இந்தியாவில் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான மூலதனமே உருவாகவில்லையா? தெய்வ சுந்தரம் நயினார் அவர்களின் முகநூல் பகுதியை அப்படியே இங்கே பகிர்ந்துள்ளேன்.
செய்யறிவுத் திறன் (AI) வளர்ச்சி . . . வேலையில்லாத் திண்டாட்டம் . . . உலக அளவிலான அரசியல் பொருளாதார நெருக்கடி . . . இறுதி விளைவு ? சோசலிசமே! ( சமூக சிந்தனை உள்ள இளைஞர்களுக்கான ஒரு பதிவு!) - பதிவு (1)
-------------------------------------------------------------------------
'திருப்பரங்குன்றம் தீபம்' 'அரசியல் தலைவர்கள் கட்சித் தாவல்' 'கூட்டணி அரசியல் பரபரப்பு' 'யார் யாரைச் சந்தித்தார்கள்' போன்ற உண்மையில் மக்களுக்கு எந்தவகையிலும் பயன்படாத . . . மக்களின் கவனத்தைத் திசைதிருப்புகிற . . . . திட்டமிட்ட 'அரசியலற்ற விவாதங்களைத் தாண்டி' இன்றைய இளைஞர்கள் சிந்திக்கவேண்டும் என்பதற்காக இதை எழுதியுள்ளேன்!
ஆற்றில் இருக்கும் மணலுக்கு எந்தவித விலையும் கிடையாது ! ஆனால் அதில் நமக்குப் பயன்படும் சக்தி உள்ளது ('பயன்மதிப்பு - Use Value') ! அந்த மணலை நமது இடத்திற்குக் கொண்டுவந்துசேர்க்க உழைப்பாளிக்குக் காசு கொடுக்கிறோம். அந்தக் காசு அந்த மணலுக்கு இல்லை! அதை நமது இடத்திற்குக் கொண்டுவந்துசேர்க்க உழைப்பாளி செலவழித்த உழைப்புச் சக்திக்குத்தான் அந்தக் காசு! அதுதான் மணலின் விலை ('மதிப்பு' Value அல்லது 'பரிமாற்ற மதிப்பு'Exchange Value) !
ஒரு மரச்சாமானுக்கு விலை உண்டு! ஆனால் அந்த விலை அந்த மரத்திற்கு இல்லை ! அந்த மரத்தை வளர்க்கவும் பின்னர் வெட்டவும் , பின்னர் அதை நமக்குத் தேவையான சாமானாக மாற்றி அமைக்கவும் உழைப்பாளி செலவழித்த உழைப்புச் சக்திக்குத்தான் விலை! வெறும் மணலுக்கும் வெறும் மரத்திற்கும் விலை இல்லை! அவற்றிற்குப் 'பயன் மதிப்பு' உண்டு! அவ்வளவுதான்! 'மதிப்பை' உருவாக்குவது நமது உழைப்புசக்திதான்!
தொழிற்சாலைகளில் முதலாளிகள் பணம் செலவழித்து வாங்கிவைக்கிற இயந்திரங்களும் மூலப்பொருள்களும் தாமாகப் புதிய மதிப்பை (Value) உருவாக்காது. அவற்றைப் பயன்படுத்தி, உருவாக்கப்படுகிற பொருள்களுக்குத்தான் விலை! அதாவது, உழைப்பாளிகள் செலவழித்த உழைப்புச் சக்திக்குத்தான் (Labour-power) விலை! உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களில் அடங்கியுள்ள உழைப்பாளியின் உழைப்புச்சக்திக்குத்தான் விலை! உழைப்பாளிகள் தமது உழைப்புச் சக்தியைச் செலவழிக்கவில்லை என்றால் . . . புதிய மதிப்பு (Value) உருவாகாது! அதுபோன்று, உருவாக்கப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படும்போதுதான், அவற்றில் மறைந்திருக்கும் 'மதிப்பு' அல்லது விலை முதலாளியின் கைகளுக்கு வரும்! அதில் ஒரு பகுதியை உழைப்பாளிகளுக்கு ஊதியமாக ('கூலி' Wage) கொடுத்துவிட்டு, முதலாளி ஒரு பெரும்பகுதியைத் ('உபரி மதிப்பு' - Surplus Value ) தனக்கு எடுத்துக்கொள்கிறான்!
இங்குக் கவனமாகப் பார்க்கவேண்டியது . . . தொழிற்சாலைகளில் தொழிலாளிகள் தங்களுடைய உழைப்புச் சக்தியைக் கொண்டுதான் , முதலாளி வாங்கிவைத்த மூலப்பொருள்களுக்கு புதிய 'மதிப்பை' சேர்க்கிறார்கள். அவர்கள் உழைப்பில்தான் மதிப்பு உருவாகுகிறது!
