கே.ஆர் (மருதமுத்து கே. ராதாகிருஷ்ணன்)-யார்?

காரைக்கால்,
31/8/26
நண்பர்களே,
எனது வாழ்வில் அனைத்திலும் மேலான முக்கியத்துவம் வாய்ந்த தருணம் இது.
1970 களின் இறுதியிலும், 1980களின் தொடக்கத்திலும் இதே போன்ற முக்கியத்துவம் வாய்க்கப்பெற்ற ஒரு காலகட்டத்தை நான் எதிர்கொண்டேன்.
அப்போது நான் ஒரு முடிவு எடுத்தேன்---
நக்சல்பாரி இயக்கத்தின் மக்கள் யுத்தக் கட்சியில் சேர்ந்து அதன் தலைமையின் முடிவுகள் அனைத்துக்கும் கட்டுப்பட்டு உலக வாழ்வில் எனக்குரிய மனைவி மக்கள், பட்டம் பதவி (பேராசிரியர் பதவி), பொருளாதார வசதி, மற்றும் அனைத்திலும் மேலான உயிர் மீதான பற்றுதல் ஆகிய அனைத்தையும் துறந்து நீதிக்கான போராட்டத்திற்கு என்னை நானே அர்ப்பணித்துக் கொள்வது என்பதே அந்த முடிவு.
அந்த முடிவை அன்று நான் மேற்கொண்டபோது அப்போது என் தலைமையை ஏற்க முன்வந்து அன்று தொட்டு இன்றுவரை என்னுடன் பயணித்து வருபவர் ஒரே ஒருவரே.
அவர் தான் “போர்க்கொடி” என்று நான் பெயர் சூட்டிய எனது உயிரினும் மேலான வாழ்க்கைத் துணை வாலன்டைன் ராணி ஆவார்.
அன்று அவர் வயது 21 மட்டுமே!!!
அவருடன் கூட வேறு சில உழைக்கும் மக்களைச் சேர்ந்த எஸ்.சி, மற்றும் பி.சி. சாதியினரும் அதே முடிவை ஏற்றுத் முழுமையாக எனது தலைமையில் செயல்பட முன்வந்தனர்.
வேறு பல படிப்பாளிகளும் பிறரும் ஆதரவு நிலையில் மட்டுமே செயல்பட இயலும் என்ற கூறி அவ்வப்போது உதவும் நிலைப்பாட்டை மேற்கொண்டனர்.
அவர்களது பங்கெடுப்பு எனது தலைமையிலான அமைப்பின் செயல்பாடுகளுக்கும் அதன் மூலம் நான் முன்னெடுத்த சில முக்கியத்துவம் வாய்ந்த களப் போராட்டங்களுக்கும் மறைமுகமாகவேனும் பல வகைகளில் உதவிகரமாக அமைந்தது.
ஆனாலும் அக்காலத்திய தமிழகத்தில் இருந்த நக்சல்பாரி இயக்கம் என்பது சாராம்சத்தில் உன்னதமான இலக்குகள் கொண்ட ஒரு தற்கொலை இயக்கமாகவே இருந்து வந்துள்ளது.
(அது பேச்சளவில் மட்டும் பொதுவுடைமை சார்ந்த தன்மை கொண்டதாக இருக்கவில்லை—இன்றைய வறட்டு மார்க்சியர்கள் போல்)
இந்த உண்மை அன்று எனக்கு உறைக்கவில்லை.
காரணம் அன்று எனக்குள் உணர்வு தான் மேலோங்கி நின்றது. அறிவு பலவீன நிலையில் இருந்தது.
இந்தச் சூழலில் அன்றைய தமிழகத்தில் மக்கள் யுத்தக் கட்சியில் தலைவராக இருந்தவர் ஏ.எம்.கோதண்டரராமன்.
