அரசுபற்றி லெனின் விளக்கத்துடன் PDFல்

 தோழர்களே,

நம்மிடையே உள்ளோர் நாம் வாழும் வர்க்க சமூகத்தில் அரசை புரிந்துக் கொள்வதில் உள்ள குழப்பங்களை கணக்கில் கொண்டே ஆசான் லெனின் நூலை அவர் சொல்லாடலை அப்படியே முன் வைத்து அதனை இங்குள்ளோர் தேவையை கணக்கில் கொண்டு நம் நாட்டில் புரிந்துக் கொள்ள வேண்டியதை விளக்கி எழுதியுள்ளேம். இதில் ஆசானின் எந்த வார்த்தையையும் நாங்கள் மாற்றவில்லை அவை பக்கம் வாரியாக அப்படியே குறிப்பிட்டு அதற்கான விளக்கத்தினை கொடுத்துள்ளோம் உங்களின் அவசியமான பங்களிப்பு வாசித்து விமர்சிக்க வேண்டுவதே. 


ஒடுக்கும் முதலாளித்துவ வர்க்கங்கள், மாபெரும் புரட்சியாளர்களை அதாவது அவர்களுடைய வாழ்நாளில் ஓயாமல் வேட்டையாடின. அவர்களுடைய கருத்துக்களின் மீது வெறுப்பு கொண்டு கயமைத்தனமான அவதூறு பிரச்சாரங்கள் செய்தார்கள். ஆனால் அவர்கள் மறைந்தபின்பு அவர்களை அபாயமற்ற பூஜையறை படங்களாக்கி அவர்களை வழிபாட்டுக் குரியவர்களாக மாற்றினர். அதன் மூலம் ஒடுக்கப்பட்டமக்களை ஆன்ம திருப்தி செய்து ஏமாற்றினர். அதே நேரத்தில் மார்க்சின்போதனைகளிலுள்ள புரட்சிகர சாரத்தை மூடி மறைத்துவிட்டு, அதனைதிருத்தி முதலாளி வர்க்கத்தாருக்கு சாதகமான முறையில் மாற்றி மக்களிடம் பிரச்சாரம்செய்து மக்களை முதலாளி வர்க்கங்களிடம் அடிமைப் படுத்துவதில் முதலாளிகளும் தொழிலாளி வர்க்க இயக்கத்திலுள்ள சந்தர்ப்பவாதிகளும் ஒன்றுபடுகிறார்கள்.

இவ்வாறு முதலாளித்துவ அறிவாளிகளும் தொழிலாளி வர்க்க இயக்கங்களிலுள்ள சந்தர்ப்பவாதிகளாலும் மிகவும் அதிகமாக மார்க்சியத்தை திருத்தி மக்களை குழப்பத்திற்குள் ஆழ்த்திய மார்க்சிய போதனைகளில் மிகவும் முதன்மையானது அரசு பற்றிய மார்க்சிய போதனையையே ஆகும்.

