சாதித் தோற்றமும் வளர்ச்சியும்: ஒரு மார்க்சிய வரலாற்றுப் பார்வை
பழனி சின்னசாமியின் "சாதி அன்றும் இன்றும்: மார்க்சிய பார்வையில்" என்ற நூல், இந்திய சமூகத்தில் சாதி உருவான வரலாற்றை இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் விரிவாக விளக்குகிறது. மனித குலத்தின் பரிணாம வளர்ச்சி, உற்பத்தி முறைகளின் மாற்றம் மற்றும் நிலவுடமைச் சமூகத்தின் எச்சமாக சாதி எவ்வாறு இன்றும் சுரண்டல் வடிவமாக நீடிக்கிறது என்பதை இந்த ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. சனாதனக் கோட்பாடுகள் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு மத ரீதியான அங்கீகாரத்தை வழங்கினாலும், அதன் உண்மையான வேர்கள் பொருளாதார உற்பத்தி உறவுகளில் புதைந்துள்ளதாக ஆசிரியர் வாதிடுகிறார். நிலப்பிரபுத்துவ அமைப்பில் உருவான சாதிப் படிநிலைகள், நவீன முதலாளித்துவச் சூழலில் அடையாள அரசியலாகவும் தேர்தல் உத்தியாகவும் உருமாறி உழைக்கும் மக்களைப் பிரித்து வைக்கின்றன. வெறும் சீர்திருத்தங்கள் சாதியை ஒழிக்கப் போதுமானவை அல்ல என்றும், சோசலிச சமூக மாற்றத்தின் மூலமே இந்த ஒடுக்குமுறைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்றும் நூல் வலியுறுத்துகிறது. இறுதியில், சாதி மற்றும் தீண்டாமையை வேரறுக்க உழைக்கும் வர்க்கத்தினர் தங்களுக்குள் இருக்கும் பிரிவினைகளைக் கடந்து மார்க்சிய சிந்தனையுடன் ஒன்றிணைய வேண்டும் என்பதே இதன் மையப்பொருள்.
சாதி இல்லாத காலமும் ஒன்று இருந்தது என்பதனை முதலில் தெளிவடைய வேண்டும். சாதி பிரிவினை தோன்றி 2500 ஆண்டுகள் ஆகலாம் என்று கணக்கிட்டாலும் சாதிய சமூகமாக செயல்பட தொடங்கி 2000 ஆண்டுகள் ஆனாலும் சாதி ஆதிக்கம் சமூகத்தில் கோலோச்ச தொடங்கியது சோழர் ஆட்சிகாலம் தொடக்கம் என்றாலும் சாதி முழுமையாக செயல்பட தொடங்கி 1600 ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆகையால் இன்றைய இருப்பை பற்றி தேடினால் சில குறிபானவையை காணலாம்.
சாதி இருப்பிற்கான சமூகம் உடைத்தெறியப்படவில்லை, சாதிய ஏற்றதாழ்வை கட்டிகாக்கும் முறைகளை இன்றைய சமூக அரசு தொடரசெய்கிறது. அதில் ஒன்றுதான் சாதிகட்சிகளை ஊக்கிவிப்பதும், சாதி சங்கங்களை வளர செய்வதும் ஆகும். இன்னொன்று இடஒதுக்கீட்டின் காரணமாக சாதி சான்றிதழ்கள் வழங்கும் பழக்கத்தை ஆங்கிலேய காலனிய ஆட்சியாளர்கள் தொடங்கினர். அன்று அவர்கள் ஒதுக்கபட்டு ஒடுக்கப்பட்டுள்ள மக்களும் கல்விக் கற்க வேண்டும் எல்லோரும் வேலை பெற வேண்டும் என்ற நோக்கம் உண்மையில் எத்தனை சதவீத மக்களின் கல்வி வேலை வாய்பிற்கு உத்தரவாதம் அளித்தது என்றால் அந்த குறிப்பிட்ட மக்களின் சிலருக்கு சிறிது உயர வழிவகை செய்தது உண்மைதான். இன்றைய சமூகத்தில் வழங்கபடும் சாதி சான்றிதழ்கள் கல்வி வேலைவாய்ப்பை கொடுக்க முடியவில்லை உண்மைதானே? இடஒதுக்கீட்டின் படி வேலையோ கல்வி பயனோ இல்லாத இந்த நேரத்தில் இந்த சாதிய முத்திரை என்ன பயன்? இந்த சாதி சான்றிதல் இடஒதுக்கீடு கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் மக்கள் மத்தியில் ஆழமான பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில் சாதியால் ஒடுக்கப்பட்டு கடைநிலைக்கு தள்ளபட்டுள்ள எல்லா மக்களுக்கும் இடஒதுக்கீடு பயனளித்ததா என்றால் இல்லைதானே. ஆனால் தேர்தல் தேவைக்காக பி.ஜே.பியினால் கொண்டுவரப்பட்ட EWS 10% (பொருளாதர அடிப்படையில் நலிவுற்ற பிரிவினர்) இடஒதுக்கீடானது உண்மையான இடஒதுக்கீடுகான அதன் சாரத்தை ஒழித்துக் கட்டிவிட்டது.
இன்று சாதியானது மக்கள் மத்தில் தங்களின் வாழ்வியல் தேவையை விட தங்கள் பாதுகாப்பு என்று ஆளுக்கொரு சாதி கட்சியில் சேர்ந்துக் கொண்டு வாழும் அவலம். சாதிகட்சிகள் தன் சாதி மக்களுக்கு இதை செய்து விடுவேன் அதை செய்து விடுவேன் என்று வானளவில் பொய்யை சொல்லி ஆட்சியை பிடித்தாலும் அவை கொடுக்க வேண்டிய கல்வி தனியார் வசம், கொடுக்க வேண்டிய வேலை வாய்ப்பு தனியார் வசம். எல்லாம் உலக மய தனியார் மய கோர விளைவு. இங்கே யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்களின் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்பதுதான் உண்மையான நிலவரம். ஏனெனில் இந்த அரசமைப்பு தனிசொத்தை பாதுகாக்கும் அரசு. அதனால் பெரும்பான்மையிலான உழைக்கும் மக்கள் எந்த சாதிலிருந்தாலும் உழைத்து வாழக் கூட வழியில்லாத நிலை. கல்வி மருத்துவம் வேலைவாய்ப்பு எதையையும் கொடுக்காத அரசு சாதிய சண்டையில் உயிர் வாழ்ந்துக் கொண்டுள்ளது. என் சாதிக்கு அதை; அந்த சாதிக்கு அதை ஏன் கொடுத்தே என்று சாதி சண்டையை உருவாக்கும் சாதி கட்சிகள் தவறியும் இன்றைய உலக மய கொள்கையால் எல்லா சாதி உழைக்கும் மக்களுக்கும் வாழவழியில்லை அதற்கான காரணத்தை பேசுகின்றனரா? நான் ஆட்சிக்கு வந்தால் என்ற இதை செய்துவிடுவேன் அதை செய்துவிடுவேன் எனக் கூறும் எவரும் எதை செய்கின்றனர் என்றால் அவர்களின் தனிசொத்தை பெருக்கிக் கொள்கின்றனர், அதனால்தான் ஒவ்வொருவரும் ஆட்சி கட்டில் சுகதிற்காக தனித் தனி கட்சி குறிப்பாக சாதி கட்சி வைத்துள்ளனர். சாதி கட்சி தலைவர்களின் சொத்து பெருகியுள்ளதே தவிர எந்த மக்களின் சாதி பிரச்சினை தீரவில்லை. ஆனால் சாதி சண்டையை மூட்ட எல்லா கட்சிகளும் களத்தில் உள்ளன, அவைதான அவர்கள் வாழ்வதற்கான அடிப்படை. அதனால் சாதிப்பிரச்சினையின் முக்கியமான ஒரு பகுதியாக சாதி கட்சியை பார்க்கலாம். இன்றைய மதவாத கட்சியும் இதில் அடக்கம். அடையாள அரசியலின் தொடர்சியாக இதனை ஆராய்ந்தால் தெளிவடையலாம்.
