தோழர்களே
தினம் தினம் சந்திக்கும் விவாதங்கள் கம்யூனிஸ்டுகளே முழுமையில்லாத பொழுது (மார்க்சிய தத்துவ அரசியல் போதாமையினால்), கம்யூனிஸ்டுகள் அல்லாதவர்கள் கம்யூனிஸ்டுகளின் பெயரில் செயல்படுபவர்கள், மார்க்சியத்தை மறுப்பவர்கள் எதிர்பவர்கள் எவ்வளவு மோசமாக மார்க்சியத்தை சிதைகிறார்கள், குறுக்குகிறார்கள் மார்க்சிய சொல்லாடல்களை பயன்படுத்தி கேவலம் தங்களின் ஆளும் வர்க்க சேவைக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதனை கணக்கில் கொண்டே இந்த தொடர் பகுதி எழுதவுள்ளேன்.
மார்க்சியத்தின் மீது பற்றுள்ளவர்கள் தங்களின் ஆக்கப்பூர்வமான பணியாற்றும் படி கேட்டுக் கொள்கிறேன் தோழர்களே.2). மார்க்சியம் பேசும் நாத்திகவாததிற்கும் இங்குள்ளோர் பேசும் நாத்திகவாததிற்கும் ஏதாவது தொடர்புண்டா? அப்பொழுது மார்க்சியம் பேசுவது என்ன இங்குள்ள நாத்திகவாதிகள் பேசுவதென்ன?
3). சாதி என்பது என்ன அதனை ஒழிப்பது பற்றி மார்க்சியதிற்கும் இங்குள்ளோர் பேசுவதும் ஒன்றா? ஆக சாதி ஒழிப்பு பற்றி இவர்கள் பேசுவதும் மார்க்சிய தத்துவ அடிப்படையில் இல்லாத பொழுது மார்க்சியம் பேசும் வழிமுரைதான் என்ன?
4). நம்மிடையே உள்ளவர்கள் சிலர் தேசிய இனப்பிரச்சினையை முக்கிய பிரச்சினையாக பேசுகின்றனர். அவர்கள் அதற்கான் தீர்வாக இங்குள்ள ஆளும் வர்க்க அறிவுஜீவிகளின் கருத்துகளை முன் மொழியும் பொழுது அவர்கள் தோல்விகாண்கின்ரனர். ஆக மார்க்சியம் கூறும் தேசிய இன விடுதலைக்கும் இந்த போலி தேசிய இன விடுதலையாளர்களுக்கும் இடையே உள்ள வேறு பாடுகள்தான் என்னென்ன?
ஒவ்வொன்றாக தொடர் விவாதத்தில் விவாதிக்க விடைகாண மார்க்சிய தத்துவ அரசியல் விரும்பிகளை அழைக்கிறேன் தோழர்களே. தொடர்ந்து விவாதிக்க அழைக்கின்றோம்.
நபர்சார்ந்த அரசியல் அல்ல தத்துவம் சார்ந்த அரசியல்.
ஆக மார்க்சிய தத்துவ அறிவை வளர்த்துக் கொள்ள தொடர்ந்து தேடுவோம், ஆராய்வோம், விவாதிப்போம் வாருங்கள் தோழர்களே.
வெறுப்பரசியலுக்கு இங்கே அவசியம் அனுமதியும் இல்லை.
தத்துவ அரசியலுக்கு முதலிடம்.
சமூக அறிவியலே அடிப்படை.
மார்க்சியமே அளவுகோள்.
மார்க்சியத்தை விரும்புவோர் அனைவரும் விவாதத்தில் கலந்துக் கொள்ளும் படி அழைக்கின்றேன் தோழர்களே.
வாருங்கள் நமக்கான மார்க்சிய அறிவை பகிர்ந்துக் கொள்ள தெளிவுபடுத்திக்கொள்ள விரிவாக்கி எதிரிவர்க்க கருத்தியல்களுக்கு அடிக் கொடுக்க நம்முள் உள்ள மார்க்சியம் அல்லாத கசடுகளை துடைதெறிய.
