தேர்தல் பற்றிய மார்க்சிய புரிதல்- இலக்கு 93 இதழில்

 நமது தோழர்கள் தேர்தலை மொட்டையாக பொதுவாக பார்க்கின்றனர். உண்மையில் பாராளுமன்றம் எந்த வர்க்க நலனுக்கானது என்பதனை மறைத்து விட்டு பொதுவாக பேசுவோர் மார்க்சிய ஆசான்கள் சொன்னவற்றை புரிந்துள்ளனரா? வாருங்கள் ஆசான்கள் சொன்னவற்றை பார்ப்போம் இந்த கட்டுரையில்...

அறிமுகம்:- ஆளும் வர்க்கத்திற்கான(முதலாளித்துவ) நலனே நாடாளுமன்ற அரசியலாகும். அங்கு எந்தவொரு அதிகாரத்தையும் உழைக்கும் மக்களோ, ஒடுக்கப்படும் மக்களோ பெற்றுவிட முடியாது. நாடாளுமன்ற அமைப்பு முறையால் பழைய நிறுவனக் கட்டமைப்புகள் சிதைந்து விடுவதில்லை. நீதி, நிர்வாகம், காவல்துறை, இராணுவம், சிறைச்சாலை, சட்டமியற்றும் மன்றம் ஆகியவற்றில் உள்ள அதிகாரம் வர்க்கம் அகன்றுவிடவதில்லை. சமூக வளர்ச்சிப் போக்கில் சிந்தனை வளர்ச்சியும், விஞ்ஞான அறிவும் வளர்ந்து வந்துள்ளது. தேச ஒடுக்குமுறை, சமூகத்தில் உள்ள கற்கால (சனாதன) சிந்தனை மரபை தகர்ப்பது என்பது முன்னுள்ள கடமையாக உள்ளது. சமூக வளர்ச்சிப் போக்கின் படிமுறை வளர்ச்சியை அறிந்து கொள்ளத் தடையாக முதலாளித்துவ வர்க்க சிந்தனைப் போக்கு உள்ளது.

நாம் விவாதிக்க:-மார்க்ஸ் தான் சமூக வளர்ச்சி போக்கை வரலாற்று ரீதியான முறையில் மதிப்பீடு செய்தார். வர்க்க சமூகத்தின் ஒவ்வொரு கட்டங்களை பற்றி ஆய்வு செய்த மார்க்ஸ் தமது பகுப்பாய்வில் அவர் முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்பு முறையின் சுரண்டும் தன்மையினை வெளிப்படுத்தினார். பாரீஸ் கம்யூன் படிப்பினைகளின் அடிப்படையில்  பாட்டாளி வர்க்கம் தனக்கான புரட்சியில் உள்ள சமூக அடிப்படைகளை தங்களுகேற்றவகையில் மாற்றுவதென்பது தவிர்க்க முடியாத தேவை என்பதனை விளக்கியுள்ளனர்..

... ஆளும்‌ வர்க்கத்தின்‌ எந்த உறுப்பினர்‌ நாடாளுமன்றத்தில்‌ மக்களைப்‌ பிரதிநிதித்துவப்படுத்தி அடக்கியொடுக்குவகென (ver-und zertreten) மூன்று அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒரு தரம்‌ தீர்மானிப்பதற்குப்‌ பதிலாய்‌, அனைத்து மக்கள்‌ வாக்குரிமையானது கம்யூன்‌களாய்‌ வகுக்கப் பெற்ற மக்களுக்கு-- எந்து ஒரு முதலாளியும்‌ தனது தொழிலுக்குத்‌ தொழிலாளர்களையும்‌போர்மன்களையும்‌ கணக்கர்களையும்‌ தேடிக்‌ கொள்ள தனியார்‌ வாக்குரிமை பணியாற்றுகிற தல்லவா, அதுபோல-— பணியாற்ற வேண்டும்.

நாடாளுமன்ற முறை குறித்து 1871ல்‌ அளிக்கப்பெற்ற சிறப்பு மிக்க இந்த விமர்சனமுங் கூட, வெகுவாய்‌ மலிந்துவிட்ட சமூக-தேசியவெறியின்‌ காரணமாகவும்‌ சந்தர்ப்பவாதத்தின்‌ காரணமாகவும்‌ இப்பொழுது மார்க்சியத்தின்‌ மறக்கப்பட்ட வாசகங்களில் ஒன்றாகிவிட்டது. அமைச்சராகவும்‌ நாடாளுமன்ற உறுப்பினராகவும்‌ இருப்பதையே தொழிலாய்க்‌கொண்டோரும்‌, பாட்டாளி வர்க்கத்துக்குத்‌ துரோகம்‌ புரிவோரும்‌, தற்காலத்துச்‌ செயல்முறை சோஷலிஸ்டுகளும்‌நாடாளுமன்ற முறை பற்றிய எல்லா விமர்சனத்தையும்‌ அராஜகவாதிகளிடத்தே விட்டுவைத்துவிட்டனர்‌. இந்த அதிசயமான காரணத்தால்‌ நாடாளுமன்ற முறை பற்றிய எல்லா விமர்‌சனத்தையுமே அவர்கள் ஆரஜகவாதமென பறைசாற்றுகிறார்கள்!! முன்னேறிய நாடாளுமன்ற நாடுகளைச்‌ சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தினர்‌, ……. அவர்‌ சகாக்களையும்‌ போன்ற சோஷலிஸ்டுகளிடம்‌ அருவருப்பு கொண்டு அராஜகவாத-சிண்டிக்கலிசத்துக்கு—இது சந்தர்ப்பவாதத்தின்‌ உடன்பிறந்த இரட்டையே ஆயினுங்கூட- மேலும்‌ மேலும்‌ ஆதரவு தெரிவிப்பதில்‌ வியப்பில்லை.

ஆனால்‌ மார்க்சுக்குப்‌ புரட்சிகர இயக்கவியலானது, பிளேஹானவும்‌ காவுத்ஸ்கியும்‌ ஏனையோரும்‌ ஆக்கிக்‌ கொண்டுவிட்ட வெற்று ஜம்பமாகவோ விளையாட்டுக்‌ கிலுகிலுப்பையாகவேோ ஒருபோதும்‌ இருந்ததில்லை. முதலாளித்துவ நாடாளுமன்ற முறை பன்றிக்‌ தொழுவமே ஆயினுங்கூட அதனைப்‌ பயன்படுத்திக்‌ கொள்ள, முக்கியமாய்‌ நிலைமை புரட்சிகரமானதாய்‌ இல்லை என்பது தெளிவாய்த்‌ தெரியும்‌ நேரத்தில்‌ அதைப்‌ பயன்படுத்திக்‌ கொள்ளத்‌ திராணியற்றதாய்‌ இருந்ததென்பதற்காக அராஜகவாதத்திடமிருந்து தயவு தாட்சண்யமின்றி முறித்துக்‌ கொள்ள மார்க்சுக்குத்‌ தெரிந்திருந்தது. அதேபோது நாடாளுமன்ற முறையை மெய்யாகவே புரட்சிகரமான பாட்டாளி வர்க்க நிலையிலிருந்து விமர்சிக்கவும்‌ அவருக்குத்‌ தெரிந்திருந்தது.

ஆளும்‌ வர்க்கத்தின்‌ எந்த உறுப்பினர்‌ நாடாளுமன்றத்‌தின்‌ மூலம்‌ மக்களை அடக்கி ஓடுக்க வேண்டுமெனச்‌ சில ஆண்டுகளுக்கு ஒரு தரம்‌ தீர்மானிப்பகே முதலாளித்துவ நாடாளுமன்‌ற முறையின்‌ மெய்யான சாரப்‌ பொருள்‌ ---நாடாளுமன்‌ற-அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட முடியரசுகளில்‌ மட்டுமின்றி, மிகவும்‌ ஜனநாயகமான குடியரசுகளிலுங்கூட இதுவேதான்‌நிலைமை. அரசு குறித்த பிரச்சனையைப்‌ பரிசீலிப்போமாயின்‌, இந்தத்‌ துறையில்‌ பாட்டாளி வர்க்கத்தின்‌ முன்னுள்ள பணிகளின்‌ கண்ணோட்டத்தில்‌ அரசுக்குரிய நிறுவனங்களில்‌ ஒன்றாகிய நாடாளுமன்ற முறையைப்‌ பரிசீலிப்போமாயின்‌ நாடாளுமன்ற முறையை விட்டொழிக்கும்‌ வழி என்ன? நாடாளுமன்ற முறையைத்‌ தவிர்ப்பது எப்படி? மறுபடியும்‌ கூறுகிறோம்‌: கம்யூனை ஆராய்ந்து மார்க்ஸ்‌ எடுத்துரைத்த படிப்பினைகள்‌ அப்படி அடியோடு மறக்கப்‌பட்டுவிட்டதால்‌, இன்றைய சமூக-ஜனநாயகவாதியால்‌ (அதாவது, சோஷலிசத்தின் இன்றைய துரோகியால்)) நாடாளுமன்ற முறை பற்றிய அராஜகவாதக அல்லது பிற்போக்கு விமர்சனத்தைத்‌ தவிர்த்து வேறு எந்த விமர்சனத்தையும்‌ உண்மையில்‌ புரிந்து கொள்ள முடிவதில்லை.

நாடாளுமன்ற முறையை விட்டொழிப்பதானது பிரதிநிதித்துவ உறுப்புக்களையும்‌ தேர்தலையுமே விட்டொழிப்பதாகாது. பிரதிநிதித்துவ உறுப்புக்கள்‌ வெறும்‌ வாய்ப்பேச்சுக்‌ கூடங்களாய்‌ இருப்பகை மாற்றி அவற்றைச்‌ 'செயலாற்‌றும்‌ உறுப்புக்களாக்க வேண்டுமென்பதே இதன்‌ பொருள்‌. கம்யூனானது நாடாளுமன்ற உறுப்பாயில்லாமல்‌ செயலாற்றும்‌ உறுப்பாய்‌, ஒருங்கே சட்டமன்றமாகவும்‌ நிர்வாகக்‌ குழுவாகவும்‌ செயல்படும்‌ உறுப்பாய்த்‌ திட்டமிடப்பட்டது

நாடாளுமன்ற உறுப்பல்ல, செயலாற்றும்‌ உறுப்பு தற்கால நாடாளுமன்றத் தினருக்கும்‌ சமூக- ஜனநாயகத்தின்‌ நாடாளுமன்றச்‌ செல்லப்‌ பிள்ளைகளுக்கும் இது சரியான சவுக்கடி!

