கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவோர் பற்றி- இலக்கு 93 இணைய இதழ்

 

தோழர்களே,

செவ்வணக்கம். இதுவரை இலக்கு இணைய இதழ்களில் நாங்கள் பேசியதையும் (எழுதியதின் அடிப்படையில்) இடதுசாரிகள், புரட்சிபேசும் பல்வேறு பிரிவினருடன் முற்போக்கு பேசும் பலரின் நிலைபாடுகளையும் முழுமையாக கவனத்தில் கொண்டே இந்த இதழ் தயாரிக்கப்படுகிறது. இவர்களின் கண்ணோட்டம் என்பது மார்க்சிய வகைப்பட்டதுதானா என்பதனை நீங்களே சரி பார்க்க மார்க்சிய கண்ணோட்டம் கொண்டு தாங்கள் வளர்ந்து தெளிவடைய கேட்டுக் கொள்கிறோம்

கம்யூனிஸ்ட் கட்சியில் சேருபவர்கள் வெவ்வேறு வர்க்கங்களிலிருந்து வந்தவர்களாகவும் வெவ்வேறு வர்க்க சிந்தனை, கருத்து மற்றும் பழக்கவழக்கங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது இயல்பானதே ஆகும். ஆகவே அவர்களை வெவ்வேறு சிந்தனைமுறையிலேயே விட்டுவிடலாமா? என்ற கேள்வி எழுகிறது. அதற்கு மார்க்சியம் கூறும் பதில் அவர்களை அப்படியே விட்டுவிடக்கூடாது என்பதுதான். ஒரு மனிதனது பண்பானது பிறப்பிலிருந்து உருவானதல்ல, மாறாக சமூக வாழ்க்கையிலிருந்து அவன் கற்றுக்கொள்வதன் மூலமே ஒருவரது பண்பில் மாற்றங்கள் ஏற்படும் என்பது அறிவியல் ஆகும். உதாரணமாக ஒருவர் இராணுவ வீரராக பணியில் சேர்ந்துவிட்டால் அங்கு அவருக்கு இராணுவப் பயிற்சி கொடுக்கப்படும். அந்தப் பயிற்சியின் மூலமே ஒரு இராணுவ வீரர் உருவாகிறார். அதைப்போலவே கம்யூனிஸ்ட் கட்சியும் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்பதால் அந்த கட்சியிலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் பாட்டாளி வர்க்கப் படைவீரராக பயிற்சி பெறவேண்டும். அத்தகைய பயிற்சியை கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அதாவது கம்யூனிஸ்ட் கட்சிப் படைவீரர்கள் ஒவ்வொருவரும் மார்க்சியம் என்ற ஆயுதத்தை ஏந்தி போராடுவதற்கான பயிற்சியைப் பெற வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் சிலர் மார்க்சியத்துக்கு எதிரான கருத்துக்களை கட்சிக்குள் கொண்டுவருகிறார்கள். இவர்களை எதிர்த்துப் போராட பாட்டாளி வர்க்க உணர்வுள்ள கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மார்க்சியம் என்ற ஆயுதத்தை எடுத்து போராடி முறியடிக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியில் சேருபவர்கள் பல்வேறு காரணங்களுக்காக கட்சியில் சேருகிறார்கள். கம்யூனிச லட்சியத்தை அடிப்படையில் புரிந்துகொண்ட சிலரும் கட்சியில் சேருகிறார்கள். விவசாயிகள் பண்ணையார்களிடமிருந்து கம்யூனிஸ்டுகள் நிலத்தை பறித்துக்கொடுப்பார்கள் என்று கட்சியில் சேருகிறார்கள், தொழிலாளர்கள் தங்களுக்கு கூலி போனஸ் போன்றவற்றை வாங்கிக் கொடுப்பார்கள் என்று கட்சியில் சேருகிறார்கள், இவ்வாறு பல்வேறுவிதமான சுயநல காரணங்களுக்காக கட்சியில் சேருகிறார்கள். இவர்கள் ஆரம்பத்தில் கட்சியின் கம்யூனிச இலட்சியத்தை புரிந்துகொள்வதில்லை. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியானது ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகள் சீனாவை ஆக்கிரமித்த பொழுது ஜப்பானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஓர் ஐக்கிய முன்னணியை கட்டி உறுதியாக போராடியபோது சீனக் கம்யூனிஸ்ட் கட்சிதான் சீன மக்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தது வரலாறு. ஆகவே ஒரு கட்சியானது தற்போது மக்களின் செல்வாக்கில்லாமல் இருந்தாலும் அந்தக் கட்சியானது மார்க்சிய வழியில் உறுதியாக நின்று பெரும்பாலான மக்களின் நலனுக்காகப் போராடும்போது அந்தக் கட்சியை மக்கள் கட்டாயம் ஆதரிப்பார்கள் அதே போலவே ஒரு கட்சியானது பெரும்பாண்மையான மக்களுக்கு எதிராக செயல்பட்டால் அந்தக் கட்சியை மக்கள் கட்டாயமாகப் புறக்கணிப்பார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே ஒருவரை கட்சி உறுப்பினராக ஆக்கும் போதே அவருக்கு கம்யூனிசத்தை போதிக்கவேண்டும். இல்லையென்றால் அவர் சோதனைக்குரியவராக இருக்கும் போது போதிக்க வேண்டும். கட்சிக்குள் செயல்படும் உறுப்பினர்களை கண்காணித்து அவர்களை அவ்வப்போது செழுமைப்படுத்த வேண்டும். அதற்கு தொடர்ந்து மார்க்சிய கல்வி இயக்கத்தை கட்சி நடத்தவேண்டும். இதன் மூலம் மட்டுமே ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை பாதுகாத்து வளர்க்க முடியும்.

