முந்தைய பதிவின் தொடர்ச்சியாக
**அனுபவவாத விமர்சகர்கள் மார்க்சிய வரலாற்றுப்
பொருள்முதல்வாதத்திலும் தலையிட்டனர்.வரலாற்று
நிகழ்வுகளை ஆராயும்போது உயிரியல்ரீதியான காரணங்கள்,சமூகவியல் ரீதியான அம்சங்களை விவாதிக்க
வேண்டும் என்றனர்.மார்க்சியம் சமுக நிகழ்வுகளின்
அனைத்துப் பரிமாணங்களையும் ஆராய்கிறது என்றாலும்,பொருளியல் அடிப்படையை வலியுறுத்துகிறது.இந்த அடிப்படையை நிராகரிப்பதாக அனுபவவாத
விமர்சகர்கள் பார்வை உள்ளது என்று குறிப்பிடுகிறார்,லெனின்.
**சமுக உணர்வினை நிர்ணயிப்பதில் சமுக
இருப்பு அல்லது எதார்த்தம் அடிப்படையானது என்பது மார்க்சிய வரலாற்றுப்
பொருள்முதல்வாதம்.இதை மறுக்கும் வகையில் போகடானாவ்
இரண்டையும் ஒன்றுபடுத்துவதாக கூறி ஒரு ஒருமைக் கோட்பாட்டை உருவாக்கினார்.இதில் சமுக சிந்தனையை முதன்மையாக்கி
அந்த சிந்தனையை நிர்ணயிப்பதில்,பொருளியல்
அடிப்படைகளின் முதன்மைப் பங்கினை போகடானாவ்
கைவிட்டதாக லெனின் குற்றம் சாட்டினார்.
**அனுபவாத விமர்சகர்களின் தத்துவம், பொருள்முதல்வாதம்,கருத்துமுதல்வாதம் என்ற இரண்டு
எல்லைகளையெல்லாம் தாண்டிய நடுநிலையான தத்துவம் என்று தங்களது தத்துவத்தை அவர்கள்
பாராட்டிக்கொண்டனர்.இந்த கருத்தினையும் லெனின் தாக்கினார்.ஒரு தத்துவவாதி நடுநிலை என்ற நிலையை
தத்துவப் பிரச்னைகளில் எடுக்க முடியாது.ஏனென்றால்,பொருளா?கருத்தா?எது அடிப்படை என்பதுதான் தத்துவத்தின்
அடிப்படைப் பிரச்னை.எது அடிப்படை என்ற நிலையெடுத்து தனது
தத்துவத்தை விளக்கிட வேண்டும்.இதில்
நடுநிலை இருக்க இயலாது.அப்படி இருப்பதாக கூறிக் கொள்வது
ஏமாற்று வித்தை.
மார்க்சியம்
எந்த தயக்கமும் இல்லாமல் தனது சார்புத்தன்மையை அறிவிக்கிறது.பொருள்தான் அடிப்படை என்ற இயக்கவியல்
பொருள்முதல்வாதத்தினைப் பற்றி நிற்கிறது.
லெனின்
நூலில் எழுதுகிறார்:
“துவக்கத்திலிருந்து கடைசி வரை
மார்க்சும் எங்கெல்சும் தத்துவத்தில் சார்பு கொண்டவர்களாகவே இருந்தனர்.பொருள்முதல்வாதத்திலிருந்து திசைமாறுகிற
ஒவ்வொரு விலகலையும் அவர்களால் கூர்ந்து கண்டுபிடிக்க முடிந்தது.ஒவ்வொரு புதிய போக்குகள் உருவெடுக்கும்
போதும் அது கருத்துமுதல்வாதத்திற்கும் மத விசுவாசத்திற்கும் எவ்வாறு இடமளித்து
சலுகைகள் கொடுக்கிறது என்பதை நுணுகி கண்டறிந்தனர்…..”
எனவே
தத்துவம் என்பது எதோ சில அறிவுஜீவிகளின்
மயிர் பிளக்கும் வாதங்களுக்கான களமாக லெனின் பார்க்கவில்லை.பாட்டாளி வர்க்கம்
முதலாளித்துவத்திற்கு எதிராக நடத்தும் வாழ்வா,சாவா போராட்டத்தின்
மற்றொரு களமாகவே லெனின் தத்துவத்தை அணுகினார்.