அணி சேர்வோம் மார்க்சியம் எனும் மனித குல விடுதலைக்கான அரசியல் தத்துவத்தை எல்லோருமறிய செய்வோம். இந்த உயர்ந்த நோக்கதிற்கு உங்களின் பங்களிப்பு விவாதிப்பதே . வாருங்கள் தோழர்களே விவாதிக்க...
++++++++++++++++
மார்க்சியம் சமூகத்தில்
உள்ள எல்லா பிரச்சினைகளையும் பிரச்சினையாக
ஏற்றுக் கொள்கிறது. அந்த பிரச்சினையின் ஆணி வேரை அறிந்து அதனை களையச் சொல்கிறது. மார்க்சியம் மட்டுமேதான் இங்குள்ள எல்லா
பிரச்சினைக்கும் தீர்க்கும் திறன்படைத்தவை என்பது நிரூபிக்கப்பட்டவை.
ஆக இதனை நாம் புரிந்துக் கொள்ள நம்மிடையே ஒரு பொதுவான கண்ணோட்டம் இல்லை அவைதான் அவசியமாகும். ஆக கண்ணோட்டத்தை, அடிப்படையில் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று விஞ்ஞானக் கண்ணோட்டம், மற்றொன்று விஞ்ஞானத்துக்கு எதிரான கண்ணோட்டமாகும். விஞ்ஞானக் கண்ணோட்டத்திலிருந்து பிரச்சனைகளை ஆய்வு செய்தால், பிரச்சனைகளை நம்மால் புரிந்துகொண்டு அதனை உறுதியாக தீர்க்கவும் முடியும். இதற்கு மாறாக விஞ்ஞானக் கண்ணோட்டத்தை மறுத்துவிட்டு விஞ்ஞான எதிர்ப்பு கண்ணோட்டத்தோடு பிரச்சனைகளைப் பார்த்தால் பிரச்சனைகளை நாம் புரிந்துகொள்ளவும் முடியாது அதனை தீர்க்கவும் முடியாது. அத்தகைய சமூக விஞ்ஞானக் கண்ணோட்டம்தான் மார்க்சியம் ஆகும். ஆகவே ஒன்றுபட விரும்பும் நாம் அனைவரும் மார்க்சிய சமூக விஞ்ஞான கண்ணோட்டத்தை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையிலேயே சிந்தித்து கருத்துக்களை பரிமாறவும் விவாதிக்கவும் வேண்டும். இந்த அடிப்படையில் ஒத்த கருத்துள்ளவர்களால் மட்டுமே ஒன்றுபட முடியும். இதற்கு மாறாக வெவ்வேறு கண்ணோட்டம் கொண்டவர்களால் ஒன்றுபட முடியாது. அவ்வாறு ஒன்றுபட்டாலும் அந்த ஒற்றுமை நீடிக்காது. மார்க்சியக் கண்ணோட்டத்திலிருந்தே பிரச்சனைகளை அணுகுவதற்கான பயிற்சி பெறவேண்டும், இல்லை என்றால் நமக்கிடையே ஒற்றுமை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை, அப்படியே ஒற்றுமை ஏற்பட்டாலும் அது நீடிக்காது. ஆகவே நாம் ஒன்றுபடுவதற்கு மார்க்சிய கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்வதில் நாம் ஒவ்வொருவரும் உறுதியாக இருக்க வேண்டும்.
அடுத்து அரசு பற்றிய தெளிவு வேண்டும்.
