சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? லியோஷோசி பாகம்
13
இரண்டாவதாக,
ஆக மிக மகத்தான புரட்சிகரத் துணிவு கொண்ட வராக அவர் இருக்கிறார். சுயநல நோக்கங்கள் ஏதும் இல்லாததால் அவர் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை.
தனக்காக எதுவும் அவர் செய்து கொள்ளாததால் அவர் குற்றவுணர்வுக்கு ஆளாக வேண்டியது இல்லை.
அவர் வெளிப்படையாக இருக்க முடியும். தனது தவறுகளையும் குறைபாடுகளையும் துணிவோடு சரி செய்து கொள்ள முடியும்;
அவரிடம் உள்ள குறைகள் "கதிரவன் அல்லது சந்திரனுக்கு ஏற்படும் ஒளிமறைவு
(கிரகணம்) போன்றதுதான்." சரியான கொள்கை அடிப்படையிலான பேராண்மை உடையவராக இருப்பதால்,
அவர் உண்மைக்கு ஒருபோதும் அஞ்சுவதில்லை. உண்மையை துணிவுடன் உயர்த்திப் பிடிக்கிறார்.
உண்மையை பரப்புரை செய்து அதற்காகப் போராடுகிறார். இவ்வாறு செய்கையில் தற்காலிகமாக அவருக்கு பாதகம் இருந்தாலும்,
உண்மையை உயர்த்திப் பிடித்து தாக்குதல்களுக்கும் உள்ளாகிறார்;
பிற பெரும்பான்மையான மக்களால் கண்டனம் செய்யப்பட்டாலும்,
தாக்குதலுக்கு உள்ளாகி தனனுயிரை இழக்கவும் தயாராக இருக்கிறார்; எவ்வளவு எதிர்ப்பு அலை இருந்தாலும் அந்த அலையில் அடித்துச் செல்லப்படாமல் உண்மையை உயர்த்திப் பிடிப்பவராக இருக்கிறார்.
மூன்றாவதாக,
மார்க்சிய - லெனினியத் தத்துவத்தை எவ்வளவு சிறப்பாகப் பற்றிக் கொள்வது என்பதை மிகச் சிறப்பாக அவர் கற்றுக் கொள்கிறார்.
பிரச்சனைகளை கூர்மையாக கவனித்து எதார்த்த நிலையை அறிந்து கொள்ளவும் மாற்றி அமைக்கவும் அவற்றை கருத்தூன்றிப் பயன்படுத்திக் கொள்ளக் கூடியவராக அவர் விளக்குகிறார்.
தெள்ளத் தெளிவான, உறுதியான பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை அவர் எடுப்பதால், மார்க்சிய லெனிய தத்துவத்தில் புடமிடப்பட்டவராக இருப்பதால்,
சொந்த விருப்புகளில் இருந்தும் சுயநலத்திலிருந்தும் விடுபட்டவராக இருப்பதால் உண்மை விஷயங்களை கவனித்து உண்மையை திரித்துப் புரட்டுவதற்கு எதிராக அவரால் இருக்க முடிகிறது.
விவரங்களிலிருந்து அவர் உண்மையை அறிகிறார். எல்லா தத்துவங்களையும் அவர் உரசிப் பார்த்து சோதிக்கிறார்.
எது உண்மை எது தவறு என்பதை புரட்சிகர நடைமுறையில் அவர் வேறுபடுத்திப் பார்க்கிறார்.
நான்காவதாக,
அவர் ஆக மிக நேர்மையாளராக கள்ளங் கபடமற்றவராக, மனிதர்களிலேயே மிகவும் மகிழ்ச்சியானவராக விளங்குகிறார்.
தனிப்பட்ட நலன்கள் என்று ஏதும் இல்லாமல் அவர் இருப்பதால் கட்சியிடம் இருந்து மறைக்க வேண்டியது எதுவும் அவரிடம் இல்லை; மற்றவர்களுக்கு சொல்ல முடியாத விஷயம் எதுவும் அவரிடம் இல்லை;
தனிப்பட்ட லாபம் நட்டம் என்று எதுவும் அவருக்கு இல்லை; கட்சியின், புரட்சியின் நலன்களுக்கு அப்பாற்பட்டு சொந்த விருப்பு வெறுப்பு எதுவும் அவருக்கு இல்லை. மற்றவர்களின் கண்காணிப்பு இல்லாமல் தனது சொந்தப் பொறுப்பில் வேலை செய்யும்போது கூட: எனவே மற்றவர்களுக்கு கேடுவிளைவிப்பதற்கு வாய்ப்பு இருக்கும்போதுகூட அவர் பணியாற்றும்போது தனியாக இருந்தபோதும் தன்னைத்தானே அவர் கூர்மையாக கண்காணித்துக் கொள்கிறார்.
மற்றவர்களுக்கு ஊறுவிளைவிக்கும் எதையும் அவர் செய்வதில்லை.
அவருடைய வேலை சுயபரிசீலனோடு இருப்பதால் அவருடைய வேலை சோதிக்கப்படுவது பற்றி அவருக்கு அச்சம் ஏதுமில்லை.
விமர்சனத்திற்கு அவர் அஞ்சுவதே இல்லை; அதே நேரத்தில் துணிவோடும் நேர்மையோடும் மற்றவர்களை அவரால் விமர்சிக்க முடிகிறது.
ஐந்தாவதாக, ஆகமிகப் பெருமளவு சுயமரியாதையும் பெருமிதமும் கொண்டவராக அவர் விளங்குகிறார். கட்சி, புரட்சியின் தேவைகள் அல்லது பொது நலன்களுக்காக தோழர்களிடம் சகிப்புத்தன்மையும் பொறுமையும் மிக அதிகமாக கடைப்பிடிப்பவராக அவர் இருக்கிறார்; சந்தர்ப்பங்கள் கோரும்போது ,எந்தவித கசப்புணர்வும் இல்லாமல் தவறாக புரிந்து கொள்ளப்படுதலையும் மரியாதைக் குறைவாக நடத்தப்படுவதையும்கூட பொறுத்துக் கொள்பவராக அவர் இருக்கிறார். தனிப்பட்ட சுயநல நோக்கங்கள் ஏதும் இல்லாதவராக இருப்பதால் அவர் யாரையும் முகத்துதி செய்வதும் இல்லை. மற்றவர்கள் புகழ்ந்துரைப்பதை விரும்புவதும் இல்லை. தனிப்பட்ட விவகாரங்களைப் பொறுத்தவரையில் தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது அவருக்கு தெளிவாகத் தெரியும். இதனால் மற்றவர்களின் உதவியைப் பெறுவதற்காக தன்னைப் பணிவுள்ளவராக காட்டிக் கொள்ளும் தேவை அவருக்கு ஏற்படுவதும் இல்லை. கட்சி மற்றும் புரட்சியின் நலன்களுக்காக தன்னை எப்படி கவனித்துக் கொள்வது, பராமரித்துக் கொள்வது என்பது பற்றியும், தத்துவத்தை உறுதியாகப் பற்றிக்கொள்வது மற்றும் தனது வினைப் பயன்மிக்க நடைமுறையைப் பலப்படுத்திக் கொள்வது எப்படி என்பது பற்றியும் அவருக்கு நன்றாக தெரியும். ஆனால், கட்சி மற்றும் புரட்சியின் இன்றியமையாத நோக்கத்துக்காக எத்தகைய அவமதிப்பையும் ஏற்றுக்கொள்ளவும் எத்தகைய துயரத்தையும் ஏற்கவும் அவர் தயாராக இருப்பார்; எத்தகைய தயக்கமும் இன்றி மிகக் கடினமானதும் உயிராதாரமானதுமான கடமைகளுக்கு தோள் கொடுப்பவராகவும் இடையூறு மிக்க பணிகளை மற்றவர்களிடம் தள்ளி விடாதவராகவும் அவர் இருப்பார். (சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி?, லியோஷோசி, பக்கம் - 64, 65, 66)
விளக்கம்:-
ஒரு கம்யூனிஸ்ட் எப்படிப்பட்டவராக இருக்கவேண்டும் என்பதை இங்கே லியோஷோசி விளக்குகிறார்.
1.
மிகவும் புரட்சிகர துணிச்சல் கொண்டவராக கம்யூனிஸ்ட் இருக்கவேண்டும்.
2.
சுயநல நோக்கம் கம்யூனிஸ்டிடம் இருக்கக்கூடாது.
அப்போதுதான் அவரால் அச்சமில்லாமல் இருக்கமுடியும்.
3.
ஒரு கம்யூனிஸ்ட் குற்றவுணர்வில்லாமல் இருக்கவேண்டும்.
அதற்கு அவர் தனக்கென்று எதுவும் செய்துகொள்ள விருப்பமில்லாதவராக இருக்கவேண்டும்.
4.
கம்யூனிஸ்டுகள் எப்போதும் தனது மனதில் உள்ளதை மறைக்காமல் வெளிப்படையாக பேசவேண்டும், அதனையே வெளிப்படையாக செயல்படுத்தவேண்டும்.
உள்ளொன்று வைத்து வெளியில் வேறொன்றை பேசக்கூடாது.