தத்துவத்துறையில் நிலைத்து நிற்கும் நூலாக…
லெனின்
எழுதிய சில நூல்கள் மட்டுமே பரவலாக அறிமுகமாகியுள்ளன.அதிகம் அறியப்படாத நூல்கள் பல உள்ளன.அதிலும் குறிப்பாக தத்துவம் பற்றிய
நூல்களை பலர் வாசிப்பதில்லை.அதற்கு
முக்கிய காரணம்,அன்றாட அரசியல் தேவைகளுக்கு தத்துவம்
உதவிடாது என்ற எண்ணம் பலரிடம் நீடிப்பதுதான்.ஆனால் எட்டு மாதங்கள் முழுமையாக
செலவிட்டு இடைவிடாது எழுதி முடித்த“பொருள்முதல்வாதமும்
அனுபவவாத விமர்சனமும்”
புரட்சிகர
அரசியலுக்கு உதவிகரமாக அமைந்தது.
அந்த
நூலை எழுதி முடித்தவுடன் லெனின் அந்நூல் உடனே வெளியாக வேண்டும் என்று அவசரம்
காட்டினார் என்பது அவரது கடிதங்களில் தெரிய வருகிறது. பதிப்பகத்தாருக்கு அவர் எழுதிய ஒரு
கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“…..(1909) ஏப்ரல் முதல் வாரத்தில் நூல் வெளிவர
வேண்டும்;இதற்கான வகையில் எல்லா திருத்தங்களையும்
செய்து முடித்துக் கொடுத்துவிட்டேன்…..இதில் ஒரு நூல் பங்களிப்பு என்ற நோக்கம்
மட்டுமல்லாது ;இந்நூல் வெளிவருவது,முக்கியமான அரசியல் விளைவுகளோடு
தொடர்புடையது ……”
இவ்வளவு அவசரமும் ஆர்வமும் அவர்
கொண்டிருந்ததற்குக் காரணம், நூலின்
கருத்துக்கள் பாட்டளி வர்க்கத்திடம் இயக்கத்தினரிடம் செல்ல வேண்டுமென்பதுதான். ரஷ்ய புரட்சிகர அரசியல் மாற்றத்திற்கு
அந்த நூல் பயன்படும் என்று உறுதியாக நம்பினார்.
அவரது
நம்பிக்கை வீண் போகவில்லை.“பொருள்முதல்வாதமும்
அனுபவவாத விமர்சனமும்”அன்று அந்த மாற்றத்திற்கான பணியை
நிகழ்த்தியது.
இந்நூல் வெளியான
பிறகு ரஷ்யாவில் பரவலாக வாசிக்கப்பட்டது.இதையொட்டிய
ரகசியக் வாசிப்புக் கூட்டங்கள்,விவாதங்கள்
நடைபெற்றன.ரஷ்யாவில் மட்டுமல்லாது பாரிஸ்
நகரத்தில் தொழிலாளர் கூட்டங்கள் நடந்தன.நாடு
கடத்தப்பட்டவர்கள்,
சிறையிலிருப்பவர்கள்
என பலரிடம் நூல் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அன்று
லெனின் எதிர்பார்த்த அரசியல்மாற்றத்திற்கு இந்நூல் பயன்பட்டதுடன்,இன்றும் தத்துவத்துறையில் நீடித்து
நிலைத்து நிற்கும் நூலாக விளங்குகிறது.
ஒரு
புறம்,முதலாளித்துவ கார்ப்பரெட் சுரண்டல்,அதற்கு துணையாக நிற்கும்அரசு,அதிகாரம்,மறுபுறம்,சுரண்டலுக்குஆளாகி, மனமொடிந்து, வறுமைக்கும்,வேதனைக்கும் ஆளாகும் உழைக்கும்
வர்க்கங்கள் என கூறுபட்டு நிற்பது இந்தச் சமுகம். இது எதார்த்தம்.இந்த எதார்த்த நிலையிலிருந்து
மாற்றத்திற்கான புரட்சிக்கான கருத்துக்கள் தோன்றுகின்றன.
