செப்டம்பர் 12 தியாகிகள் தின உரை 12.09.26

செப்டம்பர் 12 தியாகிகள் தின உரை 12.09.26

அன்பார்ந்த தோழர்களே செவ்வணக்கத்தை செழுத்தி எனது உரையைத் துவங்குகிறேன்.

இன்று செப்டம்பர் 12ஆம் நாள் தியாகத் தோழர் பாலன் அவர்களின் நினைவுநாள். இந்த நாளை இந்தியாவில் சுதந்திரத்துக்காகவும் இந்திய உழைக்கும் மக்கள் மற்றும் தலித் மக்களின் விடுதலைக்காக ஆதிக்க சக்திகளையும் அரசின் அடக்குறையையும் எதிர்த்துப் போராடி உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூர்ந்து தியாகிகள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் இங்கு கூடி தோழர் எல்.அப்பு மற்றும் பாலன் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து அவர்களின் தியாகத்தை நினைவுகூறுகிறோம்.

எல்.அப்பு, பாலன், சீராளன், தமிழரசன் போன்ற என்னற்ற கம்யூனிசப் போராளிகளும் ஏராளமான விவசாயிகளும், தொழிலாளர்களும், மாணவர்களும், இளைஞர்களும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடி உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகத்துக்கு என்ன பலன் கிடைத்தது சிந்தித்துப் பாருங்கள். இந்தியாவில் எப்படி தியாகங்கள் நடைபெற்றதோ அதே போலவேதான் ரஷ்யாவிலும் போல்ஷ்விக் கம்யூனிஸ்டுகளும், ரஷ்ய தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒன்றுபட்டுப் போராடி பல லட்சக்கணக்கானவர்கள் உயிர்தியாகம் செய்தார்கள். அவர்களின் தியாகத்துக்கு பலன் கிடைத்தது. அவர்கள் பாட்டாளி வர்க்க அரசை உருவாக்கி அனைத்து மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், குடியிருக்க வீடுகள், மற்றும் பெண்ணடிமைத்தனத்தை ஒழித்து பெண்களை விடுதலை செய்தார்கள். அவர்களது சாதனையோடு வேறு எந்த நாட்டோடும் ஒப்பிட முடியாது. அவர்களால் அத்தகைய சாதனையை நிகழ்த்தியபோது இங்குள்ள நாமும் நம்மை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு செயல்பட்ட பல கம்யூனிஸ்டுகளையும் பலிகொடுத்துவிட்டு இப்போதும் வறுமையிலும் பட்டினிச் சாவிலும் வேலையில்லாத் திண்டாத்தையும் எதிர்நோக்கொண்டிருக்கும் இழிவான நிலையிலேயே வாழ்ந்துவருகிறோம் இந்த இழிவான நிலை தொடர்வதற்கு என்ன காரணம் என்று நாம் சிந்தித்துப் பார்த்தது உண்டா? நமது தியாகத் தலைவர்கள் உட்பட நாம் மக்களுக்காகப் பல போராட்டங்களை நடத்தினோம். ஆனால் அரசு ஒருமுறை நம்மை தாக்கிவிட்டால் நாம் அதனை எதிர்கொள்ள முடியாமல் நமது நம்பிக்கையை இழந்து சோர்ந்து போகிறோம். நாம் ஒன்றுபடுவதற்கு எதிராகப் பலக்குழுக்களாக பிளவுபட்டுள்ளோம். நமது தியாகத் தலைவர்களின் தியாகத்தையெல்லாம் வீணடித்துக்கொண்டுள்ளோம். இதற்கு என்ன காரணம். நாம் என்ன தவறு செய்தோம், இப்போதும் என்ன தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டாமா? தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தினால் மட்டும் போதாது நாம் தொடர்ந்து தோல்வியடைவதற்கு என்ன காரணம், நாம் தொடர்ந்து பிளவுபடுவதற்கு என்ன காரணம் என்பதை இந்த நாளில் ஒன்றுகூடியுள்ள நாம் சிந்திக்க வேண்டும். அதுவே நமது தியாகத் தலைவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.