சிலர் கூறுகின்றனர் மற்ற நாடுகளில் சாதி இல்லை இங்கு மட்டும் உள்ளது என்று. அதனை புரிந்துக் கொள்ள நம் நாட்டின் பூகோள மற்றும் மக்கள் தொகையையும் கணக்கில் கொள்ள வேண்டும். நாம் நாடு என்று அழைக்கும் இந்தியா, பல மொழி பல தேசங்களை உள்ளடக்கியது. அப்படியெனும் பொழுது ஆங்கிலேயர்களின் ஆட்சி தேவைக்காக கட்டாய ஒருகிணைப்பே. இங்கே சாதியும் வழக்கொழிந்து போகதிருக்க அவர்கள் செய்த சூழ்ச்சியும் ஆகும். மொழி வழி பிரதேசங்களை மறுத்து ஒற்றை கலாச்சாரம் ஒற்றை மதம் அதேபோல் சாதியையும் குறிப்பிட்ட அடைப்புக்குள் கொண்டுவந்த பெருமை அவர்களையே சாரும்.
உலகின் மற்ற நாடுகளில் உற்பத்தி சக்தியின் (மனித ஆற்றலின்) தேவையின் காரணத்தால் வேகமாக நிலவுடமை சமூக உற்பத்தி உறவு தகர்க்கப்பட்டு அடுத்த சமூகம் மாறியது. எடுத்துக்காட்டாக 1945 க்கு பிறகு ஜப்பானில் தீண்ட தகாதவர்கள் என்று ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை ஒதுக்கி வைத்திருந்தனர். ஹிரோசிமா நாகசாகி அணுகுண்டு வெடிபிற்கு பிறகு உழைப்பின் தேவையை ஒட்டி அந்த மக்கள் ஒன்று கலக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது, ஆகையால் அரசே முன் நின்று அந்த அந்த ஏற்றதாழ்வான முறைக்கு முடிவு கட்டியது. உலகின் கடைசி சாட்சியாக இதனை கொள்ளலாம் அரசே முன் வந்து செய்துள்ள பணியை.
பிரிட்டன் தொழிற்புரட்சியும் பிரான்சின் சமூக புரட்சிக்கும் அடிப்படை உழைக்கும் மக்களின் தேவையை ஒட்டியே எனலாம். பிரிட்டனிடம் உழைக்கும் மக்கள் குறைவாக இருக்க மனித உழைப்புக்கு எளிதாக இயந்திரங்களை கண்டுபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது ஆனால் பிரன்சில் உழைக்கும் மக்கள் தங்களின் தேவைக்கான சமூகத்தை படைக்க நிலவுடமை சமூகத்தின் கொடூரத்தை சகிக்க முடியாமல் அதனை தூக்கி ஏறிந்தனர் பின்னர் முதலாளித்துவ புரட்சியை நடத்தினர். இங்கே மனித தேவையை ஒட்டியே மாற்றங்கள் ஏற்பட்டன.
இந்திய போன்ற நாட்டில் உலக மக்கள் தொகையில் பெரும்பகுதியை கொண்டுள்ளதோடு உழைக்கும் மக்களுக்கு வேலையில்லை பள்ளி கல்லூரி படித்த பின்னரும் கல்விகேற்ற வேலை இல்லை. அதற்கான திட்டமிடலோ செயல்பாடோ இல்லாமல் உலக வங்கியின் கட்டளை படி செயல்படும் அரசு செயல்படும்பொழுது உழைக்கும் மக்களுக்கான திட்டமிடல் இல்லை அதன் வெளிப்பாடு உழைக்கும் மக்கள் தங்களின் பிரச்சினைக்கு ஒன்று படாமல் இருக்க பல்வேறு பிரிவினைகள். மதவாத அரசியல், சாதிவாத அரசியல் இன்னும் பிற… வர்க்க போராட்டத்தை மறுத்து சாதி அரசியலை அடிப்படையாக கொண்டுள்ள ஓட்டரசியல்வாதிகளை நம்புவதால் சாதிப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது என்பது திண்ணம். உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து இந்த கொடுமைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க முன் வரவேண்டும். அதற்கு முன் நிபந்தனை எல்லா உழைக்கும் மக்களும் ஓரணியில் இணைய வேண்டும். அது இல்லாமல் தன் சாதிகாரன் தன் சொந்தகாரன் என்ற அடிப்படையில் இயங்கும் பொழுது வேவ்வேறு வர்க்க நலன் கொண்ட ஒரே சாதியில் உள்ளவர்கள் ஒன்றுபட்டு என்ன பயன்? ஆக தலித்தாக பிரிந்து நிற்பதாலோ அல்லது மேல்சாதி பெருமை பேசுவதாலோ எந்த உழைக்கும் மக்களுக்கும் விடுதலை இல்லை!. பொது எதிரியை வீழ்த்தாத வரை விடிவுயில்லை. ஆக உழைக்கும் மக்களுக்கு இடையில் ஒற்றுமையும், இது போன்ற இழிசெயல்களை முழுமையாக மறுக்கவும், சாதி கடந்து உழைக்கும் மக்களாக ஒன்றிணைந்தால் மட்டுமே பலன் கிடைப்பது சாத்தியம். உழைக்கும் மக்களுக்கு விரோதமான சாதிவாத, மதவாத கட்சிகளை அம்பலப்படுத்துவதோடு அவர்களை உழைக்கும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். உழைக்கும் மக்கள் ஒன்றிணைவதை தடுக்கும் சாதிவாத, மதவாதகட்சிகளை வேரறுக்காமல், அவைகளிலிருந்து உழைக்கும் மக்கள் வெளியேறாமல், சாதிவாத, மதவாத மயக்க பிஸ்கட்களில் மயங்கி கொண்டு இருக்கும் வரை சாதிப்பிரச்சனை தொடரத்தான் செய்யும்.
இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு போராடுவதன் மூலம் மட்டுமே இந்த பிற்போக்கு குப்பைகளை தூக்கி எறிவது சாத்தியமாகும். இந்த கொடுமைகளின் அடிவேரைபுடுங்கி எறியாதவரை மக்கள் சாதி அடிப்படையில் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டும் செத்துக்கொண்டும் இருப்பர், அதேவேளையில் நம்முடைய பிரச்சனைகளுக்கு காரணமான அனைத்து மக்களின் எதிரிகள் உல்லாசமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பர்.
