இந்திய தத்துவங்கள் ஓர் மார்க்சிய பார்வையில் இது எனது நீண்ட கால வாசிப்பிலிருந்து பெறப்பட்டவையே. பலர் இந்திய தத்துவங்கள் பற்றி தேடியும் எழுதியும் கொண்டுள்ளனர் அதனை வரவேற்கும் நான் அந்த ஆய்வுகளின் நோக்கம் சமூகத்தில் புறையோடி போயிருக்கும் அழுக்குகளை நீக்கி மனித சமூக விடுதலைக்காக அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதே. அதனால்தான் இந்த பகுதியில் சில.
இங்குள்ள எழுத்துகள் மற்றும் சில முன்னோடிகள் மார்க்சிய ஆசான்களின் எழுத்துகளை பின்பற்றி எழுத முயற்சித்துள்ளேன்.
தத்துவஞானம் என்றால் என்ன?
இயற்கையை எதிர்த்து மனிதன் நடத்திய போராட்டத்தில் உருவானதே தத்துவஞானம். இயற்கை, மனிதன், சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின் உறவுகளையும் அதன் தன்மைகளையும் ஆராய்வதே தத்துவஞானம்.
எனவே தத்துவ சர்ச்சையை அறிவுஜீவிகளிடம் விட்டு விட்டு சாதாரண மக்கள் ஓதுங்கிவிட முடியாது. இன்று வளர்ந்துள்ள விஞ்ஞான உலகில். உலகின் மூலைமுடிக்கெல்லாம கிடக்கும் தகவல்களை நாம் பெற்று ஆய்வு செய்துகொள்ள முடியும். அதற்கு அன்றைய இலக்கியங்களும் இதிகாசங்களும் துணையாகிறது.
தத்துவம் தோன்றிய வரலாற்றுப் பின்னணி
மனித சமுதாயத்தின் வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தனிச் சொத்துடமை ஏற்பட்டது. உற்பத்திக் கருவிகளின் வளரச்சியின் காரணமாக உழைப்பவனும் அடுத்தவன் உழைப்பில் வாழ்பவன் என்ற உழைப்பு பிரிவினை தோன்றியது.மனித சமுதாயத்தில் வர்க்கப் பிரிவினை தோன்றிய பின்னணியில்தான் தத்துவமும் தோன்றியது. இரண்டு வர்க்கங்களின் போராட்டத்தை ஆம் வர்க்க பகைமையை தனிக்க அதற்கான ஒழுங்குமுறை உருவாக்க ஆளும்(ஆதிக்க) வர்க்க சித்தாந்திகளால் உருவாக்கப்பட்டதே அன்றைய தத்துவங்கள். அதே நேரத்தில் கலகக்குரல் ஒலிக்காமல் இல்லை அன்று இதனை எதிர்த்த தத்துவங்களும் தோன்றிதான் உள்ளது.
விஞ்ஞானத்தில் இயற்பியல், வேதியியல், கணிதவியல், பொருளாதாரம் போன்றே சமூகவியல் வரலாற்றியல் போன்ற பொதுக் கோட்பாட்டுகள் போன்றே தத்துவமும் அந்த குறிப்பிட்ட நிலையில் உலக பார்வையே தத்துவம் எனலாம்.
சிந்தனைக்கும் வாழ்வுக்கும் உள்ள உறவு என்ன என்ற கேள்வி, தத்துவஞானம் தோன்றிய காலத்திலிருந்தே எழுப்பப்பட்டு வரும் கேள்வி. இக்கேள்விகளுக்கு விடையளித்த தத்துவஞானிகளில் இரு பிரிவினர். ஒரு பிரிவினர் பொருள் இயற்கை பொருளியல் வாழ்க்கை இவைகளே முதன்மையான இவைகளின் பிரதிபலிப்பே உணர்வென்றனர். இன்னொறு பிரிவினர் ஆன்மா, சிந்தனைதான் முதன்மையானது அவற்றின் பிரதிபலிப்பே பொருள், இயற்கை, வாழ்க்கை என்றனர்.
முதல் பிரிவினர் பொருள்முதல்வாதி என்றும் இரண்டாம் பிரிவினர் கருத்துமுதல்வாதி என்றும் பிரிக்கப்பட்டனர்.
“தத்துவமற்ற நடைமுறை குருட்டுத்தனமானது: நடைமுறையற்ற தத்துவம் மலட்டுத்தனமானது”- என்றார் தோழர் ஜே.வி. ஸ்டாலின்.
மார்க்சுக்கு முந்திய 2000 ஆண்டுகளில் கருத்துமுதல்வாதத்தை எதிர்த்து எண்ணற்றோர் பலியாயினர் மதத்திற்கும் மரபுகளுக்கும் எதிராகப் பேசி இளைஞர்களைத் தூண்டிவிடுவதாகக் குற்றம் சாட்டி சாக்ரடீசை நஞ்சூட்டிக் கொன்றனர்.
பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது சூரியன் பூமியை அல்ல என்ற கோபர்னிக்கசின் கண்டுபிடிப்பை ஆதரித்ததற்காக கலீலியோவை சிறையிலடைத்துக் கொடுமைப்படுத்தினர். கோப்பர்னிக்கசின் கருத்தே சரியானது என்று கூறிய காரணத்திற்காக ஜார்டானோ ப்ரூனோ என்ற மதபோதகர் 1800-ஆம் ஆண்டில் கம்பத்தில் கட்டி வைத்து எரிக்கப்பட்டார். பூமி சூரியனைச் சுற்றி வலம் வருகிறது என்று கண்டுபிடித்த விஞ்ஞானி கோப்பர்னிகஸ் தன் கண்டுபிடிப்புகளை வெளியிட அஞ்சினார். 1543-ஆம் ஆண்டு வாழ்நாள் இறுதியில் மரணப்படுக்கையில் கிடந்த சமயத்தில்தான் அவற்றை வெளியிடும் தைரியம் அவருக்கு வந்தது.