ஏ.ஐ. கூறுகிறது (உறுதி செய்யப்பட்டுள்ள ஆதாரத்துடன்)---
“The national-level Communist Party of India (Marxist–Leninist) People's War (commonly known as the People's War Group or PWG) was officially founded in 1980 by Kondapalli Seetharamaiah in Andhra Pradesh. It was formed by merging his Andhra Committee with the prominent Kothandaraman grouping based in Tamil Nadu.
In the early 1980s, the chief leader of the Communist Party of India (Marxist–Leninist) People's War unit in Tamil Nadu was Kothandaraman.
அதாவது—“அனைத்திந்திய அளவிலான மக்கள் யுத்தக் கட்சி என்பது அன்று கொண்டாபள்ளி சீதாராமய்யா அவர்களின் தலைமையைக்கொண்டிருந்தது. அதில் கோதண்டராமன் தலைமையிலான நக்சல் பிரிவு தன்னை இணைத்துக் கொண்டது. இது நடந்தது 1980ல்.” (மூலம்—Marxist Internet Archive)
அடுத்து ஹிந்து ஏடு தரும் தகவல்---
“Following a deadly Naxalite hand grenade attack in Tirupattur on August 6, 1980, which killed a police inspector and multiple constables, Chief Minister M. G. Ramachandran launched a massive state-wide police crackdown. Named Operation Ajantha, this counter-insurgency initiative led to the deaths or arrests of most top-tier local leaders, severely dismantling the party's network in the state by the mid-1980s”
ஆம், அன்றைய தமிழகத்தில் என்னைப் போன்ற பலரின் முன்னெடுப்புகளில் விளைவாக மக்கள் மத்தியில் ஆதரவைப் பெருக்கிக் கொண்டு சாதிகளை ஒன்றுபடுத்தி மிகப் பெரிய போராட்ட அலையை உருவாக்கிய மக்கள் யுத்தக் கட்சியில், தோழர் பாலன் முக்கிய பங்காற்றியுள்ளார்.
அப்போது உடனடியாக “புரட்சித் தலைவர்” எம்.ஜி.ஆரின் அரசு கொடிய சட்டவிரோத என்கவுண்டர் கொலைகளை அரங்கேற்றி சர்வாதிகார முறைகளில் ஒடுக்கலாயிற்று.
அந்த அரச பயங்கரவாதத்தைத் தனது தலைமையில் நிகழ்த்தி வெற்றி கண்ட காவல் துறைக் கயவன் எம்.ஜி.ஆரின் பேரன்புக்கும் முழு நம்பிக்கைக்கும் உரிய அதிகாரி வால்டர் தேவாரம் ஆவார்.
இவர் தான் தோழர் தியாகுவை 1969ல் அக்காலத்திய நக்சல் இயக்கத்தின் அன்றும் தலைவராக இருந்த ஏ.எம்.கோதண்டராமன் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்த என்னை 1970ல் ஒருநாள் அதிகாலையில் அதிரடியாக வீடு புகுந்து முறைசாரா அரெஸ்ட் செய்து படு பயங்கரமாக மிரட்டியவரும் ஆவார்.
1969ல் கும்பகோணத்தில் நான் மாணவர் தியாகுவைச் சந்திக்கும் முன்பே திருச்சி பெரியார் அரசினர் கல்லூரியில் உதவிப் பேராசிரியாக இருந்த என்னோடு அரசியல் தொடர்பு கொண்டு எனது இனிய நண்பராகவும், தோழராகவும் திகழ்ந்து வந்தவர் ஆனந்த ரங்கன் என்பார்.
அவர் அன்றே நக்சல் இயக்கத் தலைமையுடன் தொடர்பில் இருந்தார். எனவே அவர் மூலம் நான் ஏ.எம்.கே தொடர்புக்கு என்னால் வழி செய்யமுடிந்தது.
(ஆனந்தரங்கனுக்கு என்னைப் பற்றிய முழுமையான புரிதல் இருந்தது. எனவே தான் இது சாத்தியம் ஆனது.)
