ஆசிய பாணி உற்பத்திமுறை பற்றி விவாதம்

 இரட்டை நாக்கு என்பார்கள் இந்தப் படைப்பாளர் தன்னை மார்க்சியவாதி என்று கூறிக்கொண்டே மார்க்சியத்தை எதிர்க்கிறார்.

இந்திய மார்க்சிய முன்னோடிகளான டிடி கொசாம்பி முதல் ஆர் எஸ் ஷர்மா மற்றும் ரொமிலாதாபர் வரையிலான மார்க்சிய வரலாற்று ஆய்வாளர்களை மறுத்து அவர்கள் யாருமே ஆசிய உற்பத்தி முறையை மார்க்ஸ் மூலதன நூலை படைக்க கையாண்ட முறைகளை விமர்சிக்கவில்லை என்று குற்றச்சாட்டு வைக்கிறார்.
அதேபோல soc க்கு ஆசிய பாணி உற்பத்தி முறை பற்றி பதில் தருவதற்காக எழுதப்பட்டதாக கூறும் இவர் தானும் அதே ஆசியபாணி உற்பத்தி முறை குழப்பத்தில் வீழ்ந்து உள்ளது தான் வருத்தமானது. மேலும் தான் வளர்ந்து வந்த அமைப்புகளையும் குற்றம் சாட்டி தான் எதையோ கண்டு விட்டதாக இங்கே தம்பட்டம் அடிக்கிறார். உண்மையாலுமே இவரின் நோக்கம் மார்க்சியத்தை வளர்ப்பதற்கு அல்ல என்பது தெளிவான கூற்றாகும்...
தொடரும் ....
இவர்களின் தேடல் இந்த லிங்கில் உள்ளன...
கீழ் கண்டவை EMS ன் கருத்தே(மார்க்ஸ், ஆசியபாணி உற்பத்தி முறைபாடு மற்றும் இந்திய வரலாறு – ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் (தமிழில்: எஸ்.நாராயணன்)

முதலாளித்துவ மேதைகளும் தேசிய அரசியல்வாதிகளும், இந்திய வரலாறு குறித்த மார்க்சிய அணுகுமுறை ‘முற்றிலும் பொருத்தமற்றது ‘ என நிரூபிக்க பெரிதும் முயற்சிக்கின்றனர். பொருள் முதல் வாதத்தை விடுத்து கருத்துமுதல்வாத அடிப்படையில், அவர்கள், “இந்தியாவின் ‘பன்னெடுங்கால இந்திய பண்பாட்டுச் சாரம்’,  சமூக வாழ்க்கையில்,  வர்க்க போராட்டத்தால் அல்ல, இந்திய சமூகத்தின் ‘பரஸ்பர ஒத்துழைப்பு’ என்பதில் தான்  உள்ளது”  என்கின்றனர். 

இதனை மறுக்கும் மார்க்சிய அறிஞர்கள், வரலாற்று பொருள் முதல் வாதத்தின் அடிப்படை கோட்பாடுகள், மற்ற சமூகங்களைப் போலவே இந்திய சமூகத்திற்கும் பொருந்தும் என நிரூபித்துள்ளனர். கருத்துமுதல்வாத இந்தியக் காலாச்சாரம் என்றத் தோற்றத்திற்குப் பின்னால் திரைமறைவில் உண்மையில் பொருளாயத வளர்ச்சியே உள்ளது என ஏராளமான கட்டுரைகளையும், புத்தகங்களையும் அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர். 
     

பண்டைய கற்கால மனிதனின் ஆயுதங்களின் வளர்ச்சியும், பிற்கால சமூகத்தில் உற்பத்தி கருவிகளின் வளர்ச்சியுமே மனிதனை காட்டுமிராண்டி வாழ்க்கையிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் மீட்டு நாகரீக வாழ்க்கைக்கு முன்னேற  வைத்துள்ளது என்பதை  முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்களும்  கூட ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும் அவர்கள், ‘பரஸ்பர ஒத்துழைப்பு’ என்று கூறப்படுவதற்கடியில் , பண்டைய கிராம சமூகங்களுக்கிடையே  , சமூக முரண்பாடுகளும் வளர்ந்து வந்தன என்பதையும், அவை அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் வழிகோலின என்பதையும் எடுத்துக் காட்டுகிறார்கள். இதன் மூலம் வரலாற்று பொருள் முதல் வாதத்தை மறுப்பவர்கள் கூட, மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிற்கும்  அறிவியல் பூர்வமான வரலாற்றுச் சட்டங்கள் பொருந்தும் என்பதை தவிர்க்க முடியாமல்  ஏற்றுக் கொள்கிறார்கள். 
      