போப் இரண்டாம் ஜான்பால் இவ்வாறு மதபீடங்கள் விஞ்ஞானிகளை 16-ஆம் நூற்றாண்டில் கொடுமைப்படுத்தியது தவறு என கி.பி. 2001 துவக்கத்தில் ஏற்றுக் கொண்டார். இந்தியாவில் லோகாயதத்தின் பிதாமகன் சார்வாகரை உயிரோடு எரித்தார்கள். புத்த மடாலயங்களும், சமணப் பள்ளிகளும் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் கழுவேற்றப்பட்டனர். தலைகள் அறுக்கப்பட்டன. பதினெண் சித்தர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
பொருள்முதல்வாத, விஞ்ஞான நூல்கள் எரிக்கப்பட்ட நலந்தா பல்கலைக்கழகம் நான்குமுறை தீக்கிரையாக்கப்பட்டது. விக்ரமசீலா இடித்துத் தகர்க்கப்பட்டது. பொருள்முதல்வாதம் பேசினால் இங்கு கொலைதான் நடப்பாக இருந்தது. புத்தரும் மகாவீரரும் அரசர்களாதலால் பொருள்முதல்வாதம் பேசிய அவர்கள் உயிர்தப்பினர். மகத்தான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய டார்வினும் ஐன்ஸ்டீனும் தங்கள் மதங்களிடம் சரணடைந்தனர். மார்க்ஸ் தனது மூலதனம் நூலை டார்வினுக்குச் சமர்ப்பிக்க விரும்பினார். ஆனால் அதை டார்வின் ஏற்க மறுத்தார். அது தனது குடும்பத்தாரின் கிறிஸ்தவ மத உணர்வுகளைப் புண்படுத்தி விடும் என்று கூறி மறுத்தார்.
விஞ்ஞானத்தின் முக்கியமான கண்டுபிடிப்புகள் புரட்சிகரமான மாற்றங்களை, அடிக்கடி தோற்றுவிக்கின்றன. இதனால் பழைய கண்டுபிடிப்புகளை சரி செய்யவோ. மறு பரிசீலனை செய்யவோ நேருகிறது. இயற்கை விஞ்ஞானம் அவ்வளவு ஆழ்ந்த புரட்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகி வருகிறது. அது தத்துவவியல் கருத்தோட்டமின்றி இருக்கவே முடியாது - என்றார் லெனின், பல்வேறு விஞ்ஞானங்களின் அறிவு பரவலாகி உறுதி பெற்று, ஆழமுறுகிறது. அதேபோல் தத்துவஞானமும் செழுமையுற்றுச் செம்மை பெற வேண்டும். இவ்வாறு தத்துவ ஞானம் வளர விஞ்ஞானங்கள் துணை புரிகின்றன. மனிதன் என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக் கூடாது என்பதற்கு விடை காண தனது மனவுலகை மட்டுமே நம்ப வேண்டும் - எதார்த்த உலகை நம்பக் கூடாது என்பது இருத்தலியல் வாதம் (எக்சிஸ்டென்சியலிசம்) ஆகும். இந்தக் கண்ணோட்டத்தை மார்க்சியம் நிராகரிக்கிறது.
இது வரை தத்துவ ஞானிகள் உலகைப் பற்றி விளக்கம் மட்டுமே கூறி வந்தனர். ஆனால் விஷயம் என்னவெனில் உலகை மாற்ற வேண்டும் என்பதுதான் என்கிறார் மார்க்ஸ் மார்க்கக்கு முந்திய தத்துவஞானிகள் உலகின் நுன்பங்களை வியாக்கியானம் செய்தார்கள். அழுது புலம்பினார்கள். ஆனால் மார்க்ஸ்தான் உலகை மாற்றியமைக்கும் தத்துவத்தை உருவாக்கினார்.
நாம் எதை அடைய வேண்டும் - அதற்கு எதார்த்தத்தை எப்படி அணுக வேண்டும். என்ற கேள்விக்கு விடை தருகிறது தத்துவம், வர்க்கங்களாய் பிளவுபட்டுள்ள ஒரு சமூகத்தில், இரண்டு வேறுபட்ட வர்க்க நலன்களை தத்துவம் வெளியிடுகிறது. கருத்துமுதல்வாதத்திற்கும் பொருள்முதல்வாதத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம் வர்க்கப் போராட்டமாகவே இருந்தது - இன்றும் இருக்கிறது. இந்த எதிரும் புதிருமான இரு போக்குகளில் எந்தப் பக்கம் என்பதில் தத்துவ ஞானத்தின் சார்புநிலை வெளிப்படுகிறது.
லோகாயதம்
''லோகாயதா' என்கிற சொல்லுக்கு 'மக்கள் மத்தியில் தாராளமாகப் புழங்குவது', 'இக உலகு சார்ந்தது' என்று அர்த்தம். ஐரோப்பா எப்பொழுதுமே பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் இருந்ததாகவும் இந்தியா எப்பொழுதுமே கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தில் இருந்ததாகவும் செய்யப்பட்டு வந்த பிரச்சாரத்தினை டி.டி.கோசாம்பி தேவிபிரசாத் சட்டோபாத்யாயா போன்ற மார்க்சிய அறிஞர்கள் பொடிப்பொடியாகத் தகர்த்தனர்.
