இயக்கவியலின் உதாரணங்கள்.(சுருக்கப்பட்ட தொகுப்பு) மாவோ. பாகம் 1 இலக்கு 49 இதழிலிருந்து

 1. பகுப்பாய்வைப் புரிந்துகொள்வதற்கு இயக்கவியலைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எதிர்மறைகளின் ஒற்றுமை தத்துவமாக இயக்கவியலைத் தொகுத்துரைக்கலாம் என்று லெனின் கூறினார். இந்த நிலையிலிருந்து இயக்கவியலின் கருப்பொருளை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த தத்துவத்தை விளக்குவதும் மேம்படுத்துவதும் அவசியம்.

எதிர்மறைகளின் ஒற்றுமை என்பது நிபந்தனைக்குட்பட்டது,தற்காலிகமானது, மாறகூடியது, சார்புத் தன்மையானது, பரஸ்பரம் தனித்தன்மையானது. மறுபக்கத்தில், வளர்ச்சியும் இயக்கமும் எல்லையற்றது என்பதைப் போலவே எதிர்மறைகளின் போராட்டமும் எல்லையற்றது. எனவே வேறுபாடு தற்காலிகமானது; தகர்த்தெறிய முடியும்; ஒவ்வொரு நாளும் கூடுதல் நிதானத்தோடு வேறுபாட்டைக் கண்டறிதல் நமது பொறுப்பாகும். அது திறமையான ஒரு நபரைப் பொறுத்தவரை, கிளர்ச்சியிலிருந்து ஹங்கேரி மற்றும் போலந்து சம்பவங்களை அவரால் தடுத்திருக்க முடியுமா முடியாதா என்பதைச் சார்ந்ததல்ல; ஆனால் சம்பவங்கள் நிகழ்ந்த பிறகு பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண அவர் வழிவகைகளைக் கொண்டிருக்கிறாரா இல்லையா என்பதைச்சார்ந்திருக்கிறது.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? ஒரு பொருளைப் பற்றியோ அல்லது ஒரு பிரச்சனையைப் பற்றியோ அல்லது அதனை மாற்றியமைப்பது பற்றியோ நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நாம் அதனை பகுத்து ஆராய வேண்டும். அவ்வாறு நாம் பகுத்து ஆராய வேண்டுமானால் அதற்கு இயக்கவியல் என்ற விஞ்ஞான அணுகுமுறையை நாம் அறிந்திருக்க வேண்டும். அதாவது ஒரு பிரச்சனையை இயக்கவியல் என்ற விஞ்ஞான ஆய்வு முறையைக் கொண்டு பகுத்தாராய்ந்தால் மட்டுமே அந்தப் பிரச்சனையை உள்ளது உள்ளபடி உண்மையாகப் புரிந்துகொள்ளவும் அந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான தேவையான வழிமுறையையும் நாம் அறிந்துகொள்ள முடியும்.

இயக்கவியல் என்பது எதிர்மறைகளின் ஒற்றுமைக்கான தத்துவம் என்றார் லெனின். இவ்வாறு எதிர்மறைகளின் ஒற்றுமை என்று கூறுவதை சிலர் தவறாக அதாவது எதிர்மறைகளுக்கு இடையே வேறுபாடில்லாத ஒற்றுமை இருக்கிறதாக கருதுகிறார்கள். இது தவறான கண்ணோட்டமாகும். ஆனால் ஒரு பொருளுக்குள் அல்லது ஒரு பிரச்சனைக்குள் ஒன்றை ஒன்று புறக்கணிக்கும் அல்லது எதிர்க்கும் எதிர்மறைகள் இருக்கிறது, அதே வேளையில் இந்த எதிர்மறைகள் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன, அதாவது ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை என்ற பொருளிலேயே எதிர்மறைகளின் ஒற்றுமை என்று இங்கு கூறப்படுகிறது. உதாரணமாக சமூகத்தில் முதலாளிகளும் தொழிலாளிகளும் இருக்கிறார்கள். இவைகள் சமுதாயத்திலுள்ள எதிர்மறையாகும். இதில் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் பகைமையான போராட்டங்கள் நடந்துகொண்டு இருக்கும் போதே முதலாளிகள் தொழிலாளர்களையும், தொழிலாளர்கள் முதலாளிகளைச் சார்ந்தும் இருக்கிறார்கள் என்பதை நாம் காணலாம். ஆகவே முதலாளிகளுக்குத் தொழிலாளிகளுக்கும் ஒற்றுமை நிலவுகின்றதாக கருதுவது தவறாகும். அவர்களுக்கு இடையில் பகை இருக்கிறது அதே வேளையில் முதலாளிகளால் தொழிலாளர்களை தவிர்க்க முடியாது அதே போலவே தொழிலாளர்களால் முதலாளிகளைத் தவிர்க்க முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவேதான் முரண்பாட்டு விதியில் சொல்லப்படும் எதிர்மறைகளின் ஒற்றுமை என்றால், அந்த ஒற்றுமையானது நிபந்தனைக்கு உட்பட்டது, அதாவது எதிர்மறைகளுக்கு இடையில் ஒற்றுமையானது நிபந்தனை இல்லாமல் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. உதாரணமாக தொழிற்சாலையில் உற்பத்தி நடக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையில் உறவு உள்ளது. இந்த உறவானது தற்காலிகமானது புதிய சூழலில் இந்த உறவில் புதிய மாற்றம் ஏற்படும், ஆகவே இந்த உறவு அல்லது ஒற்றுமையானது தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும். மேலும் இந்த ஒற்றுமையானது சார்புத் தன்மையாகவும் தனித்தனைமையானதாகவும் இருப்பதை நாம் பார்க்கலாம்.