ஏனெனில் மார்க்சின் போதனைகளிலேயே மிகவும் முதன்மையான, மற்றும் உழைக்கும் மக்களாலும், அதன் முன்னணிகளாலும் உணர்ந்து, புரிந்து கொண்டு செயல்படுத்த வேண்டிய கொள்கை என்பதுஅரசு பற்றிய மார்க்சியக் கொள்கையாகும். அரசு பற்றிய மார்க்சியகொள்கையில் உழைக்கும் மக்களுக்கும் அதன் முன்னணிகளுக்கும் குழப்பம்இருந்தால் ஆளும் முதலாளி வர்க்கமும், தொழிலாளிவர்க்க இயக்கத்திலுள்ள சந்தர்ப்பவாதிகளும், மக்களும் அதன் முன்னணிகளும் மார்க்சியத்தின் அடிப்படைகளையே புரியவிடாமல் செய்துவிட முடியும், மேலும் மார்க்சிய சித்தாந்தத்தின் மீதே நம்பிக்கை இழக்கச்செய்ய முடியும். உலக வரலாற்றிலும், இந்திய வரலாற்றிலும் முதலாளித்துவ (ஏகாதிபத்திய) வர்க்கமும், சந்தர்ப்பவாதிகளும் அரசு பற்றிய மார்க்சிய போதனைகளை திருத்தி மக்களிடம் பிரச்சாரம் செய்து மக்களை நம்ப வைத்தார்கள். அதன் மூலம் முதலாளிகள், அவர்களை பாதுகாத்துக்கொண்டு தற்போது கொடூரமான முறையில் அதாவது பாசிச முறையில்உழைக்கும் மக்களை சுரண்டிக் கொண்டும் ஒடுக்கிக் கொண்டும் இருக்கிறார்கள். இந்த சூழலில் அரசு பற்றிய மார்க்சிய போதனைகளை உழைக்கும் மக்களும் அதன் முன்னணியினரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

‘’அரசு குறித்த சந்தர்ப்பவாதத் தப்பெண்ணங்களை எதிர்த்துப் போராடாமல், பொதுவில் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்தும், குறிப்பாய் ஏகாதிபத்திய முதலாளி வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்தும் உழைப்பாளி மக்களை விடுவிக்கப் போராடுவது சாத்தியமன்று.’’ என்றார் லெனின்.

ஆகவே அரசு குறித்த சந்தர்ப்பவாதிகள் அதாவது மார்க்சிய போதனையை திருத்தி விளக்கம் கொடுத்து மக்களை ஏமாற்றும் திருத்தல்வாதிகளின் கொள்கைகளை எதிர்த்துப் போராடாமல் மக்களை விடுவிக்க நாம்போராட முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

‘’அரசின்பால்சோசலிசப் பாட்டாளிவர்க்கப் புரட்சிக்குள்ள போக்கு குறித்த பிரச்சனை நடைமுறை அரசியல் முக்கியத்துவம் மட்டுமின்றி, இன்றைய மிக அவசர அவசியப் பிரச்சனையாகவும் (முதலாளித்துவக் கொடுங்கோன்மையிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள வெகுஜனங்கள் கூடிய சீக்கிரத்தில் என்ன செய்ய வேண்டியிருக்கும் என்பதை அவர்களுக்கு விளக்கிச் சொல்லும் பிரச்சனையாகவும்) முக்கியத்துவம் பெற்று வருகிறது’’ என்றார் லெனின். அரசுக்கும் பாட்டாளி வர்க்கம் தன்னை விடுவித்துக் கொள்வதற்கான போராட்டங்களுக்கும் இடையிலான உறவை உழைக்கும் வர்க்கம்மற்றும் அதன் முன்னணிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்பது நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் முதலாளித்துவ கொடுங்கோன்மை குறிப்பாக இன்றைய பாசிஸ்டுகளின் கொடுங்கோன்மை நிலவுகின்ற சூழலில் உழைக்கும் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்என்பதை வழிகாட்டுவதற்கு அரசு பற்றிய மார்க்சிய கொள்கைகளை புரிந்துகொள்ள வேண்டியது மிகமிகஅவசியமாகும்.

  • “மார்க்சியத்தை திரித்துப் புரட்டுவது என்றுமில்லாத அளவுக்கு மலிந்திருக்கும் ஒரு சூழலில், மெய்யாகவே மார்க்ஸ் அரசு எனும் பொருள்குறித்து என்ன போதித்தார் என்பதைத் திரும்பவும் நிலைநாட்டுவது நமது கடமையாகும். இதற்கு மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களிலிருந்து நீண்ட மேற்கோள்களை தருவது இன்றியமையாதது’’என்றார் லெனின்.

