ஆம்பள்ளி முனிராஜ் அறிக்கை மீதான விமர்சனம்-01

துணைக்கண்டத்தில் மாற்றமும் சாதியமும்-ஆம்பள்ளி முனிராஜ்

துணைக்கண்டத்தில் மாற்றம் என்றால் அது இந்த ஏற்றத்தாழ்வான சாதியச் சமூகத்தை மாற்றியமைப்பதைத் தவிர வேறு எதுவும் இருக்கமுடியாது. ஆனால் இன்னும் சாதி என்றால் என்ன? என்று மார்க்சிய அறிவியல் முறையில் ஒரு முறையான வரையறையை இடதுசாரிகள் எட்டாமல் இருப்பது இடதுசாரிகளுக்குள் நிலவும் சிந்தனை வறட்சி மற்றும் இந்தச் சாதியச் சமூகத்தை மாற்றியமைக்க காட்டும் அலட்சியம், அக்கறையின்மை, இடதுசாரிகளுக்குள் வாழும் சாதிய மனநிலை ஆகியவை தவிர வேறு காரணமாய் இருக்கமுடியாது.

சாதி என்றால் அகமணமுறை, இனக்குழுச் சமூகம், பண்பாட்டு மேல்தள கட்டுமானம், ஒரு மனநிலை, மனநோய் என பல வரையறுப்புகள் உள்ளது. இவை நடப்பில் உள்ளதை வைத்து செய்யப்பட்டு இருக்கும் கருத்துருவாக்கம் (abstraction), ஒரு அறிவியலவயப்பட்ட வரையறையல்ல. வரலாற்றில் ஒரு கட்டத்தில் சமூகத்தில் தோன்றி வளர்ந்து நீடித்து நிற்கும் இந்தச் சாதி ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வு.

வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வை

இப்படியான முக்கிய வரலாற்று நிகழ்வுக்கான காரணத்தை "சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியிலும், உற்பத்திமுறை மற்றும் பரிவர்த்தனை மாற்றங்களிலும் அதனால் சமூகம் வர்க்கங்களாகப் பிளவுறுதலிலும், அவ்வர்க்கங்கள் ஒன்றையொன்று எதிர்த்து நடத்தும் போராட்டங்களிலும் காண்பது" வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வை.

இந்த வரலாற்றுப் பொருள்முதல்வாத அறிவியலின் அடிப்படை "உலகில் உள்ளவைகளின் உருவாக்கம், வளர்ச்சி, மாற்றம், இயக்கம் அனைத்தும் முரண்பாடுகளினால் ஆனது என்ற இயங்கியல் பொருள்முதல்வாத விதி. இந்த அறிவியல் விதி உலகில் உள்ள ஒவ்வொன்றின் உருவாக்க வளர்ச்சி நிலைமாற்றத்தை அதன் அகநிலையை அடிப்படையாகக் கொண்டு அதனுடைய புறநிலையுடன் தொடர்புபடுத்திக் காண்கிறது. ஒவ்வொன்றின் உருவாக்க வளர்ச்சி நிலைமாற்ற இயக்கத்துக்கான அடிப்படை முதன்மைக் காரணம் அதன் அகநிலை; புறநிலை அல்ல; அதேசமயம் புறநிலை அதற்கான சூழலை வழங்குகிறது.

இந்த வரலாற்றுப் பொருள்முதல்வாத இயங்கியல் விதியின் அடிப்படையில் சமூகத்தின் அகநிலை, புறநிலை சூழல், உற்பத்தி, பொருளாதாரம், பரிவர்த்தனை, வர்க்க பிளவு, வர்க்க மோதல் ஆகியவற்றின் அடிப்படையில் சாதிக்கான ஒரு அறிவியல் வயப்பட்ட வரையறையை அடைவதே மார்க்சிய அறிவியல்வயப்பட்ட வரையறையாக இருக்க முடியும்.