அமெரிக்கா முதல்‌ ஸ்விட்சர்லாந்து வரை, பிரான்ஸ்‌ முதல்‌ பிரிட்டன்‌, நார்வே வரை இவ்வாறு எந்த நாடாளுமன்ற நாட்டை வேண்டுமானாலும்‌ எடுத்துக்‌ கொள்ளுங்‌கள்‌. இந்நாடுகளில்‌ எல்லாம்‌ அரசுக்குரிய மெய்யான வேலை திரைக்குப்‌ பின்னால்‌ நடத்தப்படுகிறது; இலாகாக்களும்‌ அமைச்சகச்‌ செயலகங்களும்‌ படைக்‌ தலைமையகங்களும்‌ இதை நடத்துகின்றன. பொது மக்களை ஏய்ப்பதற்கெனவாய்ப் பேச்சு பேசுவகே நாடாளுமன்றத்துக்கு அளிக்கப்பட்‌டிருக்கும்‌ பணி. இதுவே உண்மை என்பதை முதலாளித்துவ-ஜனநாயகக்‌ குடியரசாகியுள்ள ரஷ்யக்‌ குடியரசுங்கூட புலப்‌படுத்துகிறது மெய்யான நாடாளுமன்றம்‌ ஒன்றை இக்குடியரசு நிறுவிக்‌ கொள்ளும்‌ முன்னரேகூட நாடாளுமன்ற முறையின்‌ இந்தக்‌ கேடுகள்‌ யாவும்‌ உடனடியாகவே வெளிப்பட்டு விட்டன. கேடுகெட்ட குட்டிமுதலாளித்துவ அற்பவாகுத்‌தின்‌ வீரர்களானோர்‌-—........ அருவருப்பு மிக்க முதலாளித்துவ நாடாளுமன்ற முறையிலே சோவியத்துகளையும்‌ நச்சுப்படுத்தி அவற்றை வெறும்‌ வாய்ப்பேச்சுக்‌ கூடங்களாய்‌ மாற்றுவதில்‌ வெற்றியுங்கூட பெற்றுவிட்டனர்‌. சோவியத்துகளில்‌ சோஷலிஸ்டு அமைச்சர்கள்‌ வாய்வீச்சுக்களாலும்‌ தீர்மானங்களாலும்‌ நாட்டுப்புறத்து ஏமாளிகளை ஏய்த்து வருகிறார்கள்‌. ஒருபுறம்‌ சோஷலிஸ்டு-புரட்சியாளர்களிலும்‌ மென்ஷிவிக்கு களிலும்‌ எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமானோருக்குப்‌ பசையுள்ள, சிறப்புக்குரிய பதவிகளான சன்மானங்கள்‌ கிட்டும்‌ பொருட்டும்‌, மறுபுறத்தில்‌ மக்களுடைய கவனம்‌ திசைதிருப்பப்பட்டுக்‌ கவரப்படும் பொருட்டும்‌ அரசாங்கத்தினுள்‌ ஓயாத ஆள்மாற்றம்‌ நடந்தேறுகிறது. இதற்கிடையில்‌ அமைச்சகச்‌ செயலகங்களும்‌ படைத்‌ தலைமையகங்‌களும்‌ அரசுக்குரிய வேலைகளை நடத்துகன்றன.

ஆளும்‌ சோசலிஸ்டு-புரட்சியாளர்‌ கட்சியின்‌ ஏடான தியேலொ நரோதா அண்மையில்‌ ஒரு தலையங்கத்தில்‌— எல்லோருமே அரசியல்‌ விபசாரத்தில்‌ ஈடுபட்டிருக்கும்‌ உயர்‌குலத்து மாந்தரது ஒப்பிலா நேர்மையோடு ஒப்புக்‌ கொண்டது: சோஷலிஸ்டுகள் தலைமை தாங்கும்‌ அமைச்‌சகங்களிலுங்கூட அதிகாரிகளாலான அமைப்பு எந்த மாற்றமுமின்றி அப்படியே இருக்றெதென்றும்‌, பழைய பாணியிலேயே வேலை செய்து புரட்சிகர நடவடிக்கைகளைத்‌ தங்குதடையின்றி சீர்குலைத்து வருகிறதென்றும்‌ ஓப்புக்கொண்டது! இந்த ஒப்புதல்‌ வாக்குமூலமின்றியே, அரசாங்கத்தில்‌ சோஷலிஸ்டு-புரட்சியாளர்களும்‌ மென்ஷிவிக்குகளும்‌ பங்குகொள்வதன்‌ நடைமுறை வரலாறே இதனை நிரூபிக்கவில்லையா? ஆயினும்‌ அமைச்சரவையில்‌ காடெட்டுகளுடைய சகவாசத்தால்‌………… நரோதாவின்‌ பிற ஆசிரியர்களும்‌ இப்படி வெட்கங்‌ கெட்டவர்களாக ஏதோ அற்பவிவரத்தைக்‌ குறிப்பிடுவதுபோல தமது அமைச்சகங்களில்‌ எதுவும்‌ மாற்றமின்றி அப்படியே இருப்பதாய்க்‌ கூறுவது குறிப்பிடத்தக்கதாகும்!! கிராமப்புற ஏழை எளியோரை ஏய்க்கப்‌ புரட்சிகர- ஜனநாயகச்‌ சொல்லடுக்குகள்‌, முதலாளிமார்கள்‌ மனம்‌ மகிழ அதிகார வர்க்க ஆட்சியும்‌ செயலயங்களுக்கு வழக்கமான இழுத்தடிப்பும்‌--இதுதான்‌ நேர்மை மிக்க கூட்டு அமைச்சரவையின்‌ சாராம்சம்‌.

அதேவேளையில் பாரிஸ் கம்யூன் செய்தவற்றை சீர்தூக்கி பார்ப்போம்

முதலாளித்துவ சமுதாயத்தின்‌ ஊழல்‌ மலிந்த நாற்றம்‌பிடித்த நாடாளுமன்ற முறைக்குப்‌ பதிலாய்‌, கம்யூனனது கருத்‌துச்‌ சுதந்திரமும்‌ விவாதச்‌ சுதந்திரமும்‌ ஏமாற்று வித்தையாய்ச்‌ சீரழிந்துவிடாத உறுப்புக்களைத்‌ தோற்றுவிக்கிறது, எப்படியெனில்‌ நாடாளுமன்றத்தினர்‌ தாமே வேலை செய்யவும்‌, தாம்‌ இயற்றும்‌ சட்டங்களைத்‌ தாமே செயல்படுத்தவும்‌, உண்மையில்‌ சாதிக்கப்‌ பெற்ற பலன்களைத்‌ தாமேசோதித்துப்‌ பார்க்கவும்‌, தம்மைத்‌ தேர்ந்தெடுத்த தொகுதியோருக்கு நேரடியாகத்‌ தாமே பொறுப்புக்‌ கூறவும்‌ வேண்‌டியதாகிறது. பிரதிநிதித்துவ உறுப்புக்கள்‌ தொடர்ந்து நிலவுகின்றன; ஆனால்‌ நாடாளுமன்ற முறை ஓரு தனிவகை அமைப்பாய்‌, சட்டமியற்றுவதற்கும்‌ செயல்படுத்துவதற்கும்‌ இடையிலான உழைப்புப்‌ பிரிவினையாய்‌, பிரதிநிதிகளது தனிச்‌சலுகை நிலையாய்‌ நிலவவில்லை. பிரதிநிதித்துவ உறுப்புக்கள்‌ இல்லாமல்‌ ஜனநாயகத்தை, பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தையும் கூட கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆனால்‌ நாடாளுமன்ற முறை இல்லாமல்‌ ஜனநாயகத்தைக்‌ கற்பனை செய்து பார்க்க முடியும்‌, கட்டாயம்‌ பார்க்கவும்‌ வேண்டும்‌. முதலாளித்துவ சமுதாயத்தை நாம்‌ விமர்சித்துக்‌ கண்டிப்‌பது வெறும்‌ சொல்‌ அளவிலான விமர்சனமாய்‌ நின்று விடக்‌ கூடாதெனில்‌, முதலாளித்துவ வர்க்கத்தின்‌ ஆதிக்கத்தை வீழ்த்த வேண்டுமென்ற விருப்பம்‌, மென்ஷிவிக்குகள்‌, சோஷலிஸ்டு-புரட்சியாளர்கள்‌ விவகாரத்திலும்‌, மற்றும்‌ ………………. விவகாரத்திலும்‌ இருப்பது போல தொழிலாளர்களுடைய வாக்குகளைக்‌ கவருவதற்கான வெறும்‌ தேர்தல் முழக்கமாயிராது நமது இடமான உள்ளப்‌ பூர்வமான விருப்பமாய்‌ இருந்தால்‌ கட்டாயம்‌ நாம்‌ இவ்வாறே செய்ய வேண்டும்‌.

கம்யூனுக்கும்‌ பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கும்‌ அவசியமான அந்த அதிகாரிகளின்‌ பணிகள்‌ குறித்துப்‌ பேசுகையில்‌ மார்க்ஸ்‌ அவர்களை எந்த ஒரு முதலாளியின்‌ ஊழியர்களுடன்‌, அதாவது சாதாரண முதலாளித்துவத்‌ தொழில்‌ நிலையத்தின்‌ தொழிலாளர்கள்‌, போர்மன்கள்‌, கணக்கர்‌களுடன் ஒப்பிடுவது கருத்தூண்றிக்‌ கவனிக்கத்தக்கதாகும்‌.

புதிய சமுதாயம்‌ ஒன்றைத்‌ தாமே கற்பனாசக்தியால்‌ தோற்றுவித்துக்‌ கொண்டார்‌, அல்லது கண்டுபிடித்துக்‌ கொண்டார்‌ என்கிற பொருளில்‌ மார்க்சிடம்‌ கற்பனாவாதத்‌தின்‌ சாயல்‌ இம்மியும்‌ கிடையாது. இல்லை, பழைய சமுதாயத்தின்‌ உள்ளிருந்து புதிய சமுதாயம்‌ பிறப்பதையும்‌, முன்னது பின்னதாய்‌ மாறிடும்‌ வடிவங்களையும்‌ இயற்கையான வரலாற்று நிகழ்ச்சிப்போக்காய்‌ அவர்‌ ஆராய்ந்தார்‌. வெகுஜனப்‌ பாட்டாளி வர்க்க இயக்கத்தின்‌ ஸ்தூலமான அனுபவத்தைப்‌ பரிசீலித்து, அதனின்று நடைமுறைப்‌ படிப்‌பினைகள்‌ பெற முயன்றார்‌. மாபெரும்‌ புரட்சிகர சிந்தனையாளர்கள்‌ எல்லோருமே ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடைய மாபெரும்‌ இயக்கங்களின்‌ அனுபவத்திலிருந்து தயக்கமின்றி கற்றறிந்து கொண்டது போலவே அவர்‌ கம்யூனிலிருந்துகற்றறிந்து கொண்டாரே அன்றி, (அவர்கள்‌ போர்‌ தொடங்கியிருக்கக்‌ கூடாது என்று பிளெஹானவ்‌ கூறியதைப்‌ போலவோ, வர்க்கமானது உரிய வரம்புக்கு உட்பட்டாக வேண்டும்‌ என்று தெஸெரெத்தேலி கூறியதைப்‌ போலவோ) பகட்டுப்‌ புலமை வாய்ந்த ஞான உபதேசம் செய்ய முற்பட்டதில்லை.

இனி மேலே செல்வோம்

இரண்டாம் அகிலத்தின் திருத்தல்வாதிகளால் விளம்பரப்படுத்தப்பட்ட "நாடாளுமன்றப் பாதை" என்ற கருத்து லெனினால் முறியடிக்கப்பட்டது. நீண்ட காலத்திற்கு முன்பே செல்லாக்காயாகிவிட்டது. ஆனால் குருச்சேவின் கண்களுக்குப் நாடாளுமன்றப் பாதை இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு திடீரென்று மதிப்பைப் பெற்று விட்டதாகத் தோன்றுகிறது. அது உண்மைதானா? நிச்சயமாக இல்லை.

