எவ்வகையான பாட்டாளி வர்க்கக் கட்சி ரஷ்யாவில் கட்டப்பட
வேண்டும்? முதலில் லெனினுக்கும் பிளெக்னோவுக்கும் இடையே கட்சியின்
திட்டங்கள் பற்றிய விஷயங்களிலும், பின்பு லெனினுக்கும் மால்ட்டோவிற்கும் இடையே கட்சி
விதிமுறைகள் பற்றியும் கடும் வேறுபாடுகள் தோன்றின.
கட்சியின் திட்டம் பற்றிய பிளெக்னோவின் வரைவில்,
பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரம் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை,
உழைக்கும் வர்க்கத்தின்
பணியும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இந்த சந்தர்ப்பவாத தவறுகளை லெனின் உறுதியாக
எதிர்த்து நின்றார். அவரது வற்புறுத்தலால் முக்கியமான கருத்தான பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரம் கட்சியின் வரைவுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டதோடு புரட்சியில்
தொழிலாளி வர்க்கத்தின் முன்னோடிப் பங்கும் தெளிவாக குறிப்பிடப்பட்டது. பாட்டாளி
வர்க்க சர்வாதிகாரம் பற்றிக் கட்சித் திட்டத்தில் தெளிவாக சேர்த்தது
பெர்ன்ஸ்டைனிசத்தை எதிர்ப்பதற்காகவும் தான் என்று பின்பு லெனின் குறிப்பிட்டார்.
தொழிலாளர் விவசாயிகளின் ஒற்றுமை உறுதிப்பட வேண்டும் என்ற அவரது கொள்கைக்கு இணங்க
நில உரிமை கோரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தர வலியுறுத்தினார். நில
உரிமை சம்பத்தப்பட்ட கட்சி வரைவுத் திட்டத்தின் பகுதிகள் அனைத்தும் லெனினால்
முன்மொழியப்பட்டவையே. (திருத்தல்வாதம், செங் யென் -சீ, பக்கம் - 26)
விளக்கம்:- ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க கட்சி கட்டுவதற்கு முன்பு
மார்க்சியவாதிகளுக்கு இடையே எவ்வகையான கட்சி கட்டப்பட வேண்டும் என்தற்கு நீண்ட
விவாதங்கள் நடத்தப்பட்டது. கட்சியை கட்டியபிறகும்கூட அவ்வப்போது பாட்டாளி வர்க்க
கட்சியானது அதன் புரட்சிகரமான தன்மையிலிருந்து விலகிச் சென்றுவிடாமல் இருப்பதற்கான
கருத்தியல் போராட்டங்கள் அடிக்கடி நடந்த வரலாற்றை இங்குள்ள இடதுசாரிகள்
புரிந்துகொள்ளவில்லை. இது ஒரு வேதனையான விசயமாகும். ரஷ்ய கட்சியின் திட்டம் பற்றிய
கருத்தில் லெனினுக்கும் பிளெக்னோவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு தோன்றியது.
அந்த கருத்து வேறுபாட்டை முறையாக விவாதித்து தீர்த்துக்கொள்ளப்பட்டது. அதேபோலவே
கட்சி அமைப்பு விதிகளில் லெனினுக்கும் மால்ட்டோவிற்கும் கருத்து வேறுபாடுகள்
வந்தது. அதனையும் முறையாக விவாதித்து ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின்
அடிப்படையில் தீர்த்துக்கொள்ளப்பட்டது. ஆனால் இந்தியாவில் கட்சிக்குள் உருவான எந்த
கருத்துவேறுபாடுகளும் விவாதித்து தீர்த்துக்கொள்ளப்படவில்லை. மாறாக கட்சி
பிளவுபட்டதுதான் வரலாறாகும். அதன் விளைவாக மார்க்சிய வாதிகளிடையே போர்க்குணம்
மறைந்து பாட்டாளி வர்க்க உணர்விழந்த தன்மைதான் கம்யூனிஸ்டுகளிடம் வளர்ந்துள்ளது.
இந்தச் சூழலானது பாட்டாளி வர்க்க இயக்கத்தை பல ஆண்டுகள் பின்னுக்கு தள்ளியுள்ளது.
இதனைப் புரிந்துகொண்ட பாட்டாளி வர்க்க உணர்வுள்ள பல மூத்த தோழர்கள் சோர்வடைந்து
காணப்படுவதை காணமுடிகிறது. இதுவும் ஒரு வேதனையான விசயமே ஆகும்.
ரஷ்ய கட்சியின் திட்டம் பறறிய பிளெக்னோவின் வரைவில்
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பறறிய குறிப்பு எதுவும் இல்லை. இதனை லெனின் கடுமையாக
எதிர்த்தார். அப்படியானால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கொள்கை
கம்யூனிஸ்டுளுக்கு எவ்வளவு உயிராதாரமான கொள்கை என்பதை நாம் புரிந்துகொள்ள
வேண்டும். ஆனால் இந்திய இடதுசாரித் தலைவர்கள் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற
மார்க்சிய கொள்கையை எப்போதும் பொருட்படுத்துவதே இல்லை. அதனை எப்போதும் பிரச்சாரம்
செய்வதில்லை. உழைக்கும் மக்களுக்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் அவசியத்தை
உணர்த்தி உணர்வூட்டுவதே இல்லை. பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை உருவாக்குவதற்கு
உழைக்கும் மக்களை திரட்டி தயாரிப்பு பணிகளில் ஈடுபடுவதும் இல்லை. இதன் விளைவாக
உழைக்கும் மக்களிடையே தங்களுக்கான பாட்டாளி வர்க்க அரசை உருவாக்கும் உணர்வே இல்லை.
