சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? லியுஷாவோகி -பாகம்- 2 இலக்கு 54 இதழிலிருந்து

 இப்போது ஒரு எடுத்துக்காட்டை கவனிப்போம். கிட்டத்தட்ட ஒரேமாதிரியான சூழ்நிலைகளில் - பணி நிலைமைகளில் புரட்சிகர மக்கள்திரள் போராட்டங் களிலும் புரட்சிகர நடைமுறையிலும் கம்யூனிஸ்டுகள் பலரும் பங்கேற்கின்றனர். ஆனால், இந்தப் போராட்டங்களின் பாதிப்புகள் எல்லா உறுப்பினர்கள் மீதும் ஒரே மாதிரியானதாக இல்லாமற்போக வாய்ப்புகள்உள்ளன. சிலர் வேகவேகமாக முன்னேறு கின்றனர்; சிலர் சற்று பின்தங்கி ஆனால் மெதுவாக முன்னேறுகின்றனர். கட்சியின் சில உறுப்பினர்கள் மிகமிக மெதுவாக முன்னேறுவர். இன்னும் சிலரோ புரட்சிநடைமுறையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கையிலேயே முன்னேற்றம் அடையாமல் ஊசலாட்டத்துக்கு இரையாகி மிகமிகப் பின்தங்கி (தேங்கி) நின்றுவிடுகின்றனர். இதற்கு காரணம் என்ன?



இன்னொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். நமது கட்சியின் எண்ணற்றஉறுப்பினர்கள் நீண்ட பயணத்தில் பங்கேற்றனர்; அது ஒரு கடுமையான புடமிடும் வளர்ச்சிப் போக்காக அமைந்தது; இதில் பங்கேற்ற ஆக மிகப்பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பெருமளவு முன்னேற்றம் அடைந்தனர் என்பதும் உண்மைதான். ஆனால், நீண்ட பயணம் கட்சியில் உள்ளகுறிப்பிட்ட சில உறுப்பினர்கள் மீது எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தியது. நீண்ட பயணத்தில் பங்கேற்றுக் கொண்டிருந்த போதே சோதனையான போராட்டங் களின் முன் சிலர் மலைத்து தேக்கமடைந்தனர்;சிலர் பின்வாங்கி புறமுதுகிட்டு ஓடவும் திட்டமிட்டனர்; மற்றவர்களின் நெருக்குதலுக்கும் அற்ப ஆசைகளுக் குமான தூண்டுதலுக்கும் இரையான சிலர் புரட்சிகர படை வரிசைகளிலிருந்து ஓடினர். எண்ணற்ற கட்சி உறுப்பினர்கள் தோளோடு தோள் நின்று நீண்ட பயணத்தில் பங்கேற்றனர்;இருப்பினும் அவர்கள் மீதான அப்பயணத்தின் பாதிப்புகளும் விளைவுகளும் பெருமளவுக்கு வெவ்வேறாக இருந்தன. இதற்கு காரணம் என்ன? நமது புரட்சிகர அணிகள் சமுதாயத்தில் நடைபெறும் வர்க்கப் போராட்டத்தால் எவ்வாறு பாதிப்படைகின்றனர் என்பதே இந்த நிகழ்ச்சிப் போக்குக்கு அடிப்படையாக இருக்கிறது. நமது கட்சி உறுப்பினர்களின் தராதரங்கள் வெவ்வேறாக உள்ளன; ஏனெனில் அவர்களுடைய சமூகப் பின்னணிகள் வெவ்வேறுவகைப்பட்ட சமூக தாக்கங்களுக்கு உட்பட்டவைகளாக இருக்கின்றன.புரட்சிகர நடைமுறை பற்றிய அவர்களின் போக்கு, நிலைபாடு, புரிதல் ஆகியவற்றில் அவர்களிடையேவேறுபாடுகள் உள்ளன; இதன் விளைவாக புரட்சிகர நடைமுறையினுடைய வளர்ச்சிப் போக்கில் வெவ்வேறு திசைகளில் ஈர்க்கப்படுகின்றனர். இந்த கல்விச் சாலையிலும் நீங்கள் இப்போக்கு களைத் தெளிவாகக் காணலாம். இங்கு நீங்கள் அனைவரும் ஒரே மாதிரியான கல்வியையும் பயிற்சியையும்தான் பெறுகிறீர்கள். ஆனால், உங்களுடைய தரம், அனுபவம் ஆகியவை வெவ்வேறாக உள்ளதால், நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியும் சுயவளர்ப்புப் பயிற்சிக்காக நடவடிக்கைகளும் வெவ்வேறாக உள்ளதால் வெவ்வேறு முடிவுகளை நாம் காண்கிறோம். எனவே, புரட்சிப் போராட்டத்தின் போக்கில் தனிநபர்கள் எடுக்கும் முயற்சிகளும் சுயவளர்ப்புப் பயிற்சிக்கான நடவடிக்கைகளும் முழுக்க முழுக்கஅவசியமானதாகின்றன; தன்னைத்தானே மறு உருவமைத்துக் கொள்வதும் தனது வளர்ச்சி மட்டத்தை இடையறாது உயர்த்திக் கொள்வதும் தவிர்க்கமுடியாத தேவையாகிறது.


நீண்டகாலத்துக்கு முன்போ அல்லது சமீபத்திலோ, புரட்சியில் எப்போதுசேர்ந்தவராக இருந்தாலும், அரசியல்ரீதியில் முதிர்ச்சியடைந்த புரட்சியாள ராக விரும்பும் ஒவ்வொரு கம்யூனிஸ்டும் நீண்ட காலப் புரட்சி போராட்டத்தில் புடமிடுதலுக்கு உள்ளாகியே தீர வேண்டும். மக்கள்திரள் புரட்சிப் போராட்டங்களில் ஈடுபட்டு உருக்குபோல் புடமிட்டுக் கொள்ள வேண்டும்; எல்லாவிதமான இடையூறுகளுக்கும் கஷ்ட நஷ்டங்களுக்கும் தாக்குப் பிடிக்க வேண்டும்; போராட்ட நடைமுறை அனுபவங்களைத் தொகுத்துக் கொள்ள வேண்டும்; சுய வளர்ப்புப் பயிற்சிக்கு பெருமுயற்சிகளை எடுக்க வேண்டும். தனது சித்தாந்த அறிவு மட்டத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். தனது ஆற்றல்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். புதியவை எவற்றையும் பற்றிக் கொள்ளும் அறிவாற்றலை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே, ஒருவர் உயரிய தரமிக்க அரசியல் ரீதியில் உறுதிவாய்ந்த புரட்சியாளர் ஒருவராக தன்னை வளர்த்துக்கொள்ள முடியும். கன்ஃபூசியஸ் கூறியதாவது:-“பதினைந்தாவது வயதில் என் மனம் கற்பதிலேயே குறியாக இருந்தது. முப்பதாவது வயதில் நான் சுயேட்சையாக சிந்திக்கும் நிலையை

