கம்யூனிஸ்டுகளின் பணியும் கம்யூனிஸ்டுகள் அறிந்துக் கொள்ள வேண்டியதும்

பொருளாதாரப் போராட்டங்களுக்குள் சமூக ஜனநாயகம் தன்னை முடக்கிக் கொள்வது அரசியல் தற்கொலைக்குச் சமமானதாகும். அரசியல் போராட்டத்துடன் பின்னிப்பிணைந்த பிரிக்க முடியாத ஒன்றாக இல்லாத சமூக ஜனநாயகம் என்ற ஒன்று உலகத்தின் எந்த மூலையிலும் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. அரசியல் போராட்டம் அற்ற சமூகஜனநாயகம் நீரற்ற நதியாகும். 


தொழிலாளர்களைப் பொருளாதாரப் போராட்டங்களுக்கு வழிநடத்துவது அவசியமானதே. ஆனால் தொழிலாளர்களை பொருளாதாரப் போராட்டத்தோடு குறுக்குவது நிலவுகின்ற முதலாளித்து அரசின் கொடுங்கோன்மையிலிருந்து தொழிலாளர்களை மீட்ப்பதற்கு பயன்படாது. முதலாளித்துவத்தை சவக்குழிக்குள் புதைப்பதற்கு தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டமே போதுமானதில்லை. தொழிலாளர்களைப் பொருளாதாரப் போராட்டத்தோடு கட்டுப்படுத்துவது தொழிலாளர்களை தொடர்ந்து முதலாளிகளுக்கு அடிமையாகவே இருப்பதற்குத்தான் பயன்படும். தொழிலாளர்கள் கூலி அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடையமுடியாது. இந்தியாவில் உழைக்கும் மக்கள் கூலி அடிமையாகவே தொடர்ந்து இருப்பதற்கு காரணம், இங்குள்ள இடதுசாரிகள் தொழிலாளர்களைத் திரட்டி வெறுமனே பொருளாதாரப் போராட்டத்தை மட்டும் நடத்திக்கொண்டிருப்பதே ஆகும். இவ்வாறு மார்க்சியம் கூறுவதால் தொழிலாளர்களைத் திரட்டி அவர்களது கூலி உயர்வு போன்ற பொருளாதாரக் கோரிக்கையை முன்வைத்து பொருளாதாரப் போராட்டங்களே நடத்தக்கூடாது என்று பொருள் அல்ல. தொழிலாளர்களின் பொருளாதார நலன்களுக்காக கம்யூனிஸ்டுகள் போராட வேண்டும் என்றே லெனின் கூறினார். அதனை மட்டும் எடுத்துக்கொண்டு இங்குள்ள இடதுசாரிகள் பொருளாதாரப் போராட்டங்களையே நடத்திக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் பொருளாதரப் போராட்டங்களை நடத்துவதற்காகப் புரட்சிகரமான அரசியல் போராட்டங்களை கைவிடக் கூடாது என்று லெனின் சொன்னதை இங்குள்ள திருத்தல்வாதிகள் முற்றிலுமாக மூடிமறைத்துவிட்டு அதனை புறக்கணிக்கிறார்கள். இதுதான் இங்குள்ள திருத்தல்வாத இடதுசாரிகள் செய்யும் தவறாகும். வரலாற்றில் தொழிலாளர் வர்க்கம் நடத்திய போராட்டங்களிலிருந்து இங்குள்ள இடதுசாரிகள் பாடம் கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். பொருளாதாரப் போராட்டத்தோடு தன்னை முடக்கிக்கொள்வது தற்கொலைக்கு சமமானதாகும் என்ற மார்க்சிய போதனைகளை இங்குள்ள இடதுசாரிகள் கைவிட்டதன் விளைவே இங்கே இடதுசாரிகள் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதற்கான காரணமாகும். ஆகவே இங்குள்ள இடதுசாரிகள் பொருளாதாரப் போராட்டத்தையும் புரட்சிகரமான அரசியல் போராட்டங்களையும் வருங்காலத்தில் இணைத்து நடத்தினால் இடதுசாரிகள் வளர்வார்கள். 