எனினும் இந்திய வரலாற்றை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்வதில் சில இடைவெளிகள் தடையாக உள்ளன. குறிப்பாக சிந்து சமவெளி நாகரீகம் எவ்வாறு அழிந்தது? அதில் அடிமை முறை வழக்கத்தில் இருந்ததா? இருந்திருந்தால் எந்த வடிவில் இருந்தது? அந்த நாகரீகத்தின் எந்தெந்த கூறுகள் பின்னர்  வந்து குடியேறிய ஆரியர்களால் உள்வாங்கப்பட்டன? போன்ற கேள்விகளுக்கும், வளர்ந்துவரும் இந்திய அறிவியல் வரலாறு எழும்பும் இது போன்ற மேலும் பல கேள்விகளுக்கும் காலமும், அர்ப்பணிப்பு மிக்க அறிஞர்களின் கடின உழைப்புமே பதில் சொல்ல முடியும்.

அந்த குறிப்புரைகள், ஆசிய, இந்திய சமூகங்களை மட்டுமல்ல ஒட்டு மொத்த மனித குல வரலாற்றையும் ஆய்வு செய்யும் அறிஞர்களுக்கும் பேருதவியாக இருக்கும். ஏனெனில் அவை வரலாற்றுக்கு முந்தைய புராதன சமூகங்கள் எவ்வாறு பிரிந்தன என்றும் அது எவ்வாறு பல்வேறு வர்க்க வடிவங்கள் உருவாக வழிவகுத்தன என்றும் ஒரு பொதுவான வரைபடத்தைத்தான் தருகின்றன. மார்க்ஸ் கூறுகிறார்:  

“மேய்ச்சல் வாழ்க்கை, அல்லது பொதுவாக சொல்ல வேண்டுமெனில் நாடோடி வாழ்க்கையே வழக்கத்தில் இருந்தது. இனக்குழுக்கள் ஓரிடத்தில் தங்கி வாழாமல் ஆங்காங்கே கிடைப்பனவற்றை பயன்படுத்திக் கொண்டு அவை தீர்ந்து போனதும் அடுத்த இடத்திற்கு நகர்ந்தனர். மனிதர்கள் இயல்பிலேயே ஒரே இடத்தில் வசிப்பவர்களாக இருக்கவில்லை.(வளமான சூழல்களில் தங்களுக்கு தேவையான உணவு கிடைக்கும் நிலையில் குரங்குகளைப் போல் ஒரே மரத்தில் கிடைப்பதில் உயிர் வாழ்ந்திருக்கலாம். மற்றபடி அவர்கள் மற்ற காட்டு விலங்குகள் போலவே அலைந்து திரிந்தனர்.) எனவே அந்த இனக்குழு சமுதாயம், – இயற்கையின் பொது அமைப்பு – நிலத்தை கூட்டு (தற்காலிக) உடைமையாக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும், ஒரு முன்நிபந்தனையாக இருந்ததே அல்லாமல் அதன் பயனாகத் தோன்றவில்லை. 

