருந்து சரக்கு உற்பத்தி முறைக்கு மாறிச் செல்வதையே நாம் இங்கே குறிக்கிறோம். இது கிராமப்புறங்களில் முதலாளித்துவ வகைப்பட்ட புதிய வர்க்கங்கள் உருவாகுவதை அடிப்படையாகக் கொண்டது. லெனின் இதன் அடிப்படைகளை விளக்கினார்.

நிலம் சரக்காக மாற்றப்படுவதும் விவசாயம் முழுமையும் சந்தைக்கு கட்டுப்படுவதும் விவசாயிகள் மத்தியில் புதிய வர்க்க அடுக்குகள் தோன்றுவதும் உபரி அபகரிப்பு மூலதன விரிவாக்கத்துக்கு (குடும்ப நுகர்வுக்கல்ல) பயன்படுத்துவதும் நிலப்பிரபுத்துவ வீழ்ச்சிக்கும், முதலாளித்துவ ஆக்கத்துக்கும் அடிப்படையானவை என லெனின் வலியுறுத்தினார்.

மாபெரும் ரஷ்யப் புரட்சி விவசாய நாடுகளில் சோசலிசம் பற்றிய இயக்கங்களை ஊக்குவித்தது. முதலாளித்துவத்துக்கு மாறிச் செல்வது பற்றிய மார்க்சிய விவாதங்கள் பல நிலைகளில் நடத்தப்பட்டன. அரசியல் பொருளாதார அடிப்படைகளைக் கவனத்தில் கொள்ளாமல் இறுதி லட்சியத்தை மட்டுமே குறியாகக் கொண்டு வரலாற்றை விளக்கும் மார்க்சிய முயற்சிகளும் நடைபெற்றன. கரடுமுரடான வாழ்நிலைகளில் போதுமான மார்க்சிய தத்துவ தயாரிப்பின்றி மார்க்சிய வழியில் விளக்கவும் ஜனநாயகப் புரட்சியை மேற்கொள்ளவும் ஆன முயற்சிகள் விவசாயிகளை திரட்டுவதற்கு சில வளர்முக நாடுகளில் உதவினாலும் தவறான விளைவுகளையே இறுதியில் ஏற்படுத்தின. மார்க்சியத்தின் வளர்ச்சியில் அவை எதிர்மறைப் போக்குகளையே ஏற்படுத்தின.

இந்தியாவிலும் நிலப்பிரபுத்துவம் முதலாளித்துவ மாறுதல் பற்றிய ஆய்வுகள் நிறைய வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவின் தனித் தன்மைகள் அதில் ஆராயப்பட்டுள்ளன.

ஆனால் நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்துக்கு மாறிச் செல்வதற்கான தத்துவ ஆய்வு முயற்சிகள் இன்னும் கூடுதலாகத் தேவைப்படுகிறது. குறிப்பாக தமிழ் நாட்டுச் சூழலில் முதலாளித்துவத்துக்கு விவசாயம் மாறிச் சென்றது குறித்த ஆய்வுகள் வளர்ச்சியடைந்த நிலைக்கு வந்துவிடவில்லை.

மார்க்ஸியம் பற்றிய புரிதலுக்கு முதலில் இந்த அடிப்படை மீது தெளிவு ஏற்பட வேண்டும். 1848 கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்டது தொடங்கி இன்றுவரை சரியாக 178 ஆண்டுகள் மார்க்சியம் சோசலிஸத்துக்காகச் செயல்படும் தத்துவமாக இயங்கி வந்துள்ளது. இந்த ஆண்டுகளில் மனிதகுலம் எதிர்கொண்ட பலவகைப்பட்ட புதிர்களுக்கும் பிரச்சனைகளுக்கும் ஒரு பொதுவான திசைவழியை மார்க்சியம் வழங்கியுள்ளது. அத்தகைய பொது திசைவழி திட்டவட்டமான நாடுகளின் சமூகச் சூழல்களில் திட்டவட்டமான மார்க்சிய ஆக்கங்களை உருவாக்கியுள்ளது. மார்க்சியத்தின் படைப்பாக்க ஆற்றலின் வெளிப்பாடு இது.