முதலாளித்துவ அரசு இயந்திரத்தின் முதன்மையான உறுப்பு இராணுவமே ஒழிய நாடாளுமன்றமல்ல என்பதைத்தான் இரண்டாம் உலகப் போருக்குப் பின் நடைபெற்ற நிகழ்ச்சிகள் நமக்கு மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. நாடாளுமன்றம் என்பது முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு அலங்காரச் சின்னமாக, ஒரு மூடுதிரையாக இருந்து வருகிறது. நாடாளுமன்றப் பாதையை ஏற்றுக்கொள்வதும் அல்லது கைவிடுவதும் அல்லது நாடாளுமன்றத்துக்கு அதிகமாகவோ குறைவாகவோ அதிகாரம் அளிப்பதும் வெவ்வேறு விதமான தேர்தல் முறையைக் கைக்கொள்வதும் ஆகிய இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது முதலாளித்துவ ஆட்சியின் தேவைக்கும் நலன்களுக்கும் ஏற்றாற்போல்தான் எப்போதும் தீர்மானிக்கப்படுகிறது. முதலாளிகள் தேர்தல் மூலம் பாட்டாளிகள் "நாடாளுமன்றத்தில் நிலையான பெரும்பான்மை" பெறுவதென்பது சாத்தியமற்றது அல்லது அத்தகைய "நிலையான பெரும்பான்மை" நம்பப்பட முடியாதது. "நாடாளுமன்றப் பாதை" வழியாகச் சோசலிசத்தை அடைவதென்பது அறவே சாத்தியமில்லாததும் வெறும் ஏமாற்றுப் பேச்சும் ஆகும்.

முதலாளித்துவ நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளில் கிட்டத்தட்டப் பாதி இன்னும் சட்டப்படி தடை செய்யப்பட்டவையாக இருக்கின்றன. இக்கட்சிகளுக்குச் சட்டவுரிமை இல்லாததன் காரணமாக, அவை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. உதாரணமாக, ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சி வெள்ளைப் பயங்கரத்தின் கீழ் வாழ்கிறது. அது தேர்தலில் கலந்து கொள்ளவே வாய்ப்பில்லை. இந்நிலைமையில், இபாரூரி போன்ற ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் குருச்சேவின் "சமாதான முறை மாற்றத்தை" ஸ்பெயினில் ஆதரித்துப் பேசுவது வருந்தத்தக்கதாகவும், இரங்கத்தக்கதாகவும் இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் சட்டப்பூர்வமானவையாகத் தேர்தலில் பங்கெடுக்கக் கூடிய நிலையிலும் இருக்கிற முதலாளித்துவ நாடுகளில், முதலாளித்துவத் தேர்தல் சட்டங்களால் திணிக்கப்பட்டுள்ள தேர்தல் நடைமுறைகளைக் கையாண்டு முதலாளித்துவ ஆட்சிக்குக் கீழ் பெரும்பான்மை ஓட்டுகளை வெல்வதென்பது அநேகமாக மிகவும் கடினம். அப்படியே அவர்கள் பெரும்பான்மை ஓட்டுகளைப் பெற்றாலும் நாடாளுமன்றத்தில் அவர்கள் பெரும்பான்மை இடங்களைப் பிடிப்பதைத் தேர்தல் சட்டங்களைத் திருத்துவதன் மூலமோ அல்லது வேறு வழிகளிலோ தடுப்பதற்கு முதலாளிகளால் முடியும்.

உதாரணமாக, இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரெஞ்சு ஏகபோக முதலாளிகள் இரண்டு தடவை தேர்தல் சட்டத்தைத் திருத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு தடவையும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் பிடிக்கும் இடம் குறைந்து கொண்டு வந்துள்ளது. 1946 இல் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி 182 சீட்டுகளைப் பெற்றிருந்தது. 1951 தேர்தலில் தேர்தல் சட்டத்தைத் திருத்தியபின் 103 சீட்டுகளையே பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி பெற்றது. 79 சீட்டுகளைப் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி இழந்தது. 1956 இல் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் 150 சீட்டுகளைப் பிடித்தது. ஆனால் 1958 இல் தேர்தலுக்கு முன்பு ஏகபோக முதலாளிகள் மீண்டும் தேர்தல் சட்டத்தைத் திருத்தினர். அதன் விளைவாகப் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி வெறும் 10 சீட்டுகளைப் பெற்றது, 140 சீட்டுகளை இழந்தது.

சில சூழ்நிலைகளில் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றதாலோ, அல்லது தேர்தலில் வெற்றி பெற்றதன் விளைவாக அரசில் பங்கு கொண்டதாலோ நாடாளுமன்றத்தின் முதலாளித்துவத் தன்மைகளையோ அதன் பல்வேறு அம்சங்களையோ அதனால் மாற்ற இயலாது. இந்நிலையில், பழைய அரசு நிறுவனங்களையும் அதிகார வர்க்கத்தையும் ஒழித்துப் புதியதை உருவாக்குவதென்பது நடக்கவே நடக்காது. அடிப்படைச் சமுதாய மாற்றத்தை முதலாளித்துவ நாடாளுமன்றங்களோ அரசுகளையோ சார்ந்திருப்பதன் மூலமாகக் கொண்டு வருவது என்பது முடியவே முடியாத காரியமாகும். பிற்போக்குவாத முதலாளிகள் அரசின் நிறுவனங்களையும், இராணுவத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, தேர்தலைச் செல்லாததாக்கிப் நாடாளுமன்றத்தைக் கலைத்துக் கம்யூனிஸ்டுகளை அரசிலிருந்து வெளியேற்றி, கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்துவிட முடியும். மேலும் மக்களையும் முற்போக்கு சக்திகளையும் நசுக்கி மிருகத்தனமான பலாத்காரத்தை மேற்கொள்ள முடியும்.

உதாரணமாக, 1946 இல் சிலி கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் வெற்றியைப் பெறுவதில் முதலாளித்துவ முற்போக்கு கட்சியை ஆதரித்தது. கம்யூனிஸ்டுகள் பங்கேற்புடன் ஒரு கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் முதலாளிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்த அந்த அரசைச் சிலி கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் 'மக்கள் ஜனநாயக அரசாங்கம்' என்று வர்ணிக்கும் அளவுக்குச் சென்றனர். ஆனால் ஒரு வருடத்திற்குள் முதலாளிகள் கம்யூனிஸ்டுகளை அரசிலிருந்து வெளியேறும்படி நிர்ப்பந்தித்தனர். பிறகு கம்யூனிஸ்டுகளை ஒட்டு மொத்தமாகக் கூட்டமாகக் கைது செய்தனர். 1948 இல் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தனர்.

தொழிலாளர்களின் கட்சி, முதலாளிகளின் கூலிக் கட்சியாகச் சீரழிந்து அவர்களுக்கு அடிபணிந்து இருக்கும் போது மட்டுமே முதலாளிகள் அக்கட்சியைப் பெரும்பான்மை பெறவும் அரசை ஏற்று நடத்தவும் அனுமதிப்பர். ஒரு சில நாடுகளில் முதலாளித்துவ சமூக ஜனநாயகக் கட்சிகளின் நிலை இதுதான். ஆனால் இத்தகைய செயல் முதலாளிகளின் சர்வாதிகாரத்தைப் பாதுகாக்கவும் மேலும் வலுப்படுத்தவும் பயன்பட்டுள்ளதே தவிர ஒடுக்கப்படும் சுரண்டப்படும் பாட்டாளிகளின் நிலைமையை மாற்ற எந்த வகையிலும் பயன்படாது. பயன்படவும் முடியாது. இத்தகைய உண்மைகள் நாடாளுமன்றப் பாதையின் ஓட்டாண்டித்தனத்துக்குக் கூடுதல் சான்றுகளாக விளங்குகின்றன.

இரண்டாம் உலகப்போருக்குப்பின் நடந்த நிகழ்ச்சிகள், கம்யூனிஸ்ட் தலைவர்கள் நாடாளுமன்றப் பாதையை நம்பி "நாடாளுமன்ற மாயை" என்ற தீர்க்கமுடியாத நோயிற்குப் பலியாக்கிவிட்டது. அவர்கள் இயல்பாகவே எதையும் சாதிக்க முடியாது என்பதோடு தவிர்க்க முடியாதபடி திருத்தல்வாதச் சகதியில் புதைந்து பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இலட்சியத்தைச் சீரழிப்பார்கள் என்பதைத்தான் காட்டுகின்றன. முதலாளித்துவப் நாடாளுமன்றங்களின்பால் கடைப்பிடிக்க வேண்டிய சரியான அணுகுமுறை குறித்து மார்க்சிய-லெனினியவாதிகளுக்கும், பிற சந்தர்ப்பவாதிகள் மற்றும் திருத்தல்வாதிகளுக்கும் இடையே ஒரு அடிப்படை வேறுபாடு எப்போதும் வந்திருக்கிறது. முதலாளிகளின் பிற்போக்குத் தன்மையை அம்பலப்படுத்தவும், மக்களுக்குக் கற்றுக்கொடுக்கவும், புரட்சிகர வலிமையைச் சேகரித்துக் கொள்ள உதவவும், குறிப்பான சூழ்நிலைகளில் பாட்டாளி வர்க்கக் கட்சி நாடாளுமன்றப் போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்றும், நாடாளுமன்ற மேடையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிய-லெனினியவாதிகள் எப்போதும் கூறி வருகிறார்கள். தேவைப்படும்போது இந்தச் சட்டப்பூர்வமான போராட்ட வடிவத்தைப் பயன்படுத்திக்கொள்ள மறுப்பது தவறாகும். ஆனால் பாட்டாளி வர்க்கக் கட்சி ஒரு போதும் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு மாற்றாக நாடாளுமன்றப் போராட்டத்தைக் கருதக்கூடாது; அல்லது சோசலிசத்திற்கான மாற்றத்தைப் நாடாளுமன்றப் பாதையின் மூலம் சாதித்துவிடலாம் என்ற மாயையில் ஆழ்ந்துவிடக்கூடாது. அது எல்லாச் சமயங்களிலும் வெகுஜனப் போராட்டங்களிலேயே கவனம் செலுத்த வேண்டும்.

லெனின் கூறினார்:

"புரட்சிகரப் பாட்டாளி வர்க்கக் கட்சி மக்களை விழிப்படையச் செய்யும் பொருட்டு முதலாளித்துவப் நாடாளுமன்றத்தில் பங்கெடுக்க வேண்டும். தேர்தல்களின் போதும், நாடாளுமன்றத்தில் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் போராட்டங்களின் போதும் அவ்வாறு செய்ய முடியும். ஆனால் வர்க்கப் போராட்டத்தைப் நாடாளுமன்றப் போராட்டமாகக் குறுக்கிவிடுவது, நாடாளுமன்றப் போராட்டத்தை உயர்ந்தபட்ச, தீர்மானகரமான வடிவமாக்கி அனைத்துப் போராட்ட வடிவங்களையும் இதற்குட்பட்டவையாக்குவது உண்மையில் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக முதலாளித்துவத்தின் பக்கம் ஓடிவிடுவதாகும்."