அரசின்றி மக்கள் தங்களது பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்பது நடைமுறை
உண்மையாகும். இதனை யாராலும் மறுக்க முடியாது. இந்திய பெருமுதலாளிகளிடம் மூலதனம்
இருக்கலாம். ஆனால் அவர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆவது இந்த அரசின்
துணையோடுதான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இந்த அரசும், அரசாங்கமும் பெருமுதலாளிகளுக்கு சேவை செய்வது போல
பெரும்பான்மையான மக்களுக்கு சேவை செய்வதில்லை, மாறாக மக்களுக்கு எதிராகவே நடந்துகொள்வதை நாம்
பார்க்கிறோம். ஆகவே பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மக்களை பிரச்சனைகளிலிருந்து
விடுவிப்பதற்கு நமக்குத் தேவை புதிய வகையான அரசாகும். அத்தகைய அரசு எப்படி இருக்க
வேண்டும் என்பது குறித்து தேசியப் பிரச்சனையை முதன்மைப் படுத்துபவர்களும், சாதிப் பிரச்சனையை முதன்மைப் படுத்துபவர்களும் பிற
பிரச்சனைகளை முதன்மை படுத்துபவர்களும் அவர்களது பிரச்சனையை தீர்ப்பதற்கு எவ்வகையான
அரசு வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து முன்வைத்து விவாதங்கள் நடத்தி ஒரு
குறிப்பிட்ட அரசுமுறையை உருவாக்குவதற்கான ஒத்த கருத்தை வந்தடையும் நோக்கம்
கொண்டிருப்பவர்களிடத்தில் ஒற்றுமை ஏற்படுவது சாத்தியமாகும். அதாவது நாம்
ஒன்றுபடுவதற்கு நம்மிடையே ஒரு பொதுவான லட்சியம் அவசியமாகும். இதற்கு மாறாக
வெவ்வேறு லட்சியம் கொண்டவர்களால் ஒன்றுபட்டு ஒரு ஜனநாயக மத்தியத்துவத்தை
அடிப்படையாகக் கொண்ட கட்சியை கட்ட முடியாது. ஆகவே அரசு பற்றிய பிரச்சனையில் தீர்வு
கண்டு ஒரு ஒத்த கருத்தின் அடிப்படையில் ஒன்றுசேர்வோம். அரசு பற்றிய பிரச்சனையை
படிப்பது,
விவாதிப்பது, புரிந்துகொள்வது, தற்போதைய அரசின் தன்மை என்ன? என்பதை தகவல்களின் அடிப்படையில் ஆய்வு செய்து
புரிந்துகொள்வது, தற்போதைய அரசு எந்தப் பிரிவினருக்காக சேவை செய்கிறது, எந்தப் பிரிவினருக்கு எதிராக செயல்படுகிறது என்ற விவரங்களை
சேகரித்து மக்களிடம் இந்த அரசையும், அரசாங்கத்தையும் அம்பலப்படுத்துவது, மக்களின் பிரச்சனைகளைநேர்காணல் மூலம் ஆய்வு செய்து அவர்களது
பிரச்சனைகளை தீர்ப்பதற்கான அரசு எப்படி இருக்க வேண்டும், அதன் நிறுவன வடிவங்கள் எப்படி இருக்க
வேண்டும் என்பதையெல்லாம் ஆய்வு செய்து ஒரு புதிய வகையான அரசமைப்பு குறித்து ஒத்த
கருத்தை வந்தடைவதை லட்சியமாக கொள்ள வேண்டும். அத்தகைய லட்சியவாதிகளால் நிச்சயமாக
ஒன்றுபட முடியும்.
மார்க்சியம் மட்டும்தான் இந்த ஏற்றத்தாழ்வான வர்க்க சமூகத்தின் அடிப்படைகளை
தெள்ளத் தெளிவாக கூறியதோடு அல்லாமல் இந்த ஒவ்வொரு பிரச்சனைக்கும் காரணமான சமூக
அமைப்பை விளக்குவதோடு மட்டுமல்லாமல் இந்தப் பிரச்சினையின் அடிப்படையான சமூக
அமைப்பை தகர்த்து ஏற்றத்தாழ்வற்ற சுரண்டல் முறையற்ற ஒரு சமூகத்தை படைக்க
சொல்லுகிறது. அவை இங்குள்ள வலிமை படைத்த ஏகாதிபத்தியங்கள் மற்றும் இந்நாட்டு ஆளும்
வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தை கோருகிறது. இவை சாதாரணமானவை அல்ல. அதற்கான பணி
நீண்டநெடியவை. உள்ள அரசுக்கு எதிரான போராட்டம். அதனை பற்றி தெரியாதவர் உண்டோ?