கருத்திலிருந்து
பொருள் என்ற வகையில் பார்த்தால் உண்மை எதார்த்தம் கடவுளால் அல்லது ஹெகலின்
சொற்றொடரில் முழுமுதல் கருத்தினால் படைக்கப்பட்டது. அது மாற்ற முடியாதது என்ற
முடிவிற்குத்தான் வர வேண்டியிருக்கும். முதலாளித்துவம்
நிரந்தரமானது என்றும் அது விதிக்கப்பட்டது என்றும் முடிவிற்கு இட்டுச் செல்வது
கருத்துமுதல்வாதம். உண்மை நிலையை மாற்றுவதற்கு இட்டுச்
செல்வது பொருள்முதல்வாதம்.இதனால்தான்
இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படைகளை பாதுகாப்பது புரட்சிகர கடமை என்று
போதித்தார் லெனின்.
மார்க்சிய இயக்கவியல் அணுகுமுறை
அ. இணைக்கப்பட்டு நிர்ணயமாகும் - இயற்கை
1. இயற்கை தற்செயலான குவியல்களால் ஆனது என்றும் அவற்றுக்கு
ஒன்றுக்கொன்று தொடர்பில்லை என்றும் சொல்கிறது இயக்க மறுப்பியல் - மெட்டா பிசிக்ஸ் - மாறாநிலை தத்துவம். இயற்கை பொருட்கள் ஒன்றுடனொன்று பிணைக்கப்பட்டவை, முழுமையின் ஒரு பகுதி, சார்புத் தன்மை உடையவை, ஒன்றை மற்றொன்று தீர்மானிக்கும் தன்மை உடையவை என்று இயக்கவியல் தத்துவம்
கூறுகிறது.
2. அதாவது, ஒரு தோற்றத்தை பரிசீலிக்கும்
போது அதைச் சுற்றியுள்ள அதை பாதிக்கும் அனைத்து தோற்றங்களுடனும் இணைத்து
அவற்றையும் கருத்தில் கொண்டுதான் புரிந்து கொள்ள முடியும்.
ஆ. தொடர்ச்சியான இயக்கமும்
மாற்றமும் உடைய இயற்கை
1. இயற்கை தொடர்ந்து இயக்கத்தில் தன்னை மாற்றிக் கொள்வதாக
புதுப்பித்துக் கொள்வதாக இருக்கிறது. இது மாறாநிலைத் தத்துவத்திற்கு
எதிர்மாறானது. இயற்கையில் ஏதாவது ஒன்று அழிந்து கொண்டும் ஏதாவது ஒன்று புதிதாக தோன்றி
கொண்டும் இருக்கின்றன என்றும் இயக்கவியல் கருதுகிறது.
2. பல்வேறு தோற்றங்களின் தொடர்புகளையும் சார்புகளையும்
மட்டுமின்றி இயக்கம், மாற்றம், வளர்ச்சி, தோற்றம், மறைவு இவற்றை சேர்த்து ஆராய வேண்டும்.
3. குறிப்பிட்ட காலத்தில் ஒரு பொருள் நிலை பெற்றதாக தோன்றலாம். ஆனால் அது கொஞ்ச கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பொருள் புதிதாக தோன்றியிருந்தாலும் வளர்ந்து வருவதாக வெல்லற்கரியதாக
விளங்குகிறது.
முதலாளித்துவ சமூகத்தில் முதலாளித்துவம் அழிந்து
கொண்டிருப்பது, பாட்டாளி வர்க்கம் வளர்ந்து கொண்டிருப்பது. புராதன பொதுவுடமை சமூகத்தில் அடிமை முறை வளர்ந்து கொண்டிருப்பது.
4. எங்கெல்ஸ் - இயற்கையின் எல்லா பொருட்களும்
தோன்றி, வளர்ந்து, மறைந்து கொண்டிருக்கின்றன. எந்நேரமும் இயங்கிக் கொண்டு
மாறிக் கொண்டிருக்கின்றன. பொருட்களை பரஸ்பர தொடர்பிலும், இயக்கப் போக்கிலும், தோன்றி வளர்ந்து மறையும்
நிலைமையிலும் ஆராய வேண்டும்.
