அம்பேத்கர் பெரியார் ஆகியோரின் சாதி ஒழிப்பு பற்றிய கண்ணோட்டம்.

 பெரியாரின் பல்வேறு கட்ட போராட்டங்கள் மதிக்கத்தக்கவையாக இருந்தாலும் அவை சாதி ஒழிப்பிற்கு பயன்படவில்லை என்றே கூறுவேன். ஏனெனில் அவர் சாதியை வெறும் கருத்தியல் அம்சமாக மட்டுமே கண்டார் அதாவது வெளிப்புற அம்சங்களாக உள்ளதை மட்டும் புறக்கணிக்க முற்பட்டார்.(இதனை சாதி நூலில் விரிவாக உள்ளன இங்கே அம்பேத்கர் பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்).

முனைவர் கோ. கேசவன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார், "இங்கிலாந்து தொடக்க கால தொழில் புரட்சி கட்டத்தில் தோன்றிய சார்ட்டியத் தொழிலாளர் இயக்கம் முதலாளியத்தின் மூலதன சுரண்டல் பற்றிய சாராம்ச மற்றும் விஞ்ஞான பூர்வ அறிவின்றி முதலாளியத்தின் கொடுமையை எதிர்த்த பொழுது இயந்திரங்கள் தம்மை சுரண்டுகின்றன என்று கருதி முதலாளிய சுரண்டலின் வெளிப்பாட்டு அம்சங்களான இயந்திரங்களை நொறுக்கியதைப் போன்றதாகும்".(கோ.கேசவன் நூல் தொகுப்பு இரண்டு தலித்தியம் பக்கம் 656).

மேலும், “பெரியாரின் இந்த பயணமானது படிப்பறிவு குறைந்த சமய உணர்வு மேலாதிக்கும் கொண்ட சாதி முறையில் இறுக்கத்தால் கட்டுண்ட ஒரு சமூக சூழலில் கலாச்சார மற்றும் அரசியல் தளங்களில் சாதியை எதிர்க் கொண்ட பெரியாரின் கிளர்ச்சி போராட்டம் முதன்மையாக கருத்த தக்கது. "புனிதங்களாக கருதப்பட்டவனவற்றை தூக்கி போட்டுடைத்து அவற்றின் மீதான பிரம்மையை நொறுக்குகிற இந்தப் போராட்ட வடிவங்கள் மக்களை திரட்டுவதில் சாதகமான பங்களிப்பு ஆற்றவே செய்தது. ஆனால் இந்த சமூக அமைப்பையும் அதை கட்டிக் காக்கும் அரசு அதிகாரத்தையும் தகர்ப்பதன் மூலமே சாதிய முறைக்கான அடித்தளத்தை தகர்க்க முடியும். அதற்குப் பின்னரும் சாதியத்தின் கருத்துகள் அம்சங்களோடு நாம் போராடி தான் ஆக வேண்டும். இத்தகைய கலாச்சார புரட்சியை புரட்சிக்கு பின்னர் நிகழ்த்த வேண்டி உள்ளது". (மேற்கண்ட அதே நூல் பக்கம் 657).

பெரியார் சாதியின் அடிதளமான சமூக பொருளாதர அம்சத்தை புரிந்துக் கொள்ளாததோடு, சாதியின் தோற்றம் அதன் இருப்பு பற்றியும் அதற்கான வர்க்க அடிப்படையும் உள்வாங்கவில்லை எனலாம்.