எல்லா புதிர்களுக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதாக உரிமை கொண்டாடும் முழு முதல் தத்துவம் மார்க்சியம் தன்னை என்றுமே பிரகடனப்படுத்திக் கொண்டதில்லை. ஆனால், மார்க்சியம் ஏற்படுத்திய தத்துவ பரப்பினுள்தான் நமது சமகால சமூக இயக்கங்களையும் மனித சமூகம் மேம்பாடுகள் அதன் உள் இயக்கம் யாவற்றையும் நாம் அறியும் அறிவை மார்க்சிய தத்துவம் நமக்கு படிப்பித்துள்ளது.முற்போக்கு இயக்கங்கள் யாவும் செயல்பட வேண்டியவர்கள் கை கொள்ள வேண்டிய தத்துவம் மார்க்சியம்...

மார்க்சியம் தோன்றிய பின்னர், அதுபற்றி பல விளக்கங்கள் ஐரோப்பிய அரங்கில் தோன்றியுள்ளன. சோவியத் மார்க்சியம், சீனமார்க்சியம், பிரஞ்சு மார்க்சியம், இத்தாலிய மார்க்சியம், பிரிட்டிஷ் மார்க்சியம், வியன்னா மார்க்சியம், அமெரிக்க மார்க்சியம், பிராங்பர்ட் மார்க்சியம் என்று பல போக்குகள் அதில் காணப்படுகின்றன. பல திறமையான அறிஞர்கள் இதில் ஈடுபட்டு பல விளக்கங்கள் அளித்துள்ளனர். இவற்றில் ஏற்றுக் கொள்ளக் கூடியவை பல இருந்தாலும், இவர்களில் பலர் மார்க்சியத்தை விட்டு விலகி பல முரண்பட்ட கருத்துக்களை அதனுடன் இணைத்து அதனை மார்க்சியம் என்று கூறுகின்றனர். இதனை 'போலி மார்க்சியம்' என்று விமர்சகர்கள் அழைக்கின்றனர். இத்தகைய போக்குகளில் ஒன்று தான் பிராங்பர்ட் மார்க்சியம் என்பது.

பிராங்பர்ட் மார்க்சியர்கள் அரசியலில் இருந்து விலகியவர்கள். கொள்கை, நடைமுறை ஆகியவற்றினைப் பிரித்து, கொள்கையை மட்டும் மையமாகக் கொண்டவர்கள். இவர்களது முக்கியமான கொள்கை விமர்சனக் கோட்பாடு என்பது. இதன் ஒரு பகுதியாக விளங்குவது 'எதிர்ப்பு இயங்கியல்' (Negative Dialectics) என்பதாகும். இவர்களது இந்தக் கொள்கையைக் காண்பதற்கு முன்னால் மார்க்சியம் கூறும் ஒரு விதியான எதிர்மறைகளின் மறுப்பு விதி (Negation of Negation) பற்றிக் காண வேண்டும்.

இந்த விதியானது மார்க்சிய இயங்கியலில் கூறப்படும் எதிர்சக்திகளின் இணைப்பும் போராட்டமும், அளவு பண்பு மாறுதல் விதி ஆகியவற்றுடனும், இயங்கியலின் கூறுகள் ஆகியவற்றுடனும் இணைத்துக் காணப்பட வேண்டிய ஒன்று ஆகும். இவ்வாறு செய்யாவிடில் மார்க்சியம் பற்றிய குழப்பமான முடிவுதான் நமக்குக் கிடைக்கும். இன்றையப் பண்பாட்டு மார்க்சியர்கள், பிராங்பர்ட் மார்க்சியர்கள் ஆகியோர் அனைவரும் இந்த குழப்பத்தில்தான் ஆழ்ந்திருக்கின்றனர்.