வர்த்தகத்திலும், கல்வியிலும் தலைசிறந்து விளங்கி மாபெரும் கண்டுபிடிப்புகளை உருவாக்கிய இந்தியா பின்னர் ஏன் பின் தங்கியது என்ற கேள்வியை எழுப்பி அதற்கான காரணத்தை அவர்கள் கண்டறிந்தனர். இந்தியத் தத்துவ ஞானத்தில், ஆதி சங்கரரை மையமாகக் கொண்ட கருத்து முதல்வாதம், இந்திய விஞ்ஞான வளர்ச்சியையும், சமுதாய வளர்ச்சியையும் பாதித்தது என்பதே இந்த மார்க்சிய அறிஞர்கள் ஆராய்ந்து கண்ட முடிவு. லோகாயதா, இந்தியத் தத்துவம், இந்திய நாத்தீகம் இந்தியத் தத்துவத்தில் இருப்பனவும் இருந்தனவும், பண்டைக்கால இந்தியாவில் விஞ்ஞானமும் சமூகமும், மதமும் சமுதாயமும், பண்டைக்கால இந்தியாவின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வரலாறு போன்ற அரிய பல நூல்களை தேவிபிரசாத் நமக்கு அளித்துள்ளார்.இந்துத் தத்துவம், வேதத் தத்துவம் என்பன மட்டுமே இந்தியத் தத்துவம் என இந்துத்வவாதிகள் கூறி வருகின்றனர். இந்திய மக்கள் தங்களுக்கென உருவாக்கிக் கொண்ட தத்துவம் இந்து, இஸ்லாம். கிறித்தவம் மட்டுமல்லாமல் பொருள்முதல்வாத தத்துவத்தையும் உள்ளடக்கியது என்பதை மார்க்சிய அறிஞர்கள் நிருபித்துள்ளனர்.
புத்தமதம்
பழங்காலச் சிந்தனையாளர்கள் முதன்முதலில் இயங்கியல் கருத்துக்களை வெளியிட்டனர். புத்தமதவாதிகள் தங்கள் தன்னிச்சையான இயங்கியல் கருத்துக்களைக் கொண்டிருந்தனர். கி.மு.5ஆம் நூற்றாண்டில் புத்தமதத்தைப் பின்பற்றியவர்கள் மாறுதலுக்குட்படாத எதுவுமே இந்த உலகத்தில் இல்லை என்று போதித்தனர். ஒரு தீப்பந்தத்தின் சுடர் மாறாமல் இருப்பது போல் தோன்றுகிறது ஆனால் ஒவ்வொரு கணத்திலும் அது வெவ்வேறாக மாறுகிறது.
அது ஒன்றே அல்ல, அதே பொருள் அல்ல என்று கூறினர். நமது உடல், உணர்ச்சிகள், அறிவு. எல்லாமே மாறிக் கொண்டிருப்பவை ஒவ்வொரு கணத்திலும் வாழ்க்கையில் புதியன தோன்றுகின்றன. பழையன மறைகின்றன. உலகில் நிரந்தரமானது என்பதே இல்லை. இருப்பாவது மட்டுமே இருக்கிறது. தொடர்ச்சியான மாற்றத்தால் அந்த இருப்பு மாறிக் கொண்டிருக்கும் செயல்முறைதான் பொருள்களின் சங்கமம் என்று கூறினர். விதையும் மரமும் ஒன்றேதான். ஆயிரம் ஆண்டு வயதுள்ள ஆலமரமும், அது தோன்றிய விதையும் ஒன்றேதான் என்றனர்.
ஆதிசங்கரர் (கிபி 4அல்லது 7):-பிராமணியத்தை நியாயப்படுத்தும் கொள்கையை அளித்த வேதாந்தத் தத்துவம் பொதுவான உலக ஆன்மாவைப் பற்றிக் கூறியது. அது பிரம்மம் என்றும். அடிப்படையான எதார்த்தமென்றும், ஒரே சாராம்சமென்றும் அழைக்கப்பட்டது. இயற்கைப் பொருள்களின் உலகம் இந்த ஆன்மாவினால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று அது கூறியது. இவரது தத்துவம் அத்வைதம்' என்றழைக்கப்படுகிறது.
பிரம்மத்தின் கனவாக, நினைவுத்தடமாக இந்த உலகம் உள்ளது. இயற்கை நிகழ்வுகளின் உலகம் ஒரு பிரமைதான். நிலையான பிரம்மத்தை மனிதனிடமிருந்து மறைக்கக்கூடிய "அலைகள், குமிழிகள். நுரையாக உலகம் விளங்குகிறது. நிரந்தர ஆன்மாவுக்கு மனித உடல் ஒரு புறவடிவமாகும். ஆன்மா என்பது பிரம்மத்தின் அவதாரம் அல்லது துளியாக இருக்கிறது. நிரந்தரமான பிரம்மம் முன்னால் இருக்கிறது. பின்னால் இருக்கிறது. வலதுபக்கத்திலும் இடதுபக்கத்திலும் இருக்கிறது. அது மேலும் கீழும் பரவியுள்ளது. இவை அனைத்திலும் பிரம்மம் ஒன்று தான். அதுவே சிறந்தது. பிரம்மத்தைத் தவிர வேறெந்தப் பொருளும் கிடையாது" "உலகின் தோற்றங்களனைத்தும் பிரம்மம்தான். வேறு எதுவு மில்லை. தெய்வீக ஆத்மாவான பிரம்மத்திடமிருந்துதான் எல்லா உயிரினங்களும் தோன்றியுள்ளன. ஆகவே அவை அனைத்தும் பிரம்மம்தான். இதைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார் சங்கரர். சாதாரண மக்களின் உடனடிப் பிரச்சனைகளுக்கு தத்துவம் வழிகாட்டாது; அது தொலைவில் உள்ளது.
