இட ஒதுக்கீடு — வரலாறும், அவசியமான கேள்விகளும் அடையாள அரசியல்வாதியின் பதிவு

இட ஒதுக்கீடு — வரலாறும், அவசியமான கேள்விகளும்

முக்கிய நிகழ்வுகள்

தமிழகத்தில் இட ஒதுக்கீடு என்பது பல தசாப்தங்களாக இருக்கின்றது. 1951 இல் 16% SC/ST க்கும் 25% ஓபிசி பிரிவிற்கும் இருந்தது. 1971 இல் சட்டநாதன் கமிஷன் பிற்படுத்தப்பட்ட பிரிவில் சில சாதிகளே இட ஒதுக்கீட்டின் பயனை அனுபவிக்கின்றன என்றும் இதனால் பல மிகவும் பின்தங்கிய சாதிகள் எந்த பயனும் பெறவில்லை என்றும் குறிப்பிட்டது. இதற்கு தீர்வாக மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு தனியாக உள் ஒதுக்கீட்டையும், வருடத்திற்கு 9000 ரூபாய் வருமானம் அல்லது 10 ஏக்கருக்கு மேல் நிலம் இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை (creamy layer) என்றும் இந்த கமிஷன் வலியுறுத்தியது. ஆட்சியில் இருந்த கலைஞர் செய்தது மேலும் சில சாதிகளை பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்த்ததும், இட ஒதுக்கீட்டின் அளவை 31% ற்கு உயர்த்தியதும். இதனுடன் SC/STக்கான ஒதுக்கீடும் 18% ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் இந்த creamy layer ஐ நடைமுறைக்கு கொண்டுவந்தார்; இதெற்கெதிராக பெரும் எதிர்ப்பு கிளம்பியது, திமுக, திக விடமிருந்தும்; லோக் சபா தேர்தலில் படு தோல்வியை தழுவியவுடன் எம்ஜிஆர் creamy layer ஐ ரத்து செய்ததுடன், பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கான ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தினார். இதனால் அவர் மீண்டும் ஆட்சிக்கு வரமுடிந்தது. அடுத்து வந்த அம்பாசங்கர் கமிஷன் 40% மக்கள் தொகையை கொண்ட 34 சாதிகள் முக்கால்வாசி இடங்களை பெறுவதாக குறிப்பிட்டது. இந்தியாவில் பல மாநிலங்களில் பல சாதிகள் தம்மை பிற்படுத்தப்பட்ட சாதியாக அல்லது பழங்குடியினராக (அரிதாக SC ஆக) அறிவிக்கக் கோரியும், தனியாக தமது சாதிக்கு இட ஒதுக்கீடு கேட்டும் போராடியது வரலாற்று பதிவுகள். தமிழகத்தில் இதற்கு பிரபல உதாரணம் வன்னியர்களின் போராட்டம். இந்த போராட்டத்தின் பலனாகவே 1989 இல் கருணாநிதி மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான (MBC) 20% உள் ஒதுக்கீட்டை கொண்டுவந்தார். பிறகு ST க்கான 1% தனி ஒதுக்கீடும் கொண்டுவரப்பட்டது. பிறகு ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபொழுது 50% மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று உயர்நீதி மன்றம் சொன்னதை எதிர்த்து நடைமுறையில் இருந்த இட ஒதுக்கீடு தொடரும்படி சட்டம் இயற்றினார். 2008 இல் CPM மற்றும் அருந்ததியர் இயக்கத்தின் போராட்டங்களுக்கு பின்னர் SC(A) உள் ஒதுக்கீடு கலைஞரால் கொண்டுவரப்பட்டது. இது தவிர முஸ்லிம்களுக்கு 3.5% உள் ஒதுக்கீடும் உள்ளது (கிறிஸ்தவர்கள் அவர்களுக்கென தனி ஒதுக்கீட்டை விரும்பாததால் அது திரும்ப பெறப்பட்டதாக சொல்லப்படுகின்றது).