 

மனிதர்கள் ஒருவாறு ஓரிடத்தில் தங்கி வாழ ஆரம்பித்ததும், 
சிறிய அளவிலேனும் மூல சமுதாயம் மாற்றப்படுவது, பல்வேறு வெளிப்புற, காலநிலை, புவியியல், பௌதீக மற்றும் இதர நிலைகளையும், மற்றும் அவர்களின் தனிச்சிறப்பான இயற்கை அமைப்பான இனக்குழு இயல்பையும் சார்ந்திருந்தது. இவ்வாறு தன்னிச்சையாக உருவான, இரத்தம், மொழி, பழக்க வழக்கம் போன்ற பிற  பொதுவான கட்டுக்குள்  அமைந்த இனக்குழு சமூகம்தான் – அல்லது மந்தை (herd) எனலாம் – வாழ்வுக்கான தேவைகளை பெறுவதற்கான  முதல் முன் நிபந்தனை ஆகும். அதனை மறு உற்பத்தி செய்து, அதற்கு பொருளாயத தெரிவிப்பைக் கொடுப்பதும் அல்லது பொருள் வடிவாக்குவதும் ஆகும்.(மேய்ப்பவர்கள், வேட்டையாடுபவர்கள், முதலிய செயல்கள்). நிலமே மிகப்பெரும் சோதனைக்கூடமாக இருந்தது. அதுவே உழைப்பதற்கான வழிகளையும், உழைப்பு சாதனங்களையும், வாழ்விடத்தையும் வழங்கியது. இதுவே ஒரு சமுதாயத்திற்கான அடிப்படை ஆகும்.நிலத்துடனான மனிதர்களின் உறவு அப்பாவித்தனமானதாக இருந்தது. அவர்கள் தம்மை அதன் சமுதாய உரிமையாளர்களாகக் கருதிக் கொண்டனர். உயிருள்ள உழைப்பினால் (living labour) தன்னை உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்ளும் சமுதாயத்தின் உரிமையாளர்களாகக் கருதினர்.

இது போன்ற சமுதாயத்தின் உறுப்பினர் என்ற வகையில் 
(நேர் பொருளிலும் உருவக பொருளிலும்) மட்டுமே அவர் தம்மை உடைமையாளராகவோ கருதிக் கொண்டார். உண்மையில் இந்த முன்நிபந்தனைகளின் கீழ்தான் உழைப்பின் மூலம் கைவரப் பெறுவது நடக்கிறது.  உழைப்பின் விளை பொருளாக அல்ல, மாறாக அதன் இயற்கையான அல்லது புனிதமான (Devine) முன்நிபந்தனைகளாக தோற்றமளித்தது.   
          

இது போன்ற நிலையிலான சமூகமே ஒரு காலத்தில் உலகமெங்கும் நிலவியது. இங்கே உழைப்புக்கு முன் நிபந்தனையான உழைப்பாளர்களுக்கும் உரிமையாளருக்குமிடையே வேறுபாடு காணப்படவில்லை. சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரே சமயத்தில் உழைப்பவராகவும் உரிமையாளராகவும் இருந்தனர். இதுவே உழைப்புக்கு நிபந்தனையாக இருந்தது‌. சுரண்டுவோர் சுரண்டப்படுவோர் என்ற உறவே இருக்கவில்லை. உடைமையும் உழைப்பும் ஒன்றாக இருந்தன. இதனால் இங்கே ‘பொற்காலம்’ என்று புராதன பொதுவுடைமை நிலவியது. இங்கு மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே முழுமையான சமத்துவம் நிலவியது. 
      

இந்த புராதன சமூக அமைப்பு உடைந்த போதுதான் புதிய சுரண்டலுக்கான உறவுகள் உருவாயின. அதாவது நிறைய புதிய சமூக பொருளாதார  அமைப்புகள் உருவாயின. இங்குதான் புராதன பொதுவுடைமை சமுதாயம் கண்டிப்பாக அடிமை சமுதாயத்தால் இடமாற்றம் செய்யப்படும் எனவும்அது கட்டாயமாக நிலப்பிரபுத்துவத்தால் இடமாற்றம் அடையும் எனவும், மீண்டும் அது முதலாளித்துவத்தால் இடமாற்றம் அடையும் என்றும் எந்திரகதியாக மார்க்சியத்தை பொருத்துவது உடைகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள குறிப்புகளில் மார்க்ஸ், புராதன பொதுவுடைமை சமுதாயம் குறைந்தது நான்கு வகைகளில் மாறுபடுவதாக கூறுகிறார். அவை பண்டைக்கால செவ்வியல் [அடிமைச்] சமூகம் (கிரீஸ் மற்றும் ரோம்), ஜெர்மானிய, ஸ்லாவோனிய, ஆசியபாணி ஆகியவை. 
   