தந்தைவழிச் சமூகமும் உழைப்புப் பிரிவினையும்

முதலில் சமூகம் பிறப்பு மற்றும் தொழிலின் அடிப்படையில் அகமணமுறை பின்பற்றும் மூன்று அல்லது நான்கு குழுக்களாகப் பிரிக்கப்படுவது துணைக்கண்டத்தில் மட்டும் உருவானது அல்ல. அது வரலாற்றில் கிரேக்க, சீன, ஜப்பான் போன்ற நாடுகளிலும் உருவாகி பின்னர் மறைந்து இருக்கிறது.

இந்த அகமணமுறை குழுக்களின் உருவாக்கம் உலகச் சமூகங்களில் உழைப்புப் பிரிவினை ஏற்பட்டு கால்நடை வளர்ப்பு, விவசாய உற்பத்தி வளர்ச்சி காரணமாக இயற்கை சார்ந்த பொருளாதாரத்தில் இருந்து உணவைச் செயற்கையாக மனிதன் உருவாக்கிக் கொள்ளும் இயற்கையை வென்ற பொருளாதாரத்துக்கு மாறிய காலகட்டத்தில் பெண் வர்க்கத்தை ஆண் வர்க்கம் அடிமைப்படுத்தி தாய்வழிச் சமூகத்தில் இருந்து தந்தைவழிச் சமூகமாக மாற்றம் பெற்று பிறகு ஏற்படுகிறது.

இந்தத் தந்தைவழிச் சமூகங்கள் மற்ற சமூகங்களை அடிமைப்படுத்தி சமூகத்துக்குள் அடிமை உழைப்பு, சுதந்திர உழைப்பு என்ற பிரிவினையும் அதற்குள் பல்வேறு தொழிலைச் செய்யும் உழைப்புப் பிரிவினையையும் ஏற்பட்டு சமூகங்களுக்கு இடையிலான பரிவர்த்தனை வளரும் காலத்தில் உழைப்பிலும் செல்வத்திலும் ஏற்றத்தாழ்வு பெருகும் போது பிறப்பையும் தொழிலையும் அடிப்படையாகக் கொண்ட அந்தச் செல்வ, உழைப்பு வேற்றுமைகளை நிலைப்படுத்தி அவற்றை தனக்கும் தனது சந்ததிக்கும் மட்டுமானதாக மாற்றும் நோக்கில் சமூகங்கள் மூன்று அல்லது நான்காகப் பிரிக்கப்படுகின்றன.

இதற்குள் உழைப்புப் பிரிவினை மேலும் வளர்ந்து சராசரி உழைப்பின் வளர்ச்சி உயர்ந்து சரக்கு உற்பத்தி ஏற்பட்டு சமூகத்துக்குள் பரிவர்த்தனை வளர்ந்து பணப் பயன்பாடு பெருகும் காலத்தில் இந்தப் பிறப்பு மற்றும் தொழிலின் அடிப்படையிலான பிரிவினை மறைந்து செல்வத்தின் அடிப்படையில் சமூகம் வர்க்கமாகப் பிரிகிறது. ஆக சாதி தந்தைவழிச் சமூகத்தில் இருந்து சொத்தின் அடிப்படையிலான நிலபிரபுத்துவ சமூகமாக மாறுவதற்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்படுகிறது. இதனடிப்படையில் சாதி என்பது சொத்தின் அடிப்படையிலான வர்க்கப் பிரிவினைக்கு முன்பான ஒரு இடைக்கட்ட வர்க்கப் பிரிவினை என்ற புதிய மார்க்சிய வரையறையை இங்கு அடைகிறோம். இந்தப் புதிய வரையறை இதுவரையிலுமான நமது வரலாற்றை இந்த இடைக்கட்ட சாதிய வர்க்கப் பிரிவினை வளர்ச்சியின் தொடர்ச்சியாகக் காண கோருகிறது.