புரட்சியில் ஈடுபடுவது என்பது லெனின் கூறியது போல் கரடு முரடான பாதையில்
செங்குத்தான பாறையில் ஏறும் செயல்படும் திறன் கொண்டவர்களால் மட்டுமே முடியும்
என்கிறார். அதேபோல் லெனின் தன் நாட்டில் இருந்த பல்வேறு விதமான கருத்தாக்கங்களை
தகர்த்தெறிந்து ஒரு புரட்சிகர கட்சியை கட்டி அமைத்து புரட்சியை சாதித்துக்
காட்டினார். அவரின் வழியை பின்பற்றி பல நாடுகளில் புரட்சியும் சாத்தியப்பட்டது.
புரட்சியானது உழைக்காமல் அடுத்தவர் உழைப்பிலே வாழ்ந்திருந்து சொகுசான ஒரு
கூட்டத்தை அதிகாரத்திலிருந்து துரத்தப்பட்டது. அதன் பிறகான சில பத்தாண்டுகளில்
ரசிய மற்றும் சீன படிப்பினைகள் அவர்களுடைய வரலாற்று நூல்களில் நாம் காண்கிறோம்.
ரசியாவில் ஆரம்பத்தில் பல்வேறு உள்நாட்டு கலகங்களும் வெளிநாட்டுப் போர்கள்
மூலமும் புரட்சிக்குப் பின்னர் ஏகாதிபத்தியங்கள் கூட்டு சேர்ந்து அழிக்க
முயற்சித்தது அந்தக் கொடூரமான போர்கள் மக்கள் மத்தியில் அவர்கள் அம்பலப்பட்டு
நிற்க செய்தது. இதனை புரிந்துக் கொண்ட ஏகாதிபத்தியம் கத்தியை தீட்டுவதை
விட்டுவிட்டு புத்தியை தீட்டுவது என்பார்களே அந்தப் பணியை ஏகாதிபத்தியம் மிகத்
தெளிவாக சிறப்பாக செய்து முடித்தது. அவை தான் மார்க்சியத்தின் பெயரில் மார்க்சியம்
அல்லாத போக்குகள் மார்க்சிய தத்துவத்தை குழப்பி பல்வேறு முதலாளித்துவ கருத்துக்களை
மார்சியமாக கடை பரப்பியது. ஏகாதிபத்தியம் தங்களின் நீண்ட வாழ்விற்காக அதற்கான பணி
தொடர்ந்து செய்து கொண்டுள்ளது.ஆளும் வர்க்கம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பல
வேலைகளை செய்கிறது. அதில் ஒன்று எதிர்புரட்சிகர நிலை எடுக்கும் ஆளும் வர்க்க சேவை
புரிவோர் செய்யும் பணி! புரட்சியை மறுத்து சீர்திருத்தவாதத்தை ஏற்பது
மார்க்சியத்தை மறுத்து சீர்திருத்தவாதிகள் பின் அணி சேர்வது. அதாவது உள்ள சமூக
அமைப்பை மாற்றாமல் அதன் அருமை பெருமைகளை அல்லது இதனை விட்டால் வேறு என்ன வழி என்று
உள்ள அமைப்பை கட்டிக்காக்கும் (கடவுளை நம்புவது போல்) நம்பிக்கைவாதிகளாகவும்
அல்லது மாறாநிலைவாதிகளாகவும் இருக்க செய்வது.
நாம் வாழும் சமூகத்தில் பல்வேறு விதமான கண்ணோட்டங்களும் நடைமுறையும் உள்ளன.
