மார்க்சிய சித்தாந்தத்தை ரசிய நிலைமைகளுக்கு ஏற்றவாறு பருண்மையாகப் பிரயோகித்து புரட்சியை சாதித்தது மட்டுமல்லாது, ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை இயங்கியல்பூர்வமாக அன்றைய நிலைமைகளையொட்டி வரையறுத்தவர் தோழர் லெனின். அவரது காலத்தில் ரசிய சமூக ஜனநாயகக் கட்சிகள் கொண்டிருந்த தொழிலாளி வர்க்கக் கட்சி குறித்தப் பார்வையை விமர்சனப் பூர்வமாக அணுகி புரட்சியை சாதிப்பதற்கு ஏற்ற ஒரு கட்சியையும் அதற்கான கோட்பாடுகளையும் வகுத்தார்.
தோழர் லெனினது மகத்தான பங்களிப்புகளில் இன்று நாம் முதன்மையாக நினைவுகூர வேண்டியது, பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு வழிகாட்டுகின்ற, உறுதிமிக்க ஒரு போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டியமைத்ததைத்தான். ஏனெனில், இன்றைய உலகப் பாட்டாளி வர்க்கத்தின் முதன்மைத் தேவை அதுதான். ஏகாதிபத்திய-முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் ஆயுதம் அமைப்பு, “அமைப்பு மட்டுமே!” அவை இங்கு இல்லை அவைதான் பெரிய அவமானகரமானது கம்யூனிஸ்டுகளுக்கு.
1914, முதல் உலகப்போர் காலகட்டத்தில் காவுத்ஸ்கி தலைமையிலான இரண்டாம் அகிலத் தலைவர்கள் மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டி புரட்சியை நீர்த்துப் போகச் செய்யும் பணியை செய்து கொண்டிருந்தனர்; புரட்சியெல்லாம் தேவையில்லை, முதலாளித்துவத்தின் கீழேயே மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று முதலாளித்துவ அடிமைத்தனத்தைப் பரப்பிக் கொண்டிருந்தனர், சந்தர்ப்பவாதப் புதைசேற்றில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்தனர்; இன்னொரு பக்கம் ரசியாவில் மார்க்சியத்தை அறிமுகப்படுத்திய பிளக்கானவ் உள்ளிட்டோர் ஏகாதிபத்திய போர்களைப் பயன்படுத்தி உள்நாட்டில் புரட்சியை நடத்துவது பற்றிய பார்வையின்றி தேசவெறியில் மூழ்கினர்.
அந்தப் பிற்போக்கான சூழலில்தான், முதலாளித்துவத்தை ஆய்வு செய்து, “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சககட்டம்” என்ற நூலின் மூலம் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக பரிணமித்திருக்கிறது என்று உலகிற்கு அறிவித்தார் லெனின். ஏகாதிபத்தியமாய் வளர்ந்த முதலாளித்துவத்தை வீழ்த்த பாட்டாளி வர்க்கப் புரட்சிதான் தீர்வு என்று அதற்கான புரட்சிகர நடைமுறையையும், புதிய பாணியிலான போல்ஷ்விக்மயமான கம்யூனிஸ்ட் கட்சியையும் கட்டியமைத்தார். ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி என்பது காலனிய நாடுகளின் விடுதலை எழுச்சியுடன் தொடர்புடையது என்று ஆசான் மார்க்சின் “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்ற முழக்கத்துடன் “ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுங்கள்” என்ற முழக்கத்தை இணைத்து மார்க்சியத்தை லெனினியமாக வளர்த்தெடுத்தார்.
ரஷ்ய சோசலிசப் புரட்சி மூலம் உள்நாட்டு-வெளிநாட்டு ஏகாதிபத்தியங்களை ஒருசேர வீழ்த்தி, காலனிய நாடுகளின் விடுதலைக்கு ஒளியூட்டினார். அந்த ஒளியில்தான், சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் புரட்சிகள் வெடித்தன. உலகின் ஆறில் ஒரு பங்கு மக்கள் உண்மையான விடுதலையை அடைந்தனர்.
No comments:
Post a Comment