அடுத்து, உருவாக்கப்பட்ட புதிய மதிப்பு பணமாக முதலாளிகளின் கைகளுக்கு வரவேண்டுமென்றால் . . . தொழிலாளிகளுக்குக் கூலியும் தனக்கு லாபமும் எடுக்கவேண்டுமென்றால் . . . உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் விற்கப்படவேண்டும்! யார் அவற்றை வாங்குபவர்கள்? உழைக்கின்ற தொழிலாளிகள்தான்! அவர்களால் எப்படி வாங்கமுடிகிறது? முதலாளி கொடுக்கின்ற ஊதியத்தைக்கொண்டுதான் வாங்கமுடியும்! அவர்கள் கைகளுக்கு ஊதியம் . . . பணம் வரவில்லையென்றால் . . . அவர்களால் பொருள்களை வாங்கமுடியாது! முதலாளிக்கு நெருக்கடி! மக்களுக்கு - தொழிலாளிகளுக்கு - வாங்கும் சக்தி இல்லையென்றால் . . . பொருள் உற்பத்தி தடைபடும்!
இது மக்களுடைய நுகர்பொருள் (Consumer goods) உற்பத்திக்கு மட்டும் உள்ள நெருக்கடி இல்லை! நுகர்பொருள் உற்பத்தியின் பாதிப்பால் , அவற்றிற்குத் தேவையான கனரக இயந்திரங்களின் (Heavy industry production) உற்பத்தியும் தடைபடும்! மொத்தத்தில் முதலாளிகள் நெருக்கடிக்கு உட்படுவார்கள்!
எனவே, செய்யறிவுத் திறன் வளர்ச்சியால் . . . உழைப்பாளிகளுக்கு வேலை இல்லை என்றால் . . . உழைப்பாளிகளுக்குப் பதிலாக 'பொருள் மதிப்பை' இயந்திரங்களே உருவாக்குவதாகக் வைத்துக்கொண்டால் . . . உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை யார் வாங்குவது? வேலை இல்லாத உழைப்பாளிகளால் எப்படி வாங்கமுடியும்?
விளைவு . . . உற்பத்தி தடைபடும் (Stagnation production) ! பொருளாதார நெருக்கடி (Economic Crisis) தோன்றி நிலவும்!
எனவே . . . உழைப்பாளிகளே இல்லாமல் . . . வெறும் செய்யறிவுத்திறன்கொண்ட இயந்திரங்களே (AI-based Industrial Production) பொருள் உற்பத்தியில் ஈடுபடுவது என்பது . . . உழைப்பாளிகள் இல்லாமலேயே பொருள் உற்பத்தி தொடரும் என்பது வெறும் கற்பனை( Illusion) ! குறைந்த அளவு உழைப்பாளிகளைக் கொண்டு முதலாளி ''லாபம்'' பார்க்க முயல்வார் என்று கொண்டாலும் . . . அதன் விளைவாக, பெருமளவு உழைப்பாளிகள் வேலை இல்லாமல் ஆவார்கள்! அதன் விளைவு . . . ஒட்டுமொத்தத்தில் சமுதாயத்தின் வாங்கும் சக்தி மிகவும் குறைந்துவிடும்! இதனால் உறுதியாக உற்பத்தி தடைபடும்! தேக்கநிலை ஏற்படும்! அரசியல் பொருளாதார நெருக்கடி வரும்! இதை முதலாளிகள் விரும்பமாட்டார்கள்! பலவகைகளில் தற்காலிக நிவாரணம் தேடுவார்கள்!
மேலும் தனிப்பட்ட முதலாளி தனது லாபத்தை மட்டுமே பார்ப்பார். எனவே மக்களுக்கு ஒரு பொருள் எவ்வளவு தேவை என்பதை உணர்ந்து எல்லாம் உற்பத்தி செய்யமாட்டார் (Unplanned Production) ! இவ்வாறு முதலாளிகள் அனைவரும் தங்கள் தங்கள் லாபத்தையே கருதி, உற்பத்தியில் ஈடுபட்டால் . . . விளைவு . . . பொருள் தேவைக்கும் பொருள் உற்பத்திக்கும் (Supply and Demand) இடையில் ஒரு பெரிய மோதல் ஏற்படும்! மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியே தோன்றும்! திட்டமிட்ட பொருள் உற்பத்தி (Planned production) தேவை! இது உறுதியாக ஒரு சோசலிச சமுதாயத்தை நோக்கியே இட்டுச் செல்லும்! இது தனிநபர் விருப்பம் இல்லை! மாறாக, ஒரு புறவயமான வளர்ச்சி விதி!
எனவே, ரசியாவிலும் சீனாவிலும் சோசலிசம் தோற்றுவிட்டது, இனி அதற்கு இடமே கிடையாது என்று கற்பனை செய்யவேண்டாம்! இறுதி மாற்றம் சோசலிசமே! அது இன்றே அல்லது நாளைக்கே ஏற்பட்டுவிடும் என்று நினைத்துவிடவேண்டாம்! குழந்தைப் பிறப்புக்குப் பத்து மாதம் தேவை போன்று . . . சோசலிசத்திற்கும் ஒரு குறிப்பிட்ட காலம் . . . சூழல் தேவைப்படும்! குழந்தைப் பிறப்பின்போது தாய்க்கு ஏற்படும் பிரசவ வேதனைபோன்று . . . சோசலிச சமுதாயம் பிறப்பதற்கும் , இன்றைய சமுதாயத்திற்கு 'ஒரு வலி' ஏற்படத்தான் செய்யும்! இது தவிர்க்க இயலாதது! சில சமயம் . . . எதிர்பாராத 'கருச்சிதைவும் ' ஏற்படலாம்! ஆனாலும் இறுதியில் . . . சோசலிசக் குழந்தை பிறக்கும்! இது சமூக வரலாற்றுப் புறவய விதி! இதை யாராலும் மாற்றி அமைக்கமுடியாது!
