இந்தப்பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முழுமையாக உள்ளது கீழ்காணும் இணைப்பில் தோழர்களே
பல்வேறு மொழிப் பதிப்புகளுக்கு எழுதிய முகவுரைகள்
1872-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரை
தொழிலாளர்களின் சர்வதேசச் சங்கமாகிய கம்யூனிஸ்டுக் கழகம் (Communist League)[1] அக்காலத்தில் நிலவிய சூழ்நிலைமைகளில் ஓர் இரகசிய அமைப்பாகவே செயல்பட வேண்டியிருந்தது. 1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற காங்கிரசில் இக்கழகம் கட்சியின் விரிவான கொள்கை மற்றும் நடைமுறை வேலைத்திட்டத்தை வெளியிடுவதற்காக வகுத்துத் தருமாறு அடியில் கையொப்பம் இட்டுள்ளோரைப் [மார்க்ஸ், ஏங்கெல்ஸைக் குறிக்கிறது] பணித்தது. இவ்வாறு பிறப்பெடுத்ததே பின்வரும் அறிக்கை.
நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருந்த போதிலும், இந்த அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்டுள்ள பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும்போல் இன்றும் சரியானவையே ஆகும். ஆங்காங்கே சில விவரங்களைச் செம்மைப்படுத்தலாம். இந்தக் கோட்பாடுகளின் நடைமுறைப் பயன்பாடு என்பது, இந்த அறிக்கையே குறிப்பிடுவதுபோல, எல்லா இடங்களிலும் எல்லாக் காலத்திலும், அந்தந்தக் காலகட்டத்தில் நிலவக்கூடிய வரலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும்.
முக்கியமாகப் பாட்டாளி வர்க்கம் முதன்முதலாக, முழுதாய் இரு மாதங்கள் அரசியல் ஆட்சியதிகாரம் வகித்த பாரிஸ் கம்யூனிலும்[6] சில நடைமுறை அனுபவங்கள் கிடைத்துள்ளன; - இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வோமாயின், இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில் காலங் கடந்ததாகி விடுகிறது. கம்யூனானது முக்கியமாக ஒன்றை நிரூபித்துக் காட்டியது. அதாவது, ’ஏற்கெனவே தயார் நிலையிலுள்ள அரசு எந்திரத்தைத் தொழிலாளி வர்க்கம் வெறுமனே கைப்பற்றி, அப்படியே தன் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது’. (பார்க்கவும்: ஃபிரான்சில் உள்நாட்டுப் போர் - சர்வதேசத் தொழிலாளர் சங்கப் பொதுக்குழுவின் பேருரை, லண்டன், ட்ரூலவ், 1871. பக்கம் 15-இல் இந்த விவரம் மேலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது).
இன்றைக்கு அரசியல் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. வரலாற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமானது, அப்பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள அரசியல் கட்சிகளில் மிகப் பெரும்பாலானவற்றைப் புவிப்பரப்பிலிருந்தே துடைத்தெறிந்துவிட்டது.
ஆனாலும் அறிக்கையானது[7] ஒரு வரலாற்று ஆவணமாகிவிட்டது. இதைத் திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி எங்களுக்கு இல்லை. 1847-லிருந்து இன்றுவரையுள்ள இடைவெளியை நிரப்பும் ஒரு முன்னுரையோடு அடுத்து ஒரு பதிப்பு வெளிவரக்கூடும். தற்போது இந்த மறுபதிப்பு மிகவும் எதிர்பாராத நிலையில் வெளியாவதால், இப்பணியைச் செய்துமுடிக்க எங்களுக்கு அவகாசம் இல்லாமல் போய்விட்டது.
கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்
லண்டன், ஜூன் 24, 1872.