தத்துவவாதி வாழ்க்கைக்கு வெளியில் நின்று அதைக் காண வேண்டும் என்று எழுதினார் சங்கரர். “ஒரே உண்மையான எதார்த்தம் என்பது பிரம்மம் (ஆன்மா) ஆகும். நிகழ்ச்சிகள் நிரம்பிய தற்காலிக உலகம் மாயை உண்மையான அறிவாகாது பிரம்மத்தைப் புரிதல் மட்டுமே உண்மையான அறிவாகும்” என்பது சங்கரரின் அத்வைதம்.
பகவத் கீதை:- இந்து மதத்தின் தத்துவ நூலாக கீதை போற்றப்படுகிறது. ஆனால் வர்ணாசிரமத்தை நிலைநிறுத்த மகாபாரதத்தில் பின் சேர்க்கையாகச் சேர்க்கப்பட்ட நூலே பகவத்கீதை. இடைச் செருகல்கள் செய்து வர்ணாசிரமத்தை நிலைநிறுத்தச் செய்யப்பட்ட பல்வேறு முயற்சிகளில் ஒன்றுதான் பகவத் கீதை "நான்கு வர்ணங்களும் (ஜாதிகளும்) என்னால் உருவாக்கப்பட்டவை. அவரவர்கள் தங்கள் குலதர்மத்தைச் செய்து வர வேண்டும்” என்று பகவான் கிருஷ்ணனே போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு உபதேசிப்பதாக எழுதப்பட்டது.
இவ்வாறு இந்திய ததுவங்களை பற்றி தேடினாலும் நாம் வந்தடையும் இடம்:- புராண இதிகாச நூல்கள் கூறும் கருத்துக்கள் நம்பிக்கைகள் அதன் தோற்றமும் முடிவும் காண இயலாது என்பதாகும். அது மதவாத கருத்தாக இருந்தாலும் இன்றைய பல எழுத்தாளர்கள் இதில் மூழ்கிதானும் மாறா நிலைவாதிகளாகி தன்னை சார்ந்தவர்களையும் இதற்கு பலியாக்குவது வெட்ககேடாக உள்ளது.
புராண இதிகாச நீதிநெறி நூல்கள் காரண காரியத்தை அறிய முடியாது என்று நம்பிக்கைக்கு பலியாக இருப்பதை காணலாம். இந்தக் கருத்துகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஒவ்வொருகால சமுதாய வளர்ச்சி போக்கில் உதித்ததாய் உள்ளன. அடிப்படையில் சமூக மாற்றம் ஏற்பட்ட பிறகும் சூழ்நிலை கருதி இந்தக் கருத்துக்கள் நீடித்து நிற்பதற்கான வழிவகை உண்டு ஆக கருத்துகளை கருத்துக்களாக வென்று விட முடியாது. அதற்கான பணியென்பது சமூக மாற்றத்தின் ஊடாக செய்ய வேண்டியதாக உள்ளது என்பேன்.
இருபதாம் நூற்றாண்டிலும் பெரும்பாலான இந்திய கல்வியாளர்களும் அரசியல் தலைவர்களும் முக்கிய பிரச்சினைகளுக்கு பண்டைய நூல்களில் இருந்து தங்களுக்கான மேற்கோள்களை காட்டுகின்றனர். அதில் குறிப்பாக பகவத் கீதையாக இன்னும் சில முக்கிய இதிகாச புராண நூல்களிலின் தகவல்களை பயன்படுத்துவது போல் தமிழகத்தில் திருக்குறளையும் வேதமாக கொண்டு சிலர் எழுதிக் கொண்டிருப்பதை காணலாம். இவ்வாறு பழைய நூல்கள் அதாவது பிரமாணமாக அமையும் நூல்கள் எக்காலத்துக்கும் உரியவை எனக் கொள்வது அவற்றை இயற்றியவர் ஆதி மனிதராக இருக்க வேண்டியது தவிர்க்க இயலாது ஆகிவிடுகிறது. இந்தியாவுக்கு பொதுவான இப்ப பழமை போற்றும் மனப்பான்மை தமிழர் சித்தாந்தத்துக்கு பொருந்தும்.
இந்திய மெய்யியல் வரலாற்றைப் படிப்பவர்க்கு முனைப்பாக தோன்றும் ஒரு பண்பு உண்டு. இந்தியாவில் எழுந்த மெய்யியல் உட்பிரிவுகள் யாவும் வேத உபநிடதங்களையே ஆதாரமாக கொண்டவையாக இந்திய மெய்யியல் முழுதும் உபநிடதங்களே மூலாதாரம் வேத சமயம் (Religion of the veda) என்ற நூலில் ப்ளூம்ஃபீல்டு (Bloomfield)என்ற ஆசிரியர் கூறுகிறார். புற சமயமாகிய பௌத்தம் உட்பட இந்திய சிந்தனை வடிவங்களில் வேதங்களில் வேர்விட்டு வளராத ஒன்றேனுமில்லை உண்மையில் உலகாயதம் ஒன்றிணைத்தவிர.
