தோழர்களே,
ஈரான் மீதான அமெரிக்காவின் போரை புரிந்துக் கொள்ள ஆசான்
லெனினின் இரு நூல்களை
நாம் இங்கே கவனத்தில் கொள்வோம்.
1). முதல் நூல், போரும் அமைதியும் (War and peace)
2).
இரண்டாம் நூல், போரும் புரட்சியும் (war
and revolution)
இந்த பகுதியை ஒலி வடிவில் AI உதவியுடன் கேட்க இந்த இணைப்பை அழுத்திக் கொள்ளவும் தோழர்களே
போரின் வகைகளை ஆசான்
லெனின் இரண்டு வகையாக பிரிக்கிறார். ஒன்று ஆக்கிரமிப்பு
மற்றொன்று தற்காப்புப் போர் (The Difference Between
Aggressive and Defensive War) இதனை மாவோ தன் காலத்தில் ஜப்பான் எதிர்ப்பில் போரில்
தன் நாட்டின் ஆளும் வர்க்கமாய் இருந்த எதிரியுடனே கூட்டணி வைத்து ஜப்பான் ஆக்கிரமிப்பு
போரில் முனைகிறார். அங்கே ஒரு கம்யூனிஸ்ட் கட்சி பலம் வாய்ந்த கட்சியா இருந்தது ஆனால்
ஈரானின் நிலை என்னே? அதனை விவாதிபதற்கு முன்னர் இங்குள்ளோர் நிலையை
புரிந்துக் கொள்ள முயல்வோம்.
இவர்களை
விமர்சிக்கும் முன்னர் மார்க்சிய புரிதல் அவசியம். புதிய காலனியம் என்றால் என்ன? அதன்
பின்னரான வளர்ச்சியில் அமெரிக்காவின் நிலையோடு மற்ற ஏகாதிபத்தியங்களை சமன்படுத்தி ஒரு
நாட்டின் மீதான ஆக்கிரமிப்பு போரை கண்மூடி மறுக்கும் போக்கை புரிந்துக் கொள்ள அவரின்
எழுத்தில் இருந்தே பார்ப்போம்!
புதிய
காலனியம் பற்றி மாவோ கூறியது, “புதிய காலனியம் என்பது மிகமிக
அபாயகரமானதும் கொடூரமானதுமான காலனிய வடிவமாகும்”- என்கிறார் (மாபெருவிவாதம் பக்கம்
466). மேலும் மாபெரும் விவாதம் நூலின் 5ம் அத்தியாயத்தில் அமெரிக்காவின் புதியகாலனிய
நிலைப்பாட்டை விரிவாக விளக்கி இருப்பார் மாவோ. இதனை புரிந்துக் கொள்ள மார்க்சிய புரிதல்
வேண்டுமல்லவா?. இரண்டாம்
உலகப்போருக்குப் பிந்தைய புதிய காலனியக் கட்டத்தில், நிதிமூலதனத்தின்
உலகளாவிய விரிவாக்கம் என்பது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தால்
வழிநடத்தப்பட்ட பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவச்
சூழ்நிலைகளின் ஒரு முழுமையான உருவாக்கத்துடன் நிகழ்ந்தது எனக் காணலாம். மேலும்
உலகைப் பயங்கரவாதத்திற்குள் தள்ளிய ஹிரோஷிமா - நாகசாகி மீதான குண்டு வீச்சிற்கு
முன்பாகவே, “இந்த விளையாட்டிற்கான விதிகளை” திணிக்கும்
பொருட்டு, புதிய காலனிய நிறுவனங்களையும், அமைப்பு ரீதியான ஏற்பாடுகளையும் உருவாக்குவதில் அமெரிக்க ஏகாதிபத்தியம்
தீவிரக் கவனம் செலுத்தியது. இன்று மிகத்தெளிவாக நம் கண்முன் நிற்பது பெட்ரோ-டாலர்
ஆதிக்கமும் அதன் பின்னரான உலகு தழுவிய இராணுவ தளங்கள் நிறுவியுள்ளதை காண முடிகிறது
அல்லவா? அன்றிலிருந்து இன்றுவரை தான் விரும்பும் நாடுகள் மீது போர் தொடுப்பது அவர்களை
கொல்வது, அழிப்பது பல்வேறு நாடுகளின் நிகழ்ந்த நிகழ்கின்ற தொடர்கதையாக அல்லவா உள்ளது?
அதனைதான் நீண்ட நாள் பணியாக அமெரிக்க செய்துக் கொண்டுள்ளதல்லவா? இதனை புரிந்துக் கொள்ளாமல்
அமெரிக்க புதிய காலனிய ஆக்கிரம்மிப்பு போரையும் ஒடுக்குமுறையையும் தன் நாட்டின் இறையாண்மைக்கான
போராடும் நாட்டையும் சமன்படுத்துவோரை என்னவென்று சொல்ல நீங்களே விளங்கிக் கொள்ளுங்கள்!???
அதன்
சாட்சியாக முகநூல் விவாதம் கீழே:-
Thirumeni Gt அவர்களின் முகநூல் பதிவே Kpsudhir
Sudhir இரண்டு ஏகாதிபத்திய ங்களின்
( ரஷ்ய ஏகாதிபத்தியம் × அமெரிக்க ஏகாதிபத்தியம்) நோக்கமும் ஒன்று தான்! அதாவது மேலாதிக்கம்
செய்வது!!அந்த நாடுகளின் இயற்கை வளங்களை கனிம வளங்களை மறு பங்கீடு செய்து கொள்வதே!
சந்தைகளை கைப்பற்றுவது அவ்வளவு தான்.
ஈரான் 1970-ல் மொஹமட் ரேசா பஹ்லாவி ஆட்சியில் அமெரிக்க-
ஐரோப்பிய புதிய காலனிய நாடாக இருந்தது. ஈரான் இயற்கை வளங்களை கைப்பற்ற அமெரிக்க -
ஐரோப்பிய நாடுகளுக்கு கதவு திறந்து விட்டது மேற்கண்ட ஆட்சி.
1974-ல் ஈரானில் மேற்கு ஜெர்மனியின் கிராஃப்ட்வெர்க்
யூனியன் (சீமன் குருப்) இரண்டு அணு உலைகளை பூஷேரில் நிறுவியது. அத்துடன் பிரான்சின் ஃப்ரமாடம்
நிறுவனத்துடன் இரண்டு அணு உலைகள் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது
அமெரிக்காவும் ஐரோப்பாவும் தங்களுக்கு விசுவாசமான ஆட்சியில் அணு உலை
தொழில்நுட்பத்தை ஊக்குவித்தன. 1979-ல் ஆட்சி மாறியது.
1980-ல் ஈரான் - ஈராக் போரை தூண்டி விட்டது அமெரிக்க
ஏகாதிபத்தியம்.
அமெரிக்க - ஐரோப்பிய உதவியோடு செய்து கொள்ளப் பட்ட அணு உலை
திட்டங்கள் முடங்கியது. ஈரான் - ஈராக் போருக்குப் பிறகு 1985 - 1990 களில் சீனாவுடன் தொழில்நுட்ப
ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 1995-ல் ரஷ்யாவுடன் அணு உலை
திட்டத்தில் கூட்டணி.
2002-ல் ஈரான் நடான்ஸ், அராக் அணு உலைகள் கட்டுமானத்தை அறிவித்தது.
இதன் பிறகு ஈரான் ஆளும் வர்க்கங்கள் நிலை என்ன? எந்த ஏகாதிபத்திய நாடுகளால்
வழிநடத்தப்படுகிறது.....
ஆகவே ஈரான் ஆளும் வர்க்கங்கள் அணிசேரா கொள்கையை கடைபிடிக்க
விடுதலை. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திலும் இல்லை.
இதன் விளைவாக ஏகாதிபத்தியங் களிடையே ஈரான் பெட்ரோலிய
எரிவாயு வளங்களை யார் கைப்பற்றுவது என்பதற்கான போட்டியில்...
இன்றைய சூழல் நிலவுகிறது.
இவரின் இன்னொரு
பதிவு அமெரிக்க சார்புநிலையை விளக்க இன்னும் தேடுவோம்...
Thirumeni Gt அவரின் பதிலே Palani Chinnasamy க்கு, ஏகாதிபத்திய சகாப்தத்தில்
ஏகாதிபத்தியங்கள் போர் வழியில் மேலாதிக்கம் ( hegemony )செய்யும்.
செல்வாக்கு மண்டலங்களை (spheres of influence) உருவாக்கும். இவை
அரசியல் ரீதியாக முடியாத போது போர் வழியில் ஆக்கிரமிப்பு வழியில் மறுபங்கீடு (redivision
) செய்யும்.
ஏகாதிபத்தியங்கள் போர் வழியில் மட்டுமே இவற்றை செய்வதில்லை
என்பார் லெனின். அமைதி வழியிலும் ( உதாரணமாக சீன ஏகாதிபத்தியம்) மேலாதிக்கம்
செய்யும். செல்வாக்கு மண்டலங்களை உருவாக்கும். மறு பங்கீடு செய்யும். அரபு நேட்டோ
எனப்படும் 12 மத்திய கிழக்கு நாடுகளில் இன்று ஒரு சில நாடுகள் மட்டுமே அமெரிக்க
ஏகாதிபத்திய முகாமில் உள்ளன. பிற நாடுகள் சீன, ரஷ்ய ஏகாதிபத்திய முகாமில் உள்ளன. இவை
எப்படி நடந்தது. லெனின் ஏகாதிபத்தியம் அமைதி வழியிலும்
மறு பங்கீடு செய்து கொள்ளும் என்பார். பார்க்க: போரும்
சோசலிசமும் நூல்.
நீதிக்கான போர் என்பது ஒரு ஒடுக்கப்படும் நாடு அனைத்து
ஏகாதிபத்திய ஆதிக்கத்தையும் எதிர்த்து போராடுவது தான் நீதிக்கான போர்.
ஈரான் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதிக்கத்தை மட்டுமே எதிர்த்துப்
போராடுகிறது.
அமெரிக்கா செய்யும் வேலைகளை ரஷ்ய -சீன ஏகாதிபத்தியங்கள்
அமைதி வழியில் செய்து தான் அரபு நேட்டோ எனப்படும் மத்திய கிழக்கு நாடுகளில்
பலவற்றை தன் பக்கம் மறு பங்கீடு செய்துள்ளது.
ஈரான் ரஷ்ய -சீன ஏகாதிபத்தியங்களை எதிர்க்க வில்லை. ஒரு
ஏகாதிபத்திய முகாமை ஆதரித்து மற்றொரு ஏகாதிபத்திய முகாமை ஆதரிப்பதற்கு பெயர் தாய்
நாட்டை பாதுகாக்கும் போர் அல்ல. நீதிக்கான போர் அல்ல. ஈரான் மக்கள் இரண்டு அல்லது
மூன்று ஏகாதிபத்திய முகாம்களையும் எதிர்த்து உள்நாட்டில் புரட்சிக்காக போராட
வேண்டும். அதுதான் நீதிக்கான போர் என்பதைத் தான் மேற்கொண்ட நூலில் லெனின்
விளக்கியுள்ளார். அவசரப்
பட்டு எதையும் புரிந்து கொள்ளக் கூடாது.
ஈரான் 1970-களில் அமெரிக்க - ஐரோப்பிய ஏகாதிபத்திய முகாமில்
இருந்த நாடு. அதனடிப்படையில் தான் ஜெர்மன், பிரான்ஸ் நாடுகள் அமெரிக்க உதவியுடன் ஈரானில் அணு உலை
கட்டியது. அப்போது அமெரிக்க ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடு ஈரான்.