அடைந்தேன். நாற்பதாவது வயதில் குழப்பங்கள் நீங்கி தெளிந்த நிலையை அடைந்தேன். ஐம்பதாவது வயதில் இறைவனின் ஆணை என்ன என்பதை தெரிந்து கொண்டேன். அறுபதாவது வயதில் உண்மைக்கு செவிமடுக்கும் நிலையை அடைந்தேன். எழுபதாவது வயதில் சரியானவை எவை என்பதை அறிந்து அந்த வரம்பை மீறாமல் என் மன விருப்பத்தின்படி நடக்கும் நிலையினை எட்டினேன்”.தனதுசொந்தசுயவளர்ப்புப் பயிற்சி யினுடைய நிகழ்ச்சிப் போக்கினை பிரபுத்துவ தத்துவவாதியாகிய கன்ஃபூசியஸ் இங்கு எடுத்துரைத்துள்ளார். தான் ஏதோ ஒரு “ஞானப் பிறவி” என்று அவர் தன்னைக் கருதவில்லை”கடும் உழைப்பினால் நரம்புகளும் எலும்புகளும் உறுதிப்படுதல், பசிக் கொடுமைக்கு உள்ளாகி உடல் வருத்தி மன வலிமை பெறுதல், கடைக்கோடி வறுமையில் உழன்று உடலும் மனமும் பக்குவப்படுதல், தடைபடும் பணிகளளால் மன உளைச்சல் அடைதல் என்ற கொடிய சோதனையான நிகழ்ச்சிப் போக்கில் உயரிய பண்புகளை எட்டுவது என்ற நெடிய புடமிடுதலுக்கு உள்ளாகாமல் ஒருவர் மகத்தான பணிகளை நிறைவு செய்து வரலாற்றில் பெரு முக்கியத்துவமிக்க பாத்திரத்தை ஆற்றும் நிலையினை அடைய இயலாது” என்ற மற்றொருபிரபுத்துவ தத்துவ ஞானி கூறியுள்ளார். வரலாறு முன்னெப்போதும் கண்டிராத உலகை மாற்றியமைத்தல் என்ற “மகத்தான பணியில்” ஈடுபடும் கம்யூனிஸ்டுகள், புரட்சிப் போராட்டங்களில் ஈடுபடுவதன் வாயிலாக தம்மை புடமிட்டுக் கொள்வதற்கும் சுய - வளர்ப்புப் பயிற்சியை மேற்கொள்வதற்கும் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வகைப்பட்ட கம்யூனிச சுய - வளர்ப்புப் பயிற்சி பாட்டாளி வர்க்கப்புரட்சியாளர்கள் அனைவருக்கும் கட்டாயத் தேவையாகும். இந்த சுயவளர்ப்புப் பயிற்சி முறை பாட்டாளி வர்க்கப் புரட்சிகர நடைமுறை யிலிருந்து பரந்துபட்ட உழைக்கும் மக்களிடமிருந்து, இன்னும் குறிப்பாக பரந்துபட்ட பாட்டாளிகளிடமிருந்து விலகியிருக்கக் கூடாது. தோழர் மாசேதுங் கூறியுள்ளதாவது:-”நடைமுறை வாயிலாக உண்மையை கண்டறிவது, மீண்டும் நடைமுறைவாயிலாக உண்மையை சோதித்தறிந்து உண்மையை வளர்ப்பது, புலனறிவிலிருந்து துவங்கி அதை ஆக்கப்பூர்வமான பகுத்தறிவாக வளர்த்தெடுப்பது; அக உலகையும் புறநிலை உலகையும் மாற்றுவதற்காக பகுத்தறிவி லிருந்து தொடங்கி புரட்சிகர நடைமுறையை ஊக்கமாக கடைபிடிப்பது. நடைமுறையிலிருந்து அறிவுக்கு,மீண்டும் நடைமுறை மீண்டும் அறிவு. முடிவில்லாத சுற்றுவட்டமாக மீண்டும் மீண்டும் இது நடைபெறும்; அடுத்தடுத்த சுற்றுகளில் நடைமுறையும் அறிவும் உயர்ந்த மட்டத்துக்குச் செல்லும். அறிவு பற்றிய இந்த இயங்கியல் பொருள்முதல்வாதக் கருத்தியல் அறிதலுக்கும் செயல்படலுக்கும் இடையிலான ஐக்கியம் பற்றிய கருத்தியல் ஆகியவற்றின் முழுமைச் சித்திரம் இதுதான்.

துயரங்கள், கஷ்ட, நஷ்டங்கள், பின்னடைவுகளை எதிர்கொள்ளும் போதானபுரட்சிகர நடைமுறை; அமைதியும் சிக்கலற்றுதுமான வெற்றி மேல் வெற்றி என்ற பாதையினூடாகச் செல்லும் போதான புரட்சிகர நடைமுறை.

இவ்விரு நிலைமைகளிலுமே நமது கட்சி உறுப்பினர்கள் புடமிடுதலுக்குத்தம்மை உட்படுத்திக் கொண்டு சுய- வளர்ப்புப் பயிற்சியைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். நமது கட்சியினுடைய சில உறுப்பினர்கள் வெற்றி ஆரவாரங்கள் எழும் நிலையை எதிர்கொள்ளும் திராணியற்றவர்களாக, தலைகணம் பிடித்தவர்களாக, ஆணவம் பிடித்தவர்களாக, இறுமாப்புஉடையவர்களாக, அதிகார மமதை உடையவர்களாக மாறிவிடுகின்றனர்;

ஊசலாட்டத்துக்கு உள்ளாகி, சீரழிக்கின்றனர்; ஊழலில் திளைப்பவர்களாக மாறி தமது புரட்சிகர இயல்பையையே அடியோடு இழந்துவிடுகின்றனர்.நமது கட்சி உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு சீரழிந்து போவது ஏதோ, நடக்காத நிகழ்வல்ல. கட்சியில் நடக்கும் இத்தகைய நிகழ்வுகளின்பால் தோழர்கள் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். .

உலக வரலாற்று அரங்கில் பாட்டாளி வர்க்கம் வருவதற்கு முந்தையகடந்த சகாப்பங்களில் (யுகங்களில்) உருவான புரட்சியாளர்களில் கிட்டத்தட்ட அனைவருமே வெற்றிகளைச் சாதித்த பின்னர் ஊழலில் மூழ்கி சீரழிந்து போயினர். தமது புரட்சி வீரியத்தை இழந்த அவர்கள், புரட்சி மேலும் வளர்ச்சி அடைவதற்கே தடைக்கற்களாக மாறினர். சீனாவின் கடந்த ஒரு நூற்றாண்டு வரலாற்றில், அல்லது மிகச் சமீபமான கடந்த ஐம்பது ஆண்டுகளில், எண்ணற்ற முதலாளித்துவ மற்றும் குட்டிமுதலாளித்துவப் புரட்சியாளர்கள் முந்தையப் புரட்சிகளினுடைய உள்ளார்ந்த இயல்பின் காரணமாக எதிர்ப் புரட்சிவாதிகளாக மாறினர். உலகவரலாறு நெடுகிலும், ரஷ்யாவின் மகத்தானநவம்பர் சோசலிசப் புரட்சிக்கு முந்தைய காலங்களில் நடந்த புரட்சிகள் அனைத்திலும், ஒரு சுரண்டல் வர்க்க ஆட்சியை ஒழித்து மற்றொரு சுரண்டல் வர்க்கஆட்சியைக்கொண்டு வருவதா கவே எல்லாப் புரட்சிகளும் அமைந்தன. தாமே ஆளும் வர்க்கமாக மாறியவுடன் அந்தப் புரட்சியாளர்கள் தமது புரட்சித்தன்மையினை இழந்து பரந்துபட்ட சுரண்டப்படும் மக்களை ஒடுக்கும் அடக்குமுறையாளர்களாக மக்களுக்கு எதிரிகளாக மாறினர். இந்த சகிக்க முடியாத விதியே சமூக நடப்பாக இருந்தது.