இ. இயற்கையின் அளவு மாற்றங்கள்
பண்பு நிலை மாற்றங்களுக்கு வழி வகுக்கின்றன
1. வளர்ச்சி என்பது சாதாரணமாக வளர்ந்து கொண்டிருக்கும் போக்காக
மாறாநிலை தத்துவம் கருதுகிறது. அதன் படி அளவு மாற்றங்கள் பண்பு
மாற்றங்களுக்கு கொண்டு போவதில்லை. இயக்கவியலின் படி அளவில்
ஏற்படும் சிறு சிறு மாறுதல்கள் பகிரங்கமான அடிப்படையான பண்பு மாற்றத்துக்கு வழி
வகுக்கின்றன என்று இயக்கவியல் கருதுகிறது.
உழைக்கும் வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற
அடிப்படையான பண்பு மாற்றம், அதற்கு முந்தைய சமூகத்தில் சிறு
சிறு மாற்றங்கள் - தனி நபர், மனித உறவுகள், உற்பத்தி முறைகளில்- நடப்பதன் மூலம் சாத்தியமாகிறது.
அத்தகைய பண்பு மாற்றங்கள் படிப்படியாக நிகழ்வதில்லை. அவை அதி விரைவாக திடுதிடுப்பென்று நிகழ்கின்றன. அதனால் சமூக மாற்றம் சமரச, சமாதான வழியின் மூலம் சாத்தியம்
என்று சொல்லும் திரிபுவாதிகளின் கோட்பாட்டை இது மறுக்கிறது. சிறு சிறு அளவு மாற்றங்களால் வந்தடைந்ததும் பண்பு மாற்றம் ஒரு புரட்சியாக
வெடிக்கிறது.
அணுவினுள் ஆற்றல் மட்டங்கள், தண்ணீர் கொதிப்பவை போன்ற இயற்கை அறிவியல் நிகழ்வுகளிலும் இதை பார்க்கலாம். நிலையான சுற்றுப் பாதையில் இருக்கும் எலக்ட்ரானுக்கு சிறு சிறு ஆற்றல்
அளித்தால் அது நிலை மாறுவதில்லை. ஆற்றல் அதிகரிப்பு குறிப்பிட்ட
அளவைத் தாண்டியதும் அது ஒரு துள்ளு துள்ளி அடுத்த ஆற்றல் மட்டத்துக்கு போய்
விடுகிறது.
அதே போல தண்ணீர் 99 டிகிரி வெப்பம் வரை நீராவியாக
மாறுவதில்லை, 100வது டிகிரி வெப்பத்தை அடைந்த வுடன் ஒரே துள்ளலாக நீராவியாக மாறி விடுகிறது.
2. இந்த வளர்ச்சி சுற்றிச் சுற்றி வரும் வட்டமாக இருப்பதில்லை. மாறாக படிப்படியாக உயர் நிலைக்குப் போகும் சுழல் வட்டமாக இருக்கிறது. எளிமையான நிலையிலிருந்து சிக்கலான நிலைக்கு மாறிச் செல்கிறது.
3. எங்கெல்ஸ்
இயக்கவியலின் ஆதாரமாக அறிவியல் கண்டுபிடிப்புகள் புதிய
புதிய ஆதாரங்களை தருகின்றன. அவை இயற்கை இயக்கவியலின்படி
அமைந்ததே என்று நிறுவியிருக்கின்றன. இதில் டார்வினின் பரிணாம
வளர்ச்சி கோட்பாடு முக்கியமானதாகும். உலகின் தாவர, விலங்கு இனங்களும் மனிதனும் பரிணாம வளர்ச்சியின் ஒரு பயனாக ஏற்பட்டவையே. இது கோடானு கோடி ஆண்டுகளாக நடந்து வருகிறது என்பதை நிருபித்து மாறாநிலை
தத்துவப் பார்வைக்கு மரண அடி கொடுத்தார்.
இயக்கவியல் வளர்ச்சி என்பது ஒரு பொருளின் அளவு மாற்றங்கள்
குணத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் போதுதான் நிகழ்கிறது. பொருளின் உள்ளிருக்கும் இயக்கம் காரணமாக அல்லது வெளியிலிருந்து செலுத்தப்படும்
இயக்கம் காரணமாக இந்த மாற்றம் நிகழலாம்.
