அமெரிக்க பெட்ரோ டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் நாடுகளின் "BRICS PAY"- ஒலி வடிவில்

SWIFT அமைப்புக்கு மாற்றாக சீனா உருவாக்கியுள்ள CIPS என்றால் என்ன?

பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு தனது சொந்த பிளாக்செயின் அடிப்படையிலான டிஜிட்டல் கட்டண முறையான "BRICS Pay" ஐ அறிமுகப்படுத்த அதிகாரப்பூர்வமாக திட்டமிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது இது முழுமையாகச் செயல்படுத்தப்பட உள்ளது.

சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கும் நோக்கில், 'SWIFT' அமைப்பிற்கு மாற்றாக இந்தத் திட்டம் கொண்டுவரப்படுகிறது. இதன் மூலம் உறுப்பு நாடுகள் தங்கள் நாட்டு நாணயங்களிலேயே நேரடியாக வர்த்தகம் செய்துகொள்ள முடியும்.

#CFNews

இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்துங்கள் தோழர்களே

அமெரிக்க பெட்ரோ டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் நாடுகளின் "BRICS PAY"

"அமெரிக்கப் பொருளாதாரத்தில் இந்தியாவின் மறைமுகமான தாக்குதல்!" – இது ராணுவ ஆயுதங்களால் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் அல்ல, டாலரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட இந்தியா கையாண்டுள்ள 'யுவான்' (Yuan) என்னும் ஆயுதம். சமீபத்தில் கசிந்த ஒரு செய்தி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகளையும் மீறி, ஈரான் நாட்டிடமிருந்து கச்சா எண்ணெயைச் சுமந்து வந்த நான்கு பிரம்மாண்ட கப்பல்கள் இந்தியக் கரையை வந்தடைந்தன. குறிப்பாக 'MT Felicity' என்ற கப்பல் ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக எண்ணெயை இறக்கிவிட்டது.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இதற்கான பணத்தை இந்தியா 'டாலரில்' கொடுக்கவில்லை; SWIFT அமைப்பைப் பயன்படுத்தவில்லை! இந்தியா தனது ICICI வங்கியின் Shanghai கிளை மூலம், சீன 'யுவான்' கரன்சியில் இந்தப் பணத்தைச் செலுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கும் டாலரைத் தவிர்த்துவிட்டு, சீனா மற்றும் இந்திய வங்கிகளை இணைத்து ஒரு மாற்றுப் பாதையை இந்தியா உருவாக்கியுள்ளது. அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த  தெளிவான செய்தி “ இனி Swift payment system நமக்கு தேவையில்லை” என்பதே.

முதலில் SWIFT என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உலகப்போர் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது ஏவுகணைகளும், துப்பாக்கிகளும் தான். ஆனால், ஒரு நாட்டின் மீது ஒரு குண்டு கூட போடாமல், அந்த நாட்டை அப்படியே முடக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? 

அந்த நவீன காலத்து 'டிஜிட்டல் பிரம்மாஸ்திரம்' தான் SWIFT.
நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் உங்கள் நண்பர் உங்களுக்குப் பணம் அனுப்பினாலும் சரி, அல்லது ஒரு நாடு அரேபிய நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்கினாலும் சரி, பின்னணியில் இந்த SWIFT இருக்கும்.  இது இல்லையென்றால் உலகப் பொருளாதாரம் ஒரு நிமிடம் கூட நகர முடியாது. பலர் நினைப்பது போல SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication) என்பது ஒரு வங்கி கிளை அல்ல. இது வங்கிகளுக்கு இடையே தகவல்களைப் பரிமாறும் ஒரு அதிநவீனத் WhatsApp என வைத்துக் கொள்ளுங்கள்.
உதாரணமாக, நீங்கள் அமெரிக்காவிற்குப் பணம் அனுப்பினால், SWIFT அமைப்பு ஒரு ரகசிய குறியீட்டு செய்தியை (Instruction) அமெரிக்க வங்கிக்கோ அல்லது இடைத்தரகருக்கோ அனுப்பும்.  "இன்னார் கணக்கிலிருந்து இவ்வளவு பணம் வருகிறது, அதைச் சரிபார்த்து வரவு வையுங்கள்" என்பதே செய்தி.அந்த ஒற்றைச் செய்தியை நம்பித் தான் உலகப் பொருளாதாரம் இயங்குகிறது.