இந்த பிற்போக்கு முதலாளித்துவ அரசுக்கு அடிமைப்பட்டு சில சலுகைகள் பெற்றாலே போதும்
என்ற அடிமைத்தனமான உணர்வுதான் உழைக்கும் மக்களிடம் வளர்ந்துள்ளது.
இது வேதனையான விசயம் இல்லையா?.
ரஷ்யாவில் பாட்டாளி
வர்க்க சர்வாதிகாரத்தை புறக்கணித்துவிட்டு அதற்காக உழைக்கும் மக்களின் கடமையையும்
தெளிவுபடுத்த தவறியவர்களை சந்தர்ப்பவாதிகள் என்று லெனின் சாடினார். லெனினது
போராட்டத்தினால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாட்டை ரஷ்ய கட்சி
ஏற்றுக்கொண்டது. இந்தியாவில் இடதுசாரிக் கட்சிக்குள் நடந்த போராட்டங்களில்
எம்.எல். புரட்சியாளர்களால் இந்தக் கொள்கை வலியுறுத்தப்பட்டது. அதனை தலைமை
ஏற்றுக்கொள்ளவில்லை. ரஷ்யாவில் இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டு பெர்ன்ஸ்டைனது
திருத்தல்வாதக் கொள்கையை ரஷ்ய கம்யூனிஸ்டுகள் முறியடித்தார்கள். ஆனால் இங்கு
இடதுசாரிகள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை புறக்கணித்துவிட்டு பெர்ன்ஸ்டைனது
திருத்தல்வாதத்தை ஏற்று செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதுவும் வேதனையான
விசயமே ஆகும். ரஷ்யாவில் சமூக மாற்றததுக்கான தெளிவான கொள்கை கோட்பாடுகளை உருவாக்கி
ஒரு புரட்சிகரமான கட்சியை கட்டி சாதனை படைத்தது போன்று இங்கு யாரும் செயல்படவில்லை
என்பதுதான் இந்திய வரலாறாகும். ஆனாலும் லெனினைப் போன்ற தலைவர்கள் இங்கு இல்லை
என்றால் லெனினை பின்பற்றும் தலைவர்கள் அடங்கிய ஒரு குழு இங்கு
இருந்தால் ரஷ்யாவில் லெனினால் உருவாக்கப்பட்ட புரட்சிகரமன கம்யூனிஸ்ட் கட்சியை
கட்ட முடியும். இதற்கு மாறாக லெனினை புறக்கணித்துவிட்ட பல ஆயிரக்கணக்கானோர் ஒன்று
திரண்டு பாடுபட்டாலும் ஒரு புரட்சிகரமான கட்சியை இங்கு கட்டமுடியாது. ஆகவே நாம்
புரிந்துகொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால், லெனினியம் இல்லையேல் புரட்சிகரமான கட்சி இல்லை.
புரட்சிகரமான கட்சியை இங்கு உருவாக்க நமக்கு வழிகாட்டும் ஆயுதம் லெனினியமே,
போல்ஷ்விசமே ஆகும்.
கட்சி அமைப்புகளைப் பற்றிய கொள்கைகளில் மார்ட்டோவும் அவரது
குழுவினரும் மேலைநாட்டு சமூக ஜனநாயகக் கட்சிகளை அப்படியே முன்மாதிரியாகக் கொள்ள
விரும்பினர். மாறாக லெனின் மேற்கு ஐரோப்பிய சமூக ஜனநாயகக் கட்சிகளின் அனுபவத்தை
விமர்சனத்தோடு அணுக வேண்டும் என்றார். 1899 இல் அவர் குறிப்பிட்டார்:-
மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சோசலிச மற்றும் ஜனநாயக வரலாறு,
ரஷ்ய புரட்சி
இயக்கத்தின் வரலாறு ரஷ்ய தொழிலாளி வர்க்க இயக்க அனுபவம் போன்ற அனைத்து
தகவல்களையும் ஆய்ந்தறிந்த பின்பே நமது கட்சியின் பயனுள்ள ஒரு அமைப்பையும் பயனுள்ள
ஒரு செயல்தந்திரத்தையும் நாம் தெளிவாகக் கூற முடியும். இந்த ஆய்வை நாமே
சுதந்திரமாகச் செய்ய வேண்டும் ஏனெனில் இதற்கு முன்மாதிரி இதுவரை எங்கும்
இருந்ததில்லை.