இயங்கியலில் அதுவும் குறிப்பாக இயங்கியல் பொருள் முதல் வாதத்தில் - ஒரு நிகழ்ச்சி அல்லது பொருளில் ஏற்படும் மாறுதல் பற்றிப் பேசப்படுகிறது. மாறுதலுக்குக் காரணமாக இருப்பது ஒரு பொருள் / நிகழ்ச்சியில் உள்ள அக முரண்பாடுகள் ஆகும். இந்த முரண்பாடுகள் போராடுவதன் காரணமாகத்தான் ஒரு பொருள் மாறுதலடைகிறது. ஆக இயங்கியலின் முதல் விதி, வளர்ச்சி / மாறுதல் ஏற்படுவதற்கான காரணத்தைக் கூறுகிறது.

இதனை இயங்கியலின் சாராம்சமான விதி என்று லெனின் கூறுவார். இதிலிருந்து தான் மற்ற விதிகளையும் காண வேண்டும். பண்பு அளவு மாறும் விதி முறையில் இந்த மாறுதல்கள் நிகழ்கின்றன என்பதைக் காட்டுவது. ஒரு மாறுதல் வேகமாக இடம் பெறுகிறதா அல்லது மெதுவாக இடம் பெறுகிறதா அல்லது விட்டு விட்டு இடம் பெறுகிறதா என்பதைக் கூறும் விதி இது. இந்த இரு விதிகளும் இணைந்து இடம் பெறுவது தான் எதிர்மறைகளின் மறுப்பு விதி (Negation of Negation) ஆகும். இது மாறுதல் எந்தத் திசையில் இடம் பெறுகிறது என்பதைக் கூறும் விதி. இதுதான் பிராங்பர்ட் மார்க்சியர்கள் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ள விதியும் ஆகும்.

முதலில் மார்க்ஸ், ஏங்கல்ஸ் இந்த விதி பற்றி என்ன கூறுகிறார்கள் என்று காண்போம். மார்க்ஸ் இது பற்றி நேரடியாகப் பேசாவிட்டாலும், பல இடங்களில் இதனைப் பயன்படுத்துகிறார். ஏங்கல்ஸ் அவருடைய நூல்களில் "டூரிங்கிற்கு மறுப்பு" 'இயற்கையின் இயங்கியல்' என்ற நூல்களில் இந்த விதி பற்றி பல உதாரணங்களுடன் விளக்குகிறார்.

ஒன்றையொன்று மறுத்து வளர்முகமாக ஒன்று இடம் பெறுவதைப் பற்றி இந்த விதி கூறுகிறது. ஹெகல் இதனைக் கருத்து வளர்ச்சிக்குப் பயன்படுத்துகிறார். மார்க்ஸ் இதனைப் பொருள் வளர்ச்சிக்குப் பயன்படுத்துகிறார். ஒரு பொருள் / நிகழ்ச்சி ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுகிறது. இந்த மாறிய நிலையை இன்னும் ஒன்று மறுத்து ஒரு இணைப்பு நிலையை உருவாக்குகிறது. முதல்நிலை அல்லது தன்னிலை அல்லது சுயநிலை என்பது இரண்டாவது நிலை அல்லது எதிர்நிலையில் மறுக்கப்படுகிறது. இந்த எதிர் நிலையானது மறுக்கப்பட்டு மூன்றாம் நிலையான இணைப்பு நிலையாக மாறுகிறது. இந்த இணைப்பு நிலை மறுபடியும் ஒரு புதிய சுயநிலையாக வளர்ச்சியைத் துவக்குகிறது. இந்த மூன்று கட்ட வளர்ச்சி அல்லது மும்மை என்பது இயங்கியலில் முக்கியமான விதி ஆகும்.

