உண்மையைப் பேசுங்கள் - சௌ என் - லாய்.
மெய்யான முயற்சிகளைமேற்கொள்ளுங்கள்; ஊக்கத்தோடு பணியாற்றுங்கள்; நடைமுறையில் விளைவுகளைச் சாதிக்கப் போராடுங்கள். பிப்ரவரி 3, 1962.
சுய விமர்சனம் செய்து கொள்வதன் நோக்கம், நமது ஐக்கியத்தைவலுப்படுத்துவதற்கேயாகும். எதார்த்தமான சான்னுகளிலிருந்து உண்மையைத் தேடும் அவசியம் பற்றி தலைவர் மாவோவின் வழிகாட்டுதல்களை நாம் கடைபிடிப்பது மிக முக்கியமாகும். வேறுவார்த்தைகளில் சொன்னால் - உண்மையைப் பேசுங்கள்; மெய்யான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்; ஊக்கத்தோடு பணியாற்றுங் கள்; நடைமுறையில் விளைவுகளைச் சாதிக்கப் போராடுங்கள்.
கடந்த சில ஆண்டுகளாக நமது கட்சியின் நடத்தை வழியில் சில தவறான நடைமுறைகள் தலைதூக்கி யுள்ளன. உதாரணமாக, பொய் சொல்லுவதும் அகம்பாவத்துடன் தற்பெருமை கொள்ளும் போக்கும் நிலவுகிறது.
மக்களை உண்மையைப் பேசுமாறு நாம் ஊக்கப்படுத்த வேண்டிய நேரமிது.
நாம் இதை எப்படிச் செய்யப் போகிறோம்? முதலாவதாக, தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தமக்கு கீழிருந்து வரும் கருத்துரைகளைக் காது கொடுத்துக் கேட்க்கத் தயாராக இருக்க வேண்டும்; பொய்யான கூற்றுகளை எதிர்க்க வேண்டும்.
உயர்மட்டத் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தமக்குக் கீழுள்ளதுறைகளுக்கும் உள்ளூர் அமைப்பு களுக்கும் பெருஞ்சுமையான கடமைகளைத் திணிக்கின்றனர், இதனால் கீழ்மட்டப் பொறுப்பாளர் கள் இருவேறுபட்ட வேலை அறிக்கைகளைத் தயாரிக்கின்றனர். அதில் மேலதிகாரிகள் தமக்குச் சாதகமாக உள்ள எந்த அறிக்கைக்கு முன்னுரிமை தருவார்களோ அதைத் தேர்வுசெய்து சமர்ப்பிக்கின்ற னர். இதை இம்மாநாட்டில் பங்கேற்றுள்ள சில தோழர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இவ்வகையிலான நடவடிக்கைகள், கட்சியின் வேலைப் பாணியில் உண்மையிலேயே மிகப் பெரிய பிரச்சனையாகும். பொய்யான அறிக்கை கொடுக்கும் பழக்கத்தை நமது தோழர்களில் பலர் வளர்த்துக் கொண்டால், தமது மேலதிகாரிகளுக்கு எது திருப்தி அளிக்குமோ அதை மட்டுமே பேசினால், நமக்கும், நமக்கு முந்தைய பழைய சமுதாயத்தின் தரங்கெட்ட அதிகாரிகளுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது இம்மாநாட்டில் நீங்கள் விளக்கிய சில உள்ளூர் அமைப்புகளின் உண்மையான நிலைமையை அறிந்தபோது, நான் மிகவும் கலங்கினேன். பொய்யான அறிக்கைகளை நீங்கள் அனுப்புவது, நிச்சயமாக உங்கள் தவறாகும். ஆனால், மையப் பொறுப்பாளர்களாக உள்ள நாங்கள்தான் முதலில் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள். ஏனெனில், நாங்கள் உங்கள் மீது கூடுதலான வேலைச் சுமையை ஏற்றியுள்ளோம். இப்போதிலிருந்து கீழ்மட்டத் துறைகளின் மீதும் உள்ளூர் அமைப்புகளின் மீதும் சாத்தியமற்ற, பொருத்தமில்லாத கடமைகளைத் திணிப்பதை நிறுத்துவோம்; அவ்வமைக்குகளைக் குற்றம் சாட்டி முத்திரை குத்துவதை நிறுத்துவோம்.