ஆக ஆசான் சொன்னதும் இவர்கள் செய்வதும் புரிந்துக் கொள்ள முயலுவோம்:

கட்சி புரட்சி வெகுஜன திரட்டல். ஆனால் இங்கு என்னவாக உள்ளது? ஒருபுறம் பொருளாதார போராட்டம் மட்டுமே இலக்காக கொண்டுள்ளோர் இச்சமூகத்தை மாற்ற விரும்பவில்லை இன்னொறுபுறம் இந்த அரசை எதிர்த்து போராடி உழைக்கும் மக்களுக்கான அரசை அமைக்க எவ்வித முயற்சியையும் எடுக்காமல் அடையாள போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளனர். ஆக இந்த இருவகையான கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த அரசை மாற்ற எந்த வேலையும் செய்யாத பொழுது இந்த சமூகம் தானே மாறும் என்பது அர்ப்பவாதம் அவை கம்யூனிஸ்டுகள் பணியை புறக்கணிப்பதாகும்.

ரஷ்யாவில் சமூக ஜனநாயகவாதிகள் நரோட்டிசத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் போது சந்தடி சாக்கில் சமூக ஜனநாயகவாதிகளிடத்தில் சட்டப்பூர்வ மார்க்சியவாதிகள் அவர்களது பிற்போக்கு கருத்தைக் கொண்டுவந்தனர். அவர்களின் முயற்சியால்தான் ரஷ்யாவில் பொருளாதாரவாதம் என்ற பிற்போக்கான அரசியல் கொள்கை பரவியது. இந்தியாவில் தெலுங்கானா போராட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தும் கேரளாவில் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்தும் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் சட்டப்பூர்வ பாராளுமன்றவாத கம்யூனிஸ்டுகள் தோன்றி வளர்ந்து பொருளாதாரவாதிகளாகவே வளர்ந்து கம்யூனிஸ்டுக் கட்சியை சட்டப்பூர்வ பொருளாதாரவாதக் கட்சியாக மாற்றிவிட்டனர். அவ்வாறு ரஷ்யாவில்  உருவான பொருளாதாரவாதக் குழுவினர் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர். அதில் தொழிலாளி வர்க்கமானது அரசியல் போராட்டங்களை மிதவாத தாராளவாத முதலாளிகளிடம் தொழிலாளர்கள் விட்டுவிட வேண்டும் என்றும் தொழிலாளர்கள் பொருளாதாரப் போராட்டங்களை மட்டுமே நடத்திட வேண்டும் என்றனர். இத்தகைய பொருளாதாரவாதிகளைப் பின்பற்றி இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகளும் முதலாளித்துவ வகைப்பட்ட அரசியல் போராட்டங்களை கட்சியே நடத்திக்கொண்டு முதன்மையாக தொழிலாளி வர்க்கத்தை பொருளாதாரப் போராட்டங்களையே நடத்துமாறு வழிகாட்டிக்கொண்டு இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் ரஷ்யாவில் பொருளாதாரவாதிகளை எதிர்த்து லெனின் போராடினார். நமது திட்டம், ரஷ்ய சமூக ஜனநாயகத்தில் தலைதூக்கும் பிற்போக்குத்தனம் போன்றவை உள்ளிட்ட பல கட்டுரைகளை பொருளாதாரவாதத்தை எதிர்த்து எழுதினார். அன்று லெனின் எதையெல்லாம் கம்யூனிஸ்டுகள் செய்யக்கூடாது என்று கூறினாரோ அதையெல்லாம் இங்குள்ள கம்யூனிஸ்டுகள் செய்துகொண்டு சட்டப்பூர்வமான மார்க்சியவாதிகளாகவே வலம் வருகின்றனர். இவர்கள் லெனினைப் பின்பற்றும் கம்யூனிஸ்டுகளா?.