ஒரு குடும்பத்திலுள்ள கணவன் மனைவிக்கு இடையில் ஒற்றுமை ஏற்படவேண்டுமானாலும் சரி, நண்பர்களுக்கு இடையிலும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியிலுள்ள கம்யூனிஸ்டுகளுக்கு இடையிலும் ஒற்றுமை ஏற்பட வேண்டுமானாலும் சரி, அவர்களுக்கு இடையில் கருத்தொற்றுமை ஏற்பட வேண்டியது மிகமிக அவசியமானதாகும். இத்தகைய கருத்தொற்றுமை இல்லை என்றால் அவர்களுக்கு (கம்யூனிஸ்டுகளுக்கு) இடையில் உண்மையான ஒற்றுமை சாத்தியமே இல்லை. ஆகவேதான் காதலர் இருவர் கருத்தொறுமித்து ஆதரவு பெற்றதே இன்பம் என்று ஒரு கவிஞன் பாடினான். ஆகவே கம்யூனிஸ்டுகளுக்கு இடையே ஒற்றுமை ஏற்பட வேண்டுமானால் கருத்தொற்றுமை மிகவும் அவசியமாகும். அதேவேளையில் அந்த கருத்தொற்றுமையானது மார்க்சிய லெனினிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். கம்யூனிஸ்டுகளுக்கு இடையில் கருத்தொற்றுமைக்கு வழிகாட்டும் தத்துவமாகவே மார்க்சியம் லெனினியம் விளங்குகிறது. இத்தகைய கருத்தொற்றுமையின் அடிப்படையில்தான் கம்யூனிஸ்டுகள் கம்யூனிஸ்ட் கட்சி என்ற நிறுவனத்தில் ஒருங்கிணைய முடியும். கம்யூனிஸ்டுகளுக்கு இடையில் வெவ்வேறு கண்ணோட்டம் இருக்குமானால் அவர்களுக்கு இடையில் உண்மையான ஒற்றுமை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இவ்வாறு கம்யூனிஸ்டுகள் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒருங்கிணைந்துவிட்டால் போதுமா? என்ற கேள்வி எழுகிறது. நிச்சயமாகப் போதாது. தத்துவமும் நடைமுறையும் ஒருங்கிணைய வேண்டும் என்று மார்க்சியம் நமக்கு வழிகாட்டுகிறது. ஆகவே கம்யூனிஸ்டுகள் ஒன்றுபடுவதற்கான சிறந்த கருத்து இருந்தால் மட்டும் போதாது. அந்த கருத்துக்கள் செயலாக்கப்பட வேண்டும். அவ்வாறு செயலாக்கப்படும் போது நடைமுறையில் கம்யூனிஸ்டுகளுக்கு முன்பு பல வழிகள் இருப்பதை காணலாம். இத்தகைய வழிகளில் கட்சி எந்த வழியைப் பின்பற்ற வேண்டும் என்று முடிவெடுத்து கம்யூனிஸ்டுகள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டியது அவசியமாகும். அதாவது கம்யூனிஸ்டுகளுக்கு இடையில் செயலொற்றுமையும் மிகமிக அவசியமாகும். இத்தகைய செயலொற்றுமைக்கு ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு வழிகாட்டுகிறது. அதாவது கம்யூனிஸ்டுகள் பல வழிகளைப் பற்றி விவாதித்து பெரும்பான்மையினர் எந்த வழியை தேர்ந்தெடுக்கிறார்களோ அந்த வழியை கட்சியிலுள்ள அனைவரும் ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக செயல்பட வேண்டும். மார்க்சிய லெனினிய தத்துவக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலான கருத்தொற்றுமை மற்றும் செயலொற்றுமை உள்ள ஒரு கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே உழைக்கும் மக்களுக்கு தலைமைதாங்கி வழிகாட்ட முடியும். ஆனாலும் கருத்தொற்றுமைக்கு மார்க்சிய லெனினிய தத்துவத்தை அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்பது மிகவும் முக்கியமாகும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. செயலொற்றுமையுக்கு ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். கம்யூனிஸ்டுகளுக்கு அமைப்புத் துறையில் மார்க்சிய லெனினிய தத்துவமும், ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடும் இரண்டு கண்களாகும். இவ்விரண்டு கண்களில் எதை புறக்கணித்தாலும் கம்யூனிஸ்ட் கட்சியானது அமைப்புத்துறையில் பலவீனப்பட்டு உடையும் அல்லது சீரழியும்.