1993 இல் சம்பளம் மற்றும் விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் இவற்றை தவிர மற்ற வருமானம் ஒரு லட்சத்திற்கு மேல் இருப்பவர்களுக்கு (OBC) இட ஒதுக்கீடு இல்லை என்று முடிவுசெய்யப்பட்டது. இது பிறகு உயர்த்தப்பட்டது, கடைசியாக 2017 இல் 8 லட்சம் என்று முடிவு செய்யப்பட்டது.

இட ஒதுக்கீடும் சாதி அரசியலும்

மேலே உள்ள சிறு குறிப்பை வாசித்தவர்களுக்கு புலப்படக்கூடியது இரண்டு விடயங்கள்.

1. இட ஒதுக்கீடு பெரும்பாலும் சில சாதிகளுக்கு (அந்த சாதிகளிலும் எல்லா குடும்பங்களுக்கும் போய் சேரவில்லை என்பது முக்கியம்) போய் சேருகின்றது என்பது இன்று புதிதாக ஓரிருவர் வந்து இட்டுக்கட்டும் விடயம் அல்ல. அதற்கு கடந்த காலத்தில் மட்டுமல்லாது இன்றும் தொடர்ந்து எழும் பல சாதிகளின் கோரிக்கைகளும் சாட்சி.

2. சாதிகள் அமைப்பாக திரண்டு இட ஒதுக்கீடு சம்பந்தமான கோரிக்கைகளை வைத்திருக்கின்றன மற்றும் இட ஒதுக்கீடு தேர்தல் அரசியலுடன் பின்னிப்பிணைந்தது. இட ஒதுக்கீட்டிற்கும் சாதியாக திரள்வதற்கும், சாதி அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற பார்வை வரலாறு நிதர்சனம் என்று எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாதது; முற்றிலும் தவறானது. 2019 இல் கூட ஸ்டாலின் தாம் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதாக சொல்லியிருக்கின்றார். இதன் அர்த்தம் எல்லோருக்கும் எளிதாக புரியக்கூடியது.

இந்த கோரிக்கைகளை வைப்பதற்காக மட்டுமே சாதியாகத் திரள்கின்றார்கள் என்று இதற்கு அர்த்தம் இல்லை; அது வேண்டுமென்றே தமது வசதிக்காக தேர்ந்தெடுத்துக்கொள்ளும் புரிதல். அதிகாரத்தில் பங்கு என்பதும் சாதி அரசியலின் முக்கிய பகுதி; சாதிகளின் ஆதிக்கம், மூலதனம், எண்ணிக்கை என்று பல அடிப்படையில் இந்த சாதி அரசியல் நடைபெறுகின்றது. இதை நாம் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பல சாதிகளின் நிலைமையை, குறிப்பாக சிறிய சாதிகளின் நிலையை பார்த்தும் புரிந்துகொள்ளலாம். இந்திய அளவிலும் இந்த சாதி அரசியலுக்கு பல உதாரணங்கள் உள்ளன.

இட ஒதுக்கீடு என்பது யாது?

இட ஒதுக்கீடு என்னவென்பதிலேயே குழப்பம் நிலவுவதாகத் தோன்றுகின்றது. கீழே சில புரிதல்களை பார்க்கலாம்.