பொருளாதாரவாதிகள் மார்க்சியவாதிகளின் மீது ரஷ்யாவில் கீழ்க்கண்ட குற்றச்சாட்டை வைத்தனர். பொருளாதாரவாதிகள் உழைக்கும் வர்க்கத்தின் தன்னெழுச்சிக்கு தலைவணங்கிச் செல்வதை நியாயப்படுத்தினார்கள். உழைக்கும் வர்க்கமானது தன்னெழுச்சியான போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலமே புரட்சிகரமான நடைமுறைக்கான கோட்பாடுகளை உருவாக்கிக்கொள்ள முடியும் என்று பொருளாதாரவாதிகள் கருதினார்கள். ஆகவே சமூக வளர்ச்சியின் அவசியத்தை தொழிலாளர்கள் தானாகவே புரிந்துகொள்வார்கள் என்றும் அவர்களிடமுள்ள தன்னெழுச்சியான கூறுகளை கம்யூனிஸ்டுகள் மட்டம்தட்டி குறைவாகப் பார்க்கிறார்கள் என்று கம்யூனிஸ்டுகள் மீது பொருளாதாரவாதிகள் குற்றம் சாட்டினார்கள். மேலும் கோட்பாடுகள் கொள்கைகளின் அவசியத்தை அளவுக்குமேல் கம்யூனிஸ்டுகள் மதிப்பதாகவும் குற்றம் சாட்டினார்கள், மக்களின் உணர்வுப்பூர்வமான நடவடிக்கையை அளவுக்குமேல் கம்யூனிஸ்டுகள் மதிக்கிறார்கள் என்று கம்யூனிஸ்டுகள் மீது குற்றம் சாட்டினார்கள் என்றார் லெனின். இப்போதும் இந்தியாவில் லெனினை பின்பற்ற மறுப்பவர்களும் லெனினை எதிர்ப்பவர்களும் சமூக மாற்றத்திற்கான நடைமுறையில் மக்கள் முன்வர மறுக்கிறார்கள் என்று மக்கள் மீது குற்றம் சாட்டுபவர்களை நாம் காணலாம். அதன் மூலம் மக்களின் தன்னியல்புக்கு இவர்கள் தலைவணங்குவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் வரவில்லை என்றால் நாம் என்ன செய்யமுடியும் என்று இவர்கள் கேட்க்கிறார்கள். ஆனால் மக்களிடத்திலுள்ள அறியாமையையும் குறைகளையும் போக்கி

அவர்களுக்கு புரட்சிகரமான உணர்வுகளை ஊட்டவேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமை என்ற லெனினது வழிகாட்டலை இவர்கள் புரிந்துகொள்ள தொடர்ந்து மறுக்கிறார்கள் இதனை மூடிமறைக்கிறார்கள்.

லெனினது கோட்பாடுகளின் அவசியத்தை ரஷ்யப் பொருளாதாரவாதிகளைப் போலவே இவர்களும் உணரவில்லை. அந்த வகையில் இங்குள்ள இடதுசாரிகள் ரஷ்யப் பொருளாதாரவாதிகளைப் பின்பற்றும் பொருளாதாரவாதிகளாகவே இருக்கிறார்கள். இவர்கள் மார்க்சிய லெனினியவாதிகளாக மாறும்வரை இவர்களுக்கு மக்களின் செல்வாக்கும், ஆதரவும் கிடைக்காது.