இதனைத் தொடர்ந்து ஏ.எம்.கே-விடம் தன்னை ஒப்படைத்துக்கொண்ட தியாகு தூக்குதண்டனை பெற்று அது பின்னர் ஆயுட்கால தண்டனையாக மாற்றப் பட்ட பின்னரும் எனது அளவுகடந்த ஆவேச உணர்வு சற்றும் தணியாத மனநிலையில் நான் மீண்டும் மக்கள் யுத்தக் கட்சியில் இணைந்து செயல்படலானேன்.
இந்நிலையில் 1980களின் தொடக்கத்தில் எனது தலைமையில் மீண்டும் தொடங்கப் பட்டு என்னால் வழி நடத்தப் பட்ட இயக்கம் குறித்த சில முக்கிய தகவல்கள் வருமாறு---
அன்று கொலையுண்ட தியாகியான இளைஞர் தருமபுரி பாலனைப் போற்றி எனது அமைப்பின் ஆதரவாளரும் கவிஞரும், பாடகருமான குடந்தை ஜோசப் நவநீதன் இயற்றிப் பாடிய அற்புதமான பாடல் ஒன்று இன்றும் எனது காதுகளில் ஒலிக்கிறது. “ஏழைகள் நெஞ்சிலே எரிகின்ற தீபமே” என்று தொடங்கும் அவரது பாடலும், “ஏ தோழனே, ஏழையில் பாலனே, இந்திய மண்ணிலே சிந்திய ரத்தமே,” என்ற எனது பாடலும் என்றென்றும் மறக்கமுடியாதவை ஆகும்.)
இந்நிலையில்தான் அன்று (1980 முதல்) மீண்டும் செயல்பட்டு வந்தேன்.
இம்முறை நாங்கள் சாதியுணர்வை முற்றாக நீக்கிய தலைமைச் சக்திகளை கிராமப் புற அளவில் வளர்த்தெடுத்து அதே மனநிலையை உழைக்கும் மக்கள் மத்தியிலும் உருவாக்குவதில் வெற்றி கண்டு பல ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களையும் மேற்கொண்டோம்.
அப்போதுதான் தலைமையின் முக்கியத்துவத்தையும், அரசியல் புரிதலின் அவசியத்தையும், கடுமையான கட்டுப்பாட்டு உணர்வையும் நான் முழுமையாக உணரலானேன்.
அதை என் அளவில் கும்பகோணம் வட்டாரத்தில் கடைப்பிடிக்கவும் தொடங்கினேன்.
அதன் விளைவாகவே அன்று என்னை முழுமையாக நம்பி ஏற்று சகலவற்றையும் தியாகம் செய்யத் தயாராக என் மனைவி போர்க்கொடி உள்ளிட்ட ஒரு பிரிவினர் முன்வந்திருந்தனர்.
ஆனால்—
தமிழகம் முழுதும் அரசியல் பயிற்சி தர வேண்டும் என்ற உத்தரவு மூலம் அன்று தலைவர் ஏ.எம்.கே என்னை பரமக்குடி முதல் தருமபுரி வரை சென்று பணியாற்றுமாறு அனுப்பி வைத்தார்.
நானும் அதற்கு மறுப்பின்றிக் கீழ்ப்படிந்தேன்.
எனது இடத்தில் ஏ.எம்.கே-வால் நியமிக்கப்பட்டவர் மூத்த நக்சலைட் தமிழ்வாணன் என்பார்.
ஆனால் என் தலைமையில் முழு அர்ப்பணிப்போடு இயங்கிவந்த குடந்தை வட்டாரத் தோழர்களான ஞானப் பிரகாசம் (வன்னியர்), அவரது மனைவி சரோஜா (எஸ்.சி) முதலியவர்கள் முதன்முறையாக கீழ்ப்படிய மறுத்தனர்.
மீண்டும் கே.ஆர் (மருதமுத்து கே. ராதாகிருஷ்ணன்) வந்து தலைமை ஏற்றால் மட்டுமே தங்களால் நம்பிக்கையோடு கட்டுப்பட்டு இயங்க முடியும் என்று அவர்கள் காலப்போக்கில் முடிவு செய்து அறிவித்தனர்.