1979-ல் நடந்த கொமேனி புரட்சிக்கு பிறகு அமெரிக்க
ஏகாதிபத்திய சார்பு குறைந்து 1985-90 களில் ரஷ்ய -சீன ஏகாதிபத்திய சார்பு
ஏற்பட்டது.
1995-ல் இரண்டு அணு உலைகளை ரஷ்ய ஏகாதிபத்தியம் ஈரானுக்கு
கட்டியமைத்து கொடுத்தது. இது தான் ஈரான் ஆளும் வர்க்கங்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம்.
நீதிக்கான போரா?
மேலும்
அவரின் தொடர்ச்சியான முகநூல் பதிவே Thirumeni Gt பதிலாக
லெனின் நூல்களை படித்து புரிந்து கொள்ள முயற்சி
செய்யுங்கள். அது உங்களால் முடியாது. ஏறக்குறைய காவுத்ஸ்கி பேசியதை பேசுவதற்கு ஏன்
லெனின் நூலை உதாரணம் காட்டுகிறீர்கள்.
காவுத்ஸ்கி ஜெர்மன் முதலாளித்துவத்துக்கு ஆதரவாக நின்றான்.
பெரும் அறிஞராகிய தாங்கள் காவுத்ஸ்கியை என்ன அழகாக விவாதத்தின் மூலம்
நிறுவுகிறீர்கள். சூப்பர். நீங்கள் குறிப்பிடும் நூலில் முதல் உலகப் போரின் போது
மத்திய கிழக்கை கைப்பற்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் ஜெர்மன்
ஏகாதிபத்தியங்கள் முயன்றனர்.
இரண்டு ஏகாதிபத்திய முகாமையும் ஒடுக்கப்பட்ட மக்கள்
எதிர்த்து நின்று போராட வேண்டும் என்பார். போர் முடிவில் துருக்கி - ஜெர்மன்
நாடுகள் தோல்வி. துருக்கியிடமிருந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பாலஸ்தீனம் மற்றும்
ஜோர்டானை மறு பங்கீடு செய்து தனது காலனியாக்கிக் கொண்டது. பிரான்ஸ்
துருக்கியிடமிருந்து சிரியா மற்றும் லெபனானை கைப்பற்றி மறு பங்கீடு செய்து கொண்டு
தனது காலனியாதிக்கத்தின் கீழ் அந்த நாடுகளை கொண்டு வந்தது.
லெனின் நூலில் இந்த விவரங்கள் உள்ளன.
ஆகவே மாபெரும் அறிஞரான தாங்கள் இவற்றை எல்லாம் மறுக்க
முடியாது.
மறு பங்கீட்டு போரில் ஈரான் ரஷ்ய -சீன ஏகாதிபத்தியங்களின்
புதிய காலனிய நாடு. ஈரான் ஆளும் வர்க்கங்கள் ரஷ்ய -சீன ஏகாதிபத்தியங்கள் பின்
நிற்கிறார்கள். ரஷ்ய -சீன ஏகாதிபத்தியங்களும் ஏகாதிபத்தியங்கள் தான்.
மேல்காணும்
விவாதம் ஆசான் லெனினின் கோட்பாடுகளை வறட்டுதனமாக புரிந்துக் கொண்டு யதார்த்த நிலைமைகளை
பரிசீலிக்க மறுக்கும் அரசியல் ஓட்டாண்டிதனம் எனலாம். புதிய காலனியம் என்ன? அதில் ஆக்கிரமிப்பாளன்
யார்? ஏன் எதற்கு ஆக்கிரமிக்கிறான் மேலும் அவரவர்களின் நாட்டின் மீதான ஆக்கிரம்மிப்பு
போரை எதிர்பதை கூட ஆம் ஆக்கிரமிப்புக்கு எதிரான போரைக்கூடா புரிந்துக் கொள்ளாமல் வறட்டுதனமான இவரை போன்றோரை
அமெரிக்க தாசர் என்பதில் பிழை இருக்காது என்றே நினைக்கிறோம்.
மேலும்
தோழர் ரவீந்திரன் முகநூல் பக்கத்திலிருந்து வருவன:- ஏகாதிபத்தியங்கள் நீடிக்கும்வரை போர்கள் நீடிக்கும். இது லெனினிய
கோட்பாடு. ஏகாதிபத்தியங்கள் நாடுகளை பங்குபோட்டுக்கொள்வதற்காகவே போர்கள்
நடத்துகின்றன. ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நேரடியாக போர்கள் நடப்பதை இந்த
வகையில் சேர்க்கலாம். ஏகாதிபத்தியங்கள் அமைதியாக ஒரு நாட்டில் புதிய காலனியத்தை
நிறுவும் போது. அந்த புதிய காலனியத்துக்கு எதிராகவும் புதிய காலனியத்துக்கு
துணைபோகும் அரசை எதிர்த்தும் வர்க்கப் போராட்டத்தை நடத்தி அந்த ஆட்சியை வீழ்த்த
வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் இல்லை. ஆனால் ஆயுத நடவடிக்கையின் மூலம் ஒரு
ஏகாதிபத்தியம் ஒரு நாட்டை பலவந்தமாக அடிமைப்படுத்த முயற்சிக்கும் போது, ஆக்கிரமிப்பாளனை எதிர்த்துப் போராடுவது அவசியமா? உள்நாட்டில்
வர்க்கப் போராட்டம் நடத்துவது அவசியமா? ஆக்கிரமிப்பாளனை
எதிர்த்துப் போராடுவதுதான் அவசியமாகும். அத்தகைய போரை ஆதரிப்பதுதான் அவசியமாகும்.
இங்கே ஈரான் ரஷ்ய மற்றும் சீன ஏகாதிபத்தியங்களை ஆதரிக்கின்றது, ஆகவே ஈரான் அரசு நடத்தும் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிக்கக்
கூடாது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. ஈரான் ரஷ்ய மற்றும் சீனாவின்
ஆதிக்கத்திற்கு அடிபணிந்துவிடக்கூடாது என்ற கருத்து நியாயமானதே ஆகும். ஆனால்
பொதுவான எதிரியை எதிர்த்தப் போராட்டத்தில் அவசியமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும்
நிலையில் ஆக்கிரமிப்புத் தன்மையுள்ள எதிரியை எதிர்த்து பிற எதிரிகளோடு கூட்டு
சேர்ந்து செயல்பட வேண்டும் என்றே மார்க்சியம் வழிகாட்டியுள்ளது. உதாரணம் ஜப்பான்
ஆக்கிரமிப்பை எதிர்த்து கோமிங்டானுடன் கூட்டு சேர்ந்தது. அந்த அனுபவத்தை இங்கு
பொருத்தினால் ஈரான் அரசானாது எல்லாவகையான ஏகாதிபத்தியங்களுக்கும் அடிபணியக்கூடாது
என்ற நிபந்தனையோடு ஈரானது ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போரை ஆதரிப்பதுதான் இயங்கியல்
முறையாகும் என்பதே எனது கருத்தாகும். எனினும் போரில் ஈரான் அரசு வெற்றிபெற்ற
பின்பு ஈரான் அரசு ரஷ்ய சீன அரசுகளின் புதிய காலனியத்துக்கு அடிபணிந்தால் அந்த
அரசுக்கு எதிராக வர்க்கப் போராட்டம் நடத்த வேண்டும். அதற்கு மாறாக அமெரிக்க
ஏகாதிபத்தியம் ஆக்கிரமிப்பு போரை நடத்துகின்ற வேளையில் ஈரானை யாருக்கும்
காலனியாக்கக்கூடாது என்ற நிபந்தனையோடு ஈரான் அரசை ஆதரிப்பதுதான் சரியானதாகும்.
குறிப்பான சூழலுக்கு குறிப்பான தீர்வே மார்க்சியமாகும். ரஷ்யா மற்றும்
சீனாவுக்கும் இடையிலான உறவில் ஈரான் சம அந்தஸ்தோடு உறவு வைத்துக்கொள்வதில்
தவறில்லை. தற்போதை அமெரிக்க ஆக்கிரமிப்பு போரை எதிர்கொள்ள ரஷ்யா, சீனா, வடகொரியா போன்ற நாடுகளின் உதவியை நாடுவதிலும்
தவறில்லை. தற்போது அமெரிக்க ஏகாதிபத்தியம் பலவீனமடைவது ஏகாதிபத்திய உலகத்தை
பலவீனபடையச் செய்யும்.
இனி ஆசான் லெனின் நூல்களிலிருந்து தேடுவோம்.
போரின் வகைகள்: ஆக்கிரமிப்பு மற்றும் தற்காப்புப் போர் (The
Difference Between Aggressive and Defensive War)
தற்காப்புப் போர் (Defensive War) - வரலாற்றுப் பின்னணி:
1789 முதல் 1871 வரையிலான காலத்தில், "தற்காப்புப் போர்" என்பது நிலப்பிரபுத்துவம் (feudalism)
மற்றும் அந்நிய
அடக்குமுறைக்கு எதிரான புரட்சிகரமான போராட்டமாகவே சோசலிஸ்டுகளால் பார்க்கப்பட்டது.
இடைக்கால அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைவதற்காக நடத்தப்படும் போர்களை அவர்கள்
"நீதியான போர்" (just war) என்று கருதினர்.
நீதியான போர் (Just War):
ஒரு நாடு (உதாரணமாக மொராக்கோ,
இந்தியா அல்லது சீனா)
ஒரு பெரிய வல்லரசுக்கு எதிராகத் தன்னைத் தற்காத்துக் கொள்ளப் போரிடும்போது,
யார் முதலில்
தாக்கினார்கள் என்பது முக்கியமல்ல. அந்தப் போராட்டம் ஒடுக்கப்பட்டவர்களின்
வெற்றிக்காகவும், விடுதலைக்காகவும் இருந்தால்,
அது ஒரு
"தற்காப்புப் போர்" மற்றும் "நீதியான போர்" ஆகும்.
ஆக்கிரமிப்புப் போர் மற்றும் ஏமாற்று வேலை:
இரண்டு அடிமை உரிமையாளர்களுக்கு இடையே நடக்கும் போரை (யார்
அதிக அடிமைகளை வைத்திருப்பது என்ற போட்டி) "தற்காப்புப் போர்" என்று
அழைக்க முடியாது. அத்தகைய சூழலில் "நாட்டைப் பாதுகாத்தல்" (defence
of the fatherland) என்ற
வார்த்தையைப் பயன்படுத்துவது வரலாற்று ரீதியாகத் தவறானது மற்றும் மக்களை ஏமாற்றும்
செயலாகும்.
பகுப்பாய்வு (Analysis):
இந்த உரை, போரின் தன்மையை அது தொடங்கும் முறையை வைத்து அல்லாமல்,
அதன் நோக்கத்தை (Purpose)
வைத்தே தீர்மானிக்க
வேண்டும் என்று கூறுகிறது. ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவது
மட்டுமே தற்காப்புப் போராகக் கருதப்பட வேண்டும்;
மாறாக,
இரண்டு அதிகாரப்
போட்டிகளுக்கு இடையே நடக்கும் மோதலைத் தற்காப்புப் போர் என்று கூறி
நியாயப்படுத்தக் கூடாது.
நவீன காலப் போர்களின் வரலாற்று வகைகள் (Historical
Types of Wars in Modern Times)
1. நவீன காலத்தின் புதிய சகாப்தம்:
மாபெரும் பிரெஞ்சுப் புரட்சி மனித வரலாற்றில் ஒரு புதிய
சகாப்தத்தைத் தொடங்கி வைத்தது. 1789 முதல் 1871 வரையிலான காலகட்டத்தில் (பாரிஸ் கம்யூன் வரை),
முதலாளித்துவ-முற்போக்கான
மற்றும் தேசிய-விடுதலைத் தன்மை கொண்ட போர்களே முதன்மையான வகையாக இருந்தன.