முதலாளி ஆகவேண்டுமென்றால் 'மூலதனம்' தேவை இல்லையா? அடுத்து, ஒருவர் தமக்கு வேண்டிய எல்லாவற்றையும் தாமே உற்பத்தி செய்துகொள்ளமுடியுமா? பண்டைய சமுதாயத்தில் உழைப்புப் பிரிவினை தோன்றி வளராத ஒரு நிலை இருந்தது. ஆனால் சமுதாயம் மாற மாற , தேவைகள் பெருக பெருக, உற்பத்தி வளர வளர, முற்காலத்தில் நீடித்த தன்னிறைவுப் பொருளாதாரம் மாறித்தானே இன்றைய தொழில் உற்பத்திப் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. இது மீண்டும் எப்படி முற்காலத்திய 'தன்னிறைவுப் பொருளாதாரமாக' மாறமுடியும்? எதிர்காலத்தில் இன்று இருக்கிற உழைப்புப்பிரிவினையைவிட மேலும் பல நுட்பமான உழைப்புப்பிரிவினைதான் ஏற்படும்.
அன்று ஒரு பொருளை 'நான்தான் உருவாக்கினேன்' என்று கூறமுடியும். இது நான் செய்த பானை என்று கூறமுடியும். ஆனால் இன்று நான் கட்டியிருக்கிற கைக்கடிகாரத்திலேயே ஆயிரக்கணக்காணவர்களின் உழைப்பு அடங்கியுள்ளது. இவ்வாறு உற்பத்தி என்பது சமூகமயமாக்கப்பட்டிருந்தாலும், அதன் பயன் அல்லது பெரும் லாபம் தனிமனிதனுக்குச் சென்று சேர்கிறது. இது ஒரு பெரிய முரண்பாடு. இந்நிலை மேலும் சமூகம் முன்னேறுவதற்குத் தடையாக அமையும். அவ்வாறு இல்லாமல் நுகர்வும் சமூகமயமாவதுதான் சோசலிசம் என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சி அந்நிய நாடுகளின் மூலதனத்தைச் சார்ந்துதான் இருக்கவேண்டுமா? தன்னிறைவுப் பொருளாதார வளர்ச்சிக்கு வழி இல்லையா? எதற்காக இந்திய மக்கள் 'விடுதலைப் போராட்டத்தை' நடத்தினார்கள்?(சமூக சிந்தனை உள்ள இளைஞர்களுக்கான பதிவு 2)
--------------------------------------------------------------------------
ஒரு நாட்டின் உற்பத்தி வளர்ச்சிக்கு . . . தொழில் வளர்ச்சிக்கு அடிப்படை 'மூலதனம்'! அது விவசாயம் ஆகட்டும், ஆலை உற்பத்தி ஆகட்டும் தேவை 'மூலதனம்'! இந்த மூலதனத்தைக்கொண்டுதான் ஒரு நாடு தன்னுடைய வளர்ச்சியைப் பெறமுடியும்! அந்நியர்களைச் சார்ந்திராமல் . . . சுயமாக விவசாய உற்பத்தியையும் ஆலை உற்பத்தியையும் வளர்க்கமுடியும்! இந்த ''மூலதனத்தைத்'' தங்கள் உழைப்புமூலம் உருவாக்குபவர்கள் அந்த நாட்டு மக்களே!
இது நடைபெறாமல் . . . அந்நியர்கள் இங்குவந்து . . . தங்கள் ''மூலதனத்தைக்'' கொண்டு . . . மக்களின் உழைப்புச் சக்தியைப் பயன்படுத்தி, தங்கள் ''மூலதனத்தைப்'' பெருக்கிக்கொண்டால், அந்த நாடு என்னவாகும்? ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு . . . சுயமான வளர்ச்சிக்கு . . . அடிப்படை உள்நாட்டு மூலதனமே!
16 ஆவது நூற்றாண்டுக்குப்பிறகு மிகப் பெரிய முதலாளித்துவ நாடுகளாக மாறிய நாடுகளுக்கு எங்கிருந்து ''மூலதனம்'' வந்தது? வானத்தில் இருந்து விழுந்ததா? இல்லை . . . அந்த நாடுகளின் விவசாய உற்பத்தியில் இருந்துதான் வந்தது! ஒரு நாட்டின் விவசாய உற்பத்தியில் . . . அந்த நாட்டின் மக்களின் ''நுகர்வுக்குப்'' போக . . . மீந்து நிற்பதுதான் 'மூலதனம்'! அதாவது உற்பத்தியிலிருந்து நுகர்வைக் கழித்தால் 'மீதி' - உபரி - இருக்கவேண்டும்! உற்பத்தி வரவிலிருந்து மக்களின் நுகர்வைக் - செலவைக் - கழித்தால், 'உபரி' இருக்கவேண்டும்! அந்த 'உபரியை' மீண்டும் விவசாய உற்பத்தியில் இடும்போது, மீண்டும் 'மூலதனம்' வளர்ச்சி அடையும்! இந்த ''மூலதனத்தின்'' ஒரு பகுதி விவசாயத்தை நவீனப்படுத்தும் இயந்திர வளர்ச்சிக்கு செலவிடப்படும்! இதன் பயனாக, விவசாய உற்பத்தி மேலும் பெருகும்! 'மூலதனம்' வளர்ச்சி அடையும்!