அவை தான் மக்கள் மத்தியில் பேசு பொருளாகவும் வழிகாட்டியாகவும் உள்ளது. இவையெல்லாம்
சமூகத்தின் ஆளுவோரின் கருத்துகளே கண்ணோட்டங்களே. எப்படி மத அடிப்படைகளுக்கு புராண
இதிகாசங்கள் துணை நிற்கின்றதோ அதுபோல் மார்க்சியவாதிகளுக்கு மார்க்சிய ஆசான்களின்
வழிகாட்டுதலை ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு செயல்படுவதே மார்க்சிய நடைமுறை
கண்ணோட்டம். இதனைத் தான் மார்க்சியம் மிகத் தெளிவாக தனக்கான கண்ணோட்டத்தையும்
அதற்கான நடைமுறையும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. அதனை நடைமுறைப்படுத்தியது
ரஷ்யாவும் சீனாவும் இன்னும் சில சோசலிச நாடுகளும் அதன் புரட்சியின் வழியில்.
இதனைத் தான் லெனின் தன் நாட்டின் புரட்சியின் நான்காம் ஆண்டு நினைவுநாள்
நிகழ்ச்சியில் தெளிவுபடுத்தி இருப்பார்.
இதற்கு முன் நடந்தேறியே பல்வேறு நாட்டில் நடந்தேறிய சமூக மாற்றங்கள்
புரட்சிகள் பற்றி தெளிவுபடுத்தும் அவர், பழைய சமூகத்தின் பிற்போக்கு சமூக மிச்சங்களை அவர்கள்
அழித்தொழிக்கவில்லை. அதனை தங்களின் சுரண்டலுக்காக கட்டிக் காக்கும் நிலையை
காணலாம். இதனை முழுமையாக துடைத்தெறிந்ததாக ரஷ்ய புரட்சியை பற்றி லெனின் விளக்கி
கூறுவார்.
ஆகவே சமூக மாற்றம் விரும்பும் ஒவ்வொருவரும் இங்குள்ள பிற்போக்கு முந்தைய சமூக
முடைநாற்றம் பிடித்த குப்பைகளை இல்லாது ஒழிக்க மார்க்சிய லெனினிய தத்துவத்தின்
அடிப்படையில் நடைபெறும் புரட்சியால் மட்டுமே சாத்தியம் என்பது தான் என்று
நடைமுறையில் நிறுவியதை ஏற்பவர்கள்தான் மார்க்சிய லெனினிய தத்துவவாதிகளின்
கண்ணோட்டம். ஆக அந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் நடைமுறை காணுவது தான்
உண்மையாலுமே புரட்சி நேசிப்போரின் பணியாக இருக்கும். நமது கண்ணோட்டம் மார்க்சிய
தத்துவ அடிப்படையில் இருந்தால் மட்டுமே விவாதம் சரியான பாதையில் செல்லும்.
மார்க்சிய லெனினிய தத்துவ அடிப்படையில் செய்யாததன் விளைவு தான் இங்கு நம் இடையே
காணப்படும் பல்வேறு விதமான போக்குகள் உள்ளன. இன்னும் நம் சமூகத்தை புரிந்துக்
கொள்வதில் பல்வேறு விதமான குழப்பங்கள் நீடிக்கிறது. இதன் தொகுப்பாக காணுமிடத்து.
மார்க்சிய லெனினிய தத்துவத்தை புரிந்துக் கொள்வதில் எங்கோ பிரச்சினை என்று
நினைத்து அடிப்படையில் மார்க்க்சிய லெனினிய தத்துவத்தை கற்றுதேர்வது அவசியம்
என்பதே எங்களின் கருத்து தோழர்களே.