இங்கு நமக்கான வழிகாட்டும் தத்துவ நடைமுறைதான் மார்க்சியம். நம் நாட்டின் குறிப்பான நிலைமைகேற்ப பொதுவான மார்க்சிய அடிப்படை கோட்பாடுகளின் அடிப்படையில் இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட வேண்டியுள்ளது. ஆக இங்குள்ள பல்வேறு பிரச்சினைக்கு காரணம் இந்த அரசமைப்பும் இதனை கட்டிக் காக்கும் சமூக அரசியல் பொருளாதாரமுமே காரணம் ஆகவே, இச்சமூக எதிரியான கார்ப்ரேட் நலன் காக்கும் அரசான இந்திய அரசும் அதற்கு பின்புலமான ஏகாதிபத்திய ஒட்டுண்ணிதனத்தையும் முறியடிக்க பல்வேறு வகையில் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு கிடக்கும் மக்களை ஓரணியில் திரட்டி எதிரிக்கு எதிரான போரில் ஒன்றுபட்டாலே சாதிக்க முடியும். அதற்கு மார்க்சிய லெனினியம் எனும் வெல்லப்பட முடியாத அரசியல் ஆயுதத்தை கற்பதும் அதனை கையில் ஏந்தும் பொழுதே இந்த சுரண்டல் அடக்குமுறை ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெற முடியும் தோழர்களே.

மார்க்சிய லெனினியம் என்பது சமூக எதார்த்த நிலைமைகளை புரிந்துக் கொள்ளவும் அங்குள்ள சுரண்டல் அடக்குமுறை, ஒடுக்குமுறை ஏன் எப்படி என்பதற்கான அடிப்படை கோட்பாடுகளை மார்க்சிய ஆசான்கள் வழங்கியுள்ளனர். அந்த கோட்பாட்டை நமது சூழலுகேற்ப எப்படி பொருத்தி இங்குள்ள இழிநிலைகளை ஒழிக்க போகிறோம் என்பதே இங்குள்ள கம்யூனிஸ்டுகளின் உண்மையான பணியாகும். அதற்கு இங்குள்ள ஆளும் வர்க்கமாய் உள்ள அரசியல் கட்சியுடன் சமரசமாய் போவதோ அல்லது சட்ட வழியில் தீர்வு காண்பதோ அல்ல! மாறாக சுரண்டலையும், அடக்குமுறையையும் சகித்துக் கொண்டு வாழும் மக்களை ஒருங்கிணைத்து இதற்கு காரணமான சுரண்டுவோரை தூக்கி எறிவதே கம்யூனிஸ்டுகளின் இலட்சியம் ஆகும்! அதற்கான பணிதான் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அதனை நேசிப்போரின் பணி அன்றோ தோழர்களே!