2. இந்தப் போர்களின் முக்கிய நோக்கம்:
இந்த வகையான போர்களின் அடிப்படை நோக்கம் மற்றும் வரலாற்று
முக்கியத்துவம் என்பது: எதேச்சாதிகாரம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தை (Absolutism
and Feudalism) வீழ்த்துவது. இந்த
அடக்குமுறை நிறுவனங்களைச் சிதைப்பது. அந்நிய நாட்டின் ஒடுக்குமுறையிலிருந்து
விடுதலை பெறுவது.
3. சோசலிஸ்டுகளின் நிலைப்பாடு:
இத்தகைய போர்கள் "முற்போக்கான போர்கள்" என்று
கருதப்பட்டன. இக்காலகட்டத்தில், நேர்மையான புரட்சிகர ஜனநாயகவாதிகளும்,
அனைத்து
சோசலிஸ்டுகளும் அந்தந்த நாடுகளின் (அதாவது அந்தந்த நாட்டு முதலாளித்துவ
வர்க்கத்தின்) வெற்றிக்கு ஆதரவு தெரிவித்தனர். ஏனெனில்,
அந்த முதலாளித்துவ
வர்க்கம் நிலப்பிரபுத்துவம் மற்றும் பிற நாடுகளின் மீதான அடக்குமுறைக்கு எதிரான
அடித்தளத்தைத் தகர்க்க உதவியது.
4. வரலாற்று உதாரணங்கள்:
பிரெஞ்சு புரட்சிகரப் போர்கள்: பிரான்ஸ் நடத்திய இந்தப்
போர்களில் பிற நாடுகளைக் கைப்பற்றுதல் மற்றும் கொள்ளையடித்தல் போன்ற கூறுகள்
இருந்தாலும், அவை ஐரோப்பா முழுவதும் இருந்த பழைய நிலப்பிரபுத்துவ
முறையைத் தகர்த்தெறிந்தன என்பதே அதன் அடிப்படை வரலாற்று முக்கியத்துவமாகும்.
பிராங்கோ-புஷ்யப் போர் (Franco-Prussian
War): இதில் ஜெர்மனி
பிரான்ஸைக் கொள்ளையடித்திருந்தாலும், மில்லியன் கணக்கான ஜெர்மானிய மக்களை நிலப்பிரபுத்துவ
சிதைவிலிருந்து விடுவித்து ஒரு தேசமாக ஒன்றிணைக்க இந்தப் போர் உதவியது.
நீதியான போர் (Just War): ஒடுக்கப்பட்ட நாடுகள் (உதாரணமாக இந்தியா,
சீனா) வல்லரசுகளுக்கு
எதிராகத் தற்காப்புக்காகப் போரிடுவது "நீதியானது". இதில் யார் முதலில்
தாக்கினார்கள் என்பது முக்கியமல்ல.
ஏமாற்று வேலை: மாறாக, இரண்டு அதிகாரப் போட்டிகளுக்கு இடையே (அடிமை
உரிமையாளர்களுக்கு இடையே) நடக்கும் போரை "தற்காப்புப் போர்" என்று
அழைப்பது வரலாற்று ரீதியாகத் தவறானது மற்றும் மக்களை ஏமாற்றும் செயலாகும்.
"...இரண்டு கொடுங்கோலர்களான ரஷ்ய ஜார் மற்றும் மூன்றாம்
நெப்போலியன் ஆகியோரின் ஒடுக்குமுறையிலிருந்து [விடுதலை பெற்றனர்]."
ஆக்கிரமிப்பு மற்றும் தற்காப்புப் போருக்கு இடையிலான
வேறுபாடு
1789-1871 வரையிலான காலகட்டம் ஆழமான தழும்புகளையும் புரட்சிகர
நினைவுகளையும் விட்டுச் சென்றது. நிலப்பிரபுத்துவம்,
எதேச்சாதிகாரம்
மற்றும் அந்நிய ஒடுக்குமுறை ஆகியவை வீழ்த்தப்படுவதற்கு முன்பு,
சோசலிசத்திற்கான
பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி என்பது சாத்தியமற்ற ஒன்றாக இருந்தது.
இத்தகைய காலகட்டத்தின் போர்களைப் பொறுத்தவரை, "தற்காப்புப்" போரின் நியாயத்தன்மையைப் பற்றி
பேசும்போது, சோசலிஸ்டுகள் எப்போதும் இடைக்கால நிலப்பிரபுத்துவ முறை
மற்றும் அடிமைத்தனத்திற்கு (serfdom) எதிரான புரட்சியை மட்டுமே மனதில் கொண்டிருந்தனர்.
"தற்காப்புப்" போர் என்பதன் மூலம் சோசலிஸ்டுகள் எப்போதும் இந்த
அர்த்தத்தில் ஒரு "நீதியான" போரையே குறிப்பிட்டனர் (டபிள்யூ.
லீப்க்னெக்ட் ஒருமுறை தன்னைத் துல்லியமாக இவ்வாறு வெளிப்படுத்திக் கொண்டார்).
இந்த அர்த்தத்தில் மட்டுமே சோசலிஸ்டுகள்
"தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கான" போர்களை அல்லது "தற்காப்புப்"
போர்களை சட்டபூர்வமானவை, முற்போக்கானவை மற்றும் நீதியானவை என்று கருதினர்,
இப்போதும்
கருதுகின்றனர். உதாரணமாக, நாளை மொராக்கோ பிரான்ஸ் மீதோ,
இந்தியா இங்கிலாந்து
மீதோ, பெர்சியா
அல்லது சீனா ரஷ்யா மீதோ போர் அறிவித்தால், யார் முதலில் தாக்கினார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல்,
அவை "நீதியான,"
"தற்காப்பு"
போர்களாகவே இருக்கும்; மேலும் ஒவ்வொரு சோசலிஸ்டும் ஒடுக்கும்,
அடிமைப்படுத்தும்,
சூறையாடும்
"பெரிய" வல்லரசுகளுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட,
சார்புநிலை கொண்ட,
சமத்துவமற்ற நாடுகளின்
வெற்றியை விரும்புவார்கள்.
ஆனால், 100 அடிமைகளை வைத்திருக்கும் ஒரு அடிமை உரிமையாளர்,
அடிமைகளை இன்னும்
"நீதியாக" பகிர்ந்து கொள்வதற்காக 200 அடிமைகளை வைத்திருக்கும் மற்றொரு அடிமை உரிமையாளருடன்
போரிடுவதைக் கற்பனை செய்து பாருங்கள். தெளிவாகச் சொன்னால்,
அத்தகைய சூழ்நிலையில்
"தற்காப்புப் போர்" அல்லது "தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கான
போர்" என்ற சொற்களைப் பயன்படுத்துவது வரலாற்று ரீதியாகத் தவறானது,
மேலும் நடைமுறையில்
அது சாதாரண மக்களை ஏமாற்றும் வெறும் மோசடியாகும்.
முக்கியக் கருத்துக்கள் (Key
Highlights):
நீதியான போர் (Just War): ஒரு நாடு ஆக்கிரமிப்பாளரிடமிருந்து அல்லது
ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறப் போராடும்போது,
அது தற்காப்புப்
போராகக் கருதப்படுகிறது. இங்கே "யார் முதலில் தாக்கினார்கள்" என்பது
முக்கியமல்ல, "எந்த நோக்கம்" என்பதுதான் முக்கியம்.
வல்லரசுகளின் மோதல்: இரண்டு சுரண்டும் சக்திகள்
தங்களுக்குள் மோதிக்கொள்வதை "நாட்டைப் பாதுகாத்தல்" என்று கூறி
நியாயப்படுத்துவது மக்களைத் திசைதிருப்பும் செயலாகும்.
வரலாற்றுப் பின்னணி: 18-19 ஆம் நூற்றாண்டுகளில் நடந்த பல போர்கள் நிலப்பிரபுத்துவத்தை
ஒழிக்க உதவியதால் அவை முற்போக்கானவையாகக் கருதப்பட்டன.
சாமர்த்தியமான அடிமை உரிமையாளர்களால்,
அறிவில்லாத மற்றும்
பாமர மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அடிமைத்தனத்தை வலுப்படுத்துவதற்காக அடிமை
உரிமையாளர்களுக்கு இடையே நடக்கும் தற்போதைய போரில்,
"தேசிய"
சித்தாந்தம் மற்றும் "தாய்நாட்டைப் பாதுகாத்தல்" என்ற சொற்களைப்
பயன்படுத்தி ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கம் மக்களை இதே போன்றுதான் ஏமாற்றிக்
கொண்டிருக்கிறது.
தற்போதைய போர் ஒரு ஏகாதிபத்தியப் போர் (THE
PRESENT WAR IS AN IMPERIALIST WAR)
தற்போதைய போர் ஒரு ஏகாதிபத்தியப் போர் என்பதைப்
பெரும்பாலும் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில்,
இந்தச் சொல்
சிதைக்கப்படுகிறது அல்லது ஒரு தரப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அல்லது,
இந்தப் போர் ஒருவேளை
முதலாளித்துவ-முற்போக்கான, தேசிய-விடுதலை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என்ற
கூற்றுக்காக ஒரு சிறு வாய்ப்பு (loophole) விடப்படுகிறது.
ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவ வளர்ச்சியின்
உச்சகட்டமாகும்; இது இருபதாம் நூற்றாண்டில் மட்டுமே எட்டப்பட்டது.
நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்துவதற்காக உருவாக்கப்பட்ட பழைய தேசிய அரசுகள்,
இப்போது
முதலாளித்துவத்திற்கு மிகவும் குறுகலானவையாக (tight)
மாறிவிட்டன.
முதலாளித்துவம் இன்று எந்த அளவிற்கு ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றால்,
தொழில்துறையின்
ஒட்டுமொத்தப் பிரிவுகளும் முதலாளித்துவ கோடீஸ்வரர்களின் சிண்டிகேட்டுகள் (syndicates),
டிரஸ்டுகள் (trusts)
மற்றும் சங்கங்களால்
கைப்பற்றப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த உலகமும் "மூலதனப் பிரபுக்களுக்கு" (lords
of capital) இடையே
காலனிகளாகவோ அல்லது நிதிச் சுரண்டலின் ஆயிரக்கணக்கான வலைப்பின்னல்களால்
பிணைக்கப்பட்ட நாடுகளாகவோ பிரிக்கப்பட்டுவிட்டன.
சுதந்திர வர்த்தகம் மற்றும் போட்டி ஆகியவற்றுக்குப் பதிலாக
ஏகபோக உரிமைக்கான (monopoly) முயற்சி முன்னுக்கு வந்துள்ளது. மூலதன முதலீட்டிற்காகவும்,
கச்சா பொருட்களை
ஏற்றுமதி செய்வதற்காகவும் பிற நாடுகளின் நிலப்பரப்புகளைக் கைப்பற்றும் நோக்கம்
மேலோங்கியுள்ளது.
நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் நாடுகளை
விடுவித்த முதலாளித்துவமானது, இப்போது ஏகாதிபத்திய முதலாளித்துவமாக மாறி,
நாடுகளை ஒடுக்கும்
மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. முன்பு முற்போக்கானதாக இருந்த
முதலாளித்துவம், இப்போது ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சி: முதலாளித்துவம் அதன்
உச்சகட்டமான ஏகாதிபத்தியத்தை 20-ஆம் நூற்றாண்டில் எட்டியுள்ளது.