அன்று ஒரு குறிப்பிட்ட சாதியினர் ஒரே வகையான குறிப்பிட்ட தொழிலைச் செய்தனர், வேறு எந்த தொழிலையும் அந்த குறிப்பிட்ட சாதியினர் செய்யவில்லை. சாதிய சமூக அமைப்பு முழுவதற்கும் சில பொதுவான உறவுமுறை இயங்கிக் கொண்டிருந்தது. பிராமணர் மலர் தூவி வழிபாடு செய்தனர். பஞ்சமர் துப்புரவுப் பணிகள் செய்தனர். இதற்குள் சாதியத்தின் பிறவிவழி தனிவழி சித்தாந்தம் உருவானது. கைவினை சாதிகளும் பிரதேச விதிவிலக்கின்றி ஒரே தொழிலில் இருந்தனர். நிலவுடமை சாதிகளும் நிலத்தில் உழும் சாதிகளும் பிரதேசத்துக்கு ஏற்பவும் காலத்துக்கு ஏற்பவும் விதிவிலக்காக அமைந்தன. அன்றைய காலத்தில் குலத்தொழில் முறையே நிலவியது. சாதியும் பிறப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டது. அதற்கு மதச்சாயம் பூசப்பட்டது. அதன் வளர்ச்சி போக்கில் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர், குறிப்பிட்ட தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. தற்போது பல்வேறு நிலமைகள் மாறிவிட்டன, இருந்தும் மக்களுக்கிடையிலேயான ஏற்றதாழ்வும் பழைமைவாதமும் சாதிய தீண்டாமையை நிலை நிறுத்த முயலுகிறது அதற்கு இந்த அரசும் துணைபோகின்றது.
நிலவுடமை உற்பத்தி முறையால் தான் சாதியம் உறுதிப்பட்டது என்பது உண்மை. மேலும் இத்தகைய உற்பத்தி முறையை அடிப்படையில் மாற்றி தொழில்நுட்ப மயப் படுத்துவதன் மூலம் (உற்பத்தியை நவீனப்படுத்துவதன் மூலம்) சாதியத்தை ஒழிக்க இயலும் என்று குறிப்பிடுகின்றார். (இந்திய வரலாறு பற்றிய ஆய்வின் அறிமுகம் நூலில் இருந்து). சாதியச் சிந்தனை (உணர்வு) தொடர்ச்சியாக உயிர் வாழ்வதற்கான (நீடிப்பதற்கான) பொருளாதார அடிப்படை எது? என்பதை அறிவது மாத்திரம் அல்ல. கூடவே அதனை மாற்றுவதற்கான (ஒழிப்பதற்கான) முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். சாதி எவ்வாறு இன்றுள்ளது? இதனைப் பற்றிப் பேசுபவர்கள் மார்க்சியவாதிகளைத் தவிர்த்த வேறுஎவரும் இல்லை. மார்க்சியவாதிகளிலும் சில பிரிவினர் அடையாள அரசியலில் புகுந்து விட்டதால், மார்க்சியத்தின் பெயரிலே மார்க்சியம் அல்லாதவற்றை பேசுவோரை இங்கே நாம் புரிந்துகொண்டு ஒதுக்கி தள்ள வேண்டும்.
முதலாளித்துவம் முழுமையாக வளர்ச்சியடையாத நாடுகளில் நிலவுடமையின் பல்வேறு பிற்போக்கு அம்சங்கள் அந்த நாடுகளில் மிச்சசொச்சமாக தொடரவே செய்கிறது. அதுவும் இந்தியா போன்ற புதியகாலனிய நாடுகளில் மக்களிடம் முதலாளித்துவ சமூக உறவைக் கொண்டதாக இருப்பதில்லை (வளரவில்லை). நிலவுடமையின் பிற்போக்கு அம்சங்களான மதம் சாதி, ஆகிய பழைய சிந்தனையைக் கட்டிக் காத்துக் கொண்டு அதனை முதலாளித்துவ சமூக பொருளாதார உறவிற்கேற்ப (வளர்ச்சிக்கேற்ப) தகவமைத்துக் கொள்கின்றது. இவை சமூகத்தில் பெரும் தீங்கை விளைவிப்பதோடு காலத்திற்கு ஒவ்வாத பழைய சிந்தனைக் கட்டமைப்பை சனாதனத்தை உயர்த்தி பிடிக்கும் போக்கு அனைத்துச் சாதிகளின் இருப்பை தக்கவைக்க சாதியால் மேல்நிலை சாதிப் பிரிவினர் அவற்றை வளர்க்கும் வகையில் அவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளது. இந்த செயல்பாடுகள் சமூகத்தை ஏற்றதாழ்வாக பிரிப்பதற்கு துணைபோகின்றது. இன்னொரு பிரிவினர், இவர்கள் சமூகத்தின் பழமைவாதச் சிந்தனையை சுமக்கின்றவர்கள், இவர்கள் இச்சமூக மேல்தட்டு வர்க்கதினர், ஆதிக்க பிரிவினர். இந்தப் பிரிவினர் ஓட்டரசியல் கட்சிகளிடையே ஆதிக்கம் செலுத்தும் தன்மை உள்ளவர்கள். தேர்தல் அரசியலின் சமூக இருப்புக்கான அவசியமான ஒன்றாக சாதி மத அரசியல் இருக்கிறது.
இன்றைக்கு சாதியால் அடக்கி ஒடுக்கப்படும் மக்கள் கூடுதலான கொடூரங்களை அனுபவிக்கிறார்கள். ஆனால் இதிலிருந்து விடுதலை என்பது பெரியார் சொன்ன வழியிலோ, அம்பேத்கர் சொன்ன வழியிலோ, ஏன் தலித்தியம் பேசுவோர் கூறும் வழியிலோ, இல்லையில்லை NGO-கள் கூறும் வழியிலோ சாத்தியம் இல்லை. ஏனென்றால் சாதி ரீதியாக ஏற்படும் எல்லா துன்பதிற்கும் காரணமான இந்த சமூக பொருளாதார அரசியல் அமைப்பே, இதனை இந்த மேற்காணும் பிரிவினர் புரிந்துக் கொள்ளவில்லை, ஆகவே இவர்களால் முன்வைக்கப்படும் கொள்கைகள் இதுவரை வெற்றி பெற முடியவில்லை, இனியும் வெற்றிப் பெறப் போவதில்லை சாதிய ‘கொடுமைகளும் அவர்களின் முன்னெடுப்பால் தீரவில்லை. தினம் தினம் மக்கள் கடந்து செல்லும் இங்குள்ள எல்லா அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் இந்த பிற்போக்கான நடைமுறைகளை கட்டிக்காக்கும் ஆளும் வர்க்கத்தின் அரசியல், பொருளாதார நலன்களை பாதுகாத்து வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டே நிகழ்கிறது என்கிறது மார்க்சியம். ஆகவே இந்த ஒடுக்குமுறையின் நுகத்தடியை தூக்கியெறிய சொல்கிறது மார்க்சிய லெனினிய தத்துவம். ஆனால் இதனை விடுத்து ஆளும் வர்க்கங்களுடன் கூடிக்குலாவிக் கொண்டு அவர்கள் பின்னால் அணிவகுக்க வேண்டும் என்று சந்தர்ப்பவாதிகள் சுயநலப் போக்குள்ளவர்கள் சொல்கின்றனர். இதுதான் சீர்திருத்தவாதம் பேசும் சந்தர்ப்பவாதிகளின் வழிகாட்டல் ஆகும்.