5.
தனது தவறுகளையும் தன்னிடத்திலுள்ள குறைகளையும் வெளிப்படையாகச் சொல்லி குறைகளையும் தவறுகளையும் களைந்துகொள்ள வேண்டும்.
6.
கம்யூனிஸ்டுகள் அவர்களது குறைகளை களைந்தால் அவரிடமுள்ள குற்றவுணர்வு பனிபோல் கறைந்துவிடும்.
7.
சரியான கொள்கையில் கம்யூனிஸ்ட் எப்போதும் உண்மையான பற்றுக்கொண்டு அதில் உறுதியாக இருக்கவேண்டும்.
அப்போது அவர் எதைக்கண்டும் அஞ்சத்தேவையில்லை.
8.
சரியான கொள்கைகளை புறநிலை விவரங்களிலிருந்து தேடவேண்டும்.
அதற்கு மார்க்சிய சமூக விஞ்ஞானத்தை பயன்படுத்த வேண்டும்.
9.
கம்யூனிஸ்ட் உண்மையையும் அந்த உண்மையைச் சொல்லும் மார்க்சியத்தையும் உயர்த்திப்பிடிக்க வேண்டும்.
10.
கம்யூனிஸ்டுகள் உண்மையையும் மார்க்சியத்தையும் பிரச்சாரம் செய்து அதற்காகப் போராட வேண்டும்.
11.
உண்மையையும் மார்க்சியத்தையும் கம்யூனிஸ்ட் பிரச்சாரம் செய்யும்போது அவர் தாக்குதலுக்கு உள்ளாகலாம் அதனை அவர் தீரத்தோடு எதிர்கொள்ள வேண்டும்.
12.
உண்மையையும் மார்க்சியத்தையும் ஒரு கம்யூனிஸ்ட் பிரச்சாரம் செய்யும்போது அறியாமையிலுள்ள மக்கள் அவர்களது கட்சித் தலைவர்களின் பேச்சை கேட்டு மார்க்சியத்தை பிரச்சாரம் செய்பவரின் மீது தாக்குதல் தொடுக்கலாம் அதனை பொறுமையாக ஏற்றுக்கொண்டு அந்த மக்களிடம் தனது பிரச்சாரத்தை தொடரவேண்டும்.
13.
ஒரு கம்யூனிஸ்டை வறுமை தாக்கலாம், அரசின் தாக்குதலையும் சந்திக்க நேரிடலாம் இவ்வாறு பல எதிர்ப்பு அலைகளையும் சந்தித்தித்து மார்க்சியத்தை கைவிடாமல் திருத்தல்வாதியாக மாறாமல் தொடர்ந்து மார்க்சியவாதியாகவே இருக்க வேண்டும்.
14.
மார்க்சிய லெனினிய தத்துவத்தை சிறப்பாகப் பற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஒரு கம்யூனிஸ்ட் உணர்ந்து அந்த நோக்கத்துக்காக (உழைக்கும் மக்களை கூலி அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்வதற்காக)
மார்க்சியத்தை கற்றுக்கொள்ள வேண்டும், மேலும் அதற்கு விசுவாசமாகவும் இருக்கவேண்டும்.
15.
மார்க்சிய சமூக விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி எதார்த்தமான நாம் சந்திக்கும் பிரச்சனைகளை கூர்மையாக கவனித்து அதன் எதார்த்தத்தை புரிந்துகொண்டு குறிப்பான தீர்வை கண்டுபிடிக்க வேண்டும்.
16.
தெள்ளத்தெளிவான உறுதியான பாட்டாளிவர்க்க நிலைபாட்டை எடுக்கக்கூடியவராக கம்யூனிஸ்டுகள் இருக்க வேண்டும்.
அதாவது உழைக்கும் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டதாகவே அவரது நிலைபாடு இருக்க வேண்டும்.
17.
மார்க்சிய லெனினியத் தத்துவத்திலிருந்து என்னென்றும் விலகாதவராக அதில் புடமிடப்பட்டவராக கம்யூனிஸ்டுகள் இருக்க வேண்டும்.
18.
சொந்த விருப்பு மற்றும் சுயநலத்திலிருந்து விடுபட்டவராக கம்யூனிஸ்டுகள் இருக்க வேண்டும்.
19.
உண்மையான விசயங்களையும் மார்க்சியத்தையும் திரித்துப் புரட்டுபவர்களை எதிர்த்து விட்டுக்கொடுக்காமல் போராடுபவராக கம்யூனிஸ்டுகள் இருக்க வேண்டும்.
20,
கம்யூனிஸ்டுகள் விவரங்களிலிருந்து உண்மையை அறியவேண்டும்.
எந்த தத்துவத்தையும் விமர்சனப்பூர்வமாக அலசி ஆராய்ந்து நடைமுறையில் சோதித்துப் பார்க்க வேண்டும்.
அவ்வாறு நடைமுறையில் ரஷ்யாவிலும், சீனாவிலும் சோதித்துப்பார்க்கப்பட்ட தத்துவம்தான் மார்க்சியம் லெனினியம்.
21.
கம்யூனிஸ்டுகள் நேர்மையானவர்களாகவும் கள்ளங்கபடமற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
அப்போதுதான் அவர்களால் மிகுந்த மகிழ்ச்சியானவராக இருக்கமுடியும்.
22.
தனிப்பட்ட நலன் இல்லாதவராக இருப்பதன் மூலம் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்தும் மக்களிடமிருந்து எதையும் மறைக்காமல் இருக்கவேண்டும்.
23.
ஒரு கம்யூனிஸ்ட் உண்மைகளை மூடிமறைப்பதை இழிவாக கருதவேண்டும்.
24.
தனிப்பட்ட முறையில் தனக்கான லாபம் மற்றும் நட்டக் கணக்கு பார்ப்பவராக ஒரு கம்யூனிஸ்ட் இருக்கக்கூடாது.
25.
மற்றவர்கள் தன்னை கண்காணித்தாலும் கண்காணிக்கவில்லை என்றாலும் தனது வேலையில் கவனமாக இருக்கவேண்டும்.
26.
தன்னுடைய சுயநலத்துக்காக மற்றவர்களுக்கு
(சக தோழர்களுக்கு) ஊறுவிளைவிக்கும் சதிச்செயலில் ஈடுபடக்கூடாது
27.
கம்யூனிஸ்டுகள் எப்போதும் தன்னைப்பற்றி சுயபரிசீலனை செய்துகொண்டே இருக்க வேண்டும். அதற்கேற்ப தனது சிந்தனையையும் செயலையும் வகுத்துக்கொள்ள வே்டும்.
28.
கம்யூனிஸ்டுகள் எப்போதும் விமர்சனங்களை எதிர்கொள்ளவேண்டும் அதனை பரிசீலித்து சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும்.
விமர்சனங்களுக்கு அச்சப்படக் கூடாது.
29.
தவறுகள் நடக்கும்போதும், மார்க்சியத்துக்கும் மக்களுக்கும் எதிராக ஒருவர் செயல்படும்போது அவரை விமர்சனம் செய்வதில் கம்யூனிஸ்டுகள் தயங்கக்கூடாது.
30.
கம்யூனிஸ்டுகள் சுயமரியாதை கொண்டவராகவும் பெருமைக்குரியவராகவும் உழைக்கும் மக்களால் நேசிக்கக்கூடியவராகவும் இருக்க வேண்டும்.
31.
கம்யூனிஸடுகள் ஒருபோதும் மக்களிடம் பொய்யும் புரட்டும் சொல்லி மக்களை ஏமாற்றுபவராக இருக்கக்கூடாது.
32.
உழைக்கும் மக்கள் மற்றும் கட்சியின் நலன்களுக்காக சக தோழர்களிடமும் உழைக்கும் மக்களிடமும் பொறுமையும் சகிப்புத் தன்மையையும் கடைபிடிப்பவராக இருக்க வேண்டும்.
33.
மக்களின் எதிரிகளோடு ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக்கூடாது, அவர்களை எதிர்த்து விடாப்பிடியாகப் போராட வேண்டும்.
34.
கட்சியிலுள்ள தோழர்கள் தவறாகப் புரிந்துகொண்டு மரியாதைக் குறைவாக நடந்துகொண்டால் அதனை எவ்விதமான கசப்புணர்வு இல்லாமல் பொறுமையாக எதிர்கொள்ள வேண்டும்.
35.
தன்னுடைய சுயநலத்துக்காக யாரையும் முகத்துக்கு நேராக துதிபாடக்கூடாது.
36.
புகழின் மீது ஆசைப்ட்டு தன்னை மற்றவர்கள் புகழவேண்டும் என்று விரும்பக்கூடாது. புகழ் தன்னைத் தேடிவந்தாலும் அதனை பொருட்படுத்தக்கூடாது.
மேலும் தன்னை யாரும் புகழக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.
37.
தன்னை ணிவுள்ளவராகக் காட்டிக்கொண்டு யாரையும் ஐஸ் வைக்கக் கூடாது.
38.
தனிப்பட்ட தனது நடவடிக்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவுடையவராக இருக்க வேண்டும்.
39.