சுரண்டலின் புதிய வடிவம்: சுதந்திரப் போட்டி மறைந்து,
ஏகபோக உரிமையும் (Monopoly)
காலனிகளைக்
கைப்பற்றும் வெறியும் அதிகரித்துள்ளது. முற்போக்கிலிருந்து ஒடுக்குமுறைக்கு: ஒரு
காலத்தில் நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து நாடுகளை விடுவித்த முதலாளித்துவம்,
இன்று நாடுகளை
அடிமைப்படுத்தும் மிகப்பெரிய ஒடுக்குமுறை சக்தியாக மாறியுள்ளது.
மக்களை ஏமாற்றுதல்: "தாய்நாட்டைப் பாதுகாத்தல்"
என்ற பெயரில் ஏகாதிபத்திய சக்திகள் தங்களின் சுயநலப் போரை நியாயப்படுத்தி மக்களை
ஏமாற்றுகின்றன.
அடிமைமுறையைப் பாதுகாப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும்
மிகப்பெரிய அடிமை உரிமையாளர்களுக்கு இடையே நடக்கும் போர்
(WAR BETWEEN THE BIGGEST
SLAVE-OWNERS FOR PRESERVING AND FORTIFYING SLAVERY)
ஏகாதிபத்தியத்தின் முக்கியத்துவத்தை விளக்க,
"பெரிய" (அதாவது,
பெரிய அளவில்
சூறையாடுவதில் வெற்றி பெற்ற) வல்லரசுகளுக்கு இடையே உலகம் எவ்வாறு
பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் துல்லியமான புள்ளிவிவரங்களை இங்கே
குறிப்பிடுகிறோம்.
இதிலிருந்து நாம் காண்பது என்னவென்றால்,
1789-1871 காலகட்டத்தில் மற்ற
நாடுகளின் விடுதலைக்காகப் போராடிய பெரும்பாலான நாடுகள்,
இப்போது (1876-க்குப் பிறகு), மிகவும் வளர்ச்சியடைந்த மற்றும் "முதிர்ந்து
அழுகிய" (overripe) முதலாளித்துவத்தின் அடிப்படையில்,
உலக மக்கள் தொகையில்
பெரும்பான்மையினரை ஒடுக்குபவர்களாகவும், அடிமைப்படுத்துபவர் களாகவும் மாறியுள்ளன. 1876 முதல் 1914 வரை, ஆறு "பெரிய" வல்லரசுகள் 2.5 கோடி சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கைப்பற்றின. இது
ஐரோப்பாவின் பரப்பளவை விட இரண்டரை மடங்கு அதிகம்!
இந்த ஆறு வல்லரசுகள் காலனிகளில் வாழும் அரை
பில்லியனுக்கும் அதிகமான (52.3 கோடி) மக்களை அடிமைப்படுத்தியுள்ளன. வல்லரசுகளில் வாழும்
ஒவ்வொரு நான்கு நபர்களுக்கும், "அவர்களுடைய" காலனிகளில் ஐந்து பேர் அடிமைகளாக உள்ளனர்.
காலனிகள் வாள் மற்றும் தீயினால் (ஆயுத பலத்தால்) கைப்பற்றப்படுகின்றன என்பதும்,
காலனி மக்கள் மிகவும்
கொடூரமாக நடத்தப்படுகிறார்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். அவர்கள் மூலதன
ஏற்றுமதி, சலுகைகள் என ஆயிரம் வழிகளில் சுரண்டப்படுகிறார்கள்;
பொருட்களின்
விற்பனையில் ஏமாற்றப்படுகிறார்கள்; "ஆளும்" தேசத்தின் அதிகாரிகளுக்கு அடிபணிய
வைக்கப்படுகிறார்கள்.
ஆங்கிலோ-பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தினர்,
தாங்கள் நாடுகளின்
விடுதலைக்காகவும் பெல்ஜியத்திற்காகவும் போரிடுவதாகக் கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள்;
உண்மையில் அவர்கள்
தாங்கள் அநியாயமாகக் கைப்பற்றிய காலனிகளைத் தக்கவைத்துக் கொள்ளவே போரிடுகிறார்கள்.
பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு நாடுகள் தங்களின் காலனிகளை "நேர்மையாக"
பகிர்ந்து கொள்ள ஒத்துக்கொண்டால், ஜெர்மனிய ஏகாதிபத்தியவாதிகள் பெல்ஜியம் போன்ற நாடுகளை
உடனடியாக விடுவித்துவிடுவார்கள்.
இந்தச் சூழலின் விசித்திரம் என்னவென்றால்,
காலனிகளின் விதி
கண்டத்தில் (ஐரோப்பாவில்) நடக்கும் போரால் தீர்மானிக்கப்படுகிறது. முதலாளித்துவ
நீதி மற்றும் தேசிய சுதந்திரத்தின் பார்வையில் பார்த்தால்,
இங்கிலாந்து மற்றும்
பிரான்ஸை விட ஜெர்மனிக்கு அதிக நியாயம் இருப்பதாகத் தோன்றும். ஏனெனில்,
இங்கிலாந்தும்
பிரான்ஸும் ஜெர்மனியை விடப் பெரிய அளவில் மற்ற நாடுகளை ஒடுக்குகின்றன. ஆனால்,
ஜெர்மனி நாடுகளின்
விடுதலைக்காகப் போராடவில்லை, மாறாக நாடுகளை ஒடுக்குவதற்காகவே போராடுகிறது.
முதிர்ந்த மற்றும் பழைய திருடர்களிடமிருந்து (இங்கிலாந்து,
பிரான்ஸ்)
கொள்ளையடிப்பதற்காக ஒரு இளைய மற்றும் வலிமையான திருடனுக்கு (ஜெர்மனி) உதவி செய்வது
சோசலிஸ்டுகளின் வேலை அல்ல. சோசலிஸ்டுகள் இந்தத் திருடர்களுக்கு இடையிலான மோதலைப்
பயன்படுத்தி அவர்கள் அனைவரையும் தூக்கியெறிய வேண்டும். இதைச் செய்ய வேண்டுமானால்,
சோசலிஸ்டுகள் முதலில்
மக்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டும். அதாவது, இந்தப் போர் அடிமைமுறையை வலுப்படுத்துவதற்காக அடிமை
உரிமையாளர்களுக்கு இடையே நடக்கும் மும்முனைப் போர் என்பதை விளக்க வேண்டும்:
காலனித்துவச் சுரண்டல்: வல்லரசுகள் தங்களின் பொருளாதார
வளர்ச்சிக்காகக் காலனி நாடுகளைக் கொடூரமாகச் சுரண்டுகின்றன.
சோசலிஸ்டுகளின் கடமை: இரண்டு சுரண்டல் சக்திகளில்
யாருக்காவது ஒருவருக்கு ஆதரவு தருவதற்குப் பதிலாக,
இந்தச் சூழலைப்
பயன்படுத்தி முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய அமைப்பையே வீழ்த்த வேண்டும்.
போரின் உண்மையான நோக்கம்: போர் என்பது சுதந்திரத்திற்காக
அல்ல, மாறாக
அடிமைமுறையை உலகளவில் நீட்டிக்கவும் வலுப்படுத்தவுமே நடத்தப்படுகிறது.
போர் என்பது அரசியலின் வேறு (அதாவது வன்முறை) வழியிலான
தொடர்ச்சியாகும்"
("WAR IS THE
CONTINUATION OF POLITICS BY OTHER (i.e., VIOLENT) MEANS")
இந்தப் புகழ்பெற்ற பழமொழியைப் போரின் சிக்கல்கள் குறித்து
எழுதிய மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான கிளாஸ்விட்ஸ் (Clausewitz)
கூறினார்.
மார்க்சியவாதிகள் எப்பொழுதும் இந்தக் கோட்பாட்டைப் போரின் முக்கியத்துவம் குறித்த
பார்வையின் தத்துவ அடிப்படையாகக் கருதுகின்றனர். இந்தத் தேடலிலிருந்தே மார்க்ஸ்
மற்றும் ஏங்கல்ஸ் எப்போதும் வெவ்வேறு போர்களைப் பார்த்தார்கள்.
இந்தக் கருத்தைத் தற்போதைய போருக்குப் பயன்படுத்துங்கள்.
பல தசாப்தங்களாக, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக,
இங்கிலாந்து,
பிரான்ஸ்,
ஜெர்மனி,
இத்தாலி,
ஆஸ்திரியா மற்றும்
ரஷ்யா ஆகிய நாடுகளின் அரசாங்கங்களும் ஆளும் வர்க்கங்களும் காலனிகளைச் சூறையாடும்
கொள்கையையும், பிற தேசங்களை ஒடுக்கும் கொள்கையையும்,
தொழிலாளர் வர்க்க
இயக்கத்தை நசுக்கும் கொள்கையையும் பின்பற்றி வந்ததை நீங்கள் காண்பீர்கள். இந்தக்
கொள்கைதான் தற்போதைய போரிலும் தொடரப்படுகிறது. குறிப்பாக,
அமைதிக் காலத்திலும்
போர்க் காலத்திலும் ஆஸ்திரியா மற்றும் ரஷ்யாவின் கொள்கை என்பது நாடுகளை
அடிமைப்படுத்துவதே தவிர, விடுவிப்பது அல்ல.
நேர்மாறாக, சீனா, பெர்சியா (ஈரான்), இந்தியா மற்றும் பிற சார்பு நாடுகளில்,
கடந்த தசாப்தங்களில்
மில்லியன் கணக்கான மக்களைத் தேசிய வாழ்விற்குத் தூண்டிவிடும் கொள்கையையும்,
பிற்போக்குத்தனமான
"பெரிய" வல்லரசுகளின் ஒடுக்குமுறையிலிருந்து அவர்களை விடுவிக்கும்
கொள்கையையும் நாம் பார்த்திருக்கிறோம். இத்தகைய வரலாற்று அடிப்படையிலான ஒரு போர்
இன்றும் ஒரு முதலாளித்துவ-முற்போக்கான, தேசிய-விடுதலைப் போராக இருக்கலாம்.
தற்போதைய போர் என்பது "பெரிய" வல்லரசுகள்
மற்றும் அவற்றிலுள்ள முதன்மையான வர்க்கங்களின் அரசியலின் தொடர்ச்சி என்பதை ஒருமுறை
பார்த்தாலே போதும். தற்போதைய போரில் "தாய்நாட்டைப் பாதுகாத்தல்" என்ற
யோசனை நியாயமானது என்ற கருத்தின் பின்னால் இருக்கும் வரலாற்று விரோதம், பொய்மை மற்றும் பாசாங்குத்தனம் உங்களுக்குத்
தெளிவாகத் தெரியும்.
பெல்ஜியத்தின் உதாரணம் (THE
EXAMPLE OF BELGIUM)
சமூக-சாவினிஸ்டுகளின் (இப்போது ரஷ்யாவில் பிளெக்கானோவ்
மற்றும் குழுவினர்) விருப்பமான வாதம் பெல்ஜியத்தின் உதாரணம் ஆகும். ஆனால் இந்த
உதாரணமே அவர்களுக்கு எதிராகச் செல்கிறது. ஜெர்மனிய ஏகாதிபத்தியவாதிகள்
பெல்ஜியத்தின் நடுநிலைமையை வெட்கமின்றி மீறினர்;
போரிடும் நாடுகள்
எப்போதும் எங்கும் செய்வது போலவே, தேவையான போது அனைத்து ஒப்பந்தங்களையும் கடமைகளையும் அவர்கள்
காலால் மிதித்தனர்.