இவைகளை குறிப்பிடுவதால் வேறு வகைகளில் மாற்றம் நிகழ்ந்திருக்காது என்பதாக புரிந்து கொள்ளக்கூடாது. இந்த நான்கு வகையான முதலாளித்துவத்துக்கு முந்தைய அமைப்புகளைப் பற்றிய உண்மை தரவுகளைத்தான் அப்போது மார்க்ஸ் பெற்றிருந்தார்.
       

பண்டைக்கால செவ்வியல் [அடிமைச்] சமூகங்களின் வரலாறு நகரங்களின் வரலாறாகும். ஆனால் இந்த நகரங்கள் நிலவுடமையையும் விவசாயத்தையுமே அடிப்படையாக கொண்டிருந்தன. ஆசிய வரலாறு நாட்டிற்கும் (country) நகரங்களுக்குமிடையே வேறுபாடற்ற ஒற்றுமைத் தன்மையை கொண்டிருந்தது. (பெரிய நகரங்கள், சரியாக சொன்னால், வெறும் அரச குடும்பங்களின் முகாமாகவே இருந்ததாக கருத வேண்டும்; அது உண்மையான பொருளாதார கட்டமைப்பின் மேலடுக்காகவே இருந்தது); மத்திய காலம் (ஜெர்மானிய காலம்) நாட்டுப்புறப் பகுதிகள் வரலாற்றின் நியமப்பாதையாக ஆனதிலிருந்து துவங்குகிறது. அதன் அடுத்தகட்ட வளர்ச்சி நகரங்களையும், நாட்டையும் எதிர்த்து நின்ற போக்கில் இருந்தது; நவீனம் (வரலாறு)  என்பது,  பண்டைய  காலங்களில் நகரங்களை நாட்டுப்புறங்களாக்குவது போல் அல்லாமல், நாட்டுப்புறப் பகுதிகளை நகரமயமாக்குவது என்பதாக இருந்தது. (pp.77-78).


 ஸ்லாவோனிய வகையை பொறுத்தவரை, மார்க்ஸ் ‘ரஷ்ய வகை’ என அழைக்கிறார். அவர் இதனை  “அதிக எண்ணிக்கையிலான வளர்ச்சி படிநிலைகளைக் கடந்து உருவான மிக நவீன வடிவிலான தொன்மை வகை”(p.142), என்கிறார். மீண்டும்:  ‘நில சொத்து சமூகத்தினுடையது, ஆனால் ஒவ்வொரு விவசாயியும் மேற்கு நாடுகளின் சிறு விவசாயிகள் போலவே தனது நிலத்தை தானே உழுது கவனித்து வந்தான். ‘(p.144). மார்க்ஸ் இங்கு ஒரு தேவையான எச்சரிக்கையை விடுக்கிறார்:

‌”புராதன சமூகங்கள் ஒரே மாதிரியான பாணியில் அமையவில்லை. மாறாக, ஒட்டு மொத்தமாக பார்த்தால், அவை தொடர்ச்சியான சமூகத்தின் ஒன்றிணைந்த குழுக்களால்  (social groupings), வேறுபட்ட விதத்திலும் , வேறுபட்ட முதிர்ச்சி நிலையிலும், என தொடர்ச்சியான வளர்ச்சிக் கட்டங்களை குறித்தன. இதில் ஒரு வகை, பெரும்பாலும் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்,    ‘விவசாய சமூகம்’, ரஷ்ய பாணி சமூகமாகும். இதற்கு இணையான மேற்கத்திய சமூகம் ஜெர்மானிய பாணி சமூகமாகும். இது மிக இளையதாகும். 