மார்க்சிய தத்துவத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டு அதன் அடிப்படையில் தனது சிந்தனையையும் செயலையும் வகுத்துக்கொள்ள வேண்டும்.
40.
புரட்சியின் நலனுக்காகவு் மக்களின் நலனுக்காகவும் எவ்விதமான அவமதிப்பையும் துயரங்களையும் இன்முகத்தோடு எதிர்கொள்ள வேண்டும்.
41.
கம்யூனிச இலட்சியத்தை அடைவதற்காக கடினமான பணிகளை தன்தோளின் மீது சுமக்க வேண்டும். கடினமான பணிகளை பிறருக்க தள்ளிவிடக்கூடாது.
இத்தகைய பண்புள்ளவர்கள்தான் உண்மையான கம்யூனிஸ்டுகள் ஆவார்கள்.
இந்த உண்மையை உலகுக்கு வெளிச்சம்போட்டு காட்டியர்தான் லியோஷோசி.
இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு தன்னை ஒரு சிறந்த கம்யூனிஸ்டாக வளர்த்துக்கொள்ள தயாரில்லாதவர்கள்தான் பிற்காலத்தில் லியோஷோசி முதலாளித்துவ பாதையாளராக மாறிவிட்டதை காரணம் காட்டி லியோஷோசியால் முன்வைக்கப்பட்ட கம்யூனிசப் பண்புகளை வளர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் கம்யூனிசப் பண்புகளுக்கு நேர்எதிரான பண்புகளை வளர்த்து மிகவும் திமிர்பிடித்தவர்களாகவும், அராஜகவாதிகளாவும் சுயநலவாதிகளாவும் இருந்துகொண்டு மார்க்சியம் குறை உள்ளது என்று சொல்லி மார்க்சியத்தை திருத்துவது,
குழப்புவது, அமைப்பை பிளவுபடுத்துவது, மக்களிடம் நம்பிக்கை இன்மையை வளர்ப்பது போன்ற பல மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு தன்னை கம்யூனிஸ்டு என்று சொல்லிக்கொண்டு கம்யூனிசத்திற்கு எதிராக செயல்படுபவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் நூல்தான் லியோஷோசியின் சிறந்த கம்யூனிஸ்டாவது எப்படி என்ற நூலாகும்.
இந்த நூலை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் படிக்க வேண்டும்.
அப்போதுதான் கம்யூனிசப் போர்வையில் நம்மை ஏமாற்றும் கயவர்களை நாம் அடையாளம் கண்டு புறக்கணிக்க முடியும். அதேவேளையில் உண்மையான கம்யூனிஸ்டு யார் என்பதையும் நாம் யாரை நம்பவேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.
ஆனாலும் தோழர்களே இத்தகைய அனைத்து பண்புகளையும் கொண்டவராக ஒரு தனிமனிதர் மாறமுடியாது என்பது உண்மையே. எனினும் ஒவ்வொரு கம்யூனிஸ்டும் அவர்களால் முடிந்தளவுக்கு இத்தகைய கம்யூனிசப் பண்புகளை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யவேண்டும்.
மேலும் கம்யூனிசப் பண்புகளுக்கு எதிராகத் தன்னிடம் இருக்கும் தீய பண்புகளை உடனடியாக களையவேண்டும்.
அத்தகைய தீய பண்பு கட்சியை மட்டுமல்லாமல் உழைக்கும் மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.
கம்யூனிஸத்தின் லட்சியம் இத்தகைய சிறந்த பண்பாளர்களாக உலகம் முழுவதிலுமுள்ள மக்களை மாற்றுவதுதான்.
ஆகவே அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு கம்யூனிஸ்டுகள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றே மார்க்சியம் வலியுறுத்துகிறது.
இதனை ஒவ்வொரு மார்க்சியவாதியும் புரிந்துகொள்ள வேண்டும்,
அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆக மிக சீரிய மற்றும் உயரிய மனித நற்பண்புக் கூறுகளைக் கொண்டவராக இருக்க வேண்டும்;
தெள்ளத் தெளிவானதும் உறுதியானதுமான கட்சி மற்றும் பாட்டாளி வர்க்க உயிருணர்வு கொண்ட நிலைபாட்டை எடுக்க வேண்டும்.
நாம் பாட்டாளி வர்க்க மற்றும் கம்யூனிஸ்ட் உணர்வில் இருப்பதே நமது நன்னெறி நடத்தை உயர்வானதாக இருப்பதற்கு காரணம். தனி நபர்கள் அல்லது சிறு எண்ணிக்கையிலான சுரண்டலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் அடிப்படையில் கட்சி அமைக்கப்படவில்லை;
ஆனால், மகத்தான பாட்டாளி வர்க்கம் மற்றும் பரந்துபட்ட பெரும் எண்ணிக்கையிலான உழைக்கும் மக்களின் நலன்களுக்காகவே,
முதலாளித்துவத்தின் பேரழிவிலிருந்து முழு உலகையும் விடுதலை செய்வதற்காகவே,
மகிழ்வான எழிலார்ந்த கம்யூனிச உலகை கட்டி எழுப்புவதற்காகவே கட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது.
மார்க்சிய லெனினியத் தத்துவத்தின்படியான அறிவியல்பூர்வ கம்யூனிசத்தின் அடிப்படையிலான நன்னெறிக் கோட்பாடுகளே நமது கட்சிக்கு அடித்தளமாக இருக்கின்றன.
தனிநபரின் அல்லது மிகச்சிறுபான்மையினரின் நலன்களுக்காக ஒருவர் தியாகம் செய்வது மிக மிக அற்பத்தனமானதாக அல்லது நியாயப்படுத்த முடியாததாக இருக்கும் என்றே கம்யூனிஸ்களாகிய நாம் கருதுகிறோம்.
ஆனால், பாட்டாளி வர்க்கத்துக்காகவும், தேசங்கள் மற்றும் முழு மனித குலத்தின் விடுதலைக்காகவும்,
சமூக முன்னேற்றம் மற்றும் ஆக மிகப் பெரும்பான்மையான மக்களின் மிக மிக உயர்ந்த நலன்களுக்காகவும் ஒருவர் தன்னை அர்ப்பணித்துக் கொள்வது என்பது உலகிலே மிக மிக மதிப்புக்குரியதும் நீதியானதுமான விஷயமாகவே இருக்கும்.
உண்மையில், எண்ணிமாள முடியாத பெரும் எண்ணிக்கையிலான கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மரணத்தை எவ்வித பதட்டமும் இன்றி அமைதியாகவே எதிர்கொண்டுள்ளனர்.
எள்ளளவு தயக்கமின்றி, வாழ்வை தியாகம் செய்யும் இறுதி முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.
தேவைப்படும்போது உயிரிய இலட்சியத்திற்காக உயிரைக் கொடுப்பது,
நீதிக்காக உயிரையே கொடுப்பது அவசியமானது என்றே ஆக மிகப் பெரும்பான்மையினரான கம்யூனிஸ்டுகள் கருதுகின்றனர். (சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது
எப்படி?, லியோஷோசி, பக்கம் - 66, 67)
விளக்கம்:-
1. சாதாரணமான மனிதர்களைவிட சிறந்த நற்பண்புகளைக் கொண்டவர்களாக கம்யூனிஸ்டுகள் இருக்க வேண்டும்.
ஆனால் இங்குள்ள கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களில் பலர் சாதாரணமான மக்களிடத்திலுள்ள நல்ல பண்புகள்கூட இல்லாதவர்களாக மோசமான சுயநலவாதிகளாக இருப்பதை நாம் பார்க்கிறோம்.
2. கம்யூனிஸ்ட் கட்சியானது பாட்டாளி வர்க்க நலனை அடிப்படையாகக் கொண்டு தெள்ளத்தெளிவான கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.
ஆனால், இங்கு தொழிலாளி வர்க்கத்தை அடக்கி ஒடுக்கும் முதலாளித்துவ கட்சிகளோடு கூட்டுசேர்ந்து தொழிலாளர்களின் மீது அடக்குமுறை செலுத்தும் அரசை எதிர்த்து போராடாமல் சமரசம் செய்துகொள்வதைப் பார்க்கிறோம்.
3.
கம்யூனிஸ்டுகளின் நன்னெறி என்பது பாட்டாளி வர்க்கம் மற்றும் கம்யூனிச உணர்வுள்ளவராக இருப்பதுதான்.
ஆனால், இங்குள்ள இடதுசாரி தலைவர்களிடம் பாட்டாளி வர்க்க உணர்வோ கம்யூனிச உணர்வோ காணப்படவில்லை. மாறாக முதலாளி வர்க்கங்களோடு சமரசம் செய்துகொள்ளும் உணர்வே காணப்படுகிறது.
4.
தனிநபர்கள் அல்லது சிறுபான்மை முதலாளித்துவ சுரண்டலாளர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கக்கூடாது.
ஆனால், இங்கே தொழிலாளி வர்க்கம் முதலாளிகளை எதிர்த்துப் போராடும்போது தொழிலாளர்களின் பக்கம் உறுதியாக நின்று போராடாமல் முதலாளிகளோடு சமரசம் செய்துகொள்ளும் கட்சியாகவே இடதுசாரிகள் இருக்கிறார்கள்.