பெல்ஜியத்தின் விடுதலை மற்றும் இழப்பீட்டைக் கோரி சர்வதேச
ஒப்பந்தங்களைக் கடைப்பிடிக்க ஆர்வமுள்ள அனைத்து நாடுகளும் ஜெர்மனியின் மீது போர்
பிரகடனம் செய்ததாக வைத்துக் கொள்வோம். அத்தகைய சூழ்நிலையில்,
சோசலிஸ்டுகளின்
அனுதாபம் நிச்சயமாக ஜெர்மனியின் எதிரிகளின் பக்கம் இருக்கும். ஆனால் விஷயம்
என்னவென்றால், வல்லரசு நாடுகள் போரிடுவது பெல்ஜியத்திற்காக அல்ல. இது
அனைவருக்கும் நன்றாகத் தெரியும், பாசாங்குக்காரர்கள் மட்டுமே இதை மறைக்கிறார்கள்.
இங்கிலாந்து ஜெர்மனியின் காலனிகளையும் துருக்கியையும்
கைப்பற்றுகிறது; ரஷ்யா கலீசியா மற்றும் துருக்கியைக் கைப்பற்றுகிறது;
பிரான்ஸ்
அல்சேஸ்-லோரைன் மற்றும் ரைன் நதியின் இடது கரையை விரும்புகிறது;
இத்தாலியுடன்
கொள்ளையடித்தவற்றை (அல்பேனியா, ஆசியா மைனர்) பிரித்துக் கொள்வதற்காக ஒரு ஒப்பந்தம்
போடப்பட்டுள்ளது; பல்கேரியா மற்றும் ருமேனியாவுடனும் கொள்ளையடித்தவற்றை
பிரித்துக் கொள்வதற்கான பேரம் நடக்கிறது. தற்போதைய அரசாங்கங்கள் நடத்தும் இந்தப்
போரில், ஆஸ்திரியா
அல்லது துருக்கியை நெரிக்காமல் பெல்ஜியத்திற்கு உதவுவது சாத்தியமற்றது!
முக்கியக் கருத்துக்கள் (Key
Summary):
அரசியலின் தொடர்ச்சி: போர் என்பது திடீரென நடப்பதல்ல,
அது அமைதிக் காலத்தில்
ஒரு நாடு பின்பற்றிய சுரண்டல் கொள்கையின் வன்முறை வடிவமே.
பெல்ஜியம் ஒரு சாக்கு: வல்லரசு நாடுகள் பெல்ஜியத்தைக்
காப்பதாகக் கூறுவது வெறும் வெளிவேடம்; அவர்களின் உண்மையான நோக்கம் எதிரி நாடுகளின் காலனிகளையும்
நிலப்பரப்புகளையும் கைப்பற்றுவதே.
சோசலிசப் பார்வை: வல்லரசுகளின் ஆக்கிரமிப்பு அரசியலை
மறைக்கப் பயன்படும் "தாய்நாட்டைப் பாதுகாத்தல்" என்ற பொய்ப்
பிரச்சாரத்தை மக்கள் நம்பக் கூடாது.
தற்போதைய போரில் "தாய்நாட்டைப் பாதுகாத்தல்"
என்பது எங்கே வருகிறது? இங்கேயேதான் ஏகாதிபத்தியப் போரின் குறிப்பிட்ட அம்சம்
உள்ளது. இது பிற்போக்கு முதலாளித்துவ வர்க்கத்திற்கும்,
வரலாற்று ரீதியாகக்
காலாவதியான அரசாங்கங்களுக்கும் இடையே பிற தேசங்களை ஒடுக்கும் நோக்கத்திற்காக
நடத்தப்படும் போராகும். தற்போதைய போரில் பங்கேற்பதை யார் நியாயப்படுத்தினாலும்,
அவர்கள் நாடுகளின்
மீதான ஏகாதிபத்திய ஒடுக்குமுறையை நிலைநிறுத்துபவர்களே ஆவர். அரசாங்கத்தின்
தற்போதைய இக்கட்டான நிலையைப் பயன்படுத்திச் சமூகப் புரட்சிக்காகப் போராட வேண்டும்
என்று யார் பரிந்துரைக்கிறார்களோ, அவர்களே அனைத்து நாடுகளின் உண்மையான சுதந்திரத்திற்காகக்
குரல் கொடுப்பவர்கள்; அந்தச் சுதந்திரம் சோசலிசத்தின் கீழ் மட்டுமே
சாத்தியமாகும்.
ரஷ்யா எதற்காகப் போரிடுகிறது?
(WHAT IS RUSSIA FIGHTING FOR?)
ரஷ்யாவில், சமீபத்திய வகையிலான முதலாளித்துவ ஏகாதிபத்தியமானது பெர்சியா,
மஞ்சூரியா மற்றும்
மங்கோலியா மீதான ஜார் ஆட்சியின் (Tsarism) கொள்கைகளில் முழுமையாக வெளிப்பட்டுள்ளது;
ஆனால்,
பொதுவாக ரஷ்யாவில்
இராணுவ மற்றும் நிலப்பிரபுத்துவ ஏகாதிபத்தியமே ஆதிக்கம் செலுத்துகிறது. உலகிலேயே
ரஷ்யாவில் இருப்பதைப் போல மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் வேறு எந்த நாட்டிலும்
இவ்வளவு ஒடுக்கப்படவில்லை; "மகா ரஷ்யர்கள்" (Great
Russians) மக்கள் தொகையில் 43 சதவீதத்தினர் மட்டுமே,
அதாவது பாதிக்கும்
குறைவானவர்கள்; மீதமுள்ள அனைவருக்கும் அந்நியர்களாகக் கருதப்பட்டு உரிமைகள்
மறுக்கப்படுகின்றன.
ரஷ்யாவின் 17 கோடி மக்களில், சுமார் 10 கோடி மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் மற்றும் உரிமைகள்
மறுக்கப்படுகிறார்கள். கலீசியாவைக் கைப்பற்றவும்,
உக்ரைனியர்களின்
சுதந்திரத்தை இறுதியாக நசுக்கவும், ஆர்மீனியா, கான்ஸ்டான்டினோபிள் போன்றவற்றைக் கைப்பற்றவுமே ஜார் ஆட்சி
போரை நடத்துகிறது. நாட்டிற்குள் அதிகரித்து வரும் அதிருப்தியிலிருந்தும்,
வளர்ந்து வரும்
புரட்சிகர இயக்கத்தை ஒடுக்குவதிலிருந்தும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கான
ஒரு வழியாகவே ஜார் ஆட்சி இந்தப் போரைப் பார்க்கிறது.
தற்போதைய நிலையில், ரஷ்யாவில் உள்ள ஒவ்வொரு இரண்டு மகா ரஷ்யர்களுக்கும்,
இரண்டு முதல் மூன்று
உரிமையற்ற "அந்நியர்கள்" (ஒடுக்கப்பட்ட தேசத்தினர்) உள்ளனர். ரஷ்யாவால்
ஒடுக்கப்படும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்,
அந்த ஒடுக்குமுறையைத்
தொடரச் செய்யவும், அதன் மூலம் மகா ரஷ்யர்கள் நடத்தும் விடுதலைப் போராட்டத்தைச்
சீர்குலைக்கவுமே ஜார் ஆட்சி இந்தப் போரின் மூலம் முயற்சிக்கிறது... [பக்கம்
முடிகிறது]
முக்கியக் கருத்துக்கள் (Key
Summary):
ரஷ்ய ஏகாதிபத்தியத்தின் தன்மை: ரஷ்யாவில் முதலாளித்துவ
ஏகாதிபத்தியத்தை விட இராணுவ மற்றும் நிலப்பிரபுத்துவ ஏகாதிபத்தியமே வலுவாக உள்ளது.
உள்நாட்டு ஒடுக்குமுறை: ரஷ்ய மக்கள் தொகையில்
பெரும்பான்மையானவர்களுக்கு (சுமார் 60% பேருக்கு) அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
கவனத்தைத் திசைதிருப்புதல்: உள்நாட்டுப் புரட்சி மற்றும்
மக்களின் அதிருப்தியை அடக்கவே ஜார் அரசாங்கம் போரை ஒரு கருவியாகப்
பயன்படுத்துகிறது.
சோசலிசமே தீர்வு: ஏகாதிபத்திய அரசாங்கங்களுக்குப் பதிலாகச்
சமூகப் புரட்சியின் மூலம் சோசலிசத்தை உருவாக்குவதே உண்மையான சுதந்திரத்திற்கு
வழிவகுக்கும்.
இனி அமெரிக்க
ஏகாதிபத்தியம் பற்றி புரிந்துக் கொள்ள முயலுவோம்!
அமெரிக்கா - வளர்ச்சிபெற்ற வழிமுறையானது கொள்ளை,
சூறையாடுதல்,
அச்சுறுத்தல் மற்றும்
இனப்படுகொலைகளால் நிரம்பியது. அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களைப்
பூண்டோடு அழித்தது, ஆப்பிரிக்க மக்களின் அடிமைத்தனத்தை வியாபாரமாக்கியது,
பிலிப்பைன்ஸ்,
போர்டோ ரிகோ உள்ளிட்ட
அனைத்து பசிபிக் தீவுகளின் பூர்வகுடிமக்களை மாபெரும் இனப்படுகொலை செய்தது,
மற்றும் லத்தீன்
அமெரிக்காவைப் பொருளாதார ரீதியாகத் தூக்கிலிட்டது போன்ற,
நிராயுதபாணியாக இருந்த
அப்பாவி மக்கள் மீதான படுகொலையிலும் மோசமான படுகொலைகளை அமெரிக்கா
நிகழ்த்தியதனைத்தும் ஆதாரங்களாக உள்ளன. இதன் தொடர்ச்சியாக,
ஹிரோஷிமா மற்றும்
நாகசாகி சம்பவம் நடைபெற்றது. இவை உலகப்போருக்குப் பிந்தைய புதிய காலனிய முறைக்கான
முன்தயாரிப்புகளாகும். அமெரிக்கா நிகழ்த்தியது போன்ற கிரிமினல் குற்றத்தையும்,
பயங்கரவாதத்தையும்
பூமியில் இதுவரை எந்தவொரு ஆளும் வர்க்கமும் நிகழ்த்தியதில்லை. புதிய காலனியக்
கட்டத்தில், அமெரிக்கா உலகமக்கள் மீது தொடுத்த பயங்கரவாதமும்,
பனிப்போர்களும்,
இதற்கு முந்தைய
எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டன.
ஆதலால், இது தொடர்பான விவாதத்தில்,
புதிய
காலனியாதிக்கத்தின் அரசியல் பொருளாதாரத்தின் புதிர்களை விளக்க முற்படும்பொழுது,
நிதிமூலதனத்துடன்
தொடர்புடைய பொருளாதாரக் காரணிகள், அரசியல் அதிகாரம் மற்றும் இராணுவச் செயல்பாடுகள்
ஆகியவற்றிற்கு இடையிலான முடிச்சுகளைப் புரிந்துகொள்வது முக்கியமானதாகும். இங்கு,
ரோசா லக்சம்பர்க்
அவர்களின் மேற்கோள் ஒன்றைக் குறிப்பிடுவது பயனுள்ளதாக இருக்கும். முதல்
உலகப்போருக்குப் பிந்தைய உலகச் சூழலில் அமெரிக்காவின் பாத்திரம் குறித்து அவர்
எழுதும்போது பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"பூர்ஷ்வாக்களின் தாராளக் கொள்கை பின்வருவனவற்றை கணக்கில்
எடுத்துக் கொள்கிறது (பொருளாதார வளர்ச்சி என்ற ஒரு அம்சத்தை மட்டும்): 'அமைதி வழிப் போட்டி' பின் பரவலான கருத்தாக்கம்,
ஆச்சரியமிக்க தொழில்
நுட்பங்கள்... ...மற்றும்
தளைகள் அற்ற சரக்குப் பரிவர்த்தனைகள்: இது இன்னொரு அம்சத்திலிருந்து கொடும்
வன்முறை நிகழ்த்தும் மூலதனத்தின் ஆட்சியிலிருந்து அதைத் கறாராகப் பிரித்து
விடுகிறது. இது அயலுறவுக் கொள்கையுடன் சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ ஒத்து
நிகழ்வதாகக் கருதப்படுகிறது. மேலும் மூலதனத்தின் பொருளியல் பகுதியிலிருந்து
தனிப்பட்டதாகக் கருதப்படுகிறது”.