மக்களை உண்மையைப் பேசுமாறு நாம் தூண்ட வேண்டும். அவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார் களோ அது எவ்வளவு நீண்டதாகவும் சலிப்பூட்டு வதாகவும் இருந்தாலும் கூட நாம் பொறுமையாகக் கேட்க்க வேண்டும். டாங் வம்சத்தைச் சேர்ந்த லி ஷிமின் என்ற பேரரசர் அவரோடு முரண்படக்கூடியவெய் ஜெங் என்ற அதிகாரியின் ஆலோசனை களை அக்கறையுடன் கேட்டு வந்தார்.“இரு தரப்பினரது கருத்துக்களையும் கவனமாக கேள்! தவறான எண்ணங்களிலிருந்து விடுபட்டு நீ அறிவொளி பெறுவாய்!” என்று வெய் ஜெங் கூறிய ஆலோசனைப்படி பேரரசர் செயல்பட்டதால் அவர் தனது அரசை வலுவுள்ளதாக்கி, செழிப்பான நாடாகக் கட்டியமைப்பதில் வெற்றி பெற்றார். ஒரு நிலப்பிரபுத்துவ பேரரசரே தன் கீழுள்ள அதிகாரி கூறுவதை அக்கறையுடன் கேட்க்கும்போது, தோழர்களாகிய நாமனை வரும் உண்மையை அறிய கவனமாகக் கேட்பதற்கு கூடுதலான காரணங்கள் உள்ளன.
அடுத்ததாக, மெய்யான முயற்சிகளை மேற்கொள்வது பற்றிய பிரச்சனைக்கு வருவோம். சில நேரங்களில் முழு ஆற்றலுடன் சிலர் முயற்சி செய்வது போலத் தோன்றினா லும், அவை வெறும் பாசாங்குத்தனமாக உள்ளன. இங்கு நீங்கள் குறிப்பிட்ட இரு தொழிற்சாலைகளையே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம். அவற்றில் ஒன்று முடமாகி செயலற்றுக் டப்பதாகச் சித்தரிக்கப்பட்டது, ஆனால் உண்மையில் அந்த ஆலையின் தொழிலாளர்கள் தமது பணியில் கூடுதல் கவனம் செலுத்தி கடுமையாக உழைக்கவே செய்கிறார்கள், மற்றொரு தொழிற்சாலையோ, சுறுசுறுப் போடும் முழுவேகத்தோடும் செயல்படும் நிறுவனமாகச் சித்தரிக்கப்பட்டது, ஆனால் அங்கே தொழிலாளர்கள் முழு ஆற்றலுடன் செயல்படுவதைப் போல பாசாங்கு செய்கின்னர். இத்தகைய தவறான மதிப்பீடுகள் தலைவர் மாவோவின் வழிகாட்டு தல்களைக் கொச்சையாக வியாக்கியானம் செய்யும் செயலாகும். நாம் சாதிக்க வேண்டிய இலக்குகளை அடைய நமது ஆற்றல்களை முழுமையாக வெளிப்படுத்தி கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக புறநிலை சாத்தியப்பாடுகளுக்கு ஏற்ப, நம்மை அகநிலையாக பெருமுயற்சி செய்து தகவமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
நாம்மெய்யானமுயற்சிகளைவரவேற்கிறோம்; பாசாங்குகள் அல்ல.அனைத்து ஆற்றலையும செலுத்தி நீங்கள் வேலை செய்வதாகச் சொன்னால், உங்களுடைய வேலை அறிக்கையானது சான்றுகளிலிருந்து உண்மையை நிரூபித்துக் காட்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் சில விவகாரங்களில் இந்த முயற்சியானது போலித்தனமாக உள்ளது. சில நிறுவனங்களிலும் உள்ளூர் அமைப்புகளிலும் புத்தாண்டு தினத்திற்குக்கூட விடுமுறை அளிக்காமல், எல்லா நாட்களிலும் ஓய்வின்றிக் கடுமையாக வேலை செய்ய வேண்டுமென்று தலைமைப் பொறுப்பிலுள்ள வர்கள் தமக்கு கீழே பணிபுரிபவர்களுக்கு உத்தரவிடுகின்றனர்.