5.
பாட்டாளி வர்க்கம், பெரும் எண்ணிக்கையிலான உழைக்கும் மக்களின் நலன்களுக்காகவே கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட வேண்டும்.
இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே ரஷ்யாவில் லெனின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி கட்டப்பட்டு,
பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஒன்றுதிரட்டி ஜார் மன்னனது ஆட்சியையும் முதலாளித்துவ ஆட்சியையும் வீழ்த்தி புதிய வகையிலான சோவியத்தின் ஆட்சியை உருவாக்கினார்கள்.
இவர்கள் உண்மையிலேயே கம்யூனிஸ்ட்டுகள். ஆனால்,
இங்குள்ள இடதுசாரிகள் ரஷ்ய போல்ஷ்விக்குகளை பின்பற்ற மறுத்துவிட்டனர்,
இவர்கள் கம்யூனிஸ்டுகளா?
6. முதலாளித்துவத்தின் பேரழிவிலிருந்து முழு உலகையும் விடுதலை செய்வதற்காகவும்,
மகிழ்வான எழிலார்ந்த கம்யூனிச உலகை கட்டி எழுப்புவதற்காகவும்தான் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டவேண்டும். ஆனால் இங்கு,
முதலாளித்துவத்தை ஒழிக்கவும், கம்யூனிச சமுதாயமாக சமுதாயத்தை மாற்றவேண்டும் என்ற உணர்வே இல்லாதவர்களாக பல இடதுசாரித் தலைவர்கள் உள்ளனர்.
இவர்களால் தலைமை தாங்கப்படும் கட்சிகள் முதலாளிகளிடம் கெஞ்சி கூத்தாடி தொழிலாளர்களுக்கு சில சலுகை வாங்கிக்கொடுப்பவர்களாகவே இருக்கிறார்கள்.
தொழிலாளர்கள் அவர்களுக்கான சோவியத் அரசை உருவாக்க வேண்டும் என்ற உணர்வை தொழிலாளர்களுக்கு ஊட்டுவதும் இல்லை அதற்காக தொழிலாளர்களை தயாரிப்பதும் இல்லை.
7.
கம்யூனிஸ்டுகளின் நன்நெறிக்கு மார்க்சிய லெனினிய தத்துவம் அடிப்படையாக இருக்க வேண்டும், மேலும் விஞ்ஞான கம்யூனிச கொள்கையும் அடிப்படையாக இருக்க வேண்டும். ஆனால் இங்குள்ள இடதுசாரித் தலைவர்கள் மார்க்சிய லெனினிய தத்துவத்தைப் பின்பற்றுகிறார்களா?
8.
தனிநபர்கள் அல்லது சுரண்டலாளர்களின் நலனுக்காக தொழிலாளர்கள் பாடுபடவோ தியாகம் செய்யவோ கூடாது.
மாறாக பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் நலனுக்காகவே தியாகம் செய்ய வேண்டும்.
ரஷ்யா சீனா போன்ற நாடுகளிலும் இந்தியாவிலும் கம்யூனிஸ்டுகள் பல லட்சக்கணக்கானோர் உழைக்கும் மக்களுக்காக உயிர்தியாகம் செய்திருக்கிறார்கள்.
ஆனால், தற்போது இடதுசாரிகளிடம் இத்தகைய தியாகிகள் மிகமிகக் குறைவாகவே இருக்கிறார்கள்.
9.
சமூக மாற்றத்துக்காகவும், நீதிக்காகவும் பல கம்யூனிஸ்டுகள் தங்களது உயிரைக்கொடுக்கவும் தயங்கியதில்லை.
கம்யூனிஸ்டுகளிடம் உள்ள பண்புகளிலேயே சிறந்த பண்புதான் இந்தப் பண்பாகும். உலகம் முழுவதிலும் மக்களுக்காக உயிர்தியாகம் செய்தவர்களில் பெரும்பாலோர் கம்யூனிஸ்டுகளே.
ஆகவேதான் இப்போதும் உழைக்கும் மக்கள் கம்யூனிஸ்டுகளை மதிக்கிறார்கள்.
மக்களிடமுள்ள இந்த செல்வாக்கைத்தான் இடதுசாரிகள் தவறாக தங்களது சுயநலத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், அந்த தியாகிகளின் வழியைப் பின்பற்றி சோசலிசப் புரட்சியை நடத்துவதற்கு இடதுசாரித் தலைவர்கள் தயாரில்லை என்பது வேதனையான விசயமாகும்.
இத்தகைய தியாகங்கள் ஏதோ புரட்சி பற்றிய குருட்டுத்தனமான வெறியாலோ அல்லது புகழ் நாட்டத்தாலோ செய்யப்படுபவை அல்ல;
சமுதாய வளர்ச்சிப் போக்கு பற்றிய அறிவியல்பூர்வமான அவர்களின் புரிதலும் ஆழ்ந்த அரசியல் உணர்வாலும் செய்யப்படுபவை.
இந்த ஆக மிக உயரிய கம்யூனிஸ்ட் நன்நெறி நடத்தையுடன் ஒப்பிடக் கூடியதாக வர்க்க சமுதாயத்தின் நன்னெறி நடத்தை எதுவுமே இல்லை. வர்க்கங்களைக் கடந்த உலகளாவிய நன்னெறி நடத்தை என்பது ஏமாற்றாகும்,
முட்டாள்தனமாகும்; உண்மையில் அது மிகச் சிறு எண்ணிக்கையிலானவர்களின் சுரண்டல் நலன்களைப் பாதுகாப்பதற்கென திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே.
நன்னெறி நடத்தை பற்றிய இத்தகைய கருத்துப்படிவம் எப்போதுமே நடைமுறைக்கு ஒவ்வாத கருத்தியலே அறிவியல்பூர்வான வரலாற்றியல் பொருள் முதல்வாத அடிப்படையில் நமது நன்னெறி நடத்தையைக் கட்டியெழுப்புவது கம்யூனிஸ்டுகளாகிய நாம் மட்டும்தான்.
தன்னையும் முழு மனித குலத்தையும் விடுவிப்பதற்கான பாட்டாளி வர்க்க போராட்ட நலன்களை பாதுகாக்கும் நோக்கத்திற்காகவே இந்த நன்னெறி நடத்தையைக் கட்டியமைத்துள்ளோம் என்று பிரகடனம் செய்திருப்பதும் நாம்தான்.
(சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி?, லியோஷோசி, பக்கம்
- 67, 68)
விளக்கம்:-
மார்க்சியமானது எந்தவொரு விசயத்தையும் வர்க்க கண்ணோட்டத்திலிருந்தே பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
நன்னெறி விசயத்தில் பொதுவான நன்னெறி என்பது மேலோட்டமாகப் பார்ப்பதற்கு நியாயமானதாகத் தோன்றுகிறது.
உதாரணமாக பொய்சொல்லாமை, அடுத்தவர்களுக்கு தீங்குசெய்யாமை,
மற்றவர்களை சமமாக மதிப்பது போன்ற நன்னெறிகள் நியாயமான நன்னெறிகளாகத் தோன்றுகிறது.
ஆனால் இந்த நன்னெறிகள் எல்லாம் வர்க்கப் போராட்டத்தில் உழைக்கும் மக்களின் நலன்களை பாதுகாக்கவில்லை என்றால்,
மாறாக முதலாளி வர்க்கங்களின் சுரண்டலை பாதுகாத்தால் இந்த நன்னெறிகளுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது.
ஆகவேதான் பொதுவான நன்னெறியிலிருந்து கம்யூனிச நன்னெறியை நாம் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும்.
கம்யூனிச நன்னெறிதான் உலகத்தில் மிகவும் உயர்ந்த நன்னெறியாகும். உழைக்கும் மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டதுதான் கம்யூனிச நன்னெறியாகும்.
கம்யூனிஸ்டுகள் குருட்டுத்தனமாக தியாகங்கள் செய்யக்கூடாது.
கட்சித்தலைவருக்காக தியாகங்கள் செய்வது மடமையாகும். கம்யூனிஸ்டுகள் சமுதாயத்தின் வளர்ச்சிப்போக்குகளை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொண்டு பாட்டாளி வர்க்க அரசியல் உணர்வின் அடிப்படையில் தனது கடமையை செய்வதன் மூலம் தியாகங்களை செய்ய வேண்டும்.
வர்க்கங்களை கடந்த நன்னெறி என்பது ஒரு ஏமாற்றுவேலையாகும், அது முட்டாள்தனமாகும் என்று மார்க்சியம் சொல்கிறது.
பாட்டாளி வர்க்க சார்பை மறுத்துவிட்ட நன்னறி என்பது முதலாளித்துவ நன்னெறியாகும். இத்தகைய முதலாளித்துவ நன்னெறி பண்பு கொண்டவர்களால் உழைக்கும் மக்களுக்கு எவ்விதமான நன்மையும் இல்லை.
ஆகவே கம்யூனிஸ்டுகள் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்திலிருந்து கம்யூனிச நன்னெறி கருத்துக்களை உருவாக்கி வளர்க்கிறார்கள்.