நாடாளுமன்ற வாதத்தின் நிழலைப் பின் தொடர்ந்து சென்றதற்காகவும், அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டிய புரட்சிகரக் கடமையைக் கைவிட்டதற்காகவும் அவர் இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதிகளைக் கண்டித்தார். அவர்கள் பாட்டாளி வர்க்கக் கட்சியை ஒரு தேர்தல் கட்சியாக, ஒரு நாடாளுமன்றக் கட்சியாக, முதலாளிகளின் தொங்கு சதையாக, முதலாளித்துவ சர்வாதிகாரத்தைக் காக்கும் ஒரு கருவியாக மாற்றிவிட்டார்கள். நாடாளுமன்றப் பாதையை ஆதரிப்பதன் மூலம் இரண்டாம் அகிலத்தின் திரிபுவாதிகள் அடைந்த கதியையே குருச்சேவும் அவரைப் பின்பற்றுபவர்களும் அடைவார்கள்.

"இடது சந்தர்ப்பவாதத்திற்கு எதிர்ப்பு" என்பதற்கு மறுப்பு (ரசிய-சீன கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாபெரும்விவாதம் அடைப்படையில்)

ரசிய கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பகிரங்கக் கடிதம் பாட்டாளி வர்க்கப் புரட்சி குறித்த விஷயத்தில் தன் அணுகுமுறை பற்றி பொய்களைப் புனைந்துரைக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகரச் சூழ்நிலை நிலவாத போதே "உடனடியாக பாட்டாளி வர்க்கப் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைக்கிறது" என்றும் அது "முதலாளித்துவ கீழ் உழைக்கும் மக்களின் அத்தியாவசிய நலன்களுக்குமான போராட்டத்தை" கைவிட்டு வருகிறது என்றும் ஆயுதந்தாங்கிய போராட்டத்தை "பூரணமானதாக" கருதுகிறது என்றும் இதுபோன்ற வேறு குற்றச்சாட்டுகளையும் கூறுகிறது. ரசிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மீது "இடது சந்தர்ப்பவாதம்", "இடது துணிச்சலவாதம்", "டிராட்ஸ்கியிசம்" போன்ற முத்திரைகளை அடிக்கடி குத்துகின்றனர்.

ரசிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் இத்தகைய கூப்பாடுகளின் நோக்கம், புரட்சியை எதிர்ப்பதும் மறுதலிப்பதுமான தமது திருத்தல்வாதப் பாதையை மூடி மறைப்பதுதான். "இடது சந்தர்ப்பவாதம்" என்று அவர்கள் தாக்குவது உண்மையில் மார்க்சிய-லெனினிய புரட்சிகரப் பாதையை அன்றி வேறல்ல.

புரட்சி என்பது நமது விருப்பத்தின் பேரில் நடத்தப்பட முடியாது என்றும், புற நிலைமையில் புரட்சிகரமான சூழ்நிலை நிலவினாலொழிய புரட்சி என்பது சாத்தியமில்லை என்றும் நாங்கள் எப்போதும் கூறி வந்திருக்கிறோம். அதே சமயம் புரட்சி வெடித்தெழுவதும் வெற்றி பெறுவதும் புரட்சிகரச் சூழ்நிலையை மட்டும் பொறுத்ததல்ல, கூடவே அகநிலையில் புரட்சிகரச் சக்திகளின் தயாரிப்புகளையும் முயற்சிகளையும் பொறுத்தது.

பாட்டாளி வர்க்கக் கட்சி, புரட்சியை நடத்துவதற்குத் தேவையான புறவய நிலைமைகள் மற்றும் அகநிலை சக்திகள் ஆகிய இரண்டைப் பற்றியும் துல்லியமாக மதிப்பிடவில்லையென்றால், நிலைமை கனிந்து வருவதற்கு முன்பே அவசரமாக ஒரு புரட்சியைத் தொடுக்க முயன்றாலும் அது 'இடது' துணிகரவாதமாகும். ஆனால் பாட்டாளி வர்க்கக் கட்சி புரட்சிக்கான சூழ்நிலை கனிந்து முன்னே அதற்கான செயலாக்கமுள்ள தயாரிப்புகளைச் செய்யாதிருக்குமானால் அல்லது புரட்சிகரமான சூழ்நிலை நிலவும் போது, நிலைமைகள் கனிந்திருக்கும்போது, ஒரு புரட்சியைத் தலைமை தாங்கி வழி நடத்தி அரசு அதிகாரத்தைக் கைப்பற்றத் துணியாமலிருக்குமானால் அது வலது சந்தர்ப்பவாதம் அல்லது திரிபுவாதமாகும்.

அரசு அதிகாரத்தைக் கைப்பற்றும் நேரம் வரும் வரை, புரட்சிகர சக்தியை ஒன்று திரட்டும் கடினமான பணியில் முழுமையாகக் கவனம் செலுத்துவதுதான் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியின் மிக முக்கியமான அடிப்படைப் பணியாகும். அன்றாடப் போராட்டங்களில் அளிக்கப்படும் செயலூக்கமுள்ள தலைமையானது புரட்சிகரச் சக்தியை ஒன்று குவிப்பதையும், சூழ்நிலைகள் கனிந்து வரும்போது புரட்சியில் வெற்றியை ஈட்டுவதற்கான தயாரிப்புகளைச் செய்வதையும்தான் தனது மையக் கடமையாகக் கொள்ள வேண்டும். பாட்டாளி வர்க்கக் கட்சி, பாட்டாளி வர்க்கம் மற்றும் மக்களின் அரசியல் விழிப்புணர்வை அதிகரிக்கவும், தனது சொந்த வர்க்கச் சக்திகளைப் பயிற்றுவிக்கவும், அதன் போரிடும் தகுதியைப் பக்குவப்படுத்தவும், மேலும் புரட்சிக்குச் சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், ஸ்தாபன ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் தயாரிப்பதற்காகவும் அன்றாடப் போராட்டங்களின் பல்வேறு வடிவங்களைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செயற் படுவதன் மூலம் மட்டுமே, புரட்சிகர சூழ்நிலைகள் கனிந்திருக்கும்போது வெற்றி வாய்ப்புகளைத் தவறவிடாமல் இருக்க முடியும். இல்லையெனில் புரட்சிகரமான யதார்த்த நிலைமைகள் நிலவும்போது பாட்டாளி வர்க்கக் கட்சி புரட்சியை நடத்தும் வாய்ப்பை வெறுமனே நழுவிச் செல்ல விட்டுவிடும்.

புரட்சிகரச் சூழ்நிலை நிலவாதபோது எந்தப் புரட்சியையும் நடத்தக் கூடாது என்பதை ஓய்வொழிச்சலின்றி வலியுறுத்தி வரும் ரசிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், புரட்சிகரச் சூழ்நிலை உருவாவதற்கு முன் அன்றாட புரட்சிகரப் போராட்டங்களையும், புரட்சிகர சக்திகளை ஒன்று திரட்டுவதையும் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து எதுவும் சொல்வதில்லை. உண்மையில் புரட்சிகரச் சூழ்நிலை இல்லாமலிருக்கும்போதே புரட்சிக்கான தயாரிப்பு செய்வது, புரட்சிகரச் சக்தியை ஒன்று குவிப்பது ஆகிய கடமைகளை, புரட்சிகரச் சூழ்நிலைகள் இல்லை என்ற சாக்கில் ரசிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கைவிடுகிறார்கள்.

லெனின் ஒருமுறை புரட்சிகரச் சூழ்நிலை பற்றிய ஒடுகாலி காவுட்ஸ்கியின் மனப்பான்மையை மிக அழகாக விளக்கினார். அவர் சொல்கிறார்: புரட்சிகர நெருக்கடி தோன்றும் போது "...புரட்சிக்காரராக மாறுவதற்குக் காவுட்ஸ்கியும் கூடத் தயாராக இருக்கிறார்; ஆனால் அப்போது ஒவ்வொரு அம்சத்திலும் சுலபமாக வெற்றி கிடைக்கும் என்று தன்னை அறிவித்துக் கொள்வான் என்பதை நாம் காண்போம்". "அவ்வாறு இல்லையெனில் காவுட்ஸ்கி புரட்சியைப் பற்றிய அத்தனை இனிய இடத்தையும் லெனினின் சுட்டிக் காட்டியது போலவே ஒரு புரட்சிகர மார்க்சியவாதிக்கும் அற்பவாதிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்னவென்றால், மார்க்சியவாதி "பாட்டாளி வர்க்கத்தையும் அனைத்து உழைக்கும் மக்கள் மற்றும் சுரண்டப்படும் மக்களையும் புரட்சிக்குத் தயாரிப்புச் செய்யக் கூடிய தைரியத்தைப் பெற்றிருப்பார்". இதிலிருந்து லெனின் சாடிய காவுட்ஸ்கி மாதிரியான அற்பவாதிகளாகக் குருச்சேவும் அவரைப் பின் பற்றுபவர்களும் இருக்கிறார்களா இல்லையா? என்பதை மக்கள் தங்களாகவே முடிவு செய்து கொள்ள முடியும்.

முதலாளித்துவ நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்கக் கட்சிகள், ஏகபோக முதலாளித்துவ வாதத்துக்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், மக்களின் வாழ்க்கைச் தரத்தை உயர்த்தவும், ஏகாதிபத்தியத்தின் ஆயுதக் குவிப்பையும் போருக்கான தயாரிப்பையும் எதிர்க்கவும், உலகச் சமாதானத்தைப் பாதுகாக்கவும், ஒடுக்கப்பட்ட தேசங்களின் புரட்சிகரப் போராட்டத்திற்குத் தீவிரமாக ஆதரவளிக்கவும், அந்நாடுகளிலுள்ள தொழிலாளி வர்க்கத்தையும் உழைக்கும் மக்களையும் செயலூக்கத்துடன் தலைமை தாங்கி வழி நடத்திச் செல்லவேண்டும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஆக்கிரமிப்பு, தலையீடு, கட்டுப்பாடு மற்றும் அச்சுறுத்தல்களுக்காளாகியுள்ள முதலாளித்துவ நாடுகளில் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கெதிரான தேசியப் பதாகையை உயர்த்திப் பிடிக்கவேண்டும். வெகுஜனப் போராட்டத்தின் திசையைப் பிரதானமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கெதிராகவும் அதே வேளையில், ஏகபோக மூலதனத்துக்கு எதிராகவும், தேசிய நலன்களுக்குத் துரோகமிழைக்கும் பிற உள்நாட்டுப் பிற்போக்குவாதிகளுக்கு எதிராகவும், திருப்பிவிட வேண்டும். ஐக்கியப்படுத்தக் கூடிய அனைத்துச் சக்திகளையும் அவை ஐக்கியப்படுத்தி அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் அடிவருடிகளுக்கும் எதிரான ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்ட வேண்டும்.

சமீப ஆண்டுகளில் முதலாளித்துவ நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவும் பிற மக்களும் பங்குபெற்ற வெகுஜனப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்கள் மூலம் அவர்கள் ஏகபோக முதலாளித்துவத்தைத் தற்காப்பதோடு மட்டுமின்றி நின்றிருக்கவில்லை; ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெறும் விடுதலைப் போராட்டங்களுக்கும் சோசலிச முகாமிலுள்ள நாடுகளுக்கும் வலிமைமிக்க ஆதரவை வழங்கி வருகின்றனர். இந்நடவடிக்கைகளை நாம் எப்போதும் முழுமையாகப் பாராட்டுகிறோம்.

