ஜனநாயகம் என்றால் என்ன? ஜனநாயகவாதிகள் என்றால் என்ன? என்பதை நாம் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.பொதுவான ஜனநாயகம் என்பது உலகில் எங்கும் இருந்ததில்லை, இனினிமேலும் இருக்கப்போவதும் இல்லை. ஜனநாயகம் இரண்டு வகைப்பட்டது. ஒன்று முதலாளித்துவஜனநாயகம்,மற்றொன்று பாட்டாளிவர்க்க ஜனநாயகம் ஆகும். இவ்விரண்டு ஜனநாயகமும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானது மட்டுமல்ல, இரண்டும் எதிர் எதிரானதாகும். ஜனநாயகவாதிகளிலும் இதேபோல் இரண்டு வகையினர் உண்டு. ஒன்று முதலாளித்துவ ஜனநாயகவாதிகள், மற்றொரு பிரிவினர் பாட்டாளிவர்க்க ஜனநாயகவாதிகள் ஆவார்கள். இந்த வேறுபாட்டை மார்க்சிய லெனினிய ஆசான்களது போதனைகளை ஏற்றுக் கொண்டு செயல்படுபவர்கள் நிச்சயமாகப் புரிந்துகொள்வார்கள். இந்த வேறுபாட்டை புரியாதவர்கள் மார்க்சிய லெனினியவாதிகளாக அதாவது கம்யூனிஸ்டாக இருக்க முடியாது.
ஜனநாயகம் என்பது பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் போன்ற சுதந்திரத்தை வழங்கும் அதே வேளையில் சர்வாதிகாரத்தை செலுத்துவதாகவும் இருக்கிறது. தற்கால வர்க்க சமூகத்தில் ஜனநாயகமானது முதலாளித்துவ ஜனநாயகம் என்றும் பாட்டாளி வர்க்க ஜனநாயகம் என்று இரண்டு வகையாக இருக்கிறது. முதலாளித்துவ ஜனநாயகம் முதலாளிகளுக்கு ஜனநாயகத்தை வழங்குகிறது,ஆனால்,அதே வேளையில் பாட்டாளிகள் மீது (உழைக்கும் பக்களின் மீது) சர்வாதிகாரத்தை செலுத்துகிறது. இதற்கு நேர் எதிராக பாட்டாளி வர்க்க ஜனநாயகமானது உழைக்கும் மக்களுக்குஜனநாயகத்தை வழங்குகி றது, அதே வேளையில் முதலாளிகளின் மீது சர்வாதிகாரத்தை செலுத்துகிறது. முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் முதலாளிகளுக்கு ஜனநாயகத்தை வழங்குவதும் உழைக்கும் மக்களின் மீது சர்வாதிகாரத்தை செலுத்தும் கொள்கை வகுத்து செயல்படுகிறார்கள். ஆகவே அவர்களை வலதுசாரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பெயரளவுக்கு உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கியபோதும், சாரத்தில் உழைக்கும் மக்களின் மீது சர்வாதிகாரத்தை செலுத்துகின்ற வலதுசாரிகளே. இதற்கு நேர் எதிராக பாட்டாளிவர்க்க ஜனநாயகவாதிகள் முதலாளிகளின் மீது சர்வாதிகாரத்தை செலுத்துவதும், உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கும்கொள்கையை கடைபிடிப்பவர்களாக இருக்கும் காரணத்தால் இவர்களை இடதுசாரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். மார்க்சிய லெனினியத்தை பின்பற்றும் கம்யூனிஸ்டுகளே இடதுசாரிகள் ஆகிறார்கள். இந்த கண்ணோட்ட த்திலிருந்து நாம் இடதுசாரிகளையும் வலதுசாரிகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலாளித்துவ ஜனநாயகம் என்றும் பாட்டாளி வர்க்க ஜனநாயகம் என்றும் இரண்டுவகையான ஜனநாயகம் இருந்த போதும், பொதுவாக ஜனநாயகம் என்ற சொல்லையே நாம் பயன்படுத்துகிறோம். அதன் மூலம் இரண்டுவகையான ஜனநாயகத்தை நாம் வேறுபடுத்தி புரிந்துகொள்ள தவறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த வேறுபாட்டை மார்க்சிய லெனினிய தத்துவ மற்றும் அரசியல் அறிவுள்ளவர்களால் மட்டுமே தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இத்தகைய அறிவை வளர்த்துக் கொள்ளாத அப்பாவிகளால் இந்த வேறுபாட்டை புரிந்துகொள்ள முடியாது. இந்த குறைபாடானது அவர்களின் திட்டமிட்ட தவறாகாது.
இதற்கு மாறாக சிலருக்கு இந்த வேறுபாடு தெரியும். எனினும் இந்த வேறுபாட்டை மூடிமறைத்துவிட்டு பொதுவாக ஜனநாயகம் என்று பேசி பாட்டாளிவர்க்க ஜனநாயகம் தான் மிகவும் உயர்ந்த ஜனநாயகம் என்ற உண்மையை மக்களுக்கு புரியவிடாமல் முதலாளித்துவ ஜனநாயகத்தையே உயர்ந்த வகையானதாக காட்டுவார்கள். இந்த முறையில் இவர்கள் பொதுவாக ஜனநாயகம் என்றே பேசுவார்கள். எனினும் பாட்டாளிவர்க்கஜனநாயகத்தையே உயர்ந்த வகையான ஜனநாயகம் என்று மார்க்சிய ஆசான்கள் போதித்துள்ளார்கள். ஆகவே பாட்டாளிவர்க்க ஜனநாயகத்தை பின்பற்றுபவர்கள் கம்யூனிஸ்டாக அதாவது இடதுசாரிகளாக இருப்பதால், பாட்டாளி வர்க்க ஜனநாயகவாதிகளை நாம் கம்யூனிஸ்டு என்றும் இடதுசாரிகள் என்றுமே அழைக்கலாம். அதே வேளையில், முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பின்பற்றுபவர்களை ஜனநாயகவாதிகள் என்றும் வலதுசாரிகள் என்றும் அழைக்கலாம். அதாவது ஜனநாயக வாதிகள் என்று நாம் சொல்லும் போது அது முதலாளித்துவ ஜனநாயகவாதிகளையே குறிப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது அவர்களை வலதுசாரிகள் என்றே நாம் கருத வேண்டும். பாட்டாளிவர்க்க ஜனநாயகவாதிகளை நாம் கம்யூனிஸ்டு கள் என்றும் இடதுசாரிகள் என்றுமே குறிப்பிடலாம். இதன் மூலம் இந்த குழப்பத்தை தவிர்க்கலாம். இதனை நாம் அடிப்படையாகக் கொண்டால், இடதுசாரி களும் ஜனநாயகவாதிகளும் ஒன்றுபட வேண்டும் என்று நாம் சொல்வதன் பொருள் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் (முதலாளித்துவ ஜனநாயகவாதிகளான வலதுசாரிகள்) ஒன்றுபட வேண்டும் என்பதாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். கம்யூனிஸ்டுகளும் ஜனநாயகவாதிகளும் ஒன்றுபட வேண்டும் என்ற கொள்கையை நாம் எப்படி புரிந்துகொள்வது என்பதை பிறகு பரிசீலிப்போம்.
முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் என்று சொல்லப்படும் வலதுசாரிகளிடையே இரண்டு பிரிவுகள் உண்டு. ஒரு பிரிவினர் முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பின்பற்றி உழைக்கும் மக்களுக்கு பெயரளவிலான ஜனநாயகத்தை வழங்கி உழைக்கும் மக்களை ஏமாற்றி சுரண்டுவார்கள். அதே வேளையில் உழைக்கும் மக்கள் போராடும் போது சட்டத்தைக் காட்டி உழைக்கும்மக்களை அடக்குவார்கள். இதற்கு மாறாக சில வலதுசாரிகள் இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தையும் உழைக்கும் மக்களுக்கு கொடுக்க மறுத்துவிட்டு பாசிசத்தை செயல்படுத்து வார்கள்.
இத்தகைய வலதுசாரிகளான பாசிஸ்டுகள் உழைக்கும் மக்களுக்கு மட்டுமல்லாமல் பிற முதலாளித்துவ வலதுசாரிகளுக்கும் எதிரானவர்களாக இருக்கிறார்கள். முதலாளிகளில் ஒரு சிலமுதலாளிகள்ஏகபோக முதலாளி களாக மாறிய பின்பு, இந்த ஏகபோக முதலாளிகள் ஏகபோகமற்ற முதலாளிகளை போட்டியிட்டு ஒழித்துவிட்டு அவர்களது ஏகபோகத்தை நிலைநாட்ட முயற்சிக்கிறார்கள். அதன் காரணமாகவே இந்த ஏகபோக முதலாளிகளின் அரசியல் பிரதிநிதி களாகவே பாசிஸ்டுகள் வரலாற்றில் உருவானார்கள். முதலாளிகளில் ஏகபோக முதலாளிகள் மற்றும் ஏகபோகமற்ற முதலாளிகள் என்ற வேறுபாட்டின் அடிப்படையிலேயே வலதுசாரிகளிடேயே பாசிஸ்டுகள் என்றும் பாசிசமல்லாதவர்கள் என்ற பிரிவு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் ஏகபோகமற்ற முதலாளிகள் அவர்களைப் பாதுகாக்க ஏகபோக முதலாளிகளை எதிர்த்துப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார் கள். இதன் காரணமாகவே ஏகபோக முதலாளிகளுக்கும் ஏகபோகமற்ற முதலாளிகளுக்கும் இடையில் முரண்பாடு தோன்றி வளர்கிறது. இந்த முரண்பாடே அரசியல் அரங்கில் வலதுசாரிகளுக்கு இடையே பாசிசமும், பாசிசமல்லாத அரசியல் கட்சிகள் தோன்றி அவர்களுக்கு இடையே முரண்பாடும் போராட்டமும் நடைபெறு கிறது. இந்த சூழலை கம்யூனிஸ்டுகள் பயன்படுத்திக்கொண்டு வலதுசாரி களுக்கு இடையே உள்ள முரண்பாட்டை கூர்மைப்படுத்தவும், மக்களின் முதன்மையான எதிரிகளாக வளர்ந்துள்ள பாசிஸ்டுகளை வீழ்த்தவும் வலதுசாரிகளில் ஒரு பிரிவினரான பாசிசமல்லாதவர்களுடன் கூட்டு சேர்ந்து பாசிசத்தை வீழ்த்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டியது அவசியமாகிறது. இந்தச் சூழலில்தான் இடதுசாரிகளும் ஜனநாயகவாதிகளும் ஒன்றுபட வேண்டும் என்ற கொள்கை அவசியமாகிறது.அதாவது இடதுசாரி களும் வலதுசாரிகளில் பாசிசமல்லாத பிரிவினரும் ஒன்றுபட வேண்டியது அவசியமாகிறது. கம்யூனிஸ்டுகளும் முதலாளித்துவவாதிகளில் ஒரு பிரிவினரோடு ஒன்றுபட வேண்டிய சூழலை இப்போது பார்த்தோம். எனினும் இந்த ஒற்றுமைக்கான நிபந்தனைகளை பிறகு பார்ப்போம்.
பாசிசமல்லாத முதலாளித்துவ வலதுசாரிகள், பாசிச வலதுசாரிகளை எதிர்த்தப் போராட்டத்தில் இடதுசாரிகள் என்று சொல்லப்படும் கம்யூனிஸ்டு களின் உதவியை நாடுவார்கள். எனினும் கம்யூனிஸ்டுகள்அதிக உறுப்பினர் களைக் கொண்ட கட்சியாகவும், மக்கள்திரள்அமைப்புகளான தொழிற் சங்கம், விவசாய சங்கம், மாணவர்கள் சங்கம்,இளைஞர்களின் சங்கம் மற்றும் அறிவாளிகளையும் சங்கமாக திரட்டி மக்களிடம் செல்வாக்குள்ள கட்சியாக இருக்க வேண்டும். அத்தகைய செல்வாக்குள்ள கட்சியாக கம்யூனிஸ்டுக் கட்சி இருந்தால் மட்டுமே, முதலாளித்துவ கட்சிகள் பாசிசத்தை எதிர்த்துப் போராட கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து போராட முன்வருவார்கள். அத்தகைய பலம் கம்யூனிஸ்டுக் கட்சியிடம் இல்லை என்றால் முதலாளித்துவ கட்சிகள் கம்யூனிஸ்டுக் கட்சியை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள்.
இருப்பினும் பலம் இல்லாத பிளவுபட்ட கம்யூனிஸ்டுகள் பாசிசத்தை எதிர்ப்பதற்கு இந்த முதலாளித்துவ கட்சிகளோடு கூட்டணி அமைத்தால் பலன் பெறுவது முதலாளித்துவ கட்சிகள் மட்டுமே ஆகும். அதனால் கம்யூனிஸ்டுகளுக்கோ மக்களுக்கோ எவ்விதமான பயனும் கிடைக்காது.
ஏனெனில் பாசிசம் வீழ்த்தப்பட்டு கிடைக்கும் பலன்களை முதலாளிகள்தான் கைப்பற்றுவார்கள். பலமில்லாத கம்யூனிஸ்டுக் கட்சிக்கோ, குழுக்களுக்கோ,மக்களுக்கோ பலன் கிடைக்காது. ஆகவே பாசிச எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம் உழைக்கும் மக்களுக்கு முழுமையான பலன் கிடைக்க வேண்டுமானால் உழைக்கும் மக்களுக்காக உண்மையில் பாடுபட விரும்பும் கம்யூனிஸ்டுகள் தங்களது பலத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
அதற்கு கம்யூனிஸ்டுகள் முதலில் மார்க்சிய லெனினிய சிந்தனைமுறையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிளவுபட்டுள்ள கம்யூனிஸ்டுகளை ஒன்றுபடுத்தி ஒன்றுபட்ட போல்ஷ்விக் பாணியிலான கட்டுப்பாட்டுள்ள கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டிட வேண்டும். மக்கள் திரள் அமைப்புகளில் செயல்பட்டு அதனை புரட்சிகரமான அமைப்புகளாக மாற்ற வேண்டும். இவ்வாறு மக்களின் ஆதரவுபெற்ற செல்வாக்குள்ள கட்சியாக கம்யூனிஸ்டுக் கட்சியை உருவாக்க வேண்டும். இதற்கு மாறாக பிளவுபட்ட குழுக்களாக கம்யூனிஸ்டுகள் இருந்துகொண்டே முதலாளித்துவ கட்சிகளுடன் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை கட்டுவது தற்கொலைக்கு சமமாகும்.
ஒரு நாட்டில் பாசிசம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது, அந்த பாசிசத்தை வீழ்த்துவதில் உறுதியாகவும் விடாப்பிடி யாகவும் போராடுகின்றவர்கள், மார்க்சிய லெனினிய சித்தாந்த பலமும் அதற்கு விசுவாசமாகவும் உள்ள கம்யூனிஸ்டுகள் மட்டுமே ஆவார்கள். பாசிசத்தால் பாதிக்கப்படுகின்ற பிற முதலாளித்துவ, குட்டிமுதலாளித்துவ வர்க்கங்களும் அவர்களை பிரநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகளும் பாசிசத்தை எதிர்க்கும் போராட்டத்தில் பங்கெடுத்தாலும் இந்த வர்க்கங்கள் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் ஊசலாடவே செய்யும். ஆகவே பாசிச எதிர்ப்பு போராட்டம் வெற்றிபெற வேண்டுமானால் அந்த நாட்டிலுள்ள கம்யூனிஸ்டுக் கட்சியானது பலமான மற்றும் மக்களின் செல்வாக்கைப் பெற்றுபெற்ற கட்சியாக இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான நிபந்தனையாகும். அப்படியானால் ஒரு நாட்டில் பலம்வாய்ந்த கம்யூனிஸ்டுக் கட்சி இல்லை என்றால் பாசிசத்தை எதிர்த்துப் போராடி வீழ்த்த முடியாதா?, நிச்சயமாக முடியாது.
இதில் எவ்விதமான சந்தேகமும் வேண்டாம். இத்தகைய சூழலில் பாசிஸ்டுகளின் ஒடுக்குமுறைகளிலிருந்து மக்களை பாதுகாக்கும் போராட்டங்கள்தான் நடக்கும். அத்தகைய போராட்டங்களும் பெரும்பாலும் மக்களின் தன்னியல்பான போராட்டங்களாகவே இருக்கும். இத்தகைய சூழலில் கம்யூனிஸ்டுகள் என்ன செய்ய வேண்டும்? கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட்டு பலம்வாய்ந்த கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. அத்தகைய ஒன்றுபட்ட பலம்வாய்ந்த கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டாதவரை கம்யூனிஸ்டுகளால் ஒன்றுமே செய்ய இயலாது. இதுதான் இன்றைய இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது. இங்கே போல்ஷ்விக் பாணியிலான பலம்வாய்ந்த கம்யூனிஸ்டுக் கட்சி இருக்கிறதா? இல்லை என்பதே உண்மையாகும். கம்யூனிஸ்டுகளுக்கு இடையில் ஒற்றுமை இருக்கிறதா? இல்லை என்பதே உண்மையாகும். பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி வரி போன்ற மக்களுக்கு எதிரான திட்டங்களையும் நடவடிக்கைகளையும் தடுக்க முடிந்ததா? இல்லை என்பதே உண்மையாகும். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கொண்டுவரப்படும் பிற்போக்கு மற்றும் மக்களுக்கு கடுமையான பாதிப்பை கொடுக்கும் கல்வியை தடுக்க முடிந்ததா? ஆகவேதான் தற்போதைய சூழலில் பாசிச ஆட்சியாளர்கள் தொடுக்கும் அடக்குமுறைகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க அனைத்துப் பிரிவினரும் ஒன்றுபட்டு போராடுவதும், மறுபுறத்தில் மிகச் சிறந்த கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டுவதற்கு ஒவ்வொரு கம்யூனிஸ்டும் பாடுபட வேண்டும்.
தேன்மொழி.
No comments:
Post a Comment