சர்வதேச அளவில் குருஷேவின் திருத்தல்வாதம் உருவானபோது அதனை எதிர்த்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சிப் போராடும்போதும் அந்த தத்துவப் போராட்டத்தை உன்னிப்பாக கவனிக்காமல் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் உட்கட்சிப் போராட்டம் துவங்கியது. உட்கட்சிப் போராட்டம் என்றால் உட்கட்சி சித்தாந்தப் போராட்டம் என்ற புரிதலோடு நடத்தி கருத்தொற்றுமைக்கு வருவதற்கு மாறாக கட்சியை அதன் தலைவர்கள் பிளவுபடுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து உருவான சிபிஎம் கட்சித் தலைவர்களும் குருஷேவின் திருத்தல்வாதத்தையே ஏற்றுக்கொண்ட பொழுது கட்சியிலுள்ள புரட்சியாளர்கள் எதிர்த்த போதும் உட்கட்சி சித்தாந்தப் போராட்டத்தை நடத்தி ஒரு ஒன்றுபட்ட முடிவுக்கு வராமல் கட்சியை தலைவர்கள் பிளவுபடுத்தினார்கள்.

அதற்குப் பிறகு தோன்றி எம்எல் கட்சியிலும் அதன் அழித்தொழிப்பு கொள்கையை எதிர்த்தும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் விமர்சனம் குறித்தும் எம்எல் கட்சித் தலைமையானது உட்கட்சி சித்தாந்தப் போராட்டத்தை நடத்த தவறியது. தோழர் சாருமஜும்தாரின் மரணத்திற்குப் பிறகு எம்எல் கட்சி பலக் குழுக்களாகப் பிளவு பட்டது. அப்போதும் சித்தாந்தப் போராட்டத்தை தலைவர்கள் நடத்தவில்லை. பிறகு பல குழுக்களிலும் கருத்து வேறுபாடுகள் தோன்றி பல சிறுகுழுக்களாகச் சிதறுண்டு போனார்கள். ஆனாலும் இந்த தியாகிகள் நினைவு நாளில் மட்டும் பெயரளவுக்கு சடங்குத்தனமாக சில குழுக்கள் ஒன்றுசேர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி சுய திருப்தி அடைகிறார்கள்.

இந்த வரலாற்றிலிருந்து நாம் புரிந்துகொள்ளவேண்டியது என்ன?

1. இந்திய பொதுவுடமையாளர்கள் ஒருபோதும் உட்கட்சி சித்தாந்தப் போராட்டத்தை நடத்தவில்லை.

2. சிலசமயம் உட்கட்சிப் போராட்டத்தை நடத்தினாலும் அங்கெல்லாம் அற்ப பிரச்சனைகளையே விவாதித்தனர். சித்தாந்த அடிப்படையிலான விவாதங்களை நடத்தியதில்லை.

3. அவர்கள் சித்தாந்தப் போராட்டத்தை நடத்த வேண்டுமானால் அவர்களுக்கு மார்க்சிய தத்துவ அறிவு வேண்டும் ஆனால் அவர்களிடம் மார்க்சிய அறிவு குறைபாடே இருந்தது. மேலும் மார்க்சியத்தைப் பயன்படுத்தி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற உணர்வே தலைவர்களிடம் இல்லை.

4. மார்க்சிய அடிப்படை அறிவை இவர்கள் அணிகளுக்கோ மக்களுக்கோ ஊட்டவே இல்லை. அணிகளையும் மக்களையும் தலையாட்டி பொம்மைகளாகவும் ஆட்டுமந்தை கூட்டங்களாகவுமே வைத்திருந்தார்கள்.

இந்த சித்தாந்த பலவீனத்தாலேயே கம்யூனிசத் தலைவர்கள் பல தியாகங்கள் செய்தும் அதற்கான பலனை அடைய முடியவில்லை.