லெனின் காலத்திலேயே மார்க்சியத்தை திருத்தி மக்களை ஏமாற்றும் திருத்தல்வாதக் கூட்டத்தை எதிர்த்துப் போராட வேண்டிய சூழலில் தற்போது மார்க்சியத்தை திருத்துவதோடு மட்டுமல்லாமல் மார்க்சியத்தோடு ஏகாதிபத்திய சீர்திருத்தவாத கொள்கைகளையும் கலந்துகொள்ள வேண்டும் என்ற கலைப்புவாதம், அடையாள அரசியல் போன்ற மார்க்சியத்திற்கு எதிரான கொள்கைகளும் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில், லெனின் சொன்னது போல மெய்யாகவே அரசு பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை உழைக்கும் வர்க்கமுன்னணிகள் கற்றுத் தேர்வது எவ்வளவு அவசியம் என்பதைநாம் புரிந்துகொள்ள வேண்டும், மேலும் அது நமது கடமையாகும்.

லெனின் காலத்தில் திருத்தல்வாதியான காவுத்ஸ்கியின் மார்க்சியத்தை திருத்திய வாதங்களை முறியடிப்பதன் மூலம் லெனின் அரசு பற்றிய மார்க்சின் போதனைகளை மட்டுமல்லாது மார்க்சியத்தை பாதுகாத்தார். எனினும் இன்றைய காலத்திலும் காவுத்ஸ்கி போன்ற திருத்தல்வாதிகள் மட்டுமல்ல ஏராளமான திருத்தல்வாதிகள் அரசு பற்றிய மார்க்சிய கோட்பாடுகளை திருத்தியும் மார்க்சியத்திற்கு நேர் எதிரான கொள்கைகளையும் மக்களிடம் பரப்பி வருகிறார்கள். அவர்களை முறியடிக்க அரசு பற்றிய மார்க்சிய கோட்பாடுகளை படித்து உள்வாங்கி முன்னணிகளை வளர்த்திடுவோம்.

அரசின் தோற்றத்தைப் பற்றி குடும்பம், தனிச்சொத்து, அரசின் தோற்றம் என்ற நூலில் எங்கெல்ஸ் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார். அதாவது ‘’அரசானது எவ்வகையிலும் வெளியிலிருந்து சமுதாயத்தின் மீது வலுக்கட்டாயமாய் இருத்தப்பட்ட சக்தியல்ல; இதேபோல அது எவ்வகையிலும் ஹெகல் வலியுறுத்தும் ‘அறநெறி கருத்தின் எதார்த்தஉருவோ’, ‘அறிவின் பிம்பமும் எதார்த்தமோ அல்ல’. மாறாக சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தின் விளைவே அரசு. இந்தசமுதாதாயம் தன்னுடனான தீராத

முரண்பாட்டில் சிக்கிக்கொண்டு விட்டது, இணக்கம் காணமுடியாத பகை சக்திகளாய்ப் பிளவுண்டுவிட்டது, இந்த பகைமை நிலையை அகற்றத் திறனற்றதாகி விட்டதை ஒப்புக்கொள்வதன் விளைவே அரசு. ஆனால் இந்தப் பகை சக்திகள் முரண்பட்டு மோதிக்கொள்ளும் பொருளாதார நலன்களைக்கொண்ட இந்த வர்க்கங்கள், தம்மையும் சமுதாயத்தையும் பயனற்ற போராட்டத்தில் அழித்துக் கொண்டு விடாமல் தடுக்கும் பொருட்டு, மோதலை தணித்து ‘ஒழுங்கின்’ வரம்பிற்குள் இருத்தக் கூடிய ஒரு சக்தியை வெளிப்பார்வைக்கு சமுதாயத்திற்கு மேலானதாய்த் தோன்றும் ஒரு சக்தியைநிறுவுவது அவசியமாயிற்று. சமுதாயத்திலிருந்து உதித்ததனாலும் சமுதாயத்திற்குமேலானதாய்த் தன்னை அமர்த்திக்கொண்டு மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும்இந்தச் சக்தியே அரசு எனப்படுவதாகும்’’என்றார் எங்கெல்ஸ்.