அதற்கிடையில் தமிழகம் முழுதும் அரசியல் வகுப்புகள் மூலம் பயிற்சிதரச் சென்ற எனக்குப் பேரிடி விழுந்தது போல உண்மை புரிந்தது. அதாவது அடிப்படை உண்மை என்னவென்றால், சாரத்தில் எங்கள் கட்சியின் பாதை முன்புபோலவே அதே தற்கொலைப் பாதைதான் என்று நான் உணர்ந்து கொண்டேன்.
காரணம் தமிழக அளவில் எங்குமே மக்கள் யுத்தக் கட்சி குறைந்த பட்ச வலிமை பெற்ற நிலையில் கூட இருக்கவில்லை.
உடனே நான் முழு அர்ப்பணிப்பும், கட்டுப்பாடும் கொண்ட எண்ணிக்கையில் சிலரான எனது தோழர்களை மட்டும் கூட்டி அந்தப் பேருண்மையை அவர்களுக்குத் தெரிவித்தேன்.
அந்தக் கணமே அவர்கள் அனைவரும் நொறுங்கிப் போனார்கள்.
பிறகு சிதறிப் போனார்கள்; செயலிழந்தும் போனார்கள்.
ஆனால் ஒரே ஒரு தோழர் மட்டுமே சற்றும் தயங்காமல் உடனே அறிவித்தார்---
“நான் உங்கள் நேர்மை, அறிவாற்றல், அர்ப்பணிப்பு, திறந்த மனது ஆகியவற்றின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டுள்ளேன்.
இப்போதும், எப்போதும், எனது இறுதி மூச்சு உள்ள வரையிலும் நான் உங்கள் தலைமையை ஏற்று உங்களோடு பயணிப்பேன். இது சத்தியம்” என்றார்.
அது மட்டுமல்ல, "பிள்ளைக் குட்டி, பதவி மற்றும் வருமானம் அனைத்தும் பறிபோனபின் என்ன செய்வது என்று நீங்கள் கலங்கவேண்டாம்.
நாம் இருவரும் ஒன்றாக இதே நீதிக்கான போரைத் தொடர்ந்து நடத்துவோம், வாருங்கள்!” என்றார்.
அவர் தான் என் உயிரினும் மேலான ஒருமித்த கருத்துடைய என் பெருமை மிகு மனைவி போர்க்கொடி என்ற வாலன்டைன் ராணி!!!
அவர் அன்று சொன்ன வார்த்தையை இன்று வரை மீறவில்லை, இனி என்றென்றும் மீறப்போவதுமில்லை என்று நான் முழுமையாக நம்புகிறேன்.
இந்த முடிவு அவரது சமூகப் பொறுப்புணர்வையும், ஆழ்ந்த புரிதலையும், சுயநலமற்ற தீரமிக்க அர்ப்பணிப்பு மனநிலையையும் காட்டுவதாகும்.
எனவேதான் எனது ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல், மற்றும் “திருக்குறள்: தமிழ்த்தேசிய அரசியல் நூல்” உள்ளிட்ட எனது முக்கியமான ஆய்வுப் படைப்புகளின் முகப்பில் எனது வாழ்க்கைத் துணை போர்க்கொடி குறித்து சில சாரமான வாசகங்களைப் பொறித்துள்ளேன்.
ஆனால் அன்று முன்னணி வகித்த பிற தோழர்களால் நக்சல் இயக்கத்தின் வெறுமை குறித்த உண்மையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
எனவே அவர்களால் தொடர்ந்து வீரியமாக இயங்க முடியாமற் போனது.
ஆனால் இது குறித்து எனக்கு எந்த விதத்திலும் வெறுப்போ, வியப்போ எதுவும் இல்லை.
இத்தகைய நிலையில் வீழ்வது இயல்பானது, எளிதில் நிகழ்வது.
ஆனால் மீண்டும் எழுவது அரிதானது.