ஆனால் பாட்டாளி வர்க்கப் புரட்சியையும் கம்யூனிஸ்டுக் கட்சியையும் பொறுத்தவரையில் இப்படிப்பட்ட நிலைமைக்கு வாய்ப்பில்லை. பாட்டாளிவர்க்கப் புரட்சி என்பது எல்லா வகையான சுரண்டலையும்,அடக்குமுறையையும் வர்க்கங்களையும் ஒழிப்பதற்கான புரட்சியாகும்.

கம்யூனிஸ்டுக் கட்சி பாட்டாளி வர்க்கத்தை பிரதிநித்துவம் செய்கிறது;பாட்டாளி வர்க்கமே சுரண்டலுக்கு உள்ளாகும் வர்க்கம் என்பதால் அது மற்றவர்களைச் சுரண்டுவதில்லை; எனவே, அது புரட்சியை இறுதி வரையிலும் முன்னெடுத்துச் சென்று, கடைசியில் எல்லா வகையான சுரண்ட லையும் ஒழித்து, மனித சமூகத்தில் உள்ள எல்லா ஊழலையும், எல்லா சமூகஅழுகலையும் கேடுகளையும் துடைத்தெறியும். கறாறாக அமைப்பாக்கப்பட்ட, கட்டுப்பாடு மிக்க, மத்தியத்துவப் படுத்தப்பட்ட ஆனால் அதே வேளையில் ஜனநாயக ரீதியிலான அரசு இயந்திரத்தை கட்டியமைக்கும்; இத்தகைய கட்சியையும் அரசு இயந்திரத்தையும் கொண்டு சமுதாயத்தில் உள்ள எல்லா ஊழலையும், அழுகலையும் ஒழிக்க மக்களைத் திரட்டி இடையறாது போராடும்; கட்சியிலும் அரசு இயந்திரத்திலும் ஊழலையும் அலுகலையும் இல்லாமல் செய்யஇடையறாது போராடுவதன் மூலம், கட்சியிலும் அரசு இயந்திரத்திலும் உள்ள ஊழல் பேர்வழிகளையும் சீரழிந்து போனவர் களையும் (அவர்கள் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருப்பவர்களானாலும்) தொடர்ச்சியாக களையெடுக்கும். இவற்றைச் செய்வதன் வாயிலாக கட்சி மற்றும் அரசு இயந்திரத்தின் தூய்மையைப் பாதுகாக்கும். பாட்டாளி வர்க்கப் புரட்சி, புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி ஆகியவற்றின் முதன்மையான பண்புக் கூறு இதுவே; இத்தகைய பண்புக் கூறுகள் இதற்கு முந்தையப் புரட்சிகளிலும் புரட்சிகரக் கட்சிகளிலும் இருந்ததே இல்லை, இருந்திருக் கவும்

முடியாது. பின்வரும் விசயத்தை நமது கட்சி உறுப்பினர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக புரட்சி வெற்றிமேல் வெற்றி பெற்று முன்னேறும் நிலைமையில், பரந்துபட்ட மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் அவர்கள் பெற்றிருக்கும் நிலையில், அவர்கள் தமது விழிப்புணர்வை கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும். பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தில் தமது சுய-வளர்ப்புப் பயிற்சியை தீவிரப்படுத்த வேண்டும். தமது பாட்டாளி வர்க்க புரட்சிகரப் பண்புக்கூறை எப்போதும் விழிப்புடன் காத்துக் கொள்ள வேண்டும்.இவற்றை எல்லாம் செய்வதன் வாயிலாக, வெற்றி பெறும் தருணங்களில்சீரழிந்து போன முந்தைய புரட்சியாளர்களைப் போல்வீழ்ந்து விடாமல் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். புரட்சிகர நடைமுறை யிலும் பாட்டாளி வர்க்க சித்தாந்தத்திலும் தன்னை புடமிட்டுக் கொண்டு சுய - வளர்ப்புப் பயிற்சியை மேற்கொள்வது ஒவ்வொரு கம்யூனிஸ்டுக்கும் முக்கிய கடமையாகும்; அதிலும் குறிப்பாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் இவற்றை அவர் கறாராககைக்கொள்ள வேண்டும். கம்யூனிஸ்டுக் கட்சி ஏதோ வின்னுலகத்திலிருந்து குதித்துவிடவில்லை; சீன சமுதாயத்தில்தான் இது உருவாகி வளர்ந்தது. கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சீன சமுதாயத்தில்தான் பிறந்து வளர்ந்துள்ளனர். இந்த சமுதாயத்தில்தான் வாழ்ந்து வருகின்றனர். இந்தச் சமுதாயத்தின் விரும்பத்தகாத பாதகமான விசயங்களாலும் அவர்கள் இடையறாது பாதிக்கப் படுகின்றனர். அவர்கள் பாட்டாளி வர்க்கத்திலிருந்து வந்தவர்களானாலும் சரி, அல்லது பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இல்லாமலிருந்தாலும் சரி, கட்சியில் நீண்ட காலம் உறுப்பினர்களாக இருந்தவர்களானாலும் அல்லது சமீபத்தில் சேர்ந்தவர் களானாலும் சரி, அவர்கள் பழைய சமுதாயத்தின் சிந்தனைகளையும் பழக்க வழக்கங்களையும் கூடுதலாக அல்லது குறைவாக கம்யூனிஸ்டுகள் தம்முடன் கொண்டு வருகின்றனர் என்பதில் யப்படைய ஏதுமில்லை. பாட்டாளி வர்க்கப் போராளிகளின் முன்னணிப் படை என்ற முறையில் நமது தூய்மையைப் பேணிக் காக்கவும், தமது புரட்சித் தகுதியையும் வேலை செய்யும் ஆற்றலையும் தாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு ஒவ்வொரு கம்யூனிஸ்டும் எல்லாக் கூறுகளிலும் தன்னை உயர்த்திக் கொள்ள கடினமாக உழைத்து, தன்னைத்தானே புடமிட்டுக் கொண்டு சுய - வளர்ப்புப் பயிற்சியை மேற்கொள்வது கட்டாயத் தேவையாகும்.கம்யூனிஸ்டுகள் சுய - வளர்ப்புப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள் இவைதான். கம்யூனிச சுய - வளர்ப்புப் பயிற்சியினுடைய அடிப்படைக் கூறுகள் பற்றி இனி நாம் விவாதிப்போம்.

குறிப்புகள்:-ஏனானில் செயல்பட்ட மார்க்சிய லெனினிய கழகத்தில் ஆற்றிய உரையே இது. சீர்செய்யும் இயக்க ஆவணங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்ட இது 1945 ஆம் ஆண்டில் விடுதலைப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இது, 1962 ஆம்ஆண்டில் ஆசிரியரால் மீண்டும் சரிபார்க்கப்பட்டு மக்கள் வெளியீட்டகத்தால்மீண்டும் வெளியிடப்பட்டது.

நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை:-

1. கம்யூனிச அமைப்பில் ஒருவர் சேர்ந்துவிட்டாலே அவர்கம்யூனிஸ்டாகவோ, புனிதமானவராகவோ ஆகிவிட மாட்டார். கம்யூனிஸ்டு அமைப்பில் சேர்ந்த பிறகு ஒருவர், அந்தக் கட்சி நடத்தும் போராட்டங்களில் ஈடுபடுகிறார்,அந்தப் போராட்டங்களினால் அவர் மட்டுமல்ல அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒரே விதமான பாதிப்புக்கு உள்ளாவதில்லை, ஒவ்வொருவரும் அவர்களுக்கு உள்ள தனிப்பட்ட அறிவு திறமைக்கு ஏற்ப போராட்ட அனுபவத்திலிருந்து தங்களது அறிவையும் திறமையையும்மேலும்வளர்த்துக் கொள்கிறார்கள். எனினும் கம்யூனிஸ்டுகட்சியின் தலைமையானது கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மார்க்சிய லெனினிய தத்துவக் கண்ணோட்டத்தைப் பெறுவதற்கும், அதன் அடிப்படையில் ஒவ்வொருவரும் சுயமாக சிந்தித்து முடிவெடுப் பதற்கானபயிற்சியைப் பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி ஒவ்வொருகம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களுக்கும் சுய - வளர்ச்சிப் பயிற்சியைவழங்க வேண்டும் என்றுலியுஷாவோகி தனது சிறந்த கம்யூனிஸ்டாவது எப்படி என்ற நூலில் விளக்குகிறார்.

மார்க்சிய லெனினிய தத்துவ கண்ணோட்டத்திலிருந்து சுயமாக சிந்திக்கும் ஆற்றல் கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை எந்தளவுக்கு அதிகமாக ஒரு கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் இருக்கிறார்களோ அந்தளவுக்கு, அந்த கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் மார்க்சியத்துக்கு எதிரான கொள்கைகளை கொண்டுவந்து அந்தக் கட்சியை பிளவுபடுத்தவோ, அல்லது அந்தக் கட்சியை திருத்தல்வாதக் கட்சியாகவோ, கலைப்புவாத கட்சியாகவோ, குட்டிமுதலாளித்துவ குறுங்குழுவாத அமைப்பாகவோ மாற்றிவிட முடியாது என்பதுதான் சர்வதேச கம்யூனிஸ்டு கட்சிகளின் வரலாற்று அனுபவமாக உள்ளது.

இந்தியாவில் உள்ளகம்யூனிச அமைப்புகள் கம்யூனிச அமைப்பாக இல்லாமல், திருத்தல்வாத, கலைப்புவாத, குறுங்குழுவாத அமைப்புகளாக பிளவுபட்டு இருப்பதற்குமுக்கியமான காரணம், கம்யூனிச அமைப்புகளிலுள்ள தலைவர்கள் மட்டுமல்ல, கம்யூனிச அமைப்புகளின் உறுப்பினர்களும் ஒரு முக்கியமான காரணம் ஆகும். கம்யூனிச அமைப்புகளிலுள்ள உறுப்பினர் கள் பெரும்பாலும் மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தைப் பெறவில்லை, அதன் அடிப்படையில் சுயமாக சிந்திக்கும் அறிவையும் திறனையும் வளர்த்துக்கொள்ளவில்லை, மாறாக கட்சியின் தலைவர்கள் சொல்வதை எல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொள்கிறார்கள்.

கட்சித் தலைவர்களின் கருத்துக்களில் தவறு இருக்கிறது என்று யார் பேசினாலும் அவர்களை எதிரிகளாகவே பார்க்கிறார்கள். இதன் மூலம் இவர்கள் மார்க்சிய லெனினியக் கண்ணோட்டம் இல்லாத அறியாமையில் உள்ளார்கள். எப்படி முதலாளித்துவ அறிவாளிகள் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்களோ அது போலவே கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர் களிடத்திலுள்ள அறியாமையைப் (மார்க்சிய சிந்தனை முறையை வளர்காம லிருப்பது) பயன்படுத்தி கம்யூனிசஅமைப்பின் தலைவர்கள் கம்யூனிச அமைப்பை பிளவுபடுத்துகிறார்கள், அல்லது கம்யூனிச அமைப்பை திருத்தல்வாத, கலைப்புவாத, குறுங்குழுவாத அமைப்பாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

2. ரஷ்யாவில் தோழர் ஸ்டாலின் மறைவிற்குப் பின் ரஷ்ய சோவியத்கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்கு வந்த குருஷேவ், கட்சியின் இருபதாவது காங்கிரசில் அவரது திருத்தல்வாதக் கொள்கையைமுன்வைத்தார் என்று குருஷேவின் மீது குற்றம் சாட்டுகிறார்கள். அது உண்மையே, அதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. அந்த தீர்மானத்தை காங்கிரஸ் நிறைவேற்றியதற்கு குருஷேவ் கும்பலுக்கு மட்டுமா பொறுப்பு?இல்லை, அந்த காங்கிரசில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கும், ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சியின் உறுப்பினர் களுக்கும் பங்கில்லையா? அவர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதுதான் உண்மையாகும். இந்த உண்மையை யாரும் பரிசீலிக்கவில்லை. குருஷேவ் கும்பல் திருத்தல்வாத தீர்மானத்தை காங்கிரசில் கொண்டு வந்தாலும், அந்ததீர்மானத்தை கட்சிக் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்த்து ஓட்டுப் போட்டிருந்தால் அந்த தீர்மானம் நிறைவேறி இருக்காதே. அதன் விளைவாக குருஷேவ் கும்பலால் ரஷ்ய சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சியை திருத்தல்வாதக் கட்சியாகமாற்றியிருக்க முடியாதே. ஆகவே இந்த வரலாற்று அனுபவத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

ஒவ்வொரு கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களும் மார்க்சிய லெனினியத்தின் அடிப்படை கோட்பாடுகளை படித்து புரிந்துகொள்ள வேண்டும், அதன் அடிப்படையில் எந்தப் பிரச்சனைகளையும் சுயமாக சிந்தித்து முடிவெடுப்பதற்கான அறிவையும் திறமையையும் வளர்த்துக்கொள்வதற்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் சொல்வதெல்லாம் சரி என்று தலையாட்டி பொம்மை களாக இருக்கக் கூடாது. தலைவர்களே சொன்னாலும் அது சரியா அல்லது தவறா என்று சுயமாக சிந்தித்து தனதுமாறுபட்ட கருத்தை முன்வைத்து போராட வேண்டும்.

ஆகவே ஒருகம்யூனிஸ்ட் கட்சி தவறு செய்கிறது என்றால் அதற்கு காரணம் அந்தக் கட்சியின் தலைவர்கள் மட்டுமல்ல, கட்சி உறுப்பினர்களுக்கும் பங்குண்டு என்பதை ஒவ்வொரு கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களும் உணர்ந்துஅவர்கள் சுய - வளர்ப்புப் பயிற்சியைப் பெற வேண்டும். இதற்கு மாறாக கட்சியிலுள்ள ஒரு சிலரை மட்டும் குற்றவாளியாக்குவது தவறாகும்.

கட்சிக்குள் தவறு செய்பவர்களை திருத்துவதற்கு ஒவ்வொருஉறுப்பினர்களும் முயற்சி செய்ய வேண்டும். பலமுறை சொல்லியும்கேட்க்காமல் திருந்தவே திருந்தாவர்களை மட்டுமே கட்சியைவிட்டு வெளியேற்ற வேண்டும். இதற்கு மாறாக குருஷேவ் டாங்கே போன்றவர்கள் மீது மட்டும் குற்றம் சாட்டிவிட்டு கம்யூனிஸ்டுக் கட்சிஉறுப்பினர்களிடையே மார்க்சிய அறிவை வளர்த்துக்கொள்ளாத குற்றத்தை மூடிமறைக்கக் கூடாது. ஆகவே இதுவரை நடந்த கம்யூனிச இயக்க வரலாற்றில் கம்யூனிஸ்டுகளின் வெற்றிக்கு எப்படி கட்சியின் உறுப்பினர்களும் உழைக்கும் மக்களும் அடிப்படையோ அதே போலவே கம்யூனிஸ்டுகளின் தோல்விகளுக்கும் கம்யூனிஸ்டுக் கட்சித்தலைவர்கள் மட்டுமல்லாது கட்சி உறுப்பினர்களும் உழைக்கும் மக்களும் அடிப்படையாகவே உள்ளனர்.