இதன் மூலம் அரசானது சமுதாயத்திற்கு அப்பால் வெளியிலிருந்து உருவானது அல்ல. அதாவது கடவுளால்உருவாக்கப்பட்டதோ, அல்லதுபுனிதமானதோ அல்ல என்பது மார்க்சியம். ஆனால் முதலாளிகளும்சீர்திருத்த திருத்தல்வாதிகளும் அரசை புனிதமானது என்றே சித்தரிக்கின்றனர். சமுதாயத்தின் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில், வர்க்கங்கள் தோன்றி முரண்பாடுகள் தோன்றி பகைத்தன்மை வளர்ந்து,இந்தப் பகையை தீர்க்க முடியாதநிலை ஏற்பட்டபோதுதான் அரசு தோன்றியது. இந்த வர்க்க பகைமையானது பயனற்ற போராட்டங்களில் ஈடுபட்டு சமுதாயமே அழிந்துவிடாமல் பாதுகாப்பிற்கான ஒழுங்கை ஏற்படுத்துவதற்காகவே அரசு அவசியம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி அரசானது சமூகத்திற்கு மேலானது என்றும் அதற்குகட்டுப்பட வேண்டியது அவசியம் என்ற கருத்தை விதைத்துஉருவாக்கப்பட்டதுதான் இந்த அரசாகும்.

இங்கே சாதிப்பிரச்சனை என்றாலும் தேசிய இனப்பிரச்சனை என்றாலும் வேறு எந்தப்பிரச்சனை என்றாலும் அதனை தீர்ப்பதற்கு ஒரு பொருத்தமானஅரசின் தேவையை நாம் உணர வேண்டும். அதாவது மக்கள் சந்திக்கும்பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதனை ஒரு பொருத்தமான அரசின்மூலமேதான் தீர்க்க முடியும். ஆகவே பிரச்சனைகளை தீர்ப்பதற்கான அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் கண்டறிய வேண்டிதுதான் நமது முதன்மையான கடமையாகும்.

நமக்கான அரசில் யார் யாரெல்லாம் பங்குகொள்ள வேண்டும் என்பதைநாம் தீர்மானிக்க வேண்டும்.

அரசின் கொள்கை முடிவை உருவாக்குவதில் பெரும்பான்மையான மக்களுக்கு பங்கு இருக்க வேண்டும்.

அரசின் கொள்கை முடிவை செயல்படுத்தும் அதிகாரிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

ஆட்சியில் உள்ளவர்கள் தவறு செய்தால் அவர்களை உடனடியாக தண்டிக்கும் அதிகாரம் மக்களுக்கு வேண்டும்.

பெருமுதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். இந்த அரசு அதிகாரிகள் மக்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். அரசின் கொள்கை முடிவெடுப்பதிலும் அதனை நடைமுறைப் படுத்துதலிலும் பெரும்பான்மையான மக்களை நேரடியாக ஈடுபடுத்த வேண்டும்.அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களது போதனைகளை அனைத்து மக்களுக்கும் புரிய வைப்பதற்கான கல்வி இயக்கத்தை நடத்த வேண்டும்.

மார்க்சியம் மட்டுமே உழைக்கும் மக்களுக்கான தத்துவம். மார்க்சியமல்லாத பிற தத்துவங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு எதிராக துரோகம் செய்யும் தத்துவமே என்பதை அம்பலப்படுத்துவதற்கான கல்வி இயக்கத்தை நாம் நடத்திட வேண்டும்.

கம்யூன் வகைப்பட்ட அரசைப் பற்றி கம்யூனிஸ்டுகள் விரிவாகவும் ஆழமாகவும் புரிந்துகொண்டு மக்களிடம் பரப்ப வேண்டும்.


நூலினை PDF வடிவில் உள்ளதனை இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்