1901 ஆம் ஆண்டு லெனின் தொடக்ககால போராட்டங்களுக்கு தலைமை
தாங்கவும், திடீரென்று கிளம்பும் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்கவும்
இறுதியாக தீர்மானகரமான தாக்குதல் தொடுக்கவும் சக்தி உள்ள ஒரு பலமான
மையப்படுத்தப்பட்ட கட்சியை உருவாக்குவதன் அவசியம் பற்றி குறிப்பிட்டார்.
(திருத்தல்வாதம்,
செங் யென் - சீ,
பக்கம் - 26,
27)
விளக்கம்:- கட்சியை கட்டுவதற்கு மார்ட்டோவும் அவரது குழுவினரும்
மேலைநாட்டு சமூக ஜனநாயகக் கட்சிகளை அப்படியே முன்மாதிரியாகக் கொள்ள விரும்பினர்.
ஆனால் லெனின் மேலைநாட்டு கட்சிகளை விமர்சனரீதியாக ஆய்வு செய்து மதிப்பிட வேண்டும்
என்றார். மேலைநாட்டு கட்சிகள் சந்தர்ப்பவாத கட்சிகளாக மாறிவிட்டதால் அதனை ரஷ்ய
கம்யூனிஸ்டுகள் பின்பற்றக் கூடாது என்றார் லெனின். ஆனால் இந்தியாவில் லெனினால்
உருவாக்கப்பட்ட கட்சியை முன்உதாரணமாக இங்குள்ள கம்யூனிஸ்டுகள் பின்பற்ற தவறியது
ஒரு வேதனையான விசயமாகும். தற்போதுள்ள இடதுசாரிகள் பெரும்பாலும் திருத்தல்வாதி
குருஷேவையே பின்பற்றுவதை நாம் பார்க்கிறோம். இடதுசாரிகளின் கட்சியானது இங்குள்ள
முதலாளித்துவ கட்சிகளைப் போலவே பாராளுமன்றவாத கட்சிகளாகவே செயல்படுவதை
பார்க்கிறோம். முதலாளித்துவ கட்சிகளுக்கும் இடதுசாரி கட்சிகளுக்கும் என்ன வேறுபாடு
உள்ளது, சிவப்புக் கொடியைத்தவிர சிந்தியுங்கள்.
மேற்கு ஐரோப்பிய நாடுகளின் ஜனநாயகம் மற்றும்
சோசலிசத்துக்கான போராட்ட வரலாறு மற்றும் ரஷ்ய புரட்சி இயக்கத்தின் வரலாற்றையும்
ரஷ்ய தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வரலாற்றையும் ஆய்வுசெய்து ரஷ்ய கம்யூனிஸ்டு
கட்சிக்கான திட்டம், போர்த்தந்திரம், செயல்தந்திரம் மற்றும் அமைப்புக் கோட்பாடுகளை உருவாக்கி
அதன் அடிப்படையில் கட்சியை கட்டவேண்டும் என்றார் லெனின். லெனினது வழிகாட்டுதலை
இங்குள்ள இடதுசாரிகள் பின்பற்றவே இல்லை. கட்சி ஆரம்பித்து பலகாலம் சென்றபின்பும்
கட்சிக்கு திட்டம் இல்லை. திட்டமில்லாத இலக்கு இல்லாத அமைப்பாகவே இடதுசாரிகள்
செயல்பட்டது வேதனையான விசயமாகும். இப்போதும் இடதுசாரித் தலைவர்கள் திட்டத்தின்
முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளவில்லை. பெயருக்கு ஒரு திட்டத்தை
கொண்டிருக்கிறார்கள். அந்த திட்டம் விஞ்ஞானப்பூர்வமானதா?
என்று
சோதித்துப்பார்ப்பதற்கு எவ்விதமான முயற்சியும் எடுப்பதில்லை. எவ்விதமான
அக்கறையுமின்றி பெயரளவில் கட்சி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு
மாற்றாக லெனினைப் போன்ற தலைவர்கள் உருவாகி அவர்களின் தலைமையில் ஒரு புரட்சிகரமான
கட்சி நடைமுறையில் செயல்படுவது மிகமிக அவசியமாகும். ஆகவே லெனினை பின்பற்றுவதில்
உறுதியான புரட்சிகரமான சக்திகள் ஒன்றுபட்டு ஒரு குழு உருவாகவேண்டியது காலத்தின்
கட்டாயமாகும்.
1901 ஆம் ஆண்டு லெனின் தொடக்ககால போராட்டங்களுக்கு தலைமை
தாங்கவும், திடீரென்று கிளம்பும் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்கவும்
இறுதியாக தீர்மானகரமான தாக்குதல் தொடுக்கவும் சக்தி உள்ள ஒரு பலமான
மையப்படுத்தப்பட்ட கட்சியை உருவாக்குவதன் அவசியம் பற்றி குறிப்பிட்டார். அதன்
அடிப்படையில்தான் ரஷ்யாவில் புரட்சிகரமான பாட்டாளி வர்க்கக் கட்சி கட்டப்பட்டு,
ரஷ்யாவிலிருந்த
தொழிலாளர்கள், விவசாயிகள் மாணவர்கள், பெண்கள் சந்தித்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டது. ஒரு
புரட்சிகரமான பாட்டாளிவர்க்க கட்சியை லெனின் தலைமையில் கட்டப்படாமல் ரஷ்யாவில்
யாருடைய பிரச்சனையையும் தீர்த்திருக்க முடியாது என்பது ஒரு வரலாற்றுப்பாடமாகும்.