துணைக்கண்டத்தின் வரலாற்று இடையீடுகள்

நம்மைப் போலவே மூன்று அல்லது நான்காகப் பிரிந்த மற்ற கிரேக்க, சீன, ஜப்பானிய சமூகங்கள் எல்லாம் இந்த இடைக்கட்ட சாதிய வர்க்கப் பிரிவினையை அடுத்த அடுத்த நிலபிரபுத்துவ சமூகங்களாக மாறிய போது அந்தப் பிரிவினை மேலும் பல சாதியக் குழுக்களாகப் பிரியவில்லை. துணைக்கண்டத்தில் மட்டும் அந்த நான்கு சாதியப் பிரிவினை நான்காயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகளாக மேலும் பெருக்கம் அடைகிறது. இது உலகில் எங்கும் இல்லாத துணைக்கண்டத்தில் மட்டுமே காணப்படக்கூடிய சிறப்பு நிலை. இதற்குக் காரணம் கிரேக்க, சீன, ஜப்பானிய சமூகங்களின் வரலாற்று வளர்ச்சிநிலை மாற்றம் இயல்பான இடையீடுகளற்ற வளர்ச்சியாக இருந்தது; மாறாக, துணைக்கண்ட இயல்பான வரலாற்று வளர்ச்சி தொடர்ந்து பல இடையீடுகளுக்கு உள்ளாகி இருக்கிறது.

முதலில் நடந்த ஆரிய நாடோடி மேய்ச்சல் சமூக இடையீடு சிந்துவெளி நாகரீக வளர்ச்சியின் தேக்கமாக மாறியது. அடுத்து வளர்ந்த கிரேக்க நிலபிரபுத்துவ சமூகம் துணைக்கண்டத்தின் புறநிலையாக மாறிய போது துணைக்கண்ட சமூகங்கள் அதன் அகநிலை வளர்ச்சி இலக்குக்கு இராணுவ சனநாயகத்தில் இருந்தாலும்கூட குதிரையைப் பயன்படுத்திக் கொண்டு உற்பத்தி வளர்ச்சி குன்றியிருந்த நிலையிலும் இராணுவக் கட்டமைப்பை உள்ளடக்கமாகக் கொண்ட பேரரசாக மாற்றம் கண்டது.

அப்படி ஒரு பாய்ச்சலைக் கண்டாலும் அதன்பிறகான துணைக்கண்ட சமூகங்களின் சராசரி வரலாற்று வர்க்க வளர்ச்சி இராணுவ சனநாயகத்துக்கு அடுத்த நிலையான இடைக்கட்ட சாதிய வர்க்க சமூகங்களாகவே மாற்றம் கண்டது. மேலும் துணைக்கண்டத்துக்கு உள்ளிருந்த வளர்ச்சி அடையாத வேட்டை சமூகங்கள் மற்றும் தெற்கு, மத்திய ஆசிய இசுலாமிய நாடோடி சமூகங்களின் இடையீடு இந்தச் சமூகங்களோடு ஒன்றுகலந்து பல இடைக்கட்ட சாதிய வர்க்கச் சமூகங்களாக வளர்ச்சி காண்பதாக இருந்தது. எனவே துணைக்கண்ட சராசரி சமூக வளர்ச்சி இந்த இடைக்கட்ட சாதிய வர்க்க வளர்ச்சி நிலையிலேயே தேங்கி நின்றுவிட்டது.

அப்படி நடந்த ஒவ்வொரு இடையீட்டின் போதும் உற்பத்தி சக்தியான நிலம், நீராதாரம், உழைப்பாளர்கள் அப்படியே இருந்தாலும் இந்த விவசாய உற்பத்திஉடனான வர்க்க உறவு தொடர்ந்து மாற்றம் அடைகிறது. அந்த உற்பத்தி உறவில் ஏற்படும் மாற்றம் அந்த வெளியீட்டுச் சொந்ததைத் தங்களுக்கு மட்டுமானதாக மாற்றும் ஒரு புதிய அகமணமுறை சாதியக் குழுவை உருவாக்குகிறது. கூடவே இந்தக் குழுவைச் சார்ந்த வணிகர்கள், நிர்வாகிகள், கைவினைஞர்கள், அடிமை உழைப்பாளர்கள் என பல புதிய அகமணமுறை சாதியக் குழுக்களை உருவாக்குகிறது. அதேசமயம் முன்னிருந்த குழுக்களைக் கீழே தள்ளி அல்லும்போது ஏற்படும் சொத்துடைமை, தொழில் மாற்றத்துக்கு ஏற்ப ஏறுவரிசையில் அடுக்கி துணைக்கண்ட மக்களை பல்லாயிரம் இடைக்கட்ட சாதிய குழுக்களின் தொகுப்பாக மாற்றுகிறது.