 எவ்வகையான பாட்டாளி வர்க்கக் கட்சி ரஷ்யாவில் கட்டப்பட வேண்டும்? முதலில் லெனினுக்கும் பிளெக்னோவுக்கும் இடையே கட்சியின் திட்டங்கள் பற்றிய விஷயங்களிலும், பின்பு லெனினுக்கும் மால்ட்டோவிற்கும் இடையே கட்சி விதிமுறைகள் பற்றியும் கடும் வேறுபாடுகள் தோன்றின.

கட்சியின் திட்டம் பற்றிய பிளெக்னோவின் வரைவில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை, உழைக்கும் வர்க்கத்தின் பணியும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இந்த சந்தர்ப்பவாத தவறுகளை லெனின் உறுதியாக எதிர்த்து நின்றார். அவரது வற்புறுத்தலால் முக்கியமான கருத்தான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கட்சியின் வரைவுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டதோடு புரட்சியில் தொழிலாளி வர்க்கத்தின் முன்னோடிப் பங்கும் தெளிவாக குறிப்பிடப்பட்டது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிக் கட்சித் திட்டத்தில் தெளிவாக சேர்த்தது பெர்ன்ஸ்டைனிசத்தை எதிர்ப்பதற்காகவும் தான் என்று பின்பு லெனின் குறிப்பிட்டார். தொழிலாளர் விவசாயிகளின் ஒற்றுமை உறுதிப்பட வேண்டும் என்ற அவரது கொள்கைக்கு இணங்க நில உரிமை கோரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தர வலியுறுத்தினார். நில உரிமை சம்பத்தப்பட்ட கட்சி வரைவுத் திட்டத்தின் பகுதிகள் அனைத்தும் லெனினால் முன்மொழியப்பட்டவையே. (திருத்தல்வாதம், செங் யென் -சீ, பக்கம் - 26)

விளக்கம்:- ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க கட்சி கட்டுவதற்கு முன்பு மார்க்சியவாதிகளுக்கு இடையே எவ்வகையான கட்சி கட்டப்பட வேண்டும் என்தற்கு நீண்ட விவாதங்கள் நடத்தப்பட்டது. கட்சியை கட்டியபிறகும்கூட அவ்வப்போது பாட்டாளி வர்க்க கட்சியானது அதன் புரட்சிகரமான தன்மையிலிருந்து விலகிச் சென்றுவிடாமல் இருப்பதற்கான கருத்தியல் போராட்டங்கள் அடிக்கடி நடந்த வரலாற்றை இங்குள்ள இடதுசாரிகள் புரிந்துகொள்ளவில்லை. இது ஒரு வேதனையான விசயமாகும். ரஷ்ய கட்சியின் திட்டம் பற்றிய கருத்தில் லெனினுக்கும் பிளெக்னோவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு தோன்றியது. அந்த கருத்து வேறுபாட்டை முறையாக விவாதித்து தீர்த்துக்கொள்ளப்பட்டது. அதேபோலவே கட்சி அமைப்பு விதிகளில் லெனினுக்கும் மால்ட்டோவிற்கும் கருத்து வேறுபாடுகள் வந்தது. அதனையும் முறையாக விவாதித்து ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்த்துக்கொள்ளப்பட்டது. ஆனால் இந்தியாவில் கட்சிக்குள் உருவான எந்த கருத்துவேறுபாடுகளும் விவாதித்து தீர்த்துக்கொள்ளப்படவில்லை. மாறாக கட்சி பிளவுபட்டதுதான் வரலாறாகும். அதன் விளைவாக மார்க்சிய வாதிகளிடையே போர்க்குணம் மறைந்து பாட்டாளி வர்க்க உணர்விழந்த தன்மைதான் கம்யூனிஸ்டுகளிடம் வளர்ந்துள்ளது. இந்தச் சூழலானது பாட்டாளி வர்க்க இயக்கத்தை பல ஆண்டுகள் பின்னுக்கு தள்ளியுள்ளது. இதனைப் புரிந்துகொண்ட பாட்டாளி வர்க்க உணர்வுள்ள பல மூத்த தோழர்கள் சோர்வடைந்து காணப்படுவதை காணமுடிகிறது. இதுவும் ஒரு வேதனையான விசயமே ஆகும்.