இயற்பியல் உதாரணம் - சூடுபடுத்தும் போது தண்ணீர் நீராவி அல்லது பனிக்கட்டி ஆதல், மின்சாரம் செலுத்தும் போது உலோக இழையில் வெளிச்சம் ஏற்படுதல், சூடு படுத்தும் போது உலோகம் உருகுதல், திரவத்தின் கொதி நிலை அல்லது உறை நிலை (அழுத்தத்தைப் பொறுத்தது). வாயுக்கள் சரியான அழுத்தம்
வெப்பநிலையில் திரவமாகி விடுகின்றன. மாற்றத்துக்கான இந்த புள்ளிகள்
இயற்பியல் மாறிலிகளாக இருக்கின்றன. அதாவது குறிப்பிட்ட வெப்பநிலை
அந்த திரவத்தின் கொதிநிலை மாறிலி, குறிப்பிட்ட குளிர் நிலை அதன்
உறை நிலை மாறிலி. அளவு மாற்றங்கள் பண்பு மாற்றமாக வெளிப்படும் கட்டங்களை இந்த
புள்ளிகள் குறிக்கின்றன.
வேதியல் உதாரணங்கள் :
வெவ்வேறு அளவில் சேரும் போது வெவ்வேறு பண்புடைய சேர்மங்கள்
உருவாகின்றன. உதாரணமாக இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் ஆக்சிஜன் வாயுவாகவும், மூன்று ஆக்சிஜன் அணுக்களை கொண்ட பொருள் ஓசோனாகவும் இருக்கின்றன. இரண்டுக்கும் பெரிதும் வேறுபட்ட பண்புகள் இருக்கின்றன. நிறத்திலும் தன்மையிலும் ஓசோன் ஆக்சிஜனிலிருந்து வேறுபட்டிருக்கிறது.
ஆக்சிஜன் - நிறமற்றது, இரண்டு இரட்டையாக்கப்படாத எலக்ட்ரான்களை கொண்டிருக்கிறது. தண்ணீரில் நன்கு கரையும். (-182.95 நீர்ம நிலை, -218.79 திட புள்ளி)
ஓசோன் - நீல நிறம். நீர்ம ஓசோன் (-112 C), திட ஓசோன் (-193 C) இரண்டுமே நீல நிறம். ஓசோன்தான் வானத்தை நீல நிறமாக காட்டுகிறது. தண்ணீரில் சிறிதளவே கரையும். இதன் எலக்ட்ரான்கள் அனைத்தும்
இரட்டையாக இருக்கின்றன.
நைட்ரஜன் அல்லது கந்தகத்துடன் ஆக்ஸிஜன் வெவ்வேறு
விகிதங்களில் கூடி வேறுபட்ட பண்புகளை கொண்ட வெவ்வேறு சேர்மங்களை உருவாக்குகிறது. அவை ஒவ்வொன்றும் பண்பு ரீதியில் வேறுபட்டவை.
Nitric oxide, also known as nitrogen monoxide, (NO), nitrogen(II) oxide
Nitrogen dioxide (NO2), nitrogen(IV) oxide
Nitrous oxide (N2O), nitrogen(I) oxide
Nitrosylazide (N4O), nitrogen(I) oxide + diatomic nitrogen
Nitrate radical (NO3), nitrogen(VI) oxide
Dinitrogen trioxide (N2O3), nitrogen(III) oxide
Dinitrogen tetroxide (N2O4), nitrogen(IV) oxide
Dinitrogen pentoxide (N2O5), nitrogen(V) oxide
Trinitramide (N(NO2)3)
டூரிங் இயக்கவியலை மறுப்பதற்கு ஹெகலை கடுமையாக
விமர்சித்தாலும் அவரது ஆய்வுரையை தன்னுடையதாக பயன்படுத்திக் கொண்டார். உயிரற்ற பொருள்களிலிருந்து உயிர் தோன்றுவதற்கான பாய்ச்சலை குறித்தது அது. குறிப்பிட்ட தீர்மானமான கட்டத்தை அடைந்தவுடன் பொருளில் ஏற்படும் அடுத்த சிறிய
அளவு மாற்றம் பாய்ச்சலாக பண்பு மாற்றத்தை உருவாக்குகிறது.