சாதிகளும் மதங்களும் உழைக்கும் வர்க்கத்தை பிரிப்பவை என்பதால் அது நீடிக்கவே ஆளும் வர்க்கம் விரும்புகிறது. ஒவ்வொரு சாதிக்குள்ளும் இன்று பல வர்க்கங்களாக பிரிந்து விட்ட பின் ஒரே வர்க்கம் பல்வேறு சாதியில் பிரிந்துக் கிடப்பதால் அந்த வர்க்கங்களுக்கு இடையிலான ஒற்றுமையானது சாதி அடிப்படையிலான ஒற்றுமைக்கு முரணாக உள்ளது. இருந்தும் மேல்நிலை (ஒடுக்கும்) வர்க்கங்கள் தேவையை கருதி ஒன்றுபடுவதும் சாத்தியமாக உள்ளது. இருந்தும் இந்த சாதிகள் இடையேயான பண்பாட்டு மதிப்புகள் அவர்களுக்கு (ஒடுக்குவோருக்க) இடையிலான இணக்கத்துக்கு தடையாக உள்ளது. இதனையையும் மீறி தேவைகருதி ஒடுக்கப்படும் வர்க்கங்களின் போராட்டத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள ஒடுக்கும் வர்க்கமாக அவர்கள் ஒன்றிணையவே செய்கிறார்கள்;
அதே நேரத்தில் பல்வேறு சாதிகளில் உள்ள உழைக்கும் (ஓடுக்கப்பட்ட வர்க்கம்) மக்களுக்களுக்கு இடையிலான வர்க்க ஒற்றுமைக்கும் பல்வேறு தடைகள் உள்ளதை காணலாம். அவை சாதிய பண்பாட்டு மதிப்புகள் கருத்துருவாக்கங்களும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதனையும் மீறி ஆளும் வர்க்கங்களைப் போலவே உழைக்கும் வர்க்கங்களும் தேவை கருதி ஒன்றுபட வேண்டியது அவசியமாகும். எதிரிகள் ஒன்றுபடும்போது நாம் ஒன்றுபடுவது அவசியம் அல்லவா? இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக வளர்ச்சி முதலாளிய மாற்றங்களை மேலும் கீழும் குறுக்கும் நெடுக்குமாக ஆழப்படுத்தி முழுமை அடைய செய்து நிலவுடமை உறவுகளை முற்றாகச் சிதைப்பதற்கான போராட்டத்துடன் சாதிய பண்பாட்டு மதிப்புகளை எதிர்த்துப் போராட்டங்களை இணைப்பதன் மூலமே தலித் மக்கள் உழைக்கும் வர்க்கத்தின் வர்க்க உணர்வோடு ஒன்றிணைந்த போராட்டத்திற்கு ஒன்றுபடுவர்.
வேலையின்மை கொடூரமாக உள்ள இந்த நாளில் கூட சாதி அடிப்படையில் சில தொழில் நிர்ணயிக்கப்படுகிறது. உயர்வு தாழ்வு கற்பிக்கப்படும் வழக்கம் வெறும் கலாச்சாரப் போராட்டத்தினால் உடைத்தெறிய முடியாது. சாதியவேர்களை களைந்தெறியும் போராட்டமாக புரட்சிகர போராட்டமாக இருக்க வேண்டும். பார்ப்பனர்களின் தனிஉரிமைக்கு எதிரான போராட்டமாக சுருக்கி காண்பது கூட நிலஉடமை பிற்போக்குகளை எதிர்த்தபோராட்டத்தை பார்ப்பன எதிர்த்த போராட்டமாக சுருக்கி காண்பது ஆகும். ஒரே சாதிக்குள் தோன்றிய புதிய வர்க்கங்கள் (பணம்படைத்த வர்க்கங்கள்) தனது சாதி அடையாளத்தை இழந்து விட முயற்சிக்கவில்லை. தனது வர்க்கத்திற்கு என்று புதிய கோரிக்கையை முன்வைக்க பயன்படுத்திக்கொள்கின்றனர். அதாவது அந்தந்த சாதிகளில் தோன்றிய புதிய வர்க்கத்தினர் அதிகாரியாகவும் முதலாளியாகவும் வணிகர்களாகவும் ஏன் ஆளும்வர்க்கத்தின் பிரதிநிதிகளாகவும் வளர்ந்துள்ளனர். ஆயினும் இவர்கள் தனது சாதியின் நலன்களுக்காக நிற்காமல், ஆளும் வர்க்கம் செய்யும் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு துணை போகின்றனர். இதற்காக பல்வேறு சாதிகளில் தோன்றிய புதியவர்க்கங்கள் தேவைப்படும் நேரத்தில் ஒருங்கிணைந்து செயல்பாட்டையும் மேற்கொள்கின்றனர். புதிய மேல்நிலை வர்க்கங்கள் சாதிகளை கடந்து தமக்குள் ஒருங்கிணைவு ஏற்படுத்திக் கொள்கின்றனர். மேலும் இவர்களே பிராமணர் அல்லாதவர் என்ற பெயரிலும் ஒளிந்துக் கொள்கின்றனர். தேவைப்படும்போது பிராமணர்களிடத்தில் மட்டுமல்லாது எல்லா மேல்நிலை சாதி மற்றும் வர்க்கத்தோடும் உறவு கொள்ள இவர்கள் தவறுவதும் இல்லை.
இந்த நிலையில் உழைக்கும் ஏழை எளிய கடைநிலை சாதிகளிலுள்ள மக்களை மற்றசாதியைச் சேர்ந்த உடமை வர்க்கங்களின் தாக்குதலிருந்து தங்களை பாதுகாக்க அனைத்து சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் ஒன்றுபடுவதற்கு தடையாக மற்ற சாதியிலுள்ள பணக்கார ஒடுக்கும் வர்க்க பிரதிநிதிகளும், அதேபோல் கடைநிலை சாதியிலுள்ள பணக்கார வர்க்கங்களும் இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. ஒரே சாதிக்குள் இருக்கும் முதலாளியை, அதிகாரியை, ஆளும் வர்க்க, பிரதிநிதியை… முதலாளியாகவும், அதிகாரியாகவும், ஆளும்வர்க்க பிரதிநிதியாகவும் பார்க்காமல் தன் சாதிகாரனாக மட்டுமே பார்க்கும்படி பாமர மக்கள் பழக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் வரையில். சாதியையும் வர்க்கத்தையும் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஆகவே இந்தச் சிக்கல் உடைபடாமல் இதிலிருந்து பாமர மக்கள் விடுபட முடியாது.