சாதிதான் பிரச்சனை பேசுபவர்கள் சாதிப்பிரச்சினை மட்டுமேதான் பிரச்சினை என்று பேசுகிறார்கள். தேசிய இன பிரச்சனை பேசுபவர்கள் தேசிய இன பிரச்சனை மட்டுமேதான் பிரச்சினை என்று பேசுகிறார்கள். பெண்ணடிமை தனம் பிரச்சனை பேசுபவர்கள் பெண்ணடிமை தனம் மட்டுமேதான் பிரச்சினை என்று பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் இச் சமூகத்தில் உள்ளது தான். அந்தப் பிரச்சினைகள் இன்று ஏன் எப்படி முன்னுக்கு வருகிறது? என்று ஆராயும் பொழுது அந்தந்த பிரச்சினைகள் குறிப்பிட்ட சமூகத்தில் தோன்றியிருந்தாலும் ஆளும் வர்க்கத்தின் அவசியத்திலிருந்து அடக்குமுறை ஒடுக்குமுறையின் பாதிப்பை ஒட்டியே என்பதனை புரிந்துக் கொள்ள முடியும்.
பல்வேறு பிரச்சினைகளின் நிழலில் ஆளும்
வர்க்கம் தன் சுரண்டலை பிற்போக்குதனத்தை மூடிமறைத்து மக்கள் மத்தியில் பிரிவினை
பேசி உழைக்கும் மக்களை பிரித்து மோத வைக்கிறது. இதனை எதிர்போறும் அவர்களின் அதே தந்திரமான சில
சீர்திருத்தங்களின் மூலம் சாதிக்க முயல்வது தீர்வாகுமா?
சாதியையும் மதத்தையும் ஒழிக்க கிளம்பியவர்கள் இன்று எங்கு உள்ளார்கள் ஏனென்றால் அவர்களுக்கு சாதி மதத்தின் ஆணிவேர்களான சமூக அமைப்பை புரிந்து கொள்வதில் உள்ள குறைபாடு தான். ஆக சாதி மத ஒழிப்பு என்பது அந்த சமூக அமைப்பின் எதார்த்த நிலையில் இருந்து புரிந்து கொள்வதும். சாதி மதத்தை கட்டிக் காக்கும் சமூக அமைப்பை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்ப்பதுதான். அதற்குறிய சமூக அமைப்பை உருவாக்குவதும் அதற்கான கருத்தில் கலாச்சார போராட்டத்தின் மூலமாக சாதி மத சீர்கேடுகளை இல்லாது ஒழிப்பதும் தான் மார்சியம் காட்டும் வழிமுறையாகும். இங்கே முன் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பிரச்சினையும் சமூகத்தின் ஒரு பகுதியளவான பிரச்சினைதானே ஒழிய ஒட்டுமொத்த சமூக பிரச்சினை அல்ல. ஆக பேசு பொருளில் குறைப்பாடு உடையவையாக உள்ளன. நாம் சமூகத்தில் உள்ள எல்லா அடக்கும் முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக களம்கண்டு அதனை ஒழிக்க நினைப்பவர்கள். அதனால் தனித்தனிபிரசினைகளை முன்னிலைப்படுத்தி போராடுவதல்ல சமூக மாற்றத்தை விரும்புவோரின் நோக்கம் ஒட்டுமொத்த பிரச்சினையும் ஒழிப்பதே நம் முன் உள்ள பணி சிந்திக்கவும் தோழர்களே.
நம் சமூகத்தில் உள்ள சீர்திருத்தவாதிகள், திருத்தல்வாதிகள், சட்டவாதிகள், அம்பேத்கர் பெரியார் பின்னால் ஒளிந்து கொண்டு சமூக மாற்றத்தை பற்றி துளியும் அக்கறையின்றி, ஏதோ ஒரு வகையான நடைமுறையில் ஆம் தன்னியல்பான நடைமுறையில் ஓடிக் கொண்டுள்ளார்கள். இவை ஆளும் வர்க்க தேவைக்கானதே, இவை எவ்வகையிலும் மார்க்சித்திற்கு உகந்ததல்ல.