“நடைமுறையில், அரசியல் அதிகாரம் என்பது பொருளாதார
முன்னேற்றத்தின் வாகனம் என்பதைத் தவிர வேறில்லை. மூலதனத் திரட்சியின் இந்த இரண்டு
அம்சங்களுக்கு இடையிலான இயற்கையான தொடர்பே மூலதனத் திரட்டலுக்கான சூழ்நிலைகளை
வழங்குகிறது. அவற்றை ஒன்றிணைந்த ஒன்றாக எடுத்துக் கொள்வதன் மூலமே முதலாளித்துவத்தின்
வரலாற்று வளர்ச்சியைச் சரியாக முறையில் புரிந்து கொள்ள இயலும்.”
ஆகவே, இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய புதிய காலனியக் கட்டத்தில், நிதிமூலதனத்தின் உலகளாவிய விரிவாக்கம் என்பது, அமெரிக்க
ஏகாதிபத்தியத்தால் வழிநடத்தப்பட்ட பொருளாதார, அரசியல்
மற்றும் இராணுவச் சூழ்நிலைகளின் ஒரு முழுமையான உருவாக்கத்துடன் நிகழ்ந்தது எனக்
காணலாம். மேலும் உலகைப் பயங்கரவாதத்திற்குள் தள்ளிய ஹிரோஷிமா - நாகசாகி மீதான
குண்டு வீச்சிற்கு முன்பாகவே, “இந்த விளையாட்டிற்கான
விதிகளை” திணிக்கும் பொருட்டு, புதிய காலனிய நிறுவனங்களையும்,
அமைப்பு ரீதியான ஏற்பாடுகளையும் உருவாக்குவதில் அமெரிக்க
ஏகாதிபத்தியம் தீவிரக் கவனம் செலுத்தியது.
3. பிரெட்டன் உட்ஸ் அமைப்பு (Bretten woods system)
பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவத் துறைகள் ஒன்றுக்கொன்று ஊடுருவும் மற்றும்
சிக்கலானதாக உள்ள புதிய காலனியாதிக்கத்தின் கீழ், நிதி
மற்றும் நிதி நிறுவனங்களின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆதலால் 1944-லேயே, நேச சக்திகள் யுத்தத்தில் வெற்றி பெறுவது
தெரிந்த பின்பு, பிரிட்டனும்... ஏகாதிபத்திய சக்திகளின்
வர்த்தக நலன்களுக்கு முழுவதும் சேவை செய்ததால் அது “மேட்டுக்குடிகள் மன்றம்” (Rich
Man’s Club) என்று
அழைக்கப்பட்டது.
டாலரின் பங்களிப்பு (Role
Of Dollar)
ஏகாதிபத்திய புதிய காலனியக் கட்டத்தில் அமெரிக்காவின்
மேலாதிக்க நிலையானது, முனைப்பாக வெளிப்படும் டாலரின் உலக தழுவிய குணாம்சத்தில்
அடங்கியுள்ளது. இரண்டாம் உலகப்போரின் இறுதியில்,
உலக தங்கத்தில்
மூன்றில் இரு பகுதியை அமெரிக்கா தன்வசம் வைத்திருந்ததால்,
சர்வதேசக் கரன்சியாக
டாலர் ஏற்றுக்கொள்ளப்படுவதில் அது வெற்றி பெற்றது. இவ்வாறு காலனியக் கட்டத்தில்
பிரிட்டிஷ் பவுண்டு ஸ்டெர்லிங் இருந்ததைப் போல,
புதிய காலனியக்
கட்டத்தில் அமெரிக்க டாலர் சர்வதேச வர்த்தகத்திற்கான இயங்கும் கரன்சியாக (Vehicle
Currency) மாறியது.
பிரெட்டன் உட்ஸ் ஒப்பந்தத்தில்,
1934-ல் அமெரிக்காவில்
நிலவிய மிகக்குறைந்த விலையான ஒரு அவுன்ஸ் 35 டாலர்கள் என்று தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டது.
முன்னாள் சோஷலிச நாடுகள் உள்ளிட்ட (அவைகளின் கூட்டணிக்கு வெளியிலும் கொடுக்கல்
வாங்கல் இருந்தது) மற்ற எல்லா நாடுகளும், கணக்கின் அலகாக (Unit), சர்வதேச நிதி வழங்கல்களின் ஒரு வழியாக மற்றும் மதிப்பின்
இருப்பாக (store of value) டாலர்களையே வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. தங்கத்தை
எளிதாக டாலராக மாற்ற முடியும் என்பதால் தங்கமும் டாலரைப் போலவே சம மதிப்பில்
இருந்தது. ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா இந்த டாலர் - தங்க பரிவர்த்தனை விகிதத்தை,
ஏற்ற இறக்கங்கள்
இல்லாமல், இந்த விகிதத்தில் கட்டுப்பாடுகள் அல்லது தடைகள் ஏதுமின்றி
தங்கத்திற்கு டாலரையும் - டாலருக்குத் தங்கத்தையும் பரிமாற்ற தயார்நிலையிலும்,
தக்க வைக்க வேண்டும்.
மற்ற நாடுகள், தங்களின் கரன்சி மதிப்பை நேராக டாலரிலும்,
மறைமுகமாக
தங்கத்திலும் நிர்ணயிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டன. மேலும் இதைக்
கண்காணித்து நிர்வகிப்பது, சர்வதேச செலாவணி நிதியத்தின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நிதிமூலதனத்தின் ஏற்றுமதியை அதிதீவிரமாய் அமெரிக்கா
திறந்துவிட்டதால், சர்வதேச நாணயமாக டாலர் உள்ளது;
இதனால் “டாலர்
தேவையிருந்த” உலகத்திற்கு, டாலர் வழங்கும் நிலையிலிருந்த அமெரிக்காவின் இந்த
சிறப்புரிமை, அதன் ஏகபோக நிதிமூலதனக் கும்பலுக்கு புதிய காலனியச்
சூறையாடலை விரிவுபடுத்த இணையற்ற வாய்ப்பை வழங்கியது. இவ்வாறு,
டாலர் என்பது புதிய
காலனியாதிக்கத்தின் கருவிகளில் மையமான கருவியாக மாறியது. பிற ஏகாதிபத்திய
சக்திகளும், புதிய காலனிய நாடுகளும்,
அவர்களின் கொடுக்கல்
வாங்கல் கணக்கைச் சமன் செய்வதற்காக (Balance Of Payment) ஒரு உபரி ஏற்றுமதியை உருவாக்க வேண்டியிருந்தது அல்லது
உண்மையான மூலவளங்களையோ அல்லது தங்கத்தையோ கூடுதலாக வைத்துக்கொண்டு,
சரக்கு மற்றும்
சேவைகளுக்குப் பணப்பட்டுவாடா செய்வதற்கும், வெளிநாட்டில் முதலீடு செய்வதற்கும் அவற்றை டாலருக்குப்
பரிமாற்றம் (Exchange) செய்ய வேண்டியிருந்தது. உலக வங்கியாளனாக இருந்த அமெரிக்கா
டாலரை வழங்கும் நாடாக இருந்ததால், எவ்வளவு வேண்டுமானாலும் டாலரை அச்சிட்டு,
சரக்குகள் மற்றும்
சேவைகளை வாங்கவும், உலகத்தின் எந்தப் பகுதிக்கும் மூலதனத்தை ஏற்றுமதி செய்யவும்
முடிந்ததோடு டாலர்களை வைத்துக்கொண்டு, அமெரிக்க ஏகபோக முதலாளிகள் தாங்கள் விரும்பிய சரக்குகளை
வாங்க முடிந்தது. மிகவும் இலாபகரமான நிறுவனங்களை வளர்க்கவும்,
புதிய காலனிய
நாடுகளில் எண்ணெய் உள்ளிட்ட தட்டுப்பாடான இயற்கை வளங்கள் மீது ஆதிக்கத்தை
நிலைநிறுத்தவும் செய்ய முடிந்தது. மார்ஷல் திட்டத்திற்கு நிதி வழங்க தேவையான
மிகப்பெரிய அளவு செலவினங்கள், புதிய காலனிய உதவித் திட்டங்கள் மற்றும் இராணுவ
முன்னேற்றங்கள் அனைத்திற்கும் டாலர் அச்சிடப்பட்டு நிதி வழங்கப்பட்டது.
அரசாங்கங்கள், மத்திய வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் மக்கள் உள்ளிட்ட உலகின் பிற
பகுதியினர் டாலரை சர்வதேச நாணயமாக ஏற்கும் வரை,
அரசாங்கங்கள் தங்கள்
கையிருப்புகளை டாலர்களாக வைத்திருக்கும் வரை, டாலர்கள் அச்சிடப்படுவது தங்குதடையின்றி நடந்து கொண்டு
இருக்கும். உண்மையில், இத்தகைய ஏற்பாடுகளுக்கு குறிப்பிட்ட எல்லை தேவை என்பது
துவக்கத்தில் நிராகரிக்கப்பட்டது. தங்கத்தின் கையிருப்பு போதுமான அளவில் இல்லாமல்,
டாலர்களை அச்சிட்டுக்
கொண்டே செல்வது அதிகரித்த வண்ணம் இருந்தது; இறுதியாக பிரிட்டன் உட்ஸ் அமைப்பே இதனால் சிதையும்
நிலைக்குச் சென்றது; இந்த அம்சத்தைப் பிறகு எடுத்துக்கொள்வோம்.
தேசிய விடுதலை இயக்கங்களைத் தோற்கடிக்கவும், சோஷலிச முன்னேற்றத்தை எதிர்த்து அழிக்கும்
பொருட்டும், புதிய காலனிய முறையின் தலைவனாக உள்ள
அமெரிக்காவிற்கு, மூர்க்கத்தனமான இராணுவமயமாத்தை
அடிப்படையாகக்கொண்ட பாக்ஸ்-அமெரிக்கானா (Pax Americana) இன்றியமையாதது
ஆகும். "காலனியாதிக்கம் முற்றுப்பெறுதல்" மற்றும் புதிய காலனியாதிக்கத்திற்கு மாற்றமடைதல் இரண்டும், ஐரோப்பிய வீழ்ச்சியினாலும், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் ஜப்பானிய ஆதிக்கத்தில் ஏற்பட்ட
"வெற்றிடங்களை" நிரப்புவதன் வாயிலாக
ஏகாதிபத்திய அமைப்பைப் பாதுகாக்கும் முதல் பொறுப்பை அமெரிக்காவின் மீது வைத்தது.
தன்னிறைவுத் துறை அதிகாரியும், அதிபரின் ஆலோசகரான W.W.ரோஸ்டோவ், அமெரிக்கக் காங்கிரஸின் துணைக்கமிட்டி
முன்பு இவ்வாறு வலியுறுத்துகிறார்:
- “வளர்ச்சியில்
பின் தங்கிய நாடுகள் கம்யூனிச ஆதிக்கத்தின் கீழ் விழுமானால், (அ) அவை மேற்கில் எதிரியின் பிடிக்குள் நிரந்தரமாகச் சென்றால்,
மேற்கு ஐரோப்பா மற்றும் ஜப்பானின் இராணுவப் பொருளாதார வலிமை
குறையும், தற்போது அமைப்பாகவுள்ள பிரிட்டிஷ்
காமன்வெல்த் உடைந்து போகும், மற்றும் ஒரு இடர்ப்பாடான
பலவீனமான...”