ரஷ்ய கட்சியின் திட்டம் பறறிய பிளெக்னோவின் வரைவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பறறிய குறிப்பு எதுவும் இல்லை. இதனை லெனின் கடுமையாக எதிர்த்தார். அப்படியானால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கொள்கை கம்யூனிஸ்டுளுக்கு எவ்வளவு உயிராதாரமான கொள்கை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் இந்திய இடதுசாரித் தலைவர்கள் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற மார்க்சிய கொள்கையை எப்போதும் பொருட்படுத்துவதே இல்லை. அதனை எப்போதும் பிரச்சாரம் செய்வதில்லை. உழைக்கும் மக்களுக்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் அவசியத்தை உணர்த்தி உணர்வூட்டுவதே இல்லை. பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை உருவாக்குவதற்கு உழைக்கும் மக்களை திரட்டி தயாரிப்பு பணிகளில் ஈடுபடுவதும் இல்லை. இதன் விளைவாக உழைக்கும் மக்களிடையே தங்களுக்கான பாட்டாளி வர்க்க அரசை உருவாக்கும் உணர்வே இல்லை. இந்த பிற்போக்கு முதலாளித்துவ அரசுக்கு அடிமைப்பட்டு சில சலுகைகள் பெற்றாலே போதும் என்ற அடிமைத்தனமான உணர்வுதான் உழைக்கும் மக்களிடம் வளர்ந்துள்ளது.

இது வேதனையான விசயம் இல்லையா?. ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை புறக்கணித்துவிட்டு அதற்காக உழைக்கும் மக்களின் கடமையையும் தெளிவுபடுத்த தவறியவர்களை சந்தர்ப்பவாதிகள் என்று லெனின் சாடினார். லெனினது போராட்டத்தினால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாட்டை ரஷ்ய கட்சி ஏற்றுக்கொண்டது. இந்தியாவில் இடதுசாரிக் கட்சிக்குள் நடந்த போராட்டங்களில் எம்.எல். புரட்சியாளர்களால் இந்தக் கொள்கை வலியுறுத்தப்பட்டது. அதனை தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை. ரஷ்யாவில் இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டு பெர்ன்ஸ்டைனது திருத்தல்வாதக் கொள்கையை ரஷ்ய கம்யூனிஸ்டுகள் முறியடித்தார்கள். ஆனால் இங்கு இடதுசாரிகள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை புறக்கணித்துவிட்டு பெர்ன்ஸ்டைனது திருத்தல்வாதத்தை ஏற்று செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதுவும் வேதனையான விசயமே ஆகும். ரஷ்யாவில் சமூக மாற்றததுக்கான தெளிவான கொள்கை கோட்பாடுகளை உருவாக்கி ஒரு புரட்சிகரமான கட்சியை கட்டி சாதனை படைத்தது போன்று இங்கு யாரும் செயல்படவில்லை என்பதுதான் இந்திய வரலாறாகும். ஆனாலும் லெனினைப் போன்ற தலைவர்கள் இங்கு இல்லை என்றால் லெனினை பின்பற்றும் தலைவர்கள் அடங்கிய ஒரு குழு இங்கு இருந்தால் ரஷ்யாவில் லெனினால் உருவாக்கப்பட்ட புரட்சிகரமன கம்யூனிஸ்ட் கட்சியை கட்ட முடியும். இதற்கு மாறாக லெனினை புறக்கணித்துவிட்ட பல ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு பாடுபட்டாலும் ஒரு புரட்சிகரமான கட்சியை இங்கு கட்டமுடியாது. ஆகவே நாம் புரிந்துகொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால், லெனினியம் இல்லையேல் புரட்சிகரமான கட்சி இல்லை. புரட்சிகரமான கட்சியை இங்கு உருவாக்க நமக்கு வழிகாட்டும் ஆயுதம் லெனினியமே, போல்ஷ்விசமே ஆகும்.