உடனடிப் போராட்டங்களைச் செயலூக்கத்துடன் தலைமை தாங்கி நடத்திவருவதும் அதேவேளையில் கம்யூனிஸ்டுகள் அத்தகைய போராட்டங்களை, பொதுநலன்களுக்கான போராட்டங்களுடன் இணைக்க வேண்டும்; பாட்டாளி வர்க்கப் புரட்சிகர உணர்வை மக்களிடையே பயிற்றுவிக்கவேண்டும்; இடைவிடாது அவர்களின் அரசியல் விழிப்புணர்வை உயர்த்தவேண்டும்; காலம் கனிந்துவரும்போது புரட்சிகர வெற்றியை எட்டுவதற்காகப் புரட்சிகரச் சக்திகளை ஒன்றுதிரட்ட வேண்டும். எங்களது கண்ணோட்டம் மார்க்சிய லெனினியத்துடன் முற்றிலும் இணக்கமுடையதாகும்.

மார்க்சிய-லெனினியவாதிகளின் இந்தக் கண்ணோட்டத்திற்கு எதிரான முனையில் ரசிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், "வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் ஜனநாயகம் மற்றும் சோசலிசக் கடமைகளுக்கு இடையில் எந்தவகையான எல்லைக்கோடும் வரையறுக்க முடியாதவாறு ஒன்றோடொன்று நெருக்கமாக இணைந்து ஒரே கடமையாக இணைந்து மாறிவிட்டது" என்கின்றனர். இது நீண்டகால போராட்டத்திற்குப் பதில் உடனடிப் போராட்டங்களையும், பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குப் பதில் சீர்திருத்தவாதத்தையும் முன்வைப்பதாகும்.

லெனின் கூறினார்:

"வெகுஜனங்களின் புரட்சிகரப் போராட்ட முறைகளோடு இணைக்கப்படாத எந்த ஒரு சீர்திருத்தமும் பலன் தரக்கூடியதாகி, உண்மையானதாக நீடித்து இருக்கக்கூடியதாக இருக்க முடியாது." "தொழிலாளர் இயக்கத்தின் புரட்சிகர முறையுடன் சீர்திருத்தத்துக்கான போராட்டத்தை இணைக்காத ஒரு தொழிலாளர் கட்சி ஒரு குழுவாக, போராட்டத்தை இணைக்காத ஒரு தொழிலாளர் கட்சி ஒரு குழுவாக மக்களிடமிருந்து துண்டிக்கப்பட்டதாக மாறிவிடக்கூடும், மேலும் இது உண்மையான புரட்சிகரச் சோசலிசத்தின் வெற்றிக்கு மிகப் பெரும் அபாயமாகவும் இருக்கும்".

லெனின் மேலும் சொல்கிறார், "ஒவ்வொரு ஜனநாயகக் கோரிக்கையும் வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் சோசலிசத்தின் மிக உயர்ந்த நலன்களுக்குக் கீழ்ப்பட்டதே", மேலும், அரசுப் புரட்சியும் என்ற நூலில் லெனின் எங்கெல்ஸை மேற்கோள்காட்டி எழுதுகிறார், அன்றாடத் தற்காலிக நலன்களுக்காகப் பின்விளைவுகளைப் பற்றி ஆராய்ந்து பார்க்காமல் அப்போதைய வெற்றிக்காக முயற்சிப்பதும் போராடுவதும் நிகழ்காலத்திற்காக இயக்கத்தின் எதிர்காலத்தைத் தியாகம் செய்வதும் சந்தர்ப்பவாதமாகும், அதுவும் அபாயகரமான சந்தர்ப்பவாதமாகும்.

குறிப்பாக இந்த அடிப்படையில்தான் "சீர்திருத்தத்தைப் புகழ்வது, ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு அடிபணிவது, புரட்சியைப் பலிப்பது, கைவிடுவது"

ஆகியவற்றுக்காகக் காவுட்ஸ்கியை விமர்சனம் செய்தார் லெனின். அவர் சொல்கிறார், "பாட்டாளி வர்க்கம் ஏகாதிபத்திய முதலாளிகளைப் புரட்சிகரமான முறையில் தூக்கி எறியப் போராடிக் கொண்டே அதைச் சீர்திருத்த முறையில் முன்னேற்றவும் அதற்கு ஒத்துப்போகவும் போராடுகிறது".

லெனின் காவுட்ஸ்கியைச் செய்த விமர்சனம் இன்றைய நமது நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கும் பொருந்துகிற சித்திரமாகும்.

இதனை புரிந்துக் கொள்ள ஆசான் லெனின் நூல்களிலே தேடுவோம்,

1917-ம் வருடம், ஏப்ரல் 24-ம் தேதியன்று போல்ஷ்விக் கட்சியின் ஏழாவது (ஏப்ரல் மாநாடு) கூடிற்று. இப்போதுதான் கட்சி தோன்றிய நாளிலிருந்து முதல் தடவையாக ஒரு போல்ஷ்விக் மாநாடு பகிரங்கமாக நடைபெற்றது. இந்த மாநாட்டுக்குக் கட்சி சரித்திரத்தில் கட்சி காங்கிரஸுக்குள்ள முக்கியத்துவமுண்டு.

லெனின் 'ஏப்ரல் அறிக்கையில்' வகுத்து ஏற்கனவே கூறியிருந்த முடிவுகளை, இம்மாநாட்டில் சமர்ப்பித்த அறிக்கையில் விரிவாக விளக்கிக் கூறினார். "அதிகாரத்தை முதலாளிகளிடம் ஒப்புவித்துவிட்ட புரட்சியின் முதல் கட்டத்திலிருந்து, பாட்டாளி வர்க்கத்திடமும் விவசாய வர்க்கத்தில் மிக மிக ஏழையாய் கீழ்ப்படியில் நிற்பவர்களிடமும் அதிகாரத்தை ஒப்புவிக்கக் கூடிய புரட்சியின் இரண்டாவது கட்டத்திற்கு" மாறுதலடைந்து செல்ல வேண்டும். இதை நிறைவேற்றுவதே கட்சியின் வேலை.

"சகல அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே!" என்ற முழக்கம் சோவியத்துகளிடம் பாதி அதிகாரமும் தற்காலிக சர்க்காரிடம் பாதி அதிகாரமும் இருந்த இரட்டை அரசாங்க நிலையை ஒழித்துவிட்டு, முழு அதிகாரத்தையும் சோவியத்துகளிடம் மாற்ற வேண்டும் என்பதைக் குறித்தது.

இங்குள்ள நம் நாட்டின் கம்யூிஸ்ட் கட்சியானது கீழ்காணும் காவுதஸ்கிய நிலைப்பாட்டில் உள்ளது அல்லவா?(பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும் ஓடுகாலி காவுத்ஸ்கியும் நூலிலிந்து)

பலாத்காரத்தைப் பயன்படுத்துவதைத் தடுத்து, ஒடுக்குவோரை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சிகரப் பலாத்காரத்தை எடுத்தகற்றும் முறையில் "பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரச் சர்வாதிகாரம்" எனும் கருத்துருவை "வியாக்கியானம் செய்தது" மூலம் கவுத்ஸ்கி மார்க்சியம் குறித்த மிதவாதப் புரட்டில் உலகச் சாதனையைப் புரிந்துள்ளார். ஒருகாலி கவுத்ஸ்கியுடன் ஒப்பிடும்போது ஒருகாலி பெர்ன்ஸ்டைன் வெறும் நாய்க்குட்டியே.

கவுத்ஸ்கி மிகவும் வெட்கக்கேடான முறையில் குளறுபடி செய்துள்ள விஷயம் உண்மையில் பின்வருமாறு:

பல்வேறு வர்க்கங்கள் நிலவுகின்ற வரையில் "தூய ஜனநாயகம்" பற்றிப் பேச முடியாது. வர்க்க ஜனநாயகம் பற்றி மட்டுமே பேச முடியும் என்பது கண்கூடு. ("தூய ஜனநாயகம்" என்பது வர்க்கப் போராட்டம், அரசின் இயல்பு ஆகிய இரண்டைப் பற்றியும் அறிவில்லாத ஓர் அப்பாவித்தனமான தொடர் மட்டுமல்ல; அதோடு உச்ச அளவிலான வெற்றுத் தொடரும் ஆகும். காரணம், கம்யூனிஸ்டு சமுதாயத்தில் ஜனநாயகம் மாற்றமடையும் போக்கில் ஒரு பழக்கமாக மாறி உலர்ந்து உதிரும்; ஆனால் என்றுமே "தூய" ஜனநாயகம் என்பது இருக்காது என்று இடைக்குறிப்பாகச் சொல்லி வைப்போம்.)

"தூய ஜனநாயகம்" என்பது தொழிலாளர்களை ஏய்க்க விரும்பும் ஒரு மிதவாதியின் பொய்யான தொடராகும். நிலப்பிரபுத்துவ முறையின் இடத்தை எடுத்துக் கொள்ளும் முதலாளித்துவ ஜனநாயகத்தையும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் இடத்தை எடுத்துக் கொள்ளும் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தையும் வரலாறு அறியும்.

... புரட்சியில் பயன்படுத்தப்படும் ஓர் இடைக்கால நிறுவனமே மட்டுமே அரசு. ஆகையால் சுதந்திரமான மக்கள் அரசு குறித்துப் பேசுவது மிகவும் முட்டாள்தனமாகும். பாட்டாளி வர்க்கத்திற்கு அரசு இன்னும் தேவைப்படுகிறது எனில், அது சுதந்திரத்தின் நலன்களுக்காகத் தேவைப்படுவதில்லை; மாறாக அதன் எதிரிகளை அடக்கி வைப்பதன் பொருட்டே தேவைப்படுகிறது. சுதந்திரம் குறித்துப் பேசுவது சாத்தியமானவுடன் அரசு என்பது இல்லாது போகிறது" (எங்கெல்ஸ் 1875 மார்ச் 28-இல் பெபெலுக்கு எழுதிய கடிதத்தில்). "உண்மையில் "அரசு என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான ஓர் இயந்திரமே தவிர வேறு எதுவுமல்ல; இது குடியரசில் போலாலவே சரி; (குறைந்த பட்சம் ஜனநாயகக் குடியரசியிலும் கண்கூடு)" (மார்க்ஸ் எழுதிய பிரான்சில் உள்நாட்டுப் போர் எனும் நூலுக்கு எங்கெல்ஸ் எழுதிய முகவுரையில்).

மெத்தப்படித்த திரு. கவுத்ஸ்கிக்கு மிகவும் அருமையாகத் தெரிந்தவையான இந்தக் கருத்துரைகள் ஒவ்வொன்றும் அவரது முகத்தில் அறைந்த அடியாகும். மேலும், இவை அவரது துரோகத்தை அம்பலப்படுத்துகின்றன. இந்த உண்மைகளைப் பற்றிய ஆகச் சொற்பமான அறிவைக்கூட கவுத்ஸ்கி தனது பிரசுரத்தில் எங்குமே வெளிக்காட்டவில்லை. அவரது பிரசுரத்தின் உள்ளடக்கமும் அனைத்தும் மார்க்சியம் பற்றிய ஒரு படுமோசமான கேலிக்கூத்தே!

சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், "சட்டத்தின் முன் எல்லாக் குடிமக்களின் சமத்துவம்" இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் - ஒவ்வொரு இருபத்திகளிலும் நேர்மையான, வர்க்க உணர்வுடைய எல்லாத் தொழிலாளர்களுக்கும் நன்கு தெரிந்த முதலாளித்துவ ஜனநாயகத்தின் போலித்தனத்தின் அறிகுறிகளைக் காணலாம். "பொது ஒழுங்கு மீறப்படும் போது" உள்ளபடியே காணப்படும் வர்க்கம் தனது அடிமை நிலையை "மீறி" அடிமைத்தனம் அற்ற முறையில் நடக்க முயலுமானால் தொழிலாளர்களுக்கு எதிராகப் படைகளை அனுப்பவும், ராணுவச் சட்டம் பிரகடனம் செய்யவும், இன்னபிறவற்றை அமுலாக்க முதலாளித்துவ வர்க்கத்துக்கு உத்தரவாதம் செய்வதற்கான நுழைவிடங்கள் அல்லது தனி உரிமைகளை ஒதுக்கீடு செய்யாத எந்த ஒரு தனி அரசும் - எவ்வளவுதான் ஜனநாயகத்தன்மையுடையதாயினும் சரி - கிடையாது.                             +++++++++++++++

அறிவாளியும் படிப்பாளியுமான கவுத்ஸ்கி இவற்றைப் பற்றி எல்லாம் மெளனம் சாதிக்கிறார்! இந்த விஷயத்தில் மெளனம் சாதிப்பது வெறுக்கத்தக்கது என்பதை அந்தப் படிப்பாளி அரசியல்வாதி உணரவில்லை.என்ன அற்புதமான அறிவாழம்! முதலாளித்துவ வர்க்கத்திடம் எத்தகைய நயநாகரிகமான அடிமைத்தனம்! முதலாளிகள் முன்னால் எத்தகைய தன்மதிப்பிழந்த சரணாகதி! எத்தகைய கெஞ்சி மன்றாடுதல்!                           ++++++++++++++++++

படிப்பாளியான திரு. கவுத்ஸ்கி, ஓர் "அற்ப விஷயத்தை" "மறந்து விட்டார்" - ஒரு வேளை தற்செயலாக மறந்து விட்டார் போலும். அது என்னவெனில் முதலாளித்துவ ஜனநாயகத்தில் ஆளும் கட்சி சிறுபான்மையினர் பாதுகாப்பை இன்னொரு முதலாளித்துவக் கட்சிக்கு மட்டுமே வழங்குகிறது. அதே போதில் பாட்டாளி வர்க்கம் எல்லா முக்கியமான, ஆழமான, அடிப்படையான பிரச்சினையிலும் "சிறுபான்மையினர் பாதுகாப்புக்குப்" பதிலாக ராணுவச் சட்டம் அல்லது இனக்கொலைகளையே பெறுகிறது. ஜனநாயகம் எந்த அளவுக்கு அதிக உயர் வளர்ச்சி பெற்றிருக்கிறதோ, அந்த அளவுக்கு முதலாளித்துவ வர்க்கத்துக்கு அபாயகரமான எந்த ஓர் ஆழமான அரசியல் வேறுபாட்டின் தொடர்பாக அதிக வேகத்தில் இனக்கொலைகள் அல்லது உள்நாட்டுப் போர் உடனடியாக நிகழும்.

முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்பு முறையின் வரலாற்று வழி வரையறைகளையும் சார்புநிலை இயல்பினையும் ஒரு மிதவாதி மட்டுமே மறந்து விட முடியும் என்று இதற்குப் பொருளாகும். ஆக ஜனநாயகமான முதலாளித்துவ அரசிலும் கூட முதலாளிகளின் "ஜநாயாகத்தால்" பிரகடனம் செய்யப்படும் சம்பிரதாய சமத்துவத்துக்கும் பாட்டாளிகளை மெய்யாகவே கூலி அடிமைகளாக மாற்றும் ஆயிரக்கணக்கான மெய்யான குறைபாடுகளுக்கும், சூழ்ச்சி முறைகளுக்கும் இடையிலான கடுமையான முரண்பாட்டை ஒடுக்கப்பட்ட மக்கள் ஒவ்வொரு படியிலும் எதிர்கொள்கிறார்கள்.

பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம், இதன் வடிவங்களில் ஒன்றே சோவியத் அரசாங்கம். மிகப் பெரும்பான்மையான மக்களுக்கு, சுரண்டப்படும், பாடுபடும் மக்களுக்கு உலகில் இதுகாறும் கண்டிடாத வகையில் ஜனநாயகத்தை விரிவுபடுத்தியுள்ளது.

இந்த தேர்தல் ஜனநாயகம் பற்றி அண்மையில் ஐரோப்பிய ஊட நிறுவனம் பற்றி எழுதியுள்ளவைதான்:-

உலகின் இந்தியா உள்பட 60க்கும் மேற்பட்ட நாடுகளில் நடந்துக் கொண்டிருக்கும் தேர்தல்களில் 400 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கிறார்கள். தேர்தல் நடைமுறைகளில் பல வழிகளில் மோசடிகள் நடக்கவே செய்கிறது என்று அவர்கள் அஞ்சுகிறார்கள், மேலும் அதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் அதிகாரியான ரிக்கார்டோ செல்லேரி கூறுகையில், "வாக்காளர்களின் விருப்பங்களையும் அவர்கள் எப்படி வாக்களிக்கப் போகிறார்கள் என்பதையும் ஒரு முழு தேர்தல் செயல்முறை பிரதிபலிக்கும் போது, ​​அதை ஒரு நேர்மையான தேர்தல் என்று அழைக்கலாம். அத்தகைய ஒரு தேர்தல் செயல்முறை மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும், அப்போது தான் அவர்கள் தேர்தல் நாளன்று வாக்களிக்க முன் வருவார்கள்" என்கிறார் செலேரி. மேலும் செலேரி கூறுகையில், "தேவையான அனைத்து தகவல்களையும் மக்கள் எளிதாக அணுகுமாறு இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். தேர்தல்கள் வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும்" என்கிறார்.( தேர்தல் முறைகேடுகள் என்னென்ன வழிகளில் நடக்கின்றன? முழு விவரம் - BBC News தமிழ்)

மேற்காணும் நிலையில் தமிழக தேர்தல் பற்றி சற்று தெரிந்துக் கொள்வோம்

பாசிச எதிர்ப்பு பேசி திமுக அணிக்கு வலுசேர்க்கும் பல்வேறு முற்போக்கு வேடமிட்டுள்ள கட்சிகள் திமுகவின் உண்மையான அரசியல் பொருளாதாரம் இவர்களை விட வேறானதா? அதன் வரலாற்று பக்கங்கள் என்ன சொல்கின்றன?

அன்றைய தமிழக தேர்தல் களத்தில் காங்கிரசை ஒரங்கட்டிய பின்னர் நீண்ட காலம் அரசு அதிகாரத்தை சுவைத்த திராவிட கட்சிகள். ஆனால் அந்த திராவிட அரசியல் கட்சிகள் இன்று புதிய கட்டத்தை அடைந்துள்ளதுள்ளது. திராவிட அரசியல் இயக்கம் ஒரு நெருக்கடிக் கட்டத்தில் இருக்கிறது. இந்தியா அளவிலான கட்சியான காங்கிரசிடமிருந்து அன்று அதிகாரத்தைக் கைப்பற்றிய திராவிட அரசியலானது, அன்று ஆட்சியை பிடிக்க தீவிர தமிழ் மொழி, தமிழக தேசியம் பேசியோர் இன்று மதவெறி பாசிசக் கட்சியான பாஜகவை எதிர்ப்பு எந்தளவுள்ளது? நடுவன் அரசு பிஜேபியின் கையில் உள்ள காரணத்தால் அதன் அடிமைகளாகி, அவர்களிடம் அடங்கி போகும் நிலையில், இங்குள்ள ஆளும்கட்சிகள் ஆண்டகட்சிகள் நெருக்கடியில் தத்தளிக்கிறது. அன்று அதிகாரத்தை பறிகொடுத்த காங்கிரஸ் திமுகவுடனும் கடந்த காலங்களிலிருந்து மாறுபட்டு நிற்கிறது. இப்போது ஆட்சிக்கு வரத்துடிக்கும் பாஜக அதிமுகவுடனும் கூட்டணி சேர்ந்துள்ளதை ராஜதந்திரம் என்கின்றனர். உண்மையில் இவர்களின் நோக்கம் என்ன? உள்ள அமைப்பில் உழைக்கும் மக்களின் வாழ்விற்கு பாடுபடவா போகின்றனர்? அரசியல் ரீதியாக இவர்கள் பெரும்முதலாளிகளின் நலனுக்காக வெவ்வேறு பெயர்களில் இயங்குகின்றனர். தமிழ்நாட்டில் பிஜேபியின் வளர்ச்சிக்கு அதிமுகவும் திமுகவும் மாறி மாறி உதவிக் கொன்டுள்ளன. தயார்படுத்திக் கொடுத்ததை தற்செயல் அரசியல் நிகழ்வுகளாக எடுத்துக்கொள்ள முடியாது. திராவிட பாதையின் கருத்தியல், அரசியல் என்னவாம்? அரசியல் பொருளாதார கொள்கை இவர்களுக்கு வேறுவேறா? நீண்டகாலமாக பேசப்பட்டு வரும் மாநில உரிமை, கூட்டாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிக் கொள்கைகள் தற்போது பாஜக-ஆர்எஸ்எஸ் எதிர்ப்புக் கொள்கைகளாக வடிவம் பெற்றுள்ளன. இவற்றை பிளவுவாத அரசியல் என முத்திரை குத்தி, பாஜக நிராகரித்து வருகிறது. மேலும் அன்றைய பகுத்தறிவாத மத எதிர்ப்பை உழைக்கும் மக்களிடம் பேசி திக எதிர்ப்பு மத ஆதரவும் செய்கின்றனர் பிஜேபியினர். ஆக உழைக்கும் மக்களுக்கு கல்வியையோ, வேலை வாய்ப்பையோ அவர்களின் அடிப்படை வாழ்வியல் தேவையை விட முக்கியமாக மதம் மற்றும் கலாச்சார காவலர்களாக வலம் வரும் பிஜேபி 2014 தேர்தலில் கொடுத்த வாக்குறுதியோ அதன் பின்னர் பண முடக்கம் கொரோனா தொற்றில் வேலையிழப்பு, ஜிஎஸ்டியினால் வரி ஏய்ப்பும் விலைவாசியும் வானத்தை முட்ட உள்ளது பிஜேபியின் பொய்யான வாக்குறுதிகளால் வாழும் பிஜேபியும் இலவசங்கள் பெயரில் ஆட்சியை பிடிக்க துடிக்கும் பல்வேறு கட்சிகள் இந்த ஆட்சியை பிடித்து என்ன செய்ய போகின்றனர்? பெரும் முதலாளிகளின் தேவைக்காக நாட்டின் கனிம வளங்கள், மக்கள் வளங்களை பன்னாட்டு இன்நாட்டு பாசுர கம்பெனிகளின் கொள்ளைக்காக சேவகம் செய்ய எத்தனிப்பதை விட வேறென்ன?   