சாதி ஒழிப்பு பற்றி அம்பேத்கர்

சாதிமுறையானது இந்தியாவின் நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளிலிருந்து எழவில்லை; மாறாக இந்துமதமே சாதியத்தை தோற்றுவித்தது என்று சாதியத்தின் தோற்றம் பற்றி அம்பேத்கர் கருதினார். இதன் காரணமாக, உற்பத்தி உறவுகளை மாற்றுவதற்கான புரட்சி மூலம் அல்லாமல், இந்து மதத்தைச் சீர்திருத்தம் செய்வதன் மூலமாகவே சாதியை ஒழிப்பது சாத்தியம் எனக் கருதினார். இதனால், இந்து மதச் சீர்திருத்தத்திற்கான திட்டம் என்ற முறையில், வேதங்களை ஒழிப்பது; ஒரு பொதுவான அதிகாரபூர்வமான இந்து மதத் திருமறைகளை உருவாக்குவது; அரசாங்கமே புரோகிதர்களை நியமிப்பது புரோகிதர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுகளை நடத்துவது; அந்தத் தேர்வுகளில் எல்லாச் சாதியினரும் பங்குகொள்வது; அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை நியமனம் செய்வது என்பனவற்றை முன்மொழிந்தார். இவை போன்றவற்றை சட்டபூர்வமாக்க வேண்டும் என்றும் கூறினார். இத்தகைய கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து, பிரிட்டிஷ் நிர்வாகத்தினர். அவர்கள் கிறிஸ்த்துவர்கள் என்ற காரணத்தால், சாதியத்தை ஒழிப்பதற்கு பங்காற்றுவார்கள் என்று நம்பிக்கை கொண்டிருந்தார்.

பிரிட்டிஷ் ஆட்சி ஒரு ஏகாதிபத்திய ஆட்சி; அது தன் காலனி ஆதிக்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு நிலப்பிரபுத்துவத்துடன் (முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்திமுறையைச் சேர்ந்த ஆளும் வர்க்கங்களுடன்) கூட்டணி கொண்டிருப்பதைப் பார்க்க மறுத்தார். இதன் விளைவாக, ஒரு மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூலம்தான் சாதி ஒழிப்பு சாத்தியம் என்பதை அவர் ஏற்கவில்லை. அதாவது, விவசாய புரட்சியும், தேசியப் புரட்சியும் இணையும் போதுதான் அது சாத்தியம் ஆகும் என்பதை அவர் ஏற்கவில்லை. இதன்காரணமாக, நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த விவசாயப் புரட்சி, ஏகாதிபத்தியத்தை எதிர்த்த தேசியப் புரட்சி ஆகிய இரண்டையும் அவர் புறக்கணித்தார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், இந்திய நிலப்பிரபுத்துவமும் இந்திய மக்களைப் பீடித்திருக்கும் இரண்டு பகைகள் என்று அம்பேத்கர் பலமுறை பேசியிருந்த போதிலும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் சொந்தநாட்டில், தீண்டத்தகாதவர்களை வைத்துக் கொண்டு, தீண்டாமை ஒழிப்புக்காகப் போராடதவரை, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது அர்த்தம் உள்ளது ஆகாது என்றும் அவர் கூறினார். மேலும், இந்த நாட்டில் இருக்கும் ஏகாதிபத்திய நண்பர்களான ஆலைஅதிபர்கள், லேவாதேவிக்காரர்கள் ஆகியோருக்கு எதிராகப் போராடமல், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, வலுவான போராட்டம் நடத்துவது சாத்தியம் இல்லை என்றும் கூறினார். இவ்வாறு அவர் சரியாகக் கூறினாலும், தேசிய விடுதலை மற்றும் சாதி ஒழிப்புக்கு ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும்; அவர்களின் அடிவருடிகளான தரகுமுதலாளித்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்தும் போராட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுப்பதற்கு மாறாக, சாதிய ஒழிப்புக்கு சமூகப் புரட்சியை முன்னிபந்தனை ஆக்கினார். அதாவது, ஏகாதிபத்தியத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்த மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு முன்னரே சமூகப்புரட்சி நிகழவேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்வைத்தார்.