ஆகவே ஒரு சரியான கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களின் முதன்மையான பணியானது கட்சி உறுப்பினர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் அறிவுத் திறமையை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்க்கப்பட்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களால் மட்டுமே புரட்சியை நடத்துவதோடு புரட்சியை பாதுகாத்து வளர்க்கவும் முடியும்.

3. ரஷ்ய கம்யூனிஸ்டுகள் ஜார் மன்னனை எதிர்த்தும், கெரென்ஸ்கி அரசை எதிர்த்தும் உள்நாட்டுப் போரை நடத்தினர். அதன் பின்பு பாசிஸ்டுகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும் போரிட்டனர். அதன் காரணமாக ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்த பாட்டாளி வர்க்க உணர்வுபெற்ற பல சிறந்த தலைவர்கள் மரணம் அடைந்தார்கள். அதற்குப் பின்பு ரஷ்ய கம்யூனிஸ்டுக்கட்சிக்குள் ஸ்டாலின் போன்ற ஒரு சில தலைவர்கள் மட்டுமே பாட்டாளி வர்க்க உணர்வு பெற்ற தலைவர்கள் இருந்தார்கள். மேலும் பெரும்பாலான தலைவர்கள் குருஷேவ் போன்ற சுயநலவாத தலைவர்களாகவேஇருந்தார்கள். இதன் காரணமாகவே கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்ளும் மக்களிடையேயும்மார்க்சிய போதனைகளை போதிய அளவு அந்தக்கட்சியால் செய்ய முடியவில்லை.அதன் விளைவாக ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்ளும் மக்களிடையேயும் மார்க்சியத்துக்கு எதிரான கருத்துக்களை குருஷேவ் கும்பலால் வளர்க்க முடிந்தது. இந்த பலவீனமான நிலையைப்பயன்படுத்தித்தான் குருஷேவ் கும்பல் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமையையும் சோவியத்து அரசின் தலைமை யையும் கைப்பற்றி கட்சியை திருத்தல்வாத கட்சியாகவும், சோவியத்து அரசை அதிகார வர்க்க அரசாகவும் மாற்ற முடிந்தது. அது போலவே இந்தியாவிலும் பாட்டாளிவர்க்க உணர்வில்லாத கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் பாட்டாளி வர்க்க உணர்வை ஊட்டாமலும், மார்க்சிய சோசலிச சிந்தனை முறையை வளர்க்காமலும், அவர்களுக்கு சுய - வளர்ச்சிப் பயிற்சியைகொடுக்காததனினாலும் கட்சி உறுப்பினர்களும் உழைக்கும் மக்களும் மார்க்சியத்தை அறியாத அறியாமையில் ஆழ்த்தப்பட்டார்கள். இவ்வாறுஅறியாமையிலுள்ள கட்சி உறுப்பினர்களையும் உழைக்கும் மக்களையும் ஏமாற்றி கம்யூனிஸ்டுக் கட்சியை திருத்தல்வாத, கலைப்புவாத,குறுங்குழுவாத அமைப்புகளாக மாற்றிவிட்டனர். இப்போதும் கட்சி

உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் மார்க்சி யத்தின் அடிப்படைகோட்பாடுகளை போதிப்பதால் எவ்விதமான பயனும் இல்லை என்று சொல்லி கட்சி உறுப்பினர்களையும் மக்களையும் மார்க்சிய அடிப்படை அறிவில்லாத மூடர்களாகவே வைத்திருப்பதையே தங்களது கொள்கையாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதன் காரணமாகவே அவர்கள் பல குழுக்களாகப் பிளவுபட்டுக் கிடக்கிறார்கள்.

முதலாளித்துவ அரசியல்வாதிகளோடு கூட்டணி அமைக்கிறார்கள்,முதலாளிகளிடம் பாட்டாளி வர்க்கத்தை சரணடையச் செய்கிறார்கள். ஆகவே கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களும் உழைக்கும் மக்களும்எந்தளவுக்கு மார்க்சிய சிந்தனை முறையை வளர்த்துக் கொள்கிறார்களோ, எந்தளவுக்கு சுய-வளர்ப்புப் பயிற்சியை பெறுகிறார்களோ அந்தளவுக்கு அவர்களை யாராலும் ஏமாற்ற முடியாது. அத்தகைய மக்களிடமிருந்துபுரட்சியாளர்கள் உருவாவார்கள், அவர்கள் புரட்சிகரமான கட்சியை கட்டி எழுப்பு வார்கள் புரட்சியையும் நடத்தி முடிப்பார்கள். ஆகவே ஒவ்வொரு கம்யூனிஸ்டும் மார்க்சிய சிந்தனை முறையை வளர்க்க வேண்டும். சுய -வளர்ச்சிப் பயிற்சியைப் பெற வேண்டும். அதன் மூலம் நாம் சாதனைகள்புரியலாம்.

4. சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் வரலாற்றில் நீண்ட பயணம், புரட்சிக்குஒரு முக்கியமான பங்காற்றியது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர் களில் பலர் புடம் போட்டு எடுக்கப்பட்டனர். அதேவேளையில் ஒருசிலர் முன்னேறாமல் தேக்கம் அடைந்தனர் வேறு சிலர் புரட்சிகர இயக்கத்தைவிட்டு பின்னடைந்து வெளியேறினார் கள். இதன் மூலம் நாம் தெரிந்துகொள்வது என்ன? கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்து போராடுபவர்கள் அனைவரும் போராட்டங்களில் ஈடுபட்டு பலமானவர்களாக மாறிவிடமாட்டார்கள்.அவர்களில் சிலர் போராட்டத்தினால் ஏற்படும் துன்பங்களை சகிக்க முடியாமல் பின்வாங்கி விடுவதற்கு வாய்ப்புகள்உள்ளது. இவ்வாறு பின்வாங்குபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமானால் கட்சியானது தொடர்ந்து தனது அணிகளுக்கு வர்க்க உணர்வை ஊட்டி வளர்க்க வேண்டும். நாம் தற்போது வாழ்ந்துகொண்டு இருக்கும் வாழ்க்கையானது மிகவும் துன்பமானதாக உள்ளது. இத்தகையமோசமான வாழ்க்கை வாழ்ந்து இழிவான சாவை சந்திப்பதைக் காட்டிலும்புரட்சியில் ஈடுபட்டு சாவது எவ்வளவோ மேலானது என்ற உண்மையை அணிகளுக்கு தொடர்ந்து போதிக்க வேண்டும். சுய - வளர்ச்சிப் பயிற்சியை ஒவ்வொருவருக்கும் வழங்குவதன் மூலம் இந்த சமூகத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு காரணமானவர்களையும் அவர் களிடத்திலுள்ள அரசியல் அதிகாரத்தையும் ஒழித்துக் கட்டாமல் உழைக்கும் மக்களுக்கு வாழ்வே இல்லை என்பதை ஒவ்வொரு கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களுக்கும் உணர்த்த வேண்டும். மேலும் புரட்சியில் வெற்றி பெற்ற பின்பும் கட்சிக்குள்ளும் பாட்டாளி வர்க்க அரசுக்குள்ளும் குருஷேவ் போன்ற சுயநலவாதிகள் அவர்களிடமுள்ள பிற்போக்கு மற்றும் மக்களுக்கு எதிரான கொள்கைகளை கொண்டுவந்து நம்மை ஏமாற்றி நம்மை ஒடுக்குவதற்கு முயற்சி செய்வார்கள் என்று எச்சரித்து நாம் எப்போதும் எச்சரிக்கையோடு சித்தாந்தப் போராட்டத்தை நடத்து வதற்கான வலிமையை தொடர்ந்து பெறுவதற்கு முயல வேண்டும். அதன் மூலம் மட்டுமே கம்யூனிச அமைப்பிற்குள் மார்க்சியத்து எதிரான கருத்துக்களை நுழையவிடாமல் தடுக்க முடியும்.