இந்தநிலையில் திராவிட மாடல் யாருக்கான அரசு என்பதை நாம் தெரிந்தவர்களே அதேவேளையில் திராவிட மாடல் என்பது பாஜக எதிர்ப்புக்கான ஒரே ஆயுதம் என திமுக கருதுகிறது. இதன்மூலம், திமுக மட்டுமே திராவிட அரசியல் கட்சி என்று பறைசாற்றுகிறது. அதன் அடிப்படையிலே அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு நடத்தியுள்ளது. தற்பொழுது கூட்டணியில் இருந்த கட்சிகளை விட விஜய்காந்த் கட்சிக்கு முக்கியதுவம் கொடுத்துள்ளது மற்றும் சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தங்களின் சீட்டிற்காக நடந்த பேரங்கள் பற்றி செய்தி ஊடகம் காட்டியவையே.

திமுகவின் அதிகாரமும், அந்த அதிகார போதையும், வர்க்க ரீதியாக அவர்கள் யாருக்கானவர்கள் என்பதனையும் கடந்த ஆண்டுகளில் பல்வேறு தொழிலாளர் போராட்டங்கள் மற்றும் அவர்கள் முந்தைய தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டும் பொய்யான அறிக்கைகளால் உழைக்கும் மக்களை ஏய்த்தும், மூலதன ஆதிக்கதிற்கு சேவை செய்யும் நோக்கம் கொண்டதே என்தை நடைமுறையில் நாம் கண்டதே!

இந்திய அளவில், பாஜக எதிர்ப்பில் திமுக தலைமையில் அரசியல் அணிசேர்ந்த தமிழ்நாட்டிலுள்ள கட்சிகள், தமிழ்நாட்டு அரசியலிலும் தொடர வேண்டும் என்று முன்வைக்கிறது. ஆனால் அதன் ஒவ்வொரு செயலும் தன் ஆட்சி பீடத்தை காக்க யாரிடமும் சரணடைய தயங்குவதில்லை. இந்த நிலையில் புதிய காட்சியாய் கூடுதலாக, மூன்றாவது அணிவரிசைக் கட்சிகளும் உள்ளன. அதிமுகவின் சிதறி போனவர்கள் ஏன் இன்று சசிகலா-ராமதாஸ் கூட்டணி, தமிழ்தேசிய கட்சிகள், நாம் தமிழர் கட்சி, கூடுதலாக அரசியல் களத்தில் புதிய அரசியல் போட்டியாளராக தமிழக வெற்றிக் கழகம் வந்துள்ளது. எந்த அடிப்படை அரசியலும் இல்லாமல் பதவி ஆசைக்காக தன் சினிமா கவர்ச்சியை மூலதனமாக்கியுள்ளார். அவரின் கரூர் மற்றும் சில இடங்களில் நடந்த படுகொலைகள் அவரின் நடவடிக்கை ஒரு கோமாளியாக காட்சியளிக்கிறது அதன் தொடர்ச்சியாக நடந்த நாடக பாணியிலான அவரின் நடவடிக்கைகள். கொள்கை ரீதியாக பாஜகவையும் திமுகவையும் அரசியல் எதிரியாக அறிவித்து களத்தில் குதித்துள்ளது.

ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாக நடந்துவரும் திராவிட ஆட்சிகளை வழிநடத்தும் திராவிட கட்சிகளுக்கு மாற்றை எதிர்பார்க்கும் இளம் தலைமுறையினருக்கு தவெக ஒரு பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உழைக்கும் மக்கள் இந்த தேர்தல் அரசியல் மாயையிலிருந்து விலகி விடுபடாமல் கட்டிக்காக்கும் தந்திரமே இந்த கவர்ச்சி அரசியல் வேறில்லை. இதுபோன்றோர் தேர்தல் அரசியலில் அப்பப்பொழுது வருவதும் போவதும் இந்த தேர்தல் அரசியல் மாயையிலிருந்து மக்கள் விடுபடாமல் இருக்கவே. இந்த தேர்தல் யாருக்காக என்பதனை புரிந்துக் கொண்டால் உண்மை வெளியாகும்..

இந்த தேர்தலில் எந்த வர்க்க நலனுக்கானது என்பதனையும் அண்மையில் ஈரான் மீதான அமெரிக்காவின் போர் முற்றுகையும் இந்திய அரசின் இறையாண்மை அற்ற சரணாகதியும் ஒருபுறம் மக்கள் நலம் பேசிக் கொண்டே மக்கள் விரோத அரசியல், இன்னொறுபுறம் கார்ப்பரேட் எதிர்ப்பு வேசம், பாசிச எதிர்ப்பு அடிப்படையிலேயே பிழைப்புவாத சுயநல அரசியலே அன்றி வேறென்ன?!.

மேலும் திமுகவின் வளர்ச்சி அன்றைய சென்னை மாகாணத்திலும் தமிழ் நிலப்பகுதியில் பெரிதும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் நீரோட்டமே விடுதலைப் போராட்ட வரலாற்று மரபு கொண்டவை. ஆயினும் நாற்பதுகள், அறுபதுகளின் வலுமிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் மத்தியிலான பணி பின்னுக்கு தள்ளியது ஏனெனில் அன்றைய சோசலிச கருத்துகளை தன் சினிமா மற்றும் ஊடகங்கள் மூலம் தன்னை முற்போக்காக உழைக்கும் மக்களின் விடுதலை போராளியாக சினிமா கவர்ச்சி மூலம் தன்னை வளர்த்துக் கொண்டது திமுக. அதிகாரத்தில் இருந்த காங்கிரசின் மீதான எதிர்ப்பாக; அன்றைய பணக்கார பண்ணையார்கள் எதிர்ப்பு, மிட்டா மிராசு எதிர்ப்பு, உணவுப்பஞ்சம் இவற்றை கையிலெடுத்ததோடு திமுக, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, சுயமரியாதை, சமூகநீதி, மாநில உரிமை, தமிழர் பெருமை பின்னணியில் திராவிட அமைப்புகள் அரசியலின் முன்னணிக் களத்துக்கு வந்தது. ஆனால் அன்று அவர்கள் பேசியவற்றை எந்தளவு சாதித்தனர் என்றால் ஒரு குறிப்பிட்ட பிரிவு உயர்ந்த நிலைக்கு போய் உள்ளது அவர்கள் நலனிலையில் ஏன் மக்களை ஆளுமை செய்யும் நிலையில் உள்ளனர் ஆனால் உழைக்கும் மக்களின் நிலை தூய்மை பணியார்களின் போராட்டம் சாம்சங் தொழிலாளர் போராட்டம் இன்னும் சில போராட்டம் அதன் மீதான அரசின் செயல் நிரூபிக்கிறது இவர்கள் யார் இவர்களின் பணி எந்த வர்க்க நலனுக்காது என்று!

இச்சூழலில் மீண்டும் உழைக்கும் மக்களின் விடுதலை விரும்பும் கம்யூனிஸ்டுகளின் இடம் என்னவாக இருக்க வேண்டும் சிந்திததுண்டா? மார்க்சிய போதனை ஏற்றுக் கொள்ளாமல் ஒருசில சீட்டுக்காக உழைக்கும் மக்களை அடகு வைத்து என்ன செய்ய போகின்றீர் இந்த தேர்தல் அரசியலில்? நீங்கள் யார் என்பதனை லெனின் விமர்சித்த காவுத்ஸ்கிய நிலைப்பாடுதானே? அதனை பற்றி பேசுவதற்கு முன்னர்

இடைகுறிப்பாக:- இன்றைய தேர்தலை மக்களின் வாக்குகள் தீர்மானிப்பதில்லை தேர்தல் ஆணையம்தான் தீர்மானிக்கிறது. அப்படியிருக்க இந்த போலி ஜனநாயகத்தின் பெயரில் நடக்கும் போலி தேர்தல்முறை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

2023ம் ஆண்டு இறுதியில் தேர்தல் ஆணையரை நியமிக்கும் முடிவை பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளடக்கிய குழுவின் பெரும்பான்மை முடிவு செய்ய வகை செய்யும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து ஞானேஷ் குமார் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்ட பிறகு நடந்த தேர்தல்கள் எட்டு. அவற்றில் ஐந்தில் பாஜக வெற்றி பெற்றது. குறிப்பாக அருணாச்சல பிரதேசம், ஹரியானா போன்ற இடங்களில் தேர்தலுக்கு முன் ஆட்சியில் இருந்த பாஜக, மீண்டும் அதிக இடங்களுடன் அங்கு வெற்றி பெற்ற சம்பவங்கள் அரங்கேறின. இந்த ஹரியானாவில்தான் Exit Poll கணிப்புகள் காங்கிரஸுக்கு வெற்றியை கணித்தும், வாக்காளர் பட்டியல் முறைகேடு உதவியுடன் பாஜக தேர்தலை அபகரித்து வெற்றி பெற்றதாக ராகுல் காந்தி சமீபத்தில் குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.

பிகார் வெற்றிக்கு பாஜகவின் கூட்டணியில் SIR முக்கிய பங்கு வகித்தது. மேலும் புதிய வகையான தில்லுமுல்லு SIR வாக்கு நீக்கத்தில், பாஜகவுக்கு வெற்றி கிடைக்க முடியாத தொகுதிகளிலும் குறைவான வாக்கு வித்தியாசம் கிடைக்கும் தொகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கானோர் ஏன் மாநிலம் முழுவதிலும் லட்ச கணக்கில் ஏன் கோடியில் நீக்கப்பட்டிருக்கின்றனர் என்று மம்தா உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்! இதன் விளைவாக, 2023ம் ஆண்டுக்கு முந்தைய தேர்தல்களில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்ற தொகுதிகள், பாஜகவின் வாக்கு குளறுபடியை அப்பட்டமாக காட்டிக் கொடுத்ததை போன்ற நிலை தற்போது இல்லை. பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான வாக்குவித்தியாசத்தில்தான் பாஜக வென்றிருக்கிறது. இதற்கு அர்த்தம் பாஜக எதிர்ப்பு வாக்குகள் பெரியளவில் நீக்கப்பட்டிருக்கிறது என்பதுதான். குறிப்பாக காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும் 6 தொகுதிகளில், மூன்று வெற்றி 2000-க்கும் குறைவான வாக்குவித்தியாசத்தில் பெற்றவை. அதிலும் இரண்டில் 1000-க்கும் குறைவான வித்தியாசம். அதிலும் ஒன்றில் 500-க்கும் குறைவான வித்தியாசம் இவை பீகார் தேர்தல் சாட்சியம். இதுவரை மக்கள் போலி தேர்தலை சந்தித்துக் கொண்டிருந்தனர்; இன்று தேர்தலையே போலியாக நடத்துகின்றனர் இங்குள்ள ஆட்சியாளர்கள். இவை உழைக்கும் மக்களை ஏய்கவே!

பாசிசம் தேர்தல்களில் வீழ்த்தப்படுவதில்லை!