பிரிட்டிஷ் காலனியாட்சி, சாதிய ஒழிப்புக்கு பங்காற்றும் எனக் கருதி அதன்மீது நம்பிக்கை கொண்டு அதனுடன் சமரசம் செய்து கொள்ளும் போக்கை மேற்கொண்டார். இதன்விளைவாக, காலனி அரசுடன் “சமநிலை பராமரிப்பது” என்பது அம்பேத்கரின் அணுகுமுறையாக இருந்தது. மேலும், அம்பேத்கரின் தரகுமுதலாளிய தாராளவாதச் சிந்தனைப்போக்கு, அரசின் வர்க்கத்தன்மையைக் காணமறுப்பதற்கு இட்டுச் சென்றது. அரசு நடுநிலையானது என்கிற கற்பனாவாதக் கண்ணோட்டத்திலிருந்து, சட்டங்கள் மற்றும் அரசியல் சட்டம் ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம், அரசின் தன்மையையே மாற்றிவிட முடியும் என்ற மிகப்பிற்போக்கான கருத்தை மக்களிடத்திலே, அதுவும் மிகவும் ஒடுக்கப்பட்டதாழ்த்தப்பட்ட மக்களிடத்திலே, பரப்பவும் செய்தார். 1928ம் ஆண்டு சைமன் கமிஷன்; 1930 - 31 ஆண்டு வட்டமேஜை மாநாடுகள் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் பிரதிநிதியாக அம்பேத்கர் பங்கு கொண்டார். பிரிட்டிஷ் ஆட்சியின் நடவடிக்கைகள் எல்லாம், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திலிருந்து, சட்டத்திருத்தங்கள் மூலம் மக்களை திசை திருப்பும் காலனி ஆட்சி சதிகள்தான். ஏன்பதை உணராத அம்பேத்கர் இவற்றில் பங்கேற்றதன் மூலம், தாழ்த்தப்பட்ட மக்களிடையே அரசியல் சட்டத்தின் மீது, மாயைகளை ஏற்படுத்தினார். இரண்டாம் உலகப் போர் காலத்தில் - 1941 பிப்ரவரியில் - வைஸ்ராயைச் சந்தித்து, பிரிட்டிஷ் இராணுவத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சேரவேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்*. 1942 ஜூனில் தொழிலாளர் நல அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதிலிருந்து காலனியாட்சியின் உறுப்பாக மாறினார். இந்தக்கட்டத்தில்தான் தொழிலாளர் நலச்சட்டம் கொண்டுவரப்பட்டது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இரண்டாம் உலகயுத்தத்தின் சுமையையும், முதலாளித்துவ நெருக்கடியால் ஏற்பட்ட சுமையையும், தொழிலாளர் தோள்மீது ஏற்றிவிடும் மிகக்கொடிய காலனியாதிக்கச் சுரண்டல் கொள்கைகளை வகுத்துச் செயல்படுத்தியது. தொழிலாளர் நலஅமைச்சர் என்ற முறையிலே, அந்தக்கொள்கைகளை அம்பேத்கர் செம்மையாகச் செயல்படுத்தினார். ஏகாதிபத்தியத்தின் நண்பர்களான பண்ணையார்கள், ஆலைஅதிபர்கள், லேவாதேவிக்காரர்கள் ஆகியோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காங்கிரஸ் கட்சியையும் எதிர்த்துப் போராடமல், (ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிப் பயன்இல்லை என்று சொல்லிக் கொண்டு ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்தில் காங்கிரசுடன் சேரமறுத்து எதிர்த்துக் கொண்டிருந்த அம்பேத்கர், காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மை ஆதரவுடன் இருந்த அரசியல் சட்ட நகல் தயாரிப்புக் குழுவின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.) பிரிட்டிஷ் காலனிய இந்தியா ஒரு அரைக்காலனியாக மாற்றப்படுவதற்கு ஆதரவு தந்தார்.