பெல்ஜியம் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு 1973-ல் இது தொடங்கப்பட்டது. இது சுமார் 2,400 வங்கிகள் இணைந்து நடத்தும் ஒரு கூட்டுறவு அமைப்பு. இந்த அமைப்பு, உலகெங்கிலும் உள்ள 11,000-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களை இணைக்கிறது. ஆனால், உண்மையில் இதன் கடிவாளம் G-10 நாடுகளின் கைகளில், குறிப்பாக அமெரிக்காவின் பிடியில் இருக்கிறது.  அமெரிக்காவின் 'டாலர்' (USD) தான் உலகப் பொதுச் செலாவணி என்பதால், SWIFT-ன் ஒவ்வொரு அசைவும் வாஷிங்டனின் கண்காணிப்பிலேயே இருக்கிறது. உலக வர்த்தகத்தில் 80% டாலரில் நடப்பதால், SWIFT வழியாக நடக்கும் ஒவ்வொரு அசைவையும் அமெரிக்காவால் கண்காணிக்க முடியும். அமெரிக்கா நினைத்தால் ஒரு நாட்டைப் பொருளாதார ரீதியாகத் முடக்கி தனிமைப்படுத்த முடியும். இதற்குப் பெயர்தான் "Financial Sanctions".

அமெரிக்கா தனக்குப் பிடிக்காத நாடுகளை (உதாரணம்: ஈரான், ரஷ்யா) இந்த அமைப்பிலிருந்து நீக்கச் செய்யும். இப்படி நீக்கப்பட்டால், அந்த நாடு சர்வதேச அளவில் எண்ணெய் விற்கவோ அல்லது அத்தியாவசியப் பொருட்களை வாங்கவோ முடியாது.  இது ஒரு நாட்டின் பொருளாதார முதுகெலும்பை உடைக்கும் செயல். உதாரணமாக ரஷ்யா அல்லது ஈரான் போன்ற நாடுகள் தங்களுக்கு எதிராகச் செயல்படும்போது, அமெரிக்கா அழுத்தம் கொடுத்து அந்த நாடுகளை SWIFT அமைப்பிலிருந்து நீக்கச் செய்தது யாவரும் அறிந்த விடயம். இதனால் அவர்களின் பொருளாதாரம் பின்னோக்கி தள்ளப்பட்டது.  இதன் மூலம் உலக நாடுகளின் வர்த்தகத்தை அமெரிக்கா தனது விரல் நுனியில் வைத்திருந்தது.

அமெரிக்காவின் இந்த  'அதிகாரப் பசி' தான் இன்று மற்ற நாடுகளை மாற்று வழியை நோக்கித் தள்ளியிருக்கிறது. "அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் நம் கழுத்தை நெரிக்கலாம்" என்ற பயம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. அமெரிக்காவின் அட்டகாசத்திற்கு முடிவு கட்டவே பல நாடுகள் ஒன்றாக இறங்கியுள்ளன. அமெரிக்காவின் இந்த 'நிதிக் ஆதிக்கத்திற்கு' எதிராகப் பல அமைப்புகள் முளைக்கத் தொடங்கிவிட்டன: அதில் முதன்மையானது சீனாவின் CIPS. அமெரிக்காவின் டாலர் அரசியலுக்குப் பதிலடி கொடுக்க சீனா உருவாக்கியதுதான் CIPS. இது முழுக்க முழுக்க 'யுவான்' (Yuan) கரன்சியை மையமாகக் கொண்டது.
 
ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு, ரஷ்யா SWIFT-லிருந்து நீக்கப்பட்டதும், சீனா தனது CIPS அமைப்பை உலக நாடுகளுக்கு விரிவுபடுத்தி வருகிறது. 
அமெரிக்காவின் SWIFT-க்கு நேரடிப் போட்டியாக சீனா உருவாக்கிய தளம் இன்று இந்தியா கூடத் தனது கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு இதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இது எதிர்காலத்தில் SWIFT-ன் சிம்மாசனத்தை  சுக்குநூறாக உடைக்கும். 