இந்திய மெய்யியல் பிரிவுகள் வேத உபநிடதங்களை மூலத் தோற்றுவாயாய் கொண்டவையே. பண்டைய இந்தியா அல்லது வேதங்கள் வழி வந்து சிந்தனைகள் உபநிடதங்களையே நிறைவு பெறுகின்றன என்பர்.
பல்வேறு சூத்திரங்களினால் ஒரு நூல் இயற்றினார் அதன் பெயர் பிரம்ம சூத்திரம் அத்வைதத்தை நிறுவிய சங்கரர், துவைதத்தை நிறுவிய மத்துவர், விசிட்டாத் துவைதத்தை நிறுவிய ராமானுஜர் என்பவர் எல்லாம் பிரம்மசூத்திரத்துக்கு பாடியங்கள் எழுதியோராவார். பிரம்மசூத்திரங்களையும் உபநிடதங்களையும் முரண்பட்ட வகையில் விளக்கிய இவர்கள்.
தத்தம் மதங்களை சாதித்தனர். இது பற்றி ராதாகிருஷ்ணன் கூறுகிறார் பிற்காலத்திய எழுந்து மெய்யியல் பிரிவுகளை சார்ந்தோர் தமது கோட்பாடுகளுக்கு உபநிடதங்களுக்கு உடன்பாடு காண்பதிலேயே காட்டும் ஆவல் இரங்கத் தக்கதாக உள்ளது. தமது கூற்றுக்களை உபநிடதங்களின் மேல் சுமத்து முடியாத இடத்தில் அவ்வாறு செய்யவே படாத பாடுபட்டனர்.(என்கிறார் ராதாகிருஷ்ணன்).
இதிலிருந்து பெறப்படுவது ஒன்றுதான் இந்திய மெய்யியலை பொருத்தவரையில் ஆராய்ச்சி என்றைக்கோ முடிந்த முடிவுக்கு வந்து விட்டது அறுதியாக வெளியிடபட்டு விட்டன. பின் வந்தஞானிகளின் ஆராய்ச்சிகள் யாவும் முடிவுகளை சரியாக விளங்கிக் கொள்வதன் பொருட்டு மேற்கொள்ளப்பட்டன அந்த முடிவுக்கு ஏற்றவாறு தன்னுடைய கருத்துக்களை ஏற்றுக் கொண்டனர் - அடியும் முடியும் க. கைலாசபதி.
அவரவர் சக்திக்கும் பக்குவத்திற்கும் ஏற்ப அறியப்பட வேண்டுமேயன்றி புதிதாக கூறத்தக்க உண்மைகள் இனி உண்டு என்பது அல்ல. இந்த அடிப்படையில் நம்பிக்கையின் விளைவுகள் பாரதூரமானவை அவற்றுள் ஒன்று இன்நம்பிக்கை வரலாற்று நோக்குக்கு அறவே இடம் அளிக்காததாகும். எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மை என்று கூறப்பட்டு விட்டதால் அவை காலம் கடந்தவை ஆகின்றன. ஆக அவற்றைக் கால அளவில் ஆராயும் அவசியம் இல்லாத போகின்றது. ஆகவே அவற்றின் காரணகாரிய நியதிக்குட்பட்டு நோக்கமும் அற்றுப் போகிறது சுய சிந்தனைக்கும் விமர்சனத்திற்கும் ஏற்ற நம்பிக்கை என்று கூற முடியுமா? என்கிறார் கைலாசபதி. ஆக இங்குள்ள மெய்யியலை புரிந்துக் கொள்வது அதனை மக்களிடம் உள்ள அறியாமையின் அடியாழத்தை புரிந்துக் கொள்ள பயனளிக்கும்.
வர்க்கப் போராட்டத்தின் சாரமே
'தத்துவப் போராட்டம் என்பது அடிப்படையில் எதிர் வர்க்கங்களுக்கிடையே நடைபெற்ற போராட்டத்தின் சாரமே' என்கிறார் லெனின். இந்தியாவில் நடைபெற்ற இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிற தத்துவப் போராட்டமும் வர்க்கங்களுக்கிடையேயான போராட்டம் தான். இந்தியாவில் நடைபெற்ற தத்துவப் போராட்டத்தில் கருத்து முதல்வாதத்தை எதிர்த்தவர்களை அழித்தது மட்டுமின்றி அவர்களின் கருத்துக்கள் அடங்கிய நூல்களும் அழிக்கப்பட்டன.
"இந்துமதம் சகிப்புத் தன்மை மிக்கது. பிற கருத்துக்களை மதித்து நடப்பது” என இந்துத்துவவாதிகள் கூறுவது கடந்த காலத்தில் நடந்த தத்துவப் போராட்டங்களையும் சனாதனவாதிகள் கடைப்பிடித்த அடக்கு முறைகளையும் மறுதலிப்பதாகும். மார்க்ஸியவாதிகள் இந்திய சிந்தனை மரபை உயர்த்திப் பிடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும் வர்க்க ரீதியாக அதனை பேச வேண்டும்.
இயக்கவியலின் அடிப்படை அம்சங்கள்- பிரபஞ்சத்தைப் பார்ப்பதில் இரண்டுவிதக்கோட்பாடுகள் உள்ளன.
