ஒவ்வொரு ஆண்டும் மே முதல் நாள், உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களின் வெற்றித் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இது வெறும் விடுமுறை நாள் அல்ல; எத்தனையோ போராட்டங்கள், தியாகங்கள் மற்றும் ரத்த சாட்சிகளின் நினைவாகப் பெறப்பட்ட உரிமைகளின்
அடையாளம். "எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர உறக்கம், எட்டு மணி நேர ஓய்வு" என்ற அடிப்படை உரிமைக்காகச் சிகாகோ நகரில் தொடங்கிய அந்தப் போராட்டம், இன்று உலகளாவிய உழைப்பாளர் எழுச்சியாக உருவெடுத்துள்ளது.இலக்கு 95 இணைய இதழை இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே(PDF வடிவில்)
போராட்டத்தின் வரலாறு
1886-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் தங்களின் வேலை நேரத்தைக் குறைக்கக் கோரி வீதியில் இறங்கினர். அன்றைய காலகட்டத்தில் 12 முதல் 16 மணி நேரம் வரை அடிமைகளாக வேலை வாங்கப்பட்ட நிலையை எதிர்த்து எழுந்த அந்த முழக்கம், உலகையே உலுக்கியது. அடக்குமுறைகளையும் மீறி தொழிலாளர்கள் காட்டிய அந்த ஒற்றுமைதான், இன்று நாம் அனுபவிக்கும் பல சட்டப்பூர்வ உரிமைகளுக்கு அடித்தளமிட்டது.
படிப்பினைகள்
உரிமை என்பது தானாகக் கிடைப்பதல்ல; அது போராடிப் பெற வேண்டியது. நமது உரிமைகளை நிலைநாட்டவும், சுரண்டலற்ற சமூகத்தைப் படைக்கவும் இந்த மேநாளில் ஒன்றிணைவோம்....
இலக்கு 95 இணைய இதழ் உங்கள் முன்
இந்த இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள்
1). மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை. ஜார்ஜ் தாம்ஸன். பாகம் -4
2). மாவோவின் சிந்தனைகள், சண்முகதாசன் பாகம் 1
3). மேதினம் வரலாற்று படிப்பினைகள்
இதழில் சில பக்கங்களை பார்ப்போம்
பாட்டாளிவர்க்க இயக்கத்தில் உள்ள முதன்மையான குட்டி முதலாளியப் போக்குகள், அவற்றின் வளர்ச்சியின் வரிசைக் கிரமப்படி கீழ்வருமாறு: அராஜகவாதம், சிண்டிகலிசம், சீர்திருத்தவாதம், திருத்தல்வாதம்.
இந்த இதழை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே
அராஜகவாதம் ரஷ்யாவில் தோன்றிற்று. அதன் தலைவர்களில் ஒருவரான பகுனின், முதலாம் அகிலத்தில் (முதல் அனைத்துலகத் தொழிலாளர் சங்கம் - ஐ.வி.ஆர்) மார்க்சுக்கு எதிரான ஒருவர். 'சமுதாயம் வர்க்கங்களாகப் பிளவுண்டு கிடக்கும் வரை, வர்க்க ஆட்சியின் கருவியான அரசு அவசியம் நீடிக்கும்; பாட்டாளி வர்க்கத்தின் கடமை அரசை ஒழித்துக் கட்டுவதல்ல; மாறாக முதலாளிவர்க்க அரசின் இடத்தில் பாட்டாளிவர்க்க அரசைக் கொண்டுவருவதுதான். இந்த வழியில்தான் வர்க்கங்கள் இறுதியில் மறைந்தொழிவதற்கான நிலைமைகளை உருவாக்க முடியும் - இவை மார்க்ஸின் கருத்துக்கள். 'அரசை ஒழித்துக் கட்டுவதுதான் உடனடிக் கடமை; இதைத் தொழிலாளர்கள் ஒரு தொழிலாளர் கட்சியைக் கட்டுவதன் மூலமாக அல்லாமல், அரசியல் போராட்டம் மூலமாக அல்லாமல், நேரடி நடவடிக்கையின் மூலமே நிறைவேற்ற வேண்டும்'- இவை பகுனினின் கருத்துக்கள். அரசை ஒழித்துக் கட்டுதல் என்பது எதிர்கால வரலாற்றுக்கட்டத்தைச் சேர்ந்தது என்பதையும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் மூலமே அக்கட்டத்தை அடைய முடியும் என்பதையும் அராஜகவாதிகள் புரிந்துகொள்ளத் தவறினார்கள். (மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை, ஜார்ஜ் தாம்ஸன், பக்கம் - 15, 16)
சந்தர்ப்பவாதமான திருத்தல்வாதம் அல்லது சீர்திருத்தவாதம் ஒரு கட்சிக்குள் செல்வாக்கு செலுத்தினால் அந்தக் கட்சிக்குள் அராஜகவாதம் நுழைவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் திருத்தல்வாதமும் அராஜகவாதமும் அண்ணன் தம்பியாக செயல்படும் ஒன்று மற்றொன்றாக மாறும். ஒன்றுக்கொன்று உதவி செய்துகொள்ளும். ஆகவே ஒரு புரட்சிகரமான பாட்டாளி வர்க்க கட்சியானது திருத்தல்வாதத்தை எதிர்த்துப் போராடும் அதேவேளையில் அராஜகவாதத்தையும் எதிர்த்துப் போராடவேண்டும் என்று பொதுவுடமை இயக்க வரலாறு நமக்கு உணர்த்தியுள்ளது. இங்கே திருத்தல்வாதம்தான் செல்வாக்கில் இருக்கிறது. இவர்கள் அணிகளுக்கு சோசலிச உணர்வை ஊட்டத் தவறுவதால் அணிகள் சில சமயங்களில் அராஜகவாத நிலை எடுப்பதை நாம் காணலாம்.