அடுத்து ஐரோப்பாவின் SEPA . ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குள் எளிதாக, குறைந்த கட்டணத்தில் பணப்பரிமாற்றம் செய்ய SEPA என்ற முறையைப் பயன்படுத்துகின்றன.  இது ஐரோப்பிய மண்டலத்திற்குள் அமெரிக்காவின் தலையீட்டை விட்டு விலகிப்போவதற்கான அறிகுறி.

அனைத்திற்கும் மேலாக இந்தியாவின் UPI ஒரு ‘Silent ' புரட்சி ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா தனது சொந்தத் தொழில்நுட்பமான UPI (Unified Payments Interface) மூலம் உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. SWIFT என்பது பெரிய நிறுவனங்களுக்கானது, ஆனால் UPI என்பது சாமானிய மனிதனுக்கானது.

இன்று சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ் போன்ற நாடுகள் UPI-ஐ ஏற்றுக்கொண்டுள்ளன. இது ஒரு கட்டத்தில் சர்வதேசப் பணப்பரிமாற்றத்தின் முகத்தையே மாற்றும் வலிமை கொண்டது.

SWIFT என்பது வெறும் தொழில்நுட்பம் மட்டுமல்ல; அது ஒரு சர்வதேச அரசியல் ஆயுதம்.  அமெரிக்கா இந்த ஆயுதத்தை வைத்து உலகை மிரட்டினாலும், சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் எழுச்சி இந்த ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தொடங்கிவிட்டது. இன்று இந்தியா, ஈரான் கச்சா எண்ணெய்க்கு சீன யுவானில் பணம் செலுத்தியிருப்பது ஒரு சாதாரண வர்த்தகம் அல்ல; அது அமெரிக்காவின் ஒற்றைத் துருவ ஆதிக்கத்திற்கு (Dollar Hegemony) விடுக்கப்பட்ட பகிரங்க சவால். SWIFT என்ற ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பை நம்பி உலக நாடுகள் ஏமாந்தது போதும் என்ற முடிவுக்கு பிரிக்ஸ் (BRICS) நாடுகள் வந்துவிட்டன. 

எதிர்காலத்தில் CIPS, UPI மற்றும் டிஜிட்டல் கரன்சிகள் இணைந்து ஒரு புதிய நிதி உலகத்தை உருவாக்கும்.  அப்போது அமெரிக்காவின் இந்த 'அடாவடித்தனம்' வெறும் வரலாற்றின் பக்கங்களாக மட்டுமே இருக்கும்!

அமெரிக்க டாலர் மற்றும் SWIFT அமைப்பின் உலகளாவிய ஆதிக்கத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில், BRICS கூட்டமைப்பு BRICS Pay எனும் பிளாக்செயினில் இயங்கும் புதிய டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்பிக்க, இந்தியா சமீபத்தில் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கிவிட்டு அதற்கான தொகையை யுவான் கரன்சியில் செலுத்தி ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியத்தைத் தலைமையிடமாகக் கொண்ட SWIFT அமைப்பு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் அதிலிருந்து நீக்கப்பட்டு பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டன. இந்த ஒருதலைப்பட்சமான அதிகாரத்தைக் குறைக்கவே சீனாவின் CIPS, ஐரோப்பாவின் SEPA மற்றும் இந்தியாவின் UPI போன்ற மாற்றுத் தொழில்நுட்பங்கள் தற்போது உலகளவில் வளர்ந்து வருகின்றன. இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளின் இந்த அதிரடி நகர்வுகள், எதிர்காலத்தில் அமெரிக்க டாலரின் ஒற்றை ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்து ஒரு புதிய நிதி உலகத்தை உருவாக்கும் என்று இந்த ஆதாரங்கள் விளக்குகின்றன. இவ்வாறு உலக நாடுகள் தங்கள் சொந்த நாட்டு நாணயங்களிலேயே வர்த்தகம் செய்வதன் மூலம், அமெரிக்காவின் நிதிக் கண்காணிப்பில் இருந்து தன்னாட்சி பெற முயல்கின்றன.

வீடியோ வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும்

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்