ஆகவே கம்யூனிஸ்டுகள் பின்பற்ற வேண்டிய நன்னெறி என்பது கம்யூனிச நன்னெறியாகவே இருக்க வேண்டும்.
கம்யூனிஸ்டுகள் ஒவ்வொருவரும் கம்யூனிச நன்னெறியை புரிந்திருப்பது அவசியமாகும்.
தமது விடுதலைக்கான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் மற்றும் முழு மனித குலத்தின் பொதுவான,
நீண்ட கால நலன்களை கம்யூனிஸ்டு கட்சி பிரதிநிதித்துவம் செய்கிறது;
இந்த லட்சியத்தின் செறிவாக்கப்பட்ட வெளிப்பாடாகவே கட்சியின் நலன்கள் விளங்குகின்றன.
கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு குறுகிய கும்பலாக எவரும் கருதக்கூடாது; தனது உறுப்பினர்களின் நலன்களில் மட்டும் அக்கறை செலுத்தும் ஒரு கூட்டுறவு குழு அல்ல கம்யூனிஸ்ட் கட்சி.
தனது நலனை மட்டும் பேணும் குழுவாக கட்சியை கருதுபவர் கம்யூனிஸ்ட் ஆகவே இருக்க முடியாது. (சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி?,
லியோஷோசி, பக்கம் - 68)
விளக்கம்:-
ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் கட்சி என்றால் என்ன? கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விளக்கத்தை இங்கே லியோஷோசி குறிப்பிடுகிறார். இதனை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொரு கம்யூனிஸ்டின் டமையாகும்.
1.
அடிமையாக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின் விடுதலையை அடிப்படையாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கொண்டிருக்க வேண்டும்.
2.
முழு மனிதகுலத்தின் பொதுவான நீண்டகால நலன்களிலேயே பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை அடங்கியுள்ளது என்பதை உணர்ந்து சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காகவும் பாட்டாளி வர்க்கம் பாடுபட வேண்டும் என்பதை பாட்டாளி வர்க்கத்துக்கு உணர்த்தி தலைமைதாங்கி வழிநடத்த வேண்டியது கம்யூனிஸ்ட் கட்சியின் கடமையாகும்.
3.
ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களும் கம்யூனிஸ்ட் கட்சியின் நலன்களும் பிரிக்கமுடியாதபடி ஒன்றாகவே இருக்க வேண்டும்.
ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களிலிருந்து கட்சியின் நலன் வேறுபடுமானால் அந்தக் கட்சி கம்யூனிஸ்ட் கட்சியாக நீடிக்க முடியாது.
உதாரணமாக மேற்கு வங்கத்தில் விவசாயிகளின் நலன்களோடு இடதுசாரிகளின் நலன்
(ஆட்சி அதிகாரத்தில் இருப்து) வேறுபட்டதால் இடதுசாரிகள் கம்யூனிசக் கொள்கையிலிருந்து விலகி மக்களால் புறக்கணிக்கப்பட்டார்கள்.
4.
கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் ஒரு குறுகிய கும்பலின் நலனுக்கானதாக இருக்கக்கூடாது. ஆனால்,
இங்கே பல கம்யூனிசக் குழுக்கள் இருப்பதைக் காண்கிறோம். இந்த குழுக்களில் உள்ளவர்களுக்கு பரந்துபட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்கள் முக்கியமில்லை.
அவர்களின் குழுவிலுள்ளவர்களின் சுயநலன்தான் முக்கியமாக இருக்கிறது.
மேலும் இந்தக் குழுக்களிலும் ஆதிக்கத்திலுள்ள கோஷ்டிகளின் நலனே முதன்மையாக இருக்கிறது.
ஆகவேதான் இந்தக் குழுக்களும் கோஷ்டிவாதத்தின் அடிப்படையில் பிளவுபட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்தக் குழுக்கள் ஒருபோதும் கம்யூனிச அமைப்பாகாது. இந்தக் குழுக்களில் செயல்படுபவர்கள் ஒருபோதும் கம்யூனிஸ்டுகள் ஆகமாட்டார்கள்.
5.
கம்யூனிஸ்டுகள் எப்போதும் மிகப்பெருவாரியான உழைக்கும் மக்களின் நலன்களை காக்கவே சிந்திக்க வேண்டும்,
செயல்பட வேண்டும். அதற்கு மாறாக சிறிய கும்பலின் நலனுக்காக செயல்படும் குறுங்குழுவாதிகளும் அதேபோல் முதலாளிகளின் சிறுகும்பலின் நலன்களுக்காக செயல்படும் முதலாளித்துவ அரசியல்வாதிகளும் சுயநல அடிப்படையில் ஒன்றுபடுகிறார்கள்.
இவ்விருவர்களுக்கும் வேறுபாடு இல்லை.
ஒரு கட்சி உறுப்பினருக்கு சொந்த நலன்கள் இருக்கவே செய்யும்;
அவை குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் கட்சியின் நலன்களுக்கு பொருத்தமற்றதாக அல்லது எதிரானவையாகவும் கூட இருக்கக்கூடும்.
இப்படிப்பட்ட நிலை ஏற்படுமானால் தனது சொந்த நலன்களை தியாகம் செய்வதும் எவ்வித நிபந்தனையும் இன்றி கட்சியின் நலன்களுக்கு கீழ்ப்படுத்துவதும் உறுப்பினரின் கடமையாகும்;
எந்த சாக்குப் போக்கையும் சொல்லக்கூடாது. போலியான பாவனை எதையும் மேற்கொள்ளக்கூடாது.
எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் கட்சியின் நலன்களுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் விட்டுக் கொடுக்காமல் அவர் மனமார போராட வேண்டும்;
கட்சியும் பாட்டாளி வர்க்கமும் ஈட்டும் ஒவ்வொரு வெற்றியையும் பெருமிதத்தையும் தன்னுடைய சொந்த வெற்றியாக பெருமிதமாக கருத வேண்டும்.
மக்களுக்கு சேவை செய்வதில் ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் தனது ஆற்றலையும் செயல்பாட்டையும் பெருக்க வேண்டும்.
ஆனால், கட்சியினுடைய லட்சியத்தின் முன்னேற்றம் புகழ், வெற்றி ஆகியவற்றுக்காகவே உறுப்பினர் செயல்பட வேண்டும்;
இதற்கு அப்பாற்பட்டு கட்சியினுடைய போராட்டத்தில் இருந்து விலகியதாக தனிநபர் முன்னேற்றம் இருக்கக் கூடாது.
கட்சியினுடைய முன்னேற்றத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவதுதான் கட்சி உறுப்பினரின் செயல்பாட்டையும் ஆற்றலையும் உயர்த்துவதற்கான வழியாக இருக்க முடியும்;
வேறு எந்த வழியிலும் அவர் தனது ஆற்றலையும் செயல்பாட்டையும் முன்னுக்கு கொண்டு செல்ல முடியாது.
எனவே கட்சியினுடைய நலன்களுடன் தனது நலன்களை பிரிக்க முடியாதபடி முற்று முழுதாக ஒன்று கலக்க செய்வதே உறுப்பினரின் பணியாக இருக்க வேண்டும். (சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி?,
லியோஷோசி, பக்கம் - 68)
1.
ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினருக்கோ, தலைவருக்கோ சொந்த நலன்கள் இருக்கவே செய்யும்.
சில வேளைகளில் சொந்த நலனானது கட்சியின் நலனுக்கோ அல்லது உழைக்கும் மக்களின் நலனுக்கோ எதிரானதாகவும் இருக்கும்.
அத்தகைய சூழலில் கட்சி உறுப்பினர் மற்றுத் தலைவர்கள் அவர்களது சொந்த நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,
கட்சியின் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சொந்த நலன்களை கைவிடவேண்டும் அல்லது தியாகம்,
அப்போதுதான் அவர் ஒரு சிறந்த கம்யூனிஸ்டாக நீடிக்க முடியும். இதற்கு நேர்எதிராக எனது அனுபவம். நான் ஒரு அமைப்பில் செயல்படும்போது அமைப்பிலுள்ளவர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து சண்டையிட்டுக்கொண்டு இருந்தார்கள்.
அமைப்பு பிளவை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. அமைப்பின் தலைமைக்கு உழைக்கும் மக்களின் நலனோ,
அமைப்பின் ஒற்றுமை பற்றி எவ்விதமான அக்கறையும் இல்லை. தனது தலைமையை தக்கவைப்பது தனக்கான ஆமாம்சாமி செம்மறி ஆட்டுக்கூட்டத்தை தனக்குப் பின்னால் அணிதிரட்டிக்கொள்வது என்ற சுயநலம் மட்டுமே கொண்டிருந்தது.
அதற்காக அமைப்பிலுள்ள ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து தனக்கான ஒரு கோஷ்டியைக் கட்டி அமைப்பை பிளவுபடுத்தியது.
இத்தகைய சுயநலவாதிகளைக் கொண்ட குழுக்கள்தான் இங்கே அதிகமாக நிலவுகிறது.