சாதியானது இந்திய சமூக வளச்சிப் போக்கில் இயற்கையாய் கருக்கொண்டு சூழலுக்கேற்ப உருக்கொண்டு, உபரியை உறிஞ்சும் சுரண்டல் வடிவமாக உருபெற்றபோது அதற்கு கோட்பாட்டு நியாயம் வழங்கி சாதியத்தின் இருதலுக்கு பங்காற்றியது சனாதனமதம் பிராமணியமே. அதன் கொடிய அம்சம் சுரண்டல் வடிவில் அடங்கியுள்ளது. பிறப்பின் அடிப்படையில் தொழில்களை ஒழுங்கமைப்பதில் இச்சுரண்டல் அடங்கியுள்ளது. சாதி மற்றும் தீண்டாமை நிலவுவதற்கு அடிப்படையான காரணம், உற்பத்திமுறைதான். பார்ப்பனியம் இந்து மதம் காரணமல்ல, ஆனால் பார்ப்பனியம் சாதியை மதத்தோடு இணைத்து உறுதிப்படுத்த காரணமாக இருந்தது இருந்து வருகிறது. அதில் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களின் பங்களிப்பை கணக்கில் கொள்ள வேண்டும், ”இந்து” என்பதை ஒரு சமயத்தைக் குறிக்க முதன்முதலாக 1818ஆம் ஆண்டில் James Mill என்பவர் தனது "History of British India" என்ற நூலில் பயன்படுத்தியிருந்தார். “சிந்துவெளிக்கு அப்பால் இருந்தவர்களை பாரசீகர்கள் சிந்துக்கள்” என்று அழைத்துக் கொண்டார்கள். தம்மையும் மற்றவர்களையும் பிரிந்துக் கொள்ள “வெள்ளையார் இந்துக்கள்” என்று அழைத்துக் கொண்டார்கள். சிந்து இந்துவாகி மாறியது. இந்து என்று ஒரு மதமே அதற்கு முன் இருந்தில்லை.
இந்தியாவில் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை தோற்றம் பெறாத மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் சாதி தீண்டாமை நிலவவில்லை.
இலங்கையில் பார்ப்பனியம் இல்லை. ஆனால் அங்கு நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை உண்டு. அதனால் சாதியும் தீண்டாமையும் உண்டு.
பார்ப்பனியம் இல்லாத ஆப்பிரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் கூட சாதி கூறுகள் உண்டு. ஆகவே சாதி தீண்டாமை நிலவுவதற்கு காரணம் உற்பத்திமுறைதான் என்பதற்கும், பார்ப்பனியம் அல்ல என்பதற்குமான எடுத்துக்காட்டுகள்தான் இவை. பொருளியல் அடித்தளத்தை ஒரு புரட்சி மூலம் மாற்றும் போதுதான் மேற்கட்டுமானமான சாதி மற்றும் தீண்டாமை ஒழியும். இன்றைய இந்திய சமூக அமைப்பும், இந்திய அரசும் ஜனநாயக விரோத எதேச்சதிகாரத் தன்மை கொண்டதாக நீடிப்பதாலும், ஆளும் வர்க்கங்கள் பழைமையை தூக்கிபிடித்துக் கொண்டே உலகமயமாக்கல் கொள்கையை செயல்படுத்துவதாலும், இவர்களிடம் சுரண்டல் வடிவமான சாதிய ஏற்ற தாழ்வை போக்கும் திட்டம் எதுவும் இல்லாததாலும், இவர்கள் பழமையை கைவிடாமல் அதனை உயர்த்திப்பிடித்து மக்களிடம் தொடர்ந்து பரப்புவதாலும் சாதியமுறை தொடர்ந்து நிலவுகிறது. ஆகவே பழமைவாதிகளான ஆளும் வர்க்கங்களையும் அவர்களின் அரசையும் எதிர்த்துப் போராடி ஒழித்துக்கட்டாமல் இங்கு சாதியமுறையை ஒழிக்க முடியாது. சாதிமுறை என்ற சமூக நிகழ்வுப்போக்கு பல்வேறு மாற்றங்கள் அடைந்துள்ளது ஆயினும் இன்றும் பரம்பரைத் தொழில் பிரிவினை (Social Division of Labour) அடிப்படையில் சாதிமுறை தன் நிலைப்பிற்கு ஆதாரம் கொண்டிருக்கிறது. சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்தரவாதம் செய்யும் பிற அம்சங்களான அகமணமுறை, உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலைமுறை, பரம்பரை சடங்குகள் ஆகிய நிலப்பிரபுத்துவப் பண்பாடுகள் நீடிப்பதும் காரணமாகும். ஆகையால் நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையும், நிலப்பிரபுத்துவ பண்பாடும் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டால் சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கான சமூக வேர்கள் தகர்ந்துவிடும். அதற்கு அடுத்த சமுதாய வளர்ச்சிக் கட்டத்தில் சாதிமுறை தொடர முடியாது.
வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போது மக்கள் சாதியை கடந்து ஒன்றுபடுகிறார்கள், சாதி ஆதிக்க சக்திகள் ஒதுக்கப்படுகிறார்கள் என்பதை அன்றைய தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு சமூக கொடுமைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் அன்று சாட்சி பகிர்ந்தன. புரட்சிகரக் கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுத்த போராட்டங்கள் வர்க்க ஒற்றுமையை அனைத்து சாதியினருக்கும் இடையில் ஏற்படுத்தியது. சாதிமுறை உள்ளிட்ட அனைத்துவகையான பிற்போக்கு அம்சங்களும் தூக்கி எறியப்படும். அதற்கு தேவை சமூக மாற்றதிற்கான புரட்சி ஒன்றுதான் ஒரே வழியாகும் என்பதனை நிரூபித்தன. அத்தகைய புரட்சிதான் இந்த எல்லா சீர்கேடுகளையும் துடைதெறியும்.
வரலாற்றின் தொடக்ககாலச் சகாப்தங்களில், அனேகமாக எங்கும், பல்வேறு அடுக்குகள் கொண்ட, சிக்கலான ஒரு சமுதாய ஏற்பாட்டைக் காண்கிறோம். சமூக அந்தஸ்தில் பல்வேறு படிநிலை அமைப்புகள் இருக்கக் காண்கிறோம். பண்டைய ரோமாபுரியில் உயர்குலச் சீமான்கள், வீரமறவர்கள், பாமரக் குடிமக்கள், அடிமைகள் எனவும், மத்திய காலத்தில் நிலப்பிரபுக்கள், மானியக்காரர்கள் (vassals), கைவினைக் குழும எஜமானர்கள், கைவினைப் பணியாளர்கள், பயிற்சிப் பணியாளர்கள், பண்மையடிமைகள் எனவும் பல்வேறு வர்க்கப் பிரிவினர் இருக்கக் காண்கிறோம். மேலும், அனேகமாக இந்த வர்க்கங்கள் அனைத்திலும் ஒன்றன்கீழ் ஒன்றான உட்பிரிவுகள் இருந்ததையும் காண முடிகிறது. நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் அழிவிலிருந்து முளைத்தெழுந்துள்ள நவீன முதலாளித்துவ சமுதாயம் வர்க்கப் பகைமைகளை ஒழித்துவிடவில்லை. ஆனால், பழையவற்றுக்குப் பதிலாகப் புதிய வர்க்கங்களையும், புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போராட்ட வடிவங்களையும் உருவாக்கி வைத்துள்ளது. எனினும், நமது சகாப்தமான முதலாளித்துவ வர்க்கச் சகாப்தம் ஒரு தனித்த பண்பியல்பைக் கொண்டுள்ளது: வர்க்கப் பகைமைகளை அது எளிமைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த சமுதாயமும், இருபெரும் பகை முகாம்களாக, ஒன்றையொன்று நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் - முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கம்
என்னும் - இருபெரும் வர்க்கங்களாக, மேலும் மேலும் பிளவுபட்டு வருகிறது.(கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து).