இதனைப் புரிந்துகொண்டு லெனினைப் பின்பற்றி புரட்சிகரமான கட்சியை கட்டுவற்கு
மறுத்துவிட்டு இங்குள்ள குறுங்குழுவாதிகள் ஏதோ இவர்களுக்கு பெரிய அளவில் பலம்
உள்ளதாகக் கருதிக்கொண்டு ஒவ்வொரு பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான திட்டங்களை
தாங்கள் உருவாக்கி சாதிக்கப் போவதாக வீரவசனம் பேசித்திரிகிறார்கள். இவர்களைப்
பார்த்தாலே வேடிக்கையாக இருக்கிறது. சிரிப்புத்தான் வருகிறது. இவர்களால்
மக்களுக்கு எவ்விதமான பயனும் இல்லை. இவர்கள் ஆளும் வர்க்க நலனிலிருந்து மக்களை
பிளவுபடுத்திக்கொண்டு மக்களுக்கு துரோகம் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
இவர்களுக்கு இடையிலேயே ஒன்றுபடத் தயாரில்லை. இவர்களுக்கு இடையே ஒற்றுமைக்கு
வழிகாட்டும் ஆயுதமான மார்க்சிய லெனினியத்தின் அடிப்படையில் ஒன்றுபட முயற்சி
செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம்? சிந்திக்க வேண்டும். பிழைப்புவாதிகளாக இவர்கள் மாறிவிட்டதே
இதற்கு காரணம் ஆகும். ஆகவே இந்திய பாட்டாளி வர்க்கமானது லெனினைப் பின்பற்றி
புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியை கட்ட வேண்டும். அதற்கான அறிவை லெனினிடமிருந்தே
நாம் பெறவேண்டும். இந்த குறுங்குழுவாதிகளிடமிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ள
முடியாது. இவர்கள் சாரம்சத்தில் சுயநலவாத பிளவுவாதிகளே. உழைக்கும் மக்களிடமுள்ள
ஒற்றுமையை சீர்குழைப்பவர்களே.
கட்சியைக் கட்டும் நெறிமுறைகளில் தலைகாட்டிய கடுமையான
வேறுபாடுகள், 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரஷ்ய சமூகஜனநாயக தொழிலாளர் கட்சியின்
இரண்டாவது கூட்டத் தொடரில் பெரிய அளவில் வெளிப்பட்டது.
கட்சி விதிகளைப் பற்றிய முதல் பத்தியில் லெனின்
குறிப்பிட்டார்:- "ரஷ்ய சமூகஜனநாயக தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் என்பவர்
அதன் திட்டத்தை ஏற்றுக் கொள்பவராகவும் கட்சிக்கு நிதி உதவி அளிப்பதோடு அதன் ஏதாவது
ஒரு அமைப்பில் தானும் சேர்ந்து கொண்டு பணியாற்றுபவராகவும் இருக்க வேண்டும்."
மாரட்டோவின் கொள்கையோ கட்சியின் திட்டத்தை ஏற்றுக்
கொள்வதும் கட்சிக்கு நிதி உதவி செய்வதும் கட்டாயம் என்றாலும் கட்சி உறுப்பினர்
கட்டாயமாக ஏதாவது கட்சி அமைப்பில் இணைந்து பணி செய்ய வேண்டும் என்பதை எதிர்த்தது.
பிராந்திய அமைப்புக்கள் மைய அமைப்பின் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதை
எதிர்த்து மாரட்டோவும் அவரது ஆதரவாளர்களும் பிராந்திய சுய நடவடிக்கை என்ற கருத்தை
முன் வைத்தனர். மையப்படுத்தப்பட்ட உறுதியான தலைமை என்ற கருத்தை எதிர்த்தனர்.