ஆகவே எதிர்மறைகளின் ஒற்றுமை என்பதை வறட்டுத்தனமாக ஒற்றுமை என்று பார்க்காமல் தனித்தன்மையான தற்காலிகமானது என்றும் மாறக்கூடியது என்றும் விரிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அதே வேளையில் ஒரு பொருளின் அல்லது பிரச்சனையின் வளர்ச்சியும், இயக்கமும் எல்லையில்லாமல் தொடர்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம். உதாரணமாக மனித சமூகமானது வரலாற்றில் பல பிரச்சனைகளை கண்டுள்ளது. அந்தப் பிரச்சனைகளில் பலவற்றை போராடி தீர்த்துள்ளது. எனினும் ஒரு பிரச்சனை தீர்ந்தவுடன் வேறு பிரச்சனை ஏதும் வராது என்பதல்ல. மாறாக புதிய பிரச்சனைகளை மனித சமூகம் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறது அதனை தீர்ப்பதற்கான போராட்டங்களும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு பிரச்சனைகளும் அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து எல்லையில்லாமல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும் .எதிர்மறைகளுக்கு இடையிலான ஒற்றுமையானது தற்காலிகமானதாக இருக்கும் அதே வேளையில் இதற்கிடையிலான போராட்டமானது எல்லையற்று தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். ஆகவே எதிர்மறைகளுக்கு இடையிலான வேறுபாடு தற்காலிகமானதே, அதாவது முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையிலான வேறுபாடு தற்காலிகமானதே, எனினும் இதனை தகர்த்தெறிய முடியும், அதாவது இந்த முரண்பாட்டுக்கு தீர்வுகாண முடியும். ஆகவே ஒவ்வொரு நாளும் முரண்பாட்டில் காணப்படும் எதிர்மறைகளை அதாவது தொழிலாளர்களின் இயக்கத்தையும் முதலாளிகளின் இயக்கத்தையும் நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதன் அடிப்படையில் முரண்பாட்டின் ஒரு அம்சமான முதலாளிகளின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்தை ஒழித்துவிட்டு எதிர்மறை அம்சமான தொழிலாளிகளின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்தை நிறுவதன் மூலம் இந்த முரண்பாட்டை தீர்க்க வேண்டும். எனினும் இதற்கான முயற்சியில் நாம் ஈடுபடும்போது தொழிலாளர்கள் போராட்டத்தில் தோல்வி அடையலாம், இந்த தோல்வியைக் கொண்டு ஒருவர் அல்லது ஒரு கட்சியை நாம் மதிப்பீடு செய்யக்கூடாது. எனினும் இந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தொழிலாளி வர்க்கத்தின் வெற்றிக்காக புதிய வகையான கொள்கைகளை இயங்கியல் முறையில் தயாரித்து செயல்படுகிறாரா என்பதைக் கொண்டே ஒரு அமைப்பு சரியானதா இல்லையா என்று மதிப்பிட வேண்டும். இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள் இந்திய சமூகப் பிரச்சனைகளை இயங்கியல் முறையில் பகுத்தறிவதற்கு முயற்சி செய்யவில்லை. இந்திய சமூக இயக்கத்தில் காணப்படும் முரண்பாடுகளைப் புரிந்துகொண்டு எந்த முரண்பாட்டை என்ன முறையான போராட்டத்தின் மூலம் தீர்க்க வேண்டும் என்பதற்கு இயங்கியல் விஞ்ஞானத்தை இவர்கள் தொடர்ந்து பயன்படுத்தவில்லை.