ஈ. முரண்பாடுகள் இயற்கையில்
உள்ளார்ந்து இருக்கின்றன
1. ஒவ்வொரு பொருளின் உள்ளும் எதிரெதிர் முரண்பாடுகள்
அடங்கியுள்ளன. அவற்றுக்கிடையேயான போராட்டம்தான் வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. அளவு மாற்றங்கள் பண்பு மாற்றங்களாக மாறுவதற்கான காரணமும்
எதிர்மறைகளுக்கிடையேயான இந்த போராட்டம்தான்.
2. கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்குப் போவது நேரான
ஒத்திசைவான நகர்வு இல்லை. அவை முரண்பாடுகளின்
போராட்டத்தின் விளைவுகளே ஆகும்.
3. லெனின்
இயக்கவியல் என்பது பொருட்களுக்குள்ளே பொதிந்திருக்கும்
முரண்பாடுகளை ஆய்வதுதான். வளர்ச்சி என்பது
எதிர்மறைகளுக்கிடையே நடக்கும் போராட்டத்தையே குறிக்கிறது.
இவைதான் மார்க்சிய முறையிலான இயக்கவியல் அணுமுறையின் பிரதான
அம்சங்கள் ஆகும்.
வரலாற்று பொருள் முதல்வாதம்
சமூக வாழ்க்கையையும் மனித வரலாற்றையும் ஆய்வதற்கு இந்த
இயக்கவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை இப்போது புரிந்து
கொள்ள முடியும். சமுதாயத்தின் வரலாற்றுடனும் பாட்டாளி வர்க்க கட்சியின் நடைமுறை வேலைகளுடனும்
இந்த கோட்பாடுகளை பொருத்திப் பார்க்க வேண்டும்.
உலகின் எல்லா பொருட்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை
என்றால் மனித வரலாற்றில் சமுதாய அமைப்புகளையும் இயக்கங்களையும் எப்படி மதிப்பிட
வேண்டும்? என்றும் மாறாத கோட்பாடுகள் அல்லது முன் முடிவுகளுடனோ வரலாற்றை அணுகக் கூடாது. குறிப்பிட்ட சமுதாய அமைப்பும் அதோடு தொடர்புடைய சமுதாய இயக்கமும் தோன்றுவதற்கு
காரணமான நிலைமைகளை ஆராய வேண்டும்.
இப்போது அடிமை முறை கொடுமையானதாகவும் பிற்போக்கானதாகவும்
தோன்றலாம். ஆனால், புராதன பொதுவுடமை சமுதாயம் சிதைந்து வரும் சூழலில் அடிமை சமூக அமைப்பு ஒரு
முன்னேற்றத்தை குறிக்கிறது. 1905ல் ரஷ்யாவில் ஜாரிசமும்
முதலாளித்துவமும் இருந்ததையும் இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். நிலப்பிரபுத்துவத்தை விட முன்னேறிய சமூக அமைப்பான முதலாளித்துவத்த ஜனநாயகம்
வேண்டும் என்று கோரியது புரிந்து கொள்ளக் கூடியதே. இந்தியாவில் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த சீர்திருத்த வாதிகளை இந்த
கண்ணோட்டத்துடன் அணுகலாம்.
ஆனால் சோவியத் சோசலிச குடியரசுகளின் காலத்திலோ, சீனாவிலோ ஒரு முதலாளித்துவ குடியரசு வேண்டும் என்று சொல்வது பிற்போக்கானதாகும். எதுவுமை நிலைமை, காலம், இடம் இவற்றைப் பொறுத்துதான்
இயங்குகின்றன.
சோவியத் யூனியனில் ஸ்டாலின் காலத்துக்குப் பிறகும் சீனாவில்
மாவோ காலத்திற்கு பிறகும் திரிபுவாதிகள் கம்யூனிசத்தை நோக்கிய சோசலிச போராட்டத்தை
கைவிட்டு முதலாளித்துவ அமைப்பை நிறுவியிருக்கிறார்கள். சமூக வளர்ச்சி என்பது நேர் கோட்டு பாதையில் நடக்காமல் முன்னும் பின்னுமாக
முற்போக்கும் பிற்போக்கும் இடையேயான போராட்டத்தினூடாகவே இயங்கி செல்கிறது என்று
புரிந்து கொள்ள வேண்டும்.