அப்படியே எழுந்தாலும் பழைய உயரங்களை எட்டுவது அரிதிலும் அரிதானது.
எனவே இத்தகைய முதலாம் திருப்புமுனைக் காலகட்டத்தில் நடந்த தேர்வில் நானும் போர்க்கொடியும் மட்டும் வெற்றி பெற்று மீண்டோம்.
முழு நேர அங்கத்தினர் தவிர்த்து அன்று எங்களுடன் ஆதரவு நிலையில் இருந்த பனிமயராஜ், ஜோசப் நவநீதன் போன்ற பலர் தகர்ந்து போன நிலையில் இருந்த போதிலும் அவ்வப்போது ஆதரவளிக்கும் அளவிலேனும் தொடர்ந்து இருந்து வருகிறார்கள்.
ஆனாலும் முன்பு போன்ற வீரியம் தணிந்துதான் போயுள்ளது.
வன்முறையற்ற கருத்தியல் மற்றும் அரசியல் போரை முகநூல் மூலம் கடந்த சில ஆண்டுகளாக நான் நடத்தி வந்துள்ள போதிலும் இவர்களால் முழுமையான ஆதரவை வெளிப்படுத்த இயலாத நிலையே இருந்து வருகிறது.
தாங்களும் பயிற்சி பெற்றுத் தங்கள் வட்டார அளவில் சிறு அமைப்புகள் மூலம் பிறர்க்கும் பயிற்சி தருமாறு நான் பலமுறை வேண்டிக் கேட்டும் இவர்களால் முன்வர முடியாத நிலையே நீடித்து வருகிறது.
எனது பதிவுகளை லைக் செய்வது, ஒன்றிரண்டு காமென்ட் போடுவது, பகிர்வது என்பதோடு இத்தகையோர் நிறுத்தி கொண்டுள்ளது அவர்களின் மனச் சோர்வையே காட்டுகிறது.
இந்நிலையில் என் மகன் ஆண்டனி அசோக், மூலங்குடி தமிழரசன் மகன் மில்டன் போன்ற இளம் வயதினர் இன்று அரசியல் கற்கவும், கற்ற அறிவைப் பரப்பவும் தயாரான நிலையில் உள்ளதாக நான் எண்ணுகிறேன்.
ஆனால் அதற்கு மீண்டும் பழையபடி முழு அர்ப்பணிப்பும், கட்டுப்பாடும் கொண்ட படிப்பாளிகளின் சேவை தேவைப் படுகிறது.
இதற்கிடையில் முதல் அலையில் என்னோடிருந்த நண்பர் தியாகு போன்றோர் தங்களுக்கென்று தனி வழி கண்டு அதில் பயணித்து வருகிறார்கள்.
நானோ போர்க்கொடி உதவியுடன் மார்க்சியத்தை ஒதுக்கி விட்டு பார்ப்பனிய இந்துத்துவத்தின் வேர்களைக் கண்டறியும் இலக்குடன் ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளலானேன்.
அது என்னை புத்தரிடம் கொண்டு சேர்த்தது. வள்ளுவத்தின் மெய்ப்பொருளைக் கண்டறிய வைத்தது.
பேராசான்கள் அம்பேத்கர் மற்றும் பெரியாரின் இன்றியமையாத் தேவையை உணர வைத்தது.
இந்த அறிவுத் தேடலின் ஊடாக எனக்கு நேர்ந்த இதய நோய் எனது உயிரைப் பறிக்கவிருந்த நிலையில் நண்பர் தியாகு தலையிட்டார். அவருடன் ஐயா நெடுமாறன், மருத்துவர் ராமதாஸ், மணியரசன், சுப.வீ ஆகியோரும் துணை நின்று எனக்கு அறுவை சிகிச்சை நடத்தப் பட நிதி திரட்டி உதவினார்கள்.
ஆனாலும் தனிப்பட்ட முறையில் எனது நன்றியுணர்வு வேறு, அரசியல் நிலைப்பாடு என்பது வேறு.