மேலும் இவர்களது நடைமுறைக் கொள்கையை செயல்படுத்தி முரண்பாடுகளை தீர்க்கவில்லை என்பது எதார்த்தமான உண்மையாகும். இதனை தவிர்க்க முடியாததுதான் எனினும் இந்த அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு புதிய கொள்கை வகுத்து முன்னேறவில்லை என்பதும் எதார்த்த உண்மையாகும். ஆகவே ஒவ்வொரு கம்யூனிஸ்டும் சமூகப் பிரச்சனைகளை அலசி ஆராய்வதற்கு இயங்கியல் முறைகளை நமது மார்க்சிய ஆசான்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணரவேண்டும்.

2. இயக்கவியல் என்பது ஒவ்வொரு விஷயத்திலும் ஒப்பீட்டுக்கு இரண்டு வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது.

பிரபஞ்ச உண்மையான மார்க்சியம் - லெனினியம் மற்றும் சீனாவின் குறிப்பிட்ட நடைமுறையின் ஒருங்கிணைப்பே பொருள்முதல்வாதமாகும். இரண்டுமே எதிர்மறைகளின் ஒற்றுமையாகும். இதுதான் இயக்கவியல். வாதம் ஏன் வற்புறுத்தப்படுகிறது?. இயக்கவியல் பற்றி விவாதிப்பதை மிக எளிதாக தவிர்ப்பதற்கு சோவியத் யூனியன் தனக்கேயுரிய பாதையைக் கொண்டுள்ளது. சோவியத் யூனியனின் அனுபவங்கள் ஒரு பக்கம் இருக்கின்றன. சீனாவின் நடைமுறையும் கூட ஒரு பக்கத்தில் இருக்கிறது.

இதுதான் எதிர்மறைகளின் ஒற்றுமை. சோவியத் யூனியன் தனது அனுபவங்களிலிருந்து நல்லவற்றை தெரிவு செய்து கொண்டு, அவற்றைப் பின்பற்ற வேண்டும். தவறானவைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை அழித்துவிட வேண்டும். சோவியத் யூனியனின் அனுபவங்களைத் தனிமைப்படுத்தி, சீன அனுபவத்துடன் அவற்றை ஒருங்கிணைக்காதது நல்ல அனுபவங்களை தெரிவு செய்து அவற்றை பின்பற்றுவதாக இருக்காது. ஒருவர் ஒரு செய்தி ஏட்டை வெளியிட்டு பிராவ்தாவின் வழியிலேயே விவாதித்துக்கொண்டு இருந்தால் அது பகுப்பாய்வாக இருக்காது. எல்லா இடத்திலும் ஆதரவை நாடுகிற சுயேச்சையான சிந்தனையை இழந்துவிட்ட 3 வயது குழந்தையைப் போல்தான் அவர் இருப்பார். எல்லாவற்றிலும் ஒப்பீட்டுக்கு இரண்டு வழிமுறைகள் இருப்பது அவசியம். இதுதான் இயக்கவியல். இல்லை என்றால் அது கற்பனாவாதம்.

இதன் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? உலகைப் பற்றிய அறிவதற்கும் அதனை மாற்றுவதற்கும் பயன்படும் தத்துவமான மார்க்சியம்- லெனினிய தத்துவமும் சீனாவின் குறிப்பிட்ட நடைமுறையும் இணைத்துப் பார்ப்பதுதான் பொருள்முதல்வாதமாகும். தத்துவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நடைமுறையை புறக்கணிப்பதோ, அல்லது நடைமுறையை மட்டும் எடுத்துக்கொண்டு தத்துவத்தை புறக்கணிப்பதும் பொருள்முதல்வாதப் பார்வை ஆகாது என்கிறார் மாவோ. இவ்விரண்டையும் எதிர்மறைகளின் ஒற்றுமை என்கிறார் மாவோ. அதாவது தத்துவத்துக்கும் நடைமுறைக்கும் இடையிலான உறவானது இயங்கியல் உறவாகும் என்றுமாவோ கூறுகிறார். இந்த இயங்கில் உறவானது ஒற்றுமையையும்