இந்த விதியானது வளர்ச்சியின் திசை பற்றிக் கூறுகிறது. மார்க்சியத்தின்படி வளர்ச்சி என்பது கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்திற்குச் செல்கிறது. உதாரணமாக புராதன பொது உடைமை சமூகம், அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், சோஷலிசம் என்று முதல் கட்டமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. பின்னோக்கிச் செல்வதில்லை. இதனை சுருள் போன்ற வளர்ச்சி என்பர். ஏனென்றால் ஒவ்வொரு கட்டமும், அதற்கு முந்தியதை மறுக்கிறது. அதற்கு பின்னர் ஒரு உயர்ந்த கட்டத்தினையே அடைகிறது. சோஷலிசம் என்பது பழைய புராதனமான பொது உடைமை அமைப்பு அல்ல. அதிலிருந்து வேறுபட்டது வளர்ச்சி யடைந்தது மேலானது ஆகும். இது இந்த விதியின் ஒரு அம்சம் ஆகும்.

இந்த விதியில் முரண்பாடுகள் இணைந்திருப்பதும், முரண்பாடுகள் போராடுவதும் இடம் பெறுகிறது. அதாவது முதல்நிலை எதிர்நிலையாக மாறுவதற்கே இந்த விதிதான் காரணம். முரண்பாடுகள் போராடி, முற்றி ஒரு புதியது தோன்றுவது அதன் எதிர் நிலையாகி விடுகிறது. இதற்கு "டூரிங்கிற்கு மறுப்பு" என்ற நூலில் மார்க்ஸ் கூறிய ஒரு உதாரணத்தைச் சுட்டிக் காட்டலாம். காலத்தில் துண்டு துண்டாக இருந்த தனிச் சொத்து முதலாளித்துவச் சொத்தாக மாறுகிறது. முதலாளித்துவச் சொத்து சோஷலிசச் சொத்தாக மாறுகிறது. இதில் நிலை மறுப்பு செயல்படுவதைக் காணலாம். ஏங்கல்ஸ் இதனை பார்லி விதையானது மறுக்கப்பட்டு (முதல் நிலை) செடியாக மாறி (எதிர்நிலை) மறுபடியும் பார்லி தானியங்களாக (இணைப்பு நிலை) இடம் பெறுவதைக் காட்டுகிறார். இதனை பாசிட்டிவிசம் என்று குருட்டுத் தனமாக விமர்சனம் செய்வது தவறு.

இந்த விதியின் மற்றொரு அம்சம், ஒரு கட்டத்திலிருந்து மற்றொரு கட்டத்திற்குச் செல்லும் பொழுது கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. முதல் நிலையில் முரண்பாடுகள் காரணமாக மாறுதல் தோன்றுகிறது. இந்த மாறுதல் உடனடியாக வெளிப்படாது. ஆனால் முரண்படும் சக்திகளின் அளவு படிப்படியாகக் கூடுகிறது. ஒரு கட்டத்தில் இது ஒரு எல்லையை அடைகிறது. அதற்கு மேல் அந்த அளவு பண்பாக மாறுகிறது. அப்பொழுது பழைய பண்புகள் மறைந்து புதிய பண்பு உள்ள பொருள் அல்லது சமூக அமைப்பு தோன்றுகிறது. இப்பொழுது முதல் நிலை மறைகிறது. எதிர்நிலை தோன்றுகிறது. இதில் மறுபடியும் அதே மாறுதல் ஏற்பட்டு மூன்றாம் நிலை அல்லது இணைப்பு நிலை தோன்றுகிறது. இந்த மாறுதல் நிகழும் பொழுது முதல் நிலையிலிருந்து முன்னேற்றம் ஏற்பட்டு எதிர் நிலைக்குச் செல்வது நிகழ்கிறது. இதில் முன்னேற்றம் ஏற்பட்டு இணைப்பு நிலை ஏற்படுகிறது. இது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு முதல் நிலையாக விளங்குகிறது.