கட்சி அமைப்புகளைப் பற்றிய கொள்கைகளில் மார்ட்டோவும் அவரது குழுவினரும் மேலைநாட்டு சமூக ஜனநாயகக் கட்சிகளை அப்படியே முன்மாதிரியாகக் கொள்ள விரும்பினர். மாறாக லெனின் மேற்கு ஐரோப்பிய சமூக ஜனநாயகக் கட்சிகளின் அனுபவத்தை விமர்சனத்தோடு அணுக வேண்டும் என்றார். 1899 இல் அவர் குறிப்பிட்டார்:-

மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சோசலிச மற்றும் ஜனநாயக வரலாறு, ரஷ்ய புரட்சி இயக்கத்தின் வரலாறு ரஷ்ய தொழிலாளி வர்க்க இயக்க அனுபவம் போன்ற அனைத்து தகவல்களையும் ஆய்ந்தறிந்த பின்பே நமது கட்சியின் பயனுள்ள ஒரு அமைப்பையும் பயனுள்ள ஒரு செயல்தந்திரத்தையும் நாம் தெளிவாகக் கூற முடியும். இந்த ஆய்வை நாமே சுதந்திரமாகச் செய்ய வேண்டும் ஏனெனில் இதற்கு முன்மாதிரி இதுவரை எங்கும் இருந்ததில்லை.

1901 ஆம் ஆண்டு லெனின் தொடக்ககால போராட்டங்களுக்கு தலைமை தாங்கவும், திடீரென்று கிளம்பும் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்கவும் இறுதியாக தீர்மானகரமான தாக்குதல் தொடுக்கவும் சக்தி உள்ள ஒரு பலமான மையப்படுத்தப்பட்ட கட்சியை உருவாக்குவதன் அவசியம் பற்றி குறிப்பிட்டார். (திருத்தல்வாதம், செங் யென் - சீ, பக்கம் - 26, 27)

விளக்கம்:- கட்சியை கட்டுவதற்கு மார்ட்டோவும் அவரது குழுவினரும் மேலைநாட்டு சமூக ஜனநாயகக் கட்சிகளை அப்படியே முன்மாதிரியாகக் கொள்ள விரும்பினர். ஆனால் லெனின் மேலைநாட்டு கட்சிகளை விமர்சனரீதியாக ஆய்வு செய்து மதிப்பிட வேண்டும் என்றார். மேலைநாட்டு கட்சிகள் சந்தர்ப்பவாத கட்சிகளாக மாறிவிட்டதால் அதனை ரஷ்ய கம்யூனிஸ்டுகள் பின்பற்றக் கூடாது என்றார் லெனின். ஆனால் இந்தியாவில் லெனினால் உருவாக்கப்பட்ட கட்சியை முன்உதாரணமாக இங்குள்ள கம்யூனிஸ்டுகள் பின்பற்ற தவறியது ஒரு வேதனையான விசயமாகும். தற்போதுள்ள இடதுசாரிகள் பெரும்பாலும் திருத்தல்வாதி குருஷேவையே பின்பற்றுவதை நாம் பார்க்கிறோம். இடதுசாரிகளின் கட்சியானது இங்குள்ள முதலாளித்துவ கட்சிகளைப் போலவே பாராளுமன்றவாத கட்சிகளாகவே செயல்படுவதை பார்க்கிறோம். முதலாளித்துவ கட்சிகளுக்கும் இடதுசாரி கட்சிகளுக்கும் என்ன வேறுபாடு உள்ளது, சிவப்புக் கொடியைத்தவிர சிந்தியுங்கள்.