லெனின் தொழிலாளர்கள் தங்களது போராட்டங்களின் மூலமாக மட்டும் தன்னெழுச்சியாக சோசலிசக் கோட்பாடுகளை உருவாக்கிவிட முடியாது என்று திட்டவட்டமாக வாதிட்டார். அவர்களது முயற்சியில் தொழிற்சங்க உணர்வை மட்டுமே வளர்க்க முடியும். அதாவது, தொழிற்சங்கமாக ஒன்றுபட்டு முதலாளிகளை எதிர்ப்பதும், சட்ட மாறுதல்கள் செய்யுமாறு அரசாங்கத்தை வற்புறுத்துவதும் அவசியம் என்பதை உணர்த்த முடியும். ஆழ்ந்த அறிவியல் அறிவின் அடிப்படையிலேயே சோசலிசக் கோட்பாடுகளை உருவாக்க முடியும் அது வெளியிலிருந்துதான் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட முடியும் என்றும் கூறினார். தங்களது சமுதாய நிலை காரணமாக அதனை தொழிலாளர்களால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் முதலாளித்துவக் கோட்பாடு காலத்தால் முந்தியது, பரவுவதற்கு எண்ணற்ற சாதனங்களைப் பெற்றுள்ளது எனவே அறிவியல் பூர்வ சோசலிச விழிப்புணர்வை தொழிலாளர்களிடம் தட்டி எழுப்புவதைத் தடை செய்வதன்மூலம் பொருளாதாரவாதிகள் உண்மையில் முதலாளித்துவ கோட்பாடுகளின் செல்வாக்கை வளர்ப்பதற்கே உதவுகின்றனர்.

தொழிலாளர்கள் ஒன்றுகூடி தொழிற்சங்கத்தை அமைத்து அவர்களது பொருளாதார நலன்களுக்காக முதலாளிகளை எதிர்த்தும் அரசாங்கத்தை எதிர்த்தும் பொருளாதாரப் போராட்டங்களை நடத்துவார்கள். இதிலிருந்து தொழிலாளர்கள் ஒன்றுபட்டுப் போராடினால் முதலாளிகளிடமிருந்து தொழிலாளர்களுக்கான உரிமைகளையும் சலுகைகளையும் பெறமுடியும் என்ற தொழிற்சங்க உணர்வை அவர்களால்