காலனியமும் தரகு முதலாளித்துவமும்

இதனால் ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு முன்பு வரை துணைக்கண்டம் சமூகங்களுக்கு இடையிலான பரிவர்த்தனை அதற்கு ஏற்ற நிலத்தில் தனியுடைமையற்ற ஆசியபாணி உற்பத்தி முறையிலான வல்வழிகைக் கட்டமைப்பிலேயே நீடித்தது. சரக்கு உற்பத்தி சமூகத்துக்குள் பணப் பரிவர்த்தனை எல்லாம் தொடக்ககட்ட வளர்ச்சி நிலையிலேயே அதாவது சொத்தின் அடிப்படையிலான நிலபிரபுத்துவ மாற்றத்தின் தொடக்க நிலையிலேயே இருந்தது. அதனால் துணைக்கண்ட சமூகங்கள் வர்க்கத்தின் அடிப்படையிலான முழுமையான தேசிய இனங்களாக மாற்றம் பெறவே இல்லை.

இந்த நிலையில் ஏற்பட்ட நிலபிரபுத்துவத்துக்குள் முதலாளித்துவ வளர்ச்சி அடைந்திருந்த ஆங்கிலேய தொழிற்துறை வர்க்கத்தின் இடையீடு, அப்படியான தொழிற்துறை வளர்ச்சி குன்றியிருந்த துணைக்கண்டத்தின் நிலவுடைமைகளை வீழ்த்தி விட்டு நேரடியாக முதலாளித்துவ சரக்கு உற்பத்தி, தனிச்சொத்து, பணப்பரிவர்த்தனையை செலுத்தியது. சீன, ஜப்பானிய இடைக்கட்ட சாதிய வர்க்க பிரிவினையில் கடை நிலையில் இருந்த வணிக வர்க்கம் அங்கே சரக்கு உற்பத்தி ஏற்பட்டு பணப்பரிவர்த்தனை வரும் போது செல்வந்தீட்டு முதல்நிலையில் இருக்கும் வர்க்கத்துடன் இணைகிறது. துணைக்கண்ட வணிக வர்க்கம் நமது கிரேக்க, ரோமப் புறநிலை காரணமாக தொடக்க நிலையிலே மேலிருந்து வர்க்கத்துடன் இணைந்து வல்லாட்சிக் கட்டமைப்பை ஏற்படுத்துகிறது.நிலவுடமைகளை ஆங்கிலேயர்கள் வீழ்த்திய பின்பு அவர்களுடன் இணைத்துக் கொள்ளும் அந்தப் பார்ப்பனிய வணிக வர்க்கம் தரகு முதலாளித்துவமாக வர்க்கமாக வளர்கிறது.

உலகத் தொழிற்துறை உற்பத்தி இயந்திரமயமாகி ஏகாதிபத்தியங்களாக வளர்ந்து மாண்டிட்டுக் கொண்ட புறச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு மொத்த துணைக்கண்ட தேசியங்களின் மீதான தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி இந்தியத் தேசியச் சந்தையை உருவாக்கி இங்கிலாந்துடன் பகிர்ந்து கொள்கிறது. பின்பு உருவான அமெரிக்க முதலாளித்துவ ஏகாதிபத்தியம் மற்றும் சோவியத் சமூக ஏகாதிபத்திய போட்டிச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சோவியத் சார்பெடுக்கும் தரகு முதலாளித்துவ வணிக வர்க்கம் சார்ந்தமாக தொழிற்துறை தற்சார்பை எட்டாமலேயே நேரடியாக அதன் உச்சபட்ச நிலையான நிதிமூலதன ஏகபோகத்தை ஏற்படுத்திக் கொள்கிறது. அதற்கு ஏற்ப பாசிச அரசியலைக் கைக்கொண்டு அதற்கு சோசலிச முலாம் பூசி இங்கிலாந்து நிறுவனங்களை ஒளியேற்றி நிலவுடைமை, பிராந்திய போட்டி முதலாளித்துவ வர்க்கங்களை ஒடுக்கி தேசியஇன மக்களைச் சுரண்டும் பார்ப்பனியச் சமூக ஏகாதிபத்தியமாக மாறுகிறது.

