“1920-ம் ஆண்டு பொதுஉடைமை இளைஞர் சங்கத்தின் மூன்றாம் அகில ருஷ்ய மாநாட்டில் உரையாற்றும் போது, “மனிதகுலத்தின் அறிவு அனைத்தையும் பெற வேண்டும். இவ்வாறு பெறும்போது பொதுஉடைமை முறையை ஏதோ குருட்டுப் பாடமெனக் கற்கக் கூடாது; மாறாக அது நீங்களாகவே யோசித்த ஒன்றாக இருக்க வேண்டும்; நிகழ்காலக் கல்வியின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது தவிர்க்க முடியாதபடி பெறப்பட்ட முடிவுகளை உட்கொண்ட ஒன்றாக இருக்க வேண்டும். இத்தகைய திறமையைப் பெறுவது அவசியம்” என்று விளாதிமீர் இல்யீச் கூறினார். ”
மார்க்ஸ் எழுதியவற்றை தோழர் லெனின் படித்த முறை குறித்து குரூப்ஸ்கையா விளக்கும்போது, “மார்க்ஸ் எழுதியவற்றை மட்டும் லெனின் படிக்கவில்லை. முதலாளித்துவ முகாமிலுள்ள அவரது எதிரிகள் மார்க்ஸைப் பற்றியும் மார்க்சியத்தைப் பற்றியும் எழுதியவற்றையும் படித்தார். அவர்களுடன் ஏற்பட்ட தர்க்கத்தில் மார்க்சியத்தின் அடிப்படைகளை விளக்குகிறார்.” என்கிறார் தோழர் குரூப்ஸ்கையா.
லெனின் ஒரு புரட்சியாளர் என்பதற்காக மட்டும் நாம் அவரை நினைவுகூரவில்லை, பாட்டாளி வர்க்கத்திற்காக மண்ணில் ஒரு சொர்க்கமான சோசலிச ரஷ்யாவிற்கு அடித்தளமிட்டவர்; பாட்டாளி வர்க்க அரசு வந்தவுடன் பெண்களின் கைகளிலிருந்து கரண்டிகளையும், துணிகளையும், பாத்திரங்களையும் பிடுங்கி எறிந்துவிட்டு அவர்களது கைகளில் புத்தகங்களையும், டிராக்டர்களையும் கொடுத்து, உழைப்பு சுரண்டலிலிருந்து விடுவித்த பெண்ணியவாதி; ரஷ்ய நாட்டை மின்மயமாக்கியவர்; பொது சுகாதாரக் கட்டமைப்பு, பொது ரேசன், மகளிருக்கு சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு, ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசக் கல்வி, தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர ஓய்வு, எட்டுமணி நேர உறக்கம் என உலகப் பாட்டாளி மக்கள் குறைந்தபட்சமாவது பெற்றிருக்கிறோம் என்றால் அதன் அடிநாதம்தான் தோழர் லெனின்.
“எல்லா உழைப்பாளர்களின்பாலும் அவரது நெஞ்சம் ஆர்வமிக்க அன்பு கொண்டு துடித்தது” என்று “லெனின் சமகாலத்தவர்களின் நினைவுகள்” என்ற நூலில் குறிப்பிடுகிறார் கர்பீன்ஸ்கி.
“லெனின் மனிதக்குலம் அனைத்துக்கும் மேலே நிற்கிறார், நமக்குப் புலப்படாத உண்மைகளைத் தமது அசாதாரண சிந்தனைத்திறன் காரணமாகவே அவரால் காண முடிகிறது என்று எனக்குத் தென்பட்டது” எனக் கூறுகிறார் போல்ஷ்விக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அலெக்சாந்தரா கொலந்தாய். ரத்தக்களறியும் குழப்பமும் நிறைந்த அந்தக் காலகட்டத்தில் லெனினது அச்சமற்ற உறுதியைக் கண்டு வியக்கிறார் கொலந்தாய். ஆம், அவரது அசாதாரண சிந்தனைத்திறன் என்பது மார்க்சியத்தைத் தொடர்ச்சியாக இடைவிடாமல் நடைமுறையில் இருந்து கற்றுக்கொண்டிருந்ததோடு தொடர்புடையது.
No comments:
Post a Comment