இருப்பினும் மேலதிகாரிகள் சூழ்ந்து நின்று விரட்டும் போதுதான் அங்கே வேலை நடக்கிறது. அவர்கள் விலகிச் சென்றவுடனேயே தொழிலாளர்கள் ஓய்வெடுத்துக் கொள்வதும், த்தாண்டு விழாவைக் கொண்டாட வீட்டுக்குச் சென்றுவிடுவதும்தான் வாடிக்கையாக உள்ளது.நாம் ஊக்கத்தோடு பணியாற்ற வேண்டும். இதுவே நடைமுறையில் விளைவுகளைச் சாதிப்பதற்கான ஒரே வழியாகும். மாறாக, நிர்பந்தத்தின் மூலம் எந்த விளைவையும் சாதிக்க முடியாது.
அண்மைக் காலங்களில்,”வெள்ளைக் கொடியைக் கீழிறக்குவோம்!” என்று முற்றிலும் பொருத்தமற்ற முழக்கங்களை மக்கள் தினசரி நாளேடு வெளியிட்டு வந்தது. இப்போது, இதற்காக அந்த நாளேடு சுயவிமர்சனம் செய்துகொண்டுள்ளது. (1958 ஆம் ஆண்டின் மாபெரும் முன்நோக்கிய பாய்ச்சல் எனும் சோசலிச கட்டுமான இயக்கத்தின் போது, இடது தீவிரவாத கருத்துக்கள் செல்வாக்குப் பெற்று இருந்தது. தற்புகழ்ச்சியை எதிர்ப்பது, எதார்த்த சான்றுகளிலிருந்து உண்மையைத் தேடுவது ஆகிய அறிவு சார்ந்த கண்ணோட்டங்களை முதலாளித்துவ வகைப்பட்ட போதனைகள் என்றும், இவை வலதுசாரி பழமைவாதக் கருத்துக்கள் என்றும், இவற்றைப் பின்பற்றுவோர் முதலாளித்துவ வெள்ளைக் கொடியினர் என்றும் முத்திரைகுத்தப்பட்டது.
(இத்தகையோர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு, பழித்துரைக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். இதுவே “வெள்ளைக் கொடியை கீழிறக்குவோம்!” என்ற முழக்கமாகக் குறிப்பிடப்பட்டது. இவ்வாறு தவறாகக் குற்றம் சாட்டி விமர்சித்து தண்டிக்கப்பட்டவர்கள் பற்றி மறுபரிசீலனை செய்யுமாறு ஏப்ரல் 1962இல் மத்திய கமிட்டி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் தவறான குற்றச் சாட்டிலிருந்து விடுதலை பெற்று இழந்த உரிமையை மீண்டும் பெற்றனர்) தவறான, நிர்பந்தமான, பொருத்தமற்ற முழக்கங்களும் உத்தரவுகளும் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதற்கு இது சான்றாகும்.
கடந்த சில ஆண்டுகளாக கூட்டங்களில் பங்கேற்ற போது நான் தனிப்பட்டமுறையில் பலருக்குத் தகுதிச் சான்றிதழ்களைப் பரிசளித்தேன். இங்கு யாராவது அப்படி பரிசு வாங்கி, இன்று அதற்கேற்ற தகுதியற்று இருந்தால், அச்சான்றிதழ்களைத் தூக்கி எறிந்து விடுமாறு கோருகிறேன். மக்களின் நல்வாழ்வுக்காக நாம் மெய்யான அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும்.
நடைமுறையில் விளைவுகளைச் சாதிக்க வேண்டும். இதுதான் உண்மையான தகுதிக்கான சான்றிதழ் ஆகும். உண்மையைப் பேசுங்கள்; மெய்யான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்; ஊக்கத்தோடு பணியாற்றுங்கள்; நடைமுறையில் விளைவுகளைச் சாதிக்கப் போராடுங்கள். இவையனைத்தின் வார்த்தெடுக்கப்பட்ட சாரம்தான், “;எதார்த்தமான சான்றுகளிலிருந்து உண்மையைத் தேடு!” என்ற முதுமொழியாகும். தோழர் மாசேதுங் இந்த முதுமொழிக்குப் புதிய வியாக்கியானத்தைக் கொடுத்தார் அவரது முதன்மையான சித்தாந்தக் கூறுகளில் ஒன்றாக இது எப்போதும் குறிப்பிடப்படுகிறது. இது மிகவும் செறிவுடைய, மிகவும் செழுமையான பொருள் பொதிந்த சொற்றொடராக விளங்குகிறது. இதை நடைமுறைப் படுத்த சிறந்த வழி எது? விரிவானவிசாரணையும்ஆய்வையும் பரிசீலனையையும், படிப்பையும்
மேற்கொள்வதே இதற்கான முதற் தேவையாகும்.