ஏகாதிபத்தியப் போட்டியும் இன்றைய சூழலும்

சோவியத் வீழ்ச்சியின் போது இந்த ஏகபோகம் தொடர இடமின்றி போகவே அமெரிக்காவுடன் சந்தையைப் பகிர்ந்து கொண்டு தனது ஏகபோகத்தைத் தளர்த்துகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தேசியஇன முதலாளித்துவ வளர்ச்சி தளிர்விடுகிறது. இங்கிலாந்தின் தேவைக்கு துணைக்கண்டத்தில் புகுத்தப்பட்ட சொந்த தேவைக்கு அல்லாமல் சந்தைக்கு பொருளை உற்பத்தி செய்து பணத்தின் வழியாகப் பரிவர்த்தனை செய்து கொள்ளும் சரக்கு உற்பத்தி பட்டிதொட்டி எங்கும் பரவி துணைக்கண்ட சமூகங்கள் நவகாலனிய அரை முதலாளித்துவச் சமூகங்களாக மாற்றம் காண்கிறது.

இதனிடையில் மூலதனத்தைச் சமூகமயமாக்கிய அரச முதலாளித்துவக் கட்டமைப்பின் பலம் பழைய எண்ணெய்யின் அடிப்படையிலான உற்பத்தி மற்றும் அதனைக் கட்டுப்படுத்தி நிர்வகிக்க உதவும் இணைய தொழில்நுட்பத்தை அடையும் சீனா உலக உற்பத்தியில் அமெரிக்க ஏகபோகம் நிலைக்க அடிப்படையான எண்ணெய்க்கு பதிலாக மாற்று எரியபொருள் தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து ஒரு தொழிற்புரட்சியை ஏற்படுத்துகிறது.

இது உலகில் 1. எண்ணெய் சார்ந்த தனியார் டாலர் நிதிமூலதன இணையதள வணிக உற்பத்தி கட்டமைப்பு 2. மரபு-மரபுசாரா கலப்பு எரிபொருள் சார்ந்த அரச முதலாளித்துவ இணையதள வணிக உற்பத்திக் கட்டமைப்பு என்ற இருவகை உற்பத்திக் கட்டமைப்பை ஏற்படுத்தி இந்த இருவேறு உற்பத்திக் கட்டமைப்புகளுக்கு இடையிலான போட்டியாக உருவெடுக்கிறது.

இந்தப் போட்டி துணைக்கண்டத்தில் எதிரொலித்து அமெரிக்க ஏகாதிபத்திய பார்ப்பனியச் சமூக ஏகாதிபத்தியத்துடன் கைகோர்த்துக் கொண்டு இவர்களின் போட்டியாளர்களான சீனர்களையும் துணைக்கண்ட தேசியஇன முதலாளிகளை சந்தையிலிருந்து வெளியேற்றி எண்ணெய்-இணையதள உற்பத்தி கட்டமைப்பில் இவர்களின் ஏகபோகத்தை ஏற்படுத்தி ஒட்டுமொத்த தேசியஇன மக்களையும் ஒடுக்கிச் சுரண்டுகிறார்கள். இந்துத்துவநெறி, இசுலாமிய வெறுப்பு அரசியலையும் மின்னணு சமூக ஊடகக் கட்டமைப்பையும் கைக்கொண்டு பாசிச அரசியலின் வழியாக தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துகிறார்கள்.

புரட்சிகரப் பாதையும் தீர்வும்

ஆக, எண்ணெய்-இணையதள உற்பத்தி வணிகக் கூட்டை ஏற்படுத்திக் கொண்டு அவர்களை ஒடுக்கிச் சுரண்டி இடைக்கட்ட சாதியச் சமூகத்தில் இருந்து அடுத்தகட்ட சொத்தின் அடிப்படையிலான முழுமையான தேசியஇன வர்க்க சமூகமாக துணைக்கண்ட மக்கள் மாற தடையாக நிற்பது இந்த அமெரிக்க முதலாளித்துவ ஏகாதிபத்தியமும் பார்ப்பனியச் சமூக ஏகாதிபத்தியமும், இந்த இருவருமே துணைக்கண்ட தேசியஇன மக்களின் எதிரிகள்.