வளர்ச்சியடைகிற ''மூலதனம்'' தொழில் உற்பத்தியையும் வளர்க்கும்! விவசாய உற்பத்தி , மக்களின் நுகர்பொருள் உற்பத்தி, கனரக இயந்திரங்கள் உற்பத்தி என்று அனைத்து முனைகளிலும் தொழில் உற்பத்தி வளர்ச்சி அடையும்!
ஆனால் இங்கு நடந்தது என்ன? மக்கள் உழைக்காமல் இருந்தார்களா? விவசாய உற்பத்தி நடைபெறவில்லையா? ''மூலதனம்'' உருவாகவில்லையா? உருவாகியது! ஆனால் , அது பலவகைகளில் நம் நாட்டை ஆண்ட ஆங்கிலேய முதலாளித்துவத்தால் கொள்ளையடிக்கப்பட்டது! அதன் நோக்கமே இந்தியாவின் இயற்கை வளங்களையும், அத்தோடு இந்திய உழைப்பாளிகள் தங்கள் உழைப்பில் உருவாக்கிய மதிப்பையும் சுரண்டுவதுதானே!
இந்திய மண்ணில் உருவாகிய இந்த 'மூலதனம்' அந்நிய நாடுகளின் வளர்ச்சிக்காகக் கொள்ளயடிக்கப்பட்டது! இந்திய விவசாயத்தை நவீனப்படுத்தவோ அல்லது இந்தியாவின் தொழில் உற்பத்தியை உயர்ந்த கட்டத்திற்கு இட்டுச் செல்லவோ அந்நியர்கள் அனுமதிக்கவில்லை! ஒரு கட்டத்தில் மேலும் மேலும் இந்திய உழைப்பாளிகளின் உழைப்புச் சக்தியைச் சுரண்ட அந்நியர்கள் அவர்கள் நாட்டிலிருந்து 'மூலதனத்தை' இங்கு இறக்குமதி செய்தார்கள்! இங்குள்ள உழைப்பாளிகளின் உழைப்புசக்தியால் அந்த 'மூலதனத்தை' பெருக்கிக்கொண்டார்கள்! அவர்கள் பன்னாட்டு அளவில் வளர்ந்துள்ளார்கள்! நாம் கையேந்தி நிற்கிறோம்!
இதை எதிர்த்துத்தானே அன்று இந்திய மக்கள் போராடினார்கள்? அந்தப் போராட்டத்தின் 'வெற்றி' என்ன பயனை இப்போது இங்குக் கொடுத்துள்ளது? இந்திய ''மூலதனம்'' பெருகியுள்ளதா? விவசாயம் நவீனப்படுத்தப்பட்டிருக்கிறதா? ''அந்நிய மூலதனத்தையும்'' அந்நியத் தொழில்நுட்பத்தையைம் சார்ந்து இருக்காமல் . . . இந்தியா இன்று வளர்ச்சி அடைந்துள்ளதா? இல்லை! அன்று இருந்த நிலையைவிட இன்று நிலைமை மிகவும் மோசம்! அன்று அந்நியர்கள் தங்கள் 'அரசியல்' 'ராணுவ பலத்தால்' இந்தியாவைக் ''கொள்ளை'' அடித்தார்கள்! இன்று நாமே நமது கதவுகளைத் திறந்துவைத்து, அவர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து, அவர்களைச் சார்ந்து உற்பத்தியை மேற்கொண்டுவருகிறோம்! அவர்கள் தாங்களாக இங்கு வரவேண்டாம் ! நாமே அவர்கள் நாட்டுக்குச் சென்று, 'வாருங்கள், வாருங்கள்' என்று கூவிக் கூவி அழைக்கிறோம்!
ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று நாம் கேட்டால் . . . இங்கு 'மூலதனம்' இல்லை' ! நவீன இயந்திரங்கள், தொழில்நுட்பங்கள் இல்லை! மக்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை! எனவேதான் 'அழைத்துவருகிறோம்' என்று கூறுகிறார்கள்! அப்படியென்றால் 1947-க்குமுன்னால் இந்திய மக்கள் போராடியே இருக்க- வேண்டாமே!
போராடி, 'விடுதலை' பெற்ற இந்தியா , ஏன் கடந்த 75 ஆண்டுகளில் நமது நாட்டுக்குத் தேவையான ' மூலதனத்தை' உருவாக்கமுடியவில்லை? விவசாய உற்பத்தியை அடுத்த உயர்கட்டத்திற்கு ஏன் இட்டுச் செல்லமுடியவில்லை? விதைகளுக்கும் உரங்களுக்கும் ஏன் அவர்களை நாடி நிற்கிறோம்? காலையில் பல் தேய்க்கிற பற்பசை, பிரஷ்க்கும்கூட , குளிக்கும் சோப்புக்குக்கூட, அந்நிய நிறுவனங்களின் பொருள்களைச் சார்ந்துநிற்கிறோம்? வேலை வாய்ப்புக்கு உள்நாட்டிலும் மட்டுமல்ல, அவர்கள் நாடுகளுக்கும் சென்று அவர்களுக்காக உழைக்கிறோம்? மிக மிகச் சாதாரணமான நுகர்பொருள் வாங்குவதற்குக்கூட பன்னாட்டு நிறுவன 'அமேசான்' ஐச் சார்ந்துநிற்கிறோம்?