1882-ஆம் ஆண்டின் ருஷ்யப் பதிப்புக்கு எழுதிய முகவுரை
இன்று நிலைமை எப்படி மாறிவிட்டது! ஐரோப்பியக் குடியேற்றம்தான் வட அமெரிக்காவின் மிகப்பெரும் விவசாயப் பொருளுற்பத்திக்குக் காரணமாக அமைந்தது. இந்த உற்பத்தி உருவாக்கிய போட்டியோ இன்று ஐரோப்பாவிலுள்ள சிறிதும் பெரிதுமான நிலவுடைமையின் அடித்தளங்களையே உலுக்கி வருகின்றது. அத்தோடு, இதுநாள்வரை நிலவிவந்த, மேற்கு ஐரோப்பாவின், குறிப்பாக இங்கிலாந்தின் தொழில்துறை ஏகபோகத்தை வெகுவிரைவில் தகர்த்துவிடும் அளவுக்கு அத்தனை ஆற்றலோடும், அவ்வளவு பெரிய அளவிலும், அமெரிக்க ஐக்கிய நாடு தனது அளவிலாத் தொழில்துறை மூலாதாரங்களைப் பயன்படுத்திக் கொள்வதை இந்தக் குடியேற்றம் சாத்தியம் ஆக்கியுள்ளது. இவ்விரு நிலைமைகளும் அமெரிக்க நாட்டின் மீதே புரட்சிகரமான முறையில் எதிர்வினை ஆற்றுகின்றன. அரசியல் அமைப்பு முழுமைக்கும் அடிப்படையாக விளங்கும், விவசாயிகளின் சிறிய, நடுத்தர நிலவுடைமைகள், மிகப்பெரும் பண்ணைகளின் போட்டிக்குப் படிப்படியாகப் பலியாகின்றன. கூடவே, தொழிலகப் பிரதேசங்களில் பெருந்திரளான பாட்டாளி வர்க்கமும், வியத்தகு மூலதனக் குவிப்பும் முதன்முறையாக வளர்ச்சிபெற்று வருகின்றன.
இப்போது ருஷ்யாவைப் பாருங்கள்! 1848 – 49 ஆம் ஆண்டுப் புரட்சியின்போது ஐரோப்பிய முடியரசர்கள் மட்டுமல்ல, ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தினரும்கூட, அப்போதுதான் விழித்தெழத் தொடங்கியிருந்த பாட்டாளி வர்க்கத்திடமிருந்து தப்பிக்க, ருஷ்யத் தலையீடுதான் ஒரே தீர்வு என நம்பினர். ஜார் மன்னர் ஐரோப்பியப் பிற்போக்கின் தலைவராகப் பிரகடனப்படுத்தப்பட்டார். இன்றைக்கு, அவர் புரட்சியின் போர்க் கைதியாக காட்சினாவில் (Gatchina) இருக்கிறார்.[9] ருஷ்யாவோ, ஐரோப்பாவில் புரட்சிகர நடவடிக்கையின் முன்னணிப் படையாகத் திகழ்கிறது.
ருஷ்யாவில், அதிவேகமாக வளர்ந்துவரும் முதலாளித்துவச் சுரண்டல், இப்போதுதான் வளரத் தொடங்கியுள்ள முதலாளித்துவ நிலவுடைமை ஆகியவற்றுடன்கூடவே, பாதிக்கும் மேற்பட்ட நிலம் விவசாயிகளின் பொது உடைமையாக இருப்பதை நாம் காண்கிறோம். இப்போதுள்ள கேள்வி இதுதான்: ருஷ்ய ஒப்ஷீனா (obshchina) [கிராமச் சமூகம்] அமைப்புமுறை வெகுவாகச் சிதைவுற்றிருப்பினும், புராதன நிலப் பொது உடைமையின் ஒரு வடிவமான இது, நேரடியாகக் கம்யூனிசப் பொது உடைமை என்னும் உயர்ந்த வடிவத்துக்கு வளர்ச்சியுறுமா? அல்லது அதற்கு மாறாக, மேற்கு நாடுகளின் வரலாற்று ரீதியான பரிணாம வளர்ச்சியாக அமைந்த, அதே சிதைந்தழியும் நிகழ்ச்சிப்போக்கை முதலில் அது கடந்து தீரவேண்டுமா?
இதற்கு, இன்றைக்குச் சாத்தியமாக இருக்கும் ஒரே பதில் இதுதான்: ருஷ்யப் புரட்சியானது மேற்கு நாடுகளில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு முன்னோடி ஆகி, இரண்டும் ஒன்றுக்கொன்று துணை நிற்குமாயின், நிலத்தின் மீதான தற்போதைய ருஷ்யப் பொது உடைமை, கம்யூனிச வளர்ச்சிக்கான தொடக்கப் புள்ளியாகப் பயன்படக்கூடும்.
கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்
லண்டன், ஜனவரி 21, 1882.
No comments:
Post a Comment