சமூக ஆய்வு -விசாரணையை மேற்கொள்வது அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஏனெனில் தொடர்ந்த நான்கு ஆண்டுகளாக தற்பெருமை யும் மிகை மதிப்பீடு செய்யும் போக்கும் நீடித்து வருகிறது. இதை ஒரேயடியில் மாற்றியமைப்பது சிரமமானது.
கடந்த ஆண்டு தோழர் லியு ஷாவோகி, ஹூனான் மாகாணத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குப் பயணம் மேற்கொண்டார் (இவர் பின்னர் முதலாளித்துவப் பாதையை ஆதரித்து கம்யூனிசத் துரோகியாகச் சீரழிந்தவர்) அங்கு அவர் தங்கியிருந்த ஆரம்ப நாட்களில், அவரைச் சந்தித்த மக்கள் உள்ளூர் நிலைமை பற்றி அவரிடம் துணிவாக எதையும்
தெரிவிக்க முன்வரவில்லை. ஏனெனில், உண்மையான நிலவரத்தைத் தோழரிடம் தெரிவிக்காமல் அவர்கள் மூடி மறைக்க வேண்டும் என்றே சில அதிகாரிகள் விரும்பினார்கள். நானும் சமூக நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக ஒரு ஊருக்குச் சென்றேன். நான் அங்கு போவதற்கு முன்பாக, எனது அலுவலகத்திலிருந்து சில தோழர்களை அங்கு அனுப்பி வைத்தேன். ஆய்வுக்குப் பின்னர்தான் எங்களுக்குத் தரப்பட்ட தகவல்களும் புள்ளி விபரங்களும் உண்மையான நிலைமைக்கு மாறாக இருப்பதை நானும் என் தோழர்களும் கண்டறிந்தோம்.
உண்மையான நிலவரத்தை மக்கள் உங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்கள் அவர்களை உங்களுக்குச் சமமாக மதித்து நடக்க வேண்டும். விடுதலைப் போர்க் காலங்களில் நாம் மக்களோடு நெருக்கமான உறவைக் கொண்டிருந்தோம். நாம் அவர்களோடு ஐக்கியப்பட்டு ஒன்றிணைந்து வாழ்ந்தோம். போர்க்கால சூழலிருந்து இன்று
நிலைமைகள் மாறிவிட்டன. உதாரணமாக, உங்கள் கலந்துரையாடலில் நான் பங்கேற்க வந்தபோது நடந்ததையே எடுத்துக் கொள்வோம், அரங்கத்திற்குள் நான் நுழைந் தவுடனேயே நீங்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி என்னை வரவேற்றீர்கள், அது எனக்கு மிகுந்த சங்கடத்தைத் தந்தது. கைதட்டலை நிறுத்ததச் சொல்வது உங்களை திகைப்படச் செய்யுமோ என்று எண்ணினேன், ஆனால் நேற்று பிற்பகல் நான் இங்கு வந்தபோது, நீங்கள் கைதட்டாமல் இருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இத்தகைய கைதட்டும் சம்பிரதாயங்கள் உங்களையும் என்னையும் ஒருபோதும் நெருங்கவிடாது. இது, நாம் ஒரே லட்சியத்திற் காகச் செயல்படும் சக தோழர்கள் என்பதை ஒருவகை தடையரண் ஏற்படுத்தி பிரித்து விடுகிறது. இந்தத் தடையானது கற்சுவரைப் போல் வலுவானதல்ல; மெல்லிய துண்டுக் காகிதத்தைப் போன்றது. இருந்த போதிலும் இந்தத் தடை நீடிக்கத்தான் செய்கிறது.நீங்கள் அனைவரும் 10, 20 ஆண்டுகளுக்கு முன்னரே புரட்சியில் சேர்ந்த மூத்த போராளிகள். அப்படியிருக்க நமக்குள் இத்தகைய வேறுபாடுகள் ஏன்?