அறிவியல் கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் புதிய காலனிய
நாடுகளின் இராணுவ, நிர்வாக
அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பது என்பது ஒரு வழக்கமான முறையாகும். அடிக்கடி,
இம்முறை அமெரிக்காவின் புழக்கடையான இலத்தீன் அமெரிக்காவில் பரிசோதனை
செய்யப்பட்டது. உதாரணமாக, 60-களின் ஆரம்பத்தில், ட்ரூமனின் நான்கு அம்சத் திட்டம் மற்றும் கென்னடியின் வளர்ச்சிக்கான
கூட்டணியின் தொடர்ச்சியாக, புதிய காலனிய நாடுகளிலிருந்து,
குறிப்பாக இலத்தீன் அமெரிக்காவிலிருந்து, தேர்வு
செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு “தலைமைக்கான பயிற்சித் திட்டம்” அளிக்கும் “சிறப்புத்
திட்டப் பிரிவை” CIA நிறுவியது. இந்தச் “சிறப்புத் திட்டப்
பிரிவின்” வெற்றிக்கு, 1984-ல் அமெரிக்க தலைமை இராணுவ
அதிகாரி மூலம், லத்தீன் அமெரிக்காவில் “அமெரிக்காவின் மூத்த
இராணுவப் பள்ளிகளில், தற்போதுள்ள அரசுத் தலைவர்களும்"
ஒரு காலத்தில் பயிற்சியளிக்கப் பட்டவர்கள்” என்று பென்டகன்
வெளியிட்ட அறிக்கை இதற்குச் சான்றாக உள்ளது. கலகங்கள் போர் ஒத்திகை பார்த்து அதை
எவ்வாறு கையாளுவது என்ற கலையையும், எதிர்ப்புலனாய்வு
வேலையையும் உள்ளூர் போலீஸ் துருப்புகளுக்கு அளிக்கப்படுகிறது; இப்பயிற்சி பெருமளவு நிதி, உளவு பார்த்தல் மற்றும்
தொண்டு நிறுவன வலைப்பின்னல்கள், புதிய காலனிய நாடுகளில் உள்ள
ஆளும் வர்க்கங்கள் மற்றும் அதன் கட்சிகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டிகளில்
தலையிடுதல் போன்ற வழிமுறைகளில் தரப்படுகிறது. இவையே பாக்ஸ் அமெரிக்கானா-வின் பிற
நோக்கங்களாகும்.
இதன் அடிப்படையில் ஈரான் மீதான மோதலை புரிந்துக் கொள்ள
முயலுவோம்:-ஈராக், ஜோர்டான்,
ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் எட்டு நாடுகளில்
அமெரிக்கா தனது ராணுவத் தளங்களை அமைத்துள்ளது. இதுபோன்று பல நாடுகளை அமெரிக்கா
தனது ராணுவத் தளங்களாகப் பயன்படுத்துகிறது என்பது தெரிந்ததே. அதேபோல் தொடர்ந்து
ஈரான் மீதான அடக்குமுறையினை புரிந்து கொள்ள அமெரிக்காவால் தாக்கப்பட்ட, ராணுவ தலையீடு செய்யப்பட்ட இறையாண்மை நாடுகள் கீழ்வருவன. அமெரிக்கா உலக
மக்கள் விரோதி என புரிந்துக் கொள்ள முடியும். ஜப்பான் (1942) வியட்நாம் (1965) எல் சால்வடார் (1980), லிபியா (1981), சினாய் (1982), லெபனான் (1982 1983), எகிப்து (1983), கிரெனடா (1983), ஹோண்டுராஸ் (1983), சாட் (1983), பாரசீக வளைகுடா (1984), லிபியா (1986), பொலிவியா (1986), ஈரான் (1987), பாரசீக வளைகுடா (1987), குவைத் (1987), ஈரான் (1988), ஹோண்டுராஸ்
(1988), பனாமா (1988), லிபியா (1989),
பனாமா (1989), கொலம்பியா, பொலிவியா மற்றும் பெரு (1989), பிலிப்பைன்ஸ் (1989),
பனாமா (1989-1990), லைபீரியா (1990), சவுதி அரேபியா (1990), ஈராக் (1991), ஜைர் (1991), சியரா லியோன் (1992), சோமாலியா (1992), போஸ்னியா-ஹெர்சகோவினா (1993
முதல் தற்போது வரை), மாசிடோனியா (1993),
ஹைட்டி (1994), மாசிடோனியா (1994), போஸ்னியா (1995), லைபீரியா (1996), மத்திய ஆப்பிரிக்க குடியரசு (1996), அல்பேனியா (1997),
காங்கோ/காபோன் (1997), சியரா லியோன் (1997),
கம்போடியா (1997), ஈராக் (1998), கினியா/பிசாவ் (1998), கென்யா/தான்சானியா (1998
முதல் 1999), ஆப்கானிஸ்தான்/சூடான் (1998),
லைபீரியா (1998), கிழக்கு திமோர் (1999),
செர்பியா (1999), சியரா லியோன் (2000),
ஏமன் (2000), கிழக்கு திமோர் (2000), ஆப்கானிஸ்தான் (2001 முதல் தற்போது வரை), ஏமன் (2002), பிலிப்பைன்ஸ் (2002), கோட்டி'ஐவோயர் (2002), ஈராக் (2003
முதல் தற்போது வரை), லைபீரியா (2003), ஜார்ஜியா/ஜிபூட்டி (2003), ஹைதி (2004), ஜார்ஜியா/ஜிபூட்டி/கென்யா/எத்தியோப்பியா/ஏமன்/எரிட்ரியா பயங்கரவாதத்திற்கு
எதிரான போர் (2004), பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்கள் (2004
முதல் தற்போது வரை), சோமாலியா (2007), தெற்கு ஒசேஷியா/ஜார்ஜியா (2008), சிரியா (2008),
ஏமன் (2009 மற்றும் 2015), ஹைதி (2010), லிபியா (2011), சிரியா
(2011), உக்ரைன் (2014), ஈராக் (2015),
முதலியன. இப்போது வெனிசுலா மற்றும் ஈரான்... அப்படியானால், உலக அமைதிக்கு உண்மையான ஆபத்து யார்? உலகின் பெரிய
ரவுடி என்று திரியும் அமெரிக்காதானே?
இந்தப் போருக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அமெரிக்க
பொருளாதாரம் (டாலர்) இந்த டாலர் அரசியல் பொருளாதார நெருக்கடியை மூடிமறைக்க
அமெரிக்க போடும் சதிதனங்கள் குறைவானவை அல்ல.
ஈரான் மீதான போர் பல தசாப்தங்களுக்கு முன்பே
தொடங்கிவிட்டது. அமெரிக்க அதிபர் நாற்காலியில் அமர்ந்தவர்கள் ஒவ்வொருவரும்
வெவ்வேறு ஆயுதங்களை ஏந்தி ஈரானின் சிறகுகளை வெட்டினார்கள்.
ஈரானின் பொருளாதாரத்திற்கு முதல் பூட்டு பில்
கிளிண்டன்....1996-களிலேயே
ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையை முடக்கும் 'ILSA' சட்டத்தைக்
கொண்டு வந்தார். வழக்கமாக ஒரு நாடு தடைகளை விதித்தால், அந்த
நாட்டு நிறுவனங்கள் மட்டும் எதிரி நாட்டுடன் வணிகம் செய்யாது. ஆனால் ILSA அப்படிப்பட்டது அல்ல. "உலகில் எந்த நாடாக
இருந்தாலும், அந்த நாடு ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயுத்
துறையில் வருடத்திற்கு 20 மில்லியன் டாலருக்கு மேல் முதலீடு
செய்தால், அவர்களை அமெரிக்கா தண்டிக்கும்." அதாவது, "நீ என்னோடு நண்பனாக இருக்க
வேண்டுமானால், நான் சொல்வதைக் கேட்டு ஈரானிடம் இருந்து விலகி
இருக்க வேண்டும்" என்ற மிரட்டல் இது.
ஈரானின் மொத்தப் பொருளாதாரமும் அதன் கச்சா எண்ணெய் மற்றும்
இயற்கை எரிவாயு (Natural Gas) விற்பனையில்தான் இருக்கிறது. ஈரானால் சொந்தமாக உயர் தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்தி எண்ணெயைச் சுத்திகரிக்க முடியாது. அதற்கு வெளிநாட்டு முதலீடும்
தொழில்நுட்பமும் தேவை. ILSA சட்டத்தின் மூலம் மற்ற நாடுகள்
ஈரானுக்கு உதவாமல் அமெரிக்கா தடுத்தது. இதனால் ஈரானின் எண்ணெய் கிணறுகள்
துருப்பிடித்தன, புதிய திட்டங்கள் முடங்கின. அடுத்த
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஈரானை "தீமையின் அச்சு"
(Axis of Evil) என்று பகிரங்கமாக அறிவித்தார். ஈரானைச் சுற்றி
இருக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கைக் கைப்பற்றி, ஈரானின்
இருபுறமும் அமெரிக்க ராணுவத் தளங்களை அமைத்து 'செக்' வைத்தார். உள்ளதிலேயே மிகவும் ஆபத்தானவர்"பராக் ஒபாமா" "அமைதிக்கான நோபல் பரிசு"
வாங்கிக்கொண்டே, ஈரானின் அணுசக்தி மையங்களைச்
சிதைக்க 'ஸ்டக்ஸ்நெட்' (Stuxnet) என்ற
கணினி வைரஸை ஏவினார். முதல் டிஜிட்டல் போர்... வழக்கமான வைரஸ்கள் கணினியில் உள்ள
தரவுகளைத் திருடும். ஆனால், ஸ்டக்ஸ்நெட் என்பது ஒரு
மென்பொருள் மூலம் இயந்திரங்களை நேரடியாக அழிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.
இது ஈரானின் நடான்ஸ் (Natanz) அணுசக்தி மையத்தில் இருந்த
யுரேனியம் சுத்திகரிப்பு இயந்திரங்களை குறிவைத்தது. ஈரானின் அணுசக்தி மையக்
கணினிகள் இணையத்துடன் இணைக்கப்படவில்லை. எனவே, இந்த வைரஸை
ஒரு உள்நாட்டு உளவாளி மூலம் USB டிரைவ் மூலம் ரகசியமாக உள்ளே
கொண்டு சென்றார்கள் உள்ளே சென்றதும், இந்த வைரஸ்
இயந்திரங்களின் வேகத்தை யாரும் கவனிக்காத வண்ணம் மிக ரகசியமாக மாற்றியது.ஒரு
கட்டத்தில் இயந்திரங்கள் தாங்க முடியாத வேகத்தில் சுழன்று, ஒன்றோடொன்று
மோதி தானாகவே வெடித்துச் சிதறின. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கட்டுப்பாட்டு அறையில் இருந்த கணினிகள் அனைத்தும் "இயந்திரங்கள் சீராக இயங்குகின்றன" என்றே
காட்டியது. விஞ்ஞானிகள் கண்ணெதிரே இயந்திரங்கள் வெடித்தபோதுதான் சதி புரிந்தது. பல
ஆண்டுகளுக்குப் பிறகு, இது அமெரிக்காவின் NSA மற்றும் இஸ்ரேலின் உளவுத்துறை இணைந்து உருவாக்கிய "Operation
Olympic Games" என்ற திட்டத்தின் ஒரு பகுதி என்பது அம்பலமானது.
ஒபாமா காலத்தில்தான் 2010-ல் ஈரானிய விஞ்ஞானிகள் கொடூரமாகக்
கொல்லப்பட்டனர்.