இங்கு உற்பத்தி வளர்ச்சிக்குத் தேவையான 'மூலதனம் ' இல்லை! உழைப்பதற்குக் கரங்கள் இருக்கின்றன! ஆனால் அவற்றிற்கு வேலை கொடுக்க 'மூலதனம்' இல்லை! 1947-க்கும்முன்னால் நமது தலைவர்கள் விடை கூறினார்கள் - 'அந்நியர்கள் ஆட்சி இங்கே' என்று! இன்று நம் ஆட்சிதானே! ஏன் நம்மால் முடியவில்லை!
இதுபற்றிச் சிந்திக்கவேண்டிய நமது இளைஞர்களை மடைமாற்றி விடும் 'அரசியல்தான்' இங்கு நடைபெறுகிறது! 40 உயிர்களை அநாவசியமாகப் போகவைக்கிறது! ஏதோ இன்னும் சில மாதங்களில் 'அல்லாவூதின் அற்புத விளக்கு' இங்கு வந்துவிடப்போகிறது என்பதுபோல 'அரசியல் நாடகங்கள்' அரங்கேறிக்கொண்டிருக்கின்றன!
நம் நாட்டிலேயே எவ்வாறு நமக்குத் தேவையான 'மூலதனத்தை' உருவாக்கியிருக்கமுடியும்? இன்றைய இளைஞர்களின் வேலையில்லாத்திண்டாட்டத்தைப் போக்கத் தொழில் வளர்ச்சியைப் பெற்றிருக்கமுடியும்? போன்ற வினாக்களுக்கு விடை காணலாம்!
இந்தியாவில் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான மூலதனமே உருவாகவில்லையா? (சமூக உணர்வுள்ள இளஞர்களுக்கான பதிவு 3)
"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? " - (நன்றி . . . பாடல் உதவி - தோழர் சண்முகம் இராமசாமி)
--------------------------------------------------------------------------
கடந்த 500 ஆண்டுகளில் இந்தியாவில் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான 'மூலதனமே' உருவாகவில்லையா? இந்திய விவசாயிகள் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டு 'மதிப்பை' உருவாக்கவில்லையா? விவசாயத்திற்குத் தேவையான உபகரணங்களையும், மக்களுக்கு உணவுப்பொருள்கள்தவிர பிற தேவையானவற்றையும் உற்பத்தி செய்யும் கைவினைஞர்கள் உழைத்து ' மதிப்பை' உருவாக்கவில்லையா? உற்பத்திப் பொருள்களை மக்களுக்குக்கொண்டுசென்று 'வணிக லாபத்தை' இங்குள்ள வணிகர்கள் பெறவில்லையா?
மேற்கூறிய எல்லாத் துறைகளிலும் இந்திய மக்கள் உழைக்கத்தான் செய்தார்கள்! 'மதிப்பை' உருவாக்கத்தான் செய்தார்கள்! ஆனால் ஏன் அந்த 'மதிப்பு' இந்தியாவின் தன்னிறைவுத் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான 'மூலதனமாக' மாறவில்லை? இங்கிலாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற உருவாக்கப்பட்ட 'மதிப்புதானே' அந்த நாடுகளின் தொழில்வளர்ச்சிக்குத் தேவையான 'மூலதனத்தை' உருவாக்கிக் கொடுத்தது? அது ஏன் இந்தியாவில் நடைபெறவில்லை? என் இன்றும்கூட அந்நிய மூலதனங்களே இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்குத் தேவை என்ற ஒரு அவலமான நிலை?
உண்மையில் இந்திய மக்கள் இங்குள்ள அனைத்து உற்பத்தித் துறைகளிலும் - விவசாயம், சிறு தொழில்கள் ஆகியவற்றிலும் - 'மதிப்பை' உருவாக்கினார்கள் என்பதில் ஐயமே இல்லை! அந்த 'மதிப்பு' இந்தியாவின் 'தொழில் மூலனதமாக' மாறியிருக்கவேண்டும்! மேலைநாடுகள் பெற்றுள்ள வளர்ச்சியை இந்தியாவும் பெற்றிருக்கவேண்டும்! அவ்வாறு வளர்ச்சி அடையாததற்கு என்ன காரணம் என்பது பள்ளி மாணவர்களுக்குக்கூட தெரியும்! இங்கிலாந்து அரசின் சுரண்டலே காரணம் என்று தெரியும்! வணிகர்களாக வந்தவர்கள், பின்னர் ஆட்சியாளர்களாக மாறி, அவர்களின் முதலாளித்து வர்க்கம் இந்திய 'மதிப்பை' சுரண்டினார்கள்! இங்கு நமது மக்கள் தங்கள் உழைப்பில் உருவாக்கிய 'மதிப்பு' இங்கிலாந்து முதலாளித்துவ வர்க்கத்தால் ' அபகரிக்கப்பட்டது' அல்லது' கொள்ளை அடிக்கப்பட்டது'!