  • Teltumbde அவர்களின் மற்றும் எனது பார்வை இங்கு. இட ஒதுக்கீடு, மண்டல், அதை சுற்றிய அரசியல் என்று இது தொடர்பான வரலாற்றில் பெரும்பகுதியை விமர்சனத்தோடு அணுகக்கூடிய பார்வை. இங்கு கவனிக்க வேண்டியது இந்த பார்வையின் சட்டகம் மொத்தமாக வேறு என்பதும், அதை ஏற்றுக்கொள்ளாதவர்களை அவர்களது சட்டகத்திற்குள் விமர்சிப்பதற்கே இந்த பதிவு என்பதும். மற்ற பதிவுகளில் இருக்கும் பார்வையையே நான் இன்றும் சரி என்று நம்புகின்றேன். டெல்டும்டே Republic of caste என்ற புத்தகத்தில் பதிவு செய்திருக்கும் ஒரு விடயம் இந்த பதிவிற்கும் மிக முக்கியம் என்பதால் அதை மட்டும் குறிப்பிடுகின்றேன். வேலைவாய்ப்பை பொருத்தவரை இந்தியாவில் வெறும் 6 சதவிகிதம் மட்டுமே அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள், அதிலும் 66% மட்டுமே பொதுப்பணித் துறை (public sector), அதாவது 4%. ஆக இட ஒதுக்கீடு என்பது இந்த 4% இடங்களிலும் சொற்பமான மேல்தட்டு பணி இடங்களில் அந்தந்த பிரிவினருக்கு சேர வேண்டிய பங்கு என்னவென்பதை பற்றிய விவாதம். தமிழகமும் விதிவிலக்கல்ல; தமிழகத்தில் அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் 7%, அதில் பொதுப்பணித் துறை 61%. கல்வியில் இட ஒதுக்கீடு என்பது பெரியதுதானே, அதன் பலன்களையும் இப்படியாக சுருக்கமுடியுமா என்ற கேள்விக்கான பதில் சற்று விரிவானது என்பதால் அதை தனி பதிவாக எழுதியிருக்கின்றேன். சுருக்கமாக கல்வியில் இருக்கும் இட ஒதுக்கீடு பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் எந்தவித பெரிய மாற்றங்களையும் நிகழ்த்தவில்லை. இந்த ‘சமூக நீதி’ என்பதும் சிலருக்கானதே. அதோடு உயர் கல்வி பெரும்பாலும் தனியார் வசமே உள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்கள், தனியார்மயம் இதைப்பற்றிய விவாதத்தை எல்லாம் இல்லாமல் செய்யும் இந்த இட ஒதுக்கீடு எவ்வளவு பெரிய ‘சமூக நீதி’ என்பதை சரியாக புரிந்து கொள்வது அவசியம்.
  • இரண்டாவது வகையான புரிதல் — பல நூற்றாண்டுகள் ஆதிக்கத்தால் பலம் பெற்ற சாதிகளுடன் போட்டியிடுவது பல வகையில் பின்னுக்கு தள்ளப்பட்ட சாதிகளுக்கு சாத்தியம் இல்லை. ஆதலால் இட ஒதுக்கீடு அவசியமாகின்றது.
    மேற்கூறியதிலிருந்து நாம் வரக்கூடிய முடிவு இந்த சமூக பின்னடைவு பெருமளவு குறையும் பொழுது இட ஒதுக்கீட்டிற்கு அவசியம் இல்லை என்பது.

நடைமுறை பிரச்சனைகளான உயர்சாதியினரின் ஆதிக்கத்திற்கு எதிராகவோ அல்லது குறிப்பிட்ட பிரிவில் (category) சில சாதிகளின் ஆதிக்கத்திற்கு எதிராகவோ எழுந்த குரல்கள்/கோரிக்கைகளின் நீட்சியாக வந்தடைந்திருக்கும் மற்றொரு பார்வை/இடம் சாதிரீதியிலான விகிதாச்சார பிரதிநிதித்துவம். சாதி ரீதியிலான சென்சஸ் இற்கான கோரிக்கை இந்த அடிப்படையிலேயே எழுகின்றது.

முதலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சில சாதிகளின் ஆதிக்கத்திற்கெதிரான வன்னியர்களின் தனி ஒதுக்கீடு போராட்டத்தின் பலனாக MBC உருவானது. இந்த உள் ஒதுக்கீடு தீர்வை அளிக்கவில்லை. MBC க்குள் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை சிலரிடம் இருந்து எழுகின்றது. இன்றும் வன்னியர்கள் தனி ஒதுக்கீடு கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். நரிக்குறவர் போன்ற புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள் தங்களை மீள்வகைப்படுத்த கோரிக்கை வைக்கின்றார்கள். மீள்வகைப்படுத்தல், இன்னுமின்னும் உள் ஒதுக்கீடு அளித்தல் இவை அனைத்தும் தீர்வுகளாக இருக்கப்போவதில்லை. அதற்குள் சில சாதிகள்/குடும்பங்கள் ஆதிக்கம் செலுத்துவதிலேயே இது போய் முடியும் என்பதுதான் (தமிழக) வரலாறு நமக்கு சொல்வது.