எனவே தான் நான் குறிப்பாகத் தியாகு போன்றோருடன் அடிப்படையான வேறுபாடுகளைக் கொண்டவனாகத் தொடர்ந்து இருந்து வருகிறேன்.
================
பகுதி II
மேற்கண்ட வரலாறு உண்மைகளை மனதில் இருத்தி அடியிற் கண்டுள்ளவற்றை கவனமாக வாசித்தறிக.
இன்றைய தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் நிலைமை முற்றிலுமாகச் சீரழிந்து கிடக்கிறது.
இதில் ஆயுதந்தாங்கிய போராட்டங்களுக்கெல்லாம் அறவே இடமில்லை.
அது குறித்து நமக்கு எந்த வருத்தமும் இல்லை.
ஆனால் அனைத்திலும் மேலாக எந்தவகைப்பட்ட ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்திற்கும் கூட அறவே இடமில்லாத நிலை மோடியரசினால் (ஆர்.எஸ்.எஸ் ஆணைப்படி) உருவாக்கப் பட்டுள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டாக காக்ரோச் கட்சிப் போராட்டத்தை ஒடுக்குவதில் தீவிரம் காட்டும் மோடியரசு இட ஒதுக்கீடு ஒழிப்புப் போராட்டத்திற்கு மறைமுகமான ஆதரவு தந்து வருவது ஒன்றே போதும்.
இத்தகைய சூழலில் நாம் உடனடியாக அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மா என்று அழைக்கப் படும் அதன் முகப்புரையையும், அதில் ஆசான் அம்பேத்கரால் நுழைக்கப் பட்ட “சகோதரத்துவம்” மற்றும் சுதந்திரம், சமத்துவம் ஆகிய கோட்பாடுகளையே சிதைக்கும் வகையில் இன்றைய பார்ப்பனிய இந்துத்துவா அரசு இயங்கி வருகிறது.
(இந்த முகப்புரையைத் தீர்மானிப்பதில் அண்ணல் அம்பேத்கரின் பங்களிப்பு குறித்த முழுமையான உண்மையை ஆய்வறிஞர் அசோக் கோபால் அவர்கள் வெளியிட்டுள்ளார். பிபிசி.தகவல்)
இதை முற்றாக மாற்றியமைப்பதைத் தனது தலையாய பணியாகக் கொண்டுள்ள அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அமைப்பாகும்.
இதன் கருவியாக மோடியரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இத்தகைய பேரழிவுக்கால இந்தியாவில் மக்களின், அதிலும் குறிப்பாக எஸ்.சி., பி.சி., மற்றும் இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களின் தலையாய உடனடிக் கடமை இந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஒழித்துக் கட்டி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உயிர் எனப்படும் முகப்புரையைக் காப்பது மட்டுமே ஆகும் என்பது எனது தீர்க்கமான முடிவு.
ஆனால் முன்பு நக்சல்பாரி இயக்கத்தில் ஈடுபடுவது எவ்வளவு ஆபத்தானதாக இருந்ததோ அதைவிட ஆபத்தான அரசியல் பணி இது என்று நீங்கள் உடனடியாக உணரவேண்டும்.
இது மோடியின் பெரியதொரு மோசடி வேலையாகும்.
அரசமைப்புச் சட்டத்தின் உயிரைக் காக்க முன்வருவோர் யாராயினும் அத்தகையோரை ‘திமாகி (அறிவுசார்) நக்சல்கள்’ என்று தூற்றி வெறுப்புணர்வை ஊட்டி வருகிறார் இவர்.
இந்த மாபெரும் சதித் திட்டத்தை முறியடிக்கவே இன்று
இப்பதிவின் மூலம் நான் ஒரு மகத்தான அமைப்பையும் அது சார்ந்த ஆதரவாளர் இயக்கத்தையும் தொடங்க முன்வந்துள்ளேன்.