பெறமுடியும் என்பதை லெனின் ஏற்றுக்கொண்டார். ஆனால் சமூகத்தை சோசலிச சமூகமாக மாற்றுவதற்கான அறிவையோ உணர்வையோ தொழிலாளர்களின் தொழிற்சங்க வகையான போராட்டத்திலிருந்து பெறமுடியாது என்றார் லெனின். அப்படியானால் சோசலிச உணர்வையும் அறிவையும் தொழிலாளர்கள் எப்படி பெறுவது? என்ற கேள்விக்கு லெனின் பதில் கொடுக்கும்போது ஆழ்ந்த விஞ்ஞான அறிவைக் கொண்ட குறிப்பாக சமூக விஞ்ஞான அறிவுள்ளவர்களால் மட்டுமே சமூகத்தை விஞ்ஞான அடிப்படையில் ஆய்வு செய்யும் திறமை உள்ளவர்களால் மட்டுமே சோசலிச சமூகத்தைப் படைப்பதற்கான விஞ்ஞானக் கோட்பாடுகளை உருவாக்கி தொழிலாளர்களுக்குப் போதித்து தொழிலாளர்களிடம் சோசலிச உணர்வையும் அறிவையும் வளர்க்க முடியும் என்றார் லெனின். இத்தகைய அறிவுள்ளவர்கள் பெரும்பாலும் தொழிற்சங்கங்களுக்கு வெளியே அதாவது தொழிலாளர்களின் கட்சியைச் சேர்ந்த தலைவர்களாகவே இருக்கமுடியும் என்றார் லெனின். இந்த சோசலிசக் கோட்பாடுகளை தொழிலாளர்கள் தங்களது சொந்த வாழ்நிலையிலிருந்து புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வார்கள் என்றார் லெனின். ஏனெனில் சோசலிசக் கோட்பாடுகள் தொழிலாளர்களின் இன்றைய வாழ்நிலையைப் பற்றி பேசுகிறது மேலும் இந்த இழிவான வாழ்நிலைக்கு முடிவுகண்டு வளமான வாழ்நிலைக்காக வழிகாட்டுவதால் உழைக்கும் மக்கள் இந்த சோசலிசக் கோட்பாடுகளை எளிதாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்றார் லெனின். ஆனாலும் இந்த சோசலிசக் கோட்பாடுகள் உலகில் உருவாவதற்கு முன்பாகவே முதலாளித்துவக் கோட்பாடுகள் உருவாகிவிட்டது என்றும், முதலாளித்துவக் கோட்பாடுகளை பின்பற்றி மக்கள் பழக்கப்பட்டுவிட்டனர் என்றும், முதலாளித்துவக் கருத்துக்களை பரப்புவதற்கு முதலாளிகளுக்கு சாதகமான பல வழிகள் உள்ளது. முதலாளிகளின் கையில்தான் பணம் இருக்கிறது, அரசு அதிகாரம் இருக்கிறது செய்தித் தொடர்பு சாதனங்கள் இருக்கிறது இத்தகைய சாதகமான சூழலைப் பயன்படுத்தி முதலாளித்துவவாதிகள் தொழிலாளர்களுக்கு எதிரான கருத்தை தொழிலாளர்களிடம் பரப்பி தொழிலாளர்களை முதலாளித்துவக் கருத்துக்களை ஏற்கச் செய்கிறார்கள். இவ்வாறு முதலாளிகள் தொழிலாளர்களிடம் முதலாளித்துவ கருத்துக்களைப் பரப்பினாலும் தொழிலாளர்களிடம் சோசலிசக் கருத்துக்களை கம்யூனிஸ்டுகள் பரப்பினால் தொழிலாளர்கள் தங்களிடமுள்ள முதலாளித்துவ கருத்துக்களை கைவிட்டுவிட்டு சோசலிசக் கருத்தை ஏற்றுக்கொள்ள முன்வருவார்கள். ஆனால் மார்க்சிய அமைப்புக்களில் இருக்கும் பொருளாதாரவாதிகள் பொருளாதாரவாதக் கருத்துக்களை தொழிலாளர்களிடம் கொண்டுசென்றால் தொழிலாளர்களிடம் குழப்பம் ஏற்பட்டு தொழிலாளிகள் பொருளாதாரவாதிகளின் கருத்தை ஏற்றுக்கொள்ளும்போது தொழிளார்களிடையே முதலாளித்துவ கருத்துக்களே வளர்ந்து வளம்பெறுகிறது. ஆகவேதான் பொதுவுடமை அமைப்புகளில் இருக்கும் சட்டப்பூர்வ மார்க்சியவாதிகளையும் பொருளாதாரவாதிகளையும் தொழிலாளர்களின் இயக்கத்திலுள்ள முதலாளித்துவக் கொள்கையாளர்கள் என்றார் லெனின். இங்குள்ள இடதுசாரித் தலைவர்கள் தொழிலாளர்களிடம் சோசலிசத்தைப் போதிக்கவில்லை. மாறாக பொருளாதாரவாதக் கருத்துக்களையே போதிக்கின்றனர். அதன் மூலம் முதலாளிகளுக்கு சேவை செய்துகொண்டு இருக்கிறார்கள். அதன் காரணமாகவே இந்தியாவிலுள்ள உழைக்கும் மக்களிடையே சோசலிச உணர்வும் அறிவும் வளரவில்லை. மாறாக தொழிலாளர்களிடம் குட்டிமுதலாளிய உணர்வே வளர்ந்துள்ளது. ஆகவே இங்கே பாட்டாளி வர்க்கப் புரட்சியை நோக்கி இடதுசாரிகள் ஓர் அடிகூட முன்னேறவில்லை. மாறாக இடதுசாரிகள் மக்களின் செல்வாக்கை இழந்துகொண்டு இருக்கிறார்கள். மாநாடு கூட்டுவது கூட்டத்தைச் சேர்ப்பது

போன்ற முதலாளித்துவ வழிமுறைகளைப் பின்பற்றி இழந்த செல்வாக்கை மீட்டுவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். இவர்கள் லெனினைப் பின்பற்றாமல் இவர்களுக்கு வாழ்வே இல்லை.