இட ஒதுக்கீடு சாதி ஒழிப்பில் ஒரு வழிமுறையா?

இட ஒதுக்கீடு பலரின் வாழ்க்கையை முன்னேற்றியிருக்கின்றது என்பதை மறுக்கமுடியாது. அந்த ‘பலர்’ எப்படி ‘மிக சொற்பமானவர்கள்’ என்பதை அறிய Teltumbde போன்றவர்களையும், பல தசாப்தங்கள் ‘ஒழுங்காக’ நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீட்டின் பலன்களை அறிய
இந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆய்வுகளையும் வாசிக்கலாம். இட ஒதுக்கீடு பட்டியலில் இருந்து விடுபடும் அளவு முன்னேறிவிட்டார்கள் என்று இதுவரை பெரிதாக சாதிகள் பட்டியலில் (list) இல் இருந்து எவரும் நீக்கப்படவில்லை. Creamy layer என்ற பதமே சமூக நீதிக்கு எதிரி என்பது போல இன்றைய உப்புக்குச்சப்பில்லாத creamy layer ஐ கூட தொடர்ந்து எதிர்க்கிறார்கள் ‘சமூக நீதி’ ஆர்வலர்கள்.

ஆக, இட ஒதுக்கீட்டின் மூலம் நாம் சாதி ஒழிப்பை நிகழ்த்த முடியாது. சாதி ஒழிப்பை வேறு வகைகளில் நாம் சாத்தியப்படுத்தும் வரை இட ஒதுக்கீட்டிற்கான ‘தேவை’ இருக்கும் என்பதே இந்த சட்டகத்திற்குள் சரியான புரிதல்.

இட ஒதுக்கீடு சாதி ஒழிப்பிற்கு முட்டுக்கட்டையா?

சாதி ஒழிப்பிற்கான வழிமுறைகள் என்னவென்பதை பார்ப்பதற்கு முன் இட ஒதுக்கீடு மீதான விமர்சனமற்ற ஒற்றை பார்வை எப்படி சாதி ஒழிப்பிற்கு தடையாக இருக்கின்றது என்பதை பார்ப்போம்.