அவர்கள் விரும்பியது உறுதியான வடிவமற்ற ஒத்திசைவில்லாத இறுக்கமற்ற கட்சியாகும். மார்ட்டோவியர்களை
எதிர்த்து லெனின் போரிட்டார். ஒரு அமைப்புப்பெற்ற,
ஒழுங்குமுறை உள்ள,
மையப்படுத்தப்பட்ட
ஒற்றுமையான கட்சியை உருவாக்குவதற்கு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின்
ஏதாவது ஒரு அமைப்பில் சேர்ந்து பணி செய்ய வேண்டும் மேலும் பிராந்திய அமைப்புகள்
மைய அமைப்பிற்கு கட்டுப்படல், கீழ்மட்ட அமைப்புகள் மேல்மட்ட அமைப்புக்கு கட்டுப்படல்,
பெரும்பான்மைக்கு
சிறுபான்மை கட்டுப்படல் ஆகிய அமைப்பு விதிகள் உறுதியாக இருத்தலும் இன்றியமையாதது
என்று வாதிட்டார். கூட்டத்தொடர், கட்சியின் மைய அமைப்புகளைத் தேர்ந்தெடுக்க முற்பட்ட பொழுது
ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி போல்ஷ்விக்குகள் மென்ஷ்விககுகள் (தீவிரவாதிகள்
மிதவாதிகள்) என இரண்டு குழுக்களாகப் பிரிந்தது. அரசியல் சிந்தனையில் ஒரு
போக்காகவும், ஒரு அரசியல் கட்சியாகவும் 1903
லிருந்தே போல்ஷ்விசம்
நிலவுகிறது என்று பின்னர் லெனின் குறிப்பிட்டார். (திருத்தல்வாதம்,
செங் யென் -சீ,
பக்கம் - 27,
28)
விளக்கம்:-ரஷ்யாவில் தொழிலாளர் கட்சியை கட்டுவதற்கு
ஆரம்பித்தவுடனே கட்சிக்குள் கடுமையான வேறுபாடுகள் வெளிப்பட்டது. ரஷ்ய கட்சியின்
இரண்டாவது கூட்டத் தொடரிலேயே முரண்பாடுகள் வெளிப்பட்டது. கட்சியின் திட்டத்தை
ஏற்றுக்கொள்வதில் பிரச்சனைகள் எழவில்லை. ஆனால் கட்சியின் அமைப்பு விதிகளைப் பற்றி
கருத்து வேறுபாடுகள் எழுந்தன. கட்சியில் ஒருவர் உறுப்பினராக சேர்ந்து செயல்பட
வேண்டுமானால் அவர் கட்சியின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்,
கட்சிக்கு நிதி உதவி
செய்ய வேண்டும், முதன்மையாக அவர் கட்சி அமைப்பில் தானும் சேர்ந்துகொண்டு
பணியாற்றுபவராக இருக்க வேண்டும் என்றார் லெனின். அதாவது கட்சி உறுப்பினர் கட்சி
அமைப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்பதே லெனினது நிலைபாடாகும். இதோடு ஒவ்வொரு கட்சி
உறுப்பினரும் மார்க்சிய லெனினிய தத்துவ அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும்
ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் கம்யூனிசப் பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும்
கட்சி உறுப்பினர்களுக்கான தகுதியாக தற்காலத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே
வரலாற்று அனுபவமாக உள்ளது.
ஆனால் மாரட்டோவ் கட்சி உறுப்பினர் கட்சியின் திட்டத்தை
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் கட்சிக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்பதையும்
ஏற்றுக்கொண்டாலும் கட்சி உறுப்பினர் ஏதாவது ஒரு கட்சி அமைப்பில் சேர்ந்து செயல்பட
வேண்டும் என்பதையும், பிராந்திய அமைப்புகள் மைய அமைப்பின் முடிவுகளுக்கு
கட்டுப்பட வேண்டும் என்ற லெனினது அமைப்பு விதிகளை எதிர்த்தனர். இதன் மூலம்
மாரட்டோவ் அணிகள் ஒரு கட்டுப்பாடுள்ள கட்சியின் அவசியத்தை எதிர்த்தனர். ஜனநாயக
மத்தியத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் மத்தியத்துவப் படுத்தப்பட்ட ஒன்றுபட்ட
உறுப்பினர்களைக் கொண்ட பலமான கட்சி அமைப்பிற்கு எதிராகவே மாரட்டோவ் அணியின்
கருத்து இருந்தது. ஒரு அமைப்புப்பெற்ற, ஒழுங்குமுறை உள்ள, மையப்படுத்தப்பட்ட ஒற்றுமையான கட்சியை உருவாக்குவதற்கு
கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் ஏதாவது ஒரு அமைப்பில் சேர்ந்து பணி செய்ய
வேண்டும் மேலும் பிராந்திய அமைப்புகள் மைய அமைப்பிற்கு கட்டுப்படல்,
கீழ்மட்ட அமைப்புகள்
மேல்மட்ட அமைப்புக்கு கட்டுப்படல், பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்படல் ஆகிய அமைப்பு
விதிகள் உறுதியாக இருத்தலும் இன்றியமையாதது என்று லெனின் வாதிட்டார். லெனினது இந்த
அமைப்பு விதிகளை எதிர்த்தவர்கள்தான் பிற்காலத்தில் கட்சியின் சோசலிசத் திட்டத்தையே
புறக்கணித்துவிட்டு மக்களின் எதிரிகளாகவே மாறினார்கள்.
ஆகவே கம்யூனிஸ்டுகளாகிய நாம் ஒவ்வொருவரும் கட்சி மற்றும்
மக்களின் நலனுக்கான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்
என்பதை ரஷ்ய போல்ஷ்விக் கட்சியின் அனுபவம் காட்டுகிறது. இந்த நிபந்தனைகளை
ஏற்றுக்கொள்ளாதவர்கள் நிச்சயமாக மக்களின் நலனுக்கான கொள்கையில் உறுதியாக இருக்க
மாட்டார்கள் என்பதே பொதுவுடமை இயக்க வரலாற்றுப் பாடமாகும்.