இப்போ டொனால்ட் டிரம்ப்... மற்றவர்கள் மறைமுகமாகச் செய்ததை
இவர் நேரடியாகச் செய்கிறார்...அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்தார், தளபதி சுலைமானியைக் கொன்றார். இவர் ஒரு
'பைத்தியக்காரன்' போலச் சித்தரிக்கப்பட்டாலும்,
உண்மையில் இவருக்கு முன்னால் இருந்தவர்கள் வெட்டி வைத்த குழிக்குள்
ஈரானைத் தள்ளும் வேலையைத்தான் இவர் செய்து கொண்டிருக்கிறார்...
அடுத்து ஆயுதங்களை விடக் கொடுமையானது 'பொருளாதாரத் தடை' ஈரானின்
எண்ணெய் வணிகத்தைத் தடுத்து, அந்நியச் செலாவணியை முடக்கி,
அங்கே வறுமையைச் செயற்கையாக உருவாக்கினார்கள். இந்த வறுமையைப்
பயன்படுத்தி, சாதாரண மக்களைத் தூண்டிவிட்டு உள்நாட்டுக்
கலவரங்களை உருவாக்குவது வல்லரசுகளின் தந்திரம். ஈரானின் கை கொண்டே ஈரானின் கண்ணைக்
குத்துவது. உள்ளூர் மக்களை விலைக்கு வாங்கி, அவர்களை
உளவாளிகளாக மாற்றி, ரகசியங்களை வெளியே கசியவிடுவது. ஒவ்வொரு
சிறகாக வெட்டப்பட்டு, இன்று ஈரான் நிலைகுலைந்து நிற்கும்
வேளையில், அதை ஒரு 'பயங்கரவாத நாடு'
என்று முத்திரை குத்தி உலக அரங்கில் தனிமைப்படுத்தி ஏதோ இன்று தான்
போரை ஆரம்பித்தது போலவும் நமக்கு காட்டப்படுகிறது. கிளிண்டன், புஷ், ஒபாமா என ஒவ்வொருவரும் ஈரானின் கழுத்தில்
கயிறைச் சுற்றி முடித்துவிட்டார்கள. இன்று நடப்பது கயிற்றை இறுக்கும் இறுதிச்
சடங்கு மட்டுமே" இதுதான் உண்மை. அமெரிக்க ஏகாதிபத்தியம்
ஏகாதிபத்தியம்தான். அது எப்போதும் மிக பிற்போக்காகத்தான் அமெரிக்க அதிபர்களின்
மனித குல விரோத போக்கை புரிந்தாலே ஈரானின் போரை புரிதல் எளிதாக இருக்கும்.
இறையாண்மை கொண்ட ஒவ்வொரு நாடும் ஈரானிடம் கற்க நிறையவுள்ளது.
ஈரானிற்கு மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட யுத்தத்திற்கான
பிரதான காரணம் உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருக்கும் 'பெட்ரோ-டாலர்' (Petrodollar) அமைப்பைக் காப்பதற்கான ஒரு சட்டத்துக்கு விரோதமான ஒரு சதுரங்க வேட்டை
என்பதே உண்மை. 1970-களின் தொடக்கத்தில், ஹென்றி கிஸிஞ்சர் தலைமையிலான அமெரிக்கத் தூதுக்குழு சவூதி அரேபியாவுடன்
ஒரு சதிதனமான முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தைச் செய்தது. அதில் சவூதி தனது
எண்ணெயை அமெரிக்க டாலரில் மட்டுமே விற்க வேண்டும்; பதிலுக்கு
சவூதி ஆட்சியாளர்களுக்கு அமெரிக்க ராணுவ பாதுகாப்பு கிடைக்கும் என்பதே. இதன்
விளைவாக, உலக நாடுகள் எண்ணெய் வாங்க வேண்டுமானால் டாலரைச்
சேமித்து வைக்க வேண்டிய கட்டாயம் உருவானது. இது அமெரிக்காவுக்குத் தன்னிச்சையாகப்
பணத்தை அச்சடிக்கும் அதிகாரத்தையும், உலகப் பொருளாதாரத்தைத்
தன் பிடிக்குள் வைத்திருக்கும் வலிமையையும் வழங்கியது.
யாரெல்லாம் டாலரின் இந்த ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறார்களோ, அவர்கள் அனைவரும் அமெரிக்காவால்
ஈவிரக்கமின்றி நசுக்கப்பட்டனர்: சதாம் உசேன் டாலருக்குப் பதிலாக யூரோவில் (Euro)
எண்ணெய் விற்க முயன்றார். விளைவு: 'அணு ஆயுதப்
பொய்' கூறி ஈராக் அழிக்கப்பட்டது. சதாம் தூக்கிலடப்பட்டார்.
முஅம்மர் கடாபி ‘தங்கத் தினார்' (Gold-backed Dinar) என்ற
ஆப்பிரிக்க நாணயத்தை உருவாக்க முயன்றார். விளைவு: நேட்டோ படைகளால் கொல்லப்பட்டார்.
நிக்கோலஸ் மதுரோ: சமீபத்தில் (ஜனவரி 2026), அமெரிக்கா
"Operation Absolute Resolve" என்ற பெயரில் வெனிசுலா மீது
தாக்குதல் நடத்தி, மதுரோவைக் கைது செய்துள்ளது. இது 'போதைப்பொருள் ஒழிப்பு' என்று சொல்லப்பட்டாலும்,
இதன் உண்மையான நோக்கம் வெனிசுலாவின் 300 பில்லியன்
பேரல் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதும் டாலரின் சரிவைத் தடுப்பதும் மட்டுமே.
இந்த வரிசையில் அமெரிக்காவின் மிக முக்கிய இலக்காக இருந்தது
ஈரான் மற்றும் அதன் உச்சத் தலைவர் அலி கமேனி. அமெரிக்காவின் 'Pattern' படி, ஒரு
நாட்டை அழிக்கும் முன்பு அதன் தலைவரை 'சர்வாதிகாரி' எனச் சித்தரித்து கொல்வது. அப்படியே அணு ஆயுத பொய் ஒன்றுடன் அலி கொமேனிய
கொல்லப்பட்டார். மேலும் ஈரான் ஏன் அமெரிக்காவால் குறிவைக்கப்படுகிறது? என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். ஈரான் தனது வங்கித் துறையைத்
தேசியமயமாக்கி, மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டிலிருந்து
விடுவித்து விலகியுள்ளது. அலி கமேனியின் தலைமையில் ஈரான் தனது எண்ணெய் வர்த்தகத்தை
அமெரிக்க டாலரில் செய்யப் பிடிவாதமாக மறுத்து வருகிறது. ஈரானிடம் அணு ஆயுதம்
இருப்பதாக உலகைப் பயமுறுத்துவதும், அதன் மீது பொருளாதாரத்
தடைகளை விதிப்பதும் அமெரிக்காவின் பழைய 'கதைகள்' படி நடக்கும் வேலைகள்தான். அலி கமேனியை ஒரு சர்வாதிகாரியாகச் சித்தரித்து,
அந்நாட்டின் மீது ராணுவ பலத்தைப் பிரயோகித்து, ஒரு கைப்பாவை ஆட்சியை நிறுவி, ஈரானின் எண்ணெயை
மீண்டும் டாலருக்குக் கொண்டு வருவதே அமெரிக்காவின் இறுதித் திட்டம். அமெரிக்கா
இன்று ஒரு "உலகச் சண்டியராக" வலம் வரக் காரணம் டாலர் மட்டுமே. இந்த ஒற்றை ஆதிக்கத்தை முன் நிறுத்தி
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போர்களை ஆதரிப்பது எப்படி முற்போக்காகும்?
ஆனால், தற்போது சீனா, ரஷ்யா, ஈரான்
மற்றும் பிரிக்ஸ் (BRICS) நாடுகள் டாலருக்கு மாற்று வழிகளைத்
தேட ஆரம்பித்துவிட்டன. எப்பொழுது பெட்ரோ-டாலர் அமைப்பு முழுமையாகச் சிதைகிறதோ,
அப்போது அமெரிக்காவின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் செல்லும்.
புதியகாலனிய சுரண்டல் என்ன வடிவம் எடுக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.
இதனை நாம் லெனின் வரையறையிலிருந்து நாம் புரிந்துக்
கொள்வோம், “தாங்கள்
நாடுகளின் விடுதலைக்காக போரிடுவதாகக் கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள்; உண்மையில் அவர்கள் தாங்கள் அநியாயமாகக் கைப்பற்றிய காலனிகளைத்
தக்கவைத்துக் கொள்ளவே போரிடுகிறார்கள், இவை ஏகாதிபத்திய போரை பற்றிய கணிப்பு
இங்கே நேரடியாக தன் தேவைக்காக களமிறங்கியுள்ள அமெரிக்கா ஈரானை தாக்கி அழிக்கும் பொழுது
ஈரான் மௌனம் காக்க வேண்டுமா? ஆக ஆசான் லெனின் கூறியதுபோல் “ஒரு பெரிய வல்லரசுக்கு எதிராகத்
தன்னைத் தற்காத்துக் கொள்ளப் போரிடும் போது, யார் முதலில்
தாக்கினார்கள் என்பது முக்கியமல்ல. அந்தப் போராட்டம் ஒடுக்கப்பட்டவர்களின்
வெற்றிக்காகவும், விடுதலைக்காகவும் இருந்தால், அது ஒரு "தற்காப்புப் போர்" மற்றும் "நீதியான போர்" ஆகும். இதன்படி ஈரானின் போர் நீதிக்கான போரே அங்கே உள்நாட்டின் பிரச்சினையை
அங்குள்ள உழைக்கும் மக்கள் முன் வந்து தீர்த்துக் கொள்வார்கள்.
இத்தொகுப்பு லெனின் மற்றும் மாவோவின் அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில், அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கக் கொள்கைகளையும் ஈரான் மீதான அதன் ஆதிக்கப் போக்கையும் விரிவாக அலசுகிறது. ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் பொருளாதார நலன்களுக்காகவும், பெட்ரோ-டாலர் வலிமையைத் தக்கவைக்கவும் மற்ற நாடுகளின் இறையாண்மையில் தலையிடுவதை இது சுட்டிக்காட்டுகிறது. ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் எண்ணெய் வளங்களைக் கைப்பற்ற அமெரிக்கா மேற்கொள்ளும் பொருளாதாரத் தடைகள், டிஜிட்டல் ஊடுருவல்கள் மற்றும் ராணுவ அச்சுறுத்தல்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புப் போருக்கும் தற்காப்புப் போருக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கி, ஒடுக்கப்பட்ட நாடுகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நடத்தும் போராட்டமே "நீதியான போர்" என்று இக்கட்டுரை வாதிடுகிறது. இறுதியில், அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு எதிராக ஈரான் போன்ற நாடுகள் எடுக்கும் முடிவுகள் தேசிய விடுதலைக்கான ஒரு பகுதியாகவே இதில் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறாக, உலக அரசியலில் நிலவும் ஏகாதிபத்தியச் சுரண்டலையும் அதற்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளையும் இச்சார்வுகள் ஒப்பிட்டு விளக்குகின்றன.
லெனின் கூற்றுப்படி நீதியான போர் மற்றும் ஆக்கிரமிப்புப் போர் இடையிலான வேறுபாடுகள் யாவை?
அமெரிக்காவின் 'புதிய காலனியம்' மற்றும் 'பெட்ரோ-டாலர்' அரசியல் உலக நாடுகளை எவ்வாறு பாதிக்கிறது?
ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் டிஜிட்டல் போரின் பின்னணி என்ன?
தொடரும்....
No comments:
Post a Comment