இதை எதிர்த்துத்தானே இந்திய மக்கள் 'விடுதலைப் போரை' மேற்கொண்டார்கள்? அதன்பிறகு . . . 75 ஆண்டுகள் ஆகியும் மாற்றம் ஏறபடவில்லையா? இல்லை என்பதுதான் உண்மை! 1947-இல் இங்கிலாந்தின் மூலதனம் சுமார் 300 கோடியாக இந்தியாவில் இருந்தது! ஆனால் அது இன்று பன்மடங்கு அதிகரித்துள்ளது!
அதுமட்டுமல்ல . . . அன்று இங்கிலாந்தின் மூலதனமே பெரும்பான்மையாக (சுமார் 250 கோடி) இந்தியாவில் நீடித்தது. இன்றோ . . . A to Z அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் இந்தியாவில் தங்களது ' மூலதனத்தை' - 'நிதிமூலதனத்தை' இறக்குமதி செய்துள்ளன.
அதன் விளைவு . . . இன்றும் இந்திய மக்கள் தங்கள் உழைப்புசக்தியால் உருவாக்குகின்ற 'மதிப்பு' நமது நாட்டின் தொழில் வளர்ச்சிக்கான 'மூலதனமாக' மாறுவதில்லை! மாறாக, பன்னாட்டுக் கம்பெனிகள் உலகின் அனைத்து வளர்ச்சியடையாத காலனிநாடுகளைக் கொள்ளையடிக்கும் தொழிலுக்கு ' மூலதனமாகச் ' சென்றுகொண்டிருக்கிறது! இதுதான் உண்மை! அப்பட்டமான சுரண்டல்!
வேளாண்மைக்குத் தேவையான விதை, உரங்களிலிருந்து . . . தேவையான டிராக்டர் போன்ற எந்திரங்களிலிருந்து . . . அவற்றை உருவாக்குகிற 'கனரக எந்திரங்களிலிருந்து' . . . மக்களது அன்றாட நுகர்பொருள்கள் ( பற்பசை, சவரம் செய்யும் பிளேடு, சோப்பு, மாவரைக்கும் மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சிப்பெட்டி, கைபேசி . . . காலணி . . . அடுக்கிக்கொண்டே போகலாம் . . . பீடியைத் தவிர!) வரை . . . அந்நிய மூலதனத்தையும், எந்திரங்களையும், தொழில்நுட்பத்தையும் கொண்டுதான் நம்மால் பெறமுடிகிறது இன்று! கல்வியும்கூட இந்த அந்நியக் கம்பெனிகளின் தேவைகளுக்காகவே நீடிக்கிறது!
அப்படியென்றால், அன்று . . . 1947-க்கும்முன்னால் இந்திய மக்கள் உருவாக்கிய 'மதிப்பை' தங்கள் 'மூலதனமாக' மாற்றிக் கொழுத்த அந்நிய நாடுகளே, இன்றும் . . . இந்திய மக்கள் உருவாக்குகிற . . . தங்கள் உற்பத்தியிலும் உழைப்பிலும் உருவாக்குகிற 'மதிப்பைக்' கொள்ளையடித்து, உலக அளவில் தங்கள் பொருளாதார ஆதிக்கத்தையும், அதற்குத் தேவையான அரசியல் அதிகாரத்தை (நேரடியாகவும், மறைமுகமாகவும் ) தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன! நமது நாட்டிற்குத் தேவையான ராணுவத் தளவாடங்களும் கூட அந்நிய நாடுகளின் உற்பத்திதான்! அல்லது அவர்கள் தொழில்நுட்பத்தைக் கொண்டு - அவரற்றின் 'மூலதன' உதவியோடு உருவாக்கப்படுபவைதான்! அன்றாட நுகர்பொருள்கள் விற்பனையில்கூட அவர்கள்தான்! கணினிசார்ந்த அத்தனை தொழில்களிலும் - வன்பொருள், மென்பொருள் இரண்டிலும் - அந்நிய நாடுகள்தான்!
பிறகு எப்படி இந்தியாவின் தன்னிறைவுத் தொழில் வளர்ச்சிக்கு 'மூலதனம்' கிடைக்கும்? எப்படி அந்நிய நாடுகளின் பொருளாதார, அரசியல் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறமுடியும்? ஆனால் அதே சமயத்தில் வ உ சி, பாரதியார் பிறந்தநாள்களைக் கொண்டாடுகிறோம்? கட்டப்பொம்மனுக்குச் சிலை எடுக்கிறோம்! 'சுதந்திரம்' 'குடியரசு' நாள்களைக் கொண்டாடுகிறோம்? 'வந்தே மாதரம்' பாடலைப் பாடுகிறோம்?
இதுபற்றியெல்லாம் இளைஞர்கள் சிந்திக்கவேண்டாமா? திரைப்படம், மதம், சாதி, கோயில் விவகாரம் ஆகியவற்றில் சிக்கிக்கொண்டு . . . நம்மையும் பாதித்து . . . எதிர்காலத் தலைமுறைக்குப் பாதிப்பை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்?
நாளை தொடரலாம்!