ஆசான் லெனின் வார்த்தைகளை முன் வைத்தே தேடுவோம்
எல்லா நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் வர்க்க
உணர்வை பெற்று உணர்வுமிக்க வாழ்க்கைகாக
விழித்தெழுந்து கொண்டிருக்கிறார்கள். மனிதனை மனிதன் எல்லாவகையிலும் அச்சுறுத்துவதையும், ஒடுக்குவதையும் எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில்
கோடானுகோடி உழைக்கும் மக்கள் இணைந்துக் கொண்டிருக்கிறார்கள். பசியில் இருந்தும் ஏழ்மையிலிருந்தும் அவமதிப்பில் இருந்தும்
விடுவிப்பதற்காக நடைபெறும் போராட்டத்தில் தங்களுடைய உரிமைப்பாட்டை கொண்டு
வருவதையும் போராட துணிந்து விட்டனர்.
மாபெரும் போராட்டத்தில் இரண்டு உலகங்கள் உள்ளதை
காணலாம். ஒன்று மூலதனதின்
உலகம் மற்றொன்று உழைப்பின் உலகம்.
சுரண்டல் அடிமைத்தனத்தின் உலகமான மூலதனத்தின் உலகமும், உழைக்கும் மக்களின் உலகமான சகோதரத்துவம், சுதந்திர போராடும் உலகும் நேருக்கு நேராக போராட்டகளத்தில் நிற்கின்றன.
ஒரு பக்கத்தில் ரத்தத்தை உறிஞ்சும் பணக்காரர்கள்
நிற்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள் தொழிற்சாலைகளையும் பல்வேறு
விதமான இயந்திர தொழில்நுட்பக் கருவிகளையும் நாட்டின் பெரும்பான்மையிலான சொத்துகளை
கைப்பற்றியவர்கள் கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் மலைகள் போன்ற
பண குவியல்களையும் தங்களுடைய தனிச் சொத்தாக மாற்றியவர்கள். அரசாங்கத்தையும், ராணுவத்தையும் தங்களுடைய வேலைக்காரர்களாக தாங்கள் திரட்டிய
செல்வத்தை பாதுகாக்கும் விசுவாசமான காவல் நாய்களாக மாற்றியவர்கள் மறுபக்கத்தில் கோடான கோடி ஏழை உழைக்கும் மக்கள் நிற்கிறார்கள். அவர்கள் இந்தப் பண மூட்டைகளிடம்
தங்களை வேலை செய்ய அனுமதிக்கும்படி கெஞ்சுமாறு நிர்பந்திக்கப்படுகிறார்கள். அவர்கள் எல்லா விதமான செல்வத்தையும்
தங்களுடைய உழைப்பின் மூலம் படைக்கிறார்கள். ஆனால் அவர்கள்
தங்களுடைய வாழ்க்கை நிலைமைகள் ஒரு ரொட்டித் துண்டுக்காக
(உணவிற்காக) போராட வேண்டியிருக்கிறது. பிச்சை கேட்பதைப் போல
வேலைக்காக கெஞ்சுகிறார்கள். தங்களுடைய உடல் பலத்தையும், நலத்தையும் முதுகொடிய பாடுபட்டு அழித்துக் கொள்கிறார்கள்.