1).Metaphysics என்ற மாறாநிலைக்கோட்பாடு இயக்க நிலையைப் புறக்கணித்து அசையா நிலையை அங்கீகரிக்கிறது. மாறுதலைப் புறக்கணித்து ஒற்றை நிலையையே ஏற்கிறது. அதாவது இயற்கையும் சமுதாயமும் மனிதனும் தோன்றியதிலிருந்து மாறாமல் இருந்து வருகின்றன என்ற கண்ணோட்டம் இது. அதேபோல் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களும் தனித்தனியானவை. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்று இந்தக் கோட்பாடு கூறுகிறது.
2).Dialectics என்ற இயக்கவியல் கோட்பாடு, மாறா நிலைக்கோட்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது. இயக்கவியல் அனைத்துப் பொருட்களும் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருப்பதாகக் கூறுகிறது. அனைத்துப் பொருட்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று கருதுகிறது. ஒரு பொருளை ஆராயும் போது அந்தப் பொருள் எந்தச் சூழ்நிலையில் இருக்கிறது. செயல்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்கிறது. நிலைமாறாத் தத்துவத்திற்கு மாறாக இயக்கவியல் பார்வை அனைத்தையும் அவற்றின் இயக்கத் தன்மையில் வைத்துப் பார்க்கிறது; புரிந்து கொள்கிறது. இயற்கை, சரித்திரம், சிந்தனை எல்லாவற்றிலும் மாறுதலும் இயக்கமும் இருக்கின்றன. ”மாறும் என்ற விதியைத் தவிர மற்றவையெல்லாம் மாறிக் கொண்டேயிருக்கின்றன என்றார் மார்க்ஸ்.
முரண்பாடு
அனைத்தும் இடைவிடாமல் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருப்பதற்கு அடிப்படையான காரணம் அனைத்துப் பொருட்களிலும் முரண்பட்ட அம்சங்கள் உள்ளடங்கியுள்ளதே. "இயக்கவியல் என்பதே இந்த முரண்பாடுகளை ஆராய்வதுதான்" என்கிறார் லெனின் கண்ணுக்கெட்டாத சின்னஞ்சிறு அணுவிலிருந்து அனைத்துக்குள்ளும் முரண்பட்ட சக்திகள் மோதிக் கொண்டே இருக்கின்றன. இந்த எதிர்மறை சக்திகள் ஒரு கட்டம் வரை இணைந்தே இருக்கும். இந்த ஒற்றுமை என்பது தற்காலிகமானது. இந்த சக்திகளின் மோதல் மட்டுமே நிரந்தரமானது. இயக்கவியலுக்கே உரித்தான மூன்று அடிப்படை விதிகள் முதல் விதி: எதிர்மறைகளின் ஒற்றுமையும் போராட்டமும்
ஒவ்வொரு பொருளிலும் எதிரும் புதிருமான சக்திகள் ஒன்றோடொன்று போராடியவாறு இருக்கின்றன. காரணம் அப்பொருளுக்குள் இணக்கமில்லை. தனக்குள்ளேயே அது முரண்பட்டிருக்கிறது என்கிறது இயங்கியல், "வளர்ச்சி என்பது எதிர்சக்திகளிடையே நடக்கும் போராட்டம்தான்",
அஞ்ஞானத்திலிருந்து விஞ்ஞானம் தன்னை மாற்றிக் கொள்கிறது. பூரண அறிவு என்று ஒன்றுமில்லை. அறிதற்குரிய விசயம் வற்றாத ஊற்றுப் போல் தொடரும். முரண்பட்ட சக்திகள் இடைவிடாமல் போராடிக் கொண்டேயிருக்கிற நேரத்தில் வளர்ந்து கொண்டும் இருக்கின்றன. இதனை 'எதிர்மறைகளின் ஒற்றுமை' என்கிறோம். அனைத்துப் பொருட்களின் அணுவிற்குள் புரோட்டான், எலக்ட்ரான் என்ற முற்றிலும் எதிரான இரு பொருட்களின் போராட்டமும் இணைப்பும் நிகழ்கிறது. இந்த முரண்பாட்டினையும் ஒற்றுமையையும் எல்லா அணுக்களிலும் காணலாம். உயிருள்ள உடலில் வாழ்வு, சாவு இரண்டும் உள்ளன. செல்கள் அழிவதும், புதிய செல்கள் உருவாவதும் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன.
உயிரியலில் உட்கொள்ளலும், வெளித் தள்ளுதலும், மூச்சை உள்ளுக்கு இழுப்பதும் வெளியே விடுவதும் எதிர்மறைகளின் ஒற்றுமைக்கும் போராட்டத்திற்குமான உதாரணமாகக் கொள்ளலாம். இந்த சமநிலை நீடிக்கும் வரை உயிர் வாழ முடியும். எப்பொழுது இந்த முரண்பாடு முற்றி சமநிலை பாதிக்கப்படுகிறதோ அப்பொழுது வாழ்வு முடிந்து சாவு வந்து விடுகிறது. பொருள் மாற்றமடையக் காரணம் அதனுள் முரண்பாடுகள் எதிர்மறைகள் போரிடுவதால்தான்.
போராட்டத்தின் தீர்வுதான் மாற்றம் முதலாளித்துவ சமுதாயத்தில் சுரண்டுவோர் சுரண்டப்படுவோருக்கிடையிலான முரண்பாடு கிட்டத்தட்ட சமநிலையில் நீடிக்கும் வரைதான் முதலாளித்துவ சமுதாயமாக நீடிக்க முடியும். சுரண்டப்படும் மக்களின் சக்தி மேலோங்கி விட்டால் முதலாளித்துவ சமுதாயம் மாறிவிடும்.(அதற்கான பணியினை சுரண்டும் வர்கதிற்கு எதிராக செய்திருக்க வேண்டும்).