ஒரு தனி மனிதனது மூளை சரியாக வேலை செய்தால் மட்டுமே அவனால் சிறப்பாக சிந்திக்கவும் செயல்படவும் முடியும். மூளை சரியாக வேலை செய்யவில்லை என்றால் அவனால் சரியாக சிந்திக்கவோ செயல்பட முடியாது உயர்ந்த கட்டமான அந்த மனிதன் பைத்தியக்காரனாகவும் மாறும் நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதுபோலவே ஒரு பாட்டாளிவர்க்க அமைப்புக்கு மார்க்சிய தத்துவ பலம் மிகவும் அவசியமாகும். ஆகவேதான் லெனின் புரட்சிகரமான தத்துவம் இல்லாமல் ஒரு புரட்சிகர இயக்கம் இல்லை என்று சொல்லி தத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். காரல்மார்க்சும் புரட்சிகரமான தத்துவம் மக்களிடம் சென்றால் அது ஒரு பொருள்வகை சக்தியாக மாறும் என்றார். ஆனால் நாமும் நமது தலைவர்களும் மார்க்சிய ஆசான்களது போதனைகளை பின்பற்றி நமது மார்க்சிய விஞ்ஞான அறிவை வளர்த்து அதனை நமது நடைமுறை செயல்பாட்டுக்குப் பயன்படுத்தியிருந்தால் இந்த நாட்டில் நாம் வறுமை, வேயில்லாத் திண்டாட்டம், சாதி தீண்டாமை கொடுமை, பெண்ணடிமைத்தனம், சுரண்டல் போன்ற கொடுமைகளை ஒழித்து மக்கள் அனைவரும் தோழர்களாக ஒன்றுசேர்ந்து உன்னதமான வாழ்வை அடைந்திருக்கலாம். ஆகவே நமது வாழ்வை சிறக்க புதியதோர் பொன்னுலகை படைக்க மார்க்சியத்தை கற்று அதனை நடைமுறையில் பயன்படுத்துவோம் என்று இந்த தியாகிகள் நாளில் சபதமேற்ப்போம். ஆகவே தோழர்களே கம்யூனிஸ்டுகளாகிய நாம் பல தவறுகளை செய்துள்ளோம். இப்போதும் தவறுகள் செய்துகொண்டிருக்கிறோம். நமது தவறுகளை வெளிப்படையாக சுயவிமர்சனம் செய்துகொண்டு நமது தவறுகளை களைந்து நம்மை மாற்றிக்கொள்ளாதவரை நம்மால் மக்களுக்கு எவ்விதமான பயனும் இல்லை என்பதை நாம் உணர்ந்தால் மட்டுமே நாம் கம்யூனிஸ்டாக ஆக முடியும்.. ஆகவே இந்த தியாகிகளின் நினைவுநாளில் நமது தவறுகளை திருத்திக்கொள்வோம் என்று உறுதிமொழி ஏற்ப்போம். அதுதான் தியாகிகளுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.

கம்யூனிஸ்டுகளின் லட்சியங்களை மக்களிடம் கொண்டுசென்று பிரச்சாரம் செய்வோம்.