இந்தக் குழக்களைத்தான் இதில் உள்ள தலைவர்களைத்தான் லியோஷோசி கம்யூனிஸ்ட் கட்சி இல்லை என்றும் இவர்கள் கம்யூனிஸ்டுகள் இல்லை என்றும் குறிப்பிடுகிறார்.
2.
தனது சொந்த நன்கள் எவ்வளவு முக்கியமானவையாக இருந்தாலும் அதனை கட்சியின் நலனுக்கு கீழ்ப்படுத்த வேண்டும்.
ஆனால், இங்கு தனது சொந்த இழிவான நலன்ளையே கட்சியின் நலனுக்கு மேலாகக்கொண்டு கட்சியின் நலனையும் ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டவர்களைப் பார்க்கிறோம்.
அவர்களை நான் கீழ்த்தரமானவர்களாகவே பார்க்கிறேன்.
உதாரணமாக காவுத்ஸ்கி சிறந்த அறிவாளியாகவே இருந்தாலும் உழைக்கும் வர்க்கத்துக்கு துரோகம் செய்த இழிபிறவிதானே.
அவரப் போன்ற இழிபிறவகள் இங்கேயும் இருக்கிறார்கள் அவர்களை உழைக்கும் மக்கள் மதிக்க ஒஏண்டுமா?
கூடாது என்தே மாரக்சியவாதிகளின் நிலையாக இருக்க வேண்டும்.
3.
கட்சி மற்றும் உழைக்கும் மக்களின் நலனுக்கு துரோகம் செய்துவிட்டு செயல்படுபவர்கள், அவர்களின் துரோகத்தை நியாயப்படுத்துவதற்கு பலவிதமான சாக்குபோக்கு சொல்லி வார்த்தை ஜாலங்களில் ஈடுபடுவதை நாம் பார்க்கிறோம்.
நம்மிடமுள்ள மார்க்சிய அறிவுப் பற்றாக்குறையை பயன்படுத்தி இவர்கள் நம்மை நம்பவைத்து கழுத்தறுக்கிறார்கள்.
ஆகவே நாம் மார்க்சிய அறிவை வளர்த்து இந்த துரோகிகளை இனம்காண வேண்டும்.
4.
எல்லா சந்தர்ப்பங்களிலும் எத்தகைய சூழ்நிலையிலும் கம்யூனிஸ்டுகள் கட்சியின் அல்லது மக்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்துக்கவும் கம்யூனிஸ்டுகள் பாடுபடவேண்டும்.
5.
கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைக்கும் பெயருக்கும் புகழுக்காகவுமே கம்யூனிஸ்ட் பாடுபட வேண்டும்.
கட்சிக்கு கிடைக்கும் பெயரும் புகழும்தான் முக்கியமானதாகும். அதனையே தனக்கானதாக கருதவேண்டும்.
இதற்கு மாறாக தனக்கென்று தனியாக புகழ் வேண்டும் என்று கருதக்கூடாது.
6.
கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னேற்றத்துக்காகவே ஒரு கம்யூனிஸ்ட் பாடுபட வேண்டும்.
இதற்கு மாறாக கம்யூனிஸ்ட் கட்சியின் நலனை புறக்கணித்துவிட்டு தனது சொந்த புகழுக்காவும் நலன்களுக்காகவும் கம்யூனிஸ்ட் பாடுபடக்கூடாது.
ஆனால் இங்குள்ள கம்யூனிஸ்ட்கள் சுயநலவாதிகளாக இருப்பது வேதனையான விசயமாகும்.
7.
கட்சியின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் ஒரு கம்யூனிஸ்ட் செயல்படும்போதுதான் அவரால் கம்யூனிச அரசியல்வாதி என்ற முறையில் அவரது ஆற்றலை வளர்த்துக்கொள்ள முடியும்.
அத்தகைய ஆற்றல் கொண்டவர்களைத்தான் உழைக்கும் மக்கள் மதிப்பார்கள்.
8.
எனவே கட்சியின் நலனும் கம்யூனிஸ்டுகளின் நலனும் பிரிக்கமுடியாதபடி இருக்கவேண்டும்.
மேலும் அந்தக் கட்சியானது உழைக்கும் மக்களின் நலனுக்கான கட்சியாக இருக்க வேண்டும்.
நமது கட்சி உறுப்பினர்கள் ஏதோ சாமானிய மனிதர்கள் அல்ல.
இவர்கள் விழிப்புணர்வு பெற்ற பாட்டாளி வர்க்க முன்னணி படையின் போராளிகள்.
அவர்கள் பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்க நலன்களுக்கும் வர்க்க சித்தாந்தத்திற்கும் உணர்வுபூர்வமான பிரதிநிதிகளாக இருந்தாக வேண்டும்.
ஆகவே கட்சி மற்றும் பாட்டாளி வர்க்கத்தினுடைய நலன்களுக்கு மேலானதாக கட்சி உறுப்பினர்களின் நலன்கள் முன்னிறுத்தப்படக் கூடாது ஒவ்வொரு கட்சி ஊழியரும் தலைவரும் கட்சி மற்றும் பாட்டாளி வர்க்கத்தினுடைய பொது நலன்களின்,
பொது நோக்கங்களின் உருத்திரட்சி பெற்ற பண்புருவமாக இருந்தாக வேண்டும்; அவர்களுடைய தனிப்பட்ட நலன்களும் நோக்கங்களும் கட்சியினுடைய பொதுநலன்கள், நோக்கங்களுடன் இரண்டற முற்று முழுதாக கலக்கப்பட வேண்டும்.
சீனாவினுடைய இன்றைய நிலைமையில் தேச விடுதலைப் போராட்டத்தின் நலன்களை பாட்டாளி வர்க்கம் தான் மிகச் சிறப்பாக பிரதிநிதித்துவம் செய்கிறது;
எனவே நாடு முழுவதினுடைய நலன்களைப் பிரதிநித்துவப்படுத்தும் வீரமிக்க தகுதி வாய்ந்த பிரதிநிதிகளாக நமது கட்சி உறுப்பினர்கள் செயல்பட வேண்டும். (சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி?, லியோஷோசி, பக்கம் - 69)
விளக்கம்:- 1. கம்யூனிஸ்டுகள் சாதாரணமான மனிதர்கள் அல்ல. சாதாரணமான மனிதர்களுக்கு மேலானவர்களாக கம்யூனிஸ்டுகள் இருக்க வேண்டும்.
2. சமூகத்தைப் பற்றிய விழிப்புணர்வுடன் கூடிய பாட்டாளி வர்க்கத்தின் முன்னணி படையின் போராளிகளாக இருக்க வேண்டும்.
3. கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கும் அதன் சித்தாந்தத்திற்கும் உணர்வுப்பூர்வமான பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்.
4. பாட்டாளி வர்க்கம் மற்றும் அதன் கட்சியின் நலன்களுக்கு மேலானதாக தனது நலனை முன்நிறுத்தக்கூடாது.
5. ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சி உருப்பினரும் தலைவரும் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்காகப் பாடுபடும் பண்பாளராக இருக்க வேண்டும்.
6. கம்யூனிஸ்டுகளின் தனிப்பட்ட நோக்கங்களும் கட்சியின் பொதுவான நோக்கங்களும் ஒன்றாக கலந்திருக்க வேண்டும்.
7. அனைத்து நாடுகளிலும் பெருவாரியான உழைக்கும் மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுவதில் கம்யூனிஸ்டுகளே முன்னணியில் இருக்கிறார்கள். இத்தகைய பண்பு இல்லாதவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருக்க முடியாது. அந்தக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியாக இருக்க முடியாது.
8. நாடு முழுவதினுடைய நலன்களைப் பிரதிநித்துவப்படுத்தும் வீரமிக்க தகுதி வாய்ந்த பிரதிநிதிகளாக உள்ளவர்களையே கம்யூனிஸ்ட் கட்சி தனது உறுப்பினர்களாக ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்.