பொருட்கள் அசைகிறநிலையில் இருப்பதாகக் கருதுவதை விட அசையா நிலையில் இருப்பதாகக் கருதுவதுதான் சுலபம், மனிதமனத்தின் வளர்ச்சிக்கும் கூடப் பொருந்தும், பொருட்களை இயங்கும் நிலையில் வைத்துப் பரிசீலிப்பதற்கு முன்னால் அவற்றை இயங்காத நிலையில் பார்த்துப் பரிசீலிப்பதுதான் நம் வழக்கம், ஏனெனில் பொருட்கள் அசைந்து கொண்டு, இயங்கிக் கொண்டு இருக்கின்றன என்பது நமக்குத் தெரியாமலே இருந்து வந்தது. கருத்துமுதல்வாதி உலகத்தில் ஏழை. பணக்காரர்கள் தொடக்க காலத்திலிருந்தே இருந்து வருவதாகக் கூறுவார். அதன் அர்த்தம் எதிர்காலத்திலும் இந்த இரு பிரிவினர் இருப்பார்கள். அதில் எந்த மாற்றமும் நிகழாது என்பது ஆனால் பொருள்முதல்வாதி முதலாளிவர்க்கம், தொழிலாளி வர்க்கம் என்று பிரித்துப் பார்க்கிறான். அவ்விரண்டு வர்க்கத்திற்கிடையேயுள்ள முரண்பாட்டினையும் இடைவிடாத மோதலையும் பார்க்கிறான். முதலாளித்துவ சமுக அமைப்பில் எதிரும் புதிருமான இவ்விரு வர்க்கங்கள் இணைந்தே வாழும், ஆனால் அவற்றுக்கிடைய மோதலும் நடக்கும்.
.ஒவ்வொரு மோதலுக்கும் பின் ஒரு சமரசம் ஏற்படும். ஆனால் அந்த சமரசம் தற்காலிகமானதே மீண்டும் மோதல்களும் சமரசங்களும் தொடரும். முதலாளித்துவத்தை வீழ்த்துகிற பலம் வருகிற வரை இது தொடரும், இறுதி மோதல் வரும் போது முதலாளித்துவ சமூகம் அழிக்கப்பட்டு புதிய சமூகம் தோன்றும். இந்த வர்க்க மோதலுக்குக் காரணமான முரண்பாடுகளின் தன்மையைக் கற்றறிவது அவசியம்.
ஏகாதிபத்தியத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராக மக்களைத் தயார்படுத்துவது மக்களிடைய சோசலிச உணர்வை மேம்படுத்தும். எதிர்வர்க்க உள் முரண்பாடுகளை முற்ற வைப்பது, வெடிக்கச் செய்வது நமக்குச் சாதகமாக்குவது மிகவும் தேவை. முன்னுக்கு வருகிற முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி நமக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும். அந்நிய மூலதனத்திற்கும் உள்நாட்டு மூலதனத்திற்கும் முரண்பாடு வரும் போதும் விதேசிப் பொருளுக்கும் சுதேசிப் பொருளுக்கும் முரண்பாடு வரும்போதும் நாம் அந்த முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி, அந்நிய மூலதனத்திற்கும், விதேசிப் பொருளுக்கும் எதிரான நிலையைத் தோற்றுவிக்க வேண்டும்.
உலகில் தோன்றிய எல்லா தத்துவங்களும் தனி உடமை சமூகம் தோன்றிய பிறகு அந்தத் தனி உடையும் சமூகம் சார்ந்த கருத்துக்களை விதைத்தது ஆக தத்துவத்தின் தேவை அந்த மனித இனங்களில் வாழ்வியலைப் பற்றியது ஆக ஒருபுறம் உடமையாளர்களின் சொந்தக்காரர்களான ஒடுக்குபவனும் உடைமையற்றோர் ஆகிய ஒடுக்கப்படுபவனும் ஒரே சமூகத்தில் வாழும் பொழுது இருவரையும் ஒருமுகப்படுத்துவதும் ஒழுக்கு படுத்துவதும் என்ற பெயரில் நீதி நியாயம் என்ற கோட்பாடுகளை வழங்கியது இந்த தத்துவங்களை இவை மதத்தின் அடிப்படையில் மக்களை ஒன்று படுத்தவும் அதிகாரத்தின் அடிப்படையில் மக்களை மிரட்டி அடிபணி வைப்பதும் எதுவாக இருந்தாலும் அன்று இவை இருந்தது இன்று அதன் தேவைகளை புரிந்து கொண்டால் சரியாக இருக்கும் என்பதே.