கட்சி விதிகளைப் பற்றிய விவாதங்களில் பிளெக்கனோவ் லெனினை
ஆதரித்தார். கூட்டத் தொடருக்குப் பின் மென்ஷ்விக்குகள்,
கூட்டத் தொடரின்
முடிவுகளை குலைப்பதற்கு முழுமூச்சாக முயன்றனர். போல்ஷ்விக்குகளை எதிர்க்கும்
நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மென்ஷ்விக்குகளோடு சமாதானம் செய்து கொள்ள வேண்டும்
என்று கூறி வந்த பிளெக்கனோவ் பின்பு தானும் ஒரு மென்ஷ்விக் ஆகிவிட்டார். அவரது
உதவியால் இஸ்காரா பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவைக் கைப்பற்றிய மென்ஷ்விக்குகள்,
லெனினையும்,
போல்ஷ்விக்குகளையும்
எதிர்க்கும் சாதனமாக அதை மாற்றியமைத்தனர். புதிய இஸ்காராவின் பக்கங்களில்
மென்ஷ்விக் ஆதரவுப் பிரச்சாரம் தொடர்ச்சியாகப் பேரளவில் நடைபெற்றது. சுதந்திரமான
குழுக்களைக் கட்டுப்பாடின்றி அனுமதிக்க வேண்டும் கட்சி அமைப்புகளின் முடிவுகளுக்கு
கட்டுப்பட வேண்டிய அவசியமில்லாத தனி மனிதர்களையும் கட்சியில் அனுமதிக்க வேண்டும்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் கட்சி ஆதரவு தெரிவிக்கும். ஒவ்வொரு
அறிவுஜீவிக்கும் தன்னை கட்சி உறுப்பினராக அறிவித்துக் கொள்ளும் உரிமை வேண்டும்
என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. லெனின் அதிகாரவர்க்கப் போக்கு மற்றும் வறட்டுத்
தத்துவவாதப் போக்கு உள்ளவர் என்றும் கட்சிக்குள் அடிமைத்தனத்தை உருவாக்க
முயல்கிறார் என்றும் குற்றம் சாட்டினர். பாட்டாளி வர்க்கப் புரட்சிகரக் கட்சியின்
அமைப்பு விதிகளுக்கு ஆதரவாக லெனின் எழுதிய "ஓரடி முன்னால் ஈரடி பின்னால்"
கட்டுரையில்
மென்ஷ்விக்குகள் மற்றும் இரண்டாம் அகிலத்தினர் அமைப்பு விதிகளில் கடைபிடித்த
சந்தர்ப்பவாதப் போக்கை விமர்சனம் செய்தார். (திருத்தல்வாதம்,
செங் யென் -சீ,
பக்கம் - 28)
விளக்கம்:- ரஷ்ய தொழிலாளர்கள் கட்சியின் அமைப்பு விதிகள்
பற்றிய லெனினது நிலைபாட்டை பிளெக்கனோவ் ஆதரித்தார். எனினும் மென்ஷ்விக்குகளோடு
சமாதானம் செய்துகொள்ள வேண்டும் என்றே பிளெக்கனோவ் கூறினார். ஆனால் அத்தகைய
சமாதானம் ஏற்படாத காரணத்தால் பிளெக்கனோவ் மென்ஷ்விக்காகவே கடைசியில் மாறிவிட்டார்
என்பது வரலாறு. ஆகவே மார்க்சியவாதிகள் மார்க்சியத்தை எதிர்ப்பவர்களின்
கருத்துக்களோடு சமரசம் செய்துகொள்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் புரிந்துகொள்ள
வேண்டும். மார்க்சியத்துக்கு எதிரான கருத்துக்களோடு நாம் சமரசம் செய்துகொண்டால் நாம்
காலப்போக்கில் மார்க்சியத்தின் எதிரிகளாகவே மாறிவிடுவோம். இந்திய கம்யூனிஸ்ட்
கட்சிகளின் வரலாற்றைப் பரிசீலித்தால் நாம் இதனை புரிந்துகொள்ளலாம். லெனின்
மார்க்சியத்துக்கு எதிரானவர்களை எதிர்த்து உறுதியாகப் போராடினார். ஆகவே
மார்க்சியத்துக்கு எதிரானவர்கள் அனைவரும் லெனின் அதிகாரவர்க்கப் போக்காளர் என்றும்
வறட்டுவாதி என்றும் கட்சி உறுப்பினர்கள் எல்லாம் அவருக்கு அடிமைகளாக இருக்க
வேண்டும் என்றும் லெனின் விரும்புகிறார் என்றும் லெனின் மீது பொய்யாக குற்றம்
சாட்டினார்கள். இப்போதும் இங்கே மார்க்சியத்தை உயர்த்திப்பிடிப்பவர்கள் மீது
மார்க்சியவாதிகள் போல் நடித்துக்கொண்டு மார்க்சியத்துக்கு எதிரான சதித்தனமான
வேலைகளில் ஈடுபடுபவர்கள் ஆத்திரங்கொண்டு தாக்குதல்கள் நடத்துவதை நாம் பார்க்கலாம்.