இன்று நாம் உயரதிகாரிகளாக மாறியிருக்கிறோம்; மிகப் பெரிய பரப்புடைய நாட்டை நமது கட்டுப்பாட்டில் வைத்து நிர்வகித்து வருகிறோம். ஆனால் நாம் புரட்சிகர தளப்பிரதேசங்களை கட்டியமைத்துப் போராடிய அன்றைய நாட்களின் நிலைமையோ வேறானது. அன்றைய நட்பும் ஐக்கியமும் இன்று நம்மிடையே இல்லாததைக் கண்டு நான் மிகவும் அஞ்சுகிறேன். இதைக் கருத்தில் கொள்ளும்போது, நீங்கள் என்னைக் கைதட்டி வரவேற்றது மிகவும் சங்கடமாக உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளி லிருந்து நம்மை மாற்றிக் கொள்வது அவசியமாகும். தொகுப்பாக கூறும்போது, வெற்றிகரமான சமூக ஆய்வு, விசாரணைகள் மேற்கொள்ள நாம் மக்களுடன் நெருக்கமான உறவைப் பேண வேண்டும்.
நம்முடைய ஜனநாயக மரபுகளை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதாவது கட்சி முழுவதும் இயல்பான, ஜனநாயக பாரம்பரியத்தை மீண்டும் நிலைநாட்டவும் மேம்படுத்தவும் வேண்டும். நமது இராணுவத்தில் ஜனநாயகம் மேலோங்கி யிருந்த காரணத்தினாலேயே, போர்க் காலங்களில் நாம் பல வெற்றிகளை ஈட்டினோம். நமது ஆயுதப் படையினர் போர்க்கள இயக்கங்களில் ஒப்பற்ற முறையில் போராடிக் கொண்டிருந்தபோது, விடுதலைப் போர் (1946 - 49) காலத்தில் - குறிப்பான உண்மையாக இது நிரூபனமானது. அந்த நேரத்தில் பெரும் படைப் பிரிவின் கீழுள்ள ஆயுதக் குழுக்கள் கூட இராணுவச் செயல்தந்திரத் திட்டங்களை விவாதிக்கவும், போர் நடவடிக்கைகள் பற்றிய தமது கருத்துக்களைக் கூறவும் பெரிதும் ஊக்குவிக்கப்பட்டனர். கீழ்மட்டத்திலுள்ள இராணுவ வீரர்கள், இராணுவ விவகாரங்கள் குறித்து ஜனநாயக முறையில் விவாதிக்கும் நடைமுறையை
தோழர் மாசேதுங் தொடங்கி வைத்தார். நமது அனைத்து இராணுவக் குழுக்களின் அனுபவங் களைத் தெரிவிப்பதற்கும் வழிகாட்டினார். இராணுவக் குழுக்களிலேயே ஜனநாயகத்தைப் பரந்துபட்ட அளவில் நடைமுறைப் படுத்தும்போது, ஏன் அதை கட்சி அமைப்புகளில் செயல்படுத்த முடியாது?
கட்சியின் ஜனநாயகப் பாரம்பரியத்தை நிலைநாட்டி, கட்சி அமைப்பு விதிகளின்படி நாம் செயல்படுவதே சரியானதாகும்.ஏழாவது தேசிய கட்சிப் பேராயத்தின் போது, தோழர் லியு ஷாவோகி கட்சிஅமைப்பு விதிகளைத் திருத்தியமைப்பதற்கான அறிக்கையை
முன்வைத்தார். தோழர் டெங்சியாவோபிங் இதே போன்ற அறிக்கையை எட்டாவது தேசியப் பேராயத்தில் முன்வைத்தார். (இவர் பின்னர் லியுஷாவோகியின் தலைமையில் முதலாளித்துவப் பாதையை ஆதரித்து கம்யூனிசத் துரோகியாகச் சீரழிந்தவர்). இவ்விரு அறிக்கைகளும் கட்சியின் ஜனநாயக வாழ்வு குறித்த பிரச்சனையின் மீது கவனம் செலுத்த வலியுறுத்தின. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சில தோழர்கள் இந்தப் பிரச்சனையை அறவே புறக்கணித்து வந்துள்ளனர்.