நேரு பிரதமராக இருந்தபொழுது மத்திய அமைச்சரவையில் சேர்ந்துக்கொண்டார். இதனால் தாழ்த்தப்பட்ட மக்களிடம் நாடாளுமன்றமுறை மட்டுமே, அதிகாரப்பகிர்வு மற்றும் சாதிஒழிப்புக்கான ஒரேவழி என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அதிகாரத்தை அடைவதற்கு அவர்கள் தேர்தல் நடைமுறையை நம்பவேண்டிய நிலைஏற்பட்டது. அரசியலில் நீடிப்பதற்காக, அம்பேத்கர் வழிவந்தவர்கள், ஏதாவது ஒரு அரசியல் கட்சியோடு கூட்டுச் சேர்வது நிரந்தரமாகிவிட்டது. முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் நடைமுறை இங்கேயும் நிலைகொண்டது. இவ்வாறு தலித்இயக்கம் ஆளும் வர்க்கத்தின் நிரந்தரத் தொங்குசதையாக மாறியது.சாதியத்திற்கு, நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளே அடித்தளமாக விளங்குகிறது. அடித்தளத்தை அசைக்காமலே, அதன் மேற்கட்டுமானத்தை- சாதி முறையை ஒழிக்கமுடியும் என்பது அம்பேத்கரின் நிலைபாடாக இருந்தது. சாதிய ஒழிப்புக்கு இந்துமதச் சீர்திருத்தமே வழி என்று கருதினார். இந்த நிலைபாட்டிலிருந்து 1920 ஆண்டில் பிற்பகுதியில், தாழ்த்தப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமை மற்றும் மதச்சமத்துவத்திற்காகத் தொடர்ச்சியான போராட்டங்களைத் தொடங்கினார்.

ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக அம்பேத்கர் உரிமைக் கொண்டாடினாலும் அவர், தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், மற்றும் தொழிலாளி வர்க்கம் ஆகியோர் மீதான சுரண்டலுக்கு அடிப்படையாக இருந்த காரணிகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கிய இயக்கத்தை வழி நடத்தவில்லை. தாழ்த்தப்பட்டோரில் 90 சதவீதத்திற்கும் அதிகமாகவுள்ள விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் அடிப்படைக் கோரிக்கையான "உழுபவருக்கு நிலம் சொந்தம்" என்கிற கோரிக்கையை எழுப்பவில்லை. தாழ்த்தப்பட்டோரில் புதிதாகத் தோன்றி உருவாகி கொண்டிருந்த குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிக்க கூடிய, தனித்தொகுதி ஒதுக்கீடு, அரசாங்க வேலைகளில் ஒதுக்கீடு, உதவித் தொகை கோருதல் போன்ற கோரிக்கைகள் (இக்கோரிக்கைகள் ஒட்டுமொத்தமான தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பயன்படும் என்று சொன்னாலும் கூட) மட்டுமே எழுப்பப்பட்டன. அவை தாழ்த்தப்பட்ட சாதியிலுள்ள நடுத்தர வர்க்கத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளை திடப்படுத்தக் கூடியவைதான். அம்பேத்கரின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் நடைமுறையை வைத்துப்பார்க்கும் போது, அவர் தாழ்த்தப்பட்ட சாதியில் உருவாகி வந்த நடுத்தர வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதியாகத்தான் இருந்தார் என்பது தெளிவாகிறது. 

அம்பேத்கரின் வழிவந்தவர்களில் முக்கியமானவரான கெய்க்வாட், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, நிலப்பகிர்வுக் கோரிக்கையே முக்கியமானது என்று எடுத்துக்கொண்டு போராடினார். பெருந்திரளான தாழ்த்தப்பட்ட மக்களை இந்தப் போராட்டம் கவ்விப்பிடித்துக் கவர்ந்தாலும், மற்ற 'தலித்' தலைவர்களின் பார்வை வேறுவிதமாக இருந்தது. இந்தப் போராட்டம் கம்யூனிஸ்ட் வழிப்பட்டது என்று கூறி, கெய்க்வாட்டின் போராட்டத்தினை ஏற்கவில்லை.