இந்த சமூக அமைப்பு எப்போதும் மாறாதநிலையில் தொன்று தொட்டு ஒரேமாதிரியாகவே இருந்தவை அல்ல. காலம் செல்ல செல்ல மனிதர்களின் முயற்சியால் சமூகத்தில் மாற்றங்கள் நடந்துகொண்டிருப்பதை நாம் அறியலாம். அதே போலவே சமுதாயம் இன்றுள்ளது போல் என்றும் நிலைத்து நிற்கவும் போவதில்லை. இந்த பிற்போக்கு சமூகமும் மாறும். அத்தகைய புரட்சிகரமான மாறுதலுக்கான சமூக விஞ்ஞான வழியை மக்கள்
அறிந்துகொண்டு ஒன்றுபட்டு பாடுபட்டு சமூகத்தை புரட்சிகரமாக மாற்றுவார்கள். ஆகவே அதற்கான சமூக விஞ்ஞான வழிமுறையை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
மார்க்சியம் வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையில் சமூகத்தை ஆய்வு செய்யச் சொல்கிறது. முன்பு நிலவிய உற்பத்திமுறை என்னவோ அதன் அடிப்படையில் அம்மக்களின் வளர்ச்சியை புரிந்துக் கொள்ள முடியும் என்கிறது, ஆனால் இந்திய வரலாற்றை எழுதியவர்களோ இதனை உள்வாங்கிக் கொள்ளவே இல்லை. இங்குள்ள எல்லா வரலாற்று நூல்களும் வேதகாலத்தை மையமாக வைத்தே ஆய்வு செய்துள்ளனர்.
மௌரியர்காலத்திலும் முகலாயர் காலத்திலும் அரசியல் அடிப்படையில் இந்திய துணைக்கண்டம் ஓரளவு ஒன்றிணைந்த நாடாக உருவாகும் நிலையில் இருந்தது. இருந்தாலும் 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ்தான் ஒன்றுபட்ட வலிமையான மத்தியபடுத்தபட்ட ஒன்றிணைந்த ஆட்சி முழுமையாக
நிறைவேறியது. அப்படி இருக்கும் பொழுது இந்தியாவைப் பற்றிய காலனியாட்சியாளர்களின் பொய்யான
புரட்டுகளையே இந்திய வரலாறாக திணிப்பது ஏற்புடைவை அல்ல. இல்லாத ஒன்றை இங்கே பேசிக் கொண்டிருப்பது தவறானதாகும்.
இடஒதுக்கீட்டால் தன் சாதி மக்களுக்கு போராடுவதாக கூறும் சாதி
கட்சி தலைவர்களின் பேச்சு என்பதே பொய்யானது எனும் பொழுது. இந்த உழைக்கும் ஏழை எளிய
மக்களின் ஓட்டை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ள ஓட்டரசியல் கட்சிகள் மக்கள் பிரச்சினையை
தீர்க்கப் போவதில்லை என்பது தெளிவு. அதேபோல் சாதிச் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஏகாதிபத்திய
எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ
எதிர்ப்பு, சாதி
ஒழிப்பு என்பனவற்றை முன்னணிப்படுத்தாமல், இடஒதுக்கீடு, அதிகாரப்பகிர்வு, சலுகைகள் பெறுவது ஆகியவற்றைக் கோருவது என்பதை முழுமுதல்
நோக்கமாகக் கொண்டுள்ள சீர்திருத்தவாதம் மக்களின்
இழிநிலைக்கு முடிவுகட்டாது அப்படியெனும் பொழுது தீர்வென்பது நமது மார்க்சிய ஆசான்கள்
சொன்னவைதான்,
“இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக
வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள்
வெளிப்படையாக அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி
நடுங்கட்டும். பாட்டாளிகளிடம்
இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம்
அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.”(கம்யூனிஸ்ட்
கட்சி அறிக்கையிலிருந்து).
அதனால் சாதியின்
தோற்றம் எப்படி அதன் சமூக தேவைக்காக உருவாக்கப் பட்டதோ அந்த உற்பத்தி முறையை
மாற்றி அமைக்கவும் புதிய சமூக உறவுகளிலிருந்து இந்த கேடான தீண்டாமையையும் சாதி
ஒடுக்கு முறைக்கான எல்லா
காரணிகளையும் ஒழிப்பதே தீர்வாகும். அதிகார வர்க்கமாக பல்வேறு சாதிகளிலிருந்து பிரதிநிதிகள்
இருப்பது போல ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களும் அனைத்து சாதிகளிலும் உள்ளனர். அதிகாரத்துவ சமூக அமைப்பு பேணும் சாதியத்தை தகர்க்கும்
பொருட்டு வர்க்க அடிப்படையிலான பல்வேறு அரசியல் காரணிகள் ஒடுக்கு முறைக்கு
ஆட்படுகிற அனைத்து சாதிகளையும் சேர்ந்த உழைக்கும்
ஏழை எளிய மக்களை ஓரணியில்
ஒன்றிணைத்து போராட வேண்டியுள்ளது. சாதிய உணர்வுகளை விட்டொழிந்து புத்துலகம் படைக்கும் உணர்வுடன் அனைத்து உழைக்கும் ஏழை எளிய சாதியில் உள்ளவர்கள்
ஒன்றுபட்டு போராடுவது சாத்தியமானதே.
உண்மையில் சாதியப் பிரச்சினை என்பது பொருளாதார
ஏற்றத்தாழ்வுடன், வர்க்க
சமுதாயத்துடன் வேர்கொண்டு கிடப்பதால் மதம் மாறுவதால் மட்டும் இப்பிரச்சினை
தீர்ந்துவிடாது. உதாரணமாக
சாதிய ஒடுக்குமுறையிலிருந்து தப்புவதற்காக கிறிஸ்தவத்தில் சேர்ந்தோரின் நிலை என்ன?
அதுமட்டுமின்றி ஒரு லட்சம் மக்களுடன் பௌத்த மதத்தில் இணைந்த
போதும் அம்பேத்கரால் இந்தியாவின் சாதியமைப்பை ஒரு அங்குலம் கூட அசைக்க முடியவில்லை.
அது மட்டுமின்றி, சாதியத்துக்கு எதிரான போராட்டத்தைச் சிலர் தமிழ் தேசிய
உரிமைக்கான போராட்டத்துக்கு எதிரான நிலையில் வைக்க முயல்கின்றனர்.