இதனைக் கூர்மையாகக் கவனித்தால், துண்டு துண்டாக இருந்த நிலப்பிரபுத்துவச் சொத்து ஒரு நிலை இதற்குள் உள்ள முரண்பாட்டு வளர்ச்சி காரணமாக அது முதலாளித்துவச் சொத்தாக மாறுகிறது. இது எதிர்நிலை. இது சமூகத் தன்மை உடையது. ஆனால் தனிச் சொத்து என்பதுடன் முரண்படுகிறது. இது இணைப்பு நிலையாக சோஷலிசச் சொத்தாக மாறுகிறது. இதில் சொத்து என்ற பண்பு அழிக்கப்படாமல் எல்லாக் கட்டங் களிலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தனிச் சொத்து என்ற பண்பு ஒவ்வொரு கட்டத்திலும் மறுக்கப்படுகிறது. சோஷலிசச் சொத்து என்ற கட்டத்தில் அது பொதுச் சொத்தாக மாறுகிறது. இந்த மூன்றும் நிலையான அடுத்த கட்டத்திற்கு தன்னிலையாக விளங்குகிறது. இங்கு ஒவ்வொரு கட்டத்திலும் சொத்தின் பண்பு மாறுவதையும், பழைய சொத்து என்ற வடிவம் இடம் பெறுவதையும் காண முடிகிறது. ஒவ்வொரு கட்டமும் ஒரு உயர் மாற்றமாக இடம் பெறுகிறது. நிலப் பிரபுத்துவச் சொத்தை விட, முதலாளித்துவச் சொத்து ஒரு உயர் கட்டம், முதலாளித்துவச் சொத்தைவிட சோஷலிசச் சொத்து இன்னுமொரு உயர் கட்டம். இந்த மாறுதல் நிகழும் பொழுது தடையாக உள்ளவை மட்டுமே அழிக்கப்படுகின்றன. எல்லாமே அழிக்கப் படுவதில்லை. இது வளர்ச்சி பற்றிய ஒரு செயல்முறையைக் குறிக்கிறது. இங்கு முதல் நிலை, எதிர் நிலை, இணைப்பு நிலை என்று ஒரு சுழல் போன்ற இயக்கம் இருந்தாலும் இது உண்மையில் சுழல் அல்லது சக்கர வடிவு மாறுதல் அல்லது இது சுருள் வடிவ மாறுதல்தான். துவக்கத்தில் சிறியதாகவும், மேலே செல்லச் செல்ல அகன்று போகும்சுருள் போன்ற வளர்ச்சியே. அதனால் ஒரு கட்டத்திலிருந்து மற்றொரு உயர்ந்த கட்டத் திற்கு இது செல்கிறது. இதுதான் மார்க்சியம் பேசக்கூடிய நிலை மறுப்பின் நிலை மறுப்பு என்ற விதி ஆகும்.

இந்த விதியைத்தான் பிராங்பர்ட் வாதிகள் எடுத்துக் கொள்கின்றனர். அவர்களது விமர்சனக் கோட்பாட்டில் இடம் பெறும் முக்கியமானது, இந்த விதியின் அடிப்படையில் தோன்றிய எதிர்ப்பு இயங்கியல் என்பது (Negative Dialectics) ஆகும். 

இவர்களது விமர்சனமானது வளர்ந்த மேலைய நாடுகளின் சூழ்நிலையில் எழுந்தது. முன்னேறிய முதலாளித்துவத்தின் சீரழிவுத் தன்மையானது. இவர்களை ஒரு அவநம்பிக்கையாளர்களாக மாற்றியது. இதன் விளைவாக முன்னேறிய முதலாளித்துவத்தைக் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கினர். இதற்கு ஹெகலின் இயங்கலையும், சில மார்க்சியக் கருத்துக்களையும் இணைத்துக் கொண்டனர். இவற்றை இணைத்து, எதிர்ப்பு இயங்கியல் என்ற ஒன்றை முன் வைத்தனர்.