  1. உண்மையான சாதி ஒழிப்பை நோக்கிய வழிமுறைகள் பற்றிய பேச்சையே முற்றிலுமாக துடைத்தெறிந்துவிட்டு பேண்ட் எய்ட் ஐ பற்றி பேசவைத்தது, மற்றும் அதை சமூக நீதி என்றும், தீர்வென்றும் நம்பவைத்தது.
  2. இல்லை சமூக நீதிதான், இட ஒதுக்கீடு என்றால் கொதித்தெழுவது சரிதான் என்பவர்கள் யாருக்கு சமூக நீதி என்று கேட்டுக்கொள்வது உசிதம். இட ஒதுக்கீட்டில் பயன்பெறுவது பெரும்பாலானோர் சில சாதிகள், குடும்பங்கள் என்ற உண்மை சட்டநாதன் கமிஷன் காலத்தில் இருந்து சொல்லப்படுகின்றது. சாதிய ஒடுக்குமுறைக்கும், வர்க்கத்திற்கும் சற்றும் சம்பந்தமில்லை, அப்படியாக முடிச்சு போட்டு இட ஒதுக்கீட்டை பற்றி பேசுவதே சாதியம் அல்லது குதர்க்கம் என்று நாம் அம்பேத்கரிய சிந்தனையாளர்களில் இருந்து EPW விடமிருந்து வரை கேட்டாகிவிட்டது. பணம் இருப்பவனுக்கே இந்த நிலை என்றால் எந்த மூலதனமும் இல்லாதவன் எப்படியான சாதியத்திற்கு உள்ளாவான் என்று ஏனோ இந்த சட்டகத்திற்குள் நமக்கு யோசிக்கத்தோன்றவில்லை. ஒடுக்கப்பட்ட/பிற்படுத்தப்பட்ட சாதிகளில் சிலருக்கு கிடைக்கவேண்டியது சுரண்டப்படுவதே கொதிப்பை ஏற்படுத்துகின்றது என்றால் அதிலிருக்கும் பெரும்பாலானோரின் நிலை இதைக்காட்டிலும் எவ்வளவு பெரிய கொதிப்பை ஏற்படுத்த வேண்டும். அதை பற்றி பேசுவதற்கான வெளி, அதற்கான தீர்வை பற்றி பேசுவதற்கான வெளி எவ்வளவு பெரிதாக இருக்கவேண்டும்? இட ஒதுக்கீட்டை பற்றி பேசும் அல்லது பேச நேரிடும் ஒவ்வொரு தருணமும், அல்லது குறைந்தபட்சம் கணிசமான தருணங்களில், அதன் போதாமைகளை திரும்ப திரும்ப முன்வைக்க வேண்டிய கடமை இருக்கின்றதா இல்லையா? இதில் எதையும் செய்யாமல் பெரிதும் பேசப்படும் சமூக நீதி என்பது, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகள் மொத்தத்திற்குமானது அல்ல, அதில் இருக்கும் சொற்பமானவர்களுக்கானது.
  3. நாம் முன்பு பார்த்த புறக்கணிக்கப்பட்ட சாதிகள், அது இட்டுச்சென்ற உள் ஒதுக்கீடு இவையெல்லாமே சாதி ஒழிப்பிற்கு எதிரான நகர்வுகள். அவை இட ஒதுக்கீட்டிற்கு வெளியே நிகழ வேண்டிய சாதி ஒழிப்பை வசதியாக மறந்துவிட்டதால் நிகழ்ந்தவை, புறக்கணிக்கவே முடியாத அருந்ததியர் உள் ஒதுக்கீடு உட்பட. இன்றைய ‘சமூக நீதியின்’ பாய்ச்சலாக அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு MBBS இல் 7.5% இட ஒதுக்கீடு என்பதை பார்க்கின்றேன். அடிப்படை பிரச்சனையை சரி செய்வதை விட்டுவிட்டு இட ஒதுக்கீட்டை எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் பயன்படுத்துவதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இங்கு அரசுப்பள்ளி மாணவர்களின் ‘எண்ணிக்கை’ யை கணக்கில் கொள்ளாததும் கவனிக்கவேண்டியது. இந்த இட ஒதுக்கீட்டில் பயனடைவதற்கு NEET இல் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்பதும் முக்கியம்.