5. சமூகத்தில் உள்ள மனிதர்களில் ஒவ்வொருவரும் வெவ்வேறான வாழ்க்கை முறையிலும் பழக்க வழக்கங்களும் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆகவே சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி நடத்திய மார்க்சியப்

பள்ளிகளில் இவர்கள் அனைவருக்கும் ஒரே மார்க்சிய கல்வியை வழங்கிய போதும், ஒவ்வொருவரும் அதனை புரிந்துகொள்ளவது அவர்களின் தரம் அறிந்து கொள்வதற்கான திறன்றுபாட்டால் வெவ்வேறுவிதமான

நிலைகளை அடைகிறார்கள் என்றார் லியுஷாவோகி. இருந்த போதிலும் சுய- வளர்ப்பு பயிற்சி பெறுவதன் மூலம் ஒவ்வொரு கம்யூனிஸ்டு உறுப்பினர்களும் தன்னைத்தானே மறு உருவாக்கம் செய்து கொள்ள முடியும் என்றும், தனது அறிவு மற்றும் திறமைக் கான மட்டத்தை இடையறாது வளர்த்துக் கொள்ளவும் முடியும் என்றார். இதனால் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொரு வரும் சுய-வளர்ச்சிப் பயிற்சி பெறுவது அவசியமாகும்என்றார்.இத்தகைய சுய-வளர்ப்புப் யிற்சியை கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கக் கூடியதலைவர்கள்தான்உண்மையான கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களாக இருக்க முடியும்.

இந்தக் கடமையை செய்யத் தவறுபவர்கள் கம்யூனிஸ்டாக இருக்கவே முடியாது. குட்டி முதலாளித்துவாதத் தலைவர்களாக இருப்பதற்கு தகுதியானவர்களாக மட்டுமே இருக்க முடியும்.

6. ஒருவர் கம்யூனிச புரட்சியாளராக வளர வேண்டுமால் அவர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை கீழ்கண்டவாறு லியுஷாவோகி

விளக்குகிறார்.

1) கட்சி நடத்தும் போராட்டங்களில் நீண்டகாலம் கலந்துகொண்டு புடம்போடப்பட வேண்டும்.

2) போராட்டங்களில்ஈடுபடும்போதும் கட்சிப் பணிகளில் ஈடுபடும் போதும் எதிர்கொள்ளும் கஷ்ட நஷ்டங்களை சகித்துக் கொண்டு தாக்குப்பிடிக்க வேண்டும்,3) போராட்டங்களிலிருந்தும் கட்சி அமைப்பு நடவடிக்கைகளிலிருந்தும் அனுபவங்களைத் தொகுத்துக்கொள்ள வேண்டும்.

4) சுய - வளர்ப்புப் பயிற்சியை பெருமுயற்சி எடுத்து மேற்கொள்ள வேண்டும்.

5) தனது சித்தாந்த அறிவு மட்டத்தை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும்.

6)தனது திறமையை தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.

7)புதியவற்றை நன்கு ஆழமாகப் புரிந்துகொள்ளும் வகையில் தனதுஅறிவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும், இவற்றை எல்லாம்நிறைவேற்றுவதன் மூலமே ஒருவர் தன்னை கம்யூனிச புரட்சியாளராக

வளர்த்துக்கொள்ள முடியும் என்றார் லியுஷாவோகி. அவரது இந்த போதனையை ஒவ்வொரு கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினரும் பின்பற்றுவதன் மூலமே கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் உள்ள உறுப்பினர்களுக்கு இடையே சீரான வளர்ச்சியை நாம் ஏற்படுத்த முடியும்,அதாவது கம்யூனிஸ்டுக் கட்சியிலுள்ள பெரும்பான்மையான

உறுப்பினர்களை கம்யூனிச புரட்சியாளர்களாக வளர்க்க முடியும்.

7. “நடைமுறையிலிருந்து அறிவுக்கு, மீண்டும் நடைமுறை மீண்டும் அறிவு. முடிவில்லாத சுற்றுவட்டமாக மீண்டும் மீண்டும் இது நடைபெறும்” என்றார் மாவோ.

நடைமுறை அனுபவத்திலிருந்து கருத்துக்களை மனிதர்கள் உருவாக்குகிறார்கள். பின்பு உறுவாக்கிய கருத்து சரிதானா என்பதை மீண்டும் நடைமுறையின் மூலமாகவே சோதித்து அறிவதற்கு முயற்சிக்கிறார்கள். இவ்வாறு நடைமுறை பின்பு அறிவு, மீண்டும்நடைமுறை அதன் பின்பு அறிவு என்ற சுற்று வட்டத்தின் மூலமே அறிவை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த சுழற்சியின் போது ஒவ்வொரு சுழற்சியின் முடிவிலும் நமது அறிவானது ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு வளர்கிறது. நடைமுறை அனுபவத்தி லிருந்து படிப்பினை பெற்றுக் கொண்டு தனது கருத்தை வளர்த்துக்கொள்ள மறுப்பவர்களால் அவர்களது அறிவை வளர்த்துக் கொள்ளவும் முடியாது, உண்மையைஅவர்களால் அறிந்து கொள்ளவும் முடியாது. அத்தகைய தன்மை படைத்தவர்களால் தலைமை தாங்கப்படும் கட்சியானதுவளராது, அதற்குமாறாக அந்தக் கட்சியானதுதேய்ந்துகொண்டேபோகும்.இந்தியாவிலுள்ள கம்யூனிச அமைப்பின் தலைவர்களில் பெரும்பாலோர் தங்களது சொந்த நடைமுறை அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதில்லை. அதன்காரணமாக அவர்கள் செய்துகொண்டு இருக்கும் தவறுகளையே மீண்டும்மீண்டும் செய்கிறார்கள். இதன் விளைவு இவர்களின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை இழந்துகொண்டு இருக்கிறார்கள். உதாரணமாக தேர்தலில் பங்கேற்கும் கம்யூனிஸ்டுகள் தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறதை நாம் பார்க்கலாம். தேர்தலில் பங்கு பெறாக கம்யூனிசக் குழுக்கள் தொடர்ந்து பிளவுகளை சந்தித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம். இந்த அனுபவங்களிலிருந்து இவர்கள்பாடம் கற்றுக் கொண்டு இந்த தோல்விகளை தவிர்ப்பதற்கானபுதிய வழிழுறைகளை காண்பதற்கு முயற்சி செய்வதே இல்லை, அதன் விளைவாக இவர்களது அறிவு மட்டம் வளரவே இல்லை. அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு புதிய வழிமுறைகளைபின்பற்ற தவறுபவர்களின் அறிவு மட்டம் வளர்வதற்கு வாய்ப்பே இல்லை.