அம்பேத்கர் வழி வந்தவர்கள் தற்போது நிலவும் பாராளுமன்றமுறையின் மூலம், முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசதிகார அமைப்புகளில் இடம் பிடிக்கும் நோக்கத்துடன், ஏதாவது ஒரு ஆளும் வர்க்க அரசியல் கட்சிக் கூட்டணியில் சேர்வது நடைமுறைப் போக்காக ஆகிவிட்டது. இத்தகைய நிலைமைகளில் தலித் அமைப்புகள்-சாதிச் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, சாதிஒழிப்பு என்பனவற்றை முன்னணிப் படுத்தாமல், இடஒதுக்கீடு, அதிகாரப்பகிர்வு, சலுகைகள் பெறுவது ஆகியவற்றைக் கோருவது என்பதை முழுமுதல் நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. ஆக அன்று அம்பேத்கார் தொடங்கி வைத்த சீர்திருத்தமுறையிலான தீர்வைதான் இன்றைய தலித்திய அமைப்புகளும் பின்பற்றுகின்றனர்.

புரட்சி மற்றும் சுரண்டல் இதுபற்றி மார்க்சிய லெனினியவாதிகள் கூறுவதும் மற்றவர்கள் பேசுவதற்க்கும் வித்தியாசம் இருக்கிறது. திமுக கூட சோசலிசம் மண்ணுக்கேற்ற மார்க்சியம் எல்லாம் பேசுனாங்க.

இங்குள்ள பல முதலாளித்துவ அறிவுஜீவிகள் மார்க்ஸ் இந்தியாவை புரிந்துக் கொள்ளவில்லை என்பதுடன் மார்க்சுடன் அம்பேத்கரை ஒப்புமை படுத்தி பேசுவதும் இந்தியாவை அம்பேத்கர் புரிந்து வைப்பதிருபதை மார்க்சியவாதிகள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி பேசுவதை காணலாம். மார்க்சும் அம்பேத்கரும் ஒன்றல்ல, அவர்களின் நோக்கமும் தத்துவமும் வெவ்வேறு; இங்குள்ள எல்லா ஒடுக்குமுறைக்கான அடிதளம் சமூக அரசியல் பொருளாதாரம் என்று தெளிவுப்படுதியது மார்க்சியம். சுரண்டலின் வடிவமான ஒடுக்குமுறை அமைப்பை மார்க்சியம் அம்பலப்படுத்துவதுடன் இந்த அடக்குமுறை ஒடுக்குமுறை அமைப்பை தூக்கி எறிய சொல்கிறது அவைதான் மார்க்சியம் போதிக்கும் புரட்சிக்கான திட்டம் வகைப்பட்டது. ஆனால் அம்பேத்கர் உள்ள அமைப்புமுறைகுள்ளே தீர்வை தேடும் பொழுது அவர் ஒடுக்கும் அரசுடன் சமரசமாகி சுரண்டலுக்கு காரணமான அரசு இயந்திரத்தில் பங்கேற்பதுடன் அதனை காக்கவும் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு ஆளும் வர்க்க எல்லா தத்துவங்களையும் ஏற்கும்படி நிர்பந்திக்கிறார். 

ஆதாவது மார்க்ஸ் அம்பேத்கர் வெவ்வேறு அறிவுத் தளத்தைக் கொண்டவர்கள். அம்பேத்கரின் கோட்பாடு என்பது முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் முதலாளித்துவ சனநாயகத்தை முன்வைக்கத் தூண்டியது என்ற புரிதலைப் பெறாத காரணத்தினால் மார்க்சினை குறைத்து மதிப்பிட முடிகின்றது. தத்துவவாதிக்கும் (philosopher) கல்வியாளருக்கும் (academic) நிறையவே வேறுபாடு உண்டு. அம்பேத்கர் பெரும் கல்வியாளர் என்பதில் எவ்வித சந்தேகமில்லை. புத்திசாலித்தனத்திற்கும் அறிவுஜீவிகளுக்கும் வித்தியாசம் உள்ளது போலவே தான் இதுவுமாகும். அம்பேத்கர் ஆளும் வர்க்க முதலாளித்துவ அறிவுஜீவி இதில் எவ்வித குறையும் இல்லை ஆனால் மார்க்ஸ் உழைக்கும் மக்களான பாட்டாளி வர்க்க அறிவுஜீவி. அவரின் தத்துவம்தான் இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆனால் சுரண்டும் வர்க்க தத்துவமான மாறாநிலை போதிக்கும் கருத்துமுதல்வாத தத்துவத்தை ஏற்றுக் கொண்டவர் அம்பேத்கர்.