எதிர்ப்பு இயங்கியல் என்பது சாராம்சத்தில் இயங்கியலை மறுப்பது ஆகும். மார்க்சியம் இயங்கியல் என்பதைப் பொருள்களின் மாறுதல், தொடர்புத் தாக்கம், என்ற முறையில் பல கோணங்களில் காண்கிறது. முரண்பாடுகளின் மோதல் தான் வளர்ச்சிக்கு அடித்தளம் என்று கூறுகிறது. பொருள்களில் உள்ள அக முரண்பாடுகள் தாம் அடிப்படையானவை என்று மார்க்சியம் கூறுகிறது. இதிலிருந்து பிராங்பர்ட் மார்க்சியர்கள் வேறுபடுகின்றனர். அவர்களது கருத்துக்களுக்கு அடிப்படையாக உள்ளது உலகம் பற்றிய அவர்களது பார்வை ஆகும். ஜெர்மனியின் நாசிசம், அமெரிக்காவின் முன்னேறிய முதலாளித்துவம் ,தொழில் நுட்பம் ஆகியன பல பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. இதனடிப்படையில் அவர்கள் சில முடிவுகளுக்கு வந்தனர். மனித குலத்திற்கு விமோசனம் இல்லை என்பது ஒன்று; பாட்டாளி வர்க்கம் என்பது அதன் புரட்சிகர பாத்திரத்தை இழந்துவிட்டது என்பது இரண்டு; கலாச்சார ரீதியாக வெகுஜன அமைப்புகள் பாட்டாளியையும், உழைப்பாளியையும் ஒன்றாக்குகிறது அல்லது மாற்றுகிறது (Sublation) என்பது மூன்று இவற்றின் அடிப்படையில் பிராங்பர்ட் மார்க்சியர்கள் மார்க்சியத் தத்துவத்தை அணுகுகின்றனர். இதில் குறிப்பாக மார்க்யூஸ் இது பற்றி எழுதியவை கவனிக்கத் தகுந்தவை. இவர்களது கருத்துப்படி பாரம்பரியக் கொள்கை (Traditional Theory) என்பது தர்க்கரீதியான பல கூறுகள் அதில் காரண காரியத் தொடர்புடன் இணைந்து ஒரு வலுவான மையத்தை உருவாக்குகிறது. மார்க்சியம் கூட இத்தகையது தான். விமர்சனக் கோட்பாடு அவ்வாறு அல்லாது அது எல்லாவற்றையும் பிரித்துக் காண்கிறது. விமர்சனம் செய்கிறது. இது இன்றைய பின் நவீனத்துவ வாதிகளுக்கு வசதியான ஒன்று. இந்தப் பொதுப்பார்வையில் இருந்து பிராங்பர்ட் மார்க்சியவாதிகள் இயங்கியலை அணுகுகின்றனர். இயங்கியலில் உள்ள நிலைமறுப்பு என்பதை முழுமையாக அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதில் உள்ள மறுத்தல் அல்லது அழித்தல் என்பதை மட்டுமே மார்க்யூஸ் உயர்த்திப்பிடிக்கிறார். அவர் இயங்கியல் என்பதை ஹெகல், மார்க்ஸ் ஆகியோரிடம் இருந்து பெறுகிறார்.