  ஆசியாவில், ஆப்கன் போன்ற நாடுகளில், ‌’கிராம சமூகம்’ இருந்தது. ஆனால் அவை எல்லா இடங்களிலும் மிக இளைய வடிவமாகும். ஏனெனில் அவையே தொன்மையான சமூக அமைப்புகளில் கடைசி வடிவமாகும். புராதன சமூக அமைப்புகளின் கடைசி கட்டத்தில், விவசாய சமூகமே இரண்டாம் தர சமூகமாக மாறும் கட்டத்தில் இருந்தது. அதாவது பொது சொத்து அடிப்படையிலான சமூகத்திலிருந்து தனி சொத்து அடிப்படையிலான சமூகமாக மாறும் நிலையிலிருந்தது. இந்த இரண்டாம் தர அமைப்பு அதன் தொடர்ச்சியான அடிமைகள் மற்றும் பண்ணை அடிமைகள் அடிப்படையிலான சமூகங்களையும் உள்ளடக்கி இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். (P.144-145). “என்கிறார் மார்க்ஸ்.


‌.எனவே , ‘அடிமை சமூகம்-நிலப்பிரபுத்து சமூகம்-முதலாளித்துவ சமூகம்’ அல்லது   ‘ஆசியபாணி சமூகம்’- முதலாளித்துவ சமூகம் என்ற இரண்டுதான் இந்திய வரலாற்றைப் பற்றிய  மார்க்சிய புரிதலின் துவக்கமும் முடிவுமாகும் என  மந்திரக் கோல் வீசுவது மார்க்சியத்திற்கு எதிரானதாகும். எனவே இந்த சூத்திரத்தை மீண்டும் மீண்டும் கூறுவது,  உண்மை தரவுகளைக் கொண்டு அரும்பாடுபட்டு மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகளுக்கு மாற்றாகாது. இதனை இந்திய வரலாற்றின் மார்க்சிய மாணவர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். 
‌    

அந்த குறிப்புகள், பரிணாம வளர்ச்சி அடிப்படையில், ஆசிய சமூகம்  பற்றி பொதுவாகவும், இந்திய சமூகம் பற்றி குறிப்பாகவும் போதுமான அளவில் உள்ளொளி செலுத்தியுள்ளன. ’கீழைத் தேய ஒடுக்குமுறை அரசு’ அமைப்பில் சொத்து என்ற ஒன்று சட்டப்படி இல்லை என்று கூறுவதை நோக்கி செல்வதாக உள்ளது. உண்மையில் பூர்வீக குடிகள் அல்லது பொது சொத்து என்பதே சொத்து உருவாவதற்கான அடிப்படை ஆகும். பெரும்பாலான இடங்களில் சிறு சமூகங்களுக்குள் தொழிலுற்பத்தி மற்றும் விவசாயம் இரண்டும் இணைந்தே சொத்துக்களை உருவாக்கின. இவை தன்னிறைவு பெற்றதாகவும்,  உற்பத்தி மற்றும் உபரி உற்பத்தி மீதான கட்டுப்பாடுகளை தமக்குள்ளேயே கொண்டதாகவும்இருந்தன.’ 
    

‘இதன் ஒரு பகுதி  உபரி உழைப்பு’, இறுதியில் தனிமனிதனாக உருவான உயர் சமூகத்திற்கு சொந்தமாக இருந்தது. இந்த உபரி உழைப்பு, நன்றி கடனாகவும், ஒற்றுமையின் புகழுக்காகவும், எதேச்சாதிகாரத்திற்கான ஒரு பகுதியாகவும்,  கடவுளாக காட்டப்பட்ட  பூர்வீக குடிகளின் கற்பனையான நிறுவனத்திற்கான ஒரு பகுதியாகவும் , பொது உழைப்பு வடிவில் தரப்பட்டது.’ .என்கிறார் மார்க்ஸ்.(p.70)
      கிழக்கத்திய அடிமை முறையையும் , ஐரோப்பிய அடிமை முறையையும் மார்க்ஸ் ஒப்பீடு செய்திருப்பது சிறப்பானதும் முக்கியமானதும்  ஆகும்.