ஒரு நாட்டில் சமூக மாற்றம் நடக்கவேண்டும் என்றால் அதற்கு தலைமையேற்று வழிநடத்த ஒரு புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சி வேண்டும். அத்தகைய கட்சிக்கு ஒரு சரியான அரசியல் வழியும் இராணுவ வழியும் தேவை என்றார் மாவோ. அத்தகைய வழியை தன்னியல்பாகவோ அமைதியான முறையில் ஒரு கட்சி அடைய முடியாது மாறாக தியாகம் செய்து புரட்சிகரமான போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலமே அடையமுடியும் என்றார் மாவோ. கட்சியானது திட்டமிட்டு புரட்சிகரமான போராட்டங்களில் ஈடுபடும்போது கட்சிக்குள் இடது சந்தர்ப்பவாதமும் வலது சந்தர்ப்பவாதமும் புகுந்து நமது போராட்டங்களுக்கு இடையூறு செய்யும். ஆகவே நாம் சரியான மார்க்சிய கண்ணோட்டத்திலிருந்து இந்த சந்தர்ப்பவாதங்களை இனம்கண்டு போராடி முறியடிக்க வேண்டும். அவ்வாறு சந்தர்ப்பவாதத்தை முறியடிப்பதன் மூலமே சரியான அரசியல் மற்றும் இராணுவ வழியைக்கொண்ட புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியை கட்ட முடியும். அத்தகைய புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் உழைக்கும் மக்களுக்கு வாழ்வு இல்லை. இந்தியாவில் வலது மற்றும் இடது சந்தர்ப்பவாதத்தை முறியடிக்காததால்தான் இங்கு புரட்சிகரமான கட்சியை கட்ட முடியவில்லை.அத்தகைய புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சி இல்லாததால்தான் உழைக்கும் மக்கள் வாழ்விழந்து துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
சோசலிசவாதிகள் புரிந்து கொள்ளத் தவறுகின்ற முதன்மையான விஷயம் என்னவென்றால், சமுதாயத்தில் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வர்க்கப் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது, இந்த வர்க்கப் போராட்டமானது சில சமயங்களில் கடுமையாக நடக்கும் பொழுது, அங்கு ஒன்று முதலாளித்துவ சர்வாதிகாரம் இருக்கும் அல்லது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இருக்கும். வேறு வகையான சர்வாதிகாரம் அல்லது அரசு முறை இருக்க முடியாது என்று மார்க்சிய ஆசான்கள் மிகத் தெளிவாக நமக்குப் போதித்துள்ளார்கள். இந்த போதனையை மார்சியவாதிகள் புரிந்து கொள்ள தவறினால் அவர்கள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய கோட்பாடுகளை புரிந்து கொள்ள முடியாது. ஆனால் பாட்டாளி வர்க்க இயக்கத்துக்குள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மறுக்கின்ற திருத்தல் வாதிகள் இருக்கிறார்கள். இந்த திருத்தல்வாதிகள் பாட்டாளி வர்க்கத்துக்கும் மற்றும் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் துரோகம் செய்பவர்களாகவே இருக்கிறார்கள்.