ஹெகலின் இயங்கியல், மார்க்சின் இயங்கியல் ஆகிய இரண்டிலும் இடம் பெறுவது முரண்பாடுகள் பற்றிய கருத்தாக்கம் ஆகும். ஹெகல் கருத்துக்களின் வளர்ச்சிக்கு அவற்றில் உள்ள முரண்பாடுகள்தாம் காரணம் என்கிறார். மார்க்ஸ் இந்த முரண்பாடுகள் பொருள்களின் வளர்ச்சிக்குக் காரணம் என்கிறார். இதைப் பின்னர் சமூக வளர்ச்சிக்கு மார்க்ஸ் பயன்படுத்துகிறார். ஆனால் மார்க்யூஸ் (பிராங்பர்ட் பள்ளியினர்) முரண்பாடுகளை ஏற்றுக் கொள்வதில்லை. ஏனென்றால் அவர்கள் கருத்துப்படி இன்றைய சமூக அமைப்பில் முரண்பாடுகள் கூர் மழுங்கிவிட்டன என்பதாகும். எனவே மார்க்ஸ் பேசிய முரண்பாடுகள் என்பதிலிருந்து விலகி ஒரு பொருள் மற்றொன்றாக மாறும் பொழுது உள்ள 'நிலை மறுப்பினை' மட்டுமே மார்க்யூஸ் வாதம் வலியுறுத்துகிறது. இவ்வாறு இடம்பெறுவது ஒரு தற்காலிகக் கட்டம் மட்டுமே. நெல்மணி, நெற்பயிராக மாறும் பொழுது நிலை மறுப்பு ஏற்படுகிறது. அது தற்காலிகமானது. முடிவு அது அல்ல. ஒரு கட்ட முரண்பாடுகளுக்குத் தீர்வு ஏற்பட்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லும் நிலையாகும். அதுவே வளர்ச்சிக்கு ஒரு சாதனமாக இருக்க முடியாது. எனவே நிலை மறுப்பினை வளர்ச்சிக்கு ஆதாரமாக ஏற்றுக்கொள்வது என்பது இயங்கியலையே மறுப்பது ஆகும். இது ஒரு பண்டிதத்தன மான விளக்கமேயன்றி வேறில்லை. இது ஒரு வகையான இன்மை வாதம் Nihilism ஆகும். ஆனால் மார்க்யூஸ் போன்றவர்கள் மறுப்பு (Negation) ஒன்றையே முழுவதுமாக (Absolute)காண்கிறார்.

இதனையே வளர்ச்சிக்குரிய ஆதாரமாகக் காண்கிறார். ஆனால் ஒவ்வொரு பொருளும் மறுக்கப்படும் பொழுது அதன் உள்ளேயே ஒரு உடன்பாடான அம்சமும் உள்ளது என்பதை பிராங்பர்ட் மார்க்சியர்கள் காணத் தவறு கின்றனர்.

முதலாளித்துவ அமைப்பின் மாறுதலுக்குக் காரணமாக இருப்பது அதற்கு உள்ளே இருக்கும் முதலாளி தொழிலாளிக்கு இடையிலான முரண்பாடு. மார்க்சியம் இந்த முரண்பாட்டின் முடிவாக உழைக்கும் வர்க்கம் (பாட்டாளி) வெற்றி பெறும் என்று கூறுகிறது. பாட்டாளி வர்க்கம் என்பதன் புரட்சிகரத் தன்மையை மறுக்கும் பிராங்பர்ட் மார்க்சியர்கள், இந்தப் புரட்சிகரப் பங்கினை முதலாளித்துவ அமைப்பிற்கு வெளியே இருக்கும் சக்திகளுக்கு அளிக்கின்றனர். அதாவது பாட்டாளிகள் அல்லாத எந்த வர்க்கமும் புரட்சியைக் கொண்டு வர முடியும் என்று மார்க்யூஸ் கூறுகிறார். இது மார்க்சியத்திற்கே நேர் எதிரானதாகும். மார்க்ஸின் கருத்துப்படி, பாட்டாளி வர்க்கம் அக சக்தியாகவும் விளங்குகிறது; புறசக்தியாகவும் விளங்குகிறது. முதலாளித்துவத்திற்குள்ளாக செயல்படும் பொழுது அகசக்தியாகவும், அதனை எதிர்த்து புதிய பாதை நோக்கிச் செல்லும் பொழுது புற சக்தியாகவும் அது செயல்படுகிறது. இந்த இயங்கியல் தன்மையை மார்க்யூஸ் புறக்கணிக்கிறார். இதற்குக் காரணம், மார்க்யூஸ் மொத்த அமைப்பினையே மறுப்பதாகும். இது அழிவு, அராஜகம், கட்டவிழ்த்தல், பல குரல் என்ற பல்வேறு திசைகளில் வெளிப்படுகிறது.