இதுவும் தவறான ஒரு நிலைப்பாடாகும். சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு ஆதாரமாகக் கொண்டுள்ள பரம்பதைத் தொழிற்பிரிவினையும், அவை நிலைத்து நிற்பதற்கு சேவை செய்யும் அகமண முறை, உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரைச் சடங்குகள் ஆகிய அம்சங்களும் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்கு உரியதும்.
உண்மையில் மக்களைப் பொறுத்த வரையில் வாழ்க்கை பிரச்சினை முதன்மையான
பிரச்சினையாகும். அதில் ஆளும்
வர்க்கம் ஒருபுறத்தில் கல்வி மருத்துவம் வேலை வாய்ப்பு என்ற அடைப்படை
உரிமைகளை பறிப்பதும் இன்னொறுபுறம்
இடஒதுக்கீடு என்ற கண்ணாமூச்சி போராட வேண்டியவர்கள் சீர்திருத்தவாதத்தில் மூழ்கி
இந்த அடக்குமுறை ஒடுக்குமுறையை ஏற்கும் மனநிலைக்கு தள்ளும் கயமைதனம். இப்பொழுது தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் உள்ள சிலர்
வர்க்க பேதத்தை புறம்தள்ளிவிட்டு, வெறுமனே சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை மட்டும் நடத்த எத்தனிக்கின்றனர். எனவே இதுவும் முழுமையான ஒரு போராட்டம் இல்லை
என்றபடியால் வெற்றி பெறும் சாத்தியம் இல்லை.எனவே, முற்போக்கு சக்திகள் சமூகத்தின் உண்மையான நிலையைப் புரிந்து கொண்டு, முழுமையான முறையில் மக்களின் ஜனநாயகப் போராட்டத்தை
நடத்த முன்வர வேண்டும். சாதி ஒழிப்பென்பது வெறும் சாதி தீண்டாமை மற்றும்
சாதியால் கடைநிலையில் உள்ளவர்களுக்கானவை மட்டுமல்ல, நாம் வாழும்
சமூகத்தில் சனாதன தர்மத்தில் எல்லோரையும் அடிமை நிலையில் வைத்திருக்கும் போக்கை
உடைதெறிய இச்சமூகத்தில் உள்ள எல்லோரும் இந்த இழிவான சாதிய முறையை விட்டொழிவதே அவை இதே சமூக அமைப்பில் சாத்தியமா
யோசியுங்கள்.
மார்க்சியம் போதிப்பதே
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று சொல்வர்... மனித குல வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட
காலகட்டதில் அதன் தேவைகளை ஒட்டி சமூகம் வளர்ந்து மேலோங்கி வந்துள்ளதை அறிவோம். இச்சமுகம் ஆதிபொதுஉடமை சமூகமாக தோன்றிய பொழுது
எல்லோருக்கும் எல்லாம் ஒரு வகையில் சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால் வர்க்க சமூகம் தோன்றிய பிறகு உடமை உள்ளவன் உடமை அற்றவன் என்ற பிரிவினை தோன்றிய பிறகு, ஆதிக்கத்தில் உள்ள உடமையாளர்களுக்கான அமைப்புமுறை தோன்றியது.
தனிசொத்தை காக்க தனிஉடமையாளர்களுக்கன அமைப்பு உடமை அற்ற உழைக்கும் கூட்டத்தை சுரண்ட அடக்க ஒடுக்க ஏற்றவகையில் அமைப்பு தோன்றியது. அந்த ஏற்றத் தாழ்வின் விளைவாக
ஒரு சிலரின் வாழ்விற்காக பல்வேறு உழைப்பு பிரிவினை உழைப்பு பிரிவினின் சுரண்டல் இதுபோன்ற
அவர்களை அடக்கி ஒடுக்குவதற்கான அரசு வடிவம் இதனை ஆளுவதற்கான அரசாங்கம் இவ்வாறு சுரண்டல்
வடிவம் எடுத்த இந்த சமூக அமைப்பு ஒரு பக்கம் உழைக்காமல் வாழ்பவருக்காக உள்ள சமூக அமைப்பில்
உழைத்து உழைத்து உருகுலைந்து போன மக்கள் வாழ்வதற்கு வழி இல்லை. அவர்கள் வாழ்வதற்கான
ஒரு சமூக அமைப்பைதான் நாம் தோற்றுவிக்க வேண்டும்
அங்கே இந்த ஏற்றத்தாழ்வுகள் தேவையற்றதாகி
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வழி வகை செய்யவும், அங்கே இந்த ஏற்றத்தாழ்வுக்கான வழிமுறைகள் ஒழிக்கப்பட்டு எல்லோரும் சமத்துமாக வாழ
வழிவகை இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் நமது சமூகத்தில் உள்ள உழைக்கும் மக்கள் எல்லோரும் ஓரணியில் திரட்டப்பட்டு கூட்டாக வாழவழிவகை செய்யபட வேண்டும். அவை கூட்டான கம்யூன்களாகவோ அல்லது சோவியத்துக்களாகவோ விவசாயிகள் உழைப்பாளர்கள் பல்வேறு பிரிவினைர்களை ஓர் வகையில் ஒன்றாக இணைக்கும் வழி வகை செய்ய வேண்டும். அதற்கான வழிமுறைகள் பாரிஸ் கம்யூன் வழிகாட்டியது ரசியா செயல்படுத்தியது சீனாவும்
விவசாய கூலிகளை ஒன்றினைத்து இதற்கான வழிவகை செய்தது. நாம் வாழும் சமூகத்தையும் அதற்கான ஏற்பாடுகளை ஊக்குவித்து ஒற்றுமைப்படுத்தி
மத சாதிய இன வேறுபாடுகளை களைந்து உழைக்கும் மக்களை ஓரணியில் திரட்டி இழிநிலைக்கு முடிவுகட்ட முன் வர வேண்டும். அதை எதிர்கால புரட்சிக்கு வழிவகுக்கும். உழைக்கும் மக்கள் ஒற்றுமையின் அடிப்படையில் ஒன்றுசேர்ந்து எதிர் புரட்சிகர சக்திகளை நசுக்கவும் ஆளும்வர்க்கத்தின் கோமாளித்தனத்தை தோலுரித்துக் காட்டி ஒரு சரியான புரட்சிகர அமைப்புகளை
உருவாக்கி ஒரு சமத்துவான மக்கள் சமூகத்தை உருவாக்கும் வழி வகுக்கும் என்பதை என்னுடைய
முடிவாகும்
எந்த சாதி, மதமானாலும் உயர்ந்த இடத்தில் உள்ள பணப் படைத்தவர்கள் வாழ்வதற்கு உத்தரவாதம் செய்வதே. சாதாரண உழைக்கும் மக்கள் எங்கேயும் உழைத்தால் மட்டுமே வாழ முடியும். நடுத்தர வர்க்கமும் தள்ளாடிக் கொண்டுள்ளது. அவர்களின் எதிர்கால கனவு இதற்குள் இல்லை என்பதை அவர்கள் புரிந்து
கொள்ள வேண்டும். எல்லோரும் வாழ்வதற்குரிய
ஒரு சமூக அமைப்பை நாம் உருவாக்கினால் மட்டுமே இங்கு உள்ள எல்லா நிலைகளும் ஒழிக்கப்படும்
அதற்கான வழிவகை செய்யாமல் இந்த இழிநிலை ஒழிக்கப்படுவது கடினம். ஆக இந்த அரசின் சீர்திருத்தவாதம் உழைக்கும் மக்களின் வாழ்வியலுக்கு பயனில்லை என்பதை புரிந்து
கொள்வதோடு இவர்களுடைய சட்ட திட்டங்களும் இந்த உழைக்கும் மக்களின் வாழ்வியலுக்காக இல்லை.ஆகவே இது போன்ற இழித்தனமான செயல்களை மூடி மறைப்பதை விட்டுவிட்டு
இந்த இழி செயல்கள் இல்லாமல் ஒழிப்பதற்கான ஒரு சமூக அமைப்பை நாம் உருவாக்க வேண்டும். அதனை நோக்கி நமது பயணமே இந்த சாதிய சமூக இழிமுறை கேடுகளை இல்லாது ஒழிக்கும்.