ஆகவே மார்க்சியவாதிகள் எந்தளவுக்கு உறுதியாக நின்று போராடுகிறார்களோ அந்தளவுக்கு
மார்க்சிய வேடம் போடுகின்ற துரோகிகளை வீழ்த்த முடியும். மார்க்சிய வேடம்போடும்
துரோகிகளை எந்தளவுக்கு வீழ்த்துகிறோமோ அந்தளவுக்கு மார்க்சியர்கள் வளர்ந்து
பலமடைந்து பலமான புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியை இங்கு கட்ட முடியும். இங்குள்ள
இடதுசாரிகள் மிகச் சிறந்த ரஷ்ய தொழிலாளர் கட்சிக்குள்ளேயே மென்ஷ்விக்குகள் போன்ற
மார்க்சிய எதிர்ப்பாளர்கள் இருந்துள்ளதையும் அவர்கள் கட்சிப் பத்திரிக்கையான
இஸ்கரா பத்திரிக்கையை கைப்பற்றி மார்க்சியத்துக்கு எதிராகவும், லெனினுக்கு எதிராகவும் பிரச்சாரம்
செய்தார்கள் என்ற உண்மையை புரிந்துகொண்டு கட்சிக்குள் மார்க்சியத்தை பாதுகாக்க
லெனினைப் போல் போராட வேண்டும் என்ற உணர்வில்லாமல் மென்ஷ்விக்குகள் போல்
செயல்பட்டதன் விளைவுதான் இந்திய இடதுசாரிகள் மென்ஷ்விக்குகள் போல் மாறி மக்களின்
நம்பிக்கை இழந்து சில எம்எல்ஏ, எம்பி சீட்டுக்காக திமுக
அதிமுக போன்ற முதலாளித்துவ கட்சிகளிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள். இது ஒரு
வேதனையான விசயமல்லவா?.
அமைப்பு விஷயங்களில் சந்தர்ப்பவாதமானது, பாட்டாளி வர்க்க கட்சியின்பால் தனிநபர்
அறிவு ஜீவிகளின் பொறுப்புகளை குறைக்க முயற்சிக்கின்றது. மைய நிறுவனங்களில்
செல்வாக்கை குறைக்க முயல்கின்றது கட்சியிலே உறுதியற்ற சக்திகளின் சுதந்திரத்தை
கூட்ட முயல்கின்றது. அமைப்புகளின் உறவை உதட்டளவிலான, பெயரளவிலான
உறவாக குறைக்க முயல்கின்றது என்று லெனின் குறிப்பிட்டார். இத்தகைய சந்தர்ப்பவாதப்
போக்கு ஐரோப்பிய சமூக ஜனநாயக கட்சிகள் எங்கும் வெளிப்பட்டு அவற்றின் அமைப்புகள்
உடைந்து விழக் காரணமாய் இருந்தது என்று மேலும் கூறினார். சந்தர்ப்பவாதத்திற்கும்
கட்சியின் புரட்சிகரப் பிரிவினருக்கும் நடந்த போராட்டம் ஓய்ந்திருக்க விரும்பும்
போக்கிற்கும் கட்சி அமைப்புகளையும் ஒழுங்கு விதிகளையும் உறுதிப்படுத்தும்
போக்கிற்கும் இடையே எழுந்த சிக்கலை பிரநிதித்துவப்படுத்தியது. ஊசலாட்டத்
தன்மையுள்ள அறிவு ஜீவியின் சிந்தனைக்கும் உறுதியான பாட்டாளிக்கும் இடையே நிலவும்
முரணாக அறிவு ஜீவுகளின் தனிநபர் வாதத்திற்கும் பாட்டாளி வர்க்க ஒற்றுமைக்கும்
இடையே உள்ள வேறுபாடாகப் பிரதிபலித்தது அமைப்பு ரீதியாக பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரத்திற்காகவும் சோசலிசப் புரட்சிக்காகவும் பாட்டாளி வர்க்கம் நடத்தும்
போராட்டத்தில்; அமைப்பின் பணியை குறைப்பதில்தான்
மென்ஷ்விக்குகளின் சந்தர்ப்பவாதம் அடங்கியுள்ளது. இந்த அமைப்பு ரீதியான
சந்தர்ப்பவாதம், அவர்களது சந்தர்ப்பவாத அரசியலுக்கு மிகவும்
உதவியது. (திருத்தல்வாதம், செங் யென் -சீ, பக்கம் - 29)
விளக்கம்:- ஒரு பாட்டாளி வர்க்க அமைப்பில் சந்தர்ப்பவாதம்
ஆதிக்கம் செய்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை லெனின் விளக்கியுள்ளார்.
அதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
1. கட்சிக்குள் செயல்படும் அறிவுஜீவிகளின் பொறுப்புகளை
குறைக்கவும் கைவிடவும் செய்யும். கட்சியிலுள்ள அறிவுஜீவிகள் பெறுப்பற்றவர்களாக
மாறுவார்கள்.