தத்துவம் என்றால் என்ன இந்தியாவில் தோன்றி பல்வேறு தத்துவங்கள் எவை எவை இன்றுள்ள இந்திய தத்துவம் எவை அவை என்ன பணி செய்து கொண்டுள்ளது என்று சுருக்கமாக விளக்கினேன் இருந்தும் இந்தியாவில் தோன்றிய ஒவ்வொரு தத்துவ மரபுகளையும் ஆய்வு செய்தோமானால் அதனுடைய வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் இங்குள்ள ஆளும் வர்க்கமே காரணமாகும். ஆளும் வர்க்கத்தை உயர்த்திப்பிடித்த பல்வேறு தத்துவங்கள் நிலைத்து நிற்பதும் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான கருத்துக்களை விதைத்த தத்துவங்கள் தொடர்ந்து காணாமல் போய்விட்டது எனலாம். குறிப்பாக ஆங்கிலேயர் காலத்தில் பல்வேறு விதமான தத்துவங்களை ஆய்ந்தறிந்த ஆங்கிலேயர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு தத்துவங்களின் கலவைகளை ஒன்றாக்கி சமஸ்கிருத மயமாக்களையும் சனாதனத்தை தூக்கி பிடிக்கும் தத்துவங்களை முதன்மைப் படுத்தியும் வேத நாகரீக காலம் தான் உயர்ந்தது என்று வேதத்தை தாங்கிப் பிடிக்கும் வேலையையும் அவர்கள் தான் தொடங்கி வைத்தார்கள் அதற்கு முன் இருந்த பல்வேறு தத்துவங்கள் தங்களுக்கு இடையிலே போட்டி போட்டு வாழ்ந்து மறைந்தும் கொண்டிருந்தது ஆனால் ஆங்கிலேயர் இந்திய மயங்காதலும் அன்றைய தத்துவங்களுக்கு உயிர் கொடுத்தனர் எனலாம். இதனை புரிந்து கொள்வதற்கு மார்க்சிய பார்வை அவசியம்.
இந்தியாவில் தோன்றிய எல்லா தத்துவங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்து தத்துவங்கள் தான் இன்று அதன் பயன் என்ன என்பதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உள்ள வர்க்க சமுகத்தில் ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் தீர்வு காணும் மார்க்சியம் மட்டுமே உழைப்பு தான் மனித அறிவைத் தோற்றுவித்தது புராதன மனித மந்தையை ஒழுக்க நெறி விஞ்ஞானம், கலை ஆகியவை கொண்ட மனித சமூகமாக மாற்றியது மனிதன் நாகரீக வளர்ச்சி பெற்றதற்குப் பொருள் உற்பத்தியில் ஏற்பட்ட முன்னேற்றமே காரணமாகும்.உலகில் உயர்ந்த தத்துவம் மார்க்சியம் மட்டுமே.
ஆகவே மார்க்சியமானது நிரந்தரமான வறட்டுசூத்திரங்களை முன்வைக்கவில்லை மாறாக குறிப்பான பிரச்சனைகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கான பொதுவானவழிகாட்டுதலையும் கண்ணோட்டத்தையும் வழங்குகிறது. ஆகவே குறிப்பான சமூக மாற்றத்திற்கு தீர்வுகளை அறிந்திட அந்த நாட்டின் குறிப்பான சூழல்களை புறக்கணித்துவிட்டு மார்க்சியத்தை மட்டும் பேசிக்கொண்டிருப்பதோ அல்லது ரஷ்யா மற்றும் சீனாவில் நடந்த மாற்றங்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. அதே போல் மார்க்சியம் வழிகாட்டும் பொது உண்மையையும் கண்ணோட்டத்தையும் மறுத்து விட்டு மேலும் ரஷ்ய, சீனப் புரட்சிகளின் அனுபவத்தையும் புறக்கணித்து விட்டு சொந்த நாட்டு சூழல்களையும் அதன் அனுபவங்களை மட்டும் பார்த்து குறிப்பான சமூகத்தை மாற்றுவதற்கான விஞ்ஞானப் பூர்வமான முடிவை எடுக்க முடியாது. ஆகவே மார்க்சிய கண்ணோட்டத்தையும் குறிப்பிட்ட நாட்டின் சமூக இயக்கத்தையும் இணைத்து ஆய்வு செய்வதன் மூலம்மட்டுமே சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை நாம் விஞ்ஞானப்பூர்வமாக எடுக்க முடியும். ஒரு நாட்டில் சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை ஆய்வுசெய்து எடுக்க விரும்புபவர்கள், அந்தநாட்டின் மாவீரர்களையோ, அரசியல் தலைவர்களையோ அடிப்படையாகக்கொள்ளக்கூடாது, மாறாக அந்த நாட்டில் வாழும் மக்களையேதான் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் நமக்கு வழிகாட்டுகிறது.
ஏனென்றால் இயற்கை மாற்றங்கள் சூழ்நிலை சாதகமாக இருந்தால் தானாகவே மாற்றம் ஏற்பட்டுவிடும், அதுபோல சமூக மாற்றங்கள் நடக்காது ,மாறாக சமூகத்தை மக்களின் முயற்சி மற்றும் செயல்பாடுகளின் மூலம்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதாவது சமூக மாற்றத்தில் மனிதர்களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. ஆகவேதான் சமூகமாற்றத்திற்கான கொள்கை திட்டம் வகுப்பதற்கு மனிதர்களின் வாழ்நிலை உணர்வுநிலை, அவர்களின் தயார்நிலை போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் வழிகாட்டுகிறது. மனிதசமூகம் உயிர்வாழ மற்றும் வளர்ச்சியடைய வேண்டுமானால், அதற்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்கு மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடவேண்டும். ஆகவே மனித சமூகத்தின் வரலாற்றை புரிந்து கொண்டு சமூகத்தை மாற்றியமைப்பதற்கு நமது ஆய்வானது உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் என்று நமக்கு மார்க்சிய சமூகவிஞ்ஞானம் போதிக்கிறது.
No comments:
Post a Comment