அதனால் இத்தகைய தலைவர்கள் தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பதுதவிர்க் முடியாததாகும்.

8. சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியிலுள்ள சில உறுப்பினர்கள் தலைகணம்பிடித்தவர்களாகவும், ஆணவமிக்கவர்களாகவும் இறுமாப்புடைய வர்களா கவும், அதிகார மமதை உடையவர்களாகவும் மாறி விட்டார்கள்என்றும்,அவர்கள்ஊசாலாட்டத்துக்குள்ளாகி, ஊழல்செய்பவர்களாகவும் புரட்சிகரமான இயல்பையே இழந்துவிட்டனர் என்றும்லியுஷாவோகி கூறுகிறார். சீனாவில் புரட்சியில் ஈடுபட்டு புடம்போட்டு வளர்ந்த கட்சிக்குள்ளேயே இந்த இழிவான நிலை இருந்தது என்றால் இங்குள்ள கம்யூனிச அமைப்புக்குள் இத்தகைய சீரழிவுக்குப் போக்கு கொண்டவர்கள் இருப்பது இயல்பானதுதானே. எனினும் இத்தகைய மோசமான போக்கு கொண்டவர்களையும் இணைத்துக்கொண்டுஅவர்களையும் புரட்சியாளர் களாக மாற்றிக்கொண்டு சீனாவில்கம்யூனிஸ்டுக் கட்சி புரட்சி நடத்தியதற்கு காரணம் என்ன?

1. கட்சிநடத்தும் போராட்டங்களில் இத்தகைய கட்சி உறுப்பினர்களை ஈடுபடுத்திஅவர்களுக்கு உற்சாகம் ஊட்டப்பட்டு புடம்போடப்பட்டது.

2. இரண்டாவதாகஇத்தகைய கட்சி உறுப்பினர்களுக்கு சுய - வளர்ப்புப் பயிற்சியை தீவிரமாக மேற்கொள் வதற்கு வழிவகை செய்யப்பட்டது. இவ்விரண்டு முறைகளைகட்சித் தலைவர்களும் கட்சியும் பின்பற்றி கட்சியின் பலவீனத்தைப் போக்கி கட்சியைப் பலப்படுத்தி கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி எதிரியை எதிர்த்துப் போராடி கம்யூனிஸ்டுகள்வெற்றி பெற்றார்கள். இந்த சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அனுபவத்தையும், லியுஷாவோகியின் போதனைகளையும் இந்தியா விலுள்ள கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள் கண்டு கொள்ளவேஇல்லை. இந்திய கம்யூனிஸ்டுத் தலைவர்கள் கட்சி உறுப்பினர்களின் மார்க்சிய அறிவுமற்றும் திறனை வளர்ப்பதற்காகப் பாடுபடவே இல்லை. இதனால்தான் இங்கே கம்யூனிச அமைப்புகள் வளரவே இல்லை. மாறாக தேய்ந்து கொண்டும், பிளவுபட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். ஆகவே எந்த கம்யூனிச அமைப்பிலுள்ள உறுப்பினர்கள் மார்க்சிய அறிவையும்திறமையையும் சுய - வளர்ப்புப் பயிற்சியின் மூலம் வளர்த்துக்கொண்டு இருக்கிறார் களோ அந்த அமைப்பு வளரும். இதற்கு மாறாக கட்சியின் தலைவர்களை சார்ந்து செயல்படும் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்புநிச்சயமாக வளராது.

ஆகவே உண்மையான கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள், அவர்களது கட்சி உறுப்பினர்களுக்கு சுய - வளர்ப்புப்பயிற்சியை வழங்கி கட்சி உறுப்பினர் களின் மார்க்சிய சித்தாந்த மட்டத்தைதொடர்ந்து வளர்க்க வேண்டும்.

9. உலக வரலாற்றில் கம்யூனிஸ்டுக் கட்சி உருவாவதற்கு முன்பும் பலபுரட்சிகள் நடந்துள்ளது. அந்தப் புரட்சியில் ஈடுபட்ட புரட்சியாளர்கள் எல்லாம், வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின்பு புரட்சிகரமான நோக்கங்களை கைவிட்டுவிட்டு சுயநலவாதிகளாக மாறி அவர்களது அதிகாரத்தை மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தி மக்களை சுரண்டவும் ஒடுக்கவும் செய்தார்கள்என்பதுதான் வரலாறாகும். எனினும் கம்யூனிஸ்டுகள் இத்தகைய சுயநலவாதிகளாக மாறமாட்டார்கள் என்றார் லியுஷாவோகி. ஏனென்றால் பாட்டாளி வர்க்கமானது சுரண்டலை எதிர்க்கக்கூடிய வர்க்கமாகும், மேலும் அதற்கு பிறரை சுரண்ட வேண்டிய அவசியமில்லை, கம்யூனிஸ்டுக் கட்சியானது பாட்டாளி வர்க்கத்தை பிரதிநித்துவப்படுத்தும் கட்சியாகும்.ஆகவே கம்யூனிஸ்டுக் கட்சியானது புரட்சியில் வெற்றிபெற்ற பின்பு கறாரான கட்டுப்பாட்டைக் கொண்ட கம்யூனிஸ்டுக் கட்சியையும் பாட்டாளிவர்க்க அரசையும் கட்டியமைத்து உழைக்கும் மக்களைத் திரட்டி சுரண்டலுக்கும் ஊழலுக்கும் எதிராக தொடர்ந்து பாடுபடுவதன் மூலம் கட்சிக்குள் உள்ள சீரழிந்தபேர்வழிகளையும், ஊழல்வாதிகளையும், எதிர்த்துப் போராடி களையெடுக்கும். இவற்றின் மூலம் கட்சி மற்றும் பாட்டாளி வர்க்க அரசின் தூய்மையைப் பாதுகாக்கும். இத்தகைய கட்சி வரலாற்றில் உருவானதில்லை என்கிறார் லியுஷாவோகி. எனினும் பரந்துபட்ட மக்களின்ஆதரவோடு புரட்சி வெற்றி பெற்றிருந்தாலும் கம்யூனிஸ்டுகள் வெற்றிக்குப் பின்பும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும், அவர்களது விழிப்புணர்வை கூர்மையாக்கிக்கொள்ள தொடர்ந்து கம்யூனிஸ்டு கள் சுய-வளர்ப்புப் பயிற்சியில் ஈடுபட்டு மாறுகின்ற சூழல்களைப் புரிந்துகொண்டு அவ்வப்போது தமது கடமைகளை உணர வேண்டும். மேலும் அவ்வப் போது ஏற்படும் மாற்றத்தின் காரணமாக கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்ளே இருப்பவர்களில் சிலர் கம்யூனிச கொள்கைகளையும் பாட்டாளி வர்க்க சர்வாதி காரத்தின் அவசியத்தையும் கைவிட்டுவிட்டு மார்க்சியத்துக்கு எதிரான முதலாளித்துவப் பாதைக்கு மாறிச் செல்பவர் களையும் அவர்களது திருத்தல்வாதக் கொள்கை களையும் இனம் கண்டு முறியடிக்கும்வலிமையை கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களும் மக்களும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறான வலிமையை ரஷ்ய, சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களும் மக்களும் வளர்த்துக் கொள்ள தவறியதால்தான் அந்தக் கட்சிக்குள் குருஷேவ், டெங்சியோபிங் போன்ற சுயநலவாதத் தலைவர்கள் அந்த கட்சியை குட்டி முதலாளித்துவ அதிகாரவர்க்க கட்சியாக மாற்றினார்கள். மேலும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஒழித்துவிட்டு அதிகார வர்க்கத்தின் ஆட்சியாக மாற்றினார்கள். ஆகவே கம்யூனிஸ்டுகளும் வெற்றிபெற்ற பின்பு சுயநலவாதிகளாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இங்கேயும் கூட புரட்சிக்காக ஓர் அடிகூட எடுத்துவைக்காத நிலையில் கம்யூனிச அமைப்புக்குள் சுயநலவாதிகள் காணப்படுகிறார் கள். இத்தகைய சுயநலவாதிகளை கட்டுப்படுத் தவும், ஒழித்துக்கட்டவும் கம்யூனிஸ்டுகளாகிய நாம் ஒவ்வொருவரும் சுய - வளர்ப்பு பயிற்சியில் ஈடுபட்டு நமது மார்க்சிய லெனினிய அறிவையும் அதனை பயன்படுத்தும் திறமையையும் வளர்த்துக் கொண்டு நாம் ஒன்றுபட்டு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. இதற்கு மாறாக கம்யூனிஸ்டுகள் ஒவ்வொருவரும்தமது அறிவையும் திறமையையும் வளர்த்துக் கொள்ளவில்லை என்றால் கம்யூனிசஅமைப்பிற்குள் சுயநலவாதிகளின் வளர்ச்சியையும் அவர்களே கட்சியை கைப்பற்றிக் கொள்வதையும் தடுக்க முடியாது.