மேற்கு ஐரோப்பிய நாடுகளின் ஜனநாயகம் மற்றும் சோசலிசத்துக்கான போராட்ட வரலாறு மற்றும் ரஷ்ய புரட்சி இயக்கத்தின் வரலாற்றையும் ரஷ்ய தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வரலாற்றையும் ஆய்வுசெய்து ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சிக்கான திட்டம், போர்த்தந்திரம், செயல்தந்திரம் மற்றும் அமைப்புக் கோட்பாடுகளை உருவாக்கி அதன் அடிப்படையில் கட்சியை கட்டவேண்டும் என்றார் லெனின். லெனினது வழிகாட்டுதலை இங்குள்ள இடதுசாரிகள் பின்பற்றவே இல்லை. கட்சி ஆரம்பித்து பலகாலம் சென்றபின்பும் கட்சிக்கு திட்டம் இல்லை. திட்டமில்லாத இலக்கு இல்லாத அமைப்பாகவே இடதுசாரிகள் செயல்பட்டது வேதனையான விசயமாகும். இப்போதும் இடதுசாரித் தலைவர்கள் திட்டத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளவில்லை. பெயருக்கு ஒரு திட்டத்தை கொண்டிருக்கிறார்கள். அந்த திட்டம் விஞ்ஞானப்பூர்வமானதா? என்று சோதித்துப்பார்ப்பதற்கு எவ்விதமான முயற்சியும் எடுப்பதில்லை. எவ்விதமான அக்கறையுமின்றி பெயரளவில் கட்சி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு மாற்றாக லெனினைப் போன்ற தலைவர்கள் உருவாகி அவர்களின் தலைமையில் ஒரு புரட்சிகரமான கட்சி நடைமுறையில் செயல்படுவது மிகமிக அவசியமாகும். ஆகவே லெனினை பின்பற்றுவதில் உறுதியான புரட்சிகரமான சக்திகள் ஒன்றுபட்டு ஒரு குழு உருவாகவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

1901 ஆம் ஆண்டு லெனின் தொடக்ககால போராட்டங்களுக்கு தலைமை தாங்கவும், திடீரென்று கிளம்பும் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்கவும் இறுதியாக தீர்மானகரமான தாக்குதல் தொடுக்கவும் சக்தி உள்ள ஒரு பலமான மையப்படுத்தப்பட்ட கட்சியை உருவாக்குவதன் அவசியம் பற்றி குறிப்பிட்டார். அதன் அடிப்படையில்தான் ரஷ்யாவில் புரட்சிகரமான பாட்டாளி வர்க்கக் கட்சி கட்டப்பட்டு, ரஷ்யாவிலிருந்த தொழிலாளர்கள், விவசாயிகள் மாணவர்கள், பெண்கள் சந்தித்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டது. ஒரு புரட்சிகரமான பாட்டாளிவர்க்க கட்சியை லெனின் தலைமையில் கட்டப்படாமல் ரஷ்யாவில் யாருடைய பிரச்சனையையும் தீர்த்திருக்க முடியாது என்பது ஒரு வரலாற்றுப்பாடமாகும். இதனைப் புரிந்துகொண்டு லெனினைப் பின்பற்றி புரட்சிகரமான கட்சியை கட்டுவற்கு மறுத்துவிட்டு இங்குள்ள குறுங்குழுவாதிகள் ஏதோ இவர்களுக்கு பெரிய அளவில் பலம் உள்ளதாகக் கருதிக்கொண்டு ஒவ்வொரு பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான திட்டங்களை தாங்கள் உருவாக்கி சாதிக்கப் போவதாக வீரவசனம் பேசித்திரிகிறார்கள். இவர்களைப் பார்த்தாலே வேடிக்கையாக இருக்கிறது. சிரிப்புத்தான் வருகிறது. இவர்களால் மக்களுக்கு எவ்விதமான பயனும் இல்லை. இவர்கள் ஆளும் வர்க்க நலனிலிருந்து மக்களை பிளவுபடுத்திக்கொண்டு மக்களுக்கு துரோகம் செய்துகொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையிலேயே ஒன்றுபடத் தயாரில்லை. இவர்களுக்கு இடையே ஒற்றுமைக்கு வழிகாட்டும் ஆயுதமான மார்க்சிய லெனினியத்தின் அடிப்படையில் ஒன்றுபட முயற்சி செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம்? சிந்திக்க வேண்டும். பிழைப்புவாதிகளாக இவர்கள் மாறிவிட்டதே இதற்கு காரணம் ஆகும். ஆகவே இந்திய பாட்டாளி வர்க்கமானது லெனினைப் பின்பற்றி புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியை கட்ட வேண்டும். அதற்கான அறிவை லெனினிடமிருந்தே நாம் பெறவேண்டும். இந்த குறுங்குழுவாதிகளிடமிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் சாரம்சத்தில் சுயநலவாத பிளவுவாதிகளே. உழைக்கும் மக்களிடமுள்ள ஒற்றுமையை சீர்குழைப்பவர்களே.