  • உற்பத்திச் சாதனங்களை சமூகமயமாக்குவது. அதாவது முதலில் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களை தனியாரிடமிருந்து பறிமுதல் செய்து பொதுச் சொத்தாக மாற்றுவது.
  • லாபத்தின் அடிப்படையிலான உற்பத்தியை ஒழித்துவிட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தியை வளர்ப்பது.
  • மத நிறுவனங்களிடமுள்ள தேவைக்கு அதிகமான சொத்துக்களை பறிமுதல் செய்து மக்களின் உடமையாக மாற்றி அதனை மக்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பயன்படுத்துதல்.
  • முதலாளிகளிடமுள்ள அரசியல் அதிகாரம் ஒழிக்கப்பட்டு பரந்துபட்ட மக்களிடம் அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படும்.
  • கிராமங்களில் நிலச்சீர்திருத்தம் செய்யப்படும். பெரும் பண்ணையார்களிடமிருந்து நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மக்களின் சொத்தாக மாற்றப்பட்டு அரசுக் கூட்டுப்பண்ணையை நிறுவும். அதன் பலன்கள் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
  • சிறு மட்டும் நடுத்தர விவாசிகளிடம் கூட்டுப் பண்ணையின் அவசியத்தை விளக்கி அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் கூட்டுப் பண்ணைகளை நிறுவி சோசலிச அரசானது விவசாயிகளுக்கு நவீன கருவி, உரங்கள், விதை பொருட்களை வழங்கி விவசாயிகளுக்கு உதவி செய்யும்.
  • கூட்டுப்பண்ணையில் விளைவித்த பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க சோசலிச அரசு ஏற்பாடு செய்யும்.
  • விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சோசலிச அரசாங்கமே கூட்டுறவு வணிக நிறுவனங்களை அரசே நிறுவி கொள்முதல்செய்யும். அதன் மூலம் சோவியத்து அரசானது உற்பத்தியையும் விநியோகத்தையும் மக்களின் நலனிலிருந்து கட்டுப்படுத்தும்.
  • அனைத்து மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி ஆகியவற்றை வழங்குவதற்கான பொறுப்பை சோசலிச அரசே மேற்கொள்ளும்.
  • சோசலிச அரசானது தொழில்நுட்பத்தை வளர்க்கும். அதன்பயனாக வேலைவாய்ப்பை குறைப்பதற்கு மாறாக அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்கி தொழிலாளர்களின் வேலை நேரத்தை குறைத்து அவர்களின் சம்பளத்தை உயர்த்தும்.
  • வேலை வாய்ப்பு உரிமையை மக்களின் உரிமையாக அறிவித்து சோசலிச அரசாங்கம் செயல்படும்.
  • சோசலிச அரசு ஒவ்வொரு மனிதர்களுக்கும் வேலைசெய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து அவர்கள் சுதந்திரமாகவும் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு ஏற்பாடு செய்யும்.
  • சமூகத்தில் நிலவும் பிற்போக்கு கருத்துக்கள், சிந்தனைமுறைகள், பழக்கவழக்கங்களை ஒழிக்க விஞ்ஞானப்பூர்வமான கல்வியை அனைத்து மக்களுக்கும் சோசலிச அரசு வழங்கும்.
  • நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மக்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபடுவதற்கான சூழலை சோசலிச அரசு உருவாக்கிக் கொடுக்கும்.
  • பெண்கள் மீது தாக்குதல் தொடுப்பதை கண்காணிப்பதற்கு கண்கானிப்பு குழுக்களை அமைத்து கண்கானித்து தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பே அதனை தடுத்து நிறுத்துவதற்கு மக்களைத் திரட்டி சோசலிச அரசு நடவடிக்கை எடுக்கும்.
  • சாதித் தீண்டாமை கொடுமைகளில் ஈடுபடுபவர்களை கண்கானித்து அவர்களை எச்சரித்து தீண்டாமை கொடுமைகள் நடக்கவிடாமல் தடுத்து தலித் மக்களை பாதுகாப்பதற்கான குழுக்களை உருவாக்கி சோசலிச அரசு செயல்படும்.
  • பெண்களுக்கும் ஆண்களைப் போல் சமூக உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பதோடு அவர்களுக்கும் ஆண்களுக்கு சமமான சம்பளம் கிடைக்க சோசலிச அரசு ஏற்பாடு செய்யும்.
  • பெண்கள் செய்யும் வீட்டு வேலைகள் சமயல், துணி துவைத்தல் போன்ற பணிகளை நிறுவனங்களின் மூலம் செய்து பெண்களை வீட்டு வேலைச் சுமையிலிருந்து சோசலிச அரசு விடுவிக்கும்.
  • குழந்தைகளையும் வயதானோர்களையும் பராமரிக்கும் பொறுப்பை சோசலிச அரசே ஏற்றுக்கொண்டு செயல்படும்.
  • அரசியல் அதிகாரம் கீழிருந்து செயல்படும் விதமாக மாற்றப்படும். அதாவது மக்கள் நிர்வாக குழுக்கள் கீழிருந்து சட்ட திட்டங்களை விவாதித்து மேல்மட்ட மக்கள் நிர்வாகக் குழுவுக்கு அனுப்பி சட்டம் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
  • சோசலிச அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பதற்கு உழைக்கும் மக்களுக்கு உரிமை வழங்கப்படும். அதற்கு பதில் சொல்லவேண்டியது மக்கள் நிர்வாகக் குழுவினரின் கடமையாகும்.
  • மக்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்களை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் தவறு செய்தால் எந்த நேரத்திலும் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்.
  • தவறு செய்பவர்கள் மற்றும் சமூக விரோதிகளை மக்கள் முன்பு வெளிப்படையாகவே விசாரிக்கப்பட்டு பெரும்பான்மையான மக்களின் சாட்சியத்தின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப்படும்.
  • தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்படும். தேசிய இனங்கள் பிரிந்துபோக விரும்பினால் ஒரு தேர்தலை நடத்தி பெரும்பான்மையான மக்கள் பிரிந்துபோக விரும்பினால் அந்த தேசம் பிரிந்துபோவதற்கு உரிமை உண்டு என்பதை சோசலிச அரசு ஏற்றுக்கொள்ளும்.
  • மதம் அரசிடமிருந்து முற்றிலும் துண்டிக்கப்படும். மத நம்பிக்கை என்பது தனி மனிதனின் உரிமையாகும். தனி மனிதனின் மத நம்பிக்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. அதே நேரத்தில் ஒரு தனி மனிதர் மதத்தைப் பரப்புவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • சுரண்டலை ஆதரித்தோ மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் பிரச்சாரம் மற்றும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படும். தடையை மீறி செயல்படுபவர்களை மக்கள் நீதிமன்றம் தண்டிக்கும்.
  • மக்களிடையே உள்ள பிற்போக்கு கருத்துக்களையும் சிந்தனை முறைகளையும் பழக்கவழக்கங்களையும் போக்கி விஞ்ஞான அடிப்படையிலான கருத்துக்களையும் சிந்தனை முறைகளையும் பழக்கவழக்கங்களையும் வளர்ப்பதற்கு தேவையான மார்க்சிய கல்வி நிலையங்களை தெருவெங்கும் உருவாக்கி வளர்த்து மக்களை விஞ்ஞான சிந்தனையாளர்களாகவும் உழைக்கும் வர்க்கப் பண்பாளர்களாகவும் வளர்ப்பதற்கு கம்யூனிஸ்டுகள் பாடுபட வேண்டும்.