         இது ஆசியபாணி, ஸ்லாவோனிய பாணி, பண்டைக்கால தன்னாட்சி குடியரசுகள், ஜெர்மானிய பாணி அனைத்துக்கும் பொருந்தும். அதாவது  வேலை (உற்பத்தி) செய்பவனுக்கும்(அல்லது தன்னைத்தானே மறுஉற்பத்தி செய்து கொள்பவன்), உற்பத்தி மறு உற்பத்தி செய்வதற்கான நிலைமைகளுக்கும் இடையிலான உறவு,  அவை  அவனுக்கே சொந்தம் என்பதையே உண்மையில் சொத்து என்பது காட்டுகிறது.எனவே உற்பத்தி செய்வதற்கான நிலைமைகளுக்கேற்ப சொத்து வெவ்வேறு விதமான வடிவங்களை எடுக்கிறது.  உற்பத்தியின் நோக்கம், உற்பத்தியாளரையும், உற்பத்தியாளர் உயிர் வாழ்வதற்கான புற நிலைகளையும் சேர்த்து மறு உற்பத்தி செய்வதே. ……அடிமை முறை, பண்ணை அடிமை முறை மற்றும் இதர., இங்கே உழைப்பவரே மூன்றாவது ஒருவருக்காகவோஅல்லது சமூகத்திற்காவோ தனது உற்பத்தி செய்வதற்கான  இயற்கையான நிலைகளுடன் முன்வருகிறார்.  இதனால் இங்கு சொத்து, சுதந்திரமாக உழைப்பவனுக்கும், அவனது புறநிலைக்கும் உறவாக இனியும் நீடிப்பதில்லை. அது இப்போது முதல் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்கு சென்று விடுகிறது. இதுதான் சமூகத்தின் மூலமும் சமூக உழைப்பின் மூலமும்
உருவாக்கப்பட்ட சொத்தின்  அறிவுபூர்வமான, தேவையான முடிவு [முடிவாக இருந்தாலும்] ( அடிமை சமூகத்தின் இந்த பண்பு  பொதுவான கிழக்கத்திய அடிமை முறைக்கு பொருந்தாது. ஏனெனில் இது ஐரோப்பியரின் கண்ணோட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது).(ப.95) 
      

இங்கே மார்க்ஸ் மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே இந்தியாவிலும் புராதன பொதுவுடைமை சமுதாயத்திலிருந்து அடிமை சமுதாயம் வளர்ந்தது என காட்டும் தவறான முயற்சிகளை சுட்டி காட்டுகிறார். கிழக்கத்திய நாடுகளில் வளர்ந்த அடிமை முறை, அது பண்டைய கிரீஸ் மற்றும் ரோம் நாடுகளில் நடைபெற்ற முறைகளிலிருந்து வேறுபட்டவை. மேலும் கிழக்கத்திய நாடுகளின் அடிமை முறையிலும் கூட மேற்கு ஆசியாவில்(எடுத்து காட்டாக) வளர்ந்தது போல் இந்தியாவில் வளரவில்லை. இங்கு சமூக முன்னேற்றம் முற்றிலும் மாறுபட்ட வழியில் நடைபெற்றது. 
        

மார்க்ஸின் விவரங்கள் நமக்கு கிழக்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளில்    புராதன பொதுவுடைமை சமூகம் எவ்வாறு வர்க்க சமூகமாக மாறியது என்பதனை அறிவதற்கான ஒரு உள்நோக்கு பார்வையை மட்டுமே கொடுத்துள்ளது. 


      மார்க்ஸ், சமூக சொத்து எவ்வாறு பல்வேறு வழிகளில், அரசு மற்றும் தனியார் சொத்துக்களாக அதனுள்ளேயே வளர்ந்தன என்பதையும் , அவை வளர்ச்சி போக்கில் எவ்வாறு பிரிந்தன என்பதையும் விவாதிக்கிறார்.
       