அந்நிய நாடுகளின் மூலதன இறக்குமதியும் வேலையில்லாத் திண்டாட்டமும் (சமூக சிந்தனை உள்ள இளைஞர்களுக்கான பதிவு - 6)
--------------------------------------------------------------------------
நாள்தோறும் நாளிதழ்களைப் புரட்டினால் . . . 'இன்று இந்த அமெரிக்கத் தொழில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் . . . 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு . . . இதனால் 13476 நபர்களுக்கு வேலை வாய்ப்பு'' ! மாநில அரசுகள் ஆகட்டும், நடுவண் அரசும் ஆகட்டும் . . . இதில் இரண்டுமே ஒன்றுதான்! ''இன்று கூகுள் நிர்வாக அதிகாரிடன் பிரதமர் சந்திப்பு . . . மைக்ரோசாப்ட் நிர்வாக அதிகாரியுடன் சந்திப்பு . . . பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின . . . பத்தாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு இதனால் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது''!
உண்மை என்ன? இந்திய மக்களுக்கு உள்நாட்டு மூலதனத்தால் வேலை வாய்ப்பு தரமுடியவில்லை என்ற ஒரு அவலநிலைதானே இது! இதுபற்றி நேற்றைய பதிவில் நான் விளக்கியிருந்தேன்! தன்னிறைவு விவசாய, தொழில் உற்பத்தி இங்கு வளரவில்லை! அதாவது தன்னிறைவு உற்பத்திக்குத் தேவையான 'மூலதனம்' இங்கு உருவாகவில்லை!
சரி! மேற்குறிப்பிட்ட அந்நிய நாட்டு - - - பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தியினால் இந்தியாவில் இனியாவது உள்நாட்டு மூலதனம் உருவாகுமா? உருவாகாது என்பது 100 விழுக்காடு உண்மை!
அந்நிய நாடுகள் 'மூலதனத்தை' ஏன் இங்கு ''இறக்குமதி'' செய்கிறார்கள்? அவர்கள் நாட்டிலேயே முதலீடு செய்யலாமே! அங்கு உழைக்கும் மக்கள் இல்லையா?
இங்குதான் அந்நிய மூலதனத்தின் சூட்சமமே - இரகசியமே - சிதம்பர இரகசியமே அடங்கியுள்ளது! அந்நிய நாடுகளின் தொழில்நிறுவனங்களுக்கு உள்ள பிரச்சினை . . . தொழிலாளிகளின் உழைப்புசக்தியில் உருவாக்கப்படுகிற ' மதிப்பில்' ஒரு பங்கு தொழிலாளிகளுக்கு 'கூலியாக அல்லது ஊதியமாக' அளிக்கப்படுகிறது. இன்னொரு பகுதி மூலதனத்தை இட்ட முதலாளிகளுக்கு ' உபரி மதிப்பாகப் ' போய்ச்சேருகிறது!
ஒரு பொருள் உற்பத்திக்கு முதலாளி வாங்குகிற எந்திரங்கள் ஆகியவற்றின் மதிப்பு . . . தாமே புதிய மதிப்பை உருவாக்கவில்லை! 'குட்டி போடுவது ' இல்லை! அப்படி மதிப்பை உருவாக்குகிறது என்றால், முதலாளி ஏன் தொழிற்சாலையை நிறுவவேண்டும்? தொழிலாளிகளை ஏன் நியமிக்க வேண்டும்?
உற்பத்தியில் எந்திரங்களையும் மூலப்பொருள்களையும் கொண்டு . . . தொழிலாளிதான் 'புதிய மதிப்பை ' உருவாக்குகிறான்! இந்தப் 'புதிய மதிப்பைப் ' பெறுவதற்குத்தான் முதலாளி முதலீடு செய்கிறான்! தொழிலாளி தனது உழைப்புசக்தியைக்கொண்டு, ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட மதிப்புடன் இருக்கிற மூலப்பொருள்களின் 'மதிப்பை' மேலும் கூட்டுகிறான்! புதிய மதிப்பை உருவாக்குகிறான்!
''சரி! அதற்குத்தானே முதலாளி தொழிலாளிக்குக் கூலி, ஊதியம் கொடுக்கிறான்'' என்று நினைக்கலாம். அவ்வாறு தொழிலாளி உருவாக்கிய 'புதிய மதிப்பை' அப்படியே தொழிலாளிக்குக் கொடுத்துவிட்டால், முதலாளிக்கு என்ன ஆதாயம்? உண்மையில் நடப்பது என்ன? தொழிலாளி உருவாக்கிய 'புதிய மதிப்பில்' ஒரு பகுதியைத் தொழிலாளிக்குக் கூலியாகக் கொடுக்கிறான்! மற்றொரு பெரும்பகுதி 'உபரி மதிப்பாக' 'லாபமாக (லாபத்திற்கும் உபரிமதிப்பிற்கும் வேறுபாடு உண்டு. அதுபற்றிப் பின்னர் பாரக்கலாம்!)
இங்கு மிக மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டியது என்னவென்றால் . . . முதலாளி வாங்கிய எந்திரங்களும் மூலப்பொருள்களும் 'புதிய மதிப்பை' உருவாக்கவில்லை! புதிய மதிப்பை உருவாக்குவது தொழிலாளிகளின் 'உழைப்பு சக்தியே'! நாம் முன்பே பார்த்ததுபோல, தொழிலாளிகள் இந்த மதிப்பை உருவாக்கவில்லையென்றால் . . . முதலாளி ஏன் முதலீடு செய்து, உற்பத்தியை மேற்கொள்ளவேண்டும்?