இட ஒதுக்கீட்டின் சில பிரச்சனைகளை சாதி அரசியலுக்கு துணை போகாமல் சரி செய்வதற்கு Teltumbde பரிந்துரைக்கும் ஒரு வழி, விமர்சனமில்லா நிலைப்பாட்டை கொண்டவர்களின் நேர்மையை சோதிக்க உதவும் என்பதால் அதை பார்க்கலாம். இதுவரை இட ஒதுக்கீட்டினால் பயன்பெறாத குடும்பங்களுக்கு முன்னுரிமை தரவேண்டும். மீதமிருக்கும் இடங்களையும் வருமானம் மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருக்கும் குடும்பங்களை வைத்து முதலில் நிரப்பலாம். இதை புரிந்துகொள்வதில் குழப்பம் நிகழ்வதால் சற்று விரிவாக பார்க்கலாம், ஒரு உதாரணத்துடன். கல்வி நிறுவனங்களாலும், சமூகத்தாலும் சுரண்டப்பட்டு ஒன்றுக்குமே உதவாத ஒரு degree யை வைத்துக்கொண்டிருக்கும் ஒருவரின் குழந்தைக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடையாதா? சற்று யோசித்தாலும் இதுபோன்ற கேள்விகளுக்கும், எல்லா குடும்பங்களிலும் ஏதோ ஒரு வகையில் உயர்கல்வி பெற்றோர் வந்தபின் என்ன செய்வது போன்ற குதர்க்கமான கேள்விகளுக்கு பதில் எளிதாக கிட்டும். குதர்க்கம் என்று சொல்வதற்கு காரணம் உண்மையான சமூக நீதி/சமத்துவம், அதில் சாதி ஒழிப்பு என்ற மையத்தை இப்பொழுதும் கண்டுகொள்ளாமல் கேட்கப்படும் கேள்விகள் இவை என்பதால். பதில் உயர்கல்வியிலும், வருமானத்திலும் படிநிலைகளை வைத்திருக்கும் சமூகத்தில், அதே படிநிலைகளைகளின் அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது. அதாவது மீதம் இருக்கும் குடும்பங்களை அவற்றின் வருமானம், சொத்து, கல்விநிலை, உயர்கல்வியில் எத்தனையாவது தலைமுறை போன்றவற்றின் அடிப்படையில் வரிசைப்படுத்தி பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது. இதை புரிந்துகொள்வதில் என்ன சிரமம் இருக்கமுடியும் என்று புரியவில்லை. ஆதிக்கம் இருக்கின்றது/இல்லை, சாதிய அரசியலுக்கும் இட ஒதுக்கீட்டிற்கும் சம்பந்தம் இருக்கின்றது/ இல்லை என்று எந்த நிலைப்பாட்டை ஒருவர் எடுத்தாலும், இந்த பரிந்துரையை புறக்கணிக்க முடியாது. ஏனெனில் இந்த முறையில் எவரும் பொருளாதார அடிப்படையில் பட்டியலில் (list) இருந்து நீக்கப்படப் போவதில்லை. ஒரே பிரிவில் இருப்பவர்களில் சாதிரீதியிலும், மற்ற ரீதியிலும் உங்களை விட மிக மோசமான நிலையில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை இருப்பதுதானே இந்த சட்டகத்திற்குள் உண்மையான சமூக நீதியாக இருக்கமுடியும் என்பது புறக்கணிக்கக்கூடிய ஒன்றே அல்ல. இப்படியாக சாதி ரீதியிலான உள் ஒதுக்கீட்டு கோரிக்கைகளுக்கு சாதிய அடிப்படை இல்லாத ஆனால் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு தீர்வை தரலாம் என்று Teltumbde கூறுகின்றார். உபரியாக நமக்கு ‘சமூக நீதி’ ஆர்வலர்கள், மௌனம் கடைபிடிப்பவர்கள், சாதிய ரீதியிலோ அல்லது இட ஒதுக்கீட்டினால் தாமோ தாம் அறிந்த சிலரோ அடைந்த பயனின் ரீதியிலோ சமூக நீதி என்ற பரப்புரையில் ஈடுபடுபவர்கள் என்று பலரைப் பற்றிய சரியான புரிதலும் கிட்டும். தாம் இத்தனை நாள் குரல்கொடுத்த விடயம் தமக்கானது மட்டும் இல்லை என்றாகும்பொழுது உண்மையான சாதி ஒழிப்பை நோக்கி படித்த சமூகமும் நகர்ந்தாலும் நகரும். அல்லது இவ்வளவிற்கு பிறகும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு கேட்பதே சமூக நீதி என்ற திசையிலும் செல்லலாம்.

சாதி ஒழிப்பு வழிமுறைகளை முற்றிலுமாக விழுங்கிய இட ஒதுக்கீடு சமூக நீதி என்பதான பரப்புரை, சாதி அரசியல் இதெல்லாம் எங்கு இட்டுச்செல்லும் என்பதற்கு தமிழகம் சிறந்த உதாரணம். ஆனால் பல மாநிலங்களிலும் இதற்கு உதாரணங்கள் உண்டு. EWS என்பதை எதிர்த்து பேசும் தேவை இல்லையா? இருக்கின்றது. பதில் கேள்வி, மேலே சொன்னதை பேசும் தேவை இல்லையா என்பது. இல்லை என்பதே எல்லோருடைய மௌனமும் சொல்வது. ஆதலால் அந்த மௌனத்தை அவர்களது சாதி மற்றும் வர்க்கம் சார்ந்த பார்வை என்று குற்றம் சாட்டுவதில் தவறில்லை.