இன்றைய சூழலும் சவால்களும்: மே நாள் புரிதலுக்கு
தொழில்நுட்ப வளர்ச்சியும், நவீன பொருளாதார மாற்றங்களும் உழைக்கும் மக்களுக்குப் புதிய சவால்களை உருவாக்கியுள்ளன:
பணிப்பாதுகாப்பு இன்மை: ஒப்பந்த முறை (Contract labor) மற்றும் தற்காலிகப் பணிகள் அதிகரித்துள்ளன.
நீட்டிக்கப்பட்ட வேலை நேரம்: தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறைகளில் மீண்டும் 10-12 மணி நேர வேலை என்பது மறைமுகமாகத் திணிக்கப்படுகிறது.
குறைந்த ஊதியம்: விலைவாசி உயர்விற்கேற்ப முறையான ஊதிய உயர்வு மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் பலருக்கு எட்டாக்கனியாகவே உள்ளன.
"உழைப்பவர்களுக்கே அதிகாரம்" - இன்றைய நிலையில் உழைக்கும் மக்கள் வெறும் சட்டத் திருத்தங்களுக்காக மட்டும் போராடாமல், தங்களின் அரசியல் மற்றும் சமூக உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.
மேதினம் (மே 1) என்பது வெறும் விடுமுறை நாள் அல்ல; அது உழைக்கும் வர்க்கம் தனது உரிமைகளுக்காகவும், அரசியல் அதிகாரத்திற்காகவும் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தின் அடையாளம்.
இன்றைய சூழலில் மிக முக்கியமான கேள்வி: நாம் அடைய விரும்புவது தற்காலிகச் சீர்திருத்தங்களையா அல்லது முழுமையான புரட்சியா?
புரட்சி என்பது சமூக மாற்றத்திற்கான விஞ்ஞானப்பூர்வமான வழியாகும். அது ஜனநாயக உரிமைகளைத் தொழிலாளர் கைகளில் கொடுக்கும்போது, தொழிலாளர்கள் தங்களின் உண்மையான எதிரி யார் என்பதை உணர்ந்து, அந்த எதிரிகளை எதிர்த்து ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்திப் பாட்டாளி வர்க்கப் புரட்சியை நோக்கி அதாவது சோசலிசத்தை நோக்கி நகர முடியும்.
இளைஞர்களுக்கான அறைகூவல்
எனவே, "இலக்கு" வாசகர்களாகிய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்:
- சீர்திருத்தங்கள் என்பது ஆளும் வர்க்கம் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளப் போடும் வேடம்.
- புரட்சி என்பது சமூக மாற்றத்திற்கான விஞ்ஞானப்பூர்வமான ஒரே வழி.
- முதலாளித்துவ ஜனநாயகம் வழங்கும் உரிமைகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, சோசலிசத்தை நோக்கி நகர்வதே நமது கடமையாகும்.
வெல்க மார்க்சியம்-லெனினியம்!
தொழிலாளி வர்க்கம் புரட்சி நடத்தவேண்டும் என்றால் அது மூன்றுவகையான ஆயுதங்களை ஏந்தவேண்டும் என்றார் மாவோ.
1. முதன்மையாக ஏந்த வேண்டிய ஆயுதம் மார்க்சிய லெனினிய தத்துவ அரசியல் என்ற ஆயுதமாகும். இந்த ஆயுதத்தை கையிலேந்தி சுயவிமர்சனம் என்ற முறையை பயின்று தன்னிடத்திலுள்ள குறைகளை வெளிப்படையாக அறிவித்து களைந்து கொள்வதில் உறுதியான நபர்களைக் கொண்டு உறுதியான கட்டுப்பாடுடன் செயல்படுபவர்களைக் கொண்டும் உழைக்கும் மக்களிடம் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சிகரமான கட்சி அவசியமாகும். இரண்டாவதாக இத்தகைய புரட்சிகரமான கட்சியின் தலைமையில் கட்டுப்பாடுடன் செயல்படும் மக்கள்படை தேவை. மூன்றாவதாக சமூகத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களையும் ஓர் அணியில் திரட்டப்பட்ட ஒரு ஐக்கிய முன்னணி அவசியமாகும். இந்த மூன்றையும் இணைத்து மூன்று மந்திரக்கோல் என்றார் மாவோ. இந்த மூன்று மந்திரக்கோலைக் கொண்டுதான் தொழிலாளி வர்க்கம் கூலி அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறமுடியும். அதேபோல் தேசிய இனங்களின் விடுதலைக்கும், சாதி தீண்டாமை கொடுமையிலிருந்து விடுதலை பெறுவதற்கும் இந்த மூன்று மந்திரக்கோல் அவசியமாகும்.
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக