1. “சுய விமர்சனம் செய்து கொள்வதன் நோக்கம், நமது ஐக்கியத்தை வலுப் படுத்து வதற்கேயாகும். எதார்த்தமான சான்றுகளிலிருந்து உண்மையைத் தேடும் அவசியம் பற்றி தலைவர் மாவோவின் வழிகாட்டுதல்களை நாம் கடைபிடிப்பது மிக முக்கியமாகும்” என்றார் சௌ என் லாய். சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்ளேயே உள்ள தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உண்மையையே பேச வேண்டும் என்று சௌ என் லாய் அறிவுரை வழங்கினார் என்றால் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்ளும் பொய் பேசுபவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் மாபெரும் புரட்சிக்குத் தலைமைதாங்கியகட்சிக்குள்ளேயே பொய் பேசுபவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றால் இந்தியாவில் புரட்சியை நோக்கி ஓர் அடிகூட எடுத்துவைக்காத கம்யூனிச அமைப்பிற்குள்ளும் பொய் பேசுபவர்கள் இருப்பார்கள் அல்லவா? அப்படி பொய் பேசுபவர்கள் கம்யூனிய அமைப்பிற்குள் இருந்தால், அவர்கள் தங்களது குறைகளை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் அந்த அமைப்பு கம்யூனிச அமைப்பாக வளர்வதற்கு அது தடையாகவே இருக்கும்.
இங்குள்ளகம்யூனிச அமைப்புகளிலுள்ள சில தலைவர்களே தங்களது சுயநலத்துக்காகப் பல பொய்களைப் பேசிக்கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம். இத்தகையவர்கள் தோழர் சௌ என் லாய் அவர்களின் போதனையைப் பின்பற்றுவது மிகமிக அவசியமாகும். உண்மையை புறநிலை எதார்த்தமான சான்றுகளிலிருந்துதான் நாம் தேட வேண்டும்.
இதற்கு மாறாக அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதற்காகவும் கட்சியின் தலைவர் சொன்னார் என்பதற்காகவும், தலைவர் உண்மையைத்தான் சொல்வார் என்ற நம்பிக்கையிலிருந்தும் தலைவர் சொல்வது உண்மை என்று நம்பக் கூடாது. தலைவரே சொன்னாலும் அதற்குத் தேவையான புறநிலைச் சான்றின் அடிப்படையிலேயே உண்மையை நாம் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு விசயம் உண்மையாகவே
இருந்தாலும் சான்றுகள் இல்லை என்றால் அதனை ஆய்வுக்குரியதாகவே கருத வேண்டும், அதற்காக நாம் ஆய்வு செய்து சான்றுகளை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு மாறாக சான்றுகள் இல்லை என்றால் அதனை உண்மை என்று ஏற்றுக்கொள்ளக் கூடாது. .சரியான சான்றுகளுடன் கட்சிக்குள் ஒருவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொண்டு சுயவிமர்சனம் செய்ய வேண்டும். அதன் மூலமே கட்சிக்குள் ஒற்றுமை வளரும். இதற்கு மாறாக ஒருவர் கட்சித் தலைவர் மீது விமர்சனம் வைத்துவிட்டால் அவர் கட்சிக்கே எதிரான துரோகி என்று முத்திரை குத்தி விரட்டியடித்துவிட்டு தலைமையானது சுயவிர்சனம் செய்துகொள்ள மறுத்தால் அந்தக்கட்சிக்குள் நிச்சயமாக ஒற்றுமை குழைந்து பிளவுஏற்படும். இந்தியாலுள்ள கம்யூனிச அமைப்புத் தலைவர்கள் சுயவிமர்சனம் செய்துகொள்ள மறுத்ததாலேயே அதாவது அவர்களது குறைகளை களைய மறுத்ததாலே கம்யூனிச அமைப்பானது பல சிறு குழுக்களாக சிதைவுண்டு போனது. ஆகவே கம்யூனிஸ்டுகள் சான்றுகளி லிருந்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும். உண்மையின் அடிப்படை யிலேயே விமர்சனம் சுயவிமர்சனத்தை கையாள வேண்டும். இதுவே சௌ என் லாய் நமக்குப் போதிக்கும் போதனையாகும். இதனை பின்பற்றுபவரே கம்யூனிஸ்டு ஆவார். இதனை பின்பற்றுகின்ற அமைப்பே கம்யூனிச அமைப்பாகும்.
2. “கடந்த சில ஆண்டுகளாக நமது கட்சியின் நடத்தை வழியில் சில தவறான நடைமுறைகள் தலைதூக்கியுள்ளன. உதாரணமாக, பொய் சொல்லுவதும் அகம்பாவத்துடன் தற்பெருமை கொள்ளும் போக்கும் நிலவுகிறது” என்றார் சௌ என் லாய். அதாவது சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் உள்ள தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களில் சிலர் பொய் சொல்வ தோடு தலைகணம்பிடித்த தற்பெருமை கொள்வோர்களாகவும் இருந்துள்ளனர் என்பதை நாம் அறிய முடிகிறது. சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்ளேயே இத்தகைய தற்பெருமை கொள்ளும் தவறானவர்கள் இருந்துள்ளனர் என்றால் இந்தியாவிலுள்ள கம்யூனிச அமைப்புக்குள் இத்தகைய நபர்கள் இருப்பதில் நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ஆகவே இங்குள்ள கம்யூனிஸ்டுகள், தோழர் சௌ என் லாயின் போதனையைப் பின்பற்றி தலைகணம் பிடித்தவர்களாக இல்லாமல் தன்னடக்கம் உள்ளவர்களாக மாற வேண்டும். அப்போதுதான் உழைக்கும் மக்கள் கம்யூனிஸ்டுகளை மதிப்பார்கள், கம்யூனிஸ்டுக் கட்சியையும் மதித்து அதனை ஏற்றுக்கொள்வார்கள். மேலும் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்து செயல்பட முன்வருவார்கள். இல்லையெனில் கம்யூனிச அமைப்புகள் மக்களின் செல்வாக்கை இழந்து கரைந்துவிடும். அதுதான் இந்தியாவில் தற்போது நடந்துகொண்டு இருக்கிறது. அதாவது கம்யூனிச அமைப்புகள் கரைந்துகொண்டு இருக்கிறது.
3. “மக்களை உண்மையைப் பேசுமாறு நாம் ஊக்கப்படுத்த வேண்டிய நேரமிது. நாம் இதை எப்படிச் செய்யப் போகிறோம்? முதலாவதாக, தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தமக்கு கீழிருந்து வரும் கருத்துரைகளைக்காது கொடுத்துக் கேட்க்கத் தயாராக இருக்க வேண்டும்; பொய்யான கூற்றுகளை எதிர்க்க வேண்டும்”. என்றார் சௌ என் லாய். இங்கே கம்யூனிஸ்டுகளே, பொறுப்பிலுள்ள சிலரே பொய் பேசிக்கொண்டு இருக்கிறார்கள், முதலில் அவர்கள் பொய் பேசுவதை கைவிட்டுவிட்டு உண்மையைப் பேச வேண்டிய நிலையில் கம்யூனிச அமைப்பு கள் உள்ளது. அவர்கள் உண்மையைப் பேசியிருந்தால், மனம்விட்டு கருத்து வேறுபாடுகளை தீர்த்திருந்தால், உண்மையை கண்டுபிடிப்பதற்கானமார்க்சியஆசான்களதுவழிகாட்டுதலைப் பின்பற்றியிருந்தால் அவர்கள் பிளவுபட்டுசிறுகுழக்களாகசிதறியிருக்க மாட்டார்களே. பிளவுபட்ட ஒவ்வொரு குழுவும் தனித்தனியான கொள்கை வகுத்து அந்தக் கொள்கைசரியானது தானா என்பதை உணராமலேயே அதனை புரிந்துகொள்வதற்கான முயற்சி செய்யாமலேயே, தவறான கொள்கைகளை முன்வைத்து தனித்தனியாக செயல்பட்டு உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்கு குழிபறித்து என்ன சாதிக்கப் போகிறார்கள்? ஆகவே இவர்கள் உண்மைகளைகண்டுபிடிக்க எதார்த்தமான சான்றுகளையும் ஆதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டு தேடிக் கண்டுபிடித்து அதன் அடிப்படையில் ஒன்றுபட வேண்டும். அதற்கு இவர்கள் எப்போதும் உண்மையையே பேச வேண்டும். கம்யூனிஸ்டுகள் உண்மையைப் பேசப் பழகிவிட்டு பின்பு மக்களிடம் உண்மையைப் பேச வேண்டும் என்ற பிரச்சாரம் செய்யவேண்டும். மேலும் கம்யூனிஸ்டுத் தலைவர்கள் பிறருடைய கருத்துக்களை காதுகொடுத்து கேட்டு பரிசீலித்து எது உண்மையான கருத்து என்று அறிய வேண்டும். இதற்கு மாறாக தனக்கு சாதகமான கருத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு உண்மையான கருத்துக்கு எதிராக பொய்யான கருத்தை ஏற்கக் கூடாது. ஆனால் இங்கு சில சுயநலவாதத் தலைவர்களே தங்களுக்குஇடையூறாக இருக்கிறார்கள் என்று கருதி சொந்த அமைப்பைச் சேர்ந்தவர்களைப் பற்றி தலைவர்களே பொய்யாகப் பிரச்சாரம் செய்கிறார்களே. இவர்களை யார் திருத்துவது?.
4. சீனக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களில் சிலர், தனக்குகீழ் உள்ள கட்சி உறுப்பினர்களுக்கு கடுமையான பணிகள் செய்ய வேண்டும் என்று உத்தரவிடுகிறார்கள். அதனைச் செய்ய முடியாமல் கட்சி உறுப்பினர்கள் பொய்யான அறிக்கையை தலைவர் களிடம் கொடுத்தார்கள் என்று சௌ என்லாய் குறிப்பிடுகிறார். அதாவது கட்சித் தலைவர்களின் அனுகுமுறையானது கட்சி உறுப்பினர்களை பொய் பேசுவதற்கு தூண்டுவதற்கு காரணமாகஇருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்கே பல அமைப்புகளிலுள்ள உறுப்பினர்கள் அவர்களது சொந்த அமைப்பின் கருத்துதான் சரியானது என்று பேச வேண்டும். அந்தக் கருத்து தவறானது என்று பிறர் சொல்வதைப் பேசி விவாதிக்கக் கூடாது என்று கட்டுப்பாடுவிதிக்கப்படுகிறது. ஆகவே கட்சி உறுப்பினர்கள் பலரும் கட்சியின் தவறான கருத்தை விமர்சித்து தங்களுக் கிடையில் பேசுவதற்கே அச்சப்படுவதை நாம் பார்க்க முடிகிறது. ஒரு கட்சி உறுப்பினரின் கையில் மாற்று அமைப்பின் புத்தகமோ அல்லது பிரசுரமோ இருந்தால் அவர் மீது துரோகி என்று முத்திரை குத்தப்படுவதை நாம் பார்க்கிறோம். இதன் மூலம் சில குழுக்களின்தலைவர்களே அமைப்பிலுள்ள உறுப்பினர்களை பொய் பேசத் தூண்டுவதை காணமுடிகிறது. இத்தகைய தலைவர்களை கட்சி உறுப்பினர்கள் எதிர்த்துப் போராடுவதற்கு அச்சப்படு கிறார்கள், ஆகவே இந்த தலைவர்களின் கருத்துக்களை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்கிறார்கள். இத்தகைய போக்கை போக்குவதற்கு கம்யூனிஸ்டுகள் பாடுபட வேண்டும் என்பதுதான் சௌ என் லாயின் போதனையாகும்.
5. கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் தவறு செய்யலாம், தவறான கருத்துக்களை கொண்டிருக்கலாம். அதற்கு அவர்கள் மட்டும் காரணம் இல்லை. அந்த தவறுகளுக்கு கட்சித் தலைவர்களும் ஒரு முக்கியமான காரணம் ஆகும்.
அந்தத் தவறுகளுக்கு தலைவர்களும் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் கட்சி உறுப்பினர்கள் தவறு செய்தால் அந்தத் தவறுகளை அவர்களுக்கு உணர்த்தி அவர்களுக்கு நல்வழிகாட்ட வேண்டிய பொறுப்புதலைவர்களுடையதாகும். அந்தப் பொறுப்பை தலைவர்கள் தொடர்ந்து செய்தால் கட்சி உறுப்பினர்கள் தங்களது தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். இதற்கு மாறாக தலைவர்கள் தனது கடமையைச் செய்யாமல் கட்சி உறுப்பினர்களை குறை சொல்லிக் கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதால் இந்தக் குறைகள் அகன்றுவிடாது. மேலும் மேலும் குறைகள் தொடரவே செய்யும். இப்போதும் இந்தியாவில் கம்யூனிஸ்டு அமைப்பு உறுப்பினர்களிடம் இருக்கும் குறைகளுக்கு முதன்மையான காரணம் கம்யூனிஸ்டுத் தலைவர்களே ஆவார்கள். ஆனால் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள் அவர்களது கட்சி உறுப்பினர்களிடம் காணப்படும் தவறுகளுக்கு தலைவர்களே பொறுப்பேற்றுக்கொண்டு கட்சி உறுப்பினர் களை தொடர்ந்து திருத்தும் கடமையைச் செய்தார்கள்.
அதனால்தான் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி வெற்றி பெற்றது. ஆகவே இங்குள்ள கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அனுபவத்தி லிருந்த தங்களது கடமையை உணர்ந்து செயல்படவேண்டும்.
6.”கம்யூனிஸ்டுகள் மக்களை உண்மையைப் பேசுமாறு நாம் தூண்ட வேண்டும். அவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்களோ அது எவ்வளவு நீண்டதாகவும் சலிப்பூட்டு வதாகவும் இருந்தாலும் கூட நாம் பொறுமையாகக் கேட்க்க வேண்டும்” என்றார் சௌ என் லாய். அதாவது கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள், மற்றும் உறுப்பினர்கள் உண்மையைப் பேசுவதோடு மட்டுமல்லாமல் மக்களையும் உண்மையைப் பேசுமாறு கம்யூனிஸ்டுகள் தூண்ட வேண்டும் என்றார் சௌ என் லாய். மேலும் மக்கள் என்ன சொல்கிறார்களோ அதனை கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களும் அதன் தலைவர்களும் காதுகொடுத்து கேட்க்க வேண்டும் என்றார் சௌ என் லாய். ஆனால் இங்கே சில தலைவர்கள் அவர்களது கட்சி உறுப்பினர்கள் சொல்வதையே கேட்ப்பதில்லை. தலைவர் களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால், அவரது பேச்சை கேட்க்க மறுப்பதுஅவரைப் பற்றி பொய்ப் பிரச்சாரம் செய்து அவரை இழிவுபடுத்தி பிற உறுப்பினர்களிடமிருந்து தனிமைப் படுத்தி, அவரை கட்சியிலிருந்து வெறியேறும்படி செய்துவிடும் தலைவர்களை இங்கே நாம் பார்க்கிறோம். ஆகவேதான் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொரு கம்யூனிஸ்டும் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றும், மக்களின் சந்தேகங்களைப் போக்க வேண்டும் என்று போதித்தார்கள். இங்குள்ள சில தலைவர்கள் இந்த போதனைகளை பின்பற்ற மறுத்து, கட்சி உறுப்பினர்கள் மற்றும் பிற அமைப்பைச் சேர்ந்தவர் களின் கேள்விகளுக்கே பதில் சொல்ல மறுத்து அகம்பாவம் கொள்கிறார்கள். தலைவர்களிடமுள்ள இந்தத் தவறுகள் களையப்பட வேண்டும்.
7. கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் சிலர் உண்மையாகவே மக்களுக்காகப் பாடுபடுவார்கள். இதற்கு மாறாக வேறுசிலர்மக்களுக்காக பாடுபடுவதைப் போல் நடிப்பார்கள். இத்தகைய நடிகர்களாக கம்யூனிஸ்டுகள் இருக்கக் கூடாது என்றார் சௌ என் லாய். ஆகவே ஒவ்வொரு கம்யூனிஸ்டும் இவ்வாறு நடிக்கக் கூடாது என்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு கம்யூனிஸ்டும் மக்களுக்காக உண்மையாகவே பாடுபட வேண்டும். மேலும் கட்சிக்குள் செயல்படும் உண்மையானவர்களையும் பொய்யாக நடிப்பவர்களையும் வேறுபடுத்தி புரிந்து கொள்ளும் ஆற்றலை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இத்தகைய தவறுகள் செய்பவர்களை ஆரோக்கியமான முறையில் விமர்சனம் செய்து அவர்களை திருத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும், கூடுதலாக உதவி செய்யவேண்டும்.
8. சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் ஒரு சமயம் இடது தீவிரவாத கருத்துக்கள் செல்வாக்குப் பெற்றிருந்தது. அத்தகைய இடது தீவிரவாத கருத்தை கொண்டிருந் தவர்கள், தற்புகழ்ச்சியை எதிர்ப்பது, எதார்த்தமான சான்றுகளிலிருந்து உண்மையைத் தேடுவது போன்ற சரியான கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாமல் அதனை எதிர்த்தனர். இத்தகைய சரியான கருத்துக்கள் எல்லாம் முதலாளித்துவ வகைப்பட்டது என்று கருதினர். இத்தகைய இடது தீவிரவாதிகள் கட்சிக்குள் இருந்த சரியான கருத்திற்காகப் போராடிய தோழர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி அவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்கினார்கள். இவ்வாறு தவறாக தண்டிக்கப் பட்டவர்களை தண்டனையிலிருந்து சீனக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைமையானது விடுவித்தது. இவ்வாறு பொருத்தமற்ற தவறான முறையில் தோழர்களை தண்டிப்பது தவறானது என்று சீனக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள் கட்சி உறுப்பினர்களுக்கு போதித்தார்கள். ஆனால் இங்குள்ள குழுத் தலைவர்களே சான்றுகளிலிருந்து
உண்மையைத் தேட வேண்டும் என்ற விஞ்ஞானக் கோட்பாட்டை பின்பற்றுவதில்லை. மாறாக தனது மனம் என்ன கருதுகிறதோ அதையெல்லாம் உண்மை என்று கருதி, கட்சிக்குள் செயல்படும் உண்மையான தோழர்களின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து அவர்களை விரட்டியடித்து அமைப்பை மேலும் மேலும் பிளவுபடுத்திக் கொண்டிருக் கிறார்கள். இத்தகைய தலைவர்கள் தற்புகழ்ச்சிக்காக எதையும் அதாவது எத்தகைய தவறையும் கூசாமல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இத்தகைய தவறான தலைவர்களை இனம்காண்பதற்கான அறிவற்றவர் களாகவே கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
ஆகவே கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள் சௌ என் லாய் போன்ற மார்க்சிய ஆசான்களது போதனைகளைப் படித்துப் புரிந்துகொண்டால், உண்மை எது பொய் எது என்பதை புரிந்துகொண்டு பொய்களை எதிர்த்துப் போராடி உண்மைகளை நிலைநாட்டுவார்கள். தலைவர்களை கண் மூடித்தனமாக நம்பமாட்டார்கள், தலைவர் களையும் விமர்சனப்பூர்வமாக மதிப்பிடும் ஆற்றலை வளர்த்துக் கொள்வார்கள்.
9.“மக்களின் நல்வாழ்வுக்காக நாம் மெய்யான அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும். நடைமுறையில் விளைவுகளைச் சாதிக்க வேண்டும். இதுதான் உண்மையான தகுதிக்கான சான்றிதழ் ஆகும்” என்றார் சௌ என் லாய். இதன் மூலம் கம்யூனிஸ்டுகளின் தகுதியை சௌ என் லாய் வரையறை செய்கிறார். கம்யூனிஸ்டுகள் ஒவ்வொருவரும் மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்க வேண்டும். மேலும் அவர்களின் செயல்பாட்டின் மூலம் நல்ல விளைவுகள் ஏற்பட வேண்டும். அத்தகைய முறையில் செயல்படுபவரே உண்மையான கம்யூனிஸ்டு ஆவார். இதற்கு மாறாக இங்குள்ள கம்யூனிச அமைப்புகளிலுள்ள வர்களில் சிலர், மக்களின் நலனுக்காகப் பாடுபடுவதில்லை. மாறாக தனது சொந்த நலனுக்காகவே பாடுபடுவதை காண முடிகிறது. இவர்களுக்கு புகழ் வேண்டும், பதவி வேண்டும்.
அதற்காகவே இவர்கள் பாடுபடுகிறார்கள். இவர்களுக்கு மக்களின் நலன் மீது அக்கறை சிறிதும் இல்லை. உண்மையில் இவர்களுக்கு மக்களின் நலனில் அக்கறை இருந்திருக்குமானால் பல சிறு குழுக்களாக பிளவுபட்டிருக்க மாட்டார்கள். இவர்களின் நலனுக்காகவே ஒன்றுபட்ட அமைப்பை பிளவுபடுத்திவிட்டு அதற்கான பழியை பிறர் மீது சுமத்தி தன்னை புனிதர்களாக காட்டிக் கொள்கிறார்கள். வேறொரு பிரிவினர் தங்களது சொந்த சுயநலத்துக்காக கட்சியை திருத்தல்வாத கட்சியாக மாற்றி முதலாளிகளிடம் சமரசம் செய்துகொண்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள். இதற்கு காரணம் இவர்களிடமிருக்கும் மார்க்சிய லெனினிய சிந்தனை முறைக்கு எதிரான குறுங்குழுவாத சிந்தனைமுறைதான். ஆகவே கம்யூனிச அமைப்புக்குள் நிலவும் குறுங்குழுவாத சிந்தனை முறையை ஒழித்துவிட்டு மார்க்சிய லெனினிய சிந்தனை முறையை வளர்த்துக் கொள்பவர்களால்தான் சிறந்த கம்யூனிஸ்டு என்ற தகுதியை அடையமுடியும். இத்தகைய மார்க்சிய லெனினிய வாதிகளால் மட்டுமே மக்களைத் திரட்டிப் போராடி நல்ல விளைவுகளை படைக்க முடியும்.
10.“உண்மையைப் பேசுங்கள்; மெய்யான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்; ஊக்கத்தோடு பணியாற்றுங்கள்; நடைமுறையில் விளைவுகளைச் சாதிக்கப் போராடுங்கள். இவையனைத் தின் வார்த்தெடுக்கப்பட்ட சாரம்தான்”, ”எதார்த்தமான சான்றுகளிலிருந்து உண்மையைத் தேடு!” என்ற முதுமொழி யாகும்” என்றார் சௌ என் லாய். கம்யூனிஸ்டுகள் உண்மையைப் பேசவேண்டும் அதாவது பொய் பேசக்கூடாது. மக்களின் நலனுக்காக உண்மையாகவே பாடுபட வேண்டும், அதாவது மக்களின் நலனுக்காகப் பாடுபடுவது போல் நடிக்கக்கூடாது, அதாவது சுயநலனுக்காகப் பாடுபட்டுக் கொண்டு மக்களின் நலனுக்காகப் பாடுபடுவதை கைவிடக் கூடாது. நடைமுறையில் உங்களின் பணியின் மூலம் விளைவுகள் அதாவது மக்களுக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டும்.
அதாவது மக்களுக்கு நல்ல பலன் கிடைக்காத வகையில் உங்களது பணி இருந்தால் அந்தப் பணியானது விஞ்ஞான அடிப்படையிலான பணி இல்லை என்பதை புரிந்துகொண்டு விஞ்ஞானப்பூர்வமான பணியாக உங்களது பணியை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றே சௌ என் லாய் நமக்குபோதித்தார். ஆகவே கம்யூனிஸ்டுகள் நடைமுறையில் சாதிக்க வேண்டும் என்றால் எதார்த்தமான சான்றுகளி லிருந்து உண்மையை தேடவேண்டும் என்பதே சௌ என் லாய் அவர்களின் வழிகாட்டுதலாகும்.
ஆனால் இங்குள்ள கம்யூனிஸ்டுகள் சௌ என் லாயின் போதனைகளை பின்பற்றுகிறார்களா? இல்லை என்பதே எதார்த்தமாகும். இங்குள்ள கம்யூனிஸ்டு கள் எதார்த்தமான சான்றுகளை புறக்கணித்துவிட்டு தன்மனப் போக்கிலேயே கொள்கை முடிவெடுக் கிறார்கள். அவர்களின் செயல்பாட்டால்தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும் அந்த அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொண்டு தவறான வழிமுறையை மாற்றிக்கொள்வதில்லை.
உதாரணமாக தேர்தல் பாதையிலேயே சென்று முன்புபோல் தேர்தலில் வெற்றிபெற முடியாத நிலை ஏற்பட்டு மக்களின் செல்வாக்கை இழந்தபோதும் புரட்சிப் பாதைக்கு வருவதற்கு மறுப்பதை நாம் பார்க்கலாம்.
அதேபோல் சிறிய குழுக்களில் மேலும் மேலும்பிளவுபட்டுக் கொண்டே போவதற்கு காரணம் என்ன? என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.
குழுவானது மேலும் பிளவுபடாமல் இருப்பதற்கும் குழுக்கள் இணைந்து ஒன்றுபட்ட கட்சியை கட்டுவதற்கான வழியை காண்பதற்கு இவர்கள் முயற்சி செய்வதே இல்லை. இதற்கு காரணம் இவர்கள் எதார்த்த சான்றுகளிலிருந்து உண்மையைத்தேடுவதில்லை.உண்மையைப் பேசுவதில்லை. இவர்களிடம் தவறு இருக்கிறது என்ற உண்மையை இவர்கள் உணர்வதில்லை. தவறுகளை களைவதும் இல்லை. தவறே செய்யாத புனிதமானவர்களாக தங்களை கருதிக் கொள்கிறார்கள். ஆகவே இவர்கள் தோழர் சௌ என் லாய் அவர்களின் போதனையை பின்பற்றி செயல்படாதவரை இவர்களால் வளர முடியாது. இவர்கள் மக்களின் செல்வாக்கை இழந்து தேய்ந்துகொண்டே போவது தவிர்க்க முடியாதது.
11. கம்யூனிஸ்டுகள் தற்பெருமை கொள்வதும் தங்களது நடவடிக்கைகள் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் மிகைமதிப்பீடு கொள்ளக் கூடாது என்றார் சௌ என் லாய். இங்குள்ள கம்யூனிஸ்டுகள் அவர்கள் செய்யும் தவறுகளை பார்ப் பதில்லை. அவர்களிடமுள்ள குறைகளை யும் பார்ப்பதில்லை. அவர்கள் செய்யும் தவறுகளையும் அவர்களிடமுள்ள குறை களையும் மற்றவர்கள் சுட்டிக்காட்டினால் அதனை பரிசீலிப்பதும்இல்லை. தவறுகளை சுட்டிக்காட்டுபவர் மீது கடும் கோபம் கொள்கின்றனர்.சுட்டிக்காட்டுபவர்கள் மீதே குற்றம் சாட்டி அவர்களை வெறுக்கிறார்கள்.
ஆனால் தவறுகளையும் குறைகளையும் பிடிவாதமாக களைய மறுக்கிறார்கள். இதற்கு மாறாக தற்பெருமை கொள்கிறார்கள். அவர்கள்தான் மக்களுக்காகப் பாடுபடும் புரட்சியாளர்கள் போலவும் மற்றவர்கள் எல்லாம் துரோகிகளாகச் சித்தரிக்கிறார்கள். இவர்களது தவறுகளை சுட்டிக்காட்டு பவர்கள், இவர்கள் மீதான காழ்ப்புணர்சி கொண்டுள்ளதாக கருதுகிறார்கள். இவர்களின் செயல்பாட்டால் மக்களுக்கு எவ்விதமான பயனும் கிடைக்கவில்லை என்றாலும், மக்கள் இவர்களை ஆதரிக்கவில்லை என்றாலும் மக்களுக்கு நல்ல பலன் கிடைத்துவிட்டதாகவும் இவர்களுக்கு மக்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் மிகைமதிப்பீடு செய்து சுயதிருப்தி கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் செய்யும் தவறுகளை களையாததால் மக்களுக்கு இவர்களால் எவ்விதமான நன்மையும் கிடைக்காததால் மக்கள் இவர்களைவிட்டு தூரமாக விலகிப் போய்க்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே இவர்கள் மார்க்சிய ஆசான்களின் போதனைகளை பின்பற்றாதவரை இவர்களுக்கு வளர்ச்சியில்லை.
12.முதலாளித்துவ நிறுவனங்களில் அதிகாரிகளுக்கு ஏற்பவே கீழ்மட்ட ஊழியர்கள் உண்மைக்கு மாறான பொய்களை பேசுவார்கள். அதேபோலவே முதலாளித்துவ கட்சிகளிலும் தலைவர் களிடம் உண்மையை மறைத்து கட்சி உறுப்பினர்கள் பொய் பேசுவார்கள். அது போலவே சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிக் குள்ளும் கட்சி உறுப்பினர்கள் கட்சித் தலைவர்களை சந்தோசப்படுத்த வேண்டும் என்பதற்காக உண்மையை மறைத்து பொய்பேசினார்கள். இதனை சௌ என் லாய் கண்டித்தார். இதுபோன்று உண்மையை மறைத்து பொய் பேசுவதை ஒழிக்க வேண்டும் என்றால் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களுக்கும் கட்சி உறுப்பினர் களுக்கும் இடையிலும் கட்சித் தலைவர் களுக்கும் மக்களுக்கும் இடையிலும் இடைவெளி இருக்கக் கூடாது என்றும் கம்யூனிஸ்டுகள் மக்களையும் கட்சி உறுப்பினர் களையும் சமமாக மதிக்க வேண்டும் என்றும் கட்சித் தலைவர்களைக்கண்டு மக்களுக்கும் கட்சி உறுப்பினர் களுக்கு அச்சம் இருக்கக் கூடாது என்றும் சௌ என் லாய் போதித்தார். இதன் மூலம் கட்சிக்குள் தலைமை வழிபாடு இருக்கக் கூடாது என்றார். ஆனால் இங்கே கம்யூனிச அமைப்பிற்குள் தலைமை வழிபாடு இருப்பதை நாம் காணலாம்.
கட்சியின் தலைவரை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராகப் பார்க்கிறார்கள். கட்சித் தலைவரின் குறையை எடுத்துச் சொல்பவர்களை கட்சியின்எதிரிகளாகப் பார்க்கிறார்கள். கட்சித் தலைவர் பொய் சொன்னாலும் அதனை கண்டும் காணாமல் இருக்கிறார்கள். கட்சித் தலைவரைக் கண்டு அஞ்சுவதை காண முடிகிறது. மேலும் கட்சித் தலைவரை கண்மூடித்தனமாக நம்புவதையும் பார்க்க முடிகிறது. இதன் காரணமாக கட்சியானது பல குழுக்களாகப் பிளவுபட்டு சீரழிந்துவிட்டது. ஆகவே கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள் தலைமை வழிபாட்டுக்கு பலியாகக் கூடாது என்பதை உணர வேண்டும்.
13.கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் களுக்கும் கட்சி உறுப்பினர் களுக்கும் இடையில் இடைவெளி இருக்கக் கூடாது என்றும் அவர்களுக்கு இடையில் சமத்துவம்தான் இருக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு இடையில் தோழமை உறவுதான் இருக்க வேண்டும் என்றார் சௌ என் லாய். கட்சித் தலைவர்களை அதிகாரிகள் போல் உறுப்பினர்கள் கருதக் கூடாது என்றும், கட்சியின் தலைவர்களும் தங்களை சகல அதிகாரம் படைத்தவர்களாகவும் தனது ஆனைக்கு உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும் என்றும் கருதக்கூடாது. அதே போலவே கம்யூனிஸ்டுகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையிலான உறவும் தோழமையாகவே இருக்க வேண்டும்.
ஏனெனில் நாம் சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கு மக்களிடம் நெருங்கிய உறவை அமைத்துக் கொண்டு அவர்களின் வாழ்நிலை, மற்றும் உணர்வுகளைப் புரிந்துகொள்ள அவர்களிடம் கருத்துக்களை கேட்டு விசாரித்திட வேண்டும். அத்தகைய விசாரணைகளின் மூலமே நாம் பகுத்தறிந்து சமூகத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஆகவே கம்யூனிஸ்டுகள் மக்களிடம் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்ளவும் அவர்களை தமக்குசமமானவர்களாக நடத்திட வேண்டும். இது போன்ற நல்ல உறவுகளைசீனக் கம்யூனிஸ்டுகள் சீனாவில் புரட்சி நடப்பதற்கு முன்பு பெருமளவுபின்பற்றினார்கள் என்றும், புரட்சிக்குப் பின்பு கம்யூனிஸ்டுகளுக்கு அரசியல்அதிகாரம் கிடைத்த பின்பு அவர்களிடையே அதிகாரவர்க்கப் பண்புஅதிகரித்து கட்சித் தலைவர்களுக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான உறவுகளும், கம்யூனிஸ்டுகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகளும் சீர்கெட்டு இடைவெளி அதிகமாகிறது என்றுசௌ என் லாய் சுட்டிக் காட்டினார். இத்தகைய உறவு முறை பாழடைவதால்கம்யூனிஸ்டுக் கட்சியானது அதன் புரட்சிகரமான சிறப்புத் தன்மையை இழக்க நேரிடும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த அனுபவத்தை புரிந்துகொள்ள மறுக்கும் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் களையும் கட்சி உறுப்பினர்களையும் நாம் இங்கு பார்க்கிறோம்.
இது தவறு என்பதை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் உணர வேண்டும். இங்கே சில தலைவர்கள் அவர்கள் சொல்வதை உறுப்பினர்கள் கேட்டு கட்டுப்படவேண்டும் என்று விரும்புகிறார்கள். கட்சி உறுப்பினரோ அல்லது சாதாரண மக்கள் சொல்வதை காதுகொடுத்தும் கேட்ப்ப தில்லை. இத்தகைய தலைவர் களால்தான் கம்யூனிஸ்டுக் கட்சியை மக்கள் புறக்கணிக்கிறார்கள்,மேலும் கட்சியானது பல பிளவுகளை சந்திக்கிறது.
14. சீனாவில் கம்யூனிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்தின் மூலம் புரட்சி நடத்திய பொழுது, அவர்களது இராணுவத்தில் ஜனநாயக முறையை கடைபிடித்தார்கள். அந்த இராணுவத்தில் ஜனநாயகம் மேலோங்கி இருந்தது.
அதன் காரணமாக கம்யூனிஸ்டுகள் நடத்திய பல போர்களில் வெற்றி பெற்றனர். அந்த நேரத்தில் பெரும் படைப் பிரிவின் கீழுள்ள ஆயுதக் குழுக்கள் கூட இராணுவச் செயல்தந்திரத்திட்டங்களை விவாதிக்கவும், போர் நடவடிக்கைகள் பற்றிய தமது கருத்துக்களைக் கூறவும் பெரிதும் ஊக்குவிக்கப்பட்டனர். கீழ்மட்டத்திலுள்ள இராணுவவீரர்கள், இராணுவவிவகாரங்கள் குறித்து ஜனநாயக முறையில் விவாதிக்கும் நடைமுறையை தோழர் மாசேதுங் தொடங்கி வைத்தார். அவர்களது அனைத்து இராணுவக் குழுக்களின் அனுபவங்களைத் தெரிவிப்பதற்கும் வழிகாட்டினார். இராணுவக் குழுக்களிலேயே ஜனநாயகத்தைப் பரந்துபட்ட அளவில் நடைமுறைப் படுத்தும்போது, ஏன் அதை கட்சி அமைப்புகளில் செயல்படுத்த முடியாது?
கட்சியின் ஜனநாயகப் பாரம்பரியத்தை நிலைநாட்டி, கட்சி அமைப்பு விதிகளின்படி நாம் செயல்படுவதே சரியானதாகும் என்ற சரியான முடிவை எடுத்து சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி பின்பற்றியது. இத்தகைய ஜனநாயகப் பாரம்பரியத்தை கொண்டதுதான் ரஷ்ய சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிகள் உட்பட சர்வதேச கம்யூனிஸ்டுகள் ஆவார்கள். இத்தகைய ஜனநாயகப் பாரம்பரியத்தை பின்பற்றும் கம்யூனிஸ்டுக் கட்சி ஏதாவது இந்தியாவில் உள்ளதா? அப்படிப்பட்ட கம்யூனிஸ்டுக் கட்சி இந்தியாவில் இருந்திருக்குமானால் இந்தியாவில் கம்யூனிஸ்டுக் கட்சி உருவாகி நூறு ஆண்டுகளுக்குப் பின்பும் கம்யூனிச இயக்கம் வளர்ந்திருக்க வேண்டும்.
இந்தியாவில் கம்யூனிஸ்டுகளின் கொள்கையை பெருவாரியான மக்கள் ஏற்றுக்கொண்டு இருக்க வேண்டும். ஆனால் இங்கு கம்யூனிஸ்டுகள் பல பிரிவாக பிளவுபட்டுள்ளார்கள். கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களுக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையே பலருக்கும் தெரியவில்லை.
மக்களில் பெரும்பாலோருக்கு கம்யூனிசக் கொள்கைகள் தெரியாத நிலைதான் காணப்படுகிறது. சீனாவில்
கம்யூனிஸ்டுக்கட்சியின்கொள்கைகளை கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களிடம் விவாதித்து கருத்து கேட்க்கும் ஜனநாயக முறை பின்பற்றியது.இங்கு அத்தகைய ஜனநாயக முறை பின்பற்றப்படுகிறதா? இல்லையே. ஆகவே ஜனநாயகத்தை மறுக்கும் ஒரு கட்சியானது நிச்சயமாக கம்யூனிஸ்டுக் கட்சியாக இருக்க முடியாது. எனினும் மக்களிடம் கட்சியின் கொள்கையைவிவாதிக்க வேண்டு மானால் மக்கள் கேட்க்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டும். மக்களின் சந்தேகங்களை தீர்க்க வேண்டும். அதற்குத் தேவையான அறிவை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் பெற்றிருக்க வேண்டும். அதற்கு கம்யூனிஸ்டுக் கட்சியானது தொடர்ந்து மார்க்சிய லெனினிய கல்வியை கட்சி உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் வழங்க வேண்டும். இத்தகைய கல்வி இயக்கத்தை நடத்துவதற்கு தயாரில்லாத எந்தக் கட்சியும் கம்யூனிஸ்டுக் கட்சியாக வளர முடியாது.
15. சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமையானது தவறான உத்தரவுகளை கீழ்மட்ட உறுப்பினர் களுக்கு அனுப்பியது. பல பிரச்சனைகளைப் பற்றி தொலைபேசி யின் மூலமாகவே பேசி முடிவெடுத்தது. இதன் மூலம் விவாதங்களை ஜனநாயக முறையில் கட்சி நடத்த தவறியது என்கிறார்சௌ என் லாய். இதன் காரணமாக கட்சித் தலைமையானது உத்தரவுகளை கட்சி உறுப்பினர்களிடம் திணித்தார்கள். ஆகவே கம்யூனிஸ்டுக் கட்சியானது கொள்கை முடிவுகளை மிகவும் விரிவான ஜனநாயக முறைகளைப் பின்பற்றி கட்சி முழுவதும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். அத்தகைய விவாதங்கள் நடத்தப்படா மலேயே முடிவெடுத்தாலும் அதன் பிறகும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே விவாதிக்கவும் அதனை நடைமுறைப் படுத்தும் போது உறுப்பினர்களுக்கு கிடைத்த அனுபவத்தை பகிர்ந்துகொள்ளவும் வேண்டும். இத்தகைய ஜனநாயக முறையை பின்பற்றும் கட்சிதான் கம்யூனிஸ்டுக் கட்சியாக இருக்க முடியும்.
கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களை கட்சியின் தலைவர்கள் தங்களது சுய விருப்பு வெறுப்பின் அடிப்படையில் எவ்விதமான சான்றுகளும் சாட்சிகளு மின்றி பொய்யாக குற்றம்சாட்டி தண்டிக்கக் கூடாது என்றார் சௌஎன் லாய். ஆனால் இங்குள்ள சிறிய குழுக்களில் சௌ என் லாய்அவர்களின் போதனையை பின்பற்றுவதில்லை. மாறாக இங்குள்ள குறுங்குழுவாதத் தலைவர்கள் அவர்களுக்குப் பிடிக்காதவர்களை, அவர்களின் கருத்தை மறுத்து மாற்றுக் கருத்தை முன்வைப்பவர்களின் மீது எவ்விதமான சான்றுகளும் ஆதாரமும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்துதண்டிக்கிறார்கள்.பொய்யான குற்றச் சாட்டைகட்சி முழுவதற்கும் பரப்பி ஒரு நல்ல தோழரின் மீது கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெறுப்பு கொள்ளும்படி செய்கிறார்கள். அதன் பயனாக ஒரு நல்ல தோழர் அனைத்து கட்சி உறுப்பினர் களிடமிருந்து தனிமைப்பட்டு வேதனைப் பட்டு கட்சியிலிருந்து வெளியேறி விடுகிறார். இதனால் கட்சியானது பிளவுபட்டு பல குழுக்களாக சிதறிவிட்டது. ஆகவே ஒரு புரட்சிகரமான கம்யூனிஸ்டுக் கட்சியை கட்ட விரும்பும் ஒவ்வொரு கம்யூனிஸ்டும் விரிவான ஜனநாயகத்தைப் பின்பற்ற வேண்டும். இத்தகைய ஜனநாயகத்தை ஒரு கம்யூனிஸ்டு பின்பற்ற வேண்டும் என்றால் அவர் பல்வேறு விதமான கருத்துக்களோடு போராட வேண்டும். இவ்வாறு பல்வேறு கருத்துக்களோடு போராடுவதற்கு அஞ்சியே இங்குள்ள கம்யூனிஸ்டுகள் ஜனநாயகத்தை மறுக்கிறார்கள். லெனின் மாவோ போன்ற தலைவர்கள் கட்சி உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் ஜனநாயகத்தை வழங்கி கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள், அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைத்தார்கள். அதற்கான அறிவும் திறமையும் அவர்களிடம் இருந்தது. ஆனால்
தற்போதைய உலகில் நாம் பல பிரச்சனைகளை சந்திக்கிறோம், சமூகம் மிகவும் சிக்கலான இயக்கத்தில் உள்ளது. ஆகவே இங்கு எழும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு லெனின் மாவோ போன்ற தலைவர்கள் நம்மிடையே இல்லை. ஆகவே தற்போதைய சூழலில் நாம் கூட்டுத் தலைமையைத்தான் உருவாக்க முடியும். மேலும் அந்த கூட்டுத் தலைமையானது தொடர வேண்டும் என்றால் மிகவும் அதிகமானவர்கள் அத்தகைய தலைவர் களாக வளர வேண்டும். அதற்குத் தேவை நமக்கு மார்க்சிய லெனினிய கல்வி இயக்கமாகும். ஆகவே மார்க்சிய ஆசான்களது போதனைகளை கற்றுத்தேற மார்க்சிய லெனினிய கல்வி இயக்கத்தை நடத்திடுவோம். மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் புரட்சிகரமான ஒன்றுபட்ட கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டிட பாடுபடுவோம். அதுதான் நமக்கு முன்புள்ள முதன்மையான பணியாகும். தேன்மொழி.
No comments:
Post a Comment