10. ரஷ்யாவில் கம்யூனிஸ்டுகள் புரட்சியை நடத்துவதற்கு முன்பு அங்குள்ளபெரும்பாலான உழைக்கும் மக்கள் வறுமையில் பல்வேறுவிதமான துன்பங்களை அனுபவித்து வாழ்ந்து வந்தனர். அவர்களது இந்த இழிவான வாழ்நிலையிலிருந்து மீண்டு வரவேண்டும் என்று விரும்பினர்.வாழ்நிலைதான் சிந்தனைக்கு அடிப்படை என்ற இயக்கவியல் பொருள்முதல்வாதத் தத்துவ விளக்கத்தின் அடிப்படையில் ரஷ்யஉழைக்கும் மக்களின் இழிவான வாழ்நிலை காரணமாகவே அந்த இழிவைப் போக்குவதற்கு விரும்பினர். இதனை புரிந்துகொண்ட ரஷ்ய போல்ஷ்விக்கட்சியானது ரஷ்ய மக்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு காரணமான ஜாரின்எதேச்சாகார ஆட்சியை ஒழித்துவிட்டு பாட்டாளிகள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையைமக்களிடம் பரப்பினார்கள். இழிவான வாழ்நிலையை ஒழிக்க விரும்பியமக்கள் போல்ஷ்விக்குகளின் கொள்கை யானது அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு பொருத்தமான கொள்கை என்று அதனை ஏற்றுக் கொண்டு போல்ஷ்விக்குகளின் பின்னால் அணிதிரண்டனர்.

போல்ஷ்விக்குகளின் தலைமையில் போராடி தொழிலாளர்கள் மற்றும்விவசாயிகளின் அரசை உருவாக்கினார்கள். மக்களால் போல்ஷ்விக்குகளின் தலைமையில் உருவான சோவியத்து அரசு சிறிது காலத்துக்குள்ளேயே மக்களின் வாழ்க்கை துன்பங்களிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்கு வளமான வாழ்க்கை கிடைக்கச் செய்தது. இப்போது உழைக்கும் மக்களின்வாழ்க்கையில் வளமான மாற்றங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்களது சிந்தனை முறையிலும் மாற்றங்கள் ஏற்படலாயிற்று. இதுவரை கட்சியின்கட்டுப்பாட்டை ஏற்றவர்கள் அத்தகைய புரட்சிகரமான கட்டுப்பாட்டின் அவசியத்தை உணர மறுத்தனர். இத்தகைய கட்டுப்பாடில்லாமல் சோசலிச சமூகத்தை கம்யூனிச சமூகமாக வளர்க்க முடியாது என்பதை மக்கள் புரிந்துகொள்ளத் தவறினார்கள். பெரும்பான்மையான மக்களின் இந்த பலவீனத்தைப் பயன்படுத்தியே குருஷேவ் போன்ற திருத்தல்வாத சுயநலவாதத் தலைவர்கள் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றி கட்சியை திருத்தல்வாதக்கட்சியாகவும் அரசை அதிகார வர்க்க அரசாகவும் மாற்றியமைத்து சோசலிசத்திலிருந்து கம்யூனிசமாக சமூகம் வளர்வதை தடுத்துவிட்டார்கள்.ஆகவே ஒரு கம்யூனிஸ்டுக் கட்சியாக இருந்தாலும் அதில் அதன் தலைவர்கள் மட்டும் மார்க்சிய அறிவாளிகளாக இருந்தால் மட்டும் போதாது கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் மார்க்சிய அறிவாளிகளாக மாற்ற வேண்டும். அதே போலவே ஒரு சமுதாயம் சோசலிச சமூகமாக இருக்கும் போது அங்குள்ள கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள் மட்டும் பாட்டாளிவர்க்க உணர்வு படைத்த அறிவாளிகளாக இருந்தால் மட்டும் போதாது. உழைக்கும் மக்கள் அனைவரும் பாட்டாளிவர்க்க உணர்வுபடைத்த அறிவாளிகளாக வளர்க்கப்பட வேண்டும்.

இதற்கு கம்யூனிஸ்டு கட்சியானது புரட்சிக்கு முன்பும், புரட்சிக்குப் பின்பும் மார்க்சிய கல்விக்கான இயக்கத்தை தொடர்ந்து நடத்திட வேண்டும். மேலும்

சுய-வளர்ப்பு பயிற்சியை கட்சி உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும்தொடர்ந்து வழங்கிட வேண்டும். ஆகவே ஒரு கம்யூனிஸ்டுக் கட்சியோ அல்லது ஒரு சமுதாயமோ சிறப்பாக வளர்ந்துள்ளது என்பதற்கான அளவுகோல் அந்தக் கட்சி உறுப்பினர்கள் எந்தளவுக்கு வளர்ந்துள்ளார்கள் என்பதும் அந்த சமூகத்திலுள்ள மக்கள் எந்தளவுக்கு வளர்ந்துள்ளார்கள்என்பதுதான் அடிப்படையாகும். தனிவுடமை சிந்தனை கொண்டவர்கள்தனது அறிவை வளர்த்துக் கொள்வதிலேயே குறியாக இருப்பார்கள்.

ஆனால் பொதுவுடமை சிந்தனை கொண்டவர்கள் தனது அறிவை வளர்த்துக்கொண்டு பிறரையும் தன்னைப் போன்ற அறிவாளியாக்குவதிலேயே குறியாக இருப்பார்கள். ஆகவே நாம்தனிவுடமை சிந்தனை முறைக்கும் பொதுவுடமை சிந்தனை முறைக்கும்இடையிலான வேறுபாட்டை மிகவும் கவனமாகவும் ஆழமாகவும் புரிந்துகொண்டு போதுவுடமை சிந்தனை முறையை தொடர்ந்து வளர்த்துக் கொள்ள பாடுபட வேண்டும். ..... தேன்மொழி

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்