இத்தகைய கொள்கைகளை முதலாளித்துவ பிற்போக்கு அரசியல்வாதிகளோ, பிற்போக்கு முதலாளித்துவ ஆட்சியாளர்களோ மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் கார்ப்பரேட் முதலாளிகளோ ஏற்றுக்கொண்டு செயல்படுத்த மாட்டார்கள். ஆகவே உழைக்கும் மக்கள் தங்களது சொந்த முயற்சியாலேயே இத்தகைய மக்கள் நலக் கொள்கையை செயல்படுத்த வேண்டும். அதற்காக சில அரசியல்தலைவர்களை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது அது தலைமை வழிபாட்டு முறையாகும். அதற்காக ஒரு கட்சியை மட்டும் நம்பக்கூடாது. ஏனெனில் ஒரு கட்சியால் மட்டும் இதனை சாதித்துவிட முடியாது. ஆகவே மக்கள் அவர்களின்சொந்த முயற்சியின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். அதாவது மக்களின் கூட்டு முயற்சியின் மூலமே இதனை சாதிக்க முடியும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே இந்த கொள்கைகளை மக்களிடம் தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் பிரச்சாரம் செய்து இந்தக் கொள்களை ஏற்றுக்கொள்பவர்களை ஓர் அணியில் திரட்ட வேண்டும் மக்களை அமைப்பாக்கி மக்களோடு இணைந்து போராடவேண்டும் என்பதே இன்றைய கம்யூனிஸ்டுகளின் முதன்மையான பணியாகும். புரட்சி பற்றி மார்க்சியம் நமக்கு போதிப்பது என்ன? 1. பிரச்சாரம் அதன் மூலம் அமைப்பை உருவாக்குவது. 2. கிளர்ச்சி, இதன் மூலம் பொது மக்களை அணிதிரட்டுவது. 3. செயல் அல்லது ஆணை. இதன் மூலம் புரட்சி செய்து முதலாளித்துவ அரசை வீழ்த்தி பாட்டாளி வர்க்க அரசை உருவாக்க வேண்டும் என்கிறது மார்க்சியம். இந்தியாவில் சமூக மாற்றத்தை ஒரு புரட்சியின் மூலம் சாதிப்பதற்கான புரட்சிகரமான கட்சி இல்லாத இன்றைய நிலையில் அத்தகைய புரட்சிகரமான கட்சியை கட்டுவதற்கான பிரச்சாரக் கட்டத்திலேயே தற்போது இயக்கம் உள்ளது. இதனைப் புரிந்துகொண்டு கம்யூனிஸ்டுகளின் லட்சியத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டியதே இன்றைய முதன்மையான கடமையாகும். ஆகவே தோழர்களே நாம் மார்க்சியத்தை கற்று மார்க்சிய சிந்தனையாளர்களாக நம்மை வளர்த்துக்கொள்வோம். மக்களையும் மார்க்சிய சிந்தனையாளர்களாக வளர்ப்போம். மார்க்சியத்தின் அடிப்படையில் சமூகத்தைப் புரிந்துகொண்டு சமூகத்தை மாற்றுவதற்கான வழிமுறைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்து அணிதிரட்டி அமைPப்பாக்குவோம். அதன் அடிப்படையில் மக்களோடு இணைந்து போராடி ஒரு பொன்னுலகத்தைப் படைப்போம் என்று தியாகிகளின் நினைவு நாளில் சபதம் ஏற்போம்.

***************************.


தொடர்புடைய கட்டுரைகள்:



***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

செப்டம்பர் 12 தியாகிகள் தின உரை 12.09.26

செப்டம்பர் 12 தியாகிகள் தின உரை 12.09.26 அன்பார்ந்த தோழர்களே செவ்வணக்கத்தை செழுத்தி எனது உரையைத் துவங்குகிறேன். இன்று செப்டம்பர் 12 ஆம் ...

செய்தியை சார்ந்த அலசல்