சில உதாரணங்களோடு முடித்துக் கொள்ளுவோம். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி புரியும் பல்வேறு ஓட்டு அரசியல் கட்சிகள் தாங்கள்
ஆட்சிக்கு வந்தால் இந்த பிரச்சனைகளுக்கு
தீர்வு காண்பதாக கூறுகின்றனர். மத்திய ஆட்சியில் உள்ள பாஜக இந்துக்களின் காவலர்களாக வந்து ஆட்சியைப்
பிடித்த பிறகு இந்துக்களின் பிரச்சினைகளை
எத்தனை சதவீதம் தீர்த்து விட்டார்கள்? இன்று ஒரு சில முதலாளிகளின் கைக்கு தான் ஒட்டுமொத்த நாட்டின் சொத்தையும் சுரண்டி
கொடுத்து கொண்டு உள்ளார்கள். நாட்டின் பெரும்பகுதியான இந்து மக்கள் வாழ்வதற்கு வழியற்று கிடக்கிறார்கள். அதேபோலதான் தன் சாதி கட்சி ஆட்சிக்கு வந்து விட்டால் தன் சாதி மக்களுக்கு ஏதோ செய்து விடுவார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள்
அதுபோல சிலப் பகுதியில் சில கட்சிகள் ஆட்சிக்கு வந்தது ஆனால் ஆட்சிக்கு வந்து ஏதாவது
செய்ததா என்றால் ஆட்சியில் அமர்ந்தவர்களுக்கு சொத்து பெருகியது அவர்கள் குடும்பத்தின்
வளர்ச்சி பெருகியது, ஆனால் நாட்டு மக்களுக்கான எந்த பணியும் செய்ய முடியவில்லை! ஆகையால் இந்த அமைப்பு முறை என்பது ஒரு சிலர் சொத்து சேர்த்து
வாழ்வதும் பலர் அவர்களுக்காக உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போவதுதான். ஆக இந்த சொத்துடைய வர்க்கத்தை ஒழிக்காமல் இதற்கு தீர்வு இல்லை. ஆக நாட்டில் உள்ளசொத்தை பொது சொத்தாக்கி எல்லா மக்களுக்கான வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்யும்
வகையில் மாற்றி அமைகும் பொழுதே தனியுடமை வர்க்கமும் ஒழிவது போலவே தனிஉடமை சிந்தனை முறையும் ஒழியும் அதற்கான வழிவகை நாம் புரிந்து செயல்பட வேண்டிய அவசியமாக உள்ளது.
இறுதியாக நம் புரிதலுக்கு:- சாதியானது ஒரு குறிபிட்ட சமூக
அமைப்பில் உற்பத்தி தேவைக்கான உழைப்பாக தோன்றியவையே அதனை கோட்பாட்டு ரீதியாக சனாதனம்
கெட்டிப்படுத்தி தொழில் ரீதியாக உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டு மக்களிடையே சுரண்டலுக்கான
வழிவகை செய்தது. நம்மை ஆண்ட காலனி ஆட்சியாளர்கள் ஒவ்வொரு சாதி பிரிவிற்கும் தனித்தனி
அடையாளங்களை சாதி சான்றிதழ் மூலம் வழங்கி நிரந்தரமாக சாதி முத்திரயை பதிக்க வைத்தது.
மேலும் சாதிக்கான இடஒதுக்கீடு மூலம் சாதியை உயிர்புடன் வைத்திருக்கும் வேலையையும் அவர்களே
தொடங்கி வைத்தனர் என்றால் மிகையாகாது. அன்று தன்னை உயர்த்திக் கொள்ள சத்திரிய அந்தஸ்துக்கு
போராடிய சாதி கட்சிகளே சாதி இட ஒதிக்கீட்டிற்காக மூலம் தன்னை தாழ்த்திக் கொண்டது. அங்கே
சாத்திரிய உயர்வுக்கு சண்டை போட்டவர்களே இங்கே தன் சாதி பொருளாதார ரீதியாக கடைநிலையில்
உள்ளதென தாழ்த்திக் கொள்வதென்ன? 10% EWS எல்லோரும் அறிந்ததே எதற்காக இடஒதுக்கீடு என்ற
நோக்கத்தையே தலைகீழாக்கி அவர்களின் ஓட்டு வங்கிக்கான சட்டமாக சீரழிந்தது நிகழ்வு.
ஆக சாதி ஒழிபிற்காக போராடிய அண்ணல் அம்பேத்கார் ஆகட்டும் தந்தை பெரியார் ஆகட்டும்
இன்று ஓட்டரசியல் நலனில் செயல்படும் பல்வேறு கட்சிகளாக்கட்டும் அதன் பரப்பெல்லை மிக
சுருங்கியதே. சட்ட வழி பட்டதே அன்றி வேறொன்றுமில்லை. சட்டமன்றங்கள், கல்வி, அரசு வேலைகள் ஆகியவற்றில் தலித் மக்களுக்கு அவ்வப்போது இடஒதுக்கீடு
அமல்படுத்தப்பட்டு, அவ்வப்போது
நீட்டிக்கப்பட்டது. உண்மையில் அதன் பயன் இதுவரை எத்தனை சதவீத
மக்களை சென்றடைந்துள்ளது? ஏன் அவை குறிபிட்ட மக்களுக்கானவையாக இல்லை ஏனெனில் இந்த அமைப்பு
முறை உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கானவை இல்லை என்பதே. மேலும் சில சட்டங்கள் அந்த மக்களின்
காப்பாளனாக வந்தது ஆனால் இன்றும் அவை என்னவாக உள்ளது? அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவு, தீண்டாமையை ஒழித்து விட்டது இன்றைய நிலை என்ன?, தீண்டாமை நடைமுறைப்படுத்துவது
தண்டனைக்குரியது என்று கூறியுள்ளது. ஆனால் இன்றும் அந்த சட்டங்கள்
சட்டங்களாக மட்டுமே உள்ளது.
இன்னும் பின்னர் தொடரும்
No comments:
Post a Comment