“ஆசியபாணி சமூகம் நிச்சயமாக மிகவும் நீண்ட காலம், இறுக்கமாக நிலைத்துள்ளது. ‘இதற்கு அவை நிறுவப்பட்டிருந்த அடிப்படை கோட்பாடுகளே காரணம். அதாவது தனிமனிதன் சமூகத்திலிருந்து சுதந்திரமாக இருக்கவில்லை; உற்பத்தி சுழற்சி தன்னிறைவு பெற்றதாக இருந்தது; விவசாயம் மற்றும் கைத் தொழில்களிடையே நிலவிய ஒற்றுமை… மேலும் சில…ஒரு தனிமனிதன் சமூகத்துடனான தனது உறவையும் பொருளாதார சூழலையும் மாற்றிக் கொண்டால் நேர்மாறாக அதன் இயக்கவியல்படி  அவனது பொருளாதார சூழல் மாற்றப்படும் அதாவது அவன் வறிய நிலை போன்றவற்றிற்கு  ஆளாவான். (P.83)”
    

ஏன் இந்த” நீண்டகால இறுக்கமான நிலைப்பு” ஆசியாவில் நடந்தது? இதற்கு சாதி முறை ஒரு குறிப்பான , முக்கியமான பங்கை செலுத்தி உள்ளது என்பதை அந்த விவரங்கள் கோடிட்டு காட்டுகின்றன.  மார்க்ஸ் அதற்கு பின்வரும் விவரங்களைத் தருகிறார்:

      “பண்டைய கால அரசுகளில் பூர்வீக குடிகள் இரண்டிலொரு விதத்தில் , அதாவது இரத்த  உறவுகளாலோ அல்லது இடத்தினாலோ, (kindhip or locality)  அமைந்தன. இடத்தை அடிப்படையாகக் கொண்ட பூர்வீக குடிகளுக்கு,  இரத்த உறவு பூர்வீக குடிகள் வரலாற்று ரீதியில் முற்பட்டவர்கள். மேலும் எல்லா இடங்களிலும் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.  அவர்களின் மிக மோசமான மற்றும் இறுக்கமான சாதி நிறுவனங்கள் அவர்களை ஒருவரிடமிருந்தே இன்னொருவரை பிரித்து வைத்திருந்தது,  அவர்களுக்கிடையே திருமண உரிமை மறுக்கப்பட்டிருந்தது, மிக வேறுபட்ட நிலைகளில் வைக்கப்பட்டிருந்தனர், ஒவ்வொருவரும் தங்களுக்கே உரிய மாற்ற இயலாத தொழிலை மேற்கொண்டிருந்தனர்.”  (P.76-77).
மீண்டும் நிச்சயமாக புராதன சொத்து விசைகள்  உற்பத்தியை கட்டுப்படுத்திய பல்வேறு  புற சூழல்களிலிருந்து,  சொத்து உறவுகள் என்பதற்குள் மூழ்கிவிட்டன. அவையே பல்வேறு வகைப்பட்ட சமூகங்களுக்கும் பொருளாதார அடிப்படை ஆகும். அவையே குறிப்பிட்ட சமூக அமைப்புகளாக முன்னதாக கருதப்பட்டன. இந்த அமைப்புகள், உழைப்பவன் தானே தன்னை உற்பத்திக்கான புற நிலைகளின் முன் வைத்துக் கொள்ளும் போது குறிப்பிடத்தக்க அளவில் மாற்றமடைந்தன. (அடிமை முறை மற்றும் பண்ணை அடிமை முறை போன்றவற்றில் இருந்தது போல). இதன் விளைவாக முதன்முதலாக சொத்து (நில சொத்து)தான் தழுவியிருந்த  எளிமையான பொது இயல்பை இழந்தது. மேலும் அதன் சுய அழிவுக்கு வந்தது. இரண்டாவதாக (உற்பத்தி கருவி சொத்துக்கள்) குறிப்பிட்ட வகை உழைப்பாளி- அதாவது கைத்திறன் மற்றும் அதன் தொடர்ச்சியாக உருவான உற்பத்தி கருவிகள் மீதான சொத்து – உற்பத்தி  கட்டுப்பாடுகளின் சொத்திற்கு சமமாக விளங்கியது,  இது அடிமை முறை மற்றும் பண்ணை அடிமை முறையில் இல்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். எனினும் இது சாதிய முறை என்ற வடிவில் ஒத்த எதிர்மறை வளர்ச்சிக்கு வழி வகுப்பதாக இருந்தது. (p.101-102).