மார்க்சியம் வர்க்க விடுதலை பேசுகிறது. மார்க்சியம் என்பது புரட்சிகர கோட்பாடு, புரட்சிகர நடைமுறை, புரட்சிகர திட்டம் இதனை அடிப்படையாக கொண்டு சமூகத்தில் உள்ள தனிசொத்தை பொதுசொத்தாகவும் உழைப்பவனுக்கே அதிகாரம் எனும் அரசியல் பொருளாதார கட்டுமானத்தோடு தொடர்புடையது. இவை அனைத்தும் சுரண்டலிலிருந்து ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையாகும். அதற்கான நீண்ட பணி செய்ய வேண்டும். 

இங்கே அம்பேத்கர் உள்ள அமைப்பில் தனக்கான இடம்தேடி சமரச முறையில் வாழ சொல்கிறார். ஒரு சிலர் வாழ பலர் தொடர்ந்து துயருண்டு கிடப்பதுதான் இதன் அங்கீகாரம்.இந்த கொடிய அடக்குமுறையை சகித்து வாழ் என்பதுதானே?

சமூக விடுதலை என்பது வர்க்க ரீதியாக மக்கள் சுரண்டப்பட்டு கொண்டுள்ளபோது இந்த சுரண்டலுக்கான அடித்தளத்தை முற்றாக மாற்றாமல் அரசு அதிகாரத்தையும் உற்பத்தி முறையையும் கருத்துருவாக்கத்தையும் பற்றி பேசாமல் தலித் விடுதலை என்பது கானல் நீரே. இன்றைய சமூக உற்பத்திமுறையை அதாவது ஏகாதிபத்திய நலன்களுக்கான இந்நாட்டு பன்னாட்டு கம்பெனிகளின் நலன்களுக்கு உகந்த முறையில் அரசு அதிகாரம் கோலோச்சும் பொழுது அதற்கு எதிராக போராடாமல் அதற்குள்ளேயே சில சீர்திருத்தங்கள் மூலம் விடுதலை என்பது கற்பனையானதே. ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள், கூலி விவசாயிகள், ஏழை எளிய மக்கள் தலித் மக்கள் ஒன்று திரண்டு போராடாமல் கிளர்ந்தெழாமல் எவ்வகையான புரட்சியும் விடுதலையும் சாத்தியம் அல்ல. சாதிகளை கடந்து அனைவரும் உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைந்து போராட வேண்டும் ஒற்றுமை கட்டமைக்கப்பட்டாக வேண்டியுள்ளது. தலித் மக்கள் அனைவரும் ஒடுக்கப்படும் சாதியினர் என்பது சரி சமூகப் புரட்சி என்பது சாதிய ஒழிப்பை உள்ளடக்கியதே தவிர அது ஒன்றை மட்டும் கொண்டதல்ல. 

உற்பத்திமுறை மாற்றம், அரசு அதிகாரம் கைப்பற்றுதல் என பல தளங்களில் இயங்கி சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டு கூறுகளோடு நெருங்கியதாகும். இங்குள்ள சூழலில் பாட்டாளி வர்க்கத்திற்கு நாம் இதற்கு முன்னர் கொடுத்த விளக்கத்தோடு இணைந்து காணும் பொழுது பாட்டாளி வர்க்கத்தில் தலித் மக்கள் பெருந்திரளாக உள்ளனரே தவிர தலித் மக்கள் மட்டுமே பாட்டாளி வர்க்கத்தினர் இல்லை. பிற சாதிகளிலும் பாட்டாளி வர்க்கத்தினர் உண்டு.

வர்க்கப் பகைமைகள் முழுமையாக மறைந்தாலொழியது அவ்வடிவங்களும் கருத்துகளும் முற்றிலுமாக மறைந்து போக முடியாது. (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை).

இன்னும் பின்னர்.....

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்