கட்சியைக் கட்டும் நெறிமுறைகளில் தலைகாட்டிய கடுமையான வேறுபாடுகள், 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரஷ்ய சமூகஜனநாயக தொழிலாளர் கட்சியின் இரண்டாவது கூட்டத் தொடரில் பெரிய அளவில் வெளிப்பட்டது.

கட்சி விதிகளைப் பற்றிய முதல் பத்தியில் லெனின் குறிப்பிட்டார்:- "ரஷ்ய சமூகஜனநாயக தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் என்பவர் அதன் திட்டத்தை ஏற்றுக் கொள்பவராகவும் கட்சிக்கு நிதி உதவி அளிப்பதோடு அதன் ஏதாவது ஒரு அமைப்பில் தானும் சேர்ந்து கொண்டு பணியாற்றுபவராகவும் இருக்க வேண்டும்."

மாரட்டோவின் கொள்கையோ கட்சியின் திட்டத்தை ஏற்றுக் கொள்வதும் கட்சிக்கு நிதி உதவி செய்வதும் கட்டாயம் என்றாலும் கட்சி உறுப்பினர் கட்டாயமாக ஏதாவது கட்சி அமைப்பில் இணைந்து பணி செய்ய வேண்டும் என்பதை எதிர்த்தது. பிராந்திய அமைப்புக்கள் மைய அமைப்பின் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதை எதிர்த்து மாரட்டோவும் அவரது ஆதரவாளர்களும் பிராந்திய சுய நடவடிக்கை என்ற கருத்தை முன் வைத்தனர். மையப்படுத்தப்பட்ட உறுதியான தலைமை என்ற கருத்தை எதிர்த்தனர். அவர்கள் விரும்பியது உறுதியான வடிவமற்ற ஒத்திசைவில்லாத இறுக்கமற்ற கட்சியாகும். மார்ட்டோவியர்களை எதிர்த்து லெனின் போரிட்டார். ஒரு அமைப்புப்பெற்ற, ஒழுங்குமுறை உள்ள, மையப்படுத்தப்பட்ட ஒற்றுமையான கட்சியை உருவாக்குவதற்கு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் ஏதாவது ஒரு அமைப்பில் சேர்ந்து பணி செய்ய வேண்டும் மேலும் பிராந்திய அமைப்புகள் மைய அமைப்பிற்கு கட்டுப்படல், கீழ்மட்ட அமைப்புகள் மேல்மட்ட அமைப்புக்கு கட்டுப்படல், பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்படல் ஆகிய அமைப்பு விதிகள் உறுதியாக இருத்தலும் இன்றியமையாதது என்று வாதிட்டார். கூட்டத்தொடர், கட்சியின் மைய அமைப்புகளைத் தேர்ந்தெடுக்க முற்பட்ட பொழுது ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி போல்ஷ்விக்குகள் மென்ஷ்விககுகள் (தீவிரவாதிகள் மிதவாதிகள்) என இரண்டு குழுக்களாகப் பிரிந்தது. அரசியல் சிந்தனையில் ஒரு போக்காகவும், ஒரு அரசியல் கட்சியாகவும் 1903 லிருந்தே போல்ஷ்விசம் நிலவுகிறது என்று பின்னர் லெனின் குறிப்பிட்டார். (திருத்தல்வாதம், செங் யென் -சீ, பக்கம் - 27, 28)










No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்