இந்த இரு ஏகாதிபத்தியவாதிகளால் ஒடுக்கிச் சுரண்டப்படும் விவசாயிகள், விவசாயக் கூலிகள், ஒப்பந்தக்கூலிகள், மணித்தியாளனக்கூலிகள், ஆலைத் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், சிறுகுறு உற்பத்தியாளர்கள் ஆகிய வர்க்கங்களை உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் அணிதிரட்டி இரு ஏகாதிபத்தியவாதிகளுக்கும் எதிராகப் புரட்சி செய்து, அவர்களின் ஒடுக்கமுறை சுரண்டல் கருவியாக இருக்கும் இணையதள மின்னணு கட்டமைப்பையும் ஒன்றிய அரச முதலாளித்துவ நிதிநிறுவனங்களையும் பறிமுதல் செய்து சமூகமயமாக்கி தேசியஇன மக்களின் சொத்தாக்கும் புதிய சனநாயகப் புரட்சி,

அந்த சோசலிச அடித்தளத்தில் தேசியஇன முதலாளிகளை இயங்கச் செய்து புதிய மரபுசாரா உற்பத்தித் தொழில்நுட்பத்தில் தற்சார்பை அடைந்து அவற்றைச் சமூகமயமாக்கும் சோசலிச புரட்சி என இரண்டு கட்ட புரட்சியை முன்வைக்கின்றோம்.

ஒரு தேசியஇனம் தனியாக இந்த இரண்டுக்கட்ட புரட்சி செய்து சோசலிச சமூகமாக முன்னோக்கிச் செல்வது சாத்தியமற்றது ஆகையால் மற்ற தேசிய இனங்களுடன் சேர்ந்து கூட்டாகப் புரட்சி செய்து தேசிய இனங்களின் கூட்டரசை ஏற்படுத்துவதே சரியான நடைமுறை சாத்தியமான பாதை.

இதில் ஒருமித்த கருத்தை அடையும் பட்சத்தில் இதற்கு அடுத்த கட்டமான புரட்சி செய்யும் வர்க்கங்கள், அவர்களின் தேவை, அவர்களைத் திரட்டும் முழக்கங்கள், புரட்சியைச் சாதித்து உற்பத்தி மாற்றத்தை அடைந்து சமூக மாற்ற இலக்கை அடைய அடிப்படையான போர்த்தந்திரம், நடைமுறை அரசியலுக்கான செயல்தந்திரங்கள் குறித்து நாம் நகரலாம்.

**************************************************

 மேல்காணும் அறிக்கை மீதான விமர்சனம்

இவ்வாய்வு, சாதியை "தந்தைவழிச் சமூகத்துக்கும் சொத்தின் அடிப்படையிலான நிலப்பிரபுத்துவத்துக்கும் இடைப்பட்ட இடைக்கட்ட வர்க்கப் பிரிவினை" என வரையறுக்கும் அறிக்கையை மார்க்சிய-லெனினியக் கண்ணோட்டத்தில் மதிப்பிடுகிறது.

அறிக்கையின் நோக்கம் (சாதியை வரலாற்றுப் பொருள்முதல்வாத முறையில் வரையறுப்பது) மதிப்புடையது. ஆனால் அதன் மையக் கருதுகோள் ஆய்வுச் சான்றுகளால் நிறுவப்படவில்லை. அவ்வாறே பல இடங்களில் மார்க்சிய-லெனினிய மூலநூல்களுக்கே முரணாகவும், தன்னுள்ளேயே முரண்படுவதாகவும் உள்ளது.

ஆதாரம்:-எங்கெல்ஸின் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், மார்க்சின் லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர், லெனினின் மக்களின் நண்பர்கள் யார்? அவர்கள் சமூக ஜனநாயகத்தை எதிர்த்து ஏன் போரிடுகிறார்கள்?, ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சகட்டம் ஆகியவற்றை அளவுகோலாகக் கொண்டு இந்த விமர்சனம் வைக்கபட்டுள்ளது.

குறிப்பு: மூலநூல் கருத்துகளை இங்கு பெரும்பாலும் கருத்துச் சுருக்கமாகவே தருகிறோம்.