இவர்களது செயல்பாடு பண்பாட்டுத் தளத்தைப் பற்றியது. பண்பாட்டு மார்க்சியம் என்று ஒன்றை உருவாக்கும்பொழுதே ஒன்று தெளிவாகிறது. இவர்கள் பண்பாட்டு விஷயங்களை உயர்த்திப் பிடிக்கின்றனர் என்பது தெளிவு. பிராங்பர்ட் மார்க்சியமும் இதைத்தான் செய்கிறது. அப்படியென்றால் மார்க்சியத்தில் அடிப்படை மார்க்சியம் என்று ஒன்று இருக்கிறதா என்று கேள்வி எழுகிறது. உண்மையில் மார்க்சியத்தை அவ்வாறு பிரித்துக் காண்பது சரியல்ல; மார்க்சியம் என்பது ஒரு ஒருங்கிணைப்பினைப் பெற்ற தத்துவம். அதன் சாராம்சமான கருத்து அடிப்படை, மேற் கோப்பு என்ற இரண்டையுமே உள்ளடக்கியுள்ளது. அடிப்படை என்பது மேற்கோப்பில் பிரதிபலிக்கிறது. மேற்கோப்பு அடிப்படயின் மீது எதிர்வினை புரிகிறது. ஆனால் அடிப்படைக்குத்தான் தீர்மானிக்கும் சக்தி உண்டு. மேற்கோப்பிற்கு அல்ல. எனவே இரண்டையும் இணைத்தே காணவேண்டும். ஆனால் பண்பாட்டு மார்க்சியர்கள் மேற் கோப்பினை மட்டுமே உயர்த்திப் பிடிப்பதால் அவர்கள் பல நிகழ்வுகளைப் பற்றித் தவறான முடிவுகளுக்குச் செல்கின்றனர். உதாரணமாக, இவர்கள் சாதி மேல் கட்டுமானம் பொருளாதாரம் அடிக்கட்டுமானம் என்ற வறட்டு மார்க்சிய வாதத்தை உடைக்க வேண்டும் என்கின்றனர். இதிலிருந்து அவர்கள் எஸ்.ஏ. டாங்கே, இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் ஆகியோரைப் பார்ப்பனியச் சார்பு மார்க்சியர்கள் என்று விமர்சனம் செய்கின்றனர். இது முறையான விமர்சனம் அல்ல. மேல் கட்டுமானம் அடிக் கட்டுமானம் என்று கூறுவதே வறட்டு மார்க்சியம் என்றால் மார்க்ஸ் கூறிய எல்லாமே வறட்டுத்தனம் என்று ஆகிவிடும். இது மார்க்சியத்தை மறுப்பதில்தான் முடியும்.-இந்தப்பகுதி ரெனர் விவாதம் -எனும் நூலின்    எஸ்.தோதாத்ரி மற்றும் தேவ.பேரின்பன் ஆகியோரின் சில பகுதிகளும் எனது சில கருத்துகள் இணைந்தவையே இதனை இன்னும் செழுமைப்படுத்தி பின்னர் எழுதிகிறேன் தோழர்களே....

  


தொடர்புடைய கட்டுரைகள்:

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

CJP மற்றும் மார்க்சிய வர்க்க அரசியல் ஆய்வு-ஒலி வடிவில்

  Cockroach Janta Party (CJP) என்பது 2026-ஆம் ஆண்டில் வேலையற்ற இளைஞர்களைக் குறித்தான நீதிமன்ற விமர்சனத்திற்கு எதிராக உருவான ஒரு நையாண்டி இய...

செய்தியை சார்ந்த அலசல்