வேற்றுமையையும் அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கிறது. அதாவது நடைமுறை அனுபவத்திலிருந்து நாம் சிந்தித்து முடிவெடுக்கும் கருத்துக்கள் எல்லாம் நடைமுறை எதார்த்தத்தை பிரதிபலிக்கிறது என்று சொல்ல முடியாது. இந்த வேறுபாட்டை தீர்ப்பதற்கு நடைமுறையில் சோதனை மேற்கொண்டு உண்மையை நாம் அறிந்து நாம் நமது கருத்தை அறிய வேண்டும். இதுதான் சிந்தனைக்கும் நடைமுறை வாழ்வுக்கான முரண்பாடாகும் என்கிறார் மாவோ.இயக்கவியல் பற்றி விவாதிப்பதை குருஷேவ் தலைமையிலான சோவியத் யூனியன் தந்திரமாக மறுத்ததை மாவோ குறிப்பிட்டு விவாதங்களை தவிர்ப்பதன் மூலம் உண்மையை யாரும் புரிந்துகொள்ளக் கூடாது என்றும், கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட்டு ஒரு கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகிவிடக்கூடாது என்றும், இவ்வாறு உருவாக்கப்படும் ஒரு கருத்தின் அடிப்படையில் கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்பதே குருஷேவ் திருத்தல்வாதியின் விருப்பமாக இருந்தது. இதே நோக்கத்தோடுதான் இந்தியாவிலுள்ள இடதுசாரித் தலைவர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு இடையே விவாதங்கள் நடப்பதை தொடர்ந்து தவிர்த்து வருகிறார்கள். ஒவ்வொரு அமைப்புத் தலைவர்களும் தங்களது கருத்துதான் சரியானது என்றும் பிறரது கருத்துக்களை பரிசீலிக்காமலேயே அது தவறான கருத்து என்று அவர்களது அமைப்பைச் சார்ந்த அணிகளிடம் பேசி அணிகளையும் பிறரோடு விவாதத்தில் ஈடுபடவிடாமல் தடுத்து, சமூகம் பற்றியஉண்மையை யாரும் அறிந்துவிடாமல் தடுத்துக்கொண்டு அவர்களைச் சார்ந்த அணிகளையும் மக்களையும் செம்மறி ஆட்டுக் கூட்டம்போல் முட்டாள்களாகவே வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே உண்மையான கம்யூனிஸ்டுகள் ஒவ்வொருவரும் மாவோ சொல்லியவாறு விவாதங்களில் ஈடுபட வேண்டும். நூறு பூக்கள் பூக்கட்டும் நூறு கருத்துக்கள் மோதட்டும் என்ற மாவோவின் வழிகாட்டுதலை பின்பற்றுபவரே உண்மையான கம்யூனிஸ்ட் ஆவார்.

சோவியத் யூனியனின் அனுபவம் ஒரு பக்கம் இருக்கிறது சீனாவின் நடைமுறையும் ஒரு பக்கத்தில் இருக்கிறது. இவ்விரண்டிற்கும் இடையில் இயங்கியல் உறவு இருக்கிறது. இதுதான் எதிர்மறைகளின் ஒற்றுமை என்று சொல்லப்படும் முரண்பாடாகும். சோவியத் யூனியனின் அனுபவத்திலிருந்து நல்லவற்றை நாம் எடுத்துக்கொண்டு பின்பற்ற வேண்டும், அதே வேளையில் தவறானவற்றைப் புரிந்துகொண்டு அதனை நாம் புறக்கணிக்க வேண்டும் என்றார் மாவோ. இவ்வாறில்லாமல் சோவியத் யூனியனின் அனுபவத்திலிருந்து விஷயங்களை புரிந்துகொண்டு சீன அனுபவத்தோடு நாம் இணைக்கத் தவறினோம் என்றால் சோவியத் யூனியனின் அனுபவத்திலிருந்து கிடைத்த நல்ல விஷயங்களை சீனக் கம்யூனிஸ்டுகள் புறக்கணிக்கிறார்கள் என்பது பொருளாகும். இதனை புரிந்துகொள்ள மறுக்கும் இந்திய இடதுசாரித் தலைவர்கள் ரஷ்ய மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அனுபவங்கள் எல்லாம் அந்தந்த நாடுகளுக்குப் பொறுத்தமாக இருக்கலாம் என்றும் இந்தியாவுக்கு அது பொருந்தாது என்றும் கூறி, ரஷ்ய சீனப் புரட்சியின் அனுபவத்திலிருந்து நாம் பின்பற்ற வேண்டிய நல்ல விஷயங்களை கைவிட்டுவிட்டு இந்தியத் தனித்தன்மைக்கான கொள்கை வகுத்து செயல்படுவதாகச் சொல்லி, இந்தியப் பொதுவுடமை இயக்கத்தை சீரழித்து நாசப்படுத்திவிட்டார்கள்.