சமூக தோற்றங்களைப் பற்றிய இத்தகைய வரலாற்று கண்ணோட்டம்
இல்லாமல் வரலாற்றைப் பற்றிய அறிவியல் பூர்வமான அணுகுமுறை இருக்க முடியாது என்பது
தெளிவு. வரலாறு என்பது தற்செயல் நிகழ்வுகளின் தொகுப்பாகவும், தனி மனிதர்களின் சாகசங்களாகவும் இருப்பதாகவும் அணுகுபவர்களால் வரலாறு
உருக்குலைந்து போவதிலிருந்து இதுதான் பாதுகாக்கிறது.
உலகம் இயங்கிக் கொண்டிருப்பதும் பழமை மறைந்து புதுமை
தோன்றுவதும் உண்மை என்றால் மாறாத சமூக அமைப்பு என்று எதுவும் இல்லை. சொத்துரிமை, தனி மனித உரிமை தொடர்பான காலத்தால் மாறாத கோட்பாடுகள் இருக்க முடியாது. திருக்குறள் உலகப் பொதுமறை என்று எல்லா காலத்துக்கும் எல்லா இடத்துக்கும்
பொருந்துவது என்பது சாத்தியமில்லாதது. பண்ணையாருக்கு விவசாயி அடிமை, முதலாளி அதிகாரம் செலுத்த தொழிலாளி உழைக்க வேண்டும் என்ற நிலைமைகள் நிரந்தரமாக
இருக்க முடியாது.
நிலப்பிரபுத்தும் நீக்கப்பட்டு
முதலாளித்துவம் உருவானது போல முதலாளித்துவம் நீக்கப்பட்டு சோசலிசம் உருவாவதும், அதிலிருந்து கம்யூனிசம் உருவாவதும் சாத்தியமே. சமுதாயத்தில் தற்போது ஆதிக்கம் செலுத்தினாலும் வளர்ச்சி அடையாத எதிர்காலம்
இல்லாத பிரிவுகளை ஆதாரமாக கொள்ளக் கூடாது. எந்த பிரிவு வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறதோ, எதிர்காலத்தை உருவாக்குவதாக இருக்கிறதோ அதன் அடிப்படையிலேயே வரலாறு வளர்ச்சி
அடையும்.
1880-90 ஆண்டுகளில் மார்க்சிஸ்டுகளுக்கு நரோத்னிக்குகளுக்கும்
போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது பாட்டாளி வர்க்கம் சிறுபான்மையாகவும்
விவசாயிகள் பெரும்பான்மையினராகவும் இருந்தனர். இருப்பினும் பாட்டாளி வர்க்கம் வர்க்க ரீதியில் வளர்ந்து கொண்டே வர விவசாயிகள்
வர்க்க ரீதியில் குறைந்து கொண்டே போயினர். எனவே மார்க்சிய வாதிகள் பாட்டாளி வர்க்கத்தை தமது கண்ணோட்டத்துக்கு ஆதாரமாக
கொண்டனர். பாட்டாளி வர்க்கம் பெருமளவு வளர்ச்சி பெற்று பிற்காலத்தில் வரலாற்றை
உருவாக்கும் சக்தியாக வளர்ந்தது என்பதை நாம் அறிவோம்.
நமது பார்வை முன்னோக்கி இருந்தால்தான் தவறிழைக்காமல் இருக்க
முடியும்.
அளவு மாற்றங்கள் பண்பு மாற்றங்களாக வெளிப்படும் என்றால்
ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் நடத்தும் புரட்சி தவிர்க்க முடியாதது. முதலாளித்துவத்திலிருந்து சோசலிச அமைப்புக்கு மாறுவதற்கான அளவு மாற்றங்கள்
சிறு சிறு அளவில் நடந்தாலும் அதிகார மாற்றம் புரட்சி என்ற பண்பு ரீதியான
மாற்றத்தின் மூலம்தான் நடக்க முடியும். கொள்கையில் தவறிழைக்காமல்
இருக்க வேண்டுமானால் சீர்திருத்த வாதத்தை விட புரட்சி வாதம்தான் பொருத்தமானது.
தொடரும்....
No comments:
Post a Comment