2. மைய தலைமை நிறுவனங்களின் செல்வாக்கு குறையும் அதாவது
மத்தியத்துவத்துக்கு கட்டுப்படாத தான்தோன்றித்தனமான செயல்பாடுகளுக்கு
வழிவகுக்கும்.
3. கட்சிக்குள் உள்ள உறுதியவற்றவர்களுக்கும் முழுமையான
சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்று சொல்லி கட்சியானது உறுதியற்ற நபர்களின்
செல்வாக்குக்குள் செல்வதற்கு வழிவகுக்கும்.
4. கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலுள்ள உணர்வுப்பூர்வமான உறவை
அழித்துவிட்டு அவர்களுக்கு இடையில் உதட்டளவிலான உறவாக மாறுவதற்கு வாய்ப்பை
ஏற்படுத்துகின்றது.
5. இத்தகைய சந்தர்ப்பவாதப் போக்கின் செல்வாக்கால்தான்
ஐரோப்பாவிலுள்ள சமூக ஜனநாயக் கட்சிகள் உடைந்து சீரழிந்தது என்றார் லெனின். இத்தகைய
சந்தர்ப்பவாதத்தின் காரணமாகவே இந்தியாவிலும் இடதுசாரிகள் உடைந்து சீரழிந்தார்கள்.
6. கட்சிக்குள் புரட்சிகரப் போக்குக்கும் சந்தர்ப்பவாதப்
போக்குக்கும் இடையில் எப்போதும் போராட்டங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான்
கட்சியானது வளரும்
7. கட்சிக்குள் சந்தர்ப்பவாதப் போக்குகளும் கருத்துக்களும்
செல்வாக்கு அதிகம் பெற்றுவிட்டால் அங்கு சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான போராட்டம்
நடக்கவில்லை என்றால் கட்சியானது வளராது அது அழிவை நோக்கியே பயணிக்கும்.
8. பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காகவும் சோசலிசத்துக்காகவும்
நடத்தப்பட்ட போராட்டத்தில் ரஷ்ய மென்ஷ்விக்குகள் கட்சி அமைப்பின் புரட்சிகரமான
பணியை குறைக்கவே முயற்சி செய்தார்கள் என்றார் லெனின்.
9. இந்திய இடதுசாரி அமைப்புகளிலுள்ள சந்தர்ப்பவாதத் தலைவர்கள்
இடதுசாரி அமைப்புகளின் புரட்சிகரத் தனைமையை மழுங்கடித்து இந்திய பாட்டாளி
வர்க்கத்துக்கு வழிகாட்டும் புரட்சிகரமான முன்னணிப் படையை செயல் இழக்கச்
செய்துவிட்டனர். ஆகவே சந்தர்ப்பவாதம் என்றால் என்ன?
அதனை எதிர்த்து நாம்
எப்படி போராட வேண்டும் என்று கற்றுக்கொண்டு செயல்பட வேண்டியது ஒவ்வொரு
கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.
லெனின் இந்தப் படைப்பில்,
பாட்டாளி வர்க்கத்தின்
போர்க்குணமுள்ள, மையப்படுத்தப்பட்ட, ஒழுங்குமுறை உள்ள, புரட்சிகர கட்சியைக் கட்டியமைக்க தேவையான இன்றியமையாத
அடிப்படை அமைப்பு விதிகளை விவரித்திருந்தார். கட்சி விதியை விரிவாகக்
கூறியிருந்தார். கட்சி என்பது பாட்டாளி வர்க்கத்தின் முன்னோடிப் படை பிரிவாகும்.
உழைக்கும் வர்க்கத்தின் போராட்டத்தை உபயோகமாக வழிநடத்த வேண்டும் என்றால்,
கட்சியானது மார்க்சிய
தத்துவம், சமூக வளர்ச்சி விதிகளைப் பற்றிய அறிவு மற்றும் வர்க்கப்
போராட்ட விதிகள் பற்றிய அறிவு ஆகிய ஆயுதங்களை கொண்டிருக்க வேண்டும். ஒரு
ஒழுங்கமைக்கப்பட்ட படைப் பிரிவு என்ற வகையில் பாட்டாளி வர்க்கத்தின் அனைத்து
அமைப்புகளிலும் உயர்ந்தது கட்சியே ஆகும். உழைக்கும் வர்க்கத்தின் மற்ற அனைத்து
அமைப்புகளையும் அதுதான் வழிநடத்த வேண்டும். அதனால்தான் முடியும். மக்கள் திரளோடு
அதற்கு மிக நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். அதன் அமைப்பு ஒன்றை உருவமுள்ளதாக,
மனஒற்றுமை,
செயல்ஒற்றுமை,
ஒழுங்கு ஒற்றுமை
உள்ளதாக மையத்துவ கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும்.
அவ்வாறான ஒரு கட்சியின் மூலம் பாட்டாளி ஒரு வெல்ல முடியாத சக்தியாகிவிடுவான். போராட்டத்தில்
ஈடுபடவும், தன் லட்சியத்தை அடையவும் வலிமை பெற்றுவிடுவான் என்று லெனின்
கூறினார். (திருத்தல்வாதம், செங் யென் - சீ, பக்கம் 29, 30)
No comments:
Post a Comment