ஆகவே இனிவரும் காலங்களில் தலைமை தாங்க வேண்டிய இளைஞர்கள் மாவோ சொன்னபடி ரஷ்யா மற்றும் சீனப் புரட்சியின் அனுபவங்களிலிருந்து சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து இந்திய நடைமுறைக்குப் பயன்படுத்த வேண்டும். ஒரு அமைப்பில் செயல்படும் தலைவர்கள் ஒரு கொள்கை முடிவெடுத்து அந்தத் தலைவர்களைப் பின்பற்றும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மத்தியில் மட்டும் விவாதிப்பது விவாதம் ஆகாது. இதற்கு மாறாக அந்தத் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்தை மறுத்து மற்றொரு கருத்தை சிலர் வெளியிடும் போது, அந்தக் கருத்தையும் கணக்கிலெடுத்து விவாதிப்பதே விவாதம் ஆகும். மேலும் ஒரு கருத்தை ஒரு அமைப்பிற்குள் மட்டும் விவாதிப்பது அந்தப் பிரச்சனையின் உண்மைத் தன்மையை அறிவதற்கான பகுத்தாய்வாக இருக்க முடியாது என்கிறார் மாவோ.

ஆகவே இந்திய சமூகம் பற்றிய உண்மையான நிலையை நாம் புரிந்துகொள்ள வேண்டுமானால் ஒவ்வொரு கம்யூனிஸ்டும், ஒவ்வொரு கம்யூனிச அமைப்பும் தங்களது கருத்துக்களை பகிரங்கமாக முன்வைத்து வெளிப்படையான விவாதங்களில் ஈடுபட வேண்டும். இத்தகைய விவாதங்கள் நடத்துவது அமைப்பின் இரகசியத்தை பாதுகாப்பதற்கு எதிரானது என்பது கம்யூனிஸ்டுகள் தங்களது கொள்கைகளை மூடிமறைப்பதை இழிவாகக் கருதுகிறார்கள் என்ற மார்க்சியக் கோட்பாட்டை மறுப்பதாகும். ஆகவே மார்க்சிய லெனினியத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் சிந்தித்து செயல்படுவதில் உறுதியாக இருப்பவர்கள் தங்களுக்கு இடையில் முதலில் விவாதம் நடத்த முன்வர வேண்டும். மேலும் நம்முடைய கருத்தைஎல்லோரும் ஆதரிக்க வேண்டும் என்று விரும்புவது தவறாகும் என்கிறார் மாவோ ஏனெனில் பிற்போக்கு வர்க்கங்களும் அதன் அரசியலை ஏற்றுக்கொண்டவர்களும் நமது கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஆகவே பிற்போக்காளர்கள் நமது கருத்தை ஏற்கவில்லை என்றால் நமது கருத்து சரியானது என்று உணர்ந்து நாம் மகிழ்ச்சியடைய வேண்டும், மாறாக வருத்தம் அடையக் கூடாது. மார்க்சிய ஆசான்களது போதனைகளை புரிந்துகொள்வதிலிருந்து இந்த சமூகத்தை ஆய்வு செய்து நடைமுறைக்குப் போவது வரையில் நாம் ஒவ்வொருவரும் நமது சுய சிந்தனையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்றார் மாவோ.

அதற்கு நாம் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு மாறாக எல்லாவற்றையும் நமது தலைவர் பார்த்துக்கொள்வார் என்று கருதக் கூடாது. மேலும் நாம் எதை ஒப்பிட வேண்டுமானாலும் அங்கு இரண்டு வழிமுறைகள் இருக்க வேண்டும் என்றார் மாவோ.

அதாவது ஒரு கருத்தை நாம் ஒப்பிட வேண்டுமானால் அதனை மற்றொரு கருத்தோடுதானே ஒப்பிட வேண்டும். ஆகவே நாம் எது உண்மை என்பதை புரிந்துகொள்வதற்கு ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம் என்கிறார் மாவோ.

இதன் தொடர்ச்சியாகவே ஒரு இயக்கத்துக்கு முரண்பாடு அவசியம் என்றும், ஒரு கட்சிக்குள் முரண்பட்ட கருத்துக்கள் இருக்க வேண்டும் என்றும் அதனை தீர்ப்பதற்கு ஜனநாயக வழியிலான போராட்டம் அவசியம் என்றார் மாவோ. இத்தகைய முரண்பாடு இல்லை என்றால் கட்சிக்கு இயக்கமே இருக்காது அது செத்துவிடும் என்றார் மாவோ.ஆனால் இங்குள்ள இடதுசாரிகள் கட்சிக்கு மாறான கருத்துக்களை கட்சி உறுப்பினர்கள் பேசவே கூடாது என்கிறார்கள். இந்த இடதுசாரிகள் வளராததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

தொடரும்- தேன்மொழி

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்