அரசு அதிகாரத்தால் வீழ்த்தப்படுகின்றன!

சரி தேர்தலில் கம்யூனிஸ்டுகளின் பணியை பற்றி மார்க்சிய ஆசான்கள் என்னவெலலாம் சொல்லியுள்ளனர்? நமக்கான படிப்பினைக்காக சுருக்கமாக பார்ப்போம்...

1). மார்க்ஸ் தான் சமூக வளர்ச்சி போக்கை வரலாற்று ரீதியான முறையில் மதிப்பீடு செய்தார். வர்க்க சமூகத்தின் ஒவ்வொரு கட்டங்களை பற்றி ஆய்வு செய்த மார்க்ஸ் தமது பகுப்பாய்வில் அவர் முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்பு முறையின் சுரண்டும் தன்மையினை வெளிப்படுத்தினார். பாரீஸ் கம்யூன் படிப்பினைகளின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கம் தனக்கான புரட்சியில் உள்ள சமூக அடிப்படைகளை தங்களுகேற்றவகையில் மாற்றுவதென்பது தவிர்க்க முடியாத தேவை என்பதனை விளக்கியுள்ளனர்.

2). ... ஆளும்‌ வர்க்கத்தின்‌ எந்த உறுப்பினர்‌ நாடாளுமன்றத்தில்‌ மக்களைப்‌ பிரதிநிதித்துவப்படுத்தி அடக்கியொடுக்குவகென (ver-und zertreten) மூன்று அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒரு தரம்‌ தீர்மானிப்பதற்குப்‌ பதிலாய்‌, அனைத்து மக்கள்‌ வாக்குரிமையானது கம்யூன்‌களாய்‌ வகுக்கப் பெற்ற மக்களுக்கு-- எந்து ஒரு முதலாளியும்‌ தனது தொழிலுக்குத்‌ தொழிலாளர்களையும்‌போர்மன்களையும்‌ கணக்கர்களையும்‌ தேடிக்‌ கொள்ள தனியார்‌ வாக்குரிமை பணியாற்றுகிறதல்லவா, அதுபோல-— பணியாற்ற வேண்டும். நாடாளுமன்ற முறை குறித்து 1871ல்‌ அளிக்கப்பெற்ற சிறப்பு மிக்க இந்த விமர்சனம்.

3). முதலாளித்துவ நாடாளுமன்ற முறை பன்றிக்‌ தொழுவமே ஆயினுங்கூட அதனைப்‌ பயன்படுத்திக்‌ கொள்ள, முக்கியமாய்‌ நிலைமை புரட்சிகரமானதாய்‌ இல்லை என்பது தெளிவாய்த்‌ தெரியும்‌ நேரத்தில்‌ அதைப்‌ பயன்படுத்திக்‌ கொள்ளத்‌ திராணியற்றதாய்‌ இருந்ததென்பதற்காக அராஜகவாதத்திடமிருந்து தயவு தாட்சண்யமின்றி முறித்துக்‌ கொள்ள மார்க்சுக்குத்‌ தெரிந்திருந்தது. அதேபோது நாடாளுமன்ற முறையை மெய்யாகவே புரட்சிகரமான பாட்டாளி வர்க்க நிலையிலிருந்து விமர்சிக்கவும்‌ அவருக்குத்‌ தெரிந்திருந்தது.

4). ஆளும்‌ வர்க்கத்தின்‌ எந்த உறுப்பினர்‌ நாடாளுமன்றத்‌தின்‌ மூலம்‌ மக்களை அடக்கி ஓடுக்க வேண்டுமெனச்‌ சில ஆண்டுகளுக்கு ஒரு தரம்‌ தீர்மானிப்பகே முதலாளித்துவ நாடாளுமன்‌ற முறையின்‌ மெய்யான சாரப்‌ பொருள்‌ ---நாடாளுமன்‌ற-அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட முடியரசுகளில்‌ மட்டுமின்றி, மிகவும்‌ ஜனநாயகமான குடியரசுகளிலுங்கூட இதுவேதான்‌நிலைமை.

5). சமூக-ஜனநாயகவாதியால்‌ (அதாவது, சோஷலிசத்தின் இன்றைய துரோகியால்) நாடாளுமன்ற முறை பற்றிய அராஜகவாதக அல்லது பிற்போக்கு விமர்சனத்தைத்‌ தவிர்த்து வேறு எந்த விமர்சனத்தையும் ‌உண்மையில்‌ புரிந்து கொள்ள முடிவதில்லை. நாடாளுமன்ற முறையை விட்டொழிப்பதானது பிரதிநிதித்துவ உறுப்புக்களையும்‌ தேர்தலையுமே விட்டொழிப்பதாகாது. பிரதிநிதித்துவ உறுப்புக்கள்‌ வெறும்‌ வாய்ப்பேச்சுக்‌ கூடங்களாய்‌ இருப்பகை மாற்றி அவற்றைச்‌ செயலாற்‌றும்‌ உறுப்புக்களாக்க வேண்டுமென்பதே இதன்‌ பொருள்‌.

6). அருவருப்பு மிக்க முதலாளித்துவ நாடாளுமன்ற முறையிலே சோவியத்துகளையும்‌ நச்சுப்படுத்தி அவற்றை வெறும்‌ வாய்ப்பேச்சுக்‌ கூடங்களாய்‌ மாற்றுவதில்‌ வெற்றியுங்கூட பெற்றுவிட்டனர்‌. சோவியத்துகளில்‌ சோஷலிஸ்டு அமைச்சர்கள்‌ வாய்வீச்சுக்களாலும்‌ தீர்மானங்களாலும்‌ நாட்டுப்புறத்து ஏமாளிகளை ஏய்த்து வருகிறார்கள்‌. ஒருபுறம்‌ சோஷலிஸ்டு-புரட்சியாளர்களிலும்‌ மென்ஷிவிக்குகளிலும்‌ எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமானோருக்குப்‌ பசையுள்ள, சிறப்புக்குரிய பதவிகளான சன்மானங்கள்‌ கிட்டும்‌ பொருட்டும்‌, மறுபுறத்தில்‌ மக்களுடைய கவனம்‌ திசைதிருப்பப்பட்டுக்‌ கவரப்படும் பொருட்டும்‌ அரசாங்கத்தினுள்‌ ஓயாத ஆள்மாற்றம்‌ நடந்தேறுகிறது. இதற்கிடையில்‌ அமைச்சகச்‌ செயலகங்களும்‌ படைத்‌ தலைமையகங்‌களும்‌ அரசுக்குரிய வேலைகளை நடத்துகின்றன.

நம் முன் உள்ள படிப்பினைகள் மற்றும்பணிகள் என்ன?

CPI, CPIM, CPIML இயக்கங்கள் தேர்தல் பாதையில் பயணித்து சோசலிச கட்டுமாணத்தை கொண்டுவர முயற்சித்த சிலி நாட்டின் வரலாற்றைத் தெளிவாக அறிவார்கள் இருந்தும் படிப்பினை பெறாத CPI, CPM கட்சிகள் முதலாளிதுவத் தேர்தல் பாதை மட்டுமே நடைமுறையாக கொண்டு அதனுள் விழுந்து கிடகின்றன. தெலங்கானா புரட்சிகரப் போரட்டத்தை கைவிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ தேர்தல் பாதையை அன்று தொடங்கியதை இன்றுவரை தொடர்கிறது. குறிப்பாக கேரளாவில் முதலாளியத் தேர்தல்முறையில் நம்பூதிரி முதலாவது சட்டமன்ற ஆட்சியை 1953ல் கைப்பற்றியதே அவர்களுக்கான வழிகாட்டல். அதே வழியில் மேற்குவங்கத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தியது CPM கட்சியின் தலைமையில், அதேபோல் திரிபுராவையும் 15 ஆண்டுகள் ஆண்டது. கேரளாவில் பலமுறை, பல ஆண்டுகள் CPM தலைமையில் ஆட்சி செய்தது இன்றும் ஆட்சியில் உள்ளது. இந்த பாதையில் யாருக்காக வேலை செய்கின்றனர் என்பதனை புரிந்துக் கொள்ள, அதானிக்கு கேரள அரசு செய்துக் கொண்டுள்ள பணியின் அடிப்படையில் கட்சியின் வர்க்க அரசியலை புரிந்துக் கொள்ள முடியும். அதேபோல் CPIML லிபரேன் பீகார் மற்றும் தமிழகத்தில் தேர்தல் களத்தில் சாதனை என்னே? அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

அதேபோல் மா-லெ புரட்சி பேசிய பெரும்பாலான குழுக்கள் தேர்தல் பாதையை நோக்கிச் சென்று விட்டன. விதிவிலக்காக சில வெளியே நின்றாலும் அவர்களின் அரசியல் களம் என்னே? ஆகவே உழைக்கும் மக்களைத் தேர்தல் பாதையிலிருந்து மீட்டெடுக்க, நாம் சட்டபூர்வமாகவும செயல்படல் என்பது உள்ள அமைப்புமுறை கொடுத்துளள விதிமுறைகளின அடிப்படையில் உழைக்கம் மக்களுக்கு புரிய வைப்பதும் அவர்களுக்கான விடுதலை என்பது எப்படி என்பதனை உணர்த வேண்டும் அல்லவா?

அடிப்படையில் முற்றாகத் தேர்தல் பாதையை ஒழித்துக் கட்டி உழைக்கும் மக்களின் அரசு அதிகாரத்தை படைக்க கம்யூன்களை நிறுவுவதும். உழைக்கும் மக்கள் இந்த முதலாளியத் தேர்தல் பாதையை நம்பி விழுந்து கிடக்கின்றனர். அவர்களுக்கு இந்த தேர்தல் பாதையின் நோக்கம் ஏகாதிபத்திய- பெரும்முதலாத்துவ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சேவை செய்யும் நோக்கம் கொண்டது இதில் பெரும் நிலவுடமை வர்க்கம் அடங்கலாக...

இந்த பணியை இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளோ ஏன் புரட்சி பேசும் குழுக்களோ முன்னெடுக்கவில்லை என்ற ஆதங்கத்தோடு முடிக்க வேண்டியுள்ளது.

முடிவாக:- நேபாளத்தில் மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்டியது நேப்பாள் மாவோயிஸ்ட் கட்சியே. அதேகட்சி தேர்தல் பாதையில் பங்கேற்று நடந்தவை என்ன? ஆக உழைக்கும் மக்களின் தேவைக்கான கம்யூனிஸ்ட்டு கட்சி பாராளுமன்ற தேர்தலை புரிந்துக் கொள்ளவே.

இந்தப்பகுதி எழுத பயன்பட்ட ஆதாரங்கள்

1). அரசும் புரட்சியும்

2). மாபெரும் விவாதம்

3). போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு

4). பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும் ஓடுகாலி காவுத்ஸ்கியும்

5). சமூக ஜனநாயகத்தின் இரண்டு போர்தந்திரங்கள்

இவை நீண்ட நெடிய விவாதம் கம்யூனிஸ்ட்களிடையே நடத்த வேண்டியுள்ளது, அதற்கு கம்யூனிஸ்டுகளாய் இருப்பவர்கள்தான் உணர முடியும். தொடரும்...


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்