சில நேரங்களில் மைய அரசுத் துறைகளிலிருந்து தவறான வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க ஒரு விடயம் என்னவென்றால், தொலைபேசி உரையாடல்கள்மூலமாகவே விவாதங்கள்நடத்தி முடிப்பதாகும். இந்த நடைமுறையானது, அப்படியே கீழ்மட்ட அமைப்புகளாலும் பின்பற்றப்படுகிறது. இது படிப்படியாக அடிமட்டம் வரை வேர் விடுகிறது. ஆனால் தொலைபேசி மூலம் ஜனநாயக ரீதியான விவாதங்களை ஒருபோதும் நடத்த சாத்தியமில்லை. இதனால், உயர் மட்டத்திலுள்ள பொறுப்பாளர்கள் கீழ்மட்ட அமைப்புகளுக்கு வெறுமனே உத்தரவைத் திணிப்பதாகவே நிலைமை மாறிவிடுகிறது. நிச்சயமாக இது ஒரு தவறான நடைமுறையாகும்.
கட்சி அமைப்பு விதிகளைத் திருத்தியமைப்பது பற்றிய லியுஷாவோகி,டெங்சியாவோபிங் ஆகிய தோழர்களின் அறிக்கைகள் உட்கட்சி ஜனநாயகத் தையே வலியுறுத்துகின்றன. நாம் நமது விருப்பப்படியோ நியாயமற்ற முறையிலோ தோழர்களையும் மக்களையும் தண்டிக்கலாமா?
கூடாது! சரியான காரணங்கள் இல்லாமல் ஒருவரைக் கட்சியிலிருந்து வெளியேற்று வதோ, அரசு அலுவலங்களிலிருந்து வேலை நீக்கம் செய்வதோ, அல்லது கண்மூடித் தனமாகக் கைது செய்வதோ, அடித்துத் துன்புறுத்துவதோ ஒருபோதும் கூடாது. உட்கட்சி ஜனநாயகம் என்பது வேறு; சமுதாயத்தில் சட்ட ஒழுங்கு - ஜனநாயகம் என்பது வேறு. சமுதாயத்தில் நடக்கும் சட்ட விரோத நடவடிக்கைகளும் பொது ஒழுங்கைச் சிதைப்பது மான விவகாரங்கள் உட்கட்சி ஜனநாயக எல்லைக்கு அப்பாற்பட்டவை. அவற்றை அரசு சட்ட விதிகளின்படியே கையாளவேண்டும்.
கட்சியில் ஜனநாயக நிகழ்வை மிக விரைவாக நிலைநாட்ட நாம்உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கட்சியைக் கட்டுவது பற்றிய தோழர் மாசேதுங்கின் செறிவான கருத்துக்களைப் பரவலாக விதைக்க வேண்டும். கைவிடப்பட்டதாகத் தோற்ற மளிக்கும் கட்சியின் உன்னதமான மரபுகளையும் மிகச்சிறந்த வேலைப் பாணி களையும் நாம் மீண்டும் முழுமையாக நிலைநாட்ட வேண்டும். நமது கட்சியில் முறையான, தொடர்ச்சியான ஜனநாயக நடவடிக்கைகள் இழைந்தோட வேண்டும். நாம் எதார்த்தமான சான்றுகளிலிருந்து உண்மையைத் தேடும் வகையில், கட்சியின் அமைப்பு விதிகள் கோரும் தகுதிக்கேற்ப செயல்பட வேண்டும்.
குறிப்பு:-
(சீனக்கம்யூனிஸ்டுக் கட்சியின் மத்திய கமிட்டியால் ஏற்பாடு செய்யப்பட்ட ப்யூஜியன் மாகாணத் தோழர்களைக் கொண்ட விவாதக் குழுவின் விரிவாக்கப்பட்டக் கூட்டத்தில் சுயவிமர்சனத்தின் பயன்பாடு என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் தோழர் சௌ என் லாய் ஆற்றிய உரையிலிருந்து சாராம் சமாகத் தொகுக்கப்பட்டது)
No comments:
Post a Comment