தொழிலாளிகள் உருவாக்குகிற 'புதிய மதிப்பில் ' ஒரு பகுதியைக் கூலியாகக் கொடுத்துவிட்டு, மீதிப் பெரும்பகுதியை 'உபரிமதிப்பாக' எடுத்துக்கொள்கிறான்! இதற்காகத்தான் அவன் இடுகிற மூலதனம், நடைபெறுகிற உற்பத்தி!
இப்போது தொடக்கத்தில் நாம் முன்வைத்த ஐயத்தை மீண்டும் பார்ப்போம்! அந்நிய முதலாளிகள் தங்கள் நாடுகளில் தொழிலாளிகளுக்குக் கொடுக்கவேண்டிய கூலி அல்லது ஊதியம் அதிகம்! அதனால் அவர்களது உபரி மதிப்பு குறையும்! ஆனால் குறைந்த விலையில் - கூலியில் - தங்களது உழைப்புசக்தியைத் தருவதற்கு இந்தியா போன்ற வளர்ச்சியடையாத நாடுகளில் உள்ள மக்கள் தயாராக இருக்கின்றனர்! மேலும் இங்குள்ள மூலப்பொருள்களையும் பிற உள்கட்டுமானங்களையும் (கோகோ கோலா இங்குள்ள தண்ணீரையே சுரண்டுகிறது என்பது தெரிந்ததே!) குறைந்த செலவில் பெற்றுக்கொள்ளலாம்! மேலும் பல வரி விலக்குகள், வசதிகள் அரசாங்கங்களால் கொடுக்கப்படும்!
சரி! நமது உண்மையான பிரச்சினைக்கு வருவோம்! ஒன்று, நமது மக்களின் உழைப்புசக்தியைப் பயன்படுத்தி, நாட்டிற்குத் தேவையான மூலதனத்தை உருவாக்கப் போதிய மூலதனம் இல்லை! ஏன் இல்லை என்பதுபற்றிச் சென்ற பதிவுகளில் பார்த்தோம்!
அதாவது, நமது மக்களின் உழைப்புசக்தியால் கிடைக்கும் உபரிமதிப்பு இந்தியாவுக்கு வந்து சேர்வதில்லை! மூலதனம், தொழில்நுட்பங்களை இங்கு இறக்குமதி செய்து, தொழில் நிறுவனங்களை உருவாக்குகிற அந்நிய முதலாளிகளுக்கு அந்த உபரி மதிப்பு போய்ச்சேர்கிறது! அதாவது, இந்திய மக்களின் உழைப்புசக்தியை இங்கேயே சுரண்டி, லாபம் சம்பாதிக்க வசதிகள் செய்துகொடுக்கப்படுகிறது! இந்த அவல நிலையில் இந்தியா எப்போது தன்னிறைவுப் பொருளாதார அமைப்பைப் பெறும்? எப்போது இந்திய மக்களின் உழைப்புசக்தியை அந்நியநாடுகள் சுரண்டிச் செல்வது ஒழியும்? எப்போது இந்திய தேசிய மூலதனம் வளரும்?
வேலைவாய்ப்பு என்ற பெயரில் அரசுகள் தற்போது மேற்கொண்டுவருகிற அனைத்து நடவடிக்கைகளும் மேலும் மேலும் இந்தியாவின் சார்புத்ன்மையைக் கூட்டவே செய்யும்!
தனது சொந்த மூலதனத்தில் - சொந்த தொழில்நுட்பத்தில் - தனது மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரமுடியாத அரசுகள் என்ன அரசுகள்? இது திட்டமிட்ட 'கையாலாகத்தனம்'! புதிய அரசியல் பொருளாதார அமைப்பு உருவாக்கப்படாமல், இந்த அவலநிலை மாறாது! இந்திய மக்களின் உழைப்புசக்தியைச் சுரண்டிக்கொள்ளுங்கள் என்று இங்குள்ள அரசுகளே அந்நியர்களுக்கு அழைப்பு விடுக்கின்றன!
எதற்காக 1947-க்குமுன்னால் இந்திய தேசிய விடுதலைப் போர் நடைபெற்றது? ஆனால் இப்போது இங்கு நடப்பது என்ன? இதுபற்றியெல்லாம் இளைஞர்கள் சிந்தித்துப் பார்க்காமல் இருப்பதற்கே இன்றைய தேர்தல் அரசியல் கட்சிகள் தங்களுடைய பலவகையான நாடகங்களை நடத்திவருகின்றன! அனைத்துக் கூட்டணிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே! இளைஞர்கள் ஏமாறக்கூடாது!
நேற்று மேற்கு வங்காளத்தில் உலகப் பிரச்சிப்பெற்ற கால்பந்தாட்ட வீரரைப் பார்ப்பதற்கு - வெறுமனே கண்ணால் பார்ப்பதற்கு - டிக்கெட் 1000 ஆயிரம் ரூபாய்! அதற்குப் பத்தாயிரக்கணக்கான இளைஞர்கள் கூட்டம்! அதில் மோதல் ... தடியடி!
'நெஞ்சு பொறுக்குதில்லையே!'
No comments:
Post a Comment