தொழிலாளர்கள் விடாப்பிடியாக சோசலிசக் கொள்கையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றே லெனின் நமக்குப் போதிக்கிறார். இந்தக் கொள்கையைப் பின்பற்றாமல் முதலாளித்துவ சீர்திருத்தவாதிகளின் கொள்கைகளை தொழிலாளர்கள் பின்பற்றுவது தற்கொலைக்குச் சமமாகும் என்பதே லெனினியம் ஆகும்.

 இந்த லெனினது போதனைகளை இங்குள்ள திருத்தல்வாதிகளும் கலைப்புவாதிகளும் பின்பற்ற தொடர்ந்து மறுத்துவருகிறார்கள். திருத்தல்வாதிகள் காவுத்ஸ்கி மற்றும் ஸ்ட்ரூவே போன்றவர்களை பின்பற்றுகிறார்கள், கலைப்புவாதிகள் இங்குள்ள முதலாளித்துவ சீர்திருத்தவாதிகளான பெரியார் மற்றும் அம்பேத்காரை பின்பற்றுகிறார்கள். ஆகவே இவர்கள் மார்க்சிய லெனினியத்தை கைவிட்டுவிட்டு மார்க்சியத்திலிருந்து வெகுதூரம் போய்விட்டார்கள். இவர்கள் திரும்பவும் மார்க்சியவாதிகளாக மாறுவார்களா? சந்தேகமே.

ஆனால் இந்த திருத்தல்வாத மற்றும் கலைப்புவாதத் தலைவர்களை புரட்சிகரமான உழைக்கும் வர்க்கம் அடையாளம் கண்டு கட்டாயம் புறக்கணிப்பார்கள். புரட்சிகரமான சக்திகள் மார்க்சிய ஆசான்களைப் புரிந்துகொண்டு அவர்களைப் பின்பற்றுவார்கள். அதற்காகப் பாடுபடுபவர்களே உண்மையான கம்யூனிஸ்டுகள் ஆவார்கள்

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் மூலதனத்தின் ஆதிக்கம்தான் நிலவுகிறது. இந்த ஆதிக்கம்தான் அனைத்து நாடுகளில் உள்ள மக்களின் வறுமைக்கும் துண்பத்துக்கும் காரணமாக இருக்கிறது. இந்த ஆதிக்கத்தை எதிர்த்து போராடும் மக்களிலேயே மிகவும் உறுதியான வர்க்கம் பாட்டாளி வர்க்கமாகும். இந்த பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் செயல்படும் வர்க்கங்களின் கைகளில் அரசியல் இயந்திரம் வரவேண்டும். அவ்வாறு மூலதனத்தை எதிர்க்கும் மக்களின் கரங்களில் அரசியல் அதிகாரம் போவதற்கு நாம் பாடுபட வேண்டும் என்றார் லெனின். இந்த லெனினது போதனையை இங்குள்ள இடதுசாரிகள் பின்பற்றவில்லை, அதன் காரணமாகவே இடதுசாரிகள் மக்களின் செல்வாக்கை இழந்தார்கள். அரசு என்பது அனைத்து மக்களுக்கு இடையில் சமத்துவத்தை ஏற்படுத்தும் என்பது ஒரு கட்டுக்கதையாகும். இதனை உழைக்கும் மக்கள் நம்பக்கூடாது. சமூகத்தில் சுரண்டல் நீடிக்கின்ற வரையில் சமத்துவம் சமூகத்தில் ஏற்பட முடியாது. சமூகத்தில் பண்ணையாரும் பண்ணையடிமையும் ஒன்றாக முடியுமா? முதலாளியும் தொழிலாளியும் ஒன்றாக முடியுமா? அன்றாடம் பசியால் வாடுபவரும் வயிறார உண்டு கொழுத்தவனும் ஒன்றாக முடியுமா? ஆகவேதான் சுரண்டலை ஒழிக்காமல் சமத்துவம் என்ற பேச்சே ஒரு ஏமாற்று வேலை என்றார் லெனின்.

 தொடரும்....



No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்