சாதி ஒழிப்பு - வழிமுறைகள்

  1. சடங்கு, சம்பிரதாயம், மனுஸ்ம்ரிதி என்பதில் இல்லை சாதியின் முக்கிய சாரம். நாம் எதிர்க்கும் சாதி ஆதிக்கத்தின் சாரம் மூலதனம். இந்த மையத்தை அப்படியே வைத்துக்கொண்டோ அல்லது தமக்கு ஏற்புடைய சில சாதிகளில் சிலர் ஆதிக்கம் செலுத்தும் வண்ணம் ஒரு கட்டமைப்பை வைத்துக்கொண்டோ எந்த சமூக நீதி அரசியலையும் செய்ய முடியாது. கல்வி வேலைவாய்ப்பு விடயத்தில் செய்யவேண்டியது தரமான கல்வியை அனைவருக்கும் வழங்கவேண்டியது. அதற்கு பணத்தை கொடுத்து படிப்பை வாங்குவது இருக்கக்கூடாது. ஆக தனியார் பள்ளிகள், கல்லூரிகள் இவையெல்லாம் இருக்கக்கூடாது. எந்த குழந்தைக்கும் எல்லாம் கிடைக்கும் வண்ணம் பள்ளிகள், நூலகங்கள் என்று பலவற்றை தரமுள்ளதாக உருவாக்க/மாற்ற வேண்டும். இதல்லாமல் கல்வியை கொண்டுபோய் சேர்த்தேன், இலவசமாக தாரேன், இதுதான் சமூக நீதி என்பதெல்லாம் அயோக்கியத்தனம். இது சமத்துவபுரத்திலிருந்து, இலவச மருத்துவம் வரை எல்லாவற்றிற்கும் பொருந்தும்.
  2. சாதி அரசியல் பரவலாக கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும். முதலில் எதற்கு இத்தனை சாதி அமைப்புகளுக்கு அவசியம் என்ற விவாதம் உருவாக வேண்டும். சாதியம் அடிப்படையாக இருந்தால் தீவிர விமர்சனமும், நியாயமான அடிப்படைகளும் இருந்தால் அந்த அடிப்படைகள் இல்லாமல் போவதற்கான வழிமுறைகளும் மேற்கொள்ளப்படவேண்டும்.
  3. சோசியலிசத்தை நோக்கிய பயணம். ஏற்றத்தாழ்வை களைய நிலத்தை மற்ற சொத்துகளை மறுபகிர்வு செய்வது, குறைந்த பட்ச ஊதியத்தை நடைமுறைக்கு கொண்டுவருவது, தனியார் மயத்தை மாற்ற முயற்சி செய்வது, கூட்டு உடைமையை வளர்ப்பது என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றில் முரண்கள் உண்டு என்பதை அறிவேன், உதாரணத்திற்கு ஊதியம் என்பதே இடதுசாரி பார்வையில் விமர்சிக்கப்படும் ஒன்று; இருக்கும் நிலையில் எது சாத்தியமோ அதை முதலில் சாத்தியப்படுத்தலாம் என்ற நோக்கில் எழுதியது என்று புரிந்து கொள்ளவும். மற்றபடி முழுமையான சோசலிசம் வரும்வரை வஞ்சிக்கப்படுபவர்கள் இருப்பார்கள்.
  4. மற்றவற்றோடு அகமனமுறை சாதியின் முக்கிய சாரம் என்பதால், சாதிமறுப்பு திருமணங்களையும் நான் முக்கியமாகப் பார்க்கின்றேன். எதிர்ப்பவர்களுக்கு அல்லது மாற்றுக்கருத்து உள்ளவர்களுக்கு வேறு விதமாக சொல்லலாம். அதாவது சாதியத்தை ஒழிப்பதில் சாதி பார்த்து திருமணம் செய்வதை ஒழிப்பதும் அடங்கும்.

பின்குறிப்பு: இந்தப் பதிவில் தேர்தல் அரசியலில் இருக்கும் ஒதுக்கீட்டை பற்றி அலசவில்லை. தேர்தல் அரசியலில் சாதியத்தை முற்றிலுமாக எதிர்த்து, அதை கிஞ்சித்தும் உபயோகித்துக் கொள்ளாமல் அரசியல் செய்தவர்/செய்பவர் ஒருவரும் இலர்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்