நமது கட்சி உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட நலன்களை கட்சியின் நலன்களுக்கு கீழ்ப்படுத்த வேண்டும்; அவசியமானால் கட்சியின் நலன்களுக்காக தமது நலன்களை தியாகம் செய்ய வேண்டும். ஆனால் இது எந்த விதத்திலும் கட்சி தனது உறுப்பினர்களின் தனிப்பட்ட நலன்களை அங்கீகரிக்காது அல்லது புறக்கணித்துவிடும் என்றோ, அவர்களின் தனிப்பட்ட தேவைகள் அல்லது தன்மைகளை துடைத்தெறிந்துவிட விரும்புகிறது என்றோ பொருள் படாது. கவனம் செலுத்தப்பட வேண்டிய தனிப்பட்ட சொந்த பிரச்சனைகள் கட்சி உறுப்பினர்களுக்கு இருக்கவே செய்கின்றன. மேலும் அவர்களுடைய தனிப்பட்ட மனசார்புகள், தனிப்பட்ட நாட்டங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப அவர்கள் தம்மை வளர்த்துக் கொள்ளவும் வேண்டியிருக்கிறது. ஆகவே கட்சியின் நலன்கள் என்ற வரம்பை மீறாத வரையில், கட்சி உறுப்பினர் தனிப்பட்ட சொந்த மற்றும் குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ளலாம்; தனிப்பட்ட மனச்சார்புகள் மற்றும் நாட்டங்களை முன்னேற்றிக் கொள்ளலாம்; அதே வேளையில், கட்சியின் நலன்களுக்குப் பொருத்தமாக கட்சி உறுப்பினர்களின் தனிப்பட்ட மனச்சார்புகள் மற்றும் நாட்டங்களை வளர்த்துக் கொள்ள ஒவ்வொரு சாத்தியப்பாட்டையும் கட்சி மேற்கொள்ளும்; அவர்களுக்கு பொருத்தமான வேலைகளை வழங்க வேண்டும். நிலைமைகளை உருவாக்கித்தர வேண்டும்; அவர்களுடைய தகுதிகளைப் பாராட்டவும் அவர்களின் முன்னேற்றத்தைப் பொறுத்து ஊக்கப் பரிசுகளை வழங்கவும் வேண்டும். கட்சி உறுப்பினர்களின் அவசியமான தேவைகளில் கட்சி கவனம் செலுத்துவதுடன் அவற்றைப் பாதுகாக்க எவ்வளவு சாத்தியப்படுமோ அவ்வளவு முயற்சி செய்யும். எடுத்துக்காட்டாக அவசியமான அளவு படிக்கவும் கல்வி கற்கவும் அவர்களுக்கு கட்சி வாய்ப்புகளை வழங்கும்; நல்வாழ்வு மற்றும் குடும்பப் பிரச்சினைகளை சமாளிக்க கட்சி உதவும்; மிகவும் அவசியமான நிலைமைகளில் பிற்போக்கு ஆட்சியின் கீழ் வேலை செய்யும் தோழர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக சில வேலைகளை கைவிடுவதையும் கூட கட்சி மேற்கொள்ளும். ஆனால், இவை அனைத்துமே கட்சியின் ஒட்டுமொத்த நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டவையே தவிர வேற அல்ல. உறுப்பினர்களின் வாழ்க்கை, வேலை, கல்வித் தேவைகளுக்கான நிலைமைகளை உத்தரவாதம் செய்வதே கட்சியின் கடமைகளை நிறைவேற்றுவதற்குத்தான்; கட்சி இவற்றை செய்வதே உறுப்பினர்கள் தமது கடமைகளை கவலைகள் ஏதுமின்றி உற்சாகத்துடன் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். கட்சி உறுப்பினர்களின் பிரச்சனைகளைக் கையாளும் நிலையில் உள்ள பொறுப்பாளர் தோழர்கள் இவை அனைத்தையும் தமது மனதில் கொள்ள வேண்டும். (சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? லியோஷோசி, பக்கம் - 69, 70)
விளக்கம்:- 1. கம்யூனிஸ்டுகள் தனது சொந்த நலனை கட்சியின் நனுக்கு கீழ்படுத்த வேண்டும் என்று சொல்லும்போது கம்யூனிஸ்டுக் கட்சிக்கு கட்சி உறுப்பினர்களின் நலன்களில் அக்கறை இல்லை என்று கருதக்கூடாது. கட்சியானது எப்படி பெருவாரியான உழைக்கும் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டுள்ளதோ அதே போன்றே கட்சி உறுப்பினர்களின் நலன்களிலும் அக்கறை கொண்டிருக்க வேண்டும்.
2. கட்சி உறுப்பினர்களுக்கும் சொந்த நலன்களும் விருப்பங்களும் இருக்கிறது. ஆகவே கட்சியின் நலன்களை பாதிக்காத வகையில் உறுப்பினர்கள் சொந்த நலன்களுக்காகப் பாடுபடுவதை கட்சி ஒருபோதும் தடைசெய்யக்கூடாது. மாறாக கட்சி உறுப்பினருக்கு உதவி செய்யவேண்டும்.
3. கட்சி உறுப்பினரின் வாழ்நிலையையும் கணக்கிலெடுத்துக்கொண்டு கட்சியானது உறுப்பினருக்குப் பொருத்தமான வேலைகளை கொடுக்க வேண்டும்.
4. கட்சிக்காக முழுநேரம் செயல்படும் முழுநேரத் தோழர்களின் அடிப்படையான வாழ்வியல் பிரச்சனையை கட்சிதான் தீர்க்க வேண்டும்.
5. கட்சியில் சிறப்பாகப் பணியாற்றும் தோழர்களை பாராட்டி அவர்களுக்கு உற்சாகம் ஊட்டவேண்டியது கட்சியின் கடமையாகும்.
6. கட்சி உறுப்பினர்களின் கல்வி அறிவை வளர்க்கவும், திறமையை வளர்க்கவும் கட்சி பாடுபட வேண்டும்.
7. கட்சி உறுப்பினர்களின் வாழ்வியல் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நோக்கமே அவர் கட்சியின் செயல்பாட்டில் எவ்விதமான கவலையும் இல்லாமல் உற்சாகமாக செயல்பட வேண்டும் என்ற கட்சியின் பொதுவான நோக்கத்திலிருந்தே கட்சி செய்ய வேண்டும்.
8. கட்சி உறுப்பினர்களின் மீது தன்னால் இயன்ற அளவு அக்கறை இல்லாத கட்சியால் கட்சி உறுப்பினர்களுக்கு தலைமைதாங்கி வழிநடத்த முடியாது.
எனது சொந்த அனுபவம் ஒரு கம்யூனிச அமைப்பில் முழுநேரமாக செயல்பட்ட தோழர் பல நாட்கள் பசியால் வாடி வதங்கிப் போனார். ஏனென்றால் கட்சியானது அவரது பசியைப் போக்குவதற்கு கூட பொறுப்பெடுத்துக்கொள்ளவில்லை. முழுநேர கட்சித் தோழர்கள் அவர்களால் திரட்டப்படும் மக்களிடமே நிதி உதவி பெற்று வாழவேண்டும் என்று சொல்லி அவர்களது பசியைப் போக்கவும் முன்வரவில்லை. ஆனால் கட்சித் தலைவர்களுக்கு வசதிபடைத்தவர்களின் தொடர்பு இருந்ததால் அவர்கள் மட்டும் நிதி உதவி பெற்று சுகமாக வாழ்ந்தார்கள். அந்தக் கட்சி பல பிளவுகளை சந்தித்துவிட்டது. இந்த அனுபவம் என்னை வேதனைக்குள்ளாக்கியது. ஆனால் சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி என்ற நூலை எழுதிய லியோஷோசி கட்சி உற்ப்பினர்களை பாதுகாக்க வேண்டியது கட்சியின் கடமை என்று இங்கு எடுத்துச் சொன்னவற்றை அன்று நான் புரிந்திருந்தால் நான் செயல்பட்ட அமைப்பில் முழுநேர ஊழியர்கள் பசியால் வாடியிருக்க மாட்டார்கள்.
மொத்தத்தில் ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும், தனது பங்கிற்கு கட்சியின் நலன்களுக்கு தன்னை முற்றாக கீழ்ப்படுத்திக் கொள்ள வேண்டும்; பொது கடமைகளை ஆற்றுவதற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். கட்சியின் நலன்களுடன் முரண்படுகிற தமது எல்லா சொந்த நோக்கங்களையும் தனிப்பட்ட வாய்ப்புகளையும் துறக்கத் தயாராக இருக்க வேண்டும். அவர் எல்லா நேரங்களிலும் தன்னைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. கட்சியிடம் முடிவே இல்லாமல் அடுத்தடுத்து கோரிக்கைகளை வைத்துக் கொண்டே இருக்கக் கூடாது. தனக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை அல்லது தனக்குப் பரிசுகள் தரவில்லை என்று குறை சொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது. சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், அவர் கடினப்பட்டு கல்வி பயில வேண்டும். முன்னேறுவதற்கு முயற்சித்தல் வேண்டும். போராட்டத்தில் துணிவு மிக்கவராக இருக்க வேண்டும். (சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? லியோஷோசி, பக்கம் - 70)
விளக்கம்:- 1. கம்யூனிஸ்டுகள் கட்சியின் மற்றும் உழைக்கும் மக்களின் நலன்களோடு முரண்படுகிற தனது சொந்த நலன்களை தனிப்பட்ட வாய்ப்புகளையும் துறந்துவிட வேண்டும் என்கிறார் லியோஷோசி. உதாரணமாக ஒரு கட்சி அமைப்பில் ஒருவர் தலைவராக வரவேண்டும் என்பதற்காக முயற்சி செய்வதில் தவறில்லை. ஏனென்றால் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை என்பது உழைக்கும் மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுவதற்கான தன்னலன் கருதாத பொறுப்பாகும். அத்தகைய உணர்வோடு ஒருவர் தலைமை தாங்குவதற்கு முன்வருவது பாராட்டப்பட வேண்டியதே ஆகும். ஆனால் இதற்கு மாறாக கட்சியின் தலைமை என்பது ஒரு பதவி என்றும், அதன் மூலம் தனக்கு அதிகாரம் கிடைக்கிறது என்றும் அந்த அதிகாரத்தை தன்விருப்பம்போல் பயன்படுத்தலாம் என்று கருதி பதவி ஆசையால் தலைமைப் பதவிக்கு வருவதற்கு முயற்சி செய்வது தவறாகும். அத்தகைய சுயநலவாத பதவி ஆசையை கம்யூனிஸ்டுகள் துறந்துவிட வேண்டும்.