      

இரத்த உறவு பூர்வீக குடிகள் சாதி என்ற இறுக்கமான கட்டமைப்பாக வளர்ந்தனர். இது இரண்டு வகையான சொத்துக்கள் உருவாகி ஒத்த எதிர்மறையான வளர்ச்சிக்கு வழிவகுத்தன. இது தவிர்க்கவியலாமல், நீண்ட நெடிய காலத்திற்கு, இறுக்கமாக நிலைக்கும் சமூக பொருளாதார அமைப்பிற்கு வழிவகுத்தது. அதாவது மாற்றம் எய்துவதற்கான நிலையை முடிந்தவரை தடுக்கும் வகையில் இருந்தது. இதுவே இந்திய சமூக கூறுகள் குறித்து மார்க்ஸ் நமக்கு தரும் ஒருசில குறிப்புகள் ஆகும். எனினும் கிடைத்துள்ள தரவுகளைக் கொண்டு இதன் உண்மைத் தன்மைகளை ஆய்வு செய்ய இந்திய வரலாற்று மாணவர்களுக்கும் அறிஞர்களுக்கும் இவை குறிப்பிடத்தகுந்த அளவில் போதுமானவையே.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தனது கட்சித் திட்டத்தில் குறிப்பிட்டிருப்பது போல:
       

முதலாளித்துவ முறையில் வளர்ந்தாலும், இந்திய சமூகம் இன்னும் முதலாளித்துவத்திற்கு முந்தைய வலிமையான கூறுகளையும் தனக்குள்ளே கொண்டுள்ளது.முன்னேறியமுதலாளித்துவநாடுகளில்,  முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூகத்தின் சாம்பலிலிருந்து  வளர்ந்து, முந்தைய சமூகம்,  வளர்ந்து வரும் முதலாளித்துவ வாதிகளால்  அழித்தொழிக்க பட்டது போல்  அன்றி இந்தியாவில் முதலாளித்துவம் முதலாளித்துவத்துக்கு முந்திய சமூகத்தின் மேலடுக்காக  உள்ளது. நூற்றாண்டுகளாக இந்த நாட்டை ஆண்ட பிரிட்டிஷ் காலனியவாதிகளோ, 1947ல் அதிகாரத்தை கைமாற்றிக் கொண்ட இந்தியமுதலாளித்துவ வர்க்கமோ, இந்தபழைய அமைப்பை உதைத்து தள்ளிவிடுவதை முதலாளித்துவ  அமைப்பு சுதந்திரமாக வளர்வதற்கும் அதன்பின் அதை சோசலிச சமூகத்தால் இடமாற்றம் செய்யவுமான முன் தேவையான இதை செய்ய வில்லை. அதனால் இன்றைய இந்திய சமூகம், சாதி, இன, பூர்வீக குடிகள் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ள ஏகபோக முதலாளித்துவ ஆதிக்கம் கொண்ட  ஒருவித வினோதமான கலவையாகும். ஆகவே, இந்த முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூக அமைப்பை, அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒன்றுபடுத்தி அழிக்க வேண்டிய பொறுப்பு கட்சியின் மீதும் தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் விழுந்துள்ளது. மேலும், அதன்மூலம் புரட்சிகர சக்திகளை தங்களுக்குள் ஒருங்கிணைத்து,  அதிவிரைவில் ஜனநாயக புரட்சியை நடத்தி முடித்து அதன் மூலம் சோசலிச மாற்றத்திற்கான சூழலை ஏற்படுத்தவேண்டும். 
        

அது மட்டுமல்ல இந்திய சமூகம் குறித்து விரைவாக குவியும் உண்மை தரவுகளைக் கொண்டு அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து ‘நீண்டகாலமாக மிகவும்இறுக்கமாக  நிலைகொண்டு இருக்கின்ற’  முதலாளித்துவத்திற்கு  முந்தைய சமூக  அமைப்பு என்ற மார்க்சிய புரிதலை வலுவாக்க வேண்டியது மார்க்சிய அறிஞர்களின் பொறுப்பாகும். அத்துடன் அவர்கள், பண்டைய காலம் முதல் இன்று வரையிலான இந்திய வரலாற்றை மறு கட்டமைப்பு செய்ய முயற்சி எடுக்க வேண்டும். 

தொடரும்....

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்