கிராமங்களில் அழுக்குப் பிடித்த குடிசைகளில் பெரும் நகரங்களில் மிகமோசமான குறுகிய அறைகளில் அடைந்து கிடந்து பட்டினி
கிடக்கிறார்கள் தங்களின் வாழ்விற்காக. ஆனால் இந்த ஏழை
உழைப்பாளிகள் இப்பொழுது பண மூட்டைகளையும் சுரண்டல்காரர்களையும் எதிர்த்து போரிடுகிறார்கள். எல்லா நாடுகளுக்கும் தொழிலாளர்கள்
இயல்பிலிருந்து தேவையிலிருந்து கூலி அடிமைத்தனத்தில் இருந்து உழைப்பை
விடுவிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். பொது உழைப்பால் படைக்கப்பட்ட செல்வம் எண்ணிக்கையில் குறைவான பணக்காரர்களுக்கு அல்ல. பாடுபட்டு உழைக்கின்ற
எல்லோருக்கும் பயன் தரக்கூடிய சமூக அமைப்பை உருவாக்குவதற்காக
அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலத்தையும், தொழிற்சாலைகளையும், இயந்திர சாதனைகளையும் உழைப்பாளிகளுக்கு பொதுவான சொத்தாக
மாற்ற அவர்கள் விரும்புகிறார்கள். பணக்காரர்கள் ஏழை என்ற பிரிவை ஒழித்து உழைப்பவன் பலன்கள் உழைப்பாளிகளுக்கு
கிடைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். மனிதனுடைய அறிவின் மகத்தான
சாதனைகளுக்கு உழைப்பு முறையில் ஏற்படுகின்ற எல்லா வளர்ச்சியும் உழைக்கின்ற
மனிதனின் நிலையை முன்னேற வேண்டும். அவனை ஒடுக்குகின்ற கருவியாக பயன்படுத்தக்
கூடாது என்று அவர்கள் விரும்புகிறார்கள். மூலதனத்தை எதிர்த்து உழைப்பு நடத்துகின்ற
மாபெரும் போராட்டத்தில் எல்லா நாடுகளையும் சேர்ந்த தொழிலாளர்களும் ஏராலமான தியாகங்களை செய்திருக்கிறார்கள். முன்னை காட்டிலும் சிறப்பான
வாழ்க்கைக்காக உண்மையான சுதந்திற்காகவும் தங்களுடைய உரிமையை
வலியுறுத்தி அவர்கள் கொட்டிய ரத்தம் ஆறுகளாக ஓடுகிறது. தொழிலாளர்களின்
முன்னேற்றத்துக்காக போராடுபவர்களுக்கு அரசாங்கம் சொல்ல முடியாது கொடுமைகளை கொடுக்கின்றன. ஆனாலும் எல்லா கொடுமைகளையும் மீறி உலக
தொழிலாளர்களின் ஒருமைப்பாடு வளர்ந்து கொண்டும் இருக்கிறது. என்றார் லெனின் அன்று
ஆனால் இன்று நிலைமை உங்கள் முன் உள்ளது.
இப்பொழுது நடைபெற்று வருகின்ற சம்பவங்கள் உழைக்கும் மக்கள் திரளின் விழிப்பு அதிக
வேகமாகவும், விரிவானதாகவும்
இருக்கின்றது. பாட்டாளி வர்க்க அணிகளை ஒன்றுபடுத்துவதற்கும் இன்னும் உறுதிமிக்க
போராட்டத்துக்கு அவர்களை
தயாரிக்கவும், நாம் நமது பலத்தை திரட்ட வேண்டும். பாட்டாளி
வர்க்கத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியில் கூட அரசியல் விவகாரங்களில்
பிரச்சினைகளில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். முழுமையாக அழுகிக்
கொண்டிருக்கும் இந்த ஆளும் வர்க்கத்தை அம்பலப்படுத்தி உழைக்கும் மக்களின் விடுதலைக்கானப்பணி
என்னவென்பதை புரிய வைக்க வேண்டும்.
இங்கும்
இவைதானே உண்மை சமூகத்தை சாதியாக பார்ப்பவர்களும், தேசிய இனப்பிரச்சினையை முன்னிலைப்படுத்துபவர்களும்
மேல் உள்ள உண்மையை ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா? இவைதான் இன்றைய ஏகாதிபத்திய காலகட்டத்தில்
உலகு தழுவிய நிலை இந்தியா தமிழ்நாடும் விதிவிலக்கல்ல தோழர்களே.
தொடர்ந்து விவாதிப்போம் தோழர்களே...
No comments:
Post a Comment