1. முன்னுரை: ஆய்வுமுறை பற்றி

"சாதி என்றால் என்ன?" என்ற கேள்வியை மார்க்சியத்தின் வழியில் கேட்பது சரியான தொடக்கம். அறிக்கை சொல்வது போல, சாதியை அகமணமுறை, மனநிலை, பண்பாட்டு மேல்கட்டுமானம் எனச் சுட்டுவது நடப்பு நிலையின் விவரணையாகவே அமைகிறது. அது வரலாற்று விளக்கமாகாது. 

ஆனால் மார்க்சிய வரையறை என்பது ஒரு வாய்பாட்டைக் கண்டுபிடித்து வரலாற்றின் மேல் பொருத்துவதல்ல. உண்மையான உற்பத்தி உறவுகளையும் வரலாற்றுச் சான்றுகளையும் ஆராய்ந்து, அவற்றிலிருந்து பொதுமைப்படுத்துவதே அதன் முறை. இந்த அளவுகோலின் அடிப்படையில் அறிக்கையை மதிப்பிடுவதே இவ்வாய்வின் நோக்கம்.

2. அறிக்கையின் வாதங்களைச் சுருக்கிக் காணல்

அறிக்கையின் வாதங்களை ஆறு கருதுகோள்களாகப் பிரிக்கலாம்:

  1. வரையறை: சாதி என்பது தந்தைவழிச் சமூகத்துக்கும் சொத்து அடிப்படையிலான நிலப்பிரபுத்துவத்துக்கும் இடைப்பட்ட "இடைக்கட்ட வர்க்கப் பிரிவினை".
  2. உலகளாவிய தன்மை: கிரேக்கம், சீனம், ஜப்பான் ஆகியவற்றிலும் இத்தகைய அகமண மூன்று/நான்கு குழுக்கள் இருந்து பின்னர் மறைந்தன.
  3. துணைக்கண்டத்தின் தனித்தன்மை: இங்கு மட்டும் நான்கு பிரிவுகள் நான்காயிரம் சாதிகளாகப் பெருகியதற்குக் காரணம் ஆரியப் படையெடுப்பு, கிரேக்க-ரோமப் புறநிலை, இசுலாமிய நாடோடிகள் ஆகிய "வரலாற்று இடையீடுகள்".
  4. காலனியமும் தரகுத் தன்மையும்: ஆங்கிலேயர் நிலவுடைமையை வீழ்த்தினர். பார்ப்பனிய வணிக வர்க்கம் தரகு முதலாளித்துவமாக வளர்ந்து, சோவியத் சார்புடன் நிதிமூலதன ஏகபோகத்தை அடைந்து, "பார்ப்பனியச் சமூக ஏகாதிபத்தியம்" ஆனது.
  5. சமகால ஏகாதிபத்தியப் போட்டி: எண்ணெய்-டாலர் கட்டமைப்புக்கும் மாற்று எரிபொருள்-அரச முதலாளித்துவ (சீன) கட்டமைப்புக்கும் இடையிலான போட்டி. அதில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் பார்ப்பனியச் சமூக ஏகாதிபத்தியமும் கைகோர்த்துள்ளன.
  6. புரட்சிகரப் பாதை: புதிய சனநாயகப் புரட்சி, பின் சோசலிசப் புரட்சி என இருகட்டப் புரட்சியும், தேசிய இனங்களின் கூட்டரசும்.

இந்த ஆவணம் கூறும் ஒவ்வொன்றையும் மூலநூல்களின் ஒளியில் ஆராய்வோம். 

தொடரும்... 2ம் பகுதியில்

.


தொடர்புடைய கட்டுரைகள்:

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

ஆம்பள்ளி முனிராஜ் அறிக்கை மீதான விமர்சனம்-03

முந்தையப்பகுதியின் தொடர்ச்சியாக.... 8. அறிக்கையின் அகமுரண்பாடுகள் வெளிநூல்களுடன் ஒப்பிடுவதோடு , அறிக்கையின் உள்ளார்ந்த தர்க்கத்தையும் ஆராய...

செய்தியை சார்ந்த அலசல்