2. இத்தகைய பதவி ஆசைகொண்டு ஒருவர் சதிச்செயல்களில் ஈடுபட்டு தனக்கென்று ஒரு கோஷ்டி கட்சி கட்சியைப் பிளவுபடுத்தி தலைமைப் பதவிக்கு வந்த தலைவர்களை நான் கண்டிருக்கிறேன். அதுபோன்ற தலைவர்கள் ஒருநாளும் கம்யூனிஸ்டுகள் ஆகமாட்டார்கள்.
3. ஒரு கம்யூனிஸ்ட் எல்லா நேரங்களிலும் தன்னைப் பற்றியே நினைத்துக்கொண்டு இருக்கக்கூடாது. அவ்வாறு தன்னைப்பற்றியே நினைத்துக்கொண்டு இருப்பவரால் உழைக்கும் மக்களைப் பற்றி சிந்திக்க முடியாது, அவர்களின் நலன்களுக்காகப் பாடுபடவும் முடியாது. இவ்வாறு தன்னைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பவர்களைத்தான் ஏகாதிபத்திய தொண்டுநிறுவனங்கள் அவர்களுக்கு பணம், மது, பெண், புகழ் ஆசை காட்டி அவர்கள் பக்கம் இழுத்து மார்க்சியத்துக்கும் மக்களுக்கும் எதிராக செயல்பட வைக்கிறார்கள். இவ்வாறு தொண்டுநிறுவனங்களோடு இணைந்தவர்கள் பலர் உண்டு. ஆகவேதான் கம்யூனிஸ்டுகள் தன்னைப்பற்றியே சிந்திக்காமல் உழைக்கும் மக்களைப் பற்றியே சிந்திக்க வேண்டும் என்றார் லியோஷோசி.
4. கட்சி உறுப்பினர் எப்போதும் கட்சியிடம் கோரிக்கை வைத்துக்கொண்டு இருக்கக்கூடாது. கட்சியின் மீதும் கட்சி உறுப்பினர்களின் மீதும் ஆதாரமில்லாமல் குற்றம் சுமத்தக்கூடாது. குற்றம் இருந்தாலும் குற்றத்தை சுட்டிக்காட்டுவதோடு குறைகளை களையும் வழிமுறையையும் சொல்ல வேண்டும். அப்போதுதான் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் தலைவர்கள் உட்பட குறைகளை களைந்து கட்சி சிறப்பாக முன்னேற முடியும்.
5. கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பொதுவான கல்வி பயிலுவதோடு கூடவே மார்க்சிய கல்வியையும் பயில வேண்டும். அதன் அடிப்படையில் தனது அறிவையும் திறனையும் வளர்த்துக்கொண்டு முன்னேற வேண்டும். அத்தகைய அறிவு திறன் மற்றும் துணிவுமிக்க போராளிகளைக் கொண்ட கட்சியால் மட்டுமே சமூகத்தை மாற்றுவதற்கான புரட்சியை நடத்த முடியும். இதற்கு மாறாக கட்சியின் தலைவர்கள் மட்டும் அறிவாளிகளாகவும் திறன் படைத்தவர்களாக இருந்தால் மட்டும் போதும் என்பது கம்யூனிஸ்ட் கட்சியாக கட்சியை வளர்ப்பதற்கு பயன்படாது. மாறாக ஒருசில நபர்களை மட்டுமே நம்பியிருக்கும் முதலாளித்துவ கட்சியாக அந்தக் கட்சி மாறிவிடும்.
தனது அரசியல் உணர்வு மட்டத்தையும் மார்க்சிய லெனினியப் புரிதலையும் உயர்த்திக்கொள்ள இடையறாது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கட்சிக்கும் புரட்சிக்கும் பங்களிக்க உறுப்பினர்களின் பிரச்சனைகளை கையாளும் நிலையில் உள்ள எல்லா கட்சி அமைப்புகளும் பொறுப்பான தோழர்களும் தமது பங்கிற்கு உறுப்பினர்கள் எவ்வாறு வேலை செய்கின்றனர், எவ்வாறு வாழ்கின்றனர் கற்கின்றனர் என்பவற்றை கவனிக்க வேண்டும்; கட்சிக்காக சிறப்பாக பணியாற்றவும் பாட்டாளி வர்க்கப் புரட்சி போராட்டங்களின் போக்கில் தம்மை வளர்த்துக் கொள்ளவும் தமது புரிதல் மட்டத்தை உயர்த்திக் கொள்ளவும் கட்சி உறுப்பினர்களுக்கு உதவ வேண்டும். குறிப்பாக உண்மையிலேயே சுயநலம் இல்லாதவர்களாகவும், மக்களுக்கு நன்றாக தொண்டாற்றுபவர்களாகவும் உள்ள தோழர்களுக்கு கூடுதலான கவனம் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு இரு தரப்பினரும் இணைந்து கவனம் செலுத்துவது மற்றும் முயற்சிகளை மேற்கொள்வதன் வாயிலாகவே கட்சியின் நலன்கள் சிறப்பாக ஈடேற்றப்படும். (சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி?, லியோஷோசி, பக்கம் - 70, 71)
விளக்கம்:- 1. கம்யூனிஸ்டுகள் அவர்களது பாட்டாளி வர்க்க அரசியல் உணர்வு மட்டத்தையும் மார்க்சிய லெனினிய தத்துவ கண்ணோட்டத்தை புரிந்துகொள்வதற்கும் இடையறாது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவரால் மக்களின் எதிரிகள் யார், மக்களின் துரோகிகள் யார் என்பதையும் தனது கடமையையும் புரிந்துகொண்டு செயல்பட முடியும்.
2. கட்சி சந்திக்கும் பிரச்சனைகளையும் கட்சி உறுப்பினர்களின் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு கட்சித் தலைவர்கள் வழிகாட்ட மார்க்சிய லெனினிய தத்துவ அறிவு மிகவும் அவசியமாகும்.
3. கட்சி உறுப்பினர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள், அவர்கள் வாழ்க்கைக்காகவும் கட்சி அரசியலுக்காகவும் என்ன வேலை செய்கிறார்கள், எவ்வாறு செய்கிறார்கள், எவ்வாறு மார்க்சிய அறிவைப் பெறுகிறார்கள் என்பதை கட்சித் தலைவர்கள் கண்காணித்து வழிகாட்ட வேண்டும்.
4. கட்சிக்காக ஒவ்வொரு உறுப்பினரும் சிறப்பாக பணியாற்றவும், வர்க்கப் போராட்டங்களில் ஈடுபட்டு கிடைக்கும் அனுபவங்களிலிருந்து பாடம்கற்றுக்கொண்டு தனது அறிவையும் திறமையையும் வளர்த்துக்கொள்வதற்கு கட்சித் தலைவர்கள் உறுப்பினர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
5. கட்சியில் செயல்படும் உறுப்பினர்களில் அதிகமாக சுயநலம் இல்லாதவர்கள் மற்றும் மக்களுக்கு தொண்டாற்றுவதில் ஆர்வமுள்ள தோழர்களின் மீது தலைவர்கள் தனிகவனம் செலுத்தி அவர்களை மேலும் வளர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
6. கட்சியில் சுயநலம் இல்லாத சிறந்த தோழர்கள் வளர்ந்து தலைமைப் பதவிக்கு தனக்குப் போட்டியாக வந்துவிடுவார்கள் என்று தலைவர்கள் கருதக்கூடாது. அப்படிக் கருதி அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி அவரை கட்சியிலிருந்து விரட்டிவிடக்கூடாது.
7. கட்சிக்குள் தவறு செய்பவர்கள் கோட்பாட்டில் தவறு செய்தால் மட்டுமே அவரை விமர்சித்து மாற்றுவதற்கு முயற்சி செய்யவேண்டும். தொடர்ந்து அவர் தவறான கோட்பாட்டை கைவிடவில்லை என்றால் மட்டுமே அதுவும் ஆதாரத்துடன் நிருபிக்கப்பட்டால் மட்டுமே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8. கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் ஆகிய இருதரப்பினரும் மார்க்சிய லெனினிய கோட்பாட்டின் அடிப்படையில் தங்களுக்கிடையிலுள்ள கருத்து வேறுபாடுகளை விமர்சனம் சுயவிமர்சனம் என்ற மார்க்சிய முறையில் சித்தாந்தப் போராட்டம் நடத்தி தீர்த்துக்கொண்டு இணைந்து செயல்படும்போது மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சி வளரும், மக்களின் செல்வாக்கைப் பெறும். தவறுகளை நாம் புரிந்துகொண்டால் நாம் பாதி வெற்றிபெற்றுவிடுவோம். தவறுகளை களைவதன் மூலம் மீதி வெற்றியும் நம்வசமாகும்……… தேன்மொழி
No comments:
Post a Comment