கம்யூனிஸ்டுகள் என்றாலேயே கம்யூனிசத்தைப் பற்றியும் மார்க்சிய லெனினியத்தைப் பற்றியும் தெளிவாக அறிந்திருப்பார்கள் என்று இங்கு பலரும் கருதுகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. கம்யூனிச அமைப்பில் செயல்படும் பலருக்கும் இத்தகைய மார்க்சிய அறிவு குறைவாகவே உள்ளது என்பதுதான் உண்மையாகும். சீனாவில் புரட்சி நடப்பதற்கு முன்பே உருவான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து 1939ஆம் ஆண்டில் லியுஷாவோகி இந்த நூலை எழுதினார். அதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தம்மை தாமே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார் என்றால் அங்குள்ள கம்யூனிஸ்டுகள் தங்களது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலையிலேயே இருந்தார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் அல்லவா? நாம் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியது அதிகம் உள்ளது என்று நாம் கூறுவதாலேயே கம்யூனிஸ்டுகள் சோர்வடைந்துவிடுவார்களா? அல்லது நம்பிக்கை இழந்துவிடுவார்களா? அப்படியானால் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவரான லியுஷாவோகி இந்த நூலை எழுதி கட்சி உறுப்பினர்களுக்கு சோர்வை ஏற்படுத்தினாரா? உற்சாகம் ஊட்டினாரா? இந்தப் புத்தகத்தைப் படித்த சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள்தான் ஒவ்வொருவரும் தனது சொந்த மார்க்சிய அறிவை வளர்த்துக்கொண்டு புரட்சியை நடத்தி முடித்தார்கள் என்பது வரலாறாகும். ஆகவே இங்குள்ள கம்யூனிஸ்டுகள் ஒவ்வொருவரும் தனக்கு எல்லாம் தெரியும் என்று இறுமாப்பு கொள்ளாமல் நம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளது என்பதை உணர்ந்து அதனை தெரிந்துகொள்ள முயல வேண்டும். நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்களைப் பற்றி மார்க்சிய ஆசான்கள் ஏராளமான போதனைகளை நமக்கு வழங்கியுள்ளார்கள். அந்த போதனைகளை நாம் படித்துப் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் லியுஷாவோகி எழுதிய சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி என்ற நூலை நாம் படித்து புரிந்துகொள்வோம். அன்றைய சீனாவைப் போலவே இங்கும் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டியமைத்து உறுதிப்படுத்தும் நிலையிலேயே நாம் உள்ளோம். மேலும் கம்யூனிஸ்டுகள் பல பிரிவாக பிரிந்திருக்கும் நிலையிலேயே நாம் உள்ளோம். ஆகவே இத்தகைய மோசமான நிலையிலுள்ள நாம் ஒவ்வொருவரும் நமது மார்க்சிய லெனினிய அறிவை வளர்த்துக் கொள்வதும் அதனை திடப்படுத்துவதும் மிகமிக அவசியம் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேளுங்கள் தோழர்களே
இந்த நூலை நாங்கள் வாசிக்க தொடங்கியதிலிருந்து ஒரு குறுங்குழுவாத குழுவின் உறுப்பினர்கள் தொடர்ந்து இந்த நூல் வாசிப்பதை எதிர்க்கின்றனர். அவர்கள் இந்த நூலில் ஏதாவது தவறாக சொல்லியுள்ளாரா என்றால் எங்கள் தலைவர் சொன்னார் என்றனர் இப்பொழுது ஒருவர் மாவோவின் நூல் 9 ல் பக்கம் 464லை சுட்டிக்காட்டுகிறார்.
உண்மையில் இந்த பகுதியின் கட்டுரை 1967 ல் கலாச்சார புரட்சி நடைப்பெற்ற காலத்தை சார்ந்தவை மேலும் இந்த பகுதியின் பக்கம் 466 ல் இந்த கருத்து மாவோ கூறியதுதானா என்று உறுதியில்லை எனும் பொழுது இதனை கட்டி அழும் தலைமை வழிபாட்டாளர்களை என்ன சொல்ல?
மாவோ கூறிய 401 பக்கத்து குறிப்பையே இந்தக் கட்டுரை பகுதி மறுக்கிறது விவாதிக்கும் முன் அந்தபக்கங்களையும் வாசித்து விட்டால் விவாதிக்கலாம்.
லியு ஷாவோகியின் இந்தப் படைப்பு, ஒரு கம்யூனிஸ்ட் தன்னைத் தானே செதுக்கிக் கொள்வதன் மூலம் எவ்வாறு முதிர்ச்சியடைந்த புரட்சியாளராக மாற முடியும் என்பதை விளக்கும் வழிகாட்டியாகும். பழைய சமுதாயத்தின் பிற்போக்குச் சிந்தனைகளிலிருந்து விடுபடவும், சமூக மாற்றத்தை முன்னெடுக்கவும் தொடர்ச்சியான சுய-வளர்ப்புப் பயிற்சியும் சித்தாந்தப் படிப்பும் இன்றியமையாதவை என இது வலியுறுத்துகிறது. மனிதன் இயற்கையையும் சமூகத்தையும் மாற்றி அமைக்கும் அதே வேளையில், புரட்சிகர நடைமுறைப் போராட்டங்கள் வாயிலாகத் தன்னையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே இதன் மையக் கருத்தாகும். குறிப்பாக, வர்க்கப் போராட்டக் களங்களில் நேரடியாகப் பங்கேற்பதன் மூலமே ஒருவரால் தன் அரசியல் உணர்வு மட்டத்தை உயர்த்திக் கொள்ளவும், கட்சிக்கும் சமூகத்திற்கும் பயன்படும் ஒரு சிறந்த கம்யூனிஸ்டாகத் திகழவும் முடியும். இறுதியில், சமூகத்தின் புறநிலை விதிகளுக்கேற்ப நம்மை நாமே மறுவார்ப்பு செய்து கொள்வது புரட்சியின் வெற்றியைத் தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாகக் காட்டப்படுகிறது.
No comments:
Post a Comment