இதில் மோடியின் பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்சி நடுங்காமல் அனைத்து ஜனநாயக, சமூக நீதியாளர்களும் உடனடியாகச் சேர்ந்து செயல்பட முன்வர வேண்டும் என்ற அழைப்பை இப்பதிவின் மூலம் விடுக்கிறேன்.
இதில் இரு பிரிவினர்க்கு இடம் உண்டு.
முதலாவது முழுமையான அர்ப்பணிப்புடனும், கட்டுப்பாட்டுடனும் எனது தலைமையில் இயங்க முன்வருவோர்.
இவர்கள் சிறை வாசத்திற்கும் தயாரான மனநிலை கொண்டிருத்தல் வேண்டும். எனது கட்டுப் பாட்டில் இயங்கும் சிறு சிறு குழுக்களை உருவாக்கி நான் காட்டும் வழிகளில் அக்குழுக்கள் அரசியல் பயிற்சி பெறுமாறு இத்தகையோர் பணியாற்றுதல் வேண்டும்.
இரண்டாவது பிரிவினர் ஆதரவு நிலையை மேற்கொண்டு நிதி உதவி செய்ய முயலலாம் அல்லது என் விளக்கங்களை பெரிய அளவில் பரவலாக்கும் முக்கிய பங்கையாவது ஆற்றலாம்.
இரண்டில் ஒன்றை நீங்கள் அனைவரும் உடனடியாகத் தேர்ந்தெடுத்து எனக்கு விரைவில் அறிவிக்குமாறு கோருகிறேன்.
இந்நிலையில் ஒருவர் எப்போதும் போல் முந்திக்கொண்டு முதல் பிரிவில் இணைந்துள்ளார்.
அவர்தான் என் உயிரினும் மேலாம் வாழ்க்கைத் துணையான போர்க்கொடி மருதமுத்து.
மற்றவர்களின் முடிவுக்காக ஆர்வம் மேலிடக் காத்திருக்கிறேன்.
நினைவிருக்கட்டும், நான் தொடங்கியுள்ள இந்த அமைப்பு மற்றும் இயக்கத்தின் நிலைப்பாடு அரசமைப்புச் சட்டத்தின் உயிரைக்காக்கும் நோக்கம் கொண்டதாகும்.
எனவே எத்தகைய கைது நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் எளிதில் எந்த ஒரு நீதிமன்றமும் இதற்கு தண்டனை தரத் துணியாது.
எனினும் கூட சிறை வாசம் முதலியனவற்றின் மூலம் நம் நெஞ்சுறுதியைத் தகர்க்க மோடியரசு ஓயாமல் முயற்சி செய்யும்.
ஆனால் இதற்கெல்லாம் அஞ்சினால் பின்பு பார்ப்பனிய இந்துத்துவ அரசின் கீழ் நிரந்தர அடிமைகளாக அனைத்து இந்தியர்களும், தமிழர்களும் கிடந்து உழல வேண்டிய அவல நிலையே நிலை கொண்டுவிடும்.
இறுதியாக நான் இன்று தொடங்கும் அமைப்பு மற்றும் இயக்கத்தின் பெயரை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
அது தன் பெயரையே இலக்காகவும் உடனடி வேலைத் திட்டமாகவும் கொண்டுள்ளது ---
“ஆர்.எஸ்.எஸ்-சை உடனே தடை செய்!”
*****“BAN RSS NOW!”*****
உடனே முடிவெடுங்கள்!
எழுவோம், வெல்வோம்!

அன்புடன், மருதமுத்து.


தொடர்புடைய கட்டுரைகள்:

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

கே.ஆர் (மருதமுத்து கே. ராதாகிருஷ்ணன்)-யார்?

காரைக்கால், 31/8/26 நண்பர்களே, எனது வாழ்வில் அனைத்திலும் மேலான முக்கியத்துவம் வாய்ந்த தருணம் இது. 1970 களின் இறுதியிலும், 1980களின் தொடக்கத்...

செய்தியை சார்ந்த அலசல்